உன் வாழ்க்கை உன் கையில்!-23

23. குறிக்கோளில் உறுதியாக இருத்தல்

இதுதான் முதற்படி, மாபெரும் படி; அதாவது லட்சியத்தில் தீவிர நாட்டம். இது ஏற்பட்டுவிட்டால் மற்றவை எளிதில் வந்து விடும். இந்த உண்மையை இந்திய மனமே கண்டு பிடித்தது. உண்மையை அறிவதற்காக எவ்வளவு தூரம் செல்லவும் இந்தியர்கள் தயங்குவதில்லை . ஆனால் இங்கு மேலை நாடுகளில், எல்லாம் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. உங்கள் பெரிய லட்சியம் உண்மையை அறிவ தல்ல, முன்னேற்றம் காண்பதே. போராட்டம்தான் ஒருவன் பெறும் பெரிய படிப்பினை. இந்த வாழ்க்கையில் நாம் பெறும் பெரிய நன்மை இந்தப் போராட்டப் பயிற்சியே. போராட்டத்தின் வழியாகவே நாம் செல்ல வேண்டும். சொர்க்கத்திற்கு ஒரு பாதை இருக்குமானால் அது நரகத்தின் வழியாகவே இருக்கும். நரகத்தின் வழி யாகச் சொர்க்கத்திற்குச் செல்வதுதான் என்றும் உள்ள வழி. ஒருமுறையல்ல, இருமுறை அல்ல, பல்லாயிரம் முறை சூழ்நிலையுடன் போராடி, இறந்து, அப்போதும் தைரியத்தை இழக்காமல் ஆன்மா போராடுமானால் அது பேராற்றல் உள்ளதாக மாறிவிடுகிறது. அப்போது அது தனது லட்சியத்தை விடத் தான் எவ்வளவோ மடங்கு உயர்ந்துவிட்டதைக் காண்கிறது. எனவே அந்த லட்சியத்தைக் கண்டு சிரிக்கிறது. ஆன்மாவாகிய நானே லட்சியம், வேறு எதுவும் இல்லை . என் ஆன்மாவுடன் ஒப்பிட வேறு என்ன இருக்கிறது? ஒரு பை பொன்னும் மணி யும் எனது ஆன்மாவின் லட்சியமாக முடியுமா? முடியவே முடியாது. நான் கொள்ளக்கூடிய லட்சியங்களுள் மிக உயர்ந்தது எனது ஆன்மாதான். எனது உண்மை இயல்பை உணர்வதுதான் என் வாழ்க்கையின் ஒரே லட்சியம்.

முற்றிலும் தீமையான எதுவும் இல்லை. கடவுளோடு சாத்தானுக்கும் இங்கே இடம் இருக்கிறது, சாத்தான் இல்லை என்றால் கடவுளும் இங்கே இருக்க மாட்டார். நான் முன்பு கூறியது போல் நரகத்தின் வழியாகவே சொர்க்கத் திற்குச் செல்ல வேண்டும். நமது தவறுகளுக்கும் இங்கே இடம் உண்டு. முன்னேறிக்கொண்டே இருங்கள். செய்யக் கூடாத ஒன்றை நீங்கள் செய்து விட்டதாக நினைத்தாலும் திரும்பிப் பார்க்க வேண்டாம். இன்றைய உங்களை உருவாக்குவதில் அந்தத் தவறுகளுக்கு இட மில்லை என்றா நினைக்கிறீர்கள்? எனவே உங்கள் தவறுகளை வாழ்த்துங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள். துன்பம் பெரும் பேறு! இன்பமும் பெரும் பேறு! உங்கள் நிலைமை என்னவானாலும் பொருட் படுத்தாதீர்கள். லட்சியத்தை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். முன்னேறிச் செல் லுங்கள். சிறுசிறு தவறுகளையும் குறை களையும் திரும்பிப் பார்த்துக் குமைந்து கொண்டிருக்காதீர்கள். நமது போர்க்கள மாகிய பிரபஞ்சத்தில் தவறுகள் என்ற புழுதி கிளம்பியே தீரும். இந்தப் புழுதியைச் சகித்துக் கொள்வதற்கான உறுதியற்றவர்கள் போரிலிருந்து விலகிக் கொள்ளட்டும்.

லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறு களைச் செய்வானானால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்பது நிச்சயம். எனவே ஒரு லட்சியம் இருப்பது சிறந்தது. இந்த லட்சியம் நமது இதயத்தில் புகும் வரை, நமது மூளையில் புகும்வரை, நமது நாடி நரம்புகளில் புகும்வரை, நமது ரத்தத்தின் ஒவ்வொரு துளியுடனும் கலந்து துடிக்கும் வரை, நமது உடலின் அணுக்கள் தோறும் கலந்து ஊடுருவும் வரை நாம் அதைப் பற்றிக் கேட்க வேண்டும். அதையே சிந்திக்க வேண்டும். ‘உள்ளம் நிறையும் போது வாய் பேசுகிறது’. அது மட்டுமல்ல; உள்ளத்தின் நிறைவுதான் கைகளை வேலை செய்யத் தூண்டுகிறது.

எண்ணமே நம்மிலுள்ள தூண்டும் சக்தி. மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள். நாட்கணக்காக அதைக் கேளுங்கள். மாதக்கணக்காகச் சிந்தியுங்கள். தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள். தோல்விகள் இயற்கையானவை. வாழ்க் கைக்கு அழகு சேர்ப்பவை அவை. தோல்விகள் இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? போராட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. அப்படிப் பட்ட வாழ்க்கையில் என்ன இனிமை இருக்கிறது! போராட்டங்களையும் தவறு களையும் பொருட்படுத்தாதீர்கள். ஒரு பசு பொய் சொல்வதை நான் கேட்டதில்லை, ஆனால் அது வெறும் பசுதான்; மனிதன் அல்ல! ஆகவே தோல்விகளை, சறுக்கல் களைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். ஆயிரம் தடவை லட்சியத்திலிருந்து வழுவ நேர்ந்தாலும் திரும்பத்திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் தடவை தவறினாலும் இன்னொரு முறை முயலுங்கள்.

எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பதுதான் மனிதனின் லட்சியம். எல்லாவற்றிலும் பார்க்க முடியா விட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப் படியே இந்தக் கருத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆன்மாவின் முன்னால் எல்லையற்ற வாழ்க்கை உள்ளது. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் லட்சியத்தை அடைவது உறுதி.

ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள் ளுங்கள். அதையே உங்கள் வாழ்க்கை யாகக் கொள்ளுங்கள். அதையே நினை யுங்கள், அதையே கனவு காணுங்கள், அந்த லட்சியத்திற்காகவே வாழுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் என்று உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியும் அந்த லட்சி யத்தால் நிறையட்டும். பிற கருத்துக்கள் அனைத்தையும் அடியோடு விட்டு விடுங்கள். வெற்றிக்கு வழி இதுவே. ஆன்மீகச் செம்மல்கள் உருவாக்கப்பட்ட வழி இதுவே. மற்றுள்ளவர்கள் வெறும் பேச்சு எந்திரங்கள் மட்டுமே.

அனுபவ வாழ்க்கை, லட்சியத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாம் தத்துவம் பேசினாலும், தினசரி வாழ்க்கை யின் கடினமான கடமைகளைச் செய்து கொண்டிருந்தாலும் நமது வாழ்க்கை முழு வதையும் ஊடுருவி நிற்பது லட்சியமே. லட்சியத்தின் ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டு, ஒவ்வொரு சிறு துளைமூலமும் காற்றுத் துவாரம் மூலமும் நேராகவோ, வளைந்தோ, அலை போலவோ பாய்ந்து கொண்டிருக் கின்றன. தெரிந்தோ தெரியாமலோ, நாம் ஒவ்வொரு செயலையும் அந்த ஒளியில் தான் செய்தாக வேண்டும். ஒவ்வொரு பொருளும் அதனால்தான் அழகாகவோ விகாரமாகவோ மாறுகிறது. நாம் எவ்வாறு இருக்கிறோமோ, இனி எவ்வாறு ஆகப்போகிறோமோ அதை அந்த லட்சியம்தான் நிர்ணயிக்கிறது. லட்சியத் தின் ஆற்றல் நம்மை ஒரு போர்வைபோல் மூடிக் கொண்டிருக்கிறது. நம் இன்பங் களிலும் துன்பங்களிலும், நாம் செய்யும் உயர்ந்த செயல்களிலும் தாழ்ந்த செயல் களிலும், நமது புண்ணியச் செயல்களிலும் பாவச் செயல்களிலும் நாம் அதன் ஆற்றலை அனுபவித்து வருகிறோம்.