ஸ்ரீராமகிருஷ்ணரும் அவரது கருத்துக்களும்

ஸ்ரீராமகிருஷ்ணரும் அவரது கருத்துக்களும்

சுவாமி விவேகானந்தர்

வற்புறுத்தி ஏதாவது ஒன்றையாவது பிரம்மமாகக் கருதுங்கள். ஸ்ரீராமகிருஷ்ணரைக் கடவுளாகக் கருதுவது எளிது. ஆனால் அதில் என்ன ஆபத்து என்றால் பிறரிடம் தெய்வீகத்தை நம் மால் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. இறைவன் என்றும் உள்ளவர், உருவமற்றவர், எங்கும் நிறைந்தவர், உருவம் உடைய வராக அவரைக் கருதுவது தெய்வ நிந்தனை. ஆனால் உருவ வழிபாட்டின் ரகசியம் என்னவென்றால், ஒரு பொருளில் உங்கள் தெய்வீகப் பார்வையை வளர்க்க முயற்சிப்பதுதான்.

அவதாரம் என்றால் பொதுவாக நாம் என்ன பொருள் கொள்கிறோமோ, அந்தப் பொருளிலேயே ஸ்ரீராமகிருஷ்ணர் தம்மை ஓர் அவதார புருஷராகக் கருதினார். ஆனால் எனக்கு அது புரியவில்லை . வேதாந்தக் கருத்துப்படி அவர் பிரம்மம் என்று நான் சொல்வது வழக்கம். அவர் மறைவதற்கு முன்பு மூச்சுவிடக்கூட அவதிப்படுகின்ற நிலையில் படுத்திருந்தபோது, ‘இந்த வேதனையில்கூட இவர் தம்மை அவதார புருஷரென்று சொல்வாரா?’ என்று நான் நினைத்தேன். உடனே அவர் சொன்னார்: ‘ராமனாகவும் கிருஷ்ணனாகவும் இருந்தவரே இப்போது ராமகிருஷ்ணராக ஆகியுள்ளார்-ஆனால் உன் வேதாந்தக் கருத்தில் அல்ல’ என்றார் அவர். அவர் என்மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தார். இதனால் பலருக்கு என்மீது பொறாமை. ஒருவரைக் கண்டவுடனே அவருடைய குணத்தை அறிந்துகொள்வார், அதன்பிறகு தமது கருத்தை ஒருபோதும் மாற்ற மாட்டார். ஒருவருடைய குணங்களை நாம் ஆராய்ந்து அறிகிறோம், அவரோ புலனறிவுக்கு அப்பால் ஊடுருவி அறிய வல்லவர். எனவே நமது முடிவுகள் தவற நேரலாம்.

சிலரை அவர் தமது அந்தரங்க பக்தர்கள் அல்லது ‘அக வட்டத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று அழைத்தார். அவர்களுக்குத் தமது இயல்பு மற்றும் யோக ரகசியங்களை உபதேசிப்பார். பஹிரங்க பக்தர்கள் அல்லது ‘வட்டத்திற்கு வெளியில்’ உள்ள வர்களுக்கு உபகதைகள் மூலம் உபதேசிப்பார். அந்த போதனைகள் தற்போது ‘உபதேச மொழிகள்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது. தமது பணிக்காக அவர் இந்த முதல்வகை பக்தர்களான இளைஞர்களை ஆயத்தப்படுத்தினார். இவர் களைப்பற்றி பலர் அவரிடம் புகார் கூறியபோதிலும் அவர் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. செயல்களை வைத்துப் பார்த்தால் ஒருவேளை அந்தரங்க பக்தர்களைவிட பஹிரங்க பக்தர்களைப்பற்றி நான் உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருக்க லாம். ஆனால் என்னவோ அந்த அந்தரங்க பக்தர்களிடம் எனக்கு ஒரு குருட்டு ஈடுபாடு. ‘என்னை நேசிப்பவன் எனது நாயையும் நேசிப்பவனே’ என்பார்கள். அந்தப் பிராமண அர்ச்சகரை நான் மிகவும் நேசித்தேன், அதனால் அவருக்கு அன்பான எல்லாம் எனக்கும் அன்பானவையே. அவர் போற்றிய வற்றை நானும் போற்றுகிறேன். என் இஷ்டப்படி விட்டுவிட்டால் நான் எங்கே ஒரு தனிப் பிரிவை உருவாக்கி விடுவேனோ என்று அவர் பயந்தார்.

‘இந்த வாழ்விலே உனக்கு ஆன்மீக அனுபூதி சித்திக்காது’ என்று அவர் சிலருக்குச் சொல்வார். அவர் ஒருவரைப் பற்றிய அனைத்தையும் அறிந்திருந்தார்; அவர் பக்தர்களிடையே விருப்பு, வெறுப்பு காட்டியதுபோல் தோன்றியதற்குக் காரணம் இதுவே. ஒரு விஞ்ஞானியைப்போல், அவர் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விதமான வழி தேவை என்பதை அறிந்திருந் தார். அந்தரங்க பக்தர்களைத் தவிர வேறு யாரும் அவருடைய அறையில் உறங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவரைக் காணாதவர்கள் முக்தி பெற மாட்டார்கள் என்பதோ, மூன்று முறை கண்டவர்கள் முக்தி பெறுவார்கள் என்பதோ உண்மையல்ல.

உயர்ந்த சாதனைகளுக்குத் தகுதியில்லாத பக்தர்களுக்கு அவர் நாரதர் போதித்த பக்திநெறியை உபதேசித்தார். பெரும் பாலும் துவைதத்தையே அவர் உபதேசித்தார். பொதுவாக அவர் யாருக்கும் அத்வைதம் போதிப்பதில்லை, ஆனால் எனக்கு உபதேசித்தார். முன்பு நான் துவைதியாக இருந்தேன்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  III. ஸ்ரீராமகிருஷ்ணர் –   4. ஸ்ரீராமகிருஷ்ணரும் அவரது கருத்துக்களும்