7. மாற்றத்திற்கு மக்கள் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும்?
மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில் போதியுங்கள். கருத்துக்களைக் கொடுங்கள், அதனால் அவர்கள் விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஆனால் அதைவிட மேலான ஒன்று அவர்களுக்குத் தேவை, பண்பாட்டை அளியுங்கள். அவர்களுக்கு அதைக் கொடுக்காத வரையில் அந்த உயர்த்தப்பட்ட நிலையில் அவர்களால் நிலையாக இருக்க முடியாது.
குறிப்பாக இந்த நவீன காலத்தில் ஜாதிகளுக் கிடையே இவ்வளவு சச்சரவுகள் இருப்பது குறித்து நான் வருந்துகிறேன். இது நிறுத்தப்பட்டே தீர வேண் டும். இந்தச் சண்டை இரு தரப்பினருக்கும், குறிப்பாக உயர்ந்த ஜாதியினரான பிராமணர்களுக்குப் பயனற்றது. ஏனென்றால் இன்று தனிச் சலுகைகளும் தனி உரிமை களும் பறிபோய்விட்டன. தங்கள் கல்லறையைத் தாங் களே தோண்டிக் கொள்வதுதான் ஒவ்வோர் உயர்ந்த பிரிவினருடையவும் கடமை. எவ்வளவு சீக்கிரம் அதைச் செய்கிறார்களோ அந்த அளவிற்கு நல்லது. காலம் நீடிக்கநீடிக்க அவை கெட்டுக் குட்டிச்சுவராகி மிகமோசமான முடிவைப் பெற நேரும்.
எனவே பிராமணர்களின் முதல் கடமை இந்தியாவிலுள்ள மற்ற சமுதாயத்தினரின் நன்மைக்காகப் பாடுபடுவதுதான். அவன் அதைச் செய்வானானால், அதைச் செய்யும் காலம்வரையில், அவன் பிராமணன். அதைச் செய்யாமல் பணம் சம்பாதிக்கத் திரிபவன் பிராமணன் அல்ல.
பிராமணர் அல்லாத நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் சில விஷயங்கள் உண்டு. கொஞ்சம் பொறு மையாக இருங்கள், அவசரப்படாதீர்கள். பிராமணர் களோடு சண்டையிடுவதற்காக ஒவ்வொரு வாய்ப்பை யும் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் தவறு களாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்பதை நான் முன்னரே எடுத்துக்காட்டி விட்டேன். ஆன்மீகத்தையும் சம்ஸ்கிருதம் கற்பதையும் அலட்சியம் செய்யும்படி உங்களிடம் யார் சொன்னார்கள்? இவ்வளவு காலமாக என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? எதற்கு இந்த பொறுப்பற்ற தன்மை? இன்று மற்றவர்கள் உங்களை விட அதிக அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ளவர் களாக இருப்பதைப் பார்த்து ஏன் எகிறிக் குதிக் கிறீர்கள்? பத்திரிகைகளில் வாதங்களையும் சண்டை களையும் வளர்ப்பதில் உங்கள் ஆற்றலை வீணாக்கு வதற்குப் பதிலாக, உங்கள் வீடுகளிலேயே சண்டையும் சச்சரவும் செய்துகொண்டு இருப்பதற்குப் பதிலாக, இந்தப் பாவச் செயல்களுக்குப் பதிலாக, பிராமணர்கள் பெற்றிருக்கும் பண்பாட்டைப் பெற உங்கள் எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள்.
ஒரே மனத்தவராக இருப்பது சமுதாயத்தின் ரகசியம். ‘திராவிடன்’, ‘ஆரியன்’ முதலான அற்ப விஷயங்கள் பற்றியும், பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்றெல்லாமும் நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்குந்தோறும் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கான ஆற்றலையும் சக்தியையும் சேமிப் பதிலிருந்து மேலும்மேலும் விலகிப் போகிறீர்கள். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் எதிர்கால இந்தியா முற்றிலும் அதையே சார்ந்திருக்கிறது. சங்கல்ப ஆற்றலைச் சேமித்தல், அவற்றை ஒருங்கிணைத்தல், அவை அனைத்தையும் ஒரே மையத்தில் திரட்டுதல்இதுதான் ரகசியம்.
ஒவ்வொரு சீனனும் தான் விரும்புகின்ற வழியில் சிந்திக்கிறான். ஆனால் எண்ணிக்கையில் குறைந்த ஜப்பானியரோ அனைவரும் ஒரே வழியில் சிந்திக் கின்றனர். விளைவு உங்களுக்கே தெரியும். உலக வரலாறு முழுவதும் இவ்வாறே நடந்துள்ளது. கட்டுக் கோப்பான சிறிய நாடுகளே கட்டுப்பாடற்ற, பெரிய நாடுகளை எப்போதும் ஆள்கின்றன. இது இயல்பானதுதான். ஏனெனில் சிறிய கட்டுக்கோப்பான நாடுகளுக்குத் தங்கள் கருத்துக்களை ஒரே மையத்தில் குவிப்பது எளிதாக உள்ளது. அதன்மூலம் அவை வளர்ந்து விடுகின்றன. ஒரு நாடு எந்த அளவுக்குப் பெரி தாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் கட்டுப்பாடற்றதாக இருக்கிறது. கட்டுப்பாடற்றவர்கள்போல் பிறந்த அந்த மக்களால் ஒன்றாகச் சேரவும் முடிவதில்லை . இந்தக் கருத்துவேற்றுமைகள் எல்லாம் விலகியே தீர வேண்டும்.
இந்தப் பிரச்சினைக்கு இரு பக்கங்கள் உள்ளனஒன்று எல்லாவற்றையும் ஆன்மீக மயமாக்குவது; இன்னொன்று நாட்டின் பல்வேறு அம்சங்களையும் கிரகிப்பது. ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கையிலும் பல இனங்களை ஒன்று சேர்ப்பதுதான் பொதுவான வேலையாக இருந்திருக்கிறது.
பொதுவான விஷயம் ஒன்று இல்லாமல் மனிதர் களை ஒருபோதும் ஒன்றுசேர்க்க முடியாது. அவர்களின் நோக்கம் ஒன்றாக இல்லாவிட்டால், கூட்டங்கள் போடுவது, சங்கங்கள் அமைப்பது, சொற்பொழிவுகள் நிகழ்த்துவது இவற்றால் மக்களை ஒன்றுசேர்த்துவிட முடியாது. குருகோவிந்தசிங்தம்காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அவர்கள் இந்துக்களானாலும் சரி, முஸ்லீம்களானாலும் சரி -அநீதியும் அடக்குமுறையும் நிறைந்த ஓர் ஆட்சியின் கீழ் இருக்கும் உண்மையை உணரும்படிச் செய்தார். அனைவருக்கும் பொதுவான எந்த விஷயத்தையும் அவர் உருவாக்கவில்லை ; பிரச்சினையைச் சாதாரண மக்களுக்குச் சுட்டிக்காட்ட மட்டுமே செய்தார். எனவே இந்துக்களும் முஸ்லீம்களும் அவர் காட்டிய வழியைப் பின்பற்றினர்.
மக்களுக்குக் கல்வி கற்பித்து அவர்களின் பிரச்சினைகளை அவர்களே தீர்க்கும்படிச் செய்வோம். இது நிறைவேறாதவரை லட்சியச் சீர்திருத்தங்கள் எல்லாம் கொள்கையளவிலேயே நிற்கும்.
குடியானவ சிறுவர்சிறுமியர் சிலருக்கு ஒருசிறிது எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடு; சில கருத்துக் களையும் அவர்களின் மூளையில் புகுத்து. அதன்பிறகு குடியானவர்கள் பணம் வசூலித்துத் தங்கள் தங்கள் கிராமத்தில் இவை ஒவ்வொன்றையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். ‘உத்தரேதாத்மனாத்மானம் – தன் முயற்சி யாலேயே தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்’ என்பது எல்லா விஷயங்களிலும் உண்மை . தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ள நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோம். இந்தக் குடியானவர்கள் உனக்குத் தினமும் உணவளிக்கிறார்கள் என்பதே ஓர் உண்மையான வேலை நடைபெற்றுள்ளதைக் காட்டுகிறது. அவர்கள் தங்கள் உண்மை நிலையை அறிந்து, உதவியையும் முன்னேற்றத்தையும் நாடுகின்றபோது, உனது பணி தனது விளைவை ஏற்படுத்தி விட்டதையும், அது சரியான வழியில் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்.
பாமர மக்களுக்கு உரிய உரிமைகளை அளிப்பதே முதல் பிரச்சினை. அவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விட்டார்கள்; தங்களைப் பிறவியிலேயே அடிமைகள் என்று கருதுகிறார்கள். உரிய உரிமைகளை அவர்களுக்கு அளியுங்கள், அவர்கள் தங்கள் சொந்த உரிமைகளைச் சார்ந்து நிற்கட்டும்.
‘அந்த இயக்கம் எதில் நிறைவுறும்?’
‘நிச்சயமாக இந்தியாவின் ஒற்றுமையை உருவாக்குவதிலும், ஜனநாயகக் கருத்துக்கள் என்று கூறுகிறோமே, அவற்றைப் பெறுவதிலும்தான். அறிவு என்பது பண்பட்ட ஒருசிலரின் ஏகபோகமாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. உயர்ந்த இனத்திலிருந்து தாழ்ந்த இனம் வரையிலும் அது பரவ வேண்டும். கல்வி வளர்ந்து வருகிறது, கட்டாயக் கல்வியும் தொடர்ந்து வரும். நமது மக்களின் அளவற்ற செயல்திறனைப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் உள்ளுறையும் ஆற்றல்கள் மகோன்னதமானவை. அவை தட்டி எழுப்பப்படும்.’
மன்னர்கள் மறைந்துவிட்டனர், இன்று அதிகாரம் மக்களிடம் உள்ளது. ஆதலால் மக்கள் கல்வி பெறும் வரை தங்கள் தேவைகளை உணரும்வரை, தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையைப் பெறும்வரை நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
‘பொதுமக்களின் முன்னேற்றத்திற்கு உங்கள் திட்டம் என்ன?’ |
‘அவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும், முன்னோர்கள் வகுத்தளித்துள்ள திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அதாவது, எல்லா லட்சியங்களையும் பொது மக்களிடையே மெல்லமெல்லப்பரப்பி, மெதுவாக அவர் களை உயர்த்த வேண்டும். அவர்களைச் சமநிலைக்குக் கொண்டு வாருங்கள். சாதாரண அறிவையும் மதத்தின் வாயிலாகக் கொடுங்கள்.’