உன் வாழ்க்கை உன் கையில்!-21

21. தனித் தன்மையுடன் வளர்தல்

இன்னொன்றையும் அறிந்து கொள்ள வேண்டும், சகோதரா, பிறநாடுகளிடமிருந்து நாம் கற்க வேண்டியவை ஏராளம் உள்ளன. இனி நான் கற்க வேண்டியது எதுவுமில்லை என்பவன் சாவின் அருகில் போய்விட்டான். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று எந்த நாடு கூறுகிறதோ அது அழிவின் எல்லையில் நிற்கிறது. ‘வாழும் நாள்வரை நான் கற்கிறேன்.’ இது சரி. எங்கிருந்து எதைக் கற்றாலும் அதை நமது அச்சில் அமைத்துக்கொள்ள வேண்டும், அதுதான் விஷயம்.

யாரும் மற்றவருக்குக் கற்பிக்க இயலாது. நீங்களே உண்மையை உணர வேண்டும்; உங்கள் இயல்புக்கு ஏற்ப நீங்களே அதனைச் செயல்படுத்தவும் வேண்டும்…. எல்லோரும் தனித்தன்மை உள்ளவர்களாக விளங்க முயல வேண்டும். பலம் வாய்ந்தவர்களாக, சொந்தக்காலில் நிற்பவர்களாக, சுயமாகச் சிந்திக்கக் கூடிய வர்களாக, தங்கள் ஆன்மாவை அறிபவர் களாகத் திகழ வேண்டும். மற்றவர்களின் கொள்கையை அப்படியே விழுங்குவதில் எந்தப் பயனும் இல்லை . சிறைக்காவலர் களைப் போல், ஒன்றாக எழுவதும் ஒன்றாக உட்காருவதும் ஒரே உணவை உண்பதும், ஒன்றாகத் தலையாட்டுவதும் எந்தப் பலனையும் தராது. மாறுதல்களே வாழ்க்கையின் அறிகுறி. மாறுதல்கள் இல்லா திருப்பது மரணத்தின் அடையாளம்.

நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான பாடம் இது. காப்பியடிப்பது ஒருபோதும் நாகரீகம் ஆகாது…. போர்த்தாலும் கழுதை எந்தக் காலத்திலும் சிங்கம் ஆக முடியாது. காப்பியடித்தல், கோழைத்தனமான இந்தப் போலித்தனம் ஒருபோதும் முன்னேற்றத் தைத் தராது. இது மனிதனின் கேவலமான வீழ்ச்சியின் தெளிவான அடையாளம். நாம் பிறரிடமிருந்து காக்க வேண்டியவை உண்மையிலேயே ஏராளம் உள்ளன. பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள மறுப்பவன் செத்தவனே… நல்லவற்றை மற்றவர்களிட மிருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அவைகளை உங்கள் இயல்பிற்கு ஏற்பக் கிரகித்துக்கொள்ளுங்கள், மற்றவர்களாக மாறாதீர்கள். இந்திய வாழ்க்கையிலிருந்து வெளியே இழுக்கப்பட்டவர்களாகி விடாதீர்கள். இந்தியர்கள் மற்ற இனத்த வரைப்போல் உடையுடுத்தி, உண்டு வாழ்ந் தால் இந்தியாவிற்கு நன்மை விளையும் என்று ஒருகணம்கூட நினைக்காதீர்கள்.

விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாக வோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிறதா? இல்லை . அது செடியாகிறது. தனது வளர்ச்சி நியதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொரு ளாக மாற்றி, ஒரு செடியாக வளர்கிறது.

அதேபோலவே ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக்கொண்டு, தன் தனித்தன்மைலை யப் பாதுகாத்துக்கொண்டு, தன் வளர்ச்சி நியதியின்படி வளர வேண்டும்.