வரலாறும் வளர்ச்சியும் 7

7. வகுப்புப் பிரிவற்ற சமுதாயம் என்றால் என்ன?

பரிபூரணச் சமத்துவம் என்பதுதான் நீதிநெறியின் லட்சியம் என்றால் அத்தகைய ஒரு நிலை சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. எவ்வளவுதான் முயன்றாலும், எல்லோரும் ஒரேமாதிரி இருப்பது முடியாத ஒன்று. மனிதர்கள் வேறுபாடுகளுடனேயே பிறப்பார்கள். சிலருக்கு மற்றவர்களைவிட அதிக ஆற்றல் இருக்கும்; சிலருக்கு இயல்பாகவே சில திறமைகள் இருக்கும், சிலருக்கு இருக்காது. சிலருக்குப் பூரணமான உடம்பு இருக்கும், சிலருக்கு இருக்காது. இதை நாம் ஒருபோதும் தடுக்க இயலாது.

ஆனால் தனிச் சலுகை என்பதை நாம் ஒழித்துவிட முடியும். உண்மையில் உலகின் முன்னுள்ள பணி இதுவே. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள, ஒவ்வோர் இனத் திலும் உள்ள சமுதாய வாழ்க்கையில் இந்த போராட்டம் இருந்தே வருகிறது. ஒரு பிரிவினர் இயல்பாகவே மற்றொரு பிரிவினரைவிட அறிவுமிக்கவராக இருக் கிறார்கள் என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதிக அறிவு இருப்பதற்காக அவர்கள், அது இல்லாதவர்களின் சாதாரண சுகங்களைக்கூடப் பிடுங்க முயல்வது சரிதானா என்பதுதான் பிரச்சினை. இந்தச் சலுகையை ஒழிப்பதற்காகத்தான் போராட்டம் நடைபெறுகிறது.

சிலர் மற்றவர்களைவிட உடல் வலிமை பெற்றவராக இருப்பார்கள்; இயல்பாகவே இவர்களால் பலவீனர்களை அடக்கியாளவும் வெல்லவும் முடியும் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் இந்த வலிமை காரணமாக உலகத்தில் கிடைக்கும் இன்பங்களை எல்லாம் அவர்கள் தாங்களே அனுபவிக்க முயல்வது நியாயத்திற்கு விரோதமானது. இதை எதிர்த்துதான் போராட்டம் நடைபெறுகிறது. இயற்கையாகவே உள்ள திறமை காரணமாகச் சிலர் மிகுந்த செல்வம் சேர்த்துக்கொள்வது இயற்கை. ஆனால் பணம் ஏராளம் தேடுவதற்காக, இப்படிப் பணம் திரட்ட இயலாத மற்றவர்களைத் தங்கள் ஆற்றலால் நசுக்குவதோ, அவர்களின் தோள்மீது ஏறிச் சவாரி செய்வதோ நீதியல்ல, இதை எதிர்த்துதான் போராட்டம் நடைபெறுகிறது. மற்றவனிடமிருந்து பிடுங்கி, தான் இன்பம் அனுபவிப்பதே சலுகை என்பது; அதை ஒழிப்பதுதான் காலங்காலமாக நீதிநெறியின் லட்சியமாக இருந்துவருகிறது. இந்த லட்சியம்தான் வேறுபாடுகளை அழிக்காமல் சமத்துவத்தை நோக்கி, ஒருமையை நோக்கிச் செல்வதாக உள்ளது.

இயற்கையில் சமமில்லாத நிலை இருக்கலாம், ஆனாலும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும்தான் வாய்ப்புகள் அமையும் என்றால், பலசாலிகளைவிடப் பலவீனர்களுக்கே அதிகமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அதாவது, கல்வி கற்பித்தல் என்பது சண்டாளனுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு பிராமணனுக்குத் தேவை யில்லை . பிராமணனின் மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவை யானால் சண்டாளனின் மகனுக்குப் பத்து ஆசிரியர்கள் தேவை. அதாவது இயற்கை யாருக்குப் பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தந்து உதவவில்லையோ அவனுக்கு அதிக உதவியளிக்க வேண்டும்.

சமுதாயத்தின் இயல்பே குழுக்களாகப் பிரிவது தான். எனவே ஜாதிகள் இருக்கும். ஆனால் சில பிரிவினருக்கான தனிச் சலுகைகள் போய்விடும்!

ஜாதி என்பது இயல்பான ஒன்று. சமுதாய வாழ் வில் நான் ஒரு தொழில் செய்யலாம்; நீங்கள் வேறொன்று செய்யலாம். நீங்கள் அரசாளலாம், நான் செருப்பு தைக்கலாம். ஆனால் அதன் காரணமாக நீங்கள் உயர்ந்தவர் என்று சொல்ல முடியாது. ஏனெனில் உங்களால் செருப்பு தைக்க முடியுமா? இல்லை, என்னால்தான் நாட்டை ஆள முடியுமா? நான் செருப்பு தைப்பதில் வல்லவனாய் இருக்கலாம்; நீங்கள் வேதம் படிப்பதில் நிபுணனாக இருக்கலாம். ஆனால் அதன் காரணமாக நீங்கள் என் மீது ஏன் ஏறி மிதிக்க வேண்டும்? ஒருவன் கொலை செய்தால்கூட அவனைப் புகழ வேண்டுமாம், மற்றொருவன் ஓர் ஆப்பிளைத் திருடினாலும் அவனைத் தூக்கிலிட வேண்டுமாம். இவை ஒழிய வேண்டும். ஜாதிகள் நல்லது. வாழ்க்கையை இயல்பாகக் கையாள்வதற்கான வழி அது ஒன்றுதான். மனிதர்கள் குழுக்களாகப் பிரிந்துதான் வாழ முடியும், அதை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் எங்கு சென்றாலும் ஜாதிகள் இருக்கவே செய்யும். ஆனால் அதன்காரணமாகயாருக்கும்தனிச்சலுகை இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தத் தனிச் சலுகைகளின் தலையிலடித்து அவற்றை ஒழிக்க வேண்டும். ஒரு மீனவனுக்கு வேதாந்தம் கற்பித்தோமானால் அவன், ‘உன்னைப் போலவே நானும் நல்லவன், நான் மீன் பிடிப்பவன், நீதத்துவவாதி. ஆனால் உன்னில் போலவே என்னிலும் கடவுள் இருக்கிறார்’ என்று கூறுவான். யாருக்கும் தனிச்சலுகையில்லை, எல்லோருக்கும் சம வாய்ப்புக்கள்; இதுவே நமக்கு வேண்டும். தெய்வீகம் ஒவ்வொருவரின் உள்ளே இருக்கிறது என்பதை அவர்களுக்குக் கற்பியுங்கள். பின்னர் அவர்களே தங்கள் முக்திக்கு வழி தேடிக்கொள்வார்கள்.

சுதந்திரமே வளர்ச்சிக்கான முதல் நிபந்தனை.

வரலாறும் வளர்ச்சியும் 6

6. மனிதர்கள் தாண்ட வேண்டிய தடைகள் யாவை?

உலகில் மூவகையான துக்கம் உள்ளன. அவை இயற்கையானவையல்ல, ஆகவே நிவர்த்திக்கப்படக் கூடியவை. கோபம்

அவைகள் ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் மற்றும் அத்யாத்மிகம். வெள்ளம், பஞ்சம், நிலநடுக்கம் போன்ற புற இயற்கையினால் ஏற்படும் துன்பங்களை ஆதிபௌதிகம் என்கிறோம். இதனைத் தடுக்க அறிவியல் விஞ்ஞான தொழில் நுணுக்கம் தேவைப் படுகிறது. நீதியின்மை , சம உரிமையற்ற நிலை போன்ற சமுதாயத் தீமைகள் ஆதிதைவிகம் எனப் படும். அரசியல் அறிவு, பொருளாதாரம், சமுதாயக் கோட்பாடுகள் போன்றவை இதனை நீக்கப் பயன் படுகின்றன. அக இயற்கையில் உள்ள முறைகேடான உணர்ச்சிகள், உந்துதல்கள் அத்யாத்மிகம் எனப் படும். ஆன்மீக வாழ்க்கை அதனைத் தடுக்கும். முக்திக்கு சுவாமி விவேகானந்தர் பரந்த ஒரு வரையறையை கொடுத்துள்ளார். முக்தி என்றால் இவையெல்லாவற்றிலும் இருந்து விடுதலை பெறுவதே.

கிரேக்கர்கள் அரசியல் சுதந்திரத்தை நாடினர், இந்துக்கள் ஆன்மீக சுதந்திரத்தை நாடினர். இரண்டும் ஒருதலைப்பட்சமானவை.

ஆன்மீக சுதந்திரத்தில் மட்டும் கவனம் செலுத்தி சமூக சுதந்திரத்தைப் புறக்கணிப்பது ஒரு குறை. ஆனால் சமூக சுதந்திரத்தில் மட்டும் கவனம் செலுத்தி, ஆன்மீகத்தைப் புறக்கணிப்பது அதைவிடப் பெரிய குறை. ஆன்மா , உடல் ஆகிய இரண்டின் சுதந்திரத் திற்காகவும் முயல வேண்டும்.

உலகம் முழுவதன் கண்களும் ஆன்மீக உணவிற் காக இப்போது இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளன; எல்லா இனங்களுக்கும் இந்தியா அதைத் தந்தாக வேண்டும். மனித குலத்திற்கான மிகச் சிறந்த லட்சியம் இங்கு மட்டுமே உள்ளது. நமது சம்ஸ்கிருத இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் உள்ளதும், காலங் காலமாக இந்தியாவின் தனிப்பெரும் பண்பாகத் திகழ்வதுமாகிய இந்த லட்சியத்தைப் புரிந்து கொள்வதற்காக இப்போது மேலை நாட்டு அறிஞர்கள் அரும்பாடுபட்டுவருகின்றனர்.

நாம் வேறு ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டுமா? இந்த உலகத்திடமிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது இருக்கிறதா? ஆம்; உலகப் பொருட்களைப் பற்றிய அறிவு, நிறுவனங்களின் சக்தி, அதிகாரங்களைக் கையாளும் திறமை, நிறுவனங்களை உருவாக்குகின்ற திறமை, குறைந்த சக்தியைச் செலவழித்து அதிக பலன்களை அடையும் திறமை-இவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவு மேலை நாட்டிடமிருந்து ஒருவேளை நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

ஒரு குண்டூசியைக்கூட உற்பத்தி செய்யத் திராணி யில்லை. இந்த லட்சணத்தில் இங்கிலாந்தைக் குறை சொல்கிறீர்கள்! வெட்கக்கேடு! முதலில் அவர்கள் காலடியில் உட்கார்ந்து, அவர்களிடமிருந்து கலை, தொழில் என்று வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தேவை யானவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அத்தகைய தகுதிகளைப் பெற்றால் முன்புபோலவே உங்களுக்கு மதிப்பு வரும்.

ஆன்மீகத்தில் ஒருநாட்டினர் அல்லது சமுதாயத்தினர் முன்னேறி இருக்கும் அளவிற்கு அவர்களது நாகரீகமும் உயர்ந்ததாக உள்ளது. பல எந்திரங்களையும், அது போன்ற பிறவற்றையும் கொண்டு வாழ்க்கை வசதி களைப் பெருக்கிக் கொண்டதால் மட்டும் ஒரு நாட்டினரை நாகரீகம் படைத்தவர்கள் என்று கூறிவிட முடியாது. இந்தக் காலத்து மேலை நாகரீகம் நாள்தோறும் மக்களின் தேவைகளையும் துன்பங்களையும்தான் பெருக்கிக்கொண்டு போகிறது. மாறாக, பழைய இந்திய நாகரீகம் ஆன்மீக முன்னேற்றத்திற்குரிய வழிகளைக் காட்டியதன் மூலம், உலகியல் தேவைகளை முற்றிலுமாக நீக்காவிட்டாலும் பெருமளவிற்குக் குறைத்தது. இந்த இருவகை நாகரீகத்தையும் சமன்படுத்துவதற்காகவே இந்த யுகத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றினார். இன்று மனிதர்கள் செயல்புரிவதில் வல்லவர்களாக இருப்பதுடன் ஆழ்ந்த ஆன்மீக ஞானத்தையும் அடைய வேண்டியிருக்கிறது.

பண வசதிக்கு ஏற்ப நமது மடத்தில் மேலை விஞ்ஞானத்தையும் இந்திய ஆன்மீகத்தையும் இளைஞர்களுக்குக் கற்பிக்க எண்ணுகிறோம். இதன் மூலம், அவர்கள் கல்லூரிக் கல்வியின் நன்மையுடன், ஆசிரியர்களுடன் வசிப்பதால் மனிதர்களாக ஆவதற் கான பயிற்சியும் பெறுவார்கள்.

வரலாறும் வளர்ச்சியும் 5

5. எப்போது மாற்றம் முன்னேற்றமாக முடியும்? முன்னேற்றத்திற்கான மாற்றத்தின் சிறப்புப் பண்புகள் யாவை?

ஆற்றலைச் சேமிப்பது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் அதனைக் கொடுப்பது; சொல்லப் போனால் கொடுப்பது இன்னும் அதிக அவசியம். இதயத்தில் ரத்தம் வந்துசேர்வது இன்றியமையாதது, ஆனால் அது உடல் முழுவதும் பரவாவிட்டால் சாவு நிச்சயம். எல்லா அறிவும் எல்லா கல்வியும் சமுதாயத்தின் நன்மைக்காக ஒரு குறிப்பிட்ட குடும்பத்திலோ ஜாதியிலோ குவிக்கப்படுவது ஒரு குறிப்பிட்ட காலத் திற்கு மிகவும் அவசியமாகிறது. ஆனால் அது எல்லோ ருக்கும் பகிர்ந்தளிப்பதற்காக மட்டுமே குவித்து வைக்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்படுவது தடைப்படு மானால் அந்தச் சமுதாயம் விரைவில் அழிந்துவிடும்.

உயர்குடியினர் முதல் சாதாரண மக்கள்வரை கல்வியும் பண்பாடும் படிப்படியாக பரவத் தொடங்கிய நாளிலிருந்தே மேலை நாடுகளின் நவீன நாகரீகத் திற்கும், இந்தியா எகிப்து ரோம் நாடுகளின் முற்கால நாகரீகத்திற்கும் இடையே வேற்றுமை வளரத் தொடங் கியது. சாதாரண மக்களிடையே கல்வியும் அறிவும் பரவியதற்கு ஏற்ப நாடும் முன்னேறுவதை நான் கண் முன் காண்கிறேன். ஆணவம் அரச ஆணை இவற்றின் துணையுடன், விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் எல்லா கல்வியும், புத்திநுட்பமும் உடைமை யாக்கப் பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

வரலாறும் வளர்ச்சியும் 4

4. வரலாற்றின் மாற்றங்கள் அனைத்தையும் முன்னேற்றமாக எடுத்துக் கொள்ள முடியுமா?

சூத்திரர்கள் நிறைந்ததும் ரோமாபுரியின் அடிமையு மான ஐரோப்பா இன்று க்ஷத்திரிய வீரத்தால் நிறைந்துள்ளது. வலிமைமிக்க சீனா நம் கண் முன்னாலேயே, வெகுவேகமாகச் சூத்திர நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. சாதாரணமான ஜப்பான் தன் சூத்திரத்தனத்தைக் களைத்தெறிந்துவிட்டு, ராக்கெட் வேகத்தில் உயர்ஜாதியினரின்நிலையை மெல்லமுற்றுகை யிட்டுக் கொண்டிருக்கிறது. நவீன கிரீஸும் இத்தாலியும் க்ஷத்திரியத்தன்மையை அடைந்ததும், துருக்கி, ஸ்பெயின் போன்ற நாடுகள் வீழ்ச்சியுற்றுக் கொண்டிருப்பதும் இங்குக் கவனிக்க வேண்டியவை.

வரலாறும் வளர்ச்சியும் 3

3. சமுதாயத்தின் முக்கிய சக்திகள் எவை? சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு என்ன?

‘கல்விதான் எல்லா சக்திகளுக்கும் மேலான சக்தி. அந்தக் கல்வி என்னிடம் இருக்கிறது. ஆகவே சமுதாயம் என் சொற்படிதான் நடக்க வேண்டும்’ என்றான் பிராமணன். சில காலத்திற்கு இப்படி நடந்தது. பிறகு க்ஷத்திரியன் சொன்னான்: ‘என் ஆயுத பலமில்லாவிட்டால் உன் கல்விவலிமையுடன் நீ எங்கிருப்பாய்? நான்தான் எல்லோரிலும் மேலானவன்.’ உறையிலிருந்து பறந்து வந்தது பளிச்சிடும் வாள், சமுதாயம் தலைதாழ்த்தி அதை ஏற்றுக்கொண்டது. அறிவைப் போற்றியவன்தான் அனைவருக்கும் முதலாக அரசனைப் போற்ற ஆரம்பித்தான். பிறகு வைசியன் சொன்னான்: ‘பைத்தியக்காரர்களே, எங்கும் நிறைந்த கடவுள் என்று நீங்கள் சொல்கிறீர்களே, அது என் கையில் உள்ளதும் சர்வ வல்லமையுள்ளதுமான பணம். அதன் அருளால் நானும் வல்லவனாகி விட்டேன்.

விவசாயிகளும் நெசவாளிகளுமான பாரதத் தின் பாமர வர்க்கத்தினர், அன்னியர்களால் அடிமைப் படுத்தப்பட்டும் சொந்த நாட்டு மக்களால் அலட்சியப் படுத்தப்பட்டும் கிடக்கின்ற இந்த பாரத மண்ணின் மைந்தர்கள் காலங்காலமாக முணுமுணுக்காமல் உழைத்துவருகிறார்கள். ஆனால் அவர்களது உழைப்பின் பலன் அவர்களுக்குக் கிடைக்கவில்லை! இயற்கை நியதியின்படி உலகம் முழுவதும் மெல்லமெல்ல எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன! நாடுகள், நாகரீகங்கள், ஆதிக்கங்கள் இவற்றில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாரதத் திருநாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரே, நீங்கள் எத்தனையோ அவமதிப்புகளைத் தொடர்ந்து ஏற்றும், அமைதியாக உழைத்துவருவதன் காரணமாக அல்லவா பாபிலோனியா, பாரசீகம், அலெக்சாண்டிரியா, கிரீஸ், ரோம், வெனிஸ், ஜினோவா, பாக்தாத், சமர்க்கண்ட், ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், ஹாலந்து, இங்கிலாந்து ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக ஆதிக்கமும் வளமும் பெற்று உயர்ந்தன!

வரலாறும் வளர்ச்சியும் 2

2. ஒரு சமுதாயத்தின் வரலாறு எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

மனித இனத்தின் முன்னேற்றம், நாகரீகம் என்பதெல்லாம் இயற்கையை அடக்கி ஆள்வதைத்தான் குறிக்கும்.

இயற்கையை ஆள வெவ்வேறு இனத்தினர் வெவ்வேறு வழிகளில் முயன்றனர்.

நெருப்பு ஒன்றே, ஆனால் அது பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. அதுபோல் ஒரே மகா சக்திதான் பிரெஞ்சு மக்களிடம் அரசியல் சுதந்திர மாகவும், ஆங்கிலேயர்களிடம் வாணிப அறிவாகவும் சமுதாய விரிவுப்படுத்தலாகவும், இந்துக்களிடம் முக்தி நாட்டமாகவும் வெளிப்படுகிறது.

இந்த நாட்டின் உயிர்நாடி மதம்; மொழி, இயல்பு எல்லாமே மதம் என்பது அப்போது தெரியவரும். உங்கள் அரசியல், சமூக நீதி, நகரசபை, பிளேக் நிவாரணப் பணி, ஏழைகளுக்கு அன்னதானம் என்று காலங்காலமாக இந்த நாட்டில் நடந்து வருபவை யெல்லாம் நடக்கும், எப்படி? மதத்தின் வாயிலாகச் செய்தால் நடக்கும், இல்லாவிட்டால் உங்கள் ஆர்ப்பாட்டமெல்லாம் வீண். ராம் ராம்!

தன் மக்கள் என்ற தீவிர அன்பும், அதன் காரண மாக மற்றவர்கள்மீது எழுகின்ற கடுமையான வெறுப்பும் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைகின்றன. உதாரணமாக பாரசீகத்திற்கு எதிராக கிரீஸ், கார்தேஜுக்கு எதிராக ரோம், காஃபிருக்கு எதிராக அரேபியன், மூருக்கு எதிராக ஸ்பெயின், ஸ்பெயினுக்கு எதிராக பிரான்ஸ், பிரான்ஸுக்கு எதிராக இங்கிலாந்தும் ஜெர்மனியும், இங்கிலாந்திற்கு எதிராக அமெரிக்கா. இந்த வெறுப்பின் காரணமாக, ஒன்றுக்கு எதிராக ஒன்று இணைவதால் முன்னேற்றம் ஏற்படுகிறது.

சமுதாயம் உருவாக ஆரம்பித்தது; நாடுகளுக் கேற்ப அது வேறுபட்டது. கடற்கரையோரம் வசித்த வர்கள் அனேகமாக மீன் பிடித்து வாழ்க்கை நடத் தினர். சமவெளிகளில் இருந்தவர்கள் பயிர் செய் தனர். மலைவாசிகள் செம்மறி ஆடுகளை வளர்த் தனர். பாலைவனவாசிகள் வெள்ளாடுகளையும் ஒட்டகங் களையும் வளர்த்தனர். சிலர் காடுகளில் வசித்தனர், வேட் டையாடி வாழ்ந்தனர். சமவெளிகளில் வாழ்ந்தவர்கள் விவசாயம் செய்யக் கற்றனர்; வயிற்றிற்காக இவர்கள் அவ்வளவு போராட வேண்டியிருக்கவில்லை; எனவே சிந்தனையில் ஈடுபட்டனர், நாகரீகம் பெறத் தொடங்கினர்.

உணவு கிடைக்காதபோது வேட்டைக்காரர்களும் இடையர்களும் மீனவர்களும், திருடர்களாக கொள்ளைக்காரர்களாக மாறி, சமவெளிகளில் வாழ்ந்தவர்களைச் சூறையாடினர்.

ஆனாலும் சுவடுகள் மறைவதில்லை . முற்பிறவிகளில் ஆடு மேய்த்தல், மீன்பிடித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் நாகரீகமடைந்த இந்தப் பிறவிகளில் கொள்ளையராக, கடற்கொள்ளையராக மாறினர். வேட்டையாட காடுகள் இல்லை, ஆடுமாடுகளை மேய்க்க அக்கம்பக்கத்தில் குன்றுகளோ மலைகளோ இல்லை; வேட்டையாட, ஆடுமாடுகளை மேய்க்க, மீன் பிடிக்கப் போதிய வாய்ப்புகள் இல்லை; எனவே கொள்ளையடிக்கிறான், திருடுகிறான். வேறென்ன செய்வான்?

உலக வரலாற்றைப் படித்துப் பார். ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட காலத்தில் ஒரு மகாபுருஷர் நடுநாயகமாக இருப்பதைக் காண்பாய். அவரது கருத்துக்களால் கவரப்பெற்று நூற்றுக்கணக்கான மக்கள் உலகிற்கு நன்மை செய்வார்கள்.

கிறிஸ்தவ மதமோ, விஞ்ஞானமோ சமூகத்தை மாற்றுவதில்லை; தேவைதான் அடிப்படையில் வேலை செய்கிறது. வாழ்வதா அல்லது பட்டினிகிடப்பதா என்ற தேவைதான் சமுதாயத்தை மாற்றுகிறது.

வரலாறும் வளர்ச்சியும் 1

1. வரலாற்றின் முக்கியத்துவம் என்ன?

ஜடப்பொருளில் உணர்வைப் படிப்படியாக அதிக அளவில் அறிவதுதான் நாகரீகத்தின் வரலாறு.

இயற்கையை எதிர்க்கும் ஒவ்வொன்றும் உணர் வுடன் இருப்பவைதான். அங்கேதான் உணர்வு வெளிப்படுகிறது. ஒரு சிறிய எறும்பைக் கொல்வதற்கு முயன்று பார். அதுகூடத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும். எங்கே போராட்டம் இருக் கிறதோ, எங்கே எதிர்ப்பு இருக்கிறதோ அங்கே உயிரின் அடையாளம் இருக்கிறது. அங்கே உணர்வு வெளிப்படுகிறது.

இயற்கை முழுவதிலும் இரண்டு சக்திகள் செயல் படுவதுபோல் தோன்றுகிறது. இவற்றுள் ஒன்று எப்போதும் பிரித்துக்கொண்டே இருக்கிறது; மற்றது எப்போதும் சேர்த்துக்கொண்டே இருக்கிறது. ஒன்று மனிதர்களைப் பிரிக்க முயல்கிறது, மற்றது மக்களை யெல்லாம் ஒன்றாக்கி வேற்றுமைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்த முயல்கிறது. இந்த இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் இயற்கையின் எல்லா பகுதிகளிலும், மனித வாழ்விலும் இடம் பெறுவதைக் காண்கிறோம்.

உபநிடதங்கள், மற்றும் புத்தர்கள், ஏசுநாதர்கள் போன்ற மதப் பிரச்சாரகர்களின் காலம் முதல் இன்று வரையிலும் நோக்கங்களிலும், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சிக் குரல்களி லும், தங்கள் உரிமைகளை இழந்து வாழ்கின்ற மக்களிலும் ஒருமை, சமத்துவம் என்ற இந்த ஒன்றின் வற்புறுத்தல்தான் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் மனிதத் தன்மை வலுவாக முன் நிற்கிறது. சில வசதிகளைப் பெற்றவர்கள் அவற்றை விட விரும்பு வதில்லை ; அதற்கு அனுகூலமான ஒரு வாதம், அது எவ்வளவு ஒருதலையாக, குறுகிய நோக்கம் உள்ளதாக இருந்தாலும், அந்த வாதத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது இரு சாராருக்கும் பொருந்தும்.