உன் வாழ்க்கை உன் கையில்!-20

20. தன்னம்பிக்கை ஏன்?

தன்னம்பிக்கை லட்சியம் நமக்கு மிகப்பெரிய உதவியாகும். இந்தத் தன்னம்பிக்கை எங்கும் உபதேசிக்கப் பட்டு, செயல்முறையில் பின்பற்றப்படு மானால் நம்மிடையே உள்ள தீமைகளும் துயரங்களும் பெரும்பாலும் அழிந்து விடும். மனித வரலாற்றை முழுவதும் பார்க்கும் போது, எந்த ஆணோ பெண்ணோ வரலாற்றில் சிறப்புடன் விளங்கினார்கள் என்றால், அதற்கு, மற்ற எல்லாவற்றையும்விட முக்கியக் காரணம் அவர்களது தன்னம்பிக்கைதான். பிறந்ததி லிருந்தே, நான் சிறப்படையப் போகிறேன் என்ற எண்ணத்துடன் அவர்கள் வாழ்ந் தார்கள், சிறந்தவர்கள் ஆனார்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாழ்ந்த நிலைக்கு ஒருவன் சென்றாலும், திடீரென ஒரு முரட்டுத் துணிச்சலுடன் மேலெழுந்து, தன்னம்பிக்கையுடன் திகழும் நேரம் ஒன்று வந்தே தீரும். ஆரம்பத்திலேயே நாம் இதைத் தெரிந்து கொள்வது நல்லது.
எந்த மனிதன் தன்னத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழி வின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதற்கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனெனில் நாம் முன்னேற வேண்டுமானால் முதலில் நமக்கு நம் மிடம் நம்பிக்கை வேண்டும்; பிறகு கடவு ளிடம் நம்பிக்கை வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒருபோதும் நம்பிக்கை வைக்க முடியாது.

எதை நினைக்கிறீர்களோ, அதுவாக ஆவீர்கள். உங்களைப் பலவீனர்கள் என்று நினைத்தால், பலவீனர்கள் ஆவீர்கள்; வலிமையானவர்களாக நினைத்தால் வலிமை மிக்கவர்கள் ஆவீர்கள்; தூய்மை யற்றவர்களாக எண்ணினால் தூய்மை யற்றவர் ஆவீர்கள், தூய்மையானவர்களாக எண்ணினால் தூயவர் ஆவீர்கள்.

எனவே நம்மைப் பலவீனர் என்று நினைக்க வேண்டாம்; நாம் வலிமை மிக்கவர்கள், எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள், எல்லாம் அறிந்தவர்கள் என்று நினைக்கும்படி இது போதிக்கிறது. நான் அதை இதுவரை வெளிப்படுத்த வில்லை என்றால், அதைப்பற்றிக் கவலை இல்லை ; ஆனால் அது என்னில் இருக்கிறது. எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா தூய்மையும் எல்லா சுதந்திரமும் என்னில் இருக்கிறது. அந்த அறிவை ஏன் என்னால் வெளிப்படுத்த முடியவில்லை ? ஏனென்றால் அவைமீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அதை நம்பினால் அவை வெளிப்பட்டே தீர வேண்டும்; வெளிப்படவே செய்யும்.

உலக வரலாறு என்பது தன்னம் பிக்கை உடைய சிலரின் வரலாறே. அத்தகைய தன்னம்பிக்கை நம்முள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளிப் படுத்துகிறது. நீங்கள் எதை வேண்டு மானாலும் செய்யலாம். எல்லையற்ற ஆற்றல் வெளிப்படும் அளவுக்கு நீங்கள் முயலாதபோதுதான் தோல்வி அடை கிறீர்கள். தன்னம்பிக்கையை இழக்கின்ற அந்தக் கணமே ஒருவன் அழிகிறான்; ஒரு நாடும் அவ்வாறே.