உன் வாழ்க்கை உன் கையில்!-25

25. சமத்துவ உணர்வைப் பெறுதல்

யாரையும் பார்த்து இரக்கப் படா தீர்கள், எல்லோரையும் சமமாகப் பாருங்கள். சமத்துவமின்மை என்ற ஆதி பாவத்திலிருந்து உங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள். நாம் எல்லோரும் சமம். ‘நான் நல்லவன், நீ தீயவன், நான் உன்னைத் தீமையிலிருந்து மீட்கப் போகிறேன்’ என்று நினைக்காதீர்கள். சமத்துவமே சுதந்திரத்தின் அடையாளம். பாவிகளுடனும் குடிகாரர்களுடனும் ஏசுநாதர் வாழ்ந்தார். அவர் ஒருபோதும் தன்னை ஒரு பீடத்தின்மீது நிறுத்திக் கொள்ளவில்லை. பாவிகள்தான் பாவத் தைக் காண்பார்கள். மனிதனைப் பார்க் காதே, இறைவனை மட்டுமே பார்.

நாமே நமக்குச் சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம். நரகத்தில் கூடச் சொர்க்கத்தை உருவாக்க நம்மால் முடியும். பாவிகள் நரகத்தில் மட்டுமே இருப்பார்கள். நாம் அவர்களைக் காண் கிறோம் என்றால் நாம் இங்கே நரகத்தில் இருப்பதாகத்தான் அர்த்தம்.

மனிதனுக்குக் கல்வி அவசியம். ஜனநாயகம், மனித சமத்துவம் என்றெல் லாம் இன்று பேசுகிறார்கள். தான் எல்லாருடனும் சமம் என்பதை ஒருவன் எப்படித் தெரிந்து கொள்வான்? அவனுக்கு வலுவான மூளை வேண்டும், அசட்டுக் கருத்துக்கள் இல்லாத தெளிந்த மனம் வேண்டும், மனத்தை மூடியிருக்கும் மூட நம்பிக்கைகளை ஊடுருவி, தன்னுள் ஆழத்தில் உள்ள தனி உண்மையை அவன் அறிய வேண்டும். எல்லா நிறைவும் எல்லா சக்திகளும் ஏற்கனவே தன்னுள் உள்ளன, அவற்றைப் பிறர் தனக்குத் தரத் தேவையில்லை என்பதை அப்போது அவன் உணர்வான். இதை உணர்ந்த அந்தக் கணமே அவன் சுதந்திரன் ஆகிறான், சமத்துவம் பெறுகிறான். தன்னைப் போலவே எல்லோரும் பூரணர்களாகவே உள்ளனர், உடலாலோ உள்ளத்தாலோ தான் யார்மீதும் அதிகாரம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பதையும் அவன் உணர்கிறான். தன்னைவிடக் கீழான நிலையில் யாரும் ஒருபோதும் இருந்ததில்லை என்பது அவனுக்குத் தெரிகிறது. அப்பொழுதுதான் அவன் சமத்துவத்தைப் பற்றிப் பேச முடியும், அதற்குமுன்பு அல்ல.