8. எவ்வாறு இஸ்லாமிய மற்றும் புத்த மதத்தின் க்ஷத்திரியர்கள் வலிமையுடையவர்களாக ஆனார்கள்?
புத்த மதத்தின் வளர்ச்சியுடன் புரோகிதர்களின் ஆதிக்கம் அழிந்தது, அரசர்களின் ஆதிக்கம் ஓங்கியது. பௌத்தப் புரோகிதர்கள் உலகைத் துறந்தவர்கள், மடங்களில் வசிப்பவர்கள், உலக விவகாரங்களில் ஈடுபடாதவர்கள். ‘சாபமிடுவேன், மாய ஆயுதங்களால் தாக்குவேன்’ என்றெல்லாம் பயமுறுத்தி அரசர்களைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள அவர்கள் விரும்ப வில்லை ; அவர்களுக்கு அந்த ஆசையும் கிடையாது. அப்படித் துளி ஆசை இருந்திருந்தாலும், அதை நிறை வேற்றுவது முடியாத காரியமாகிவிட்டது. ஏனெனில் பௌத்த மதம் ஆஹுதிகளை உண்ணும் தேவர்களின் சிம்மாசனங்களை எல்லாம் ஆட்டி, அவர்களைத் தேவலோகத்திலிருந்து கீழே இறக்கிவிட்டது. பிரம்மன், இந்திரன் இவர்கள் நிலையைவிட புத்தரின் நிலை மிகவும் உயர்ந்துவிட்டது. மனித தேவரான புத்தரின் காலடியில் வீழ்ந்து வணங்க பிரம்மனும் இந்திரனும் போட்டியிடுகிறார்கள். இந்தப் புத்த நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய முடியும்; இந்த வாழ்க்கையிலேயே எல்லோரும் அடையலாம். தேவர்கள் வீழ்ச்சியுற்றதால் அவர்கள் ஆதரித்த புரோகிதர்களின் மேன்மையும் போய்விட்டது.
ஆகவே அரச அதிகாரம் என்னும் வேள்விக் குதிரையின் கடிவாளம் அதை இறுகப் பிடித்திருந்த புரோகிதர்களின் கையில் இப்போது இல்லை. அந்தக் குதிரை இப்போது சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம். இந்தக் காலத்தில் அதிகாரத்தின் மையமாக விளங்கியவர்கள் சாமகீதத்தை இசைத்துக்கொண்டு, யஜுர் வேதத்தின்படி யாகங்களைச் செய்துவந்த புரோகிதர்கள் அல்ல; தனித்தனியாகச் சிறிய சுதந்திரப் பகுதிகளை ஆண்டுகொண்டிருந்த க்ஷத்திரிய குல அரசர்களும் அல்ல; ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் வரையிலும், ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரையிலும் இந்தியா முழுவதையும் ஆண்ட சக்கரவர்த்திகளிடம் அது இருந்தது. இந்தக் காலத்தின் தலைவர்கள் விசுவாமித்திரரோ வசிஷ்டரோ அல்ல; சந்திர குப்தர், தர்ம அசோகர் போன்ற சக்கரவர்த்திகள். பௌத்தர் காலத்தில் இந்தியாவை மகோன்னதமாக ஆண்ட சக்கரவர்த்திகள்போல் வேறு எந்தக் காலத்திலும் யாரும் இல்லை . இந்தக் காலத்தின் இறுதியில்தான் தற்கால இந்து மதம் தோன்றியது, ராஜபுத்திரர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.
பௌத்தமதம் அழியத்தொடங்கி, ராஜபுத்திரர்களின் ஆதிக்கம் ஓங்கியபோது, இந்திய அரசின் செங்கோல் அதை ஆண்ட பெரிய சக்தியிலிருந்து பிடுங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான துண்டுகளாக உடைக்கப்பட்டுச் சிறிய சக்தியற்ற கைகளால் ஏந்தப்பட்டது. இந்த வேளையில் புரோகிதர்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியதுமுன்னைப்போல் எதிர்ப்பாளர்களாக அல்ல, அரசின் ஆதரவாளர்களாக.
வைதீக காலத்தில் தொடங்கி, சமண பௌத்தப் புரட்சி காலத்தில் உச்சகட்டத்தை அடைந்ததான புரோகிதர் மற்றும் அரசர்களுக்கு இடையே நடந்துவந்த போராட்டம் இப்போது நின்றுவிட்டது. இப்பொழுது இந்த இரண்டு பெரிய சக்திகளும் நட்புடன் இருக்கத் தொடங்கின. ஆனால் முன்னைப்போல் அரசர்களிடம் க்ஷத்திரிய வீரமும் இல்லை , பிராமணர்களிடம் ஆன்மீக ஒளியும் இல்லை. ஒன்றுசேர்ந்த இந்த இரண்டு சக்தி களும் தத்தம் நலன்களைக் காப்பாற்றிக் கொண்ட துடன், தங்கள் பொது எதிரியான பௌத்தர்களை அழிப்பதிலும், இதுபோன்ற வேறு காரியங்களிலும் தங்கள் சக்தியை வீணாக்கினர். மக்களைப் பிழிந் தெடுப்பது, எதிரிகளைப் பழிவாங்குதல், பிறர் பொருளை அழித்தல் போன்ற தீய செயல்களில் மூழ்கியிருந்ததன் காரணமாக இவர்களால் பழைய அரசர்களைப்போல் ராஜசூயம் போன்ற யாகங்களைச் செய்ய இயலவில்லை, செய்வதற்கான அவர்களது முயற்சிகள் கேலிக்கூத்தாயின. இறுதியில் அவர்களைச் சுற்றி முதுகெலும்பற்ற முகஸ்துதிக்காரர்களும், வெறும் புகழ் பாடுபவர்களும் கூடினர். முடிவற்ற சடங்கு களிலும் மந்திரங்களிலும் மூழ்கியிருந்த அவர்கள் மேற்கிலிருந்து வந்த முகமதிய படையெடுப்பாளர் களுக்கு எளிதில் இரையானார்கள்.
வைதீக காலம் முதலே மன்னர் மற்றும் புரோகிதர்களுக்கிடையே இருந்துவந்த போராட்டத்தை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது தெய்வீக சக்தியால், தாம் வாழ்ந்த நாளிலேயே தற்காலிகமாகவாவது நிறுத்தி வைத்தார்.
சமண, பௌத்தப் புரட்சிகளின்போது பிராமண சக்தி, கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது, அல்லது ஆற்றல் மிக்க அந்த மதங்களால் அடக்கப்பட்டதன் காரணமாக மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. Iஹிரகுலா’ போன்றோர் இந்தியாமீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்தில் ராஜபுத்திர சக்தி வலுப்பட்டது. அப்போது பிராமண சக்தி தான் இழந்த பெருமையை அடைய மீண்டும் ஒருமுறை இறுதியாக முயன்றது. அந்த முயற்சியில் அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த காட்டுமிராண்டிப் படை களிடம் தன்னை அடிமைப்படுத்திக் கொண்டு, அவர் களுடைய தயவைப் பெறுவதற்காக அவர்களுடைய கொடிய பழக்கவழக்கங்களை நாட்டில் புகுத்தினர். முட்டாள்களான அந்தக் காட்டுமிராண்டிகளை ஏமாற்றுவதற்காகப் புதிய மந்திரங்களைக் கொண்ட ரகசியச் சடங்குகளையெல்லாம் புகுத்தினர். விளைவு? தங்கள் கல்வி, வலிமை, ஆசாரங்கள் அனைத்தையும் இழந்தனர்; இவ்வாறு பாரத நாட்டைக் கொடூரமான, வெறுக்கத்தக்க, காட்டுமிராண்டிப் பழக்கங்கள் கொண்ட ஒரு நாடாக மாற்றினர். இந்தத் தீய வழக்கங்களின் காரணமாக அவர்கள் சாரம் சிறிது இல்லாத பலவீனர்கள் ஆயினர். மேற்கிலிருந்து முகமதியரின் படையெடுப்பு என்னும் புயற்காற்று பட்டதும் தூள்தூளாகச் சிதறியது பிராமண சக்தி. அது மீண்டும் எழுமா என்பதை யார் அறிவார்கள்!
முகமதியர் ஆட்சியில் அந்தப் புரோகித சக்தி மீண்டும் எழுவது முடியாத காரியம். முகமதுநபியே புரோகித சக்தியை எதிர்த்தவர், அவர்களது ஆதிக்கத்தை அழிப்பதற்காக இயன்றவரை சட்டங்களை ஏற்படுத்தியவர். முகமதியர் ஆட்சியில் அரசன்தான் முக்கிய புரோகிதர்; அவன்தான் மதகுரு. சக்கரவர்த்தியாக ஆன முகமதியன் உலகம் முழுவதற்கும் தலைவனாக வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருப்பான். முகமதியனுக்கு யூதர்களோ கிறிஸ்தவர்களோ அவ்வளவு வெறுப்பிற்கு உரியவர்கள் அல்ல; நம்பிக்கையற்றவர்கள் என்று வேண்டுமானால் நினைப்பான். ஆனால் அவனுக்கு இந்து அப்படியல்ல. அவன் கருத்துப்படி இந்து உருவ வழிபாடு செய்பவன், வெறுக்கத்தக்க ‘காஃபிர்’, உடனே கொல்லப்பட வேண்டியவன், முடிவில் மீளா நரகத்தில் தள்ளப்பட வேண்டியவன். ஆகவே இந்த காஃபிர்களின் வழிகாட்டிகளான புரோகிதர்களுக்கு முகமதிய மன்னன் காட்டக்கூடிய பரிவெல்லாம் அவர்கள் உயிர்வாழ அனுமதிப்பது மட்டும்தான். யாராவது ஒரு முகமதிய மன்னனின் மத ஈடுபாடு சற்று அதிகமாகிவிட்டால் போதும்; அவன் காஃபிர்களின் ரத்தவேள்வி நடத்திவிடுவான்!
ஒரு பக்கம் க்ஷத்திரிய சக்தி இப்போது வேறுபட்ட மதத்தையும் வேறுபட்ட வழக்கங்களையும் பின்பற்று கின்ற அரசரிடம் நிலைத்துள்ளது. மறுபக்கம், சமு தாயத்தை அடக்கி ஆண்டுவந்த பிராமண சக்தி ஒரேயடி யாக வீழ்ச்சி அடைந்தது. மனு முதலியவர்களின் தர்ம சாஸ்திரங்கள் இருந்த இடத்தில் குரானின் நீதிநெறிகள் அமர்ந்துகொண்டன. சம்ஸ்கிருத மொழிக்குப் பதிலாக பாரசீக, அரேபிய மொழிகள் இடம் பெறலாயின. வெல்லப்பட்ட, வெறுக்கப்பட்ட இந்துவின் மத எல்லைக்குள் மட்டும் அடங்கிக் கிடந்தது சம்ஸ்கிருத மொழி; எனவே அது ஆதரவற்ற புரோகிதர்களின் கைகளில் சிக்கி, நிலையற்ற வாழ்வைப் பெறலாயிற்று. பிராமண சக்தியின் சின்னமாக எஞ்சிய புரோகிதர்களும், அவ்வளவு முக்கியமற்ற குடும்பக் கிரியைகள் மற்றும் திருமணம் முதலியவற்றை நடத்துவதையே வாழ்விற்கு வழியாகப் பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அதுவும், ஆள்பவர்களான முகமதியர்களின் இரக்கம் அனுமதித்த அளவே செய்ய முடிந்தது.
வைதீக காலத்திலும் அதையடுத்த காலங்களிலும் பிராமண சக்தியால் மிதித்து நசுக்கப்பட்டதால் க்ஷத்திரிய சக்தி தலைதூக்க முடியாமல் இருந்தது. புத்த மதப் புரட்சிக்குப் பிறகு பிராமண சக்தியின் வீழ்ச்சி யுடன்கூடவே இந்தியாவில் க்ஷத்திரிய சக்தி உச்ச நிலையை அடைந்ததை நாம் காண்டோம். பௌத்தப் பேரரசின் வீழ்ச்சிக்கும் முகமதியப் பேரரசு நிலைபெற்றதற்கும் இடையிலுள்ள காலத்தில் ராஜபுத்திரர்மூலமாக க்ஷத்திரிய சக்தி தலையெடுக்க முயன்று வீணானதையும் நாம் பார்த்தோம். புத்துயிர் பெற்ற புரோகித சக்தியின் முயற்சிதான் இதற்கும் காரணமாகியது.
புரோகிதர்களின் ஆதிக்கத்தைக் காலின்கீழ் நசுக்கியதன் காரணமாகவே மௌரியர், குப்தர், ஆந்திரர், க்ஷத்ரபர்’ போன்ற வம்சங்களின் இழந்த பெருமைகளை மீண்டும் பேரளவிற்கு நிலைநாட்ட முகமதிய மன்னனுக்குச் சாத்தியமாயிற்று.
குமாரிலர் முதல் சங்கரர், ராமானுஜர் போன்றோர் நிலைநாட்ட முயன்றதும், ராஜபுத்திரர்களின் வாள் பலத்தால் காக்கப்பட்டதும், சமணர்களும் பௌத்தர் களும் அழிந்தவுடனே மீண்டும் தன்னை வெளிப் படுத்திக் கொள்ள விரும்பியதுமான புரோகித சக்தி முகமதிய ஆட்சியில் ஒரேயடியாக தூக்கத்தில் ஆழ்ந்து விட்டது. இந்தக் காலத்தில் சண்டை அரசனுக்கும் புரோகிதர்களுக்கும் அல்ல, அரசனுக்கும் அரசனுக்கும் தான். இந்தக் காலத்தின் இறுதிக்கட்டத்தில் இந்து சக்தி மீண்டும் மராட்டியர்கள் மற்றும் சீக்கியர்களின்மூலம் இந்து மதத்திற்குப் புத்துயிர் அளிப்பதில் சிறிது வெற்றி பெற்றது.