12. மனிதனின் நல்லொழுக்கத்தை ஒட்டியே சமுதாய அமைப்பு உள்ளது. இதனை விளக்க ஒரு உதாரணம்
ஜப்பானியர்களின் தன்னம்பிக்கையும் நாட்டுப் பற்றும். தங்கள் நாட்டிற்காக எதையும் தியாகம் செய்யத் தயாராகவுள்ள, அடிவரை நேர்மையான மனிதர்கள் வருவார்களானால் ஒவ்வொன்றிலும் இந்தியா சிறந்தோங்கும். மனிதர்களே நாட்டை உருவாக்குகிறார்கள். நாட்டில் என்ன உள்ளது! ஜப்பானியரின் சமூக ஒழுக்கத்தையும், அரசியல் ஒழுக்கத்தையும் கைக்கொண்டால் நீங்களும் அவர் களைப்போல் மேன்மை பெறலாம். நாட்டிற்காக எதையும் தியாகம் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். அதனால் அவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். நீங்கள் அப்படி இல்லை, உங்களால் அப்படி இருக்கவும் முடியாது. நீங்கள் உங்கள் குடும்பங்களுக்காகவும் சொந்த உடைமைகளுக்காகவுமே எல்லாவற்றையும் தியாகம் செய்கிறீர்கள்.
இங்குள்ளது போல் ஜீரணிக்கப்படாத அறிவு அங்கு இல்லை. அவர்கள் ஐரோப்பியர்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் ஐரோப்பியர்கள் ஆகிவிடவில்லை, ஜப்பானி யர்களாகவே இருக்கிறார்கள். இங்கோ மேலை நாட்டு மோகம் கொள்ளைநோய் போல் எங்கும் பரவியிருக்கிறது.
ஜப்பானியர்களைப் போல் நாட்டுப் பற்றும் கலைப்பண்பும் உள்ள மக்களை உலகம் கண்டதில்லை. அவர்களிடம் தனிப்பட்ட ஓர் அம்சத்தையும் குறிப் பிடலாம். ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் கலையுடன் அழுக்கும் இணைந்தே செல்கிறது. ஜப்பானியரிடம் அழகுக் கலையும் முழுத் தூய்மையும் இணைந்திருப்பதைக் காணலாம். நமது இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது ஜப்பானைச் சென்று பார்க்க வேண்டும் என்பது என் ஆவல்.