5. விரிவடைவதற்கான போராட்டம்

விரிவடைவதற்கான போராட்டம்

விதைக்கு முன்பு மரமா, அல்லது மரத்திற்கு முன்பு விதையா என்ற பழைய பிரச்சினை எல்லா அறிவுத் துறைகளிலும் ஊடுருவி நிற்கிறது. முதலில் தோன்றியது அறிவா, ஜடப் பொருளா? முதலில் தோன்றியது லட்சியமா, அதன் வெளிப் பாடா? நமது உண்மையான இயல்பு சுதந்திரமா, நியதிக் கட்டுப்பாடா? எண்ணம் ஜடத்தைப் படைக்கிறதா, ஜடம் எண்ணத்தைப் படைக்கிறதா? இயற்கையின் இடையீடற்ற மாறுதல்கள் முந்தியதா, இயற்கையின் ஓய்வுக் கருத்து முந்தியதா? விடை காண முடியாத பிரச்சினைகள் இவை. தொடர்ந்துவருகின்ற அலைகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்போல் இவை மாறாமல் ஒன்றையொன்று தொடர்ந்து வருகின்றன. மனிதர்கள் தங்கள் சுவைக்கும், கல்விக்கும், தனிப்பட்ட இயல் பிற்கும் ஏற்ப ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

உதாரணமாக, இயற்கையின் பல்வேறு பகுதிகள் ஒன்றுக் கொன்று இசைந்து செயல்படுவதைக் காணும்போது, இது ஒரு அறிவுச்செயலின் விளைவாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது; மறு பக்கம், அந்த அறிவே ஜடம் மற்றும் சக்தி யின் பரிணாமத்தால் உண்டாகியது, எனவே அது இயற்கைக்கு முந்தியதாக இருக்க முடியாது என்றும் வாதாடலாம். மனத் திலுள்ள கருத்திலிருந்துதான் புற உருவங்கள் ஒவ்வொன்றும் உருவாக்கப்பட வேண்டும் என்று சொன்னால், புற அனுபவங் களின் காரணமாகத்தான் அந்தக் கருத்தே உண்டாகியது என்று அதே வேகத்துடன் வாதாட முடியும். நாம் என்றென்றும் சுதந்திரர்கள் என்று ஒரு பக்கம் வலியுறுத்தினால், இன்னொரு பக்கம், இந்தப் பிரபஞ்சத்தில் காரணமின்றி எதுவுமில்லை , மனமும் சரி ஜடப்பொருளும் சரி எல்லாமே காரணகாரிய நியதியினால் கட்டுண்டிருக்கின்றன என்று வாதாடலாம். எண்ணங்களின் காரணமாக உடலில் ஏற்படும் மாறுதல்களைப் பார்த்துவிட்டு, உள்ளம்தான் உடலை உண்டாக்கியது என்று சொன்னால், உடலின் மாற்றங்கள் உள்ளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துவதால் உடல்தான் உள்ளத்தை உண்டாக்கியிருக்க வேண்டும் என்பதும் தெளிவாகத்தான் தெரிகிறது. முதலில் இருந்த ஒரு ஓய்விலிந்துதான் பிரபஞ்சம் தோன்றியது என்று வாதாடினால், மாறாத தன்மை ஒரு பிரமை, அது இயக்கங் களிடையே உள்ள வித்தியாசம் காரணமாக ஏற்படுவது என்று தர்க்கரீதியாக நிரூபிக்க முடியும்.

ஆராய்ச்சியின் இறுதியில் நாம் பெறுவது என்னவென் றால் எல்லா அறிவுமே ஆரம்பமோ முடிவோ காண இயலாத ஒரு சுழற்சியாக, காரணகாரியம் என்னும் தீர்மானிக்க முடியாத பந்தமாக இருப்பதைக் காணலாம். தர்க்க அறிவு கொண்டு பார்க்கும்போது இத்தகைய அறிவு தவறானது. இதில் வேடிக்கை என்னவென்றால், உண்மையான அறிவுடன் ஒப்பிட்டு இந்த அறிவு தவறு என்று நிரூபிக்கப்படவில்லை; இந்தச் சுழற்சியைத் தங்கள் அடிப்படையாகக்கொண்ட சில நியதிகள் உள்ளனவே, அவற்றைக்கொண்டே நிரூபிக்கப்படுகிறது. நம்முடைய அறிவின் வினோதம் என்னவென்றால் அதன் பற்றாக்குறையை அதுவே நிரூபிக்கிறது. ஆனால் இவை உண்மையல்ல என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில் நமக்குத் தெரிந்ததும், நம்மால் எண்ணிப் பார்க்க முடிந்ததுமான உண்மையெல்லாம் இந்த அறிவில்தான் இருக்கிறது. எல்லா நடைமுறைத் தேவை களுக்கும் இது போதும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. அகவுலகையும் புற உலகையும் தன்னுள் கொண்டதான மனித அறிவின் இந்த நிலைதான் மாயை. இது உண்மையற்றது, ஏனெனில் அது தவறானது என்பதை அதுவே நிரூபிக்கிறது; அது உண்மையானது, ஏனெனில் மிருக-மனிதனின் தேவை களுக்கு அது போதுமானதாக உள்ளது.

இந்த மாயை புற உலகில் செயல்பட்டு, கவரும் சக்தி, விலக்கும் சக்தி என்ற இரண்டு ஆற்றல்களாகத் தன்னை வெளிப் படுத்துகிறது; அகவுலகில் ஆசை, ஆசையின்மை (பிரவிருத்தி, நிவிருத்தி) என்பதாக வெளிப்படுகிறது. பிரபஞ்சம் முழுவதுமே புறமுகமாக விரைய முயன்று கொண்டிருக்கிறது. ஒவ்வோர் அணுவும் தன் மையத்திலிருந்து விலகியோட முயல்கிறது. அகவுலகை எடுத்துக் கொண்டால், ஒவ்வோர் எண்ணமும் கட்டுமீறிச் செல்ல முயல்கிறது. புற உலகில் ஒவ்வொரு துகளும் மையக் கவர்ச்சி சக்தியால் (Centripetal Force) தடுக்கப்பட்டு, மையத்தை நோக்கி இழுக்கப்படுகிறது. அதேபோல் மன உலகில், புறத்தை நாடுகின்ற ஆசைகளை ஒரு கட்டுப்படுத்தும் சக்தி தடுத்துக் கொண்டிருக்கிறது.

பௌதீகமயமான ஆசைகள், அதாவது, மேலும்மேலும் எந்திரகதிக்கு இழுக்கப்படுகின்ற நிலை மிருக-மனிதனைச் சேர்ந்தது. புலன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஆசை தோன்றும்போதுதான் மனிதனின் இதயத்தில் மத உணர்வு உதயமாகிறது. ஆகவே மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் தடுப்பதும், அவன் தன் சுதந்திரத்தை வலியுறுத்த உதவி செய்வதும்தான் மதத்தின் முழு நோக்கம். இந்த நிவிருத்தி சக்தியின் முதல் முயற்சிதான் ஒழுக்கம் என்று அழைக்கப்படு கிறது. சீரழிவைத் தடுப்பதும் அடிமைத்தளையை உடைப்பதும் தான் ஒழுக்க நெறியின் நோக்கம்.

ஒழுக்க நெறியை உடன்பாடு, எதிர்மறை என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ‘இதைச் செய்’, அல்லது ‘இதைச் செய்யாதே’ என்று அது சொல்கிறது. ‘செய்யாதே’ என்று சொல்லும்போது, மனிதனை அடிமைப்படுத்துகின்ற ஓர் ஆசையை அது கட்டுப்படுத்துவது தெரிகிறது. ‘செய்’ என்று சொல்லும்போது அது சுதந்திரத்திற்கு வழி காட்டுகிறது, மனித இதயத்தைப் பற்றிப்பிடித்துள்ள சீரழிவை உடைத் தெறிகிறது என்று தெரிகிறது.

மனிதன் அடையக்கூடிய விடுதலை ஒன்று இருந்தால்தான் ஒழுக்கம் என்பது சாத்தியமாகும். பரிபூரண சுதந்திரம் என்ற ஒன்றை அடைவதற்கான வாய்ப்புகள் பற்றிய கேள்வி ஒருபுறம் இருக்க, முழு பிரபஞ்சமுமே விரிவடைய போராடிக் கொண் டிருக்கிறது, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சுதந்திரம் பெறப் போராடிக் கொண்டிருக்கிறது. இது தெளிவு. இந்த எல்லையற்ற வெளி ஓர் அணுவிற்குக்கூடப் போதாது. விரிவடை வதற்கான இந்தப் போராட்டம், பரிபூரண சுதந்திரத்தை அடையும்வரை இடையீடின்றி நடந்துகொண்டே இருக்கும். சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டம் வேதனையைத் தவிர்ப்பதற்கான ஒன்று என்றோ, இன்பத்தை அடைவதற்கான ஒன்று என்றோ சொல்ல முடியாது. அத்தகைய உணர்ச்சிகள் இல்லாத மிகத் தாழ்ந்த உயிரினங்கள்கூட விரிவடைவதற்காகப் போராடுகின்றன. இந்த உயிரினங்களின் விரிவுதான் மனிதன் என்பதே பலரின் கருத்தாகும்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 5. விரிவடைவதற்கான போராட்டம்