பக்தியோகம் 18

II. சொற்பொழிவு
1. பக்தி நெறி
9 பிப்ரவரி 1896 

ஏதோ ஒருசில மதங்கள் தவிர, அனேகமாக எல்லா மதங் களும் உருவக் கடவுள் பற்றிய கருத்தைக் கொண்டுள்ளன. புத்த, சமண மதங்கள் நீங்கலாக, ஏறக்குறைய உலகிலுள்ள பிற மதங்கள் எல்லாமே உருவக் கடவுள் கருத்தைப் பெற்றவை யாகவே உள்ளன. உருவக் கடவுள் பற்றிய கருத்துடன் பக்தி மற்றும் வழிபாடு பற்றிய கருத்துக்கள் இயல்பாகவே எழு கின்றன. பௌத்தரும் சமணரும் உருவக் கடவுளை வழிபட வில்லை என்றாலும், பிறர் உருவக் கடவுளை வணங்குவது போன்று, தங்கள் மதங்களை நிறுவியவர்களை அதேமுறையில் வழிபடவே செய்கிறார்கள். 

நாம் பக்தி செய்யவும் வழிபடவும் ஒருவர் இருக்கிறார், அவரும் மனிதனை நேசிக்கிறார் என்ற கருத்து உலகிற்கே பொதுவானது. அன்பு மற்றும் பக்தி பற்றிய இந்தக் கருத்துக்கள் பல்வேறு மதங்களிலும் வெவ்வேறு நிலைகளில், வெவ் வேறு அளவுகளில் வெளிப்படுகின்றன. இதில் மிகத் தாழ்ந்த நிலை புற வழிபாடு. தனிக் கருத்துநிலையில் (Abstract Idea) மனிதனால் எதையும் புரிந்துகொள்ள முடியாதபோது, அவன் அவற்றையெல்லாம் தூல நிலைக்குக் கொண்டு வருகிறான். இவ்வாறுதான் உருவங்களும், அவற்றோடு பல்வேறு சின்னங் களும் தோன்றுகின்றன. நுண்ணிய கருத்துக்களை எண்ணங்கள் வாயிலாகவோ, சின்னங்கள் வாயிலாகவோ புரிந்துகொள் வதற்கு மனிதன் முயல்வதை உலக வரலாறு முழுவதிலும் காண் கிறோம். மதத்தின் புறச் சாதனங்களான மணி, இசை, வழிபாடு, சாஸ்திரங்கள், சிலைகள் என்று எல்லாமே அதன்கீழ் வரு கின்றன. புலன்களுக்கு இதமாக இருக்கின்ற எதுவும், உருவ மற்றதற்கு உருவமளிக்க மனிதனுக்குத் துணை செய்கின்ற எதுவும், ஏற்றுக்கொள்ளப்பட்டு வழிபாட்டிற்கு உரியதாகக் கொள்ளப்படுகிறது.

    ஒவ்வொரு மதத்திலும் அவ்வப்போது சீர்திருத்தவாதிகள் வருகின்றனர். சின்னங்களையும் சடங்குகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பு வீணாயிற்று. இந்த நிலையில் இருக்கும்வரை பெரும் பாலோருக்கு, பற்றி நிற்பதற்கென ஏதேனும் ஓர் உருவம், தங்கள் கருத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஏதாவது ஒரு பொருள், தங்கள் எண்ணங்கள் அனைத்திற்கும் மையமாக அமைகின்ற ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. எல்லா சடங்குகளையும் ஒழிக்க வேண்டும் என்ற ஒரே முடிவுடன் முகமதியரும் பிராட்டஸ்டன்ட்களும் பெருமுயற்சிகள் செய்தனர். ஆனால் அவர்களிடமும் சடங்குகள் புகுந்திருப்பதைக் காண்கிறோம். அவற்றை விலக்க முடியாது. எவ்வளவுதான் போராட்டம் நடத்தினாலும் ஒருவேளை, மக்கள் ஒரு சின்னத்தை மாற்றிவிட்டு வேறொன்றைப் பற்றக்கூடும், அவ்வளவுதான். 

        முகமதியன் அல்லாதவன் பயன்படுத்துகின்ற எந்தவொரு சடங்கும், வடிவமும், சிலையும், வழிபாடும் பாவம் என்று நினைக்கின்ற முகமதியன் தன் சொந்தக் கோயிலாகிய காபாவுக்கு வரும்போது அவ்வாறு நினைப்பதில்லை. ஒவ்வொரு முகமதியனும் பிரார்த்தனை செய்யும்போது, தான் காபாவுக்கு முன் நிற்பதாக நினைக்க வேண்டும். அங்கே செல்லும்போது கோயிலின் சுவரில் உள்ள கருங்கல்லை அவன் முத்தமிட வேண்டும். லட்சக்கணக்கான யாத்திரிகர்களால் அந்தக் கல்லின் மீது பதிக்கப்பட்டுள்ள முத்தங்கள் அனைத்தும் இறுதித் தீர்ப்பு நாளன்று, நம்பிக்கை உடையவர்களின் நன்மைக்குச் சாட்சியாக நிற்கும். அங்கு ஜிம்ஜிம் என்னும் கிணறு உள்ளது. அந்தக் கிணற்றிலிருந்து சிறிது நீரை இறைப்பவர் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவார் என்றும், உயிர்த்தெழும் மீட்சித்திரு நாளுக்குப் பின்னர் அவர் புதிய உடல் பெற்று நிரந்தரமாக வாழ்வார் என்றும் முகமதியர்கள் நம்புகின்றனர்.

பிற மதங்களில் இந்தச் சின்னங்கள் கட்டிட வடிவில் இருப்பதைக் காண்கிறோம். சர்ச்சுகள் மற்ற இடங்களைவிட மிகவும் புனிதமானவை என்று பிராட்டஸ்டன்ட் பிரிவினர் நம்புகின்றனர். அவர்களுக்கு சர்ச் ஒரு சின்னமாகவே விளங்கு கிறது. அடுத்து பைபிள் உள்ளது. வேறெந்த சின்னங்களையும் விட இந்த நூல் மிகமிகப் புனிதமானது என்பது அவர்கள் கருத்து. கத்தோலிக்கர்கள் புனிதர்களின் திருவுருவங்களுக்குக் கொடுக்கின்ற இடத்தை பிராட்டஸ்டன்ட் பிரிவினர் சிலுவைக்குக் கொடுக்கிறார்கள்.

 சின்னங்களைப் பயன்படுத்துவதை எதிர்த்துப் பேசுவது பயனற்றது. எதற்காக எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய வேண் டும்? மனிதன் சின்னங்களைப் பயன்படுத்தக் கூடாது என் பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஒவ்வொரு சின்னமும் தனக்குப் பின்னால் உள்ள ஒரு பொருளைச் சுட்டி நிற்கிறது. பிரபஞ்சமே ஒரு சின்னம். அதற்குள்ளும் அதைக் கடந்தும் நிற்கின்ற ஒன்றைப்பற்றி அறிய அதனை ஊடுருவியும் அதன் வாயிலாகவும் நாம் முயன்று கொண்டிருக்கிறோம். ஒரு சாதாரண மனிதனின் மன இயல்பிற்கு இந்தச் சின்னங்கள் தேவை. நாம் அவற்றை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். அதேவேளையில் அந்தச் சின்னங்களுக்குப் பின்னால், ஜடப் பொருளுக்குப் பின்னால் நிற்கின்ற ஆன்மப் பொருளை அடையப் போராடுகிறோம் என்பதும் உண்மை. ஆன்மாவே லட்சியம், ஜடப்பொருள் லட்சியம் அல்ல. உருவங்கள், சிலை கள், மணிகள், மெழுகுவர்த்திகள், சாஸ்திரங்கள், கோயில்கள், புனிதச் சின்னங்கள் எல்லாமே நல்லவை; வளரும் ஆன்மீகச் செடிக்கு உதவுபவை. ஆனால் அந்த அளவோடு சரி. அதற்கு மேல் போகக் கூடாது. பெரும்பாலான இடங்களில் அந்தச் செடி வளராமல் போய்விட்டதையே காண்கிறோம். ஒரு கொள்கையைச் சேர்ந்தவனாகப் பிறப்பது நல்லதுதான்; ஆனால் வளர்ச்சியடையாமல் அதிலேயே இறப்பது நல்ல தல்ல. ஆன்மீகம் என்னும் இளஞ்செடிக்குத் துணை செய் கின்ற சில குறிப்பிட்ட வழிபாடுகளைக் கொண்ட பிரிவுகளின் வரையறைக்குள் பிறப்பது மிக நல்லது. ஆயினும் சின்னங்கள் என்கின்ற இந்த வரையறைக்குள்ளேயே ஒருவன் இறக்க நேரு மானால் அது, அவன் வளரவில்லை , அவனது ஆன்மா மலர வில்லை என்பதையே உறுதியாகக் காட்டுகிறது. ஆதலால் சின்னங்களும் சடங்குகளும் உருவங்களும் எப்போதும் இருக்க வேண்டும் என்று யாராவது கூறினால், அது தவறு. சின்னங் களும் சடங்குகளும் கீழ்நிலையில் ஆன்ம வளர்ச்சிக்கு உதவு பவை என்று அவர் சொன்னால் அது சரி.ஆனால் ஆன்ம வளர்ச்சியை அறிவு சம்பந்தமான ஏதோ ஒன்றாகப் பொருள்படுத்தும் குற்றத்திற்கு நீங்கள் ஆளாகக் கூடாது. ஒரு மனிதன் பேரறிஞனாக இருக்கலாம். ஆயினும் ஆன்மீகத்தைப் பொறுத்தவரை அவன் ஒரு குழந்தையாக இருக்கலாம்; அதைவிடக்கீழ் நிலையிலும் இருக்கலாம். இதை நீங்கள் இந்தக் கணமே சோதித்துப் பார்க்க முடியும். இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை அறிவுபூர்வமாக நம்ப வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் ‘எங்கும் நிறைகின்ற தன்மை’ என்றால் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அரும் பாடுபட்டால் ஒருவேளை வானத்தையோ, பரந்த பசும்புல் தரையையோ நினைப்பீர்கள். நீங்கள் கடலையோ பாலைவனத் தையோ பார்த்திருந்தால் அதை நினைப்பீர்கள். இவை எல்லாம் வெறும் தூலமான உருவங்கள் மட்டுமே. நுண்ணியதை (Abstract) நுண்ணியதாகவும், லட்சியத்தை லட்சியமாகவும் உங் களால் கருத இயலாதவரை, வடிவங்களையும் இந்தத் தூல மான உருவங்களையும் துணையாகப் பயன்படுத்தியே ஆக வேண்டும். அவை உங்கள் மனத்தின் உள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி அது பெரிய விஷயம் அல்ல.
நாம் எல்லோரும் பிறப்பிலிருந்தே உருவத்தை வழிபடு கிறோம். உருவ வழிபாடு நல்லது. அது மனிதனின் இயல்பி லேயே ஊறியுள்ளது. அதற்கு அப்பால் செல்ல யாரால் முடி யும்? நிறை மனிதருக்கே, தெய்வ மனிதருக்கே அது இயலும். மற்றவர் அனைவரும் உருவத்தை வழிபடுபவர்களே. பிர பஞ்சமும் அதன் பல்வேறு வடிவங்களும் உருவங்களும் நம் கண்முன் தெரியும்வரை நாம் அனைவரும் உருவ வழிபாட் டினரே. மூளையில் தூல உருவங்கள் வருவதில்லை . அங்கு எழுவதெல்லாம் சிறுசிறு உணர்ச்சிகள் மட்டுமே. அப்படி யிருந்தாலும் இந்தப் பிரபஞ்சத்தை, உருவம், வடிவம், நிறம் கலந்த இந்தப் பிரபஞ்சத்தை இந்த மாபெரும் சின்னத்தை நாம் காண்கிறோம். இந்தப் பிரபஞ்சமே நாம் வழிபட்டு வருகின்ற ஒரு மாபெரும் உருவம் அல்லவா? தன்னை உடலென்று கருது பவன் பிறப்பிலிருந்தே உருவ வழிபாடு செய்பவன்தான். நாம் ஆன்மா; உருவமோ வடிவமோ அற்ற ஆன்மா; எல்லையற்ற ஆன்மா; ஜடப்பொருள் அல்ல. ஆதலால் நுண்ணியதை மனத் தால் பற்ற இயலாதவன், ஜடப்பொருளிலும் அதன் வழியாகவும் அல்லாமல் தன்னை எண்ணிப் பார்க்க முடியாதவன் உருவ வழிபாடு செய்பவனே. இருந்தாலும் உருவ வழிபாட்டினர் என்று கூறி மக்கள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதை என்ன என்பது! வேறு வகையாகச் சொன்னால் ஒவ்வொரு வரும் தான் வழிபடும் உருவமே சரியானது என்றும், பிறர் வழி படுகின்ற உருவம் தவறானது என்றும் கூறுகின்றனர். 
எனவே சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை விட்டு விட வேண்டும். மதம் என்பது பொருளற்ற சொற்களின் வெறும் தொகுதி; மதம் என்பது வெறும் கொள்கைகளின் அமைப்பு; மதம் என்பது ஏதோ சிறிது அறிவால் ஒன்றை ஒப்புக்கொள் வதோ மறுப்பதோ மட்டுமே; மதம் என்பது தங்கள் புரோகி தர்கள் கூறுகின்ற சில வார்த்தைகளில் நம்பிக்கை வைப்பதே; மதம் என்பது தங்கள் முன்னோர் நம்பிய ஏதோ ஒன்று; தேசியமானவை என்னும் காரணத்தால் தாம் பற்றி நிற்கும் ஒரு வகையான மூடக் கொள்கைகளும் கருத்துக்களுமே மதம் என்றெல்லாம் உள்ள பிதற்றலுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும். இவை அனைத்தையும் கடந்து, மெல்லமெல்ல ஒளியை நோக்கிச் செல்கின்ற மாபெரும் ஓர் உயிராக மனித இனத்தைக் காண வேண்டும்; கடவுள் என்னும் வியப்புக்குரிய மெய்ப்பொருளை நாடி மெல்ல முதிர்ந்துவரும் ஓர் ஆச்சரிய மான செடி என்று மனித இனத்தைக் கொள்ள வேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சிகளும் முன்னேற்றங்களும் எப்போதும் ஜடப்பொருள் வாயிலாக, சடங்குகள் வாயிலாகத்தான் நடைபெறும். அதை நாம் மாற்ற முடியாது.
இந்தச் சடங்குகளுக்கு மையமாக அமைகின்ற, அனைத் திலும் தலைசிறந்து நிற்கின்ற ஒரு கருத்து நாம வழிபாடு. கிறிஸ்தவ மதத்தின் பழைய நிலைகளிலும், பிற உலக மதங் களிலும் நாம வழிபாடு என்னும் இந்தக் கருத்து நிலவுவதை நீங்கள் ஒருவேளை கவனித்திருக்கலாம். நாமம் மிகப் புனித மானது. ஹீப்ருக்கள் நாமத்தை இணையற்ற புனிதம் வாய்ந்த தாகக் கருதினார்கள். சாதாரண மனிதர்களால் சாதாரண நேரங்களில் சொல்லப்படக் கூடாத அளவுக்கு அது புனிதம் வாய்ந்தது; அதன் புனிதத்திற்கு ஒப்புவமை கிடையாது; அனைத் திலும் புனிதமானது அது. எல்லா நாமங்களிலும் மிகப் புனித மானது அது, அந்த நாமமே இறைவன் என்று கருதப்பட்டது. இது முற்றிலும் உண்மை . இந்தப் பிரபஞ்சம் நாமமும் உருவமும் அன்றி வேறு என்ன? 
சொற்களின்றி நினைக்க உங்களுக்கு இயலுமா? சொல்லும் எண்ணமும் பிரிக்க முடியாதவை. முடியுமானால் உங்களுள் யாராவது முயன்று பாருங்கள். நீங்கள் நினைக்கும்போது சொல்-வடிவங்கள் வாயிலாகவே நினைக்கிறீர்கள். சொல் அகப் பகுதி, எண்ணம் புறப்பகுதி இரண்டும் சேர்ந்தே இருக்கும். அவற்றைப் பிரிக்க முடியாது. ஒன்று மற்றொன்றைக் கொண்டுவருகிறது. எண்ணம் சொல்லைக் கொண்டுவர, சொல் எண்ணத்தைக் கொண்டுவருகிறது. இவ்வாறு பிரபஞ்சம் முழுவதும் புறச் சின்னமாக உள்ளது. அதன் பின்னால் இறைவனது திருநாமம் திகழ்கிறது. 
ஒவ்வொரு குறிப்பிட்ட உடலும் ஒரு வடிவம். அந்தக் குறிப்பிட்ட உடலுக்குப்பின் அதன் நாமம் அல்லது பெயர் உள்ளது. நாம் நமது நண்பரை நினைக்கும்போது முதலில் அவரது உடலைப்பற்றிய எண்ணம்தான் நம் உள்ளத்தில் எழு கிறது; அதனுடன் கூடவே அவரது பெயரைப் பற்றிய கருத்து எழுகின்றது. இது மனிதனது அமைப்பிலேயே உள்ளது. அதா வது, மனஇயலின்படி மனிதனின் சித்தத்தில் வடிவமற்ற கருத்து என்றோ கருத்து இல்லாத உருவம் என்றோ ஒன்று கிடையாது. அவை பிரிக்க முடியாதவை. அவை ஒரே அலையின், உள்ளும் புறமும் போன்றவை. இதனால்தான் நாமங்கள் பெருமைப் படுத்தப்பட்டு உலகம் முழுவதிலும் வழிபடப்பட்டு வருகின் றன. அறிந்தோ அறியாமலோ மனிதன் திருநாமங்களின் மகிமை யைக் கண்டுகொண்டான். 
பல மதங்களில் அவதார புருஷர்கள் வணங்கப்பட்டு வருகின்றனர். கண்ணனை வழிபடுகின்றனர், புத்தரை வழிபடு கின்றனர், ஏசுவை வழிபடுகின்றனர். இப்படிப் பல மகான்களை வழிபடுகின்றனர். உலகெங்கும் நூற்றுக்கணக்கான மகான்கள் வணங்கப் படுகின்றனர். ஏன் வணங்கக் கூடாது? 
ஒளியின் அதிர்வு எங்கும் உள்ளது. ஆந்தை இருளிலும் காண்கிறது. என்றால் அங்கும் ஒளி இருக்கிறது என்பதுதானே பொருள்! ஆனால் அதை மனிதன் காண முடியாது. அவனது ஒளிநரம்புகளுக்கு ஏற்ற அதிர்வுகளுடன் வரும்போதுதான் அவனால் ஒளியைக் காண முடியும். விளக்கு, சூரியன், சந்திரன் போன்றவற்றில் அத்தகைய அதிர்வு இருப்பதால் அவன் அவற் றைக் காண்கிறான். இறைவன் எங்கும் உள்ளான். ஒவ்வோர் உயிரிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஆனால் மனிதனுக்கோ இறைவன் புலப்படுவதும் அறியப்படு வதும் மனிதனிடம்தான். மனிதனின் வாயிலாக அவரது ஒளி யும் சான்னித்தியமும் உணர்வும் பொலியும்போது மட்டுமே, மனிதன் அவரை அறிய முடியும். ஆகவே எக்காலமும் மனிதன் இறைவனை மனிதனின் வாயிலாகவே வணங்கி வந்துள் ளான்; அவன் மனிதனாக இருக்கின்ற வரையில் அவ்வாறே செய்தாக வேண்டும். அவன் அதனை எதிர்த்துக் கூச்சலிட லாம், போராடலாம். ஆனால் இறையனுபூதிக்கான பாதையில் செல்லத் தொடங்கியவுடனே இறைவனை மனிதனாக நினைக்க வேண்டியதன் அவசியம் மானிட இயல்பிலேயே இருப்பதைக் காண்பான்.
ஆகவே ஏறக்குறைய, எல்லா மதங்களிலுமே இறைவழி பாட்டில் மூன்று முக்கியப் பகுதிகளைக் காண்கிறோம் –உருவங்கள் அல்லது சின்னங்கள், நாமங்கள், தெய்வமனிதர்கள். எல்லா மதங்களிலும் இவை ஏதாவது ஒரு விதத்தில் இருக்கவே செய்கின்றன. எனினும் அவை ஒன்றோடொன்று அடித்துக்கொள்வதை நீங்கள் காணலாம். ‘நான் வழிபடும் நாமமே ஒரே நாமம், நான் வழிபடும் உருவமே ஒரே உருவம், என் மதத்திலுள்ள தெய்வ-மனிதரே உலகிலுள்ள ஒரே தெய்வ-மனிதர். உங்கள் மதம் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள்’ என்று ஒரு மதம் சொல்கிறது. இப்போதெல்லாம் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கும் முன்பிருந்ததைவிட இரக்கம் அதிகரித்துள்ளது போல் தோன்றுகிறது. பழைய மதங்கள் எல்லாம் கிறிஸ்தவ மதத்தின் முன்னோடிகள் மட்டுமே என்ற அளவிலாவது அவற்றை ஒப்புக்கொள்கின்றனரே! ஆனால் அவர்களின் மத மாகிய கிறிஸ்தவ மதம் ஒன்றே உண்மையானது என்று அவர்கள் சாதிப்பது வேறு விஷயம். பழங்காலத்தில் கடவுள் தம்மையே சோதித்தார், பல மதங்களைப் படைத்து அவற்றிற்கு ஒரு வடிவம் அளிப்பதில் தமது ஆற்றல்களைச் சோதித்துக் கொண்டார், இறுதியில் கிறிஸ்தவ மதத்தில்தான் தன்னை முழுமையாக வெளிப்படுத்தினாராம்! எப்படியோ முன்பிருந்த நிலையை எண்ணும்போது இது ஒரு நல்ல முன்னேற்றம் தானே! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவுகூடச் சொல் லியிருக்க மாட்டார்கள், அவர்களது மதத்தைத் தவிர வேறெதை யும் ஒத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்; அதுவே எல்லாம் என்று பறை சாற்றியிருப்பார்கள்.
ஏதோ ஒரு மதம், ஒரு நாடு, ஒரு பிரிவு என்ற எல்லைக் குள் மட்டுமே இத்தகைய குறுகிய கருத்து வழங்கி வருகிறது என்பதல்ல. எப்போதும் தாங்கள் என்ன செய்கிறோமோ, அது தான் மற்றவர்கள் செய்வதற்கு உரிய சரியான ஒரே செயல் என்றே மக்கள் கருதுகிறார்கள். இங்கேதான் பல மதங்களை யும் படிப்பது நமக்கு உதவுகிறது. நம்முடையவை என்றும், நமக்கு மட்டுமே உரியவை என்றும் நாம் எண்ணி வந்துள்ள அதே கருத்துக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பிறரிடமும் தோன்றியிருந்தன, சிலவேளை களில் அவை நம்முடையதைவிட மிகச் சிறந்த முறையில் வெளியிடப்பட்டிருந்தன என்பது அப்போதுதான் நமக்குத் தெரியவரும். 
இவை பக்தியின் புற வடிவங்கள். இவை மனிதன் கடந்து செல்ல வேண்டிய பாதை. ஆனால் அவன் உண்மையான அக் கறை உடையவனானால், மெய்ப்பொருளை அடைய உண்மை யான விருப்பம் உடையவனானால், இவற்றைவிட மிக உயர்ந்த நிலைக்கு, உருவங்கள் பயனற்றதாக உள்ளதோர் உயர்ந்த இடத்திற்குச் செல்கிறான். கோயில்கள், சர்ச்சுகள், சாஸ்திரங் கள், உருவங்கள் இவையெல்லாம் மதத்தின் ஆரம்பப் பாடங்கள்; ஆன்மீக வாழ்வில் குழந்தை நிலையில் உள்ளவர்கள் உயர்ந்த படிகளில் ஏறுவதற்கு வேண்டிய வலிமையைத் தரு வதற்கானவை. ஒருவனுக்கு ஆன்மீகம் வேண்டுமானால் இந்த முதற்படிகள் அவசியம்.
இறைவனை மன ஏக்கத்துடன் நாடும்போதுதான் உண்மை யான பக்தி உண்டாகிறது. உண்மையான பக்தி-அது யாரிடம் உள்ளது? இதுதான் கேள்வி. மதம் என்பது கொள்கைகளிலோ சிந்தாந்தங்களிலோ, வாதப் பிரதிவாதங்களிலோ இல்லை. மதம் என்பது அதுவே ஆவது, அதுவாகப் பரிணமிப்பது; அது அனுபூதி.
கடவுள், ஆன்மா என்றெல்லாமும், பிரபஞ்ச ரகசியங் களைப்பற்றியும் எல்லோரும் பேசுகிறார்கள். அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களிடம், ‘நீ இறைவனைக் கண்டிருக்கிறாயா? உன் ஆன்மாவைக் கண்டது உண்டா?’ என்று கேளுங்கள். ‘ஆம்’ என்று பதில் கூற அவர்களுள் எத் தனை பேரால் முடியும்? ஆனாலும் ஒருவரோடொருவர் போராடிக் கொண்டுள்ளனர்!
    இந்தியாவில் ஒருசமயம் பல மதப்பிரிவுகளின் பிரதி நிதிகள் ஒன்றாகக் கூடி வழக்காடத் தொடங்கினர். ‘சிவ பெருமான்தான் ஒரே கடவுள்’ என்றார் ஒருவர்; ‘திருமால் தான் ஒரே தெய்வம்’ என்றார் இன்னொருவர். இப்படியே அவர்களுடைய வழக்கு முடிவற்றுத் தொடர்ந்தது. அப்போது அந்த வழியாக ஒரு முனிவர் சென்று கொண்டிருந்தார். இந்த வழக்கைத் தீர்க்குமாறு அவரை அழைத்தனர். அவரும் சம்மதித்தார். முதலில், சிவனே மேலான கடவுள் என்று கூறிய வரிடம், ‘ஆமாம், நீ சிவபெருமானைக் கண்டிருக்கிறாயா? அவருடன் பழகியிருக்கிறாயா? இல்லாவிட்டால் அவரே உயர்ந் தவர் என்பதை நீ எவ்வாறு அறிந்தாய்?’ என்று கேட்டார். பிறகு திருமாலை வழிபடுபவரிடமும் ‘நீ திருமாலைக் கண் டிருக்கிறாயா?’ என்று கேட்டார். இந்தக் கேள்வியையே எல் லோரிடமும் கேட்டார். அவர்களுள் யாரும் கடவுளைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை . அவர்கள் வாதப் பிரதிவாதங் களில் ஈடுபட்டதற்கு அதுவே காரணம். உண்மையிலேயே அறிந்தவர்களாக இருந்தால் வழக்கே எழுந்திருக்காது. ஜாடியை நீரால் நிரப்பும்போது ஓசை உண்டாகிறது. அது நிரம்பிய பின் ஓசை இல்லை . அதுபோலவே மதப் பிரிவுகளுள் வழக்குகளும் போராட்டங்களும் இருப்பது, அவர்களுக்கு மதத்தைப்பற்றி எதுவும் தெரியாது என்பதையே காட்டுகிறது. அவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது நூல்களில் எழுதி வைப்பதற்கு உரிய பயனற்ற வெறும் மொழிக் குவியல் மட்டுமே.
ஒவ்வொருவனும் பெரிய நூல் எழுதத் துடிக்கிறான். கையில் அகப்பட்ட எல்லா நூல்களிலிருந்தும் திருடிச் சேர்த் துத் தன் நூலை இயன்றவரை பெரிதாக்குகிறான். அந்தக் கருத்துக்களின் சொந்தக்காரர்களுக்கு நன்றிக்கடன் பட்டி ருப்பதையும் அவன் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. பின்னர் அந்த நூலை உலகில் பரப்பி, ஏற்கனவே நிலவுகின்ற குழப்பத்தை மேலும் அதிகமாக்குகிறான்.
மக்களில் பெரும்பாலோர் நாத்திகரே. தற்காலத்தில் மேலை நாடுகளில் இன்னொருவகை நாத்திகர் தோன்றியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் குறிப்பிடுவது உலோகாய தர்களையே. அவர்கள் நேர்மையான நாத்திகர்கள். நேர்மை யற்றவர்களைவிட, மதத்தைப்பற்றி வெறுமனே பேசிக்கொண் டும் சண்டையிட்டுக்கொண்டும், அதேவேளையில் அதன் தேவையை உணராத, அதனைப் புரிந்துகொள்ள முயலாத மத நாத்திகர்களைவிட அவர்கள் மேலானவர்கள். ஏசு கூறி யதை நினைவு கூருங்கள்: ‘கேள், உனக்குத் தரப்படும். தேடு, அதனை நீ காண்பாய்; தட்டு, உனக்காகத் திறக்கப்படும்’-இது எழுத்துக்கு எழுத்து உண்மையானது. இது கற்பனையோ கதையோ அல்ல. இது, உலகில் இதுவரை தோன்றியுள்ள, இறைவனின் மிகச் சிறந்த மைந்தர்களுள் ஒருவரின் இதய ரத்தத்திலிருந்து வெளிப்பட்டது. இவை அனுபூதியின் விளை வாக வெளிவந்த வார்த்தைகள்; படித்துச் சொன்னவை அல்ல. கடவுளை உணர்ந்து அனுபவித்த ஒருவரது வார்த்தைகள் இவை. நீங்களோ நானோ இந்தக் கட்டிடத்தைப் பார்ப்பதை விட நூறுமடங்கு மிகத் தெளிவாக இறைவனைக் கண்டு அவரோடு பேசி, அவரோடு வாழ்ந்த ஒருவரிடமிருந்து பிறந் தவை இவை. 
இறைவனை வேண்டுபவர் யார்? இதுதான் கேள்வி. இந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் இறைவனை அடைய நினைத்தும், அவரை அடைய முடியவில்லை என்று நினைக் கிறீர்களா? அப்படி இருக்க முடியாது. மனிதனின் தேவைகள் எதுவானாலும் அதைத் தீர்த்து வைப்பதற்கான பொருள் புற வுலகில் உள்ளது. அப்படிப் புற உலகில் இல்லாத பொருள் ஏதாவது உண்டா ? அவன் சுவாசிக்க வேண்டும், அதற்குக் காற்று உள்ளது. உண்ண வேண்டும், அதற்கு உணவு உள்ளது. இந்த ஆசைகளைப் படைப்பது எது? புறப்பொருட்கள்தான். ஒளியே கண்களை உண்டாக்கியது, ஒலியே செவிகளைப் படைத்தது. இவ்வாறு மனிதனிடமுள்ள ஒவ்வோர் ஆசை யையும் புற உலகிலுள்ள ஏதோ ஒன்றுதான் படைத்துள்ளது. நிறைநிலையை அடைவதற்கான ஆசை, அதாவது லட்சியத்தை அடைந்து இயற்கைக்கு அப்பால் செல்லத் துடிக்கின்ற இந்த ஆசையையும் அவ்வாறே படைத்து, மனித மனத்தில் அதனைப் புகுத்தி, அதனை அங்கேயே வாழும்படிச் செய்யாவிட்டால் அது எப்படி இருக்க முடியும்? ஆதலால் யாரிடம் இந்த ஆசை எழுமோ அவன் அதனை அடையவே செய்வான். ஆனால் அதை யார் விரும்புகிறார்கள்? 
இறைவனைத் தவிர மற்ற அனைத்தையும் நாம் விரும்பு கிறோம். உங்களைச் சுற்றி நீங்கள் காண்பது மதமே அல்ல. ‘என் மனைவி உலகம் முழுவதிலுமிருந்தும் சாமான்களை வர வழைத்து வரவேற்பறையில் வைத்திருக்கிறாள். இப்போதெல் லாம் ஜப்பானியப் பொருள் சிலவற்றை வைத்திருப்பதுதான் நாகரீகம்! எனவே அழகிய ஜப்பான் ஜாடி ஒன்றையும் வாங்கி அங்கே வைக்கிறாள்.’–பெரும்பாலோருக்கு மதமும் இத் தகையதாகவே உள்ளது. இன்ப நுகர்ச்சிக்கான எல்லாம் அவர் களிடம் உள்ளன. ஆனால் சிறிது மத வாசனையும் சேரா விட்டால் வாழ்க்கை நிறைவு பெறாது. சமூகம் அவர்களைக் குறை கூறும், எனவே சிறிது மதமும் இருக்க வேண்டும். இன் றைய உலகில் மதத்தின் நிலை இதுவே.
ஒரு சீடன் தன் குருவிடம் சென்று, ‘ஐயா, எனக்கு ஆன்மீகம் வேண்டும்’ என்றான். குரு அந்த இளைஞனைப் பார்த்து அமைதியாகப் புன்முறுவல் மட்டும் பூத்தார், எதுவுமே பேசவில்லை. இளைஞன் ஒவ்வொரு நாளும் வந்து, தனக்கு ஆன்மீகம் வேண்டுமென வற்புறுத்தினான். அந்த முதியவர் இளைஞனைவிட விஷயம் தெரிந்தவர். ஒருநாள் வெயில் கடுமையாக இருந்தது. அன்று அவர் அந்த இளைஞனைத் தம்மோடு ஆற்றுக்கு நீராட அழைத்துச் சென்றார். அவன் நீருக்குள் இறங்கி மூழ்கியதும், முதியவர் அவனைப் பிடித்து, பலவந்தமாக நீரினுள் அமிழ்த்தி வைத்துக் கொண்டார். அவன் திணறிப்போய் வெளியே வரப் போராடினான். சிறிதுநேரம் அவர் விடவே இல்லை. பிறகு அவனை விட்டார். சோர்ந்து போய் தலையை மேலே தூக்கினான் அவன். அப்போது அவர் அவனிடம், ‘நீரினுள் இருந்தபோது உனக்கு மிகவும் தேவை யாக இருந்தது எது?’ என்று கேட்டார். ‘மூச்சுக் காற்று’ என் றான் சீடன். ‘ஆம், இறைவன் வேண்டும் என்று அவ்வாறே நீ நினைக்கிறாயா? அவ்வளவு தூரம் இறைவனின் தேவையை உணர்ந்தாயானால் அவனைப் பெறுவாய்’ என்றார் குரு.
அந்தத் தாகம், அந்த ஆசை உன்னிடம் எழும்வரை, உன் அறிவாலோ, உனது சாஸ்திரங்களாலோ, உருவங்களாலோ, நீ எவ்வளவுதான் பாடுபட்டாலும் ஆன்மீகத்தைப் பெற முடி யாது. அந்தத் தாகம் உன்னிடம் எழும்வரை, நீ நாத்திகனைவிட மேலானவன் அல்ல. நாத்திகன் நேர்மையாகவாவது இருக் கிறான். உன்னிடம் அதுவும் இல்லை .
ஒரு மாமுனிவர் கூறுவார்: ‘ஓர் அறையில் ஒரு திருடன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அடுத்த அறையில் ஒரு பெரும் பொற்குவியல் இருப்பதாக அவனுக்குத் தெரியவரு கிறது. இரண்டு அறைகளுக்கும் இடையே ஒரு மெல்லிய சுவர் மட்டுமே இருக்கிறது. அந்தத் திருடனின் நிலைமை எவ் வாறிருக்கும்? அவனால் உறங்க முடியாது, உண்ண முடியாது, வேறு எதையும் செய்யவே முடியாது. பொன்னை எப்படி எடுப்பது என்பதிலேயே அவனது மனம் ஆழ்ந்திருக்கும். பேரானந்தமும் பெருநன்மையும் மகிமையும் கொட்டிக் கிடக் கின்ற சுரங்கமான இறைவன் இங்கே இருக்கிறான் என்று மக்கள் அனைவரும் உண்மையாக நம்பினால், அவனை அடைய முயலாமல், இப்போது இருப்பதுபோல் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?’
இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஒருவன் ‘நம்பத் தொடங்கிய உடனே, அவனைக் காண்பதற்கான ஏக்கத் தால் பித்தனாவான். பிறர் தத்தம் வழியில் சென்று கொண்டிருப் பார்கள். ஆனால் இப்போது வாழ்ந்து வருகின்ற வாழ்வைவிட மிக உயர்ந்த வாழ்வு ஒன்று உள்ளது என்ற உறுதியைப் பெற்ற வன், புலன்களே எல்லாம் அல்ல, அழிவற்ற, என்றுமுள்ள, இறவாத ஆன்ம இன்பத்தோடு ஒப்பிடும்போது எல்லைக்குட் பட்ட இந்த ஜடஉடல் வெறும் பூஜ்யம் என்ற உறுதி வரப்பெற் றவன், அந்தப் பேரின்பத்தைத் தானே உணரும்வரை பித்தனாகத் தான் ஆவான். இந்தப் பைத்தியம், இந்தத் தாகம், இந்த வெறி தான் ஆன்மீக ‘விழிப்புணர்வு’ எனப்படுவது. இது தோன்றிய பின்னரே ஒருவன் ஆன்மீகவாதியாகத் தொடங்குகிறான். ஆனால் இந்த நிலை தோன்ற நீண்ட காலம் தேவைப்படும்.
உருவங்கள், சடங்குகள், பிரார்த்தனைகள், தீர்த்த யாத் திரைகள், சாஸ்திரங்கள், மணிகள், மெழுகுவர்த்திகள், பூஜாரிகள் ஆகிய எல்லாமே வெறும் ஆயத்தங்கள்தான். இவை ஆன்மாவின் அழுக்குகளை நீக்குகின்றன. ஆன்மா தூய்மை அடைந்ததும், தன் சொந்த இருப்பிடத்தை இயல்பாகவே நாடுகிறது. அந்த இருப்பிடம் தூய்மை அனைத்திற்கும் உறை விடமான இறைவனே. பல நூற்றாண்டுகளாகத் தூசி படிந்து மூடிக் கிடக்கின்ற ஓர் இரும்புத்துண்டு காலங்காலமாக ஒரு காந்தத்தின் அருகே இருக்கலாம், எனினும் அதனால் கவரப் படாதிருக்கும்; தூசு அகற்றப்பட்டால் உடனே காந்தத்தால் ஈர்க்கப்படுகிறது. அதுபோலவே காலங்காலமாகப் படிந்த தூசும், மாசும், தீமையும், பாவமும் மூடியுள்ள மனித ஆன்மா , இந்த வழிபாடுகளாலும், சடங்குகளாலும், பிறருக்கு நன்மை செய்வதாலும், பிற உயிர்களை நேசிப்பதாலும், பல பிறவி களுக்குப் பிறகு போதிய அளவு தூயதாகும்போது, அதற்கு இயல்பாயுள்ள ஆன்மீகக் கவர்ச்சி வெளிப்படுகிறது. அது விழிப்படைகிறது. இறைவனை நோக்கிச் செல்லப் பாடுபடுகிறது.
என்றாலும் இந்த உருவங்களும் சின்னங்களும் வெறும் ஆரம்பமே; அவை உண்மையான இறையன்பு ஆகாது. அன்பைப்பற்றிப் பேசுவதை எங்கும் கேட்கிறோம். இறைவனை நேசி என்று ஒவ்வொருவனும் சொல்கிறான். ஆனால் அன்பு செய்வது என்றால் என்ன என்பது மக்களுக்குத் தெரியுமா என்றால், கிடையாது. தெரிந்திருந்தால் அவ்வளவு எளிதாக அதைப்பற்றிப் பேச மாட்டார்கள். ஒவ்வொருவனும் தன்னால் அன்பு செய்ய இயலும் என்கிறான். ஐந்து நிமிடம்தான்அதற்குள் தன் இயல்பில் அன்பு இல்லை என்பதைக் கண்டு கொள்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தன்னால் அன்பு செய்ய முடியும் என்கிறாள். ஆனால் அது இயலாது என்பதை மூன்று நிமிடத்தில் கண்டுகொள்கிறாள். அன்பைப்பற்றிய பேச்சு உலகில் நிறைந்துள்ளது. ஆனால் அன்பு செய்வது கடினம்.
அன்பு எங்கே உள்ளது? அன்பு உள்ளது என்று உனக்கு எப்படித் தெரியும்? அன்பிற்கான முதல் சோதனை, அது பேரம் பேசுவதை அறியாது என்பதே. ஏதாவது ஒன்றைப் பெறு வதற்காக ஒருவன் மற்றவனை நேசித்தால், அது அன்பு அல்ல; அது வியாபாரம். கொடுக்கல்-வாங்கல் பேச்சு வந்துவிட்டாலே, அது அன்பாக இருக்க முடியாது. எனவே இறைவனிடம், ‘எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு’ என்று கேட்பது அன்பு ஆகாது. அது எவ்வாறு அன்பாக முடியும்? நான் உங் களிடம் கேட்கிறேன். நீங்கள் பதிலாக ஒன்றைத் தருகிறீர்கள். அதுபோல்தான் இதுவும் வெறும் வியாபாரம்.
மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவருடன் சிறிது நேரம் பேசியதிலேயே மிகவும் மகிழ்ந்த அவன் தன்னிடமிருந்து ஏதாவது பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் வேண்டினான். அதற்கு அந்த முனிவர், ‘எனக்கு எதுவும் வேண்டாம். இப்போது நான் திருப்தியாகவே உள்ளேன். இந்த மரங்கள், நான் உண்ணப் போதிய பழங்களைத் தருகின்றன; இந்த அழகிய, தெள்ளிய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரைத் தருகின்றன; இந்தக் குகைகளில் நான் உறங்குகிறேன். நீ ஒரு மன்னாதி மன்னனா னாலும் நீ தருபவற்றை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்?’ என்று கூறினார். அதைக் கேட்ட மன்னன், ‘என்னைத் தூய வனாக்க, எனது திருப்திக்காகவாவது ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னோடு நகருக்கு எழுந்தரு ளுங்கள்’ என்று வேண்டினான். இறுதியில் முனிவர் மன்னனோடு செல்ல இசைந்தார்.
முனிவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான் மன்னன். பொன், மணி, பளிங்கு என்று அந்த அரண்மனை விலைமதிப்பற்ற பொருட்களால் நிறைந்திருந்தது. செல்வமும் ஆற்றலும் எங்கும் வெளிப்பட்டிருந்தன. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு, ஒரு மூலைக்குச் சென்று, ‘இறைவா எனக்கு இன்னும் செல்வமும் மக்களும் நாடும் தந் தருள்வாய்’ என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதைக் கேட்ட முனிவர் எழுந்து வெளியே செல்லத் தொடங் கினார். அவர் செல்வதைக் கண்ட மன்னன் அவரைப் பின் தொடர்ந்து, ‘சுவாமி, நில்லுங்கள். நீங்கள் எனது நன்கொடை யைப் பெறாமல் செல்கிறீர்களே!’ என்று கூறினான். அதற்கு முனிவர் அவனிடம், ‘மன்னா, பிச்சைக்காரனிடம் நான் யாசிப்ப தில்லை. உன்னால் எனக்கு என்ன கொடுக்க முடியும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறாய்’ என்று கூறினார். அன்பின் மொழி அதுவல்ல. ‘இதைத் தா, அதைத் தா’ என்று நீ இறைவனிடம் வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு? 
     அன்பின் முதல் பரிசோதனை பேரம் பேசுவது எதுவும் அதில் இல்லாததுதான். அது எப்போதும் கொடுக்கிறது. கொடுப்பதைத் தவிர எடுப்பது அதற்குத் தெரியாது. இறைவன் திருவுள்ளம் அதுவானால் என்னிடமுள்ள எல்லாவற்றையும் அவருக்கு அளிப்பேன்; அவரிடமிருந்து எனக்கு எதுவும் வேண் டாம். பிரபஞ்சத்திலுள்ள எதுவும் எனக்குத் தேவையில்லை. அவரிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். அதனால் அவரை நேசிக்கிறேன்; பிரதியாக எனக்கு எதுவும் வேண்டாம். கடவுள் எல்லாம் வல்லவரா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்? அவரிடமிருந்து எந்தச் சக்தியும் எனக்கு வேண்டாம். அவரது சக்தியின் வெளிப்பாடுகளும் எனக்கு வேண்டாம். அவர் அன்புத் தெய்வம் என்பதே எனக்குப் போதும். வேறு கேள்வி எதனையும் கேட்க மாட்டேன்’ என் கிறான் இறைவனின் குழந்தை.
இரண்டாவது பரிசோதனை, அன்பு பயம் அறியாதது என்பதே.அன்பில் பயம் இருக்க முடியுமா? ஆடு சிங்கத்தின்மீது அன்பு செலுத்துமா? சுண்டெலி பூனையை நேசிக்குமா? அடிமைக்கு எஜமானிடம் அன்பு உண்டா ? அடிமைகள் அன்பு செய்வதாகச் சிலவேளைகளில் காட்டிக்கொள்வார்கள். ஆனால் அது அன்பு ஆகுமா? பயத்தில் அன்பை எங்காவது கண்டது உண்டா ? அது எப்போதும் போலியானதே. ஒரு கையில் பரிசு களும், மற்றொன்றில் தண்டனைகளும் வைத்துக்கொண்டு மேகமண்டலத்திற்கு அப்பால் இருக்கின்ற ஒருவராக இறை வனை மனிதன் நினைக்கும்வரை, அன்பு என்பது வர இயலாது. 
அன்புடன் ஒருபோதும் பயக் கருத்தோ அல்லது நமக்கு பயமூட்டக்கூடிய எந்தக் கருத்துமோ தோன்றுவதில்லை. வீதி யில் ஓர் இளம் தாய் நிற்கிறாள். ஒரு நாய் அவளைப் பார்த்துக் குரைக்கிறது. அவள் என்ன செய்வாள்? அருகிலுள்ள வீட்டிற் குள் ஓடுவாள். மறுநாள் அவள் தன் குழந்தையோடு போய்க் கொண்டிருக்கிறாள். ஒரு சிங்கம் குழந்தைமீது பாய்கிறது. அவள் என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னைக் கொடுத் தாவது குழந்தையைக் காக்கத்தானே துணிவாள்! அன்பு எல்லா பயத்தையும் வெல்கிறது. இத்தகையதே இறைவன்மீது காட்டும் அன்பும்.
இறைவன் பரிசளிப்பவரா, தண்டனை தருபவரா என் பதைப்பற்றி யார் கவனிப்பது? பக்தனின் எண்ணம் அதுவல்ல. நீதிபதி ஒருவர் தன் வீட்டிற்குத் திரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவரது மனைவி அவரிடம் யாரைக் காண்பாள்? நீதிபதியையா? பரிசளிப்பவரையா? தண்டனை கொடுப்ப வரையா? இவர்கள் யாரையும் அல்ல, அவள் காண்பது தன் கணவரையே, தனது அன்பரையே. அவரது குழந்தைகள் அவ ரிடம் யாரைக் காண்பார்கள்? தங்கள் அன்புத் தந்தையையே; தண்டிப்பவரையோ பரிசளிப்பவரையோ அல்ல. அது போன்றே இறைவனின் குழந்தைகளும் ஒருபோதும் அவரைத் தண்டிப்ப வராகவோ பரிசளிப்பவராகவோ காண மாட்டார்கள். அவரது அன்பை ஒருநாளும் சுவைத்து அறியாதவர்களே அவரைக் கண்டு பயப்படுகிறார்கள்; வாழ்நாள் முழுவதும் அஞ்சி நடுங்கு கிறார்கள். அவர் தண்டிப்பவர், பரிசளிப்பவர் போன்ற பயங் கரமான கருத்துக்கள் பண்படாத மனங்களுக்குப் பயன்படலாம். நீங்கள் அவற்றை வீசியெறிந்து விடுங்கள். எல்லா பயத்தையும் விடுங்கள். பேரறிவு படைத்தவர்களாக இருந்தாலும் சிலர் ஆன்மீகத்தைப் பொறுத்தவரை காட்டுமிராண்டிகளாகவே உள்ளார்கள். அவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் உதவலாம். ஆனால் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு, ஆன்மீகத்தை நெருங்கிவிட்டவர்களுக்கு, ஆன்மீக விழிப்புணர்வு பெற்றவர் களுக்கு இத்தகைய கருத்துக்கள் வெறும் சிறுபிள்ளைத்தனம்; வெறும் முட்டாள்தனம். அத்தகையோர் பயத்தைப் பற்றிய எல்லா எண்ணங்களையும் விட்டுவிடுவார்கள்.
மூன்றாவதாக, இன்னும் உயர்ந்த ஒரு பரிசோதனை உள்ளது. அன்பே எப்போதும் மிக உயர்ந்த லட்சியம். முதல் இரண்டு நிலைகளையும் கடந்தபின், அதாவது வியாபார நோக்கத்தையும் பயத்தையும் விட்டபின், அன்பே எப்போதும் மிகவுயர்ந்த லட்சியம் என்பதை ஒருவன் உணரத் தொடங்கு கிறான். அழகிய பெண் அழகற்றவனைக் காதலிப்பதை நாம் எவ்வளவோ கண்டிருக்கிறோம். அழகன் அழகற்றவளைக் காதலிப்பதையும் பார்க்கிறோம். அங்கே எது கவர்ச்சியாக உள்ளது? மூன்றாம் மனிதன் அங்கே அழகற்ற ஆணையோ, அழகற்ற பெண்ணையோதான் காண்கிறான். ஆனால் காத லர்கள் அவ்வாறு பார்ப்பதில்லை. காதலர்களுக்குத் தங்கள் காதலுக்கு உரியவர்கள் தான், இதுவரை இருந்தவர்களிலேயே மிகவும் அழகானவர்கள். அது எப்படி? அழகற்றவனைக் காதலிப்பவள் தன் உள்ளத்தில் இருக்கும் அழகு-லட்சியத்தை வெளியிலே எடுத்து, அந்த அழகற்றவன்மீது ஏற்றுகிறாள். அவள் காதலிப்பதும் கொண்டாடுவதும் இந்த அழகுலட்சியத்தையே, தனது சொந்த எண்ணத்தையே தவிர, அந்த அழகற்ற ஆண்மகனை அல்ல. அந்த ஆடவன் நிமித்தம் மட் டுமே, அந்த நிமித்தத்தின்மீது அவள் தனது சொந்த லட்சியத்தை ஏற்றி அதை மூடிவிடுகிறாள். அது அவளது போற்றுதலுக்கு உரியதாகிறது. நமது அன்புச் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் இது பொருந்தும். நம்முள் பெரும்பாலோரது சகோதர சகோதரிகள் சாதாரணத் தோற்றம் உடையவர்களே. ஆனால் அவர்கள் நம் சகோதர சகோதரிகள் என்ற எண்ணமே அவர்கள் அழகானவர்கள் என்று நம்மை எண்ணச் செய்கிறது அல்லவா!. 
இதன் அடிப்படையில் உள்ள தத்துவம் என்னவென்றால், ஒவ்வொருவரும் தன் சொந்த லட்சியத்தை வெளிப்படுத்தி அதனை வணங்குகிறான் என்பதே. இந்தப் புறவுலகம் வெறும் நிமித்தம் மட்டுமே. நாம் காண்பன எல்லாம் நம் உள்ளங் களிலிருந்து வெளிப்படுத்தப் பட்டவை. முத்துச்சிப்பிக்குள் நுண்ணிய மணல் ஒன்று புகுந்துவிடுகிறது. அது அந்தச் சிப்பியை உறுத்துகிறது. அந்த உறுத்தலின் விளைவாகச் சிப்பி யில் ஒரு விதத் திரவம் சுரக்கிறது. அது அந்த மணலை மூடிக் கொள்கிறது. அதன் இறுதிவிளைவே அழகிய முத்து. நாம் எல்லோரும் செய்வதும் இதுதான். புறப்பொருட்கள் நமக்கு சூசகங்களை மட்டுமே தருகின்றன. அவற்றின்மீது நாம் நமது லட்சியங்களை ஏற்றி நமக்கான பொருட்களை உண்டாக்கிக் கொள்கிறோம். இந்த உலகைத் தீயவர்கள் முழு நரகமாகக் காண்கின்றனர்; நல்லவர்கள் பூரண சொர்க்கமாகக் காண்கின் றனர்; காதலர்கள் காதல் நிரம்பியதாகவும், வெறுப்பவர்கள் வெறுப்பு நிரம்பியதாகவும் காண்பார்கள். போராளி களுக்கு இந்த உலகில் போரைத் தவிர எதுவும் தெரியாது; அமைதியை நாடுவோர் அமைதியைத் தவிர வேறெதையும் காண மாட்டார்கள். அவ்வாறே நிறைமனிதன் இறைவனைத் தவிர வேறு எதையும் காண மாட்டான்.
எனவே நாம் மிக உயர்ந்த நமது லட்சியத்தையே எப் போதும் வணங்குகிறோம். லட்சியத்திற்காகவே லட்சியத் தின்மீது அன்பு செய்யும் நிலையை நாம் அடையும்போது எல்லா வாதங்களும் சந்தேகங்களும் என்றென்றைக்குமாக அழிந்துவிடும். கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியுமா, முடி யாதா? அதுபற்றி யாருக்குக் கவலை? ஆனால் லட்சியம் ஒரு நாளும் என்னை விட்டுப் போகாது. ஏனெனில் அது எனது சொந்த இயல்பின் ஒரு பகுதி. நான் இருக்கிறேனா என்ற சந்தேகம் எழுந்தால் மட்டுமே லட்சியத்தைப்பற்றிய சந்தேக மும் எழும். அதைப்பற்றிச் சந்தேகம் வராதபோது இதைப் பற்றியும் சந்தேகம் வர வழியில்லை .
எனக்கு வெளியில் எங்கோ இருந்துகொண்டு, வேடிக்கை விளையாட்டாக இந்தப் பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டு, பல நாட்களாக இதனைப் படைத்தபின் ஓய்வெடுத்துக் கொண் டிருக்கின்ற ஒரு கடவுளை விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியுமா, முடியாதா என்பதுபற்றி யாருக்குக் கவலை? எல்லாம் வல்ல வராகவும் அதேவேளையில் கருணை வடிவினராகவும் கடவுளால் இருக்க முடியுமா, முடியாதா என்பதைப்பற்றி யாருக்குக் கவலை? அவர் மனித குலத்திற்குப் பரிசளிப்பவரா என்று யார் கவலைப்படுகிறார்கள்? கொடுங்கோல் மன்னனின் கண்கொண்டு நம்மை நோக்குபவரா? அல்லது செங்கோல் தவறாத மன்னனின் கண்கொண்டு பார்ப்பவரா? இதைப் பற்றி யெல்லாம் கவலைப்படுவது யார்?
பரிசுகளுக்கும் தண்டனைகளுக்கும் அப்பால், பயங்களுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பால், விஞ்ஞான முறைப்படியோ வேறு முறைப்படியோ நிரூபிப்பதற்கும் அப்பால் – இவை யனைத்திற்கும் அப்பால் பக்தன் சென்றுவிடுகிறான். இந்த அன்பு-லட்சியம் ஒன்றே அவனுக்குப் போதும். இந்தப் பிர பஞ்சமே அந்த அன்பின் வெளிப்பாடு என்பது வெளிப்படை அல்லவா! அணுக்களை அணுக்களோடு, மூலக்கூறுகளை மூலக்கூறுகளோடு ஒன்றுசேர்ப்பதும், பெரிய கோள்களை ஒன்றை நோக்கி மற்றொன்று பாயச் செய்வதும், ஆணைப் பெண்ணிடம் ஈர்ப்பதும், பெண்ணை ஆணிடம் ஈர்ப்பதும், மனிதனை மனிதனிடம் ஈர்ப்பதும், மிருகங்களை மிருகங் களிடம் ஈர்ப்பதும், பிரபஞ்சம் முழுவதையும் ஒரு மையத்தை நோக்கி ஈர்ப்பதுபோல் உள்ளதும் எது? அதுவே ‘அன்பு’ எனப்படுவது.
அனைத்திலும் தாழ்ந்த அணு முதல் மிக உயர்ந்த உயிர் வரை அதன் வெளிப்பாடு தெளிவாகத் தெரிகிறது. அது எங்கும் நிறைந்தது, எல்லாவற்றுள்ளும் இருப்பது. எங்குமே அன்புதான் உள்ளது. எல்லா உயிர்களிலும் எல்லா பொருட்களிலும் சிறப் பானவற்றிலும் பொதுவானவற்றிலும் கவரும் ஆற்றலாகத் தன்னை வெளிப்படுத்துவது இறையன்பே’. பிரபஞ்சத்தில் விளங்கும் தூண்டுசக்தி அதுவே. அந்த அன்பின் உந்துதலி னால்தான் ஏசு மனிதகுலத்திற்காகத் தமது உயிரை ஈந்தார்; புத்தர் ஒரு மிருகத்திற்காகக்கூட உயிர்விடத் துணிந்தார்; தாய் குழந்தைக்காகவும் கணவன் மனைவிக்காகவும் உயிரைவிடத் துணிகின்றனர். அதே அன்பின் உந்துதலினால்தான் மக்கள் நாட்டிற்காகத் தங்கள் உயிரையும் துறக்க ஆயத்தமாகின்றனர்.
விந்தை என்னவென்றால் அதே அன்பின் உந்துதலால் தான் திருடன் திருடவும், கொலைகாரன் கொலை செய்ய வும் செய்கிறான். இந்தச் செயல்களிலுள்ள நோக்கம் ஒன்று தான், வெளிப்பாடுதான் வெவ்வேறாக உள்ளது. பிரபஞ் சத்திலுள்ள தூண்டுசக்தி இது ஒன்றே. திருடன் பொன்னில் அன்பு வைக்கிறான்; அங்கேயும் அன்புதான் உள்ளது, ஆனால் அது தவறான வழியில் செல்கிறது. ஆதலால் அத்தனை தீய செயல்களின் பின்னணியிலும், அத்தனை நற்செயல்களின் பின்னணியிலும் நிற்பது அந்த அழியா அன்பே. நியூயார்க் நகரி லுள்ள ஏழைகளுக்காக ஒருவன் ஆயிரம் டாலர்களுக்கு ஒரு காசோலை எழுதுகிறான், அதேசமயம் அதே அறையில் இன் னொருவன் ஒரு நண்பனின் பொய்க் கையெழுத்தை இடுகிறான். இருவருக்கும் எழுத உதவுகின்ற ஒளி ஒன்றே. ஆனால் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு அவனவனே பொறுப்பு. ஒளியைக் குறைகூறுவதிலோ புகழ்வதிலோ பொரு ளில்லை. பற்றில்லாமல் ஒவ்வொன்றிலும் ஒளிர்வது அன்பே. பிரபஞ்சத்தின் தூண்டுசக்தி அதுவே. அது இல்லாவிட்டால் பிரபஞ்சம் ஒரு கணத்தில் தூள் தூளாகிவிடும். அந்த அன்பே இறைவன்.
‘அன்பே! கணவனுக்காக எந்த மனைவியும் கணவனிடம் அன்பு செலுத்துவதில்லை. அவனிடம் விளங்கும் ஆன்மா விற்காகவே அன்பு செலுத்துகிறாள். மனைவியிடம் கணவன் அன்புகொள்வது மனைவிக்காக அல்ல; மனைவியிடம் உள்ள ஆன்மாவிற்காகவே. ஆன்மாவிற்காகவே அல்லாமல் யாரும் வேறு எதிலும் அன்பு செலுத்துவதில்லை.’ மிகவும் கண்டிக்கப் படுவதான தன்னலம் என்பதுகூட அதே அன்பின் வெளிப் பாடுதான். இந்த விளையாட்டிலிருந்து விலகி நில்லுங்கள், இதில் கலந்து கொள்ளாதீர்கள். வியக்கத் தக்க இந்தத் தொடர்காட்சி, அற்புதமான இந்தப் பெரும் நாடகம், ஒவ்வொரு காட்சியாக நடிக்கப்படுவதைக் காணுங்கள். அனைத்தும் சேர்ந்து இசைக்கும் இந்த அற்புத இசையைக் கேளுங்கள். யாவும் ஒரே அன்பின் வெளிப்பாடுகளே. தன்னலத்திலும் அந்த ஆன்மா பெருகி, மேன்மேலும் வளரும். அந்த ஒரே ஆன்மா, அந்த ஒரே மனிதன், மணம் புரிந்து கொள்ளும்போது இரு ஆன்மாக்கள் ஆகிறான்; குழந்தைகளைப் பெற்றுக் கொள் ளும்போது பலவாகிறான். இவ்வாறே வளர்ச்சியடைந்து ஒரு கிராமமாகிறான், ஒரு நகரமாகிறான், இறுதியில் உலகம் முழு வதையும் தனது ஆன்மாவாக, பிரபஞ்சம் முழுவதையும் தனது ஆன்மாவாக உணர்கிறான். இவ்வாறு காலப்போக்கில் ஆன்மா எல்லா ஆண்களையும், எல்லா பெண்களையும், எல்லா குழந்தை களையும், எல்லா மிருகங்களையும், ஏன், பிரபஞ்சத்தையே தன்னுள் சேர்த்துக் கொள்கிறது. எங்கும் பரந்த எல்லை யற்ற பிரபஞ்ச அன்பின் ஒரே தொகுதியாக விரிகிறது! இந்த அன்பே இறைவன்.
உருவங்களும் சின்னங்களும் விடப்பட்ட பராபக்தி என்று கூறப்படும் உயர்பக்தி நிலையை இவ்வாறு அடைகிறோம். இந்த நிலையை அடைந்தவன் எந்தப் பிரிவையும் சேர்ந்த வனாக முடியாது. ஏனெனில் எல்லா பிரிவுகளும் அவனிடம் உள்ளன. அவன் எதில் சேர்வான்! அவன் எந்தக் கோயிலுக்கோ சர்ச்சுக்கோ போக முடியாது. எல்லா கோயில்களும் சர்ச்சுகளும் அவனிடமே உள்ளன அல்லவா! அவனுக்கு ஏற்ற போதிய அளவு பெரிய சர்ச் எங்கு உள்ளது? அத்தகையவனால் வரை யறைக்கு உட்பட்ட சில உருவங்களுள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாது. எல்லையற்ற அன்போடு அவன் ஒன்றாகும்போது, அந்த அன்புக்கு எல்லை ஏது? 
    அன்பு-லட்சியத்தைக் கொண்டுள்ள மதங்களில் எல்லாம், அதை வெளிப்படுத்துவதற்கான முயற்சியைக் காண்கிறோம். இந்த அன்பின் பொருளை நாம் அறிவோம். விருப்பங்களும் கவர்ச்சிகளும் நிறைந்த இந்த உலகில் ஒவ்வொன்றும் அந்த எல்லையற்ற அன்பின் முழுமையான அல்லது பகுதியான வெளிப்பாடே என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதை எப்போதும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடிவதில்லை. எனினும் அதனை மொழியால் விளக்கப் பற்பல நாடுகளிலு முள்ள முனிவர்களும் மகான்களும் முயன்று வந்துள்ளனர். அதன் பரந்த மகிமையில் கடுகளவையேனும் வெளிக்கொண்டு வர மொழியின் திறன் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர்; மிகத் தீவிரமான காம வெளிப்பாட்டிற்குக்கூட தெய்வீக வண்ணம் கொடுக்கின்றனர். ஹிப்ரூ அரசவை முனிவரின் பாடல்கள்  அவ்வாறே உள்ளன. இந்திய முனிவர் ஒருவர் பின் வருமாறு பாடுகிறார்-
‘என் அன்பே ! உன் இதழின் ஒரு முத்தம்! ஆ! நீ தந்த அந்த அன்பு முத்தம், என் ஆசையைப் பெருக்கி இடையறாது உன்பால் ஓட வைத்துவிட்டதே! துன்பங்கள் அனைத்தும் தொலைந்தன; முக்காலத்தையும் மறந்தேன். உன்னை, உன்னை மட்டுமே எண்ணியெண்ணித் திளைக்கிறேன்!’
இதுதான் பிற ஆசைகளெல்லாம் மறைந்த பின்னர் காதலன் கொள்ளும் உன்மத்த நிலை.
‘முக்தி யாருக்கு வேண்டும்? மோட்சத்தைப்பற்றி யாருக் குக் கவலை? நிறைநிலையை யார் பொருட்படுத்துவது? சுதந் திரத்தை நாடுவது யார்?’ என்கிறான் காதலன். ‘செல்வம் வேண்டாம், உடல் நலம் வேண்டாம், அழகும் வேண்டாம், அறிவும் வேண்டாம். உலகில் உள்ள தீமைகள் அனைத்திற்கும் நடுவே மீண்டும்மீண்டும் நான் பிறக்கவும் தயாராக உள் ளேன். அதற்காக நான் முறையிடவே மாட்டேன். ஆனால் அன்பிற்காக உன்னிடம் அன்பு செய்வது மட்டுமே எனக்கு வேண்டும்.’ 
இந்தப் பாடல்களில் வெளிப்பட்டுள்ள அன்புப்பித்தைப் பாருங்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இழை யோடும் இந்த அன்புதான் மனித அன்பில் மிக உயர்ந்ததும், மிகவும் வெளிப்படையாக உள்ளதும், மிகுந்த வலிமை படைத் ததும், மிகவும் கவர்ச்சி கொண்டதும் ஆகும். அதனால்தான் மிக ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துவதற்கு இந்த மொழியைப் பயன்படுத்தினர். இந்த மனித அன்புப்பித்து பக்தர்களது அன்புப் பித்தின் மிக மங்கிய எதிரொலியே. இறைவனின் உண்மை யான பக்தர்கள் பித்தர்களாக விரும்புகின்றனர், இறையன்பின் போதையில் மூழ்க விரும்புகின்றனர்; ‘தெய்வ-போதை மிக்க மனிதன்’ ஆக விரும்புகின்றனர்.
    ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த பக்தர்களும் மகான்களும் ஆக்கி அளித்து, தங்கள் இதய ரத்தத்தைப் பெய்து போற்றி வைத்திருக்கும் அன்புக்கிண்ணம் ஒன்று உள்ளது. பயன் கரு தாமல் இறைவனை நேசிப்பவர்களும், அன்பிற்காகவே அன்பை விரும்புபவர்களும் எதிர்பார்ப்பவை அனைத்தும் குவிந்துள்ளது அதில்தான். அந்த அன்புக்கிண்ணத்திலிருந்து பருக உண்மை பக்தர்கள் விரும்புகின்றனர். அன்பின் பரிசு அன்பே. அந்தப் பரிசைத்தான் என்னென்பது! நம் துயரங்கள் அனைத்தையும் ஒழிக்கும் ஒரே பொருள் அதுவே. உலகியல் நோயைத் தீர்க் கின்ற ஒரே கிண்ணம் அதுவே. மனிதன் தெய்வப் பித்துக் கொள்கிறான், தான் மனிதன் என்பதை மறக்கிறான். 
பல்வேறு மதங்கள் யாவும் முழு ஐக்கியம் என்னும் ஒரு மையத்தில் இறுதியில் குவிகின்றன. நாம் துவைதத்தில் தொடங்குகிறோம் – இறைவன் தனி, நான் தனி. இருவருக் கும் இடையே அன்பு அரும்புகிறது. மனிதன் இறைவனை அணுகத் தொடங்குகிறான்; இறைவனும் மனிதனை அணுகத் தொடங்குகிறார் போலும்! தந்தை, தாய், தோழன், காதலன் என்று மனித வாழ்க்கையின் பலவகை உறவுமுறைகளை யும் கைக்கொள்கிறான். இறுதியில் வழிபடு பொருளோடு ஒன்றுகிறான். ‘நான் நீயே; நீ நானே; உன்னை வழிபடும்போது என்னையே வழிபடுகிறேன்; என்னை வழிபடும் வேளை யில் உன்னையே வழிபடுகிறேன்’. மனிதன் முதலில் எதைத் தொடங்குகிறானோ அதன் மிக உயர்ந்த முடிவை அங்கே நாம் காண்கிறோம். தொடக்கத்தில் அன்பு தனக்காக உள்ளது. அதன் காரணமாக அது தன்னல அன்பாக இருக்கிறது. இறுதி யில் பூரணப் பேரொளி சுடர்விட்டுப் பொலிகிறது. அங்கே சிறிய-நான் என்பது மறைந்து அது எல்லையற்றதாகிறது. எங்கே தொடங்கினோமோ அங்கே முடிக்கிறோம். ஆரம்பத் தில் எங்கேயோ இருப்பவராயிருந்த அந்த இறைவன், எல்லை யற்ற அன்பாகப் பரிணமித்தவர்போல் விளங்குகிறார். மனித னும் மாறிவிடுகிறான். அவன் இறைவனை அணுகுகிறான். முன்பு தன்னிடம் நிறைந்திருந்த வீண் ஆசைகள் அனைத்தையும் விடுகிறான். ஆசை மறைந்தபோது தன்னலம் மறைந்தது. இறுதி யில், அன்பும் அன்பு செய்பவனும், அன்பு செய்யப்படுபவனும் இணைந்து ஒன்றாவதைக் காண்கிறான்.

பக்தியோகம் 17

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
10. நிறைவுரை

பக்தியின் இந்த உயர்ந்த லட்சியத்தை அடைந்த பிறகு தத்துவ விளக்கங்கள் வீசியெறியப்படுகின்றன. அவற்றை யார் பொருட் படுத்துவது? சுதந்திரம், முக்தி, நிர்வாணம் எல்லாம் உதறப்பட்டு விடுகின்றன. தெய்வீக இன்பத்தில் திளைத்திருக்கும்போது யார்தான் முக்தியை விரும்புவார்? ‘ஓ என் பிரபோ, எனக்குச் செல்வம் வேண்டாம், நண்பர்கள் வேண்டாம். அழகு, கல்வி, முக்தி எதுவும் வேண்டாம். மீண்டும்மீண்டும் பிறக்கவும் நான் தயார். ஆனால் நீ எனது அன்புத் தெய்வமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிறவியிலும் நீயே என் அன்புத் தெய்வமாக விளங்க வேண்டும்.’1 ‘சர்க்கரையாக இருக்க யார் விரும்புவார்? நான் சர்க்கரையைச் சுவைக்கவே விரும்புகிறேன்’ என்கிறான் பக்தன். முக்தி பெற்று இறைவனுடன் கலக்கவே அவன் விரும்புவான். ‘நானே அவன் என்பது எனக்குத் தெரிந்திருக்கலாம். ஆனாலும் என்னைஅவனிடமிருந்து விலக்கிக்கொண்டு தனியாக இருப் பேன். அப்போதுதான் என் அன்புக் கடவுளை நான் அனுபவிக்க முடியும்.’ இதுதான் பக்தனின் விண்ணப்பம். அன்பிற்காக அன்பு என்பதுதான் பக்தனின் உயர்பேரின்பம். தன் அன்புக் காதலனை அனுபவிப்பதற்காக ஆயிரமாயிரம் முறைகள் கை கால்கள் கட்டுப்பட்டுக் கிடக்க யார்தான் தயாராக இருக்க மாட்டார்கள்? அன்பைத் தவிர வேறு எதையும் எந்த பக்தனும் பொருட்படுத்துவதில்லை; இறைவன் தன்னிடம் அன்பு செலுத்துவது, தான் இறைவனை நேசிப்பது, அவ்வளவுதான். அதுபோதும் அவனுக்கு. உலகியல் கலவாத இந்த அன்பு, ஆற்றின்மீது புரண்டோடும் அலைகள் போன்றது. அது ஆற்றின் வேகத்தை எதிர்த்து மேல்நோக்கிச் செல்கிறது. உலகம் அவனைப் பித்தன் என்கிறது. உலகம் பித்தன் என்று அழைத்த ஒருவரை எனக்குத் தெரியும். அதற்கு அவரது பதில் இதுதான்; ‘நண்பர்களே, உலகமே ஒரு பைத்தியக்கார விடுதி. சிலர் உலக இன்பத்திற்காகப் பித்தர்களாக உள்ளனர். சிலர் பெயருக்காக, சிலர் புகழுக்காக, சிலர் பணத்திற்காக, சிலர் முக்தியடைவதற் காக, இன்னும் சிலர் சொர்க்கம் செல்ல. இந்தப் பித்தர்கள் கூட்டத்தில் நானும் ஒரு பித்தன். நான் இறைவனுக்காகப் பித்த னாக ஆனேன். நீ பணத்திற்காகப் பித்துப் பிடித்து அலைகிறாய். நான் கடவுளுக்காகப் பித்தன் ஆனேன். நீயும் பைத்தியம். நானும் பைத்தியம். என் பைத்தியம்தான் மிகச் சிறந்தது என்றே நான் நினைக்கிறேன்’. 

உண்மையான பக்தனின் அன்பு, கொழுந்துவிட்டு எரியும் இந்த அன்புப் பித்து இதன் முன்னிலையில் மற்ற எல்லாம் அப்படியே மறைந்துவிடுகின்றன. பிரபஞ்சமே அன்புமயம், அன்புமயமானது மட்டுமே என்றுதான் பக்தன் காண்கிறான். அவனுக்கு அப்படித்தான் தெரிகிறது. இத்தகைய பராபக்தியைப் பெற்ற பக்தன் அழிவிலா வாழ்வு பெறுகிறான்; அழிவிலா ஆனந்தம் அடைகிறான். இந்தத் தெய்வீக அன்புப்பித்துதான், நம்மிடமுள்ள உலகியல் நோயிலிருந்து நம்மைக் குணப்படுத்த முடியும். நமது பற்றும் சுயநலமும் மறைந்துவிடும். நாம் இறை வனை அணுகி அவனுக்கு வெகு அருகில் வந்துவிடுவோம். முன்பு தன்னிடம் குடிகொண்டிருந்த வீண் ஆசைகளை எல்லாம் இப்போது பக்தன் எறிந்துவிட்டான்.

    பக்தியோகத்தில் நாம் துவைதிகளாகத் தொடங்குகிறோம். இங்கே இறைவன் நமக்கு வேறுபட்டவன்; நாமும் அவனிட மிருந்து வேறுபட்டவர்கள். இடையில் பக்தி வந்துசேர்கிறது. அதன் பயனாக மனிதன் இறைவனை நாடுகிறான்; இறைவனும் மனிதனை நோக்கி அருகில் வருகிறான். தந்தை, தாய், மகன், நண்பன், எஜமான், காதலன் என்று வாழ்க்கையின் பல்வேறு உறவுகளைத் தன் அன்புக் கடவுளின்மீது பொருத்துகிறான். அந்த பக்தனுக்கு இறைவன் இதில் எல்லாம் இருக்கிறான். எப்போது பக்தன், தான் வழிபடும் கடவுளுடன் ஒன்றுபடு கிறானோ, அப்போது அவன் தனது முன்னேற்றத்தின் கடைசிப்படியை அடைந்துவிடுகிறான். நாமெல்லோரும் நம்மை நேசிப்பதில்தான் தொடங்குகிறோம். இப்படி முறை தவறி நம்மை நேசிப்பது, அன்பைச் சுயநலம் உள்ளதாக்குகிறது. இறுதியில் பிரகாசமான ஒளி புலப்படுகிறது. அந்தப் பேரொளி யில் இந்த ஆன்மா பரமாத்மாவுடன் கலக்கிறது. அந்த அன்புப் பேரொளியின் முன் மனிதன் மாறிவிடுகிறான். பக்தி, பக்தன் எல்லாம் ஒன்றே என்ற பரவசமளிக்கும் சிறந்த பேருண்மையை இறுதியில் உணாகிறான.

பக்தியோகம் 16

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
9. பக்தியை மனித உறவுகளில் காணல் 

உண்மை அன்பின் முழு நிறைவாக விளங்கும் இந்தப் பரா பக்தியின் இயல்பைச் சொற்களில் விளக்குவது இயலாததாகும். அதன் குறைவற்ற முழுநிறைவையும் அழகையும் அறிய, மனிதனின் எல்லை மீறிப் பறக்கும் கற்பனைகூடச் சக்தியற்றது. ஆனாலும் பக்திநெறியை அதன் தாழ்ந்த நிலையினாலும் சரி, உயர்ந்த நிலையினாலும் சரி, பின்பற்றி வருபவர்கள் பக்தியை அறிந்து கொள்ளவும், அதன் இலக்கணத்தை விளக்கிக்கூறவும், குறை வுடைய இந்த மனித மொழியைத்தான் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லை இல்லை, விளக்க முடியாத இந்த இறையன்பை விளக்க மனித அன்புதான் அதன் பல்வேறு தோற்றங்களில் ஏதோ ஓரளவிற்குப் பயன்படுத்தப்பட்டு வந் துள்ளது. தெய்வீக விஷயங்களை மனிதன் தன் மனித நிலைக்கு ஏற்பத்தான் சிந்திக்க முடியும். தனிப் பரம்பொருளை விளக்க வேண்டுமானால் வரையறைக்கு உட்பட்ட நமது மொழியில் புகுத்தித்தான் அவரை விளக்க முடியும். எல்லையற்றதை எல்லைக்கு உட்பட்ட மொழியில் எழுதியதுதான் இந்தப் பிரபஞ்சம். எனவேதான் பக்தர்கள் இறைவனையும் அவனது வழிபாட்டையும் விளக்குவதற்கு மனித அன்பைக் குறிப்பிடு கின்ற சொற்களையே பயன்படுத்தியுள்ளனர்.

பராபக்தியைப்பற்றி எழுதியுள்ள ஒருசில மாபெரும் ஆச்சாரியர்கள் இந்தத் தெய்வீக அன்பைப் பல்வேறு வழிகளில் அறியவும் அனுபவிக்கவும் பெரிதும் முயன்றுள்ளனர். இந்த அன்பு அதன் கீழ்நிலையில் உணரப்படும்போது சாந்தம் என்று அழைக்கப்படுகிறது. பக்தனின் உள்ளத்தில் அன்பெனும் தீ மூண்டெழாதபோது, அன்பெனும் பித்து அவன் அறிவை ஆட்டிப் படைக்காதபோது, மற்ற சாதாரண அன்பைப்போல் அவனது அன்பும் அமைதியாகச் செல்லும்போது, உருவங்கள், சடங்குகள், புறச்சின்னங்கள் இவற்றைக் கொண்டு செய்கின்ற வழிபாட்டைவிடச் சற்றே உயர்ந்து விளங்கும்போது, பித்தேறிய வனைப் போன்ற தீவிரமான அன்பின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் சரளமாகச் செல்லும்போது அது சாந்த பக்தி எனப்படுகிறது. ஒரு சிலர் ஆடி அசைந்து மிக மெதுவாக முன் னேறுவதையும், வேறு சிலர் சூறாவளிபோல் முன்னே செல் வதையும் காண்கிறோம். சாந்த பக்தன் நிதானமும் அமைதியும் மென்மையும் கொண்டவனாகத் திகழ்கிறான்.

அடுத்து வருவது, இதைவிடச் சற்று உயர்ந்ததாகிய தாஸ்ய பக்தி- தொண்டனாக இருத்தல். இறைவனுக்கு நான் தொண்டன் என்று பக்தன் கருதுகின்ற நிலை இது. உண்மையான ஊழியன் தன் எஜமானனிடம் கொள்கின்ற பற்று அவனது லட்சியமாகிறது.

அடுத்து வருவது ஸக்ய பக்தி, நட்புநிலை-‘நீ எங்கள் அன்பிற்குகந்த நண்பன்’; தான் செய்த குற்றங்களுக்காகத் தன்னைக் கடிந்துகொள்ளாமல், தனக்குத் தேவைப்படுகின்ற உதவிகளை எப்போதும் செய்துவருகின்ற உண்மை நண்ப னிடம் ஒருவன் தன் உள்ளத்தைத் திறந்து காட்டுகிறான். அது போன்றது இந்த நிலை. உண்மை நண்பர்களுக்கு இடையில் சமத்துவம் நிலவுவதுபோல், இங்கே இறைவனுக்கும் பக்த னுக்கும் இடையே உள்ளும் புறமும் ஒத்த அன்பு நிலவுகிறது. இங்கே இறைவன் நமக்கு உற்ற நண்பன் ஆகிறான், உயிர் நண்பன் ஆகிறான். இந்த நண்பனிடம் நமது முழு வரலாற்றை யுமே தாராளமாகக் கூறலாம். நமது உள்ளத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடக்கின்ற எல்லா ரகசியங்களையும் தைரியமாக எடுத்துக் கூறலாம். அவரிடமிருந்து ஆறுதலும் பாதுகாப்பும் நிச்சயமாகக் கிடைக்கும்.

 இங்கே பக்தன் பகவானைத் தனக்குச் சமமாகக் கொள் கிறான்; விளையாட்டுத் தோழனாகக் கருதுகிறான். இந்த உலகில் நாம் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கிறோம். சின்னஞ் சிறு குழந்தைகள் தங்கள் விளையாட்டை விளையாடுவது போல், பெரிய பெரிய மன்னர்களும் சக்கரவர்த்திகளும் தங்கள் விளையாட்டை விளையாடுவதுபோல், அன்பே வடிவான இறைவனும் இந்தப் பிரபஞ்சத்துடன் விளையாடி வருகிறான்.

இறைவன் பூரணமானவன். அவனுக்கு எதுவும் தேவை யில்லை. அவன் ஏன் படைக்க வேண்டும்? ஒரு தேவையை நிறைவேற்றிக் கொள்ளவே நாம் எல்லோரும் செயல்படுகிறோம். தேவை இருக்கிறது என்றாலே நம்மிடம் நிறைவு இல்லை என்பதுதான் பொருள். கடவுளோ முழு நிறைவானவர். அவ ருக்கு எந்தத் தேவையும் இல்லை. அப்படியிருக்க, தொடர்ந்து செயல்படும் இந்தப் படைப்புத்தொழிலை அவர் ஏன் செய்ய வேண்டும்? அவரது நோக்கம்தான் என்ன? ஏதோ சில நோக் கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இறைவன் உலகத் தைப் படைத்தான் என்ற நமது கற்பனைகள் எல்லாம் நல்ல கதைகளாக இருக்கலாம், அதற்குமேல் அவை எதுவுமில்லை. உண்மையில் எல்லாமே அவனது விளையாட்டு. பிரபஞ்சத்தில் அவனது விளையாட்டு தொடர்ந்தவண்ணமே உள்ளது. 

இவையெல்லாமே அவனுக்கு ஒரு வேடிக்கை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? நீ ஏழையாக இருந் தால், அதை ஒரு வேடிக்கையாக ரசித்து மகிழ். பணக்காரனாக இருந்தால், பணக்காரனாக இருப்பதில் உள்ள வேடிக்கையைக் கண்டு களி. ஆபத்துக்கள் வந்தால் அவையும் நல்ல வேடிக்கை தான். இன்பம் வந்தால் இன்னும் சற்று நல்ல வேடிக்கை, உலகம் வெறும் ஒரு விளையாட்டு அரங்கம் மட்டுமே. விளை யாடுவதற்கும் வேடிக்கையை ரசித்து மகிழ்வதற்கும்தான் நாம் இங்கு இருக்கிறோம். காலங்காலமாக இறைவன் நம்முடன் விளையாடி வருகிறான். நாமும் அவனுடன் விளையாடி வரு கிறோம். அவன் நமது நிரந்தரமான விளையாட்டுத் தோழன். அவன்தான் எவ்வளவு அற்புதமாக விளையாடுகிறான்! ஒரு கல்பம் முடியும்போது விளையாட்டும் ஒரு முடிவுக்கு வருகிறது. சிறிது காலத்திற்கு அல்லது நெடுங்காலத்திற்கு ஓய்வு. மீண்டும் எல்லோரும் வெளிப்பட்டு விளையாடத் தொடங்குகிறோம்.எல்லாம் வெறும் விளையாட்டே, இந்த விளையாட்டு தொடர்ந்து நடைபெற நாம் உதவிவருகிறோம் என்ற உண்மையை மறப்பதால்தான் துன்பங்களும் துயரங்களும் சூழ் கின்றன; இதயம் கனக்கிறது; உலகம் உன்னை மிகுந்த ஆற்ற லோடு அழுத்தத் தொடங்குகிறது. ஆனால் மாறிமாறிச் செல் லும் நிகழ்ச்சிகளைத் தன் இயற்கையாகப் பெற்றுள்ள இந்த மூன்று நிமிடநேர வாழ்க்கையை உண்மை என்று எண்ணும் ஆழ்ந்த நம்பிக்கையை எப்போது நீ கைவிடுகிறாயோ, இந்த உலகம் ஒரு விளையாட்டு மேடை, அதில் நாம் விளையாட வந்திருக்கிறோம், அவனது விளையாட்டிற்குத் துணை செய்ய வந்திருக்கிறோம் என்ற எண்ணத்தை எப்போது அறிகிறாயோ, அந்தக் கணமே உனது துயரங்கள் மறைகின்றன.
அணுக்கள்தோறும் அவன் விளையாடிவருகிறான். உலகங்கள், சூரியசந்திரர்கள் இவற்றையெல்லாம் விளையாட் டாகவே அவன் படைக்கிறான். மனித உள்ளங்களோடு, மிருகங்களோடு, தாவரங்களோடு அவன் விளையாடுகிறான். நாமெல்லாம் அவனுக்குச் சொக்கட்டான் காய்கள். காய்களைப் பலகைமீது வைக்கிறான். பகடைகளைக் குலுக்கிப் போடு கிறான். நம்மை இப்படியும் அப்படியுமாக நகர்த்துகிறான். அறிந்தோ அறியாமலோ அவன் விளையாடும் விளையாட்டில் நாம் அவனுக்கு உதவுகிறோம். ஆஹா! பேரானந்தம்! அவனுடைய விளையாட்டுத் தோழர்கள் அல்லவா நாம்! 
அடுத்தது வாத்சல்ய பக்தி. இறைவனைத் தந்தையாகக் கருதாமல், குழந்தையாகக் கருதி வழிபடுவது. இது கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம். ஆனால் இறைவன் எல்லாம் வல்ல வன் என்ற கருத்தை நம்மிடமிருந்து முற்றிலுமாக நீக்குவதற் கான ஒரு வழி இது. ஆற்றல் என்ற எண்ணமே நம்மிடம் ஒரு வகை அச்சத்தை உண்டாக்குகிறது. அன்பில் பயம் இருக்கக் கூடாது. மரியாதை, பணிவு போன்ற கருத்துக்கள் பண்பாட்டை வளர்ப்பதற்கு இன்றியமையாதவை. பண்பாடு நம்மிடம் உருக் கொண்ட பிறகு, அமைதியும் சாந்தமும் மிக்க அன்பினை உள்ளம் சற்று சுவைத்து மகிழ்ந்த பிறகு, அந்த அன்பு தீவிர மாகிப் பித்தாகியதும், அந்தப் பித்தினைச் சிறிது அனுபவித்து முடித்த பக்தன், அறவழி பற்றியும் ஒழுக்கநெறி பற்றியும் பேச வேண்டிய தேவையில்லை. இறைவனை எல்லாம் வல்லவன், தனித் தலைவன், பெருமை மிக்கவன், உலக நாயகன், தேவாதி தேவர்களுக்கும் தேவன் என்றெல்லாம் அவன் கருதுவதில்லை. 
நமக்கு இறைவனிடம் உண்டாகக்கூடிய ஒருவித பயத் திற்குக் காரணமான ஆற்றல் என்பதைக் கடவுள்கருத்திலிருந்து விலக்கவே பக்தன் இறைவனைத் தன் சொந்தக் குழந்தையாக வழிபடுகிறான். குழந்தையைக் கண்டு பெற்றோர் பயம் கொள் வதில்லை, மரியாதை காட்டுவதில்லை. குழந்தையிடமிருந்து அவர்கள் எதையும் கேட்பதில்லை. குழந்தை என்றுமே ஏற்கின்ற நிலைமையில்தான் இருக்கிறது. குழந்தையின்மீதுள்ள பாசத் திற்காகப் பெற்றோர் தங்கள் உடம்பை நூறு தடவை வேண்டு மானாலும் இழக்கத் தயாராக இருக்கின்றனர். தங்கள் ஒரு குழந்தைக்காகத் தங்கள் ஆயிரம் பிறவிகளைப் பலியிடவும் அவர்கள் தயங்குவதில்லை. இந்தக் காரணத்தினால்தான் கடவுளைக் குழந்தையாகக் கருதி அன்பு செய்கின்றனர். 
அவதாரக் கொள்கையில் நம்பிக்கை கொண்ட மதப் பிரிவுகளில்தான் வாத்சல்ய பக்திக் கருத்து இயல்பாகத் தோன்றி வளர்ந்து வந்துள்ளது. முகமதியர்களுக்கு, இறைவனைக் குழந்தையாகப் பாவிப்பது இயலாத செயலாகும். இதைக் கேட் டாலே அவர்கள் நடுங்கிப் பின்வாங்குவார்கள். ஆனால் கிறிஸ் தவர்களும் இந்துக்களும் இந்தப் பாவனையை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும். ஏனெனில் அவர்களுக்குக் குழந்தை ஏசுவும், பால கோபாலனும் உள்ளனர். இந்தியப் பெண்கள் பெரும் பாலும் தங்களைக் கண்ணனின் தாயாகவே கருதுகின்றனர். கிறிஸ்தவத் தாய்மார்களும் ஏசுவின் தாயாகத் தங்களை எண்ணிக் கொள்ளலாம். இது மேலை நாட்டிற்கு இன்று மிகவும் தேவை யான, இறைவனின் தாய்மை நிலை பற்றிய அறிவை வழங்கும்.
இறைவனிடம் நாம் கொண்டுள்ள பயம், மரியாதை போன்ற மூட நம்பிக்கைகள் நமது உள்ளத்தின் அடிமட்டத்தில் ஆழ வேரூன்றியுள்ளன. மதிப்பு, மரியாதை, பயம், ஆற்றல், மகிமை என்ற இவையெல்லாம் பக்தி என்ற கருத்தில் மூழ்கிக் கரைவதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும்.
    பக்தியில் இன்னொரு உறவு முறை உள்ளது. அது மதுர பக்தி. அது மிகமிக இனிமையானது; எல்லா நிலைகளிலும் மிகமிக உயர்ந்தது; அன்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு; மனிதன் அறிந்தவற்றுள் சக்தி வாய்ந்தது; காதலை அடிப்படையாகக் கொண்டது. எந்த அன்பு மனிதனின் இயல்பையே ஆட்டிப் படைத்து, அவனது அணுக்கள் தோறும் பாய்ந்து பரவி அவ னைப் பித்தனாக்கி, தன்னையே மறக்கச் செய்து, முற்றிலு மாக மாற்றி அவனைத் தேவனாகவோ அசுரனாகவோ செய்ய வல்லதோ, அது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தோன்றும் காதலைத் தவிர வேறேது? மதுர பக்தியில் இறை வனே நமக்குக் கணவன். நாமெல்லாம் பெண்கள். இவ்வுலகில் யாரும் ஆண் இல்லை. ஒரே ஆண்தான் உண்டு. அது இறைவன். நம் காதலுக்கு அவனே உகந்தவன். ஓர் ஆண் பெண்ணிடமோ, பெண் ஆணிடமோ கொள்ளும் காதலை இங்கே இறைவனிடம் செலுத்த வேண்டும்.
அன்பின் பல்வேறு வெளிப்பாடுகளை உலகில் நாம் காண் கிறோம். அத்தனை அன்புகளோடும் நாம் ஒருவகையில் விளை யாடிவருகிறோம். அவை எல்லாம் இறைவனையே தமது முடி வாக, இலக்காகக் கொண்டுள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவச மாக மனிதன் இதை அறியவில்லை. இந்த மாபெரும் அன்புநதி இடைவிடாமல் ஓடிக் கலக்கின்ற கங்குகரையற்ற கடலை அவன் அறியவில்லை. எனவே முட்டாள்தனமாக அந்த அன்பைச் சிறுசிறு விளையாட்டுப் பொம்மைகளான மனிதர்களிடம் செலுத்துகிறான். மனிதனுக்குக் குழந்தையிடம் இயல்பாகப் பிறக்கின்ற பேரன்பு உண்மையில் அந்த ஒரு பொம்மையான குழந்தைக்காக அல்ல. இந்த அன்பைக் கண்மூடித்தனமாகக் குழந்தையிடம் மட்டுமே செலுத்தினால், அதன் விளைவாக நீ அவதிப்படப் போவது நிச்சயம். ஆனால் இத்தகைய துன்பங்கள் உன்னை விழிப்புறச் செய்கிறது; உன்னிடம் உள்ள அன்பை மனிதனிடம் செலுத்தினால் அது உடனடியாகவோ, பின்னரோ வேதனையையும் துயரத்தையுமே தரும் என்பதை நீ அறிந்து கொள்கிறாய். எனவே அழிவற்றவனும், மாறுதலற்றவனும், ஏற்ற இறக்கமற்ற சச்சிதானந்தக் கடலாக உள்ளவனுமான தெய்வத்திடமே நாம் அன்பு செலுத்த வேண்டும். அன்பு தனக் குரிய இடத்தை அடைய வேண்டும்; எல்லையற்ற அன்புக்கடலாக விளங்குகின்ற அவனைச் சென்று சேர வேண்டும். எல்லா ஆறுகளும் கடலில் சென்று கலக்கின்றன. மலையிலிருந்து ஓடி வரும் சிறுதுளி நீர்கூட வாய்க்காலையோ ஆற்றையோ அடை கிறது. அந்த வாய்க்காலோ ஆறோ எவ்வளவுதான் பெரிதாக இருந்தாலும் சரி அந்த நீர்த்துளியின் பயணம் நிற்பதில்லை. அது எப்படியோ கடலைச் சென்று அடைந்துவிடுகிறது. . 
நம் ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாவற்றிற்கும் முடிவிடம் இறைவனே. உனக்குக் கோபம் வருமானால் இறைவனிடம் கோபித்துக் கொள். உன் காதலனாகிய இறைவனைக் கடிந்து கொள். உன் தோழனாகிய இறைவனைக் கடிந்துகொள். பய மின்றி இப்படி வேறு யாரை நீ கண்டிக்க முடியும்? மனிதன் உன் கோபத்தைப் பொறுத்துக்கொள்ள மாட்டான்; பதிலுக்குக் கோபிப்பான். என்னிடம் நீ கோபம் கொண்டால் நானும் உடனே என் கோபத்தைக் காட்டுவேன். இது நிச்சயம். உன் கோபத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. ‘நீ ஏன் இன்னும் என்னிடம் வராமல் இருக்கிறாய்? என்னை ஏன் இவ்வாறு தனியாகத் தவிக்கவிட்டாய்?’ என்று இறைவனிடம் கேள். அவனிடம் அல்லாமல் வேறு எங்கு இன்பம் இருக்க முடியும்? வெறும் மண்ணாங்கட்டிகளில் என்ன இன்பத்தைக் காண முடியும்? பேரானந்த ரசக்கட்டி அல்லவா நாம் நாட வேண்டிய இன்பம்! அது இறைவனே. 
நம்முடைய ஆசாபாசங்கள் எல்லாம், உணர்ச்சிகள் எல் லாம் அவனை நோக்கிச் செல்லட்டும். அவை அவனுக்காகவே அமைந்தவை. குறி தவறி அவை கீழே செல்லுமானால் தீயவை ஆகிவிடும். இலக்காகிய இறைவனை நேராக அடையுமானால், மிகக் கீழான உணர்ச்சிகள்கூட உருமாறி விடுகின்றன. உடலும் உள்ளமும் தங்கள் சக்திகளை எப்படி வெளிப்படுத்தினாலும் அவற்றின் முடிந்த முடிவாக இருப்பவன் இறைவனே (ஏகாயனன்).
மனித உள்ளத்தில் எழும் அன்பனைத்தும் ஆசையனைத் தும் இறைவனிடமே செல்ல வேண்டும். அவனே நமது அன் பிற்கும் ஆசைக்கும் உரியவன். அவனைத் தவிர வேறு யாரை நம் உள்ளம் காதலிக்க முடியும்? ஒப்பற்ற அழகுடையவன் அவன். மிக மேலானவன் அவன். அவனே அழகு. அவனே மேன்மை. இந்தப் பிரபஞ்சத்தில் அவனைவிட அழகானவர் வேறு யார்? நமக்குக் கணவனாக இருக்க அவனைவிட இந்தப் பிரபஞ்சத்தில் தகுதி வாய்ந்தவர் வேறு யார்? நாம் அன்பு செய்ய இந்தப் பிரபஞ்சத்தில் அவனைவிடத் தகுதியுடையவர் யார்? எனவே அவனே கணவனாக இருக்கட்டும்; அவனே காதலனாக இருக்கட்டும்! 
இந்தத் தெய்வீகக் காதலைப் போற்றிப் பாடும் பக்தர்கள், மனிதக் காதலின் பல்வேறு நிலைகளையும் விவரிக்கின்ற மொழி போதுமென்று முடிவு செய்து, அவ்வாறே பாடியுள்ளனர். மூடர்கள் இதை அறிவதில்லை; அறியவும் மாட்டார்கள். அவர்கள் இதை ஊனக்கண்களால் மட்டுமே காண்கிறார்கள். இந்தப் பராபக்தியின் தீவிர வேதனைகள் அவர்களுக்குத் தெரி யாது. அவர்களுக்கு எப்படித் தெரியும்? ‘ஓ! என் அன்பே ! உன் இதழ்களின் அந்த ஆசை முத்தம்! உன் முத்தமொன்று கிடைக்கப் பெற்றவனுக்கு உன்மீது வேட்கை என்றென்றும் அதிகரித்துக் கொழுந்துவிட்டு எரிகிறது. அவனது துன்பங்கள் எல்லாம் ஒழிகின்றன. உன்னைத் தவிர பிற அனைத்தையுமே அவன் மறக்கிறான்.’1 யாருடைய இதழின் ஸ்பரிசம் பக்தனை வெறி கொள்ளச் செய்கிறதோ, மனிதனைத் தெய்வமாக்குகிறதோ, அந்த அன்பரின் அன்பு முத்தத்தை ஏக்கத்துடன் நாடிச் செல். அந்த அன்பு முத்தத்தைப் பெற்றவனுக்கு இயற்கை முழு வதுமே மாறுகிறது; உலகங்கள் மறைகின்றன; சூரிய சந்திரர்கள் மறைகின்றனர்; பிரபஞ்சமே மெதுவாகக் கரைந்து எல்லை யற்றதான அன்புக்கடலில் கலந்துவிடுகிறது. இதுவே பராபக்தி யின், அன்புவெறியின் நிறைநிலை.
உண்மையான தெய்வீகக் காதல் கொண்ட பக்தன் இத் துடன் நின்றுவிடுகிறானா? இல்லை. கணவன்-மனைவிக்கு இடையிலுள்ள அன்புகூட அவனைப் பித்தேற்றப் போதுமான தாக இல்லை. எனவே அவன் கள்ளக் காதலை நாடுகிறான். காரணம், கள்ளக் காதலுக்கு ஆற்றல் மிக அதிகம். அது தவ றானது என்பதைக்கூட அவன் பார்ப்பதில்லை. இந்தக் கள்ளக் காதலின் இயல்பு என்னவென்றால், தடைகள் அதிகரிக்க அதி கரிக்க அது வீறுகொண்டு எழுகிறது. கணவன்-மனைவி யரிடையே நிலவுகின்ற அன்பில் தடைகள் இல்லை. அது மென்மையாகச் செல்லும் அன்பு. எனவே இந்த பக்தன் காதல னிடம் மட்டற்ற அன்புகொண்ட ஓர் இளம் பெண்ணாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான். அந்தப் பெண்ணின் தாய், தந்தை, கணவன் எல்லோருமே இந்தக் காதலை எதிர்க்கின்றனர். அவர்களின் எதிர்ப்பு வலுக்கவலுக்க, கள்ளக் காதலனிடம் இந்தப் பெண்ணின் காதலும் தீவிரம் அடைகிறது. கண்ணனிடம் காதல்கொண்ட கோபியர் பித்தேறி பிருந்தாவனத் தோட்டங் களில் எப்படி அவனைத் தேடித் திரிந்தனர்! பெரும் பேறு பெற்ற அந்தக் கோபியர்கள் அவனது கானக்குரல் கேட்டு, அவனை அடைய எப்படி ஓடினர்! உலகம், உலகக் கடமைகள், உறவுகள், அவற்றால் வரும் இன்பதுன்பங்கள் எல்லாவற்றையும் மறந்து, துறந்து கண்ணனாகிய காதலனை அடைய எப்படித் துடித்தனர்! இவற்றையும் மனித மொழியில் விளக்க ஒருபோதும் இயலாது.
மனிதா! ஓ மனிதா, நீ பக்தியைப்பற்றி வானளாவப் பேசு கிறாய். அதேவேளையில் உலகின் வீண் பொருட்களில் கருத் தைச் செலுத்தவும் செய்கிறாய். நீ நேர்மையானவனா? ‘எங்கு ராமனோ அங்குக் காமன் இல்லை, எங்குக் காமனோ அங்கு ராமன் இல்லை. இருவரும் சேர்வதில்லை. இருளும் ஒளியும் போல் இருவரும் இணைந்து இருக்க மாட்டார்கள்.’

பக்தியோகம் 15

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
8. அன்புக் கடவுளுக்குச் சான்றுஅந்த அன்புக் கடவுளே!

    தன்னலம், கணக்குப் பார்த்தல், பேரம் பேசுதல், பயம் முதலி யவற்றைக் கடந்து சென்றுவிட்ட பக்தனின் லட்சியம் எது? இத்தகையவன் இறைவனிடம்கூட, ‘என்னிடம் உள்ள எல்லா வற்றையும் உனக்குத் தருகிறேன். உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். உண்மையில் என்னுடையது என்று இந்த உலகில் எதுவுமில்லை’ என்று கூறுகிறான். உள்ளத்தில் இத் தகைய உறுதி வரும்போதுதான் பக்தனின் லட்சியம் நிறைவுற்ற பக்தியாகிறது; எதற்கும் அஞ்சாத பராபக்தியாகிறது. பக்தனின் இந்த உயர்ந்த லட்சியத்தில் குறுகிய நோக்கங்களுக்கு இட மில்லை. அவனது அன்பு உலகையே அரவணைத்துச் செல்கின்ற முழுமையான அன்பு, எல்லைகளும் தளைகளும் நீங்கப்பெற்ற அன்பு, பூரண அன்பு. மகோன்னதமான இந்த பக்திலட்சியம் குறியீடுகள், புறச் சின்னங்கள் இவை எவற்றின் துணையுமின்றி லட்சிய நிலையிலேயே விரும்பப்பட்டு, வழிபடப் பெறுகிறது. இதுவே பராபக்தியின் மிகச் சிறந்த நிலை; அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்ட லட்சியத்தின் லட்சியத்தை வழி படுவது. பக்தியின் மற்ற வடிவங்கள் இதை அடையும் வழியில் அமைந்த பல்வேறு படிகளே.

பக்தியோகத்தைக் கடைப்பிடிப்பதில் வரும் நமது வெற்றி தோல்விகள் எல்லாம் லட்சியத்தை அடையும் பாதையில்தான் உண்டாகின்றன. தனது அகலட்சியத்தை, புறப்பொருட்கள்மீது ஒன்றன்பின் ஒன்றாகக் கற்பிக்கிறான் சாதகன். ஆனால் எல்லையின்றி வளர்ந்து செல்கின்ற தனது அக லட்சியத்தைத் தெளிவுபடுத்தும் திறனற்றவை அவை என்பதைக் காண்கிறான். எனவே இயற்கையாகவே அவை ஒவ்வொன்றையும் புறக் கணிக்கிறான். கடைசியாக, புறப்பொருட்களில் லட்சியத்தைக் காண முற்படுவது பயனற்ற செயல் என்பதையும், தன் லட்சியத் துடன் ஒப்பிடும்போது அவையெல்லாம் வெறும் வெறுமை என்பதையும் உணர்கிறான். மிக உயர்ந்ததும், பொதுவானதும், உண்மைப் பொருளாக விளங்குவதுமான லட்சியத்தை முழுமை யாக, உயிரோடும் உணர்வோடும் காணும் சக்தியை நாளடைவில் அவன் பெறுகிறான். இந்த நிலையை அடைந்த பிறகு ‘இறை வனைக் காண முடியுமா? முடியாதா? அவர் எல்லா சக்தியும் எல்லா அறிவும் படைத்தவரா, இல்லையா?’ என்ற கேள்வி களைக் கேட்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான்.பக்தனுக்கு இறைவன்தான் அன்புக்கடவுள்; அவர்தான் அன்பின் மிகவுயர்ந்த லட்சியம். அவனுக்கு அதுவே போதும். இறைவன் அன்புமயமானவன் என்பது வெளிப்படை. பக்தனுக் குத் தனது அன்புக்கடவுளின் இருப்பை எடுத்துக்காட்ட எந்தப் புறச்சான்றும் தேவையில்லை. நீதிபதிபோல் வீற்றிருக்கும் கடவுளைக் கொண்டாடும் மதப் பிரிவுகளில் வேண்டுமானால் அவரது இருப்பை நிரூபிக்க நிரூபணங்கள் தேவைப்படலாம். ஆனால் பக்தன் அத்தகைய கடவுள்களை எண்ணிக்கூடப் பார்க்க மாட்டான்; பார்க்கவும் முடியாது. அவனுக்கு இறைவன் முழுக்கமுழுக்க அன்பு மயமானவன்.’அன்பிற்குரியவளே, எந்த மனைவியும் கணவனைக் கணவனுக்காக விரும்புவதில்லை; கணவனிடம் இருக்கும் ஆன்மாவிற்காகவே அவனை விரும்பு கிறாள். யாரும், என் அன்பே, மனைவிக்காக மனைவியை விரும்புவதில்லை; ஆனால் மனைவியிடம் இருக்கும் ஆன்மா விற்காகவே மனைவியை விரும்புகிறான்.’
மனிதச் செயல்கள் அனைத்திற்கும் தூண்டுகோலாக இருப்பது சுயநலம் ஒன்றுதான் என்று சிலர் கருதுகின்றனர். அதுவும் அன்புதான்; ஆனால் இது குறிப்பிட்ட ஒரு மனிதனை அல்லது பொருளை விரும்புவதால் தாழ்ந்த நிலைக்கு வந்து விடுகிறது. என்னை நான் உலகத்துடன் ஒன்றுபடுத்திக் காணும் போது கண்டிப்பாக என்னிடம் சுயநலம் இருக்க முடியாது. ஆனால் தவறுதலாக, நான் என்னை ஒரு தனிமனிதனாக, சிறிய வனாகக் கருதும்போது, எனது அன்பு சுருங்கிக் குறுகிவிடுகிறது. அன்பின் எல்லையைச் சுருக்கிக் குறுக்குவதால்தான் இந்தத் தவறு நிகழ்கிறது. உலகிலுள்ள அனைத்தும் கடவுளிலிருந்து தோன்றியவை; நேசிக்கப்பட வேண்டியவை. முழுமையை நேசிக் கும்போது அதில் அடங்கிய பகுதியையும் நாம் நேசிக்கிறோம் என்பதை மனத்தில் கொள்ள கொண்டும். இந்த முழுமைதான் பக்தர்களின் இறைவன். மற்ற தேவதைகள், பரமண்டலத்தில் உள்ள பிதா, ஆண்டவன், படைப்புத் தெய்வம், வாதங்கள், கொள்கைகள், நூல்கள் முதலியவைகளால் பக்தனுக்கு எவ்விதப் பயனும் இல்லை; அவற்றிற்குப் பொருளும் இல்லை. அவன் பராபக்தி எனப்படும் உயர்ந்த அன்பின் காரணமாக, மேற்கூறிய வற்றைக் கடந்து சென்றுவிட்டான். இதயம் தூய்மை அடைந்து துப்புரவாக்கப்பட்டு அன்பு என்ற தெய்வீக அமுதத்தால் நிறைக் கப்பட்டுவிட்ட பின் இறைவனைப் பற்றிய மற்ற எல்லா எண் ணங்களும் சுவையற்றுப் போகின்றன. எனவே அவை தகுதி யற்றவை, மதிப்பற்றவை என்று விலக்கிவிடுகிறான். பராபக்தி இத்தகைய வலிமை வாய்ந்தது! இத்தகைய பக்தன் இறைவனைக் காணக் கோயிலுக்கோ சர்ச்சுக்கோ போவதில்லை. அவனைப் பொறுத்தவரை இறைவன் இல்லாத இடமே இல்லை. அவன் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் இறைவனைக் காண் கிறான்; மகானுடைய புனிதத்திலும், கொடியவனுடைய பாவத் திலும் இறைவனைக் காண்கிறான். ஏனெனில் இறைவன் வலிமை பொருந்தியவனாக, என்றும் அழியாத அன்பின் ஒளியாக என்றென்றைக்குமாக எப்போதும் மகிமையுடன் தன் இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை அவன் ஏற்கனவே உணர்ந்து விட்டான்.

பக்தியோகம் 14

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
7. பக்தி முக்கோணம் 

பக்தியை ஒரு முக்கோணத்துடன் ஒப்பிடலாம். அதன் ஒவ் வொரு கோணமும் பக்தியின் பிரிக்க முடியாத ஒவ்வொரு பண்பைக் குறிக்கிறது. மூன்று கோணங்களும் சேராமல் எந்த முக்கோணமும் இருக்க முடியாது. அதுபோலவே பின்வரும் மூன்று பண்புகள் இல்லாமல் உண்மையான பக்தி இருக்க முடியாது.

நமது பக்தி-முக்கோணத்தின் முதல் கோணம், அன்பு வியாபாரப் பொருள் அல்ல என்பதாகும். ஏதாவது விதத்தில் பிரதிபலனில் நாட்டம் இருக்குமானால் அங்கு உண்மையான அன்பு இருக்க முடியாது; அது வெறும் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம்தான். நாம் செலுத்தும் மரியாதைக்கும் போற்று தலுக்கும் பிரதியாகக் கடவுளிடமிருந்து ‘அது வேண்டும், இது வேண்டும்’ என்ற எண்ணம் இருக்குமானால் உண்மையான பக்தி வளர முடியாது. ஒரு பலனை எதிர்பார்த்து கடவுளை வழிபடுபவர்கள், தாங்கள் விரும்பிய பலன் கிடைக்காவிட்டால் வழிபடுவதை நிறுத்திவிடுவார்கள் என்பது சர்வ நிச்சயம். அன் பிற்கு உரியவன் என்ற காரணத்தினால்தான் பக்தன் இறைவனை நேசிக்கிறான். உண்மையான பக்தனிடம் இந்தத் தெய்வீக உணர்ச்சிக்கு வேறு எந்த நோக்கமோ தூண்டுதலோ இல்லை.

ஒருசமயம் பேரரசன் ஒருவன் காட்டில் முனிவர் ஒருவரைச் சந்தித்தான். சிறிதுநேரம் பேசியபோது அவரது தூய்மையும் ஞானமும் அவனது உள்ளத்தைக் கவர்ந்தன. அவருக்கு அன் பளிப்பாக ஏதேனும் தர எண்ணி அவரைக் கேட்டபோது அவர், ‘என் உணவிற்கான காய்கனிகள் காட்டில் கிடைக் கின்றன. மலையிலிருந்து பாய்ந்து வரும் அருவிநீர் என் தாகத் தைத் தணிக்கிறது. மரப்பட்டை போதிய ஆடையாக உள்ளது. மலைக்குகைகள் எனக்கு வீடு. ஆகவே உன்னிடமிருந்தோ, வேறு யாரிடமிருந்தோ எதற்காக நான் வெகுமதி பெற வேண் டும்?’ என்று கேட்டு அன்பளிப்பை மறுத்தார். அதற்கு அரசன், ‘முனிவரே, நீங்கள் பெற்றுக்கொள்வது என் நன்மைக்காகவே. தயவுசெய்து என்னிடமிருந்து ஏதாவது பெற்றுக் கொள் ளுங்கள். என்னுடன் என் நாட்டிற்கு வாருங்கள். அரண் மனைக்கு அழைத்துச் செல்கிறேன்’ என்று வற்புறுத்தினான். முனிவரும் ஒருவாறு உடன்பட்டு அவனுடன் அரண்மனைக்குச் சென்றார். முனிவருக்கு அன்பளிப்பைக் கொடுப்பதற்கு முன் அரசன் இறைவனை நோக்கி, ‘எம்பெருமானே, எனக்கு மேலும் குழந்தைகளைக் கொடு. செல்வத்தை மிகுதியாகக் கொடு. மேலும்மேலும் நான் நாடுகளைப் பெறுமாறு செய். நல்ல உடல்நலனைத் தா’ என்றெல்லாம் பிரார்த்திக்கத் தொடங் கினான். அரசனுடைய பிரார்த்தனை முடிவதற்கு முன்னரே முனிவர் அமைதியாக அந்த இடத்தைவிட்டுச் செல்லலானார். அதைக் கண்டுக் குழப்பமுற்ற அரசன் படபடப்புடன் அவரைப் பின்தொடர்ந்து, ‘முனிவரே, அன்பளிப்பை வாங்காமலேயே போகிறீர்களே!’ என்று கேட்டான். அதற்கு அந்த முனிவர் அரசனைப் பார்த்து, ‘மன்னா, நான் பிச்சைக்காரர்களிடம் பிச்சை ஏற்பதில்லை. நீயே ஒரு பிச்சைக்காரன். எனக்கு உன்னால் என்ன தர முடியும்? உன்னைப்போன்ற ஒரு பிச்சைக்காரனிடம் எதையும் பெற்றுக்கொள்ள நான் முட்டாள் அல்ல. என்னைப் பின்தொடராதே’ என்று கூறிச் சென்றுவிட்டார்.

     பிச்சைக்காரர்களுக்கும் உண்மையான பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடு இங்கே தெளிவாக்கப்படுகிறது. யாசிப்பது அன்பின் மொழியல்ல. முக்திக்காகவோ வேறெதற்காகவுமோ இறைவனை வேண்டுவதுகூட பக்தியைக் கீழ்மைப்படுத்துவ தாகும். அன்பு பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை. அன்பு எப் போதும் அன்பிற்காகவே செய்யப்படுகிறது. இறைவனை பக்தன் நேசிக்கிறான் என்றால், அவனால் நேசிக்காமல் இருக்க முடி யாது. அழகிய இயற்கைக் காட்சி ஒன்றைக் கண்டு அதில் மனத்தைப் பறிகொடுக்கிறாய். அதற்காக அதனிடம் ஏதேனும் வெகுமதி எதிர்பார்க்கிறாயா? இல்லையே! அதுபோல் அந்தக் காட்சியும் உன்னிடம் எதையும் கேட்பதில்லை. அந்தக் காட்சி உனக்குப் பேரானந்தத்தைத் தருகிறது, உன் உள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் மனப் போராட்டங்களைத் தணிக்கிறது, உன்னை அமைதியில் திளைக்கச் செய்கிறது, அந்த நேரத்திற்கு உன்னை எங்கோ ஓர் உயர் உலகிற்கு இட்டுச் செல்கிறது, உன்னைத் தெய்வீகப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. உண்மை அன்பின் இந்த இயல்புதான் நமது முக்கோணத்தின் முதல் கோண மாகும். உன் அன்பிற்குப் பிரதியாக எதையும் கேட்காதே. உன் நிலை எப்போதும் கொடுப்பவனின் நிலையாக இருக்கட்டும். இறைவனுக்கு உன் அன்பைக் கொடு. பதிலாக அவரிடமிருந்து எதையும் யாசிக்காதே. 

பக்தி-முக்கோணத்தின் இரண்டாவது கோணம், அன்பு பயம் அறியாதது என்பதாகும். பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்; மனிதர்கள் ஆனாலும் பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடு கிறார்கள். இவர்களுக்கு இறைவன் என்பவர் ஒரு கையில் சாட்டையும், மற்றொரு கையில் செங்கோலும் ஏந்தியிருக்கும் பெரியதோர் உருவம். அவரது கட்டளைக்கு அடிபணியாமல் போனால் சாட்டையடி கிடைக்கும் என்று நடுங்குகிறார்கள் இவர்கள். இப்படித் தண்டனைக்கு அஞ்சி இறைவனை வழிபடு வது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு -அதனை வழிபாடு கொள்வதாக இருந்தால் சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் ஏதாவது பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும்? பயங்கள் அனைத்தையும் வெற்றிகொள்வது அல்லவா அன்பின் இயல்பு! ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண் டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்துபோய் அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறு நாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக் கிறாள். திடீரென்று ஒரு சிங்கம் குழந்தையின்மீது பாய்கிறது. அவள் என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப் பணித்தாவது குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா? அன்பு எல்லா பயங்களையும் வெல்கிறது. 

உலகிலிருந்து தன்னைப் பிரித்துக்கொள்வதான சுயநல நோக்கம்தான் பயத்திற்குக் காரணம். சுயநலத்திற்கும் சிறுமைத் தனத்திற்கும் என்னை நான் அடிமைப்படுத்தும் அளவிற்கு பயம் என்னிடம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும் பயமும் இணைந்து இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப் படக் கூடாது. ‘இறைவனின் திருநாமத்தை வீணாகச் சொல் லாதே’ என்ற கட்டளையைக் கேட்டு உண்மையான பக்தன் சிரிக்கிறான். பக்தியில் தெய்வ நிந்தை எப்படி இருக்க முடியும்? இறைவனது திருநாமத்தைச் சொல்லச்சொல்ல-அதை நீ எந்த முறையில் சொன்னாலும் சரி -அதனால் உனக்கு நன்மைதான் உண்டாகும். நீ அவனது திருநாமத்தைத் திரும்பத்திரும்பக் கூறுகிறாய். ஏன்? அவனை நீ உளமார நேசிப்பதால்தான்.

பக்தி-முக்கோணத்தின் மூன்றாவது கோணமாக இருப்பது, அன்புக்குப் போட்டி கிடையாது என்பதுதான். இதுவே பக்தனின் மிக உயர்ந்த லட்சியம். நாம் நேசிப்பவர் மிக உயர்ந்த லட்சிய புருஷராக இல்லாவிட்டால் நமக்கு அவர்மீது உண்மை யான அன்பு தோன்றாது. தவறானவர்களிடம் தவறான வழியில் பலர் அன்பு செலுத்தலாம். ஆனால் அன்பு செலுத்துபவனைப் பொறுத்தவரையில், அவனால் மிக அதிகமாக நேசிக்கப்படுபவர் அவனுக்கு மிகவுயர்ந்த லட்சியமாகவே விளங்குகிறார். ஒருவன் தனது லட்சியத்தை மிகமிகத் தாழ்ந்தவனிடம் காணலாம்; மற் றொருவன் மிகமிக உயர்ந்தவனிடம் காணலாம். எப்படியிருந்தாலும் தனக்கு லட்சியமாக இருப்பவரையே மனிதன் ஆழ்ந்து நேசிக்கிறான்.ஒவ்வொரு மனிதனுடையவும் மிகவுயர்ந்த லட்சியம் இறைவனே. பண்டிதன்-பாமரன், மகான்-பாவி, ஆண்-பெண், படித்தவன்-படிக்காதவன், பண்புடையவன்-பண்பாடற்றவன் என்று அனைவருக்கும் மிகவுயர்ந்த லட்சியம் இறைவன்தான். அழகு, நுண்மை , ஆற்றல் என்னும் மூன்றும் மிகவுயர்ந்த லட்சிய நிலையில் இணைந்த இணைப்புதான் அன்பே வடிவான இறைவனைப்பற்றிய நமது கருத்தின் அறுதி எல்லை. 
இந்த லட்சியங்கள் ஏதாவது ஒருவிதத்தில் ஒவ்வொருவர் மனத்திலும் இயல்பாகவே இருந்துவருகின்றன; பிரிக்க முடி யாதபடி நமது மனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன. மனித இனத்தின் அனைத்து முயற்சிகளும் இந்த லட்சியங்களை வாழ்க்கையில் செயல்படுத்துவதற்கான போராட்டங்களே. சமுதாயத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா செயல்களும், தத்தம் லட்சியங்களை வெளிப்படுத்தி அவற்றைச் செயல்படுத்த மனிதன் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவுகளே. அகத்தே யிருப்பது புறத்தே வரத் துடிக்கிறது. இடையீடற்ற இந்த லட்சிய வேகம்தான், இந்தத் தூண்டுசக்திதான் மனித குலத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான பிறப்புகள் சென்றபிறகுதான், பல்லா யிரக்கணக்கான ஆண்டுகள் போராடிய பிறகுதான், அக லட்சியத்தைப் புறச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முழுமையாகச் சரி செய்துகொள்வது வீணான முயற்சி என்பதை மனிதன் ஒருவேளை அறிந்துகொள்வான். இப்படி அறிந்தபின் தன் லட்சியத்தை உலகில் நிறுவுவதற்கு அவன் ஒருபோதும் முயல் வதில்லை. ஆனால் தன் லட்சியத்தையே அறுதி லட்சியமாகக் கொண்டு அன்பின் உச்சியில் நின்றபடி வழிபடத் தொடங்கு கிறான். இந்த உயர் லட்சியம் எல்லா தாழ்ந்த லட்சியங்களையும் தன்னுள் அடக்கியதாக விளங்குகிறது. 
காதல்கண்ணிற்கு அட்டக்கருமையானவளும் அழகின் சிகரமாகத் தெரிவாள் என்று சொல்லப்படுவது உண்மைதான். மூன்றாம் மனிதனுக்கு அவள் அப்படித் தெரிய மாட்டாள்; அந்தக் காதலனின் காதல் தவறான இடத்தில் செலுத்தப்பட்ட தாகவே அவனுக்குத் தெரியும். ஆனால் காதலனோ காதலியிடம் அழகின் சிகரத்தையே காண்கிறான்; ஒருபோதும் அட்டக் கருப்பைக் காண்பதில்லை. அழகோ, அழகற்றதோ எது வாயினும் சரி, நம் அன்பிற்குரிய பொருட்களே நமது லட்சி யங்கள் உருவாகிச் செயல்படும் மையங்கள் ஆகின்றன. மக்கள் பொதுவாக எதை வழிபடுகின்றனர்? பராபக்தனின் லட்சிய உச்சியாக விளங்கும் முழு முதற்கடவுளை அல்ல, அல்லவே அல்ல. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். ஒவ்வொருவரும் தனது லட்சியத்தையே புறவுலகில் கொண்டுவந்து அதன்முன் மண்டி யிட்டு வணங்குகிறார்கள். அதனால்தான் கொடியவர்களும், ரத்தவெறி பிடித்தவர்களும், ரத்தவெறி கொண்ட கடவுளைப் படைக்கிறார்கள். தங்கள் லட்சியத்தைத்தான் அவர்கள் நேசிக்க முடியும். அதுபோலவே நல்லவனும் இறைவனைப் பற்றிய உயர் லட்சியத்தைக் கொள்கிறான். அவனது லட்சியம் உண்மை யிலேயே மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது தான்.

பக்தியோகம் 13

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
6. உண்மையான பக்தனுக்கு உயர்ஞானமும் உயர்பக்தியும் ஒன்றே 

    உயர் ஞானத்தையும்(பரவித்யை), தாழ்ந்த ஞானத்தையும் (அபரவித்யை) உபநிடதங்கள் வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒரு பக்தனைப் பொறுத்தவரையில் உயர் ஞானத்திற்கும், உயர் பக்தி அதாவது பராபக்திக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. முண்ட க உபநிடதம் (1. 1. 4, 5) பின்வருமாறு கூறுகிறது: ‘நாம் அறியத் தகுந்த ஞானம் இருவகைப்படும் என்று பிரம்ம ஞானிகள் கூறுகிறார்கள். அவை பர ஞானம், அபர ஞானம் என்பன. அபர ஞானம் அல்லது தாழ்ந்த ஞானம் என்பது ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற வேதங்கள் மற்றும் சிக்ஷை (உச்சரிப்பு பற்றியது), கல்பம் (யாகங்கள் பற்றியது) மற்றும் வியாகரணம் (இலக்கணம்), நிருக்தம் (சொற்பொருள் பற்றியது), ஜோதிடம், சந்தஸ் (கவிதை) என்ற வேத அங்கங்கள் ஆறும் சேர்ந்தது. பர ஞானம் என்பதோ மாறாத பரம்பொருளைப் பற்றிய ஞானம்.’

இதிலிருந்து பர ஞானம் என்றால் பிரம்மஞானம் என்பது தெளிவாகிறது. பராபக்தியை தேவீ பாகவதம் பின்வருமாறு விளக்குகிறது: ‘ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத் திற்கு ஊற்றப்படும் எண்ணெயின் தடைபடாத ஒழுக்குப்போல், மனம் இடைவிடாது இறைவனை நினைப்பதே பராபக்தி.’ இதுபோன்றே தடங்கலற்றதும் சலனமற்றதுமான மனத்தையும் இதயத்தையும், பிரிக்க முடியாத அன்புடன் இறைவனிடம் செலுத்துவது உண்மையிலேயே மனிதன் இறைவனிடம் கொள் பவற்றுள் மிக உயர்ந்த அன்பின் வெளிப்பாடு ஆகும். பக்தியின் பிற நிலைகள் அனைத்தும் இந்தப் பராபக்தியை அடைவதற்கு உதவுகின்ற பயிற்சிகளே. இந்தப் பராபக்தி, ராகானுகம் அதாவது ராகபக்திக்குப் பிறகு வரும் பற்றுடன்கூடிய பக்தி எனப்படுகிறது. பராபக்தி பக்தனிடம் உதயமானால் அவனது உள்ளம் இடை விடாமல் இறைவனையே சிந்தித்தபடி இருக்கும்; வேறு எதையும் சிந்திக்காது. இறைவனைத் தவிர வேறு சிந்தனைகளுக்கு அவ னது மனத்தில் இடம் இருக்காது. அவனது ஆன்மா சிறிதும் களங்கமற்ற பரிசுத்தமாக இருக்கும். பராபக்தி ஒன்றே அவனது மனத்தையும் உடலையும் பற்றியிருக்கின்ற எல்லா தளை களையும் அறுத்தெறிந்து விடுதலை அளிக்கிறது. அவன் மட்டுமே இறைவனைத் தன் உள்ளத்தில் இருத்தி வழிபட முடியும். அவனுக்கே உருவங்கள், சின்னங்கள், சாஸ்திரங்கள், கொள்கைகள், நூல்கள் இவற்றால் எந்தப் பலனும் இல்லை. அவற்றின் தேவையும் அவனுக்கு இல்லை. இந்த முறையில் இறைவனை நேசிப்பதும் அவ்வளவு எளிதல்ல.

    தனது அன்புக்குப் பிரதியாக ஒன்று கிடைக்கின்ற இடத் தில்தான் பொதுவாக மனித அன்பு தழைக்கிறது. தனது அன் பிற்குப் பிரதியாக அன்பு கிடைக்காதபோது அங்கே வெறுப்பும் அலட்சியமும்தான் ஏற்படுகின்றன. இது இயற்கைதான். ஆனால் அபூர்வமாக எங்கோ ஓரிரு இடங்களில் இதற்கு மாறாக, அன்புக்குப் பிரதியாக அன்பு கிடைக்காதபோதுகூட ஒருவன் அன்பு காட்டுவதைக் காணலாம். விட்டில்பூச்சி நெருப்பிடம் கொள்ளும் அன்பை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அது நெருப்பை நேசித்து நெருங்குகிறது, வீழ்ந்து சாகிறது. இப்படி நெருப்பை நேசித்து அழிவது அந்தப் பூச்சியின் இயல்பிலேயே உள்ளது. ‘அன்பின் இயல்பே அன்பு செய்வது, அதனால் அன்பு செய்கிறேன்’ என்ற நிலை உலகில் நாம் காணக்கூடிய சுயநலமற்ற உயர்ந்த அன்பிற்கு ஒரு நல்ல, மறுக்க முடியாத எடுத்துக்காட்டாகும். ஆன்மீக வாழ்வில் இத்தகைய அன்பு செயல்படும்போது, அது சாதகனை நிச்சயமாகப் பராபக்தியை நோக்கி அழைத்துச் செல்கிறது.

பக்தியோகம் 12

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
5. உலகம்தழுவிய அன்பும் சரணாகதியும் 

    முதலில் சமஷ்டியை நேசிக்காமல் வியஷ்டியை எப்படி நேசிக்க முடியும்? நாம் காண்கின்ற இந்த உலகம் வியஷ்டி. இதுபோன்ற கோடிக்கணக்கான வியஷ்டிகளை உள்ளடக்கிய மொத்தம்தான் சமஷ்டி-அது இறைவன். எனவே உலகம் முழுவதையும் நேசிக்க வேண்டுமானால், அதனைத் தன்னிடத்தே ஒரு சிறுகூறாகக் கொண்டுள்ள முழுமுதற் பொருளை நேசிக்க வேண்டும். 

 கூறுகளை ஆராய்வதுடன் இந்திய நாட்டுத் தத்துவ ஞானியர் நிற்பதில்லை. மேலோட்டமாக இவற்றை விரைவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, இந்தக் கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற முழுப்பொருளை ஆராயச் சென்றுவிடு கின்றனர். உலகம்தழுவிய ஒன்றைத் தேடுவதுதான் இந்தியத் தத்துவத்தின், மதத்தின் ஒரே நோக்கமாக உள்ளது. எந்த ஒன்றை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்ததாகுமோ அந்த உண்மைப் பொருளை, பொதுவானதை, முழுத்தொகுதியான முழுமுதற்பொருளை அறிய விழைகிறான் ஞானி. பக்தனோ எந்த ஒருவரை நேசிப்பதன்மூலம் பிரபஞ்சம் முழுவதையும் நேசிக்கலாமோ, அந்தப் பொதுமைப் பொருளை அனுபூதியில் அறிய விரும்புகிறான். எந்த ஆற்றலை அடக்கியாள்வதன்மூலம் பிரபஞ்சம் முழுவதையும் அடக்கியாள முடியுமோ அந்தப் பிரபஞ்சப் பொது ஆற்றலை வசப்படுத்த விரும்புகிறான் யோகி. விஞ்ஞானம், மனஇயல், பக்தி, தத்துவம் என்று எந்தத் துறையை எடுத்தாலும் இந்திய மனம் இத்தகைய பொதுமையைத் தேடு வதையே ஒரே நோக்கமாகக் கொண்டிருந்ததை வரலாறு நமக்குக் காட்டுகிறது. 

ஆகவே பக்தன் கண்ட முடிவு இது ஒருவர்பின் ஒருவராக நேசித்துக்கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவே இருக் காது. எல்லையற்ற காலம்வரை நேசித்துக்கொண்டே போக லாம். இதன்மூலம் உலகை மொத்தமாக நேசிப்பது என்பது நடக்க முடியாது. ஆனால் எல்லா அன்பினுடையவும் ஒட்டு மொத்தமானவன் இறைவன்; முக்தரோ, கட்டுண்டவரோ, முக்தி பெற முயன்று கொண்டிருப்பவரோ யாரானாலும் அவர்களுடைய விருப்பங்கள் அனைத்தின் நிறைவிடம் இறை வன். இந்த அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொண்டால்தான் உலகம்தழுவிய அன்பு என்ற ஒன்றைக் காட்ட முடியும். இறை வனே சமஷ்டி. நாம் காண்கின்ற இந்த உலகம் என்பது இறைவ னின் வேறு உருவம், வெளிப்பாடு; அவ்வளவுதான். இந்த ஒட்டுமொத்தத்தை நேசித்தால் எல்லாவற்றையும் நேசித் தவர்கள் ஆகிறோம். உலகை நேசிப்பதும், அதற்கு நன்மை செய்வதும் எல்லாம் எளிதாகிவிடும். முதலில் இறைவனை நேசிப்பதால் மட்டுமே இந்த ஆற்றலைப் பெற முடியும். இல்லா மல் உலகிற்கு நன்மை செய்வது என்பதெல்லாம் எளிதல்ல. 

 ‘எல்லாம் அவன் உடைமை. அவன் என் அன்பன். அவனை நான் நேசிக்கிறேன்’ என்கிறான் பக்தன். இவ்வாறு எல்லாமே அவனுக்குப் புனிதமாகத் தெரிகின்றன. ஏனெனில் எல்லாம் இறைவனுக்குச் சொந்தமானவை. எல்லோரும் அவனது குழந்தைகள், அவனுடைய சரீரம், அவனது வெளிப்பாடுகள். அப்படியிருக்க, பிறரைத் துன்புறுத்த எப்படி முடியும்? பிறரிடம் எவ்வாறு அன்பு செலுத்தாதிருக்க முடியும்? இறைவனை நேசிக்கும்போது அதன் விளைவாக, உலகிலுள்ள ஒவ்வொருவ ரிடமும் நமக்கு அன்பு பிறக்கும்.இறைவனை நெருங்கநெருங்க, எல்லாமே அவனிடம் இருப்பதை அதிகமாகக் காண்கிறோம். இந்தப் பேரன்பின் பேரானந்தத்தைத் தனதாக்கிக் கொள்வதில் ஆன்மா வெற்றி காணும்போது எல்லாவற்றிலும் அவனைக் காணத் தொடங்கு கிறது. அதன் பயனாக நம் உள்ளம் நிரந்தர அன்பு ஊற்றாக மாறுகிறது. இந்த அன்பின் இன்னும் உயர்ந்த நிலைகளை நாம் அடையும்போது, உலகப் பொருட்களின் இடையேயுள்ள சிறுசிறு வேற்றுமைகள் கூட நமக்கு அழிந்துவிடுகின்றன. மனிதனை மனிதனாகக் காணாமல் இறைவனாகக் காண் கிறோம். மிருகம் மிருகமாகத் தெரியாமல் கடவுளாகத் தெரி கிறது. புலிகூடப் புலியாகத் தெரிவதில்லை ; இறைவனின் வெளிப்பாடாகத் தெரிகிறது. பக்தியின் இந்த உயர் நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு பிராணிக்கும், ஒவ்வோர் உயிருக்குமே வழிபாடு செய்யப்படுகிறது. 
‘ஏவம் ஸர்வேஷுபூதேஷுபக்தி ரவ்யபிசாரிaI இப் கர்த்தவ்யா பண்டிதைர்ஜ்ஞாத்வா ஸர்வபூதமயம் ஹரிம் ||” 1. விஷ்ணு புராணம், 1. 19. 5.
        -எம்பெருமானாகிய ஹரி எல்லா உயிர்களிலும் உறை கிறான் என்பதை அறிந்து அறிஞர்கள் எல்லா உயிர்களிடமும் மாறாத அன்பு செலுத்த வேண்டும்.
    அனைத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொள்கின்ற இந்தத் தீவிரமான அன்பினால் நமக்கு இறைவனிடம் பரிபூரணமான சரணாகதி நிலை ஏற்படுகிறது. அதாவது வாழ்க்கையில் எது நடந்தாலும் அது தனக்கு எதிரானது அல்ல என்ற திட நம்பிக்கை (அப்ராதிகூல்யம்) உண்டாகிறது. இந்த நிலையில் துன்பம் வரும்போது ‘வருக, வருக!’ என்று அதனை வரவேற் கிறான் பக்தன். துயரம் வந்தால் ‘துயரமே வா, உன் வரவு நல் வரவாகட்டும். நீயும் என் அன்புத் தலைவனிடமிருந்து அல் லவா வருகிறாய்’ என்பான். பாம்பு வந்தாலும் அதற்கும் ‘வருக’ தான். மரணம் வந்தாலும் புன்சிரிப்புடன் அதனை ஏற்று, ‘ஆகா, நான் எவ்வளவு கொடுத்துவைத்தவன்! என்னிடம் இவை வருகின்றன. இவற்றிற்கும் என் நல்வரவு’ என்று வர வேற்கிறான். இறைவன்மீதும், அவருடையவை அனைத்தின் மீதும் எழுகின்ற பேரன்பிலிருந்து பிறக்கும் இந்தப் பரிபூரண சரணாகதி நிலையில் இன்ப துன்பங்களுக்கு இடையில் அவன் வேறுபாடு காண்பதில்லை. துன்ப துயரங்கள்பற்றி முறையிடு வதும் அவனுக்குத் தெரியாது. இவ்வாறு எந்த முறையீடும் இல்லாமல், அன்பே வடிவான இறைவனது திருவுளத்தை முற்றிலுமாகச் சரணடைந்திருக்கின்ற இந்தப் பெருநிலை, வீர தீரச் செயல்களைச் செய்வதால் வருகின்ற பெருமையைவிட உண்மையிலேயே மிக உயர்ந்தது. 
பெரும்பாலோருக்கு உடம்பே எல்லாம், உடம்பே உலகம். உடலின்பம்தான் அவர்களுக்கு எல்லாம். உடம்பைப் பேணு வதும் போற்றிப் பாதுகாப்பதுமான இந்தப் பேய் நம் எல் லோருள்ளும் புகுந்துள்ளது. நாம் பெரியபெரிய பேச்சுக்களைப் பேசலாம், உயர்ந்த தத்துவங்களை விளக்கலாம். ஆனாலும் நாம் கழுகைப் போன்றவர்கள். நமது மனம் கீழே கிடக்கும் அழுகிய மாமிசத் துண்டுகளையே நாடி அலைகிறது. நமது உடல் ஏன் காப்பாற்றப்பட வேண்டும்? அதாவது ஒரு புலி பாய்ந்து வருமானால் நாம் ஏன் உடம்பைக் காக்க முயல வேண்டும்? ஏன் புலிக்கே இரையாகக் கூடாது? புலிக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்? அப்படிச் செய்வது ஏறக்குறைய தன்னலத் தியாகம்தான், வழிபாடுதான். நான் என்ற எண்ணம் அடியோடு மறைந்துவிடுகின்ற நிலையை உன்னால் அடைய முடியுமா? தலைசுற்றுகின்ற அளவிற்கு மிக உயரமான உச்சி அந்த நிலை; பக்திநெறியின் உயர்ந்த சிகரம் அந்த நிலை. ஒரு சிலரே அதனை எட்டியிருக்கின்றனர். தன்னலத் தியாகத்திற்கு, என்றுமே உள்ளன்புடன் தயாராக இருப்பதாகிய இந்த உச்சியை அடையாதவரை யாரும் முழுமையான பக்தனாக இருக்க முடியாது.
சில நாட்களுக்கோ அதிக நாட்களுக்கோ நாம் எல் லோருமே உடம்பைப் பேணிப் பாதுகாத்துத் திருப்தி அடைய லாம். ஆனால் நமது உடம்புகள் அழிய வேண்டியவை. அவை நிலைத்திருக்க முடியாது. பிறர் பணியில் ஈடுபட்டு உடம்பு அழியப் பெறுபவர்கள் பேறு பெற்றவர்கள். ‘செல்வத்தை, ஏன், தங்கள் உயிரையேகூட பிறருக்குத் தொண்டு செய்வதற்காக முனிவர்கள் தயாராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் ஒன்று நிச்சயம். அது மரணம். இந்த உடல் ஒரு தீய காரியத்திற்காக அழிவதைவிட நல்ல காரியத்திற்காக அழிவது மேலானது அல்லவா?” ஐம்பது ஆண்டுகளுக்கோ நூறு ஆண்டு களுக்கோ நமது ஆயுளை இழுத்துச் செல்லலாம். அதற்குப் பிறகு? சேர்க்கையின் காரணமாக உருவான எதுவும் பிரிந்தே யாக வேண்டும், அழிந்தே தீர வேண்டும். அது அழிகின்ற ஒரு காலம் வந்தே தீரும். ஏசுவும், புத்தரும், முகம்மது நபியும் மறைந்துவிட்டார்கள். உலகப் பெரும் தீர்க்கதரிசிகளும் ஆச் சாரியர்களும் இறந்து போனார்கள்.
‘எல்லாமே தூள் தூளாகச் சிதறி மறையப்போகின்ற நிலையற்ற இந்த உலகில், நமக்குக் கிடைத்திருக்கின்ற காலத்தை முடிந்த அளவு உயர்ந்த வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்கிறான் பக்தன். எல்லா உயிர்களுக்கும் சேவை செய்வதுதான் வாழ்க்கையை மிகவுயர்ந்த அளவிற்கு நல்வழி யில் பயன்படுத்துவதாகும். ‘நாம் உண்மையில் இந்த உடல் தான், இதனை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும், இயன்ற அளவு சிறப்பாகப் பேண வேண்டும்’ என்று கொண் டிருக்கின்ற பயங்கர எண்ணம்தான் உலகின் எல்லா சுயநலங்களுக்கும் காரணமாக இருக்கிறது. நீ உடம்பு அல்ல என்பது உறுதியாக உனக்குத் தெரியுமானால், யாருடனும் உனக்குப் பகையில்லை, போராட்டமில்லை; உனது சுயநல எண்ணங்கள் எல்லாம் அகன்றுவிடும். எனவே உலகப் பொருட் களைப் பொறுத்தவரையில் நம்மை இறந்துவிட்டவர்களாகவே நாம் கருத வேண்டும். இதுவே உண்மையில் சரணாகதி என்கிறான் பக்தன். பொருட்கள் வந்து போகட்டும். ‘எல்லாம் உன் திருவுளப்படியே’ என்பதன் பொருள் இதுதானே தவிர, வலிந்து சென்று சண்டையும் சச்சரவுகளும் செய்துவிட்டு, நம்முடைய குற்றங்குறைகளையும் ஆசாபாசங்களையும் ‘எல்லாம் இறைவன் திருவுளம்’ என்று கூறுவதல்ல. சுயநலம் காரணமாகச் செய்யப்படும் போராட்டங்களால் ஒருவேளை நல்லதும் ஏற்படலாம். அப்போது அது இறைவனின் பொறுப்பு ஆகிறது.
பராபக்தியில் தோய்ந்திருக்கும் பக்தன் எதையும் தனக் கென்று விரும்பாமலும் தனக்கென்று செயல்படாமலும் இருக்க வேண்டும். ‘இறைவா! உன் பெயரில் பெரிய கோயில் களைக் கட்டுகின்றனர். உனக்குப் பெரும் பொருளைக் காணிக்கையாக வழங்குகின்றனர். நானோ ஏழை. எனக்கென்று எதுவுமில்லை . எனவே எனது இந்த உடலையே உன் திரு வடிகளில் சமர்ப்பிக்கிறேன். என்னைப் புறக்கணித்து விடாதே. என்னைக் கைவிட்டு விடாதே. என் தலைவா!’-என்பது போன்ற பிரார்த்தனைதான் பக்தனின் மன ஆழத்திலிருந்து வெளிப்படுகிறது. இத்தகைய பக்தியில் திளைத்திருப்பவனுக் குத் தன்னையே தன் அன்புக் கடவுளுக்குக் காணிக்கையாக்கும் சரணாகதி நிலை மட்டுமே செல்வம், பதவி, பெயர், புகழ், சந்தோஷம் என்ற எல்லாவற்றைவிடவும் உயர்ந்த நிலையாக, மேலானதாகத் தெரிகிறது. இறைவனிடம் புகலடைந்திருக்கும் பக்தனிடம் காணப்படுகின்ற அமைதியும், சாந்தமும் அறிவிற்குப் புலப்படாதவை, ஈடிணையற்றவை. இந்த நிலையில் அவனுக்கு வேறு எந்தவிதமான ஆர்வமும் இல்லை. தன் இறைஆர்வத்திற்கு எதிராக எதையும் அவன் அறிவதில்லை . இத்தகைய உன்னத மான சரணாகதி நிலையில் பற்று என்ற உருவில் இருக்கின்ற எல்லாமே மறைந்துவிடுகின்றன. எல்லா பொருட்களும் யாரில் வாழ்ந்து, வளர்ந்து, ஒடுங்குகின்றனவோ அவனிடம் கொள்ளும் உலகம்தழுவிய அன்பு என்னும் ஒரே ஒரு பற்றுதான் அவனிடம் உள்ளது. இறைவனிடம் பூணும் இந்த பக்திப்பற்று உண்மையில் ஆன்மாவைக் கட்டுவதில்லை; மாறாக எல்லா பந்தங்களையும் அறுத்தெறிகிறது.

பக்தியோகம் 11

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
4. பக்தி வெளிப்படும் வழிகள் 

பக்தி வெளிப்பட்டுத் தோன்றும் சில வழிகளைக் காண்போம்.! முதலாவதாக வருவது மரியாதை (பஹுமானம்) –கோயில் களையும் புண்ணியத் தலங்களையும் மக்கள் மரியாதையுடன் அணுகுவது ஏன்? அங்கெல்லாம் இறைவன் வணங்கப்படு வதால்தான்; அவரது சான்னியத்தியம் அந்த இடங்களில் எல்லாம் நிறைந்திருப்பதால்தான். எல்லா நாடுகளிலும் ஆச்சாரியர்கள் ஏன் போற்றப்படுகிறார்கள்? ஏனெனில் அவர் கள் இறைவனைப்பற்றிப் பேசுகிறார்கள். அதனால் மனித இதயம் இயல்பாகவே அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. மரியாதை என்பது அன்பு என்னும் அடியாழத்திலிருந்து எழு கிறது. நாம் விரும்பாத யாரிடமும் நமக்கு மரியாதை தோன்று வதில்லை .

அடுத்தது ப்ரீதி- இறைவனிடம் இன்பம் காணல். புலனின்பப் பொருட்களில்தான் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள்! தான் விரும்புகின்ற ஒன்றை, தனது புலன்கள் நாடுகின்ற ஒன்றை அடைவதற்காக எங்கு வேண்டுமானாலும் செல்லவும் எந்தவித ஆபத்தை எதிர்கொள்ளவும் மனிதன் தயாராக இருக்கிறான். பக்தனிடம் எதிர்பார்க்கப்படுவது இது போன்ற மிகத் தீவிரமான துணிச்சலான அன்புதான். ஆனால் அந்த அன்பு செல்லும் திசை இறைவனை நோக்கியதாக இருக்க வேண்டும், அவ்வளவுதான்.

அடுத்தது வேதனைகளுள் மிகமிக இனிமையான வேதனை-விரக வேதனை, அன்பிற்குரியவரைக் காணாததால் ஏற்படுகின்ற ஆழ்ந்த மனத்தவிப்பு. இறைவனை இன்னும் அடையவில்லையே, அறிவதற்குத் தகுதியுடைய ஒரே பொரு ளான அவரை இன்னும் அறியவில்லையே என்ற உள்ளார்ந்த ஏக்கத்தினால், நொந்துநொந்து மனம் வெறுத்து, கடைசியில் பக்தன் பித்தனைப்போல் ஆகிவிடும் நிலைதான் விரகம். இந்த மனநிலையின் காரணமாக பக்தனுக்குத் தன் அன்பிற்குரிய வரைத் தவிர பிற அனைத்தின்மீதும் வெறுப்புத் தோன்றுகிறது (இதர விசிகித்ஸா ).

உலக அன்பிலும் இத்தகைய விரக வேதனை ஏற்படுவதை நாம் காண்கிறோம். ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் உண்மையான காதல் கொள்ளும்போது, அவர்களுக்குத் தாங்கள் நேசிக்காதவர்களைக் காணும்போது அவர்கள்மீது இயல்பாகவே வெறுப்பு எழுகிறது. பராபக்தி பக்தனைப் பிடித்து ஆட்டும்போதும், மனம் விரும்பாத பொருட்கள்மீது இதே போன்ற வெறுப்பு எழுகிறது. இறைவனைத் தவிர வேறெதை யும்பற்றிப் பேசுவது கூட அவனுக்குச் சுவையற்றதாகத் தோன்றுகிறது.

‘இறைவனை நினை. இறைவனை மட்டுமே சிந்தனை செய். மற்ற பயனற்ற சொற்களைப் பேசுவதை விட்டுவிடு.’1 இறைவனைப்பற்றி மட்டுமே யார் பேசுகிறார்களோ அவர்களை பக்தன் நண்பர்களாகக் கருதுகிறான். பிறவற்றைப் பேசுபவர் களை நண்பர்கள் அல்லாதவர்களாகக் காண்கிறான். இதைவிட மேலானதொரு நிலையையும் அவன் அடைகிறான். அன்பு என்ற ஒரே லட்சியத்திற்காக மட்டுமே அவன் வாழ்கின்ற நிலை அது. இங்கே, அந்த அன்பின் காரணமாக அவனது வாழ்வே இன்பமயமாகவும், வாழத் தகுந்ததாகவும் விளங்குகிறது (ததர்த்த ப்ராணஸம்ஸ்தானம்). இந்த அன்பு இல்லாமல் ஒரு கணம்கூட அவனால் வாழ முடியாது. வாழ்க்கை இன்பமயமாக உள்ளது, ஏனெனில் அதில் இறைவனை நினைக்க முடிகிறது.

ஒருவன் பக்தியில் நிறைநிலையை அடையும்போது, இறைவனது அருட்பேற்றைப் பெறும்போது, இறைவனை அடையும்போது, அவனது திருவடித் தாமரைகளைத் தொடு வது போலாகும்போது ததீயதா (தான் இறைவன் ஒருவனுக்கே சொந்தம்) என்ற நிலையை அடைகிறான். அப்போது அவனது இயல்பு முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, முற்றிலுமாக மாற்றப்பட்டுவிடுகிறது. அவனது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறுகிறது. ஆனாலும் பக்தர்களுள் பலர் இறைவனை வழிபடுவதற்கென்றே உலகில் வாழ்ந்துவருகிறார்கள். அந்த ஆனந்தத்தை, வாழ்வின் ஒரே இன்பத்தை அவர்கள் விடுவ தில்லை. ‘மன்னா! எல்லாவற்றிலும் நிறைவு கண்டவர்களும், இதய முடிச்சுக்கள் அனைத்தும் அவிழப் பெற்றவர்களும்கூட அன்பு ஒன்றிற்காகவே ஹரியிடம் அன்பு செய்கின்றனர்; அவரது பெருமை இத்தகையது.’ ‘அந்த மேலான பரம்பொருளை எல்லா தேவதைகளும் வழிபடுகின்றனர். முக்தியை நாடும் எல்லா சாதகர்களும், எல்லா பிரம்மஞானிகளும் வணங்கி வழிபடுகின்றனர்-யம் ஸர்வே தேவா: நமந்தி முமுக்ஷவோ ப்ரஹ்மவாதினச்சேதி அன்பின் ஆற்றல் இத்தகையது. தன்னை முற்றிலுமாக மறந்து எந்தப் பொருளையும் தனதென்று உண ராதவனாகும்போது பக்தன் ‘ததீ’யதா நிலையை அடைகிறான். அவனுக்கு எல்லாமே புனிதம் வாய்ந்தவை. ஏனெனில் எல் லாமே இறைவனது உடைமை. 

சாதாரண உலக அன்பில்கூட, அன்பிற்குரியவருக்குச் சொந்தமானவற்றை எல்லாம் புனிதம் வாய்ந்தவையாக, மிகவும் விரும்பத் தக்கதாகப் போற்றுவதைக் காண்கிறோம். மனத்தைக் கவர்ந்தவளின் கைக்குட்டையைக்கூட காதலன் நேசிக்கிறான். இதுபோன்று பக்தன் இறைவனை நேசிக்கும்போது, இறைவ னுக்குச் சொந்தமானது என்ற காரணத்தால் உலகமே அவனது அன்பிற்கு உகந்ததாகிவிடுகிறது. 

பக்தியோகம் 10

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
3. பக்தியோகத்தின் எளிமையும் ரகசியமும் 

    ‘கிருஷ்ணா! உன்னையே இடைவிடாது ஆழ்ந்து சிந்தித்து வழிபட்டு வரும் பக்தர்கள், நிர்க்குண பிரம்மத்தை வழிபடும் ஞானிகள் இவர்களுள் சிறந்த யோகி யார்?’ என்று அர்ஜுனன் கேட்டான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்: ‘யார் தங்கள் மனத்தை என்மீது நிலைநிறுத்தி என்னிடம் அசைக்க முடி யாத நம்பிக்கையுடன் எப்போதும் என்னை வழிபடுகிறார் களோ அவர்களே சிறந்த பக்தர்கள்; அவர்களே சிறந்த யோகி கள். சொற்களால் விளக்க முடியாத, புலன்களை வெற்றி கொண்டு, சமநோக்குடையவர்களாக, உயிரினங்களுக்கு நன்மை செய்பவர்களாக இருந்து, வேறுபாடற்ற, அனைத்தையும் அறி கின்ற அசைவற்ற, என்றுமுள்ள பரப்பிரம்மத்தை, முழுமுதற் பொருளாகிய, என்னை வழிபடுபவர்கள் என்னை வந்தடை கின்றனர். மன வாக்குகளுக்கு எட்டாத முழுமுதற் பொருளாகிய பிரம்மத்திடம் யாருடைய மனம் நாட்டம் கொள்கிறதோ, அவனது பாதையில் போராட்டங்கள் அதிகம். உடலுணர்வு மிக்க மனிதனுக்கு பிரம்மத்தைத் தேடி அடையும் பாதை மிகக் கடினமானது. தான் செய்துவரும் செயல்கள் அனைத்தையும் எனக்கு அளித்து என்னையே தஞ்சமாகக் கொண்டு, வேறு எதனிடமும் பற்றின்றி, என்னையே தியானித்து வருபவனை, தொடர்ந்து வரும் பிறப்பு-இறப்பு என்னும் சம்சாரக் கடலி லிருந்து நான் விரைவில் உயர்நிலை அளிக்கிறேன்.’

இங்கே ஞானயோகம், பக்தியோகம் என்ற இரண்டும் குறிப்பிடப் படுகின்றன. இரண்டுமே மேலே கண்ட பகுதியில் விளக்கப்படுவதாகக் கொள்ளலாம். ஞானயோகம் சிறந்தது, மிக உயர்ந்த தத்துவம். ஞானயோகம் கூறுகின்ற எல்லா நிபந் தனைகளையும் நிறைவேற்றி வாழ முடியும் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். வேடிக்கைதான்! ஆனால் அத்தகைய ஒரு தத்துவ வாழ்க்கை வாழ்வது உண்மையில் மிகவும் கடினமானது. தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்வது பலவேளைகளில் பேராபத்தில் கொண்டுபோய் விடலாம்.

    உலகினரை இரு வகையாகப் பிரிக்கலாம். அரக்க இயல்பு கொண்ட மக்கள் ஒருவகையினர். இவர்களுக்கு வாழ்க்கையில் முதலும் முடிவும் உடம்பைப் பேணுவதுதான். தெய்வீக இயல் பினர் மற்றொரு வகையினர்; உடம்பு என்பது ஒரு லட்சியத்தை அடைவதற்கும், ஆன்மாவைப் பண்படுத்துவதற்குமான கருவி மட்டுமே என்பதை இவர்கள் உணர்கின்றனர். முதல் வகையைச் சார்ந்தவனான மனிதப் பேய்கூடச் சுயநலத்திற்காக சாஸ்திர மேற்கோள்களை அள்ளி வீசலாம். நல்லவனின் செயல்களுக்குத் தூண்டுகோல்போல் இருக்கும் ஞானநெறி, தீயவனின் செயல்களுக்கு ஒப்புதல் அளிப்பதுபோல் தோன்றக்கூடும். இதுவே ஞானயோகத்தில் வரக்கூடிய பேராபத்து. 

 ஆனால் பக்தியோகமோ இயற்கையானது, இனிமை யானது, மென்மையானது. பக்தன் ஞானயோகியைப்போல் மிக உயரே செல்வதில்லை ; அதனால் கீழே விழுவதும் அதிக மில்லை. சாதகன் எந்த வழியைக் கடைப்பிடித்தாலும் சரி, ஆன்மாவின் தளைகள் நீங்கும்வரை, முக்தி கிடைக்காது.

 பேறு பெற்றவளான கோபிகை ஒருத்தியின் மனத்தைக் கட்டுப்படுத்திய நன்மை, தீமை என்ற விலங்குகள் எப்படி அறு பட்டு வீழ்ந்தன என்பதைக் கீழ்வரும் பகுதி காட்டுகிறது: ‘இறைவனைத் தியானித்ததன் காரணமாகப் பெற்ற பேரானந்தம் அவள் இதுவரை செய்த நல்வினைகளின் தளைகளைப் போக் கியது. இறைவனை அடையாததால் அவளது ஆன்மா அனு பவித்த கொடிய பிரிவுத் துன்பம் அவளுடைய தீவினைகளை அழித்தது. அவள் முக்தி பெற்றாள்- தச்சிந்தாவிபுலா ஹ்லாத rண புண்யசயா ததா | ததப்ராப்தி மஹத்து:க விலீனாசேஷ பாதகா || நிருச்ச்வாஸதயா முக்திம் கதான்யா கோபகன்யகா ||”

    பக்தியோகத்தின் அடிப்படை ரகசியம் இதுவே. மனித இதயத்தில் எழுகின்ற பலவகை விருப்பங்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள் முதலிய எதுவும் தன்னளவில் தவறானவை அல்ல; ஆனால் அவை உயர்நிலையை அடையும்வரை, அவற்றைக் கவனமாகக் கட்டுப்படுத்தி அந்த உயர்நிலையை நோக்கிப் படிப்படியாக இட்டுச் செல்ல வேண்டும். நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்வதே மகத்தான நெறி. மற்ற நெறிகள் எல்லாம் கீழானவை.

    இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தது வாழ்க்கை. வாழ்க்கையில் இரண்டும் மாறிமாறி வருகின்றன. செல்வமோ வேறெந்த உலகப் பொருளுமோ தன்னிடம் இல்லையென்பதற் காக வருந்துபவன் தன் உணர்ச்சிகளைத் தவறான பாதையில் செலுத்துகிறான். ஆனால் துன்பங்களாலும் பயன் உண்டு. ‘நான் உயர்நிலை எய்தவில்லையே, இறைவனை அடைய முடிய வில்லையே’ என்று ஒருவன் வருந்தட்டும். இந்த வருத்தம் அவனை முக்திப் பாதையில் அழைத்துச் செல்லும். கைநிறையப் பணம் இருக்கிறது என்று நீ மகிழ்ந்தால், அது மகிழ்ச்சிக்குத் தரப்பட்ட தவறான போக்கு. அதை உயர்நோக்கில் திருப்ப வேண்டும். அது மிகமிக உன்னதமான லட்சியத்திற்குப் பயன் பட வேண்டும். அத்தகைய லட்சியத்தில் இன்பம் காண்பது தான் உண்மையில் மேலான இன்பம். மற்ற உணர்ச்சிகளுக்கும் இது பொருந்தும். அவற்றுள் ஒன்றுகூடத் தவறில்லை என் கிறான் பக்தன். உணர்ச்சிகளையெல்லாம் தன் வசப்படுத்தி, எந்தத் தவறும் நிகழாமல் இறைவனை நோக்கித் திருப்புகிறான் அவன்.

பக்தியோகம் 9

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள்
2. அன்பிலிருந்து எழுவது பக்தனின் தியாகம்

    இயற்கை எங்கும் அன்பைக் காண்கிறோம். சமுதாயத்தில் எவையெல்லாம் நல்லவையோ, உயர்ந்தவையோ, நுண்மை மிக்கவையோ அவை எல்லாம் அன்பின் செயல்கள். தீயவையும் பேய்த்தனமானவையும்கூட அதே அன்புணர்ச்சியின் செயல் பாடுதான். ஆனால் இது முறைதவறிய செயல்பாடு. கணவன் மனைவியரிடையே தூய, புனிதக் காதலாகத் திகழ்கின்ற அதே அன்புதான் காமவெறி பிடித்த விலங்குணர்ச்சியாகவும் வெளிப் படுகிறது. உணர்ச்சி என்னவோ ஒன்றுதான். அதன் வெளிப் பாடுகள்தான் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக உள்ளன. நல்வழியில் செலுத்தப்படும்போது ஒருவனை நன்மை செய்யு மாறும், தன்னிடம் இருப்பதையெல்லாம் ஏழைகளுக்கு வழங்கு மாறும் செய்கின்ற அதே அன்புதான், தீய வழிகளில் செலுத்தப் படும்போது, மற்றொருவனை, தன் உடன்பிறந்தவனின் கழுத் தைத் திருகிக் கொலை செய்து அவனது சொத்துக்களை அப கரிக்கச் செய்கிறது. பின்னவன் தன்னிடம் கொள்கின்ற அதே அன்பையே முன்னவன் பிறரிடம் காட்டுகிறான். அன்பின் போக்கு பின்னவன் விஷயத்தில் தீயது. முன்னவன் விஷயத்தில் சரியானது, நியாயமானது. உணவைச் சமைப்பதற்குப் பயன் படுகின்ற அதே நெருப்பு ஒரு குழந்தையைச் சுட்டுவிடலாம். அது நெருப்பின் தவறல்ல. அதைப் பயன்படுத்திய விதம்தான் தவறானது. எனவே ஒன்றுகலந்துவிடத் துடிக்கும் தவிப்பு, இரண்டறக் கலக்க வேண்டும் என்ற தீவிரமான காதல் என் பதைச் சற்று உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலைகளில் எங்கும் காணவே செய்கிறோம். எல்லோருமே ஒன்றில் கலக்க வேண்டிய வர்கள்தானே!

பக்தியோகம் என்பது உயர்நிலை அன்பைப் பற்றிய விஞ் ஞானமாகும். அன்பை எந்த வழியில் செலுத்துவது என்பதை அது கற்றுத் தருகிறது. அன்பைக் கட்டுப்படுத்துவது எப்படி? அடக்கி ஆள்வது எப்படி? பயன்படுத்துவது எப்படி? அதற்கு ஒரு புதிய குறிக்கோளை, ஒரு நோக்கத்தை அளித்து, அதன்மூலம் மிக உயர்ந்ததும் பெருமை மிக்கதுமான பலன்களை அடைவது எப்படி, நம்மை ஆன்மீகப் பேரின்பத்திற்கு அழைத் துச் செல்லுமாறு அதைக் கையாள்வது எப்படி என்பதை யெல்லாம் நமக்குப் போதிக்கிறது. பக்தியோகம் நம்மிடம் ‘விட்டு விடு’ என்று சொல்வதில்லை. அது சொல்வதெல்லாம் ‘அன்பு செய், அனைத்திற்கும் மேலானதை நேசி’ என்பதுதான். அனைத்திற்கும் மேலானதை நேசிப்பவனிடமிருந்து, கீழான அனைத்தும் தாமாகவே அகன்றுவிடுகின்றன.

‘நீ என் அன்பின் திருவுருவம் என்பதைத் தவிர, உன்னைப் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. நீ அழகாக இருக்கிறாய், ஓ! நீ எவ்வளவு அழகு! அழகின் திருவுருவமே நீதான்!’ இந்த யோகத்தில் நம்மிடம் எதிர்பார்க்கப்படுவதெல்லாம், நாம் செய்ய வேண்டியது எல்லாம் அழகைத் தேடியலையும் நமது வேட்கையை இறைவனை நோக்கித் திருப்பிவிடுவது மட்டுமே. மனித முகத்திலோ, வானத்திலோ, விண்மீன்களிடமோ, நில விலோ அப்படி என்னதான் அழகிருக்கிறது? உண்மையில் எல்லாமாக விளங்கும் பரம்பொருளின் பேரழகில் அது ஒரு சிறு கிரகிப்பு, அவ்வளவே. ‘அவன் ஒளிர்வதால் எல்லாம் ஒளி வீசுகின்றன. அவனது ஒளியால் எல்லாம் ஒளி பெறுகின்றன.” இந்த உயர்நிலை பக்தியைப் பற்றிக்கொள். உன்னிடம் உள்ள சின்னஞ்சிறு தனித்துவங்கள் அனைத்தையும் அது மறக்கும்படிச் செய்யும்.

 உலகின் சிறுசிறு தன்னலப் பிடிப்புக்களிலிருந்து உன்னை விடுவித்துக்கொள். உன் வாழ்வின் மையமாக, உன் உயர்ந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் ஆதாரமாக மனித சமுதாயத்தைப் பார்க்காதே. ஒரு சாட்சியாக, ஒரு மாணவனாக நின்று இயற்கையின் நாடகங்களைக் கவனித்துக் கொண்டிரு. எந்த மனிதனிடமும் சொந்தப் பற்றின்றி இரு. உலகில் இந்தப் பேரன்பு எப்படியெல்லாம் செயல்பட்டு வருகிறது என்பதை அப்போது அறிந்துகொள்ளலாம். சிலவேளைகளில் சிறிது மோதல் உண்டாகலாம். ஆனால் அது உண்மையான பேரன்பை அடைவதற்கான போராட்டத்தில் உள்ளதுதான். சிலவேளை களில் சிறிது சண்டை , சிறிது வீழ்ச்சி ஏற்படலாம். இவற்றைப் பொருட்படுத்த வேண்டாம். விலகி நில், உராய்வுகளும் மோதல்களும் சுதந்திரமாக வந்து போகட்டும். வாழ்க்கை நீரோட்டத்தில் இருக்கும்போதுதான் நீ இந்த மோதல்களை எல்லாம் உணர்கிறாய். வெளியே வந்து ஒரு சாட்சியாக, ஒரு மாணவனாக மட்டுமே இருப்பாயானால் ஆயிரமாயிரம் வழிகளில் இறைவன் தன்னை அன்பு வடிவில் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை நீ காண முடியும்.

 ‘எங்கெல்லாம் இன்பம் உண்டோ , மிகத் தாழ்ந்த சிற்றின் பங்களாக இருந்தாலும்கூட, அங்கெல்லாம் சச்சிதானந்தத்தின் ஒரு கிரணம் உள்ளது.’ கீழான கவர்ச்சிகளிலும்கூட இறையன் பின் முளை உள்ளது. இறைவனின் திருநாமங்களுள் ஒன்று ஹரி. எல்லாவற்றையும் தன்னிடம் கவர்ந்திழுப்பவன் என்பது இதன் பொருள், உண்மையில் மனித உள்ளங்களைக் கவர்வதற் கான தகுதி படைத்தவர் அவர் ஒருவர் மட்டுமே. ஆன்மாவை உண்மையில் யாரால் கவர முடியும்? அவன் ஒருவனால்தான்! உயிரற்ற ஜடப்பொருளால் ஆன்மாவைக் கவர முடியும் என்று நினைக்கிறாயா? அப்படி இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை . ஓர் அழகிய முகத்தைக் கண்டு, ஒருவன் அதன் பின் ஓடுகிறான் என்றால், ஒழுங்காக அமைந்த பிடியளவு அணுக்களா அவனைக் கவர்ந்தன? இல்லவே இல்லை. அந்த மூலக்கூற்றணுக்களுக்குப் பின்னால் ஒரு தெய்வீகக் கவர்ச்சி யின், ஓர் இறையன்பின் திருவிளையாடல் இருக்க வேண்டும், இருக்கவே செய்கிறது. மூட மனிதனால் இதை அறிய முடிவ தில்லை. இருந்தாலும், அறிந்தோ அறியாமலோ அந்தக் கவர்ச்சி யினால்தான் அவனும் ஈர்க்கப்படுகிறான். அதனால் கீழ் நிலைக் கவர்ச்சிகள் கூட, கவர்வதற்கான தங்கள் ஆற்றலை இறைவனிடமிருந்தே பெறுகின்றன. ‘என் அன்பே, ஒருவரும் கணவனுக்காகக் கணவனை விரும்பியதில்லை. ஆன்மாவிற் காகவே, அவனுள் சுடர்விடும் இறைவனுக்காகவே அவன் காதலிக்கப்படுகிறான்.” இதைக் காதல் மனைவியர் அறிந்திருக்க லாம், அல்லது அறியாமல் போகலாம்.ஆனாலும் உண்மை என்னவோ இதுதான். ‘என் அன்பே,யாரும் மனைவிக்காக மனைவியை விரும்புவதில்லை. அவளிடம் குடிகொண் டிருக்கும் ஆன்மாவிற்காகவே அவள் நேசிக்கப்படுகிறாள்.’ அதுபோன்றே குழந்தையிடம் ஆசைகொள்வதும் குழந்தைக் காக அல்ல, அந்தக் குழந்தையினுள் உறைபவனுக்காகவே.இறைவன் ஒரு பெரிய காந்தம், நாமெல்லாம் இரும்புத் துகள்கள். அவன் எப்போதும் நம்மைக் கவர்ந்தபடி இருக் கிறான். நாமும் அவனை அடையப் பாடுபட்டுக் கொண்டிருக் கிறோம். உலகில் நமது இந்தப் போராட்டங்களெல்லாம் உண்மையில் சுயநலத்திற்காக அல்ல. முட்டாள்களுக்குத் தாங் கள் என்ன செய்கிறோம் என்பது தெரிவதில்லை. வாழ்வில் அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்தப் பெரிய காந்தக் கல்லை அணுகுவதுதான். வாழ்க்கையின் பெரிய போராட்டங் களும் சண்டைகளும் எல்லாம் அவனை அடைவதற்காகவே, அடைந்து அவனுடன் ஒன்றுகலப்பதற்காகவே.
வாழ்க்கைப் போராட்டங்களின் பொருள்பற்றி பக்தியோகி அறிந்தே இருக்கிறான். அவற்றை உணர்ந்து கொள்கிறான். நீண்ட இத்தகைய பல போராட்டங்களை அவன் ஏற்கனவே சந்தித்திருக்கிறான். அவற்றின் பொருள் என்ன என்பது அவ னுக்குத் தெரியும். மோதல்களிலிருந்து விடுபட அவன் மனப் பூர்வமாக விரும்புகிறான். சச்சரவுகளை ஒதுக்கிவிட்டு, வசீகரங் களுக்கெல்லாம் மையமாக விளங்குகின்ற ஹரியிடம் போக விரும்புகிறான். இதுதான் பக்தனின் தியாகம். இறைவனுக்காக எழும் இந்த மகத்தான கவர்ச்சி, மற்ற கவர்ச்சிகளையெல்லாம் மறையச் செய்கிறது. அவனது இதயத்தில் புகுகின்ற எல்லையற்ற ஆற்றல்மிக்க இந்த இறையன்பு, வேறு எந்த அன்பையும் அங்கே தங்க விடுவதில்லை. வேறு விதமாக எப்படி இருக்க முடியும்? பக்தி அவனது உள்ளத்தை அன்புக்கடலான இறைவனால் நிரப்புகிறது. குறுகிய அன்புகளுக்கு அங்கே இடமில்லை. தெளிவாகச் சொல்வதானால் இறைவனிடம் கொள்கின்ற அனுராகம் எனப்படும் பேரன்பு காரணமாக, இறைவன் அல் லாத மற்ற எல்லா பொருட்களிடமும் அவன் கொள்ளும் வைராக்கியம் அல்லது பற்றின்மையே பக்தனின் தியாகம்.
பக்தியின் முதிர்ந்த நிலையை, பராபக்தியைப் பெறுவதற்கு இதுவே லட்சிய சாதனையாகும். இந்தத் தியாகம் உதித்ததும் பராபக்தி என்னும் தெய்வ உலகில் ஆன்மா நுழைவதற்கான கதவு திறக்கிறது. பராபக்தி என்ன என்பதை அப்போதுதான் நாம் உணர முடியும். இவனுக்கு மட்டுமே, பராபக்தி என்னும் கோயிலுக்குள் நுழைந்தவனுக்கு மட்டுமே, ஆன்ம அனுபூதி பெறத் திருவுருவங்களும் சின்னங்களும் பயனற்றவை என்று கூறும் தகுதி உண்டு. நாம் பொதுவாக சகோதரத்துவம் என்று கூறும் பக்திப் பெருநிலையை அவன் மட்டுமே அடைந்திருக் கிறான். மற்றவர்களெல்லாம் பேசுவதோடு சரி. 
பக்தனிடம் உயர்வு தாழ்வுகள் இல்லை . அன்புக் கடல் அவனுள் புகுந்துவிட்டது. அவன் மனிதனை மனிதனாகக் காண்பதில்லை, எங்கும் அவன் இறைவனையே காண்கிறான். எல்லா முகங்களிலும் தன் ஹரி பிரகாசிப்பதையே அவன் காண்கிறான். சந்திர சூரியர்களிடம் உள்ள ஒளி அனைத்தும் இறைவனின் ஒளியே. எங்கெல்லாம் அழகும் நுண்மையும் பொலிகின்றனவோ அவையெல்லாம் அவனைப் பொறுத்த வரை இறைவனுக்கு உரியவை.
அத்தகைய பக்தர்கள் இன்றும் இருக்கிறார்கள். உலகில் அவர்கள் இல்லாத காலமேயில்லை. பாம்பு கடித்தால்கூட, தங்கள் அன்புத் தலைவனிடமிருந்து தூதன் வந்தான் என்றே அவர்கள் சொல்கிறார்கள். உலக சகோதரத்துவம்பற்றிப் பேசும் உரிமை பெற்றவர்கள் இவர்கள் மட்டுமே. இவர்களுக்கு யாரிட மும் கோபமில்லை, வெறுப்பில்லை, பொறாமை உணர்ச்சி யில்லை . புலன்களால் அறியப்படுகின்ற புற உலகம் அவர் களிடமிருந்து என்றென்றைக்குமாக மறைந்துவிட்டது. வெளி யில் காணும் காட்சிகளுக்குப் பின்னால் எப்போதும் உண்மைப் பொருளைக் காண இயலும்போது அவர்களால் எப்படிக் கோபம் கொள்ள முடியும்?