தானம்


பிப்ரவரி12 – ஆம் நாள் மாலையில் சென்னபுரி அன்னதான சமாஜத்தின் ஆண்டு விழாவிற்கு சுவாமி ஜி தலைமை வகித்தார். அவருக்கு முன்பு பேசிய பேச்சாளர் மற்ற ஜாதியினரைவிட பிராமணர்களுக்கு தானம் அளிப்பது சிறந்தது என்று குறிப்பிட்டார். அதைப் பற்றிச் சுருக்கமாக ஓர் உரை நிகழ்த்தினார் சுவாமிஜி.

இந்தக் கருத்திற்கு நல்ல பக்கம் உண்டு, அதே வேளையில் தீய பக்கமும் உள்ளது. நாடு பெற்றுள்ள எல்லா பண்பாடுகளும் பிராமணர்களிடமே நடைமுறையில் உள்ளன. நாட்டின் சிந்தனையாளர்களாகவும் அவர்களே இருந்து வருகிறார்கள். அவர்களைச் சிந்தனையாளர்களாக்குகின்ற வாழ்க்கைவழியை அடைத்துவிட்டால் நம் நாடு முழுவதுமே துன்பப்பட நேரும்.

நம்நாட்டிலுள்ள ஒரு பிச்சைக்காரன், கொடுத்ததை உடனடியாக வாங்கிக்கொண்டு அமைதியாக, திருப்தியாக இருந்து விடுகிறான். ஆனால் மேலை நாட்டிலுள்ள பிச்சைக்காரனோ, ஏழைகளுக்கு உணவிடும் இடங்களுக்குச் செல்ல மறுக்கிறான். ஏனென்றால் உணவைவிடச் சுதந்திர உணர்ச்சியை நேசிக்கிறானாம் அவன் ! விளைவு என்ன? அவன் கொள்ளைக்காரனாக, சமுதாயத்தின் எதிரியாக உருவாகிறான். நீதிமன்றம், போலீஸ், சிறைச்சாலை போன்றவை உருவாகக் காரணமாகிறான். நாகரீகம் என்னும் நோய் இருக்கும் வரை வறுமையும் இருந்தே தீரும். அதனால் தானமும் தேவையாகவே இருக்கும். தகுதி பாராமல் கொடுப்பதான இந்திய தானத்தின் விளைவு என்ன? நமது சன்னியாசிகள், அவர்கள் உண்மையானவர்களாக இல்லாவிட்டாலும், பிச்சை எடுப்பதற்காகவாவது சாஸ்திரங்கள் சிலவற்றைப் படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். மேலை நாடுகளின் சட்டரீதியான தானத்தின் விளைவு என்ன? பிச்சைக்காரர்கள் குற்றவாளிகளாக மாறுவார்கள். அறிவுபூர்வமாக இந்த இரண்டுவித தானங்களையும் ஒப்பிட்டுச்சிறந்ததை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 5 கொழும்புமுதல்அல்மோராவரை தமிழ்நாடு சொற்பொழிவு  சென்னையில் பேசிய 5வது சொற்பொழிவு