உன் வாழ்க்கை உன் கையில்!-10

10. நம்மை முதலில் மாற்றிக் கொள்வோம்

புறவுலகை ஆள்வது அகவுலகம்தான் என்பதை முன்பு கண்டோம். உள்ளம் மாறி னால் உலகமும் மாறிவிடும். உங்கள் உள்ளம் தூய்மையானால் உலகமும் தூய தாகியே தீரவேண்டும். இந்த உண்மையை உலகுக்குக் கூற வேண்டிய அவசியம் முன்பு என்றும் இல்லாத அளவுக்கு இப் போது ஏற்பட்டிருக்கிறது. நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் விவகாரங்களில் இப்பொழுது அதிக அக்கறை கொள்ளத் தொடங்கிவிட்டோம்; ஆனால் நம்மைப் பற்றிய விஷயங்களில் நமது கவனம் குறைந்துகொண்டே வருகிறது.

நாம் மாறினால் உலகம் மாறும். நாம் தூயவர்களானால் உலகமும் தூய்மை யாகும். மற்றவர்களிடம் நான் ஏன் தீமை யைக் காண்கிறேன் என்பதுதான் கேள்வி. நான் தீயவனாக இல்லாமல் பிறரிடம் தீமை காண முடியாது. நான் பலவீனனாக இல்லாமல் துன்பப்பட முடியாது. நான் குழந்தையாக இருக்கும்பொழுது எனக்குத் துன்பம் தந்தவை இப்போது துன்பம் தருவதில்லை . நான் மாறிவிட்டேன், புறப் பொருட்களும் மாறிவிட்டன. வேதாந்தம் இதைத்தான் சொல்கிறது.

இவ்வாறு தனக்குத்தானே கட்டுப் பாடு உள்ளவன்மீது வெளியிலுள்ள எதுவும் ஆதிக்கம் செலுத்த முடியாது. அவனிடமிருந்து அடிமைத்தனம் விடை பெற்றுவிடுகிறது. அவனது மனம் சுதந்திர மாகிவிட்டது. அத்தகையவன் மட்டுமே இந்த உலகில் நன்றாக வாழ்வதற்குத் தகுதி உடையவன்.

மனிதர்கள் பொதுவாக உலகத்தைப் பற்றி இரண்டு கருத்துக்களைக் கொண் டிருப்பதைக் காண்கிறோம். சிலர் துன்ப நோக்குக் கொண்டவர்கள்; ‘இந்த உலகம் எவ்வளவு கொடூரமானது! எத்தனை கொடி யது!’ என்று அவர்கள் கூறுகிறார்கள். மற்றும் சிலர் இன்பநோக்குக் கொண்ட வர்கள்; அவர்கள், ‘உலகம் எவ்வளவு அழகானது! எத்தனை அற்புதமானது!’ என்கிறார்கள். மனத்தைக் கட்டுப்படுத் தாதவர்களுக்கு இந்த உலகம் முழுக்க முழுக்கத் தீமை நிறைந்ததாக அல்லது நன்மை, தீமை இரண்டும் சேர்ந்ததாகவா வதுதான் காட்சியளிக்கும். நாம் நம் மனத் திற்கு எஜமானர் ஆகும் போது இதே உலகம் இன்பமயமாகி விடுகிறது. அதன் பின் நன்மை தீமை என்ற நிலையில் எதுவும் நம்மைப் பாதிக்காது; எல்லாமே அவற்றிற்குரிய சரியான இடத்தில், எப்போதுமே இயைபாக இருப்பதை நாம் உணர்வோம்.

அன்பு, அறம், புனிதம் இவை நம் மிடம் வளருந்தோறும் அவற்றை வெளியி லும் அதிகமாகக் காண்போம். பிறரைக் கண்டிப்பதெல்லாம் நம்மை நாமே கண்டித்துக் கொள்வதுதான். உன்னை முதலில் சரிப்படுத்திக்கொள் (அது உன் னால் இயலும்), உலகம் உனக்காகத் தன்னை இணக்கமாக்கிக் கொள்ளும். ஒரு துளி நீர், பிரபஞ்சத்தையே தாங்க வல்லது என்ற கோட்பாடு (Hydrostatic Paradox) போன்றது இது. நாம் அகத்தில் எதுவாக இல்லையோ அதைப் புறத்திலும் காண முடியாது. பெரிய எந்திரத்திற்கும், அதன் சிறிய எந்திர அமைப்பிற்கும் உள்ள தொடர்பைப் போன்றதே பிரபஞ்சத்திற் கும் நமக்கும் உள்ள தொடர்பு. சிறிய எந்திரத்தில் நேர்கின்ற கோளாறு, பெரிய எந்திரத்தில்தான் கோளாறு ஏற்பட்டு விட்டதாக நம்மைக் கற்பனை செய்யத் தூண்டுகிறது.

உலகில் உண்மையினுடைய முன் னேற்றத்தின் ஒவ்வோர் அடியும் அன்பின் ஆற்றலாலேயே ஏற்பட்டுள்ளது. குறை கூறுவது ஒருபோதும் நன்மை பயக்காது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிஞர்கள் இதனைச் சோதித்தும்விட்டனர். கண்டனத் தால் எதையும் சாதிக்க முடியாது.