உன் வாழ்க்கை உன் கையில்!-17

17. பலவீனம் மரணத்திற்குச் சமானம்

இந்த உலகில் ஆகட்டும், வேறு எந்த உலகிலும் ஆகட்டும், அதில் பலவீனர்களுக்கு இடமில்லை . பலவீனம் அடிமைத்தனத்திற்கே இட்டுச் செல்கிறது. உடல் மற்றும் மன சம்பந்தமான எல்லா வகை துயரங்களும் பலவீனத்தாலேயே விளைகின்றன. பலவீனமே மரணம். நம்மைச் சுற்றி லட்சக்கணக்கான நுண்ணு யிர்கள் உள்ளன. ஆனால் உடல் அவற்றை உள்ளே அனுமதிக்க ஆயத்தமாக, பலவீன மாக இல்லாமல் அவை நமக்குத் துன்பம் தர முடியாது. துன்பந்தரும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றிக் கோடிக்கணக்காக மிதந்து கொண்டிருந்தாலும் என்ன? பொருட் படுத்த வேண்டாம். மனம் பலவீனம் அடைந்தாலன்றி, அவை நம்மை அணுகத் துணியாது; நம்மைப் பற்றிக்கொள்ளும் திறன் அவற்றிற்கு இருக்காது. இதுவே பேருண்மை. பலமே வாழ்வு, பலவீனமே மரணம். பலமே இன்பம். பலமே என்றென்றும் மரணமிலாப் பெருவாழ்வு. பலவீனமே ஓயாத சோர்வும் துயரமும். பலவீனமே மரணம்.

வேட்டையில் துரத்தப்படுகின்ற முயல்களைப்போல் நாமும் பயங்கர மானவற்றைக் கண்டு எப்படி ஓட்டம் பிடிக்கிறோம்! அந்த முயல்களைப் போலவே தலைகளை மறைந்துக் கொண்டு, நாம் பாதுகாப்பாக இருப்ப தாகவும் நினைக்கிறோம். பயங்கரமான அனைத்திலிருந்தும் உலகம் ஓடுவதைப் பாருங்கள். ஒருமுறை நான் காசியில் இருந்தபோது, ஒரு பக்கம் பெரிய குளமும் மறு பக்கம் உயர்ந்த சுவருமாக இருந்த ஒரு பாதை வழியாகப் போக வேண்டியிருந் தது. அங்கே குரங்குகள் ஏராளம். காசியி லுள்ள குரங்குகள் பெரியவை, சில வேளைகளில் பொல்லாதவை. தங்கள் பாதை வழியாக என்னைப் போகவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டன போலும்! கிரீச்சென்று கூச்சலிட்டபடியே என் காலின்மீது பாய்ந்தன. கூட்டமாக அவை என்னை நெருங்குவதைக் கண்ட நான் ஓடத் தொடங்கினேன். நான் ஓடஓட விடாமல் துரத்தி, தொடர்ந்து கடிக்க ஆரம்பித்தன. தப்ப முடியாதோ என்று தோன்றிற்று. அப்போது அங்கு வந்த ஒருவர் என்னைக் கூப்பிட்டு, ‘மிருகங் களை எதிர்த்து நில்லுங்கள்’ என்று கூறி னார். நான் திரும்பித் துணிவுடன் அவற்றை எதிர்த்து நின்றேன். அவ்வளவு தான், அந்தக் குரங்குங்கள் திரும்பி ஓடின.

நம் வாழ்வுக்கே இது ஒரு படிப் பினை. பயங்கரத்தை எதிர்கொள்ளுங்கள், தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். நாம் பயந்து ஓடவில்லையென்றால், அந்தக் குரங்குக் கூட்டம் போலவே, துன்பங்களும் ஓடிவிடும். சுதந்திரம் என்பது எப்போதாவது நமக்குக் கிடைக் கும் என்றால், அது இயற்கையை வெல் வதன்மூலமே தவிர, விலகி ஓடுவதால் அல்ல. கோழைகள் ஒருபோதும் வெற்றி கண்டதில்லை . பயம், துன்பம், அறியாமை இவை அகல வேண்டும் என்று நாம் விரும்பினால், அவற்றை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும்.

வலிமை, வலிமைதான் நமக்கு வாழ்க்கையில் மிகவும் தேவை. பாவம், துன்பம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவற்றின் ஒரே காரணம் பலவீனம்தான். பலவீனத்தால் அறியாமை ஏற்படுகிறது. அறியாமையால் துன்பம் விளைகிறது. அந்த வழிபாடு நமக்கு வலிமை தரும் அப்போது துன்பங்களைக் கண்டு சிரிப் போம், தீமையின் கொடுமைகளைக் கண்டு புன்முறுவல் பூப்போம், பயங்கரப் புலி யின் இயல்பின் பின்னாலும் ஆன்மா இருப் பதைக் காண்போம். இதுதான் பலன்.

என் வாலிப நண்பர்களே, வலிமை பெறுங்கள். இதுவே நான் உங்களுக்குக்
கூறும் அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப் பதைவிட கால்பந்தாடுவதன்மூலம் சொர்க் கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும். இவை தைரியமான வார்த்தைகள். இருப் பினும் இவற்றை நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன். பிரச்சினை எங்கு என்பது எனக்குத் தெரியும். எனக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. உங்கள் கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் வலிமை சேர்ந்தால் கீதையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் ரத்தத்தில் வேகம் இருந்தால் ஸ்ரீகிருஷ்ண ரின் மகத்தான ஆற்றலையும் மேதாவி லாசத்தையும் நீங்கள் இன்னும் சிறப்பாக அறிய முடியும். உங்கள் சொந்தக் கால் களில் நிமிர்ந்து நின்று, உங்களை மனிதன் என்று உணரும்போதுதான் நீங்கள் உப நிடதங்களையும் ஆன்மாவின் மகத்துவத் தையும் நன்றாக அறிந்து கொள்ள முடியும்.

உலகின் தீமைகளையும் பாவங்களை யும்பற்றிப் பேசாதீர்கள். உங்கள் கண் களுக்கு இன்னும் தீமை தெரிகிறதே என்பதற்காக அழுங்கள். இன்னும் எங்கும் பாவத்தையே பார்க்கின்ற நிலையில் இருக் கிறீர்களே என்பதை நினைத்து அழுங்கள்.

உலகத்திற்கு உதவி செய்ய விரும்பி னால், உலகத்தின் மீது பழிபோடாதீர்கள். உலகை இன்னும் பலவீனப்படுத்தாதீர்கள். பாவம், துன்பம் என்று நீங்கள் இங்கே காணும் எல்லாமே பலவீனத்தின் விளைவு களே அல்லாமல் வேறு என்ன? இத்த கைய உபதேசத்தால் உலகம் மேன்மேலும் பலவீனம்தான் அடைகிறது. தாங்கள் பாவிகள், பலவீனர்கள் என்றுதான் மனிதர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறார்கள். மிகவும் பலவீன மானவர்கள் முதல் எல்லோருமே மரண மிலாப் பெருநிலையின் பெருமைமிகு வாரிசுகள் என்றே அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். குழந்தைப் பருவத்தி லிருந்தே மனிதர்களின் மனத்தில் நல்ல ஆக்கபூர்வமான, உறுதியான, உதவுகின்ற எண்ணங்களே தோன்றட்டும். இப்படிப் பட்ட உறுதியான எண்ணங்களுக்கே உங்கள் மனத்தில் இடம் கொடுங்கள். உங்கள் சக்தியைப் பறித்து உங்களைப் பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இடமே கொடுக்காதீர்கள். ‘நானே பரம்பொருள், நானே பரம்பொருள்’ என்று உங்கள் மனத்திற்கு எப்போதும் சொல்லுங்கள். இரவுபகலாக உங்கள் மனத்தில் அந்த எண்ணம் ஒரு பாடலாக ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். மரணத்தின் தறுவாயில்கூட, ‘நானே பரம்பொருள் என்று முழங்குங்கள். அதுதான் உண்மை ; உலகின் எல்லையற்ற சக்தி உங்களுக்கே சொந்தமானது. உங்கள் மனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். உண்மையை அறியுங்கள், உண்மையையே கடைப் பிடியுங்கள். குறிக்கோள், தூரத்தில் இருக் கலாம். ஆனால், விழித்திருங்கள், எழுந் திருங்கள், லட்சியத்தை அடையும் வரை, நிற்காதீர்கள்.

பலவீனர்கள், அனைத்தையும் இழந்து தங்களைப் பலவீனமாக உணரும்போது, பணம் சம்பாதிப்பதற்காக எல்லாவிதமான மர்மங்களையும் கையாள்கிறார்கள்; ஜோதிடத்தையும் பிறவற்றையும் நாடுகிறார்கள்.

‘கோழையும் முட்டாளுமே விதி என்பான்’ என்கிறது சம்ஸ்கிருதப் பழ மொழி ஒன்று. ஆற்றல் மிக்கவனோ, ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்று கூறு வான். முதுமையை நெருங்குபவர்களே விதியைப்பற்றிப் பேசிக் கொண்டிருப் பார்கள். இளைஞர்கள் பொதுவாக ஜோதிடத்தை நாடுவதில்லை. ஒருவேளை நாம் கிரகங்களின் ஆற்றலுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கலாம், அதற்காக அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது, ‘நட்சத்திரங்களைக் கணக்கிட்டும், இவை போன்று வேறு தந்திரங்களைக் கையாண்டும் வயிறு வளர்ப்பவர்களைத் தவிர்க்க வேண்டும்’ என்கிறார் புத்தர். இதுவரை பிறந்த இந்துக் களுள் உயர்ந்தவர் புத்தர், உண்மையை உணர்ந்தே அவர் அவ்வாறு கூறியுள்ளார். நட்சத்திரங்கள் வரட்டும், அதனால் என்ன தீமை ஏற்படும்? ஒரு நட்சத்திரம் என் வாழ்க்கையைக் குலைத்துவிடும் என்றால் அந்த வாழ்க்கை சல்லிக்காசுக்கும் உத வாதது. ஜோதிடமும் பிற மர்மமானவை யும் பொதுவாக பலவீன மனத்தின் அறிகுறி. இத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தில் தலைதூக்கும்போது உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்; நல்ல உணவும் நல்ல ஓய்வும் கொள்ள வேண்டும்.

எனது போதனைகளுள் நான் முதலாவதாக வற்புறுத்துவது இதுவே: ஆன்ம பலவீனத்தையோ, மன பலவீனத் தையோ, உடல் பலவீனத்தையோ தரு கின்ற எதையும் உங்கள் கால் விரல் களாலும் தீண்டாதீர்கள்.

மனிதனில் உள்ள இயற்கை ஆற்றலின் வெளிப்பாடே மதம். அளவிலா ஆற்றல் விசை ஒன்று இந்தச் சிறு உடலுள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சுருள் விரிந்து கொண்டே இருக்கிறது. அது விரிய விரிய ஒன்றன்பின் ஒன்றாகப் பல உடல்களும் போதவில்லை , எனவே அந்த விசை இந்த உடல்களை எறிந்து விட்டு, உயர்ந்த உடல்களை எடுக்கிறது. இதுவே மனிதனின் வரலாறு, மதத்தின் வரலாறு, நாகரீகத்தின் வரலாறு, அல்லது முன் னேற்றத்தின் வரலாறு. கட்டுண்டு கிடக் கும் அரக்கனான புரோமீதியஸ் கட்டுக் களை அறுத்துக்கொண்டு வருகிறான். அது எப்போதும் ஆற்றலின் வெளிப்பாடு. ஜோதிடம் போன்ற விஷயங்களில் ஏதோ கடுகளவு உண்மை இருந்தாலும் அவற்றைப் புறக்கணித்தேயாக வேண்டும்.

புரோமீதியஸ்
கிரேக்கப் புராணத்தில் வருகின்ற ஒரு பாத்திரம். அவன் களிமண்ணால் மனிதனைச் செய்து, உயிர் கொடுப்பதற்காகச் சொர்க்கத்தி லிருந்து தீயைத் திருடிக் கொண்டுவந்தான். ஜீயஸ் என்னும் கடவுளர் தலைவன் அவனை ஒரு பாறாங்கல்லில் கட்டிவைத்து, அவனைக் கொத்தித் தின்னுமாறு ஒரு கழுகை ஏவினான். ஆனால் கழுகு கொத்திய பகுதி இரவில் மீண்டும் வளர்ந்துவிடும். ஹெர்குலிஸ் என்பவன் வந்து கழுகைக் கொன்று விடுவிக்கும்வரை புரோமீதியஸ் துன்பப்பட்டான்.