உன் வாழ்க்கை உன் கையில்!-24

24. மன ஒருமைப்பாட்டின் சக்தி

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள முக்கிய வேற்றுமை மன ஒருமைப்பாட்டு ஆற்றலே. செயலின் எந்தத் துறையிலும் வெற்றி என்பது இதைப் பொறுத்தே அமைகிறது. மன ஒருமைப்பாடு என்பதை நாம் அனைவரும் ஏதோ சிறிது அறிந்து தான் இருக்கிறோம். மன ஒருமைப் பாட்டின் விளைவுகளை நாம் அன்றாடம் சந்திக்கத்தான் செய்கிறோம். கலை, சங்கீதம் என்று எதுவானாலும் உயர்ந்த வெற்றி என்பது மன ஒருமைப்பாட்டினா லேயே கிடைக்கிறது,

மிருகங்களின் ஒருமைப்பாட்டு ஆற்றல் மிகவும் குறைந்தது. மிருகங் களுக்குப் பயிற்சி அளிப்பவர்களுக்கு ஓர் உண்மை தெளிவாகத் தெரியும். சொன் னதை அவை உடனே மறந்து விடும். மிருகத்தினால் ஒரு பொருளின்மீது நீண்ட நேரம் மனத்தை வைத்திருக்க முடியாது. எனவே மனிதன் அதிக ஒருமைப்பாட்டு ஆற்றல் உள்ளவன் என்பதிலேயே மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. இந்த ஒருமைப்பாட்டு ஆற்ற லின் வேறுபாடே மனிதர்களுக்கு இடை யில்கூட வேற்றுமையை ஏற்படுத்துகிறது. மிகச் சாதாரண மனிதனையும், மிக மேலான மனிதனையும் ஒப்பிட்டுப் பாருங்கள்ஒருமைப்பாட்டு அளவிலேயே வேறு பாடு, இது ஒன்றுதான் வித்தியாசம்.

ஒவ்வொருவரின் மனமும் ஏதோ சிலவேளைகளில் ஒருமுகப்படவே செய் கிறது. நாம் நேசிக்கும் பொருட்களில் நமது மனத்தை ஒருமுகப்படுத்துகிறோம்; நாம் மனத்தை ஒருமுகப்படுத்தும் பொருட்களை நேசிக்கிறோம். தனது அன்புக் குழந்தையின் பிஞ்சுமுகத்தை நேசிக்காத எந்தத் தாயாவது, உலகத்தில் இருக்கிறாளா? அவளுக்கு அந்த முகமே உலகின் மிக அழகிய முகம். அவள் குழந்தையை நேசிக்கிறாள். ஏனெனில் தனது மனத்தைக் குழந்தையில் ஒருமுகப் படுத்துகிறாள். ஒவ்வொருவரும் அந்த முகத்தில் மனத்தை ஒருமைப்படுத்த முடியுமானால் அனைவரும் அந்த முகத்தை நேசிப்பார்கள். அனைவருக்கும் அந்த முகமே மிக அழகிய முகமாகத் தோன்றும். நாம் நேசிக்கும் பொருட்களில் மனத்தை ஒருமுகப்படுத்துகிறோம்.

இத்தகைய மன ஒருமைப்பாட்டில் உள்ள பிரச்சினை இதுதான்-நாம் மனத்தை அடக்குவதில்லை , மனம் நம்மை அடக்கி ஆள்கிறது. நமக்கு வெளி யிலுள்ள ஏதோ ஒரு பொருள் நமது மனத் தைத் தன்னிடம் இழுத்து, அது விரும்பும் நேரம்வரை தன்னிடமே வைத்துக்கொள் கிறது. இனிய இசையைக் கேட்கிறோம், அழகிய படத்தைப் பார்க்கிறோம், நமது மனம் அங்கேயே நின்றுவிடுகிறது. நம்மால் அதை மீட்க முடிவதில்லை.

உங்களுக்குப் பிடித்த ஒரு தலைப்பில் நான் பேசினால் அதில் உங்கள் மனம் குவிகிறது. நான் உங்களை மீறி உங்கள் மனத்தை இழுத்து அந்தக் கருத்தில் பதியச் செய்கிறேன். இவ்வாறு நம்மையும் மீறி நமது கவனம் திசை திருப்பப்படுகிறது; பல பொருட்களில் நமது மனம் குவிக்கப் படுகிறது. நம்மால் இதைத் தவிர்க்க முடியாது.

இந்த மன ஒருமைப்பாட்டை வளர்க்க முடியுமா? அதற்கு நாம் எஜமானர்களாக முடியுமா? இதுதான் கேள்வி. முடியும் என்கிறார்கள் யோகிகள். மனத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தலாம் என்பது அவர்கள் கூற்று. நீதிநெறி நோக்கிலிருந்து பார்த்தால் இதில் ஓர் அபாயம் இருக்கிறது: மனத்தை ஒரு பொருளில் குவிக்கிறோம், ஆனால் நாம் விரும்பும்போது அதை விலக்க முடிவதில்லை. இந்த நிலை பெருந்துன்பங்களை உருவாக்குகிறது. இந்த விலக்கும் ஆற்றல் இல்லாததுதான் நமது பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணம். எனவே குவிக்கும் ஆற்றலுடன் விலக்கும் ஆற்றலையும் நாம் வளர்க்க வேண்டும். அனைத்தையும் தவிர்த்து ஒன்றைப் பற்றும் திறன் வேண்டும்; ஒரு கணத்தில் மனத்தை அதிலிருந்து விலக்கி இன்னொன்றில் வைக்கவும் திறன் வேண்டும். இந்த இரண்டையும் சேர்த்து வளர்த்தோமானால் எந்த அபாயமும் இல்லை .

இதுவே மனத்தின் ஒழுங்கான வளர்ச்சி. என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும் போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களை யும் அவர்களிடம் வளர்க்க வேண்டும்.

மனத்தின் ஆற்றல்களை எல்லாம் ஒருமுகப்படுத்தியதால்தானே உலகிலுள்ள அறிவை மனிதன் பெற்றான். எவ்வாறு தட்ட வேண்டும், தேவையான உந்துதலை எப்படி அளிப்பது என்பது மட்டும் நமக்குத் தெரியுமானால் உலகம் தனது ரகசியங்களை அளிக்கத் தயாராக இருக் கிறது. அதற்கான வலிமையும் வேகமும் ஒருமைப்பாட்டின்மூலமே கிடைக்கிறது. மனித மனத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. எவ்வளவுக்கு அதை ஒருமைப் படுத்து வீர்களோ, அந்த அளவிற்கு
ஆற்றலை ஒரு மையத்தில் குவிக்க உங் களால் முடியும். இதுதான் ரகசியம்.
மனப்பயிற்சியில் சுவாசப் பயிற்சி முதற்படி. ஒழுங்கான சுவாசம் உடலைச் சீராக வைத்திருக்கிறது. அதன்மூலம் மனத்தை அடைவது மிக எளிது. சுவாசப் பயிற்சியில் முதலில் நாம் கவனிக்க வேண்டியது ஆசனம். எந்த நிலையில் ஒருவனால் வசதியாக உட்கார முடியுமோ அதுவே அவனுக்குரிய ஆசனம். முது கெலும்பு சுதந்திரமாக இருக்க வேண்டும். உடலின் எடை விலாஎலும்புகளால் தாங்கப்பட வேண்டும். மனத்தை அடக்கக் குறுக்கு வழிகள் எதையும் முயலாதீர்கள். சாதாரண சுவாசப் பயிற்சி போதுமானது.