சமுதாயத்தின் பல பரிமாணங்கள் 2

சமுதாயம் எவ்வாறு பலநிலைகளாகப் பிரிந்தது?

தேவர்கள் காய்கறிகளையும் தானியங்களையும் உண்டனர்; நாகரீகமானவர்கள்; கிராமங்களில், நகரங் களில், தோட்டங்களில் வாழ்ந்தனர்; தைத்த துணிகளை உடுத்தனர். அசுரர்கள் குன்றுகளில், மலைகளில், பாலைவனங்களில், கடற்கரையில் வசித்தனர்; காட்டு மிருகங்களையும் காட்டுப் பழங்களையும் கிழங்குகளையும் உண்டனர். இவற்றையோ தங்கள் ஆடுமாடுகளையோ தேவர்களுக்குக் கொடுத்து, அதற்கு அவர்கள் தருகின்ற அரிசி, பயிறு போன்றவற்றைப் பயன்படுத்தினர். காட்டுமிருகங்களின் தோலை உடுத்தனர். தேவர்கள் உடல் வலிமை குறைந்தவர்கள்; கஷ்டங்களைத் தாங்க முடியாதவர்கள். அடிக்கடி உபவாசமிருந்ததால் அசுரர்கள் உடல்வன்மை பெற்று எவ்விதக் கஷ்டங்களையும் சமாளிக்கக் கூடியவர்கள் ஆயினர்.

உணவு இல்லாமற்போகும்போது அசுரர்கள் தங்கள் குன்றுகளிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் கிராமங்களையும் நகரங்களையும் கொள்ளையடிப்பதற் காகப் புறப்பட்டுவிடுவார்கள். சிலவேளைகளில் செல் வத்திற்காகவும் தானியங்களுக்காகவும் தேவர்களைத் தாக்குவார்கள். தேவர்கள் தங்களுக்குள் ஒன்றுசேராத போதெல்லாம் சாகவே செய்தனர். ஆனால் அவர்கள் அறிவுக் கூர்மையுடையவர்களாக இருந்ததால் போருக் கான பலவித ஆயுதங்களைக் கண்டுபிடிக்க ஆரம் பித்தனர். பிரம்மாஸ்திரம், கருடாஸ்திரம், வைஷ்ண வாஸ்திரம், சைவாஸ்திரம் எல்லாம் தேவர்களு டையனவே. அசுரர்களிடம் சாதாரண ஆயுதங்கள் மட்டுமே இருந்தன.

ஆனால் அவர்களுக்கு அதிகமான உடல்பலம் இருந்தது. பலமுறை அசுரர்கள் தேவர்களைத் தோற் கடித்தனர்; ஆனாலும் அவர்களுக்கு நாகரீகம் தெரிய வில்லை, விவசாயம் செய்ய முடியவில்லை, புத்தி சாதுரியம் இல்லை. வென்ற அசுரர்கள் சொர்க்கத் தில் ஆட்சி செலுத்த முயல்வார்கள்; சிறிதுகாலம்தான், தேவர்களின் புத்திசாதுரியம் அவர்களை அடிமைப் படுத்திவிடும். சிலவேளைகளில் அசுரர்கள் கொள்ளை யடித்துவிட்டுத் தங்கள் இடங்களுக்குத் திரும்பி விடுவார்கள். தேவர்கள் ஒன்றுபட்ட போதெல்லாம் அசுரர்களைக் கடலுக்கோ, குன்றுகளுக்கோ, காடு களுக்கோ ஓட்டிவிடுவார்கள். படிப்படியாக ஒவ்வொரு கூட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது; லட்சக்கணக்கான தேவர்கள் ஒன்றுபட்டனர்; அசுரர்களும் லட்சலட்சமாக ஒன்றுபட்டனர். மூர்க்கத்தனமான சண்டைகள் நடந்தன, வெற்றிதோல்விகள் வந்தன. கூடவே இரு சாராருக்குள் கலப்பும் ஏற்பட்டது.

இவ்வாறு பல தரத்திலுள்ள மனிதர்கள் தங்களுள் கூடிக் கலந்ததால்தான் இன்றைய சமூகங்களும் பழக்கவழக்கங்களும் உருவாயின; புதிய பல்வேறு சிந்தனைகள் தோன்றின; பல்வேறு அறிவுத்துறைகள் தோன்றின. ஒரு பிரிவினர் உடல் உழைப்பினாலோ, மூளையின் திறமையினாலோ போகத்திற்கான பொருட் களை உருவாக்கினர். மற்றொரு பிரிவு அவற்றைப் பாதுகாக்கும் வேலையை ஏற்றுக்கொண்டது. அனைவரும் தங்களுள் இவற்றைப் பரிமாறிக் கொண்டனர். இதற்குள் திறமை மிக்க ஒரு பிரிவினர் புகுந்து, இந்தப் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச்செல்கின்ற வேலையை மேற்கொண்டனர். எடுத்துச் செல்வதற்கு ஊதியமாக அதிகப் பங்கை எடுத்துக்கொண்டனர். ஒருவன் விவசாயம் செய்தான், இரண்டாமவன் அதைப் பாதுகாத் தான், மூன்றாமவன் அதை மற்றோர் இடத்திற்கு எடுத்துச் சென்றான், நான்காமவன் அதை வாங்கினான். விவசாயம் செய்தவனுக்குக் கிடைத்தது பூஜ்யம். பாதுகாத்தவன் தன்னால் முடிந்தவரை பலவந்தத்தால் எடுத்துக்கொண்டான். வியாபாரிதான் பெரும்பங்கைப் பெற்றவன். வாங்கியவன் அபாரவிலை கொடுக்கத் தவித்தான். பாதுகாத்தவன் அரசன் என்று அழைக்கப் பட்டான். ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சாமான்களைக் கொண்டுசென்றவன் வியாபாரியானான். இவர்களிருவரும் வேலை செய்யாதவர்கள். இருந்த போதிலும் பெரும்பயனை அபகரித்து நன்றாகத் தங்களைக் கொழுக்கச் செய்துகொண்டனர். இவற்றை எல்லாம் உருவாக்கிய ஏழை விவசாயி வயிற்றில் கையை வைத்தபடி ‘ஹே பகவானே’ என்று இறைவனிடம் உதவி நாடி அலறினான்.

காலம் செல்லச்செல்ல முடிச்சுமேல் முடிச்சு விழுந்து எல்லாம் சிக்கலாகியது; இந்தச் சிக்கலி லிருந்துதான் இன்றைய மகா சிக்கலான சமூகம் உருவாகியது.

தேவர், அசுரர் என்ற சொற்களை கீதை 16-ஆம் அத்தியாயத்தில் கூறப்படுகின்ற பொருளில் இங்கு சுவாமிஜி கையாண்டுள்ளார். அதாவது தேவ, அசுர குணங்கள் மேம்பட்டிருந்த இனங்கள் என்பது பொருள்.

சமுதாயத்தின் பல பரிமாணங்கள் 1

சமுதாயம் என்றால் என்ன? அது எவ்வாறு வளர்ந்தது?

ஒரு பொது ஆபத்தோ, எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒன்றை வெறுப்பதோ, விரும்புவதோதான் மக்களை ஒன்றாகப் பிணைக்கிறது. மாமிசம் புசிக்கின்ற மிருகங்கள் எந்த நியதியால் ஒன்றுசேர்கின்றனவோ, அதே நியதியால்தான் மனிதர்களும் ஓர் இனமாக, ஒரு நாடாகப் பரிணமிக்கிறார்கள்.

சமுதாயம் உருவாக ஆரம்பித்தது ; நாடுகளுக்கேற்ப அது வேறுபட்டது. கடற்கரையோரம் வசித்தவர்கள் அனேகமாக மீன் பிடித்து வாழ்க்கை நடத்தினர். சமவெளிகளில் இருந்தவர்கள் பயிர் செய்தனர். மலைவாசிகள் செம்மறி ஆடுகளை வளர்த்தனர். பாலைவனவாசிகள் வெள்ளாடுகளையும் ஒட்டகங்களையும் வளர்த்தனர். சிலர் காடுகளில் வசித்தனர், வேட்டையாடி வாழ்ந்தனர். சமவெளிகளில் வாழ்ந்த வர்கள் விவசாயம் செய்யக் கற்றனர்; வயிற்றிற்காக இவர்கள் அவ்வளவு போராட வேண்டியிருக்கவில்லை; எனவே சிந்தனையில் ஈடுபட்டனர், நாகரீகம் பெறத் தொடங்கினர். நாகரீகம் முன்னேறியபோது உடல் பலவீனமடைந்தது. இரவும்பகலும் திறந்தவெளியில் காற்றும் வெயிலும்பட வசித்து, மாமிசத்தை உண்டு வாழ்ந்தவர்கள், மற்றும் வீடுகளில் வசித்து அனேகமாக தானியங்களையும் காய்கறிகளையும் உண்டவர்கள்இவர்களின் உடம்புகளுக்கிடையே பல்வேறு வித்தியாசங்கள் ஏற்பட்டன. உணவு கிடைக்காதபோது வேட்டைக்காரர்களும் இடையர்களும் மீனவர்களும், திருடர்களாக கொள்ளைக்காரர்களாக மாறி, சமவெளி களில் வாழ்ந்தவர்களைச் சூறையாடினர். சமவெளிகளில் வாழ்ந்தவர்கள் தற்காப்புக்காகக் கூட்டம்கூட்டமாக இணைந்து வாழத் தலைப்பட்டனர். சிறிய அரசுகள் தோன்றின.