தொண்டன் – சிறந்த தலைவன் 5

தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான வழிகாட்டிதான் தொண்டன். இந்த தொண்டன், சிறந்த தலைவனை உருவாக்குவான்.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.


பூஜை அறையே எல்லாமாக ஆகிவிடக் கூடாது :

ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. பெரிய மகரிஷிகள் உலகத்துக்கு விசேஷச் செய்தியுடன் வருகிறார்களே தவிர, பெயர் புகழுக்காக அல்ல. ஆனால், அவர்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்களுடைய செய்திகளைத் தூக்கி எறிந்து விட்டு, அந்த மகான்களின் பெயரால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். உண்மையில் உலகத்தின் சரித்திரம் இப்படித்தான் உள்ளது. மக்கள் அவருடைய (ஸ்ரீ ராம கிருஷ்ணருடைய ) பெயரை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது பற்றி நான் கவனம் செலுத்தவில்லை . ஆயின் அவரது உபதேச மொழிகள், அவரது வாழ்க்கை , அவரது செய்தி, உலகமெங்கும் பரவுவதற்காக உதவி பண்ணுவதில் எனது ஆயுள் முழுவதையும் அர்ப்பணிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். நான் மிக அதிகமாக அஞ்சுவது இந்த பூஜை அறையைக் கண்டுதான். பூஜை அறை இருப்பதில் தவறில்லை. ஆனால் அதையே முழு முதலாக, எல்லாமாக ஆக்கிவிட்டுப் பழைய காலத்துக் கட்டுப்பெட்டித்தனத்தை மீண்டும் நிறுவக்கூடிய போக்குச் சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய பழைய காலத்திய, சிதைந்து. குலைந்துபோன சடங்குகளில் ஏன் இவர்கள் ஆழ்ந்து விடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களது உணர்ச்சித் துடிப்பு வேலை வேண்டுமென்று தவிக்கிறது. ஆனால் அதற்கான வழித்துறை இல்லாமற்போகவே, இவர்கள் மணி அடிப்பதிலும், மற்றச் சடங்குகளிலும் சக்தியை வீணடிக்கிறார்கள்.


வெறும் மூடபக்தன் ஆகாதே :

பாரத தேசத்திலிருந்த ஒரு சந்நியாசி கூறினார். “என்னால் பாலைவனத்து மண்ணைப் பிழிந்து எண்ணெய் உண்டாக்க முடியுமென்று கூறுவாயானால் உன்னை நான் நம்புவேன். முதலையின் வாயிலிருந்து, அது என்னைக் கடிக்காத முறையில் பல்லைப் பிடுங்கி விடுவேன் என்றாலும் நம்பி விடுவேன், ஆனால் குருட்டுத்தனமான வெறிபிடித்தவனை மாற்ற முடியுமென்று கூறுவாயானால் அதை மட்டும் நம்ப முடியாது” என்றார்.

மூடபக்தனின் கதை :

….. துவைதிகளான, பாரத வைஷ்ணவர்கள், சகிப்புத் தன்மையற்ற ஒரு வகுப்பினராவர். சைவர்களில், துவைதக் கிளையில் ஒரு வகுப்பைச் சேர்ந்த கண்டாகர்ணன் (மணிக்காதன்) என்ற பக்தனைப்பற்றிய கதையொன்று வழங்கி வருகிறது. அவன் சிவபெருமானிடத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள பக்தனாதலால் வேறொரு தெய்வத்தின் பெயரைக் காதால் கேட்கவும் விரும்ப மாட்டான். அதனால் மற்றத் தெய்வங்களின் பெயர்களைக் கூறும் எந்தக் குரலையும் அமிழ்த்திவிடும் பொருட்டுத் தன் இரு காதுகளிலும் இருமணிகளைத் தொங்க விட்டுக் கொண்டான். சிவபெருமானிடம் அவன் பேரன்பு பூண்டவனாதலால் அப்பெருமான் அவனுக்குச் சிவன்-விஷ்ணு என்னும் பேதமில்லை என்பதை அறிவிக்க வேண்டி அவன் முன் பாதி திருமாலாகவும், பாதி சிவன் வடிவாகவும் ஒரு நாள் காட்சி தந்தார். அவ்வமயம் அந்த பக்தன் அவர் முன் தூபங் காட்டினான். தூபத்தின் நறுமணம் திருமாலின் நாசியிற் புகுவதைக் கண்டபோது அதனுள் தனது விரலைப் புகுத்ததி அக்கடவுள். அந்த நறுமணத்தை நுகரமுடியாதபடி தடுக்கலானான். கண்டாகர்ணனின் முழு மூடபக்தியின் வெறி அவ்வாறிருந்தது.


குருட்டு வெறியனாகாதே :

குருட்டு வெறியர்களில் பலரகம் உண்டு. சிலர் மது வெறியர்கள். சிலர் புகை பிடிப்பதில் வெறியர்கள். மனிதர்கள் புகை பிடிப்பதை நிறுத்தினால் யுகப் பிரளயம் வந்து விடும் என்று சிலர் நினைக்கிறார்கள்… சில வெறியர்கள், கணவனை இழந்த பெண்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டால் எல்லாத் தீமைகளும் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இது குருட்டு வெறியாகும்.

நான் சிறு பையனாக இருந்தபோது வேலை செய்வதற்குத் தேவையாக இந்தக் குருட்டு வெறி முக்கியமான அம்சமாகும் என நினைத்தேன். ஆனால் வயதாக ஆக அப்படியல்லவென்று கண்டு பிடித்து விட்டேன்.

… ஒருவன் எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டு திரியலாம்; அவனை யாரும் நம்ப முடியாது; அவனிடம் எந்தப் பெண்ணும் பத்திரமாக இருக்கமுடியாது. ஆனால் ஒருவேளை இந்த அயோக்யன் மது அருந்தாதவனாக இருக்காலம். அப்படியிருந்தால் மது அருந்துகிறவன் மகா மோசம்; அவனிடம் நல்லது எதுவுமே இல்லையென்று அந்த அயோக்யன் நினைக்கிறான்; தான் செய்கிற தீய செயல்களெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. இது மனிதனுக்கு இயல்பான சுயநலத்தன்மையாகும்; ஓரவஞ்சனைக் குணமாகும்.

இந்தக் குருட்டுப் பிடிவாத வெறியர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களுடைய ஈரல் கெட்டுப் போயிருக்கலாம். அஜீர்ணக்காரர்களாக இருக்கலாம். அல்லது ஏதாவது நோய் வாய்ப்பட்டவர்களாக இருக்கலாம். நாளடைவில் இந்தக் குருட்டு நம்பிக்கை வெறிகூட ஒருவகை வியாதிதான் என்று வைத்தியர்கள் கண்டுபிடிக்கக்கூடும். கடவுள் என்னை அதிலிருந்து காப்பாற்றட்டும்!

என்னுடைய அனுபவங்களின் முடிவாக நான் ஒன்று நினைக்கிறேன். பிடிவாதமாக, மூடத்தனமான பலவிதச் சீர்திருத்தங்களைப் பண்ண முயலுவதை நிறுத்துவது நல்லது. அது ஒரு விதத்தில் புத்திசாலித்தனமாகும். உலகம் மெல்ல முன்னேறிவருகிறது. அதை மெல்லவே முன்னேறும் படி விட்டு விடலாமே! நாம் ஏன் அவசரப்படவேண்டும்? நன்றாகத் தூங்குங்கள்; நரம்புகள் நல்ல நிலையிலிருக்கும்படி கவனித்துக் கொள்ளுங்கள்; சரியான உணவைச் சாப்பிடுங்கள்; உல கிடம் அநுதாபம் காட்டுங்கள். குருட்டு வெறியர்கள்தாம் வெறுப்பை உண்டாக்குகிறார்கள்… –

…..இந்த முரட்டுப் பிடிவாதக் காரர்களின் கோஷ்டியிலிருந்து நீங்கள் வெளிவந்தால் உண்மையில் அன்பு காட்டுவதும் அநுதாபம் காட்டுவதும் எப்படியென்பதை நீங்கள் கற்றுக்கொள்ளக் கூடும். நீங்கள் அன்பு, அநுதாப நிலையை எய்தினால் இந்த எளிய ஜந்துகளைக் கண்டிப்பதற்கு மனமின்றி உங்கள் கோபசக்தி குறைந்து போகும்; அவர்களது குறை கண்டு அநுதாபந்தான் கொள்ளுவீர்கள்.

….ஓர் அரசன் இருந்தான். அண்டைநாட்டு அரசகுமாரன் தன் தலைநகர் மீது படையெடுத்து, அதை முற்றுகையிட முன்னேறி வருவதாக அவன் கேள்விப்பட்டுத் தனது சபையைக் கூட்டினான். நாட்டை எதிரியிடமிருந்து எப்படிக் காப்பாற்றுவது என்பதற்காக யோசனைகளைக் கூறும்படி மக்களைக் கேட்டுக்கொண்டான். எஞ்சினியர்கள் தலை நகரைச் சுற்றி உயரமான ஒரு மண்சுவர் கட்டி, வெளியில் ஓர் அகழி வெட்டி வைக்க வேண்டும் என்று யோசனை சொன்னார்கள். தச்சர்கள் மரச்சுவர் எழுப்பச் சொன்னார்கள். சக்கிலியர்கள் “தோலுக்கு இணையாக எதுவுமே இல்லை; எனவே தோலால் சுவர் எழுப்பலாம்” என்றார்கள். ஆனால் இரும்புக் கொல் லர்கள், “நீங்கள் கூறுவதெல்லாம் சுத்தப்பிசகு, சுவரை இரும்பால் தான் கட்டவேண்டும்” என்றனர். அடுத்ததாக வழக்கறிஞர்கள் முன்வந்து நாட்டைக் காப்பதற்கு மிகச்சிறந்த வழி, எதிரியிடம் போய் மற்றவர் சொத்துக்களைத் தம் வசப்படுத்துவது நீதிக்குப் புறம்பானது, தவறு என, சட்ட ரீதியாகச் சொல்லுவதே சிறந்த வழியென்று வாதாடினார்கள். கடைசியாகப் புரோகிதர்கள் வந்தார்கள். எல்லோரையும் துச்சமாக நோக்கிவிட்டு அவர்கள் வெறுப்புடன் நகைத்தார்கள். ‘நீங்கள் எல்லாம் பைத்தியக்காரர்களைப் போலப் பேசுகிறீர்கள். முதல் முதலில் யாக யக்ஞங்களால் தேவதைகளைத் திருப்திப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நம்மை யாரும் ஜயிக்க முடியாது” என்றார்கள். தமது நாட்டைக் காப்பதற்குப் பதிலாக அவர்கள் தமக்குள்ளே தர்க்கம் பண்ணிக் கொண்டு, தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டார்கள். அதனிடையில் எதிரி முன்னேறி வந்து அந்த நகரத்தை தாக்கித் தகர்த்து விட்டான். மனிதர்கள் இப்படித்தான் குருட்டுப் பிடிவாதத்துடன் வாழுகிறார்கள்.


எல்லா பலவீனத்தையும் மூடநம்பிக்கையையும் கைவிடுக:

…..நான் உபதேசிக்கும், எல்லாவற்றிலும் முதல் தேவையாக ஒன்றைக் கூறுவேன். எது ஆத்மீகத்துக்கோ, அறிவுக்கோ, உடலுக்கோ பல வீனத்தை உண்டாக்குகிறதோ, அதை உங்கள் கால் கட்டைவிரலால் கூடத் தொடாதீர்கள். சமயம் என்பது மனிதனிடத்தில் இயற்கையாக உள்ள வலிமையை வெளிப்படுத்துவதாகும். எல்லையில்லாத சக்தி படைத்த ஒரு ‘ஸ் பிரிங்’ இந்தச் சிறிய உடலுக்குள்ளே சுருண்டு கிடக்கிறது. அந்த ஸ்பிரிங் மெல்ல விரிவடைந்து வருகிறது. அது விரிந்துகொண்டே செல்லச் செல்ல, ஓர் உடலுக்கு பிறகு மறு உடல் எடுத்து அவை ஒவ்வொன்றும் தகுதியற்றதாக ஆகும் பொழுது, அந்த உடலை எறிந்துவிட்டு, அதைவிட உயர்ந்த உடலை எடுத்துக் கொள்கிறது. இதுதான் மனிதனுடைய – சமயத்தினுடைய – நாகரிகத்தினுடைய வரலாறு ஆகும். இதுதான் முன்னேற்றம் எனப்படும்.

சோதிடம், ரகசிய வித்தைகள் இவற்றையெல்லாம் நாடுவது பொதுவாக பலவீனமான மனத்தின் அறிகுறி என்பது உங்களுக்குத் தெரியவரும். ஆகவே நமது மனத்தில் இவை முக்கியமானதாக ஆகும்பொழுது நாம் போய் ஒரு டாக்டரிடம் உடம்பைக் காட்டி, நல்ல உணவு சாப்பிட்டு விட்டு, ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சோதிடரைப் பற்றிய பழைய கதை ஒன்று உண்டு. ஒரு நாள் அந்த மனிதர் ஓர் அரசரிடம் போய், “அரசே! நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறீர்கள்” என்று சொன்னார். அரசர் நடுங்கிப் பயந்துபோய், அப்பொழுதே அங்கேயே அச்சத்தால் உயிரை விட்டுவிடுவார் போலிருந்தது. ஆனால் அவருடைய மந்திரி, புத்திசாலி. இந்தச் சோதிடர்களெல்லாம் அறிவிலிகள் என்று மன்னரிடம் மந்திரி கூறினார். ஆனால் மன்னர் அவரை நம்பவில்லை. மன்னருக்கு இந்தச் சோதிடர்கள் அறிவிலிகள் என்பதை நிரூபிக்க வேறெந்த வழியும புலப்படாமற் போகவே அரண்மனைக்கு அந்தச் சோதிடரை மீண்டும் ஒரு முறை மந்திரி அழைத்தார். இரண்டாம் முறை வந்தபோது, “நீங்கள் போட்ட கணக்குகளெல்லாம் சரிதானா?” என்று சோதிடரை மந்திரி வினவினார். எவ்விதத் தவறும் அதில் இருக்க முடியாது என்று கூறிவிட்டு, எதற்கும் தம்மையே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக, முழுக் கணக்கையும் மீண்டும் ஒருமுறை போட்டுப் பார்த்து விட்டுப் பிறகு தமது முடிவு முற்றிலும் சரிதான் என்று பதிலளித்தார். மன்னரின் முகம் வெளிறிப் போய்விட்டது. மந்திரி சோதிடரைப் பார்த்து, “ஐயா! நீங்கள் எப்பொழுது மரணடைவீர்கள்?” என்று கேட்டார். “பன்னிரண்டு ஆண்டுகளில்” என்று சோதிடர் பதிலளித்தார். அந்தக் கணமே மந்திரி தமது வாளை உருவிச் சோதிடரின் உடலிலிருந்து கழுத்தைத் துண்டித்து வீழ்த்தினார். பிறகு மன்னரை நோக்கி, “இந்தச் சோதிடன் பொய்யன் என்பது தெரிகிறதா? இந்தக் கணமே இவன் செத்துக் கிடக்கிறான் பாருங்கள்”, என்றார்.

கஷ்டங்களைத் தைரியமாக எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டும் :

……. ஒரு தடவை நான் காசியில் இருந்தபோது அவ்வூரின் ஒரு பகுதியின் வழியே போய்க்கொண்டிருந்தேன். அங்கே ஒரு பக்கத்தில் பெரியதொரு குளமும் மறுபுறத்தில் உயரமான சுவரும் காணப்பட்டது. இடைவழியில் தரைமீது ஏராளமான குரங்குகள் இருந்தன. காசியிலுள்ள பருத்த உடலுள்ள மந்திகள் அவை. சில சமயம் அவை வெறியுடனிருக்கும். அந்தத் தெருவழியே கடந்து செல்ல என்னை அநுமதிக்கக் கூடாது என்று அவற்றின் மனத்தில் பட்டு விட்டது போலும். ஆகவே நான் அவ்வழியாகப் போன போது அவை கூச்சலிட்டு, கீச்சிட்டுக் கத்திக்கொண்டே என் கால்களைப் பிடித்துக் கொண்டன. அவை நெருங்கிவர ஆரம்பித்ததும் நான் ஓடத்துவங்கினேன். நான் எனது வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க அவையும் வேகமாக ஓடி நெருங்கி வந்து கடிக்க ஆரம்பித்தன. தப்புவது அசாத்தியம் என்றே தோன்றிற்று. அந்தக் கணத்திலேயே அறிமுகமில்லாத யாரோ ஒரு புதிய மனிதர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் “அந்த மிருகங்களை எதிர்த்து நில்” என்று என்னிடம் உரக்கக் கூவினார். நான் திரும்பிப் பார்த்து அந்தக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின் வாங்கிவிட்டு இறுதியாக ஓடியே விட்டன. வாழ்க்கை முழுவதற்கும் அது ஒரு படிப்பினை. கஷ்டங்களைக் கண்டு நாம் எதிர்த்து நிற்கும்போது, குரங்குகளைப் போல அவை பின் வாங்கி ஓடுகின்றன.

இரண்டு விதமான தைரியங்கள்

தைரியங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று பீரங்கி முனை வாயில் அஞ்சாது எதிர்த்து நிற்பது. மற்றொன்று ஆத்மீக உறுதிப்பாடு, துணிவு. பாரதத்தின்மீது படையெடுத்து வந்த ஒரு சக்கரவர்த்திக்கு அவனது ஆசிரியர், நாட்டிலுள்ள சில ரிஷிகளைச் சந்தித்து வருமாறு கூறியிருந்தார். நெடுநேரம் தேடிய பிறகு, மிக வயது முதிர்ந்த ஒரு மனிதர் ஒரு பாறையின் மீது உட்கார்ந்திருப்பதைச் சக்கரவர்த்தி கண்டார். சிறிது நேரம் சக்கரவர்த்தி அவருடன் உரையாடிய பின்னர் அம்மனிதரது ஞானத்தைக் கண்டு அவரிடம் பெருமதிப்புக் கொண்டார். தம்முடன் தம் நாட்டுக்கு வந்து விடுமாறு அந்த ரிஷியை அழைத்தார். “நான் வரமாட்டேன். எனது இந்தக் காட்டிலே நான் முழுத் திருப்தியுடன் தான் இருக்கிறேன்”, என்று அந்த ரிஷி பதிலளித்து விட்டார். அதற்கு மன்னன், “உங்களுக்கு நான் பணம், பதவி, செல்வம் எல்லாம் தருகிறேன். நான் உலகின் சக்கரவர்த்தி”, என்றான். “வேண்டாம்; எனக்கு அவற்றைப்பற்றி அக்கறையில்லை”, என்று ரிஷி பதிலளித்தார். அதற்குச் சக்கரவர்த்தி “நீர் வராவிட்டால் உம்மைக் கொன்று விடுவேன்” என்றான். ரிஷி சிரித்தார். “சக்கரவர்த்தியே, நீ சொன்ன வார்த்தைகளில் எல்லாம் அதிக முட்டாள்தனமான சொல்லை இப்பொழுதுதான் கூறினாய். உன்னால் என்னைக் கொல்ல முடியாது. என்னைச் சூரியன் உலர்த்த மாட்டான்; நெருப்பு எரிக்காது,வாள் வெட்டாது; ஏனெனில் நான் பிறப்பு அற்றவன்; இறப்பு அற்றவன்; எப்பொழுதும் வாழுகிறவன், சர்வசக்தி வாய்ந்தவன்! எங்கும் நிறைந்த ஆத்மா நான்” என்று மறுமொழி கூறினார். இதுதான் ஆத்மீக ரீதியான தைரியம் ஆகும். மற்றது சிங்கம் அல்லது புலியின் தைரியம்….

துணிவும் தாராள மனப்பான்மையும் பூண்டிரு:

தென்கடல் தீவுகளில் ஏற்பட்ட ஒரு புயலில் ஒருமுறை சில கப்பல்கள் சிக்கிக்கொண்ட கதையைப் படித்தேன், “இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூஸ்” பத்திரிகையில் அந்தப்படம் வெளியாகியிருந்தது. ஆங்கில நாட்டைச் சார்ந்த ஒரு கப்பல் மட்டும் புயலைச்சமாளித்து விட்டது. மற்றவையெல்லாம் உடைந்து விட்டன. மூழ்கப்போகிற மனிதர்கள் தமது கப்பலின் மேல் தட்டில் நின்று கொண்டு புயலுக்கு மத்தியில் கப்பலை நடத்திச் செல்லுகிற மக்களுக்கு உற்சாகமூட்டி வந்த காட்சியை அப்படம் காட்டிற்று. அதுபோல நீங்களும் துணிவும் தாராள மனப்பான்மையும் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கிற இடத்துக்குப் பிறரைக் கீழே இழுக்காதீர்கள்….


விருப்பத்துடன் சகித்துக் கொள்ளுங்கள்:

உலகத்தின் பாரத்தை எல்லாம் சுமக்க நீங்கள் உண்மையிலேயே ஆயத்தம் என்றால் தாராளமாக அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து உங்களுடைய முக்கல் முனகல்களையும், சாபங்களையும் எங்கள் காதுகளுக்கு எட்டச் செய்ய வேண்டாம். உண்மையாகவே பாரம் சுமக்கிற மனிதன் உலகத்தை ஆசீர்வதித்து விட்டுத் தன் வழியே போகிறான். கண்டனமாகவோ, குற்றங் குறையாகவோ ஒரு சொல்கூட அவன் பேசுவதில்லை . ஏன்? உலகில் தீமை எதுவும் இல்லை என்பதனால் அல்ல. அந்தச் சுமையை அம்மனிதன் சுய விருப்பத்துடன், தானாகவே முன்வந்து ஏற்றுக் கொண்டிருப்பதால், அவன் யாரையும் கண்டிப்பதோ, குற்றம் சாட்டுவதோ இல்லை. யார்பிறரைக்காப்பாற்ற வருகிறானோ – காப்பாற்றப்படுகிற மனிதனல்ல, காக்கிறவன் – அவன் தன் பாதை வழியே பெருமகிழ்வோடு போக வேண்டும்.

எதையும் நாடிச் செல்லாதே. எதையும் தவிர்க்காதே. வருவதை ஏற்றுக்கொள். எதனாலும் பாதிக்கப்படாமலிருப்பது ஒரு பெரும் சுதந்திரமாகும். வெறுமனே சகித்துக் கொண்டிராதே. பற்றற்றிரு. இன்பம் வரும்… நல்லதுதான்; யார் தடுக்கிறார்கள்? துன்பம் வரும்; அதனையும் வரவேற்போம். எருதின் கதையை நினைவிற் கொள்ளுங்கள். ஓர் எருதினுடைய கொம்பின் மீது ஒரு கொசு வந்து நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தது. சிறிது நேரம் கழித்து அந்தக் கொசுவுக்கு மனச்சாட்சி உறுத்தவே அது “ஐயா எருதாரே! நான் நெடுநேரமாக இங்கே உட்கார்ந்திருக்கிறேன். ஒருக்கால் உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும், வருந்துகிறேன். போய் விடுகிறேன்” என்று கூறிற்று. ஆனால் அந்த எருது “ஓ, அப்படியொன்றுமே இல்லை. உங்கள் குடும்ப சகிதமாகவே வந்து என் கொம்பின் மேல் தங்கிப் போங்களேன். நீங்கள் என்னை என்ன செய்துவிட முடியும்?” என்று பதிலளித்தது.

துன்பம் வரும்போது அதனிடம் நாமும் ஏன் அவ்வாறு கூறக் கூடாது?….


தவறுகளும் தோல்விகளும் தேவதைகளுக்குத்தான் ஏற்படாது:

சிந்தனைதான் நம்மைத் தூண்டி வேலை செய்ய வைக்கிற உந்து சக்தி. மனத்தை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பிவிடு. அவற்றைப் பற்றி நாள்தோறும் கேட்டுக்கொண்டிரு. மாதாமாதம் அவற்றைப் பற்றிச் சிந்தனை செய். தோல்விகளை லட்சியம் பண்ணாதே. அவை மிக சகஜமானவை. தோல்விகள் வாழ்க்கையை அழகு பண்ணுகின்றன. அவையின்றி வாழ்வு எப்படியிருக்கும்? போராட்டங்கள் இல்லையென்றால் வாழ்க்கையே வாழத் தகுதியற்றதாக ஆகிவிடும். வாழ்க்கையாகிற கவிதை எங்கேயிருக்கும்? போராட்டங்களை, தவறுதல்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே. பசு பொய் சொன்னதாக நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது பசு தானே, மனிதனல்லவே! ஆதலால் இந்த தோல்விகளைப்பற்றி, சறுக்கி, வழுக்கி வீழ்வது பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாதே. ஆயிரம் தடவைகள் வீழ்ந்தாலும் லட்சியத்தைப் பிடித்துக் கொள். ஆயிரம் தடவை தோற்றுப் போனாலும் மீண்டும் ஒரு தடவை முயற்சி பண்ணிப் பார்…

பூரணமாகத் தீமை வாய்ந்தது எதுவுமே இல்லை. இவ்வுலகில் தெய்வத்துக்கும் பிசாசுக்கும் இடமுண்டு. இல்லையேல் பிசாசு இங்கே இருக்காது.

நமது தவறுகளுக்கு இங்கே இடமுண்டு. முன்னேறிச் சென்றுகொண்டே இரு. சரியில்லாத ஒரு செயலைச் செய்து விட்டதாக நீ நினைத்தால் திரும்பிப் பார்த்துக்கொண்டே இராதே. அதே தவறுகளை இதற்கு முன்னர் நீ செய்திராவிட்டால், நீ இன்றுள்ள நிலையில் இருப்பாய் என்று நம்புகிறாயா? ஆகவே உனது தவறுகளுக்கு நன்றி செலுத்து! தேவதைகளுக்குத்தான் தவறு என்றால் என்னவென்று தெரியாது. அதிர்ஷ்டங்கள் வாழ்க! இன்பங்கள் வாழ்க! உனது பங்குக்கு எது வந்தாலும் கவலைப்படாதே. லட்சியத்தில் விடாப்பிடியாக இரு. முன்னேறிச் செல். சிறுதவறுகளையும், அற்ப விஷயங்களையும் நினைத்துத் திரும்பிப் பாராதே. இந்த நமது போர்க்களத்தில் தவறுதலாகிய புழுதி கிளம்பியே தீரும். அந்தப் புழுதியைச் சகிக்க முடியாத அளவுக்கு எவருடைய தோல் மெல்லியதாக இருக்கிறதோ அவர்கள் இந்தப் படை அணி வகுப்பை விட்டு வெளியே போய்விடட்டும்.

உங்களது தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொள்ளுங்கள்:

இமாலயப் பகுதிகளில் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னே மிக நீண்ட பாதை கிடந்தது. ஏழைத் துறவிகளான எங்களைச் சுமந்து செல்ல எவரையும் ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஆகவே கால் நடையாகவே முழுவதும் செல்ல நேரிட்டது. எங்களுடன் கூடக் கிழவர் ஒருவர் இருந்தார். நூற்றுக்கணக்கான மைல்களுக்கு வழி முழுவதும் ஒரே ஏற்ற இறக்கமாக உள்ளது. தமக்கு முன்னே உள்ள நீள் வழியைக் கண்டதும் அந்தக் கிழவரான துறவி, “ஓ! ஐயனே! இவ்வளவு தூரத்தை எப்படிக் கடந்து செல்வது? இனிமேல் என்னால் நடக்கவே முடியாது. எனது மார்பு வெடித்தே விடும்” என்றார். “உங்கள் காலுக்குக் கீழே பாருங்கள்” என்று கூறினேன். அவரும் பார்த்தார். “உங்களுடைய கால்களின் கீழே இருக்கிற பாதை நீங்களே கடந்து வந்த பாதையாகும். உங்கள் முன்னே நீங்கள் காணுகின்ற பாதையும் இதைப் போன்றதேதான். அதுவும் விரைவில் உங்களது காலின் கீழ் வந்துவிடும்” என்றேன். மிகப் பெரிய உயர்ந்த விஷயங்களெல்லாம் உங்கள் காலில் கீழ் உள்ளன. ஏனெனில் நீங்கள் தெய்வீக நட்சத்திரங்கள். இவையெல்லாம் உங்கள் காலில் கீழ் கிடக்கின்றன. நீங்கள் விரும்பினால் கைப்பிடி நிறைய நட்சத்திரங்களை எடுத்து விழுங்கிவிட முடியும். உங்களது உண்மை இயல்பு அப்படிப்பட்டதாகும். வலிவுடனிருங்கள். எல்லாமூட நம்பிக்கைகளையும் கைவிட்டு விட்டு அப்பாற் செல்லுங்கள். விடுதலை பெறுங்கள்.

ஆரவாரமில்லாத உறுதியான வேலை :

….பெரிய பதவியில் அமர்ந்திருக்கிற ஒவ்வொருவனும் பெரியவனாக இருப்பான். மேடையின்மீது பிரமாதமான வெளிச்சமுள்ள விளக்குகள் ஒளி வீசுகையில் கோழையும் கூடத் துணிவுள்ளவனாக ஆகி விடுவான். உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது! யாருக்குத் தான் நெஞ்சு துடிக்காது? தனது முழு சக்தியையும் காட்டி வேலை செய்கிறவரையில் யாருடைய நாடிதான் படபடவென வேகமாகத் துடிக்காது? ஆனால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் சிறு புழுதான் உண்மையில் மிக உயர்ந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. அது மௌனமாகத் தன் கடமையைச் செய்கிறது. உறுதியாகக் கணத்துக்குக் கணம், மணிக்கு மணி அது தன் வேலையைச் செய்து கொண்டே போகிறது.

…. ஒரு அணில் இருந்ததாம். அது மணலில் புரண்டுவிட்டு முன்னும் பின்னும் ஓடிப் பாலத்தின் மேல் சென்று தன் மீதுள்ள மணலை உதறிற்றாம். இவ்வாறாகச் சிறு அளவில் இராமருடைய அணையில் மணலைப் போட்டு அந்த அணில் வேலை செய்ததாம். குரங்குகள் சிரித்தன. ஏனெனில் அவை முழு மலைகளையும், முழுக் காடுகளையும் பெரிய மணல் மூட்டைகளையும் அணைக்காகச் சுமந்து வந்தன. ஆதலால் மணலில் புரண்டுவிட்டுத் தன் உடலைச் சிலிர்த்து உதறிய அச்சிறு அணிலைக் கண்டு அவை சிரித்தன. இராமர் அது கண்டு “இந்தச் சிறு அணில் வாழ்க; தனது முழுச் சக்தியுடன் தன்னுடைய வேலையை அது செய்து வருகிறது. ஆகவே உங்களிடையே மிகப் பெரியவரைப்போல, அந்த அளவுக்கு இதுவும் உயர்ந்ததாகும்” என்று கூறினார். பிறகு அந்த அணிலின் முதுகை மெதுவாக வருடினார். இராமரது விரல்பட்ட இடத்தில் கோடு உண்டாகி இன்றும் அணிலின் முதுகில் நீளமாக அது காணப்படுகிறது.

ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான் :

ஒவ்வொரு கடமையும் புனிதமானதுதான். கடமையில் பக்தியுடனிருப்பது தெய்வ வழிபாட்டில் மிக உயர்ந்த முறையாகும்.

நமக்கு மிக நெருங்கியுள்ள கடமையை, நாம் இப்பொழுது ஏற்றெடுத்துள்ள கடமையைச் செம்மையாகச் செய்வதால் நம்மை நாம் மேலும் அதிகமாகப் பலப்படுத்திக் கொள்கிறோம். இவ்வாறாகப் படிப்படியாக நமது பலத்தை அதிகரித்துக்கொண்டே போனால் நாம் ஒரு பெரும் நிலையைக்கூட எய்திவிடக் கூடும். அப்பொழுது வாழ்க்கையிலும், சமூகத்திலும் எல்லோரும் மிக விரும்பிப் போற்றுகிற, கௌரவிக்கிற கடமைகளைக்கூடச் செய்து முடிக்கிற நல்ல வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.

நாம் ஒவ்வொருவரும் எந்த இடத்துக்குத் தகுந்தவர்களோ இந்த இடத்தில்தான் இருக்கிறோம். ஒவ்வொரு பந்துக்கும் தக்கதொரு குழி உண்டு. ஒருவனுக்கு மற்றவர்களைவிட அதிகமான திறமை இருக்குமானால் உலகம் அதைக்கூடக் கண்டுபிடித்து விடும். ஏனெனில் இயற்கையிலேயே எங்கு பார்த்தாலும் ஒவ்வொன்றையும் பொருத்தமான இடத்தில் அமைக்கிற மாறுதல் நிகழ்ந்தே வருகிறது. ஆகவே முணுமுணுப்பதில் பயனில்லை. ஒரு பணக்காரன் தீயவனாக இருக்கலாம். இருப்பினும் அந்த மனிதனைப் பணக்காரனாக்கிய சில நல்ல குணங்கள் அவனிடம் இருந்தே தீரும். வேறொரு மனிதனுக்கும் அதே குணங்கள் ஏற்பட்டால் அவனும் பணக்காரனாக ஆகிவிடலாம். ஆகவே சண்டையிடுவதாலும், குற்றஞ் சொல்லிக் கொண்டிருப்பதாலும் என்ன பயன்? அப்படிச் செய்வதால் நமக்கு நல்ல நிலை ஏற்பட்டு விடாது.

உனது விதியைப் பற்றி முணுமுணுக்காதே :
ஒவ்வொரு கடமையையும் சுவையுடன் செய் :

….ஒ மனிதன் தனக்குக் கிடைத்துள்ள சிறு அளவு வேலையை எண்ணி முணுமுணுப்பானாயின் அவன் எல்லாவற்றுக்குமே முணுமுணுப்பான். முணுமுணுத்துச் சிடுசிடுத்து மிகுந்த துக்ககரமான வாழ்க்கையை அவன் நடத்துவான். அவன் செய்வதெல்லாம் தோல்வியிலேயே முடியும். ஆனால் தனது கடமைகளை மகிழ்வோடு செய்துகொண்டு, பணியாகிய ரதத்தின் சக்கரத்தில் தோள் கொடுத்துத் தள்ளுகிறவன், ஒளியைக் காண்பான். உயர்தரமான கடமைகள் அவன் பங்குக்குக் கிடைக்கும்.

பலனை எதிர்பார்த்து அதில் பற்றுக் கொண்டு வேலை செய்கிற மனிதன் தனக்கு கிடைத்துள்ள கடமையின் தன்மையைப் பற்றி முணு முணுப்பான். ஆனால் பற்றற்ற ஊழியனுக்கு எல்லாக் கடமைகளுமே ஒரே மாதிரியானவை தான். எந்தக் கடமையானாலும் அது சுயநலத்தையும், சிற்றின்பத்தையும் கொன்றுவிடவும், ஆத்மாவுக்கு விடுதலை தேடித்தரவும், திறமைவாய்ந்த கருவியாகவே அமையும்….

முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவும் அவனை ஒரு போதும் திருப்திப்படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல் விமயமாக ஆவது திண்ணம். நாம் வேலை செய்துகொண்டே செல்வோம். நமது கடமையாக எது வந்தெய்துகிறதோ அதனைச் செய்துகொண்டே போவோம். வேலையாகிற சக்கரத்தில் நமது தோள்களைக் கொடுத்துத் தள்ள எப்பொழுதும் ஆயத்தமாக இருந்து கொண்டிருப்போம். அப்படியிருந்தால் நாம் ஒளியைக் கண்டே தீருவோம்.

எந்த வேலையும் அற்பமானதல்ல. தன்னுடைய மனத்துக்குப் பிடித்தமான காரியத்தை ஒரு அடி முட்டாள் கூடச் செய்து முடித்துவிட முடியும். ஆனால் எந்த வேலையையும் தனக்கும் பிடித்தமானதாக, சுவையுள்ள வேலையாக ஆக்கிக் கொள்ளுகிறவன் புத்திசாலியெனப் படுவான்.

இந்த உலகிலிருக்கிற எல்லாமே ஆலமரத்து விதை போல நுண்ணியதாக, கடுகு போலத் தோற்றமளித்தாலும், அதற்குள்ளே பெரிய ஆலமரம் மறைந்துள்ளது. இதைக் கவனித்துத் தெரிந்து கொண்டு, எல்லாப் பணிகளையும் உண்மையிலேயே உயர்ந்ததாக ஆக்குவதில் வெற்றி பெறுகிற மனிதனே புத்திசாலியாவான்.

பிறரைக் குற்றஞ் சொல்லாதே : உன்னையே ஆராய்ந்து பார்:

….நாம் தாக்கப்படக்கூடிய நிலையில் இருந்தாலன்றி நம்மை எதுவும் தாக்கிப் பாதிக்காது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய உடல் வியாதியால் பாதிக்கப்படுவதற்கு ஆயத்தமாக இராதவரை வியாதி என்னை அணுகாது. வியாதியானது கிருமிகளை மாத்திரம் பொறுத்ததல்ல. ஏற்கனவே உடலில் இருக்கிற சில தன்மைகளைப் பொறுத்ததாகும். நமக்கு ஏற்றது தான் கிடைக்கிறது. தகுதியே இல்லாமல் துன்பம் ஏற்படாது என்பதை நாம் நமது கர்வத்தைக் கைவிட்டு உணர்ந்து கொள்வோம். தகுதியில்லாமல் நமக்குத் தாக்குதலோ அடியோ கிடையாது. எனது சொந்தக் கைகளாலேயே வழிவகுக்காமல் எந்தத் தீமையும் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை . நாம் அதனைத் தெரிந்துகொள்ள வேண்டும். உன்னையே நீ அலசி ஆராய்ந்து பார்த்தால், உனக்குக் கிடைத்த ஒவ்வொரு அடியும், நீ அதற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்ததால்தான் கிடைத்தது என்பது தெரியவரும். நீயாகச் செய்வது பாதி; வெளி உலகம் செய்வது பாதி; இந்த ரீதியில்தான் அடி கிடைக்கிறது. இப்படிச் சிந்தித்தால் நாம் சாந்தமான கம்பீரமான மன நிலைக்கு வந்து சேருவோம். அத்துடன்கூட இந்த ஆராய்ச்சியின் மூலமாக நமக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். அதாவது, வெளிஉலகத்தைக் கட்டுப்படுத்த என்னால் முடியாது. ஆனால் என்னிடம் எது இருக்கிறதோ-அதாவது எனது சொந்த அக உலகம்அது என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது. இந்த இரண்டும் ஒன்று சேருவதால்தான் தோல்வி ஏற்படுமாயின், இந்த இரண்டும் சேருவதன் மூலம் தான் எனக்கு அடி கிடைக்க வேண்டுமென்றால், என்னிடமிருக்கிற பங்கை நான் கூட்டிச் சேர்க்கமாட்டேன். அப்பொழுது எப்படித் தாக்குதல் வரும்? என்னை என்னால் நன்றாக அடக்கியாள முடிந்தால் தாக்குதல் ஒருபோதும் என்னை அணுகவே முடியாது.

……ஆகவே உங்களது தவறுகளுக்காக வேறு எவரையும் குற்றஞ் சாட்டாதீர்கள். உங்களது கால்களிலே நில்லுங்கள். முழுப் பொறுப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். “நான் அனுபவிக்கிற இந்தத் துன்பத்துக்கு நானே பொறுப்பு என்றால் இதனை நானே தான் நீக்க வேண்டும் என்பது நிரூபணமாகி விடுகிறது” என்று கூறுங்கள். நான் நிர்மாணித்ததை என்னால் அழிக்கவும் முடியும். வேறொருவர் உண்டாக்கியதை என்னால் ஒருக்காலும் அழிக்க முடியாது. ஆகையால் எழுந்து நில்லுங்கள். துணிவுடனிருங்கள். வலிவுடனிருங்கள். முழுப்பொறுப்பையும் உங்களது தோள் மீதே, நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான சக்தி, துணை எல்லாம் உங்களிடமே உறைந்துள்ளன. “மடிந்து போன முற்காலம் மடிந்தவற்றைப் புதைக்கட்டும்.” முடிவற்ற வருங்காலம் உங்கள் முன்னே உள்ளது. நீங்கள் பேசுகிற ஒவ்வொரு பேச்சும், சிந்திக்கிற சிந்தனையும், செய்கிற செயலும் வருங்காலத்தில் உங்கள் மீது பாய்வதற்கு ஆயத்தமாக, ஒரு குவியலாகச் சேர்ந்து உள்ளன. நீங்கள் செய்த கெட்ட சிந்தனைகளும், கெட்ட செயல்களும், புலிகளைப் போலப் பாய்வதற்கு ஆயத்தமாக இருப்பதைப் போலவே நம்பிக்கையுணர்ச்சியைத் தூண்டுகிற மற்றொரு விஷயமும் உள்ளது. அதாவது நீங்கள் செய்யக்கூடிய, நல்ல சிந்தனைகளும் நல்ல செயல்களும் நூறாயிரம் தேவதைகளின் பலத்துடன் உங்களை எப்பொழுதும் எல்லாக் காலத்துக்கும் காப்பாற்றுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. இதனை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது விதிக்கு நாமே பொறுப்பு :

….. ஒருவன் சம்பாதிக்காவிட்டால் அவனுக்கு எதுவும் கிடைக்காது. இது நிரந்தரமான சட்டம். அப்படியல்லவென்று சில சமயம் தோன்றலாம். ஆனால் நாளடைவில் அது உண்மைதானென்று தெளிவடைகிறோம். ஒரு மனிதன் செல்வந்தன் ஆவதற்காக ஆயுள் முழுவதும் பாடுபடலாம். ஆயிரக்கணக்கான பேர்களை அவன் ஏமாற்றலாம். ஆனால் கடைசி முடிவாகத் தான் பணக்காரனாவதற்குத் தகுதியுடையவனல்லன் என்பதைத் தெரிந்து கொள்வான். அவனது வாழ்க்கையே, அவனுக்குத் தொல்லையாகவும், தொந்தரவாகவும் ஆகிவிடுகிறது. சுகபோகங்களை அநுபவிப்பதற்காக நாம் ஏராளமான பொருள்களைச் சேர்த்து வைத்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் நாம் எதைச் சம்பாதித்தோமோ அதுதான் உண்மையில் நமக்கு ஒட்டும். முட்டாள் ஒருவன் உலகிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் வாங்கலாம். அவனது நூல் நிலையத்தில் அவை இருக்கும். ஆனால், எதனை படிக்க அவனுக்குத் தகுதியுண்டோ அதையேதான் அவன் படிப்பான். அவனுக்குத் தகுதியை உண்டாக்குவது அவனது “கர்மா”

நமது தகுதி என்ன, நம்மால் எதனை ஜீரணிக்க முடியும் என்பதை நமது கர்மா முடிவு செய்கிறது. நாம் இன்றிருக்கும் நிலைக்கு நாமே பொறுப்பு. நாம் எப்படி ஆகவேண்டுமென்று விரும்புகிறோமோ அவ்வாறு நம்மை ஆக்கிக் கொள்ளுவதற்கு நம்மிடம் ஆற்றல் உள்ளது. இன்று நாமிருக்கும் நிலை நமது பழங்காலச் செயல்களின் விளைவாக ஏற்பட்டது என்றால் அதைத் தொடர்ந்து மற்றொரு கருத்தும் வருகிறது. அதாவது நாம் வருங்காலத்தில் எப்படி மாற வேண்டுமென்றிருக்கிறோமோ, அந்த நிலையை இக்காலத்திய நமது நடவடிக்கைகளால் உண்டாக்க முடியும். ஆகவே எப்படிச் செயல்பட வேண்டும் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்……..

நமக்குள்ளிருந்தே உதவியெல்லாம் கிடைக்கும் :

……நாம் பட்டுப் புழுவைப் போலிருக்கிறோம். நமது உடலிலிருந்து வெளிப்படும் பொருளைக் கொண்டே நாம் பட்டு நூல் கூடு உண்டாக்குகிறோம். நாளடைவில் அதிலேயே சிறையிடப்படுகிறோம். ஆனால் இது நிரந்தரமானதல்ல. அந்தக் கூட்டுக்குள்ளேயே நாம் நிச்சயமாக ஆத்மஞான அநுபூதியை வளர்த்துக் கொள்வோம். பின்னர் வண்ணாத்திப் பூச்சியைப் போலச் சுதந்திரமாக வெளி வருவோம்; இந்தக் கர்ம வலையை, நம்மைச் சுற்றி நாமேதான் பின்னிக் கொண்டோம். நம்முடைய அஞ்ஞானத்தின் காரணமாக, நாம் கட்டுண்டு விட்டதாக நினைத்து உதவி கோரிக் கண்ணீர்விட்டுக் கதறுகிறோம். உதவியானது வெளியிலிருந்து வராது. நமக்குள்ளிருந்தேதான் வரும், உலகிலுள்ள எல்லாக் கடவுள்களிடமும் முறையிட்டுப் பார். பல ஆண்டுகள் கதறினேன். இறுதியாக எனக்கு உதவியளிக்கப்பட்டதை நான் கண்டேன். ஆனால் எனக்குள்ளேயிருந்துதான் உதவி வந்தது. தவறுதல் காரணமாக நான் செய்ததையெல்லாம் திருப்பி மாற்ற வேண்டியிருந்தது. அது ஒன்றுதான் வழி. என்னைச் சுற்றிலும் நானே வீசிக் கொண்ட வலையை நான் வெட்டியெறிய வேண்டியிருந்தது. இவ்விதம் செய்வதற்கான சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது. ஒரு விஷயத்தை நான் நிச்சயமாக அறிவேன். அதாவது எனது அபிலாஷைகளில் ஒன்று கூட – அது நல்வழிப்பட்டதோ, தீயவழிப்பட்டதோ, எப்படியாயினும் சரி – வீணாகவில்லை. எனது ஆயுளில் நான் எத்தனையோ தவறுகளைச் செய்திருக்கிறேன். ஆனால் கவனியுங்கள். இந்தத் தவறுகள் ஒவ்வொன்றையும் நான் செய்திராவிட்டால் நான் இன்றுள்ள நிலையில் இருக்க முடியாது என்பது திண்ணமாக எனக்குத் தெரியும். ஆகவே எனது தவறுகளைப் பற்றி எனக்கு முழுத் திருப்திதான். அதற்காக நீங்கள் வீட்டுக்குப்போய் வேண்டுமென்றே தவறிழைக்க வேண்டுமென்று நான் கூறுவதாக நினைத்துச் சோர்ந்து போகவேண்டாம்; கடைசியில் எல்லாம் நேராகிவிடும் என்று தெரிந்து கொள்ளுங்கள், அது வேறு விதமாக ஆக முடியாது. ஏனெனில் நல்ல தன்மை நமது இயல்பு ஆகும். தூய்மை இயற்கையான நிலையாகும். அந்த இயற்கையை ஒருநாளும் அழிக்கவே முடியாது. நமது அடிப்படையான சுபாவம் எப்பொழுதும் ஒரே விதமாகவே இருக்கும்.


நல்லொழுக்கத்தை எப்படி நிலைநாட்டுவது?

….மனிதனானவன் ஒரு மையப்புள்ளியைப் போல் விளங்குகிறான். உலகிலுள்ள எல்லாச் சக்திகளையும் தன்னை நோக்கி இழுக்கிறான். தனது கேந்திரத்தில் எல்லாவற்றையும் உருக்கி ஒரு பெரிய சக்திச் சுழலாக வெளியில் மீண்டும் அனுப்புகிறான்……..

…..நல்லது-தீயது, இன்ப-துன்பம் இவையெல்லாம் அவனை நோக்கி ஓடுகின்றன. அவனைச் சுற்றிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒழுக்கப் பண்பு எனும் போக்கை உருவாக்குகின்றான். அதனை வெளிக்காட்டி, வெளியில் அதனை வீசுகிறான். எதை வேண்டுமானாலும் உறிஞ்சி இழுத்துகொள்ள அவனுக்குச் சக்தி இருப்பது போல அதனை வெளியில் எடுத்து வீசவும் அவனுக்குச் சக்தி உண்டு.

…..தொடர்ந்தாற் போல ஒரு மனிதன் தீய சொற்களைக் கேட்டு, தீயனவற்றையே செய்து வந்தால் அவனுடைய மனம் தீய பதிவுகளால் நிரம்பிக் கிடக்கும். அவை அவனது சிந்தனையும் வேலையையும் பாதித்து விடும்; அப்படிப் பாதிப்பதால் தீய பதிவுகள் எப்பொழுதுமே வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவற்றின் விளைவு தீயதாகவே இருந்து தீரும். அந்த மனிதன் தீயவனாகவே இருப்பான். அவனால் அதைத் தவிர்க்க முடியாது. அவனிடமுள்ள மனப் பதிவுகளின் மொத்தத் தொகுப்பானது, தீய காரியங்களைச் செய்வதற்கான பலமான உந்து சக்தியாக, தூண்டுகோலாக அமைகிறது. அவன் தன்னுடைய மனப் பதிவுகளின் கையில் இயந்திரம் போல, அவை அவனை தீயவை செய்யக் கட்டாயப்படுத்தும்.

அதுபோலவே ஒரு மனிதன் நல்ல கருத்துக்களையே நினைத்து நல்லனவற்றையே செய்து வந்தால் இந்த மனப்பதிவுகளின் மொத்தத் தொகுப்பும் நல்லதாகவே இருக்கும். முன் கூறியதைப் போலவே அவன் விரும்பாவிட்டாலும் கூட அவனை நல்லதையே செய்ய அது கட்டாயப்படுத்தும். ஒரு மனிதன் இவ்வளவு தூரம் நல்ல காரி பங்களைச் செய்து, இத்தனை நல்ல சிந்தனைகளைச் சிந்தித்தும் வந்ததால், நல்லனவே செய்வதற்கான மனப்போக்கு அவனுக்குத் தடுக்க முடியாததாக ஆகிவிடுகிறது. அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவனது இயல்பான போக்குகளின் மொத்தத் தொகுதியாக உள்ள அவனது மனமானது அவனைத் தவறிழைக்க விடாது. அவனது சுபாவங்கள் அவனைத் திருப்பி விட்டு விடும். அவன் பூரணமாகவே நல்ல வாசனைகளின் ஆளுகையின் கீழ் வாழ்வான். நிலைமை இப்படி ஆகும் போது ஒரு மனிதனின் நல்லொழுக்கமானது ஸ்திரப்பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிறது.

…… ஒரு மனிதன் வீணையில் ஒரு ராகத்தை வாசிக்கும் போது ஸ்வரப்படியில் ஒவ்வொரு இடத்திலும் கவனமான சுய நினைவுடன் ஒவ்வொரு விரலையும் வைப்பான். விரல்களின் அசைவு பழக்கமாக ஆகிறவரை அவன் இந்தச் செயலைத் திரும்பச் திரும்பச் செய்வான். பிறகு நாளடைவில் ஒவ்வொரு தனி ஸ்வரத்தையும் பற்றிக் குறிப்பாகக் கவனம் செலுத்தத் தேவையின்றியே அவன் ராகங்களை வாசித்து விடுவான். இது போலவே நமது இயல்புகளெல்லாம், மனப்போக்கெல்லாம் முற்காலத்தில் நல்ல ஞாபகத்துடன் வேண்டுமென்றே நாம் செய்த செய்கைகளின் விளைவுதான் என்பது தெரிகிறது.

புலனடக்கத்தால் விளையும் ஆற்றல் :

நமது உணர்ச்சிகளைக் கட்டவிழ்த்து விடும்போது, ஏராளமான சக்தியை விரயம் செய்கிறோம். நமது வரம்புகளைச் சிதற அடிக்கிறோம். மனத்தை அமைதி குலையச் செய்கிறோம். அந்நிலையில் மிகக் குறைந்த அளவில் தான் வேலை நடக்கிறது. வேலையின் வடிவத்தில் வெளிச் செல்ல வேண்டிய சச்தி வெறும் உணர்ச்சியாகச் செலவாகி விடுகிறது. அதனால் எவ்விதப் பயனுமில்லை . மனமானது மிக அமைதியாக, குளிர்ந்த நிலையில் இருக்கும் பொழுது அதன் முழுச் சக்தியும் நல்ல காரியங்களைச் செய்வதில் செலவாகிறது. உலகில் தோன்றிள்ள மகத்தான ஊழியர்களின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் படித்துப் பார்த்தால் அவர்கள் அபார அமைதி வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்று தெரிந்து கொள்ளுவீர்கள். அவர்களது மனத்தின் சம நிலையை எதுவும் குலைக்காதுபோல் தோன்றும். அதனால்தான் கோபமடைகிற மனிதனால் பெரிய அளவில் வேலை செய்ய முடியாமற் போகிறது. எந்த ஒரு மனிதனை எதுவுமே கோபமூட்டாதோ, அவன் பெரும் காரியங்களைச் செய்கிறான். கோபம், வெறுப்பு அல்லது வேறு ஏதேனும் ஒரு உணர்ச்சிக்கு இடம் கொடுக்கிறவனால் வேலை செய்ய முடியாது. தன்னையே துண்டு துண்டாக உடைத்துக் கொள்ளுவதைத் தவிர அவனால் நடை முறையில் எதுவும் செய்ய முடிவதில்லை. சாந்தமான, மன்னிக்கிற, சம சித்தமுள்ள, அமைதியில் ஸ்திரப்பட்ட உள்ளம்தான் பெருத்த அளவில் வேலை செய்கிறது.

மனதில் ஏற்படுகிற வெறி உணர்ச்சியின் ஒவ்வொரு அலையையும் நீ கட்டுப்படுத்துவது உன்னுடைய சேமிப்பு நிதிக் கணக்கில் சேர்ந்து விடுகிறது. ஆகையால் ஒருவர் கோபித்தால் அவரிடம் திருப்பிக் கோபிக்காமல் இருப்பது நல்ல கொள்கையாகும். எல்லா நெறியொழுக்கத்துக்கும் இது பொருந்தும். “கெட்ட தன்மைகளைத் தடுக்காதே” என்று கிறிஸ்து சொன்னார். அது நீதிநெறிப்படி நல்லதுதான் என்பதை மட்டுமன்றி அது நாம் கடைப்பிடிக்கக் கூடிய மிக உத்தமமான கொள்கையாகும் என்பதை நாமே கண்டுப் பிடிக்கிறவரையில் நமக்குப் புரிவதில்லை. ஏனெனில் கோபத்தை வெளிக்காட்டுகிற மனிதனுடைய சக்தி நஷ்டமாகிறது. கோபமும் வெறுப்பும் கலந்த நிலைக்கு உனது மனம் செல்லுவதற்கு நீ அனுமதிக்கக் கூடாது.

…… நான்கு குதிரைகள் பூட்டிய “கோச்சு” வண்டியொன்று எவ்விதத் தங்குதடையின்றி மலைச் சரிவில் பாய்ந்து வரலாம்! அல்லது கோச்சு வண்டிக்காரன் அக் குதிரைகளைக் கட்டுப்படுத்திச் சரியானபடி ஓட்டலாம். இந்த இரண்டில் எதில் சக்தி தெரிகிறது? அவற்றை ஓட விடுவதிலா, பிடித்து நிறுத்துவதிலா? வானத்தில் பறந்து செல்லுகிற ஒரு பீரங்கி குண்டானது நெடுந்தூரம் பிரயாணம் செய்துவிட்டுப் பிறகு கீழே விழுகிறது. மற்றொன்று ஒரு சுவரின் மீது தாக்க, அதன் பிரயாணம் நின்று போய் விடுகிறது. குண்டு சுவரின் மீது மோதுவதாலும் கடுமையான உஷ்ணம் உருவாகிறது. கட்டுப்படுத்தித் தடுப்பதால் சக்தி உருவாகிறது. சுயநல நோக்கத்தைப் பின் தொடர்ந்து செல்லுகிற எல்லாச் சக்தியும் விரயமாகி விடுகிறது. உன்னிடம் திரும்பி வருவதற்கான சக்தியை அது உண்டாக்காது. ஆயின் அதனைக் கட்டுப்படுத்தினால் அது நமது வளர்ச்சிக்குப் பயன்படும். இந்தப் புலனடக்கம் தன்னடக்கமானது. பலம் மிக்க மனோ சக்தியை உண்டாக்கவும், கிறிஸ்துவை அல்லது புத்தரை உருவாக்கிய ஒழுக்கப் பண்பை உண்டாக்கவும் துணை செய்யும்…….

……பெரிய ஒரு கோப அலை மனதில் எழுந்தால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது? வெறுமனே அதற்கு எதிரிடையான ஒரு அலையை எழுப்புவதால் கட்டுப்படுத்தலாம். அப்பொழுது அன்பைப் பற்றி நினைக்க வேண்டும். சில சமயம் தாயார், தனது கணவனிடம் கடுங்கோபமாக இருக்கிறாள். இந்நிலையில் அவள் இருக்கும்பொழுது உள்ளே குழந்தை வருகிறது. குழந்தையை அவள் முத்தமிடுகிறாள். பழைய அலை செத்துப் போய் புதிய அலை எழுகிறது. அதுதான் குழந்தையிடம் அன்பு. முதல் அலையை இரண்டாவது அலை ஒடுக்கிவிடுகிறது. கோபத்துக்கு எதிர்ப்பான குணம் அன்புதான். அதுபோலவே திருடுகிற எண்ணம் வந்தால் திருடாமையைப் பற்றி நினைக்க வேண்டும். யாரிடமிருந்தாவது பரிசாக எதையாவது பெறவேண்டுமென்ற எண்ணம் எழுந்தால் அதற்கு எதிர்ப்பான எண்ணத்தால் எண்ணத்தை மாற்றிவிட வேண்டும்.

…..மிக ஆழ்ந்த மௌனமாக இருக்கும்போது, தனிமை நிலையில் மூழ்கி இருக்கும்போது அந்த நேரத்தில் தீவிரமான நடவடிக்கையைக் கண்டுபிடித்துச் செய்யக்கூடியவன் லட்சிய மனிதனாவான், அவன் மிகத் தீவிரமான நடவடிக்கைகளுக்கிடையே பாலைவனத்திலுள்ளது போன்ற அமைதியையும் தனிமையையும் அனுபவிப்பான். அந்த மனிதன் புலனடக்கத்தின் ரகசியத்தைத் தெரிந்து கொண்டு தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டுள்ளான். பெரிய நகரத்தினூடே அதில் காணப்படுத்திக் போக்குவரத்துக் குழப்பக் கூக்குரலிடையே அவன் போகிறான். போகும்போது ஒரு ஒலியும் எட்டமுடியாத குகையில் இருப்பதுபோல அவனது மனம் மிகுந்த அமைதியுடனிருக்கிறது. ஆனால் அதனிடையேயும் அவனது மனமானது எப்பொழுதுமே தீவிரமாக வேலை செய்கிறது. கர்மயோகத்தின் லட்சியம் இதுதான். இந்நிலையை நீங்கள் எய்திவிட்டால் வேலையின் ரகசியத்தை உண்மையிலேயே கற்றுக் கொண்டுவிட்டீர்கள் எனலாம்.

உண்மையான எண்ணங்களின் ஆற்றல் :

……. கௌதம புத்தர், தாம் இருபத்தைந்தாவது புத்தரென அடிக்கடி கூறக்கொள்வதை அவரது வாழ்வில் நாம் படித்திருக்கிறோம். வரலாறு கண்ட புத்தர் தமக்கு முன் சென்றவர்கள் அமைத்த அஸ்திவாரத்தின் மீதுதான் தமது அமைப்பை நிறுவியிருக்க வேண்டும் என்றாலும் அவருக்கு முன்னால் வந்து போன இருபத்துநான்கு பேர்களையும் வரலாறு அறியாது.

உத்தமமான உயர்ந்த புருஷர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், வெளிக்குத் தெரியாமலும் இருப்பார்கள். சிந்தனையின் சக்தியை உண்மையில் அவர்களேதான் அறிவார்கள். அவர்களுக்கு ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரியும். அதாவது அவர்கள் ஒரு குகைக்குள் சென்று, கதவுகளை அடைத்துவிட்டு ஐந்து உண்மையான கருத்துக்களை வெறுமனே நினைத்துவிட்டு, மடிந்து போய் விட்டாலும் இந்த ஐந்து எண்ணங்களும் சாசுவதமாக இருக்கும் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியும். அத்தகைய எண்ணங்கள் மலைகளைக் குடைந்துகொண்டு, கடல்களைக் கடந்து கொண்டு, உலகமெங்கும் பிரயாணம் செய்யும். மனித இதயங்களில் அவை ஆழமாகப் புகுந்து அந்தக் கருத்துக்களை மனித வாழ்க்கையில், நடைமுறையில், வாழ்ந்து காட்டக்கூடிய ஆண்களையும், பெண்களையும் நிர்மாணித்து உயர்த்தும்.


நீங்களே ரிஷிகள் ஆகிவிட வேண்டும்!

ரிஷிகள் உபதேசித்ததை மட்டும் நீங்கள் கற்றிருந்தால் போதாது. அந்த ரிஷிகள் மறைந்து விட்டார்கள். அவர்களது அபிப்பிராயங்களும் அவர்களுடன் மறைந்து விட்டன. நீங்களே ரிஷிகளாக வேண்டும். இதுவரை பிறந்துள்ள மிகப் பெரிய மனிதர்களைப் போல நமது அவதார புருஷர்களுக்கு இணையாக நீங்களும் மனிதர்கள் தாம். வெறும் ஏட்டுப் படிப்பினால் என்ன விளைந்து விடும்? தியாகத்தினால் கூட எதைத்தான் சாதித்துவிட முடியும்? மந்திர தந்திரங்களால் ஆவது என்ன? நீங்கள் உங்கள் கால்களிலேயே நிற்க வேண்டும்.

உண்மையான மனிதன் :

ஆண்மை வீர்யமுள்ளவர்களைத் தயாரிக்க இந்தப் புதிய வழி முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். உண்மையான மனிதன் சக்தியின் வடிவமாக இருக்க வேண்டும். அத்துடன் பெண்மையுள்ளமும் படைத்திருக்க வேண்டும். உங்களைச் சுற்றி வாழும் லட்சக்கணக்கான ஜீவன்களைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும். இருப்பினும் உறுதியுடன் வளைக்க முடியாமலும் நீங்களிருக்க வேண்டும். அத்துடன் கீழ்ப்படிகிற குணமும் உங்களுக்கு இருக்க வேண்டும். வெளிப் பார்வைக்குச் சற்று முரண்பட்ட குணங்களாக இவை தோன்றினாலும்கூட இந்த நற்குணங்கள் உங்களுக்கிருக்க வேண்டும். உங்களுக்கு மேலுள்ள அதிகாரி உங்களை ஆற்றில் குதித்து முதலையைப் பிடிக்க வேண்டுமென்று கட்டளையிட்டால் முதலில் நீங்கள் கீழ்ப்படிந்து விட்டுப் பிறகு காரணம் கேட்க வேண்டும். கட்டளை தவறாக வந்தாலும் முதலில் கீழ்ப்படிந்து விட்டுப் பிறகு அதை மறுத்துப் பேசுங்கள்.

நாம் பல சம்பிரதாய கோஷ்டிகளாகப் பிரிந்து கிடக்கிறோம். அதிலிருக்கிற தீமையென்னவெனில், ஒருவனுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனே அவன் புதிய ஒரு சம்பிரதாயத்தை ஆரம்பிக்கிறான். காத்திருப்பதற்கு அவனிடம் பொறுமையில்லை. ஆகவே உங்கள் சங்கத்திடம் உங்களுக்கு ஆழ்ந்த மதிப்பு இருக்க வேண்டும். அதில் கீழ்ப்படியாமைக்கு இடமே இல்லை……. நமது பாசறையில் துரோகிகளுக்கு இடமில்லை. காற்றைப் போல நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும். அத்துடன் இந்தச் செடியைப் போலவும் நாயைப் போலவும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

இந்தக் காலத்திற்குத் தேவையானவர்கள் சந்நியாசிகள்:

சில பேர்கள் வாழ்க்கையிலிருந்து வெளிவந்து, கடவுளுக்காக மாத்திரமே வாழ்ந்து உலக நன்மைக்காகச் சமயத்தைப் பாதுகாக்க வேண்டும்…. துறந்தால், அத்துறவில் உறுதியாக நில்லுங்கள். போரில் நூறுபேர் வீழ்ந்தால் அவர்கள் கையிலுள்ள கொடியை நீங்கள் தாங்கிப் பிடித்து முன்னே கொண்டு செல்லுங்கள். கடவுள் சத்திய வடிவம். யார் தோற்றாலும் பரவாயில்லை. கீழே விழுகிறவன், மற்றொருவனிடம் கொடியைக் கொடுத்து விடட்டும். அவன் அதை கொண்டு முன்னேறட்டும். கொடி ஒரு போதும் கீழே விழாது.

…எளியவர்களான கிருகஸ்தர்கள் என்ன பண்ணுவார்கள். பாவம்! அவர்களுக்குச் சிறிய ஒரு வாழ்க்கை உள்ளது. துறவிகள், சிவனின் பூத கணங்கள்தான் இதைச் செய்ய வேண்டும். “ஹர! ஹர! சம்போ !” என்ற முழக்கத்தால் வானத்தைக் கிழிக்க வேண்டியவர்கள் சந்நியாசிகளே.

-…வருங்காலத்தைப் பற்றி எனது நம்பிக்கை இளைஞர்களைப் பொறுத்துத்தான் இருக்கிறது. ஒழுக்கமுள்ள, புத்திசாலிகளான, பிறருக்குத் தொண்டு புரிவதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுகிற, கீழ்ப்படிதலுள்ள இளைஞர்கள் வேண்டும். எனது கருத்துக்களை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்காகத் தமது வாழ்க்கையைத் தியாகம் செய்து அதன் மூலம் நமக்கும், பொதுவாகத் தமது நாட்டுக்கும் நன்மை உண்டாக்கவேண்டும். மற்றபடி, சாதாரணத் தரத்திலுள்ள பையன்கள் கோஷ்டி கோஷ்டியாக வந்து கொண்டிருக்கிறார்கள்; வந்து கொண்டுதானிருப்பார்கள். அவர்கள் முகத்தில் மந்த சுபாவமானது எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது. அவர்களது உடல் வேலைக்குப் பயனின்றி பலவீனமாக உள்ளது; மனத்தில் தைரியம் இல்லை. அவர்களைக் கொண்டு எதைத்தான் சாதிக்க முடியும்? நசிகேதனின் நம்பிக்கையுடன் பன்னிரண்டு சிறுவர்கள் கிடைத்தால் இந்த நாட்டின் சிந்தனையையும், அபிலாஷை நாட்டங்களையும் புதியதொரு பாதையில் என்னால் திருப்பி விட்டுவிட முடியும்.

நல்ல திறமைசாலிகளாக எனக்குத் தோன்றுகிறவர்களில் சிலர் திருமணத்தளையால் தம்மை விலங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் உலக ரீதியான பெயர், புகழ் அல்லது செல்வத்தைத் திரட்டுவதற்காகத் தம்மையே விற்றுக் கொண்டு விட்டார்கள். மீதியிருக்கிற பெரும்பான்மை மக்கள், எந்த ஒரு உயர்ந்த கருத்தையும் வாங்கிக் கொள்ளத் தகுதி, திறமையற்றவர்களாக உள்ளனர்.

ஆயினும்கூட நான் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடவில்லை என்பது உண்மைதான். ஏனெனில் இறைவன் திருவுள்ளப்படி இந்தச் சாதாரணப் பையன்களிடமிருந்தே காலப்போக்கில், பணியிலும் ஆத்மிகத்திலும் சிறந்த மகாவீரர்கள் உதித்து வருங்காலத்தில் எனது கருத்துக்களை நடைமுறையில் நடத்திக் காட்டுவார்கள்.

படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி இணைக்க வேண்டும்:

படித்த இளைஞர்களிடையே பணிபுரியுங்கள். அவர்களை ஒன்று திரட்டி இணையுங்கள். மகத்தான செயல்களை, மகத்தான தியாகங்களின் மூலமாகவேதான் நிறைவேற்ற முடியும். ….வேலை செய்யுங்கள்; கற்பனையுள்ள கருத்தை, திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். எனது வீரமிக்க, உயர்ந்த நல்ல ஆத்மாக்களே! சக்கரத்தில் உங்களது தோளைக் கொடுத்துத் தள்ளுங்கள். பெயர், புகழ் அல்லது வேறு எந்தப் பொருளற்ற விஷயத்தையும் எதிர்பார்த்துத் திரும்பிப் பாராதீர்கள், நில்லாதீர்கள். பரிபூரணமாக சமர்ப்பணமாகி வேலை செய்யுங்கள். “புல்லைக்கூடக் கயிறாகத் திரித்துப் பின்னி இணைத்தால் அதைக்கொண்டு மத யானையையும் கட்டிப்போட்டுவிட முடியும்” என்பதை நினைவிற்கு கொள்ளுங்கள்.

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் எனது பிரார்த்தனை :

உலக குருவாகி, உலகெல்லாம் ஒன்றுதான் என்ற இணைப்புச் செய்தியைப் பிரசாரம் செய்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் உங்களது இதயக் கமலத்தில் வாசம் செய்ய வேண்டும்; அதன் மூலம் உங்களது விருப்பங்களெல்லாம் ஈடேறிய பின்னர் கலங்காத உள்ளத்துடன், மோகமென்னும் பயங்கரமான பெருங்கடலிலிருந்து மற்ற மக்களை மீட்க முழு ஆற்றலுடன் நீங்கள் முயல வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

பராக்கிரமம் உங்களை ஆட்கொள்ளட்டும். வீரன்தான் முக்தியை எளிதில் எட்டிப்பிடித்து எய்த முடியும். கோழை அல்ல. வீரர்களே! வரிந்து கச்சை கட்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் முன் எதிரிகள் நிற்கிறார்கள். மோக வெறியாகிற பயங்கரப் படை முன் நிற்கிறது. “மகத்தான சாதனைகளுக்கு முட்டுக்கட்டையாக ஏராளமான இடையூறுகள் நிறைந்திருக்கும்” என்பது உண்மைதான்; சந்தேகமில்லை. இருப்பினும் குறிக்கோளை அடைய முழுச் சக்தியுடன் நீங்கள் முனைய வேண்டும்.

மேலே செல்லுங்கள்! முன்னேறுங்கள்!! வீரமிக்க ஆன்மாக்களே!!! விலங்குகளால் கட்டுண்டுக் கிடக்கிறவர்களை விடுதலை செய்ய, துர்பாக்கியமான நிலையில் வாழ்கிறவர்களுடைய துயரச் சுமையைக் குறைக்க, அறிவீனம் நிறைந்த உள்ளங்களின் காரிருளை நீக்க, ஒளியூட்ட முன்னேறுங்கள். “அச்சமற்றிரு” என்று வேதாந்தக் கொள்கை முரசடித்து உணர்த்துகிறது பாருங்கள்! கம்பீரமான அவ்வொலி உலகில் வாழ்கிற எல்லா மக்களுடைய உள்ளங்களிலுமுள்ள முடிச்சுச் செடுக்குகளை அவிழ்த்து விடட்டும்.

ஹிந்துக்களே! மயக்கந்தெளிந்து எழுங்கள் :

“உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான்னிபோதத” – “எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நில்லாதே” என்று ஒவ்வொரு ஆத்மாவையும் அறைகூவி அழைப்போம். எழுங்கள்! பலவீனமாகிற இந்த மனமயக்கத்திலிருந்து எழுந்திருங்கள். உண்மையில் எவனுமே பலவீனனல்லன். ஆத்மா முடிவில்லாதது; சர்வசக்திதான், எல்லாம் உணர்ந்ததாகும். எழுந்து நில்லுங்கள். உங்கள் சுயசக்தியை வற்புறுத்துங்கள். உங்களுக்குள் உறைகிற தெய்வத்தைப் பிரகடனம் பண்ணுங்கள். அவரை மறக்காதீர்கள். அளவுக்கு மீறிய செயலின்மை, வரம்பு கடந்த பலவீனம், மிதமிஞ்சிய மோஹ மயக்கம் – இவை நமது இனத்தவரிடையே சூழ்ந்திருந்தது; இன்றும் சூழ்ந்துள்ளது.

இன்றைய ஹிந்துக்களே! தாமாகவே மயக்கந் தெளிந்து எழுந்திருங்கள். அதற்கான வழி உங்கள் புனித நூல்களில் காட்டப்பட்டுள்ளது. உங்களது உண்மையான ஸ்வரூபத்தை நீங்களே கற்றுணருங்கள்; ஒவ்வொருவருக்கும் அவரவர்களது ஸ்வரூபத்தைக் கற்பியுங்கள். உறங்குகிற ஆத்மாவை அறைகூவி அழையுங்கள். எப்படித்தான் அது விழித்தெழுகிறது பாருங்கள்! உறங்குகிற இந்த ஆத்மா விழித்தெழுந்து வேலை செய்யத் தொடங்கினால் சக்தி வரும்; புகழ் ஓங்கும்; நல்ல குணங்களெல்லாம் தோன்றும்; மிகச் சிறந்தவையெல்லாமே வந்தெய்தும்.

மீண்டும் இளமைத் துடிப்புப் பெற்ற, புகழ் ஓங்கிய பாரதம்:

வருங்காலத்துக்குள் நான் புகுந்து பார்க்கவில்லை. அதில் எனக்கு அக்கறையுமில்லை. ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத் தெளிவாக உயிர்த்துடிப்புடன் நான் காண்கிறேன். புராதனமான அன்னை மீண்டும் எழுந்துவிட்டாள். தனது அரியணையில் அமர்ந்திருக்கிறாள். மீண்டும் இளமையெழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்து கொண்டிருக்கிறாள். சாந்தியும், அருளும் கலந்த மொழியால் உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்.

தொண்டன் – சிறந்த தலைவன் 4

தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான வழிகாட்டிதான் தொண்டன். இந்த தொண்டன், சிறந்த தலைவனை உருவாக்குவான்.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.

உண்மையிலேயே வெற்றிகரமான வாழ்வின் ரகசியம்
அல்லது
‘வேலை’ செய்வதில் உள்ள விஞ்ஞான முறையும் கலையும்

உள்ளத்தையும் மூளையையும் உயர் லட்சியங்களால் நிரப்பி வையுங்கள் :

தசைகளின் மூலமாகச் சிறிதளவு சக்தியை வெளிப்படுத்துவதற்கு “வேலை” என்ற பெயர். ஆனால் சிந்தனை எங்கே இல்லையோ, அங்கே வேலையும் இராது. ஆகையால் உங்களது மூளையை உயர்ந்த சிந்தனைகளால், மகோன்னதமான லட்சியங்களால் நிரப்பி வையுங்கள். இரவும் பகலும் அவற்றை உங்கள் கண் முன் வையுங்கள்; அதிலிருந்து மகத்தான வேலை உருவாகி வெளிவரும்.

வானத்தை எல்லோரும் பார்க்க முடியும். நிலத்தில் ஊர்ந்து செல்கிற புழுவும் கூட நீலவானத்தைப் பார்க்கத்தான் செய்கிறது. ஆனால் வானத்திலிருந்து அது எவ்வளவு தூரத்திலிருக்கிறது பாருங்கள்! நமது லட்சியமும் அப்படித்தான் இருக்கிறது. அது நெடுந்தொலைவில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் நாம் அதனை அடைந்தே தான் தீர வேண்டும். ஈடு இணையற்ற மகோன்னதமான ஒரு லட்சியத்தை நாம் கண்டிப்பாக வைத்துக் கொள்ளத் தான் வேண்டும். துரதிர்ஷ்டவசமாகப் பெரும்பான்மையான மக்கள் தமது இருண்ட வாழ்க்கையில் எந்த ஒரு லட்சியமும் இன்றித் தட்டுத் தடுமாறி அலைகிறார்கள். லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள மனிதன் ஆயிரம் தவறுகள் இழைக்கிறான் என்றால் லட்சியமற்றவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்கிறான் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆகவே லட்சியம் ஒன்றை வைத்துக் கொள்வது மிக நல்லது. இந்த லட்சியத்தைப் பற்றி முடிந்த அளவு அதிகமாக நாம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அது நமது உள்ளங்களில் நுழைந்து, மூளைகளில் நுழைந்து, நமது இரத்தக் குழாய்களில் கூட நுழைந்து ஒவ்வொரு துளி இரத்தத்திலும் துடி துடிக்கிறவரையில், நமது உடலிலுள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் வியாபித்து நிற்கிற வரையில் லட்சியத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதைக் குறித்துத் தியானம் செய்யவேண்டும். உள்ளம் நிரம்பிப் பெருகும் போது வாய் பேசுகிறது. உள்ளம் நிரம்பிப் பெருகும் பொழுது கைகளும் வேலை செய்கின்றன.

முத்துச் சிப்பியைப் போல் இருங்கள் :

நீங்கள் முத்துச் சிப்பியைப் போல இருக்க வேண்டும். பாரத நாட்டில் அழகான ஒரு கற்பனைக் கதையுள்ளது. அதாவது சுவாதி நட்சத்திரம் உச்சமாக இருக்கும் பொழுது மழை பெய்து, அதிலிருந்து ஒரு மழைத்துளி சிப்பிக்குள் விழுந்தால், அந்த மழைத்துளி முத்தாக மாறிவிடுமாம். முத்துச் சிப்பிகளுக்கு இது தெரியும். சுவாதி நட்சத்திரம் பிரகாசிக்கும் பொழுது அவை மேலே வருகின்றன. அரியதான அந்த மழைத்துளியைப் பிடித்து வைத்துக் கொள்ள அன்று காத்திருக்கின்றன. அவற்றுக்குள்ளே ஒரு நீர்த்துளி விழுந்ததும், முத்துச் சிப்பிகள் தமது ஓடுகளை அக்கணமே மூடிக்கொண்டு கடலின் அடிமட்டத்துக்குப் பாய்ந்து சென்று விடுகின்றன. அங்கே அந்த நீர்த்துளியைப் பொறுமையுடன் முத்தாக வளர்க்கக் காத்திருக்கின்றன.

நாமும் அதுபோலவே இருக்க வேண்டும். முதலில் செவிகளால் கேட்க வேண்டும்; பிறகு புரிந்துகொள்ள வேண்டும்; அதன் பின்னர் மனத்தை அலைக்கழிக்கிற எல்லாக் காரியங்களையும் கைவிட்டுவிட்டு, வெளிக்கவர்ச்சிகளால் பாதிக்கப்படாதபடி மனக்கதவை மூடித் தாழிட்டு, அந்தப் பேருண்மையை நமக்குள்ளேயே வளர்த்துக் கொள்வதில் முழு மனத்துடன் ஈடுபட வேண்டும். ஒரு கருத்து புதுமையாக இருக்கிறது என்பதற்காக மட்டும் அதனை ஒப்புக்கொண்டு ஏற்று வேலை செய்து விட்டு அதை விடப் புதிதாக வேறு ஒன்று கிடைத்ததும் பழையதைக் கைவிடுவதால் உனது சக்தியை வீணடித்து விடுவாய். இது அபாயகரமானது. ஒரே வேலையை ஏற்றெடுத்துக்கொள். அதனைச் செய். அந்த வேலையை இறுதி வரையில் செய். முடிவைக் காண்பதற்கு முன்னால் அதனைக் கைவிடாதே. ஒரே ஒரு கருத்துக்குத் தனது மனத்தைப் பறிகொடுத்துவிட்டுப் பைத்தியமாக ஆகக்கூடிய மனிதன் மட்டுந்தான் இறுதி ஒளியைக் காண்பான். இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக வாய் வைத்து மேய்கிறவன் ஒரு நாளும் எதையும் எய்தமாட்டான். அவ்வாறு செய்வதால் அவனுக்குச் சிறிதளவு உற்சாகக் கிளுகிளுப்பு ஏற்படலாம், ஆனால் அத்துடன் அது மாய்ந்து போகும்…..

… ஒரு கருத்தை ஏற்றுக்கொள். அந்த ஒரு கருத்தை உனது வாழ்வாக மாற்றிக் கொண்டு விடு. பிறகு அதைப் பற்றியே சிந்தனை செய்ய வேண்டும். அதைப் பற்றியே கனாக்காண வேண்டும்; அந்தக் கருத்தைக் கொண்டே உயிர் வாழவேண்டும். உனது மூளை, தசைகள், நரம்புகள், உனது உடலின் உறுப்புக்கள் இவையெல்லாம் அந்தக் கருத்தால் நிரம்பி விடட்டும்; மற்றெல்லாக் கருத்துக்களையும் அப்படியே கைவிட்டு விடு. வெற்றிக்கு இதுவே வழி. ஆத்மிகச் சிங்கங்கள் இந்த வழிமுறை மூலம்தான் உண்டாக்கப்படுகிறார்கள். மற்ற மக்கள் எல்லோரும் பேசுகிற வெறும் இயந்திரங்கள்தான்……

……… வெற்றி பெற வேண்டுமானால் உங்களுக்கு அபாரமான விடாமுயற்சியும், அபாரமான மன வலிமையும் இருக்க வேண்டும். இடைவிடாது முயற்சி செய்கின்ற ஓர் ஆத்மா, “நான் கடல் நீர் முழுவதையும் குடித்து விடுவேன். எனது மனோ வலிமையால் மலைகளைப் பொடிப் பொடியாக்கி விடுவேன்” என்று கூறுகிறது. அத்தகைய சக்தித் துடிப்பும், அத்தகைய மனோசக்தியும் பூணுங்கள். கஷ்டப்பட்டுவேலை செய்யுங்கள். நீங்கள் குறிக்கோளைக் கண்டிப்பாக எய்தி விடுவீர்கள்.


மகாவீரர் உங்கள் லட்சியமாகட்டும் :

மகாவீர ஹனுமானின் ஒழுக்கப்பண்பினை உங்களது லட்சியமாக நீங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும். ராமச்சந்திரரின் ஆணையால் அவர் எவ்வாறு கடலைக் கடந்தார் என்பதைப் பாருங்கள். வாழ்வையோ சாவையோ பற்றி அர் ஒரு சிறிதும் அக்கறைப்படவில்லை. புலன்களனைத்தும் அவர் வசப்பட்டிருந்தன. ஆச்சரியகரமான விவேகி அவர். தனி ஒரு மனிதனுக்கு எப்படித் தொண்டாற்ற வேண்டும் என்பதற்குப் பெரும் உதாரணமாக விளங்கிய அவரது வாழ்க்கையை ஒட்டி நீங்கள் உங்களது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஒன்றிலிருந்து மற்ற எல்லா லட்சியங்களும் படிப்படியாக உங்கள் வாழ்வில் வெளித் தோன்றும். மறு பேச்சின்றி குருவுக்குக் கீழ்ப்படிவது, பிரம்மசரியத்தைக் கடுமையாகக் கடைப்பிடிப்பது, இது தான் வெற்றியடைவதன் ரகசியம். தொண்டாற்றுகிற லட்சியத்தை ஹனுமான் தமது வாழ்வின் ஒரு பக்கத்தில் பிரதிபலிப்பதைப் பார்க்கிறோம் என்றால் மறுபுறம் சிங்கத்தை ஒத்த அவரது தைரிய உணர்ச்சி உலகத்தை பிரமிப்படைய வைக்கிறது. ராமருடைய நன்மைக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வதில் அவருக்கு எள்ளளவும் தயக்கமில்லை. ராம சேவையைத் தவிர மற்ற அனைத்திடமும் அவருக்குத் தினையளவும் அக்கறை கிடையாது. பிரம்ம பதவி, சிவபதவி, அல்லது உலக தேவதைகளின் பதவி கிடைப்பது பற்றிக் கூட அவருக்கு அக்கறையே இல்லை. ஸ்ரீராமனின் கட்டளையை நிறைவேற்றுகிற ஒரு காரியம் மாத்திரமே அவரது வாழ்க்கையின் விரதமாகும். அத்தகைய முழுமனமுள்ள பூரண பக்தியே நமக்குத் தேவை.

தேடுங்கள் : உங்களுக்குக் கிடைக்கும்,

சோம்பேறியான வழிப்போக்கன் ஒருவன் ஒருநாள் ஒரு வீதி வழியே மெல்லப் போய்கொண்டிருந்தான். ஒரு கிழவர் தம் வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பதைக் கண்டான், உடனே அங்கு நின்று அவரிடம் ஒரு குறிப்பிட்ட கிராமம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்று தயங்கியவாறே கேட்டான். “பெரியவரே! இன்ன கிராமம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது?” என்று வினவினான். கிழவர் பதில் அளிக்கவில்லை . பல தடவை அதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டான். பிறகும் பதிலில்லை. அலுத்துப்போய் அவன் தன் வழியே நடக்கத் தொடங்கினான். உடனே கிழவர் எழுந்து நின்று “நீ கேட்கிற கிராமம் இங்கிருந்து ஒரு மைல் தூரத்தில்தான் உள்ளது” என்றார். உடனே வழிப் போக்கன் “ஏன்? இதற்கு முன்னர் உங்களிடம் கேட்டபோது நீர் ஏன் பேசவில்லை ?” என்று வினவினான். அதற்கு மறுமொழியாகக் கிழவர், “ஏனெனில் அப்பொழுது தயங்கித் தடுமாறிக் கொண்டு அந்த ஊருக்குப் போவது பற்றி அக்கறையின்றி நீ காணப்பட்டாய். ஆனால் இப்பொழுது நல்ல உறுதியுடன் புறப்பட்டு விட்டாய். பதில் பெறுவதற்கு உனக்கு உரிமையுண்டு” என்றார்.

என் மகனே! இக்கதையை நீ நினைவிற் கொள்வாயா? வேலை செய்யப் போ. மற்றவை எல்லாம் வரும்.

அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் (கீதை 9, சு 22.)

“என்னைத் தவிர வேறு எதனையும் எண்ணாமல் என்னிலே உறைந்து என்னையே சார்ந்து வாழ்கிறவனுக்குத் தேவைப்படுகிற அனைத்தையும் நான் அளித்துவிடுகிறேன்.”

…..கிறிஸ்துவின் சொற்களை நினைவிற் கொள்ளுங்கள்: “கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அது உங்களுக்குக் கிடைக்கும். தட்டுங்கள், அது உங்களுக்குத் திறக்கப்படும்” இதில் ஒவ்வோர் எழுத்தும் உண்மைதான். அது வெறும் சொல் அலங்காரமோ, கற்பனையோ அல்ல….

……. நீ உண்மையாகவே விரும்பிய ஏதேனும் உனக்குக் கிடைக்காமல் இருந்ததா? அப்படி ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில் தேவைதான் மனித உடலை உண்டாக்குகிறது. முதலில் ஒளி இருந்தது. அதுதான் உனது தலையில், “கண்கள்” என்று அழைக்கப்படுகிற துளைகளைப் போட்டது. ஒளி இருந்திருக்கவில்லையென்றால் உங்களுக்குக் கண்களே இருந்திருக்காது. ஒலிதான் காதுகளை உண்டாக்கியது. உறுப்புத் தோன்றுவதற்கு முன் உணர வேண்டிய பொருள் முதலிலே தோன்றியிருந்தது.

கேளுங்கள், அது கொடுக்கப்படும்

….. ஒரு விருப்பத்துக்கும் வேறொரு விருப்பத்துக்குமிடையே வேறுபாடு உண்டென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு சிஷ்யன் தன் குருவிடம் சென்றான். “ஐயனே! எனக்குச் சமயம் வேண்டும்” என்று கூறினான். குருநாதன் அந்த இளைஞனைப் பார்த்தார். ஒன்றும் பேசாமல் சற்றே சிரித்தார். அந்த இளைஞன் தினமும் வருவான். சமயம் வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்வான். ஆனால் அந்த இளைஞனைவிடப் பெரியவருக்கு விஷயங்களெல்லாம் நன்கு தெரியும். ஒரு நாள் உஷ்ணம் அதிகமாக இருந்தது. ஆற்றுக்குப்போய் குளித்து விட்டு வரலாமென்று அந்த இளைஞனைப் பெரியவர் அழைத்துப் போனார். ஆற்றுக்குப் போனதும் இளைஞன் நீரில் மூழ்கினான். பெரியவர் அவனைப் பின் தொடர்ந்தே சென்று அவன் தண்ணீருக்குள் இருக்கும் பொழுது அவனை அழுத்தி வைத்துப் பிடித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அந்த இளைஞன் திக்குமுக்காடித் துடித்த பிறகு அவனை விட்டு விட்டார். “தண்ணீருக்குள் இருந்தபோது நீ மிக முக்கியமாக எதை விரும்பினாய்?” என்று கேட்டார். “ஒரு தடவை மூச்சு இழுத்து விடுவதற்காகக் காற்றை விரும்பினேன்” என்று பதிலளித்தான் சிஷ்யன். “அந்த அளவு தீவிரத்துடன் நீ கடவுளைக் காண வேண்டுமென விரும்புகிறாயா? அப்படி விரும்பினால் ஒரு கணத்திலேயே அவனை அடைவாய்” என்று குரு கூறினார். “அத்தகைய தாகம், அத்தகைய தீவிர விருப்பம், இல்லையேல் சமயம் உனக்குக் கிடைக்காது. உனது மூளை, அறிவு, உனது புத்தகங்கள், உனது அமைப்பு முறைகள் இவை எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நீ எவ்வளவுதான் போராடினாலும் உனக்குச் சமயம் கிடைக்காது” என்றார் குரு.

புத்தரைப் போன்று உணர்ச்சி கொள்ளுங்கள்: அவரைப் போலவே ஆகிவிடுவீர்கள் :

……மனப்பூர்வமாக மற்றவர்களைப் பற்றிய உணர்ச்சி உனக்கு உள்ளதா? உணருகிறாய் என்றால் நீ ஒருமையை நோக்கி வளர்ந்து செல்கிறாய். பிறர்பொருட்டு நீ மனவெழுச்சி கொள்ளாவிட்டால், உலகில் பிறந்த அறிவாளிகளில் நீ மிகமிகப் பெரியவனாக இருந்தாலும்கூட, நீ ஒன்றுமில்லாத பூஜ்யம்தான். நீ வெறும் வறட்டு அறிவாளி; நீ அப்படியேதான் வாழ்வாய்…..

தீர்க்கதரிசிகளுடைய சக்தி எங்கே உறைந்துள்ளதென்று நீ உலக வரலாற்றிலிருந்து தெரிந்து கொண்டிருக்கிறாயா? எங்கு இருந்தது? அறிவுத் திறமையிலா? அவர்களில் எவராவது ஒரு புத்தகத்தையோ, தத்துவ சாஸ்திரத்தையோ, மிக நுணுக்கமான அநுமானங்களுடன் கூடிய தர்க்க சாஸ்திரத்தையோ இயற்றியிருக்கிறார்களா? ஒருவர் கூட அவ்வாறு எழுதவில்லை. அவர்கள் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசினார்கள். கிறிஸ்துவைப் போன்ற மனப் பூர்வமான உணர்ச்சி கொண்டால் நீ கிறிஸ்து ஆவாய். புத்தரைப் போன்ற ஆழ்ந்த உணர்ச்சி கொண்டால் நீ புத்தராக ஆவாய்; இதய பூர்வமான உணர்ச்சிதான் வாழ்க்கை ஆகும்; அதுவே சக்தி. அதுவே வீரியம். அது இல்லாமல் அறிவுத் திறமையைக் கொண்டு எவ்வளவுதான் பாடுபட்டாலும் கடவுளை எய்த முடியாது. அறிவு என்பது நடமாடும் சக்தியில்லாத உடல் உறுப்புக்களைப் போன்றதாகும். அவற்றினுள்ளே உணர்ச்சியானது புகுந்து அவற்றை நடமாட வைக்கும்பொழுதுதான் அவை அசைந்து கொடுத்து வேலை செய்கின்றன. உலகம் முழுவதும் இதுவே நிலை; இதனை நீங்கள் எப்பொழுதும் நினைவிற் கொள்ள வேண்டும்………

வால்மீகியின் முதற் பாட்டு-தீவிரமான இரக்க உணர்ச்சியிலிருந்து தோன்றிற்று :

……மகரிஷியான வால்மீகி புனித கங்கா நதியில் நீராடுவதற்காக ஒரு நாள் சென்ற போது ஒரு புறா ஜோடியானது வானத்தில் வட்டமிட்டுப் பறந்து கொண்டே ஒன்றையொன்று முத்தமிட்டு விளையாடிக் கொண்டிருந்தது. மகரிஷி மேலே பார்த்தார். அக் காட்சியால் மனங்களித்தார். ஆனால் மறுகணமே அவரைத் தாண்டிப் பாய்ந்து சென்ற ஓர் அம்பு ஆண் புறாவின் மீது தைத்து அதனை உடனே கொன்றது. புறா செத்துத் தரை மீது விழுந்ததும் பெண்புறா, ஆண் புறாவின் சடலத்தைச் சுற்றிச் சுற்றித் துக்கத்துடன் வட்டமிட்டுப் பறந்தது. ஒரு கணத்துக்குள் மகரிஷிக்குச் சகிக்க முடியாத துக்கம் மூண்டு விட்டது. திரும்பி அந்த வேடனை நோக்கினார்.

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாச்வதீஸ் ஸமா:
யத் க்ரௌஞ்ச மிதுனாதேக மவதீ: காம மோஹிதம்.

(வால்மீகி ராமாயணம் பாலகாண்டம்)

”நீ ஈவிரக்கம் சிறிதுமற்ற ஒரு கொலை பாதகன். அன்பைக்கண்டும்கூட உனது கொலைக்கரம் நிற்கவில்லையே?” என்று கதறினார்.

‘இது என்ன? நான் என்ன பேசுகிறேன்?’ என்ற கவி தமக்குள்ளேயே சிந்தித்தார். “இதுபோல இதற்கு முன்னர் நான் பேசியதே கிடையாதே?’ என்று எண்ணமிடலானார். உடனே அசரீரி வாக்கு ஒலித்தது, “அஞ்சாதே; உன் வாக்கிலிருந்து வெளிவருவது கவியாகும். உலக நன்மைக்காக ராம சரித்திரத்தைக் கவிதையாக எழுது” என்று கட்டளை பிறந்தது. முதற் கவிதை இப்படித்தான் துவங்கியது. ஆதி கவியான வால்மீகியின் வாயிலிருந்து புறப்பட்ட முதற்கவிதை தீவிரமான இரக்க உணர்ச்சியின் காரணமாக எழுந்தது. அதற்குப் பிறகுதான் ராமனின் சரித்திரமாகிய அழகொழுகும் ராமாயணத்தை அவர் இயற்றினார்.


சரியான நோக்கு :

…… நீ செய்கிற நற்பணியெல்லாம் உனக்காக, உனது சொந்த நலனுக்காகத் தான். நீயும் நானும் போய்த் தூக்கி விடுவோம் என்று எதிர்பார்த்துக் கடவுள் சாக்கடையில் ஒன்றும் விழுந்து கிடக்கவில்லை. ஆஸ்பத்திரியையோ அல்லது வேறு ஒன்றையோ கட்டிவிட்டு அவருக்கு நாம் உபகாரம் செய்துவிட்டதாக எதுவும் எண்ணவேண்டாம். வேலை செய்ய அவர் உன்னை அனுமதிக்கிறார். உலகமாகிற இந்தப் பெரிய உடற்பயிற்சிக் கூடத்தில் உன் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்துக் கொள்ள அவர் அனுமதியளித்திருக்கிறார். தனக்கு உபகாரமாக இருப்பதற்கு அல்ல. நீயே உனக்கு உதவி பண்ணிக் கொள்ளலாம் என்பதற்காகக் கடவுள் ஏற்பாடு செய்திருக்கிறார். நீ உதவி பண்ணா விட்டால் அதற்காக ஓர் எறும்பாவது செத்துப் போகும் என்று நீ நினைக்கிறாயா? நினைத்தால் அது மகா மோசமான தெய்வ நிந்தனையாகும்….

… இறைவனுக்காக வேலை செய்கிற வாய்ப்பான பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் அவருக்கு உதவியெதுவும் செய்யவில்லை. உங்களுடைய மனத்திலிருந்து உதவி என்ற சொல்லை அகற்றிவிடுங்கள், உங்களால் உதவி பண்ணவே முடியாது. உதவி பண்ணுவது என்பது தெய்வ நிந்தனையாகும்.

அவரை வழிபட நமக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உலகத்துக்கு முன்னே அத்தகைய பக்தி வணக்கத்துடன் நில். அப்பொழுது பூரணமான பற்றின்மைக் குணம் உனக்குக் கிடைக்கும். இதுவே. உனது கடமை. வேலை செய்யும் போது கொள்ள வேண்டிய சரியான நோக்கு இது. கர்ம யோகம் கற்பிக்கிற ரகசியம் இதுதான்.


சுயநலமின்றி வேலை செய்பவனே மிக உயர்ந்த மகிழ்வடைவான்

பிச்சைக்காரனுக்கு ஒரு போதும் மகிழ்வே இல்லை. பிச்சைக் காரனுக்குக் கிடைக்கிற பிச்சையில் பரிதாப உணர்ச்சியும், ஏளனமும் கலந்திருக்கும் அல்லது குறைந்த பட்சமாக ‘இந்தப் பிச்சைக்காரன் மட்டமானவன்’ என்ற எண்ணமாவது அதில் தொக்கி நிற்கும். தனக்குக் கிடைப்பதை அவன் ஒருகாலும் உண்மையான மகிழ்வுடன் அநுபவிக்க முடியாது.

நாமெல்லாம் பிச்சைக்காரர்கள். நாம் எதைச் செய்தாலும் பிரதிபலனை எதிர்பார்க்கிறோம். நாமெல்லாம் வியாபாரிகள். வாழ்க்கையை, நல்ல குணங்களை, சமயத்தை நாம் விலை பேசுகிறோம். அந்தோ! அன்பைக்கூட நாம் வியாபாரம் பண்ணுகிறோமே!

வியாபாரத்துக்காக நீ வந்தால், கொடுக்கல் வாங்கல் பேரம் பண்ணுவதானால், வாங்கி விற்கிற காரியம் செய்வதானால், வாங்குதல் விற்பனை இவற்றுக்கான சட்டங்களுக்கு உட்பட வேண்டும். வியாபாரத்தில் நல்ல காலமும் பொல்லாத காலமும் உண்டு; விலையில் ஏற்றமும் சரிவும் உண்டு. லாபமே கிடைக்குமென்று எப்பொழுதும் எதிர்பார்க்கிறாய்! இது கண்ணாடியில் உன் முகத்தைப் பார்த்துக் கொள்வது போன்றது. அதில் உன்முகம் பிரதிபலிக்கிறது. நீ வெறுப்புடன் முகத்தைச் சுளித்தால், கண்ணாடியிலும் அதுவே தெரியும். நீ சிரித்தால் கண்ணாடியும் சிரிக்கும். இதுதான் வாங்குவதும் விற்பதும், கொடுக்கலும் வாங்கலும்.

நாம் சிக்கிப் பிடிபடுகிறோம். எப்படி? நாம் கொடுப்பதனால் பிடிபடுவதில்லை. திரும்பப் பலனை எதிர்பார்ப்பதனால் தான் பிடிபடுகிறோம். நாம் அன்பு காட்டிவிட்டு அதற்குப் பதிலாகத் துன்பத்தை அடைகிறோம். அது நாம் அன்பு காட்டுகிற காரணத்தால் அல்ல. நாம் திரும்ப அன்பைப் பெற எதிர்பார்ப்பதால்தான். எங்கே தேவை, விருப்பம் இல்லையோ அங்கே துன்பமில்லை. விருப்பம், தேவை – இது தான் எல்லாத் துன்பங்களுக்கும் தந்தையாகும். விருப்பங்களெல்லாம் வெற்றி தோல்விச் சட்டங்களால் கட்டுண்டு கிடப்பவையாகும். விருப்பம் துன்பத்தை உடன் கொண்டு வந்தே தீரும்.

… துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர்கள் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிடப் பிறகும்கூட, பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப் படுகிறார்கள். “மாபெரும் உள்ளங்களுக்கும் கடைசியாக உள்ள பலவீனம் புகழில் ஆசையாகும்!” என்று நீ படித்ததில்லையா?…

“…நான் பணிக்காகப் பணி புரிகிறேன்” என்று கூறுவதைவிட எளிய காரியம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த நிலையை அடைவதைவிடக் கடினமானது வேறொன்றுமில்லை. வேலைக்காகவே வேலை செய்கிற ஒரு மனிதனின் திருமுகத்தைக் காண நான் கைகால்களை மண்டி போட்டுத் தவழ்ந்து இருபது மைல் தூரம் போக ஆயத்தமாக இருக்கிறேன். எங்கேயோ ஒரு உந்து சக்தி அவருக்கிருக்கிறது. அவருக்குப் பண ஆசையில்லையென்றால் அதிகார ஆசை இருக்கும். அதிகார ஆசை இல்லையென்றால் லாப நோக்கமிருக்கும். எப்படியோ, எங்கேயோ ஒரு உந்து சக்தி மறைந்திருக்கிறது.

….இவ்வாறாக ஓர் உள்காரணத்தை மனத்திற் கொண்டு செய்கிற வேலை துன்பத்தைக் கொண்டு வருகிறது. எந்த வேலையை நமது மனத்துக்கு நாமே அதிபதியாக நாம் செய்கிறோமோ அந்த வேலை மட்டுமே பற்றின்மையையும், ஆனந்தத்தையும் கொடுக்கும்.


சுயநலமின்றி வேலை செய்கிறவனே மிகச் சிறப்பாக வேலை செய்கிறான்.

… ஏதாவது ஓர் உள் நோக்கம் இன்றி வேலை செய்ய முடியாது என்று பல பேர்கள் கூறியுள்ளார்கள். மூர்க்கமான வெறிக்குணத்தினால் ஆட்கொள்ளப்பட்டு மனிதர்கள் வேலை செய்வதை அவர்கள் கண்டிக்கிறார்கள். அதைத் தவிர சுயநல எண்ணமின்றி வேலை செய்வதை அவர்கள் பார்த்ததே இல்லை. ஆகவேதான் இவ்வாறு பேசுகிறார்கள்.

…..பண ஆசையோ, புகழ் ஆசையோ வேறெந்த ஆசையோ இன்றி, எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், வேலை செய்கிறவன்தான் மிகச் சிறப்பாக வேலை செய்ய முடியும். அவ்வாறு ஒரு மனிதனால் செய்ய முடியும்பொழுது அவன் ஒரு புத்தனாக ஆகிவிடுவான். அத்தகைய மனிதனிடமிருந்து உலகத்தையே மாற்றியமைக்கக் கூடிய வல்லமை தோன்றும். இந்த மனிதன் கர்மயோகத்தினுடைய மகோன்னதமான லட்சியத்தைப் பிரதிபலிக்கிறான்.

….” கடவுளைப் பற்றி நீ கொண்டிருக்கிற பல்வேறு விதமான கருத்துக்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆத்மாவைப் பற்றி நுணுக்கமான கோட்பாடுகளை யெல்லாம் விவாதிப்பதால் என்ன பயன்? நல்லது செய்; நல்லவனாக இரு. இது உன்னை விடுதலை பெற்ற நிலைக்கும், உலகில் எது சத்தியமோ அதனிடமும் கொண்டு சேர்க்கும்,” என்று கூறிய தேவ புருஷர் புத்தர் ஒருவர்தான். அவர் தமது வாழ்க்கையில் தினையளவும் சுயலாப நோக்கமின்றி வாழ்ந்தார். அவரைவிட யார்தான் அதிகமாக வேலை செய்தார்கள்? எல்லோரையும்விட மிக உயர்ந்த நிலைக்குப் புத்தரைப் போல மேலே சென்றுள்ள ஒரு மனிதனையேனும் சரித்திரத்தில் காட்டுங்கள் பார்க்கலாம்…

…அவர் தான் லட்சிய நிலையை எய்தின உதாரண புருஷரான கர்மயோகி. சிறிதும் உள்நோக்கமின்றி வேலை செய்தவர் அவர். உலகில் பிறந்த மாந்தருள் தலையாயவர் அவர் என்பதை மனிதகுல வரலாறு காட்டுகிறது. உணர்ச்சி மயமான உள்ளமும் கூர்மையான புத்தியும் அவரிடம் இணைந்து கலந்து திகழ்ந்தன. அதற்கு ஒப்புவமையே கிடையாது. உலகில் வெளிப்பட்ட ஆத்ம சக்தி அவருடையதாக இருந்தது.

….கடலிலிருந்து சூரியன் நீரை உறிஞ்சி எடுக்கிறான்- திருப்பித் தருவதற்காக. பெறுவதற்கும் தருவதற்குமாக அமைந்த இயந்திரம் நீ. கொடுப்பதற்காக நீ வாங்குகிறாய். ஆகவே பிரதிபலனாக எதனையும் கேட்காதே. ஆனால் நீ எவ்வளவுக்கு அதிகமாகக் கொடுக்கிறாயோ அவ்வளவு அதிகம் உனக்கும் கிடைக்கும். இந்த அறைக்குள்ளிருக்கும் காற்றை நீ எவ்வளவு விரைவாகக் காலி பண்ணுகிறாயோ, அதே வேகத்துடன் வெளிக்காற்றால் இந்த அறை நிரம்பிப் போகும். ஆனால் நீ எல்லாக் கதவுகளையும் மூடி, சந்துகளையெல்லாம் அடைத்து வைப்பாயானால் உள்ளே இருப்பது அப்படியே இருக்கும். ஆயின் வெளியிலிருப்பது ஒரு போதும் உள்ளே வராது. அத்துடன் உள்ளேயிருப்பது தேங்கிப் போய், இழிந்து விஷமயம் ஆகிவிடும். நதியானது தொடர்ந்தாற் போலக் கடலுக்குள் சென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டேயிருக்கிறது. தொடர்ந்து அது நிறைவு பெற்றுக் கொண்டேயிருக்கிறது. கடலுக்குள்ளே நுழைவதைத் தடுக்காதே; தடுத்தால் அக்கணமே மடிந்து போவாய்.


சுயநலமின்றி வேலை செய்கிறவனே மிக உயர்ந்த வெற்றியைப் பெறுகிறான் :

பற்றுணர்ச்சிதான் மனிதனுக்குத் தளை ஆகிறது. மனித குலத்துக்கும், இயற்கைக்கும் பற்றற்ற நிலையில் சமர்ப்பணம் செய்யப்படுகிற வேலைதான், எந்த விதமான தளையையும் உடன் கொண்டு வருவதில்லை .

சுதந்திரமாகவும் அன்பின் பொருட்டும் செயல்படும் மனிதன் பிரதிபலனைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்வதில்லை. அடிமைக்குச் சாட்டையடி தேவைப்படுகிறது, வேலைக்காரனுக்குச் சம்பளம் தேவை. அது போலத்தான் வாழ்க்கையெல்லாம். பொது வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். மேடைப் பேச்சாளனுக்குக் கொஞ்சம் கைதட்டலும் ஆரவாரக் கூச்சலும் எதிர்ப்பும் தேவைப்படுகிறது. அதெல்லாம் இன்றி அவனை ஒரு மூலையில் இருத்தினால் அவனைக் கொன்று விடுவீர்கள். ஏனெனில் அது அவனுக்குத் தேவையாகும். இதுதான் அடிமைத் தனத்தின் மூலம் வேலை செய்வதாகும். இத்தகைய சூழ்நிலையில் எதையாவது பிரதிபலனாக எதிர்பார்ப்பது சுபாவமாக ஆகிவிடுகிறது.

வெற்றி முகமாக உள்ள ஒரு மனிதனுக்குப் பின்னணியில் எங்கேயோ ஓர் இடத்தில் அபாரமான நேர்மைக் குணமும் அபாரமான நாணயமும், இருந்திருக்க வேண்டும். வாழ்க்கையில் அவன் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு அதுவே காரணம். பூரணமாக அவன் சுயநலமற்றவனாக இல்லாமற் போகலாம். இருப்பினும் அந்நிலையை நோக்கி அவன் சென்று கொண்டிருக்கிறான். பரிபூரணமாகவே அவன் சுயநலமற்றிருந்தால் புத்தரைப் போலவோ, கிறிஸ்துவைப் போலவோ அவனும் மகா புருஷனாகியிருக்க முடியும்; எங்கு நோக்கினாலும் சுயநலமின்மையின் தரத்தைப் பொறுத்துத்தான் வெற்றியின் தரமும் அமைகிறது.

உண்மையான வெற்றிக்கு, உண்மையான மகிழ்வுக்கு மகத்தான ரகசியம் இதுதான். பிரதிபலனாக எதையும் கோராத மனிதன்தான், பூரணமாகச் சுயநலமற்ற மனிதன்தான் மாபெரும் வெற்றியை அடைகிறான். ஆனால் அத்துடன் அதுவும் பொருத்தமற்றதொரு புதிராகவும் தோன்றுகிறது. வாழ்க்கையில் சுயநமில்லாத மனிதன் ஏமாற்றப்படுவதையும் நாம் பார்க்கிறோமே! மேல் போக்காகப் பார்த்தால் அது உண்மைதான். கிறிஸ்து சுயநலமற்றவராயிருந்தார். ஆயினும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். அது உண்மையேதான். ஆனால் அவரது சுயநலமின்மைதான் மகத்தானதொரு வெற்றிக்குக் காரணமாக, மூலமாக அமைந்தது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். தமது உண்மையான வெற்றியின் அருளாசியால் கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் உயர்வளித்தார்.

குறுகிய நோக்கமான ‘நான்’ என்ற உணர்ச்சியைக் கைவிடுக:

ஒரு மனிதன் யோகத்தின் மூலமாக வேலை செய்யும்போது ‘நான் இதைச் செய்கிறேன். அதைச் செய்கிறேன்’ என்ற எண்ணம் ஒரு போதும் தோன்றாது. மேல் நாட்டு மக்கள் இதை ஒருபோதும் புரிந்து கொள்வதில்லை. “நான்” என்ற தன்மையுணர்ச்சி போய் விட்டால், அகங்காரம்-மமகாரம் போனால், ஒரு மனிதன் எப்படித்தான் வேலைசெய்ய முடியும் என்று கேட்கிறார்கள். தன்னைப் பற்றிய நினைப்பையே இழந்து, ஒரு மனிதன் கவனமும் கருத்தும் குவிந்து, வேலை செய்வானாயின் அவன் செய்கிற வேலை எத்தனையோ மடங்கு உயர்ந்ததாக இருக்கும். இந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் காணலாம்.

நமக்குத் தெரியாமலே நாம் பல காரியங்களைச் செய்கிறோம். உதாரணமாக உணவைத் தெரியாமலே ஜீரணிக்கிறோம். இன்னும் பலவற்றை நினைவோடு செய்கிறோம். மற்றவற்றைச் சமாதி நிலையில் மூழ்கினாற் போலச் செய்கிறோம். அந்நிலையில் நமது சிறிய அகங்காரத்துக்கு இடமில்லை.

ஓவியந் தீட்டுகிறவன், தான் என்ற அகங்காரத்தை இழந்துவிட்டுத் தனது ஓவியத்தில் முற்றிலும் மூழ்கி விடுவானாயின், அவனால் மிக உத்தமமான ஓவியங்களைத் தீட்டமுடியும்….யோகத்தின் மூலம் இறைவனுடன் ஒன்றி விட்ட மனிதன், எல்லாச் செயல்களையும் மனங்குவிந்து தியானத்தில் மூழ்கிச் செய்வான். தன்னலம் எதனையும் கருதமாட்டான். அத்தகைய வேலை நடப்பதன் மூலம் உலகத்துக்கு நன்மையேதான் ஏற்படுமே தவிர, தீமை எதுவும் தோன்றாது……எல்லாக் காரியங்களையும் இப்படித்தான் செய்ய வேண்டுமென்று கீதை உபதேசிக்கிறது.

நம்மை உள்ளே போட்டு அடைத்து வைக்கிற உடையாத நெடுஞ்சுவர் ‘அகங்காரம்’ தான். “நான் இதைச் செய்கிறேன். அதைச் செய்கிறேன். எல்லாவற்றையும் செய்கிறேன்” என்று எல்லாவற்றுக்கும் நம்மையே சம்பந்தப்படுத்திக் கொள்கிறோம்.

சோனியாக இருக்கிற இந்த ‘நான்’ என்ற தன்மையை ஒழித்து விடுக. நம்முள் இருக்கிற இந்த பேயைச் சாகடித்துவிட வேண்டும். “நான் அல்ல. நீங்கள்தான்.” இதனை எப்பொழுதும் கூறுக. உணருக, வாழ்ந்து காட்டுக. “நான்” என்னும் அகங்காரம் உள்ள உலகத்தை நாம் துறந்து கைவிட்டாலன்றி, சுவர்க்க சாம்ராஜ்யத்தினுள் ஒரு போதும் நுழைய முடியாது.

…… மௌனமாக வாழுகிறவர்களிடமே சக்தி குடிகொண்டுள்ளது. அவர்கள் வாழ்ந்து, அன்பு செலுத்திப் பிறகு தங்கள் தனி வாழ்வைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டுவிடுவார்கள். “நான்” “எனது” என்று அவர்கள் ஒருபோதும் சொல்லுவதில்லை; கருவியாக இருப்பதே பெரும் பாக்யம் என்று வாழ்வார்கள். புத்தர்களையும் கிறிஸ்துக்களையும் நிர்மாணிக்கிறவர்கள் இத்தகையவர்களே…

……. அவர்களெல்லாம் முழுவதும் கொள்கையின் வடிவங்கள்தாம்; மனிதர்களல்ல.

…கடவுள் தம்மை முற்றிலும் மறைத்துக் கொண்டுள்ளார். அவரது வேலையும் இணையற்று உள்ளது. ஆகவே யாரால் தன்னை முற்றிலும் மறைத்துக் கொள்ள முடியுமோ அவரது சாதனை அபாரமானதாக ஆகிறது. உனது அகங்காரத்தை ஜயித்து விடு; பிறகு உலகமெல்லாம் உன்னுடையதாகிவிடும்.

அதிர்ஷ்டத்தின் ரகசியம் :

…..எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாதவனுக்கு எல்லாம் வந்து சேருகிறது. அதிருஷ்டம் ஒரு மாய சரசக்காரியைப் போல. அவளை யார் விரும்புகிறார்களோ, அவர்களை அவள் லட்சியம் பண்ண மாட்டாள்… யாருக்குப் பணத்தைப் பற்றிக் கவலையே இல்லையோ, அவன் மீது பணம் மழை போலப் பொழிகிறது. அது போலத்தான் புகழும் ஒரு தொல்லையாக, பளுவாக ஆகிவிடும் அளவுக்கு வந்த சேருகிறது. அவற்றை வென்றவனிடம்தான் அவை வருகின்றன. அடிமைக்கு ஒருபோதும் எதுவுமே கிடைக்காது. உலகத்திலிருக்கிற அற்பத்தனமான, முட்டாள்தனமான வஸ்துக்களை நம்பி எதிர்பார்த்து எவர் வாழவில்லையோ, அவை இன்றியே எவரால் வாழ முடியுமோ, அவர்தான் எஜமானராக இருப்பார். ஒரு லட்சியத்துக்காக, அந்த ஒரே லட்சியத்துக்காக வாழ வேண்டும். அந்த லட்சியம் மிகப் பெரியதாக, மிக்க பலம் வாய்ந்ததாக இருக்கவேண்டும்; மனத்தில் அதைத் தவிர வேறு எதற்கும் இடமிராத அளவுக்கு அது வியாபித்து இருக்கவேண்டும். வேறு எதற்கும் நேரமிருக்கக் கூடாது, வேறெதற்கும் இடமிருக்கக் கூடாது.

கருவிக்கும் அதே அளவு முக்யத்துவம் கொடுக்க வேண்டும்:

ஒரு வேலையின் குறிக்கோளைப் பற்றி எவ்வளவு கவனம் செலுத்துவோமோ, அதே அளவு கவனம் அதை அடையும் வழிமுறை பற்றியும் செலுத்த வேண்டும். எனது வாழ்க்கையில் நான் கற்ற மிகப் பெரிய படிப்பினைகளில் இது ஒன்று ஆகும்… முடிவைப்பற்றிக் கவலைப்படுவது போல, வழி முறையைப் பற்றியும் கவலைப் படவேண்டும். வெற்றி பெறுவதற்கான ரகசியம் இதுதான்.

நமது வாழ்க்கையிலுள்ள ஒரு பெரும் கேடு என்னவெனில் நாம் லட்சியத்தினால் மிகத் தீவிரமாகக் கவரப்படுகிறோம்; குறிக்கோள் நமக்கு மயக்க வெறியூட்டுகிறது. நமக்குப் போதையளிக்கிறது. நமது மனம் முழுவதையும் சூழ்ந்துகொண்டு விடுகிறது; அதன் காரணமாக அந்த லட்சியத்தை எய்துவதற்கான நுண்ணிய விவரங்கள் நமது பார்வையில் அடியோடு தென்படுவதேயில்லை.

ஆனால் தோல்வி ஏற்படும்போதெல்லாம் அதற்கான காரணத்தை நாம் நுட்பமாக அலசி ஆராய்ந்தால் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சந்தர்ப்பங்களில், நாம் அவ்வேலையைச் செய்ய வேண்டிய வழிமுறை பற்றிக் கவனம் செலுத்தாமற் போனதே காரணம் என்பது தெரியவரும். கடைப்பிடிக்க வேண்டிய பாதையை, பயன்படுத்த வேண்டிய கருவியை, நன்கு செவ்வனே தயாரிப்பதிலும் அதனைப் பலப்படுத்துவதிலும் தக்க கவனத்தை நாம் செலுத்துவதுதான் தேவையாகும். வழி சரியாக இருந்தால் முடிவு தானே தேடிவரும். காரணம்தான் காரியத்தை உண்டாக்குகிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். பலன் தானே ஏற்படாது. காரணங்கள் திட்டவட்டமானதாக, பொருத்தமானதாக, ஆற்றல் வாய்ந்ததாக இருந்தால் ஒழியப் பலன் ஏற்படாது. ஒரு தடவை லட்சியத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு, வழி முறைகளைத் தீர்மானித்து விட்டால், லட்சியத்தை அநேகமாக நாம் மறந்தே விடலாம்; ஏனெனில் வழிமுறையானது அப்பழுக்கற்றிருக்குமாயின் லட்சியத்தைக் கடைசியில் நிச்சயமாக அடைந்தே தீருவோம். காரணம் சரியாக இருக்குமாயின் காரியத்தைப் பற்றி எவ்விதக் கஷ்டமுமில்லை. பலன் வந்தே தீரும். காரணத்தை நாம் ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டால் காரியம் தானே சரிப்பட்டுவிடும். லட்சியத்தை அடைவது என்பது காரியம். அதற்கானக்கருவிகள், வழிமுறைகள் என்பவை காரணம். ஆகையால் கருவியைப்பற்றி, வழி முறையைப் பற்றிக் கவனம் செலுத்துவதுதான் வாழ்க்கையிலுள்ள மாபெரும் ரகசியம்………


தொண்டன் – சிறந்த தலைவன் 3

தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான வழிகாட்டிதான் தொண்டன். இந்த தொண்டன், சிறந்த தலைவனை உருவாக்குவான்.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.


உண்மையான ஆசிரியரின் பண்பு

ஆசிரியர் ஒளி பரப்புகிறவர் :

ஊழியர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களை – கவானிடம் தம்மை ஒப்படைத்து விட்ட மனிதர்கள் அதிகமான ப.ரியங்களைச் செய்கிறார்கள். பிறருக்கு உபதேசம் பண்ணுகிறவர்களின் ஒருபெரும் படையைவிடத் தன்னைத் தானே பரிபூரணமாகத் தூய்மைப் படுத்திக் கொண்ட ஒரு மனிதன் அதிகமான சானைகளைச் சாதிக்கிறான். தூய்மை, மௌனம் இவற்றிலிருந்தே ஆற்றல் பிறக்கிறது.

ஆசிரியரின் தனிச் சிறப்பு :

ஒரு நண்பர் இங்கிலாந்தில் ஒரு தடவை என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். “நாம் ஆசிரியருடைய தனிப்பட்ட வாழ்வின் தகுதியை எதற்காக நோக்க வேண்டும்? அவர் கூறுவதைச் சீர் தூக்கிப்பார்த்து, அதை ஏற்க வேண்டியதுதானே நம் வேலை?” என்று வினவினார். அது அப்படியல்ல. ஒருவர் எனக்குச் சிறிது கதிசாஸ்திரத்தையோ (டைனமிக்ஸ்) ரசாயன சாஸ்திரத்தையோ அல்லது பௌதிக விஞ்ஞானத்தில் ஏதாவதொரு பகுதியையோ கற்பிக்க விரும்பினால் அவருடைய ஒழுக்கப் பண்பு எப்படியாவது இருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்நிலையில் கூட கதிசாஸ்திரத்தை அல்லது வேறொரு விஞ்ஞானக்கலையை எனக்குக் கற்பிக்க அவரால் முடியும். ஏனெனில் பௌதிக விஞ்ஞான சாஸ்திரங்களுக்குத் தேவையான அறிவு வெறும் புத்தியையே சார்ந்ததாகும். அது மனிதனுடைய புத்தி சக்தியைப் பொறுத்தாகும். அந்தக் கலையில் ஒரு மனிதனுக்கு அபாரமான அறிவு ஆற்றல் இருந்தும், அவனது ஆத்மா சிறிதளவு கூட வளர்ச்சியடையாமல் இருக்க முடியும். ஆனால் ஆத்மீக சாஸ்திரங்களைப் பொறுத்தவரை எந்தக் கட்டத்திலாயினும் சரி, ஆரம்ப நிலை முதல் முடிவு நிலை வரை, தூய்மையற்ற ஓர் ஆத்மாவிடம் எந்தவிதமான ஆத்மிக ஒளியும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஆத்மாவினால் என்ன கற்பிக்க முடியும்? அதற்கு ஒன்றுமே தெரியாது. ஆத்மிக சக்தி என்பது தூய்மைதான்.

சமயத்தைப் போதிக்கிற ஆசிரியர் எப்படிப்பட்டவர் என்பதை முதன் முதலாக நாம் கவனிக்க வேண்டும். பிறகு தான் அவருடைய சொல்லுக்கு மதிப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவர் சக்தியைப் பரப்புகிறவர் ஆவார். அவரிடம் ஆத்மிக சக்தி இராவிட்டால் அவர் எதைத் தான் பரப்ப முடியும்? ஓர் உதாரணம்: வெப்பம் தருகிற வெப்பத் தகடு (ஹீட்டர்) சூடுள்ளதாக இருந்தால், உஷ்ண அலைகளை அதனால் பரப்ப முடியும். அப்படிச் சூடாக இல்லாவிட்டால், அதனால் சூடு பரப்ப முடியவே முடியாது. சமய போதகர் நிலையும் அப்படியேதான். சமய போதகர் தனது மன அலைகளை மாணவனின் மனத்துக்கு அனுப்புகிறார். வெறுமனே மூளைச் சக்திகளைத் தூண்டிவிடுவதல்ல அவர் வேலை. தம்மிடமிருக்கும் சக்தியைப் பாய்ச்சி மாற்றிக் கொடுப்பதுதான் ஆசிரியர் வேலை. உண்மையான புலனுக்குத் தெரிகிற ஒரு சக்தி ஆசிரியரிடமிருந்து வெளிப்பட்டு மாணவனை அடைந்து அங்கே அவனது மனத்தில் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. ஆகவே ஆசிரியர் உண்மையானவராக இருக்க வேண்டும் என்பது அவசியமான நிபந்தனையாகும்.

சில சமயங்களில் மிக அழகான சொற்பொழிவுகளை நாம் கேட்கிறோம். மிக அற்புதமான தர்க்க வாதங்களுடன் உபந்நியாசம் செய்வதைக் கேட்கிறோம். வீட்டுக்குப் போகிறோம். எல்லாம் மறந்து போகிறது. வேறு சில சமயங்களில் நாம் ஒரு சில வார்த்தைகளையே, மிகச் சாதாரணமான சொல்லமைப்புடன் கேட்கிறோம். அவை நமது வாழ்வினுள் புகுந்துவிடுகின்றன. நமது உடலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆகி விடுகின்றன. நிரந்தரமான விளைவுகளை உண்டாக்குகின்றன. தான் கூறும் சொற்களில் தனது ஆத்ம சக்தியைப் புகுத்த முடிகிற மனிதனின் வார்த்தைகளுக்குப் பலன் ஏற்படுகிறது. ஆனால் அம்மனிதனுக்கு அபாரமான தனித்துவச் சக்தி இருக்க வேண்டும். எல்லாப் போதனைகளிலும் கொடுக்கல், வாங்கல் பொதிந்து உள்ளது. ஆசிரியர் கொடுக்கிறார்; மாணவன் வாங்குகிறான். ஆனால் ஒருவரிடம் கொடுப்பதற்கு ஏதாவது இருக்க வேண்டும்; வாங்கிக் கொள்கிறவனும் பெறுவதற்கு ஆயத்தமாகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

ஆசிரியருடைய வேலைப் பொறுப்பு :

(1) மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி எனப்படும்.

(2) மனிதனுக்குள் புதைந்திருக்கும் தெய்விகத் தன்மையை வெளிப்படுத்துவதே சமயம் எனப்படும்.

ஆகவே இந்த இரண்டு விஷயங்களிலும் ஆசிரியர் செய்ய வேண்டிய ஒரே கடமை, மாணவனின் பாதையிலுள்ள எல்லாத் தடைக் குறுக்கீடுகளையும் அகற்றுவதேயாகும். நான் எப்பொழுதும் கூறுவது போல, தடைகளை அகற்றிய பின்னர் மனிதனின் மீது கை வைக்க வேண்டாம். எல்லாம் சரியாகப் போய் விடும். பாதையைத் தங்கு தடையில்லாததாக்குவதே நமது கடமை. இறைவன் மீதியிருப்பதைச் செய்து கொள்வான்.

எதிர்மறை எண்ணங்கள் மனிதனைப் பலவீனப் படுத்துகின்றன :

எதிர்மறை எண்ணங்கள் மனிதனைப் பலவீனப்படுத்துகின்றன. சில பெற்றோர்கள் எப்பொழுது பார்த்தாலும் தமது பிள்ளைகளைப் படிக்கும்படியும், எழுதும்படியும் வற்புறுத்துவார்கள்: “உனக்குப் படிப்பே வராது, நீ முட்டாள்” என்று பலவாறாகத் திட்டுவார்கள். அதேபோல் எத்தனையோ பையன்கள் முட்டாள்களாகவே மாறிவிடுகிறதை நீங்கள் கண்டதில்லையா? பையன்களிடம் அன்பாகப் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினால் நாளடைவில் அவர்கள் முன்னேறுவது திண்ணம். சிறுவர்களுக்கு எது நல்லதாகப் பொருந்துகிறதோ அதுவே உயர்ந்த தத்துவச் சிந்தனைத் துறையில் சிறுவர்களாக இருப்பவர்களுக்கும் பொருத்தமாகும். அவர்களுக்கு ஆக்கக் கருத்துக்களை அளித்து வந்தால் ஆண்மையுள்ளவர்களாக அவர்கள் வளர்ந்து தம்மையே நம்பி வாழக் கற்றுக் கொள்வார்கள். மொழி, இலக்கியம், கவிதை, கலை ஆகிய எல்லாவற்றிலுமே ஈடுபட்டுள்ள மனிதர்களின் சிந்தனையிலும் செயலிலும் உள்ள தவற்றை நாம் சுட்டிக்காட்டக் கூடாது. அந்தந்தக் காரியங்களை எவ்வழியில் செய்தால் இப்பொழுதுள்ளதைவிட நல்ல முறையில் செய்து முடிக்க முடியும் என்பதையே சுட்டிக் காட்டவேண்டும். குறைகளைச் சுட்டிக் காட்டுவது ஒரு மனிதனுடைய உணர்ச்சிகளைப் புண்படுத்துகிறது. நாங்கள் உபயோகமற்ற உதவாக்கரையென்று கருதியவர்களைக் கூட ஸ்ரீ ராமகிருஷ்ணர், உற்சாகப்படுத்தி அதன் மூலம் அவர்களது வாழ்வின் பாதையையே திருப்பிவிட்ட முறையைக் கண்டி ருக்கிறோம். அவர் போதனை செய்கிற முறையே அலாதியானது, அற்புதமானது.


தொண்டன் – சிறந்த தலைவன் 2

தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான வழிகாட்டிதான் தொண்டன். இந்த தொண்டன், சிறந்த தலைவனை உருவாக்குவான்.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.


தலைமை தாங்கும் திறமை

ஒழுக்கத்தின் தூய்மை :

ஒரு தலைவனிடம் ஒழுக்கமில்லாவிட்டால் அவனிடம் மக்களுக்கு பக்தி ஏற்பட முடியாது. அவனிடம் மாசுமறுவற்ற தூய்மை இருக்குமாயின் மக்களுக்கு அவனிடம் நிரந்தரமான பக்தியும் நம்பிக்கையும் நிச்சயமாக இருக்கும்.

மக்களை இணைத்து வழி நடத்துகிற பிறவிக்குணம் :

ஒரு வாழ்வில் ஒருவன் தலைவனாக ஆக்கப்படுவதில்லை. அதற்காகவே அவன் பிறவியெடுக்க வேண்டும். ஏனென்றால் ஒரு தலைவனுக்குத் தோன்றக்கூடிய பிரச்னை இயக்கத்தை அமைப்பதோ, திட்டங்கள் போடுவதோ அல்ல. பலவாறாகப் பிரிந்து வேறுபட்ட தன்மைகளுள்ள மக்களை, அவர்களனைவருக்கும் பொதுவான அநுதாப உணர்ச்சிகளை ஒட்டிய பாதையில் ஒன்றாக் இணைத்து இட்டுச் செல்வதுதான் ஒரு தலைவனுக்கு வரக்கூடிய பரீட்சை; உண்மையான சோதனையாகும். இந்தக் காரியத்தை அவன் தன்னையறியாமலேயே, சகஜமாகவே செய்ய வேண்டும். முயற்சி செய்து ஒருக்காலும் செய்ய முடியாது.

தொண்டும், அன்பும் தலைமை தாங்குவதற்கு முதற்தேவைகள்:

தலைமை தாங்குகிற பாத்திரத்தை, பொறுப்பை ஏற்றுக் கொள்வது மிக மிகக் கஷ்டமான காரியமாகும். தலைமை தாங்குகிறவன் அடியார்க்கடியானாக (தாஸஸ்ய தாஸ:) இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான உள்ளங்களுக்குத் தன் உள்ளத்தில் அவன் இடந்தரவேண்டும். தினையளவேனும் பொறாமையோ, சுயநலமோ அவனுக்கு இருக்கக்கூடாது. அப்பொழுதுதான் அவனால் தலைவனாக ஆக முடியும். முதலாவதாகப் பிறவியின் மூலமும் பின் சுயநலமற்றிருப்பதன் மூலமாகவும் தலைவன் தோன்றுகிறான்.

படைத் தலைவனின் தீரம் என்றால் அது ஆணவ அகம்பாவமல்ல; ஆத்மத் தியாகமாகும் :

– … ஒருவன் எவ்வாறு தொண்டாற்ற வேண்டும்? எப்படிப் புலன்களை அடக்க வேண்டும்? அவற்றை ஒரு மனிதன் ஆரம்ப நிலையிலே தெரிந்து கொள்ள வேண்டும். அவனை அப்படித் தெரிந்து கொள்வதற்குத் தூண்டுவது படைவீரனின் அஞ்சா நெஞ்சம்தான். அது எங்கே இருக்கிறது? இந்த அஞ்சா நெஞ்சமென்பது ஆணவ அகம்பாவ உணர்ச்சியல்ல. அது ஆத்மத் தியாக உணர்ச்சியாகும். ஒரு மனிதன் மற்றவர்களது உள்ளங்களையும் வாழ்க்கையையும் கட்டியாண்டு, அவர்களுக்குக் கட்டளையிட்டு வழி காட்டுவதற்கு முன்னால் அவன் தனக்கு வரக்கூடிய கட்டளைச் சொல்லைக் கேட்ட வினாடியே முன்னேறிச் செல்லவும், தன் உயிரை அர்ப்பணிக்கவும் ஆயத்தமாக இருந்தே தீர வேண்டும். முதன் முதலில் ஒருவன் தன்னைத் தானே அர்ப்பணித்துத் தியாகம் செய்ய வேண்டும்.

எதிர்ப்பின் கடுமைத் தாக்குதலைத் தலைவன் தான் தாங்க வேண்டும் ;

பாரதப் படை வீரன் போர்க்களத்தில் கோழைத்தனத்தை வெளிகாட்டுகிற ரீதியிலா நடந்து கொள்கிறான்? கிடையாது. ஆனால் அவர்களுக்குத் தக்க தலைவர்கள் கண்டிப்பாகக் கிடைக்க வேண்டும். ஜெனரல் ஸ்ட்ராங் என்ற என் ஆங்கில நண்பர் சிப்பாய்க் கலகம் என்ற சுதந்திரப் போரின்போது பாரதத்திலிருந்தார். அந்நிகழ்ச்சிகளைப் பற்றி பல கதைகளை எனக்குக் கூறுவார். ஒரு நாள் பேச்சு வாக்கில் அவரிடம் “சிப்பாய்களிடம் போதுமான அளவில் துப்பாக்கிகளும் ரவைகளும் உணவுப் பொருள்களும் கைவசமிருந்தும், யுத்த அனுபவத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக அவர்கள் இருந்தும் கூட ஏன் தோற்றுப் போனார்கள்?” என்று வினவினேன். அவர் அதற்குப் பதிலளிக்கையில், “சிப்பாய்களின் தலைவர்கள் முதலில் தாங்கள் முன்னேறிச் சென்று போரிடுவதற்குப் பதிலாகப் பின்னணியில் பத்திரமான இடத்தில் இருந்து கொண்டு “வீரச் சிறுவர்களே! போரிடுங்கள். போரிடுங்கள்” என்று கூச்சல் மட்டும் போட்டு வந்தார்கள்” என்று கூறினார். எனவே படைத்தலைவன் முதலில் முன் சென்று மரணத்தை எதிர் கொண்டழைத்தாலன்றிக் கீழதிகாரிகளும், படைவீரர்களும் முழுமனதுடன் போரிட மாட்டார்கள். எல்லாத் துறைகளிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது. “தலைவனாக இருப்பவன் தனது தலையை அர்ப்பணம் செய்ய உன்னால் முடிந்தால் அப்பொழுதுதான் நீ தலைவனாக ஆகமுடியும். தேவைப்படுகிற தியாகத்தைச் செய்யாமலே நாமெல்லோரும் தலைவராக ஆக விரும்புகிறோம். அதனால் நாம் செய்கிற காரியங்களெல்லாம் பலனளிக்காமல் சுழியாகின்றன. நம்முடைய சொல்லுக்கு எவருமே செவி சாய்ப்பதில்லை.

தலைவன் பாரபடசமற்றவனாகவும் தனிச் சார்பு அற்றவனாகவும் இருக்க வேண்டும் :

தீமைகளுக்கு முக்கியமான காரணம் ஓர வஞ்சனை காட்டுவதேயாகும். எல்லோரிடமும் காட்டுகிற அன்பைவிட ஓரிருவரிடம் அதிகமாக அன்புகாட்டினால், வருங்காலத்தில் தொல்லைகளுக்கான விதைகளை விதைத்து விட்டீர்கள் என்பதை நிச்சயமாக நம்புங்கள்.

உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பிரித்து வைத்து அதற்கு ஏற்றபடி அன்பு காட்டுகிறவன் ஒருநாளும் தலைவனாக ஆக முடியாது. எவருடைய அன்புக்கு முடிவில்லையோ, உயர்வு தாழ்வுகளைப் பற்றிச் சிந்திக்க எவர் ஒரு போதும் முனைவதில்லையோ, அவரது கால்களில் கீழ் உலகம் முழுவதும் வந்து வீழ்ந்து கிடக்கும்.

பல பேர் அநேகமாகத் தமது அன்பு முழுவதையும் என்மீது சொரிவதை நான் காண்கிறேன். ஆனால் அதற்குப் பதிலாக நான் எனது முழு அன்பையும் ஒரு தனி மனிதனுக்கும் அளித்துவிடக் கூடாது. ஏனெனில் அப்படிச் செய்யும் அதே நாளில் எனது பணி முழுவதும் படுநாசமாகி விடும். தனி மனிதச் சார்பில்லாத எனது நோக்கை, எனது பார்வையைப் புரிந்து கொள்ளாத சிலர் அவர்கள் தமது முழு அன்பையும் அளித்ததற்குப் பதிலாக நானும் அளிப்பேன் என்று எதிர்பார்க்கலாம். முடிகிற அளவுக்கு அதிகமான பேர்களுடைய உற்சாகம் நிறைந்த அன்பு எனக்குக் கிடைக்க வேண்டும். இந்த வேலையைச் செய்வதற்கு அது அத்தியாவசியமாகும். அதே நேரத்தில் நான் முற்றிலும் தனிச்சார்பு அற்று வாழ வேண்டும். இல்லையேல் பொறாமையும், பூசலும், வேலை எல்லாவற்றையும் குலைத்து அழித்துவிடும். ஒரு தலைவன் எப்பொழுதும் தனிச் சார்பு அற்றவனாகவே இருந்து தீர வேண்டும்.

அனுதாபத்தாலும் சகிப்புத் தன்மையாலும் தலைவன் மக்களைக் கூட்டி இணைத்து மாற்றி உருவாக்க வேண்டும்:

தனது மற்ற சகோதரர்களைப் பற்றி அவதூறு பேச யாராவது உன்னிடம் வந்தால் அந்தப் பேச்சைக் கேட்க அடியோடு மறுத்து விடு. அதைக் கேட்பதுகூட பாபம். வருங்காலத் தொல்லைகளுக்கான விதை அதில் அடங்கியுள்ளது.

அத்துடன் எல்லோருடைய குற்றங் குறைகளையும் சகித்துக் கொள். லட்சக்கணக்கில் ஒருவன் குற்றம் புரிந்தாலும் அவற்றை மன்னித்துவிடு. சுயநலமின்றி நீ எல்லோரையும் நேசிப்பாயானால், மெல்ல மெல்ல அவர்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் நேசித்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள்; பிறருடைய நலனை ஒட்டிச் சார்ந்துதான் தம்முடைய நலனும் உள்ளது என்று அவர்களுக்குப் பூரணமாகப் புரியும் பொழுது அவர்களில் ஒவ்வொருவரும் பொறாமையைக் கைவிட்டு விடுவார்கள். ஏதாவதொரு காரியத்தை ஒருமிக்க, ஏகமனதாகச் செய்வது என்பது நமது தேசியப் பண்பிலேயே இன்று கிடையாது. ஆகவே அந்த உணர்ச்சியை மிகுந்த ஜாக்கிரதையுடன் நீங்கள் துவங்கி வைத்து விட்டுப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

‘குழந்தையைப் போல்’ வழி நடத்துபவனே தலைசிறந்த தலைவனாவான் :

பிறருடைய தலைமையின் கீழ் வேலை செய்யும்போது சிலர் மிகச் சிறப்பாக வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவருமே தலைமை தாங்குவதற்காகப் பிறக்கவில்லை. இருப்பினும் குழந்தையைப் போலத் தலைமை தாங்கிச் செல்லுகிறவன்தான் உயர்ந்த தலைவனாவான். குழந்தை வெளிப்பார்வைக்கு ஒவ்வொருவரையும் சார்ந்து, நம்பி வாழ்ந்தாலும் அது குடும்பத்தில் ராஜாவாக விளங்குகிறது. குறைந்த பட்சம், என்னுடைய சிந்தனைப்படி அதுவே தான் தலைமையின் ரகசியம்.

தான் தலைமை தாங்குவதாக ஒருவன் சற்றேனும் விளம்பரப் படுத்திக் கொண்டால் அது பிறர் மனதில் பொறாமையை மூட்டி எல்லாவற்றையும் நாசமாக்கி விடுகிறது.


தொண்டன் – சிறந்த தலைவன் 1

தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டர்களுக்கான வழிகாட்டிதான் தொண்டன். இந்த தொண்டன், சிறந்த தலைவனை உருவாக்குவான்.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள்,கட்டுரைகள், கடிதங்கள் இவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.


”தீப்பிழம்பு போன்ற இளைஞர்கள் நமக்குத் தேவை. புத்திசாலித்தனமும் தைரியமும் வாய்ந்து மரணதேவனின் வாய்க்குள்ளே துணிச்சலாக நுழைந்து செல்லுகிறவர்கள், கடலைக்கூட நீந்திக் கடக்க ஆயத்தமானவர்கள் தேவை……….. அது போன்று நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேவை. அவர்களைப் பெறுவதற்காக மட்டுமே முழு மூச்சுடன் முயலுக; வலது பக்கத்திலிருந்தும் இடது பக்கத்திலிருந்தும் புதிதாக ஆட்களைச் சேர்த்து மாற்றி, நமது தூய்மைப் பயிற்சி இயந்திரத்தில் அவர்களைப் பொருத்திப் பண்படுத்திப் பழக்குங்கள்.”

‘இறைவனிடத்திலே தளராத நம்பிக்கையும் புனிதமான பணி செய்கிறோம் என்ற ஊக்கமும், ஏழைகளிடத்தும் வீழ்ச்சியுற்றோரிடத்தும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களிடத்தும் எல்லையற்ற பரிவும், அந்தப் பரிவு காரணமாக எதிர்த்து நிற்பதில் சிங்கத்தின் துணிவும் கொண்ட ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் இந்தப் பூமியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்ல வேண்டும். நம்முடைய விமோசனத்துக்கான சமய அறிவுரைகளை, பரோபகாரம் என்ற நமது வேத தத்துவங்களை, சமூக முன்னேற்றத்துக்கான வழிகாட்டும் நற்செய்திகளை, சமத்துவம் என்கிற வேத நெறிகளை அங்கெல்லாம் கொண்டு சென்று மக்களிடையே பரவச் செய்ய வேண்டும்.”

ஒற்றுமை இயக்கம் *

“என் வாழ்க்கையிலேயே எனது உள்ளத்தை மிகத் தீவிரமாகக் கவர்ந்திழுத்த ஒன்று அமெரிக்காவில் உள்ளது” என்று ஒரு தடவை சுவாமிஜி என் பாட்டியிடம் கூறினார். அவருக்குச் சிறிது கோபமூட்ட விரும்பிய என் பாட்டி, “யார் அந்தப் பெண், சுவாமிஜி?” என்று வினாவினாள். சுவாமிஜி சிரிப்பு பொங்கி வெடிக்க, “ஓ! எந்தப் பெண்ணுமல்ல; அதுதான் ஒற்றுமை இயக்க அமைப்பு” எனக் கூறினார். பிறகு எவ்வாறு ஸ்ரீ ராமகிருஷ்ணரது சீடர்கள் எல்லோரும் வெளியே தன்னந்தனியாகப் போவார்கள் என்றும் ஒரு கிராமத்தை அடைந்ததும் அமைதியாக ஒரு மரத்தடியில் உட்காருவார்கள் என்றும், துயரப் படுகிற மக்கள் தம்மிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள் என்பதற்காகக் காத்திருப்பார்கள் என்றும் விளக்கினார். அமெரிக்காவில் எல்லாப் பணிகளையும் ஒழுங்குற இணைக்கிற ஒற்றுமை இயக்க முறையால் பெருத்த பலன் ஏற்படுவதைக் கண்டார். ஆனால் பாரதத்தின் குணப்பண்புக்கு எந்த விதமான இயக்கம் ஒத்துவரும் என்பது பற்றி அவருக்குச் சந்தேகம் இருந்தது. ஆகவே மேனாட்டிலிருப்பதில் நல்லதாகக் காணப்படுகிறவற்றைத் தமது சொந்த மக்களின் சிறந்த நன்மைக்காக எப்படி மாற்றியமைத்துப் பயன் படுத்துவது என்ற விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனையைச் செலுத்தினார்.

– மிஸ் கார்னர்

* ‘அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர்’ என்ற புத்தகத்திலிருந்து.

ஜனநாயக அமைப்புக்கு முன்னோடியான தேவைகள்:

உலக நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்த பிறகு ஒற்றுமை இயக்கம் (சங்கம்) இல்லாமல் உயர்ந்த எதனையும், நிரந்தரமான எதனையும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். ஆனால் பாரதம் போன்ற ஒரு நாட்டில் இன்று நாம் அடைந்திருக்கிற வளர்ச்சி நிலையில்ஜனநாயக அடிப்படையில் ஒவ்வோர் அங்கத்தினருக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டுப் பொதுவாக எல்லோரும் கூடிப் பெரும்பான்மையாக ஒட்டுப் போட்டு முடிவுக்கு வருகிற ஐனநாயக அடிப்படையில் ஓர் இயக்கத்தை ஆரம்பிப்பது நல்ல யோசனையாக இருக்குமென எனக்குத் தோன்றவில்லை. மேலை நாடுகளின் நிலைமை அலாதியானது. நம்மிடையே கூடக் கல்வி பரவப்பரவ, நாம் தியாகம் செய்யக் கற்றுக்கொள்ளும் போது. தனிப்பட்ட மனிதனின் லாப நஷ்டங்களுக்கும் நாட்டங்களுக்கும் அப்பாற்பட்டு எழவேண்டும் என்று கற்றுக் கொள்ளும் போது, மக்கள் சமுதாயத்துக்காகவும், பரந்த நாட்டு நன்மைக்காகவும் வாழத் தெரிந்து கொள்ளும் போது, ஜனநாயக அடிப்படையில் வேலை செய்வது சாத்தியமாகலாம். இதனை மனத்திற் கொண்டு தற்சமயம் நமது இயக்கத்துக்கு ஒரு சர்வாதிகாரியை அமைக்க வேண்டும்; அவரது சொல்லுக்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும்; பிறகு தக்க காலம் வரும் பொழுது இயக்கமானது மற்ற அங்கத்தினர்களின் கருத்துக்களின்படியும் சம்மதத்தின் பேரிலும் வழி நடத்தப்படும் *

* ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஸ்தாபிக்கப்பட்ட அந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களை நோக்கி ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.


ஹிந்துக்களின் சங்கம்

ஹிந்துக்களுக்குப் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளும் குணத்தையும், பரஸ்பரம் நல்ல குணங்களைப் பாராட்டுகிற குணத்தையும் கற்பிக்கக் கூடிய ஓர் இயக்கம் அத்யாவசியத் தேவையாகும். நான் இந்த நாட்டில் செய்த வேலையைக் குறித்துத் தமது பாராட்டு தலைத் தெரிவிப்பதற்காகக் கல்கத்தா பொதுக் கூட்டத்தில் ஐந்தாயிரம் பேர்களும் மற்ற இடங்களில் நூற்றுக் கணக்கானவர்களும் குழுமியிருந்தார்கள். மிக நல்லதுதான். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரையும் ஓர் அணா கொடுக்கச் சொல்லிக் கேட்டால் கொடுத்திருப்பார்களா? குழந்தைத் தனமாகப் பிறரை எதிர்பார்த்து வாழுவது நமது முழு தேசீய குணப்பண்பாக ஆகிவிட்டது. உணவை அவர்களது வாய்க்கருகே கொண்டு வந்தால் மகிழ்வுடன் சாப்பிட எல்லோரும் ஆயத்தந்தான்; அதிலும் சிலர் சோற்றை வாய்க்குள்ளே ஊட்ட வேண்டும் என்று விரும்புவார்கள்…உனக்கு நீயே உதவிக் கொள்ளாது போனால் உனக்கு உயிர் வாழத் தகுதி கிடையாது…

பாரதத்தில் மூன்று பேர்கள் ஒற்றுமையாக, ஒரு மனத்துடன் ஐந்து நிமிடம் வேலை செய்ய முடியாது. ஒவ்வொருவரும் அதிகாரப் பதவிக்காகப் போராடுகிறார்கள்; நாளடைவில் இயக்கம் முழுவதுமே இழிநிலைக்குத் தாழ்கிறது. கடவுளே! கடவுளே! பொறாமைப் படாமலிருக்க நாம் எப்பொழுதுதான் கற்றுக் கொள்ளுவோமோ?

இந்நிலையிலிருக்கிற தேசத்தில் வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு போதும் சாவாத அன்புடன் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைக்கப்பட்டு, வேலை செய்கிற ஒரு குழுவை உண்டாக்குவது என்பது ஆச்சரியகரமான செயல் இல்லையா? இந்தக் குழு வளர்ந்தே செல்லும். வியக்கத்தக்க தாராள மனப்பான்மையுடன், இறவாத சக்தித் துடிப்பும், முன்னேற்ற விழைவும் கொண்ட இந்தக் குழு வளர்ச்சியடைந்து நாடு முழுவதும் பரவ வேண்டும். நாடு முழுவதும் மின் அலை அதிர்ச்சியை அது உண்டாக்க வேண்டும். பயங்கரமான அஞ்ஞானம், பரஸ்பரப் பகையுணர்ச்சி, ஜாதியுணர்ச்சி, பழைய காலத்து மடத்தனம், பொறாமை இவையெல்லாம் அடிமைத் தனத்தில் ஆழ்ந்துள்ள இந்நாட்டின் பரம்பரைச் சொத்தாக உள்ளன. இவையெல்லாம் இருந்தாலும் கூட இந்தக் குழுவினர் சமூகத்தின் மயிர்க்கால்கள் தோறும் நுழைந்துவிட வேண்டும்.

வேலை முறையில் மூன்று நிலைகள் :

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். முதலில் அதனை இகழ்ச்சியாக நினைப்பார்கள்; இரண்டாவதாக எதிர்ப்பு வரும்; மூன்றாவதாக அதனை ஒப்புக் கொள்வார்கள். தான் வாழ்கிற காலத்துக்குப் பின்னால் வரப்போவதைச் சிந்தித்துப் பார்க்கிற மனிதனைச் சமுதாயம் நிச்சயமாகத் தப்பாகவே புரிந்து கொள்ளும். ஆகவே எதிர்ப்பும் கொடுமைகளும் வரட்டும், வரவேற்கிறேன். நான் மட்டும் தூய்மையுடனும் உறுதி குலையாமலும் இருக்க வேண்டும்; இறைவனிடத்தில் அபாரமான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தக் கஷ்டங்களெல்லாம் நிச்சயமாக மறைந்து போகும்….

பாராட்டு வேட்டையும் உண்மைப் பணியும் இணைந்து போவது அரிது:

‘மகத்தான பணி ஒன்றைச் சமுதாயத்தில் செய்யவும் வேண்டும்; சமுதாயத்தின் மனம் கோணவும் கூடாது’ என்பது நடவாது. அவ்வாறு முயன்றதில் எவரும் எக்காலத்திலும் வெற்றி காணவில்லை. மனச்சாட்சியின் உத்தரவுப்படி ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வேலை சரியானதாகவும் நல்லதாகவும் இருக்குமாயின் சமூகமானது அவனது சொல்லைக் கேட்டு அவனது பாதைக்குத் திரும்பி விடும். சிலசமயம் அந்த மனிதன் செத்து வெகுகாலமான பிறகே அந்நிலை ஏற்படும். நமது உள்ளம் ஆத்மா, உடல் இவை அனைத்துடனும் நாம் பணியில் குதித்து மூழ்கி விடவேண்டும். ஒரே கருத்துக்காக, ஒரே ஒரு கருத்துக்காக மட்டுந்தான், மற்ற அனைத்தையும் தியாகஞ் செய்ய ஆயத்தமாகிற வரையில் நாம் வெற்றியின் ஒளியை ஒருக்காலும் காணமாட்டோம்; நிச்சயம் காணவே மாட்டோம்.

மனித குலத்துக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் தமது சொந்த சுக, துக்கம், பெயர், புகழ், பலவித ஆசை நாட்டங்கள்-இவற்றை ஒரு மூட்டையாகக் கட்டி கடலில் வீசியெறிந்து விட வேண்டும். அதற்குப் பிறகு பகவானிடம் வரவேண்டும். எல்லா மகா புருஷர்களும் அப்படித்தான் சொன்னார்கள். செய்ததும் அவ்வாறே.


மறுபேச்சின்றிக் கீழ்ப்படிதல் :

யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நாமெல்லாம் மமதையுள்ளவர்கள். இந்த அகங்காரம் எந்த வேலையையும் நடக்க விடாது. மகத்தான துணிச்சல், வரம்பில்லாத தைரியம், அபாரமான சக்தித் துடி துடிப்பு-இவை எல்லாவற்றையும் முக்கியமாகப் பரிபூரணக் கீழ்ப்படிதல் – இந்தக் குணங்கள் தனி மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள்; கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய வேலைகளைச் செய்யுபோது, தலைவனின் கட்டளைகளை மறுபேச்சின்றிக் கீழ்ப்படிந்து நிறைவேற்ற வேண்டும். மடத்தின் சாக்கடையைச் சுத்தம் செய்வதில், எஞ்சியுள்ள எனது வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்று எனது குரு பாயி’ சகோதரர்கள் கூறினால் அந்தக் கட்டளையை எவ்வித எதிர்ப்பு, முணுமுணுப்புமின்றி கீழ்ப்படிந்து கட்டாயமாக நிறைவேற்றுவேன் என்று தெரிந்து கொள்ளுங்கள். பொது நன்மையைக் கருதி வருகிற கட்டளையை, எவ்விதமான சிறு முணுமுணுப்புமின்றிக் கீழ்ப்படிந்து நிறைவேற்ற யாருக்குத் தெரிகிறதோ அவன் மட்டுமே உயர்ந்த தளபதியாக ஆகமுடியும்.

கீழ்ப்படிதலாகிற நல்ல குணத்தைப் பழக்கிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் உங்களது சொந்த நம்பிக்கையைக் கைவிட்டுவிடக் கூடாது. மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காவிட்டால் எந்த வேலையையும் ஒரு குடைக்கீழ் கொண்டுவர, ஒரு மையப் புள்ளியில் திரட்டி ஒற்றுமைப்படுத்த முடியாது. தினிப்பட்ட சக்திகளை இப்படித் திரட்டி ஒரு மையத்தில் இணைக்காமல், எந்தப் பெரிய காரியத்தையும் நிறைவேற்ற முடியாது.

சகாக்களைப் பாராட்டி, குறைகளை இதமாக எடுத்துச் சொல்லுங்கள் :

எந்த ஒருவருடைய வழித்துறைகளையும் குலைக்காதீர்கள். குறை கூறுவதை அடியோடு விட்டுவிடுங்கள். வேலை செய்கிறவர்கள் சரியாக வேலை செய்து வருவதாக உங்களுக்குத் தெரிகிற வரையில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் தவறிழைப்பதாகத் தோன்றும் போது, சாவதானமாக அவர்களது பிழைகளை அவர்களுக்கு உணர்த்திக் காட்டுங்கள். எல்லாக் குழப்பங்களுக்கும் விஷமங்களுக்கும் மூலகாரணம் ஒருவரையொருவர் குற்றங்குறை கூறுவதுதான். பல இயக்கங்கள் நிலை குலைந்து வீழ்ச்சியுறுவதில் இதுவேதான் முக்கிய காரணமாக இருக்கிறது.


பரஸ்பர அன்பு :

நீங்கள் ஏற்றெடுத்திருக்கிற காரியத்தில் வெற்றி பெறுவது உங்களது பரஸ்பர அன்பைத்தான் முற்றிலும் சார்ந்துள்ளது. கடும் பகையுணர்ச்சியும், பொறாமையும், மமதையும் இருக்கிற வரையில் நல்ல காலமே வராது…..

உங்களது சகோதரர்களது அபிப்ராயத்துக்கு விட்டுக் கொடுக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். எப்பொழுதும் சமாதானமாக, சமரசமாகப் போக முயலுங்கள். இதுதான் முழு ரகசியம்.

வியாபார ரீதியான நேர்மையும் கண்டிப்பும் இருக்க வேண்டும்:

பாரதத்தில் நடக்கிற எல்லாக் கூட்டு முயற்சிகளும் ஒரு பாபத்தின் பளுவினால் மூழ்கி மாய்ந்து போகின்றன. நாம் பொதுப்பணிகளில் இன்னும் கடுமையான, வியாபார ரீதியான கொள்கைகளை வகுத்து வளர்க்கவில்லை. காரியம் என்றால் காரியம்தான். அதில் கண்டிப்பும் நாணயமும் வேண்டும். அதில் நட்பு எதுவும் குறுக்கிடக்கூடாது. தனது பொறுப்பிலுள்ள எல்லாவற்றையும் பற்றி மிக மிகத் தெளிவான கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஒரு போதும், என்னவானாலும், வேறெந்த வேலைக்காகவும் பயன்படுத்த கூடாது. அடுத்த கணம் பட்டினி கிடக்க வேண்டியிருந்தாலும் சரி, பரவாயில்லை. இதுதான் வியாபார நேர்மை, நாணயம்.

சாசுவதமான இயக்கத்தின் ரகசியம் :

யார் வாழ்ந்தாலும், யார் இறந்தாலும் கவலையில்லை. தானாகவே வேலை செய்துகொண்டு போகக்கூடிய ஓர் இயந்திரத்தை உண்டாக்கி வைக்க வேண்டும். பாரதீயர்களாகிய நம்மிடம் ஒரு பெரும் குறை உள்ளது. சாசுவதமான ஒரு இயக்கத்தை நம்மால் உண்டாக்க முடியாது. அதற்குக் காரணம் என்னவெனில் அதிகாரப்பொறுப்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள நாம் ஒருபோதும் விரும்புவதில்லை. நாம் மறைந்துபோன பிறகு என்ன ஏற்படும் என்பது பற்றி நாம் எப்பொழுதுமே சிந்திப்பதில்லை.