ஸ்ரீராமகிருஷ்ணர்: வாழ்க்கையும் உபதேசங்களும்

ஸ்ரீராமகிருஷ்ணர்: வாழ்க்கையும் உபதேசங்களும்

சுவாமி விவேகானந்தர்.

மேலை நாட்டு சம்ஸ்கிருத அறிஞர்களுள் முதலிடம் பெற்றவர் மாக்ஸ்முல்லர். ரிக்வேத சம்ஹிதை இதுவரை முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் தாராள மனத்தாலும், பேராசிரியர் மாக்ஸ்முல்லரின் பல ஆண்டு கடின உழைப்பாலும் அந்த நூல் இப்போது மிக அழ காக அச்சிடப்பட்டு, பொதுமக்களுக்குக் கிடைக்கும் நிலையில் இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப் பட்ட கையெழுத்துப் பிரதிகளிலுள்ள எழுத்துக்களின் வடிவம் பலவிதமாக இருந்தன, பல சொற்கள் தவறாகவும் இருந்தன. அயல் நாட்டவர் ஒருவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருந் தாலும் சரி, இந்த எழுத்துக்களின் உருவங்களில் எவை சரி, எவை சரியல்ல என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இனி, செறிவும் சிக்கலும் மிகுந்த விளக்கவுரைகளின் பொருளை அறிவது அதைவிடக் கடினம். இதிலுள்ள சிரமங்களை நம்மால் எளிதில் உணர முடியாது.

ரிக் வேதத்தைப் பதிப்பித்தது மாக்ஸ்முல்லரின் வாழ்க்கை யில் ஒரு பெரிய நிகழ்ச்சி. இதுதவிர இவர் பண்டைய சம்ஸ்கிருத இலக்கியங்களிலேயே தமது வாழ்நாள் முழுவதையும் ஈடு படுத்தியும் செலவிட்டும் வந்திருக்கிறார். என்றாலும் முன் போலவே இன்றும் இந்தியா புராதன வேத பாராயணத்தின் எதிரொலியையே எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறது; யாகப் புகையால் நிரம்பிய வானத்தோடு காட்சியளிக்கிறது; வசிஷ்டர்கள், விசுவாமித்திரர்கள், ஜனகர்கள், யாஜ்ஞவல்கி யர்கள் என்பவர்களுடனும், கார்கி மைத்ரேயி போன்ற பெண் மணிகள் நிறைந்த வீடுகளுடனும், வேத விதிகளின்படியோ கிருஹ்ய சூத்திர விதிகளின்படியோ நடப்பவர்களுடனும் திகழ் கிறது என்று அவர் எண்ணிக் கொண்டிருப்பதாக நாம் நினைத்துவிடக் கூடாது.

பாதி உயிர் போய், பிற மதத்தைச் சார்ந்த அன்னிய ஆட்சி யின் காலடிகளால் மிதிக்கப்பட்டு, தன் பண்டைய சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் நீங்கலாக மற்ற எல்லா வற்றையும் இழந்து நிற்கின்ற தற்கால இந்தியாவின் எட்ட முடியாத மூலைமுடுக்குகளில்கூட என்ன புது நிகழ்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை மாக்ஸ்முல்லர் தமது கூரிய அறிவால் நன்றாக உணர்ந்துள்ளார். இந்திய மண்ணில் அவரது காலடிகள் படவில்லை , எனவே இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனை, ஒழுக்க விதிகள் பற்றி பேராசிரியரின் கருத்துக்களை இங்குள்ள ஆங்கிலோ இந்தியர் பலர் அறவே பழிக்கின்றனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த நாட்டிலே பிறந்து, இந்த நாட்டிலே வளர்ந்து, இங்கே தங்கியுள்ளனர் என்பது உண்மைதான். எனினும் சமுதாயத்தின் எந்தப் பிரிவினருடன் அவர்கள் நெருங்கிப் பழகுகிறார்களோ, அந்தப் பிரிவினரைப்பற்றிய ஒரு குறிப்பிட்ட செய்தியை மட்டும் தான் அவர்களால் அறிய முடியுமே தவிர, மற்ற பிரிவினர்களைப் பற்றி எதுவும் அறிய முடியாது. இந்தப் பெரிய, விரிந்த சமுதாயம் பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்திருப்பதால் இங்குள்ள ஒரு ஜாதியே மற்றொரு ஜாதியின் நடை உடை பாவனையையும் தனிப்பண்புகளையும் அறிவது கடினமாக இருக்கிறது. இந்த நிலையில் அந்த ஆங்கிலோ இந்தியர்கள் அதை அறிவது எவ்வளவு கடினம்? இதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பிரபல ஆங்கிலோ இந்திய அதிகாரி ஒருவர் எழுதிய ‘இந்தியக் குடியிருப்பு’ (Residence in India) என்ற ஆங்கில நூலில், ‘சுதேசியின் அந்தப்புர ரகசியங்கள்’ (Native Zenana Secrets) என்ற அத்தியாயத்தை நான் சில நாட்களுக்கு முன்பு படிக்க நேர்ந்தது. ரகசியங்களை அறிய வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனின் நெஞ்சிலும் இருக்கின்ற ஆவல் காரண மாக நானும் அந்தப் பகுதியைப் படித்தேன். அதில் இந்தப் பெரிய மனிதரான ஆங்கிலோ இந்திய ஆசிரியர் தம் வீட்டைப் பெருக்குகின்ற வேலைக்காரனுக்கும், அவனது மனைவிக்கும், அவளுடைய கள்ளக் காதலனுக்கும் இடையே நிகழ்ந்ததாகக் கூறப்படும் காதல் நிகழ்ச்சிகளை வர்ணிக்கிறார். இந்திய சுதேசி யின் வாழ்க்கை ரகசியத்தை அறிய வேண்டும் என்ற தனது நாட்டினரின் ஆர்வத்தைத் திருப்தி செய்யவே அவர் இதில் முழுமனத்துடன் ஈடுபட்டிருக்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. இந்தப் புத்தகத்திற்கு ஆங்கிலோ இந்திய வகுப்பினர் தந்த மனமார்ந்த வரவேற்பைப் பார்த்தால் அவரது நோக்கம் வெற்றி அடைந்தது என்றே தோன்றுகிறது, அவருக்கும் திருப்திதான். அன்பு நண்பர்களே, கடவுள் உங்களைக் காப்பாராக, என்பதைத் தவிர நான் வேறு என்ன சொல்ல முடியும்?

த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே |
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோSபி ஜாயதே ||

  • பொருட்களை நினைப்பதால் பற்று ஏற்படுகிறது. பற்றி னால் ஆசையும், ஆசையால் கோபமும் வளர்கிறது என்று பகவான் கீதையில் (2. 62) சொன்னது உண்மையே.
    அத்தகைய பொருத்தமற்ற விஷயங்கள் கிடக்கட்டும். நாம் நம் விஷயத்திற்கு வருவோம். இந்தியாவின் சமுதாயப் பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள், பல மாநிலங்களில் இப் போது நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் இவைபற்றி மாக்ஸ்முல்லர் பெற்றுள்ள அறிவு வியக்கத் தக்கது. அவரது அறிவின் முதிர்ச்சியை நேரடியாகவே நான் அனுபவித்து அறிந்துள்ளேன்.

முக்கியமாக இந்தியாவில் எங்கே எந்தப் புதிய மத அலைகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன என்பதை அவர் கூர்ந்து கவனித்து வருகிறார். இவற்றைப்பற்றி மேலை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக அவர் எடுத்துவருகின்ற முயற்சிகள் சொல்லி முடியாதவை. தேவேந்திரநாத தாகூரும் கேசவசந்திர சேனரும் நடத்திவருகின்ற பிரம்ம சமாஜம், சுவாமி தயானந்த சரஸ்வதியால் ஏற்படுத்தப்பட்ட ஆரிய சமாஜம், தியாசஃபிகல் சொசைட்டி-இவை எல்லாம் இவரது பேனா வின் புகழுக்கோ பழிப்புக்கோ ஆளாகியிருக்கின்றன. நன்றாக நிலைபெற்றுவிட்ட ‘பிரம்மவாதின்’ (Brahmavadin), ‘பிரபுத்த பாரதம்’ (Prabuddha Bharatha) என்னும் இரு பத்திரிகைகளில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அறிவுரைகள் மற்றும் உபதேசங்கள் பற்றி வெளியானவற்றையும், திரு பிரதாப் சந்திர மஜும்தார் அவரைப்பற்றி எழுதியிருந்ததையும்’ இவர் படித்தார். அவரது வாழ்வால் கவரப்பட்டார். இங்கிலாந்தில் புகழ்பெற்ற The Imperial and Asiatic Quarterly Review என்ற பத்திரிகையில் ‘இந்தியா ஹவுஸ்’ என்னும் அமைப்பின் பிரபல நூல்நிலைய அதிகாரியான ஸி.எச். டானி எம். ஏ. எழுதிய ஸ்ரீராமகிருஷ்ண ரது வாழ்க்கைச் சுருக்கம்’ சில காலத்திற்கு முன்பு வெளியாயிற்று.

சென்னையிலிருந்தும் கல்கத்தாவிலிருந்தும் ஏராளமான செய்திகளைச் சேகரித்துக்கொண்டு, The Ninteenth Century என்ற முதன்மையான ஆங்கில மாதப் பத்திரிகையில் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் சிறிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை மாக்ஸ்முல்லர் எழுதினார். இந்தியா தன் பண்டைய மகான்களின் எண்ணங் களைப் பல நூற்றாண்டுகளாகவும், மேலை நாட்டு அறிஞர் களின் கருத்துக்களை அண்மைக் காலங்களிலும் வெறுமனே எதிரொலித்துக் கொண்டிருக்கும்போது, இந்தப் புதிய மகான், புதிய ஆன்மீக சக்தி நிறைந்த, புதிய மொழியில் வழங்கிய கருத்துக்களின் புதுமையால் தாம் கவரப்பட்டதை இந்தக் கட்டுரையில் அவர் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் இந்தியாவின் மத இலக்கியங்களை நன்றாகப் படித் திருக்கிறார். அதனால் இந்தியாவின் பண்டைய மகான்கள் மற்றும் முனிவர்களின் வாழ்க்கையைப்பற்றி நன்றாக அறிந்திருக் கிறார். இக்கால இந்தியாவில், அத்தகைய வாழ்க்கைகளை மீண்டும் காண முடியுமா?- இந்தக் கேள்விக்கு முடியும் என்ற உடன்பாட்டு விடையாக ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை விளங்குகிறது. தம் ஆயுள் முழுவதையும் இந்தியாவிற்கே அர்ப்பணம் செய்துவிட்ட இந்தப் பேராசிரியரின் நெஞ்சில் இந்த விடை இந்தியாவின் பெருமையையும் முன்னேற்றத்தையும் பற்றிய நம்பிக்கையை நீர்விட்ட செடிபோல் புத்துயிர் பெறச் செய்திருக்கிறது.

இந்தியாவின் நன்மையை உண்மையாக விரும்புகின்ற சில நல்லவர்கள் மேலை நாடுகளில் உள்ளனர். மாக்ஸ்முல்லரைவிட அதனை அதிகமாக விரும்புகின்ற வேறு ஒருவரை ஐரோப்பா வில் காண முடியுமா என்பது தெரியவில்லை. அவர் இந்தியா வின் நன்மையை விரும்புவதுடன் இந்தியத் தத்துவத்திலும் மதத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். மத உலகக் கண்டு பிடிப்புகளுள் மகோன்னதமானது அத்வைதம் என்று பலரும் அறியப் பல முறை இவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆன்மாவும் உடலும் ஒன்று என்று கருதுகின்ற, கிறிஸ்தவர்களுக்கு அச்சம் ஊட்டுகின்ற மறுபிறவிக் கொள்கையில் இவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அதற்கு அவரது சொந்த அனுபவமே காரணம். வேறு என்ன சொல்ல, ஒருவேளை முற்பிறவியில் இவர் இந்தியாவில் பிறந்திருக்கலாம். இந்தியாவிற்கு வந்தால் தமது முற்பிறவி நினைவுகள் திடுமெனத் தோன்றி, தமது மூப் படைந்த உடலை வெடிக்கச் செய்துவிடும் என்ற பயமே அவர் இந்தியாவிற்கு வருவதைத் தடுத்து வைத்திருக்கிறது போலும்!

அது எப்படியிருந்தாலும் உலக மனிதன் என்ற முறையில் இவர் சூழ்நிலையை நன்கு கவனித்து அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளவேண்டும். உலகப்பற்றுகளை அறவே துறந்த துறவி களாக இருந்தாலும், தாங்கள் தூயவை என்று கருதுகின்ற சாதனைகளைச் செய்யும்போதுகூட, பொதுமக்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து நடுங்குகிறார்கள். பொது மக்கள் அதை விரும்பாததுதான் அதற்கு ஒரே காரணம். பெயரும் புகழும் உயர்ந்த பதவியும் பெறுவதற்காகவும், அவற்றை இழப்பதற்குப் பயந்தும் துறவி தமது செயல்களை அதற்குத் தக்கவாறு அமைத்துக் கொள்கிறார். இவையெல்லாம் வெறுப்பூட்டுவது, அருவருக்கத் தக்கது என்று ஒருவேளை வாயால் பேசினாலும் அவற்றை அவர்கள் விரும்புவது என்னவோ உண்மைதான். உண்மை இவ்வாறு இருக்கும் போது, உலகப் பற்றைத் துறக்காத, உலகமெங்கும் பாராட்டப் படுகின்ற, சமுதாயத்தின் வெறுப்பிற்கு ஆளாகக் கூடாது என்று விழிப்போடு இருக்கின்ற ஒருவர் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிடுவதில் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். யோகிகளின் மன ஆற்றல்கள் போன்ற நுட்பமான வற்றை அவர் அடியோடு நம்பாதவர் என்பது உண்மையல்ல.

‘தத்துவ ஞானிகள் நிறைந்த நாடு என்று தகுந்த காரணத் துடன் வழங்கப்படுகின்ற இந்தியாவின் தற்போதைய மத இயக்கங்கள் சிலவற்றைப்பற்றித் தாய்நாட்டில் தவறாகப் பலர் பிரச்சாரம் செய்வதாலும், தவறாகப் புரிந்து கொள்ளப்படு வதாலும் அவற்றைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல’ மாக்ஸ்முல்லர் விரும்பினார். அத்தகைய தவறான கருத்துக்களை அகற்றவும், ‘இந்தியாவில் இன்று வாழ்ந்து போதித்து வருகின்ற மகான்களைப் பற்றி தவறாகவும் மிகைப்படுத்தியும் இந்திய, அமெரிக்க ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு பரப்பப்படுகின்ற செய்திகளை’ மறுக்கவும் விரும்பினார் அவர். அதேவேளையில் ‘இந்திய தியாசஃபி, தாந்திரீக புத்த மதம் முதலிய புதிய நெறிகளில் உண்மையிலேயே உண்மை உள்ளது, நாம் அறிய வேண்டியவை உள்ளன என்பதைக் காட்டவும்’, வேறு சொற்களால் கூற வேண்டுமானால், இறகுபோல் காற்றில் பறப்பது, நீரில் நடப்பது, மீன்போல் நீருள் வாழ்வது, மந்திரங் கள்மூலம் நோய்களைக் குணப்படுத்துவது, தாழ்ந்த உலோகங் களை ரசவாத முறைகளால் பொன்னாகவோ வெள்ளியாகவோ வைரங்களாகவோ செய்வது, பிள்ளையில்லாத பணக்காரக் குடும்பங்களுக்குச் சித்திகளால் நல்ல பலம் பொருந்திய பிள்ளைகள் பிறக்கச் செய்வது போன்ற ‘மூடத்தனமான அற்புதங்களைச்’ செய்து பணம் சம்பாதிப்பதான லாபகரமான தொழிலை நடத்துவதற்கு வேண்டிய ஆற்றல்களைப் பெறுவதற் காக ‘பயம் தரத்தக்க பயிற்சிகள் சிலவற்றைச் செய்கின்ற புதிய வர்களால்’ மட்டுமின்றி, மனித இயல்பிற்கு அப்பாலுள்ள உயர்ந்த உண்மைகளைத் தங்கள் வாழ்நாளில் உண்மையாகவே உணர்ந்தவர்களும் உண்மையான பிரம்ம ஞானிகளும் உண்மை யான யோகிகளும் உண்மையான பக்தர்களும் இந்தியாவில் இல்லாமல் போய்விடவில்லை என்பதைக் காட்டுவதும் அவரது நோக்கமாக இருந்தது. இவற்றிற்கு மேலாக, மனித உருவில் திகழும் தெய்வங்களாக இருப்பவர்களைப் புறக்கணித்துவிட்டு, மேலோரும் கீழோரும் சேர்ந்து மேலே குறிப்பிட்ட கண்கட்டு வித்தைக்காரர்களின் பாதங்களை இரவும்பகலும் ஆர்வத்துடன் நக்கிநிற்கும் அளவிற்கு இந்தியாவிலுள்ள ஆரியர் அனைவரும் இன்னும் தாழ்ந்து போகவில்லை என்பதைக் காட்டுவதற் காகவும் கற்றறிவு மிக்க ஐரோப்பியப் பொதுமக்களுக்காக ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப்பற்றி ஒரு கட்டுரையை மாக்ஸ்முல்லர் எழுதினார். அதன் தலைப்பு ‘உண்மையான மகாத்மா ‘ (A Real Mahatman) என்பதாகும். அது The Ninteenth Century என்ற பத்திரிகையின் 1896 ஆகஸ்ட் இதழில் வெளியாயிற்று.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள கற்றறிவு மிக்க வர்கள் அந்தக் கட்டுரையை மிகுந்த ஆர்வத்துடன் படித்தார்கள்; ஸ்ரீராமகிருஷ்ண தேவரிடம் அதிக ஈடுபாடு கொண்டார்கள். இந்திய நாடு நிர்வாண மனிதர்கள், குழந்தைகளைக் கொல் பவர்கள், அறிவிலிகள், கோழைகள், விதவைகளைப் பலாத்கார மாகக் கொளுத்தும் மக்கள், எல்லா பாவங்களிலும் இருளிலும் மூழ்கிக் கிடப்பவர்கள் இவர்களால் நிறைந்தது என்பன போன்ற தவறான கருத்துக்கள் இந்தக் கட்டுரையால் மாறத் தொடங்கின. இந்தத் தவறான கருத்துக்களை வளர்த்தவர்கள் கிறிஸ்தவப் பாதிரிகள் மட்டுமல்ல; நமது நாட்டவருள் சிலரும் இதற்கு முக்கியக் காரணமாக இருந்தனர் என்பதை நான் வெட்கத்துடனும் மன வேதனையுடனும் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. இவர்களின் செயலின் காரணமாக மேலை நாட்டினரின் கண்களை மூடியிருந்த அறியாமைத் திரை இந்தக் கட்டுரையால் மெள்ளமெள்ள விலக ஆரம்பித்தது. ‘ஸ்ரீராமகிருஷ்ண தேவரைப் போன்ற உலக குருவைத் தோற்று வித்த நாடு, நாம் நம்பிவந்த இத்தகைய அருவருக்கத் தக்கவற் றால் நிறைந்திருக்க முடியுமா? அல்லது குழப்பவாதிகளின் கூட்டத்தால் நாம் நெடுங்காலமாக இந்தியாவைப்பற்றித் தவ றாகக் கருதுமாறு ஏமாற்றப்பட்டு விட்டோமா?’ என்ற கேள்வி மேலை நாட்டினரின் மனத்தில் இயல்பாகவே எழுகின்றது.

இந்தியாவின் மத, தத்துவ, இலக்கியத் துறையில் மேலை நாட்டில் முதலிடம் பெற்றவராகிய மாக்ஸ்முல்லர் ஐரோப்பிய, அமெரிக்கர்களின் நன்மைக்காகஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை யின் சாரத்தை பக்தி நிறைந்த இதய உணர்ச்சியுடன் வெளியிட்ட போது, மேலே குறிப்பிட்ட இரண்டு வகையான குழுவினரும் கொழுந்துவிட்டெரியும் கொடிய பகைமை உணர்ச்சியைக் காட்டினார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.

கிறிஸ்தவப் பாதிரிகள் இந்துத் தெய்வங்களையும் தேவி களையும் தவறாக எடுத்துக் காட்டி, அத்தகைய தெய்வங் களை வணங்கும் மக்களிடமிருந்து உண்மையான மகான்கள் தோன்ற முடியாது என்பதை நிரூபிக்கத் தங்கள் முழுமனத் துடனும் முழு ஆர்வத்துடனும் முயன்றார்கள். ஆனால் அந்த முயற்சி, பேரலையின்முன் வைக்கோல் துரும்புபோல் அடித்துச் செல்லப்பட்டது. விரைவாகப் பரவிக் கொண்டிருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆற்றல் என்னும் பெரு நெருப்பை அணைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த நம் நாட்டுக் குழு வினர் தங்கள் முயற்சிகள் எல்லாம் வீணாவதைக் கண்டபோது மனமுடைந்துவிட்டனர். இறைவனின் முன் மனித சங்கல்பம் என்ன செய்ய முடியும்?

முதியவரும் பக்தி நிறைந்தவருமான அந்தப் பேராசிரியரை இரு சாராரும் தங்கள் கண்டனக் கணைகள் மூலம் வன்மை யாகத் தாக்கினர். ஆனால் அவர் இதற்கெல்லாம் பயப்பட வில்லை. இத்தகைய எதிர்ப்புகளில் அவர் ஏற்கனவே பலமுறை வெற்றி கண்டவர். இப்போதும் முன்போலவே அவர் அந்த எதிர்ப்பை எளிதாக வென்றார். அவர்களின் வீண்கூச்சலை ஒழிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அவர் ‘ஸ்ரீராமகிருஷ்ணர்: வாழ்க்கையும் உபதேங்களும்’ என்ற இந்த நூலை வெளியிட்டார். பொதுமக்கள் அந்த மகானைப் பற்றியும் அவரது கருத்துக்களையும் நன்றாக அறிந்துகொள் வதற்காக, முடிந்த அளவு எல்லா செய்திகளையும் திரட்டி, அவரது வாழ்க்கையைப் பற்றியும் உபதேசங்களைப் பற்றியும் முழு விவரங்களை இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார் —

‘இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அந்த மகானுக்குத் தற்போது பெரும் புகழ் ஏற்பட்டிருக்கிறது. அவரது சீடர்கள் தற்போது அமெரிக்காவில் அவருடைய உபதேசங்களைப் போதிப்பதிலும், அந்தப் போதனைகளைக் கேட்டு அதை ஏற்றுக் கொள்பவர்களை-கிறிஸ்தவர்களைக்கூட-சேர்த்துக் கொள்வதிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இது ஆச்சரிய மாகத் தோன்றலாம், ஏன், அதை நம்பவே நமக்குச் சிரமமாக இருக்கலாம்….. என்றாலும் ஒவ்வொரு மனித இதயத்திற்கும் ஆன்மீக தாகம் உண்டு; ஆன்மீகப் பசி உண்டு; விரைவாகவோ தாமதமாகவோ அந்தப் பசியைத் தணித்துக்கொள்ள அது விரும்புகிறது. இந்தப் பசியுள்ளவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்கள் போதிக்கின்ற மதம் கட்டுப்பாடின்றி, அதிகாரமின்றி போய்ச் சேர்கிறது.’ ஆதலால் ‘இலவச அமுதமாக’ அதை அவர்கள் வரவேற்றார்கள்….. ‘ஆகவே ஸ்ரீராமகிருஷ்ணரின் மதத்தில் புதிதாகச் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகமாகக் கூறப்பட்டிருந்தாலும். … உலகிலேயே மிகப் பழைமையான மதம் என்றும், தத்துவம் என்றும் தன்னைச் சரி யாகவே அழைத்துக் கொள்வதும், வேதங்களின் முடிவாகவும் உயர்ந்த நோக்கமாகவும் இருக்கின்றதுமான வேதாந்தம் நமது காலத்தில் இத்தகைய வெற்றியை அடைந்துள்ளதென்றால், அதனை நாம் மதித்துப் போற்றக் கடமைப்பட்டுள்ளோம்.’

புத்தகத்தின் முதற்பகுதியில் மகாத்மா என்றால் யார், வாழ்க்கையின் நான்கு படிகள், தவம், பயிற்சிகள் அல்லது யோகம் என்ற இவற்றின் பொருள்களை விளக்குகிறார். பிறகு தயானந்த சரஸ்வதி, பவஹாரி பாபா, தேவேந்திரநாத தாகூர், ராதா சுவாமி பிரிவின் தலைவரான ராய் சாலிகிராம் சாஹிப் பகதூர் என்பவர்களைப் பற்றி லேசாகச் சொல்லி விட்டு, ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைக் கூறத் தொடங்கு கிறார் பேராசிரியர்.

நிகழ்ச்சிகளைக் கூறும்போது ஆசிரியர் சுய விருப்புடனோ, விருப்பமின்றியோ கூறினால் அந்தப் பகுதி அந்த விருப்பு வெறுப்பால் களங்கப்பட்டிருக்கும். இது வரலாற்று நூல்களில் தவிர்க்க முடியாத ஒன்று. தாம் எழுதுகின்ற இந்த வாழ்க்கை வரலாற்றில் இந்தக் குற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்த மாக்ஸ்முல்லர் விஷயங்களைச் சேகரிப்பதில் மிகுந்த விழிப்பாக இருந்தார்.

இதை எழுதிக் கொண்டிருக்கின்ற நான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஓர் அற்பப் பணியாள்.ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப் பற்றி நான் திரட்டிக் கொடுத்தவற்றை எல்லாம் அவர் தமது தர்க்க முறையாலும் நடுவுநிலைமையாலும் மிக நன்றாகச் சோதித்துப் பார்த்திருக்கிறார். ‘தங்கள் குருநாதரைப் பற்றி உள்ளதை உள்ளவாறே கூற எண்ணினாலும் சிலவற்றை மிகைப் படுத்தி அற்புதமாக்குவதைச் சீடர்களால் தவிர்க்க முடியாது’ என்பதை மறக்காமல் சொல்கிறார் மாக்ஸ்முல்லர். பிரம்மதர்மப் பிரச்சாரகராகிய பிரதாப் சந்திர மஜும்தாரைத் தலை வராகக் கொண்ட சிலர் ஸ்ரீராமகிருஷ்ணரின் பண்பில் பெருமைப்பட முடியாத ஒரு பகுதி உண்டு என்று மாக்ஸ்முல்ல ருக்கு எழுதியிருந்தனர். அதற்குப் பதில் கூறும்போது அவர் சில கசப்பான உண்மைகளை இனிய சொற்களால் கூறியிருக் கிறார். வங்காளிகளாகிய நம்மிடையே பிறர் நலம் காண விரும் பாத பொறாமைப்பேய் பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்தச் சொற்களை நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை இந்த நூலில் சுருக்க மாகவும் எளிய மொழியிலும் தரப்பட்டிருக்கிறது. காகிதத்தில் எழுதுவற்கு முன்பு, தான் எழுத வேண்டியதை நன்றாகச் சீர்தூக்கிப் பார்த்து எழுதியது தெரிகிறது. ‘உண்மையான மகாத்மா’ என்ற கட்டுரையில், இங்குமங்கும் தெறித்துக் கிளம்பிய ஆர்வச் சுடர்கள் இதில் மிகவும் கவனமாக தவிர்க்கப் பட்டிருக்கின்றன. ஒருபக்கம் கிறிஸ்தவப் பாதிரிகள், மறுபக்கம் கூச்சலிடும் பிரம்மசமாஜத்தினர் இந்த இருமுனைத் தாக்கு தல்களுக்கு நடுவில் பேராசிரியர் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் கட்டுரையின் காரணமாக மேற்கண்ட இரண்டு குழு வினரும் பேராசிரியரை வசைபாடித் தீர்த்தனர். இங்கிலாந்தின் பண்பட்ட எழுத்தாளர்கள் தங்களைக் குறை கூறுபவர்களைத் தாங்களும் திட்டிக் கொண்டிருப்பதில்லை. அவ்வாறே இந்தப் பேராசிரியரும் தம்மைக் கண்டித்தவர்களை இந்த நூலில் ஏசவோ தாக்கவோ இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லித் தான் ஆகவேண்டும். ஆன்ம பலம் பொருந்திய அந்த மகானின் அசாதாரணக் கருத்துக்கள் சிலவற்றின்மீது சாட்டப்பட்ட குற்றங்களை அவர் உறுதியும் நடுவுநிலைமையும் பெருமையும் நிறைந்த, மனக்கசப்பு சிறிதும் இல்லாத, இடிமுழக்கம் போன்ற தமது குரலினால் நீக்கிவிட்டார். அந்தக் கருத்துக்களோ சாதாரண அறிஞர்களால் எட்ட முடியாத உயர்ந்த மனத் திலிருந்து பொங்கி எழுந்தவை என்பது தெரிகிறது.

அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையில் நமக்கு வியப்பையே தருகின்றன. ஸ்ரீராமகிருஷ்ணரின் எளிய, இனிய உரையாடலில் அமானுஷ்ய தூய்மை நிறைந்திருந்தது என்று பிரம்ம சமாஜத் தலைவராக விளங்கிய, காலம் சென்ற ஆச்சாரியரான கேசவ சந்திர சேன் தமது வசீகரமிக்க மொழியில் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அருவருப்பான சில சொற்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் பேச்சில் இருப்பது உண்மைதான். ஆனால் அந்தச் சொற்கள் குழந்தை மனம் போன்ற களங்கமற்ற அசாதாரணத் தன்மையோடும், சிற்றின்ப நாட்டம் சிறிது கூட இல்லாமலும் பேசப்பட்டவை. ஆகவே அந்தச் சொற்கள் இகழ்ச்சியை விளைவிப்பதற்குப் பதிலாக அழகுக்கு அழகையே சேர்க்கின்றன. என்றாலும் ஸ்ரீராமகிருஷ்ணர் இந்தச் சொற் களைப் பேசியிருக்கிறார் என்பது அவர்களின் ஒரு பெரிய குற்றச்சாட்டு!

‘தமது துறவற விரதத்திற்காகச் சொந்த மனைவியை அவர் நடத்திய விதம் காட்டுமிராண்டித்தனம்’ என்பது மற்றொரு குற்றச்சாட்டு. அதற்கு மாக்ஸ்முல்லர், ஸ்ரீராமகிருஷ்ணர் தம் மனைவியின் சம்மதத்துடனேயே துறவு நெறியை மேற் கொண்டார் என்றும், வாழ்நாள் முழுவதிலும் அந்த மனைவி தம் கணவருக்கு ஏற்ற பண்புடன் நடந்து கொண்டதுடன், அவரைத் தமது குருவாக, ஆன்ம வழிகாட்டியாக மனம் உவந்து ஏற்றுக்கொண்டார் என்றும், அதன்பிறகு அவர் ஸ்ரீராமகிருஷ்ணருடைய கட்டளைகளின்படி ஒரு நித்திய பிரம்மச்சாரிணியாகவே இருந்து கடவுள் தொண்டில் ஈடு பட்டுத் தமது வாழ்நாளை அளவுகடந்த இன்பத்திலும் அமைதி யிலும் கழித்தார் என்றும் பதில் கூறியுள்ளார். மேலும், ‘குழந்தை களைப் பெறாவிட்டால் கணவன் மனைவியரிடையே அன்பில் லாமல் போய்விடுமா?’ என்று கேட்கிறார் இந்தப் பேராசிரியர். ஸ்ரீராமகிருஷ்ணர் எந்தவிதமான உடல்தொடர்பும் இல்லாமல், ஒரு பிரம்மச் சாரியாகிய கணவர் பளிங்கு போன்ற தூய வாழ்வை வாழ முடியும்; அவ்வாறு வாழ்ந்து பிரம்மச்சாரிணியாகிய தம் மனைவியை பிரம்மானந்தம் என்ற மிகமிக உயர்ந்த ஆன்மப் பேறாகிய முடிவிலாத பேரின்பப் பெருவாழ்விற்கு ஒத்துழைக் கின்ற வாழ்க்கைத் துணைவியாக ஆக்கிக்கொள்ள முடியும். ‘இத்தகைய விஷயங்களை நம் நாட்டில் நாம் நம்பாதிருப்பது நியாயமாக இருந்தாலும் இந்துக்களின் கபடமற்ற நேர்மையை ஒப்புக்கொள்ள நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மாக்ஸ்முல்லர் எழுதி இருக்கிறார். தகுதிமிக்க இத்தகைய கருத்துக்களுக்காக ஆண்டவனின் அருள் இந்தப் பேராசிரியர் மீது மழையாகப் பொழியட்டும்! ஆன்மீகப் பேற்றைப் பெறு வதற்கான ஒரே வழி பிரம்மச்சரியம் என்பதை அயல் இனத்தில் பிறந்து, அயல் நாட்டில் வாழ்ந்து வருகின்ற இவர் அறிந் துள்ளார். மேலும் இக்காலத்திலும் இந்தியாவில் அத்தகைய பிரம்மச்சரிய வாழ்வு இல்லாமலில்லை என்பதை இவர் நம்புகிறார். ஆனால் நம் நாட்டில் பிறந்த ஆஷாடபூதி களால் திருமணம் என்பதில் சிற்றின்ப வெறியைத் தவிர வேறு எதையும் பார்க்க இயலவில்லையே! ‘மனிதன் தன் மனத்தில் எப்படி நினைக்கிறானோ, அப்படியே புறத்திலும் காண்கிறான்.’

‘விலைமகளிரை அவர் வெறுத்து ஒதுக்கவில்லை’ என்பது மற்றுமொரு குற்றச்சாட்டு. இதற்குப் பேராசிரியர் தந்த மறுப்பு மிகமிக இனிமையாக உள்ளது: ‘இப்படி ஒதுக்காமல் இருந்தது ஸ்ரீராமகிருஷ்ணர் மட்டுமல்ல, ஆன்மீகத் தலைவர்களுள் பலரும் விலைமகளிரை வெறுக்கவில்லையே?’ ஆ! எவ்வளவு இனிய சொற்கள் இவை! புத்தரின் அருள்பெற்ற அம்பாபாலி என்ற விலைமகளையும், ஏசுவின் அருள்பெற்ற சமாரிடன் பெண்ணையும் இந்தச் சொற்கள் நினைவூட்டுகின்றன.

‘குடிகாரர்களை அவர் வெறுக்கவில்லை ‘ என்பது மற் றொரு குற்றச்சாட்டு. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்! ஒரு துளி மதுவை ஒருவன் குடித்துவிட்டான் என்றால் அவனது நிழலைக்கூட மிதிக்கக் கூடாது இதுதானே இவர்களுடைய குற்றச்சாட்டின் பொருள்? எத்தகைய பயங்கரக் குற்றச்சாட்டு! குடிகாரர்களையும், விலைமகளிரையும், திருடர்களையும், மற்ற பாவிகளையும் ஏன் அந்த மகாபுருஷர் அருவருப்புடன் உதைத்து விரட்டி ஓட்டவில்லை? கண்ணை மூடிக்கொண்டு, ஏற்ற இறக்கம் இல்லாமல் குழலூதுபவனைப்போல் ஏன் அவர் திரும்பித்திரும்பி ஒன்றையே பேசவில்லை? தம் சொந்தக் கருத்துக்களை மறைத்துக்கொண்டு சம்பிரதாய மொழியில் ஏன் பேசவில்லை? இவற்றிற்கெல்லாம் மேலாக, வாழ்நாள் முழுவதும் அவர் ஏன் சிற்றின்பத்தையே நாடவில்லை? இவை யெல்லாம்தான் குற்றச்சாட்டுகள்.

இப்படிக் குற்றம் சொல்பவர்கள் கூறுவது போன்ற ஆச்சரியகரமான தூய்மையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்க்கை யைத் திருத்தி அமைக்காவிட்டால் இந்தியா நிச்சயமாகக் கெட் டொழிந்தே போகுமாம்! அத்தகைய ஒழுக்க விதிகளின் உதவி யால்தான் முன்னேற வேண்டுமானால் இந்தியா அவ்வாறே முன்னேறட்டும்!

ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வைவிட அவரது உபதேசங் களின் தொகுப்பே நூலின் பெரும்பகுதியாக உள்ளது. இந்த உபதேசங்கள் உலகெங்கும் உள்ள ஆங்கிலம் பேசும் மக்களுள் பலரது கருத்தைக் கவர்ந்துள்ளது என்பதை நூல் விரைவாக விற்பனையானதிலிருந்தே ஊகித்து அறியலாம். அவரது திருவாயிலிருந்து வெளிவந்த வாக்குகள் பெரும் ஆன்மீக சக்தி நிறைந்தவை, அவை உலகத்தின் எந்தப் பகுதியிலும் தெய்வீகச் செல்வாக்கை ஏற்படுத்தியே தீரும். ‘பலரது நன்மைக்காக, பலரது இன்பத்திற்காக’ ஆன்மீகச் செல்வர்கள் பிறக்கிறார்கள். அவர்களின் வாழ்வும் செயல்களும் சாதாரண மனித எல்லை களைவிட உயர்ந்தவை; அவர்களின் போதனை முறையும் அதுபோலவே ஆச்சரியகரமானது.

நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஓர் ஏழைப் பிராமணரின் மகன் தம் பிறப்பால் நம்மைப் புனிதப் படுத்தி யிருக்கிறார்; தமது செயலால் நம்மை உயர்த்தியிருக்கிறார்; தமது அழியாத வார்த்தைகளால் நம்மை ஆளும் இனத்தவரின் அனுதாபம் நமக்கு ஏற்படுமாறு செய்திருக்கிறார். அத்தகைய வருக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? உண்மை எப்போதும் இனிமையாக இருப்பதில்லை. என்றாலும் அதைச் சொல்லியே தீரவேண்டிய வேளைகளும் உண்டு. ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையும் உபதேசங்களும் நமது நன்மைக்கே என்பதை நம்முள் சிலர் அறியவே செய்கிறோம், அத்துடன் விஷயம் முடிந்துவிடுகிறது. அதை வாழ்வில் கடைப் பிடிக்க முயல்வதுகூட நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. அவர் எழுப்பிய ஞானபக்தி சமரசப்பேரலைகளில் நமது உடம்பையும் மனத்தையும் ஆழ்த்த முயல்வது அதை விடக் கடினமாக இருக்கிறது.

இறைவனின் இந்த லீலையைப் புரிந்துகொண்டவர் களுக்கும் புரிந்துகொள்ள முயற்சிப்பவர்களுக்கும் நாங்கள் ஒன்று சொல்கிறோம்: ‘வெறுமனே அறிவதால் என்ன பயன்? அதைச் செயல்முறையில் காட்டுவதே நீங்கள் புரிந்து கொண்டதற்கான நிரூபணம். வெறுமனே சொல்வதாலோ நீங்கள் நம்புவதாலோ பிறர் நம்புவார்களா? செயல்முறை யால்தான் எதையும் நிலைநாட்ட முடியும். ஆகவே நீங்கள் உணர்வதைச் செயலில் காட்டுங்கள்; அதை உலகம் பார்க் கட்டும்.’ நெஞ்சு நிறைந்து பொங்கி வழிகின்ற எண்ணங்களும் உணர்ச்சிகளும் அவற்றின் விளைவுகளான செயல்முறை களாலேயே அறியப்படுகின்றன.

நன்றாகப் படித்தவர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டு, எழுத்தறிவு இல்லாத இந்த ஏழை அர்ச்சகரை அலட்சியமாக எண்ணுபவர்களிடம் நாங்கள் வேண்டுவது இதுவே: ‘எந்த நாட்டைச் சார்ந்த எழுத்தறிவில்லாத இந்தக் கோயில் அர்ச்சகர் தம் சொந்த ஆற்றலால், மிகக் குறைந்த காலத்தில், உங்கள் மூதாதையர்களின் பழம்பெரும் சனாதன தர்மத்தின் வெற்றியைக் கடல்கடந்த நாடுகளிலும் எதிரொலித்து நிற்கச் செய்திருக்கிறாரோ, அந்த நாட்டுப் பெருவீரர்கள் நீங்கள்; எல்லோரைவிட அதிகமாகப் பாராட்டப்படுபவர்கள் நீங்கள்; பலசாலிகள், நன்றாக வளர்க்கப்பட்டவர்கள், மிகவும் படித்தவர்கள் நீங்கள். இப்படிப்பட்ட நீங்கள் அசாதாரணமான, வீரச் செயல்களை உங்கள் சொந்த நாட்டில் செய்ய வேண்டாமா? அவ்வாறு செய்ய விரும்பினால் எழுந்திருங்கள். முன்னே வாருங்கள். ஆற்றல்மிக்க உங்கள் அகச் சக்தியை வெளிப்படுத்துங்கள்; உங்களை பயபக்தியுடன் வணங்க நாங்கள் தயாராக நிற்கிறோம். நாங்களோ அறியாதவர்கள், ஏழைகள், யாருக்கும் தெரியாதவர்கள், அற்பப் பிச்சைக்காரர்களின் உடை யைத் தவிர வேறு எதுவும் இல்லாதவர்கள். ஆனால் நீங்களோ செல்வத்திலும் செல்வாக்கிலும் மிக்கவர்கள், மிகுந்த அதிகாரம் உடையவர்கள், பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர்கள், எல்லா கல்வியும் அறிவும் நிறைந்தவர்கள்; உங்கள் சோம்பலை ஏன் உதறித் தள்ளக் கூடாது? ஏன் வழிகாட்டிச் செல்லக் கூடாது? வழியைக் காட்டுங்கள்; உலக நன்மையின் பொருட்டு முற்றும் துறந்தவர்களாக, சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குங்கள்; கொத்தடிமைகள்போல் நாங்கள் கட்டாயம் உங்களைப் பின்தொடர்வோம்.’

மாறாக, ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவரது பெயருக்கும் கிடைத்த வெற்றியையும் புகழையும் கண்டு, பொறாமை காரண மாக, அடிமை இனத்திற்கே இயல்பான, காரணம் சிறிதுமற்ற கொடிய பகைமையை அநியாயமாகக் காட்டுபவர்களிடம் நாங்கள் ஒன்று கூறிக்கொள்கிறோம். ‘அன்பு நண்பர்களே, உங்கள் முயற்சிகள் வீண். இந்த முடிவில்லாத, எல்லையற்ற, ஆன்மீக அலைகள் உலகமெங்கும் பரவியுள்ளன என்றால் அந்த அலையின் உச்சியில், தெய்வீகத் தோற்றத்தின் கவர்ச்சி மிகுந்த ஒளியில் இந்தத் தெய்வீக புருஷர் வீற்றிருக்கிறார். பெயர், புகழ், செல்வம் இவை வேண்டும் என்ற எங்கள் முயற்சி களால் இந்தப் பயன் விளைந்திருக்கிறது என்றால், உங்கள் முயற்சிகளோ பிறருடைய முயற்சிகளோ இல்லாமலேயே, மாற்ற முடியாத உலக நியதியின்படி திரும்பவும் தலைதூக்காத வாறு காலம் என்பதன் முடிவில்லாத கருப்பையினுள் சென்று விரைவில் இந்த அலை அழிந்துபோகுமே! எங்கும் நிறைந்துள்ள தேவியினுடைய திருவுளத்தின்படியும், அவளது தெய்வீக உந்துதலின் படியும், இந்த அலை ஒரு பெரிய மகானின் தன்னலமற்ற அன்பு என்ற வெள்ளத்தால் உலகத்தையே மீண்டும் மூழ்கடிக்கத் தொடங்கிவிட்டது. பலவீனனே, அந்தப் பேராற்றல் படைத்த தேவியின் சங்கல்பம் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்க உன்னிடம் என்ன வலிமை இருக்கிறது?’

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  III. ஸ்ரீராமகிருஷ்ணர் –  2. ஸ்ரீராமகிருஷ்ணர்:  வாழ்க்கையும் உபதேசங்களும்