25. பவஹாரி பாபா

பவஹாரி பாபா

மதத்தின் மற்றெல்லா அம்சங்களையும் தற்காலிகமாகத் தள்ளி வைத்து, துன்புறுகின்ற உலகிற்கு உதவுகின்ற பெரும் பணிக்கு முதலிடம் கொடுத்தவர் புத்தர். தனிமனிதத்துவம் என்ற சுயநலப் பற்று வெறும் சூன்யமே என்ற உண்மையை உணர, அவர் பல ஆண்டுகளை ஆன்ம ஆராய்ச்சியில் கழிக்க வேண்டியிருந்தது. தன்னலம் இல்லாமலும் தளர்வு இல்லாமலும் பணி செய்வதில் அவரைவிட வேறு ஒருவரை நம் வளம் மிகுந்த கற்பனையிலும் காண முடியாது. அதேவேளையில் பொருட்களின் உட் பொருளை அறிவதற்காகவும் அவரைவிட அதிகமாகப் பாடு பட்டவர் யார்? பணி எவ்வளவு பெரிதோ, அதைச் செய்து முடிக்க வேண்டுமானால் அதன் உண்மையை உணர்ந்ததால் பெற்றுள்ள ஆற்றலும் அவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பது எல்லா காலத்திற்கும் பொருந்துகின்ற உண்மை. முன்பே நன்றாகச் சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டத்திற்கான செயல் முறை விளக்கங்களை வகுப்பதற்கு ஆழ்ந்த சிந்தனை தேவை யில்லை. மனத்தை ஒருமுகப்படுத்தி, ஆழ்ந்து சிந்தித்தவையே பெரிய தூண்டுதல்கள் ஆகின்றன. சிறிய முயற்சிகளை விளக்குவதற்கு ஒரு கோட்பாடே போதும். சிறு அலைகளை உண்டாக்கும் உந்து சக்தி பேரலைகளை எழுப்பும் சக்தி யிலிருந்து கண்டிப்பாக வேறுபட்டதே; என்றாலும் அந்தப் பெரிய அலைகளைத் தோற்றுவித்த ஆற்றலின் ஒரு சிறு அம்சமே சிறு அலையையும் தோற்றுவித்தது.

உண்மைகள், வெளிப்படையான உண்மைகள் கடுமையாக, அச்சம் தருபவையாக இருக்கலாம். உண்மை , கலப்பற்ற உண்மை நெஞ்சின் ஒவ்வொரு நாளத்தையும் வெடித்துவிடச் செய்யத் தக்கதாக இருக்கலாம்; தன்னலமற்ற உண்மையான நோக்கம் கைகூடுவதற்கு உடலுறுப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாக இழக்க நேரலாம்; தாழ்ந்த செயல்நிலையில் இருக்கின்ற மனம் பெரிய செயல் அலைகளை உண்டாக்குமுன் இந்த உண்மையை, சுயநலமற்ற நோக்கத்தைப் பெற வேண்டும், அடைய வேண்டும், காண வேண்டும். நுட்பம் என்பது காலம் என்னும் பாதையில் உருண்டு உருண்டு ஓடிக்கொண்டிருக்கும்போது, அதைச் சுற்றிலும் தூலம் என்பது படிந்துபடிந்து வெளிப்படுகிறது; சாத்தியக்கூறாக இருந்தது செயல்முறையாகிறது; காரணம் காரியமாகிறது; எண்ணம் தூலச் செயலாகிறது.

காரணத்தை ஆயிரம் சூழ்நிலைகள் தடுத்து நின்றாலும் உடனேயோ தாமதித்தோ அது காரியமாக வெளிப்படவே செய்யும். தோன்றா நிலையிலுள்ள எண்ணம் இப்போது எவ்வளவுதான் வலிமை இழந்திருந்தாலும் தூல உலகில் செய் லாக உருப்பெறுகின்ற ஒரு சிறந்த நாள் அதற்கு உண்டு. நமக்குப் புலனின்பத்தை வழங்கிவருகின்ற ஒவ்வொன்றையும் அளந்தறிய நாம் கொள்கின்ற அளவுகோல் சரியானதல்ல. தாழ்ந்த நிலையில் இருக்கும் அளவிற்கு மிருகத்தின் புலனின்பம் அதிகமாக இருக்கிறது; அதிகமான புலனின்பத்தில் அது வாழ் கிறது. மிருக நிலையில் இருக்கின்ற மனிதனைப் புலனின்ப வாழ்க்கையிலிருந்து எடுத்து, அவனுக்கு, புற வசதிகளைப் பெருக்கத் துணை செய்யாமல் உயர்ந்த எண்ணங்களை ஊட்டி யும், அந்த உயர்ந்த நிலைகளின்மீது அவன் ஆவல் கொள்ளு மாறு செய்தும் அவனை உயர்த்துகின்ற ஆற்றலே நாகரீகம், உண்மையான நாகரீகம்.

மனிதன் இதனைத் தன் இயல்புணர்ச்சியால் அறிந்திருக் கிறான். அது இப்படித்தான் இருக்கும் என்று எல்லா சூழ்நிலை களிலும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்திருக்காமல் போகலாம், சிந்தனையாலான வாழ்வைப்பற்றி அவன் வேறுபட்ட பல கருத்துக்களுடன் இருக்கலாம், ஆனாலும் அந்த ஆற்றல் அவனிடம் இருக்கவே செய்கிறது. எவ்வளவு எதிர்ப்புச் சூழ் நிலைகள் இருந்தாலும் முதலிடம் பெற அது முயன்று கொண்டே இருக்கும்; மருத்துவனையோ, மந்திரவாதியையோ, புரோகிதனையோ, விஞ்ஞானப் பேராசிரியனையோ பயபக்தி யுடன் வணங்குமாறு செய்துகொண்டே இருக்கும். ஒருவன் எவ்வளவு தூரம் புலன்களிலிருந்து விடுபட்டு உயர்நிலையில் வாழும் ஆற்றல் பெற்றிருக்கிறானோ, எண்ணங்களாகிய தூய ஆக்சிஜனை அவனது நுரையீரல் எவ்வளவு உட்கொள்ள முடியுமோ, அந்த உயர்ந்த சிந்தனை நிலையில் எவ்வளவு காலம் இருக்க முடியுமோ, அந்த அளவைக் கொண்டுதான் அவனது ஆன்மீக முன்னேற்றத்தை அளவிட முடியும்.

பண்புடைய மக்கள், வாழ்க்கையின் தேவைகளைத் தவிர வாழ்க்கையின் சுகங்களுக்காகத் தங்கள் நேரத்தைச் செலவிட அருவருப்புக் கொள்கிறார்கள்; அவசியமான காரியங்களைச் செய்வதிலும் கூட அவற்றைத் தொடங்கும்போது இருந்த ஆர்வமும் போகப்போகப் படிப்படியாகக் குறைந்துகொண்டே போகிறது. இது அனைவரும் அறிந்த உண்மை .

உல்லாசப் பொருட்களும் மக்களின் கருத்திற்கும் குறிக் கோளுக்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவர் களிடையே சிந்தனை வாழ்க்கை ஏறக்குறைய எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் இந்தப் பாகுபாடுகள் அமைந் திருக்கின்றன-இது கலை.

‘இந்தப் பிரபஞ்சத்திற்கு வருகின்ற நெருப்பு ஒவ்வோர் உருவத்திலும் தோன்றினாலும் மேலும் பலவாக விளங்கிக் கொண்டிருக்கிறது.’ ஆம், அது மேலும் எண்ணற்ற பலவாக விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நமது சுகத்திற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வதற்காக எல்லையற்ற கருத்தின் ஒரு பகுதியை-அது ஒரு மிகச்சிறிய பகுதிதான்ஜடப்பொருள் தளத்திற்கு இறங்கும்படிச் செய்யலாம். ஆனால் அந்த எல்லையற்ற கருத்தின் பிற பகுதிகளை விரும்பியவாறு பயன்படுத்த முடியாது. மிகமிக நுண்ணிய பொருள் நம் காட்சிக்குப் புலப்படாமல், நழுவி மறைந்துகொண்டே இருக் கிறது; அதைக் கீழே கொண்டு வருவதற்கான நமது முயற்சி களைக் கண்டு அது சிரிக்கிறது. நாம் அதை நாடிச் செல்ல வேண்டுமே தவிர அது நம்மை நாடி வரும் என்பது அறவே இல்லை. உயர்ந்த தளத்திலுள்ள அழகை நுகரவும், அதன் ஒளியில் குளித்தெழவும், பிரபஞ்சத்திற்குக் காரண-உயிரான ஒரு பொருளுடன் தன் உயிரும் ஒன்றி நிற்கவும் வேண்டும் என்றால் அந்த உயர்ந்த தளத்திற்கு மனிதன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

விந்தை உலகங்களின் கதவுகளைத் திறந்து காட்டுவது அறிவு. அந்த அறிவே மிருகத்தைத் தேவனாக்குகிறது. ‘எந்தப் பொருளை அறிந்தால் பிற எல்லாவற்றையும் அறிய முடியுமோ’, அதை நாம் அறியும்படிச் செய்வதும் அந்த அறிவுதான். (எதன் துடிப்பால் எல்லா விஞ்ஞானங்களும் உயிர் பெறுகின்றனவோ அந்த மத விஞ்ஞானமான, அறிவின் உயிர்நாடியான அறிவே) நிச்சயமாக மிக உயர்ந்த அறிவு, எந்தக் குறையுமற்ற நிறைவான முழு வாழ்க்கையை மனிதன் வாழச் செய்ய அது ஒன்றினாலேயே முடியும். மதத்தை ‘மிக உயர்ந்த விஞ்ஞானம்’ என்று போற்றிய நாடு நற்பேறு பெறுவதாக!

ஒரு கொள்கை செயல்வடிவம் பெறும்போது, அந்த கொள்கை முழுவதும் அதில் பிரதிபலித்து நிற்கும்படிச் செய்வது கடினம்தான் என்றாலும் லட்சியம் ஒருபோதும் அழிந்து விடுவதில்லை. லட்சியத்தை நாம் அறிவோடு தெளி வோடு நாடிக்கொண்டிருந்தாலும் சரி, அதைநோக்கி ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தாலும் சரி அதை ஒருபோதும் மறக்காமல் இருப்பது நமது கடமை. கண்களுக்கு எதிரே கைகளை வைத்துக்கொண்டு உண்மையின் ஒளியை மறைக்க எவ்வளவு முயன்றாலும், அது எப்போதும் நம் கண்முன் காட்சி அளித்த வண்ணமே இருக்கிறது.

அனுபவ வாழ்க்கை, லட்சியத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாம் தத்துவம் பேசினாலும், தினசரி வாழ்க்கை யின் கடினமான கடமைகளைச் செய்து கொண்டிருந்தாலும் நமது வாழ்க்கை முழுவதையும் ஊடுருவி நிற்பது லட்சியமே. லட்சியத்தின் ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டு, ஒவ்வொரு சிறு துளைமூலமும் காற்றுத் துவாரம் மூலமும் நேராகவோ, வளைந்தோ, அலைபோலவோ பாய்ந்து கொண்டிருக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ, நாம் ஒவ்வொரு செயலையும் அந்த ஒளியில்தான் செய்தாக வேண்டும். ஒவ்வொரு பொருளும் அதனால்தான் அழகாகவோ விகாரமாகவோ மாறுகிறது. நாம் எவ்வாறு இருக்கிறோமோ, இனி எவ்வாறு ஆகப் போகிறோமோ அதை அந்த லட்சியம்தான் நிர்ணயிக்கிறது. லட்சியத்தின் ஆற்றல் நம்மை ஒரு போர்வைபோல் மூடிக் கொண்டிருக்கிறது. நம் இன்பங்களிலும் துன்பங்களிலும், நாம் செய்யும் உயர்ந்த செயல்களிலும் தாழ்ந்த செயல்களிலும், நமது புண்ணியச் செயல்களிலும் பாவச் செயல்களிலும் நாம் அதன் ஆற்றலை அனுபவித்து வருகிறோம்.

லட்சியத்தை அடைவதற்கான செயல்முறையைவிட லட்சியத்திற்கு இத்தகைய ஆற்றல் இருந்தாலும், அந்த லட்சியத்தை அமைத்துத் தருவதில் செயல்முறையின் ஆற்றலும் அதற்குக் குறைந்ததல்ல. லட்சியத்தின் உண்மையைச் செயல் முறையால்தான் அறிகிறோம். லட்சியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே, செயல்முறை என்பது எங்கேயோ எப்படியோ இருக் கிறது என்பதை நிலைநாட்டுகிறது. லட்சியம் பெரியதாக இருக்கலாம், ஆனாலும் அது செயல்முறைத் துணுக்குகளின் தொகுப்புதான். தொகுக்கப்பட்ட, பொதுமைப்படுத்தப்பட்ட, செயல்முறைத் துணுக்குகளின் வடிவமே லட்சியம். லட்சியத்தின் ஆற்றல் செயல்முறையில் இருக்கிறது. செயல்முறையிலும் அதன் வாயிலாகவும்தான் லட்சியம் நம்மீது செயல்படுகிறது. நமது புலன்களால் அறியக்கூடிய வகையில் நாம் புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் செயல்முறையின் வழியாகவே லட்சியம் கீழே கொண்டுவரப்படுகிறது. லட்சியத்தை அடை வதற்கு வேண்டிய படிகளாகச் செயல்முறை பயன்படுகிறது. லட்சியத்தை அடைவோம் என்ற நம்பிக்கையைச் செயல் முறையே நமக்கு ஊட்டுகிறது; செயல்படுவதற்கு வேண்டிய உறுதியைத் தருகிறது.

லட்சியத்தின் சிறப்பியல்புகளைத் தேன்சொட்டும் சொற் களால் விளக்கிப் பேசுபவர்களைவிட, அந்த லட்சியத்தை நேர்த்தி மிகுந்த பல்வேறு தத்துவங்களாக விரித்துக் காட்டுபவர் களைவிட, சொந்த வாழ்க்கையில் அந்த லட்சியத்தை வெளிப் படுத்துபவனே அதிக ஆற்றல் படைத்தவன். தத்துவ முறைகளை மதத்துடன் இணைத்து, அனுபவ வாழ்க்கைக்கு ஏற்றதாக அவற்றைக் கீழே செயல்முறைக்குக் கொண்டுவந்து, அதனால் பெரியதோ சிறியதோ ஆன வெற்றிபெற முயல்கின்ற ஒரு கூட்டத்தினர் தோன்றாமல் அந்தத் தத்துவ முறைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை; மிஞ்சிப்போனால் அவை அறிவுக்கு விருந்தாகின்ற சில வார்த்தை ஜாலங்களாக இருக்கலாம். நம்பிக்கை ஊட்டுவதற்குரிய எந்த அம்சமும் இல்லாத தத்துவ முறைகளைக்கூட, யாரேனும் சிலர் கடைப் பிடித்து ஓரளவு நடைமுறையில் கொண்டுவந்தவுடன் பெருந்திரளான மக்கள் அவற்றை ஆதரித்திருக்கிறார்கள். அதே வேளையில் தெளிவும் விளக்கமும் மிகுந்த நெறிகள்கூட அவற்றைச் செயல்முறையில் பின்பற்றுபவர்கள் இல்லாததால் வாடி அழிந்துபோக நேர்ந்துள்ளது.

சிந்தனையைப் போலவே செயல்களும் அமையுமாறு வாழ பலரால் முடிவதில்லை ; பேறுபெற்ற சிலரால் அது முடியும். நம்முள் பலரும் ஆழ்ந்து சிந்திக்கும்போது செயல்திறனை இழக்கிறோம்; அவ்வாறே அதிகமாகச் செயல் புரியும்போது, ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடுகிறோம். இதனால் தான் மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் பெரும்பாலானோர் தங்கள் சிறந்த லட்சியங்களைச் செயல்முறைப் படுத்துவதை எதிர்காலத்திடம் விட வேண்டியிருந்தது. செயல்திறன் மிக்க வர்கள் அந்தச் சிந்தனைகளைச் செயல்படுத்திப் பரப்ப முன் வரும் வரையில், அவை காத்திருக்கவே வேண்டும்.

இதை எழுதிக் கொண்டிருக்கின்ற வேளையில் என் மனக் கண்முன் காட்சி ஒன்று தோன்றுகிறது: அர்ஜுனனுடைய தேரோட்டியான கண்ணன் இரு படைகளுக்கும் நடுவே தேரில் நிற்கிறான், இடது கையால் வேகமிக்கக் குதிரைகளை அடக்கிய வண்ணம் இருக்கிறான், கவசம் அணிந்து ஒரு போர்வீரனாக உள்ளான் அவன், அவனது கழுகுப் பார்வை அந்த மாபெரும் படைகளின் அணிவகுப்பு முழுவதன்மீதும் படிந்து செல்கிறது, இரு தரப்புப் படைகளின் ஒவ்வோர் அம்சத்தையும் மிகவும் இயல்பாக எடையிடுகிறான் அவன். அதேவேளையில், திகைத்து நிற்கின்ற அர்ஜுனனுக்காக செயலின் அற்புத ரகசியத்தை அவன் பேசுகிறான்: ‘செயல்களின் ஊடே ஓய்வு பெறவும் ஓய்வின் ஊடே செயல்புரியவும் யாரால் முடியுமோ, அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி, அவனே எல்லா செயல் களையும் செய்ய வல்லவன்.’ (கீதை 4. 18)

இதுவே முழுமையான லட்சியம். இதை அடைவது மிகச் சிலரே. எதையும் உள்ளது உள்ளபடி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு அம்சங்கள் சிறப்பாக இருக்கும்; அவற்றை ஒருங்கிணைப்பதிலேயே நாம் திருப்திகொள்ள வேண்டியதுதான்.

ஆழ்ந்த சிந்தனைச் செல்வர்கள், பிறருக்கு உதவி புரிகின்ற பெரும் செயல் வீரர்கள், தன்னை அறிந்த ஆற்றல் மிக்க ஆன்ம ஞானிகள், அமைதியும் அடக்கமும் நிறைந்தவர்கள் என்று பலதரத்தினர் மதத்துறையில் உள்ளார்கள். வியக்கத் தக்க பணிவும் தன்னை அறிந்த அனுபவ நிறைவும் பெற்ற ஒரு மகானைப் பற்றிய கட்டுரை இது:

காசியை அடுத்துள்ள குசி என்னும் இடத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் பிராமண குலத்தில் பிறந்தவர் அந்த மகான். அவரைப் பிற்காலத்தில் பவஹாரி பாபா என்று வழங்கினர். அவர் சிறுவராக இருந்தபோது, தம் தாய்மாமனுடன் தங்கிக் கல்வி பயிலக் காசிபூர் சென்றார்.

இந்துத் தபஸ்விகளைத் தற்காலத்தில் சன்னியாசிகள், யோகிகள், வைராகிகள், பந்திகள் என்று நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். சங்கராச்சாரியரின் அத் வைதத்தைப் பின்பற்றுபவர்கள் சன்னியாசிகள். யோகிகள் அத்வைதத்தையே பின்பற்றினாலும் பல்வேறு யோகப் பயிற்சி களில் சிறந்தவர்கள். துவைதிகளான ராமானுஜர் முதலா னோரின் சீடர்கள் வைராகிகள். பந்திகள் அத்வைதம், துவைதம் இரண்டையும் பின்பற்றுபவர்கள், இவர்கள் முகமதியர் காலத்தில் தோன்றினர். பவஹாரி பாபாவின் மாமா ராமானுஜரின் சம்பிரதாயமான ஸ்ரீசம்பிரதாயத்தைச் சார்ந்தவர். அவர் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி, அதாவது ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருக்கும் விரதம் பூண்டவர். காசிபூருக்கு வடக்கே ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்தில் கங்கைக் கரை யில் அவருக்குச் சிறிது நிலம் இருந்தது. அவர் அங்கு வாழ்ந்து வந்தார்; மருமகன்கள் பலருள் பவஹாரி பாபாவை அழைத்துச் சென்று தம் சொத்திற்கும் பதவிக்கும் வாரிசாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரைத் தத்தெடுத்துக் கொண்டார்.

பவஹாரி பாபாவின் இந்தக் கால வாழ்வைப்பற்றி அதிக மாக எதுவும் தெரியவில்லை . பிற்காலத்தில் அவரைப் பலரும் அறியும் வண்ணம் செய்த சிறப்பியல்புகளின் எந்த அறிகுறியும் அப்போது அவரிடம் தோன்றவில்லை. இலக்கணத்திலும், நியாய சாஸ்திரத்திலும், அவரது நெறியான துவைதத்திலும் சிறந்த மாணவராக இருந்தார் என்று மட்டும் தெரிய வருகிறது. சிலவேளைகளில் சக மாணவர்களைக் கேலி செய்து மகிழ்வதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

பண்டைய இந்திய மாணவர்களைப்போல் கடமைகளை ஒழுங்காகவும் முறையாகவும் செய்வதில் அந்த எதிர்கால மகானின் இளமை நாட்கள் கழிந்தன. பொதுவாக மாணவர்கள் காட்டுவதைவிட அதிக ஆர்வத்துடன் அவர் பாடங்களைப் படித்தார். பிற மொழிகளைக் கற்பதில் வியக்கத்தக்க திறமை பெற்றிருந்தார். வெளிப்படையான, மகிழ்ச்சி நிரம்பிய அவரது மாணவ வாழ்க்கையில் மேலே குறிப்பிட்டவை தவிர, அபூர்வ மான அசாதாரணமான தியாகத்தை விளைவிக்கக் கூடிய மகத்தான மனவுறுதி அவருக்கு ஏற்படும் என்பதை முன் கூட்டியே உணர்த்தவல்ல எதுவுமே இருக்கவில்லை.

வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தை முதன்முதலாக அந்த மாணவன் உணரும்படி ஏதோ ஒன்று நிகழ்ந்தது. அது, அது வரையில் புத்தகத்தில் ஊன்றியிருந்த கண்களை உயர்த்தி, தம் மனத்தின் அடிவானத்தை ஆராய்ந்து பார்க்கவும், வெறும் நூலறிவுடன் திருப்தி அடையாமல் மதத்தில் உள்ள உண்மை யான ஒன்றின்மீது பேரார்வம் கொள்ளவும் செய்தது அவரது மாமா இறந்துபோனார். அந்த இளைஞரின் இளமனத்தில் தோன்றிய அன்பு முழுவதும் எந்த முகத்தின்மீது செலுத்தப் பட்டிருந்ததோ அந்த முகம் மறைந்து போயிற்று. துடிப் பான அவர் பெரும் துயரக் கடலில் ஆழ்ந்தார். எனினும் மறைந்துபோன ஒன்று இருந்த இடத்தில் மாற்றமில்லாமல் நிலைத்து நிற்கின்ற காட்சி ஒன்றை நிலைநாட்ட உறுதி கொண்டார்.

இந்தியாவில் ஒவ்வொன்றிற்கும் எங்களுக்கு ஒரு குரு வேண்டும். சாஸ்திரங்கள் வெறும் குறிப்புகளே என்று இந்துக் களாகிய நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு கலையின், ஒவ்வொரு விஞ்ஞானத்தின், அனைத்திற்கும் மேலாக மதத்தின் உயிரோட்டமான ரகசியங்கள் குரு-சீடர் பரம்பரை வழியாகவே வர வேண்டும். எந்தத் தடையும் இல்லாமல் அக வாழ்வின் மர்மங்களை அறிய விரும்புவோர், இந்தியாவில், நினைத்தற்கரிய காலத்திலிருந்தே யாரும் நாடாத தனி இடங்களுக்குப் போவது உண்டு. ‘பெரிய மகான் ஒருவர் தங்கியிருக்கின்ற இடம்’ என்ற செய்தியால் புனிதம் பெற்று விளங்காத ஒரு காடோ, ஒரு குன்றோ, புண்ணியத் தலமோ இன்றும் அங்கே இருப்பது அரிது.

‘ஓடுகின்ற நீரே தூயது; எங்கும் தங்காத துறவியே தூயவர்’ என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள், தங்கள் வாழ்வில் பெரும் பகுதியைப் பல்வேறு கோயில்களைத் தரிசிப்பதில் செலவிட்டு, தங்களிடம் மாசு சேராதபடி காத்துக் கொள்வார்கள்; அதே வேளையில் இந்தப் பயணங்களின்மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்கள் மதத்தையும் கொண்டு செல்கின்றனர். உலகத்தைத் துறக்கின்ற அனைவரும் இந்தியாவின் நான்கு மூலைகளில் விளங்கும் நான்கு புண்ணியத் தலங்களுக்கு அவசியம் போய்வர வேண்டும் என்று கருதப்படுகிறது.

இவ்வாறெல்லாம் நம் இளம் பிரம்மச்சாரி ஆழமாக சிந்தித்துப் பார்த்திருக்கலாம்; ஆனால் இவற்றில் அவரிடம் முதன்மையாக விளங்கியது ஞானப் பசியே என்பது உறுதி. அவரது பயண விவரங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை . அவரது நெறியின் சாஸ்திரங்கள் அதிகம் உள்ளதான தென்னிந்திய மொழிகளில் அவர் பெற்றிருந்த அறிவைக் கொண்டும், சைதன்யரின் நெறியைச் சார்ந்த வைணவர்கள் கையாண்டுவந்த பழைய வங்காளமொழியில் அவர் பெற்றிருந்த நிறைந்த அனுபவத்தைக் கொண்டும், அவர் தென்னிந்தியா விலும் வங்காளத்திலும் தங்கியிருந்த காலம் அதிகம் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

அவரது இளம்பருவ நண்பர்கள் அவர் போயிருந்த ஓர் இடத்தைப் பெரிதும் வலியுறுத்துகிறார்கள். அது கத்தியவாரில் உள்ள கிர்னார் மலை. அதன் உச்சியில் செயல்முறை யோகத்தின் ரகசியங்கள் அவருக்கு முதன்முதலாக உபதேசிக்கப்பட்டன என்று அவர்கள் கூறுகிறார்கள். புத்த மதத்தினருக்கு மிகப் புனிதமானது அந்த மலை. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப் பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப் பட்ட பெரிய நினைவுத்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டு களாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை; கிர்னார் மலைத்தொடரைச் சேர்ந்த சிறு குன்றுகள் என்று நெடுங்கால மாக மக்கள் அவற்றைக் கருதிவந்தார்கள். எந்தப் பழைய மதத்தின் புதிய தோற்றமாகப் புத்த மதம் கருதப்படுகிறதோ, அந்தப் பழைய மதம் இன்னும் அந்த மலையைப் புண்ணியத்தல மாகக் கருதி வருகிறது. அதன் வழி வந்ததே உலகத்தையே வெற்றி கொண்டதான புத்த மதம். விந்தை என்னவென்றால் இந்த புத்த மதம் இன்றைய இந்து மதத்தில் சங்கமிப்பது வரை யில் மகோன்னதமான கட்டிடக்கலை எதிலும் ஈடுபடவில்லை. மாபெரும் அவதூத குருவாகிய தத்தாத்திரேயர் தங்கியிருந்ததால் இந்துக்கள் கிர்னார் மலையைப் புனிதமாகப் போற்றுகிறார்கள். புண்ணியம் நிறைந்தவர்கள், சித்திபெற்ற பெரிய யோகிகளை அதன் உச்சியில் இப்போதும் காணலாம் என்று கருதப்படுகிறது.

நமது இளம் பிரம்மச்சாரியாகிய பவஹாரி பாபாவின் வாழ்க்கையின் அடுத்த திருப்பம் காசிக்கு அருகே கங்கைக் கரையில் ஏற்பட்டது. அங்கே குகை ஒன்றில் வாழ்ந்து யோகம் பயின்ற வந்த ஒரு சன்னியாசியின் சீடர் ஆனார் அவர். காசிபூருக்கு அருகே கங்கைக் கரையில் தோண்டப்பட்ட நீண்ட குகையில் பவஹாரி பாபா வசித்து வந்ததும் மேலே குறிப் பிட்ட யோகியிடம் பெற்ற பயிற்சியால்தான். தட்பவெப்ப நிலையில் அதிகமாக மாறுபடாத, ஓசைகள் வந்து மனத்தை அலைக்கழிக்காத குகைகளிலும் வேறு இடங்களிலும் வசிப்பது நல்லது என்று யோகிகள் வலியுறுத்துகிறார்கள். காசியில் ஒரு சன்னியாசியிடம் அதே காலத்தில் அவர் அத்வைதத்தைக் கற்று வந்தார் என்றும் தெரிகிறது.

யாத்திரையிலும் கல்வியிலும் பயிற்சியிலும் பல ஆண்டு களைக் கழித்த பிறகு, தாம் வளர்க்கப்பட்ட அந்த இடத்திற்கே வந்து சேர்ந்தார் அவர். பண்டைய முனிவர் ஒருவர் தன் சீடனின் முகத்தில் எந்த ஒளியைக் கண்டு, ‘குழந்தாய், பிரம்மத் தின் மகிமை இன்று உன் முகத்தில் சுடர்விடுகிறது’ என்று கூறினாரோ, அதே ஒளியை, பவஹாரி பாபாவின் முகத்திலும், அவரது மாமா சாகாதிருந்தால் கண்டிருப்பார். ஆனால் பாபா வீட்டிற்கு வரும்போது வரவேற்றவர்கள் அவரது இளம் பருவ நண்பர்கள். அவர்களுள் பலர் சாதாரண எண்ணமும் ஓயாத செயல்பாடுகளும் நிறைந்த இந்த உலகில் ஈடுபட்டிருப்பவர்கள் அல்லது ஈடுபடப் போகிறவர்கள்.

பள்ளிப் பருவ நண்பரும், விளையாட்டுத் தோழருமான பாபாவின் குணத்திலும் நடத்தையிலும் புரியாத ஒரு மாற்றத்தை அவர்கள் கண்டார்கள். தாங்களும் அவரைப் போலாக வேண்டும் என்ற எண்ணத்தையோ அல்லது அவரைப்போல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தையோ அது அவர்களிடம் தூண்டவில்லை. உலகாயத எண்ணமும் தொல்லையும் நிறைந்த இந்த உலகத்தைக் கடந்து மேலே சென்றவரிடம் தோன்றுகின்ற மர்மமே அந்த மாற்றம். அவர்கள் அந்த மாற்றத்திற்கு இயல்பாகவே மரியாதை செய்தார்கள்; அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

நாளுக்குநாள் அந்த மகானின் சிறப்பியல்புகள் வளர்ந்து வந்தன. பூமிக்குள் ஒரு குகையை ஏற்படுத்தி குரு இருந்தது போலவே, தாமும் பலமணி நேரம் குகையில் வாழத் தொடங் கினார். பிறகு தீவிரமான சாதனைகளில் ஈடுபடலானார். தமது அன்புக் கடவுளாகிய ராமச்சந்திர மூர்த்தியைப் பாடி வழி படுவார். சமையல்கலையில் தேர்ந்தவரான அவர் நல்ல உணவு வகைகளைச் சமைத்து நிவேதனம் செய்த பின்னர் அதை நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்தளிப்பார். இரவு வரும் வரையில் அவர்களின் வசதிகளைக் கவனிப்பார். இவ்வாறு தமது சிறிய ஆசிரமத்தில் நாள் முழுவதும் உழைப்பார். எல்லோரும் உறங்கியதும் கங்கை நதியை நீந்திக் கடந்து அக்கரையை அடைவார். அங்கு இரவு முழுவதையும் சாதனை களிலும் பிரார்த்தனையிலும் கழிப்பார். பின்னர் பொழுது விடியுமுன் திரும்பிவந்து நண்பர்களை எழுப்புவார். பின்னர் ‘பிறரை வழிபடுவது’ என்று நாங்கள் இந்தியாவில் சொல்கின்ற மக்கள் சேவையில் ஈடுபடுவார்.

இதிலெல்லாம் அவரது உணவு நாள்தோறும் குறைந்து கொண்டே வந்து, முடிவில் ஒருநாள் ஒரு கைப்பிடி வேப்பிலை அல்லது சில மிளகாய்கள் என்ற அளவில் சுருங்கியது என்று தெரிய வருகிறது. நாட்கள் செல்லச்செல்ல நதியின் அக்கரை யிலுள்ள காட்டிற்கு இரவில் போய்வந்ததை விட்டுவிட்டுத் தம் குகையிலேயே அதிகமாகத் தங்கியிருக்கலானார். தியானத்தில் நாட்கணக்கில், மாதக்கணக்கில் ஆழ்ந்திருப்பார் என்றும், பிறகு வெளியே வருவார் என்றும் சொல்கிறார்கள். அவ்வாறு ஆழ்ந்திருந்த நெடுங்காலத்தில் அவர் எதை உண்டு வாழ்ந்தார் என்பது யாருக்கும் தெரியாது. எனவே அவரைப் பவஹாரி பாபா, ‘காற்றை உணவாகக் கொள்கின்ற முனிவர்’ என்று அனைவரும் அழைக்கலாயினர்.

ஆயுள் முழுவதும் அவர் அந்த இடத்தைவிட்டு அகன்றதே இல்லை. ஒருசமயம் அவர் தம் குகைக்குள்ளேயே நீண்டகாலம் தங்கிவிட்டார். அவர் இறந்துபோனார் என்று மக்கள் எண்ணி னார்கள், ஆனால் நெடுநாட்கள் சென்ற பின்னர் அவர் வெளியே வந்து ஏராளம் சாதுக்களுக்கு விருந்தளித்தார்.

தியானத்தில் ஆழ்ந்திருக்காதபோது அவர் தமது குகைக்கு மேலே இருந்த அறையில் இருப்பார். அப்போது தம்மைக் காண வருபவர்களை உபசரிப்பார். அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. இயல்பான தமது பெருங்குணத்தாலும் ஆன்மீகப் பண்பாலும் எல்லோரது அன்பையும் பெற்றுத் திகழ்ந்தவரும், காசிபூரில் அபினி துறையைச் சேர்ந்த ராய் ககன்சந்திர ராய் பகதூர் என்பவரே எனக்கு அந்த மகானை அறிமுகம் செய்து வைத்தவர்.

இந்தியாவிலுள்ள பலரைப் போலவே பாபாவின் வாழ் விலும் குறிப்பிடத்தக்க, பிறரைத் தூண்டத்தக்க புற நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. பேச்சின்றி, வாழ்க்கையாலேயே போதித்தல் என்ற இந்திய லட்சியத்திற்கு அவரது வாழ்க்கை மற்றுமோர் உதாரணமாகத் திகழ்ந்தது. பக்குவம் பெற்றவர்களிடம் மட்டுமே அவரது வாழ்வு விளைவுகளை ஏற்படுத்தியது. இத்தகையோர் பிறருக்குப் போதிப்பதை அறவே வெறுக்கிறார்கள்; ஏனெனில் உண்மையை உணர உதவி செய்பவை சொற்கள் அல்ல, அகப் பயிற்சி ஒன்றே என்பதை நன்றாக அறிந்தவர்கள் இவர்கள். சமுதாயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்பதல்ல, இந்த வாழ்விலேயே உண்மையைத் தீவிரமாக நாடு வதும் அடைவதும்தான் மதம் என்பதே இவர்களின் கருத்து. குறிப்பிட்ட ஒரு காலம், மற்றொரு காலத்தைவிட ஆற்றல் வாய்ந்தது என்பதை இவர்கள் மறுக்கிறார்கள். எல்லையற்ற காலப் பெருவெளியில் ஒவ்வொரு கணமும் சமமானவை, எனவே மத உண்மைகளை மரணத்திற்குப் பிறகு காணலாம் என்று காத்திருக்காமல், இப்போதே இங்கேயே காண வேண்டும் என்று இவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

உலகத்திற்கு உதவி செய்வதற்காக ஏன் அந்த மகான் குகையை விட்டு வெளிவரவில்லை என்று இந்த எழுத்தாளர் அவரையே கேட்க நேர்ந்தது. அவர் தமது இயல்பான பணிவுட னும் உவகையுடனும் அளித்த விடையைக் கீழே காணலாம்

‘ஒரு தீயவன் குற்றம் ஒன்றில் அகப்பட்டுக் கொண்டான். தண்டனையாக அவனது மூக்கை அறுத்துவிட்டனர். மூக் கில்லாத தன் முகத்தை வெளியே காட்ட வெட்கப்பட்டு தன்னையே வெறுக்கத் தொடங்கிய அவன் காட்டிற்குள் ஓடி விட்டான். யாராவது அருகே வருவதைக் காணும்போதெல்லாம் தரையில் ஒரு புலித் தோலை விரித்து, அதில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைப்போல் பாசாங்கு செய்வான். இந்தச் செயல், மக்கள் அவனை நெருங்காமல் செய்வதற்குப் பதிலாகக் கும்பல்கும்பலாக அவர்களை அவனிடம் ஈர்த்தது. காட்டு வாழ்க்கையால் தன் வாழ்க்கை வசதியாக அமைந்துவிட்டதை அவன் கண்டான். பல ஆண்டுகள் கடந்தன. எப்போதும் மௌனமாக தியானத்தில் இருக்கும் அந்த அபூர்வ மகானின் வாயால் ஏதாவது ஒரு போதனையைப் பெறப் பலர் விரும்பி னார்கள். அவரது நெறியில் தீட்சை பெறுவதற்கு ஓர் இளைஞன் மிகவும் ஆர்வம் கொண்டான். மேலும் அங்கே தங்கியிருந்தால் தனது கீர்த்திக்குப் பங்கம் ஏற்படும் என்றெண்ணிய அந்த மகான் தன் மௌனத்தைக் கலைத்து, அந்த இளைஞனிடம் மறுநாள் வரும்போது ஒரு கூரான கத்தியைக் கொண்டு வரும் படிக் கூறினான். தன் வாழ்வின் லட்சியம் வெகுவிரைவில் நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியுடன் இளைஞன் மறு நாள் அதிகாலையிலேயே கத்தியுடன் வந்து சேர்ந்தான். மூக்கிழந்த மகான் அவனைக் காட்டினுள் ஒரு தனித்த இடத் திற்கு அழைத்துச் சென்று, தன் கையில் கத்தியை எடுத்து ஒரே வெட்டாக அவனது மூக்கை வெட்டினான். பிறகு அமைதியாக, “இளைஞனே, இதுவே நான் பெற்ற தீட்சை. அதையே நான் உனக்குத் தந்தேன். வேளை வரும்போது நீயும் மற்றவர்களுக்கு இதனைக் கொடு” என்றான். வெட்கத்தால் குன்றிப்போனான் அந்த இளைஞன். இந்த அற்புத தீட்சை ரகசியத்தை அவனால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. குருவின் ஆணையைத் தன்னால் இயன்ற அளவு அவன் நிறைவேற்றி வந்தான். மூக்கறுந்த மகான்களின் தனிப் பிரிவு நாடெங்கும் பரவலாயிற்று. அத்தகைய ஒரு பிரிவை நானும் தோற்றுவிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?’

மற்றொரு நாள் அவர் தன்னுள் சற்று ஆழ்ந்திருந்தார். அப்போது கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்: ‘உடம்பால் செய்கின்ற உதவி ஒன்றுதான் உதவி என்று நினைக் கிறாயா? உடம்பின் செயல்பாடு எதுவும் இல்லாமல் ஒரு மனம் வேறு மனங்களுக்கு உதவ முடியாதா என்ன?’

ஆரம்ப சாதகர்கள் செய்ய வேண்டியவையான ஹோமத் தீயில் நெய் சொரிதல், ஸ்ரீரகுநாதரின் திருவுருவை வழிபடுதல் போன்ற கர்மங்களை மகா யோகியாகிய அவர் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டபோது அவர் சொன்னார்: ‘சொந்த நன்மைக்காகவே ஒவ்வொருவரும் கர்மத்தில் ஈடுபடுவதாக ஏன் கருதுகிறாய்? பிறரது நன்மைக்காக ஒருவர் கர்மம் செய்ய முடியாதா?’

ஒரு நாள் அவரது ஆசிரமத்தில் திருடன் ஒருவன் நுழைந்து விட்டான். ஆனால் அவரைக் கண்டதும் பயந்துபோய், தான் திருடிய பொருட்களின் மூட்டையை அப்படியே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான். அவரோ அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு, அந்தத் திருடனைத் தொடர்ந்து பல மைல் தூரம் ஓடி அவனைப் பிடித்தார். பிறகு அவனது காலடியில் அந்த மூட்டையை வைத்து, குவித்த கைகளோடும் கண்களில் கண்ணீ ருடனும் அது அவனது சொத்து என்றும், அதை அவன் எடுத்தபோது தலையிட்டதற்குத் தம்மை மன்னிக்க வேண்டும் என்றும், மீண்டும் அவன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

ஒருசமயம் அவரை நல்ல பாம்பு கடித்துவிட்டது. அவர் இறந்துவிட்டார் என்றே அனைவரும் கருதினர். சில மணி நேரம் ஆனபிறகு அவர் உயிர்பிழைத்துவிட்டார். அதைப்பற்றி அவரது நண்பர்கள் கேட்டபோது, ‘என் அன்புக் கடவுளின் தூதனே அந்த நல்லபாம்பு’ என்று மட்டுமே அவர் பதில் சொன்னார். நம்பகமானவர்களிடமிருந்து நாங்கள் கேள்விப் பட்டவை இவை.

அவரது மென்மை, அடக்கம், அன்பு போன்ற இவற்றை அறிந்திருக்கின்ற நாம், மேலே கண்டதைத் தாராளமாக நம்ப லாம். எல்லா நோய்களும் அவரைப் பொறுத்தவரை அன்புக் காதலனின் தூதர்களே. அவற்றால் பெருந்துன்பம் அடைந்த போதும் வேறு பெயரால் அவற்றைக் குறிப்பிட அவரது மனம் பொறுக்கவில்லை. ஆரவாரமற்ற அன்பும் மென்மையும் கொண்ட இந்த மகானின் பெயர் மக்களிடையே பரவ ஆரம்பித்தது. பக்கத்திலுள்ள கிராமங்களின் வழியாகப் பயணம் செய்தவர்கள் அந்த அற்புத மகானிடம் அவர்கள் கொண்டிருந்த மரியாதையை அறிய முடியும். பிற்காலத்தில் அவர் யார் முன் னாலும் வருவதில்லை. குகையை விட்டு வெளியே இருந்தபோது, மூடிய கதவிற்கு உள்ளே இருந்தே மக்களுடன் பேசுவார். ஹோமத் தீயில் நெய் முதலியவற்றைச் சொரிவதால் எழும் புகையோ, வழிபாட்டிற்கான பொருட்களை ஆயத்தம் செய்வ தால் எழும் ஓசையோதான் அவர் குகையை விட்டு மேலே வந்திருப்பதை உணர்த்தும்.

எவ்வளவு சிறியதாயினும் சரி, தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் முழு ஈடுபாட்டுடன் இருப்பது அவரது சிறப்பியல்பு களுள் ஒன்று. அவர் ராமனை வழிபடும்போது எவ்வளவு கருத்துடனும் கவனத்துடனும் இருப்பாரோ, அவ்வளவு கவனமாக ஒரு செப்புக் குடத்தைக் கழுவிச் சுத்தம் செய்வார். ‘லட்சியத்தின்மீது நாம் கொள்கின்ற அதே அளவு அன்பையும் ஈடுபாட்டையும் அதற்கான வழியிலும் செலுத்த வேண்டும்’ என்று செயலின் ரகசியத்தைப்பற்றி அவர் கூறினார். அதற்குச் சிறந்த உதாரணமாகவும் அவரே விளங்கினார். –

வேதனையையோ துன்பத்தையோ பொறுத்துக் கொள்தல் அல்லது தம்மையே இழிவு செய்துகொள்தல் என்பதல்ல அவரது பணிவு. அவரது பணிவு அவரது அனுபூதியிலிருந்து இயல்பாகப் பிறந்தது. ஒருமுறை அவர் அதனை அருமையாக விளக்கினார்: ‘ஓ மன்னா, தனக்கென எதுவும் இல்லாதவர்களின் செல்வம் கடவுளே, ஆம், எதுவும் இல்லாதவர்கள், எல்லா வற்றையும் துறந்தவர்கள், சொந்த உயிரைகூடத் தனக்கென வைத்திருக்காதவர்கள்.’ அவர் நேராக ஒருபோதும் போதித்த தில்லை ; ஒரு குருவின் பதவியை ஏற்று, மற்றவரைவிட உயர்ந்த நிலையில் அவர் இருக்க விரும்பாததே அதற்குக் காரணம். ஆனால் ஊற்றுக்கண்ணை ஒருமுறை தொட்டுவிட்டால் எல்லையற்ற ஞானம் என்ற ஊற்றுநீர் பொங்கிப் பெருகும். என்றாலும் விடைகளை அவர் ஒருபோதும் நேராகக் கூறு வதில்லை .

சற்று பருத்து உயர்ந்தது அவரது தோற்றம். அவருக்கு ஒரு கண்தான் உண்டு. தமது உண்மை வயதைவிட இளைஞராகவே அவர் தோன்றினார். நான் கேட்டவற்றுள் மிகமிக இனிமை யானது அவருடைய குரல். அவரது வாழ்வில் கடைசி பத்து அல்லது அதற்கு அதிகமான வருடங்கள் மனிதர்களின் பார்வை யில் சிறிதும் படாமல் ஒதுங்கி வாழ்ந்தார். சில உருளைக் கிழங்குகளும் வெண்ணெயும் கதவுக்குப் பின்னால் வைக்கப் படும்; சமாதி நிலையில் இல்லாத வேளைகளிலும், மேல் அறையில் வாழும்போதும் இரவு வேளைகளில் அவற்றை எடுத்துக்கொள்வார். குகைக்கு உள்ளே இருந்தபோது அவை கூட அவருக்குத் தேவையில்லை. யோக விஞ்ஞானத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், தூய்மை, பணிவு, அன்பு என்பவற்றின் ஒரு வாழும் உதாரணமாகவும் அமைதியாக அவரது வாழ்க்கை சென்றது.

நான் முன்பு கூறியவண்ணம், அவர் சமாதியை விட்டு வெளியேறுவதை உணர்த்துகின்ற புகை ஒரு நாள் தசையைச் சுடும்போது ஏற்படும் நாற்றத்தோடு வீசியது. சுற்றிலுமுள்ள மக்களால் என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த நாற்றம் தாங்க முடியாததாகி, புகையும் அளவில் பெருகி மேலே ஓங்கி எழுவதைக் கண்ட அவர்கள் கதவை உடைத்துத் திறந்தனர். அங்கே அந்த மகாயோகி ஹோமத் தீக்குக் கடைசி ஆஹுதியாகத் தம்மையே ஆக்கிக் கொண்டுவிட்டதைக் கண்டார்கள். எஞ்சியது ஒரு சாம்பல் குவியல் மட்டுமே.

‘மகான்களின் செயலை மூடர்கள் குறை கூறுகிறார்கள். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, அவர்களது செயல் களுக்கான காரணங்கள் சாதாரண மக்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்தவை” என்று காளிதாசர் கூறு வதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

அந்த மகான் தம் இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந் தார். மரணத்திற்குப் பிறகுகூட யாருக்கும் தொந்தரவு தர அவர் விரும்பவில்லை. எனவே ஆரியர் என்ற முறையில் செய்ய வேண்டிய இறுதித் தியாகத்தை அவர் தம் உடலுடனும் சொந்த நினைவுடனும் இருந்தபோதே செய்துகொண்டார். அவரை நான் நன்றாக அறிந்திருப்பதால்தான் இவ்வாறு துணிந்து கூறுகிறேன்.
மறைந்த அந்த மகானுக்கு நன்றி செலுத்தும் கடமை இந்த எழுத்தாளருக்கு உள்ளது. இதை எழுதத் தகுதியற்றவனாக இருந்தாலும், நான் நேசித்துத் தொண்டுகள் செய்த மாபெரும் ஆச்சாரியர்களுள் ஒருவரான பவஹாரி பாபாவின் நினைவிற் காக இதை அர்ப்பணிக்கிறேன்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 25. பவஹாரி பாபா