உன் வாழ்க்கை உன் கையில்!-26

26. நாம் சுதந்திரமானவர்கள்

பிற உடல்களிலும் நீ இருப்பதை உணரக் கற்றுக்கொள். நாம் அனைவரும் ஒன்றே என்பதைத் தெரிந்து கொள். மற்ற அறிவீனங்களை எல்லாம் காற்றில் பறக்கவிடு; நற்செயல், தீய செயல் ஆகிய வற்றைப் புறக்கணி. அவற்றை மீண்டும் ஒருபோதும் நினைக்காதே. நிகழ்ந்தது நிகழ்ந்ததுதான். மூட நம்பிக்கையை விடு. மரணமே எதிர்வந்தாலும் பலவீனம் அடையாதே.

நடந்ததை எண்ணி வருந்தாதே. கடந்ததை எண்ணிக் கலங்காதே. நீ செய்த நல்ல செயல்களையும் நினைவில் வைத்துக் கொள்ளாதே. சுதந்திரனாக இரு. பலவீனனாக, பயந்தவனாக, முட்டாளாக இருப்பவன் ஆன்மாவை அடைய முடி யாது. செய்த எதையும் இல்லாமல் ஆக்க முடியாது. அதன் பலனை அனுபவித்தே யாக வேண்டும். அதைத் துணிவுடன் எதிர்கொள். அதே செயலை மீண்டும் செய் யாமல் எச்சரிக்கையுடன் இரு. எல்லா செயல்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விடு; நல்லது, தீயது இரண்டையும் சமர்ப்பித்துவிடு. நல்லதை வைத்துக் கொண்டு, தீயதை மட்டும் ஒப்படைக்க எண்ணாதே. தனக்குத்தானே உதவி செய்து கொள்ளாதவர்களுக்கே இறைவன் உதவுவார்.

பற்றற்ற மனப்பான்மையை நீங்கள் பெற்றுவிட்டால், உங்களுக்கு நன்மையோ தீமையோ எதுவும் இல்லை. நன்மை தீமை என்ற வேறுபாட்டை உருவாக்கு வதே சுயநலம்தான். இது புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமானது. ஆனால் நீங்களே அனுமதிக்காமல் பிரபஞ்சத்திலுள்ள எதற்கும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்து வதற்கான ஆற்றல் இல்லை என்பதைக் காலப்போக்கில் நீங்கள் புரிந்து கொள்ளவே போகிறீர்கள். ஆன்மா ஒரு முட்டாளாகி, தன் சுதந்திரத்தை இழக்காத வரை எந்த ஆற்றலும் மனித ஆன்மாவை எதுவும் செய்ய முடியாது. பற்றின்மை என்பதன்மூலம் உலகின் மற்ற எதுவும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்கவும் தவிர்க்கவும் செய்கிறீர்கள். நீங்கள் அனுமதிக்காதவரையில் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற உரிமை எதற்குமே கிடையாது என்று சொல்லிக் கொண்டிருப்பது எளிது. ஆனால் தன்மீது எதையும் ஆதிக்கம் செலுத்தவிடாத மனிதனின் உண்மை அடையாளம் என்ன? புறவுலகம் அவன்மீது செயல்படுவதன் காரணமாக சுகமோ துக்கமோ அடையாத அவனது அடையாளம் என்ன? நல்லதோ, கெட்டதோ அவன் மனத்தில் எந்த மாறுபாட்டையும் ஏற்படுத்தாது; எந்தச் சூழ்நிலையிலும் அவன் சமமாக இருப்பான்-இதுதான் அடையாளம்.

தீமைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம் என்று இன்று நாம் நினைக்கும் பொருட்களெல்லாம் நாம் சமநோக்குப் பெற்ற பிறகு சிரிப்புக்கு உரியவை ஆகி விடும். இதையே முக்தி, சுதந்திரம் என்று வேதாந்தம் கூறுகிறது. சமத்துவ உணர்வும் சமநோக்கும் நம்மில் மேன்மேலும் மிகும் போது நாம் முக்தியை நெருங்குகிறோம் என்பதற்கான அடையாளம் அது. இன்பத் தையும் துன்பத்தையும், வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை முதிரமுதிர, மனம் முக்திநிலையை நெருங்குகிறது என்பது பொருள்.

மனத்தைத் தன் விருப்பப்படி நரம்பு மையங்களுடன் இணைக்கவோ பிரிக்கவோ செய்வதில் வெற்றி பெறு பவன் பிரத்யாஹாரத்திலும் வெற்றி பெறு கிறான். பிரத்யாஹாரம் என்பது மனத்தின் ஆற்றல்களைப் புறத்தில் போகாமல் தடுத்து, புலன்களின் பிடியிலிருந்து அதனை விடுவித்து, ‘உள்ளே குவித்தல்’ ஆகும். இதைச் செய்ய முடிந்த பின்தான் நாம் உண்மையில் நற்குணம் என்பதைப் பெறுகிறோம், அதன்பின்தான் முக்திப் பாதையில் ஒரு நீண்ட அடியெடுத்து வைக்கிறோம். அதற்குமுன் நாம் வெறும் எந்திரங்களே.

முனிவர் விடுதலையை விரும்பு கிறார். புலனின்பப் பொருட்கள் எல்லாம் வீண் என்பதும் சுக துக்கங்களுக்கு முடி வில்லை என்பதும் அவருக்குத் தெரியும். இந்த உலகத்துச் செல்வந்தர்களுள் எத்தனையோ பேர் பழைய இன்பங்களில் நிறைவின்றிப் புதுப்புது இன்பங்களைத் தேடித் திரிகின்றனர்! எல்லா இன்பங் களும் பழையவை ஆகிவிடுகின்றன. அவர்களுக்குப் புது இன்பங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அவர்கள் எவ்வளவு முட்டாள்தனமானவற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? இவை யெல்லாம் ஒரு கணநேரம் நரம்புகளைத் தட்டி எழுப்புகின்றன, அவ்வளவுதான். இந்தக் கணநேர எழுச்சிக்குப் பின் தோன்றும் பிரதிச்செயல் எவ்வளவு துன்பம் தருவது!

மக்களில் பெரும்பாலானோர் ஆட்டு மந்தைகளே. முதலில் போகும் ஆடு, குழி யில் தவறி விழுந்துவிட்டால், தொடர்ந்து செல்லும் ஆடுகளும் அதுபோலவே குழியில் விழுந்து கழுத்தை முறித்துக்கொள்ளும். அதுபோலவே மக்களும் சமுதாயத்தில் முக்கியமான ஒருவன் என்ன செய் கிறானோ அதையே பின்பற்றுகிறார்கள்; தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

உலக விஷயங்களின் வெறுமை புலப்படும் போது, இப்படி இயற்கையின் அடிமையாக, அது இழுத்த இழுப்பு கெல்லாம் வளைந்து கொடுப்பது தவறு என்பதை மனிதன் உணர்கிறான்; இது வெறும் அடிமை வாழ்வு. ஒருவன் வந்து அவனிடம் ஓரிரு இனிய சொற்களைச் சொன்னால் புன்னகை புரிகிறான்; கடுஞ் சொற்களைச் சொல்லிவிட்டால் வருந்து கிறான். ஒரு வாய்ச் சோற்றுக்கும், ஒரு மூச்சளவு காற்றுக்கும், ஆடைகளுக்கும், தேசப்பற்றிற்கும், நாட்டிற்கும், பெயருக் கும், புகழுக்கும் அடிமையாக இருக் கிறான் மனிதன். இவ்வாறு அவன் அடிமைத்தனத்தில் சிக்குண்டு கிடக் கிறான். இந்தப் பற்றுக்களின் காரணமாக உண்மை மனிதன் உள்ளே புதைந்து கிடக் கிறான். வெறும் அடிமை உருவையே மனிதன் என்று நீங்கள் கூறுகிறீர்கள். தனது இந்த அடிமைத்தனத்தை மனிதன் உணரும் போது இதிலிருந்து விடுதலை பெறு வதற்குத் தீவிர ஆவல் எழுகிறது. செக்கச் சிவந்த நெருப்புத் தணல் ஒன்றை ஒருவனது தலையில் வைத்தால் அதைக் கீழே தள்ள அவன் எப்படிப் போராடு கிறான்! தான் இயற்கையின் அடிமை என்பதை உண்மையாக உணர்ந்த மனிதனும் விடுதலை பெற, முக்தி பெற அவ்வளவு தீவிரமாகப் போராடுவான்.

முதலில் சுதந்திரராக இருங்கள். பின்னர் எத்தனை தனித்துவங்களை வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நாம் மேடையில் தோன்றி பிச்சைக்காரன் வேடத்தில் நடிக்கும் நடிகனைப்போல் நடிப்போம். நடிப்புப் பிச்சைக்காரனையும் உண்மையிலேயே தெருவில் பிச்சை யெடுக்கும் பிச்சைக்காரனையும் ஒப்பிட்டு வேறுபாடுகளைக் காணுங்கள். ஒரு வேளை இருவரும் பார்வைக்கு ஒன்று போல் தானிருப்பார்கள். பேச்சு வார்த்தை களும் ஒன்றுபோலவே உள்ளன. ஆனா லும் எத்தனை வேறுபாடு! ஒருவன் பிச்சை எடுப்பதன் மூலம் ஆனந்தத்தை அனுபவிக் கிறான், மற்றொருவன் துன்பமும் துயர மும் அடைகிறான். எது இந்த வேறு பாட்டை ஏற்படுத்துகிறது? ஒருவன் சுதந்திரன், மற்றவன் கட்டுண்டவன். தன் வறுமை உண்மையல்ல, தான் நாடகத்திற்காகத் தரித்துள்ள வேடம் அது என்பதை நடிகன் உணர்ந்திருக்கிறான். உண்மைப் பிச்சைக்காரனோ தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிச்சையெடுப்பதே தனது நிலை, தான் பிச்சையெடுத்தே தீர வேண்டும் என்று எண்ணுகிறான். இதுதான் நியதி. நமது உண்மை இயல்பை அறியாதது வரை, இயற்கைச் சக்திகள் ஒவ்வொன்றாலும் முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்பட்டு இயற்கையிலுள்ள எல்லாவற்றிற்கும் அடிமைகளாக இருக்கும் பிச்சைக்காரர் களே நாம். உதவி வேண்டி நாம் உலகம் முழுவதும் கதறுகிறோம், உதவி கிடைப் பதில்லை. கற்பனைக் கடவுள்களை நோக்கி அழுகிறோம், உதவி கிட்டுவ தில்லை . ஆனாலும் உதவி வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். இப்படிக் கதறி அழுவதும் நம்பிக் காத்திருப்பதுமாக ஒரு வாழ்க்கை முழுவதும் வீணாகிறது. இதே நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.