8. சமுதாயம் எவ்வாறு தனது உயிர்நாடியை இழக்கிறது?
ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென்று ஒரு தனிப் பங்கு உள்ளது. இயல்பாகவே ஒவ்வொரு நாடும் தன்னோடு பிறந்த, தனக்கென்றே உரிய விசித்திரங் களும் தனித் தன்மையும் கொண்டதாக உள்ளது. உலக நாடுகள் அனைத்தின் இந்த இயைபில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப் பங்கு உள்ளது. அதுவே அந்த நாட்டின் உயிரோட்டமாகவும் ஆதாரமாகவும் உள்ளது. அதுவே அந்த நாட்டு தேசிய வாழ்வின் முதுகெலும் பாகவும் அஸ்திவாரமாகவும் அசைக்க முடியாத அடித்தளப் பாறையாகவும் அமைந்துள்ளது.
தனி மனித வாழ்க்கையில் வாழ்க்கையின் லட்சியம் தடைபடாமல் இருந்தால், உயிர்த் துடிப்பான அந்த லட்சியம் செயல்பட்டுக் கொண்டிருக்குமானால் மற்ற செயல்களுக்கு ஏற்படுகின்ற தடைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அந்தத் தடைகள் அவனை அழிக்காது. அதுபோலவே நமது வாழ்க்கையின் இந்த லட்சியம் தடைபடாதவரை எதுவும் நம் நாட்டை அழிக்க முடியாது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட போக்கு, ஒரு கருத்து உள்ளது. அதன் புற வெளிப்பாடு தான், அது தன்னைப் புறத்தில் வெளிப்படுத்திக் கொள்வதுதான் புற மனிதன். அதுபோலவே ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தேசியக் கருத்தைப் பெற்று விளங்குகிறது. அந்தக் கருத்து உலக நன்மைக்காகச் செயல்படுகிறது, உலகம் வாழ்வதற்கு அந்தக் கருத்து தேவை. இந்தக் கருத்தின் தேவை என்று முடிகிறதோ அன்றே அந்த நாடும் சரி, தனிமனிதனும் சரி அழிந்துவிடும்.
நமது புராதன மக்களின் சட்டங்களும் பழக்க வழக்கங்களும் தவறானவையாக இருந்ததால் இந்தியா விற்கு வீழ்ச்சி ஏற்படவில்லை; அவர்கள் கண்ட முடிவுகளை முறைப்படி செயல்முறைப்படுத்தாதது தான் வீழ்ச்சிக்குக் காரணம்.
அந்த நாட்டின் சீர்குலைவிற்குக் காரணம் என்ன? தன் நிறுவன அமைப்பை நிர்வகிக்கத் தக்க மனிதர்களை அதனால் உருவாக்க முடியவில்லை .
இந்திய சாம்ராஜ்யம் தங்களிடமிருந்து போய் விட்டால், ஆங்கிலேய இனத்திற்குப் பேரழிவு உண்டாகு மென்று ஆங்கிலப் பொதுமக்கள் மனத்தில் ஓர் எண்ணம் மெல்லமெல்லத் தோன்றத் தொடங்கியிருக்கிறது. ஆகவே எப்படியாவது இந்தியாவில் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை நிலைக்கச் செய்தேயாக வேண்டும். இதற்கான முக்கிய வழி ஆங்கிலேய இனத்தின் ‘கௌரவத்தை’ இந்தியனின் இதயத்தில் எப்போதும் நிலைத்திருக்கச் செய்வதே. இந்த எண்ணத்தையும் அதை நடைமுறைப்படுத்துவதற்காக அவர்கள் செய்கின்ற முயற்சிகளையும் காணும்போது சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வருகின்றன.
எந்தத் தைரியமும், விடாமுயற்சியும், தீவிர ஒருமைப்பாட்டு நோக்கும் இவர்களுக்கு இந்திய சாம்ராஜ்யத்தைத் தேடிக் கொடுத்ததோ, எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் விஞ்ஞானத்துடன் கலந்த எந்த வியாபார மேதாவித்தனம் எல்லா செல்வத்திற்கும் அன்னையான இந்தியாவைக்கூட இங்கிலாந்தின் முக்கிய வியாபாரச் சந்தை ஆக்கியதோ, அந்தப் பண்புகள் அவர்களின் தேசிய வாழ்வில் இருக்கும்வரை அவர்களின் சிம்மாசனத்தை அசைக்க முடியாது என்பதை இந்தியாவில் வாழ்கின்ற ஆங்கிலேயர்கள் மறந்துவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது. இந்தக் குணங்கள் ஆங்கிலேயரிடம் இருக்கும்வரை ஆயிரக்கணக்கான இந்திய சாம்ராஜ்யங்கள் போனாலும், ஆயிரக்கணக்கான சாம்ராஜ்யங்களை அவர்கள் சம்பாதித்துவிடுவார்கள். ஆனால் இந்தக் குணங்களின் வேகம் குறையுமானால், வெறும் ‘கௌரவத்தால்’ மட்டும் ஒரு சாம்ராஜ்யத்தை ஆள முடியுமா?
சீன, இந்திய நாகரீகங்கள் வளராமல் இருந்து வந்திருப்பதற்கு ஒரு காரணம் அவர்களின் பயங்கர வறுமைதான். சாதாரண இந்து அல்லது சாதாரண சீனன் பயங்கர வறுமை நிலையிலேயே நாள்தோறும் உழல்வதால் வேறு எதையும் நினைப்பதற்கும்கூட அவனுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.
எப்படியாயினும் மையக் கருத்து இதுதான்: நம் நாட்டின் வீழ்ச்சி என்கிறார்களே, அது இந்த தர்மத்தின் வீழ்ச்சியே. முக்தி நெறியை நாடு முழுவதும் பின்பற்றுமானால் அது நல்லதுதான். ஆனால் அது நடக்காதே! போகமில்லாமல் தியாகம் இல்லை. முதலில் அனுபவி, பிறகு தியாகம் வரும். இல்லாமல், திடீரென்று ஒருநாள் நாடு முழுவதும் சேர்ந்து துறவிகளாகிவிட்டால் இங்கும் இல்லை, அங்கும் இல்லை என்றாகிவிடும். பௌத்த மடங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லட்சம் புத்த பிட்சுக்கள் வாழத் தொடங்கியபோதுதான் நாட்டின் அழிவிற்கான விதை ஊன்றப்பட்டது. பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், சமணர்கள் இவர்களுக்கெல்லாம் இது ஒரு பிரமை:துறவு ஒன்றே எல்லோருக்கும் நியதி, சட்டம். இது மாபெரும் தவறு. கல்வி, பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள் எல்லாமே இனம், தனிநபர், இயல்பு இவற்றுக்கேற்ப வேறுபடவே செய்யும். பலவந்தமாக ஒரே நெறியை அனைவரிடமும் திணிப்பதால் என்ன நன்மை வரும்?
‘முக்தியைப்போல் சிறந்ததாக வேறு என்ன உள்ளது? அனைவரும் முக்திப் பாதையில் செல்லுங்கள்’ என்றார்கள் பௌத்தர்கள். இது எப்போதாவது நடக்கக் கூடியதா, சொல்லுங்கள். ‘நீ இல்லறத்தில் இருப்பவன். அதுபோன்ற விஷயங்கள் உனக்கு அதிகமாகத் தேவையில்லை . எனவே சுவதர்ம வழியில் (உனக்கென்று வரையறுக்கப்பட்டுள்ள கடமை) செல்’ என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுதான் சரி. ஓர் அடிகூட தாண்ட முடியாது, இந்த லட்சணத்தில் ஒரே தாவலில் இலங்கையை அடைவதாம்! பயனுடைய பேச்சா இது? இரண்டு பேருக்குச் சாப்பாடு போட முடியவில்லை , ஓரிருவர் சேர்ந்து பொதுநலத்திற்காக ஒரு காரியம் செய்ய முடியவில்லை , இந்த லட்சணத் தில் முக்தியைத் தேடி ஓடுகிறீர்கள். ‘முக்தி, தர்மத்தை விட மிகவும் உயர்ந்ததுதான், ஆனாலும் முதலில் தர்மத்தைச் செய்து முடிக்க வேண்டும்’ என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த விஷயத்தில்தான் பௌத்தர்கள் முடிந்த அளவு எல்லாவற்றையும் குழப்பிவிட்டனர்.
அஹிம்சை உயர்ந்தது, பகைமை கூடாது-பெரிய விஷயம்தான். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சாஸ்திரங்களோ, ‘நீ இல்லறத்தான். உன் கன்னத்தில் ஒருவன் ஓர் அடி அடித்தால் நீ பத்து அடி திருப்பிக் கொடுக்காமல் இருந்தால் நீ பாவம் செய்த வனாகிறாய்’ என்கின்றன. ‘உன்னைக் கொல்ல வருபவன் பிராமணனாக இருந்தாலும் அவனைக் கொல்வது பாவமாகாது’ என்கிறார் மனு.’ இது உண்மை . இதை மறக்கக் கூடாது. வீரர்களே உலகை அனுபவிக்கின்றனர் – வீரத்தை வெளிப்படுத்து, சாம தான பேததண்ட’ வழிகளில் நீதியை நிலைநாட்டு, உலகை அனுபவி, அப்போதுதான் நீ தர்மவான். விளக்குமாற்றால் அடிஉதை பட்டும் எந்த எதிர்ப்புமின்றி அவமானச் சின்னங்களாக வாழ்ந்தால் இந்த உலக வாழ்க்கையும் நரகமாகிவிடும், மேலுலக வாழ்க்கையும் அவ்வாறே.
நமது சாஸ்திரங்கள் இப்படித்தான் கூறுகின்றன. நண்பனே சுவதர்மத்தைச் செய்- இதுதான் உண்மை , உண்மை, தலைசிறந்த உண்மை. அநியாயம் செய்யாதே, கொடுமை செய்யாதே, முடிந்த அளவு பிறருக்கு நல்லது செய். இல்லறத்தான் அநியாயத்திற்குத் தலைவணங்குவது பாவம், அதை எதிர்த்து நீதிக்காகப் போராட முயல வேண்டும். மிகுந்த ஊக்கத்துடன் அவன் பணம் சம்பாதிக்க வேண்டும், மனைவிமக்களைக் காப்பதுடன் பிறரையும் காக்க வேண்டும்; முடிந்த அளவு பரோபகாரம் செய்ய வேண்டும். இதைச் செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் என்ன மனிதர்கள்? இல்லறத்தானாக இருப்பதற்கே தகுதியில்லை, இதில் ‘முக்தி’ வேறா?
தர்மம் நம்மைச் செயல்படுமாறு தூண்டுகிறது என்று ஏற்கனவே கண்டோம். தர்ம நெறியில் நிற்பவன் எப்போதும் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும். வேதங்களில் கர்மத்தை வற்புறுத்தாத பகுதிகள் வேதங் களே அல்ல என்பது சில மீமாம்சகர்களின் கருத்துஆம்னாயஸ்ய க்ரியார்தத்வாத் ஆனர்தக்யம் ஆததர் தானாம் (-வேதங்களில் கர்மத்தைப்பற்றிப் பேசாத பகுதிகள் குறிக்கோள் இல்லாதவை).
‘ஓங்கார த்யானே ஸர்வார்த்த ஸித்தி:’ (ஓம் என்னும் மந்திரத்தைத் தியானிப்பதால் எல்லாவற்றை யும் அடையலாம்), ‘ஹரிநாமே ஸர்வ பாப நாச:’ (ஹரிநாமத்தை ஜபிப்பதால் எல்லா பாவங்களும் அகல்கின்றன), ‘சரணாகதேர் ஸர்வாப்தி:’ (இறைவ னிடம் சரணடைந்தவன் எல்லாம் கிடைக்கப் பெறு கிறான்)–சாஸ்திரங்களும் மகான்களும் கூறுகின்ற இவையெல்லாம் உண்மை, சந்தேகம் இல்லை. ஆனால் லட்சோபலட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் ஓங்கார தியானத்தில்தான் ஆழ்ந்திருக்கின்றனர்; ஹரி நாம பக்திப் பரவசத்தில் மூழ்குகின்றனர்; ‘எம்பெரு மானே, உனது திருவுள்ளம்போல் நடக்கட்டும்’ என் றெல்லாம் கதறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன கிடைத்து விட்டது? சுத்த பூஜ்யம். ஏன்? யாருடைய தியானம் உண்மையானதாக இருக்கிறதோ, பேரிடியின் தடுக்க முடியாத ஆற்றலுடன் யாரால் ஹரிநாமத்தைச் சொல்ல முடியுமோ, யார் உண்மையிலேயே இறைவனிடம் சரணடைய முடியுமோ, யார் கர்மத்தின் மூலம் தூய மனம் பெற்றுள்ளானோ, அதாவது யார் தர்மநெறியில் நிற்கிறானோ அவனுக்கே இந்தப் பலன்கள் கிடைக்கும்.
ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலின் வெளிப்பாட்டு மையமாக உள்ளான். நமது முன்வினைப் பயனால் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த ஆற்றலுடனேயே நாம் ஒவ்வொருவரும் பிறந் துள்ளோம். இந்த ஆற்றல் முழுவதும் செலவழித்து முடிக்கப்படாமல் யாரால் செயல்படாமல் இருக்க முடியும்? அதுவரை இன்பதுன்ப அனுபவங்களை யாரால் தடுக்க முடியும்? ஆனால் துன்ப அனுபவங் களைவிட இன்ப அனுபவங்கள் நல்லதுதானே! தீமை செய்வதைவிட நன்மை செய்வது உயர்வல்லவா? ‘நன்மை, தீமை இரண்டும் உள்ளது, அவற்றுள் நன்மை செய்வது நல்லது’ என்கிறார் ராம்பிரசாதர்.
இப்போது எது நல்லது? முக்தியை நாடுபவனுக்கு நல்லது ஒன்று, தர்மத்தை நாடுபவனுக்கு நல்லது இன்னொன்று. கீதையைத் தந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அதில் இந்தப் பேருண்மையை விளக்குகிறார். இந்த உண்மையில்தான் இந்து மதம் கூறும் வர்ணாசிரம தர்மம், சுவதர்மம் எல்லாம் நிலைபெற்றுள்ளன–
அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச|
நிர்மமோ நிரஹங்கார: ஸமதுக்க ஸுக: க்ஷமீ || -கீதை 12. 13
[- வெறுப்பற்றவன், எல்லோரிடமும் நட்பும் இரக்கமும் உள்ளவன், ‘நான், எனது’ என்னும் உணர்ச்சி களிலிருந்து விடுபட்டவன், சுகம், துக்கம் இரண்டையும் சமமாகப் பார்ப்பவன், மன்னிக்கும் இயல்புடையவன்.]
–இவை போன்றவை முக்தியை நாடுபவனிடம் இருக்க வேண்டியவை.
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்வய்யுப்பத்யதே |
க்ஷத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப|| -கீதை 2. 3
[-ஓ பார்த்தா, எதிரிகளை வாட்டுபவனே, பேடித்தனத்திற்கு ஆளாகாதே, இந்தத் தயக்கம் உன் தகுதிக்குப் பொருந்தாது. இந்த அற்பமான மனத்தளர்வை விட்டு எழுந்திரு.]
தஸ்மாத்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ
ஜித்வா சத்ரூன் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம் |
மயைவைதே நிஹதா: பூர்வமேவம்
நிமித்த மாத்ரம் பவ ஸவ்யஸாசின் || -கீதை 11. 33
[-எனவே எழுந்து நில், புகழைப் பெறு, எதிரிகளை வென்று இணையற்ற அரசை அனுபவி. உண்மையில், இவர்கள் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; ஓ அர்ஜுனா, நீ வெறும் கருவியாக மட்டும் இரு.]
இத்தகைய நிலையில் விழ இருந்தபோதுதான் பகவான் அவனுக்குக் கீதையில் இவற்றையெல்லாம் விளக்கி னார். இறைவனின் திருவாயிலிருந்து வெளிப்பட்ட முதல் வார்த்தைகளைக் கேளுங்கள்: ‘க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த’ [ -அர்ஜுனா, பேடித் தனத்திற்கு ஆளாகாதே]. பிறகு ‘தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யசோலபஸ்வ’-(எனவே எழுந்து நில். புகழைப் பெறுசி என்கிறார்கள். சமணர்கள், பௌத்தர்கள் போன்றோரின் பிடியில் சிக்கி நாமும் தமோ குணத்தில் மூழ்கிவிட்டோம். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு முழுவதும் ஹரி நாமத்தைக் கூறுகிறார்கள், பிரார்த்தனை செய்கிறார்கள்; இறைவன் என்னவோ எதையும் கேட்டதாகத் தெரியவில்லை. எப்படிக் கேட்பார்? முட்டாள்களின் முறையீடுகளை மனிதனே கேட்க மாட்டான், கடவுள் எப்படி கேட்பார்? தற்போது நாம் செய்யக்கூடியது பகவான் கூறியதுபோல் நடப்பதுதான்: ‘அர்ஜுனா, பேடித்தனத்திற்கு ஆளாகாதே! எழுந்து நில். புகழைத் தரும் செயலைச் செய்.’