செயல்முறை வேதாந்தம் 4

செயல்முறை வேதாந்தம்

செயல்முறை வேதாந்தம் என்ற சொல்லைப் பிரபல மாக்கியவர் சுவாமி விவேகானந்தர். காட்டிலும் குகைகளிலும் வாழும் முனிவர்கள் மட்டுமல்ல, நாட்டிலும் நகரங் களிலும் அதன் பரபரப்பிலும் வாழ்கின்ற ஒவ்வொருவரும் வேதாந்தத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதை ஆணித்தரமாக எடுத்துக் காட்டினார் அவர். வேதாந்தத் தத்துவத்தின் உயிரூட்டும் தத்துவங்களையும், அவற்றை எவ்வாறு செயல் முறைப் படுத்துவது என்பது பற்றியும் அவர் பேசிய நான்கு சொற்பொழிவுகளே ‘செயல்முறை வேதாந்தம்’. லண்டனில் 1896 நவம்பர் 10, 12, 17, 18-ஆம் தேதிகளில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இவை.


இதுவரை நாம் பொதுவானதைப் பற்றியே அதிகமாகப் பார்த்தோம். இன்று தனிப்பட்டதற்கும் பொதுவானதற்கும் உள்ள தொடர்பு பற்றிய வேதாந்தத்தின் கருத்தைக் கூறப் போகிறேன். தெளிவாக விளக்கப்பட்ட, குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்ட ஆன்மா ஒவ்வோர் உயிருக்கும் இருப்பதாகப் பழைய துவைத வேதக் கோட்பாடுகளில் கூறப்படுவதுபற்றி நாம் கண்டோம். ஒவ்வொருவரின் இந்தத் தனி ஆன்மாவைப்பற்றி எத்தனையோ கொள்கைகள் எழுந்துள்ளன! ஆனால் மிக முக்கியமான விவாதங்கள் வேதாந்திகளுக்கும் பௌத்தர் களுக்கும் இடையில் ஏற்பட்டன. வேதாந்திகள், தனி மனித ஆன்மா தன்னளவிலேயே பூரணமானது என்று நம்பினார்கள். பௌத்தர்கள், அப்படியொரு தனி ஆன்மாவே இல்லை என்று முற்றிலுமாக மறுத்துவிடுபவர்கள். இது கிட்டத்தட்ட இங்கே, ஐரோப்பாவில், பொருளும் அதன் குணமும்பற்றி ஏற்பட்ட விவாதம் போன்றதே என்பதை முன்பே கூறி இருக் கிறேன். ஒரு பிரிவினர் குணங்களுக்குப் பின்னால் பொருள் ஒன்று இருக்கிறது என்றும் குணங்கள் அதையே சார்ந்திருக்கும் என்றும் கூறுகிறார்கள். மற்றொரு பிரிவினரோ, பொருள் என்ற ஒன்றே தேவையில்லை, குணங்கள் தாமாகவே இருக்க முடியும் என்கின்றனர். ஆன்மாவைப் பற்றிய மிகப் பழமையான கருத்து தற்போதத்தை (self-identity) ‘நான் நானே’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது நேற்றைய நானும் இன்றைய நானும் ஒன்றே; இன்றைய நான்தான் நாளைய நானாகவும் இருப்பேன். உடம்பில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டாலும், நான் அதே நான்தான் என்று நம்புகிறேன். இது எல்லைக்கு உட்பட்ட ஆனால் பரிபூரணமான தனிப்பட்ட ஆன்மாவை நம்புகின்ற பிரிவினரின் முக்கிய வாதம் என்று தோன்றுகிறது. 

புராதன பௌத்தர்கள் இத்தகைய கொள்கைகள் தேவையே இல்லை என்றார்கள். நாம் அறிந்தது, அறிய முடிவது  அனைத்தும் இந்த மாற்றங்களை மட்டுமே என்று அவர்கள் வாதிட்டார்கள். மாற்றமில்லாத, மாற முடியாத, ஒரு பொருள் இருப்பதாகக் கொள்வது தேவையற்றது. அப்படி ஒரு மாறாத பொருள் இருந்தாலும், அதை நாம் ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது. அதை அறிவது என்னும் சொல்லிற்குப் பொருளே இல்லை.   

இதே ஆராய்ச்சி இன்று ஐரோப்பாவில் ஒரு பக்கம் மத வாதிகள் மற்றும் லட்சியவாதிகளுக்கும், மறுபக்கம் நவீன உடன்பாட்டினர் (Modern Positivist) மற்றும் ஆஜ்ஞேயவாதி களுக்கும் இடையே நடந்துவருவது உங்களுக்குத் தெரியும். மாறாத ஒன்று உண்டென்றும் அதை நாம் காணலாமென்றும் ஒரு பிரிவினர் கூறுகின்றனர். இவர்களுடைய பிரதிநிதியே உங்கள் ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer). காம்டே (Comte) என்பவரைத் தலைவராகக் கொண்டவர்களும் இன்றைய ஆஜ்ஞேயவாதிகளுமே மற்ற பிரிவினர். சில ஆண்டு களுக்கு முன் ஹெர்பர்ட் ஸ்பென்சருக்கும் பிரெடரிக் ஹாரி சனுக்கும் (Frederick Harrison) இடையில் நடந்த வாதங்களை உங்களுள் சிலர் கவனித்திருக்கலாம். மாறுபாடுகளுக்குப் பின்னால் ஒரே பொருள் உள்ளது என்று ஒரு பிரிவினரும், அப்படி ஒரு பொருள் தேவையில்லை என்று மற்ற பிரிவினரும் நிகழ்த்திய விவாதம் அதே பழைய பிரச்சினைதான் என்பதை அறிந்திருப்பீர்கள். மாறாத ஒன்றின் துணையாலேயே மாறு பாடுகளை நாம் அறிய முடியுமென ஒரு பிரிவினர் கூறுகின்றனர். அது தேவையே இல்லையென மறுபிரிவினர் வாதிடுகின்றனர். மாறும் ஒன்றைப் பற்றியே நாம் சிந்திக்க முடியும், மாறாததைப் பற்றி நாம் அறியவோ உணரவோ அனுபவிக்கவோ முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.  

இந்தியாவில் மிகப் பழைய காலத்திலும் இந்தப் பெரும் பிரச்சினைக்கு முடிவு காணப்படவில்லை. குணங்களுக்குப் பின்னால் குணங்கள் அல்லாத ஒரு பொருள் உண்டு என்பதற்குச் சான்றுகள் இல்லை என்பதைக் கண்டோம். அது மட்டுமின்றி, தற்போதமும் அதை நிரூபிக்க முடியாது. இனி, நினைவின் தொடர்ச்சி இருக்கிறது என்பதாலும் அதை நிரூபிக்க முடி யாது; அதாவது, இன்று இருக்கின்ற நான் நேற்று இருந்த அதே நான்தான், ஏனெனில் அதை நினைவு கூர்கிறேன், எனவே என்னுள் தொடர்ச்சியான பொருள் இருக்கிறது என்ற வாதமும் கூட அதை நிரூபிக்க முடியாது. 

இன்னொரு வாதம் இருக்கிறது; அது வெறும் சொல் அலங்காரமும் வார்த்தை ஜாலமுமே: ஒருவன், ‘நான் செய் கிறேன்’, ‘நான் போகிறேன்’, ‘நான் கனவு காண்கிறேன்’, ‘நான் தூங்குகிறேன்’, ‘நான் அசைகிறேன்’ முதலிய வாக்கியங்களை அமைப்பதாகக் கொள்வோம். இதில் செய்தல், போதல், கனவு காணல் முதலியவை மாறுகின்றன. ‘நான்’ என்பது மாறாதிருக் கின்றது. எனவே இந்த ‘நான்’ என்பது மாறாத ஒன்று, தனிப் பொருள் என்றும் இந்த மாறுபாடுகள் அனைத்தும் உடலைச் சார்ந்தவை என்றும் இவர்கள் கூறுகிறார்கள். இது மிகத் தெளிவானதாக, நம்பத் தகுந்ததாகத் தோன்றினாலும், சொல் வண்ணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ‘நான்’ என்பதையும் செய்தல், போதல், கனவு காணல் முதலிய வற்றையும் காகிதத்தில் எளிதாகப் பிரித்துவிடலாம்; மனத்தில் பிரிப்பது எளிதல்ல.  

நான் சாப்பிடும்போது, சாப்பிடுபவனாக என்னைக் காணும்போது சாப்பிடுவதுடன் ஒன்றிவிடுகிறேன். நான் ஓடும் போது, ஓட்டமும் நானும் வேறல்ல. ஆகவே தற்போத வாதமும் அதிக வலிமை உள்ளதாக இல்லை. நினைவு வாதமும் வலு வற்றதே. நான் ஒருவனாக இருக்கிறேன் என்பதற்கு நினைவே அடிப்படையானால், நான் மறந்துபோன பல காரியங்கள் என்னில் ஒரு பகுதியல்ல என்றாகிவிடும். குறிப்பிட்ட சூழ்நிலை களில் சிலர் தங்கள் கடந்தகாலம் முழுவதையும் மறந்துவிடு வதைக் காண்கிறோம். பல பைத்தியக்காரர்கள் தங்களைக் கண்ணாடி மனிதர்களாகவோ விலங்காகவோ எண்ணு கிறார்கள். அந்த மனிதர்களின் இருப்பு, நினைவைப் பொறுத்துத் தான் இருக்கிறது என்றால், அவன் கண்ணாடியாகிவிட்டான் என்றல்லவா கூற வேண்டும். இது உண்மையல்ல. எனவே தற்போதம் என்பது நினைவு என்னும் வலிமையற்ற ஒன்றைச் சார்ந்தது என்று கொள்ள முடியாது. எனவே எல்லைக்கு உட்பட்ட ஆனால் நிறைவும் தொடர்ச்சியும் உள்ள ஆன்மா என்பதைக் குணங்களிலிருந்து வேறுபட்டதாக நிரூபிக்க முடியாது. குறுகியதான, குணங்களுடன் கூடிய, எல்லைக்கு உட்பட்ட ஒன்றை நாம் நிரூபிக்க முடியாது. 

மற்றொருபுறம் பழமையான பௌத்தர்களின் வாதங்கள் மிகவும் வலிமையுடையனவாகத் தோன்றுகின்றன-குணங் களைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியாது; தெரிந்து கொள்ளவும் முடியாது. புலனறிவுகள் மற்றும் உணர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்ற குணங்களின் தொகுதியே ஆன்மா என்பதே அவர்களின் கருத்து. இத்தகைய ஒரு தொகுதியே ஆன்மா. இந்த ஆன்மா தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. 

ஆன்மா பற்றிய அத்வைதக் கொள்கை இந்த இரண்டு கருத்துக்களையும் இணைக்கிறது. பொருளை அதன் குணத் திலிருந்து தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது; மாறுபாடு, மாறுபாடின்மை இரண்டையும் ஒரே வேளையில் இணைக்க முடியாது; ஆனால், பொருள் என்று அழைக்கப்படுகின்ற அதுவேதான் குணம், பொருளும் அதன் குணமும் இரண் டல்ல- இதுதான் அத்வைதியின் கருத்து. மாறுபடாததே மாறுபடுவதாகவும் தோன்றுகிறது. அடிப்படைப் பொருளான அந்த மாறாத பொருள் பிரபஞ்சத்திலிருந்து வேறுபட்டது அல்ல. தோன்றும் உண்மையிலிருந்து மாறுபட்டதல்ல அறுதி உண்மை. அறுதி உண்மையே தோன்றும் உண்மையாக ஆகி யுள்ளது. ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது, அது மாறாதது. உணர்ச்சிகள், அனுபவங்கள் என்றெல்லாம் நாம் கூறுபவை மட்டுமல்லாமல் உடலும்கூட வேறு நோக்கிலிருந்து பார்க்கப் படும் அதே ஆன்மாவே. நமக்கு உடல்களும் ஆன்மாக்களும் இருப்பதாக நாம் எண்ணிப் பழகிவிட்டோம். ஆனால் உண்மையில் இருப்பது ஒன்றே. 

நான் என்னை உடம்பு என்று நினைக்கும்போது, நான் உடம்பு மட்டுமே. நான் வேறு ஏதோ ஒன்று என்று கூறுவது பொருளற்றது. என்னை நான் ஆன்மா என்று நினைக்கும்போது உடம்பு மறைந்து விடுகிறது, உடல் உணர்ச்சியே மறைந்துவிடு கிறது. உடல் உணர்ச்சிமறையாமல் ஆன்மாவை ஒருவராலும் உணர முடியாது. குணங்களின் அனுபவம் மறையாமல் பொருளின் அனுபவமும் யாருக்கும் கிடைக்காது.  

அத்வைதத் தத்துவத்தின் பழைய கயிறு-பாம்பு உருவகம் இந்தக் கருத்தை இன்னும் நன்றாக விளக்கும். ஒருவன் கயிற்றைப் பாம்பாகக் காணும்போது கயிறு மறைந்துவிடுகிறது; கயிறு என்று எண்ணும்போது பாம்பு மறைந்துவிடுகிறது, கயிறு மட்டுமே இருக்கிறது. இரண்டோ மூன்றோ இருக்கிறது என்ற கருத்து, நமது அறிவுக் குறைவினாலேயே ஏற்படுகிறது. நாம் அவற்றைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், புத்தகங்களில் படித்திருப்போம், அதனால் உண்மையிலேயே உடல், ஆன்மா என்று இரண்டு இருப்பதாக எண்ணவும் தலைப்படுகிறோம். உண்மையில் இத்தகைய இரண்டு சேர்ந்த அனுபவம் இல்லை; உடலை உணர்கிறோம் அல்லது ஆன்மாவை உணர்கிறோம். இதை நிரூபிக்க வாதங்கள் எதுவும் தேவையில்லை. உங்கள் மனத்திலேயே உணர்ந்துகொள்ளலாம். 

நீங்கள் உங்களை ஆன்மாவாக, உடலிலிருந்து பிரிந்த ஒன்றாக நினையுங்கள். அப்படி நினைக்கவே முடியாதோ என்றுதான் ஆரம்பத்தில் தோன்றும். ஏதோ ஒருசிலரால் முடியலாம். அவர்கள் தங்களை ஆன்மாவாக உணரும்போது அவர்களுக்கு உடல் நினைவே இருக்காது. ஆழ்ந்த தியானத் தாலோ, சுய மனவசியத்தாலோ, நரம்புத் தளர்ச்சியாலோ, அல்லது மருந்துகள் மூலமாகவோ சிலநேரங்களில் சிலர் வினோதமான மனநிலைகளில் இருப்பதை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். ஒருவேளை பார்த்தும் இருக்கலாம். அவர் களின் அனுபவங்களிலிருந்து ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். அவர்கள் அகமுகமாக ஒன்றைக் காணும்போது வெளியே எல்லாம் மறைந்துவிடுகிறது. ஒன்றே உள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. அந்த ஒன்றே பல உருவங்களில் காணப்படுகிறது. இந்தப் பல்வேறு உருவங்கள்தான் காரண காரியத் தொடர்பை ஏற்படுத்துகின்றன. காரணகாரியத் தொடர்பு என்பது பரிணாமமே. ஒன்று மற்றொன்றாக மாறு வதே. சிலவேளைகளில் காரணம் மறைவது போலாகி அதன் இடத்தில் காரியம் எஞ்சி நிற்கிறது. இந்த உடலுக்குக் காரணம் ஆன்மா என்பதாக வைத்துக்கொண்டால், அந்த நேரத்திற்கு ஆன்மா மறைந்து உடல் நிலைக்கிறது; உடல்மறையும்போது ஆன்மா எஞ்சுகிறது. உடலும் ஆன்மாவும் இரண்டு என்பதை மறுக்கின்ற பௌத்தர்களின் வாதத்திற்குப் பதில் இதுவே. இங்கே இருமை மறுக்கப்பட்டு பொருள் மற்றும் குணங்கள் என்பவை பல உருவங்களில் தோன்றும் ஒன்றே என்பது காட்டப்படுகிறது. 

இந்த மாறாத தன்மை என்பது முழுமைக்குத்தான் பொருந்துமே தவிர, தனிப்பகுதிக்குப் பொருந்தாது என்ப தையும் நாம் கண்டோம். மாற்றம், இயக்கம் இவற்றிலிருந்தே பகுதி என்ற கருத்து தோன்றுகிறது. எல்லைக்கு உட்பட்ட அனைத்தையும் நாம் அறியலாம், உணரலாம். ஏனெனில் அவை மாறுபவை. ஆனால் முழுமை என்பது மாறாததாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அதைத் தவிர வேறொன்றும் இல்லை. எனவே வேறொன்றுடன் தொடர்பு ஏற்பட்டு மாறுபாடு அடைய வாய்ப்பும் இல்லை. மாற்றம் என்பது எப் போதுமே மாறாத ஒன்றை அல்லது குறைவாக மாறும் ஒன்றைப் பொறுத்தே நிகழ்கிறது. 

எனவே அத்வைதக் கருத்துப்படி, ஆன்மா பிரபஞ்சம் தழுவியது, மாற்றமில்லாதது, அழிவற்றது என்பதை முடிந்த வரையில் நிரூபிக்கலாம். தனிப்பட்ட பொருள் பற்றித்தான் சிரமம் ஏற்படும். எல்லைக்கு உட்பட்ட, சிறிய, தனி ஆன் மாக்களைப்பற்றி நாம் கொண்டிருக்கும் துவைதக் கருத்துக் களை என்ன செய்வது? அவை இவ்வளவு தூரம் நம்மைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றையும் நாம் கடந்தாக வேண்டும்! 

முழுமை என்ற நிலையில் நாம் அழிவற்றவர்கள் என்பதைப் பார்த்தோம். ஆனால் முழுமையின் பகுதிகளாக, அம்சங்களாக இருந்துகொண்டே அழிவற்ற நிலையை அடையவும் விரும்பு கிறோம். இங்குதான் பிரச்சினை எழுகிறது. நாம் எல்லையற்ற வர்கள், அதுவே நமது உண்மையான தனித்துவம் என்பதைக் கண்டோம். ஆனால் இந்தச் சிறிய ஆன்மாக்கள் தனியாக இருக்க வேண்டுமென்றும் படாதபாடு படுகிறோம். இந்தச் சிறிய ஆன்மாக்கள் தனியானவை என்றாலும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருப்பதை நமது தினசரி அனுபவத்தால் அறியும்போது அவை என்னவாகின்றன? அவை மாறுகின்றன, மாறாமலும் இருக்கின்றன. நேற்று இருந்த நான்தான் இன்றும் இருக்கிறேன், ஆனால் சிறிது மாறியும் இருக்கிறேன். இப்போது துவைதக் கொள்கையை விட்டுவிடுவோம். இந்த எல்லா மாற்றங் களுக்கு இடையிலும் மாறாத ஒன்று உள்ளது என்றும் புதிய பரிணாமவாதத்தின்படி ‘நான்’ என்பது தொடர்ந்து மாறிக் கொண்டும் விரிந்துகொண்டும் வருகின்ற ஒன்று என்பதையும் தெரிந்துகொள்வோம்.

 ஒரு சிப்பி-உயிரினத்தின் (mollusc) பரிணாமமே மனிதன் என்பது உண்மையானால் அந்த உயிரும் மனிதனும் ஒன்றே; மனிதனில் அந்த உயிர் மிகவும் விரிந்திருக்கிறது. அவ்வளவு தான். சிப்பி-உயிரினத்திலிருந்து மனிதன்வரை, எல்லை யற்றதை நோக்கி ஒரு தொடர்ந்த விரிவு உள்ளது. எனவே எல்லைக்கு உட்பட்ட இந்த ஆன்மாவை, எல்லையற்ற தனித் துவத்தை நோக்கித் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் ‘தனித்துவம் என்று கூறலாம். பூரண தனித்துவம் என்பது இந்த எல்லையற்றதை அடையும்போதுதான் ஏற்படுகிறது. ஆனால் எல்லையற்றதன் இந்தப் பக்கத்தில் அது தொடர்ந்து  மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கின்ற ஒன்றாகவே உள்ளது. 

தனக்குமுன் தோன்றிய நெறிகளை எல்லாம் சமரசப் படுத்தியது அத்வைத வேதாந்தத்தின் சிறப்புகளுள் குறிப்பிடும் படியான ஒன்றாகும். பல இடங்களில் இது தத்துவ விளக்கத் திற்கு உதவி செய்கிறது, சில இடங்களில் அவற்றைத் தாக்குகிறது. பரிணாம வாதம் என்று நீங்கள் அழைக்கின்ற கருத்தை எங்கள் பழைய தத்துவ ஞானியர் அறிந்திருந்தார்கள். அதாவது வளர்ச்சி என்பது மெல்லமெல்ல, படிப்படியாக நிகழும் ஒன்று என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. எனவே முந்தைய நெறிகளை சமரசப்படுத்துவதில் அவர்கள் ஈடுபட்டார்கள். பழைய கருத்துக் களுள் ஒன்றைக்கூட அவர்கள் விடவில்லை. இந்தத் தொடர்ந்த வளர்ச்சி, விரிவு இவற்றைப் பற்றிய அறிவோ அனுபவமோ இல்லாதிருந்தது பௌத்த மதத்தின் தவறாகும். அதனால், தங்களுக்கு முன்பு லட்சியத்தை நோக்கிச் சென்றவர்களின் கொள்கைகளுடன் புத்தமதம் தன்னைச் சமரசப்படுத்த முயல வில்லை. பழைய நெறிகள் பயனற்றவை, தீங்கிழைப்பவை என்று கூறி ஒதுக்கப்பட்டன.  

மத விஷயத்தில் இத்தகைய எண்ணம் மிகவும் கொடுமை யானது. புதிய சிறந்த கருத்துக்களை அடைந்ததும், அதுவரை தான் கடைப்பிடித்த கருத்துக்கள் எல்லாம் தீமையானவை, தேவையற்றவை என்று மனிதன் தீர்மானித்துவிடுகிறான். அவை இப்போது எவ்வளவு பண்படாததாக, தேவையற்றவையாக இருந்தாலும், அவன் இந்த உயர்ந்த நிலைக்கு வருவதற்கு அவை எவ்வளவு உதவி செய்தன, தேவையாக இருந்தன என்பதை அவன் நினைத்துப் பார்ப்பதில்லை. நாம் எல்லோரும் இப்படியேதான் வளர வேண்டியிருக்கிறது; முதலில் பண்படாத எண்ணங்களில் வளர்கிறோம், அவற்றிலிருந்து நன்மை பெற்று, உயர்ந்த நிலைக்கு வருகிறோம். எனவே பழமையான கொள்கை களையும் அத்வைதம் நட்புடன் வரவேற்கிறது. துவைதமும், அதற்கு முன்பிருந்த மற்ற பிரிவுகளும் அத்வைத வேதாந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன; ஆதரவளிக்கும் எண்ணத்தில் அல்ல, அவையும் ஒரே உண்மையின் வெளிப்பாடுகளே, அத் வைதம் அடைந்துள்ள அதே முடிவுகளுக்கு வழிவகுப்பவையே என்ற நிலையிலேயே அவை ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 

மனித இனம் கடந்துசெல்ல வேண்டிய இந்தப் பல்வேறு படிகளை வாழ்த்துக்களுடன் நாம் காக்கவேண்டுமே தவிர சாபத்துடன் அல்ல. எனவே இந்த துவைதக் கருத்துக்கள் எல்லாம் ஒருபோதும் விலக்கப்படவில்லை, புறக்கணிக்கப் படவும் இல்லை. அவை வேதாந்தத்துடன் இணைத்தே பத்திர மாக வைக்கப்பட்டுள்ளன. ஆன்மா எல்லைக்கு உட்பட்டது, ஆனால் தன்னளவில் பூரணமானது என்ற துவைதக் கருத்திற்கு வேதாந்தத்தில் இடம் அளிக்கப்படுகிறது. 

துவைதத்தின்படி, மனிதன் இறந்தபின் வேறு உலகங் களுக்குச் செல்கிறான். இந்தக் கருத்துக்கள் வேதாந்தத்தில் அப்படியே முழுமையாக இடம் பெற்றுள்ளன. வளர்ச்சி என் பதை அத்வைத நெறி ஏற்றுக் கொள்வதால் இந்தக் கொள் கைகளும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, அவற்றிற்குரிய இடம் அளிக்கப்படுகின்றன. அவையும் உண்மையின் ஒரு சிறிய பகுதியை எடுத்துக் காட்டுவதாக அமைவதால் அவையும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 

துவைதக் கருத்தின்படி, இந்தப் பிரபஞ்சம் ஜடப்பொருள் அல்லது சக்தியின் படைப்பு, ஒரு குறிப்பிட்ட சங்கல்பத்தின் விளையாட்டு என்றே கருதப்பட வேண்டும். இந்தச் சங்கல் பமும் பிரபஞ்சத்திலிருந்து வேறானதாகவே கருதப்பட வேண்டும். இந்த நோக்கில் பார்த்தால் ஒரு மனிதன் தன்னை இரண்டு இயல்புகள் உடையவனாக அதாவது உடல், ஆன்மா என்று இரண்டாகப் பார்க்க வேண்டும். ஆன்மா என்பது எல்லைக்கு உட்பட்டதாக இருந்தாலும் தன்னளவில் அது பூரணத்துவம் வாய்ந்ததே. இத்தகைய மனிதனின் மரணமிலாப் பெருநிலை, எதிர்கால வாழ்வு பற்றிய கருத்துக்கள் ஆன்மாவைப் பற்றிய அவனது கருத்துக்களுக்கு ஏற்பவே இருக்கும். இத்தகைய துவைதக் கருத்துக்களும் வேதாந்தத்தில் காணப்படுவதால், அவற்றுள் சிலவற்றைப்பற்றி உங்களுக்குச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். 

துவைதக் கொள்கையின்படி, நமக்கு ஓர் உடல் இருக்கிறது. இதற்குப் பின்னால் அவர்கள் நுண்ணுடல் என்று அழைக்கின்ற உடல் உள்ளது. இந்த நுண்ணுடலும் ஜடப்பொருளால் ஆனது தான், ஆனால் நுண்ணிய ஜடப் பொருளால் ஆனது. அது நமது கர்மம் அனைத்தின் அதாவது, செயல்களுடையவும் சம்ஸ்காரங்களுடையவும் உறைவிடமாக உள்ளது. இவையே பின்னர் வெளித் தோன்றுகின்றன. நாம் எண்ணுகின்ற ஒவ்வோர் எண்ணமும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் சூட்சுமமாகி, விதை வடிவில் மாறியது போலாகி, இந்த நுண்ணிய உடலில் ஆற்றல் வடிவமாக உறைகிறது. சில காலத்திற்குப் பிறகு வெளி வந்து உரிய பலனைக் கொடுக்கிறது. இந்தப் பலன்கள் மானிட வாழ்வை உருவாக்குகின்றன. இவ்வாறு மனிதன் தனது வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொள்கிறான். ஆனால் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொள்ளும் சட்டங்களைத் தவிர வேறு எதற்கும் அவன் கட்டுப்பட்டவன் அல்ல. 

நன்மைக்கோ தீமைக்கோ நமது எண்ணங்கள், நமது சொற்கள், நமது செயல்கள் இவை நம்மைச் சுற்றி நாமே ஏற் படுத்திக் கொண்டுள்ள வலையின் இழைகளாகவே உள்ளன. நாம் ஏதாவது ஓர் ஆற்றலை இயக்கத்திற்கு உட்படுத்தினால் அதன் விளைவுகளை ஏற்றேயாக வேண்டும். இதுவே கர்ம நியதி. இந்த நுண்ணுடலுக்குப் பின்னால் ஜீவன் அல்லது தனி மனிதனின் ஆன்மா உள்ளது. இந்த ஆன்மாவின் உருவத்தைப் பற்றியும் அளவைப் பற்றியும் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. சிலர் அது அணுவைப் போன்று மிகச் சிறியது என்றும், அவ்வளவு சிறியதல்ல என்று வேறு சிலரும், இன்னும் சிலர் அது மிகப் பெரியதென்றும் பலவிதமாகக் கூறுகின்றனர். இந்த ஜீவன், பிரபஞ்ச ஆன்மாவின் ஓர் அம்சம். அது எல்லையற்றது, ஆரம்பம் இன்றியே அது இருக்கிறது, முடிவின்றி இருக்கவும் செய்யும். தனது உண்மை நிலையாகிய தூய்மையை வெளிப் படுத்தவே அது இந்த உருவங்களை எல்லாம் எடுத்து, கடந்து செல்கிறது. இந்த வெளிப்பாட்டைத் தடுக்கும் ஒவ்வொரு செயலும் ஒவ்வோர் எண்ணமும் தீய செயல், தீய எண்ணம். இந்த ஜீவன் விரிவடையவும், அதன் உண்மை நிலையை வெளிப் படுத்தவும் உதவுகின்ற ஒவ்வொரு செயலும் ஒவ்வோர் எண்ணமும் நல்லவை. இந்தியாவிலுள்ள சிறிதும் பண்படாத துவைதிகளுக்கும், மிக முன்னேறிய அத்வைதிகளுக்கும் பொது வாக ஒரு கருத்து இருக்கிறது-ஆன்மாவின் சாத்தியக்கூறுகளும் ஆற்றல்களும் அனைத்துமே அதனுள்ளே உள்ளன, அவை எந்தப் புறக் காரணத்திலிருந்தும் வருபவை அல்ல என்பது தான் அந்தக் கருத்து. ஆன்மாவில் அவை இயங்கா நிலையில் (potential form) உள்ளன. இந்த ஆற்றல்களை வெளிப்படுத்து வதே வாழ்க்கையின் முழுவேலையாக இருக்கிறது. 

 மறுபிறவிக் கொள்கையும் அவர்களிடம் உள்ளது. அதாவது இந்த உடல் அழிந்த பிறகு, ஜீவன் மற்றோர் உடலை எடுக்கும், அது அழிந்த பின்னர் வேறோர் உடலை எடுக்கும். இப்படியே தொடர்ச்சியாக இங்கோ அல்லது வேறு உலகங்களிலோ அது உடலை எடுக்கிறது. ஆனால் இந்த உலகத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் நமது நோக்கத்திற்கு மற்ற உலகங்களைவிட இந்த உலகம்தான் மிகவும் உதவுவதாகக் கருதப்படுகிறது. மற்ற உலகங்களில் துன்பங்கள் மிகச் சிறிதளவே உள்ளது. அந்தக் காரணத்தாலேயே, உயர்ந்த விஷயங்களைச் சிந்திக்கும் வாய்ப்பு களும் அங்குக் குறைவு என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த உலகம் சிறிது இன்பமும் அதிகத் துன்பமும் கலந்தது போல் உள்ளது. எனவே ஜீவன் விரைவாகவோ தாமதித்தோ தனது தூக்கத்திலிருந்து விழித்து, தான் சுதந்திரம் அடைவதைப் பற்றி நினைக்க முடிகிறது. இந்த உலகில், உயர்ந்த லட்சியங்களை நினைக்கப் பணக்காரர்களுக்கு மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. அதுபோல், சொர்க்கத்தில் ஜீவன் முன்னேற அதிக வாய்ப்பு இல்லை. அங்கே ஜீவனின்நிலை, இங்கேயுள்ள பணக் காரனின் நிலையைப்போல்கூட இல்லாமல், வாய்ப்பு இன்னும் குறைகிறது. அங்கு ஜீவன் நோயற்ற நுண்ணுடலைப் பெறு கிறான். உண்ணவோ அருந்தவோ தேவையில்லை. அவர்களின் எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன. ஆனால் அங்கு ஒவ் வோர் இன்பமாக அனுபவித்துக்கொண்டே இருப்பதில் ஜீவன் தனது உண்மை இயல்பை முற்றிலும் மறந்துவிடுகிறான். இன்னும் சில உயர்ந்த உலகங்கள் உள்ளன. அங்கே இன்பங்கள் இருந்தாலும் ஜீவன் முன்னேற வாய்ப்புகளும் உள்ளன. 

 சில துவைதிகளின் குறிக்கோள் மிகவுயர்ந்த சொர்க்கம் ஆகும். அங்கு ஜீவன்கள் கடவுளுடன் என்றென்றைக்குமாக வாழ்கின்றனர். அவர்களுக்கு அழகிய உடல் இருக்கும். நோயோ மரணமோ மற்ற துன்பங்களோ அங்கில்லை. அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன. அவர்களுள் சிலர் அவ்வப்போது இந்த உலகத்திற்குத் திரும்பி வந்து, வேறு உடல் எடுத்து, மனிதர்களுக்குக் கடவுளை அடையும் வழியைக் காட்டுகின்றனர். உலகின் மிகப் பெரிய ஆச்சாரியர்கள் இத்தகையவர்களே. இவர்கள் சுதந்திரர்கள். இறைவனுடன் உயர்ந்த உலகங்களில் வசித்து வந்தவர்கள். துன்பப்படும் மனித குலத்தின் மீதுள்ள அன்பாலும் கருணையாலும் மீண்டும் பிறவி எடுத்து அவர்கள் உய்யும் வழியைக் காட்டு கிறார்கள். 

 இது லட்சியமாகவோ முடிந்த முடிவாகவோ இருக்க முடியாது என்று அத்வைதம் கூறுவது நமக்குத் தெரியும். உடம்பற்ற நிலைதான் லட்சியமாக இருக்க முடியும். லட்சியம், எல்லையுள்ளதாக இருக்க முடியாது. எல்லையற்றதற்குக் குறைந்த எதுவும் லட்சியமாக முடியாது. எல்லையற்ற உடல் என்ற ஒன்று இருக்க முடியாதல்லவா? அது முடியாதது. ஏனெனில் எல்லைக்கு உட்படுவதால்தான் உடலே உண்டா கிறது. எல்லையற்ற எண்ணம் என்பதும் இருக்க முடியாது. ஏனெனில் எண்ணமும் எல்லைக்குள்தான் எழுகிறது. எனவே நாம் உடல், எண்ணம் இவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்று அத்வைதம் கூறுகிறது. இந்தச் சுதந்திர நிலையை நாம் இனி அடைய வேண்டியதில்லை, அது ஏற்கனவே நமதாக இருக்கிறது என்று அத்வைதம் கூறுவதையும் நாம் கண்டோம். அதை மறந்திருக்கிறோம், மறுக்கிறோம். பூரணத்துவம் என்பதை நாம் அடைய வேண்டியதில்லை, அது ஏற்கனவே நம்மிடம் உள்ளது. மரணமிலாப் பெருநிலையோஆனந்தமோ நாம் அடைய வேண்டியவை அல்ல, அவை ஏற்கனவே நம்மிடம் இருக்கின்றன. எப்போதும் நம்முடையவையாகவே இருந்து வருகின்றன. நீங்கள் சுதந்திரர் என்று தைரியமாகக் கூற முடியு மானால் இந்தக் கணமே நீங்கள் சுதந்திரர்கள். நீங்கள் கட்டுப் பட்டவர் என்று கூறினால் அப்படியே இருப்பீர்கள். இதையே அத்வைதம் துணிவாக முழங்குகிறது. நான் உங்களுக்குத் துவைதிகளின் கருத்துக்களையும் கூறினேன். நீங்கள் விரும்பு வதை ஏற்றுக்கொள்ளலாம்.  

வேதாந்தத்தின் மிகவுயர்ந்த குறிக்கோளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதைப்பற்றி எப்போதும் விவாதங்கள் நிகழ்கின்றன. மக்கள் சில கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்களானால் மற்ற கொள்கைகளை மறுக்கவும் எதிர்க்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு பெரிய பிரச்சினை. உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் கடைப்பிடியுங் கள். அதுபோலவே மற்றவர்கள் தங்களுக்கு விருப்பமானதைப் பின்பற்ற விடுங்கள். நீங்கள் இந்தச் சிறிய தனித்துவத்தையே பற்றிக்கொண்டிருக்க விரும்பினால் இதிலேயே இருங்கள். இத்தகைய ஆசைகளையெல்லாம் கொள்ளுங்கள், இதிலேயே மன நிறைவு அடையுங்கள்! திருப்தியுற்றிருங்கள். உங்கள் மனித நிலை அனுபவம் சிறப்பாக, நல்லதாக இருக்குமானால் வேண்டிய அளவு அதை அனுபவியுங்கள். உங்களால் அனு பவிக்க முடியும், ஏனெனில் உங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்கு பவர் நீங்களே. மனிதநிலையை விட்டுவிடும்படி உங்களை யாரும் வற்புறுத்த முடியாது. விரும்பும்வரை மனிதர்களாக இருங்கள். அதை ஒருவரும் தடுக்க முடியாது. 

நீங்கள் தேவதையாக விரும்பினால் தேவதையாகலாம். இதுதான் நியதி. ஆனால் தேவதையாக விரும்பாத சிலரும் இருக்கலாம். அவர்களது கருத்து பயங்கரமானது என்று நினைக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நூறு ரூபாயை இழக்க நீங்கள் அஞ்சி நடுங்கலாம். ஆனால் தங்கள் சொத்து அனைத்தையும் இழந்தாலும் துளிகூட வருந்தாத வர்களும் இருக்கலாம். அத்தகையவர்கள் இருந்தார்கள், இருக் கிறார்கள். உங்கள் நிலையிலிருந்து அவர்களை ஏன் தீர்மானிக்க வேண்டும்? நீங்கள் உங்கள் எல்லைக் கோடுகளுக்குள் வாழ் பவர்களாக இருக்கலாம், இந்தச் சிறு லௌகீகக் கருத்துக்களே உங்கள் உயர்ந்த லட்சியமாகவும் இருக்கலாம். அது உங்கள் விருப்பம். உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும். ஆனால் உண்மையைக் கண்ட வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்களால் இந்தச் சிறிய எல்லைகளுக்குள் திருப்தியாக இருக்க முடியாது. இதையெல்லாம் அவர்கள் அனுபவித்து முடித்துவிட்டார்கள். இதைக் கடந்து அப்பால் செல்லவே அவர்கள் விரும்புகிறார்கள். இந்த உலகமும் அதன் எல்லாவிதமான இன்பங்களும் அவர் களுக்கு வெறும் சேற்றுக்குட்டை மட்டுமே. அவர்களை உங்கள் கருத்துக்களால் ஏன் கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள்! இத்தகைய மனப்போக்கை விட்டுவிடுங்கள். ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய இடத்தை அளியுங்கள்.

தென் கடல் தீவுகளில் பெரும் புயலில் அடியுண்ட சில கப்பல்களைப் பற்றிய ஒரு கதையை நான் படிக்க நேர்ந்தது. அதைப் பற்றிய படமும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் (Illustrated London News) வந்தது. ஒரே ஓர் ஆங்கிலேயக் கப்பலைத் தவிர மற்றவை அனைத்தும் உடைந்து போயின. ஆங்கிலேயக் கப்பல் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. தாங்கள் மூழ்கிப் போவதைப்பற்றிச் சிறிதும் எண்ணாமல், கப்பல்தளத்தில் நின்று, புயலை எதிர்த்துச் செல்லும் கப்பல்களை உற்சாகப்படுத்து பவர்கள் அந்தப் படத்தில் காணப்பட்டனர்.! அவர்களைப் போல் தைரியத்துடனும் கருணையுடனும் இருங்கள். உங்கள் நிலைக்கு மற்றவர்களைக் கீழே இழுக்காதீர்கள். 

மற்றொரு முட்டாள்தனமான எண்ணமும் உள்ளது: நமது சிறிய தனித்துவத்தை இழந்தால், ஒழுக்கமே சிதைந்து மனித குலமே கதியற்றுப் போய்விடும் என்பதே அது. ஏதோ அனை வரும் மனித குலத்திற்காக உயிர் துறப்பது போல்தான் பேசு கிறார்கள்! கடவுள்தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்! ஒவ்வொரு நாட்டிலும் இருநூறு ஆண்களும் பெண்களும் உண்மையிலேயே மனித இனத்திற்கு நன்மை செய்ய எண்ணினால் போதும். ஐந்து நாட்களில் பூமியே சொர்க்கமாகி விடாதா! மனித குலத்திற்காக நாம் எப்படி உயிரை விடுகிறோம் என்பது நமக்குத் தெரியாதா என்ன? இவை வெறும் வாய் ஜம்பமே தவிர வேறல்ல. தங்கள் சிறிய தனித்துவத்தைப்பற்றிச் சிறிதும் நினைக்காதவர்களே மனித குலத்திற்கு, மேலான நன்மை புரிந்திருக்கிறார்கள் என்பதையும் ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றியே எண்ணியிருந்தால் அந்த அளவுக்குப் பிறருக்கு உதவியிருக்க முடியாது என்பதையுமே உலக வரலாறு காட்டுகிறது. ஒன்று சுயநலமின்மை, இன்னொன்று சுயநலம். சிற்றின்பங்களைப் பற்றிப்பிடித்திருப்பதும் தொடர்ந்து அதை அனுபவிக்க ஆசைப்படுவதும் சுயநலம். இது உண்மையின் மீதுள்ள விருப்பத்திலிருந்தோ, பிறர் மீதுள்ள கருணை யிலிருந்தோ ஏற்பட்டதல்ல; ‘எனக்கே எல்லாம் வேண்டும், மற்றவர்களைப்பற்றி எனக்கென்ன கவலை?’ என்ற கீழான சுய நலத்தால் இதயத்தை நிரப்புவதன் காரணமாகத் தோன்றுவது இது. நான் இப்படித்தான் நினைக்கிறேன். ஒரு சிறிய உயிரைக் காப்பதற்காக, தங்கள் நூற்றுக்கணக்கான பிறவிகளையும் துறக்கத் துணிந்த அந்தப் பண்டைய மாபெரும் தீர்க்கதரிசி களையும் ரிஷிகளையும் போன்ற நன்னெறி பிறழாத ஏராளம் பேர் இந்த உலகில் இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ஒழுக்க நெறி, பிறருக்கு நன்மை செய்வது இவை இன்று வெறும் பேச்சளவிலேயே நின்றுவிட்டன! முட்டாள்தனம்! 

 கௌதம புத்தரைப் போன்ற ஒழுக்கசீலர்களைப் பார்க்க நான் விரும்புகிறேன். அவர் எந்த சகுணக் கடவுளையோ தனிப் பட்ட ஆன்மாவையோ நம்பவில்லை. அதைப்பற்றிக் கவலைப் படவே இல்லை. முழுமையான ஆஜ்ஞேயவாதியாக இருந்த அவர், யாருக்காகவும் தமது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தார். அவர் தமது வாழ்நாள் முழுவதும் பிறரது நன்மைக் காகவே உழைத்தவர்; அவர்களது நன்மையைப் பற்றியே நினைத்தவர். அவரது வரலாற்றை எழுதியவர் அவரது பிறப்பைப்பற்றி எழுதும்போது, அவர் பலரது நன்மைக்காகவும் பலரது நல்வாழ்க்கைக்காகவுமே பிறந்தார் என்று சரியாகவே சொல்லியிருக்கிறார். அவர் காட்டிற்குச் சென்று தியானத்தில் ஈடுபட்டது தமது முக்திக்காக அல்ல. துன்பத்தால் எரிந்து கொண்டிருக்கிறது உலகம். அதிலிருந்து விடுபட ஒரு வழியை அவர் காண வேண்டும்; ‘இந்த உலகில் ஏன் இவ்வளவு துன்பம் உள்ளது?’ என்பதே அவர் வாழ்வை நிறைத்திருந்த கேள்வி. நாம் புத்தரைப் போல் ஒழுக்க நெறியில் நிற்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா! 

 சுயநலம் மிகுந்தோறும் மனிதன் ஒழுக்கம் கெட்ட வனாகிறான். இனத்திற்கும் இது பொருந்தும். சுயநலம் மிகுந்த இனமே மிகக் கொடுமை நிறைந்ததாகவும் தீமை பயப்பதாகவும் இருந்திருக்கிறது. அரேபிய தீர்க்கதரிசி நிறுவிய மதத்தைப் போல் துவைதக் கொள்கையை இவ்வளவு அழுத்தமாகப் பின்பற்றிய மதம் வேறு எதுவும் இல்லை; அதுபோல் அவ்வளவு ரத்தம் சிந்தியதும், பிறரிடம் அவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதும் வேறு எந்த மதமும் இல்லை. குரான் கூறும் அறிவுரைகளை நம்பாதவனை உடனே கொன்றுவிடும்படி அது கூறுகிறது. அது ஒரு கருணையாம்! அந்த நம்பிக்கையற்ற வர்களைக் கொல்வதுதான் அழகிய பெண்களும் பலவித இன்ப நுகர்ச்சிகளும் நிறைந்த சொர்க்கத்தை அடையும் நிச்சயமான வழியாம்! இந்த நம்பிக்கைகளால் எவ்வளவு ரத்தம் சிந்தப் பட்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்! 

கிறிஸ்தவ மதத்தில் இத்தகைய கொடூரம் சற்றுக் குறைந்து காணப்படுகிறது. தூய கிறிஸ்தவ மதத்திற்கும் வேதாந்தத் திற்கும் இடையில் வித்தியாசம் மிகக் குறைவே. ஒருமைக் கருத்தை அங்கும் நீங்கள் காணலாம். ஆனால் மக்கள் பற்றிப் பிடித்துக்கொள்ள எளிதாக இருப்பதற்காக துவைதக் கருத்துக் களை உபதேசித்து, அதன்மூலம் அவர்கள் உயர்ந்த குறிக் கோளை அடையச் செய்தார் ஏசு. ‘பரலோகத்திலிருக்கும் எங்கள் தந்தை’ என்று கூறிய அவரே ‘நானும் என் தந்தையும் ஒன்று’ என்பதையும் உபதேசித்தார். ‘நானும் என் தந்தையும் ஒன்று’ என்ற நிலையை அடைய ‘பரலோகத் தந்தையே’ வழி காட்டுகிறார் என்பது அவருக்குத் தெரியும். ஏசுவின் மதத்தில் ஆசிகளும் அன்புமே இருந்தன. ஆனால் பண்படாத கொள்கைகள் உள்ளே புகுந்ததும், அரேபிய மதத்தைவிட இழிந்த நிலைக்கு அது வந்துவிட்டது. இந்தச் சிறிய ‘நான்’  என்பதற்காகப் போரிடுவது, இந்த வாழ்க்கையில் வைத்துள்ள பற்று போதாமல், இறந்ததற்குப் பிறகும் அது தொடர வேண்டும் என்று விரும்புவது இவையெல்லாம் உண்மையில் கொடூரமே. இதை அவர்கள் சுயநலமின்மை என்கிறார்கள். இதுவே ஒழுக்கத்திற்கு அடிப்படையாம்! ஒழுக்கநெறிக்கு இதுதான் அடிப்படை என்றால் கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்! இந்தச் சிறிய ‘நான்’ போய்விட்டால் ஒழுக்க நெறியே அழிந்துவிடும் என்றே பலரும் எண்ணுகின்றனர். இவர்கள் இன்னும் சிறிது விவரம் தெரிந்தவர்களாக வேண்டும். இந்தச் சிறிய ‘நான்’ மறைந்த பிறகே ஒழுக்க நெறி பிழைக்கும் என்னும் கருத்தை அவர்கள் அச்சத்துடன் பார்க்கிறார்கள். இன்பத்தையும் நன்மை அனைத்தையும் அளிப்பது ‘நான்’ அல்ல, ‘நீ’ என்பதே.  

சொர்க்கமோ நரகமோ இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப்படுகிறார்கள்? ஆன்மா இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப்படுகிறார்கள்? மாறாத ஒன்று உள்ளதா இல்லையா என்று யார் கவலைப்படுகிறார்கள்? இதோ உலகம் இருக்கிறது, அதில் துன்பம் நிறைந்திருக்கிறது. செல்லுங்கள்! புத்தர் செய்ததுபோல் துன்பத்தைக் குறைக்கப் பாடுபடுங்கள்! இல்லாவிடில் அந்த முயற்சியில் உயிரை விடுங்கள். உங்களையே மறந்து விடுங்கள். இதுவே படிக்க வேண்டிய முதற்பாடம். நீங்கள் நாத்திகரோ, ஆத்திகரோ, ஆஜ்ஞேயவாதியோ, வேதாந் தியோ, கிறிஸ்தவரோ, முகமதியரோ யாராக இருந்தால் என்ன, இதுவே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முதற்பாடம். எல்லோருக்கும் பொதுவான ஒரே பாடம் என்னவென்றால் இந்தச் சிறிய ஆன்மா அழிந்து உண்மையான ஆன்மா நிறுவப் பட வேண்டும், என்பதுதான். 

இரண்டு சக்திகள் இணையாகச் செயல்படுகின்றன; ஒன்று, ‘நான்’ என்கிறது, மற்றொன்று, ‘நான் அல்ல’ என்கிறது. மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்குகளிலும், விலங்குகளில் மட்டுமல்ல சிறிய புழுவிலும் அவை வெளிப்படுகின்றன. மனிதனின் ரத்தத்தில் நகம் தோய்க்கும் பெண்புலி, குட்டிகளைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையே கொடுக்கும். அது போலவே பிறரைக் கொல்வது இயற்கையே என எண்ணும் கொடியவனும், பசியால் வாடும் மனைவி மக்களைக் காப்ப தற்காகத் தன் உயிரையே தயங்காமல் கொடுக்க முன்வரலாம். ஆகவே படைப்பு முழுவதும் இந்த இரண்டு சக்திகளும் அடுத்தடுத்துச் செயல்பட்டு வருகின்றன. எங்கே இதில் ஒன்றை நீங்கள் பார்க்கிறீர்களோ அங்கே மற்றொன்றும் இருந்தேதீரும். இவற்றுள் ஒன்று தன்னலம், மற்றது தன்னலமின்மை; ஒன்று சேர்த்துக் கொள்வது, மற்றொன்று தியாகம் செய்வது; ஒன்று எடுப்பது, மற்றொன்று கொடுப்பது. கீழானதிலிருந்து மிக உயர்ந்ததுவரை இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே இந்த இரு சக்திகளின் விளையாட்டு மைதானமே. இதற்கு விளக்கம் தேவை யில்லை , கண்கூடாகத் தெரிவது இது.  

இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படைச் செயல்பாடுகளும் பரிணாமமும் போட்டி, போராட்டம் என்ற இரண்டின் மீதே இருக்கிறது என்று கூற சமுதாயத்தில் எந்த இனத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? ஆசை, சண்டை, போட்டி, போராட்டம் இவற்றால்தான் இந்த உலகம் நடக்கிறது என்று கூற அவர் களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இவை இருப்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் மற்ற சக்தியின் செயலாற்றலை ஏன் மறுக்க வேண்டும்? அன்பு, ‘நான் அல்ல’ என்று கூறும் தியாகம் இவையே இந்த உலகத்திலுள்ள ஆக்கபூர்வமான சக்திகள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? மற்றது அன்பாற்றலின் தவறான உபயோகமே. அன்பின் சக்தியே போட்டியை உண்டாக்குகிறது. போட்டிக்கு உண்மைக் காரணம் அன்பின் ஆற்றலே. உண்மையான தீமையின் வித்து சுயநலமின்மையே. நன்மைதான் தீமையை உண்டாக்குகிறது. அதன் முடிவும் நன்மையே. நன்மையின் ஆற்றலைத் தவறாகச் செலுத்துவதே அது. கொலை செய்பவன், தன் குழந்தையின் மீதுள்ள அன்பால் தூண்டப்பட்டு அதைச் செய்திருக்கலாம். அவனது அன்பு பலகோடி உயிர்களிடம் இல்லாமல் அந்தச் சிறிய குழந்தையிடம் கட்டுண்டுவிடுகிறது. கட்டுண்டாலும் இல்லையென்றாலும் ஒரே அன்பே அது. 

 எவ்வாறு வெளிப்பட்டாலும் சரி, இவ்வுலகின் தூண்டு சக்தி என்பது அந்த அற்புதமான சுயநலமின்மை , தியாகம், அன்பு, இவையே. இங்குள்ள ஒரே உண்மையான உயிருள்ள சக்தி அதுவே. எனவே வேதாந்தி இந்த ஒருமையை வலியு றுத்துகிறான். பிரபஞ்சத்திற்கு இரண்டு காரணங்கள் இருக்க முடியாது. எனவே நாம் இதை வற்புறுத்துகிறோம். அழகிய தான வியப்பிற்குரியதான அதே அன்புதான் எல்லைக்கு உட்படுவதால் தீமையாக, இழிவாகத் தோன்றும் என்றால் பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு அன்பின் சக்தியாலேயே விளக்கப்படுவதைக் காணலாம். இல்லாவிடில் பிரபஞ்சத்திற்கு இரண்டு காரணங்களை ஒப்புக்கொள்ள நேரும் – ஒன்று நன்மை, மற்றொன்று தீமை; ஒன்று அன்பு, மற்றொன்று வெறுப்பு. எது அறிவுபூர்வமானது? நிச்சயமாக ஒரேசக்திக் கொள்கையே. 

துவைதம் அல்லாத கருத்துக்களைப்பற்றிப் பார்ப்போம். நான் அதிக நேரம் துவைதக் கருத்தில் நிற்க முடியாதுதான். ஒழுக்கம், சுயநலமின்மை இவற்றின் மிகவுயர்ந்த லட்சியமும் உயர்ந்த தத்துவக் கருத்தும் இணைந்து போகக்கூடியவை என்று நிரூபிப்பதே எனது நோக்கம். நன்னெறி, ஒழுக்கம் இவற்றை அடைவதற்காக உங்கள் எண்ணங்களை நீங்கள் கீழே கொண்டுவர வேண்டியதில்லை. மாறாக, நன்னெறி, ஒழுக்கம் இவற்றின் உண்மையான அடிப்படையை அடை வதற்கு மிகவும் உயர்ந்த தத்துவங்களும் விஞ்ஞான முடிவுகளும் தேவை. மனித அறிவு என்பது அவனது நல்வாழ்விற்கு எதிரானது அல்ல. மாறாக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அறிவு மட்டுமே நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த அறிவே வழிபாடாகும். அறிவு வளருந்தோறும் நமக்கு நல்லது. 

எல்லா தீமைகளும் தோன்றக் காரணம் எல்லையற்ற ஒன்றிற்கு நாம் எல்லையை ஏற்படுத்தியதே என்கிறான் வேதாந்தி. அன்பு, எல்லைக்கு உட்பட்டு சிறிய பாதைகள் மூலம் செல்லும் போது தீமையாகத் தெரிகிறது. இறுதியில் பாதையின் மறு கோடியை எட்டும்போது அதுவே கடவுளாகத் திகழ்கிறது. தீமைபோல் தோன்றும் அனைத்தின் காரணமும் நம்மிடமே உள்ளது என்கிறது வேதாந்தம். இயற்கையைக் கடந்த யாரையும் இதற்காகக் குற்றம் சாட்டாதீர்கள். நம்பிக்கை அற்றவர்களாக மனம் உடைந்து போகாதீர்கள். யாராவது வந்து கைகொடுக்கா விட்டால் தப்பிப்போக முடியாத இடத்தில் சிறைப்பட்டுள் ளோம் என்று நினைத்து மனம் தளரவும் வேண்டாம். அப்படி இருக்க முடியாது என்கிறது வேதாந்தம். நாம் பட்டுப்புழுக் களைப் போல் இருக்கிறோம். நம்மிடமிருந்தே நூலை இழைத்துக் கூட்டை உண்டாக்குகிறோம். நாளடைவில் நாமே அதற்குள் கட்டுப்படுகிறோம். ஆனால் இது எப்போதும் இவ்வாறிருப்பதில்லை. அந்தக் கூட்டிலேயே நாம் மெய்யுணர்வு பெற்றுப் பட்டுப்பூச்சியைப்போல் சுதந்திரமாக வெளியேறு வோம். இந்தக் கர்ம வலையை நாமே நம்மைச் சுற்றிப் பின்னி யிருக்கிறோம். அறியாமை காரணமாக பந்தப்பட்டவர்களைப் போல் நம்மைக் கருதிக்கொண்டு உதவிக்காகக் கதறி அழுகிறோம். 

ஆனால் உதவி வெளியிலிருந்து வருவதில்லை ; நமக்கு உள்ளிருந்தே வருகிறது. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா கடவுள்களிடமும் கதறி அழுங்கள். நான் வருடக்கணக்காகக் கதறி அழுதேன். கடைசியில் உதவி வந்தது, ஆனால் அது எனக்கு உள்ளிருந்துதான் வந்தது. நான் செய்த தவறை விலக்க வேண்டியதாயிற்று. இதுதான் ஒரே வழி. என்னைச் சுற்றி நானே பின்னியுள்ள வலையை நானே அறுத்தேயாக வேண்டும். அதற்கான ஆற்றலும் என்னுள் உள்ளது. நல்ல முயற்சியோ தீய முயற்சியோ என் வாழ்வின் எந்த முயற்சியும் வீணான தில்லை என்பது உறுதி. கடந்த நல்வினை, தீவினை இரண்டின் விளைவே நான். எனது வாழ்க்கையில் நான் பலவிதத் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் இந்தத் தவறுகளைச் செய்யாமல் இருந்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க மாட் டேன் என்பது உறுதி. எனவே தவறுகள் செய்ததற்காக நான் வருந்தவில்லை. உடனே நீங்களும் வீட்டிற்குச் சென்று, வேண்டு மென்றே தவறுகள் செய்ய வேண்டும் என்பது எனது கருத்து அல்ல. என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். ஆனால், செய்த தவறுகளுக்காக வருந்தி அழ வேண்டாம். முடிவில் எல்லாம் சரியாகிவிடும் என்பதில் உறுதி கொள்ளுங்கள். இதற்கு மாறாக இருக்க முடியாது. ஏனெனில் நன்மையே நமது இயல்பு, தூய்மையே நமது இயல்பு. அந்த இயல்பை ஒருபோதும் அழிக்க முடியாது. நமது உண்மை இயல்பு எப்போதும் ஒரே தன்மை யாகவே இருக்கும். 

நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதுவே. தவறு, தீமை என்றெல்லாம் நாம் சொல்பவற்றைப் பலவீனத்தாலேயே நாம் செய்கிறோம். பலவீனமோ அறியாமையால் வருகிறது. பாவம் என்பதைவிடத் தவறு என்ற வார்த்தையே சிறந்ததென நான் கருதுகிறேன். பாவம் என்பது முதலில் நல்ல வார்த்தையாகத் தான் இருந்தது. ஆனால் பின்னர் அதில் ஒட்டிக்கொண்ட கருத்து எனக்குச் சற்றுப் பயமளிப்பதாக உள்ளது. யார் நம்மை அறிவிலிகளாக, மாற்றினார்கள்? நாமே நம் கைகளால் கண் களை மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று அழு கிறோம். கைகளை எடுங்கள்! வெளிச்சம் தெளிவாகிறது. வெளிச்சம் எப்போதும் இருக்கிறது. மனித ஆன்மாவின் சுய ஒளி எப்போதும் உள்ளது.  

நவீன விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் கேட்கவில்லையா? பரிணாமத்திற்குக் காரணம் என்ன? ஆசை. விலங்கு ஏதோ ஒன்றைச் செய்ய விரும்புகிறது, அதற்கு ஏற்ற சூழ்நிலைகள் அமையவில்லை. எனவே ஒரு புதிய உடலைப் படைக்கிறது. யார் படைத்தது? அந்த விலங்கே, அதன் சங்கல் பமே. நீங்கள் மிகச் சிறிய அமீபாவிலிருந்து இந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறீர்கள். இன்னும் உங்கள் சங்கல்பத்தை விரித்துக் கொண்டே செல்லுங்கள். இன்னும் மேலே போவீர்கள். இந்தச் சங்கல்பம் எல்லாம் வல்லது. அது எல்லாம் வல்லது என்றால், ஏன் என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியவில்லை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் சிறிய ‘நான்’ என் பதைப் பற்றி அல்லவா எண்ணுகிறீர்கள். அமீபாவிலிருந்து மனித நிலைவரை உங்களையே பின்னோக்கிப் பாருங்கள். யார் இவ்வளவு தூரம் செய்தது? உங்கள் சங்கல்பமே. அப்படி யானால் அது எல்லாம் வல்லது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இவ்வளவு உயர்ந்த நிலைக்கு உங்களைக் கொண்டு வந்தது, மேலும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு போகவும் செய்யும். உங்களுக்கு வேண்டியது குண நலன், உறுதியான சங்கல்பம் இவையே.  

உங்கள் இயல்பே தீமையானது, ஏதோ சில தவறுகள் செய்து விட்டதால் நீங்கள் வீட்டிற்குச் சென்றதும் கந்தல் துணியைக் கட்டிக்கொண்டு, சாம்பலைப் பூசிக்கொண்டு, உங்கள் வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டிருக்க வேண்டும் என்று சொன்னால் அது உங்களுக்கு உதவி செய்வதாகாது. மாறாக அது மேலும் உங்களைப் பலவீனப்படுத்தவே செய்யும். அப்படிக் கூறினால் நான் உங்களுக்கு நன்மைக்கான வழியைவிடத் தீமைக்கான வழியையே காட்டியதாகும். இந்த அறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருள்மண்டிக் கிடப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் உள்ளே வந்து, ‘ஐயோ, ஒரே இருளாக இருக்கிறதே!’ என்று அழுகிறீர்கள். அதனால் இருள் மறையுமா? ஒரு தீக்குச்சியை உரசுங்கள், கணநேரத்தில் ஒளி வருகிறது. வாழ்நாள் முழுவதும், ‘ஐயோ, தீமை செய்து விட்டேன், பல தவறுகளைச் செய்து விட்டேனே!’ என்று புலம்புவதால் என்ன பயன்? இதை எடுத்துச் சொல்ல ஒரு பேயும் தேவையில்லை. ஒளியைக் கொண்டுவாருங்கள், ஒரு கணத்தில் தீமை மறைந்துவிடும். குணநலனைச் செம்மைப் படுத்துங்கள். எப்போதும் தூயதான, ஒளிமிக்க, உங்கள் உண்மை இயல்பை வெளிப்படுத்துங்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு வரிலும் அதைத் தட்டி எழுப்புங்கள். மிகக் கேவலமான மனிதனிலும், அவனுள்ளிருக்கும் உண்மை ஆன்மாவைக் காணும் நிலையை நாம் ஒவ்வொருவரும் எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக, ‘ஒளி மிக்கவனே, எழுந்திரு. எப்போதும் தூயவனே எழுந்திரு. பிறப்பு இறப்பு அற்றவனே எழுந்திரு. எல்லாம் வல்லவனே, எழுந்து உனது உண்மை இயல்பை வெளிப்படுத்து. இந்த அற்ப நிலைகள் உனக்குத் தகுந்தவை அல்ல’ என்று சொல்லுங்கள்.  

இதுவே அத்வைதம் கூறும் மிக உயர்ந்த பிரார்த்தனை. நமது உண்மை இயல்பை, நம்முள்ளே எப்போதும் விளங்கும் கடவுளை, எல்லையற்றதும் எல்லாம் வல்லதும் நன்மை தரு வதும் தன்னலம் அற்றதும் எல்லைகள் இல்லாததுமான அதை எப்போதும் நினைப்பதுதான் ஒரே பிரார்த்தனை. அந்த இயல்பு சுயநலமற்றதாக இருப்பதால் வலிமை நிறைந்த தாகவும் பயமற்றதாகவும் உள்ளது. சுயநலத்திலிருந்தே பயம் வருகிறது. தனக்காக ஒன்றை விரும்பாதவன் யாரைக் கண்டு பயப்பட வேண்டும்? யார் அவனைப் பயமுறுத்த முடியும்? மரணத்திற்கு அவன் ஏன் அஞ்ச வேண்டும்? தீமையால் அவனை அச்சுறுத்த முடியுமா? 

 எனவே நாம் அத்வைதிகளாக இருந்தால், இந்தக் கணத் திலிருந்தே நமது பழைய நான் இறந்து அழிந்துவிட்டதென்று எண்ண வேண்டும். இந்தப் பழைய திரு, திருமதி, குமாரி, இன்னார் என்பவை எல்லாம் மறைந்துவிட்டன. அவை வெறும் மூடநம்பிக்கைகள். எஞ்சியிருப்பது என்றும் தூய்மையான, எப்போதும் உறுதியான, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த பொருள். அது மட்டுமே நம்மிடம் எஞ்சியுள்ளது. எல்லா பயமும் நம்மிடமிருந்து அகன்றுவிடுகிறது. எங்கும் நிறைந்த நமக்கு யார் தீங்கு செய்ய முடியும்? நம்மிடமிருந்து எல்லா பலவீனங்களும் அகன்றுவிட்டன. இனி நமது ஒரே வேலை நமது சகோதரர்களிடமும் இந்த அறிவை வளர்ப்பதே. அவர்கள் தூய ஆன்மா என்பது நமக்குத் தெரியும், அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு இதைக் கற்பிக்க வேண்டும். அவர்கள் தங்கள் எல்லையற்ற இயல்பை வெளிப்படுத்த நாம் உதவ வேண்டும். உலகம் முழுவதற்கும் இப்போது தேவை மயானது இதுதான் என்றே நான் நினைக்கிறேன். 

இந்தக் கொள்கைகள் பழமையானவை, பழைய மலை களையும்விடப் புராதனமானவை. எல்லா உண்மையும் நிலை யானவை. உண்மை என்பது யாருடைய சொத்தும் இல்லை. எந்தவோர் இனமும், எந்தத் தனிமனிதனும் உண்மைக்குத் தனிப்பட்ட சொந்தம் பாராட்ட முடியாது. உண்மை என்பது எல்லா ஆன்மாக்களின் இயல்பு. யாரால் அதனிடம் தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியும்? ஆனால் இதை நாம் செயல் முறையில் கொண்டுவர வேண்டும், எளிமையாக்க வேண்டும். (ஏனெனில் மிக உயர்ந்த உண்மைகள் எப்போதும் எளிமை யாகவே இருக்கும்). சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் இது ஊடுருவி, உயர்ந்த அறிவாளிகள், சாதாரண மனிதர்கள், ஆண், பெண், குழந்தை அனைவருக்கும் ஒரேவேளையில் பொதுவுடைமையாகத் திகழ வேண்டும். தர்க்க வாதங்கள், தத்துவக் கோட்பாடுகள், சாஸ்திரங்கள், கிரியைகள் எல்லாம் ஒருகாலத்தில் நல்லவையாக இருந்திருக்கலாம். ஆனால் இப் போது எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக்குவோம். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள மெய்ப்பொருளையே வழிபடு பொருளாகவும், ஒவ்வொரு மனிதனும் வழிபடுபவனாகவும் திகழும் பொன்னாளைக் கொண்டுவருவோம்! 

செயல்முறை வேதாந்தம் 3

செயல்முறை வேதாந்தம்

செயல்முறை வேதாந்தம் என்ற சொல்லைப் பிரபல மாக்கியவர் சுவாமி விவேகானந்தர். காட்டிலும் குகைகளிலும் வாழும் முனிவர்கள் மட்டுமல்ல, நாட்டிலும் நகரங் களிலும் அதன் பரபரப்பிலும் வாழ்கின்ற ஒவ்வொருவரும் வேதாந்தத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதை ஆணித்தரமாக எடுத்துக் காட்டினார் அவர். வேதாந்தத் தத்துவத்தின் உயிரூட்டும் தத்துவங்களையும், அவற்றை எவ்வாறு செயல் முறைப் படுத்துவது என்பது பற்றியும் அவர் பேசிய நான்கு சொற்பொழிவுகளே ‘செயல்முறை வேதாந்தம்’. லண்டனில் 1896 நவம்பர் 10, 12, 17, 18-ஆம் தேதிகளில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இவை.


சாந்தோக்கிய உபநிடதத்தில் நாரதர் என்ற முனிவர் சனத்குமாரர் என்ற மற்றொரு முனிவரிடம் வந்து பல்வேறு கேள்வி களைக் கேட்கிறார். அவற்றுள் ஒன்று, தர்மம்தான் எல்லாவற் றிற்கும் உண்மையான அடிப்படையா என்பதாகும். அதற்குப் பதிலை சனத்குமாரர் படிப்படியாக நாரதருக்கு விளக்குகிறார்: இந்தப் பூமியைவிட உயர்ந்த ஒன்று உள்ளது, அதைவிட உயர்ந்தது வேறு ஒன்று உள்ளது என்று கூறி முடிவாக ஆகா சத்தைப்பற்றிக் கூறுகிறார். ஆகாசம் ஒளியைவிட உயர்ந்தது, ஏனெனில் ஆகாசத்தில்தான் சூரியன், சந்திரன், மின்னல், நட்சத் திரங்கள் என்று எல்லாம் இருக்கின்றன. ஆகாசத்தில்தான் நாம் வாழ்கிறோம், மடியவும் செய்கிறோம்.

பின்னர் ஆகாசத்தைவிட மிக உயர்ந்தது ஏதாவது இருக் கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதற்குப் பிராணனைப் பற்றிக் கூறுகிறார் சனத்குமாரர். வேதாந்தத்தின்படி, பிராணன்தான் வாழ்க்கையின் உயிர்நாடி. ஆகாசத்தைப் போலவே இதுவும் எங்கும் நிறைந்த ஒரு தத்துவம். உடலிலோ அல்லது வேறு எங்குமோ நடைபெறும் இயக்கங்களுக்கெல்லாம் இந்தப் பிராணனே காரணம். இது ஆகாசத்தைவிட உயர்ந்தது, இதன் மூலமே எல்லாம் உயிர்வாழ்கின்றன. தாயிலும் தந்தையிலும் சகோதரியிலும் குருவிலும் இந்தப் பிராணனே உள்ளது. பிராணனே எல்லாம் அறிவது. – பல் நான் உங்களுக்கு மற்றொரு பகுதியைப் படிக்கிறேன். இதில் சுவேதகேது தன் தந்தையிடம் உண்மை என்பதைப் பற்றிக் கேட்கிறான். தந்தையும் பல விஷயங்களைக் கற்பித்து விட்டு முடிவாக, ‘எல்லா பொருட்களுடையவும் நுண்ணிய காரணமாக இருப்பது எதுவோ, அதனாலேயே அனைத்தும் ஆக்கப்பட்டிருக்கிறது. அதுவே எல்லாமாக இருக்கிறது, ஓ சுவேதகேது, அதுவே உண்மை , அதுவே ஆன்மா, நீ அதுவாகவே இருக்கிறாய்” என்றார். பிறகு பல உதாரணங்களைக் காட்டு கிறார்: ‘ஓ சுவேதகேது, தேனீ பலவிதமான பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கிறது. அந்தத் தேன் துளிகளுக்கு, தாம் இன்ன மரத்திலிருந்து, இந்த மலரிலிருந்து வந்தோம் என்று தெரியாது. அதுபோலவே ஸத்திலிருந்து, இருப்பிலிருந்து தோற்றத்திற்கு வந்துள்ள நாம் அதை மறந்துவிட்டோம். அந்த மிக நுண்ணிய சாரப்பொருள் எதுவோ, அதிலேயே, இருப்பவை அனைத்தின் உண்மை உள்ளது. அதுதான் ஆன்மா, ஓ சுவேதகேது, அதுவே நீ’ என்றார். 

 அவர் மற்றொரு உதாரணத்தையும் கூறுகிறார்: ‘எல்லா நதிகளும் கடலில் கலந்த பிறகு அவை தாங்கள் தனித்தனியான நதிகளாக இருந்தோம் என்பதை உணர்வதில்லை. அது போலவே, நாமும் ஸத்திலிருந்து வந்த பிறகு, அதுவே நாம் என்று அறிவதில்லை . ஓ சுவேதகேது, நீ அதுவாகவே இருக் கிறாய்.” இவ்வாறு அவரது உபதேசங்கள் தொடர்கின்றன. 

அறிவைப்பற்றி இரண்டு கொள்கைகள் உள்ளன. ஒன்று தனிப்பட்ட கொள்கையைக் கொண்டு பொதுக் கொள்கையை யும், அந்தப் பொதுக் கொள்கையிலிருந்து உலகம்தழுவிய கொள்கையையும் கண்டுபிடித்துக் கூறுவது. மற்றொன்று எந்தப் பொருளை விளக்க வேண்டுமோ, அதை, முடிந்தவரை அதன் சொந்த இயல்பிலிருந்தே விளக்குவது. 

முதல் கொள்கையின்படிப் பார்த்தால் நம்முடைய அறிவு முழுவதும் உண்மையில் படிப்படியாக உயர்ந்த நிலைகளுக்கு செல்கின்ற பாகுபடுத்தல்களே. தனியாக ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் நாம் அதனால் திருப்தி அடையாதது போலிருக் கிறோம். அதே நிகழ்ச்சி மீண்டும்மீண்டும் நடைபெறுமானால் நாம் திருப்தி அடைகிறோம்; அதை நியதி என்றும் கூறுகிறோம். ஓர் ஆப்பிள் கீழே விழும்போது நாம் திருப்தி அடைவதில்லை. எல்லா ஆப்பிள்களும் கீழே விழும்போது அதை நாம் புவியீர்ப்பு விசை என்று பெயரிடுகிறோம், திருப்தி அடைகிறோம். உண்மை என்னவென்றால் நாம் தனிக் கொள்கையிலிருந்து பொதுக் கொள்கைக்கு வருகிறோம் என்பதே.

மதத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும்போதும் இந்த விஞ்ஞான முறையையே பயன்படுத்த வேண்டும். அதே முறை இங்கும் பொருந்துகிறது. உண்மையில் இதுவே எங்கும் விளங்கும் முறையாக இருந்துவந்துள்ளது. உங்களுக்கு மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருக்கின்ற இந்த நூல்களைப் படித்ததில் என்னால் காண முடிந்த மிகப் பழமையான கருத்து, தனிநிலையிலிருந்து பொதுநிலைக்குச் செல்லும் இந்த முறை தான். ‘ஒளிமிக்கவர்கள்’ (தேவர்கள்) எப்படிக் கலந்து ஒரே தத்துவமாக ஆகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். நமது பண்டைய சிந்தனையாளர்களும் பிரபஞ்சம் பற்றிய கருத்துக் களில் இப்படித்தான் மேன்மேலும் ஆராய்ந்துகொண்டே போவதைக் காண்கிறோம். நுண்ணிய மூலங்களிலிருந்து மிக நுண்ணியவற்றிற்கு, மேலும் நுண்ணியவற்றிற்கு வந்து எங்கும் நிறைந்த ஆகாசம் என்ற கருத்திற்கு வருவதைக் காண்கிறோம். இன்னும் ஆழ்ந்து சென்று எங்கும் பரந்துள்ள சக்தி அல்லது பிராணன் என்பதற்கு வருகிறார்கள். இவை எல்லாவற்றின் ஊடே, ஒன்று மற்றதிலிருந்து மாறுபட்டதல்ல என்ற தத்துவம் ஊடுருவி நிற்கிறது. இந்த ஆகாசமே உயர்ந்த நிலையில் பிராண னாகக் காட்சியளிக்கிறது; அல்லது இந்தப் பிராணனே தூல வடிவில் ஆகாசமாகத் தோன்றுகிறது. இந்த ஆகாசம் மேலும் தூலமாகிக்கொண்டே செல்கிறது. – 

 சகுணக் கடவுளைப் பொதுமைப்படுத்துவது மற்றொரு கருத்து. எப்படி இது அடையப்படுகிறது என்பதையும், அந்தப் பொதுமையே உணர்வுகளின் மொத்தத் தொகுதி என்று அழைக்கப்பட்டது என்பதையும் நாம் முன்னரே பார்த்தோம். இதில் ஒரு குறைபாடு ஏற்படுகிறது. இந்தப் பொதுமைப்படுத்தல் முழுமையாகாதது. இயற்கையின் ஒருபுற உண்மைகளான உணர்வுகளை மட்டுமே நாம் எடுத்துக்கொண்டு பொதுமைப் படுத்துகிறோம், மறுபுறத்தை விட்டுவிடுகிறோம். எனவே முதலில் இது ஒரு குறைபாடுள்ள பொதுமைப்படுத்தல் ஆகும். 

இதில் மற்றொரு குறைபாடு உள்ளது. இது இரண்டாவது கருத்தைப் பற்றியது. ஒவ்வொரு பொருளும் அதன் இயல்பைக் கொண்டே விளக்கப்பட வேண்டும். ஒரு பிசாசு இழுப்பதால் தான் ஒவ்வோர் ஆப்பிளும் கீழே விழுகிறது என்று நம்புகின்ற பலர் இருக்கலாம். ஆனால் ஆப்பிள் விழுவதற்கான விளக்கம் புவியீர்ப்பு விசை என்பதே. இந்த விளக்கம் முற்றிலும் திருப்தி கரமானதாக இல்லை என்பது நமக்குத் தெரிந்தாலும் மற்ற வற்றைவிடச் சற்று ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஏனெனில் அந்தப் பொருளின் இயல்பைக் கொண்டே அது  விளக்கப்படுகிறது. ஆனால் மற்றதோ புறக் காரணம் ஒன்றைக் காட்டுகிறது. இவ்வாறே நமது அறிவு முழுவதும் விளக்கப் படுகிறது. பொருளுடைய இயல்பின் அடிப்படையில் அமைந்த விளக்கம்தான் விஞ்ஞானரீதியான விளக்கம். புறக் காரணங் களால் விளக்கப்படுபவை விஞ்ஞானரீதியானவை அல்ல. 

 சகுணக் கடவுள் இந்த உலகத்தின் படைப்பிற்குக் காரண மானவர் என்ற விளக்கமும் இந்தச் சோதனைக்கு உட்பட வேண்டும். அந்தக் கடவுள் இயற்கைக்கு வெளியே இருப்பவர், இயற்கையுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாதவர். இயற்கை அந்தக் கடவுளின் உத்தரவால் சூன்யத்திலிருந்து உண்டாக் கப்பட்டது என்று சொன்னால் அது விஞ்ஞானரீதியான கொள்கையாகாது. இதுவே சகுணக் கடவுள்கருத்து சார்ந்த மதங்களில் காலங்காலமாக உள்ள குறைபாடாக இருந்து வரு கிறது. சகுணக் கடவுள் மானிடப் பண்புகளுடன் கூடியவர், ஆனால் அந்தப் பண்புகள் அவரிடம் மிகப் பல மடங்கு அதிக மாக இருக்கும். அவர் தமது விருப்பமாத்திரத்தால் சூன்யத் திலிருந்து இந்த உலகத்தைப் படைத்தார். அவர் இந்த உலகத் திலிருந்து வேறுபட்டவர். சகுணக் கடவுள்கொள்கையில் இந்த இரு குறைபாடுகளும் பொதுவாக இருந்தே வருகின்றன. இதனால் இரண்டு பிரச்சினைகள் எழுகின்றன. 

முதலில், நாம் முன்னரே பார்த்ததுபோல் இது போதுமான பொதுமைக் கொள்கையாக இல்லை. இரண்டாவதாக, இது இயற்கையிலிருந்தே இயற்கைக்கான விளக்கமாகவும் இல்லை. காரணம் காரியம் அல்ல; காரணம் காரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்கிறது இந்தக் கொள்கை. ஆனால் காரியம் என்பது காரணத்தின் மாறுபட்ட வடிவம் என்பதே மனித அறிவு நமக்குக் காட்டும் உண்மை. நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக்கள் இந்தக் கருத்தை நோக்கியே ஒவ்வொரு நாளும் செல்கின்றன. சமீப காலத்தில் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற கொள்கை பரிணாம வாதம். காரியம் என்பது காரணத்தின் மறு வடிவமே; காரணத்தின் ஒழுங்குபடுத்தப் பட்ட வடிவமே. காரணம்தான் காரியமாக உருவெடுக்கிறது என்பதே பரிணாம வாதத்தின் அடிப்படைக் கோட்பாடு. சூன்யத்திலிருந்து படைப்பு வந்தது என்னும் கொள்கை இன்றைய விஞ்ஞானிகளின் நகைப்பிற்கே இடம் கொடுக்கும்.  

மதம் இந்தச் சோதனைகளைத் தாங்கி நிற்குமா? இந்த இரண்டு சோதனைகளுக்கும் ஈடுகொடுத்து நிற்கும் மதக் கொள்கைகளையே நவீன மனங்கள், பகுத்தறிவு மனங்கள் ஏற்றுக்கொள்ளும். மதக் குருமார்கள், கோயில்கள், சாஸ்தி ரங்கள் இவற்றை நம்பச் சொன்னால் இன்றைய மனிதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல, பயங்கரமான அவநம்பிக்கைக் கூட்டம் ஒன்று உருவாகவும் அது வழிவகுக்கும். நம்புவதுபோல் வெளியில் காட்டிக் கொள்பவர்களிடமும், உள்ளத்தில் பயங்கரமான அவநம்பிக்கை உள்ளது. பிறரோ, மதம் என்பதே மதக் குருமார்களின் வித்தைகள் என்று அதி லிருந்து விலகிப்போய் விடுகின்றனர். 

மதம் என்பது ஒருவித தேசச் சடங்காகச் சுருக்கப்பட்டு விட்டது. பண்டைய சிறந்த சமுதாயத்தின் ஏதோ எஞ்சியுள்ள ஓர் அடையாளம் அது. அது இருக்கட்டும். நவீனகால மனிதனின் முன்னோர்களுக்கு மதம் உண்மையாகத் தேவைப் பட்ட அளவுக்கு இன்று அதன் தேவையை யாரும் உணர வில்லை. அந்த நிலைமை போய்விட்டது. தனது அறிவுபூர்வ மான ஆராய்ச்சிகளுக்கு அது திருப்திகரமாக இல்லை என்பதை நவீன மனிதன் கண்டுவிட்டான். சகுணக் கடவுள் கருத்து, படைப்புக் கருத்து, ஒவ்வொரு மதத்திலும் உள்ள துவைதக் கருத்துக்கள்-இவையெல்லாம் இனியும் செல்லுபடியாகாது. இந்தியாவில் இவை நிலைபெறாததன் காரணம் பௌத்தர்கள். பழைய காலத்தில் இந்த விஷயத்தில்தான் அவர்கள் தங்கள் வெற்றியையும் நிலைநாட்டினர். இயற்கை எல்லையற்ற சக்தி உடையது என்றும் தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ள வல்லது என்றும் இருந்தால், இயற்கையைத் தவிர இன்னொன்று இருப்பதாக வற்புறுத்துவது சிறிதும் தேவை யற்றது; ஆன்மாகூடத் தேவையற்றது என்பதை பௌத்தர்கள் எடுத்துக்காட்டினர். 

பொருளும் அதன் தன்மைகளும் பற்றிய விவாதம் மிகவும் பழமையானது. பழைய மூடநம்பிக்கைகள் இப்போதும் இருந்து வருவதைச் சிலவேளைகளில் காணலாம். தன்மை என்பது பொருளைச் சேர்ந்ததா? உயிரற்ற ஜடம் என்று நாம் கூறும் பொருளில் நீளம், அகலம், பருமன் இவை ஒட்டியிருக்கிறதா? பொருள் மாறாதபோது தன்மை அப்படியே இருக்குமா, மாறுமா?- இவையே இடைக்காலங்களிலும், ஏன், அதற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரும்கூட விவாதத்திற்கான விஷயங் களில் ஒன்றாக இருந்ததை நீங்கள் பலரும் படித்திருக்கலாம். இதை நான் வருத்தத்துடனேயே கூறுகிறேன். இதற்கு  பௌத்தர்கள், ‘அத்தகைய பொருள் என்ற ஒன்று இருப்பதற்கு ஆதாரம் ஒன்றுமே இல்லை, இருப்பவை அதன் தன்மைகள் மட்டுமே. அதற்கு அப்பால் நீ பார்க்கக்கூடியது எதுவுமே இல்லை’ என்கிறார்கள். இதுவே தற்கால ஆஜ்ஞேயவாதிகளுள் (Agnostics) பலரது கருத்தாகும். 

பொருளுக்கும் அதன் குணங்களுக்கும் இடையில் உள்ள இந்த விவாதம் சற்று உயர்ந்த நிலையில் அறுதி உண்மைக்கும் (noumenon) தோன்றும் உண்மைக்கும் (phenomenon) இடை யிலுள்ள விவாதமாக உருவெடுக்கிறது. தோன்றும் உண்மை யாகிய இந்த உலகம், அதாவது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்ற இந்தப் பிரபஞ்சம் இதோ உள்ளது. இதற்குப் பின்னால் மாறுபடாத ஒன்று இருக்கிறது. தோன்றும் உண்மை, அறுதி உண்மை இரண்டுமே உண்மை என்று சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள். வேறு சிலர், இன்னும் உறுதியான காரணங்களைக் காட்டி இந்த இரண்டையும் ஏற்க உரிமை யில்லை என்கிறார்கள். நாம் பார்ப்பதும் உணர்வதும் நினைப்பதும் வெறும் தோற்றமே, இந்தத் தோற்றத்திற்குப் பின்னால் ஒன்று இருக்கிறது என்று கூற உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது அவர்கள் கூற்று. அவர்களின் கேள்விக்குப் பதிலும் இல்லை. 

 வேதாந்தத்தின் அத்வைதக் கொள்கை ஒன்றே இதற் குப் பதிலளிக்கிறது. ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்பது தான் உண்மை. அந்த உண்மை, தோன்றும் உண்மையாகவும் இருக்கலாம், அறுதி உண்மையாகவும் இருக்கலாம். மாறக் கூடிய ஒன்று உள்ளது; அதற்கு உள்ளும் அதன்மூலமாகவும் வேறொன்று உள்ளது, அது மாறாதது; – இவ்வாறு இரண்டு இருப்பது உண்மையல்ல. இருப்பது ஒன்றே. அது மாறுபடு வதுபோல் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் மாற்றமின்றி இருக்கிறது. உடல், மனம், ஆன்மா என்று பலவாக எண்ணி நாம் பழகிவிட்டோம். ஆனால் உண்மையில் இருப்பது ஒன்றே. அந்த ஒன்றே பல வடிவங்களில் தோற்றம் அளிக்கிறது. 

அத்வைதிகளின் பிரபலமான உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கயிறு, பாம்புபோல் தோன்றுகிறது. இருளோ அல்லது வேறு ஏதோ காரணத்தால் சிலர் கயிற்றைப் பாம்பாக எண்ணுகின்றனர். அறிவு வரும்போது பாம்பு மறைந்து அது கயிறு என்பது தெரிகிறது. எனவே மனத்தில் பாம்பின் எண்ணம் இருக்கும்போது கயிறு எண்ணம் மறைகிறது, கயிறு எண்ணம் இருக்கும்போது பாம்பு எண்ணம் இருப்பதில்லை என்பதை இந்த உதாரணத்திலிருந்து அறிகிறோம். தோன்றும் உண்மையை அதாவது நம்மைச் சுற்றியிருக்கும் தோற்றங்களை மட்டுமே காணும்போது அறுதி உண்மை மறைகிறது. மாறுதலற்ற அறுதி உண்மையைக் காணும்போது, தோன்றும் உண்மை மறைந்து விடுகிறது. 

இப்போது நாம் பிரத்தியட்சவாதிகள் (Realists), லட்சிய வாதிகள் (Idealists) என்ற இருவரின் நிலையையும் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம். பிரத்தியட்சவாதி தோன்றும் உண்மையை மட்டும் ஏற்றுக் கொள்கிறான், லட்சியவாதி அறுதி உண்மையை ஏற்றுக் கொள்கிறான். மாற்றங்கள் பற்றிய கருத்துக்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு நின்று உலகைப் பார்க்கவல்ல ஆற்றல் பெற்ற லட்சியவாதிக்கு, அதாவது உண்மையான லட்சியவாதிக்கு மாறுபடும் இந்த உலகம் மறைந்தே விடுகிறது. உலகம் மாயை, மாற்றம் என்பதே இல்லை என்று சொல்ல அவனுக்கே உரிமை உண்டு. ஆனால் பிரத்தியட்சவாதிகள் மாறுபடுபவற்றையே பார்க்கிறார்கள். அவர்களுக்கு, மாறுபாடற்றது மறைந்துவிடுகிறது. உலகம் உண்மை என்று கூறத்தான் அவர்களுக்கு உரிமை உண்டு. 

இந்தத் தத்துவத்தின் விளைவு என்ன? சகுணக் கடவுள் கொள்கை போதுமானதல்ல, அதைவிட மேலானதற்கு, நிர்க் குணக் கருத்திற்கு நாம் சென்றாக வேண்டும் என்பதுதான். நாம் தர்க்கபூர்வமாகச் செல்லக்கூடியது அந்த இடத்திற்குத்தான். இதனால் சகுணக் கடவுள்கருத்து அழிந்துவிடும் என்பதோ, சகுணக் கடவுள் இல்லை என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங் களைக் காட்டப் போகிறோம் என்பதோ அல்ல. சகுணநிலையை விளக்க வேண்டுமானால் நிர்க்குண நிலைக்குச் சென்றாக வேண்டும். ஏனெனில் நிர்க்குண நிலை என்பது சகுண நிலையை விட மிக மேலான ஒரு பொதுமைக் கொள்கையாகும். நிர்க்குண மானது மட்டுமே எல்லையற்றதாக இருக்க முடியும். சகுண நிலை எல்லைக்கு உட்பட்டது. இப்படி நாம் சகுணக் கருத்தைப் பாதுகாக்கிறோமே தவிர அழிக்கவில்லை. நிர்க்குணக் கடவுள் கருத்திற்கு இடமளித்தால் சகுணக் கடவுள்கருத்து அழிந்து விடும் என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது. ஆனால் வேதாந்தத்தின் கருத்து தனித்துவத்தை அழிப்பதல்ல, அதை உண்மையாகப் பாதுகாப்பதே. உலகைக் கருத்தில் கொள்ளாமல், தனி மனிதத்துவம் என்பது பிரபஞ்சத்துவம் என்பதைக் காட்டாமல், எந்த வழியிலும் தனிமனிதனை நிரூபிக்க முடியாது. உலகிலுள்ள பிறவற்றிலிருந்து தனிமனிதன் வேறுபட்டவன் என்று நாம் எண்ணினால் அந்தக் கருத்து ஒருகணம்கூட நிற்க முடியாது. அத்தகைய ஒன்று இருந்ததே இல்லை.  

இப்போது, பொருளின் இயல்பிலிருந்தே அதன் விளக்கம் வர வேண்டும் என்ற இரண்டாவது கருத்தை உபயோகப்படுத்து வோம். இங்கே மேற்கண்டதைவிட மிகத் துணிவானதும் புரிந்து கொள்ளக் கடினமானதுமான ஒரு கருத்திற்கு வந்து சேர்வோம். நமது மிக உயர்ந்த பொதுமையான நிர்க்குணப் பொருள் நம் முள்ளேயே இருக்கிறது, நாமே அது என்பதுதான் அந்தக் கருத்து. ‘சுவேதகேது, நீயே அது!’ நீயே அந்த நிர்க்குணப் பரம் பொருள். உலகெங்கும் நீ தேடி அலையும் கடவுள் என்றும் நீயே. இங்கு ‘நீ’ என்பது சகுணக் கருத்தில் அல்ல, நிர்க்குணக் கருத்திலேயே. நாம் அறிந்த இந்தத் தோன்றும் மனிதன் என்ப வன் குணங்களுடன் கூடியவன். ஆனால் அவனது உண்மை நிர்க்குணமே. சகுணத்தைப் புரிந்துகொள்ள நாம் நிர்க்குணத் தைக் கருத்தில் கொண்டாக வேண்டும். தனிப்பட்டதைக் குறிக்கப் பொதுவானதைக் கருத்தில் கொண்டேயாக வேண்டும். அந்த நிர்க்குணமே மெய்ப்பொருள், மனிதனின் ஆன்மா.  

இதுபற்றிய வேறு பல கேள்விகள் உள்ளன. போகப்போக அவற்றிற்குப் பதில் கூற முயற்சிக்கிறேன். பலசிக்கல்கள் தோன்ற லாம். முதலில் அத்வைதத்தின் நிலையைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வோம். நாம் பலவாகத் தோன்றுகிறோம், ஆனால் நமது உண்மை ஒன்றே. அந்த ஒன்றிலிருந்து வேறுபட்டவர் களாக நம்மை நாம் எவ்வளவு குறைவாக நினைக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லது. அந்த முழுப் பொருளிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று எவ்வளவு அதிகமாக நினைக் கிறோமோ, அவ்வளவுக்கு நமது துயரமும் அதிகமாகும். 

 இந்த அத்வைதக் கோட்பாட்டில் நீதிநெறிகளுக்கான அடிப்படையைக் காண்கிறோம். வேறெங்கிருந்தும் எந்த நீதி நெறியையும் நாம் பெற முடியாதென்று நான் உறுதியாகக் கூறுவேன். நீதிநெறி என்பது குறிப்பிட்ட ஒருவரது அல்லது பலரது சங்கல்பங்கள் என்பதே பழைய கருத்தாக இருந்ததை நாம் அறிவோம். இன்று இதை மிகச்சிலரே ஏற்றுக் கொள் வார்கள், ஏனெனில் இந்தக் கருத்து முழுமையான பொதுமைக் கருத்து அல்ல. ‘இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே’ என்று இந்துக்கள் கூறுகிறார்கள். ஏன் என்று கேட்டால் வேதம் கூறுவதாகச் சொல்வார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் வேதங்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை. கிறிஸ்தவர் களும், ‘இதைச் செய், அதைச் செய்யாதே’ என்று பைபிள் கூறுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் பைபிளில் நம்பிக்கை யில்லாதவர்களை அது கட்டுப்படுத்தாது.  

எனவே இந்த எல்லாவிதமான கருத்துக்களையும் தன்னுள் அடக்கவல்ல பரந்த கொள்கை நமக்கு வேண்டும். படைப்பவ ரான ஒரு சகுணக் கடவுளை கோடிக்கணக்கானோர் நம்பத் தயாராக இருக்கிறார்கள். அறிவுத்திறன் மிக்க பலருக்கோ அத்தகைய கருத்துக்கள் போதுமானவையாக இல்லை; அவற்றைவிட மேலான ஒன்று அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் இடமளிக்கும் அளவிற்கு ஒரு மதம் பரந்ததாக இல்லாதபோது, சமுதாயத்திலுள்ள அறிஞர்கள் எப்போதும் மதத்திற்கு வெளியே தனித்தே நின்றனர். இந்த நிலை இன்றுபோல் இவ்வளவு தீவிரமாக என்றுமே இருந்ததில்லை. முக்கியமாக ஐரோப்பாவில் இப்படிப் பட்ட நிலைதான் உள்ளது. இத்தகைய மனங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் மதம் போதிய அளவு பரந்த நோக்குடையதாக இருக்க வேண்டும். அது கூறும் கொள்கைகளெல்லாம் அறிவுபூர்வமானவையாக இருக்க வேண்டும். மதங்கள் தங்களை அறிவாராய்ச்சிக்குக் கட்டுப் பட்டவை அல்ல என்று ஏன் கூறிக் கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை .  

மதங்களாக இருந்தாலும், அவை அறிவாராய்ச்சி என்ற அளவுகோலால் பார்க்கப்படவில்லை என்றால் அவற்றைப் பற்றிச் சரியான முடிவுக்கு நாம் வர முடியாது. மிகவும் பயங் கரமான ஒன்றை ஒரு மதம் அனுமதிக்கலாம். உதாரணமாக, முகமதியர் அல்லாத பிறரைக் கொல்ல முகமதிய மதம் அனு மதிக்கிறது. ‘முகமதிய மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் முகமதியர் ஆக மறுத்தால் அவர்களைக் கொன்றுவிடுங்கள்’ என்று குரானில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவர்களைத் தீக்கோ வாளுக்கோ இரையாக்கலாம். இது தவறு என்று கூறி னால் உடனே முகமதியர்கள், ‘அது உனக்கு எப்படித் தெரியும்? அது தவறென எப்படி நீ அறிவாய்? எங்கள் நூல் இது சரி என்று கூறுகிறதே!’ என்று கேட்பார்கள். அது இயல்புதான். 

எங்கள் நூல் மிகவும் பழமையானது என்று நீங்கள் சொன்னால் தங்கள் நூல்கள் இன்னும் பழமையானவை என்பார்கள் பௌத்தர்கள். இந்துக்களோ, தங்கள் நூல்கள் அனைத்தையும்விடப் பழமையானது என்பார்கள். எனவே நூல்களை அடிப்படையாகக் கொள்வது பயன்படாது. அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவுகோல் எது? மலைப் பிரசங்கத்தைப் பாருங்கள் என்று நீங்கள் கூறினால், முகமதி யர்கள் குரானில் உள்ள நீதிநெறிகளைப் பாருங்கள் என்று பதிலளிப்பார்கள். இவை இரண்டுள் சிறந்தது எது என்று தீர்மானித்துக் கூறும் நடுவர் யார் என்று கேட்பார்கள் முகமதி யர்கள். இந்தச் சச்சரவில் பைபிளோ குரானோ நடுவராக இருக்க முடியாது. அதற்கு, எதையும் சாராத தனிப்பட்ட ஒன்று வேண்டும். அது எந்த நூலாகவும் இருக்க முடியாது. அது உலகம்தழுவிய ஒன்றாக இருக்க வேண்டும். அறிவைவிட உலகம் தழுவிய ஒன்று எது இருக்க முடியும்? ஆனால் அறிவு போதிய வலுவானதல்ல, உண்மையை அறிய அது எப்போதும் பயன்படுகிறது என்று சொல்ல முடியாது. பல வேளைகளில் அது தவறிவிடுகிறது. எனவே ஒரே முடிவு சர்ச்சின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதுதான் என்று கூறப்படுகிறது. ரோமன் கத்தோலிக்கர் ஒருவர் இப்படித்தான் என்னிடம் கூறினார். ஆனால் அதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை . அறிவு பலவீனமானது என்றால், மதக் குரு மார்களின் கூட்டம். அதைவிடப் பலவீனமானது. அவர்கள் கூறுவதை என்னால் ஏற்க முடியாது, அறிவு வழியில்தான் நான் போவேன் என்றே நான் கூறுவேன். ஏனெனில் அறிவு பலவீனமானதாக இருந்தாலும், அதன்மூலம் உண்மையை அடையும் வாய்ப்பு என்றாவது கிடைக்கலாம். மற்ற வழிகளில் அந்த நம்பிக்கைகூட இல்லை.  

எனவே நாம் அறிவுவழியைப் பின்பற்ற வேண்டும். ஆனால் அந்த வழியை நம்பாதவர்களிடமும் நாம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக, எந்தவிதமான அடிப் படையுமின்றி இருபது கோடி தேவர்களை நம்புவதைவிட அறிவை நம்பி நாத்திகர்களானாலும் அதுவே மனித குலத்திற்கு நல்லது. நாம் வேண்டுவது முன்னேற்றம், விரிவு, மெய்யுணர்வு. வெறும் கொள்கைகள் மனிதனை ஒருபோதும் உயர்த்தியதே இல்லை. எத்தனை நூல்களாலும் நம்மைத் தூயவராக்க முடியாது. மெய்யுணர்விலேயே உண்மையான ஆற்றல் உள்ளது. அது நம்மிடமே உள்ளது. தீவிரமாகச் சிந்திப்பதாலேயே நாம் அதை அடைகிறோம். மனிதர்கள் சிந்திக்கட்டும். மண்ணாங் கட்டி ஒருபோதும் சிந்திப்பது இல்லை, ஆனால் அதுமண்ணாங் கட்டியாகவே இருக்கிறது. அறிவுஜீவி என்பதில்தான் மனித னுடைய பெருமை இருக்கிறது. சிந்திப்பது அவனது இயல்பு. இதனால்தான் அவன் விலங்குகளிடமிருந்து வேறுபடுகிறான். நான் அறிவுபூர்வமாகச் சிந்தித்து அந்த வழியில் செல்பவன். நூல்களைப் பிரமாணமாக ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் தீமைகளை நான் நன்கு அறிவேன். ஏனெனில் அதனை அதன் எல்லைவரை உபயோகப்படுத்திய நாட்டில் பிறந்தவன் நான். 

படைப்பு என்பது வேதங்களிலிருந்து தோன்றியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். பசு என்ற ஒன்று இருக்கிறது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? பசு என்ற வார்த்தை வேதங்களில் இருப்பதிலிருந்துதான். வெளியில் மனிதன் ஒருவன் இருக்கிறான் என்று எப்படி நீங்கள் அறிவீர்கள்? மனிதன் என்ற வார்த்தை வேதங்களில் இருப்பதிலிருந்துதான். வேதங்களில் இந்த வார்த்தை இல்லை என்றால் மனிதன் என்பவனே வெளியில் இருந்திருக்க மாட்டான். இப்படித்தான் இந்துக்கள் கூறுகின்றனர். நூல்களைப் பிரமாணமாகக் கொள் வதன் மிதமிஞ்சிய எல்லை இது. நான் படித்த முறையில் அவர்கள் படிக்கவில்லை. ஆனால் ஆற்றல் மிக்க சிலர் அதை எடுத்துக்கொண்டு மிக அருமையான, அறிவுபூர்வமான கருத்துக்களை நிறுவியுள்ளனர். அதைத் தர்க்க முறையில் ஆராய்ந்து ஒரு தத்துவநெறியையே உருவாக்கியுள்ளனர். ஆயிரக் கணக்கான அறிஞர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இந்தக் கொள்கையை உருவாக்கி வந்துள்ளனர். நூல் களைப் பிரமாணமாகக் கொள்வதன் வலிமை இத்தகையது. இதனால் விளையும் ஆபத்துக்களும் பல. மனித இனத்தின் வளர்ச்சியையே அது தடை செய்கிறது. நாம் வேண்டுவது வளர்ச்சியே என்பதை மறக்கக் கூடாது. உண்மையைவிடச் சார்பு உண்மைகள் அனைத்திலும் இந்தப் பயிற்சி தேவை யாகிறது. அதுவே நமது வாழ்க்கை .

 நாம் அறிந்த மற்ற எல்லா மதக் கருத்துக்களையும்விட அறிவுபூர்வமானதாக இருக்கிறது என்பது அத்வைதக் கொள்கையின் பெருமையாகும். மற்ற கொள்கைகள் எல்லாம், கடவுள் பற்றிய கருத்துக்கள் எல்லாம் ஒருதலைப் பட்சமானவை. சகுணக் கருத்து அறிவுபூர்வமானதும் அல்ல. எனினும் இந்த முழுமையற்ற கருத்துக்களும் பலருக்குத் தேவையாக இருப்பதால், அத்வைதக் கொள்கை அவற்றையும் அணைத்து கம்பீரமாக நிற்கிறது. சகுணக் கருத்து அறிவுபூர்வமானதல்ல என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அது மனத்திற்கு ஏற்றதாக, ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. மனத்திற்கு ஆறுதலான ஒரு மதமே பலருக்குத் தேவை. எனவே அது அவர்களுக்கு இன்றியமையாதது. உண்மையின் ஒளியைத் தாங்க சிலராலேயே முடியும்; அதையே லட்சியமாகக் கொண்டு வாழ மிகச் சில ராலேயே முடியும். எனவே இந்த வசதியான மதம் இருந்தே யாக வேண்டும். இன்னும் சிறப்பான மதத்தைப் பலர் அடைய அது உதவுகிறது. சிறிய வட்டத்திற்குள் உழன்று, தாங்கள் முன்னேறச் சிறு விஷயங்களையே வேண்டி நிற்பவர்கள் உயர்ந்த கருத்துக்களை எண்ண ஒருபோதும் முயல்வதில்லை. அவர்களின் கருத்துக்கள் சிறு தேவர்களையும் சின்னங் களையும் பற்றியவையாக இருந்தாலும் அவை நல்லவை, அவர் களுக்கு உதவுபவை. ஆயினும் நிர்க்குணத்தைப்பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதன்மூலம்தான் மற்றவை அனைத்தையும் விளக்க முடியும்.  

சகுணக் கடவுள்கருத்தை எடுத்துக் கொள்வோம். நிர்க் குணக் கருத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய, நம்புகின்ற ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) போன்ற ஒருவர், சகுணக் கடவுள் கிடையாதென்றும், அந்தக் கருத்தை நிரூபிக்க முடியா தென்றும் கூறலாம். நிரூபிக்க முடியாது என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நிர்க்குணப் பரம்பொருளின் நிலைகளுள் மனித அறிவுக்கு எட்டிய மிக உயர்ந்த கருத்து சகுணக் கடவுள்தான். படைப்பு என்பதே அந்தத் தனிப் பரம் பொருளின் பலவிதத் தோற்றங்களைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? நம் முன் உள்ள ஒரு புத்தகம் போன்றது அது. அதைப் படிப்பதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அறிவைக் கொண்டு வந்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங் களே அதைப் படித்துக் கொள்ளவும் வேண்டும். எல்லா மனிதர் களின் அறிவிற்கும் பொதுவான ஒன்று உள்ளது. எனவே மனித இனத்தின் அறிவிற்குச் சில விஷயங்கள் ஒருபோலவே தோன்றுகின்றன. நானும் நீயும் நாற்காலியை ஒருபோலவே பார்க்கிறோம் என்பது, நமது மனங்களுக்குப் பொதுவான ஒன்று இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆனால் வேறு ஒரு புலன் உடைய ஒருவன் வந்தால் அவனால் அந்த நாற்காலியைப் பார்க்க முடியாது. ஒருபோலப் படைக்கப்பட்டவர்கள் ஒரு போலவே காண்பார்கள். 

நாம் இவ்வாறு இந்த உலகமே சார்பற்றது, மாறாதது, அறுதி உண்மையானது; தோன்றுபவை அனைத்தும் அதை அறிவால் உணர்ந்ததே. எல்லாவிதமான தோற்றங்களும் எல்லைக்கு உட் பட்டவை என்று முதலில் காண்கிறீர்கள். நம்மால் பார்க்க முடிந்த, உணர முடிந்த, சிந்திக்க முடிந்த அனைத்தும் நம் அறிவால் எல்லைப்படுத்தப் பட்டுள்ளன. நாம் சிந்திக்கின்ற சகுணக் கடவுள்கூட உண்மையில் ஒரு தோற்றமே. இந்தத் தோன்றும் உலகில்தான் காரணகாரியக் கருத்து இருக்கிறது. எனவே இந்தப் படைப்பின் காரணமாகிய கடவுளும் எல்லைக்கு உட்பட்டவர் என்றே கருத வேண்டியிருக்கிறது. ஆனால் நிர்க் குணக் கடவுளும் அவரே. முன்னரே கூறியதுபோல் பிரபஞ்சம் என்பது நம் அறிவால் உணரப்பட்ட நிர்க்குணக் கடவுளே. இந்தப் படைப்பில் உண்மையென்று சொல்லத்தக்க அனைத்தும் அந்த நிர்க்குணப் பரம்பொருளே. அதற்கு உருவங்களையும் கருத்துக்களையும் தருவது நம் அறிவே. உண்மையென்று இந்த மேஜையில் ஏதாவது உண்டானால், அது அந்தக் கடவுளே. மேஜை வடிவத்தைக் கொடுத்தது நமது அறிவு. மற்ற உருவங் களும் இப்படியே. 

உதாரணமாக, தோன்றும் உலகில் அசைவு அல்லது இயக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. ஆனால் அதைப் பிரபஞ்ச நிலையில் தொடர்புபடுத்த முடியாது. ஒவ்வொரு சிறிய பொருளும் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அணு ஒவ்வொன் றும் எப்போதும் மாறிக்கொண்டும் இயங்கிக்கொண்டுமே இருக்கின்றன. ஆனால் பிரபஞ்சத்தை முழுமையானதாக எடுத்துக் கொண்டால், அது மாறுபாடு இல்லாததாக இருக் கிறது. ஏனென்றால் இயக்கம், மாறுபாடு என்று நாம் கூறுபவை எல்லாம் சார்புடையவை. இயங்காத ஒன்றுடன் தொடர்பு படுத்தியே இயங்குகின்ற ஒன்றை நாம் புரிந்துகொள்ள முடியும். இயக்கத்தை அறிய இரண்டு பொருட்கள் இருக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஒரு தொகுதியாக எடுத்துக் கொண்டால் அது இயங்க முடியாது. எதை வைத்து அது இயங்கும்? அது மாறுவதாகவும் சொல்ல முடியாது. எதன் பொருட்டு அது மாறுபடும்? எனவே முழுமை என்பது தனிப் பொருளாக உள்ளது. அதற்குள் உள்ள ஒவ்வொரு துகளும் தொடர்ந்து இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இருக் கிறது. அது ஒரேவேளையில் மாறுபாடு உடையதாகவும் மாறுபாடு இல்லாததாகவும் உள்ளது. நிர்க்குணமாகவும்  சகுணமாகவும் இருப்பது அதுவே. பிரபஞ்சம், இயக்கம், கடவுள் இவை பற்றிய நமது கருத்து இதுவே. ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பதன் பொருளும் இதுவே. 

இவ்வாறு நிர்க்குணக் கருத்து சகுணக் கருத்தை விலக்கு வதற்குப் பதிலாக, சார்பற்றது சார்புடையதைத் தள்ளுவதற்குப் பதிலாக நம் மனத்திற்கும் புத்திக்கும் திருப்தியளிக்கும் வகையில் விளக்கம் தருகிறது. சகுணக் கடவுளும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே நம் மனங்களின்மூலம் காணப்படும் அதே நிர்க் குணப் பொருளே. நமது சிறு மனங்கள், சிறுசிறு தனித்துவங்கள் இவற்றை விட்டுவிடும்போது நாம் பரம்பொருளுடன் ஒன்றிவிடுவோம். ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பதன் பொருள் இதுவே. எனவே நாம் நமது உண்மை நிலையை தனி நிலையை உணர வேண்டும்.  

எல்லைக்கு உட்பட்ட மனிதன் தனது அடிப்படை ஆதாரத்தை மறந்து தன்னை அதிலிருந்து முற்றிலும் வேறு பட்டவனாக எண்ணுகிறான். தனிப்பட்டுத் தோன்றுகின்ற நிலையில் நாம் நமது உண்மை இயல்பை மறந்துவிடுகிறோம். இந்த வேறுபாடுகளை விட்டுவிட வேண்டும் என்று அத்வைதம் கூறவில்லை. அவற்றை உள்ளபடி அறிந்துகொள்ள வேண்டும் என்பதே அதன் கொள்கை. உண்மையில் நாம் அந்த எல்லை யற்ற பரம்பொருளே. அந்த எல்லையற்ற உண்மை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடிய வடிகால்களே நமது தோற்றங்கள். பரிணாமம் என்று நாம் கூறுகின்ற மாற்றங்கள் அனைத்தும் ஆன்மா தனது எல்லையற்ற சக்தியை மேன்மேலும் வெளிப்படுத்துவதற்கான முயற்சியே. எல்லையற்றதன் இந்தப் பகுதியில், அதாவது சகுணப் பகுதியில் நாம் எங்கும் நிற்க முடியாது. நமது ஆற்றல், நிறைவு, ஞானம் இவை அனைத்தும் எல்லையற்று வளர்ந்தேதீரும். எல்லையற்ற ஆற்றல், எல்லையற்ற உண்மை , எல்லையற்ற நிறைவு இவை நமதே. இவற்றை நாம் பெற வேண்டியதில்லை; ஏனெனில் அவை நம்முடையவை. அவற்றை வெளிப்படுத்த வேண்டும், அவ்வளவுதான். 

 அத்வைதக் கொள்கையின் மையக் கருத்து இது. புரிந்துகொள்ளக் கடினமான ஒன்று இது. என்னைச் சுற்றி யுள்ளவர்கள் குழந்தைப் பருவம் முதல் எனக்கு பலவீனத் தையே கற்றுத் தந்தார்கள். பிறந்ததிலிருந்தே நான் ஒரு பலவீனமானவன் என்றே சொல்லி வந்தனர். இப்போது, எனது ஆற்றலையே அறிந்து கொள்வது கடினமானதுதான். ஆனால் விவேகத்தாலும் ஆராய்ச்சியாலும் அதை அறிகிறேன், உணர்கிறேன். 

இந்த உலகத்தில் காணும் அறிவெல்லாம் எங்கிருந்து வந்தது? அவை நம்மிடமே இருந்தது. எந்த அறிவு நமக்கு வெளியே இருக்கிறது? ஒன்றுமே இல்லை. அறிவு என்பது ஒரு போதும் ஜடப்பொருளில் இல்லை, மனிதனிடமே இருக்கிறது. ஒருவரும் அறிவைப் படைப்பதில்லை. தன்னுள்ளிருந்தே மனிதன் அதை வெளியே கொண்டுவருகிறான். அது அங்கேயே உள்ளது. ஒருவேளை கடுகில் எட்டில் ஒரு பங்கே இருக்கக்கூடிய ஆலம்விதையில், ஏக்கர்கணக்கான பரப்பில் பரந்து நிற்கும் ஆலமரம் அடங்கியுள்ளது. எல்லா சக்தியும் விதையினுள் அடங்கியிருந்தது. உயிரணுவுள் மிகப் பெரிய அறிவாற்றல் அடங்கி இருக்கிறது என்று நாம் ஏற்றுக்கொள்ளும்போது, எல்லையற்ற சக்தியும் அதனுள் அடங்கியிருக்கக் கூடாதா? இருக்கத்தான் வேண்டும் என்பதை நாம் அறிவோம். இது முரணாகத் தோன்றலாம். ஆனால் இதுவே உண்மை . நாம் ஒவ்வொருவரும் ஓர் உயிரணுவிலிருந்துதான் வெளிவந்தோம். இப்போது நாம் பெற்றிருக்கும் ஆற்றல்கள் அனைத்தும் அதில் சுருண்டு கிடந்தன. உணவிலிருந்து அது வந்தது என்று சொல்ல முடியாது. உணவை ஒரு மலையாகக் குவித்தாலும் அதிலிருந்து ஏதாவது சக்தி வெளிப்படுமா? எனவே சக்தி, உயிரணுவில் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அங்கேதான் அது இருந்தது. 

மனிதன் அறிந்தாலும் அறியாவிட்டாலும் அவனது ஆன் மாவில் எல்லையற்ற சக்தி உள்ளது. அவன் அதை உணரும் திறத்தைப் பொறுத்தே அது வெளிப்படுகிறது. கட்டுக்கடங்காத இந்த அரக்கன் தூக்கம் கலைந்து எழுவதுபோல் மெல்லமெல்ல எழுகிறான், தனது ஆற்றலை உணர்கிறான், விழிப்புப் பெறு கிறான். அவனது விழிப்புணர்வு திடப்படுந்தோறும் அவனது தளைகள் மேன்மேலும் அறுபடுகின்றன, கட்டப்பட்ட சங்கிலி கள் சுக்கல்சுக்கலாக உடைகின்றன. அவன் தனது எல்லை யற்ற அறிவையும் ஆற்றலையும் உணர்ந்து எழுந்து நிற்கும் நாள் வந்தே தீரும். அந்த மாபெரும் நிகழ்ச்சியை விரைவுபடுத்த நாம் அனைவரும் உதவி செய்வோம்!

செயல்முறை வேதாந்தம் 2

செயல்முறை வேதாந்தம்

செயல்முறை வேதாந்தம் என்ற சொல்லைப் பிரபல மாக்கியவர் சுவாமி விவேகானந்தர். காட்டிலும் குகைகளிலும் வாழும் முனிவர்கள் மட்டுமல்ல, நாட்டிலும் நகரங் களிலும் அதன் பரபரப்பிலும் வாழ்கின்ற ஒவ்வொருவரும் வேதாந்தத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதை ஆணித்தரமாக எடுத்துக் காட்டினார் அவர். வேதாந்தத் தத்துவத்தின் உயிரூட்டும் தத்துவங்களையும், அவற்றை எவ்வாறு செயல் முறைப் படுத்துவது என்பது பற்றியும் அவர் பேசிய நான்கு சொற்பொழிவுகளே ‘செயல்முறை வேதாந்தம்’. லண்டனில் 1896 நவம்பர் 10, 12, 17, 18-ஆம் தேதிகளில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இவை.


ஒரு சிறுவனுக்கு ஞானம் எப்படி வந்தது என்பதுபற்றி சாந்தோக்கிய உபநிடதத்தில் உள்ள மிகப் பழமையான கதை ஒன்றைப்பற்றி உங்களுக்குச் சொல்லப்போகிறேன். அந்தக் கதையின் போக்கு நயமற்றுத் தோன்றினாலும், அதில் ஒரு கோட்பாடு, ஓர் உட்கருத்து உள்ளது. ஒரு சிறுவன் தன் தாயிடம், ‘அம்மா, நான் வேதங்கள் கற்றுக்கொள்ளப் போகி றேன். எனவே என் தந்தையின் பெயரையும் நான் பிறந்த குலத் தின் பெயரையும் எனக்குச் சொல்லுங்கள்’ என்று கேட்டான். அந்தத் தாய் திருமணம் ஆனவள் அல்ல. இந்தியாவில் ஒரு பெண் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொண்டால், அந்தக் குழந்தையைச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது, விலக்கி வைத்துவிடும். அந்தக் குழந்தைக்கு வேதங்கள் படிக்கும் தகுதியும் இல்லாமல் போய்விடும். எனவே அந்தப் பெண், ‘மகனே, உனது குலம் என்ன என்பது எனக்குத் தெரியாது. நான் பல இடங்களில் வேலை செய்து பிழைத்து வந்தேன். உன் தந்தை யார் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் என் பெயர் ஜாபாலா, உன் பெயர் சத்தியகாமன்’ என்றாள்.

அந்தச் சிறுவன் ஒரு முனிவரிடம் சென்று தன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். அதற்கு அந்த முனிவர், ‘குழந்தாய், உன் தந்தையின் பெயர் என்ன? உன் குலம் என்ன?’ என்று கேட்டார். தன் தாயிடம் கேட்டுவந்த விஷயங்களை அப்படியே முனிவரிடம் கூறினான் அந்தச் சிறுவன். அதைக் கேட்ட அந்த முனிவர், ‘தன்னைப் பற்றிய இத்தகைய இழிவான உண்மையைப் பிராமணனைத் தவிர யாரும் சொல்ல முடியாது. நீ ஒரு பிராமணனாகத் தானிருக்க வேண்டும். எனவே நான் உனக்குக் கற்றுத் தருகிறேன். நீ உண்மை நெறி பிறழாதவன்’ என்று கூறி அந்தச் சிறுவனைத் தம்மிடமே வைத்துக் கல்வி கற்பித்து வந்தார்.  

இந்தியாவில் பழங்காலத்தில் இருந்த சில வினோதமான கல்விமுறைகளைப்பற்றிக் கூறப் போகிறேன். அந்த முனிவர் சத்தியகாமனிடம் நானூறு மெலிந்த, வலுவற்ற பசுக்களைக் கொடுத்து, அவற்றைக் காட்டிற்கு ஓட்டிச் சென்று பராமரித்து, அவற்றுடன் காட்டிலேயே வாழுமாறும் அந்தப் பசுக்கள் ஆயிரமாகப் பெருகிய பின்னரே அவன் வீட்டிற்குத் திரும்பும் படியும் கட்டளை இட்டார். அவனும் அவ்வாறே சில காலம் அங்கு வாழ்ந்தான். சில ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் அந்த மந்தையிலிருந்த ஒரு கொழுத்த காளை சத்தியகாமனிடம், ‘நாங்கள் இப்பொழுது ஆயிரம் பேராகிவிட்டோம். எனவே நீ எங்களை உன் குருவிடம் அழைத்துச் செல். நான் உனக்கு பிரம்மத்தைப்பற்றி உபதேசிக்கிறேன்’ என்றது. சத்தியகாமனும், ‘உபதேசியுங்கள் ஐயா’ என்று கேட்டுக்கொண்டான். அந்தக் காளை கூறியது; ‘கிழக்கு, இறைவனின் ஒரு பகுதி; அது போலவே மேற்கு; அது போன்றதே தெற்கு; அவ்வாறே வடக்கும். நான்கு முக்கியத் திசைகளும் பிரம்மத்தின் நான்கு பகுதிகள். இனி பிரம்மத்தைப்பற்றி உனக்குச் சிலவற்றை நெருப்பு உபதேசிக்கும்.’ 

நெருப்பும் முக்கியமான ஒரு சின்னமாக அந்த நாட்களில் கருதப்பட்டது. ஒவ்வொரு மாணவனும் அக்கினி வளர்த்து அதில் ஆஹுதி அளிக்க வேண்டும். சத்தியகாமன் மறுநாள் குருவின் வீடு நோக்கிப் புறப்பட்டான். மாலை நேரம் வந்ததும், வழக்கம்போல் அக்கினி மூட்டி வழிபாடு செய்ய ஆரம்பித் தான். அப்போது அந்த நெருப்பிலிருந்து ஒரு குரல் எழுந்து, ‘ஓ சத்தியகாமா’ என்று அழைத்தது. சத்தியகாமனும், ‘சொல்லுங்கள் பிரபோ!’ என்றான். (இதேபோன்று சாமுவேல் ஆச்சரியமான குரல் ஒன்றைக் கேட்டது பற்றிப் பழைய ஏற் பாட்டில் உள்ளது உங்களுக்கு நினைவிருக்கலாம்) ‘சத்தியகாமா, நான் உனக்கு பிரம்மத்தைப்பற்றிச் சிறிது உபதேசிப்பதற்காக வந்துள்ளேன். இந்தப் பூமி பிரம்மத்தின் ஒரு பகுதி, வானமும் சொர்க்கமும் அதன் பகுதிகள். கடலும் அதன் ஒரு பகுதியே’ என்று கூறியது அந்தக் குரல். பின்னர் இன்ன பறவை பிரம் மத்தைப்பற்றி மேலும் கூறும் என்றும் கூறியது. 

சத்தியகாமன் தனது பயணத்தைத் தொடர்ந்தான். மாலையில் வழக்கம்போல் அக்கினி வளர்த்து வழிபாடு செய்து கொண்டிருந்தபோது அன்னப் பறவை ஒன்று அங்கு வந்தது. அது அவனிடம், ‘நான் உனக்குப் பிரம்மத்தைப்பற்றிச் சிறிது கூறப் போகிறேன். சத்தியகாமா, நீ வழிபடும் இந்த நெருப்பு, அந்தப் பிரம்மத்தின் ஒரு பகுதி. சூரியன் ஒரு பகுதி, சந்திரன் ஒரு பகுதி, மின்னலும் அந்தப் பிரம்மத்தின் ஒரு பகுதி. மத்கு என்ற பறவை மேலும் உனக்கு பிரம்மத்தைப்பற்றிக் கூறும்’ என்று சொல்லியது.  

அடுத்த நாள் மாலை அந்தப் பறவை வந்தது. சத்திய காமனுக்குப் பழைய அதே குரல் கேட்டது. ‘நான் உனக்கு பிரம்மத்தைப் பற்றிச் சிறிது கூறுகிறேன். பிராணன் பிரம் மத்தின் ஒரு பகுதி, காட்சி ஒரு பகுதி, கேட்பது ஒரு பகுதி, மனம் ஒரு பகுதி’ என்றது. 

 கடைசியில் அந்தச் சிறுவன் குருவின் வீட்டை அடைந்து அவரைப் பணிந்தான். குரு சத்தியகாமனைப் பார்த்த உடனேயே அவனிடம், ‘சத்தியகாமா, உன் முகம் பிரம்மத்தை அறிந்த வனின் முகம்போல் ஒளிர்கிறதே. உனக்கு யார் பிரம்மத்தைப் பற்றி உபதேசித்தது?’ என்று கேட்டார். அதற்குச் சத்தியகாமன், ‘மானிடரல்லாத ஜீவன்கள்’ என்று கூறினான். பின்னர் தொடர்ந்து, ‘ஆனால் சுவாமி, தாங்கள் எனக்கு உபதேசிக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஏனெனில் குருவிடமிருந்து பெறும் ஞானம் மட்டுமே மேலான நன்மைக்கு அழைத்துச் செல்லும் என்று, தங்களைப் போன்ற பெரியவர்கள் கூறக் கேட்டுள்ளேன்’ என்றான். அவரும் அவனுக்குத் தாம் தேவர் களிடமிருந்து பெற்ற ஞானத்தைப் போதித்தார். ‘எதுவும் விடப் படவில்லை, ஆம், எதுவும் விடப்படவில்லை!’  

காளை, அக்கினி, பறவை போன்ற உருவகக் கதை களுடன் கூடவே அந்தக் காலக் கருத்துக்களின் நோக்கையும் போக்கையும் நாம் அறிகிறோம். இந்தக் குரல்கள் அனைத்தும் நம்முள்ளேயே உள்ளன என்னும் மகத்தான கருத்தின் முளையை நாம் இங்கே காண்கிறோம். இந்த உண்மைகளை இன்னும் தெளிவாக அறியும்போது அந்தக் குரல் நமது இதயத்திலேயே இருப்பதை உணர்கிறோம். அந்த மாணவன், தான் எப்போதும் உண்மையையே கேட்டு வருகிறோம் என்பதை அறிந்திருந் தாலும், அவன் கொண்ட விளக்கம் சரியில்லை. தன்னிட மிருந்தே வந்த அந்தக் குரலை அவன் வெளியிலிருந்து வந்ததாக நினைத்தான்.  

 இதிலிருந்து கிடைக்கும் இரண்டாவது கருத்து என்ன வென்றால் பிரம்ம ஞானத்தைச் செயல்முறைப் படுத்துவதே. உலகம் எப்போதும் மதத்தின் செயல்முறை சாத்தியக் கூறுகளையே தேடி வருகிறது. அவை எப்படி மேன்மேலும் செயல்முறைக்கு ஏற்றவை ஆகின்றன என்பதையே இத்தகைய கதைகள் மூலம் நாம் அறிகிறோம். மாணவர்கள் நன்கு அறிந்தவற்றின் மூலம் இந்த உண்மை விளக்கப்பட்டது. அவர் கள் வழிபடும் அக்கினியே பிரம்மம் மற்றும் பூமி பிரம்மத்தின் ஒரு பகுதி என்றெல்லாம் கூறப்பட்டது. 

அடுத்த கதை’ உபகோசல காமலாயனைப் பற்றியது. இவன் இந்தச் சத்தியகாமனின் சீடன். உபதேசம் பெறுவதற்காக அவன் சத்தியகாமனிடம் சில காலம் தங்கி இருந்தான். ஒரு முறை சத்தியகாமன் பயணம் செல்ல நேர்ந்தது. தனியாக இருந்த சீடன் மனக் கவலை மிக்கவனானான். அவன் உண்பதுகூட இல்லை என்பதைக் கண்ட குருவின் மனைவி அதற்கான காரணத்தைக் கேட்டபோது சீடன், ‘அம்மா, நான் சாப்பிடக்கூட முடியாத அளவுக்குக் கவலையுடன் இருக்கிறேன்’ என்றான். அப்போது அவன் வழிபடும் அக்கினி யிலிருந்து ஒரு குரல் எழுந்து, ‘இந்தப் பிராணன் பிரம்மம், ஆகாசம் பிரம்மம், ஆனந்தம் பிரம்மம். பிரம்மத்தை அறிவா யாக!’ என்றது. அதற்கு உபகோசலன், ‘ஐயா, இந்தப் பிராணன் பிரம்மம் என்பதை நான் அறிவேன். ஆனால் ஆகாசமும் ஆனந்தமும் பிரம்மம் என்பது எனக்குத் தெரியவில்லை ‘ என் றான். அதற்கு அந்தக் குரல், ‘ஆகாசமும் ஆனந்தமும் நமது இதயத்தில் இருக்கும் சுத்த சைதன்யம் என்னும் ஒரே உண்மையைக் குறிப்பவை’ என்று விளக்கியது. எனவே பிரம்மம் என்பது பிராணனும் நமது இதயத்தில் இருக்கும் ஆகாசமுமே என்று அது கூறியது. 

 பின்னர் அந்த அக்கினி அவனுக்கு உபதேசித்தது: ‘நீ வழிபடும் இந்தப் பூமி, உணவு, அக்கினி, சூரியன் இவையும் பிரம்மத்தின் உருவங்களே. சூரியனில் காணப்படும் புருஷன் நானே. இதை அறிந்து தியானிப்பவனின் எல்லா பாவங்களும் மறைகின்றன. அவன் மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் வாழ்வான். திசைகள், சந்திரன், நட்சத்திரங்கள், நீர் அனைத்திலும் உறைபவன் நானே. இந்தப் பிராணன், ஆகாசம், சொர்க்கங்கள், மின்னல் ஆகியவற்றிலும் உறைபவன் நானே.’ இங்கும் செயல் முறை மதத்தின் அதே கருத்தைக் காண்கிறோம். அவர்கள் வழிபட்டு வந்த அக்கினி, சூரியன், சந்திரன் போன்றவையும், அவர்களுக்குப் பழக்கமான குரலுமே கதைகளின் கருவாகி அவர்களுக்கு உயர்ந்த கருத்துக்களை உபதேசித்தன. 

இதுவே வேதாந்தத்தின் உண்மையான செயல்முறைப் பகுதி. இது உலகத்தை அழிப்பதில்லை , அதனை விளக்குகிறது; இது மனிதனை அழிப்பதில்லை, அவனை விளக்குகிறது; இது தனித்துவத்தை அழிப்பதில்லை, உண்மையான தனித்துவம் எது என்பதைக் காட்டி அதை விளக்குகிறது. இந்த உலகம் வீணானது, உலகம் என்ற ஒன்றே இல்லை என்று கூறாமல், ‘இந்த உலகம் உண்மையில் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் அது உங்களுக்குத் தீங்கு செய்யாது’ என்று கூறுகிறது. உபகோசலனிடம், அவன் வழிபடும் அக்கினி, சூரியன், சந்திரன், மின்னல் போன்றவை பொய் என்று அந்தக் குரல் கூறவில்லை, ஆனால் சூரியன், சந்திரன், மின்னல், அக்கினி போன்றவற்றில் உறையும் சக்தியே அவனிடமும் உள்ளது என்று கூறியது. இதனால் அவனது காட்சியே மாறியது. முன்பு ஆஹுதிகளை அளித்து வழிபட்ட சாதாரணமான நெருப்பு இப்போது அவன் கண்களுக்குப் புதிய உருப் பெற்றது, தெய்வமாகியது. இவ்வாறே பூமியும் பிராணனும் சூரியன், சந்திரன், நட்சத்திரம், மின்னல் அனைத்துமே வேறுதோற்றம் பெற்று தெய்வீகமாகிவிட்டன. அவற்றின் உண்மை இயல்பு அறியப்பட்டு விட்டது. அனைத் திலும் இறைவனைக் காண்பதே வேதாந்தத்தின் சாரம்; பொருட் களின் புறத் தோற்றங்களை விடுத்து அவற்றின் உண்மை இயல்பை அறிவதே.  

மற்றும் ஒரு கருத்து உபநிடதங்களில் புகட்டப்படுகிறது; ‘கண்களின் மூலம் ஒளிர்வது பிரம்மமே. அவரே அழகானவர், ஒளிர்பவர் அவர், இந்த உலகெங்கும் பிரகாசிப்பவர் அவரே. கண்ணொளி என்பதை, தூயவர்களிடம் மிளிரும் தனி ஒளி என்று விளக்குகிறார் உரையாசிரியர் ஒருவர். மனிதன் தூயவனா கும்போது அவனது கண்களில் அத்தகைய ஒளி வீசும் என்றும், அந்த ஒளி உண்மையில், உள்ளும் புறமும் எங்கும் நிறைந்துள்ள ஆன்மாவின் ஒளியே என்றும் கூறப்படுகிறது. கிரகங்கள், நட்சத் திரங்கள், சூரியன்கள் இவற்றில் ஒளிர்வதும் அதே ஒளிதான்.  

இந்தப் புராதனமான உபநிடதங்களில் காணப்படுகின்ற பிறப்பு, இறப்பு போன்ற வேறு சில கோட்பாடுகளைப்பற்றி இப்போது பார்க்கலாம். அது அனேகமாக உங்களுக்குப் பிடிக்கலாம். சுவேதகேது பாஞ்சால மன்னனைக் காணச் சென் றான். அந்த அரசன் சுவேதகேதுவிடம், ‘இறந்த பிறகு மக்கள் எங்குச் செல்கிறார்கள்? எப்படி அவர்கள் திரும்பி வருகிறார்கள்? அந்த மறு உலகம் ஏன் நிரம்புவதே இல்லை? இவை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டான். தனக்கு விடை தெரியாது என்றான் சுவேதகேது. பின்னர் அவன் தன் தந்தையிடம் சென்று அதே கேள்விகளைக் கேட்டான். தந்தையும் தமக்கு விடை தெரியாது என்று கூறினார். அதனால் இருவரும் அரசனிடமே திரும்பி வந்தனர். அப்போது அரசன், இந்த உண்மைகள் மதக் குருமார்களுக்குத் தெரியாது என்றும் அரசர்கள் மட்டுமே அறிவார்கள் என்றும் அதனால்தான் அரசர்கள் உலகை ஆள முடிகிறது என்றும் கூறினார்.  

பின்னர் தந்தை அரசனுடனே சில நாட்கள் தங்கிச் சேவை செய்தார். கடைசியில் அரசன் உபதேசிக்கத் தொடங்கினான்: ‘கௌதமரே, அந்த மற்றோர் உலகம் என்பது அக்கினியே. சூரி யனே அதன் எரிபொருள். கிரணங்களே புகை. பகலே சுவாலை. நாட்கள் அதன் சுடர்கள். சந்திரனே தணல். நட்சத்திரங்கள் நெருப்புப் பொறிகள். இந்த அக்கினியில் தேவர்கள் நம்பிக்கை என்னும் நெருப்பை ஆஹுதியாக அளிக்கின்றனர். இதிலிருந்தே அரசனான சோமன் பிறக்கிறான்.’ தொடர்ந்து உபதேசித்தான்: ‘இந்தச் சிறிய அக்கினிக்கு வழிபாடு செய்ய வேண்டாம். இந்த உலகம் முழுவதுமே அக்கினி. இந்த ஆஹுதி அளித்தலும் வழிபாடும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. தேவர்களும் தேவதைகளும் பிறரும் இதை வழிபடுகிறார்கள். மனிதனே, மனித உடலே அக்கினியின் மிகவுயர்ந்த சின்னம்!’ 

இங்கு லட்சியம் செயல்முறைப் படுத்தப்படுவதைக் காண் கிறோம். பிரம்மமே எங்கும் பார்க்கப்படுகிறது. இந்தக் கதை களில் எல்லாம் உட்கருத்து ஒன்று உள்ளது. அது இதுதான்: நாம் கண்டுபிடிக்கும் சின்னங்களெல்லாம் நமக்கு உதவியாகவும் சிறப்பாகவும் இருந்தாலும், நாம் கண்டுபிடிக்க முடிந்த அனைத்தையும்விடச் சிறப்பான சின்னங்கள் ஏற்கனவே உள்ளன. கடவுளை வழிபடுவதற்கு நீங்கள் உருவம் ஒன்றைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் அதைவிட மிக நல்ல உருவம் ஏற்கனவே உள்ளது, அதுதான் மனிதன். நீங்கள் கடவுளை வழிபட ஒரு கோயில் கட்டலாம். அது நல்லதுதான். ஆனால் அதைவிட மிகவும் நல்லது, மிகவும் உயர்ந்தது ஏற்கனவே இருந்துவருகின்ற மனித உடலே.  

வேதங்களுக்கு இரண்டு பகுதிகள் உள்ளன என்பது உங் களுக்கு நினைவிருக்கும். அவை கர்மகாண்டம், ஞானகாண்டம். காலப்போக்கில் கர்மகாண்டத்தில் கிரியைகள் பெருகி சிக்கல் கள் நிறைந்து அவற்றிலிருந்து விடுபடவே முடியாமல் போய் விடுமோ என்ற அளவுக்கு ஆகிவிட்டது. எனவே உபநிடதங் களில் இவை ஏறக்குறைய நீக்கப்பட்டுவிட்டதைக் காண் கிறோம். ஆனால் முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிடாமல், அவற்றை விளக்கி, அவை படிப்படியாக நீக்கப்படுகிறது. பழங் காலத்தில் யாகங்கள் போன்றவை மிகுந்திருந்தன. பின்னர் தத்துவ ஞானிகள் வந்தனர். ஏற்கனவே இருப்பதைப் பிடுங்கி அழிக்கின்ற நவீனச் சீர்திருத்தங்களைப் போல் அவர்களின் சீர்திருத்தம் எதிர்மறையானதாக இருக்கவில்லை. மாறாக, சின்னங்களின் இடத்தில் அவர்கள் மற்றொன்றைப் பாமரர் களுக்குக் கொடுத்தார்கள். ‘இதோ அக்கினி என்னும் சின்னம் உள்ளது; அது நல்லது. ஆனால் இதோ இந்தப் பூமி என்ற மற்றொரு சின்னம் உள்ளதே! அது எத்தனைக் கம்பீரமும் பெருமையும் வாய்ந்ததாக உள்ளது! இதோ சிறிய கோயில் ஒன்று உள்ளது. ஆனால் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே கோயில்தானே! மனிதன் எங்கு வேண்டுமானாலும் வழி படலாமே! மண்மீது மனிதர்கள் வழிபடும் உருவங்கள் இதோ, வழிபடுவதற்காக வரைந்துள்ள சித்திரங்கள் இதோ, பலி பீடங்கள் அதோ! ஆனால் இவை அனைத்திலும் சிறந்த, உயிர் வாழ்கின்ற, உணர்வுமிக்க மனித உடம்பு என்ற பலிபீடம் உள்ளதே! உயிரற்ற சின்னங்களை வழிபடுவதைவிட இது மிக மேலானது அல்லவா?’ என்றார்கள் அவர்கள்.  

இப்போது வினோதமான ஒரு கோட்பாட்டிற்கு வரு கிறோம். எனக்கே அது சரியாகப் புரியவில்லை . உங்களால் இதிலிருந்து ஏதாவது அறிய முடியுமானால் அறிந்து கொள் ளுங்கள். தியானத்தின்மூலம் தன்னைத் தூய்மைப்படுத்தி ஞானம் பெற்ற மனிதன், இறந்ததும் முதலில் ஒளிமயமான உலகத்திற்குச் செல்கிறான். அங்கிருந்து பகலாக இருக்கும் இடத்திற்குச் செல்கிறான். அங்கிருந்து வளர்பிறைக்குச் செல் கிறான். அங்கிருந்து சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களுக்கும், அங்கிருந்து வருடத்திற்கும், அங்கிருந்து சூரியனுக்கும், அங்கிருந்து சந்திரனுக்கும், சந்திரனிலிருந்து மின்னல் உலகிற்கும் செல்கிறான். அங்கு அவன் மனிதனல் லாத ஒருவரைச் சந்திக்கிறான். அவர் இவனை (எல்லைக்கு உட்பட்ட) பிரம்மத்திடம் அழைத்துச் செல்கிறார். இதுதான் தேவர்களின் வழி. முனிவர்களும் ஞானிகளும் இறந்த பிறகு இந்த வழியில்தான் போகிறார்கள். அவர்கள் மீண்டும் திரும்பு வதில்லை. இந்த மாதம், வருடம் என்பதையெல்லாம் தெளி வாக அறிந்தவர்கள் யாருமில்லை. ஒவ்வொருவரும் தனக்குத் தோன்றியவாறு பொருள் கூறுகின்றனர். சிலர் இவை வெறும் பிதற்றல் என்று கூறுகின்றனர். சூரிய மண்டலத்திற்குப் போவது, சந்திர மண்டலத்திற்குப் போவது, மின்னல் மண்டலத்தில் ஒருவன் அந்த ஆன்மாவுக்கு உதவி செய்வது இவைபற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. 

 சந்திர மண்டலத்தில் உயிர்கள் வாழ்கின்றன என்பது இந்துக்களிடையே நிலவும் ஒரு கருத்து. அங்கிருந்து உயிர் எப்படி வந்தது என்பதைக் காண்போம். இந்தப் பிறவியில் நற்செயல்கள் புரிந்த, ஆனால் ஞானம் பெறாதவர்கள் இறந்ததும் முதலில் புகை வழியாகவும், பின்னர் இரவிற்குள்ளும், பிறகு தேய்பிறையின் பதினைந்து நாட்களுக்கும், பிறகு சூரியன் தென் திசை நோக்கிச் செல்லும் ஆறு மாதங்களுக்கும், பிறகு தங்கள் முன்னோர்கள் வாழும் உலகிற்கும், பின்னர் ஆகாசத்திற்கும் சென்று சந்திர மண்டலத்தை அடைகிறார்கள். அங்கு அவர்கள் தேவர்களுக்கு உணவாக மாறுகிறார்கள். பின்னர் தேவர்களாகப் பிறந்து, நல்வினைப் பயன் முடியும்வரை அங்கே வாழ்கிறார்கள். நல்வினைப் பயன்கள் முடிந்ததும் மீண்டும் அதே வழியில் பூமிக்கு வருகிறார்கள். அப்போது முதலில் ஆகாசமாகி, பின்னர் காற்றாகி, பின்னர் புகையாகி, பிறகு பனிமூட்டமாகி, பின்னர் மேகமாகி அதன்பிறகு மழைத்துளிகளாகப் பூமியில் விழு கிறார்கள், பிறகு உணவுப் பொருட்களுள் புகுந்து, மனிதரால் உண்ணப்பட்டு அவர்களது குழந்தைகளாகின்றனர். நற்செயல் புரிந்தவர்கள் நல்ல குடும்பத்தில் பிறக்கிறார்கள்; தீய செயல் புரிந்தவர்கள் இழிந்தவர்களாக, ஏன், விலங்குகளாகக் கூடப் பிறக்கின்றனர். விலங்குகள் தொடர்ந்து இந்த உலகிற்கு வருவதும் இங்கிருந்து போவதுமாக இருக்கின்றன. அதனாலேயே இந்த உலகம் நிறைவதும் இல்லை, முற்றிலும் காலியாவதும் இல்லை . 

இதிலிருந்தும் நாம் பல கருத்துக்களைப் பெறலாம், போகப் போக நன்கு புரிந்துகொள்ளலாம். இவற்றின் பொருளைச் சிறிது பார்ப்போம். சொர்க்கத்திற்குச் செல்வதைக் கூறும் பகுதியைவிட அங்கிருந்து அவர்கள் பூமிக்குத் திரும்புவதைக் கூறும் பகுதி சற்று தெளிவாக இருக்கிறது. ஆனால் கடவுளை அறியாததுவரை நிலையான சொர்க்கம் என்பது ஒன்றும் இல்லை என்பதுதான் அதன் முழுக் கருத்து என்று எனக்குத் தோன்றுகிறது. பலன் கருதி, இந்த உலகில் நற்செயல்கள் புரிந்த, ஆனால் கடவுளை அடையாதவர்கள் இறந்த பிறகு இந்த வழி அந்த வழி என்று எவ்வாறாவது சொர்க்கத்தைச் சேர்கிறார்கள். நாம் பிறப்பதைப் போலவே அங்கு அவர்கள் தேவர்களின் குழந்தைகளாகப் பிறந்து, நல்வினைப் பயன் அனுமதிக்கும்வரை அங்கு வாழ்கிறார்கள்.  

வேதாந்தத்தின் அடிப்படைக் கருத்தொன்று இதன்மூலம் வெளியாகிறது. அதாவது பெயரும் உருவமும் கொண்டவை நிலையானவை அல்ல என்பதே அது. இந்தப் பூமி நிலையற்றது, ஏனெனில் அதற்குப் பெயரும் உருவமும் உள்ளது. அதுபோல் சொர்க்கங்களும் நிலையற்றவையாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அவற்றிற்கும் பெயரும் உருவமும் உள்ளன. நிலை யான சொர்க்கம் என்று கூறுவதே முரணானது. ஏனெனில் பெயரும் உருவமும் உள்ளவை அனைத்தும் காலத்தில் முடிய வேண்டும். இவை வேதாந்தத்தின் முடிவான கோட்பாடுகள். எனவே சொர்க்கங்கள் பற்றிய கருத்துக்கள் கைவிடப்பட்டன.  

சொர்க்கம் நிலையானது என்ற கருத்து சம்ஹிதையில் காணப்படுகிறது. இது ஒருவாறு முகமதியர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் நிலவும் கருத்தைப் போன்றதே. முகமதி யர்கள் இதை இன்னும் சற்று உறுதியாகச் சொல்கிறார்கள். சொர்க்கத்தில் ஆறுகளும் அழகிய தோட்டங்களும் நிறைந் திருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அரேபியப் பாலை வனங்களில் மிகவும் வேண்டப்படுவது தண்ணீர். எனவே சொர்க்கத்தைத் தண்ணீர் நிறைந்த இடமாகக் கருதுகிறான் முகமதியன். ஆண்டில் ஆறு மாதம் மழை பொழியும் நாட்டில் பிறந்தவன் நான். நான் சொர்க்கத்தை வறண்ட பகுதியாக எண்ண வேண்டும் போலும்! அதுபோல்தான் ஆங்கிலேயர் களும். சம்ஹிதையில் கூறப்பட்டுள்ள சொர்க்கங்கள் நிலை யானவை. இறந்து போனவர்கள் அங்கு அழகிய உடலைப் பெற்றுத் தங்கள் முன்னோர்களுடன் என்றும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பெற்றோர், பிள்ளைகள், உற்றார் உறவினர் என்று எல்லோரையும் சந்தித்து, இங்கு வாழ்வதைப் போலவே வாழ்ந்தாலும் மகிழ்ச்சி அங்கு அதிகம் நிலவுகிறது. இந்த வாழ் விலுள்ள துன்பங்கள், இடர்பாடுகள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி நிறைந்த சிறப்பான வாழ்க்கை மட்டுமே அங்கு இருக் கிறது. இந்த நிலையை எவ்வளவுதான் சுகபோகமானது என்று மனிதர்கள் கூறினாலும், உண்மை என்பது ஒன்று, சுகபோகம் என்பது மற்றொன்றே அல்லவா! உண்மையின் உச்சநிலையை அடையும்வரை உண்மை என்பது சுகமளிப்பதாக இல்லாத சந்தர்ப்பங்களும் உள்ளன. மாற்றங்களை விரும்பாததே மனித இயல்பு. அது ஏதாவது ஒன்றைச் செய்கிறது, பிறகு அதிலிருந்து வெளியே வர முடியாமல் துன்புறுகிறது. புதிய கருத்துக்களை மனம் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் அவை வசதிக் குறைவுகளை ஏற்படுத்துகின்றன. 

உபநிடதங்களில் ஓர் அற்புத மாறுதல் நிகழ்வதைக் காண் கிறோம்: இறந்தவர்கள் தங்கள் முன்னோர்களுடன் வாழ்ந்து வருகின்ற சொர்க்கங்கள் நிலையானவையாக இருக்க முடி யாது. ஏனெனில் பெயரும் உருவமும் உடைய எதுவும் அழியத் தானே வேண்டும் என்று அவை கூறுகின்றன. உருவத்துடன் கூடிய சொர்க்கங்கள் இருந்தால், காலப்போக்கில் அவை அழிந்தேயாக வேண்டும். கோடிக்கணக்கான ஆண்டுகள் அவை இருக்கலாம், ஆனால் அவை அழிய வேண்டிய காலம் ஒன்று வந்தே தீரும். இதனுடன் மற்றொரு கருத்தும் வெளிப்படுகிறது. இந்த உயிர்கள் பூமிக்குத் திரும்ப வேண்டியவையே. சொர்க் கங்கள் என்பவை நல்வினைகளின் பயனை அவர்கள் அனு பவிக்கும் இடம். நல்வினைப் பயன் தீர்ந்ததும் மீண்டும் அவை பூமிக்குத் திரும்பி விடுகின்றன. இதிலிருந்தும் ஒன்று புரிகிறது; மிகப் புராதன காலத்திலேயே காரணகாரியத் தத்துவத்தைப் பற்றி மனிதன் அறிந்திருந்தான் என்பதே அது. நமது தத்துவ வாதிகள் இதனை எப்படித் தத்துவ விளக்கங்களாலும் தர்க்க மொழிகளாலும் வெளியிட்டார்கள் என்பதைப் பின்னர் பார்ப் போம். ஆனால் இங்கே அவை ஏறக்குறைய மழலை மொழி போலவே உள்ளன.

 இந்த நூல்களைப் படிக்கும்போது, இவை அனைத்தும் அக அனுபவங்களே என்பதை உணரலாம். இவை செயல் முறைக்கு உகந்ததாக இருக்க முடியுமா என்று என்னை நீங்கள் கேட்டால், முதலில் இவை செயல்முறைக்கு உகந்தவை, பின்னரே தத்துவ நெறி என்பதுதான் என் பதில். முதலில் இவை அனுபவிக்கப்பட்டன, அறியப்பட்டன; பின்னரே எழுதப்பட்டன என்பதை நீங்கள் காணலாம். பண்டைய சிந்தனையாளர்களுடன் இந்த உலகம் பேசியது, பறவைகள் பேசின, விலங்குகள் பேசின, சூரியனும் சந்திரனும் பேசினர். சிறிதுசிறிதாக அவர்கள் பொருட்களை உணர்ந்தார்கள், இயற்கையின் இதயத்துள் புகுந்தார்கள். சிந்தனைத் திறத்தாலோ தர்க்க வாதத்தாலோ இன்று செய்யப்படுவதுபோல் பிறரது கருத்துக்களைப் பொறுக்கியெடுத்து ஒரு பெரிய நூல் இயற்றியோ, அவர்களுடைய நூல்களுள் ஒன்றைக் கொண்டு, நான் செய்வதுபோல் நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தியோ அல்லாமல் அமைதியான, பொறுமையான ஆராய்ச்சியின் மூலமே அவர்கள் உண்மையைக் கண்டறிந்தார்கள். இதன் முக்கிய நெறி செயல்முறையே, அப்படியே எப்போதும் இருந் தாகவும் வேண்டும். மதம் என்பது எப்போதும் செயல்முறை விஞ்ஞானமே. கருத்தளவில் மட்டுமே உள்ள மதம் என்பது என்றுமே இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. முதலில் செயல்முறை, பின்னரே அறிவு.

உயிர்கள் திரும்பி வருகின்றன என்ற கருத்து எப்போதுமே இருந்து வந்தது. பலனை எதிர்பார்த்து நற்செயல்கள் புரிபவர்கள் அதனைப் பெறுகின்றனர். ஆனால் இந்தப் பலன்கள் நிலை யானவை அல்ல. பலன் என்பது செயல் அதாவது காரணத்தின் அளவினதாகவே இருக்கும் என்ற காரணகாரியக் கருத்து வெகு அழகாகக் கூறப்படுவதை நாம் இங்கே காண்கிறோம். காரணத்தைப் போலவே காரியமும் இருக்கும். காரணம் முடிவுள்ளது, எனவே காரியமும் முடிவுள்ளதாகவே இருக்க வேண்டும். காரணம் நிலையானதாக இருந்தால் விளைவும் நிலையானதாக இருக்கும். ஆனால் நற்செயல் புரிவது போன்ற காரணங்கள் எல்லாம் எல்லை உள்ளவை. ஆதலால் எல்லை யற்ற விளைவுகளை இவற்றால் ஏற்படுத்த முடியாது. 

நாம் இப்போது கேள்வியின் மறுபக்கத்திற்கு வருகிறோம். நிலையான சொர்க்கம் என்பது இருக்க முடியாது. அது போலவே நிலையான நரகம் என்ற ஒன்றும் இருக்க முடியாது. வாழ்வில் ஒவ்வொரு கணமும் தீமையே செய்யும் ஒரு தீயவன் நான் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனாலும் எனது எல்லையற்ற வாழ்க்கையுடன் இந்த வாழ்க்கையை ஒப்பிட்டால், இது ஒன்றுமே இல்லை. எனவே நிரந்தரமான தண்டனை என்ற ஒன்று இருக்குமானால், முடிவுள்ள காரணத்திலிருந்து முடிவில்லாத விளைவு ஏற்படுவதாக ஆகிறது. அது ஒருபோதும் நடக்க முடியாது. என் வாழ்நாள் முழுவதும் நற்செயல் செய் தால் நிரந்தரமான சொர்க்கத்தைப் பெறுவேன் என்று சொன்னால் அது எப்படித் தவறு ஆகுமோ, அது போன்றது தான் இதுவும். 

உண்மையை அறிந்தவர்களுக்கு, அதை உணர்ந்தவர் களுக்கு மூன்றாவது ஒரு வழி உள்ளது. மாயைத் திரையைக் கடந்து செல்ல இது ஒன்றே வழி-அதுதான் உண்மையை அனுபவிப்பது. உண்மையை அனுபவிப்பது என்பது எதுவென உபநிடதங்கள் கூறுகின்றன- நன்மை, தீமை இவற்றை ஒத்துக் கொள்ளாமலிருப்பது; ஆனால் இவையெல்லாமே ஆன்மாவி லிருந்து வருகின்றன, எல்லாவற்றிலும் ஆன்மா இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது. அதாவது இந்த உலகத்தை மறுப்பது, கண்களை அதிலிருந்து திருப்பிவிடுவது, இறை வனைச் சொர்க்கத்தில்போல் நரகத்திலும், வாழ்வில்போல் சாவிலும் காண்பது. இதுதான் நான் கூறியதன் பொருள்.  

இந்த உலகம் கடவுளின் ஒரு சின்னம். ஆகாசம் இறைவனே, நாம் வாழ்ந்திருக்கும் இடமும் அவரே. எல்லாம் பிரம்மமே. இவற்றைக் காணவும் உணரவும் வேண்டுமே தவிர, வெறுமனே பேசுவதோ சிந்திப்பதோ போதாது. அனைத்திலும் இறைவனே, பிரம்மமே நிறைந்திருப்பதை ஆன்மா அறிந்துவிட்டால் அது சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ வேறெங்குமோ போவதைப் பற்றிக் கவலைப்படாது; இந்தப் பூமியிலோ சொர்க்கத்திலோ மீண்டும் பிறப்பதைப் பற்றியும் அது கவலைப்படாது. ஆன்மாவைப் பொறுத்தவரையில் இவையெல்லாம் பொருளற் றவை. ஏனெனில் எல்லா இடமும் ஒன்றுதான். எல்லா இடங் களும் இறைவனின் கோயில்; எல்லா இடங்களும் புனித பூமி; சொர்க்கம், நரகம் என்று எங்கிலும் அது காண்பது இறை வனின் சான்னித்தியத்தையே. நன்மை தீமை, வாழ்வு சாவு இவை ஒன்றுமே இல்லை. இருப்பது எல்லையற்ற ஒன்றான பிரம்மமே.  

இந்த நிலையை அடைபவன் அப்போதே சுதந்திரன் ஆகிறான் என்று வேதாந்தம் கூறுகிறது. அவன் மட்டுமே இந்த உலகில் வாழ்வதற்குத் தகுதி உடையவன், மற்றவர் களுக்கு அந்தத் தகுதி இல்லை. தீமையைக் காண்பவன் எப்படி இந்த உலகில் வாழ முடியும்? அவனது வாழ்க்கை ஒரு துன்பச்சுமையே. அபாயங்களைக் காண்பவனின் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. மரணத்தைக் காண்பவனின் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. உண்மையை அறிந்து எல்லாவற்றிலும் உண்மையைக் கண்டவனே இந்த உலகில் வாழ முடியும்.  அவனால் மட்டுமே, ‘இந்த வாழ்வை நான் அனுபவிக்கிறேன், இந்த வாழ்வில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று சொல்ல முடியும். 

இதற்கிடையில், நரகத்தைப் பற்றிய கருத்து வேதங்களில் எங்குமே இல்லை என்பதையும் நான் உங்களுக்குக் கூறிக்கொள் கிறேன். அது பின்னாளில் புராணங்களில்தான் எழுந்தன. வேதங்களைப் பொறுத்தவரை மிகக் கடுமையான தண்டனை இந்த உலகில் மீண்டும் பிறப்பதே, திரும்பவும் வருவதே. ஆரம் பத்திலிருந்தே இந்தக் கருத்து நிர்க்குணத்தை நோக்கிச் செல் வதைக் காண்கிறோம். தண்டனை, வெகுமதி என்ற கருத்துக்கள் மிகவும் பௌதீகமானவை. நம்மைப் போலவே ஒருவனை விரும்பவும், இன்னொருவனை வெறுக்கவும் கூடிய மனிதக் கடவுள்கருத்திற்குத்தான் இவை பொருத்தமாக இருக்கும். இத்தகைய கடவுள் மட்டுமே தண்டனைகளோ வெகுமதிகளோ கொடுப்பார். இப்படிப்பட்ட கடவுளை நாம் சம்ஹிதையில் காண்கிறோம். அங்கே பயம் என்னும் கருத்து நுழைகிறது. ஆனால் உபநிடதங்களில் வந்த உடனேயே பயம் என்னும் கருத்து மறைந்து, அந்த இடத்தில் நிர்க்குணக் கருத்து ஏற்படு கிறது. எப்போதுமே உருவத்துடன் இணைந்திருக்கும் மனித னால் இந்த நிர்க்குணக் கருத்தைப் புரிந்துகொள்வது இயல் பாகவே மிகவும் கடினமானதுதான். பெரிய சிந்தனையாளர் களாகக் கருதப்படுபவர்கள்கூட இந்த நிர்க்குணக் கடவுள் கருத்தால் வெறுப்படைகின்றனர். ஆனால் கடவுளை மனித உருவில் எண்ணுவது பொருளற்றதாகவே எனக்குத் தோன்று கிறது. உயிருள்ளிருக்கும் கடவுள், உயிரற்ற கடவுள்; யாரும் பார்க்காத யாரும் அறியாத கடவுள், அறிந்த கடவுள்இவற்றுள் எது உயர்ந்த கருத்து? 

 நிர்க்குணக் கடவுளே உயிர்க் கடவுள்; ஒரு தத்துவம். சகுணக் கடவுள், நிர்க்குணக் கடவுள் இரு கொள்கைகளுக்கும் உள்ள வேறுபாடு இதுவே-சகுணக் கடவுள் கொள்கை மனித வடிவத்துடன் நின்றுவிடும். நிர்க்குணக் கடவுளோ தேவதை, மனிதன், மிருகம் எல்லாமாகத் திகழ்வதுடன், புலனாகாதவை யாகவும் இருக்கிறார். ஏனெனில் நிர்க்குணம் என்னும்போது அது குணங்களுடன் கூடிய அனைத்தையும் தழுவியது, பிரபஞ்சத்திலுள்ள அனைத்தின் மொத்தம், இதுதவிர எல்லை யற்றும் உள்ளது. ‘எப்படி ஒரே அக்கினி உலகில் பிரவேசித்து, பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறதோ, அவை தவிர எல்லையற்றதாகவும் இருக்கிறதோ” அதுபோன்றதே நிர்க்குண நிலை.  

வாழும் கடவுளையே நாம் வழிபட விரும்புகிறோம். நான் என் வாழ்க்கை முழுவதிலும் கடவுளைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை, நீங்களும் அப்படியே. இந்த நாற்காலியைப் பார்க்க வேண்டுமானால் முதலில் கடவுளைக் காண்கிறீர்கள், பின்னர் அவரிலும் அவர் மூலமும்தான் நாற்காலியைக் காண் கிறீர்கள். ‘நான் இருக்கிறேன்’ என்று கூறியபடியே அவர் எங்கும் இருக்கிறார், ‘நான் இருக்கிறேன்’ என்று உணர்கின்ற அந்தக் கணமே ஸத்தாகிய, இருப்பாகிய பரம்பொருளை நீங்கள் உணர்கிறீர்கள். நமது இதயத்திலும் பிற உயிர்களிலும் கடவுளைக் காண முடியாவிட்டால் வேறு எங்கு போய்க் காண முடியும்? ‘ஆணும் நீயே, பெண்ணும் நீயே, சிறுமியும் நீயே, சிறுவனும் நீயே, தடியுடன் தள்ளாடி நடக்கும் வயோதிகனும் நீயே, இளமைத் துடிப்புடன் கம்பீரமாக நடக்கும் இளைஞனும் நீயே. இருப்பவை எல்லாம் நீயே. அற்புதமான, வாழும் கடவுளாகிய நீயே இந்தப் பிரபஞ்சத்தில் ஒரே உண்மைப் பொருள். 

ஒரு திரைக்குப் பின்னால் எங்கோ வாழ்கின்ற, யாரா லும் ஒருபோதும் காண முடியாத பரம்பரைக் கடவுளைப் பற்றிய கருத்திலிருந்து இந்தக் கருத்து பயங்கரமாக முரண் பட்டிருப்பதுபோல் பலருக்கும் தோன்றலாம். புரோகிதர் களோ, நாம் அவர்களைப் பின்பற்றி, அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்கள் நமக்குக் காட்டும் வழியில் நடந்தால் நாம் இறந்த பிறகு கடவுளை நேருக்குநேர் காண்பதற்குரிய அனு மதிச் சீட்டைத் தருவார்களாம்! சொர்க்கங்களைப் பற்றிய கருத்துக்கள் அனைத்தும் புரோகிதர்களின் பொருளற்ற தொழில்முறையின் சிறு உருமாற்றங்களே தவிர வேறென்ன? அவற்றிற்கு இந்த நிர்க்குணக் கருத்து அழிவுபூர்வமானதுதான். அது சர்ச்களிலும் கோயில்களிலும் உள்ள புரோகிதர்களின்  தொழிலை ஒழித்துக்கட்டிவிடுகிறது. இப்போது இந்தியாவில் பஞ்சம் நிலவுகிறது. ஆனால் அங்கே உள்ள கோயில்களில் ஒரு நாட்டையே வாங்கும் அளவு நகைகள் உள்ளன. புரோகிதர்கள் இந்த நிர்க்குணக் கருத்தை மக்களிடம் பேசினால் அவர்களது தொழில் போய்விடும். எனினும் நாம் சுயநலமின்றி, புரோகிதர் களின் ஆதிக்கமின்றி இதனை உபதேசிக்கவேண்டும். நீயும் கடவுள், நானும் கடவுளே. யார் யாரைப் பணிவது? யார் யாரை வழிபடுவது? கடவுளின் மிகவுயர்ந்த கோயில் நீயே. வேறு கோயில்களையோ, சிலைகளையோ, புனித நூல்களையோ வழிபடுவதைவிட உன்னை வழிபடுவதே சிறப்பானது. 

ஏன் சிலர் முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களுடன் இருக்கிறார்கள்? அவர்கள் விரலிடுக்குகளில் நழுவும் மீன்களைப் போன்றவர்கள். தாங்களே செயல்முறையில் சிறந்த அனுபவம் உடையவர்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். மிகவும் நல்லது. ஆனால் இங்கேயே உங்களையே வழிபடுவதைவிட உயர்ந்த செயல்முறை வேறு எது இருக்க முடியும்? நான் உங்களைப் பார்க்கிறேன், உணர்கிறேன், நீங்களே கடவுள் என்பதை அறிகிறேன். அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று முகமதியர்கள் சொல்கிறார்கள். கடவுள் அல் லாத வேறு எதுவுமே இல்லை என்று வேதாந்தம் கூறுகிறது. இந்தக் கருத்து உங்களுள் பலரை அச்சுறுத்தலாம். ஆனால் சிறிதுசிறிதாக நீங்கள் புரிந்துகொள்வீர்கள். 

வாழும் கடவுள் உங்களுள் இருக்கிறார். ஆனால் நீங்கள் சர்ச்களையும் கோயில்களையும் கட்டிக்கொண்டு பல கற்பனைப் பிதற்றல்களை நம்பிக்கொண்டு திரிகிறீர்கள். மனித உடம்பில் உள்ள மனித ஆன்மா ஒன்றே வழிபடத் தக்க கடவுள். எல்லா விலங்குகளும்கூடக் கோயில்களே, ஆனால் மனிதனே இவற்றுள் மிகச் சிறந்தவன். கட்டிடங்களுள் தாஜ்மகால்போல் கோயில்களுள் மனிதனே சிறந்தவன். இந்தக் கோயிலில் என்னால் வழிபட முடியவில்லை என் றால் மற்ற கோயில்களால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. ஒவ்வொரு மனித உடல் என்னும் கோயிலிலும் உள்ள கடவுளை நான் உணர்கின்ற கணமே, ஒவ்வொரு மனிதனிலும் கடவுளைக் கண்டு அவன்முன் நான் வணங்கி நிற்கின்ற அந்தக் கணமே, நான் தளையிலிருந்து விடுபடுகிறேன். என்னைக் கட்டியுள்ள பந்தங்கள் எல்லாம் விலகுகின்றன. நான் சுதந்திரனாக ஆகிறேன். 

இதுவே செயல்முறைக்கு ஏற்ற சிறந்த வழிபாடு. கொள் கைகளுக்கோ ஊகங்களுக்கோ இங்குச் சற்றும் இடமில்லை. என்றாலும் இது பலரைப் பயமுறுத்துகிறது. இது சரியல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள். எங்கோ ஒரு சொர்க்கத்தில் இருக்கும் கடவுள் ஒருவர், தாமே கடவுள் என்று யாரிடமோ கூறியதாகத் தங்கள் முப்பாட்டனார்கள் சொல்லிவந்த பழைய கொள்கைகளையே அவர்கள் கூறி வருகிறார்கள். அந்தக் காலம் முதல் நம்மிடம் கொள்கைகள் மட்டுமே உள்ளன. அவர்களுக்கு இதுதான் செயல்முறை, நமது கருத்துக்கள் செயல்முறைக்குப் பொருந்தாததாம்! ஒவ்வொருவரும் தனக்கேற்ற ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று வேதாந்தம் கூறுவது உண்மையே. ஆனால் பாதையே லட்சியமாகாது. சொர்க்கத்தில் இருக்கும் கடவுளை வழிபடுவது என்பதெல்லாம் தவறல்ல. ஆனால் அவை உண்மையை நோக்கிச் செல்லும் படிகளே தவிர, அவையே உண்மை ஆகாது. அவை நல்லவை, மிகவும் அழகானவை; அவற்றுள் அற்புதமான கருத்துக்களும் உள்ளன. ஆனால் வேதாந்தம் ஒவ்வொரு படியிலும், ‘நண்பா, அறிய முடியாதவர் என்று நீ வழிபடுபவரையே நீயென்று நான் வழி படுகிறேன். அறிய முடியாதவராக யாரை நீ வழிபடுகிறாயோ, யாரை இந்த உலகம் முழுவதிலும் தேடுகிறாயோ அவர் என்றும் உன்னுள்ளேயே உள்ளார். அவர்மூலமே நீ வாழ்கிறாய். இந்த உலகத்தின் நிலையான சாட்சி அவரே’. ‘வேதங்கள் அனைத்தும் யாரை வழிபடுகின்றனவோ, இல்லை இல்லை, அதற்கும் மேலாக என்றும் நிலையான இந்த “நான்” என்பதில் யார் எப்போதும் உள்ளாரோ அவர் இருப்பதாலேயே இந்தப் பிரபஞ்சம் நிலைத் திருக்கிறது. பிரபஞ்சத்தின் வாழ்வும் ஒளியும் அவரே. இந்த ”நான்” உன்னிடம் இல்லாவிட்டால் உன்னால் சூரியனைக் காண முடியாது, எல்லாம் இருண்டதாகவே காணப்படும். அவர் ஒளிர்வதால்தான் நீ இந்த உலகைக் காண்கிறாய்.’   

 பொதுவாக இங்கு ஒரு பிரச்சினை எழுப்பப்படுகிறது. அதாவது இவையெல்லாம் மிகப் பெரிய கஷ்டத்திற்கு வழிகோலும் என்பதே அது. ‘நான் கடவுள். நான் செய்வ தெல்லாம், நினைப்பதெல்லாம் நன்மையே. ஏனெனில் கடவுள் தீமை செய்வாரா?’ என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணலாம். இப்படித் தவறாகப் பொருள்கொள்ளும் அபாயம் இருப்ப தாகவே வைத்துக் கொள்வோம். ஆனால் மறு பக்கத்தில் இதே அபாயம் இல்லையென நிரூபிக்க முடியுமா? அவர்கள் தங்களிலிருந்து வேறுபட்ட, சொர்க்கத்தில் இருக்கின்ற ஒரு கடவுளை வழிபடுகிறார்கள். அவரிடம் பயப்படுகிறார்கள். இவர்கள் பயத்தால் நடுங்கிய வண்ணமே பிறக்கிறார்கள். வாழ்க்கை முழுவதும் நடுங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் இந்த உலகம் பெரிதாக முன்னேறிவிட்டதா? சகுணக் கடவுளைப் புரிந்துகொண்டு வழிபடுபவர்கள் ஒருபக்கம், நிர்க்குணக் கடவுளைப் புரிந்துகொண்டு வழிபடுபவர்கள் மற்றொரு பக்கம்–எந்தப் பக்கத்தில் உலகின் மகோன்னதமான செயல்வீரர்கள் இருந்தனர்? எந்தப் பக்கத்தில் மாபெரும் செயல் வீரர்களும் மாபெரும் ஒழுக்க சீலர்களும் இருந்தனர்? நிச்சயமாக நிர்க்குணக் கடவுளை வழிபடும் பக்கம்தான். அச்சத்தால் நீதி நெறி வளரும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அது ஒரு போதும் முடியாது. ‘ஒருவன் மற்றொருவனைப் பார்ப்பது, ஒருவன் மற்றொருவனுக்குத் துன்பம் செய்வது இவை அனைத்தும் மாயை, வேறு ஒருவர் இருப்பதைக் காணாமல், வேறு ஒருவருக்கும் தீங்கு செய்யாமல் எல்லாமே ஆன்மாவாகி விடும்போது யார் யாரைக் காண்பது? யாரை யார் உணர்வது?’ எல்லாம் அவரே, அதேவேளையில் எல்லாம் நானே. ஆன்மா புனிதம் அடைந்துவிட்டது. அப்போது, அப்போது மட்டுமே நாம் அன்பு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அச்சத்தால் அன்பு வரவே வராது. அன்பின் அடிப் படையே சுதந்திரம்தான். நாம் உண்மையிலேயே இந்த உலகத்தை நேசிக்கத் தொடங்கும்போதுதான் சகோதரத்துவம் என்றால் என்ன, மனிதகுலம் என்பது என்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்; அதற்கு முன்பல்ல.  

எனவே நிர்க்குணக் கொள்கை பயங்கரமான தீமையில் உலகை ஆழ்த்திவிடும் என்று கூறுவது சரியல்ல. சகுணக்கடவுள் கொள்கையால் மட்டும் தீமைகள் ஏற்படவில்லையா? அது பிரிவினைவாதத்தை உண்டாக்கவில்லையா? அதனால் அவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு, மண்டையை உடைத்துக்கொண்டு உலகம் முழுவதையும் ரத்தக் கடலாக்க வில்லையா? ‘எனது கடவுள்தான் பெரியவர். இதைப் போர் முனையில் தீர்மானித்துக் கொள்வோம்’-இதுவே துவைதக் கொள்கையால் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட விளைவு. இந்தக் குறுகிய வழிகளிலிருந்து வெளியே வாருங்கள், பகலின் பரந்த வெளிச்சத்திற்கு வாருங்கள், எல்லையற்ற ஆன்மா சிறிய குழிகளில் வாழ்ந்து திருப்தி காண முடியுமா? ஒளியுல கிற்கு வாருங்கள். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உங்களுடையதே. கைகளை நீட்டி அதனை அணைத்துக் கொள் ளுங்கள். எப்போதாவது அப்படி உங்களுக்கு செய்யத் தோன்று மானால் நீங்கள் கடவுளை உணர்ந்துவிட்டீர்கள்.  

‘எல்லையற்ற, பெருமைமிக்க, சிறப்பான இந்த அன்பால் பிரபஞ்சமே பொங்கிப் பெருகிப் பரவுவதுவரை தெற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் விண்ணிலும் மண்ணிலும் தமது அன்பு வெள்ளத்தைப் பாய்ச்சினார் என்று வரும் புத்தரது அறவுரையின் பகுதி உங்கள் நினைவுக்கு வருகிறதா? அந்த உணர்ச்சி கொள்ளும்போதே நீங்கள் உண்மையான மனிதர். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒருவரே. அற்ப விஷயங்களை உதறித் தள்ளுங்கள். எல்லையற்ற ஒன்றைப் பெறுவதற்காகச் சாதாரண விஷயங்களை விட்டுவிடுங்கள். பேரானந்தத்தைப் பெறுவதற்காக இந்தச் சிறிய இன்பங்களை விட்டுவிடுங்கள். எல்லாமே உங்களுடையவை, ஏனெனில் நிர்க்குணம் என்பது சகுணத்தையும் தன்னுள் அடக்கியதே. 

கடவுள் சகுணமானவர், அதேவேளையில் நிர்க்குணமாக வும் இருக்கிறார். எல்லையற்ற, நிர்க்குணமான புருஷனே மனிதனாகத் தோன்றுகிறான். எல்லையற்ற நாம் நம்மையே சிறுசிறு எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தியது போலுள்ளது. எல்லையற்றிருப்பதே நமது உண்மை இயல்பு என்கிறது வேதாந்தம். அது ஒருபோதும் மறைவதில்லை, என்றென்றும் நிலைத்திருக்கும். நாம் நமது கர்மங்களால் நம்மைக் கட்டுப் படுத்திக் கொள்கிறோம். கழுத்தைச் சுற்றிக் கட்டிய சங்கிலி போல் இந்தக் கர்மம் நம்மை இழுத்துவந்து எல்லைக்கு உட் படுத்தியிருக்கிறது. சங்கிலியை உடைத்து எறிந்து சுதந்திர ராகுங்கள். நியதிகளை எல்லாம் உங்கள் கால்களின் கீழிட்டு மிதியுங்கள். மனித இயல்பில் எந்த நியதியும் இல்லை , விதியும் இல்லை, வினையும் இல்லை. எல்லையற்றதற்கு எப்படி ஒரு நியதி இருக்க முடியும்? சுதந்திரம் என்பது அதன் மூலமந்திரம். சுதந்திரம் என்பது அதன் இயல்பு, அதன் பிறப்புரிமை. 

முதலில் சுதந்திரராக இருங்கள். பின்னர் எத்தனை தனித்துவங்களை வேண்டுமானாலும் உங்கள் விருப்பம்போல் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நாம் மேடையில் தோன்றி பிச்சைக்காரன் வேடத்தில் நடிக்கும் நடிகனைப்போல் நடிப் போம். நடிப்புப் பிச்சைக்காரனையும் உண்மையிலேயே தெருவில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரனையும் ஒப்பிட்டு வேறுபாடுகளைக் காணுங்கள். ஒருவேளை இருவரும் பார் வைக்கு ஒன்றுபோல் தானிருப்பார்கள். பேச்சு வார்த்தைகளும் ஒன்றுபோலவே உள்ளன. ஆனாலும் எத்தனை வேறுபாடு! ஒருவன் பிச்சை எடுப்பதன்மூலம் ஆனந்தத்தை அனுபவிக் கிறான், மற்றொருவன் துன்பமும் துயரமும் அடைகிறான். எது இந்த வேறுபாட்டை ஏற்படுத்துகிறது? ஒருவன் சுதந்திரன், மற்றவன் கட்டுண்டவன். தன் வறுமை உண்மையல்ல, தான் நாடகத்திற்காகத் தரித்துள்ள வேடம் அது என்பதை நடிகன் உணர்ந்திருக்கிறான். உண்மைப் பிச்சைக்காரனோ தான் விரும் பினாலும் விரும்பாவிட்டாலும் பிச்சையெடுப்பதே தனது நிலை, தான் பிச்சையெடுத்தே தீர வேண்டும் என்று எண்ணு கிறான். இதுதான் நியதி. நமது உண்மை இயல்பை அறியாதது வரை, இயற்கைச் சக்திகள் ஒவ்வொன்றாலும் முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்பட்டு இயற்கையிலுள்ள எல்லா வற்றிற்கும் அடிமைகளாக இருக்கும் பிச்சைக்காரர்களே நாம். உதவி வேண்டி நாம் உலகம் முழுவதும் கதறுகிறோம், உதவி கிடைப்பதில்லை. கற்பனைக் கடவுள்களை நோக்கி அழு கிறோம், உதவி கிட்டுவதில்லை. ஆனாலும் உதவி வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். இப்படிக் கதறி அழுவதும் நம்பிக் காத்திருப்பதுமாக ஒரு வாழ்க்கை முழுவதும் வீணா கிறது. இதே நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.  

சுதந்திரராக இருங்கள். யாரிடமிருந்தும் எதையும் எதிர் பார்க்காதீர்கள். உங்கள் கடந்தகால வாழ்க்கையைச் சற்றுத் திரும்பிப் பார்ப்பீர்களானால், கிடைக்காத உதவியைப் பிறரிடம் எதிர்பார்த்து ஏமாந்தது உங்கள் நினைவிற்கு வரும். வந்த உதவிகள் எல்லாம் உங்களுள் இருந்து வந்ததே. செய்த செயலின் பலனையே நீங்கள் பெறுகிறீர்கள். ஆனாலும் மற்றவர்களிட மிருந்து உதவியை எதிர்பார்க்கிறீர்கள்! என்ன வினோதம்! பணக்காரனின் வீட்டு முற்றத்தில் எப்போதும் பலர் கூடி இருப்பார்கள். நீங்கள் கவனித்துப் பார்த்தால் அவர்கள் ஒரே மனிதர்கள் இல்லை என்பது தெரியும். அந்தப் பணக்காரனிட மிருந்து ஏதாவது கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருக் கிறார்கள். அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இப்படியே நமது வாழ்க்கையும் வாழ்நாளெல்லாம் எதிர்பார்த்து, எதிர்பார்த்து, எதிர்பார்த்து முடிவில்லாத எதிர்பார்த்த லிலேயே கழிந்துவிடுகிறது.  

எதிர்பார்ப்பதை விட்டுவிடு என்கிறது வேதாந்தம். நீ ஏன் எதிர்பார்க்கிறாய்? உனக்கு எல்லாம் இருக்கிறது; இல்லை யில்லை , நீயே எல்லாமாக இருக்கிறாய். பின் எதை நீ எதிர் பார்க்கிறாய்? பைத்தியம் பிடித்த அரசன் ஒருவன் தனது நாட்டின் அரசனையே தேடித் திரிந்தானாம்! அவனால் என் றாவது அரசனைக் கண்டுபிடிக்க முடியுமா? முடியாது. ஏனெனில் அவனே அல்லவா அந்த அரசன்! நாட்டிலுள்ள நகரந்தோறும் கிராமந்தோறும் வீடுதோறும் அவன் தேடலாம், அழுது புலம்பலாம், ஆனாலும் அவனால் அரசனைக் கண்டு பிடிக்க முடியாது. ஏனெனில் அவன்தானே அந்த அரசன்! நாமும் முட்டாள் தனமாகக் கடவுளைத் தேடி அலைவதை விட்டுவிட்டு நாமே கடவுள் என்பதை அறிய வேண்டும். நாமே கடவுள் என்ற உண்மையை உணரும்போது மகிழ்ச்சியும் நிறைவும் அடைகிறோம். இப்படிப் பைத்தியக்காரத்தனமாகத் தேடி அலைவதை விட்டுவிட்டு உலகமாகிய நாடக மேடையில் உங்கள் பங்கை மட்டும் ஏற்று நடியுங்கள். 

நாம் காணும் காட்சி முழுவதும் மாறிவிட்டது. இந்த உலகம் ஒரு நிரந்தரமான சிறைச்சாலையாக இல்லாமல் சிறந்த விளையாட்டு மைதானமாகிவிட்டது. போட்டியும் பொறாமை களும் ஒழிந்து, பேரானந்தம் நிறைந்த, வசந்தகாலப் பூக்கள் நிறைந்த, வண்ணத்துப் பூச்சிகள் பறந்து திரியும் இன்பப் பேருலகமாகி விடுகிறது. நரகமாகக் காட்சி அளித்த அதே உலகம் சொர்க்க பூமியாகக் காட்சி அளிக்கிறது, கட்டுண்டவர் களுக்கு இது கடும் சித்திரவதைக் கூடம், சுதந்திரமானவர் களுக்கோ இது வேறுவிதமாகக் காட்சி அளிக்கிறது. இந்த வாழ்க்கையே பிரபஞ்ச வாழ்க்கை. சொர்க்கமும் மற்ற இடங் களும் இங்கேயே உள்ளன. மனிதர்களின் பிரதிபிம்பங் களான தேவர்களும் இங்கேயே உள்ளனர். தேவர்கள் தங்களைப் போன்று மனிதனைப் படைக்கவில்லை, மாறாக மனிதனே தேவர்களைப் படைத்தான். மூல அச்சுக்கள் இங்கேயே உள்ளன. இதோ இந்திரன், இதோ வருணன்; பிரபஞ்சத்தின் தேவர்கள் அனைவரும் இங்கேயே உள்ளனர். நாமே நமது நகல்களாக அவர்களை வெளிப்படுத்தினோம். நாமே இந்தத் தேவர் களின் மூல அச்சுக்கள். நாமே உண்மையானவர்கள். வழிபட வேண்டிய ஒரே தேவர்கள் நாமே.  

இதுவே வேதாந்தத்தின் கருத்து. இதுவே அதன் செயல் முறை. சுதந்திரர்களானதும் பைத்தியம் பிடித்துப்போய் சமுதாயத்தை உதறிவிட்டுக் காட்டிற்கு ஓடிக் குகைகளில் வாழ்ந்து உயிரைவிட வேண்டிய அவசியம் இல்லை. நாம் எங்கே இருந் தோமோ அங்கேயே இருப்போம். ஒன்றே ஒன்று: எல்லா வற்றையும் நன்கு புரிந்துகொள்வோம், அவ்வளவுதான். அதே நிகழ்ச்சிகள் தொடரும்; ஆனால் அவை புதிய பொருளைத் தரும். இந்த உலகை நாம் இன்னும் அறியவில்லை . சுதந்திரர் களாகும்போதுதான் அது என்ன என்பதை அறிந்து கொள் வோம்; அதன் உண்மை இயல்பைத் தெரிந்து கொள்வோம். விதி, நியதி, வினை என்பதெல்லாம் நமது இயல்பின் மிகச் சிறு பகுதியே என்பதை அப்போது காண்போம். இது ஒரு பக்கம், மற்ற பக்கத்தில் எப்போதும் சுதந்திரம் இருந்தே வந்தது. நாம் இதை அறியவில்லை. அதனால்தான், துரத்தப்பட்ட முயல் தரையில் முகத்தைப் புதைத்துக் கொள்வதுபோல் தீமை யிலிருந்து விடுபடுவதற்கான வெற்று முயற்சிகளில் ஈடுபடு கிறோம். மாயையின் காரணமான நமது உண்மை நிலையை மறக்க முயல்கிறோம், அது முடியவில்லை. அது எப்போதும் நம்மைக் கூவியழைத்துக்கொண்டே இருக்கிறது. கடவுளையும் தேவர்களையும் நாம் தேடியபோதும் புறச் சுதந்திரத்தை நாடிய போதும் உண்மையில் நமது உண்மை இயல்பையே தேடினோம். நாம் அந்தக் குரலைத் தவறாக எடுத்துக் கொண்டோம். அந்தக் குரல் நெருப்பிலிருந்தோ தேவனிடமிருந்தோ சூரியன், சந்திரன் அல்லது நட்சத்திரங்கள் போன்றவற்றிலிருந்தோ வருவதாக எண்ணினோம். இறுதியில் அவை நம்முள்ளிருந்தே வந்தன என்பதைத் தெரிந்து கொண்டோம். முடிவில்லாத சுதந்தி ரத்தைப்பற்றி ஒலித்துக் கொண்டிருக்கின்ற முடிவில்லாத அந்தக் குரல் நம்முள்ளேயே உள்ளது. அதன் கீதம் என்றுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆன்ம கீதத்தின் ஒரு பகுதி இந்தப் பூமியாக, நியதியாக, பிரபஞ்சமாக ஆகியுள்ளது. எனினும் அது என்றும் நமதாகவே இருந்தது. நம்முடைய தாகவே என்றும் இருக்கும். வேதாந்தத்தின் குறிக்கோளை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மனிதனை உள்ளது உள்ளபடி அறிவது என்பதே. வெளிப்பட்டு நிற்கும் கடவுளாகிய உங்கள் சகோதர மனிதனை வழிபடவில்லை என்றால் வெளிப் பட்டுத் தோன்றாத கடவுளை எப்படி வழிபட முடியும்?– இதுதான் வேதாந்தத்தின் செய்தி. 

 ‘காணும் உங்கள் சகோதரனிடம் உங்களால் அன்பு கொள்ள முடியாதென்றால் காணாத கடவுளிடம் நீங்கள் எப்படி அன்பு கொள்ள முடியும்?’ என்று பைபிள் கூறுவது நினைவுக்கு வருகிறதா? மனித முகங்களில் அவரைக் காண முடியவில்லை என்றால் மேகங்களிலும், உயிரற்ற ஜடப்பொருட் களால் ஆன உருவங்களிலும், மூளை புனைந்த கற்பனைக் கதைகளிலும் எப்படிக் காண முடியும்? ஆணிலும் பெண்ணிலும் நீங்கள் கடவுளைக் காணத் தொடங்கும்போதுதான் உங்களை மத உணர்வு உடையவன் என்று நான் சொல்வேன். அதன் பின்பே, ‘உன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தை யும் காட்டு’ என்பதன் பொருளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். மனிதனையே, ஏன், எல்லாவற்றையும் கடவுளாகப் பார்க்கும் போதுதான் புலியும்கூட வரவேற்கத் தக்கதாகும். உங்கள் முன் தந்தை, தாய், நண்பன், குழந்தை என்று பல்வேறு உருவங் களில் தோன்றும் ஒவ்வொருவரும் அந்த அழிவற்ற ஆனந்தப் பொருளான கடவுளே. நம்முடன் விளையாடும் நமது ஆன்மாவே. 

நமது மானிட உறவுமுறைகள் இப்படித் தெய்வீகமாவது போலவே, கடவுளிடமும் நமது உறவுமுறை பலவிதமாக மாறு படலாம். நாம் அவரை நமது தந்தை, தாய், நண்பன், காதலன் என்றெல்லாம் கருதலாம். கடவுளைத் தந்தையாகக் கருதுவதை விடத் தாயாகக் காண்பது உயர்ந்த லட்சியம். அதைவிடச் சிறந்தது நண்பனாகக் கருதுவது. ஆனால் அனைத்திலும் மேலானது காதலனாக எண்ணுவதே. காதலிப்பவருக்கும் காதலிக்கப்படுபவருக்கும் வேறுபாடு இல்லாத நிலைதான் அனைத்திலும் உச்சம்.  

பழைய பாரசீகக் கதை உங்கள் நினைவிற்கு வரலாம். காதலன் ஒருவன் தன் காதலியின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினான். உள்ளிருந்து, ‘யாரது?’ என்று கேள்வி வந்தது. அதற்கு அவன், ‘நான்தான்’ என்றான். உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை . மீண்டும், ‘நான் வந்திருக்கிறேன்’ என்றான், கதவு திறக்கப்படவில்லை. மூன்றாம் முறையாகக் கதவைத் தட்டினான். ‘யாரங்கே?’ என்ற கேள்வி மீண்டும் வந்தது. அதற்கு அந்தக் காதலன், ‘என் அன்பே , நான் நீயே’ என்றான். உடனே கதவு திறந்தது. கடவுளிடம் நமது தொடர்பும் இவ்வாறே இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் இறைவனே இருக்கிறான். எல்லாமாகவும் அவனே இருக்கிறான். ஒவ்வோர் ஆணும் பெண்ணும் நாம் தொட்டறியக்கூடிய, ஆனந்தமயமான, வாழும் கடவுளே. கடவுள் அறிய முடியாதவர் என்று யார் சொன்னார்கள்? அவரைத் தேடியலைய வேண்டும் என்று யார் சொன்னார்கள்? நாம் கடவுளை என்றும் காண்கிறோம். நாம் அவருள்ளேயே என்றும் வாழ்கிறோம். அவர் எங்கும் எப்போதும் அறியப்படுபவர், என்றென்றும் வழிபடப்படுபவர்.  

இப்போது பிற வழிபாட்டு முறைகள் தவறல்ல என்ற மற்றொரு கருத்து எழுகிறது. சடங்குகளும் கிரியைகளும், அவை எவ்வளவு பண்படாதவை என்று கருதப்பட்டாலும், அவற்றால் இறைவனை வழிபடுபவர்கள் தவறான வழியில் செல்பவர்களல்ல என்பது முக்கியமாக நாம் நினைவில்கொள்ள வேண்டியவற்றுள் ஒரு கருத்தாகும். இது உண்மையிலிருந்து உண்மைக்குச் செல்லும் பயணம், தாழ்ந்த உண்மையிலிருந்து மேலான உண்மைக்குச் செல்லும் ஒரு பயணம். இருள் என்பது ஒளி குறைந்தநிலை. தீமை என்பது நன்மை குறைந்த நிலை. தூய்மையின்மை என்பது தூய்மை குறைந்த நிலை. பிறரும் நம்முடன் ஒரே பாதையில் வருபவர்கள் என்பதை உணர்ந்து அவர்களுடன் அன்பாகவும் கருணையுடனுமே நாம் வாழ வேண்டும். இதை மறக்கக் கூடாது. நீங்கள் சுதந்திரராக இருந் தால் மற்றவர்களும் விரைவாகவோ சற்றுத் தாமதமாகவோ சுதந்திரம் அடைவார்கள் என்பதை நினைக்க வேண்டும். நீங்கள் சுதந்திரமாக இருந்தால் எப்படி உங்களால் நிலையற்றதைப் பார்க்க முடியும்? உண்மையில் நீங்கள் தூயவராக இருந்தால் தூய்மையின்மையை நீங்கள் எப்படிக் காண முடியும்? உள்ளே இருப்பதுதான் வெளியில் தோன்றுகிறது. நம்முள் தூய்மை யின்மை இல்லாமல் வெளியில் அதைக் காண முடியாது. 

வேதாந்தத்தின் செயல்முறைக் கருத்துக்களுள் இதுவும் ஒன்று. இதனை நாம் வாழ்க்கையில் செயல்படுத்துவோம் என்று நான் நம்புகிறேன். இதைச் செயல்முறையில் கொண்டு வரவே நமது முழு வாழ்வும் உள்ளது. ஆனால் அதிருப்தியுடனும் நிறைவற்றும் செயல்படுவதை விட்டு திருப்தியுடனும் நிறை வுடனும் நாம் செயலாற்ற வேண்டும். ஏனெனில் உண்மை நம் முள்ளேயே உள்ளது என்பது நமக்குத் தெரியும். அது நமது பிறப்புரிமை. கைக்கு எட்டும்படி அதை வெளிப்படுத்துவதே நாம் செய்ய வேண்டியது.

செயல்முறை வேதாந்தம் 1

செயல்முறை வேதாந்தம்

செயல்முறை வேதாந்தம் என்ற சொல்லைப் பிரபல மாக்கியவர் சுவாமி விவேகானந்தர். காட்டிலும் குகைகளிலும் வாழும் முனிவர்கள் மட்டுமல்ல, நாட்டிலும் நகரங் களிலும் அதன் பரபரப்பிலும் வாழ்கின்ற ஒவ்வொருவரும் வேதாந்தத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பதை ஆணித்தரமாக எடுத்துக் காட்டினார் அவர். வேதாந்தத் தத்துவத்தின் உயிரூட்டும் தத்துவங்களையும், அவற்றை எவ்வாறு செயல் முறைப் படுத்துவது என்பது பற்றியும் அவர் பேசிய நான்கு சொற்பொழிவுகளே ‘செயல்முறை வேதாந்தம்’. லண்டனில் 1896 நவம்பர் 10, 12, 17, 18-ஆம் தேதிகளில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இவை.


‘வேதாந்தத் தத்துவத்தின் செயல்முறைப் பகுதியைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசும்படி என்னை நீங்கள் கேட்டிருக் கிறீர்கள். நான் முன்பே கூறியதுபோல் கோட்பாடு மிகவும் சிறப்பானதுதான், ஆனால் அதனை எப்படிச் செயல்முறைப் படுத்துவது? செயல்முறையில் பயன்படுத்த முடியாத கோட்பாடு கள் வெறும் அறிவு வளர்ச்சிக்கான பயிற்சியாக இருக்குமே தவிர, வேறு வகையான மதிப்பு அதற்கு இருக்காது. எனவே வேதாந்தம் ஒரு மதம் என்றால் அது நடைமுறையில் கடைப் பிடிக்கத் தக்கதாக இருக்க வேண்டும்; நமது வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் செயல்படுத்தத் தக்கதாக இருக்க வேண்டும். அது மட்டும் அல்ல, மதத்திற்கும் உலக வாழ்க்கைக் கும் இடையில் கற்பிக்கப்பட்டுள்ள போலி வேறுபாடுகள் எல்லாம் மறைய வேண்டும். ஏனெனில் வேதாந்தம் ஒருமையை, எல்லாம் ஒரே உயிர் என்ற தத்துவத்தைத்தான் உபதேசிக்கிறது.

மதத்தின் லட்சியங்கள் நமது வாழ்க்கையின் எல்லா அம்சங் களையும் தழுவுவதாக இருக்க வேண்டும்; நமது எண்ணங்களை எல்லாம் ஊடுருவி நிற்க வேண்டும். செயல் முறையில் அவை மிக அதிகமாக இருந்தாக வேண்டும். அவற்றின் செயல் முறைப் பகுதியை, போகப்போக உங்களுக்கு விளக்குவேன். இந்தத் தொடர் சொற்பொழிவுகள் அதற்கு அடிப்படையாக அமைகின்றன.

முதலில் நாம் கோட்பாடுகளை ஆராய்வோம். பிறகு அவை எப்படிக் காட்டுக் குகைகளிலிருந்து பரபரப்பான தெருக் களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு வரப்பட்டன என்பதைத் தெரிந்துகொள்வோம். இவற்றில் நாம் காணும் வினோதமான அம்சம் என்னவென்றால், இந்தக் கருத்துக்கள் எல்லாம் வனத் தில் ஏகாந்த வாழ்வின் விளைவாகக் கிடைத்தவை அல்ல; மிகவும் பரபரப்பான வாழ்க்கை நடத்துபவர்கள் என்று நாம் நினைப்பவர்களிடமிருந்து, அதாவது மன்னர்களிடமிருந்தே இவை தோன்றியிருக்கின்றன. 

ஆருணி என்ற முனிவரின் மகன் சுவேதகேது. ஆருணி முனிவர் காட்டில் வாழ்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். எனவே சுவேதகேது காட்டிலேயே வளர்ந்தான். அவன் பாஞ் சால மன்னனான பிரவாஹண ஜைவலியின் அரண்மனையை அடைந்தான்.  

சுவேதகேதுவிடம் அந்த மன்னன் கேட்டான்: 

‘மரணத்தின்போது உயிர்கள் எப்படி வெளியேறுகின்றன என்பது உனக்குத் தெரியுமா?’ 

‘தெரியாது அரசே.’ 

‘அவை எப்படி இங்கே திரும்புகின்றன?’ பயன் ‘தெரியாது அரசே.’ 

‘முன்னோர்கள் சென்ற வழிகளும் தேவர்கள் போகும் பாதைகளும் உனக்குத் தெரியுமா?’ 

‘இல்லை அரசே.’  

அரசன் மேலும் பல கேள்விகளைக் கேட்டான். ஒன்றிற்கும் சுவேதகேதுவால் பதில் கூற முடியவில்லை . எனவே அவன், ‘உனக்கு ஒன்றுமே தெரியவில்லை’ என்று சுவேதகேதுவிடம் கூறிவிட்டான்.  

சுவேதகேது தன் தந்தையிடம் திரும்பிச் சென்றான். அவனுடைய தந்தை, தம்மாலும் அவற்றிற்கு விடை கூற இயலாதென்று கூறினார். சுவேதகேதுவிற்குக் கற்பிக்கக் கூடாது என்பது அவரது எண்ணம் அல்ல. அவருக்கும் இவற்றைப்பற்றி எதுவும் தெரியவில்லை . எனவே சுவேதகேது தன் தந்தையுடன் அரசனை அணுகி, அந்த ரகசியங்களைத் தங்களுக்குத் தெளிவு படுத்துமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு அரசன், அந்த ரகசியங்களை இதுவரை அரசர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள் என்றும், மதக்குருமார்களுக்கு இவைபற்றி ஒன்றும் தெரியாது என்றும் கூறினான். இருந்தாலும் அவர்கள் விரும்பியதால் அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினான்.  

இந்த வேதாந்தக் கருத்துக்கள், காடுகளில் சென்று தியானம் செய்ததால் மட்டும் உணரப்பட்டவை அல்ல; அவற்றின் மிகச் சிறந்த பகுதிகள் எல்லாம் அறிவுத்திறன் மிக்க, அதேவேளையில் அதிகமான வேலைகள் நிறைந்த அன்றாட வாழ்க்கை நடத்துபவர்களால் வெளிப்படுத்தப்பட்டவை என்பதைப் பல்வேறு உபநிடதங்கள் வாயிலாக அறிகிறோம். லட்சக் கணக்கான மக்களை ஆளும் அரசனைவிடப் பரபரப்பு மிக்க ஒருவரை நாம் காண முடியாது. அவர்களுள் சிலர் ஆழ்ந்த சிந்தனையாளர்களாக இருந்திருக்கிறார்கள். 

இதையெல்லாம் பார்க்கும்போது, இந்தத் தத்துவம் செயல் முறைக்கு மிகவும் ஏற்புடையது என்பது தெரியவருகிறது. உங்களுள் பலரும் பகவத்கீதையைப் படித்திருக்கலாம். வேதாந்தத் தத்துவத்தின் மிகச் சிறந்த விளக்கவுரை அது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பகவத்கீதை போர்க்களத்தில் கூறப்பட்டது. அங்குதான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்தக் கருத்துக்களை உபதேசித்தார். தீவிரமான செயல்பாடு, அதன் நடுவில் எல்லையற்ற அமைதி-இதுதான் கீதையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிவீசித் திளைக்கும் செய்தியாகும். இதுவே செயல்புரிவதன் ரகசியம். இதை அடைவதே வேதாந்தத்தின் லட்சியம். செயலற்ற நிலை என்றால் நாம் என்ன புரிந்துகொள்கிறோமோ, அந்த மந்த நிலை ஒரு போதும் வேதாந்தத்தின் லட்சியம் அல்ல. அதுதான் லட்சியம் என்றால் நம்மைச் சுற்றியுள்ள சுவர்களே மிகச் சிறந்த அறிவாளி களாகிவிடும். அவைதாம் செயல்புரிவது இல்லையே! ஒன்றும் செய்யாமலிருக்கும் மண்ணும் மரங்களும் உலகில் சிறந்த ஞானிகள் ஆகிவிடும். அவையும் ஒன்றும் செய்வதில்லை அல்லவா! செயலற்ற நிலையை ஆசையுடன் இணைத்து விட்டால் அது செயல்நிலையாகிவிடும் என்பதும் கிடையாது. வேதாந்தத்தின் லட்சியமான உண்மையான செயல்நிலை என்பது, என்ன நடந்தாலும் சமநிலை குலையாத, கலங்காத, நிரந்தரமான அமைதியுடன் இணைந்தே இருக்கும். இதுவே செயல்புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த கருத்து என்பதை நமது அன்றாட வாழ்க்கை அனுபவத்தின்மூலம் நாம் உணரலாம்.  

செயல்புரிவதற்குப் பொதுவாக நாம் கொள்கின்ற ஆசை கூட இல்லாமல் எப்படிச் செயல்புரிய முடியும் என்று என்னிடம் பலரும் அவ்வப்போது கேட்டதுண்டு. சிறு வயதில் நானும் அப்படியேதான் நினைத்திருந்தேன். ஆனால் வயதாக ஆக, அனுபவம் வளரவளர அது உண்மை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆசை குறைகின்ற அளவிற்கு நாம் நன்றாகச் செயல்புரிவோம். அமைதி நம்மிடம் மிகுந்தோறும் நமக்கு நன்மை பெருகுகிறது; நம்மால் அதிகம் செயல்புரிய முடிகிறது. உணர்ச்சிகளைக் கட்டவிழ்த்து விடுமளவிற்கு நாம் ஆற்றலை இழக்கிறோம், நமது நரம்புகள் தளர்வுறுகின்றன, மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகிறது, மிகக் குறைந்த அளவே வேலை செய்ய முடிகிறது. வேலை செய்யச் செலவிட்டிருக்க வேண்டிய ஆற்றலை, ஒன்றுக்கும் பயன்படாத வெறும் உணர்ச்சிப் பெருக்கில் வீணாக்குகிறோம். மனம் ஒருமுகப் பட்டு, அமைதியாக இருக்கும்போதுதான் அதன் ஆற்றல் முழு வதும் நற்செயல் புரியப் பயன்படுகிறது. இந்த உலகம் தந்த செயல்வீரர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் அற்புத மான அமைதி மிக்கவர்கள் என்பது தெரிய வரும். எதனாலும் அவர்களது சமநிலையைக் கலைக்க முடிவதில்லை. அதனால் தான் கோபப்படும் ஒரு மனிதனால் அதிக அளவு வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது; எதற்கும் கோபப்படாத மனிதன் சிறப்பான பணிகளைச் செய்ய முடிகிறது. கோபத் திற்கோ வெறுப்பிற்கோ ஏதாவது ஆசைகளுக்கோ இடம் கொடுப்பவனால் செயல்புரிய முடியாது. அவன் தன்னைத் தானே சிதைத்துக் கொள்கிறானே தவிர உண்மையாக எதையும் செய்து முடிப்பதில்லை. அமைதியான, மன்னிக்கக்கூடிய, சம நோக்குடைய, நிலைகுலையாத மனம் உடையவனே மிக அதிக அளவு செயல்புரிய முடிகிறது.

வேதாந்தம் லட்சியத்தை உபதேசிக்கிறது. இந்த லட்சியம் என்பது, நாம் கண்கூடாகக் காண்பதற்கும் செயல்முறை என்று நாம் கூறுவதற்கும் எவ்வளவோ அப்பால் இருக்கிறது. மனித இயல்பில் இரு போக்குகள் உள்ளன. ஒன்று லட்சியத்தை வாழ்க்கையுடன் சமரசப்படுத்திக் கொள்வது, மற்றொன்று வாழ்க்கையை லட்சியத்தை நோக்கி உயர்த்திக் கொள்வது. நாம் இவற்றைப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில் முதலில் கூறிய போக்குத்தான் நமது வாழ்வைக் கவரக்கூடிய தாக இருக்கிறது. என்னால் சிலவகையான வேலைகளைத்தான் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை இவற்றுள் பலவும் தீயவையாக இருக்கலாம்; இவற்றின் பின்னணியில் நின்று தூண்டுவது கோபம், பேராசை, சுயநலம் போன்ற உணர்ச்சிகளாக இருக்கலாம். இப்போது யாராவது என்னிடம் வந்து, சுயநலத்தையும் சுயநல இன்பத்தையும் விட்டு விடுவதை முதல்படியாகக் கொண்ட ஒரு லட்சியத்தைப்பற்றிக் கூறினால், அது நடக்காத காரியம் என்றே நான் நினைப்பேன். எனது சுயநலத்துடன் ஒத்துப்போகின்ற ஒரு லட்சியத்தை என்னிடம் கூறினால், உடனே அதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். அதுவே என்னுடைய லட்சியமாகிவிடும்.  

‘வைதீகம்’ என்ற சொல் எப்படிப் பலவிதமாக விளக்கப் படுகிறதோ, அதுபோல் ‘செயல்முறை’ என்ற சொல்லையும் பலவிதமாக விளக்கலாம். ‘என்னுடையதே வைதீகம், உன்னு டையது அவைதீகம்’ என்பதுபோன்ற போக்குத்தான் செயல் முறையிலும் காணப்படுகிறது. அதாவது நான் எதைச் செயல் முறை என்று கருதுகிறேனோ அது ஒன்றே உலகத்தின் செயல் முறை என்று கூறுவது. நான் வியாபாரியானால் வியாபாரம் மட்டுமே செயல்முறைத் தொழில். ஒருவேளை நான் திருடனாக இருந்தால் திருடுவதே செயல்முறைக்கு மிகவும் ஏற்புடைய வழி, மற்றவை செயல்முறைக்கே பொருந்தாதவை. நாம் விரும்பு பவற்றிற்கும் நம்மால் செய்ய முடிந்தவற்றிற்கும் செயல்முறை என்ற சொல்லை எப்படிப் பயன்படுத்துகிறோம், பாருங்கள்! எனவே வேதாந்தம் மிகவும் செயல்முறைக்கு ஏற்புடையது என்று சொல்லும்போது இந்தப் பொருளில் புரிந்துகொள்ளக் கூடாது; வாழ்க்கையை லட்சிய நிலைக்கு உயர்த்துவது என்ற பொருளையே கொள்ள வேண்டும்.  

எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் வாழ்க்கையில் கடைப் பிடிக்க முடியாத ஒன்றை வேதாந்தம் லட்சியமாகக் கூறுவ தில்லை. ஒரு லட்சியமாக இருப்பதற்கு ஏற்றவாறு அது விளங் கவும் செய்கிறது. சுருங்கச் சொன்னால், நீ தெய்வீகமானவன், ‘நீயே அது’ என்பதே வேதாந்தத்தின் லட்சியம். இதுவே வேதாந்தத்தின் சாரம். எவ்வளவு பிரித்துப் பொருள் கொண் டாலும், தர்க்க அறிவாகிய சிலம்பம் விளையாடினாலும், வேதாந்தம் உணர்த்துவது மனித ஆன்மா தூய்மையானது, எல்லாம் அறிந்தது என்பதையே. ஆன்மா பிறப்பதாகவும் இறப்பதாகவும் நாம் கொண்டிருக்கும் மூடக் கருத்துக்கள் எல்லாம் பொருளற்ற பிதற்றல்கள். ஆன்மா பிறந்ததும் இல்லை, இறப்பதும் இல்லை . நாம் சாகப் போவதாக பயப்படுவது எல்லாம் வெறும் மூடநம்பிக்கைகள். என்னால் இதைச் செய்ய முடியும், இதைச் செய்ய முடியாது என்று கூறுவதும்கூடப் பொருளற்றவைகளே. நம்மால் எதையும் செய்ய முடியும். 

ஒவ்வொரு மனிதனும் முதலில் தன்னிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை வேதாந்தம் போதிக்கிறது. தனக்கு வெளியே உள்ள ஒரு சகுணக் கடவுளை நம்பாதவனை எப்படிச் சில மதங்கள் நாத்திகன் என்று கூறுகின்றனவோ, அது போலவே, தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று வேதாந்தம் கூறுகிறது. நமது ஆன்மாவின் மகிமையில் நம்பிக்கையின்மையே நாத்திகம் என்று வேதாந்தம் கூறுகிறது. சந்தேகமின்றி, பலருக்கு இது பயங்கரக் கருத்துதான். இது அடைய முடியாத குறிக்கோள் என்று நம்மில் பலரும் நினைக் கலாம். ஆனால் இதை ஒவ்வொரு மனிதனாலும் அடைய முடியும் என்று வேதாந்தம் வலியுறுத்துகிறது. இந்த லட்சியத்தை அடைவதில் ஆண், பெண், சிறுவர்கள், இனம், பால்வேற்றுமை போன்ற எதுவும் தடையாக இருக்க முடியாது. இதை அனை வரும் அடையலாம். ஏனெனில் இது ஏற்கனவே அறியப் பட்டது, ஏற்கனவே இருப்பது என்று வேதாந்தம் கூறுகிறது.  

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல்கள் அனைத்தும் ஏற்கனவே நம்முடையவைதான். நமது கண்களை நாமே கை களால் மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று அழுகிறோம். நம்மைச் சுற்றி இருள் என்பது இல்லவே இல்லை என்பதை உணருங்கள். கைகளை அகற்றுங்கள், எப்போதும் நிலவிக் கொண்டிருக்கின்ற அந்த ஒளியைக் காணலாம். இருள் என்பது ஒருபோதும் இருந்ததில்லை, பலவீனம் என்பது இருந்த தில்லை. நாம் பலவீனர்கள் என்று அழுகின்ற நாம் முட்டாள் களே. நாம் தூய்மையற்றவர்கள் என்று கதறுகின்ற நாம் முட்டாள்களே. எனவே லட்சியம் செயல்முறைக்கு ஏற்றது மட்டுமல்ல, அது எப்போதும் அப்படியேதான் இருந்து வந்தி ருக்கிறது என்பதையே வேதாந்தம் வலியுறுத்துகிறது. இந்த லட்சியம், இந்த உண்மை -இதுவே நமது சொந்த இயல்பு; மற்றவை அனைத்தும் பொய், உண்மையற்றது. ‘நான் அழியக் கூடிய சாதாரண மனிதன்’ என்று கூறும்போது உண்மைக்கு மாறுபட்ட ஒன்றை நீங்கள் கூறுகிறீர்கள். நீங்களே உங்களைப் பொய்யர்களாக்கிக் கொள்கிறீர்கள். ஏதோ கொடிய, வலுவற்ற, இழிவான ஒன்றினுள் உங்களை நீங்களே சுயமயக்கத்திற்கு ஆளாக்கிக் கொள்கிறீர்கள். 

பாவம் என்பதை வேதாந்தம் ஒத்துக்கொள்வதில்லை; தவறு என்பதையே ஏற்றுக் கொள்கிறது. அவற்றுள் மிகப் பெரிய தவறு, ‘நான் பலவீனன், நான் பாவி, இழிவான அற்பப் பிராணி, இதையோ அதையோ செய்யத் திறனற்றவன்’ என்று நமக்கு நாமே கூறுவதுதான் என்று வேதாந்தம் கூறுகிறது. இவ்வாறு எண்ணும்போதெல்லாம் உங்களைக் கட்டியிருக்கும் சங்கிலித் தொடரில் மேலும் ஒரு வளையத்தைச் சேர்த்துக் கொள்கிறீர்கள்; உங்கள் ஆன்மாவை நீங்கள் ஆழ்த்தியிருக் கின்ற சுயமயக்கத்தில் மேலும் ஓர் அடுக்கைச் சேர்க்கிறீர்கள். எனவே, தான் பலவீனன், தான் தூய்மையற்றவன் என்று நினைப்பவன் தவறு செய்கிறான்; ஒரு தீய கருத்தை உலகில் பரவவிடுகிறான். 

 நமது தற்போதைய வாழ்க்கையை, சுயமயக்கத்திற்கு உள்ளான இந்த வாழ்க்கையை, நாம் தவறுதலாகக் கொண் டுள்ள வாழ்க்கையை லட்சியத்துடன் சமரசப்படுத்தும் முயற்சி வேதாந்தத்தில் இல்லை. இந்தப் பொய்யான வாழ்க்கை ஒழிய வேண்டும், என்றும் நிலையாக இருந்துவரும் உண்மையான வாழ்க்கை வெளிவர வேண்டும், ஒளிவிட வேண்டும் என் பதையே அது வலியுறுத்துகிறது. இதை நாம் எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டும். ஒருவன் தூயவனாக மாறு கிறான் என்பது இல்லை, மேலும் மேலும் வெளித் தோற்றத் திற்கு வருகிறான் என்பதே உண்மை . திரை விலகுகிறது, ஆன்மாவின் இயல்பான தூய்மை வெளிப்படத் தொடங்கு கிறது. எல்லையற்ற தூய்மை, சுதந்திரம், அன்பு, ஆற்றல் அனைத்தும் ஏற்கனவே நமக்குரியவை. 

அடர்ந்த காடுகளிலும் குகைகளிலும் வசிப்பதால் மட்டு மல்ல, வாழ்க்கையின் எந்த நிலையிலுள்ள மனிதர்களாலும் இந்த லட்சியத்தை அடைய முடியும் என்று வேதாந்தம் கூறுகிறது. இந்த உண்மைகளைக் கண்டுபிடித்தவர்கள் காடு களிலும் குகைகளிலும் வசித்து வந்தவர்களோ, குறிப்பிட்ட வாழ்க்கை நிலையில் இருந்தவர்களோ அல்ல என்பதை நாம் கண்டோம். அவர்கள் மிகவும் பரபரப்பான வாழ்க்கை நடத் தியவர்கள், பெரிய படைத்தலைவர்கள், அரியாசனத்தில் அமர்ந்து கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்விற்காக ஆட்சி புரிந்தவர்கள் என்று நாம் நம்புவதற்குத் தகுந்த காரணங்கள் உள்ளன. அதிலும் அரசன் என்பவன் ஏறக்குறைய பொம்மைபோல் இருந்துவரும் இந்தக் காலம் போன்றதல்ல அந்தக் காலம். ஏகாதிபத்திய முடிமன்னர்கள் வாழ்ந்த காலம் அது. அப்படியிருந்தும் இந்தக் கருத்துக்களைச் சிந்திக்கவும், அவற்றை உணரவும் மற்றவர்களுக்கு உபதேசிக்கவும் அவர் களுக்கு நேரமிருந்தது. அவர்களது வாழ்க்கையுடன் ஒப்பிடும் போது, ஓய்வான வாழ்க்கை என்று கூறத்தக்க வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற நமக்கு இது செயல்முறைக்கு எவ்வளவு ஏற்றதாக இருக்கும்! நமக்கு வேலைகள் மிகக் குறைவு, ஓய்வு நேரம் ஏராளம். இருந்தும் நம்மால் இதை அடைய முடியா தென்றால் அது பெருத்த அவமானம்! 

பழங்காலச் சக்கரவர்த்திகளின் தேவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நமது தேவைகள் ஒன்றும் இல்லாதவை. குரு க்ஷேத்திரப் போர்க்களத்தில் பெரிய படைத்தளபதியாக இருந்து, போர் செய்த அர்ஜுனனின் தேவைகளுடன் ஒப்பிட்டால் நமது தேவைகள் ஒன்றுமே இல்லை. அமளிதுமளியான அந்தப் போர்க்களத்திலும் வேதாந்தத் தத்துவங்களைச் சிந்திப்பதற்கும் அதைக் கடைப்பிடிப்பதற்கும் அவனுக்கு நேரம் இருந்தது. அதைவிட ஓய்வானதும், சுலபமானதும், வசதிகள் நிறைந்தது மான நமது வாழ்க்கையில், அவர்கள் செய்த அளவாவது நாம் செய்ய வேண்டாமா? நல்லது செய்ய வேண்டும் என்று உண்மை யிலேயே விரும்புவோமானால், இப்போது நமக்கு இருப்ப தாக எண்ணுகின்ற ஓய்வு நேரத்தைவிட அதிக நேரம் நமக்குக் கிடைப்பதைக் காண்போம். நமக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால், நமக்கு வேண்டும் என்று உறுதியாக நினைத்தால் இருநூறு லட்சியங் களை நாம் நிறைவேற்ற முடியும். ஆனால் லட்சியத்தை நடை முறை வாழ்க்கையின் மட்டத்திற்குக் கொண்டுவந்து அதன் மதிப்பைக் குறைத்துவிடக் கூடாது. 

மிகவும் வருத்தம் தருகின்ற ஒன்று என்னவென்றால், நாம் செய்யும் தவறுகளைப் பலவிதக் காரணங்கள் காட்டி மன்னித்து, நமது முட்டாள்தனமான தேவைகளையும் ஆசைகளையும் பார்த்தாலும் நம்மைத் திருத்தாமல் நம்மைத் தவறாக வழி நடத்திச் செல்லும் மனிதர்களை நாம் அடைந்திருப்பதுதான். அவர்கள் கூறும் லட்சியம்தான் நமக்குத் தேவையான லட்சியம் என்று நமக்கும் தோன்றிவிடுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. இப்படிப்பட்ட எதையும் வேதாந்தம் போதிக்கவில்லை. நடை முறை வாழ்க்கை நமது லட்சியத்துடன் ஒத்துப்போக வேண்டும். நிகழ்கால வாழ்க்கையை, என்றும் அழியாத நிரந்தரமான வாழ்க்கையுடன் இணையச் செய்யவேண்டும். 

வேதாந்தத்தின் மையக் கருத்து இந்த ஒருமைதான் என் பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இரண்டு உயிர், இருவித வாழ்க்கை , இரண்டு உலகங்கள் என்று மட்டுமல்ல, எதிலும் இரண்டு என்பது இல்லவே இல்லை. சொர்க்கங்களைப் பற்றியும், அவைபோன்ற விஷயங்களைப் பற்றியும் முதலில் வேதங்கள் கூறலாம். ஆனால் முடிவில் அவற்றின் உயர்ந்த தத்துவங்களின் உன்னத லட்சியங்களைப் பற்றிக் கூறும்போது அவற்றையெல்லாம் ஒதுக்கிவிடுகின்றன. இருப்பது ஒரே வாழ்க்கை , ஒரே உலகம், ஒரே இருப்புதான். எல்லாமே அந்த ஒன்றுதான். வேறுபாடு எல்லாம் அளவில் தானே தவிர, தன்மையில் அல்ல. நமது வாழ்வுகளின் வேறு பாடு தன்மையில் இல்லை. விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன, அவை மனிதர்களின் உணவிற்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்பதுபோன்ற கருத்துக்களை வேதாந்தம் முற்றிலும் மறுக்கிறது. 

விஞ்ஞானச் சோதனைகளுக்காக மிருகங்களை அறுப் பதைத் தடுப்பதான நல்லெண்ணத்துடன் ஒரு சங்கத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஒருநாள் இந்தச் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் நான், ‘நண்பரே, மிருகங்களை உணவிற்காகக் கொல்வதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள், ஆனால் சோதனை களுக்காக ஓரிரு பிராணிகளை அறுப்பதைத் தவறு என்கிறீர் களே, அது ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘மிருகங் களை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அறுப்பது கொடுமை. ஆனால் அவை நமது உணவிற்காகத்தான் படைக்கப் பட்டுள்ளன’ என்றார். ஒருமை என்னும்போது அது மிருகங் களையும் சேர்த்துதான் குறிக்கிறது. மனிதனின் வாழ்க்கை அழியாதது என்று கூறினால், அதுபோலவே மிருகங்களின் வாழ்க்கையும் அழியாததுதான். வேறுபாடுகள் அளவில்தானே தவிர, தன்மையில் அல்ல. அமீபாவும் நானும் ஒன்றே; வேறு பாடு வெறும் அளவில் மட்டுமே. வாழ்க்கையின் மிக உயர்ந்த நோக்கில் இந்த வேற்றுமைகள் மறைந்தே போகும். புல்லுக்கும் மரத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடு தெரியும். ஆனால் உயரமான இடத்தில் ஏறி அங்கிருந்து பார்த்தால் புல்லும் மரமும் ஏறக்குறைய ஒன்றுபோல்தான் தோன்றும். அது போலவே மிக உயர்ந்த லட்சிய நோக்கில் உயர்ந்த மனிதனும் தாழ்ந்த பிராணியும் ஒன்றே. கடவுள் என்று ஒருவர் இருப்பதை நீங்கள் நம்பினால், அவருக்கு, மிருகங்களும் மனிதர்களும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். தமது மனிதக் குழந்தை களிடம் கருணையுடனும், மிருகக் குழந்தைகளிடம் கொடூர மாகவும் இருக்கும் கடவுள், பேயைவிடக் கொடியவர். அப்படி ஒரு கடவுளை வழிபடுவதைவிட நான் நூறு முறை உயிரிழக்கத் தயாராக இருக்கிறேன். எனது முழு வாழ்க்கையையும் அவருடன் போராடுவதில்தான் செலவிடுவேன். ஆனால் வேறுபாடுகள் கிடையாது. பொறுப்பற்ற, இரக்கமற்ற, ஒன்றும் அறியாதவர் களே வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

செயல்முறை என்ற சொல் தவறாகப் பயன்படுத்தப்படு கின்ற ஓரிடத்தைப் பார்ப்போம். நான் முற்றிலுமாக மாமிசம் சாப்பிடாதவன் அல்ல. ஆனால் அந்த லட்சியத்தை நான் புரிந்து கொள்கிறேன். அதை உண்ணும்போது அது தவறு என் பதை உணர்கிறேன். சில சூழ்நிலைகளில் உண்ண நேர்ந்தாலும் அது கொடியது என்பது எனக்குத் தெரியும். இந்த எனது பலவீனச் செயலை மறைப்பதற்காக, லட்சியத்தைக் கீழேயிறக்கி, நடைமுறை வாழ்க்கையின் மட்டத்திற்குக் கொண்டுவரக் கூடாது. புலால் உண்ணக் கூடாது, எந்த உயிருக்கும் துன்பம் தரக் கூடாது என்பதே லட்சியம். எல்லா விலங்குகளும் எனது சகோதரர்கள். அப்படி விலங்குகளையும் சகோதரர்களாக நீங்கள் கருதும்போதுதான், மானிட சகோதரத்துவம் மட்டும் அல்லாமல் அனைத்து ஆன்ம சகோதரத்துவத்தின் பாதையில் சிறிதாவது முன்னேறியவர்கள் ஆவீர்கள். இதெல்லாம் குழந்தை விளையாட்டுதான்! இதைப் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் இதில் அன்றாட நடைமுறை வாழ்க்கையை விட்டு விட்டு லட்சியம் ஒன்றை நோக்கி முன்னேற வேண்டியிருக்கிறது. அப்படி இல்லாமல் அன்றாட வாழ்க்கையை ஒட்டிய ஒரு கொள்கையைக் கூறினால், அவர்கள் அதைச் செயல்முறைக்கு மிகவும் உகந்தது என்று ஏற்றுக்கொள்வார்கள். ப இப்படிப் பழமையிலிருந்து மாறாத தீவிர மன நிலையே மனிதர்களிடம் இருந்துவருகிறது. ஓரடிகூட முன்னேற நாம் விரும்புவதில்லை. மனித இனத்தைப்பற்றி எண்ணும்போதெல் லாம், பனியில் உறைந்து போனவர்களைப்பற்றி நான் படித்தது தான் நினைவிற்கு வருகிறது. அந்த நிலையிலேயே அவர்கள் தூங்க விரும்புகிறார்கள். அதைக் கலைக்க நாம் முயற்சித்தால், ‘என்னைத் தூங்கவிடுங்கள், பனியில் தூங்குவது எவ்வளவு சுகமாக இருக்கிறது!’ என்கிறார்கள். அந்தத் தூக்கத்திலேயே அவர்கள் இறந்தும்விடுகிறார்கள். நமது இயல்பும் அவ்வாறே உள்ளது. கால்களிலிருந்தே மரக்கத் தொடங்கிவிட்டது, எனினும் நாம் தூங்க விரும்புகிறோம்.

எனவே நீங்கள் லட்சியத்தை அடைவதற்காகப் போராட வேண்டும். யாராவது ஒருவர் வந்து, லட்சியத்தை உங்கள் நிலைக்கு இறக்கிக் கொண்டுவந்து, உயர்ந்த லட்சியம் இல்லாத மதத்தைப்பற்றிக் கூற வந்தால் அதை மதிக்காதீர்கள்! என்னைப் பொறுத்தவரை அது செயல்முறைக்குப் பொருந்தாத மதமே. ஆனால் யாராவது ஒருவர் மிக உயர்ந்த லட்சியத்தை உடைய மதத்தைக் காட்டினால் அதை ஏற்கத் தயாராக இருக்கிறேன். புலனின்பங்களையும் புலன்களின் பலவீனத்தையும் பரிந்து பேசுபவரிடம் எச்சரிக்கையாக இருங்கள். யாராவது அப்படிப் பட்ட ஒரு வழியைக் காட்டினால், அதைக் கேட்டு நடக்கும் அப்பாவிகளான நாம் புலன்களுக்கு அடிமையான மண் ணாங்கட்டிகளாகவே இருப்போம், ஒருபோதும் முன்னேற மாட்டோம். 

நான் இத்தகைய விஷயங்களை அதிகமாகப் பார்த்திருக் கிறேன், உலக அனுபவம் எனக்குச் சிறிது உண்டு. என் நாட்டில் மதப் பிரிவுகள் காளான்களைப் போன்று முளைக்கின்றன. ஆண்டுதோறும் புதிய பிரிவுகள் தோன்றிக்கொண்டே இருக் கின்றன. அவற்றுள் ஒரு விஷயத்தை நான் கவனித்துள்ளேன்; தசையாலான இந்த மனிதனை, உண்மைமனிதனுடன் ஒன்று படுத்திக் கூறாத பிரிவுகள் மட்டுமே வளர்கின்றன. பௌதீக உலகின் ஆரவாரங்களை மிகவுயர்ந்த லட்சியங்களுடன் சமரசப் படுத்துவது, கடவுளை மனித நிலைக்கு இறக்குவது போன்ற பொய்க் கருத்துக்கள் உள்ள இடங்களில் எல்லாம் அழிவே விளைவாக உள்ளது. உலகப் பற்றுக்களுக்கு அடிமையாகும் நிலைக்கு மனிதனை இழிவுபடுத்தக் கூடாது, அவனைக் கடவுள் நிலைக்கு உயர்த்த வேண்டும். 

அதேவேளையில் இந்தப் பிரச்சினைக்கு மற்றொரு பக்கமும் உள்ளது. நாம் மற்றவர்களை வெறுக்கக் கூடாது. நாம் எல்லோரும் ஒரே லட்சியத்தை நோக்கியே போய்க் கொண்டிருக்கிறோம். பலவீனத்திற்கும் பலத்திற்கும் உள்ள வேறுபாடு, அளவில் மட்டுமே; தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் உள்ள வேறுபாடு, அளவில் மட்டுமே; சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் உள்ள வேறுபாடு அளவில் மட்டுமே; வாழ்விற்கும் மரணத்திற்கும் உள்ள வேறுபாடும் அளவில் மட்டுமே. ஆக, இந்த உலகத்திலுள்ள வேறுபாடுகள் எல்லாம் அளவில்தானே தவிர, தன்மையில் இல்லை. அடிப்படையில் எல்லாம் ஒன்றே அல்லவா! எல்லாம் ஒன்றே. எண்ணமாக, வாழ்க்கையாக, உடலாக, ஆன்மாவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வது அதுவே. வேறுபாடுகள் எல்லாம் அளவில் மட்டுமே. எனவே நமது அளவிற்கு வளராதவர்களை வெறுக்க நமக்கு உரிமை யில்லை. யாரையும் வெறுக்காதீர்கள். முடிந்தால் உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் பேசாமல் கைகளைக் கட்டிக் கொண்டு, நம் சகோதரர்களாகிய அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் தங்கள் வழியிலேயே முன்னேறிப் போகட்டும். கீழே இழுப்பதும் வெறுப்பதும் செயல்புரியும் முறையல்ல. எந்தச் செயலும் அந்த வழியில் சாதிக்கப்பட்டதில்லை. நாம் நம்முடைய ஆற்றல் அனைத்தையும் மற்றவர்களைக் குறை கூறுவதில் வீணாக்குகிறோம். விமர்சிப்பதும் குறைகூறுவதும் ஆற்றலைப் பயனற்ற முறையில் வீணாக்குவதாகும். ஏனெனில் நாம் எல்லோரும் ஒரே பொருளையே பார்க்கிறோம், ஏறக் குறைய ஒரே லட்சியத்தை நோக்கியே போய்க் கொண்டிருக் கிறோம். நம்மிடையே உள்ள வேறுபாடுகளுள் பெரும் பான்மையும் வெளிப்படுத்துவதிலுள்ள வேறுபாடுகள் என்பதைக் காலப்போக்கில்தான் நாம் உணர்கிறோம்.  

பாவம் என்ற கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி வேதாந்தம் கூறுவதை இப்போது உங்களுக்குச் சொன் னேன். மற்ற கருத்து மனிதனைப் பாவி என்று கருதுகிறது. செயல்முறையில் இரண்டும் ஒன்றே; ஒன்று உடன்பாட்டில் கூறுகிறது, மற்றொன்று எதிர்மறையில் கூறுகிறது. ஒன்று மனிதனுக்கு அவனது வலிமையைக் காட்டுகிறது, மற்றொன்று பலவீனத்தைக் காட்டுகிறது. பலவீனம் இருக்கலாம், ஆனால் அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள், நாம் வளர வேண்டும் என்கிறது வேதாந்தம். 

 மனிதன் பிறந்தபோதே நோய்களும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஒவ்வொருவருக்கும் தன் நோய் தெரியும். அதைப் பிறர் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் நோயைப்பற்றி எப் போதும் எண்ணிக்கொண்டே இருப்பது நம்மைக் குணப் படுத்தாது, அதற்கு மருந்து வேண்டும். நாம் வெளியிலுள்ள எதையும் மறந்து விடலாம், நல்லவர்களைப்போல் நடிக்கலாம். ஆனால் நமது பலவீனங்கள் நமக்கு நன்றாகத் தெரியும். பல வீனங்களை எண்ணிக் கொண்டிருப்பதில் பலன் ஒன்றுமில்லை, பலத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் பலவீனத்தை எண்ணிக் கொண்டிருப்பது பலத்தை வளர்க்கும் வழியல்ல என்று வேதாந்தம் கூறுகிறது. பலவீனத்திற்குப் பரிகாரம் பலத்தை நினைப்பதே தவிர, பலவீனத்தை நினைப்பதல்ல.

 ஏற்கனவே தங்கள் உள்ளிருக்கும் ஆற்றலை மனிதர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். மனிதர்களைப் பாவிகள் என்று கூறுவதை விட்டுவிட்டு, அதற்கு மறுபக்கத்தை எடுத்துக் கொள்கிறது வேதாந்தம்; ‘நீ தூய்மையானவன், பூரணமானவன், நீ நினைக்கும் பாவம் என்பது உனக்கு உரியது அல்ல’ என்று கூறுகிறது அது. ஆன்ம வெளிப்பாட்டின் மிகத் தாழ்ந்த நிலைகளே பாவங்கள். நீங்கள் ஆன்மாவின் உயர்ந்த நிலையை வெளிப்படுத்துங்கள். அதுவே நினைவில்கொள்ளப்பட வேண்டுவது. நாம் அனைவரும் அதைச் செய்ய முடியும். ‘முடியாது, என்னால் இயலாது’ என்று மட்டும் சொல் லாதீர்கள். நீங்கள் எல்லையற்றவர்கள். காலமும் இடமும்கூட, உங்கள் இயல்புடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை. நீங்கள் எதையும் செய்ய முடியும். எல்லாம் வல்லவர்கள் நீங்கள். 

இதுவே நீதிநெறிக் கோட்பாடுகள். நாம் சற்றுக் கீழே இறங்கி அவற்றை எவ்வாறு நகர வாழ்க்கை, கிராம வாழ்க்கை, தேசிய வாழ்க்கை, ஒவ்வொரு நாட்டினரின் குடும்ப வாழ்க்கை என்று நமது அன்றாட வாழ்க்கையில் செயல்முறைப்படுத்து வது என்பதைப் பார்ப்போம். மனிதன் இருக்கின்ற இடத்தில், இருக்கின்ற நிலையில் ஒரு மதம் அவனுக்குப் பயன்படவில்லை என்றால் அதனால் பெரிய பயன் ஒன்றுமில்லை. அது கொள்கை யளவில் மட்டும் ஒருசிலரிடம் இருக்கும், அவ்வளவுதான். மனித குலத்திற்கு மதம் பயன்பட வேண்டுமானால், மனிதன் அடிமையாகவோ சுதந்திரனாகவோ இழிந்தவனாகவோ தூய்மையில் உயர்ந்தவனாகவோ எந்த நிலையிலும் எங்கிருந் தாலும் அது அவனுக்குச் சமமாகக் கைகொடுக்க வேண்டும். வேதாந்தக் கோட்பாடுகள், மதத்தின் லட்சியம் என்று என்ன பெயரில் கூறினாலும் இதைச் சாதிப்பதில்தான் அதன் நிறைவு உள்ளது. 

தன்னம்பிக்கை லட்சியம் நமக்கு மிகப்பெரிய உதவியாகும். இந்தத் தன்னம்பிக்கை எங்கும் உபதேசிக்கப்பட்டு, செயல் முறையில் பின்பற்றப்படுமானால் நம்மிடையே உள்ள தீமை களும் துயரங்களும் பெரும்பாலும் அழிந்துவிடும். மனித வரலாற்றை முழுவதும் பார்க்கும்போது, எந்த ஆணோ பெண்ணோ வரலாற்றில் சிறப்புடன் விளங்கினார்கள் என்றால், அதற்கு, மற்ற எல்லாவற்றையும்விட முக்கியக் காரணம் அவர் களது தன்னம்பிக்கைதான். பிறந்ததிலிருந்தே, நான் சிறப் படையப் போகிறேன் என்ற எண்ணத்துடன் அவர்கள் வாழ்ந் தார்கள், சிறந்தவர்கள் ஆனார்கள். எவ்வளவு முடியுமோ அவ் வளவு தாழ்ந்த நிலைக்கு ஒருவன் சென்றாலும், திடீரென ஒரு முரட்டுத் துணிச்சலுடன் மேலெழுந்து, தன்னம்பிக்கையுடன் திகழும் நேரம் ஒன்று வந்தே தீரும். ஆரம்பத்திலேயே நாம் இதைத் தெரிந்துகொள்வது நல்லது. நமக்குத் தன்னம்பிக்கை வளர ஏன் இந்தக் கசப்பான அனுபவங்கள் எல்லாம்? மனிதர் களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளுக்கு எல்லாம் காரணம் தன்னம்பிக்கையும் அது இல்லாதிருப்பதுமே என்பதைக் காணலாம். அனைத்தையும் தன்னம்பிக்கை சாதிக்கும். என் வாழ்க்கையில் நானே அதை உணர்ந்திருக்கிறேன்; இன்றும் உணர்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு வயது ஏற ஏற அந்த நம்பிக்கை வளர்ந்தே வருகிறது.  

தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனே நாத்திகன். கடவுளிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று பழைய மதங்கள் கூறின. புது மதமோ தன்னிடம் நம்பிக்கை இல்லாத வனே நாத்திகன் என்கிறது. ஆனால் இந்த நம்பிக்கை, சிறியநான் என்பதைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது. ஏனெனில் ஒருமையே வேதாந்தத்தின் கோட்பாடு. நீங்களே அனைத்து மாதலால் அனைத்திலும் நம்பிக்கை கொள்வது என்பதே இதன் பொருள். உங்களிடம் நீங்கள் அன்புகொள்வது என்பது அனைத்திலும், அதாவது விலங்குகளிலும் மற்ற எல்லாவற்றிட மும்கூட அன்பு கொள்வதே. நீங்களும் எல்லாமும் ஒன்றே. இந்த மேலான நம்பிக்கையே உலகைச் சிறக்கச் செய்யும். நான் இதை உறுதியாக நம்புகிறேன்.  

‘என்னைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியும்’ என்று உண்மையின் உறுதியுடன் கூற வல்லவனே மனிதருள் உயர்ந் தவன். உங்கள் உடலுக்குப் பின்னால் எவ்வளவு சக்தி, எத்தனை வகை ஆற்றல்கள், வேகங்கள் எல்லாம் மறைந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? மனிதனிலுள்ள அனைத்தையும் அறிந்த விஞ்ஞானி யாராவது இருக்கிறார்களா? மனிதன் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் கழிந்துவிட்டன; எனி னும் அவனது ஆற்றல்களின் கோடியில் ஒரு பகுதியே வெளிப் படுத்தப் பட்டுள்ளது. எனவே பலவீனன் என்று உங்களைச் சொல்லிக் கொள்ளாதீர்கள். வெளிப்படையாகத் தோன்றும் இந்த இழிவுகளுக்கெல்லாம் பின்னால் என்னென்ன சக்திகள் உள்ளன என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் ஆற்ற லில் கடுகளவே நீங்கள் அறிந்துள்ளீர்கள். எல்லையற்ற ஆற்றல் மற்றும் எல்லையற்ற ஆனந்தத்தின் கடல் உங்களுள் உள்ளது. 

முதலில் இந்த ஆன்மாவைப்பற்றிக் கேட்க வேண்டும். நீங்கள் அந்த ஆன்மாவே என்பதை அல்லும் பகலும் கேட்டு வாருங்கள். அந்த எண்ணம் உங்கள் நாடிநரம்புகளில் புகும் வரை, உங்கள் ஒவ்வொரு துளி ரத்தத்திலும் கலந்து துடிக்கும் வரை, உங்கள் தசையிலும் எலும்பிலும் ஊறும்வரை, அதை இரவுபகலாக உங்களுக்குள்ளேயே கூறுங்கள். ‘நான் பிறப் பற்றவன், இறப்பற்றவன், பேரின்ப மயமானவன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், என்றும் மகத்தான ஆன்மா’ என்ற இந்த ஒரே லட்சியத்தால் உங்கள் உடம்பு நிறைந்திருக் கட்டும். இரவுபகலாக அதையே எண்ணுங்கள்; அது உங்கள் வாழ்க்கையுடன் கலந்து ஒன்றும்வரை அதையே சிந்தியுங்கள், அதையே தியானியுங்கள். அதிலிருந்து செயலாற்றல் வெளிப் படும். ‘இதய நிறைவு காரணமாக வாய் பேசுகிறது.’ இதய நிறைவாலேயே கைகளும் செயல் புரியும், செயலாற்றல் நிகழும். இந்த லட்சியத்தால் உங்களை நிறையுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் இதையே சிந்தியுங்கள். இந்தச் சிந்தனையின் ஆற்றலால் உங்கள் செயல்கள் அனைத்தும் பெருக்கப்படும், மாறுபாடு அடையும், தெய்வீகமாகும். ஜடப்பொருள் வலிமை யானது என்றால் சிந்தனை எல்லாம்வல்லது. இந்தச் சிந்தனை உங்கள் வாழ்க்கையில் முத்திரை பதிக்கட்டும். எல்லாம் வல்ல உங்கள் ஆற்றல், உங்கள் சிறப்பு, உங்கள் மகிமை இவை பற்றிய சிந்தனையால் உங்களை நிறையுங்கள், உங்கள் தலை யில் மூட நம்பிக்கை எதுவும் புகாதிருக்கக் கடவுள் அருள் புரியட்டும்! பிறப்பிலிருந்தே இத்தகைய மூடநம்பிக்கைகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருக்குமாறும் நமது வளர்ச்சியைக் கெடுக்கின்ற பலவீனம், தீமை போன்ற கருத்துக் கள் நம்மைச் சூழ்வதையும் கடவுள் தடுப்பாராக! மிக உயர்ந்த, மிகச் சிறந்த உண்மைகளை அறியவல்ல எளிய பாதைகளை மனிதன் அடையக் கடவுள் கருணை செய்வாராக! மனிதன் இவற்றைக் கடந்தேயாக வேண்டியிருக்கிறது. உங்கள் பின்னால் வருபவர்களுக்குப் பாதையை மேலும் கடினமாக்காதீர்கள். 

இவை சிலவேளைகளில் கொடிய கொள்கைகளாகத் தோன்றும். இந்தக் கருத்துக்களைக் கேட்டாலே நடுங்குபவர் களை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இவற்றைச் செயல் முறைக்குக் கொண்டு வர விரும்புபவர்கள் முதன்முதலாக அறிய வேண்டிய பாடம் இதுவே. நீங்கள் பலவீனர் என்று உங்களுக்கோ பிறருக்கோ ஒருபோதும் கூறாதீர்கள். முடிந்தால் உலகிற்கு நன்மை செய்யுங்கள், ஆனால் தீமை செய்யாதீர்கள். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது, கற்பனைத் தெய்வங்களை நோக்கிப் பிரார்த்திப்பது என்று உங்கள் குறுகிய எண்ணங்களுள் பலவும் மூடநம்பிக்கைகளே என்பது உங்கள் உள்ளத்திற்கே தெரியும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறியது என்று ஒரு சம்பவத்தை எனக்குக் காட்டுங்கள் பார்க்கலாம். நீங்கள் பெறும் விடைகள் அனைத்தும் உங்கள் இதயங்களி லிருந்தே பிறந்தவை. பேய் என்ற ஒன்று இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் இருளில் நிற்க நேர்ந்தால் ஏதோ ஒன்று நம்மீது ஊர்வது போன்ற உணர்ச்சி வந்துவிடுகிறது. ஏனெனில் நாம் குழந்தைகளாக இருந்தபோதே, இத்தகைய அச்சமூட்டும் கருத்துக்கள் நம் மூளையில் திணிக்கப்பட்டு விட்டன. சமுதாயத்திற்காகவோ, நண்பர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரும் என்பதற்காகவோ, நீண்ட காலம் வளர்ந்து வந்த மூட நம்பிக்கைகளை இழந்து விடுவோம் என்பதற் காகவோ, விமர்சனங்களுக்குப் பயந்தோ இத்தகைய கருத்துக் களை மக்களுக்குச் சொல்லாதீர்கள். இவற்றை அடக்கி ஆளுங்கள்!  

பிரபஞ்சத்தின் ஒருமை, தன்னம்பிக்கை இவற்றைத் தவிர மேலும் கற்பிக்க மதத்தில் வேறு என்ன இருக்கிறது? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மனித குலம் இந்த ஒரே குறிக்கோளை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இதற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது உங்கள் பங்கை நீங்கள் செய்ய வேண்டும். உங்களுக்கு உண்மை தெரிந்துள்ளது. எங்கும் இதுவே கற்பிக்கப் படுகிறது. தத்துவமும் மனஇயலும் மட்டுமல்ல, உலகாயத விஞ்ஞானங்கள் கூட இதையே கூறுகின்றன. 

பிரபஞ்சத்தின் ஒருமையை மறுக்கும் விஞ்ஞானி எங்கிருக் கிறார்? பல உலகங்களைப் பற்றிப் பேசுபவர்கள் யார் இருக் கிறார்கள்? இவை எல்லாம் மூடநம்பிக்கைகளே. ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது. அதுபோல் உலகமும் ஒன்றுதான் இருக்கிறது. இந்த ஒரு வாழ்க்கையும், இந்த ஒரே உலகமும்தான் நமக்குப் பலவாகத் தோற்றம் அளிக்கிறது. இந்தப் பன்மை வெறும் கனவு போன்றதே. நாம் கனவு காணும்போது, ஒன்று மறைந்ததும் தொடர்ந்து மற்றொன்று வருகிறது. கனவில் நீங்கள் வாழ்வதில்லை. ஒவ்வொரு கனவாக, காட்சிக்குப்பின் காட்சி யாக உங்கள் முன்னால் விரிகின்றன. உலகின் விஷயமும் அப்படித்தான். இப்போது அதில் தொண்ணூறு சதவீதம் துன்பமும் பத்து சதவீதம் இன்பமும் உள்ளது. ஒருவேளை சில  நாட்களுக்குப் பிறகு தொண்ணூறு சதவீதம் மகிழ்ச்சி இருப்பது போல் தோன்றலாம். அதைச் சொர்க்கம் என்று அழைப்போம். ஆனால் இவை எல்லாம் மறைந்து, உலகமே கடவுளாகவும் சொந்த ஆன்மாவே கடவுளாகவும் தோன்றும் நேரம் ஒன்று மகான்களுக்கு வருகிறது. எனவே உண்மையில் பல உலகங்கள் இல்லை, பல வாழ்க்கைகள் இல்லை. இந்தப் பன்மைத் தோற்றங்கள் எல்லாம் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடுகளே. அந்த ஒரே பரம்பொருள்தான் ஜடப்பொருள், உணர்வு, எண்ணம் என்று அனைத்தாகவும் தோன்றுகிறது. ஒன்றே பலவாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எனவே நமது முதல் வேலை என்னவென்றால் இந்த உண்மையை நாம் உணர்வதும் உலகிற்குச் சொல்வதுமே. 

இந்த உலகமெங்கும் இந்த லட்சியம் எதிரொலிக் கட்டும், மூடநம்பிக்கைகள் மறையட்டும். பலவீனர்களிடம் இதைச் சொல்லுங்கள். மீண்டும்மீண்டும் சொல்லுங்கள். நீ தூய்மையானவன், நீ உறங்கியது போதும், விழித்தெழு, இந்தத் தூக்கம் உனக்கு உகந்ததல்ல, விழித்தெழு, இது உனக்குத் தக்கதல்ல, உன்னைப் பலவீனன், அற்பன் என்று எண்ணாதே! எல்லாம் வல்லவனே, விழித்தெழு. உனது உண்மை இயல்பை வெளிப்படுத்து. உன்னைப் பாவி என்று கருதுவது உனக்குப் பொருந்தாது. உன்னைப் பலவீனன் என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. இதை உலகிற்குக் கூறு, உனக்கும் கூறு. தொடர்ந்து வரும் விளைவைப் பார். மின்னல்வேகத்தில் எப்படி அனைத்தும் வெளிப்படுகிறது, எப்படி மாறுகிறது என்பதைப் பார். இவை எல்லாவற்றையும் மனித சமுதாயத்திற்குக் கூறு, அவற்றின் ஆற்றலைப்பற்றி எடுத்துக் கூறு, பின்னர் எப்படி நம் அன்றாட வாழ்க்கையில் அதைப் பயன்படுத்துவது என்பதை அறிந்துகொள்ளலாம். 

 நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலிலும் விவேகத்தைச் செயல்படுத்த வேண்டும். நல்லது எது, கெட்டது எது, உண்மை எது, பொய் எது என்பதைப் பகுத்தறிய வேண்டும். அதற்கு, தூய்மையும் ஒருமையுமே உண்மையின் உரைகல் என்பதை அறிய வேண்டும். ஒருமையை உணர்த்துபவை எல்லாம் உண்மை. அன்பு உண்மையானது, வெறுப்பு பொய்யானது. ஏனென்றால் வெறுப்பு பன்மைக்கு வழிவகுக்கிறது, மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கிறது. எனவே இது தவறானது, பொய்யானது. இது பிரிக்கும் சக்தி. இது பிரித்து, முடிவில் அழித்துவிடுகிறது. அன்பு இணைக் கிறது, ஒருமையை வளர்க்கிறது. அன்பில் நீங்கள் ஒன்றா கிறீர்கள்; தாய் குழந்தையுடனும், குடும்பங்கள் நகரத்துடனும், உலகம் விலங்கினத்துடனும் ஒன்றாகின்றன. இருப்பது அன்பே. அன்பே கடவுள். இருப்பவை அனைத்தும் அந்த ஒன்றேயான அன்பின் வெளிப்பாடுகளே. வெளிப்பாட்டில் ஏற்றத் தாழ்வு இருக்கலாம். இந்த வேறுபாடுகளும் அளவில் மட்டுமே. அனைத்தும் ஒரே அன்பின் வெளிப்பாடுகளே. எனவே நமது செயல்கள் எல்லாம் ஒருமைக்கு வழிவகுக்கிறதா, வேறுபாடு களைத் தோற்றுவிக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். வேறுபாடுகளை ஏற்படுத்துமானால் அந்தச் செயலை விட்டு விட வேண்டும். ஒருமையை நோக்கி நம்மை இட்டுச் செல்லு மானால் அவை நிச்சயமாக நற்செயல்களே. நமது எண்ணங் களிலும் அதுபோலவே. அவை ஒருமையைக் குலைத்து பன்மையை வளர்க்கின்றனவா அல்லது ஒருமைப்படுத்தி ஒவ்வோர் ஆன்மாவையும் இணைத்து ஒரு பெரும் சக்தியாக்கு கின்றனவா? இதைச் செய்தால் நாம் அவற்றை ஏற்றுக்கொள் வோம், இல்லாவிட்டால் குற்றம்புரிபவை என்று ஒதுக்கி விடுவோம். 

ஒருபோதும் அறிய முடியாத எதையும் நீதிநெறிக் கோட்பாடுகள் சார்ந்திருப்பது இல்லை; அறிய முடியாத எதையும் அவை உபதேசிப்பதும் இல்லை. ஆனால் உபநிட தங்கள், ‘அறிய முடியாத கடவுளென நாம் யாரை வழிபடு கிறோமோ அவரை உங்களுக்கு உபதேசிக்கிறேன்’ என்கிறது. ஆன்மாவின் மூலமாகவே எல்லாவற்றையும் நாம் அறிய முடிகிறது. நான் இந்த நாற்காலியைப் பார்க்கிறேன், ஆனால் இந்த நாற்காலியைப் பார்ப்பதற்குமுன் நான் என்னைப் பார்க்க வேண்டும், பின்னர் நாற்காலியைப் பார்க்க வேண்டும். ஆன்மாவின் உள்ளும் ஆன்மாவின் மூலமாகவும்தான் நான் நாற்காலியைக் காண்கிறேன். ஆன்மாவின் உள்ளேயும் ஆன்மா வின் மூலமாகவும்தான் நான் உங்களை அறிகிறேன்; உலகம் முழுவதையும் அறிகிறேன். எனவே ஆன்மா அறியப்பட முடியா தது என்று கூறுவது வடிகட்டின முட்டாள்தனம்.  

ஆன்மாவை விலக்குங்கள். இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே மறைந்துவிடும். ஆன்மாவின் உள்ளும் அதன் மூலமாகவுமே எல்லா அறிவும் ஏற்படுகிறது. எனவே எல்லாவற்றையும்விட அது நன்றாக அறியப்படுவது. நீங்களே அது. ‘நான்’ என்று  நீங்கள் கூறுவது அதனையே. இந்த என்னுடைய ‘நான்’ எப்படி உங்களுடைய ‘நான்’ ஆக முடியும் என்று நீங்கள் வியப்படைய லாம். எப்படி இந்த எல்லைக்கு உட்பட்ட ‘நான்’ எல்லையற்ற ஒன்றாக முடியும் என்று ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை. எல்லைக்கு உட்பட்டிருப்பது என்பது வெறும் கற்பனை! அந்த எல்லையற்றது மூடப்பட்டிருப்பது போல் உள்ளது. அதன் ஒருசிறு பகுதி நான் ஆகவெளிப்படுகிறது. எல்லையற்ற ஒன்றிற்கு ஒருபோதும் எல்லை இருக்க முடியாது, அப்படித் தோன்றுவது கற்பனை. எனவே இந்த ஆன்மா ஆண், பெண், குழந்தை, ஏன், விலங்குகள் என்று ஒவ்வொருவராலும் அறியப்பட்டதாகிறது. அவரை அறியாமல் நாம் வாழவோ அசையவோ முடியாது. அவரின்றி நமது இருப்பே இல்லை. அனைத்திற்கும் தலைவரான அவரை அறியாமல் நம்மால் ஒரு கணம்கூட மூச்சுவிடவோ உயிர் வாழவோ முடியாது. வேதாந்தம் கூறும் கடவுள் மற்ற எல்லாவற்றையும்விட எல்லோ ராலும் நன்கு அறியப்பட்டவர், வெறும் கற்பனைக் கடவுளல்ல. 

 இது செயல்முறைக்கு ஏற்ற கடவுளைப்பற்றிக் கூறுவது ஆகாதென்றால், அத்தகைய ஒரு கடவுளைப்பற்றி எப்படிப் போதிப்பது? நம் முன்னால் காண்கின்ற, எங்கும் நிறைந்திருக் கின்ற, எல்லா உயிரிலும் விளங்குகின்ற, புலன்களைவிட உண் மையாக இருக்கின்ற ஒருவரைவிடச் செயல்முறைக்கு ஏற்ற ஒரு கடவுளை நாம் எங்கே காண முடியும்? ஏனெனில் நீங்களே அந்த எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, பரம்பொருள்; ஆன்மாக் களுக்கெல்லாம் ஆன்மா. நீங்கள் அந்தப் பரம்பொருள் இல்லை என்று நான் சொன்னால் அது பொய் சொல்வதாகும். இதை நான் உணர்ந்தாலும் எல்லா நேரத்திலும் உணராவிட்டாலும் அறிந்தேயிருக்கிறேன். அவர்தான் அந்த ஏகப்பரம்பொருள், ஒருமை, எல்லாவற்றின் உண்மையான உயிர்த் தத்துவம்.  

வேதாந்தத்தின் இந்த நீதிநெறிக் கருத்துக்களின் விளக்கங் களை நாம் பார்க்க வேண்டியுள்ளது. எனவே நீங்கள் சற்றுப் பொறுமையாக இருக்க வேண்டும். மிகச் சாதாரணமான கருத்துக்களிலிருந்து எப்படி மகோன்னதமான இந்த ஒருமை லட்சியம் வந்தது என்பதையும், அது பிரபஞ்சம்தழுவிய அன் பாக எப்படி மாறிவருகிறது என்பதையும்பற்றி விரிவாக, தெளி வாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சில அபாயங்களைத் தவிர்ப்பதற்காக நாம் இதைப் படித்தேயாக வேண்டும். கீழ்நிலை யிலிருந்து இதைப் படிப்படியாக ஆராய உலகத்தினருக்கு நேரம் கிடைப்பதில்லை. பின்னால் வருவோருக்கு உண்மையைக் கொடுக்க முடியாவிட்டால் நாம் மேல்படியில் நிற்பதில் என்ன பயன்? எனவே அதன் செயல்முறைப் பகுதிகளை ஆராய்வது நல்லது. முதலில் அறிவுப் பகுதிகளைப் பார்ப்பது மிகவும் இன்றியமையாதது. அறிவால் பெரிய பயனொன்றும் இல்லை என்று தெரிந்தாலும் அதைச் செய்தேயாக வேண்டும். இதயம் தான் மிக முக்கியமானது. ஏனெனில் இதயத்தால்தான் இறைவனைப் பார்க்கிறோம். அறிவால் அல்ல. அறிவு என்பது ஒரு துப்புரவுப் பணியாளன் மட்டுமே. அது நமது பாதையைச் சுத்தமாக்கித் தருகிறது. அது போலீசைப் போன்ற ஒரு இரண் டாம் நிலைப் பணியாளன். சமூகம் செயல்படுவதற்குப் போலீஸ் இருந்தேயாக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலகங்களைத் தடுப்பதும் தவறுகளை விலக்குவதும்தான் போலீசின் வேலை. அறிவும் அதைத்தான் செய்கிறது. அறிவு நூல்களைப் படிக் கிறோம், முடித்தபின்னரோ ‘ இறையருளால் தொல்லை ஒழிந்தது’ என்று எண்ணுகிறோம். ஏனெனில் அறிவு என்பது குருடு, அதனால் இயங்க முடியாது, அதற்குக் கைகளோ கால் களோ இல்லை. இதயமே, உணர்ச்சியே செயல்படுகிறது; இது மின்சக்தியைவிட பிற எந்தச் சக்திகளையும்விட எல்லை யற்ற மடங்கு அதிக வேகத்துடன் செயல்படுகிறது. நீ இதயம் உள்ளவனா, உணர்ச்சி நிறைந்தவனா-இதுதான் கேள்வி. அப்படியானால் நீ கடவுளைக் காண்பாய். இப்போது உங்களிட முள்ள உணர்ச்சியே ஆழமாகி, தெய்வீகமாகி, மிகவுயர்ந்த நிலைக்குச் சென்று இறுதியில் எல்லாவற்றையும் உணர்கின்ற, எல்லாவற்றிலும் உள்ள ஒருமையை உணர்கின்ற, தன்னிலும் பிறரிலும் கடவுளை உணர்கின்ற நிலையை அடைகிறது. புத்தி யால் அது முடியவே முடியாது. ‘விதவிதமாகப் பேசுவது, நூல் களை விதவிதமாக விளக்குவது–இவையெல்லாம் பண்டிதர் களின் இன்பத்திற்கே உதவும், ஆன்ம முக்திக்கு உதவாது’. 

தாமஸ் ஏ. கெம்பிஸ் என்பவர் எழுதிய நூலை நீங்கள் படித்திருந்தால் ஒவ்வொரு பக்கத்திலும் அவர் எப்படி இந்தக் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார் என்பது தெரியும். அவர் மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா மகான்களும் இதே கருத்தைக் கூறவே செய்துள்ளார்கள். புத்தி அவசியம்தான், அது இல் லாவிடில் நாம் வழிதவற நேரும், குற்றங்களைச் செய்ய நேரும். இதை அறிவு தடுக்கிறது, இதற்குமேல் அதைக்கொண்டு ஏதாவது செய்யலாம் என்று எண்ணாதீர்கள். அது மந்தமானது; அது இரண்டாம் நிலை உதவி மட்டுமே. உண்மையான உதவி உணர்ச்சியிலிருந்தே, அன்பிலிருந்தே வருகிறது. பிறருக்காக நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா? உணர்கிறீர்களானால் ஒருமைநிலையில் வளர்கிறீர்கள். பிறருக்காக உணர்ச்சி கொள்ளாவிட்டால் நீங்கள், இதுவரை பிறந்தவர்களுள் மிகப் பெரிய மேதையாக இருந்தாலும் நீங்கள் வெறும் பூஜ்யமே. நீங்கள் வெறும் வறட்டு அறிவாளிகள், அவ்வளவுதான். நூல் களைப் படிக்கத் தெரியாவிட்டாலும் மொழிகள் தெரியா விட்டாலும், உங்கள் உள்ளத்தில் உணர்ச்சி இருக்குமானால் நீங்கள் நேரான வழியில்தான் போகிறீர்கள். இறைவன் உங்களுடையவரே.   

மகான்களின் சக்தியெல்லாம் எங்கே இருந்தது என்பதை உலக வரலாற்றிலிருந்து நீங்கள் அறியவில்லையா? எங்கே? புத்தியிலா? அவர்களுள் யாராவது தத்துவ நூலோ, மிக நுணுக் கமான தர்க்க நூலோ எழுதினார்களா? இல்லவே இல்லை. அவர்கள் சிறிதே பேசினார்கள். ஏசுவைப் போன்று உள்ளத்தில் உணர்ச்சிகொள், நீ ஏசு ஆவாய். புத்தரைப்போல் உணர்ச்சி கொள், புத்தராவாய். உணர்ச்சியே வாழ்க்கை , உயிர், வலிமை. அதில்லாமல் எவ்வளவு தீவிரமான அறிவு முயற்சியாலும் கடவுளை அடைய முடியாது. இயங்கும் சக்தியற்ற உறுப்புகள் போன்றதே அறிவு. உணர்ச்சிகள் அவற்றுள் புகுந்து அவற்றை இயக்கியபிறகுதான் அவை இயங்குகின்றன; பிறர்மீதும் செயல் படுகின்றன. உலகம் முழுவதும் இப்படித்தான் நடக்கிறது. இதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.  

வேதாந்தத்தின் ஒழுக்க நெறிகளில் இது மிகவும் செயல் முறைக்குப் பொருத்தமானது. அதாவது நீங்கள் எல்லோரும் மகான்களே, மகான்களாகத்தான் இருக்க முடியும் என்கிறது வேதாந்தம். உங்கள் நடத்தைக்குச் சாஸ்திரம் அத்தாட்சி அல்ல, நீங்கள்தான் சாஸ்திரங்களுக்கு அத்தாட்சி. சாஸ்திரங்கள் உண்மையைத்தான் கூறுகின்றன என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஏனெனில் நீங்களே உண்மை , அதை நீங்கள் உணர் கிறீர்கள். இதையே வேதாந்தம் கூறுகிறது. ஏசு, புத்தர் போன்ற மகான்கள் வாழ்ந்ததற்கு என்ன அத்தாட்சி உள்ளது? நீங்களும் நானும் அவர்களைப்போல் உணர்ச்சி கொள்கிறோம் என்பது தான். இவ்வாறே அவர்களும் உண்மையில் இருந்திருப்பார்கள் என்று அறிகிறோம். நமது மகத்தான இதயம்தான் அவர்களது மகத்தான இதயத்திற்கு அத்தாட்சி. நமது இறைத்தன்மைதான் இறைவன் இருப்பதற்கே அத்தாட்சி. நீங்கள் ஒரு மகான் அல்ல என்றால் கடவுள் என்று ஒருவர் இருப்பதும் உண்மையல்ல. நீங்கள் கடவுள் அல்ல என்றால், வேறு எந்தக் கடவுளும் இருந்ததுமில்லை, இருக்கப் போவதும் இல்லை. இதுவே பின் பற்ற வேண்டிய லட்சியம் என்று வேதாந்தம் கூறுகிறது. நாம் ஒவ்வொருவரும் மகான்களாக வேண்டும். ஏற்கனவே நீங்கள் அவ்வாறே இருக்கிறீர்கள். இதை அறியுங்கள், அவ்வளவுதான். ஆன்மாவால் முடியாத ஏதாவது உண்டென்று ஒருபோதும் எண்ணாதீர்கள். அப்படி எண்ணுவதே குற்றம். பாவம் என்ற ஒன்று உண்டென்றால் அது, நீங்கள் உங்களையோ பிறரையோ பலவீனர் என்று சொல்வதுதான்.