எனது போர் முறை

எனது போர் முறை

பிப்ரவரி 9 மாலை, விக்டோரியா ஹால்.

கூட்ட மிகுதியால் அன்று நம்மால் சொற்பொழிவைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. எனவே சென்னை மக்கள் எனக்கு அளித்த அன்புமயமான வரவேற்புக்கு இப்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வரவேற்புரையில் அழகிய சொற்கள் பல கூறப்பட்டன. மனம்திறந்து பாராட்டப்பட்ட அந்தக் கனிவான சொற்களுக்குத் தகுதியானவனாக என்னை ஆக்குமாறு எம்பெருமானைப் பிரார்த்திப்பதையும், நமது மதத்திற்காகவும் நமது தாய்நாட்டின் சேவைக்காகவும் என் வாழ்நாள் முழுவதம் பாடுபடுவதையும் தவிர வேறு எப்படி என் நன்றியுணர்வைத் தெரிவிப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. அந்தப் பாராட்டுரைகளுக்கு தகுதி படைத்தவனாக இறைவன் என்னை ஆக்குவாராக!

என்னிடமுள்ள எல்லா குறைபாடுகளுடன் , என்னிடம் சிறிது தைரியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தியாவிலிருந்து மேலை நாட்டிற்குத் தருவதற்கான செய்தி ஒன்று என்னிடம் இருந்தது. தைரியமாக அதை அமெரிக்கர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் அளித்தேன். இன்றைய தலைப்பை எடுத்துக் கொள்ளுமுன் சில வார்த்தைகளைத் தைரியமாக உங்களிடம் கூற விரும்புகிறேன். என்னை நிலைகுலையச் செய்யவும், என் வளர்ச்சியைத் தடுக்கவும், முடியுமானால் என்னையே நசுக்கி எறிந்துவிடவும் சில சூழ்நிலைகள் என்னைச் சுற்றி உருவாகியது உண்டு. அத்தகைய முயற்சிகள் எப்போதும் தோல்வி அடைவதைப்போல் இவையும் தோல்வியையே தழுவின. அதற்காகக் கடவுளுக்கு நன்றி. ஓரளவுக்குத் தவறான அபிப்பிராயமும் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவிவருகிறது. அன்னிய நாட்டில் இருந்தவரை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதி காத்தேன் . ஆனால் இப்பொழுது , என் தாய்நாட்டு மண்ணின்மீது நின்று கொண்டு சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன் இதன் விளைவு என்ன என்பதைப்பற்றி நான் கவலைபடவில்லை. அந்தச் சொற்கள் உங்களிடம் எத்தகைய உணர்ச்சியை எழுப்பும் என்பதையும் நான் பொருட்படுத்தவில்லை; அது எனக்கு ஒரு பிரமாதமான விஷயமல்ல ; ஏனெனில் நான் ஒரு துறவி. ஒரு தடியோடும் கமண்டலத்தோடும் நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்குள் நுழைந்த அதே சன்னியாசியாகவே நான் இப்போதும் இருக்கிறேன். விரிந்து பரந்த உலகம் என் முன் இருக்கவே செய்கிறது. முன்னுரையை மேலும் நீட்டாமல் விஷயத்திற்கு வருகிறேன்.

முதன்முதலில் தியாசஃபிகல் சொசைட்டியைப் பற்றி நான் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும் . அவர்கள் நம் நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறார்கள் என்பதை நான் எடுத்துச் சொல்லவேண்டியதில்லை. அதற்காக ஒவ்வோர் இந்துவும் அவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அன்னிபெசன்ட் அம்மையாருக்கு நன்றியுடையவனே. அவரைப்பற்றி எனக்கு அதிகமாக எதுவும் தெரியாது. ஆனால் நான் அறிந்ததிலிருந்தே அவர் நமது தாய்நாட்டிடம் உண்மையான அனுதாபம் உள்ளவர், நம் நாட்டை உயர்த்துவதற்காகத் தமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து வருபவர் என்பதை என்னுள் ஆழமாக உணர்ந்து கொண்டேன்.அதற்காக உண்மையான ஒவ்வோர் இந்தியனும் நிரந்தரமாக அவருக்கு நன்றிக்கடன்பட்டவன். அவர்மீதும் அவரைச் சேர்ந்தவர்கள் மீதும் எல்லா ஆசிகளும் என்றென்றைக்கும் பொழியட்டும்!

ஆனால் அது ஒரு விஷயம், அந்த சொசைட்டியில் சேர்வது என்பது மற்றொரு விஷயம். மதிப்பும் மரியாதையும் அன்பும் கொள்வது ஒரு விஷயம்; ஒருவர் எதைச் சொன்னாலும் அதனை அலசி ஆராயாமல் பகுத்தறியாமல் அப்படியே ஏற்றுக் கொள்வது மற்றொரு விஷயம். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நான் சாதித்த ஏதோ அந்தச் சிறிய வெற்றிக்கு தியாசஃபிகல் சொசைட்டியினர் எனக்கு உதவியதாக இங்கெல்லாம் பேசப்படுகிறது. அந்த ஒவ்வொரு சொல்லும் தவறு , ஒவ்வொரு சொல்லும் பொய், என்பதை வெளிப்படையாக உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும்.

தாராளமயமான சிந்தனைகள், மாறுபட்ட கருத்துக்களிடமும் பெருந்தன்மை என்றெல்லாம் பெரிய பேச்சுக்களைக் கேட்கிறோம். மிக நல்லது. நிஜ வாழ்க்கையிலோ, இந்தத் தாராளம், பெருந்தன்மை எல்லாம் ஒருவன் சொல்வதை அப்படியே நம்பும்வரைதான். சிறிது மாறுபட்டால் போதும் பெருந்தன்மை பறந்துவிடும் அன்பு மறைந்துவிடும். இன்னும் சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கென்று சுயநலப் பாதைகளும் உள்ளன. அவர்களின் பாதையில் ஏதாவது தடை குறுக்கிட்டால் போதும், அவர்களின் இதயங்கள் எரியும், வெறுப்பு கொப்புளித்து வெளிப்படும், என்ன செய்வது என்றே அவர்களுக்குத் தெரியாது.

இந்துக்கள் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய முயன்றால், இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு வந்தத்துன்பம் என்ன? இந்துக்கள் தங்களையே சீர்திருத்த முனைந்தால் பிரம்ம சமாஜத் தினருக்கும் மற்ற சீர்திருத்த அமைப்புகளுக்கும் நேர்ந்த தொல்லைதான் என்ன? அவர்கள் ஏன் எதிராக நிற்க வேண்டும்? ஏன் இந்த இயக்கங்களின் பெரிய பகைவர்களாக வேண்டும்? நான் கேட்கிறேன், ஏன்? ஏன் என்றோ, எப்படியென்றோ கேட்கக் கூடாத அளவிற்கு அவர்களது வெறுப்பும் பொறாமையும் கடுமையாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

வசதியற்ற, யாருக்கும் தெரியாத, நண்பர்களோ அறிமுகமோ இல்லாத ஒரு சன்னியாசியாக, கடல் கடந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றேன். அங்கே சென்று தியாசஃபிகல் சொசைட்டியின் தலைவரைச் சந்தித்தேன். அவர் ஓர் அமெரிக்கர், இந்தியாவை நேசிப்பவர். ஒரு வேளை அவர் அங்குள்ள யாருக்காவது ஓர் அறிமுகக் கடிதம் தருவார் என எண்ணினேன். அவரோ என்னிடம், நீங்கள் எங்கள் சொசைட்டியில் சேர்வீர்களா? என்று கேட்டார். முடியாது, எப்படி முடியும்? உங்கள் கொள்கைகளுள் பெரும்பாலானவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றேன் நான் . இதைக் கேட்டதும் அவர் , பொறுக்க வேண்டும், என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியாது” என்று கூறிவிட்டார். இது எனக்குப் பாதை வகுத்துத் தரும் வழியல்லவே!

சென்னை நண்பர்கள் சிலரின் உதவியால் நான் அமெரிக்கா சென்றது உங்களுக்குத் தெரியும். அவர்களுள் பெரும்பாலோர் இங்கே உள்ளார்கள். நான் மிகுந்த நன்றிக் கடன்பட்டிருக்கும் நீதிபதி திரு. சுப்பிரமணிய ஐயர் மட்டும் இல்லை. ஒரு மேதையின் உள்ளுணர்வு பெற்றவர் அவர், எனது மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவர், ஓர் உண்மை நண்பர், இந்தியாவின் உண்மையான ஒரு குடிமகன்.

சர்வ மத மகாசபை கூடுவதற்குப் பல மாதங்களுக்கு முன்பே நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். பணம் மிகக் குறைவாகத்தான் என்னிடம் இருந்தது, அதுவும் விரைவில் செலவாகிவிட்டது. குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருந்தது, என்னிடமோ வெயில் காலத்திற்குரிய மெல்லிய ஆடைகளே இருந்தன. உறையச் செய்கின்ற அந்தக் குளிரில் என்ன செய்வ தென்றே எனக்குத் தெரியவில்லை. தெருக்களில் பிச்சையெடுத்தாலோ சிறையில்தான் இடம் கிடைக்கும். சில டாலர்களைத் தவிர எல்லாம் கரைந்துவிட்டன. சென்னை நண்பர்களுக்குத் தந்தி கொடுத்தேன். என் நிலை தியாசபிக் சொசைட்டியினருக்குத் தெரியவந்தது. அவர்களுள் ஒருவர் எழுதினார்-அந்தப் பிசாசு ஒழியப் போகிறது. நமக்கு இறைவன் அருள்புரிந்துவிட்டார், இதுதான் எனக்குப் பாதை அமைத்துத் தருவதா?

இதையெல்லாம் இப்போது சொல்லியிருக்க மாட்டேன். நம் நாட்டு மக்கள் விரும்பியதால் கூற வேண்டியதாயிற்று . கடந்த மூன்று ஆண்டுகளாக இதைப்பற்றி நான் வாயைத் திறந்ததே இல்லை. மௌனமே என் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இன்று வெளியே வந்துவிட்டது. விஷயம் அத்துடன் முடியவில்லை. தியாசபிக் சொசைட்டியினர் சிலரை நான் சர்வசமயப் பேரவையில் பார்த்தேன், அவர்களோடு பேசவும் கலந்து பழகவும் விரும்பினேன். அப்போது அவர்கள் முகத்தில் தோன்றிய வெறுப்பு இன்னும் என் நினைவில் இருக்கிறது, தேவர்கள் கூடும் இடத்தில் இந்தப் புழுவிற்கு என்ன வேலை? என்று கேட்பதைப்போல் இருந்தது அது. சர்வ மத மகாசபையில் நான் பெயரும் புகழும் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு பணிகளும் வந்தன. ஆனால் ஒவ்வொரு படியிலும் தியாசஃபிகல் சொசைட்டியினர் என்னைச் சிறுமைப்படுத்தவே முயன்றனர். என் சொற்பொழிவுகளுக்கு வர வேண்டாம் என்று தியாசஃபிகல் சொசைட்டியினர் தடுக்கப்பட்டனர். நான் பேசுவதைக் கேட்டால் அவர்களுக்கு இந்த சொசைட்டியிடம் நம்பிக்கை போய்விடும் என்ற பயம் தான் காரணம், குறிப்பிட்ட சிலர் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் நியதிகளும் அதையே கூறுகின்றன- அங்கு சேர்பவர்கள் குதுமி மற்றும் மொரியாவிடமிருந்தும், அவர்களின் பிரதிநிதிகளான திரு. ஜட்ஜ் மற்றும் திருமதி. அன்னிபெசன்டின் மூலமே உபதேசங்களைக் கேட்க வேண்டும் . இந்த சொசைட்டியில் சேர்வது என்பது ஒருவர் தன் சுதந்திரத்தையே அடகு வைப்பதாகும். இப்படிப்பட்ட ஒருகாரியத்தை நிச்சயமாக என்னால் செய்ய முடியாது. அப்படிச் செய்கின்ற ஒருவனை இந்து என்று அழைக்கவும் என்னால் இயலாது. திரு. ஜட்ஜிடம் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அவர் உயர்ந்தவர், திறந்த மனம் படைத்தவர் நாணயமானவர் எளிமையானவர் தியாசஃபிகல் சொசைட்டியின் இதுவரையிலான பிரதிநிதிகளுள் மிகவும் சிறந்தவர். இவரும் திருமதி. பெசன்டும் தங்கள் மகாத்மாக்களே சரியானவர்கள் என்று அடித்துக் கொள்கிறார்கள், இதை குறை கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை . வினோதம் என்னவென்றால் இரண்டு பேரும் உரிமை கொண்டாடுவது ஒரே மகாத்மாவையே, உண்மை, கடவுளுக்குத்தான் வெளிச்சம். அவரே நீதிபதி, இரண்டு பக்கமும் சமமாக இருக்கும்போது நீதி வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை . இப்படியெல்லாம்தான் அவர்கள் அமெரிக்கா முழுவதும் என் வளர்ச்சிக்கான வழி வகுத்தார்கள்!

அங்கே என்னை எதிர்ப்பவர்களான கிறிஸ்தவப் பாதிரிகளுடன் வேறு சேர்ந்து கொண்டனர். எனக்கு எதிராக இந்தப் பாதிரிகளின் கற்பனையில் தோன்றாத ஒரு பொய்கூடக் கிடையாது. நண்பர்களோ பணமோ யாரும் இல்லாத ஒருவனாக ஓர் அன்னிய நாட்டில் நான் உள்ளேன். என் நடத்தையைப்பற்றிக் கேவலமாக நகரம் தோறும் பரப்பினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் என்னைத் துரத்தியடிக்க முயன்றார்கள், எனக்கு நண்பர்களான ஒவ்வொருவரையும் பகை வனாக்க முயன்றார்கள். என்னைப் பட்டினிபோட்டுச் சாகடிக்க முயன்றார்கள், இதில் என் சொந்த நாட்டினர் ஒருவரும் எனக்கு எதிராகச் செயல்பட்டார் என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். அவர் இந்தியாவிலுள்ள சீர்திருத்தக் கட்சி ஒன்றின் தலைவர் , ஏசு இந்தியாவிற்கு வந்திருக்கிறார்” என்று அவர் ஒவ்வொரு நாளும் முழங்குகிறார். . ஏசு இந்தியாவிற்கு வரும் வழி இதுதானா? இதுதான் இந்தியாவைச் சீர்திருத்துகின்ற வழியா? இளமைப் பருவத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். என் சிறந்த நண்பர்களுள் ஒருவராக இருந்தவர். அன்னிய நாட்டில் நெடுநாட்களாக நம் நாட்டினர் யாரையும் காணாமலிருந்து அவரைக் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன். ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த பரிசு இது. என்று என்னை சர்வ மத மகாசபை ஆரவாரம் செய்து வரவேற்றதோ, என்று நான் சிகாகோவில் பிரபலம் ஆனேனோ அன்றிலிருந்து அவரது போக்கு மாறிவிட்டது. என்னைத் துன்புறுத்துவதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் திரைமறைவில்.செய்தார். இந்த வழியாகத்தான் ஏசு இந்தியாவிற்கு வரப் போகிறாரா? கிறிஸ்துவின் காலடியில் இருப்பதைந்து ஆண்டுகள் உட்கார்ந்து அவர் கற்றுக்கொண்ட பாடம் இதுதானா? கிறிஸ்தவ மதமும் கிறிஸ்தவ சக்தியும்தான் இந்திய மக்களைக் கைதூக்கிவிடப் போகிறது என்று நமது மகத்தான சீர்திருத்தவாதிகள் முழங்குகிறார்கள், அதைச் செய்கின்ற வழி இதுதானா? அவர் தான் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றால், அது நம்பிக்கைக்குரிய ஒன்றாகத் தோன்றவில்லை.

இன்னும் ஒரு வார்த்தை , சமுகச் சீர்த்திருத்தவாதிகளின் பத்திரிகை ஒன்றில் ,என்னைச் சூத்திரன் என்று எழுதி, சன்னியாசி ஆவதற்கு எனக்கு என்ன உரிமையிருக்கிறது என்று சவால் விடப்பட்டிருந்ததை நான் படித்தேன். அதற்கு என் பதில் ; ஒவ்வொரு பிராமணனும் ,யமாய தர்மராஜாய சித்ரகுப்தாய வை நம” என்று ஓதிக்கொண்டு ,யாருடைய திருவடிகளில் மலர்களை அர்ப்பிக்கிறானோ, தூய க்ஷத்திரியர்கள் யாருடைய வழியில் தோன்றியவர்களோ, அவரது பரம்பரையில் தோன்றியவன் நான் . நீங்கள் உங்கள் புராணங்களையும் சாஸ்திரங்களையும் நம்புபவர்களானால் , என் ஜாதி கடந்த காலத்தில் செய்திருக்கும் பல சேவைகளுடன், பாதி இந்தியாவைப் பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தும் இருக்கிறது என்பதைச் சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்படுகின்ற இவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும், எனது ஜாதி ஒதுக்கப்படுமானால் இன்றைய இந்திய நாகரீகத்தில் என்ன மிஞ்சும்? வங்காளத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தியாவின் மகத்தான தத்துவ அறிஞர், மகத்தான கவிஞர், மகத்தான வரலாற்று அறிஞர், மகத்தான தொல் பொருள் ஆய்வாளர், மகத்தான சமய போதகர் என்று ஒவ்வொருவரும் என் ஜாதியைச் சேர்ந்தவர்களே. இக்கால விஞ்ஞானிகளுள் மகத்தான விஞ்ஞானி ஒருவரை இந்தியாவிற்கு அளித்துள்ளதும் என் ரத்தமே. உண்மையைத் திரித்துக் கூறுகின்ற இவர்கள் நம் வரலாற்றைப் பற்றிச் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும் ; பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று ஜாதியினருமே சன்னியாசத்திற்குச் சம உரிமை படைத்தவர்கள் என்பதை ப் படித்திருக்க வேண்டும் ; மூன்று ஜாதியினரும் வேதம் படிக்கச் சம உரிமை பெற்றவர்கள்.

சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை யெல்லாம் சொன்னேன். ஆனால் அவர்கள் என்னைச் சூத்திரன் என்று அழைப்பதால் நான் எந்த வகையிலும் வேதனைப்படவில்லை. எனது முன்னோர்கள் ஏழைகளுக்கு இழைத்த கொடுமைகளுக்கு இது ஒரு சிறிய பிராயச்சித்தமாகவே இருக்கும். நான் தாழ்ந்த குலத்தினனாக இருந்தால் மகிழ்ச்சியே அடைவேன். ஏனென்றால் பிராமணர்களுக்கெல்லாம் பிராமணராக இருந்து கொண்டு, ஒரு தாழ்ந்த குலத்தினனின் வீட்டைச் சுத்தம் செய்ய விரும்பிய ஒருவரது சீடன் நான். அவன் இதை அனுமதிக்க மாட்டான்; ஒரு பிராமண சன்னியாசி தன் வீட்டிற்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்வதை அவன் எப்படி அனுமதிப்பான் ? எனவே இந்த மனிதர் நள்ளிரவில் விழித்தெழுந்து, யாருமறியாமல் அவனது வீட்டிற்குள் நுழைந்து கழிவறைகளைச் சுத்தம் செய்து, தம் நீண்ட தலைமுடியால் அந்த இடத்தைத் துடைக்கவும் செய்வார். எல்லோருக்கும் சேவகனாகத் தம்மை ஆக்கிக்கொள்வதற்காகப் பல நாட்கள் இவ்வாறு செய்தார். அவரது திருப்பாதங்களை என் தலைமீது தாங்கிக் கொண்டிருக்கிறேன். அவரே என் தலைவர், அவரது வாழ்க்கையைப் பின்பற்றவே நான் முயல்வேன்.

எல்லோருக்கும் சேவகனாக இருப்பதன் மூலம் தான் ஓர் இந்து தன்னை உயர்த்திக்கொள்ள வழிதேடுகிறான். பாமரர்களைக் கைதூக்கிவிட இப்படித்தான் இந்துக்கள் முயற்சிக்க வேண்டுமே தவிர, எந்த வெளி நாட்டுச் செல்வாக்கையும் எதிர்பார்த்து அல்ல, மேலை நாகரீகத்தின் விளைவைப் பாருங்கள். இருபது ஆண்டுகள் அதன் ஆதிக்கத்தில் வாழ்ந்ததால் தன் சொந்த நண்பனையே அன்னிய நாட்டில் பட்டினிபோட விரும்பிய அந்த மனிதரின் நினைவுதான் எனக்கு வருகிறது. அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்?நண்பன் பிரபலமாகி விட்டான், தான் பணம் சம்பாதிப்பதற்குக் குறுக்கே நிற்கிறான், அவ்வளவுதான் காரணம். அதேநேரத்தில், வைதீக இந்து சமயம் என்ன செய்கிறது என்பதற்கு, சொந்த நாட்டில் என் குருதேவரின் வாழ்க்கை ஓர் உதாரணம். நமது சீர்திருத்தவாதிகளுள் யாராவது தாழ்ந்த குலத்தினனுக்கும் சேவை செய்யத் தயாராக இருந்து, அந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டட்டும்; அப்போது நான் அவர்களின் காலடியில் அமர்ந்து கற்றுக் கொள்கிறேன், அதற்கு முன்னால் அல்ல. ஒரு துளி செயல் இருபதாயிரம் வெற்றுப் பேச்சுக்களை விடச் சிறந்தது.

இப்போது சென்னையிலுள்ள சீர்திருத்தச் சங்கங்களுக்கு வருகிறேன். அவர்கள் என்னிடம் கனிவு காட்டினார்கள், அன்போடும் பேசினார்கள். தங்களுக்கும் வங்காள சீர்திருத்தவாதிகளுக்கும் வேறுபாடு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்கள். நானும் மனமுவந்து அதனை ஏற்றுக் கொள்கிறேன். சென்னை மிக அழகிய நிலையில் உள்ளது என்று நான் அடிக்கடிச் சொல்வது உங்களுள் பலருக்கு நினைவிருக்கும் ஒன்றைச் செய்வது ,உடனே அதற்கு எதிராக இன்னொன்றைச் செய்வது- வங்கச் சீர்திருத்தவாதிகளின் இந்த விளையாட்டை சென்னை இன்னும் பின்பற்றவில்லை. இங்கு எல்லாவற்றிலும் நிதானமான அதேவேளையில் உறுதியான முன்னேற்றம் காணப்படுகிறது. இங்கே வளர்ச்சி உள்ளது, எதிர்ச்செயல் இல்லை. வங்காளத்தில் பல விஷயங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால்சென்னையில் மறுமலர்ச்சி இல்லை; வளர்ச்சி, இயற்கையான வளர்ச்சி காணப்படுகிறது. எனவே இந்த இரண்டு இனங்களுக்கும் இடையே இருப்பதாகச் சீர்திருத்தவாதிகள் சுட்டிக் காட்டுகின்ற வேறுபாடுகளை நான் முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன்; ஆனால் இவர்கள் புரிந்து கொள்ள முடியாத வேறுபாடும் ஒன்று உள்ளது.

இந்த சொசைட்டிகளுள் சில, தங்களோடு சேர்ந்து கொள்ளுமாறு என்னைப் பயமுறுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. இது ஒரு விபரீத முயற்சி. பதினான்கு வருடங்கள் பட்டினியை நேருக்கு நேராகச் சந்திக்க ஒருவனை, அடுத்த வேளைக்கான உணவும் படுக்க இடமும் எங்கே கிடைக்கும் என்று தெரியாத ஒருவனை அவ்வளவு சுலபமாகப் பயமுறுத்திவிட முடியாது. பூஜ்யத்திற்குக் கீழே முப்பது டிகிரி என்று வெப்பமானி காட்டுகின்ற பிரதேசத்தில், ஏறக்குறைய உடைகளே இல்லாமலும், அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும்

என்று தெரியாமலும் வாழத் துணிந்த ஒருவனை இந்தியாவில் பயமுறுத்துவது என்பது அவ்வளவு சுலபமல்ல. நான் அவர்களுக்கு முதலில் சொல்வது இதுதான் – எனக்கென்று ஒரு சுயேச்சை உள்ளது, எனக்கென்று சிறிது அனுபவமும் இருக்கிறது, உலகிற்குத் தர என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது, அதை அச்சமின்றியும் எதிர்காலத்தைப்பற்றிக் கவலைப் படாமலும் நான் கொடுக்கவே செய்வேன். அவர்களை விடப் பெரிய சீர்திருத்தவாதி நான் என்பதையும் இந்தச் சீர்திருத்தவாதிகளுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தை; நானோ அடிமுதல் முடிவரையிலான மொத்தச் சீர்த்திருத்தத்தை விரும்புகிறேன். அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான வழியில் தான் இருவரும் வேறுபடுகிறோம். அவர்களுடையது அழிவுப்பாதை; என்னுடையது ஆக்கப் பாதை. நான் மறுமலர்ச்சியை நம்பவில்லை, வளர்ச்சியையே நம்புகிறேன். என்னைக் கடவுள்நிலையில் வைத்துக்கொண்டு, இந்த வழியில் தான் நீங்கள் போக வேண்டும், இந்த வழியில் போகக் கூடாது” என்று சமுதாயத்திற்குக் கட்டளையிட நான் துணிய மாட்டேன். ராமர் பாலம் கட்டும்போது, தன் பங்காக ஏதோ கொஞ்சம் மணலைப் போட்ட அந்தச் சிறிய அணிலைப்போல் இருக்கவே நான் விரும்புகிறேன். அதுதான் என் நிலை.

அற்புதமான இந்தக் தேசிய எந்திரம் காலங்காலமாக வேலை செய்து கொண்டிருக்கிறது. தேசிய வாழ்க்கை என்னும் இந்த ஆச்சரியமான ஆறு நம் முன் ஓடிக் கொண்டிருக்கிறது. இது நல்லதா, எந்த வழியாக இது செல்லும் என்பது யாருக்குத் தெரியும்? அதைச் சொல்லும் தைரியம்தான் யாருக்கு இருக்கிறது? ஆயிரக்கணக்கான சூழ்நிலைகள் அதைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு தனிப்பட்ட சில உணர்வுகளைக் கொடுத்து, அதைச் சிலகாலத்தில் நிதானமாகவும் மற்ற காலங்களில் வேகமாகவும் ஓடச்செய்கின்றன. அதன் இயக்கத்தைப்பற்றிக் கட்டளையிட யாருக்குத் தைரியம் உள்ளது? கீதை சொல்வது போல் , நம்முடையதெல்லாம் பலன்களை எதிர்பார்க்காமல் வேலை செய்வது ஒன்றுதான்.

தேசிய வாழ்க்கைக்குத் தேவையான உணவைக் கொடுங்கள், ஆனால் வளர்ச்சி அதைப் பொறுத்தது. அது வளர்வதற்கு யாரும் கட்டளையிட முடியாது,நம் சமூகத்தில் தீமைகள் அதிகமாக உள்ளன, ஆனால் அதுபோல் மற்ற ஒவ்வொரு சமூகத்திலும் தீங்குகள் இருக்கவே செய்கின்றன. இங்கு பூமி, சிலவேளைகளில் விதவைகளின் கண்ணீரால் நனைகிறது என்றால் ,அங்கே மேலை நாட்டின் காற்று திருமணமாகாத பெண்களின் ஏக்கப் பெருமூச்சால் நிறைந்துள்ளது. இங்கு வறுமை வாழ்க்கையின் ஒரு பெரிய சாபமாக இருக்கிறது, அங்கே ஆடம்பரக் களைப்பு அந்த இனத்தின் சாபமாக உள்ளது. இங்கே மனிதர்கள் தற்கொலையை நாடுகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு உண்ண எதுவும்இல்லை. அங்கே உணவு குவிந்து கிடப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தீமை எல்லா இடத்திலும் இருக்கிறது. அது தீராத வாத நோய் போன்றது. அதைக் காலிலிருந்து விரட்டுங்கள். தலைக்குப்போகும். அங்கிருந்து துரத்துங்கள், வேறு எங்காவது போகும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் என்று ஒவ்வோரிடமாகத் துரத்தலாம், அவ்வளவுதான்.ஆனால் குழந்தைகளே, தீமையை ஒழிப்பதுதான் உண்மையான வழி.

தீமையும் நன்மையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல் எப்போதும் சேர்ந்தே உள்ளன என்று நம் தத்துவம் போதிக்கிறது. ஒன்று வேண்டுமென்றால் மற்றதை ஏற்றாக வேண்டும். கடலில் ஓரிடத்தில் அலை எழுந்தால் மற்றோர் இடத்தில் பள்ளம் உண்டாகியிருக்கிறது. ஏன், வாழ்க்கையே தீமைதான். உயிரைக் கொல்லாமல் மூச்சுக்கூட விட முடியாது. யாரிடமிருந்தோ பறிக்காமல் ஒருபிடி சோறுகூட உண்ண முடியாது. இதுதான் நியதி, இதுதான் தத்துவம். எனவே தீமைகளை எதிர்ப்பதற்காகச் செய்யப்படுகின்ற பணிகள்யாவும் எந்தப் புற அளவுகோலாலும் அளக்கப்படக் கூடியவையல்ல, அவை அகம் சம்பந்தப்பட்டவை, மனிதனுக்கு மனிதன் வேறுபடக்கூடியவை என்பதைப் புரிந்துகொள்வது மட்டுமே நாம் செய்யக் கூடியது. எவ்வளவோ பெரியவை என்றெல்லாம் நாம் பேசினாலும் அத்தகைய பணிகள் சொந்தப் படிப்பினைக்காகவே தவிர, அவற்றால் தீமைகள் எல்லாம் உடனே அழிந்துவிடப் போவதில்லை.

தீமைக்கு எதிரான வேலையைப் பற்றிய முதல் கருத்து இதுதான்- அது நம்மை மேலும்மேலும் அமைதியானவர்களாக ஆக்க வேண்டும், கொள்கை வெறியை நம் ரத்தத்திலிருந்து அகற்ற வேண்டும். கொள்கை வெறியுடன் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்கள் எல்லாம் தங்கள் தோல்வியைத் தாமாகவே தேடித் கொண்டன என்பதை உலகின் வரலாறு நமக்குக் காட்டுகிறது. உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக நடைபெற்ற புரட்சிகளுள், அமெரிக்காவின் அடிமை முறை ஒழிப்புப் போரைவிடப் பெரிய ஒன்றைக் கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாது. உங்கள் எல்லோருக்கும் அதைப்பற்றித் தெரியும். ஆனால் அதன் விளைவுகள் என்ன? இன்றைக்கு அந்த அடிமைகள், அடிமைமுறையை ஓழிப்பதற்கு முன்னால் இருந்ததை விட நூறு மடங்கு மோசமான நிலையில் உள்ளனர் அடிமை முறையை நீக்குவதற்கு முன்பு இந்த அப்பாவி நீக்ரோக்கள் சிலருடைய சொத்துக்களாகவேனும் இருந்தார்கள் . சொத்துக்கள் அழிந்து போய்விடக் கூடாது என்ற அளவில் பராமரிக்கப்பட்டும் வந்தார்கள். இன்றைக்கோ அவர்கள் யாருடைய சொத்தும் இல்லை ,அவர்களுடைய உயிருக்கு மதிப்பே இல்லை. ஏதேதோ சாக்குப்போக்குகளைக் காரணம் காட்டி அவர்கள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள். அவர்களைச் சுட்டுக் கொல்கின்ற கொலைகாரர்களைத் தண்டிக்க எந்தச் சட்டமும் இல்லை . ஏனென்றால் அவர்கள் நீக்ரோக்கள் அவர்கள் மனிதர்கள் அல்ல, ஏன் ,அவர்கள் மிருகங்கள் கூடஅல்ல. சட்டத்தின் மூலமோ கொள்கை வெறியின் மூலமோ பலாத்காரமாகத் தீமையை நீக்க முற்பட்டால் விளைவு இது தான். நல்லது செய்வதற்கேயானாலும் கொள்கை வெறியுடன் செயல்பட்ட ஒவ்வோர் இயக்கத்தையும் வரலாறு நமக்கு இவ்வாறு தான் இனம் காட்டுகிறது. என் அனுபவமும் அதுவே. எனவே கண்டனக்குரல் எழுப்புகின்ற எந்த இயக்கத்திலும் என்னால் சேர முடியாது.

ஒவ்வொரு சமுதாயத்திலும் தீமைகள் உள்ளன. எல்லோருக்கும் இது தெரியும். இன்றைய குழந்தைகள் ஒவ்வொன்றும் இதை அறியும். அதுகூட மேடையேறி இந்து சமுதாயத்தில் நிலவுகின்ற பயங்கரத் தீமைகளைப்பற்றி ஒரு பெரிய சொற்பொழிவு நிகழ்த்த முடியும். இந்தியாவிற்கு வருகின்ற, கல்வியறிவற்ற மேலைநாட்டு யாத்தரிகன் ஒவ்வொருவனும் ஒரு ரயில் பயணத்திலேயே ஏதோ இந்தியாவையே எடை போட்டவன் ஆகிவிடுகிறான், பின்னர் இந்தியாவிலுள்ள பயங்கரத் தீமைகளைப்பற்றிப் பிரமாதமான சொற்பொழிவுகளையும் பொழிந்து விடுகிறான். தீமைகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தீமையை இனம்காட்டவும் எல்லோராலும் முடியும். ஆனால் பிரச்சனையிலிருந்து விடுபட வழி காண்பவன் அல்லவா மனித குலத்தின் நண்பன்! நீரில் முழ்கிக் கொண்டிருக்கின்ற சிறுவனும் தத்துவ அறிஞரும் போல்- தத்துவ அறிஞர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். தண்ணீரில் தத்தளித்த சிறுவனோ, முதலில் என்னைத் தண்ணீரிலிருந்து கரையேற்றுங்கள்” என்று கதறினான். அப்படித்தான் நமது மக்களும், நாங்கள் வேண்டிய அளவு சொற்பொழிவு கேட்டு விட்டோம், போதுமான அளவு சங்கங்களையும் பத்தரிகைகளையும் பார்த்துவிட்டோம். எங்களைக் கரையேற்றுவதற்குக் கைகொடுக்கும் மனிதன் எங்கே இருக்கிறான்? எங்களை உண்மையாகவே நேசிக்கும் மனிதன் எங்கு இருக்கிறான்? எங்களிடம் கருணை காட்டும் மனிதன் எங்கு இருக்கிறான் ? என்று கதறுகிறார்கள். அந்த மனிதன் தான் தேவைப்படுகிறான்.

இந்த இடத்தில்தான் நான் இந்தச் சீர்திருத்த இயக்கங்களிலிருந்து முற்றிலுமாக வேறுபடுகிறேன். ஒரு நூறு ஆண்டுகளாக அவர்கள் இங்கே இருக்கிறார்கள்.. மிக மோசமாக வசைமாரி பொழிகின்ற, மிகக் கேவலமாக நிந்தனை செய்கின்ற நூல்களைத் தோற்றுவிப்பதைத் தவிர இவர்களால் வேறு எந்த நன்மை செய்ய முடிந்தது? இறையருளால் இவை இல்லாமலிருந்தால் எவ்வளவோ நல்லதாயிருக்கும் ! இவர்கள் வைதீகர்களைக் கேலி செய்தார்கள், வெறுத்தார்கள், தூற்றினார்கள். வைதீகர்கள் இவர்களது போக்கைப் புரிந்து கொண்டதும் பதிலுக்குப் பதில் அதே பாணியில் திருப்பிக் கொடுத்தார்கள். விளைவு? நமது இனத்திற்கே வெட்கக்கேடான, நமது நாட்டிற்கே மானக்கேடான இலக்கியங்கள் நமது நாட்டின் ஒவ்வொரு மொழிகளிலும் உருவாயின. இதுவா சீர்திருத்தம்? இதுவா நாட்டைப் பெருமையின் பாதையில் அழைத்துச் செல்வது? யாருடைய தவறு இது?

நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் உள்ளது. இந்தியாவில் நாம் எப்போதும் அரசர்களாலேயே ஆளப்பட்டு வருகிறோம். அவர்களே நமது சட்டங்கள் அனைத்தையும் இயற்றினார்கள். இப்போது அரசர்கள் இல்லை, அவர்களுக்குப் பின்னர் அதைச் செய்வதற்கு யாரும் இல்லை. அரசாங்கத்திற்கு அந்தக் துணிவு இல்லை. ஏனெனில் பொதுமக்களின் கருத்து வளர்ச்சிக்கு ஏற்பவே அது தன் பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன் பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளத்தக்க ஆரோக்கியமான, ஆற்றல் மிக்கதான பொதுமக்கள் கருத்தை உருவாக்க நீண்ட, மிக நீண்ட காலமாகும். அதுவரையில் நாம் காத்திருக்கத்தான் வேண்டும். எனவே சமூகச் சீர்திருத்தம் என்ற பிரச்சினையை அணுகிப் பார்த்தோமானால் அது, சீர்த்திருத்தம் தேவைப்படுபவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வியில்தான் முடியும். அவர்களை முதலில் உருவாக்குங்கள். அவர்கள்எங்கே இருக்கிறார்கள்? சிறுபான்மையினரின் அடக்கு முறையே உலகம் கண்டவற்றுள் மிகவும் கொடியது. ஏதோ சிலவற்றைத் தீமை என்று நினைக்கின்ற ஒரு சிலரால் நாட்டை முன்னேற்ற முடியாது. அந்த நாடு ஏன் முன்னேறக் கூடாது? முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள். பிறகு உங்கள் சட்டசபையை உருவாக்குங்கள். அதன்பிறகே உங்கள் சட்டம் தயாராக வேண்டும். முதலில் அதிகாரத்தை உருவாக்குங்கள் . அதிலிருந்து சட்டத்திற்கான ஆதரவு தானாகவே கிடைக்கும். மன்னர்கள் போய்விட்டார்கள். மக்கள்சக்தி என்ற அந்தப் புதிய ஆற்றல் எங்கே? புதிய அதிகாரம் எங்கே? அதைக் கொண்டுவாருங்கள். ஆகையால் சமுதாயச் சீர்த்திருத்தத்திற்குக் கூட முதலில் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வி அளிப்பதுதான். அந்தக் காலம் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

கடந்த நூற்றாண்டில் ஆர்ப்பரித்த சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் ஆரவாரம் மட்டுமே. இந்த ஒவ்வொரு சீர்திருத்தமும் முதல் இரண்டு ஜாதிகளை மட்டுமே தொடுகிறது, மற்றவைகளைத் தொடுவதில்லை. விதவைத் திருமணப் பிரச்சினை இந்தியப் பெண்களுள் எழுபது சதவீதத்தினரைத் தொடுவதே இல்லை.இத்தகைய பிரச்சினைகள் எல்லாம் பாமர மக்களின் பணத்தால் கல்வியறிவு பெற்ற, உயர்ஜாதிப் பெண்களுக்காகவே பேசப்படுகிறது. இதைக் கவனத்தில் வையுங்கள். ஒவ்வொரு முயற்சியும் அவர்களின் சொந்த நன்மைக்காகவே செய்யப்படுகிறது. இது சீர்திருத்தம் ஆகாது. பிரச்சினையின் அடிமட்டத்திற்கு,அதன் வேருக்கே நீங்கள் செல்ல வேண்டும். இதையே நான் முற்றிலுமான, நுனி வரையிலான சீர்திருத்தம் என்று சொல்கிறேன். நெருப்பை அடியில் மூட்டுங்கள், அது மேல்நோக்கி எரியட்டும். அதிலிருந்து இந்திய நாடு உருவாகட்டும்,பிரச்சனைக்கான தீர்வு காண்பது அவ்வளவு சுலபமல்ல, ஏனெனில் அது பெரிது, பரந்தது. அவசரப்படாதீர்கள். பல நூறுஆண்டுகளாக இந்தப் பிரச்சனைகள் இருந்தே வருகின்றன.

புத்த மதத்தைப் பற்றியும் அதன் ஆஜ்ஞேய வாதத்தைப் பற்றியும் பேசுவது இப்போதெல்லாம் குறிப்பாக தென்னிந்தியாவில் ஒரு நாகரீகமாக இருக்கிறது. இன்று நம் நாட்டில் நிலவுகின்ற இழிநிலை ,புத்த மதம் விட்டுச் சென்றதுதான் என்பதுபாவம், அவர்களுக்குச் சிறிதும் தெரியவில்லை. புத்த மதம் நமக்கு விட்டுச் சென்ற பாரம்பரியம் இதுதான். புத்த மதம் பரவியதற்குக் காரணம் அதன் அற்புதமான நல்லொழுக்கக் கோட்பாடும் கௌதம புத்தரின் அற்புதமான ஆளுமைத் தன்மையுமே என்று நீங்கள் நூல்களில் படிக்கலாம். இந்த நூல்கள் எழுதியவர்களோ புத்த மதத்தின் எழுச்சி வீழ்ச்சி இவைப்பற்றிச் சிறிதும் படித்தறியாதவர்கள். பகவான் புத்தரிடம் எனக்கு அளவற்ற மதிப்புண்டு, பக்தியும் உண்டு. ஆனால், நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள்: புத்த மதம் பரவியதன் காரணம் அதன் கொள்கைகளைவிட புத்தரின் ஆளுமையைவிட, கட்டப்பட்ட கோயில்களும், நிறுவப்பட்ட சிலைகளும், நாட்டு மக்களுக்கு முன் வைக்கப்பட்ட ஆடம்பரமான சடங்குகளும், விழாக்களுமே ஆகும். இவ்வாறுதான் புத்த மதம் வளர்ந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் ஆஹுதி அளித்து வந்த சிறிய ஹோம குண்டங்கள் புத்த மதத்தின் ஆடம்பரமான கோயில்கள் மற்றும் சடங்குகளின் முன் நிற்க முடியவில்லை. ஆனால் பின்னாளில் எல்லாமே இழிநிலையை அடைந்தன, கோடுகளின் மொத்த உருவமாயின. அதைப் பற்றி இங்கு என்னால் பேச முடியாது. அவைகளைப் பற்றி அறிய விரும்புவர்கள் தென்னிந்தியாவின் சிற்பங்கள் நிறைந்த அந்தப் பிரம்மாண்டமான கோயில்களில் ஏதோ சிறிது காணலாம். இதுதான் பௌத்தர்களிடமிருந்து நாம் பெற்ற பாரம்பரியம்.

அதன்பிறகு மகத்தான சீர்திருத்தவாதியாகிய சங்கராச்சாரியாரும் அவரது சீடர்களும் தோன்றினர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவின் பாமர ஜனங்கள் வேதாந்த மதத்திற்கு, அது ஆரம்பத்திலிருந்த புனித நிலைக்கு மெள்ளமெள்ளத் திரும்பி அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சமூகத்திலிருந்த எல்லா தீமைகளையும் இந்தச் சீர்திருத்தவாதிகள் முழுமையாக நன்றாக அறிவார்கள், என்றாலும் அவர்கள் எதையும் நிந்திக்கவில்லை: உங்களிடம் இருப்பவை அனைத்தும் தவறானவை. அவைகளை வீசி எறிந்தே தீர வேண்டும் ”என்று சொல்லவில்லை. ஒருபோதும் அப்படி நடக்கவும்முடியாது.

இன்னும் முன்னூறு ஆண்டுகளுள் கிறிஸ்தவ மதம் ,ரோமானிய மற்றும் கிரேக்க மதங்களின் தாக்கத்தை விலக்கிவிடும் என்று என் நண்பரான டாக்டர் பரோஸ் கூறியிருப்பதைப் படித்தேன். ஐரோப்பாவையும் கிரீசையும் ரோமையும் பார்த்த ஒரு மனிதனின் பேச்சு அல்ல அவை. ரோமானிய , கிரேக்க மதங்களின் செல்வாக்கு இருக்கவே செய்கிறது; ப்ராடஸ் டென்ட் நாடுகளில்கூட அப்படியே உள்ளது; பெயர்கள் மாற்றப்படுகின்றன பழைய தெய்வங்களுக்குப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுப் புதிய முறையில் வழிபடப்படுகின்றன, அவ்வளவுதான். அவர்கள் பெயரை மாற்றி இருக்கிறார்கள், பெண் தெய்வங்கள் மேரிகளாக ஆகியுள்ளனர்,ஆண் தெய்வங்கள் புனிதர்களாக ஆகியுள்ளனர். சடங்குகள் புதியதாக மாறியுள்ளன. பழைய பட்டமாகிய போன்டிபக்ஸ் மேக்ஸிமஸ் கூட இன்னும் இருக்கிறது.

எனவே திடீரென்று எந்த மாற்றமும் நிகழ முடியாது. சங்கராச்சாரியார் இதை அறிந்திருந்தார், ராமானுஜருக்கும் இது தெரியும்.அவர்களுக்கு இருந்த ஒரே வழி , இருக்கின்ற மதத்தை மெள்ளமெள்ள உயர்நிலைக்குக் கொண்டுவருவது ஒன்றே. இதைத் தவிர வேறு ஏதாவது முறையைப் பின்பற்றியிருந்தால் அவர்கள் ஏமாற்றுக் காரர்களாகி இருப்பார்கள். ஏனெனில் அவர்களது நெறியின் அடிப்படைக் கொள்கையே பரிணாமம்தான், அதாவது இத்தகைய பல்வேறு படிகள் மற்றும் நிலைகளின் வழியாக ஆன்மா உயர் லட்சியத்தை நோக்கிச் செல்கிறது என்பதுதான்.எனவே இந்தப் பல்வேறு படிகள் எல்லாம் தேவையானவை, உதவிகரமானவை. அவற்றை நிந்திக்க யாருக்குத் தைரியம் இருக்கிறது?

உருவ வழிபாடு தவறானது என்று கூறுவதைக் கேட்டுக்கேட்டுப் புளித்து விட்டது. இன்று இதைக் கேள்விப்படுகின்ற எல்லோருமே அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமலே ஏற்றுக் கொள்கிறார்கள், நானும் ஒரு காலத்தில் அப்படிதான் நினைத்தேன் அதற்குத் தண்டனைபோல், எல்லாவற்றையும் உருவ வழிபாட்டின் மூலமே பெற்ற ஒருவரின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டிதாயிற்று. இங்கே நான் ராமகிருஷ்ண பரமஹம்சரைத்தான் குறிப்பிடுகிறேன். உருவ வழிபாட்டின் மூலம் இத்தகைய ராமகிருஷ்ண பரமஹம்சர்கள் உருவாகலாம் என்றால் உங்களுக்கு எது வேண்டும் ? சீர்திருத்தவாதியின் கொள்கையா அல்லது கணக்கற்ற உருவங்களா? பதில் சொல்லுங்கள். உருவ வழிபாட்டின் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர்களை உங்களால் உருவாக்க முடியுமானால் இன்னும் ஆயிரக்கணக்கான உருவங்களைவைத்துக் கொள்ளுங்கள். அதற்கான ஆற்றலை உங்களுக்கு இறைவன் அருள்வாராக! உங்களால் முடிந்த எந்த வழியிலேனும் அவரைப் போன்ற மேலோரை உருவாக்குங்கள்.

என்றாலும் உருவ வழிபாடு நிந்திக்கப்படுகிறது. ஏன்? யாருக்கும் தெரியாது. ஏனென்றால் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஏதோ யூதர்கள் சிலர் அதை நிந்தித்தார்கள் என்பதாலா? தங்கள் சொந்த விக்கிரகங்களைத்தவிர மற்ற எல்லோருடைய திருவுருவங்களையும் கண்டனம் செய்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்று. கடவுள் அழகியதோர் வடிவமாகவோ, அடையாள வடிவிலோ குறிக்கப்பட்டால் அது மிகவும் மோசமானது, அது பாவம் என்பான் யூதன்; அது பாவம். ஆனால் இரு புறமும் இரண்டு தேவதைகள் அமர்ந்திருக்க, மேலே மேகங்கள் பரவி நிற்க, கடவுளை ஒரு பெட்டியாக உருவகம் செய்தால் அது புனிதமானவை அனைத்திலும் புனிதமானது. கடவுள் ஒரு புறாவின் வடிவில் வந்தால் அது புனிதமானது; ஆனால் அவரே பசுவின் வடிவில் வந்தால் அது முட்டாள்களின் மூட நம்பிக்கை, அதைக் கண்டிக்க வேண்டும்! இதுதான் உலகின் போக்கு. அதனால்தான் ஒரு கவிஞர், மனிதர்களாகிய நாம் எவ்வளவு முட்டாள்கள்! என்றார் .அடுத்தவனின் கண்ணோட்டத்தில் உலகைப் பார்ப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! அப்படிப் பார்க்க முடியாததுதான் மனித குலத்தின் சாபக்கேடாக உள்ளது. வெறுப்பு, பொறாமை, சண்டை, சச்சரவு அனைத்திற்கும் அதுதான் மூலக்காரணம்.

சிறுவர்களே, மீசை முளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச் செல்லாத நீங்கள் எழுந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்குக் கட்டளையிட விரும்புகிறீர்கள்! வெட்கமாக இல்லை ?அத்தகைய அதர்மச் செயலிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியவற்றை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்! மரியாதையற்ற சிறுவர்களே, வெறுமனே தாளில் சில வரிகளைக் கிறுக்கி, சில முட்டாள்களின்மூலம் அவற்றைப் பிரசுரித்துவிட்டால் ,நீங்கள் உலகிற்கே போதகராகிவிட்டீர்கள் என்று எண்ணமா? நீங்கள் சொல்வதுதான் இந்தியப் பொதுமக்களின் கருத்து என்றா நினைக்கிறீர்கள்! இதுவா உங்கள் எண்ணம்?

சென்னையின் சீர்திருத்தவாதிகளுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். நான் அவர்களிடம் பெருமதிப்பும் அன்பும் கொண்டிருக்கிறேன். அவர்களது பரந்த உள்ளத்திற்காகவும், தங்கள் நாட்டிடமும் ஏழைகளிடமும் தாழ்த்தப்பட்டவர்களிடமும் அவர்கள் கொண்டுள்ள அன்பிற்காகவும் நான் அவர்களை நேசிக்கிறேன். சகோதர பாசத்துடன் நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் அவர்களுடைய வழி தவறு என்பதுதான். நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு, தோல்வி கண்ட வழி அது. நாம் ஏதாவது புதிய வழியை முயற்சி செய்வோமே!

இந்தியாவில் எப்போதாவது சீர்திருத்தவாதிகளுக்குக் குறைவு இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? நானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்?தாதுயார்? ஒளி மிகுந்த நட்சத்திரக் கூட்டங்களின் வரிசைகள்போல், ஒருவர் பின்னால் ஒருவராக வந்த இந்த முதல்தர

ஆச்சாரியர்கள் எல்லாம் யார்? தாழ்ந்த குலத்தினரை எண்ணி ராமானுஜர் உருகவில்லையா? மிகவும் தாழ்ந்த குலத்தினரைத் கூடத் தமது நெறியில் அனுமதிப்பதற்கு அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபடவில்லையா? முகமதியர்களையும் தமது நெறியில் சேர்த்துக்கொள்ள அவர் முயலவில்லையா? இந்துக்களுடனும் முகமதியர்களுடனும் உறவாடி ,ஒரு புதிய நிலையைக் கொண்டுவர நானக் முயல வில்லையா? அவர்கள் எல்லோரும் முயன்றார்கள், அவர்களுடைய பணி இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது. வித்தியாசம் இதுதான்: அவர்கள் இன்றைய சீர்திருத்தவாதிகளைப்போல் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை ; இன்றைய சீர்திருத்தவாதிகளைப் போல் யாரையும் சபிக்கவில்லை. வாழ்த்துக்களை மட்டுமே அவர்களுடைய உதடுகள் மொழிந்தன. அவர்கள் ஒருபோதும் நிந்திக்கவில்லை. நம் இனம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் மக்களிடம் கூறினார்கள். அவர்கள் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார்கள்; பின்னர் மக்களை நோக்கி, இந்துக்களே, இதுவரை நீங்கள் செய்தவை எல்லாம் நல்லதே. ஆனால் என் சகோதரர்களே, அதைவிட இன்னும் நல்லவற்றைச் செய்வோம்” என்றே கூறினர். நீங்கள் தீயவர்களாக இருந்தீர்கள், இப்போது நல்லவர்களாவோம்”என்று அவர்கள் சொல்லவில்லை. . நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். இப்போது மேலும் நல்லவர்கள் ஆவோம் என்றே கூறினார்கள். எவ்வளவு பெரிய வித்தியாசம்!

நம் இயல்பிற்கு ஏற்பவே நாம் வளர வேண்டும். வெளிநாட்டுச் சங்கங்கள் நம்மீது திணித்துள்ள செயல் முறைகளைப் பின்பற்ற முயல்வது வீண், அவ்வாறு நடக்கவும் முடியாது. அப்படி முடியாததற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். வளைத்து நீட்டி, கொடுமைப்படுத்துவதன் மூலம் நம்மை மற்ற நாடுகளின் அமைப்பில் உருவாக்க முடியாது. மற்ற இனங்களின் சமூக அமைப்புகளை நான் நிந்திக்கவில்லை; அவை அவர்களுக்கு நல்லது, நமக்கு அல்ல . அவர்களுக்கு இறைச்சியாக இருப்பது நமக்கு விஷமாகலாம். கற்க வேண்டிய முதல் பாடம் இது. தங்கள் பல்வேறு அறிவியல், மற்ற அமைப்புக்கள் மற்ற மரபுகளின் பின்னணியில் தற்போதைய அமைப்பு முறையை அவர்கள் பெற்று இருக்கிறார்கள், நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் செயல்களின் பின்னணியில் அமைந்த, நமக்குச் சொந்தமான முறையில்தான் நாம் இயல்பாகச் செல்ல முடியும். நமது சொந்தப் பாதையில்தான் சுலபமாகச் செல்ல முடியும். அதை நாம் செய்தாக வேண்டும்.

எனது திட்டம்தான் என்ன? பழங்காலத்தின் மகத்தான ஆச்சாரியர்களுடைய கருத்துக்களைப் பின்பற்றுவதே. நான் அவர்களது செயல்களைப் படித்தேன். அவர்கள் மேற்கொண்ட பணிகளின் போக்கை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. அவர்கள் சமூகத்தின் மகத்தான ஆரம்பகர்த்தாக்கள். அவர்கள் மாபெரும் வலிமையும் தூய்மையும் வாழ்வும் தந்தவர்கள். அவர்கள் மிக அற்புதமான செயல்களைச் செய்தார்கள். நாமும் அற்புதமான வேலைகளைச் செய்தாக வேண்டும். சூழ்நிலைகள் கொஞ்சம் மாறியுள்ளன. எனவே நமது செயல்முறையும் சிறிது மாற வேண்டும் அவ்வளவுதான்.

வாழ்வில் ஒரு தனி மனிதன் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு நாடும் ஒரு தனிப் பண்பைப் பெற்றிருப்பதைக் காண்கிறேன். அதுவே அதன் மையம், அதுதான் ஆதார சுருதி, அதைச் சுற்றியே பல்வேறு இசையும் இயைபுடன் கலந்து இனிய பண் ஆகிறது. இங்கிலாந்தைப் போன்ற நாட்டில் அரசியல் அதிகாரம் ஆதாரமாக உள்ளது. மற்றொரு நாட்டில் கலை வாழ்க்கை முக்கியமாக உள்ளது. இப்படியே ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது. இந்தியாவில் மத வாழ்வே மையமாக, தேசிய வாழ்வு என்னும் பண்ணின் ஆதார சுருதியாக அமைந்துள்ளது. பரம்பரைபரம்பரையாக நூற்றாண்டுகளைக் கடந்து வந்த அந்தக் சொந்தத் தேசிய ஆதாரத்தை எந்த நாடாவது உதறிவிட முயலுமானால், அதன் போக்கிலிருந்து விலக முயலுமானால், அந்த முயற்சியில் வெற்றி காணுமானால் அந்த நாடு அழிந்துவிடும். எனவே மதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அரசியலையோ சமுதாயத்தையோ மற்ற எதையோ உங்கள் மையமாக உங்கள் தேசிய வாழ்வின் ஆதாரமாகக் கொண்டீர்களானால், நீங்கள் மறைந்துபோய் விடுவதுதான் அதன் விளைவாக இருக்கும். இதைத் தடுக்க வேண்டுமானால் உங்கள் எல்லா வேலைகளையும் மதம் என்ற அடிப்படையின் மூலமாகச் செய்யுங்கள். மதம் என்ற முதுகெலும்பின் வழியாக உங்கள் அனைத்து நரம்புகளும் அதிரட்டும்.

சமுதாய வாழ்வில் அதன் செயல்முறை விளைவைக் காட்டாமல் அமெரிக்கர்களிடம் மதத்தைப் போதிக்க முடியாது என்பதை நான் கண்டேன்.வேதாந்தம் கொண்டுவரக்கூடிய அற்புதமான அரசியல் மாற்றங்களைக் காட்டாமல் என்னால் இங்கிலாந்தில் மதத்தைப் பிராச்சாரம் செய்ய முடியவில்லை. அது போலவே இந்தியாவில் சமூகச் சீர்திருத்தம்கூட, அது ஒருவரது வாழ்வைக் எவ்வாறு மேலும் ஆன்மீகமயமாக்கும் என்பதை விளக்கித்தான் போதிக்கப்பட வேண்டும்; அரசியலைப் போதிக்க வேண்டுமானால், தேசம் வேண்டுகின்ற ஒரே விஷயமான ஆன்மீகத்தை அது எவ்வளவு தூரம் வளப்படுத்தும் என்பதை விளக்கிக் காட்டுவதன் மூலமே செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டியதைத், தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அதைப் போலவே ஒவ்வொரு நாடும். பல காலத்திற்கு முன்பே நாம் நமக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுத்துவிட்டோம், அதை நாம் பின்பற்றியாக வேண்டும். அதோடு, நாம் தேர்ந்தெடுத்தது ஒன்றும் மோசமானது அல்ல. ஜடப் பொருள் அல்லாமல் ஆன்மாவை, மனிதன் அல்லாமல் இறைவனைச் சிந்திக்க விரும்பியது அத்தனை மோசமான ஒன்றா? மறுவுலகத்தில் திடநம்பிக்கை, இந்த உலகத்தில் தீவிர வெறுப்பு, துறவின் அபரிமித ஆற்றல் கடவுளிடம் அசையா நம்பிக்கை.. அழியா ஆன்மாவில் மாறா நம்பிககை. – எல்லாம் உங்களிடம் உள்ளது. உங்களுள் யாராலாவது அதை மறுத்து விலக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன், உங்களால் முடியாது. சில மாதங்கள் உலகாயதம்பற்றிப் பேசுவதன் மூலம் நீங்கள் ஓர் உலகாயதவாதியாக மாறிவிட்டதாக என்னை நம்பவைக்க முயலலாம். ஆனால் உண்மையில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்கள் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றால், சிறந்த ஆத்திகர்களாக என்னைத் தொடர்ந்து வருவீர்கள். உங்கள் சொந்த இயல்பை நீங்கள் எப்படி மாற்ற முடியும்?

இந்தியாவில் ஒவ்வொரு முன்னேற்றமும் மத எழுச்சியைத் தொடர்ந்தே வர முடியும். சமுதாயக் கருத்துக்களாலோ, அரசியல் கருத்துக்களாலோ மூழ்கடிக்குமுன் இந்தியாவை ஆன்மீகக் கருத்துக்களால் நிரப்புங்கள். நமது உபநிடதங்களிலும், நமது சாஸ்திரங்களிலும், நமது புராணங்களிலும் புதைந்து கிடைக்கின்ற அற்புதமான உண்மைகளை அந்த நூல்களிலிருந்து கொண்டுவர வேண்டும், ஆசிரமங்களிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும், காடுகளிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும், குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்திலிருந்து கொண்டு வர வேண்டும். அந்த உண்மைகள் வடக்கிலிருந்து தெற்குவரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை, இமயம் முதல் குமரிவரை, சிந்து முதல் பிரம்ம புத்திராவரை நெருப்பைப்போல் பரவுமாறு நாடு முழுவதும் அவற்றைப் பறைசாற்ற வேண்டும். இதுவே நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் வேலை. ஒவ்வொருவரும் அதை அறியவேண்டும். ஏனெனில் இது முதலில் கேட்கப்பட வேண்டும் , பிறகு சிந்திக்கப்பட வேண்டும், பிறகு தியானிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் முதலில் கேட்கட்டும், தங்கள் சொந்த சாஸ்திரங்களிலேயே உள்ள மகத்தான உண்மைகளை மக்கள் கேட்பதற்கு உதவுபவர்களுக்கு அதை விடச் சிறந்த புண்ணியச் செயல் இன்று வேறில்லை.

இந்தக் கலியுகத்தில் செய்வதற்கு ஒரு செயல்தான் உள்ளது. யாகங்களாலும் கடின தவங்களாலும் இன்று எந்தப் பலனும் இல்லை. எஞ்சியுள்ள ஒரு செயல் தானம்தான் என்கிறார் வியாசர். ஆன்மீகத்தையும் ஆன்மீக ஞானத்தையும் அளிப்பது தானங்களுள் மிகவுயர்ந்தது, அடுத்தது உலக அறிவை அளிப்பது, அடுத்தது உயிரைக் காப்பது. நான்காவதாக வருவது உணவைத் தருவது. தானசீலம் மிக்க இந்த அற்புதமான இனத்தைப் பாருங்கள். ஏழையான மிக ஏழையான, இந்த நாட்டில் செய்யப்படுகின்ற வகைவகையான தானங்களைப் பாருங்கள். வடக்கிலிருந்து தெற்கிற்குப் பயணம் செய்கின்ற ஒருவன் பெறும் உபசாரத்தைப் பாருங்கள். நாட்டின் மிக நல்லது அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அவனை ஒவ்வொருவரும் முற்றிலும் நண்பனைப் போலவே நடத்துகிறார்கள். எங்காவது ஒருபிடி உணவு இருக்கும்வரை ஒரு பிச்சைக்காரன்கூடப் பட்டினியால்சாக மாட்டான்.

தானசீலம் மிக்க இந்த நாட்டின் முதல் தானமான ஆன்மீக ஞானத்தை அளிப்பதை முதலில் மேற்கொள்ள வேண்டும். அந்தத் தானம் இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமே அடங்கிவிடக் கூடாது. அது உலகம் முழுவதும் பரவ வேண்டும். இதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்தியச் சிந்தனைகள் இந்தியாவைத் தாண்டி ஒருபோதும் சென்றதில்லை என்று சொல்பவர்களும் சரி, வெளிநாடுகளுக்குப் பிராச்சாரம் செய்வதற்காகச் சென்ற முதல் சன்னியாசி நான்தான் என்று கூறுபவர்களும் சரி, தங்கள் சொந்த இனத்தின் வரலாற்றை அறியாதவர்கள்.

இது திரும்பத்திரும்ப நடந்துள்ளது. உலகில் தேவை ஏற்பட்டபோதெல்லாம் வற்றாத இந்த ஆன்மீகப் பெருவெள்ளம் பொங்கிப் பாய்ந்து சென்று உலகை நிரப்புகிறது. போர்ப்பறையின் முழக்கங்களோடும் படைகளின் அணிவகுப்போடும் அரசியல் அறிவு தரப்படலாம் . நெருப்பு மற்றும் வாளின் துணையுடன் உலக அறிவும் சமுதாய அறிவும் தரப்படலாம். ஆனால் ஆன்மீக ஞானமோ, பிறர் காணாமல் எவ்வித ஓசையின்றி மெல்லெனப் பெய்தாலும் ரோஜா மலர்களை மலர்ந்து விகசிக்கச் செய்கின்ற பனித்துளிபோல், அமைதியான முறையில் மட்டுமே தர முடியும். திரும்பத் திரும்ப உலகத்திற்கு இந்தியா தந்து வந்துள்ள தானம் இதுவாகும்.

ஒரு மகத்தான இனம் உலகை வென்று, நாடுகளுக்கிடையே பாதைகளையும் பயணத்தையும் ஏற்படுத்தி, அவற்றை இணைக்கும் போது இந்தியா எழுந்து, ஒருங்கிணைந்த உலகத்தின் முன்னேற்றத்தில் தன் பங்கான ஆன்மீக சக்தியை அளித்து வருகிறது. புத்தர் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்தது. அதற்கான சாட்சியங்கள் சீனா, ஆசியா மைனர் மற்றும் மலாயா தீவுகளின் மையங்களில் இன்றும் காணப்படுகின்றன. கிரேக்கப் பெருவீரனான அலெக்சாண்டர், தன்வெற்றியால் ,,அன்று அறியப்பட்ட உலகின் நான்கு எல்லைகளையும் இணைத்தபோது இது நிகழ்ந்தது. அப்போது இந்திய ஆன்மீகம் உலகம் முழுவதிலும் பாய்ந்து பரந்தது..இன்று பெருமையடித்துக் கொள்கின்ற மேலைநாட்டு நாகரீகம் இப்படிச் சென்றதில் எஞ்சிய பகுதிதான் . அத்தகைய வாய்ப்பு இப்போது மீண்டும் வந்துள்ளது. இங்கிலாந்தின் அதிகாரம் உலக நாடுகளை, இதற்குமுன் எப்போதும் இல்லாத வகையில் இணைத்திருக்கிறது. ஆங்கிலேயர்களின் சாலைகளும் தொடர்பு வசதிகளும் உலகின் ஒரு மூலையிலிருந்து மறுமூலைவரை பரவியுள்ளது. ஆங்கிலேய அறிவுத்திறனின் காரணமாக இன்றைக்கு உலகம் இதுவரை கண்டிராத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.மனித வரலாறு கண்டிராத அளவிற்கு இன்று வியாபார மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அறிந்தோ அறியாமலோ இந்தியா உடனடியாக எழுகிறது. தனது ஆன்மீகச் செல்வங்களை மழையெனப் பொழிகிறது. அந்தப் பெருவெள்ளம் இந்தப் பாதைகளின் வழியாகப் பாய்ந்துசென்று உலகின் மறுகோடியை அடைகிறது.

நான் அமெரிக்கா சென்றது என் செயல் அல்ல, உங்கள் செயலும் அல்ல. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற இறைவன்தான் என்னை அனுப்பினார்; என்னைப் போன்ற நூற்றுக்கணக்கானோரை எல்லா நாடுகளுக்கும் அனுப்பப் போகிறார். உலகின் எந்தச் சக்தியாலும் இதைத் தடுக்க முடியாது. இதையும் செய்தாக வேண்டும். உங்கள் மதத்தைப் பிராச்சாரம் செய்வதற்காக, நீங்கள் நாட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டும். சூரியனின் கீழ் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதரிடமும் அதைப் பிரச்சாரம் செய்தாக வேண்டும். நாம் செய்ய வேண்டிய முதல் வேலை இதுதான். ஆன்மீக ஞானத்தைப் போதித்தால், அதன்பின்னர் உலக அறிவும் நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் மதத்தை விலக்கிவிட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் இந்தியாவில் உங்கள் முயற்சி வீண் என்பதைக் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். அது மக்களிடம் எந்தக் தாக்கத்தையும் ஒரு போதும் ஏற்படுத்தாது. மகத்தான பௌத்த இயக்கத்தின் தோல்விக்குக்கூட இதுவும் ஒரு காரணம்.

எனவே என் நண்பர்களே, நம் சாஸ்திர உண்மைகளை இந்தியாவிலும் வெளியிலும் பிரச்சாரம் செய்ய நமது இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இந்தியாவில் சில இயக்கங்களைத் துவக்குவதுதான் என் திட்டம். மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள்தான் தேவை. மற்ற எல்லாம் தயாராகிவிடும். ஆற்றல் மிக்க தீவிரமான, நம்பிக்கையுள்ள, மனசாட்சிக்கு மாறாக நடக்காத இளைஞர்கள் இத்தகைய நூறு பேர் போதும். உலகையே புரட்டி விடலாம். எல்லாவற்றைவிடவும் சங்கல்பம் வலிமை வாய்ந்தது. அதன்முன் எல்லாம் அடிபணிந்தே ஆக வேண்டும், ஏனெனில் அது கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது. தூய, ஆற்றல் மிக்க சங்கல்பம் எல்லாம் வல்லது. உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையா?

பரப்புங்கள், உங்கள் மதத்தின் மகத்தான உண்மைகளை உலகம் முழுவதும் பரப்புங்கள். உலகம் அவற்றிற்காகக் காத்திருக்கிறது. மக்களை இழிந்தவர்களாக்கும் கொள்கைகளே பல நூற்றாண்டுகளாகப் போதிக்கப்பட்டு வந்துள்ளன. மக்கள் எதற்குமே உதவாதவர்கள் என்று போதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதுமே, பாமரர்கள் என்றால் அவர்கள் மனிதர்களே அல்ல என்றுதான் அவர்களிடம் கூறப்பட்டு வந்துள்ளது. பல நூற்றாண்டுகளாகப் பயமுறுத்தி பயமுறுத்தியே அவர்கள் ஏறக்குறைய மிருகங்களாகிவிடும் நிலைக்குச் சென்றுவிட்டனர். ஆன்மா என்ற ஒன்றைப்பற்றிக் கேள்விப்பட அவர்கள் அனுமதிக்கப் படவே இல்லை. அவர்கள் ஆன்மாவைப்பற்றிக் கேள்விப்படட்டும்- தாழ்ந்தவருள் தாழ்ந்தவரிலும் ஆன்மா உள்ளது, அது இறப்பதோ பிறப்பதோ இல்லை , அந்த ஆன்மாவை வாள் வெட்ட முடியாது; நெருப்பு எரிக்க முடியாது. அது தோற்றமும் முடிவும் இல்லாதது, முற்றிலும் தூய்மையானது, எல்லாம் வல்லது, எங்கும் நிறைந்தது.

முதலில் உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். உங்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன? தங்கள் மதம், கடமை என்றெல்லாம் அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அந்த வித்தியாசம் என்னவென்று தெரிந்துவிட்டது. அது இதுதான்; ஆங்கிலேயன் தன்மை நம்புகிறான், நீங்கள் உங்களை நம்பவில்லை. தான் ஆங்கிலேயன், எனவே, தான் விரும்புகின்ற எதையும் தன்னால் செய்ய முடியும் என்பதை அவன் நம்புகிறான். அது அவனுள் இருக்கும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்துகிறது, அவனும் தான் விரும்பியதைச் செய்து முடிக்கிறான். ஆனால் உங்களால் எதுவுமே செய்ய முடியாது என்று தான் உங்களுக்குச் சொல்லப்படுகிறது, போதிக்கப்படுகிறது. நீங்களும் நாளுக்குநாள் எதற்குமே பயனற்றவர்களாகி வருகிறீர்கள். நமக்குத் தேவை வலிமையே; எனவே உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.

நாம் பலவீனர்களானோம், அதனால்தான் ரகசியவாதங்களும் ரகசிய வித்தைகளுமாகிய அற்ப விஷயங்கள் எல்லாம் நம்மிடம் வந்தன. அவைகளில் சிறந்த உண்மைகூட இருக்கலாம். ஆனால் அவை ஏறக்குறைய நம்மை அழித்தேவிட்டன. உங்கள் நரம்புகளை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். இரும்பாலான தசையும் எஃகாலான நரம்புகளுமே நமக்குத் தேவை. காலங்காலமாக அழுதுவிட்டோம். இனியும் அழுகை கூடாது. சொந்தக் காலில் நில்லுங்கள், மனிதர்கள் ஆகுங்கள். மனிதனை உருவாக்குகின்ற ஒரு மதமே நமக்குத் தேவை. மனிதனை உருவாக்குகின்ற கொள்கைகளே நமக்குத் தேவை. எல்லா வகையிலும் மனிதனை உருவாக்கும் கல்வியே நமக்க வேண்டும். உண்மையை அறிந்து கொள்வதற்கான சோதனை இதோ இதுதான்: ஏதாவது ஒன்று உங்கள் உடலை ,அறிவை, ஆன்மீக உணர்வைப் பலவீனமாக்குமானா ல் அதனை விஷமென ஒதுக்குங்கள், அதில் உயிர்த் துடிப்பில்லை, அது உண்மையாக இருக்க முடியாது. உண்மையே வலிமை தரும். உண்மையே தூய்மை. உண்மையே எல்லா அறிவும். உண்மையே வலிமை தருவதாக இருக்கும், அறிவை ஒளிரச் செய்வதாக இருக்கும் அக ஆற்றலை வளர்ப்பதாக இருக்கும்.

இந்த ரகசிய வித்தைகளுள் ஏதோ சிறிய அளவில் உண்மை இருக்கலாம். ஆனாலும் அவை பொதுவாகப் பலவீனத்தையே வளர்க்கின்றன. அதில் நீண்டகால அனுபவம் உடையவன் நான். நான் சொல்வதை நம்புங்கள். அதிலிருந்து நான் பெற்ற ஒரே முடிவு அது பலவீனத்தைத் தருகிறது என்பதே. நான் இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறேன், ஏறக்குறைய இங்குள்ள எல்லா குகைகளிலும் தேடியிருக்கிறேன், இமயமலையில் வசித்திருக்கிறேன். தங்கள் நாள் முழுவதும் அங்கு வசித்தவர்களை எனக்குத் தெரியும். நான் என் நாட்டை நேசிக்கிறேன். இப்போதிருப்பதை விடத் என் நாட்டை நேசிக்கிறேன். இப்போதிருப்பதைவிடத் தாழ்ந்தவர்களாக, பலவீனர்களாக நீங்கள் மாறுவதை என்னால்பார்க்க முடியாது. உங்களுக்காகவும் உண்மையின் பொருட்டும் நான் கடமைப்பட்டுள்ளேன். ஆகவேதான் என் இனம் இழிநிலையை அடைவதை எதிர்த்து, ‘போதும், போதும் ”என்று கதறுகிறேன்.

பலவீனப்படுத்துகின்ற இந்த ரகசிய வித்தைகளை விட்டுத் தள்ளுங்கள். வலிமை உடையவர்களாகுங்கள். ஒளி வீசுகின்ற, வலிமை தருகின்ற, மேலான தத்துவமாகிய உங்கள் உபநிடதங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். இந்த எல்லா ரகசிய வித்தைகளிலிருந்தும் எல்லா பலவீனப் பொருட்களிலிருந்தும் விலகிவிடுங்கள். உபநிடதத் தத்துவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மகத்தான உண்மைகள் மிகவும் எளிமையாகவே இருக்கின்றன. நீங்கள் உயிர் வாழ்வதுஎன்பது எவ்வளவு எளிமையான உண்மை! அதுபோல்தான் உபநிடத உண்மைகள் உங்கள் முன்னால் உள்ளன. அவற்றைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள். அப்போது இந்தியாவின் கதிமோட்சம் உறுதி.

இன்னும் ஒரு வார்த்தை, அத்துடன் என் சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன். எல்லோரும் தேசப்பற்றைப்பற்றிப் பேசுகிறார்கள். நானும் தேசப்பற்றில் நம்பிக்கை உள்ளவன், தேசப்பற்றைப்பற்றி எனக்கென்று சொந்தக் கருத்தும் உண்டு. எந்த மகத்தான சாதனைகளுக்கும் மூன்று விஷயங்கள் அவசியமானவை. முதலில் இதயபூர்வமான உணர்ச்சி. அறிவிலும் ஆராய்ச்சியிலும் என்ன இருக்கிறது? அது சில அடிகள் செல்லும், பிறகு நின்றுவிடும் ஆனால் இதயத்தின் மூலம்தான் உத்வேகம் பிறக்கிறது. திறக்க முடியாத கதவுகளை எல்லாம் அன்பு திறக்கிறது. பிரபஞ்சத்தின் எல்லா ரகசியங்களுக்கும் வாசல் அன்புதான்.

எனவே உணர்ச்சி கொள்ளுங்கள், என் எதிர்கால சீர்திருத்தவாதிகளே, வருங்கால தேச பக்தர்களே நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா? தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பரம்பரையில் வந்த கோடானுகோடி பேர் மிருகங்களுக்கு அடுத்த நிலையில் வாழும் கொடுமையை உணர்கிறீர்களா? பட்டினியால் இன்று லட்சக்கணக்கானோர் வாடுவதையும் , காலங்காலமாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் துடிப்பதையும் உணர்கிறீர்களா? இந்த நாட்டின்மீது ஒரு கரிய மேகம் போல் அறியாமை கவிந்துள்ளதை உணர்கிறீர்களா? இந்த உணர்ச்சி உங்களை அமைதியிழந்து தவிக்கச் செய்கிறதா? இந்த உணர்ச்சி

உங்களைத் தூக்கம் கெட்டு வாடச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்கள் ரத்தத்தில் கலந்து, உங்கள் நாடிநரம்புகள் தோறும் ஓடி, உங்கள் இதயத்துடிப்புடன் கலந்து துடிக்கிறதா? இது உங்களை ஏறக்குறைய பைத்தியமாகவே ஆக்கிவிட்டதா? அழிவுத்துன்பம் என்ற ஒரே கருத்து உங்களைப் பற்றிப்பிடித் துள்ளதா? உங்கள் பெயர், உங்கள் புகழ், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் சொத்து, ஏன் ,உங்கள் உடம்புபோன்ற எல்லாவற்றையும் மறந்து விட்டீர்களா? இதை நீங்கள் செய்துவிட்டீர்களா? இதுதான் தேசப் பற்று உடையவன் ஆவதற்கு முதற்படி, வெறும் முதற்படி இது.

சர்வ மத மகாசபையில் கலந்துகொள்வதற்காக வென்று நான் அமெரிக்கா போகவில்லை, உங்களுள் பலரும் இதை அறிவீர்கள். என்னுள், என் உயிரில் நிலவிய இந்த உணர்ச்சி என்ற பூதம் என்னை ஆட்டிப் படைத்தாலேயே நான் செல்ல நேர்ந்தது, என் நாட்டு மக்களுக்காக உழைப்பதற்கான வழி தேடி பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதும் அலைந்தும், வழி யேதும் கிடைக்காததால் தான் அமெரிக்கா சென்றேன் அப்பொழுது என்னை அறிந்த பெரும்பாலோருக்கு இது தெரியும். இந்த சர்வசமயப் பேரவையைப்பற்றி இங்கு யாருக்கு அக்கறை? என் தசையாகவும் ரத்தமாகவும் இருக்கின்ற மக்கள் இங்கே ஒவ்வொரு நாளும் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக யார் கவலைப்பட்டார்கள்? இதுதான் என் முதல்படி.

நீங்கள் உணரலாம். ஆனால் வெட்டிப்பேச்சில் உங்கள் ஆற்றல்களை வீணாக்குவதற்குப் பதிலாக ஏதாவது வழி கண்டுபிடித்தீர்களா? அவர்களை நிந்திப்பதற்குப் பதிலாக உதவி செய்வதற்கு, அவர்களின் துன்பங்களைத்தணிக்கின்ற சில இதமான வார்த்தைகளைக் கூறுவதற்கு, அவர்கள் நடைப்பிணங்களாகிக் கிடக்கும் கேவல நிலையிலிருந்து மீட்க ஏதாவது செயல்முறை வழி கண்டீர்களா?

அதோடும் தேசப்பற்று முடிந்து விடுவதில்லை. மலைகளையொத்த எதிர்ப்புகளை வெல்வதற்கான மனவுறுதி உங்களிடம் இருக்கிறதா? கைகயில் வாளுடன் இந்த உலகம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும், நீங்கள் சரி என்று நினைப்பதைச் செய்து முடிக்கின்ற தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் மனைவியும் பிள்ளைகளும் எதிர்த்தாலும், உங்கள் பணம் எல்லாம் கரைந்து போனாலும், உங்கள் பெயர் அழிந்து செல்வம் எல்லாம் மறைந்தாலும் அதையே உறுதியாகப் பற்றி நிற்பீர்களா? அதையே உறுதியாகத் தொடர்ந்து, உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்வீர்களா? பர்த்ருஹரி மன்னர் கூறியது போல், மகான்கள் பழிக்கட்டும் அல்லது புகழட்டும் அதிர்ஷ்ட தேவியான மகாலட்சுமி வரட்டும் அல்லது அவள் விரும்புகின்ற இடத்திற்குச் செல்லட்டும் , மரணம் இன்று வரட்டும் அல்லது நூறு ஆண்டுகள் கழித்து வரட்டும்- எது நேர்ந்தாலும் சத்தியத்தின் பாதையிலிருந்து அங்குலம்கூட விலகாதவனே உண்மை மனிதன் . இத்தகைய உறுதி உங்களிடம் இருக்கிறதா? உங்களிடம் இந்த மூன்று விஷயங்களும் இருக்குமானால் நீங்கள் ஒவ்வொருவரும் பிறர் பிரமிக்கத்தக்க செயல்களைச் செய்வீர்கள். செய்தித்தாள்களில் எழுத வேண்டியதில்லை, மேடையேறி பிரசங்கம் செய்ய வேண்டியதில்லை. உங்கள் முகமே ஒளி வீசித்துலங்கும். நீங்கள் ஒரு குகையுள் வாழலாம்; ஆனால் உங்கள் சிந்தனைகள் அந்தப் பாறைச் சுவர்கள் வழியாக ஊடுருவி வந்து உலகம் முழுவதுமே நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அதிர்ந்து பரவிக் கொண்டிருக்கும். என்றாவது அவை ஏதாவதொரு மூளையில் புகுந்து செயல்படும். உண்மையான, தூய்மையான லட்சியத்தைக் கொண்ட சிந்தனையின் ஆற்றல் அத்தகையது.

உங்களை நெடுநேரம் காக்க வைக்கிறேனோ என்று நான் அஞ்சுகிறேன். இன்னும் ஒரு வார்த்தை. என் நாட்டு மக்களே, என் நண்பர்களே, என் குழந்தைகளே, நம் நாடாகிய இந்தக் தேசியக் கப்பல் லட்சக்கணக்கானோரை வாழ்க்கைப் பெருங்கடலைக் கடத்தி அழைத்துச் சென்றிருக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாக இது நல்ல முறையில் இந்தக் கடலைக் கடந்து வந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக லட்சோபலட்சம்பேர் பேரின்பமாகிய கரைக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றனர். ஆனால் இன்றோ, ஒருவேளை உங்கள் சொந்தத் தவறின் காரணமாக இந்தக் கப்பல் சிறிது பழுதடைந்துள்ளது, ஓட்டைகள் விழுந்திருக்கிறது. அதற்காக அதைச் சபிப்பீர்களா? இந்த உலகத்தில் வேறு எதைவிடவும் அதிகமாக உழைத்துள்ள இந்த தேசியக் கப்பலின்மீது சாப மழையைப் பொழிவது உங்களுக்குத் தகுதியானதா? தேசியக் கப்பலில், நம் சமூகமாகிய அந்தக் கப்பலில் ஓட்டைகள் இருந்தாலும் நாம் அதன் பிள்ளைகள் அல்லவா! நாம் சென்று அந்த ஓட்டைகளை அடைப்போம். நம் இதய ரத்தத்தைக் கொட்டி, மகிழ்சியோடு அந்தக் காரியத்தைச் செய்வோம். முடியவில்லை என்றால் எல்லோரும் இறப்போம். நம் மூளைகளைக் கொண்டு அடைப்பான் செய்து அந்த ஓட்டைகளை அடைப்போம். ஆனால் அதை ஒரு போதும் நிந்திக்க வேண்டாம். இந்தச் சமூகத்திற்கு எதிராக ஒரு கடின வார்த்தைகூடப் பேசாதீர்கள், நான் அதை அதன் கடந்தகால மகோன்னதத்திற்காக நேசிக்கிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தெய்வங்களின் குழந்தைகள், மேன்மை மிக்க முன்னோர்களின் குழந்தைகள். நான் எப்படி உங்களைச் சபிக்க முடியும்? ஒரு போதும் முடியாது.

எல்லா ஆசிகளும் உங்கள் மீது பொழிவதாக! என் குழந்தைகளே, என் திட்டத்தைச் சொல்வதற்காக உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் அவற்றை ஏற்றுக்கொண்டால் நானும் உங்களோடு சேர்ந்து பணி புரியத்தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைக் கேட்காமல் என்னை உதைத்து இந்தியாவிற்கு வெளியேதுரத்தினால் கூட நான் மறுபடியும் உங்களிடம் வருவேன். வந்து, நாம் எல்லோரும் மூழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வேன். உங்களோடு ஒரு வனாகக் கூடியிருக்கவே நான் வந்திருக்கிறேன். மூழ்கத்தான் வேண்டுமென்றால், நான் எல்லோருமே சேர்ந்து மூழ்குவோம். ஆனால் நம் உதடுகளிலிருந்து சாபங்கள் வராமல் இருக்கட்டும்!

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 5 கொழும்புமுதல்அல்மோராவரைசென்னைசொற்பொழிவு -3

இந்தியாவின் எதிர்காலம்

இந்தியாவின் எதிர்காலம்

பிப்ரவரி 14  மாலை,  ஹார்ம்ஸ்டன் சர்க்கஸ் வளாகம். 

உலகில் வேறெந்த நாட்டையும் அறிவு என்பது தன் இருப்பிடமாகக் கொள்ளுமுன் குடிபுகுந்த தாயகம் நமது புராதன பாரதம். கடல்போல் பொங்கிப் புரண்டோடுகின்ற பேராறுகளும், அடுக்கடுக்காய் உயர்ந்தெழுந்த சிகரங்கள்மீது பனிமுடி தரித்து ,ஏதோ வானுலக ரகசியங்களைஎட்டிப்பார்க்க விழைவது போல் விண்முட்ட நிற்கின்ற நிலையான இமயமலைத் தொடர்களும் அதன் ஆன்மீக மாட்சிமையைப் புறத்தில் காட்டுவது போல் உள்ளது. இதுவரை வாழ்ந்தவர்களுள் மகத்தான ரிஷிகளின் திருப்பாதங்கள் இதோ இந்த பாரத மண்ணில்தான் நடைபோட்டன. மனிதனின் இயல்பு பற்றியும் அகவுலகம் பற்றியும் இங்கு தான் முதலில் ஆராய்ச்சிகள் தொடங்கின ஆன்மாவின் அமரத்துவம், அனைத்தையும் ஆட்சி புரிகின்ற கடவுள் ,இயற்கையிலும் மனிதனிலும் ஊடுருவி நிற்கின்ற இறைவன் போன்ற கோட்பாடுகள் இங்குதான் முதலில் எழுந்தன. இங்குதான் மதம் மற்றும் தத்துவத்திலுள்ள மிகவுயர்ந்த லட்சியங்கள் உச்ச நிலைகளை எட்டின ,. இந்த நாட்டிலிருந்துதான் ஆன்மீகமும் தத்துவமும் அலைபோல் மீண்டும் மீண்டும் பாய்ந்துசென்று உலகை ஆக்கிரமித்தது. நலிந்து கொண்டிருக்கின்ற மனித குலத்திற்கு உயிரையும் உத்வேகத்தையும் ஊட்டுவதற்கு இந்தப் பூமியில் இருந்துதான் மறுபடியும் அலைகள் புறப்பட்டுச் சென்றாக வேண்டும். நூற்றுக்கணக்கான அன்னியர் படையெடுப்புகளும் ,நூற்றுக்கணக்கான பழக்க வழக்கங்களின் காரணமாக எழுந்த புரட்சிகளும் பல நூற்றாண்டுகளாக ஏற்படுத்திய அதிர்ச்சிகளை ஏற்றும் நிலைகுலையாமல் நிற்பதும் அதே இந்தியா தான். என்றும் குன்றாக சக்தியுடன் , அழியாத வாழ்வுடன் உலகின் எந்தப் பாறையை விடவும் உறுதியாக இருப்பது அதே நாடுதான். ஆன்மாவைப்போல், நமது நாடும் தோற்றமும் முடிவும் இல்லாததாக நித்தியமானதாக உள்ளது. இத்தகைய நாட்டின் அருமைக் குழந்தைகள் நாம்.

இந்தியாவின் குழந்தைகளே சில செயல்முறை விஷயங்களைப்பற்றிப் பேசுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். கடந்த காலப் பெருமைகளை உங்களுக்கு நான் நினைவுபடுத்துவதன் காரணம் இதுதான் . கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது சீரழிவிற்கே வழிவகுக்கும், அது வெறும் வீண் வேலை ,எனவே நாம் எதிர்காலத்தைப்பற்றி எண்ண வேண்டும் என்று பலர் கூறக் கேட்டதுண்டு. உண்மைதான் . ஆனால் கடந்த காலத்திலிருந்து தான் எதிர்காலம் உருவாகிறது. எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு திரும்பிப் பாருங்கள். பின்னால் உள்ள வற்றாத அந்த ஊற்றுக்களிலிருந்து நன்றாக பருகுங்கள். அதன்பின்னர் முன்னே பாருங்கள் . .பீடுநடை போட்டுச் செல்லுங்கள். பாரதத்தை முன்பிருந்ததைவிட ஒளிமயமானதாக , சிறப்பானதாக, உன்னதமானதாக உருவாக்குங்கள். நம் முன்னோர்கள் மகத்தானவர்களாக இருந்தார்கள். முதலில் அதை நினைத்துப் பார்க்க வேண்டும் , நாம் எதனால் ஆக்கப்பட்டிருக்கிறோம், நமது ரத்தக் குழாய்களில் ஓடுகின்ற ரத்தம் எது என்பதை அறிய வேண்டும் ,அந்த ரத்தத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். பழங்காலத்தில் நமது முன்னோர் மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையிலிருந்தும் , பழம் பெருமையைப் பற்றிய உணர்விலிருந்தும் முன்னை விடச் சிறப்பான தொரு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.

வீழ்ச்சியும் அழிவும் உள்ளகாலகட்டங்களும் வரலாற்றில் இருக்கவே செய்தன, நான் அவைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை ; அவை நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயமும்தான் . அத்தகைய காலகட்டங்களும் தேவையாகவே இருந்தன. ஒரு பெரிய மரத்தில் அழகிய பழம் ஒன்று பழுக்கிறது . அந்தப்பழம் பூமியில் வீழ்ந்து கெட்டு அழுகுகிறது. அந்த அழுகலிலிருந்துதான் எதிர்கால மரத்திற்கான முளை வருகிறது. ஒருவேளை இந்த மரம் முதல் மரத்தைவிடப் பெரிதாகக் கூட இருக்கலாம். எனவே நாம் கடந்து வந்த வீழ்ச்சியும் அழிவும் நிறைந்த கால கட்டமும் மிகவும் தேவையே . இந்த வீழ்ச்சியிலிருந்து தான் எதிர்கால இந்தியா பிறக்கும். அது முளைவிட்டு கொண்டிருக்கிறது, அதன் முதல் தளிர்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன, ஒரு மாபெரும் மரமான ‘‘ஊர்த்வ மூலம் ” வளரத் தொடங்கி விட்டது. அதைப்பற்றித் தான் நான் இன்று உங்களிடம் பேச உள்ளேன்.

இந்தியாவில் பிரச்சினைகள் மற்ற எந்த நாட்டுப் பிரச்சினைகளைவிட மிகவும் சிக்கலானது ம் முக்கியமானதும் ஆகும். இனம், மதம், மொழி, அரசாங்கம் இவை எல்லாம் சேர்ந்து ஒரு நாட்டை உருவாக்குகின்றன. உலகத்தின் ஒவ்வோர் இனத்தையும் இந்த நாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் .அந்த நாடுகளை உருவாக்கிய அடிப்படைகள் இந்த நாட்டை உருவாக்கியவற்றைவிட மிகவும் குறைவாகவே இருக்கும் ஆரியர், திராவிடர், தார்த்தர் துருக்கியர், மொகலாயர், ஐரோப்பியர் என்று உலகத்தில் உள்ள எல்லா இனங்களின் ரத்தமும் இங்கே இந்தப் பூமியில் கலந்திருப்பதுபோல் தோன்றுகிறது . மொழிகளில் கூட இங்கே அற்புதமான கலப்பு உள்ளது. பழக்க வழக்கங்களைப் பொறுத்த வரை , இரு இந்திய இனங்களுக்கிடையே உள்ள வேறுபாடு ஐரோப்பியர்களுக்கும் கீழை இனங்களுக்கும் உள்ள வேறுபாடுகளைவிட அதிகமாக உள்ளன.

நமது பொதுவான அடிப்படை, நமது புனிதமான பாரம்பரியம் நமது மதம் தான். அது ஒன்றுதான் நமக்குப் பொதுவாக உள்ள அடித்தளம். அதன்மீதுதான் கட்டிடத்தை எழுப்ப வேண்டும். ஐரோப்பாவில் அரசியல் கொள்கைகள் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கின்றன. ஆசியாவில் மத லட்சியங்கள் தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றன. எனவே எதிர் கால இந்தியாவிற்கு நிறைவேற்றப்பட வேண்டிய முதல் நிபந்தனை மத ஒற்றுமை. இந்த நாடு முழுவதும் ஒரேயொரு மதம் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். ஒரு மதம் என்பதன் மூலம் நான் எதைக் குறிப்பிடுகிறேன்? கிறிஸ்தவர்களோ முகமதியர்களோ பௌத்தர்களோ கருதுகின்ற பொருளிலுள்ள ஒரு மதத்தை அல்ல. நம்மிடையே உள்ள மதப் பிரிவுகள் பல்வேறு விதமான முடிவுகளைக் கொண்டிருக்கின்றன, வேறுபட்ட உரிமைகளைக் கொண்டிருக்கின்றன. எனினும் அவை எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில விஷயங்கள் உள்ளன. இந்தப் பொது விஷயங்களாகிய எல்லைக்குள் நமது மதம் அற்புதமான வேறுபாடுகளை அனுமதிக்கிறது ; நம் சொந்த வாழ்கையைச் சிந்திக்கவும் நடத்தவும் அளவற்ற சுதந்திரத்தை அளிக்கிறது. நமது மதத்தின், உயிரோட்டத்தை அளிப்பதான இந்தப் பொதுக் கருத்துக்களை வெளியே கொண்டுவர வேண்டும், ஆண் பெண், குழந்தை என்று இந்த நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொருவரும் அவற்றை அறிய வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், புரிந்துகொண்டதைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் . இதுவே நாம் வேண்டுவது, இங்குள்ள நம் அனைவருக்கும், குறைந்த பட்சம் நம்முள் சிந்திக்கும் திறன் உள்ளவர்களுக்காவது இது தெரியும். இதுதான் முதற்படி, எனவே அதனை முதலில் செய்துமுடிக்க வேண்டும்.

ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் இனப் பிரச்சினைகள், மொழிப் பிரச்சினைகள் , சமுதாயப் பிரச்சினைகள் ,தேசியப் பிரச்சினைகள் எல்லாமே எவ்வாறு மதத்தின் ஒருங்கிணைக்கின்ற சக்தியின் முன்னால் மறைந்து விடுகின்றன என்பதை நாம் காண்கிறோம். இந்திய மனத்தைப் பொறுத்தவரை மத லட்சியங்களை விட உயர்ந்தது எதுவும் இல்லை, அதுவே இந்திய வாழ்வின் அடிப்படை அம்சம், அதன் மூலம்தான் மிகவும் குறைவான எதிர்ப்புக்களோடு நாம் வேலை செய்ய முடியும் . மத லட்சியமே மிகவுயர்ந்த லட்சியம் என்பது உண்மை மட்டுமல்ல , இந்தியாவைப் பொறுத்தவரையில் செயல் புரிவதற்கான ஒரே வழி இதுதான். இதை பலப்படுத்திக் கொள்ளாமல் மற்ற எந்த வழியிலாவது வேலை செய்து பாருங்கள், முடிவு விபரீதமாகவே இருக்கும்.

எனவே எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்குகான முதல் முயற்சி, யுகயுகங்களாக உறுதியாக இருக்கின்ற அந்தப் பாறையைக் குடைந்து பெற வேண்டிய முதல் படி, மத ஒற்றுமை ஆகும். இந்துக்களாகிய நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று உண்டு. துவைதிகள் ,விசிஷ்டாத்வைதிகள் , அத்வைதிகள் ஆகட்டும், இல்லை மற்ற பிரிவுகளான சைவர்கள், வைணவர்கள், பாசு பதர்கள் என்று நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்துக்களாகிய நம் அனைவருக்கும் அடிப்படையான சில கருத்துக்கள் உள்ளன. நமது நன்மைக்காகவும் நம் இனத்தின் நன்மைக்காகவும் நம்மிடைய உள்ள சின்னஞ்சிறு சச்சரவுகளையும் வேற்றுமைகளையும் விடுவதற்கான வேளை வந்து விட்டது. இந்தச் சண்டைகள் எல்லாம் முற்றிலும் தவறானவை என்பதில் உறுதி கொள்ளுங்கள். அவை நம் சாஸ்திரங்களால் கண்டிக்கப்பட்டிருக்கின்றன, நம் முன்னோர்களால் தடுக்கப்பட்டிருக்கின்றன. எந்த மாமனிதர்களை நாம் நமது முன்னோர்கள் என்று உரிமை கொண்டாடுகிறோமோ, யாருடைய ரத்தம் நம் ரத்தக் குழாய்களில் ஓடுகிறதோ , அவர்கள், தங்கள் குழந்தைகளான நாம் சிறுசிறு வேற்றுமைகளுக்காக அடித்துக்கொள்வதைக் கண்டு நம்மை வெறுப்புடன் பார்க்கின்றனர்.

இந்தச் சண்டைகளை விட்டுவிட்டால் போதும், மற்ற எல்லா முன்னேற்றங்களும் வரும். ரத்தம் புஷ்டியாகவும் தூய்மையாகவும் இருக்குமானால் நோய்க் கிருமிகள் எதுவும் அந்த உடம்பில் வாழ முடியாது. நமது ஜீவ ரத்தம் ஆன்மீகம். அது தெளிவாக ஓடு மானால், புஷ்டியாக தூய்மையாக உத்வேகத்துடன் ஓடுமானால் எல்லாம் சரியாக இருக்கும். அந்த ரத்தம் தூய்மையாக இருக்குமானால் அரசியல், சமுதாயம், மற்ற பொருளாதாரக் குறைபாடுகள் எல்லாம் சீர் செய்யப்பட்டுவிடும், ஏன் ,நாட்டின் வறுமைகூடத் தீர்க்கப்பட்டுவிடும் . ஏனென்றால் நோய்க்கிருமி வெளியே எறியப்பட்டுவிடுமானால் , வேறெதுவும் ரத்தத்தில் கலக்க முடியாது.

தற்கால மருத்துவத்திலிருந்து ஓர் உவமையை எடுத்துக் கொள்வோம். நோய் உண்டாக இரண்டு காரணங்கள் இருந்தாக வேண்டும் : ஒன்று வெளியிலுள்ள நச்சுக் கிருமி , மற்றொன்று உடம்பின் நிலைமை. உடம்பு அந்தக் கிருமிகளை உள்ளே அனுமதிக்கும் நிலையில் இருக்காதவரை, உடம்பின் எதிர்க்கும் சக்தி குறைவாகி, அதனால் அந்தக் கிருமிகள் உடம்பினுள் நுழைந்து செழித்துப் பெருகுகின்ற ஒரு நிலை உருவாகாதவரை, எந்தக் கிருமிக்கும் உடம்பினுள் ஒரு நோயை உண்டாக்குகின்ற சக்தி இல்லை. உண்மையில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான கிருமிகள் உடம்பைப் பற்றிக் கொண்டு நோயை உண்டாக்குகின்றன , ஆனால் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்வரை அவற்றைப் பற்றிய உணர்வே ஏற்படுவதில்லை. உடம்பு பலவீனமாகும் போது மட்டுமே இந்தக் கிருமிகள் உடம்பைக் பற்றிக் கொண்டு நோயை உண்டாக்குகின்றன.தேசிய வாழ்வின் விஷயமும் இது போன்றது தான். தேசிய உடல் பலவீனமாக இருக்கும் போது தான் அரசியல் , சமுதாயம், கல்வி, அறிவு போன்ற எல்லா நிலைகளிலும் எல்லா வகையான நோய்க் கிருமிகளும் ஆக்கிரமித்து நோய்களை உண்டாக்குகின்றன. இதைக் குணமாக்க வேண்டுமானால் நோயின் வேருக்கே செல்ல வேண்டும், ரத்தத்திலுள்ள எல்லா அசுத்தங்களையும் நீக்க வேண்டும். நாம் செய்ய வேண்டுவதெல்லாம் மனிதனைப் பலப்படுத்தும், ரத்தத்தைத் தூய்மையாக்குவதும், வெளியேயிருந்து வருகின்ற விஷங்களை எதிர்த்து அவற்றை வெளியில் தள்ளவல்லதாக உடம்பை வலிமைபெறச் செய்வதும்தான்.

நமது பலமும் நமது உத்வேகமும் மட்டுமின்றி , நம் தேசிய வாழ்வும் மதத்தில்தான் இருக்கிறது என்பதைப் பார்த்தோம். இப்படி நாட்டின் ஆதாரமே மதத்தில் இருப்பது சரியா தவறா? காலப்போக்கில் அதனால் நன்மை விளையுமா விளையாதா என்பதைப் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை . ஆனால் நல்ல தற்கோ கெட்டதற்கோ அது அங்கே இருக்கிறது. நீங்கள் அதிலிருந்து விலகி ஓட முடியாது .இன்றைக்கும் என்றென்றைக்குமாக நீங்கள் அதைப் பெற்றிருக்கிறீர்கள். எனக்கு நமது மதத்தில் உள்ளது போன்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றாலும் நீங்கள் அதனுடன்தான் வாழ்ந்தாக வேண்டும் .அதனுடன் நீங்கள் கட்டப்பட்டு இருக்கிறீர்கள், அதை விட்டுவிலகினால் தூள்தூளாகி விடுவீர்கள் . அதுதான் நம் இனத்தின் ஜீவாதாரம் ,அதை நாம் பலப்படுத்த வேண்டும். அந்த மதம் என்பதை மிகுந்த அக்கறையுடன் பேணிக்காத்ததால் தான் , வேறு எல்லாவற்றையுமே அதற்காகத் தியாகம் செய்ததால்தான் பல நூற்றாண்டுகளாக வந்தஅதிர்ச்சிகளை எல்லாம் உங்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

உங்கள் முன்னோர் அதைக் காப்பதற்கு எல்லா துன்பங்களையும், ஏன், சாவையும் கூடத் தைரியமாகச் சந்தித்தார்கள். அன்னியர் படைகள் நமது கோயில்கள் ஒவ்வொன்றையும் தரைமட்டமாக்கின. ஆனால் அந்த அலை ஓய்ந்ததுமே கோயில்களும் கோபுரங்களும் மீண்டும் எழுந்தன. தென்னிந்தியாவின் இத்தகைய சில புராதனமான கோயில்களும், குஜராத்தின் சோமநாதர் கோயில் போன்றவையும் எத்தனையெத்தனையோ விஷயங்களை உங்களுக்கு உணர்த்த முடியும் ; உங்கள் இனத்தின் சரித்திரத்தைப்பற்றி அடுக்கடுக்கான நூல்கள்கூறுவதை விட ஆழ்ந்த விஷயங்களைத் தர முடியும். நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அடையாளங்கள் இந்தக் கோயில்களில் உள்ளன, நூற்றுக்கணக்கான முறையும் அவை புதுப்பிக்கப்பட்டன. தொடர்ந்து அவை அழிக்கப்பட்டன.

அந்த அழிவிலிருந்து மீண்டும் முன்னைவிடப் புதுமையோடும் வலிமையோடும் எழுந்து நின்றுள்ளன அந்தக் கோயில்கள்! இதுதான் நம் தேசிய சிந்தனை . தேசிய வாழ்க்கை நீரோட்டம், அதைப் பின்பற்றிச் செல்லுங்கள், அது உங்களைப் பெருமைக்கு அழைத்துச் செல்லும். அதை விடுங்கள், நீங்கள் அழிந்து விடுவீர்கள், சாவுதான் அதன் ஒரே விளைவு. வாழ்க்கை நீரோட்டத்தை விட்டு நீங்கள் விலகுகின்ற அந்தக் கணமே அழிவு உங்களைப் பற்றிக் கொள்ளும். மற்ற எதுவும் தேவையில்லை என்று நான் சொல்ல வில்லை : அதாவது அரசியலோ சமூக முன்னேற்றங்களோ தேவையற்றவை என்பதல்ல நான் சொன்னதன் பொருள். நான் சொல்வதெல்லாம், மதம் முதன்மையானது, மற்றவையெல்லாம், அதற்கு அடுத்தபடி என்பதுதான். இந்திய மனம் மற்ற எதைவிடவும் மதத்தைச் சார்ந்தது. எனவே அதை வலுப்படுத்தியாக வேண்டும் அதை எப்படிச் செய்வது?.

என் கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். இந்தக் கருத்துக்கள் நெடுங்காலமாக, நான் சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்படும் முன்னரே என் மனத்தில் இருந்தன. நான் இங்கிலாந்திற்கும் அமெரிக்காவுக்கும் சென்ற தெல்லாம் இந்தக் கருத்துக்களைப் பரப்புவதற்காகவே . , சர்வமத மகா சபையைப்பற்றியோ வேறு எதைப் பற்றியோ எனக்கு அக்கறையி ல்லை, அது ஒரு வாய்ப்பாக இருந்தது, அவ்வளவுதான். ஆனால் உண்மையில் எனது இந்தக் கருத்துக்களே என்னை உலகம் முழுவதும் வலம்வரச் செய்தன.

என் எண்ணம் இது : நமது நூல்களில் புதைந்து கிடக்கின்ற, மடங்களிலும் காடுகளிலும் மறைந்தே விட்டதுபோல் ஏதோ சிலரின் சொத்தாக இருக்கின்ற ஆன்மீகப் பொக்கிஷங்களை முதலில் வெளியே கொண்டுவர வேண்டும். அந்த ஏதோ சிலரின் கைகளிலிருந்து மட்டுமல்ல, அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, அணுகமுடியாத கவசம் போலுள்ள அந்த மொழியிலிருந்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வளமை பெற்று வந்துள்ள சம்ஸ்கிருத வார்த்தைகளிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். ஒரேவார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கருத்துக்களைப் பிரபலமாக்க வேண்டும். இந்தக் கருத்துக்களை வெளியே கொண்டுவர நான் விரும்புகிறேன். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ, இந்தக் கருத்துக்கள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுச் சொத்தாக வேண்டும். பெருமை மிக்க நமது சம்ஸ்கிருத மொழி இருக்கிறதே, அதுதான் வழித்தடையாக இருக்கிறது. இயலுமானால் நம் நாட்டிலுள்ள அனைவரும் சம்ஸ்கிருத வல்லுனராக வேண்டும் , அதுவரை இந்தக் தடையை நீக்க முடியாது.

சம்ஸ்கிருத மொழியை என் ஆயுள் முழுவதும் படித்து வருகிறேன். என்றாலும் ஒவ்வொரு புதிய நூலும் புரிந்துகொள்ள முடியாததாகவே எனக்கு உள்ளது. அவ்வளவு கடினமான மொழி அது. இப்படி இருக்கும்போது அந்த மொழியை முழுக்கப் படிப்பதற்கு நேரமில்லாத மக்களுக்கு இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும் ? எனவே இந்தக் கருத்துக்களை மக்களின் மொழியில் போதிக்க வேண்டும். சம்ஸ்கிருதப் படிப்பும் அதோடு வளர வேணடும். ஏனென்றால் சம்ஸ்கிருத வார்த்தைகளின் ஒலியே நம் இனத்திற்கு ஒரு மதிப்பையும் ஆற்றலையும் வலிமையையும் தருகிறது.

மகத்தான ராமானுஜரும் சைதன்யரும் கபீரும் இந்தியாவின் தாழ்ந்த வகுப்பினரை முன்னேற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் மாபெரும் வெற்றியைக் கண்டன. ஆனால் அது அவர்கள் காலத்தில் மட்டுமே. அந்த மாபெரும் ஆச்சாரியர்கள் போதித்த உபதேசங்களின் வேகம், அவர்கள் மறைந்த ஒரு நூற்றாண்டிற்குள்ளாகவே மறைந்து விட்டன, அவை தோல்வியைத் தழுவின. ஏன்? அதன் காரணம் என்ன? அதை நாம் இங்கே விளக்கத்தான் வேண்டும். காரணம் இதுதான்: அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தினார்கள், அவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார்கள்: ஆனால் பாமர மக்களிடையே சம்ஸ்கிருதக் கல்வியைப் பரப்புவதற்கான முயற்சிகளைச் செய்யவில்லை மகத்தான புத்தர் கூட, சாதாரண மக்கள் சம்ஸ்கிருத மொழியைப் படிக்க வேண்டாம் என்று தடுத்தபோது ஒரு தவறான அடியையே எடுத்து வைத்தார். அவர் விரைவான உடனடியான விளைவுகளை விரும்பினார். அதனால் அன்றைய பேச்சுமொழியான பாலியில் மொழி பெயர்த்தே பிரச்சாரம் செய்தார். அது பெரிய விஷயம்: அவர் மக்களின் மொழியில் பேசினார், மக்கள் புரிந்து கொண்டார்கள். அது சிறப்பானது, அது கருத்துக்களை விரைவாகப் பரப்பியது. நெடுந்தொலைவில் உள்ளவர்களையும் அவரது கருத்துக்கள் சென்றடைந்தன. ஆனால் அதனுடன் சம்ஸ்கிருதமும் பரப்பப்பட்டிருக்க வேண்டும். அங்கே அறிவு வந்தது, ஆனால் பெருமைவரவில்லை, பண்பாடு வரவில்லை. பண்பாடுதான் அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ள முடியும், எவ்வளவு தான் ஆனாலும் அறிவினால் அது முடியாது.

உலகிற்கு நீங்கள் அறிவுரையைப் பொழியலாம் . அதனால் பெரிய நன்மை எதுவும் விளைந்துவிடப் போவதில்லை. ரத்தத்தில் பண்பாடு வர வேண்டும் .தற்காலத்தில் கல்வியில் உன்னத வளர்ச்சி கண்ட பல நாடுகளை நாம் அறிவோம். அதனால் என்ன! அவர்கள் புலிகளைப்போல் உள்ளார்கள், காட்டுமிராண்டிகளைப் போல் இருக்கிறார்கள், ஏனெனில் அங்கே பண்பாடு இல்லை. நமது நாகரீகத்தைப் போலவே அறிவும் அங்கே தோலை மட்டும் தொட்டுள்ளது, சிறு சிராய்ப்பு போதும், பழைய காட்டுமிராண்டித்தனம் வந்துவிடும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இது தான் ஆபத்து. சாதாரண மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில் போதியுங்கள். கருத்துக்களைக் கொடுங்கள், அதனால் அவர்கள் விஷயங்களை அறிந்து கொள்வார்கள், ஆனால் அதை விட மேலான ஒன்று அவர்களுக்குத் தேவை , பண்பாட்டை அளியுங்கள். அவர்களுக்கு அதைக்கொடுக்காத வரையில் அந்த உயர்த்தப்பட்ட நிலையில் அவர்களால் நிலையாக இருக்க முடியாது. அப்போது சம்ஸ்கிருத மொழியால் மேன்மை பெற்ற ஒரு தனி ஜாதி உருவாகவே செய்யும், அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்து மற்றவர்களை அடக்கியாளவே செய்தார்கள்.

உங்களுள் தாழ்ந்த ஜாதியினரிடம் சொல்கிறேன்: உங்களுக்கு ஒரே வழி, உங்கள் நிலை உயர ஒரே உபாயம் சம்ஸ்கிருதம் படிப்பதே. உயர்ந்த ஜாதியினருடன் சண்டையிடுவதும் எழுதுவதும் நிந்திப்பதும் வீண். அது எந்த நன்மையையும் தராது. துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் நமது இனம் மேலும் பிளவுபடவே இந்தச் சண்டைகள் வழிவகுக்கும். ஜாதிகளுக்கிடையே சமத்துவம் நிலவுவதற்கான ஒரே வழி, மேல் ஜாதியினரின் வலிமைக்குக் காரணமான கல்வியறிவையும் பண்பாட்டையும் எல்லோருக்கும் பொதுவாக்குவதே. அதைச் செய்துவிட்டால் நீங்கள் விரும்பியதைப் பெறுவீர்கள்.

இது தொடர்பாக, சென்னை சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய விஷயத்தை நான் பேச விரும்புகிறேன்.தென்னிந்தியாவில் திராவிடர் என்ற இனத்தினர் இருந்ததாகவும், அவர்கள் வட இந்தியாவில் வாழ்ந்த ஆரியர் என்ற இனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டடவர்கள் என்றும் தென்னிந்திய பிராமணர்கள் மட்டுமே வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்கள் என்றும், பிற தென்னிந்தியர்கள் எல்லாம் இந்தப் பிராமணர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஜாதியையும் இனத்தையும் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கொள்கை நிலவுகிறது. திருவாளர் மொழியியல் அறிஞரே, உங்கள் கருத்தை மறுப்பதற்கு என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கருத்து முற்றிலும் ஆதாரமற்றது. ஆதாரத்திற்காக ஒரே ஒரு நிரூபணம் காட்ட முடியும் என்றால் அது வட நாட்டிற்கும் தென்னாட்டிற்கும் இடையே மொழியில் அமைந்துள்ள வேற்றுமை மட்டுமே, வேறு எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை.

இங்கே நாங்கள் வட இந்தியர்களும் பலர் இருக்கிறோம். எங்களுள் யார் வட இந்தியர், யார் தென்னிந்தியர் என்று பிரிக்குமாறு இங்கே இருக்கும் என் ஐரோப்பிய நண்பர்களிடம் நான் சொல்கிறேன். அவர்களால் முடியாது. வேற்றுமை எங்கே? மொழியில்தான் ஏதோ சிறு வேறுபாடு இருக்கிறது. ஆனால் இங்குள்ள பிராமணர்கள் சம்ஸ்கிருதம் பேசிய இனத்திலிருந்து வந்தவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு எப்படி சம்ஸ்கிருதம் தெரியாமல் போயிற்று ! அவர்கள் இங்கு வந்ததும் திராவிட மொழியைப் பேசத் துவங்கி சம்ஸ்கிருதத்தை மறந்து விட்டார்களாம். மற்ற ஜாதியினர் விஷயத்திலும் ஏன் அப்படி நடந்திருக்கக் கூடாது? வட இந்தியாவிலிருந்து ஒருவர்பின் ஒருவராக வந்த மற்ற எல்லா ஜாதியினரும் திராவிட மொழியைப் பேசத் தொடங்கியதால் ஏன் சம்ஸ்கிருதத்தை மறந்திருக்கக் கூடாது? எனவே இந்த வாதத்தை இரண்டு பக்கமிருந்தும் பேசலாம். பொருளற்ற இத்தகைய பேச்சுக்களை நம்பாதீர்கள். திராவிடர்கள் இங்கே இருந்திருக்கலாம்: ஆனால் அவர்கள் காலப்போக்கில் மறைந்திருக்க வேண்டும். எஞ்சியிருந்த ஏதோ சிலர் காடுகளிலும் மற்ற இடங்களிலும் வாழ்ந்திருக்க வேண்டும், அவர்களின் மொழியை இங்குள்ளவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் இங்குள்ள அனைவரும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களே. இந்தியா முழுவதிலும் இப்போது இருப்பவர்கள் ஆரியர்களே, வேறுயாருமில்லை.

மற்றொரு கருத்தும் இங்கே நிலவுகிறது – சூத்திரர்கள் எல்லாம் ஆதிவாசிகளாம் ! அவர்கள் யார்? அடிமைகள்! வரலாறு திரும்புகிறது என்கின்றனர். எப்படி? அமெரிக்கர் , ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுகீசியர் ஆகிய அனைவரும், அப்பாவி ஆப்பிரிக்கர்களைப் பிடித்துக் கொண்டுவந்து கடினமாக வேலை வாங்கினார்கள். அவர்கள் இறந்தபிறகு அவர்களுக்குப் பிறந்த கலப்பின் மக்களையும் நெடுங்காலம் வரை அதே நிலையில் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அந்த விசித்திரமான உதாரணத்தைப் படித்த இவர்களின் மூளையில், இங்கேயும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதே போன்ற செயல் நடந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது. ஒரு காலத்தில் இந்தியா முழுவதுமே கறுப்புக் கண்களோடு கூடிய ஆதிவாசிகளால் நிறைந்திருந்தது என்று கனவு காண்கிறார் நம் தொல்பொருள் ஆய்வாளர். சிவந்த நிற முடைய ஆரியர்கள் பின்னால் வந்தனராம்! எங்கிருந்து? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

சிலருடைய கருத்துப்படி அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்தார்கள். மற்றும் சிலரே, அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். சிவப்புத் தலைமயிரை உடையவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்று நினைக்கின்ற,தேச பக்தர்களான சில ஆங்கிலேயர்களும் இருக்கிறார்கள். தங்கள் கருத்தை வைத்துக் கொண்டு சிலர் அவர்கள் கறுப்பு நிறத் தலைமயிரை உடையவர்கள் என்று நினைக்கிறார்கள். எழுதியவர் கறுப்பு முடியள்ள மனிதராக இருந்தால், ஆரியர்கள் எல்லாரும் கறுப்பு முடியுள்ளவர்கள்.

இனி ஆரியர்கள் சுவிட்சர்லாந்தின் ஏரிக்கரைகளில் வாழ்ந்தார்கள் என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளும் சமீப காலத்தில் தோன்றியுள்ளன. இத்தகைய கொள்கைகளுடன் அவர்களும் சேர்ந்தே அந்த ஏரியில் மூழ்கினால் கூட எனக்கு வருத்தமில்லை. ஆரியர்கள் வட துருவத்தில் வாழ்ந்ததாக இப்போது சிலர் கூறுகின்றனர். ஆரியர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பராக!

இந்தக் கொள்கைகளில் உண்மை இருக்கிறதென்றால் நம் சாஸ்திரங்களில் அது பற்றிய ஒரு சிறு குறிப்பாவது இருக்க வேண்டுமே! ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியேயிருந்து வந்தார்கள் என்று கூறுகின்ற ஒரு வார்த்தைகூட நமது சாஸ்திரங்களில் இல்லை .பழங்கால இந்தியா ஆப்கானிஸ்தானமும் சேர்ந்த பகுதியாகும், அவ்வளவுதான். அதுபோலவே சூத்திரர்கள் எல்லாம் ஆரியர் அல்லாதவர்கள், அவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்கள் என்ற கொள்கையும் தர்க்கரீதியானதோ அறிவு பூர்வமானதோ அல்ல. ஒருசில ஆரியர்கள் வந்து குடியேறி லட்சக்கணக்கான அடிமைகளை அடக்கியாண்டார்கள் என்பது அந்தக் காலத்தில் நடக்கக்கூடிய ஒன்றா என்ன! அப்படி அடக்கி ஆண்டிருந்தால், அந்த அடிமைகள் அவர்களை ஐந்தே நிமிடத்தில் சட்னி, செய்து சாப்பிட்டிருப்பார்கள்.

ஒரே ஒரு விளக்கம் மகாபாரதத்தில் காணப்படுகிறது; சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் பிராமணர்கள் என்ற ஒரு ஜாதியினரே இருந்தார்கள். அதன்பிறகு பல்வேறு தொழில்களைச் செய்ததன் காரணமாக அவர்கள், தங்களுக்குள் பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தார்கள். இது தான் ஜாதிப் பிரச்சினைக்கு உண்மையான, அறிவுபூர்வமான ஒரே விளக்கம், இனி வரப்போகின்ற சத்திய யுகத்திலும் ஜாதிகள் எல்லாம் சிறிதுசிறிதாக மாறி முதலில் இருந்த நிலைக்குச் செல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள ஜாதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி இது தானே தவிர, உயர்ந்த ஜாதியினரைக் கீழ் நிலைக்குக் கொண்டுவருவதோ பிராமணர்களை நசுக்குவதோ அல்ல.

பிராமணத்துவம்தான் இந்திய மக்களின் லட்சியம் என்பதை சங்கரர் தமது கீதை விளக்கவுரையின் முன்னுரையில் அற்புதமாக விளக்கியுள்ளார்; ஸ்ரீகிருஷ்ணர் உபதேசகராக வந்ததன் காரணத்தைக் கூறும்போது, இந்த பிராமணத்துவத்தை, பிராமண நிலையை நிலை நிறுத்தவே அவர் அவதரித்தார் என்று கூறுகிறார். அது தான் மகத்தான லட்சியம் .இறை மனிதனான, பிரம்மத்தை அறிந்தவனான, லட்சியமனிதனான, நிறை மனிதனான இந்தப் பிராமணன் கட்டாயம் இருக்க வேண்டும் . அவன்மறைந்து போகக் கூடாது. இன்று அந்த ஜாதி சீர்கெட்டுப் போயிருக்கலாம். இருப்பினும்பிற எல்லா ஜாதியினரையும் விட, பிராமண ஜாதியிலிருந்தே உண்மை பிராமணத்துவம் கொண்ட அதிகம் பேர் தோன்றியுள்ளனர். இந்த மதிப்பை பிராமணர்களுக்குக் கொடுக்க மற்ற எல்லா ஜாதியினரும் தயாராக இருக்க வேண்டும். அது உண்மை. பிற எல்லா ஜாதியினரிடமிருந்தும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையுள்ள மதிப்பு அது. அவர்களுடைய குறைகளைப்பற்றிப் பேச தைரியமும் துணிச்சலும் படைத்தவர்களாக நாம் இருக்க வேண்டும் . அதே வேளையில் அவர்களுக்கு உரிய பெருமைகளையும் தரவேண்டும். ”ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கு உரியதைக் கொடுங்கள் ”என்னும் ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். எனவே நண்பர்களே, ஜாதிகளுள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் ஒரு பயனுமில்லை. அது என்ன நன்மை செய்யும்? நமக்குள் இன்னும் அதிகமான பிளவுகளை உண்டாக்கும். நம்மை மேலும் பலவீனப்படுத்தும், மேலும் இழிநிலையில் ஆழ்த்தும், அவ்வளவுதான்.

தனிச் சலுகைகள் மற்றும் தனி உரிமைகளின் காலம் மலையேறிவிட்டது . அவை இந்திய மண்ணிலிருந்து ஒரேயடியாகப் போய்விட்டன . இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியால் விளைந்த மகத்தான நன்மைகளுள் இதுவும் ஒன்று. தனிச் சலுகைகளை ஒழித்ததான பெரும் பணிக்காக நாம் முகமதியர் ஆட்சிக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். முகமதிய ஆட்சிகூட அப்படியொன்றும் முற்றிலுமாகத் தீயதல்ல. செல்லப்போனால் எதுவுமே முற்றிலும் நல்லதும் அல்ல, முற்றிலும் கெட்டதும் அல்ல. முகமதியர்கள் இந்தியாவை வெற்றி கொண்டது, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் கதிமோட்சமாக அமைந்தது. அதனால் தான் நம் மக்களுள் ஐந்தில் ஒரு பங்கினர் முகமதியர் ஆனார்கள் எல்லாவற்றையுமே வாள் மட்டுமே சாதித்தது என்பதில்லை. வாளாலும் நெருப்பாலும் மட்டுமே இந்த அனைத்து வேலைகளும் நடைபெற்றதாக நினைப்பது பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டம். இனி நீங்கள் எச்சரிக்கையாக இல்லை என்றால், உங்கள் சென்னை மக்களுள் ஐந்தில் ஒரு பங்கினர், ஏன் பாதிபேர் கிறிஸ்தவர்களாகி விடுவார்கள், நான் மலபாரில் பார்த்ததைவிட மடத்தனம் உலகில் வேறு எங்காவது இருக்க முடியமா? பாவம்! கீழ்ஜாதியினர் மேல் ஜாதியினர் நடக்கும் தெருக்களில்கூட நடக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அவனே தன் பெயரை தாட்பூட்டென்று ஓர் ஆங்கிலப் பெயராக மாற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் , முகமதியப் பெயரை வைத்துக்கொண்டாலும் போதும், எல்லாம் சரியாகி விடும்! அந்த மலபார்வாசிகளைப் பைத்தியங்கள் என்று நினைப்பதைத் தவிர, அவர்களின் வீடுகளையெல்லாம் பைத்தியக்கார விடுதிகள் என் பதைத் தவிர வேறு என்னவென்று நினைப்பது? அவர்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டு , நல்ல வழியில் நடக்கும் வரைஇந்தியாவில் உள்ள ஒவ்வோர் இனத்தினரும் அவர்களை வெறுப்பாக நடத்த வேண்டும் என்பதை தவிர வேறு எந்த முடிவுக்கு வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த முடிவுக்கு வருவது ? இத்தகைய கொடூரமான , மிருகத்தனமான பழக்கங்களை அனுமதித்திருக்கிறார்கள். சொந்தக் குழந்தைகளே பட்டினியில் சாகுமாறு விட்டுவிடுகிறார்கள்., ஆனால் அவர்கள் மதம் மாறி விட்டார்களானால் சாப்பாடு போடுகிறார்கள். என்ன வெட்கக்கேடு!ஜாதிகளிடையே இனியும் சண்டை இருக்கக் கூடாது.

உயர்ந்ததைத் தாழ்த்துவதல்ல, தாழ்ந்ததை உயர்த்துவதே தீர்வு . இதுதான் நமது நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் மார்க்கம். சொந்த சாஸ்திர அறிவும், முன்னோர்களின் மகத்தான திட்டங்களைப் புரிந்து கொள்வதற்கான திறனும் சுத்த சூன்யமாக இருக்கின்ற சிலர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் . அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் மூளையுள்ளவர்களுக்கு , புத்திக்கூர்மை உடையவர்களுக்கு நம் முன்னோர்களின் செயல்திட்டத்தின் முழுப் பரிமாணமும் விளங்கும் . , அவர்கள் தனியாக நின்று பல நூற்றுண்டுகளாகத் தொடர்ந்து வருகின்ற அந்த அற்புதமான தேசிய வாழ்வைப் பின்பற்றுவார்கள். பழைய மற்றும் புதிய நூல்களைப் படிப்படியாக ஆராய்ந்து அவர்களால் அதனைக் கண்டறிய முடியும்.

அந்தத் திட்டம்தான் என்ன? ஒரு கோடியில் பிராமண லட்சியம் உள்ளது.. மற்றொரு கோடியில் உள்ளது சண்டாள லட்சியம் . நமது வேலையெல்லாம் சண்டாளனைப் பிராமண நிலைக்கு உயர்த்துவதுதான் . சிறிதுசிறிதாக அதிகமான சலுகைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதை நீங்கள் காணலாம். சில நூல்கள் இருக்கின்றன , அவற்றில் சூத்திரன் வேதத்தைக் கேட்டால் அவனது காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள்: ஒரு வரிகூட நினைவில் வைத்திருந்தால் அவனது நாக்கை வெட்டுங்கள். பிராமணனைப் பார்த்து ‘ஏ! பிராமணா” என்று அவன் அழைத்தால் அவனுடைய நாக்கை வெட்டி விடுங்கள் என்பன போன்ற கொடூரமான கருத்துக்கள் இருக்கின்றன இவை மிருகத்தனமான பழங்காலக் காட்டுமிராண்டித்தனம். அதில் சந்தேகமே இல்லை இதை யாரும் சொல்ல வேண்டியதும் இல்லை. அதற்காக விதிமுறைகளை எழுதியவர்களைப் பழிக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் அப்போது சமுதாயத்தின் ஏதோ ஒரு பகுதியில் நடைமுறையில் இருந்ததை அப்படியே குறித்து.வைத்தார்கள் .அவ்வளவுதான். முன்னோர்களுள்ளும் சிலவேளைகளில் இத்தகைய பிசாசுகள் தோன்றவே செய்தன. அத்தகைய பிசாசுகள் பெரும்பாலும் எங்கும் எல்லா காலங்களிலும் இருந்தே வருகின்றன.

இந்தக் கொடுமைக்குரலின் வேகம் பிற்காலத்தில் சிறிது குறைந்திருப்பதைக் காணலாம்: உதாரணமாக சூத்திரர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். ஆனாலும் உயர்ந்த கருத்துக்களை அவர்களுக்குப் போதிக்காதீர்கள்” என்ற கருத்து வருகிறது. பின்னர் படிப்படியாக பிற்கால ஸ்மிருதிகளில், குறிப்பாக இன்றும் முழுமையாகப் பின்பற்றப்படும் ஸ்மிருதிகளில் , சூத்திரர்கள் பிராமணர்களின் நடைமுறைகளையும் , பழக்க வழக்கங்களையும் பின்பற்றினால், அது நல்லது. அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்- இது போன்ற கருத்துக்களைக் காண்கிறோம். அதன் போக்கு அப்படி ப்போகிறது.

இந்த விஷயங்களையோ அவற்றை எங்கெல்லாம் தேடிக் காணலாம் என்பதையோ விவரிப்பதற்கு எனக்கு நேரமில்லை. ஆனால் இன்றைய உண்மை நிலையைப் பார்க்கும்போது, எல்லா ஜாதிகளும் மெல்லமெல்லவே உயர வேண்டியிருப்பதை நாம் காணலாம். ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. அவற்றுள் சில பிராமணத் துவத்தினுள் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். தங்களைப் பிராமணர்கள் என்று ஒரு ஜாதியினர் அறிவித்துக் கொள்வதை யார் தடுக்க முடியும்?

இவ்வாறாக ஜாதி அதனுடைய எல்லா வேகத்தோடும் தோற்றுவிக்கப்பட்டது. இங்கே ஒவ்வொரு ஜாதியிலும் பத்தாயிரம் பேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இவர்கள் ஒன்றுசேர்ந்து, தங்களைப் பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வதாகத் தீர்மானித்தால் எதுவும் அவர்களைத் தடுக்க முடியாது. இதை என் வாழ்விலேயே கண்டிருக்கிறேன். சில ஜாதிகள் வலிமைபெற்றுவருகின்றன, அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டால், கூடாது என்று யார் சொல்ல முடியும்? ஏனென்றால் ஒவ்வொரு ஜாதியும் மற்ற ஜாதிகளிலிருந்து விலகியே இருக்கிறது.ஒன்று மற்றதன் செயல்களில் தலையிடுவது இல்லை. ஏன் ,ஒரே ஜாதியில் பல பிரிவுகள்கூட ஒன்று மற்றொன்றின் விஷயத்தில் தலையிடுவது இல்லை. மாபெரும் சாகப்தத்தையே உருவாக்கியவர்களான சங்கராச்சாரியரும் பிறரும்தான் ஜாதிகளையும் உருவாக்கியவர்கள். அவர்கள் கட்டிவிட்ட வினோதக் கதைகளை எல்லாம் உங்களுக்குச் சொல்ல முடியாது , சொன்னாலும் உங்களுள் சிலருக்குக் கோபம் வரலாம். எனது பயணங்ளின்மூலமும் அனுபவங்களின் வாயிலாகவும் அவைகளைக் கண்டுபிடித்து, ஆச்சரியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். சில வேளைகளில் அவர்கள் பலுசிஸ்தானத்தின் நாடோடிக் கும்பல்களைப் பிடித்து, க்ஷத்திரியர்கள் ஆக்குவார்கள். மீனவர்களைப் பிடித்து பிராமணர்கள் ஆக்குவார்கள் . அவர்கள் ரிஷிகள், மகான்கள். அவர்களின் நினைவிற்கு நாம் அஞ்சலி செய்ய வேண்டும். நீங்களும் ரிஷிகள் ஆகுங்கள், மகான்கள் ஆகுங்கள், அதுதான் ரகசியம். மொத்தத்தில் நாம் ரிஷகளாக வேண்டும்.

ரிஷி என்றால் என்ன? தூயவர். முதலில் தூயவர் ஆகுங்கள்,நீங்கள் ஆற்றலைப் பெறுவீர்கள். வெறுமனே ‘நான் ரிஷி ”என்று சொல்லிப் பயனில்லை நீங்கள் ரிஷி என்றால் மற்றவர்கள் தாமாகவே உங்களைப் பணிவார்கள். அமானுஷ்யமான ஏதோ ஒன்று உங்களிடமிருந்து வெளிப்படும் அது அவர்கள் உங்களைப் பின்பற்றும்படிச் செய்யும்; உங்கள் பேச்சைக் கேட்கும் படி செய்யுங்கள். தங்களை அறியாமலே தங்கள்விருப்பத்திற்கு மாறாகக்கூட உங்கள் திட்டங்களை நிறைவேற்றும்படிச் செய்யும் . அதுதான் ரிஷி நிலை.

இவற்றிக்கான விளக்கங்களைப் பொறுத்தவரை , அவை பல தலைமுறைகளாகச் செய்து முடிக்க வேண்டிய ஒன்று. நான் இப்போது கூறியவை, ஜாதிச் சண்டைகள் தீர வேண்டும் என்பதற்கான ஒரு ஆலோசனை மட்டுமே. குறிப்பாக இந்த நவீன காலத்தில் ஜாதிகளுக்கிடையே இவ்வளவு சச்சரவுகள் இருப்பது குறித்து நான் வருந்துகிறேன். இது நிறுத்தப் பட்டே தீர வேண்டும். இந்தச் சண்டை இரு தரப்பினருக்கும், குறிப்பாக உயர்ந்த ஜாதியினரான பிராமணர்களுக்குப் பயனற்றது. ஏனென்றால் இன்று தனிச் சலுகைகளும் தனி உரிமைகளும் பறிபோய்விட்டன. தங்கள் கல்லறையைத் தாங்களே தோண்டிக்கொள்வது தான் ஒவ்வோர் உயர்ந்த பிரிவினருடையவும் கடமை. எவ்வளவு சீக்கிரம் அதைச்செய்கிறார்களோ அந்த அளவிற்கு நல்லது . காலம் நீடிக்கநீடிக்க அவை கெட்டுக் குட்டிச்சுவராகி மிக மோசமான முடிவைப் பெறநேரும்.

எனவே பிராமணர்களின் முதல் கடமை இந்தியாவிலுள்ள மற்ற சமுதாயத்தினரின் நன்மைக்காகப் பாடு படுவதுதான் . அவன் அதைச் செய்வானானால் , அதைச் செய்யும் காலம் வரையில் , அவன் பிராமணன் . அதைச் செய்யாமல் பணம் சம்பாதிக்கத் திரிபவன் பிராமணன் அல்ல. நீங்களும் உண்மையில் தகுதியுடைய பிராமணனுக்கு மட்டுமே உதவ வேண்டும். அது உங்களைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். தகுதி இல்லாத ஒருவனுக்குக் கொடுக்கப்படும் தானம் சிலவேளைகளில் நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது என்று நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லௌகீகத்தொழில் செய்யாமல் இருப்பவன் மட்டுமே பிராமணன். லௌகீகத் தொழில் பிராமணர்களுக்கு அல்ல மற்ற ஜாதியினருக்குத்தான். பிராமணர்களை நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்ததைக் கற்பிப்பதன் மூலமும் நூற்றுக்கணக்கான வருடங்களாகப்பெற்றுச் சேமித்திருக்கும் பண்பாட்டை அளிப்பதன் மூலமும் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள். உண்மை பிராமணத்துவம் என்ன என்பதை நினைத்துப் பார்ப்பது இந்தியப் பிராமணர்களின் முக்கியக் கடமை. மனு சொல்வதைப் போல், எல்லா சலுகைகளும் பெருமைகளும் பிராமணனுக்குக் கொடுக்கப்பட்டது ஏனென்றால் அவனிடம் ‘தர்மம்” என்னும் கருவூலம் இருக்கிறது. அவன் அந்தக் கருவூலத்தைத் திறந்து, அதில் உள்ள மதிப்பு வாய்ந்த பொருட்களை உலகிற்கு வழங்க வேண்டும். அவன் இந்திய இனங்களுக்கு முதல் போதகன் என்பது உண்மைதான். தியாகம் என்ற கருத்தைப் பிறர் அடைவதற்கு முன்னரே , வாழ்க்கையின் மிகவுயர்ந்த நிலையை அடைவதற்காக எல்லாவற்றையும் முதலில் துறந்தவன் அவன் என்பதும் உண்மையே . பிற ஜாதியினரைவிட அவன் அதிக முன்னேற்றம் அடைந்தால் அது அவனுடைய தவறு அல்ல. உண்மையைப் புரிந்து கொண்டு மற்ற ஜாதியினரும் ஏன் அவனைப்போல் செல்லக் கூடாது? அவர்கள் சோம்பேறியாக இருந்து கொண்டு ,பந்தயத்தில் பிராமணர்களை ஏன் முன்னேற விட்டார்கள்?

ஆனால் முன்னேற்றம் அடைவது என்பது வேறு அதைத் தீய செயல்களுக்காகப் பாதுகாத்து வைப்பது என்பது வேறு . அதிகாரம் தீமைகளுக்காகப் பயன்படுத்தபடும்போது அது மிருகத்தனமாகி விடுகிறது, அது நல்லதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். காலங்காலமாகச் சேர்ந்து வைக்கப்பட்டுள்ளன பண்பாட்டிற்கு காவலனாக இருப்பவன் பிராமணன். அவன் இப்போது அதை எல்லா மக்களுக்கும் வாரி வழங்க வேண்டும் . அப்படி அவன் கொடுக்காததால் தான் முகமதியர்கள் நம்மை ஆக்கிரமிக்க முடிந்தது. ஆரம்பக் காலத்திலிருந்தே இந்தக் கருவூலத்தை மக்கள் அனைவருக்குமாக அவன் திறந்து விடவில்லை . அதனால் தான், இந்தியாவிற்கு வந்தவனின் காலிலெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் மிதிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

எனவே நமது பொது முன்னோர்கள் சேமித்து வைத்திருக்கின்ற அரும் பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள அறையை உடைத்துத் திறக்க வேண்டும் , அவற்றை வெளியே கொண்டு வரவேண்டும், அனைவருக்கும் வாரி வழங்க வேண்டும். பிராமணனே இதை முதலில் செய்ய வேண்டும். கடித்த பாம்பே விஷத்தை உறிஞ்சி விடுமானால் கடிபட்டவன் பிழைத்துக் கொள்வான் என்ற பழைய நம்பிக்கை வங்காளத்தில் நிலவுகிறது. அதுபோல் பிராமணன் செலுத்திய விஷத்தை பிராமணனே உறிஞ்ச வேண்டும்.

பிராமணர் அல்லாத நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் சில விஷயங்கள் உண்டு. கொஞ்சம் பொறுமையாக இருங்கள், அவசரப்படாதீர்கள் .பிராமணர்களோடு சண்டையிடுவதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் தவறுகளாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்பதை நான் முன்னரே எடுத்துக்காட்டி விட்டேன். ஆன்மீகத்தையும் சம்ஸ்கிருதம் கற்பதையும் அலட்சியம் செய்யும் படி உங்களிடம் யார் சொன்னார்கள்? இவ்வளவு காலமாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? எதற்கு இந்த பொறுப்பற்ற தன்மை ? இன்று மற்றவர்கள் உங்களைவிட அதிக அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ளவர்களாக இருப்பதைப் பார்த்து ஏன் எகிறிக் குதிக்கிறீர்கள் ? பத்திரிகைகளில் வாதங்களையும் சண்டைகளையும் வளர்ப்பதில் உங்கள் ஆற்றலை வீணாக்குவதற்குப் பதிலாக , உங்கள் வீடுகளிலேயே சண்டையும் சச்சரவும் செய்துகொண்டு இருப்பதற்குப் பதிலாக , இந்தப் பாவச் செயல்களுக்குப் பதிலாக, பிராமணர்கள் பெற்றிருக்கும் பண்பாட்டைப் பெற உங்கள்எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள், அப்போது உங்கள் காரியம் கைகூடிவிடும் ஏன் நீங்கள் சம்கிருத பண்டிதர்கள் ஆகக் கூடாது? இந்தியாவில் உள்ள எல்லா ஜாதியினரும் சம்ஸ்கிருதம் படிப்பதற்காகச் சில லட்சங்களை நீங்கள் ஏன் செலவழிக்கக் கூடாது? இதுதான் கேள்வி. இவற்றை யெல்லாம் செய்கின்ற அந்தக் கணமே நீங்கள் பிராமணர்களுக்குச் சமமாகி விடுவீர்கள். இந்தியாவில் ஆற்றலின் ரகசியம் இதுவே. இந்தியாவில் சம்ஸ்கிருதமும் மதிப்பும் கைகோர்த்துச் செல்கின்றன. அது இருந்தால் போதும், உங்களுக்கு எதிராக எதையும் சொல்கின்ற தைரியம் யாருக்கும் வராது. அதுதான் பெரிய ரகசியம். எனவே அதைக் கற்கத் தொடங்குங்கள்.

அத்வைதியின் ஒரு பழைய உவமையின் மூலம் சொல்வது என்றால், தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு மயக்க நிலையிலேயே இந்த உலகம் முழுவதும் உழல்கிறது. சங்கல்பம்தான் பலம். வலுவான சங்கல்பம் படைத்தவன் தன்னைச் சுற்றிலும் ஓர் ஒளியை வெளிப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும் . தன் மனம் எந்த நிலையில் இருக்கிறதோ, அந்த நிலைக்கு அவன் பிறரையும் கொண்டு வருகிறான். அத்தகைய மாபெரும் மனிதர்கள் தோன்றவே செய்கிறார்கள். இதன் பொருள் என்ன? ஆற்றல் மிக்க ஒருவர் தோன்றும்போது, அவரது ஆளுமை அவரது எண்ணங்களை நம்முள் செலுத்துகிறது, நமக்கும் அதே எண்ணங்களை நம்முள் செலுத்துகிறது, நமக்கும் அதே எண்ணங்கள் எழுகின்றன, இவ்வாறு நாமும் ஆற்றல்மிக்கவர்கள் ஆகிறோம். இயக்கங்கள் இவ்வளவு ஆற்றல்மிக்கவையாக இருப்பது ஏன்? இயக்கம் ஜடப்பொருள் என்று சொல்ல வேண்டாம், அவை அப்படிஇல்லை. பிரபலமான ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நான்கு கோடி ஆங்கிலேயர்கள் இங்கே முப்பது கோடி மக்களை ஆட்சி செய்கிறார்கள். அது ஏன்? இதற்கான மன இயல் விளக்கம் என்ன? அந்த நான்கு கோடி பேரும் தங்கள் சங்கல்பத்தை ஒன்றாகக் குவிக்கிறார்கள். அதனால் எல்லையற்ற சக்தி உண்டாகிறது. ஆனால் முப்பது கோடி மக்களான உங்கள் சங்கல்பங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றன. எனவே மகத்தானதோர் எதிர்கால இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், அதற்கான ரகசியம் முழுவதும் இயக்கங்களை உருவாக்குவதிலும் ஆற்றலைச் சேர்ப்பதிலும், சங்கல்பங்களை இணைப்பதிலும்தான் இருக்கிறது.

அதர்வ வேத சம்ஹிதையில் உள்ளதோர் அற்புத மானபாடல் என் நினைவில் வருகிறது – ‘‘நீங்கள் எல்லோரும் ஒரே மனத்தவராக இருங்கள். நீங்கள் எல்லோரும் ஒரே எண்ணம் உடையவர்களாக இருங்கள். ஒரே மனத்துடனிருந்த காரணத்தால்தான் தேவர்கள் ஆஹுதிகளைப் பெற முடிந்தது. ஒரே மனத்தவராக இருப்பதால்தான் மனிதர்களால் அவர்களை வழிபட முடிந்தது . ஒரே மனத்தவராக இருப்பது சமுதாயத்தின் ரகசியம்.‘‘ திராவிடன் ” ஆரியன் ” முதலான அற்ப விஷயங்கள் பற்றியும் பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்றெல்லாமும் நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்குந் தோறும் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கான ஆற்றலையும் சக்தியையும் சேமிப்பதிலிருந்து மேலும் மேலும் விலகிப் போகிறீர்கள். நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் -எதிர்கால இந்தியா முற்றிலும் அதையே சார்ந்திருக்கிறது. சங்கல்ப ஆற்றலைச் சேமித்தல், அவற்றை ஒருங்கிணைத்தல் அவை அனைத்தையும் ஒரே மையத்தில் திரட்டுதல்- இதுதான் ரகசியம்.

ஒன்வொரு சீனனும் தான் விரும்புகின்ற வழியில் சிந்திக்கிறான் . ஆனால் எண்ணிக்கையில் குறைந்த ஜப்பானியரோ அனைவரும் ஒரே வழியில் சிந்திக்கின்றனர். விளைவு உங்களுக்கே தெரியும். உலக வரலாறு முழுவதும் இவ்வாறே நடந்துள்ளது . கட்டுக்கோப்பான சிறிய நாடுகளே கட்டுப்பாடற்ற, பெரிய நாடுகளை எப்போதும் ஆள்கின்றன. இது இயல்பானதுதான். ஏனெனில் சிறிய கட்டுக்கோப்பான நாடுகளுக்குத் தங்கள் கருத்துக்களை ஒரே மையத்தில் குவிப்பது எளிதாக உள்ளது அதன்மூலம் அவை வளர்ந்து விடுகின்றன. ஒரு நாடு எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் கட்டுப்பாடற்றதாக இருக்கிறது. கட்டுப்பாடற்றவர்கள்போல் பிறந்த அந்த மக்களால் ஒன்றாகச் சேரவும்முடிவதில்லை. இந்தக் கருத்துவேற்றுமைகள் எல்லாம் விலகியே தீர வேண்டும்..

மற்றொரு குறைபாடும் நம்மிடம் உள்ளது பெண்கள் என்னை மன்னிக்க வேண்டும் – பல நூற்றாண்டுகளின் அடிமை வாழ்வின் காரணமாக நாமெல்லாம் பெண்களைப் போலவே ஆகிவிட்டோம்..இந்த நாட்டிலும் சரி, வேறு எந்த நாட்டிலும் சரி மூன்று பெண்கள் ஐந்து நிமிடங்களுக்கு மேல் சேர்ந்திருக்க முடியாது, அதற்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் பெரிய சங்கங்களை உருவாக்குவார்கள், பெண்சக்தி முதலியவை பற்றியெல்லாம் பெரிய அறிக்கைகளை வெளியிடுவார்கள், அவ்வளவுதான், அதற்குள் சண்டை வந்துவிடும் . பின்னர் ஆண்கள் வந்து அவர்களை அடக்கியாள நேரும். இன்னும் உலகம் முழுவதிலும் அவர்களை ஆள்வதற்கு ஆண்கள் தேவைப்படுகிறார்கள். நாம் அவர்களைப் போலவே இருக்கிறோம். நாம் பெண்களே. பெண்களை நடத்திச் செல்ல ஒரு பெண் முன்வந்தாலோ, எல்லோருமாகச் சேர்ந்து விமர்சித்து, கிழி கிழியென்று கிழித்து அவளை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் ஆண் ஒருவன் வரட்டும் , அவன் அவர்களை அவ்வப்போது திட்டியதும் சற்று கடினமாக நடத்தியதும் எல்லாம் . அவர்கள் அத்தகைய மயக்க நிலைக்குப் பழகிவிட்டார்கள். இந்த உலகம் முழுவதும் அத்தகைய மயக்க நிலைக்கு உட்பட்டவர்களே இருக்கிறார்கள். நம் நாட்டிலும் நம்மவருள் ஒருவர் எழுந்து மகத்தானவராக மாற முயற்சிப்பாரானால், உடனே நாம் எல்லோரும் சேர்ந்து அவரை அமுக்க முயற்சிப்போம், ஓர் அன்னியன் வந்து நம்மை எட்டி உதைத்தால் கூட அது பரவாயில்லை. நாம் இப்படியே பழக்கப்பட்டு விட்டோம் இல்லையா! அடிமைகள் சிறந்த எஜமானர்கள் ஆகு வேண்டும். எனவே அடிமையாக இருப்பதை விட்டுவிடுங்கள்.

இனிவரும் ஐம்பது ஆண்டுகளுக்கு நமது ஆதார சுருதி இதுவே- ஈடிணையற்ற நமது இந்தியத் தாய். அதுவரை மற்ற எல்லா வீண் தெய்வங்களும் நம் மனத்திலிருந்து மறைந்து விடட்டும். நமது சொந்த இனம்- இது ஒன்று மட்டுமே விழிப்புற்ற தெய்வம் ‘ எங்கும் அவரது கைகள், , எங்கும் அவரது கால்கள், எங்கும் அவரது செவிகள் , அவரே அனைத்திலும் வியாபித்திருக்கிறார். மற்ற எல்லா தெய்வங்களும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் .. நம்மைச் சுற்றிலும் காண்கின்ற விராட் தெய்வத்தை வழிபடாமல் வேறு வீண் தெய்வங்களை நாம் தேடிச் செல்ல வேண்டுமா? இந்த தெய்வத்தை முதலில் வணங்கினால், பிற எல்லா தெய்வங்களையும் வணங்கும் திறன் பெறுவோம். அரை மைல் ஊர்ந்து செல்லவே முடியவில்லை , அதற்குள் அனுமனைப்போல் கடலைத் தாண்ட விரும்புகிறோம். அதுமுடிகிற காரியமில்லை. எல்லோரும் யோகியாக முடியுமா? எல்லோரும் தியானம் செய்ய முடியுமா? அது நடக்காது. நாள் முழுவதும் உலக வாழ்க்கையில் கர்ம காண்டத்துடன் அல்லாடுகிறோம் . மாலையில் உட்கார்ந்து மூக்கின் வழியாகக் காற்றை இழுத்து விட்டால் எல்லாம் ஆயிற்றா? இல்லை , நீங்கள் மூன்று முறை மூக்கைப் பிடித்துக்கொண்டு காற்றை இழுத்தவுடன் ரிஷிகள் எல்லோரும் காற்றில் பறந்து உங்களிடம் வர வேண்டுமா? என்ன வேடிக்கை இது! சுத்த முட்டாள்தனம்.

தேவை சித்த சுத்தி , இதயத் தூய்மை. அது எவ்வாறும் வரும்? முதலில் விராட்டை அதாவது உங்களைச் சுற்றி இருப்பவர்களை வழிபடுங்கள். வழிபடுங்கள், வழிபாடு – அதுதான் அந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்குச் சரியான பொருள். வேறு எந்த வார்த்தையும் பொருந்தாது. மனிதர்கள், மிருகங்கள் எல்லாமே நம் தெய்வங்கள். நாம் வணங்க வேண்டிய முதல் கடவுள் நம்நாட்டு மக்கள் .ஒருவரோடு ஒருவர் பொறாமை கொண்டு சண்டையிடுவதற்குப் பதிலாக, இவர்களை நாம் வழிபட்டாக வேண்டும் . கொடிய தீவினைப் பயனால்தான் நாம் துன்பப்படுகிறோம்: என்றாலும் நம் கண்கள் திறக்கவில்லையே!

நல்லது, நாம் இன்று எடுத்துக் கொண்டிருக்கும் விஷயமோ மிகப் பெரியது. எங்கே நிறுத்துவது என்றே எனக்குத் தெரியவில்லை. எனவே சென்னையில் நான் செய்ய விரும்புகின்ற சில திட்டங்களை உங்களிடம் கூறிவிட்டு , என் பேச்சை நிறைவு செய்கிறேன். நமக்கு நாட்டின் ஆன்மீகக் கல்வி மீதும் லௌகீகக் கல்வி மீதும் நல்ல பிடிப்பு இருக்க வேண்டும் . நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் அதைக் கனவு காண வேண்டும். அதைப்பற்றிப் பேச வேண்டும் , அதைச் சிந்திக்க வேண்டும் , அதைச்செய்து முடிக்கவும் வேண்டும். அதுவரை நம் இனத்திற்குக் கடைத்தேறும் வழியே இல்லை.

தற்போதைய கல்வியில் சில நன்மைகள் உள்ளன. ஆனால் மிக அதிகமான தீமைகள் இருக்கின்றன. மிக அதிகமான அந்தத் தீமைகள் கொஞ்சமான நன்மையைக் கீழே அமுக்குகின்றன. முதலாவதாக ,அது மனிதனை உருவாக்குகின்ற கல்வி அல்ல. அது முழுக்க முழுக்க வெறும் எதிர்மறையான கல்வி, எதிர்மறைக்கல்வியும் சரி, அல்லது எதிர் மறை உணர்ச்சியை உண்டுபண்ணும் எந்தப் பயிற்ச்சியும் சரி அது சாவை விடக் கொடியது. குழந்தையை ப்பள்ளிக்கு அனுப்பு கிறோம். அங்கே அவன் முதலில் படிப்பது, தன் தந்தை ஒரு முட்டாள், இரண்டாவது தன் பாட்டன் பைத்தியக்காரன் ; மூன்றாவாதாக , தன் ஆசிரியர்கள் அனைவரும் பாசாங்குகாரர்கள் , நான்காவதாக, எல்லா சாஸ்திரங்களும் பொய் . இப்படித்தான் அவனதுபடிப்பு உள்ளது. அவனுக்குப் பதினாறு வயதாகும்போது அவன் உயிரற்ற, உணர்வற்ற, எதிர்மறை உணர்ச்சிகளின் ஒரு பிண்டம் போலாகிறான். விளைவு ? ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் இத்தகைய கல்வி, இந்தியாவின் மூன்று முக்கிய மகாணங்களிலும் சுயசிந்தனையுள்ள ஒருவனைக்கூட தோற்றுவிக்கவில்லை . அத்தகைய தனித்தன்மை வாழ்ந்தாக இங்கு இருக்கின்ற ஒவ்வொருவனும் வேறு எங்கோ கல்வி பெற்றவனாக இருக்கிறான், இந்த நாட்டில் படித்தவனாக இல்லை , அல்லது நம் நாட்டில் இன்னும் ஏதோ சில இடங்களில் இருக்கின்ற பழைய பல்கலைக்கழகங்களில் மேலும் ஒருமுறை கற்று, மூட நம்பிக்கைகளிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டவனாக இருக்கிறான்.

வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்க முடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி. வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, மனிதனை உருவாக்குகின்ற ,குணத்தை மேம்படுத்துகின்ற , கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது . நீங்கள் ஐந்தே ஐந்து

கருத்துக்களை நன்கு கிரகித்து ,அவை உங்கள் வாழ்க்கையாக, நடத்தையாகப் பரிணமித்து நிற்கச் செய்ய முடியுமானால், ஒரு புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனை விட நீங்கள் அதிகமான கல்வி பெற்றவர்.‘ யதா கரச்சந்தன பாரவாஹீ பாரஸ்ய வேத்தாநது சந்தனஸ்ய – கட்டுக்கட்டாகச் சந்தனக் கட்டைகளைச் சுமந்து செல்லும் கழுதை அதன் பாரத்தை மட்டுமே உணர்கிறது, மதிப்பை அறிவதில்லை. செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள் ! கலைக் களஞ்சியங்கள் அல்லவா ரிஷிகள் ! எனவே நம் நாட்டின் ஆன்மீகம் மற்றும் லௌகீகக் கல்வி எல்லாமே நம் சொந்தக் கைகளில் இருக்க வேண்டும் . முடிந்தவரை அது தேசிய வழியிலும் தேசிய அமைப்புகளின் மூலமும் தரப்பட்ட வேண்டும்.

இது மிகப்பெரிய விஷயம், மிகப் பெரிய திட்டம் தான். இதை என்றைக்காவது செயல்படுத்த முடியுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வேலையை நாம் கட்டாயம் தொடங்கியாக வேண்டும் . ஆனால் எப்படி? உதாரணத்திற்குச் சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு அவசியம் ஒரு கோயில் வேண்டும். ஏனெனில் இந்துக்களைப் பொறுத்தவரை முதலில் வேண்டியது மதம், அப்படி என்றால் பிற நெறியினர் அதுபற்றிச் சண்டையிடுவார்களே என்று நீங்கள்சொல்லாம். ஆனால் நாம் அதை எந்த நெறியும் சாராத கோயிலாகக் கட்டுவோம். எல்லா பிரிவினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய‘ ஓம்” மட்டுமே அங்கே சின்னமாக இருக்கும் . எந்தப் பிரிவாவது ‘ஓம்” என்பதைச் சின்னமாக வைப்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கருதுமானால் , தன்னை இந்து என்று அழைத்துக் கொள்ளும் உரிமை அதற்குக் கிடையாது. தங்கள் நெறியின் கருத்துக்களுக்கு ஏற்ப இந்து மதத்தை விளக்க எல்லோருக்கும் உரிமைஉண்டு. ஆனால் கட்டாயமாக நமக்கு பொதுக் கோயில் வேண்டும். நீங்கள் விரும்புகின்ற விக்கிரகங்கள் மற்றும் சின்னங்கள் எல்லாவற்றையும் மற்ற இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் கொள்கையிலிருந்து மாறுபடுபவர்களுடன் அதைச் குறித்து இங்கே சண்டையிடக்கூடாது . இங்கே நமது பல்வேறு நெறிகளுக்கும் பொதுவான அடிப்படைகள் போதிக்கப்பட வேண்டும். அதே வேளையில் வெவ்வேறான நெறியினர் எல்லோருமே இங்கே வந்து தங்கள் கோட்பாடுகளைப் போதிப்பதற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும். இருக்க வேண்டிய ஒரே கட்டுப்பாடு, எந்தப் பிரிவும் மற்றொன்றுடன் சண்டையிடக் கூடாது என்பது மட்டுமே. நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள் உலகத்திற்கு அது தேவை. ஆனால் நீங்கள் பிறரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கேட்க உலகத்திற்கு நேரமில்லை, அதை நீங்களே வைத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக, அந்தக் கோயிலோடு தொடர்புடைய ஒரு பயிற்சி நிலையம் இருக்க வேண்டும். நம் மக்களுக்கு மத போதனை செய்யவும் பொதுக் கல்வியை அளிக்கவும் ஆசிரியர்களுக்கு அதில் பயிற்சி அளிக்க வேண்டும் . அவர்கள் இரண்டையுமே கற்பிக்க வேண்டும். நாம் ஏற்கனவே வீடுகள் தோறும் சென்று மதக் கல்வி அளித்தே வருகிறோம். அதனுடன் பொதுக் கல்வியையும் எடுத்துச் செல்வோம். இதை எளிதாகச் செய்ய முடியும் . பிறகு இந்த ஆசிரியர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் மூலம் இந்த வேலை விரிவடையும். இத்தகைய கோயில்களை மற்ற இடங்களிலும் நிறுவ வேண்டும் . படிப்படியாக இந்தியா முழுவதும் இது போன்ற கோயில்கள் உருவாக வேண்டும். இதுதான் என் திட்டம். இது மாபெரும் ஒன்றாகத் தோன்றலாம் . ஆனால் இது மிகவும் தேவையான ஒன்று. இதற்கான பணம் எங்கே என்று நீங்கள் கேட்கலாம், பணம் தேவையில்லை பணம் என்பது ஒன்றுமே இல்லை . கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தேவையான பணமும் மற்ற எல்லாமே என்னிடம் வந்து கொண்டுதான் இருக்கிறது . ஏனென்றால் அவை என் அடிமைகள், நான் அவைகளின் அடிமை அல்ல. பணமும் பிறவும் கட்டாயம் வரும், கட்டாயம் -இதுதான் வார்த்தை. ஆனால் மனிதர்கள் எங்கே? இதுவே கேள்வி.

சென்னை இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம்தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்குச் செவிசாய்ப்பீர்களா? என்னை நம்புவதற்கான துணிவு உங்களிடம் இருக்குமானால் உங்கள் ஒவ்வொரு வருக்கும் பொன்னான எதிர்காலம் இருக்கும். குழந்தையாக இருந்தபோது நான் கொண்டிருந்த நம்பிக்கை, இப்போது நான் செயல்படுத்திக் கொண்டிருக்கின்ற நம்பிக்கை -அதுபோன்ற அசைக்க முடியாதநம்பிக்கையை உங்களிடம் நீங்கள் கொள்ளுங்கள். அத்தகைய மகத்தான நம்பிக்கையை, ஒவ்வோர் ஆன்மாவிலும் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்ற நம்பிக்கையை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டீர்களானால். இந்தியா முழுவதையும் நீங்கள் புதுப்பித்து விடலாம். ஆகா! அதன்பிறகு சூரியனின் கீழ் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் நாம் போவோம் . உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் உருவாக்குகின்ற பல சக்திகளுள் ஒன்றாக நமது கருத்துக்களும் விளங்கும். இந்தியாவிலும் வெளியிலும் இருக்கின்ற ஒவ்வோர் இனத்தின் வாழ்க்கையிலும் நாம் புகு வேண்டும் . இதற்காக இப்போது நாம் பாடுபட்டாக வேண்டும்.

அதற்காக எனக்கு இளைஞர்கள் தேவை‘ இளமையும் வலிமையும் ஆரோக்கியமும் கூர்மையான அறிவும் உள்ளவர்களே இறைவனை அடைய முடியும் என்று வேதங்கள் கூறுகின்றன. எதிர்காலத்தைப்பற்றி முடிவுசெய்ய ஏற்ற தருணம், உங்களிடம் இளமைத் துடிப்பு ததும்புகின்ற இந்த நேரம்தான் , களைத்து ஓய்ந்து போகும் போது அல்ல. இளமையின் வேகமும் உற்சாகமும் இருக்கும் இந்த நேரம்தான் உங்கள் எதிர் காலத்தைத் தீர்மானிப்பதற்கு உரிய நேரமாகும். வேலை செய்யுங்கள் , அதற்கான நேரம் இதுதான் புத்தம் புதிய, தொடப்படாத, முகரப்படாத மலர்கள் மட்டுமே இறைவனின் திருவடிகளில் சமர்பிக்கப்படும் ,. அத்தகைய மலர்களையே அவர் ஏற்றுக்கொள்கிறார். எனவே கிளர்ந்தெழுங்கள். வாழ்க்கை குறுகியது. வழக்கறிஞர்களாகி, சண்டைசச்சரவுகளில் ஈடுபடுவது போன்ற வேலைகள் விட, நாடுவதற்கான மகத்தான வேலைகள் பல உள்ளன. உங்கள் இனத்தின் நன்மைக்காக , மனித சமுதாயத்தின் நன்மைக்காக நீங்கள் உங்களைத் தியாகம் செய்து கொள்வது அவற்றைவிட எவ்வளவோ உயர்ந்த வேலை!

இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது ? நீங்கள் இந்துக்கள். வாழ்க்கை நிலையானது என்பதில் இயல்பானதொரு நம்பிக்கை உங்களிடம் இருக்கும் . .சில நேரங்களில் இளைஞர்கள் சிலர் என்னிடம் வந்து நாத்திகம் பேசுகிறார்கள், ஓர் இந்து, நாத்திகன் ஆவான் என்பதை நான் நம்பவில்லை. அவன் ஐரோப்பிய புத்தகங்களைப் படிக்கலாம், தன்னை ஓர் உலகாயதனாகக் கருதவும் செய்யலாம் . ஆனால் அவையெல்லாம் குறுகிய காலத்திற்குத்தான். நாத்திகம் உங்கள் ரத்தத்தில் இல்லை. உங்கள் அமைப்பில், உங்களுள் இல்லாத ஒன்றை உங்களால் நம்ப முடியாது. அப்படி நீங்கள் நம்ப முயல்வது ஒரு பயனற்ற வேலை . அத்தகைய காரியங்களைச் செய்ய முயலாதீர்கள். நான் இளைஞனாக இருந்தபோது ஒரு முறை நானும் இந்த முயற்சியில் இறங்கினேன். ஆனால் முடியவில்லை, வாழ்க்கை குறுகியது: ஆன்மா அழியாதது, என்றும் இருப்பது . ஒன்று மட்டும் நிச்சயம் -அது மரணம். எனவே உயர்ந்ததோர் லட்சியத்தைக் கைக்கொள்வோம். அதற்காக நம் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிப்போம். இது நமது தீர்மானமாக இருக்கட்டும். ‘ தன் மக்களின் மோட்சத்திற்காக மீண்டும் மீண்டும் வருகின்ற இறைவன்-” இவை நமது சாஸ்திரங்களின் வார்த்தைகள்! – மகத்தான அந்த ஸ்ரீகிருஷ்ணர் நம்மை ஆசீர்வதிப்பாராக, நம் லட்சியங்கள் நிறைவேறும் பாதையில் அழைத்துச் செல்வாராக!

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 5 கொழும்புமுதல்அல்மோராவரைசென்னைசொற்பொழிவு -7