உன் வாழ்க்கை உன் கையில்!-5

தெய்வீகம் மனிதனின் அடிப்படை


‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.

மேற்கோள்கள்:- எழுந்திரு! விழித்திரு! பகுதி 1 | II. சிகாகோ சொற்பொழிவுகள்| 3. இந்து மதம்.

இந்த உலகம், இந்த உடல், இந்த மனம் என்பவைகூட மூடநம்பிக்கைகளே. எல்லையற்ற ஆன்மாக்கள் நீங்கள், மின்னுகிற நட்சத்திரங்களால் ஏமாற்றப் படுவதா! வெட்கம். நீங்கள் தெய்வங்கள், உங்களால்தான் அந்த மின்னுகிற நட்சத்திரங்களே இருக்கின்றன.

மேற்கோள்கள்:- எழுந்திரு! விழித்திரு! பகுதி 4 | மதம் | I. சொற்பொழிவுகள் | 9. தன் விதியை வகுப்பவன் மனிதனே

மனித இயல்பிலுள்ள வலிமையானவை, நல்லவை, ஆற்றல் பொருந்தியவை எல்லாம் இந்தத் தெய்வீகத்தின் விளைவே. பலரிடம் இந்தத் தெய்வீகம் மறைந்துள்ளது. உண்மையில் மனிதனுக்கும் மனிதனுக்கும் வேறுபாடே இல்லை. எல்லா உயிர்களும் ஒன்றுபோல் தெய்வீகமானவை. எல்லையற்ற பெரிய கடல் ஒன்று நமக்குப் பின்னால் இருப்பது போலுள்ளது. நீங்களும் நானும் எல்லாம் அந்தப் பெருங் கடலில் தோன்றும் அலைகளே. இந்த எல்லையற்ற தன்மையை வெளியில் வெளிப்படுத்தவே நாம் ஒவ்வொருவரும் முயன்று வருகிறோம். எனவே நமது பிறப்புரிமையாக, நமது உண்மை இயல்பாக நம் ஒவ்வொருவரிலும் எல்லையற்ற உண்மைஅறிவு-இன்பப் பெருங்கடல் மறைந்துள்ளது. அந்தத் தெய் வீகத்தை வெளிப்படுத்துவதற்கான ஆற்றல் மிகுந்தும் குறைந்தும் இருப்பதுதான் நம்மிடையே வேறுபாட்டிற்குக் காரணமாக அமைகிறது.

மேற்கோள்கள்:- எழுந்திரு! விழித்திரு! பகுதி 4 | வேதாந்தம் | I. சொற்பொழிவுகள் | 2. வேதாந்தத்தின் உண்மையும் ஆதிக்கமும்.

ஆன்மாவின் எல்லையற்ற ஆற்றல் ஜடப்பொருளில் செயல் படும்போது பௌதீக வளர்ச்சி உண்டாகிறது; எண்ணத்தில் செயல்பட்டால் அறிவு வளர்ச்சி உண்டாகிறது; தன்னிடமே செயல்படும்போது மனிதன் தெய்வமாகிறான்.

மேற்கோள்கள்:- எழுந்திரு! விழித்திரு! பகுதி 1 | III. தமிழ்ப் பெருமக்களுக்கு….