3. வாழ்க்கையைப்பற்றிய இந்துக் கண்ணோட்டம்

வாழ்க்கையைப்பற்றிய இந்துக் கண்ணோட்டம்

31 டிசம்பர் 1894, Brooklyn Times பத்திரிகைக் குறிப்பு

கற்றுக்கொள்ளவே நாம் இங்கே இருக்கிறோம், வாழ்க்கையின் இன்பமே கற்பதில்தான் இருக்கிறது, கற்பதில் ஆழ்ந்து ஈடுபட்டு அனுபவம் பெறவே மனித ஆன்மா இங்கே இருக்கிறது– இதுதான் வாழ்க்கையைப் பற்றிய இந்துவின் கண்ணோட்டம். நான் உங்கள் சாஸ்திரங்களின்மூலம் எங்கள் சாஸ்திரங்களை நன்றாகப் படிக்க முடியும், நீங்களும் எங்கள் சாஸ்திரங்களின் மூலம் உங்கள் சாஸ்திரங்களை நன்றாகப் படிக்க முடியும். ஒரு மதம் உண்மையானதாக இருக்குமானால் எல்லா மதங்களும் உண்மையே. ஒரே உண்மை பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது; அந்த வடிவங்கள் பல்வேறு நாடுகளின் பௌதீக, மற்றும் மன இயற்கையைப் பொறுத்தும், பல்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்தும் அமைகின்றன.

இருக்கின்ற அனைத்தையும் ஜடப்பொருள், மற்றும் அதன் மாற்றங்களால் மட்டுமே விளக்கிவிட முடியுமானால், ஆன்மா என்ற ஒன்று இருப்பதாக நாம் கொள்ள வேண்டிய தேவையே இல்லை. ஆனால் ஜடப்பொருளிலிருந்துதான் எண்ணம் பிறந்தது என்பதை நிரூபிக்க முடியாது. பரம்பரைமூலம் சில இயல்புகள் உடம்பிற்கு வருகின்றன என்பதை மறுக்க முடியாது; ஒரு குறிப்பிட்ட மனம் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுகின்ற பௌதீக அமைப்பையே அந்த இயல்புகள் காட்டுகின்றன. ஒரு வரிடம் உள்ள அத்தகைய தனி இயல்புகள் அவரது கடந்தகாலச் செயல்களால் உருவாக்கப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட இயல் புள்ள உயிர், அந்த இயல்பை வெளிப்படுத்துவதற்கு மிகவும் ஏற்ற உடம்பில் தொடர்பு நியதிக்கு (Laws of Affinity) ஏற்பப் பிறக்கிறது. இது விஞ்ஞானத்திற்கு மிகவும் பொருந்துவதாக இருக்கிறது. ஏனெனில் விஞ்ஞானம், எதையும் பழக்கத்தால் விளக்க விரும்புகிறது; பழக்கமோ ஒரு செயலைத் தொடர்ந்து செய்வதால் ஏற்படுகிறது. புதிதாகப் பிறந்த ஓர் உயிரின் இயல்பான பழக்கவழக்கங்களை விளக்கவும் இந்தத் தொடர் செயல்பாடு தேவைப்படுகிறது. அந்தத் தொடர் செயல்பாடு இந்தப் பிறவியில் ஏற்பட்டது அல்ல, எனவே அது முற்பிறவிகளிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

எல்லா மதங்களும் பல்வேறு படிகளே. கடவுளை அறிவதற் கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்கின்ற வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன. எனவே எதையும் புறக்கணிக்க வேண்டியதில்லை . எந்தப் படியும் அபாயகர மானதோ, தீமையானதோ அல்ல. அவை நல்லவை. குழந்தை இளைஞன் ஆகிறான், இளைஞன் முதியவன் ஆகிறான். அது போல் இந்த மதங்களும் உண்மையிலிருந்து உண்மைக்குச் செல் கின்றன. வளர்வதற்கு மறுத்து, முன்னேறாமல், கட்டுப்பெட்டி யாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானது ஆகிறது. ஒரு குழந்தை முதியவனாக வளர்வதற்கு மறுக்கு மானால் அது நோய்க்கு அறிகுறி. மதங்களும் தொடர்ந்து வளருமானால் ஒவ்வொரு படியும் அவற்றை மேன்மேலும் முன் னோக்கிக் கொண்டு செல்லும், இறுதியில் முழு உண்மையையும் அடைய வைக்கும். எனவே நாங்கள் சகுணக் கடவுள், நிர்க் குணக் கடவுள் இரண்டையும் நம்புகிறோம். இதுவரை இருந்த, இப்போது இருக்கின்ற, இனி வரப்போகின்ற எல்லா மதங்களை யும் நம்புகிறோம். பிற மதங்களைச் சகித்துக்கொள்வது என்ப தல்ல, ஏற்றுக்கொள்வது என்பதே நாங்கள் நம்புவது.

பௌதீக உலகில் விரிவே வாழ்க்கை , சுருங்குதல் மரணம். எது விரிவடையாமல் நிற்கிறதோ அது வாழ்வதில்லை. இதனை நாம் ஒழுக்கக் கோட்பாடுகளில் பொருத்தினால் நாம் காண்பது இது: ஒருவன் விரிய வேண்டுமானால் அவன் நேசிக்க வேண்டும்; நேசிக்க மறுக்கும்போது அவன் சாகிறான். நீங்கள் நேசித்தேயாக வேண்டும் என்பது உங்கள் இயல்பு, ஏனெனில் அதுதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எனவே நாம் அன்பிற்காகக் கடவுளை அன்பு செய்ய வேண்டும், கடமைக்காகக் கடமை செய்ய வேண்டும், எந்த வெகுமதியையும் எதிர்பாராமல் வேலைக்காக வேலை செய்ய வேண்டும். நீ தூயவன், பூரணமானவன், இதுவே இறைவனின் உண்மையான கோயில் என்பதை உணர்.

[அதே நாளில் Brooklyn Daily Eagle பத்திரிகைக் குறிப்பு]

வேதங்களிலிருந்தே இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றார்கள். படைப்பு என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. உடம்பில் வாழ்கின்ற உயிரே மனிதன். உடம்பு அழியும், ஆனால் மனிதன் அழிய மாட்டான், உயிர் வாழ்ந்து கொண்டேயிருக்கும். உயிர் என்பது சூன்யத் திலிருந்து உருவாக்கப்பட்டதல்ல, ஏனெனில் உருவாக்குதல் என்றால் சேர்க்கை என்று பொருள், ஆனால் சேர்கின்ற எதுவும் பிரிந்தே தீரும். உயிர் படைக்கப்பட்டதானால் அது அழியும். எனவே அது படைக்கப்பட்டதல்ல.

நமது முற்பிறவிகள் ஏன் நமது நினைவில் இல்லை ? இதை எளிதாக விளக்கலாம். நாம் உணர்வுப் பகுதி என்று கூறுவது மனக் கடலின் மேற்பரப்பை மட்டுமே, அதன் ஆழங்களில்தான் நமது அனுபவங்கள் அனைத்தும் சேமித்து வைக்கப்பட்டிருக் கின்றன.

நிலையான ஒன்றை நாம் தேட வேண்டும். மனம், உடம்பு, இயற்கை எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. எல்லை யற்ற ஒன்றைத் தேட வேண்டும் என்பது பற்றி நாம் முன்பே கண்டோம்.

தற்கால பௌத்தர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர் களோ, அந்தப் பிரிவினர், ஐம்புலன்களால் நிரூபிக்க முடியாத ஒன்று என்றால் அது இல்லை என்கிறார்கள். எல்லாம் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. மனிதன் எதையும் சாராதவன் என்று கூறுவது மன மயக்கம். இதற்கு மாறாக, ஒவ்வொருவரும் தனித்தனியானவர்கள் என்று லட்சிய வாதிகள் கூறுகிறார்கள். இதற்குத் தீர்வு என்னவென்றால் இயற்கை என்பது சார்ந்தது-சாராதது, உண்மை -லட்சியம் என்ப வற்றின் கலவையாக உள்ளது. உடல் மனத்தால் கட்டுப் படுத்தப்படுகிறது, கிறிஸ்தவர்கள் ஆன்மா என்று அழைக் கின்ற உயிரால் மனம் கட்டுப்படுத்தப்படுகிறது. எல்லாம் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்பதை இது நிரூபிக்கிறது.

மரணம் என்பது ஒரு மாற்றம் மட்டுமே. இறந்து மறு உலகில் பெரிய பதவிகளை வகிப்பவர்கள் இங்கே இருப்பவர் களைப் போன்றவர்களே; தாழ்ந்த பதவிகளை வகிப்பவர்களும் இங்கே இருப்பவர்களைப் போன்றவர்களே.

ஒவ்வொரு மனிதனும் பூரணமானவன். இருட்டறையில் அமர்ந்துகொண்டு, இருட்டாக இருக்கிறதே என்று புலம்பு வதால் எந்த நன்மையும் ஏற்படாது. தீப்பெட்டியை எடுத்து, தீக்குச்சியை உரசி வெளிச்சத்தை உண்டாக்கினால் இருள் உடனே விலகுகிறது. விவேக ஒளியைக் கொண்டுவந்தால் சந்தேக இருள் உடனே மறையும்.

வாழ்க்கையின் நோக்கம் கல்வி. கிறிஸ்தவர்கள் இந்துக் களிடமிருந்தும், இந்துக்கள் கிறிஸ்தவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம்.

மதம் என்பது ஆக்கபூர்வமான ஒன்று, எதிர்மறையானது அல்ல என்பதை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். மனிதர்களின் உபதேசங்கள் அல்ல, நமது இயல்பில் இருக்கின்ற உயர்ந்த ஏதோ ஒன்று வெளிப்படத் துடிக்கிறது.

இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள அனுபவங்களுடன் பிறக்கிறது. நம்மிடம் உள்ள சுதந்திரக் கருத்து, நம்மில் உடலையும் மனத்தை யும் தவிர ஏதோ ஒன்று இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உடலும் மனமும் ஒன்றையொன்று சார்ந்தவை. நம்மை இயக்குவது உயிர். இந்த உயிர்தான் நம்மில் சுதந்திர நாட்டத்தை ஏற்படுத்துகிறது. நாம் சுதந்திரராக இல்லாவிட்டால் நாம் எப்படி உலகை நல்லதாகவும் பூரணமானதாகவும் ஆக்க முடியும்? நம்மை நாமே உருவாக்குகிறோம், நம்மிடம் இருப் பதை வைத்தே உருவாக்குகிறோம். நாமே உருவாக்கினோம், அதை மாற்றியமைக்கவும் நம்மால் முடியும். எல்லோருக்கும் தந்தையான, தன் குழந்தைகளைப் படைத்துக் காப்பவரான, எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை நாங்கள் நம்பு கிறோம். நீங்கள் நம்புவதைப்போலவே நாங்களும் ஒரு சகுணக் கடவுளை நம்புகிறோம், ஆனால் நாங்கள் அத்துடன் நின்று விடாமல் இன்னும் முன்னே செல்கிறோம். நாங்களே அவர் என்பது எங்கள் நம்பிக்கை. இதுவரை இருந்த, இப்போது இருக்கின்ற, இனி இருக்கப்போகின்ற எல்லா மதங்களையும் நாங்கள் நம்புகிறோம். எல்லா மதங்களுக்கும் இந்து தலை வணங்குகிறான். ஏனெனில் கழித்தல் அல்ல, கூட்டல் என்பதே உலகின் லட்சியமாக உள்ளது. நம்மைப் படைத்த கடவுளுக்கு எல்லா வண்ணங்களும் சேர்ந்த மலர்ச்செண்டைச் செய்து சமர்ப்பிக்க நாங்கள் விரும்புகிறோம். அவரை அன்பிற்காக நேசிக்க வேண்டும், கடமைக்காக அவருக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும், வேலைக்காக அவரது வேலைகளைச் செய்ய வேண்டும், வழிபாட்டிற்காக அவரை வழிபட வேண்டும்.

நூல்கள் நல்லவை, ஆனால் அவை வெறும் வரைபடங்கள் மட்டுமே. ஒருவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்துப் படிக்குமாறு சொன்னார். இந்த வருடம் இவ்வளவு மழை பெய்யும் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. பிறகு அந்த புத்தகத்தைப் பிழியுமாறு என்னிடம் சொன்னார். நானும் அவ்வாறே செய்தேன். அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை . புத்தகம் கருத்தை மட்டுமே தர முடியும். புத்தகங்கள், கோயில், சர்ச் இவையெல்லாம் நம்மை வழிநடத்தி முன்னால் கொண்டுபோகும்வரை நல்லவை. யாகங்கள் செய்வதும், முழுந்தாளிடுவதும், கோஷமிடுவதும், முணுமுணுப்பதும் மதம் ஆகாது. ஏசுவை நேருக்குநேர் காணும்போது நாம் அடைகின்ற நிறைநிலைக்கு நம்மை இவை கூட்டிச் செல்லுமானால் இவை எல்லாம் நல்லவை. இந்த போதனைகளால் நாம் நன்மை பெற முடியும்.

கொலம்பஸ் இந்தத் தீபகற்பத்தைக் கண்டுபிடித்த பிறகு தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்று தாம் ஒரு புதிய உலகைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்தார். அவர்கள்-அவர் களுள் ஒருசிலரேனும்-அதை நம்பவில்லை . அவர்களை நேரில் சென்று பார்த்துத் தெரிந்துகொள்ளும்படிக் கூறினார் கொலம்பஸ். அதுபோலவே நாமும் இந்த உண்மைகளைப் படித்த பிறகு, நமக்கு நாமே அதை உணர்வோம். உணர்ந்த பின்னரே நமக்கு உண்மையான நம்பிக்கை வரும். இந்த நம்பிக்கையை யாரும் குலைக்க முடியாது.

[தொடர்ந்து கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.]

கேள்வி: தீமை, துன்பம் வேதனை முதலியவை உலகில் நிரம்பியிருப்பதை உங்கள் இன்பநோக்குக் கருத்துக்கள் எப்படி ஒப்புக் கொள்கின்றன? யார்

பதில்: தீமை உள்ளது என்பதை முதலில் நிரூபித்தால் மட்டுமே இதற்கு என்னால் விடை சொல்ல முடியும். இதை வேதாந்த மதம் ஒப்புக்கொள்ளவில்லை. இன்பமே கலவாத நிரந்தரத் துன்பம் என்பது உண்மையில் தீமையே. ஆனால் தற்காலிகமான வேதனையும் துன்பமும் மென்மை யையும் சிறப்பையும் தந்து நம்மை நிரந்தரப் பேரின்பத்திற்கு இட்டுச் செல்லுமானால் அவை தீமையாகாது. மாறாக அவை தலைசிறந்த நன்மையாக இருக்க முடியும். ஒரு நிகழ்ச்சியின் விளைவுகளை முடிவற்ற காலம்வரை தொடர்ந்த பிறகுதான் அது நன்மையா, தீமையா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இந்து மதத்தில் பேய் பிசாசு வழிபாடு கிடையாது. மனித சமுதாயம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் ஒரே மாதிரி உச்சியை அடையவில்லை. எனவே இந்த வாழ்க்கையில் சிலர் மற்றவர்களைவிட மேலானவர்களாக, தூயவர்களாக உள்ளனர். தனது முன்னேற்றப் பாதையின் எல்லைக்குள் தன்னை இன்னும் சிறந்தவனாக்கிக் கொள்ள ஒவ்வொரு வருக்கும் வாய்ப்பு இருக்கிறது. நமது உள்ளமைப்பை மாற்றிக் கொள்ள நம்மால் இயலாது, நம்முள்ளிருக்கும் பிராண சக்தியை நாசம் செய்யவோ கெடுக்கவோ முடியாது. ஆனால் அதன் திசையை நாம் மாற்றியமைக்க முடியும்.

கேள்வி: பிரபஞ்சம் நமது மனத்தின் கற்பனைதானே?

பதில்: என் கருத்துப்படி புற உலகம் என்பது நிச்சயமாக ஒரு தனியிருப்பு உடையது, நமது மனத்தின் சிந்தனையைச் சாராதது. ஜடப்பொருட்களின் பரிணாமத்திலிருந்து வேறு பட்டதும், ஆன்மீகப் பரிணாமத்தை ஒட்டியதுமான ஒரு நியதிக்கு இணங்கி எல்லா படைப்பும் முன்னோக்கியும் மேல் நோக்கியும் போய்க் கொண்டிருக்கின்றன. ஜடப்பொருள் பரிணாமம் என்பது ஆன்மீகப் பரிணாமத்தின் ஒரு சின்னமே தவிர, விளக்கம் அல்ல. நமது தற்போதைய நிலைமையில் நாம் யாரும் தனி நபர்கள் அல்ல. நம்முள்ளே உள்ள தெய்வீக ஆன்மா தன் இயல்புகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு பரிபூரணமான கருவி கிடைக்கின்ற ஓர் உயர்ந்த நிலையை அடையும்போதுதான் நாம் தனித்துவம் பெறுவோம்.

கேள்வி: பிள்ளை குருடாகப் பிறப்பதற்குக் காரணம் பெற்றோருடைய பாவமா, பிள்ளையின் பாவமா என்னும் பிரச்சினை ஏசுவின் முன் எழுந்ததே, அதற்கு நீங்கள் கூறும் விளக்கம் என்ன?

பதில்: பாவம் என்பது இந்தப் பிரச்சினையில் சம்பந்தப் பட்டதில்லை என்றாலும், முற்பிறவியில் அந்த உயிர் செய்த ஏதோ ஒன்றின் விளைவாகவே இந்தக் குருடு ஏற்பட்டது என்பது என் கருத்து. இத்தகைய பிரச்சினைகளுக்கு விளக்கம் காண வேண்டுமானால் முற்பிறவிக் கொள்கையை ஒத்துக் கொண்டேயாக வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

கேள்வி: நாம் இறக்கும்போது நமது உயிர் மகிழ்ச்சியான ஒரு நிலையை அடைகிறதா?

பதில்: இறப்பு என்பது வெறும் ஒரு நிலைமாற்றம். காலமும் இடமும் நம்மில் உள்ளன, நாம் காலத்திலும் இடத்திலும் இல்லை. காண்கின்ற இந்த உலகிலாகட்டும், காணாத வேறு ஏதோ உலகிலாகட்டும் ஆன்மீக அழகிற்கும் நிரந்தரப் பேரின்பத் திற்கும் நடுநாயகமான இறைவனை நெருங்கினால்தான் நமது வாழ்க்கையை மேலும் தூய்மையாக்கவும் சிறந்ததாக்கவும் முடியும் என்பதை மட்டும் அறிந்துகொண்டால் போதுமானது.

கேள்வி: மறு பிறவிபற்றி இந்து மதத்தின் கோட்பாடு என்ன ?

பதில்: விஞ்ஞானிகள் கூறுகின்ற ஆற்றல்மாறாக் கொள்கை யின்’ அதே அடிப்படையைக் கொண்டதே இதுவும். இந்தக் கோட்பாட்டை முதன்முதலில் வகுத்தவர் எங்கள் நாட்டுத் தத்துவ ஞானி ஒருவர். பண்டைய ரிஷிகள் படைப்புக் கருத்தை நம்பவில்லை. படைப்பு என்றால், அது ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்று தோன்றியதாகிறது. இது முடியாத காரியம். காலத்திற்கு ஆரம்பமில்லை, அதுபோல் படைப்பிற்கும் ஆரம்பமில்லை. இறைவனும் படைப்பும் முடிவற்ற, ஆரம்பமற்ற இணை கோடுகள் போன்றவை. ‘அது இருக்கிறது, அது இருந்தது, அது இருக்கப் போகிறது’ என்பதே எங்கள் படைப்புக் கோட் பாடு. தண்டனைகள் யாவும் முன்னைய செயல்களின் விளைவே. மேலைநாட்டினர் இந்தியாவிலிருந்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று சகிப்புத் தன்மை. எல்லா மதங்களும் நல்லவை, ஏனெனில் எல்லாவற்றின் அடிப்படைக் கருத்துக்களும் ஒன்றே.

கேள்வி: இந்தியாவில் பெண்கள் அதிகம் முன்னேற வில்லையே ஏன்?

பதில்: இதற்குப் பெருமளவு காரணம் காட்டுமிராண்டித் தனமான அயல்நாட்டார் அடிக்கடிப் படையெடுத்ததே; இந்திய மக்களும் ஓரளவு காரணமாவார்கள்.

கேள்வி: இந்து மதம் பிறரை மதம் மாற்றிச் சேர்த்துக் கொள்ள முயலாதது ஏன்?

பதில்: கீழை நாடுகளுக்கு புத்தர் அளிக்க வேண்டிய செய்தி இருந்ததுபோல் மேலை நாடுகளுக்கு நான் அளிக்க வேண்டிய செய்தி ஒன்று உள்ளது.

கேள்வி: இந்து மதப் பழக்கங்களையும் சடங்குகளையும் இந்த நாட்டில் புகுத்தப் போகிறீர்களா?

பதில்: நான் தத்துவத்தை மட்டுமே போதிக்கிறேன்.

கேள்வி: நரகத்தின் நெருப்பைப் பற்றிய பயம் விலகினால் மனிதர்கள் கட்டுப்பாடற்றவர்களாகிவிட மாட்டார்களா?

பதில்: மாட்டார்கள். மாறாக, பயத்தைவிட அன்பினாலும் நம்பிக்கையினாலும் மனிதன் மிகவும் நல்லவனாகிறான்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 3. வாழ்க்கையைப்பற்றிய இந்துக் கண்ணோட்டம்