ஸ்ரீராமகிருஷ்ணர்: வாழ்வும் நோக்கமும்

ஸ்ரீராமகிருஷ்ணர்: வாழ்வும் நோக்கமும்

சுவாமி விவேகானந்தர்

ஒரு குறுகிய சமுதாயத்தில் ஆன்மீகம் ஆழமானதாகவும் சிறந்த தாகவும் உள்ளது. குறுகிய ஓடையில் தண்ணீர் மிக வேகமாக ஓடும். பரந்த மனப்பான்மை கொண்ட சமுதாயத்தில், அதன் நோக்கம் பரந்ததாக இருந்தாலும் அந்த அளவுக்கு ஆழமும் வேகமும் குறைந்து இருப்பதைக் காண்கிறோம். ஆனால் வரலாற்றையே மாற்றி அமைத்துள்ளது ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை . கடலைவிட ஆழமான, ஆகாயத்தைவிடப் பரந்த பல்வேறு கருத்துக்கள் அவரிடம் சங்கமித்திருந்தன. இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியேயாகும்.

ஸ்ரீராமகிருஷ்ணர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் வேதங்களுக்கு நாம் விளக்கம் காண வேண்டும். சங்கரரும் மற்ற விளக்கவுரையாளர்களும் வேதங்கள் ஒரே உண்மையைத் தான் கூறுகின்றது என்று சொல்லி ஒரு பெரிய தவறு செய்து விட்டனர். ஆகவே தங்கள் கோட்பாட்டிற்கு முரணாக அமைந்ததுபோல் தோன்றிய பகுதிகளைத் திரித்துத் தங் களுக்குச் சாதகமாக விளக்கம் தந்த குற்றம் அவர்களைச் சாரும். முன்பு அவதரித்து, கீதைப் பேருபதேசம் செய்து, வேறு பட்டவைபோல் தோன்றிய கருத்துக்களுக்கு ஓரளவு சமரசம் கண்டார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். காலப்போக்கில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள இதனைச் சமரசப்படுத்த அவரே மறுபடியும் ஸ்ரீராமகிருஷ்ணராக வந்தார். அவரது உபதேசங்களின் அடிப்படையில் படிக்காவிட்டால் வேத, வேதாந்தங்களை உண்மையாக யாராலும் அறிந்துகொள்ள முடியாது. மேலாகப் பார்க்கும்போது முரணாகத் தோன்றுகின்ற இந்தக் கருத்துக்கள் பலதரப்பட்ட மனிதர்களுக்காக, மக்களின் மனப் பக்குவத்திற்கு ஏற்ப அமைந்தவை, படிப்படியாக மனிதனை மேல்நிலைக்கு அழைத்துச் செல்பவை என்பதை அவர் காட்டினார்; முதலில் அவர் இவற்றை வாழ்ந்து, பிறகே மற்றவர்களுக்கு உபதேசித்தார். இந்த உபதேசங்களின் காரண மாகச் சண்டைசச்சரவுகள், மத வேறுபாடுகள் இவற்றை மறந்து, கட்டாயமாக உலகம் முழுவதும் மதத்திலும் மற்ற விஷயங் களிலும் ஒற்றுமையாக வாழ முடியும்.

காமம், பண ஆசை போன்று வேறு எதையாவது எச்சரிக்கையுடன் தவிர்க்க வேண்டும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் நம்மை மிகவும் வற்புறுத்திக் கூறியிருப்பாரானால், அது எல்லை யற்ற இறைவனைக் குறுகிய எல்லைக்குள் கட்டுப்படுத்து வதாகும். ஆகவே ஸ்ரீராமகிருஷ்ணரின் எல்லையற்ற லட்சியங் களை எல்லைக்கு உட்படுத்த யாராவது முயன்றால் அவர் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு எதிராகச் செயல்படுபவர், அவரது பகைவர்.

அவருடைய உபதேசங்களில் ஒன்று: பச்சோந்தியை ஒருமுறை மட்டும் பார்த்தவன் அதன் ஒரே ஒரு நிறத்தை மட்டுமே அறிவான். ஆனால் அது வசிக்கும் மரத்தடியிலேயே வாழ்பவன் அதன் பல நிறங்களையும் அறிவான். அதுபோல் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களையும், அவருடன் இரவு பகலாக வாழ்ந்தவர்களும் அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற அவருடன் வந்தவர்களுமான அவரது சீடர்களின் வார்த்தை களின் வாயிலாக ஆராய்ந்து அறியாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

இத்தகைய சிறந்த மனிதர்; ஞானம், யோகம், கர்மம், பக்தி என்பவை சிறப்பாக ஒருங்கிணைந்திருந்த மகான் இதற்கு முன் தோன்றியதில்லை. ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டுவது, மிக விரிந்த, மிகப் பரந்த, மிகவும் ஆழமான மன நிலை ஒரு மனிதனிடம் ஒரே நேரத்தில் ஒன்றியிருக்க முடியும் என்பதே. சமுதாயத்தையும் அதேபோன்று உருவாக்க லாம். ஏனெனில் மக்களின் தொகுதிதானே சமுதாயம்?

யாருடைய ஒழுக்கம் இவரைப் போன்று முழுமையாக வும் பலமுகப்பட்டதாகவும் அமைகிறதோ, அவரே ஸ்ரீராமகிருஷ்ணரின் உண்மையான சீடன். அத்தகைய ஒழுக்கம் நிறைந்த மனிதர்களை உருவாக்குவதே காலத்தின் தேவை. ஒவ்வொருவரும் இந்த நிலையை அடையப் பாடுபட வேண்டும்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  III. ஸ்ரீராமகிருஷ்ணர் –   5. ஸ்ரீராமகிருஷ்ணர்: வாழ்வும் நோக்கமும்