மேதைகளின் பார்வையில் விவேகானந்தர்


சுப்பிரமணிய பாரதியார்

வானந்தம் புகழ் மேவி விளங்கிய

மாசில் ஆதிகுரவன் அச்சங்கரன்

ஞானம் தங்கும் இந்நாட்டினைப் பின்னரே

நண்ணினான் எனத் தேசுறும் அவ்

விவேகானந்தப் பெருஞ்சோதி…


இந்தியாவிலே தோன்றியிருக்கும் புது எழுச்சிக்கு எத்தனையோ பேர் எத்தனையோ விதமான காரணங்களை விளக்குகிறார்கள். சுவாமி விவேகானந்தர் மதாச்சார்யராகவே நாட்கழித்த போதிலும் தேசபக்த எழுச்சிக்கு அவர் பெரியதோர் மூலாதாரமாக நின்றனர்.


பரம ஞானியாகிய ஸ்ரீகிருஷ்ண பகவான் மஹாபாரதப் போரிலே சேர்ந்தது போலவும், ஸர்வ பந்தங்களையும் துறந்து ராம்தாஸ் முனிவர், மகாராஜா சிவாஜிக்கு ராஜ தந்திரங்களைச் சொல்லி வெற்றி கொடுத்தது போலவும், தற்காலத்தில் அநேக துறவிகள் நமது சுதேசிய முயற்சியிலே சேர்ந்திருக் கிறார்கள். காலஞ்சென்ற விவேகானந்த பரமஹம்ஸ மூர்த்தியே இந்த சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகமறியும்.


அவர் யோசனை பண்ணாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் கிடையாது. அவருடைய தைர்யத்துக்கோ எல்லை கிடை யாது. அவருடைய அறிவின் வேகத்துக்குத் தடையே கிடையாது.


அமெரிக்காவில் சென்ற ஹிந்து மதப் பிரச்சாரம் பண்ண வேண்டுமென்ற நோக்கத்துடன் சுவாமி விவே கானந்தர் இந்தியாவிலிருந்து புறப்பட்டு ஜப்பானுக்குப் போன மாத்திரத்திலேயே, வேத சக்தியாக பாரத சக்தி அவருக்கு ஞானச் சிறகுகள் அருள் புரிந்து விட்டாள். ஜப்பானிலிருந்து அவர் இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களில் புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கிவிட்டது. நவீன ஹிந்துதர்மத்தின் அச்சக்தி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.


சுப்பிரமணிய சிவம்

ஆசார்ய கோடிகளிலே ஒருவராக அவதரித்து ஆத்ம ஞான ஒளியை எங்கெங்கும் வீசி ‘அவனியே ஆத்மா, ஆத்மாவே அவனி’ என்று எதிருரையாடுவோர் எவருமில் லாது, பாரத கண்டத்தில் மாத்திரமன்று, வேறு பன்னாடு களிலும் சென்று பறையறைந்து திக்விஜயம் செய்து, உண்மையொன்றே பொருளென உரைத்து, கடைசியில் உண்மையில் உண்மையாகக் கலந்து கொண்ட ஸ்ரீஸ்வாமி விவேகானந்தரைப் பற்றி எத்தனையெத்தனை யெடுத்துரைத் தாலும் எனக்கு வாய் நோவதில்லை ….. அவரை ஸ்மரிக் கின்ற நேரமெல்லாம் எனக்குப் புதிது புதிதாக ஊக்கமும் உற்சாகமும் உண்டாவதன்றி, எங்கிருந்தோ, எனக்குத் தெரிய மால், ஒரு சக்தியை அடைகிறேன்.


இந்திய தேசத்தின்மீது, தமது ஜென்மபூமியின்மீது, மகரிஷிகளின் நாடாகிய இப்பரதக் கண்டத்தின்மீது, அவருக்கிருந்த அன்புக்கு ஓர் அளவேயில்லை. தேசாபிமான ஸிம்ஹமெனத் திகழ்ந்து, தேசத்திலே ஒரு புதிய உணர்ச்சி யையும் ஆதர்சத்தையும் உண்டாக்கினார். உறங்கிக் கிடந்த ஜனங்களைத் தட்டியெழுப்பி விட்டார். உண்மையை உரைத் தார். ஆண்மக்களாக வேண்டுமென்றார்


ராஜாஜி

சமீப கால வரலாற்றை நோக்குவோமாயின் நாம் எந்த அளவு சுவாமி விவேகானந்தருக்கு கடமைப்பட் டுள்ளோம் என்பது தெரிவாகத் தெரியும். இந்தியாவின் உண்மையான பெருஞ் சிறப்பைக் காணத் கண்களைத் திறந்து வைத்தார். அரசியலை ஆன்மீகமயப்படுத்தி னார். இந்தியாவின் சுதந்திரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகத்தின் தந்தை அவர். அவருடைய நம்பிக்கை, ஆற்றல், ஞானம் என்றும் நம்மைத் தூண்டி நடத்தட்டும். அவரிடமிருந்து பெற்ற செல்வக் குவியலை நாம் போற்றிப் பாதுகாப்போமாக.


ரவிந்திரநாத் தாகூர்

நீங்கள் இந்தியாவை அறிந்து கொள்ள வேண்டுமா? விவேகானந்தரைப் படியுங்கள். அவரது கருத்துக்கள் அனைத்தும் ஆக்கபூர்வமானவை. எதிர்மறையான எதுவும் அவரிடம் கிடையாது.


மனிதன் விழித்தெழ வேண்டும், முழுமையான வளர்ச்சி காண வேண்டும்— இதுதான் விவேகானந்தரின் செய்தியாக இருந்தது. அதனால்தான் இளைஞர்கள் அவரிடம் மிகவும் கவரப்பட்டனர்; பல்வேறு வழிகளாலும் தியாகங் களாலும் முக்திப் பாதையை நாடினர்.


அரவிந்தர்

கவனித்துப் பாருங்கள்! சுவாமி விவேகானந்தர் வாழ் கிறார்! பாரதத் திருநாட்டின் அந்தராத்மாவிலும் பாரத மக்களின் மனங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


சுபாஷ் சந்திர போஸ்


விவேகானந்தரைப்பற்றி எழுதும்போது நான் ஆனந்தப் பரவசங்களில் ஆழ்கிறேன். அதைத் தடுக்க முடியாது…. அவரது ஆளுமை பொலிவு மிக்கது, ஆழ மானது, அதேவேளையில் பின்னலானது….. விளைவைப் பற்றி சிந்திக்காத தியாகம், ஓய்வற்ற செயல்பாடு, எல்லை யற்ற அன்பு, ஆழமானதும் பரந்து பட்டதுமான அறிவு, பொங்கிப் பெருகும் உணர்ச்சிகள், இரக்கமற்ற தாக்குதல்கள், குழந்தைபோன்ற களங்கமின்மை – நமது உலகில் அவர் அபூர்வமானவர். நாடி நரம்புகளில் ரத்தம் கொதித்துப் பாய் கின்ற ஆண்மகன் அவர். எதற்கும் விட்டுக்கொடுக்காமல், சளைக்காமல் போரிடுகின்ற போராளி அவர். அவர் சக்தியை வழிபட்டார். சொந்த நாட்டு மக்களை முன்னேற்றுவதற்காக வேதாந்தத்திற்குச் செயல்முறை வடிவம் கொடுத்தார்…… இப்படி நான் மணிக்கணக்காக அவரைப்பற்றி கூறிக் கொண்டே போகலாம். ஆனாலும் அதன்மூலம் அவரைப் பற்றி நான் ஏதாவது விளக்கியிருப்பேனா என்றால், ‘இல்லை ‘ என்பதுதான் பதிலாக இருக்கும். அதில் நான் தோல்வியே கண்டிருப்பேன். அவர் அவ்வளவு மகிமை வாய்ந்தவர், அவ்வளவு ஆழமானவர், அவ்வளவு பின்ன லானவர். சுவாமி விவேகானந்தர் ஒரு மாபெரும் யோகி; உண்மைப் பொருளாகிய இறைவனுடன் எப்போதும் நேரடித் தொடர்பு கொள்கின்ற இறையுணர்வாளர். அத் தகைய உன்னத நிலையில் இருந்த அவர் இந்திய மக்களை யும், மனித குலத்தையும் அற வாழ்விலும் ஆன்மீகத்திலும் முன்னேற்றுவதற்காகத் தமது வாழ்க்கையையே தியாகம் செய்தார்.


மகாத்மா காந்தி

நான் விவேகானந்தரின் இலக்கியத்தை ஆழ்ந்து படித் தேன். அவற்றைப் படித்த பிறகு எனது தேச பக்தி ஆயிரம் மடங்காகப் பெருகியுள்ளது. இளைஞர்களே! நான் உங் களைக் கேட்டுக்கொள்கிறேன். சுவாமி விவேகானந்தர் வாழ்ந்து மறைந்த இந்த இடத்திற்கு (பேலூர் மடம்) வந்துள்ள நீங்கள் வெறும் கையுடன் திரும்பாதீர்கள்; அவரது கருத்துக் களில் ஒரு சிறிதையேனும் ஏற்றுக்கொண்டு செல்லுங்கள்.


வினோபா பாவே

நமது பலம் என்ன என்பதை நமக்கு உணர்த்தினார் விவேகானந்தர். அதுபோலவே, நமது பலவீனம், நமது குறைபாடுகள் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டினார். அறியாமையிலும் சோம்பலிலும் மூழ்கிக் கிடந்துகொண்டு, அதேவேளையில், தாங்கள் அமைதியிலும் பற்றற்ற நிலையிலும் வாழ்வதாக நினைத்துக்கொண்டிருந்த மக்களை அவர் தட்டி எழுப்பினார். இந்தியா இழந்திருந்த ஆன்ம சக்தியைத் தமது இணையற்ற சொற்பொழிவுகளின்மூலம் மீண்டும் நிலைநிறுத்தினார்.


ஜவஹர்லால் நேரு

இன்றைக்கு நாம் விவேகானந்தருடைய மகோன்னத மான பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நினைப்பதன் மூலமே அவரை நினைவிற்குக் கொண்டுவர முடியும். அவருடைய நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இந்தியனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்களாகும். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் பேசிய, எழுதிய அந்தக் கருத்துக்களை நீங்கள் படித்தால் அவர் எவ்வளவு அற்புத மானவர் என்பதை உணர்வீர்கள். பெ இந்தியா தன்னுடைய வீரத்தையெல்லாம் இழந்து கோழையாகிவிட்டிருந்த நேரத்தில், இந்த நாடே ஆண்மையற்றுத் தூள்தூளாகச் சிதறிப்போன காலத்தில், அவர் இந்திய நாட்டிற்கு வீரத்தையும் ஆண்மையையும் ஊட்டினார்.

சுவாமி விவேகானந்தரைப் போன்ற வீரரை நீங்கள் எங்கே காண முடியும்? யாரைப் பார்த்தெல்லாம் அவர் முழங்கினாரோ, யாரிடமெல்லாம் அவர் பேசினாரோ, அவர்கள் எல்லாம் அவரிடமிருந்து வீரத்தையும் வலிமையை யும் பெற்றுத் திரும்பினார்கள்.


எஸ். ராதாகிருஷ்ணன்

விவேகானந்தர் நமக்கு அறைகூவல் என்று ஏதாவது விடுத்திருப்பாரானால், அது, ‘நீங்கள் உங்கள் ஆன்மாவைச் சார்ந்திருங்கள், உங்களிடம் மறைந்து கிடக்கின்ற ஆற்றல் களை வெளிப்படுத்துங்கள்’ என்பதுதான். மனிதனின் ஆன்மா எல்லையற்ற ஆற்றல் வாய்ந்தது; எல்லையற்ற திறமைகள் அடங்கியது. மனிதன் தனித்துவம் வாய்ந்தவன். தடுக்க முடியாதது என்று எதுவும் இந்த உலகில் கிடையாது. நம்மை எதிர்நோக்கியிருக்கும் அபாயங்களையும் குறைபாடுகளை யும் நாம் அகற்ற முடியும். நாம் நம்பிக்கை இழக்கக் கூடாது. துன்பங்களில் வாடும்போது எப்படி பொறுமையாக இருப்பது, நிர்க்கதியான நேரங்களில் எப்படி நம்பிக்கை இழக்காமல் இருப்பது, மனம் தளரும் நேரங்களில் எப்படி துணிவுடன் திகழ்வது என்பதை அவர் நமக்குக் கற்றுத் தந்தார்.


லியோ டால்ஸ்டாய்

அந்தப் பிராமணர் (விவேகானந்தர்) எழுதிய நூலை அனுப்புங்கள். அவரது நூல்களைப் படிப்பது ஓர் இன்ப அனுபவம் மட்டும் அல்ல; அது ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஓர் அனுபவமும் ஆகும்.

லியோ டால்ஸ்டாய் ரஷ்ய எழுத்தாளர் (1828-1910); சமுதாய சீர்திருத்தங்களில் ஈடுபட்டவர். ரஷ்ய ராணுவப் படையில் மூன்று வருடங்கள் பணியாற்றிய இவரது ‘போரும் அமைதியும்’, ‘அன்னா காரநீனா’ ஆகிய நாவல்கள் அவரது சிந்தனைத் திறத்திற்குச் சான்றாக நிற்பவை.


ஏ.எல். பாஷம்

விவேகானந்தர் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. உலக வரலாற்றில் அவரது முக்கியத்துவத்தை அளவிடுவது இன்றும் சாத்தியம் என்று தோன்றவில்லை. அவர் மறைந்த காலத்தில் சில மேலை வரலாற்று அறிஞர் களும் இந்திய வரலாற்று அறிஞர்களும் கூறியதைவிட மிக உயர்ந்த இடம் அவருக்கு உண்டு என்பது மட்டும் நிச்சயம். கடந்து செல்லும் காலமும், அவரது காலத்திற்குப் பிறகு நடைபெறுகின்ற எதிர்பாராத, வியக்கத்தக்க திருப்பங்களும் ஒன்றை நமக்கு நினைவூட்டுகின்றன- நவீன உலகின் முக்கியச் சிற்பிகளுள் ஒருவர் அவர் என்று வரும் நூற்றாண்டு களில் உலகம் அவரை நினைவுகூரும்.


இ.பி.செலிஷேவ்

விவேகானந்தரைப் படிக்கிறேன், மீண்டும் மீண்டும் படிக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிய பரிமாணங்கள் அதில் தென்படுகின்றன. இந்தியா, அதன் சிந்தனைப்போக்கு, இந்திய மக்களின் கடந்த கால, நிகழ்கால வாழ்க்கை முறை, அவர்களின் எதிர்காலக் கனவுகள் போன்ற வற்றை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விவேகானந்தரின் இலக்கியம் உதவுகிறது….

ஆண்டுகள் பல கடந்து போகும், பல சந்ததிகள் தோன்றி மறைவார்கள், விவேகானந்தரும் அவரது காலமும் கடந்த காலமாகி மறையும். ஆனால் மக்கள் மனங்களில் தீட்டப்பட்டுள்ள விவேகானந்தர் என்ற அந்த மாமனிதரின் சித்திரம் ஒருநாளும் மறையாது. அவர் தமது வாழ்நாள் முழுவதும் தமது மக்களின் சிறந்த எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்தார். தேசபக்தர்களைத் தட்டி எழுப்புவதற்கும் நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கும் அவர் செய்யாத முயற்சிகள் இல்லை . சமுதாய அநீதிகளி லிருந்தும், மிருகத்தனமான அடக்கு முறைகளிலிருந்தும் பாமர மக்களைக் காப்பதற்காக அவர் எவ்வளவோ பாடுபட்டார். கடும் சூறாவளியிலிருந்தும் பேரலைகளிலிருந்தும் கடற்கரை நிலங்களை செங்குத்தான மலைப்பாறைகள் பாதுகாப்பதுபோல் அவர் தமது தாய்நாட்டின் எதிரிகளுடன் சுயநலமின்றி, துணிவுடன் போராடினார்.

இ.பி.செலிஷேவ் ரஷ்ய சமூக இயலாளர் (1921- ); இந்திய இலக்கியத்தில், குறிப்பாக, இந்தி இலக்கியத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். மூப்பது ஆண்டுகளாக விவேகானந்த இலக்கிய ஆராய்ச்சியிலும், அதனைப் பரப்புவதிலும் ஈடுபட்டுள்ளார்.


ஹுவான் சின் சுவாங்

இந்தியாவின் மிகச் சிறந்த தத்துவ ஞானியும் சமுதாய சிந்தனையாளருமாக விவேகானந்தர் இன்றைய சீனாவில் அறியப்படுகிறார். அவரது தத்துவக் கருத்துகளும் சமுதாய சிந்தனைகளும் இணையற்ற தேசபக்தியும் இந்தியாவில் தேசிய இயக்கங்கள் வளர்வதற்குக் காரணமாக அமைந்த துடன் வெளிநாடுகளிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. … கொடுங்கோல் மன்னர் ஆட்சியில் சிக்கித் தவித்த சீன மக்களிடமும் அவர் மிகுந்த இரக்கம் கொண் டிருந்தார். சீன மக்களிடம் அவர் மிகுந்த நம்பிக்கை வைத் திருந்தார்.

ஹுவான் சின் சுவாங் சீனாவின் பீஜிங் பல்கலைகழகத்தின் வரலாற்றுப் போராசிரியர். விவேகானந்தரைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார்.


ரோமா ரோலா

விவேகானந்தர் ஆற்றலின் திரண்ட வடிவமாகத் திகழ்ந்தார். ‘செயல்வீரம்’ என்பதே மனித குலத்திற்கு அவரது செய்தியாக இருந்தது. அவரது அனைத்து பண்புகளிலும்

சிகரமாக விளங்கியது அவரது அரச தோரணை. அரசனாகவே பிறந்தவர் அவர். இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி அவரது அருகில் வந்த யாரும் அவரை வணங்காமல் சென்றது கிடையாது.

விவேகானந்தரை இரண்டாம் இடத்தில் ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாது. எங்கு சென்றாலும் அவர் முதல் இடத்திலேயே இருந்தார். ‘இவர் தலைவர், கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு மனித குலத்திற்காக அனுப்பப்பட்டவர், ஆணையிடுவதற்கென்றே அதிகாரத்துடன் பிறந்தவர்’ என்று யார் அவரைப் பார்த்தாலும், முதல் பார்வையிலேயே புரிந்து கொள்வார்கள்.

அந்த வீரரின் திருமேனியைச் சிதையில் வைத்தபோது அவருக்கு 40 வயதுகள் கூட ஆகவில்லை . அன்று சிதையில் ஓங்கி எழுந்த அந்தச் செந்நாக்குகள் இதுவரை அணைய வில்லை, இன்றும் எரிந்து கொண்டிருகின்றன. அந்தச் சிதைச் சாம்பலிலிருந்து, அழியாப் பறவையான ஃபீனிக்ஸ்’ போல், புதிய இந்தியா எழுந்து வந்தது. தனது ஒருமைப்பாட்டில் அது நம்பிக்கை கொண்டிருந்தது. பண்டைய வேத முனிவர்களின் சிந்தனையில் எழுந்து, காலம் காலமாக வந்து கொண்டிருக் கின்ற மாட்சிமைமிக்க செய்தி அதன் ஆதாரமாக இருந்தது. விவேகானந்தரிடமிருந்து எழுந்த இந்தப் புதிய செய்திக்காக உலகமே அவருக்குக் கடன்பட்டுள்ளது.

ரோமா ரோலா நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (1866-1944); பல நாவல்களும் நாடகங்களும் எழுதியுள்ளார். டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற வரலாறுகளை எழுதியுள்ளார்.