சமுதாயத்தின் பல பரிமாணங்கள் 1

சமுதாயம் என்றால் என்ன? அது எவ்வாறு வளர்ந்தது?

ஒரு பொது ஆபத்தோ, எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒன்றை வெறுப்பதோ, விரும்புவதோதான் மக்களை ஒன்றாகப் பிணைக்கிறது. மாமிசம் புசிக்கின்ற மிருகங்கள் எந்த நியதியால் ஒன்றுசேர்கின்றனவோ, அதே நியதியால்தான் மனிதர்களும் ஓர் இனமாக, ஒரு நாடாகப் பரிணமிக்கிறார்கள்.

சமுதாயம் உருவாக ஆரம்பித்தது ; நாடுகளுக்கேற்ப அது வேறுபட்டது. கடற்கரையோரம் வசித்தவர்கள் அனேகமாக மீன் பிடித்து வாழ்க்கை நடத்தினர். சமவெளிகளில் இருந்தவர்கள் பயிர் செய்தனர். மலைவாசிகள் செம்மறி ஆடுகளை வளர்த்தனர். பாலைவனவாசிகள் வெள்ளாடுகளையும் ஒட்டகங்களையும் வளர்த்தனர். சிலர் காடுகளில் வசித்தனர், வேட்டையாடி வாழ்ந்தனர். சமவெளிகளில் வாழ்ந்த வர்கள் விவசாயம் செய்யக் கற்றனர்; வயிற்றிற்காக இவர்கள் அவ்வளவு போராட வேண்டியிருக்கவில்லை; எனவே சிந்தனையில் ஈடுபட்டனர், நாகரீகம் பெறத் தொடங்கினர். நாகரீகம் முன்னேறியபோது உடல் பலவீனமடைந்தது. இரவும்பகலும் திறந்தவெளியில் காற்றும் வெயிலும்பட வசித்து, மாமிசத்தை உண்டு வாழ்ந்தவர்கள், மற்றும் வீடுகளில் வசித்து அனேகமாக தானியங்களையும் காய்கறிகளையும் உண்டவர்கள்இவர்களின் உடம்புகளுக்கிடையே பல்வேறு வித்தியாசங்கள் ஏற்பட்டன. உணவு கிடைக்காதபோது வேட்டைக்காரர்களும் இடையர்களும் மீனவர்களும், திருடர்களாக கொள்ளைக்காரர்களாக மாறி, சமவெளி களில் வாழ்ந்தவர்களைச் சூறையாடினர். சமவெளிகளில் வாழ்ந்தவர்கள் தற்காப்புக்காகக் கூட்டம்கூட்டமாக இணைந்து வாழத் தலைப்பட்டனர். சிறிய அரசுகள் தோன்றின.