16. கீதை 3

கீதை 3

அர்ஜுனன் கிருஷ்ணரிடம், ‘இப்போதுதான் நீ செயல்புரியும் படிக் கூறினாய். அதேவேளையில், பிரம்மஞானமே வாழ்வின் மிக உயர்ந்த குறிக்கோள் என்றும் கூறுகிறாய். கண்ணா , செயலைவிட ஞானம் சிறந்தது என்பது உன் கருத்தானால், என்னை ஏன் செயலில் ஏவுகிறாய்?’ (3 . 1) என்று கேட்டான்.

கிருஷ்ணர் கூறினார்: ‘மிகப் பழைய காலத்திலிருந்து இந்த இரண்டு நெறிகளும் நமக்கு வந்திருக்கின்றன. சாங்கியர்கள் ஞானக் கொள்கையை உயர்த்திப் பேசுகிறார்கள். யோகிகள் கர்மக் கொள்கையை உயர்த்திப் பேசுகிறார்கள். ஆனால் செயல் களைத் துறந்துவிடுவதால் அமைதி எய்த முடியாது. இந்த வாழ்க்கையில் கணநேரம்கூடயாரும் செயலற்றிருக்க முடியாது. இயற்கையின் குணங்கள் அவனைச் செயல்புரிய வைத்துவிடும். யார் செயல்களை நிறுத்திவிட்டு, அதேவேளையில் அவற்றைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பானோ, அவன் எதையும் அடைய மாட்டான்; அவன் வெறும் பொய்யன் ஆகிறான். யார் தனது மனச் சக்தியால் படிப்படியாகத் தன் புலன்களைச் செயலில் ஈடுபடுத்தி, தன்வசமாக்கிக் கொள்கிறானோ, அவனே சிறந்தவன். எனவே செயல்புரி.’ (3. 2-8)

‘உனக்குக் கடமை என்ற ஒன்று இல்லை, நீ கட்டுப்பட்ட வன் அல்ல என்ற ரகசியத்தைத் தெரிந்துகொண்டாலும், பிறரது நன்மைக்காக நீ செயல் புரிந்தேயாக வேண்டும். ஏனெனில் பெரியோர் எதைச் செய்கிறார்களோ அதையே சாதாரண மக்களும் செய்வார்கள். மன அமைதியும் சுதந்திரமும் எய்திய ஒருவர் வேலை செய்யாவிட்டால், ஞானமோ அமைதியோ இல்லாத மற்றவர்களும் அவரைப் பின்பற்ற முயல்வார்கள். அதனால் குழப்பம் உண்டாகும்.’ (3.20-24).

‘அர்ஜுனா, என்னிடம் இல்லாதது எதுவும் இல்லை. நான் அடைய விரும்புவதும் ஒன்றுமில்லை. என்றாலும் நான் தொடர்ந்து செயல்புரிகிறேன். நான் ஒரு கணம் செயல் புரியா விட்டால் பிரபஞ்சமே அழிந்துபோகும்.’ (3 . 22–24) ‘அறிவிலிகள் பலனிலும் லாபத்திலும் ஆசைகொண்டு செயல் புரிவதுபோல், ஞானி பற்றில்லாமலும், பலனிலும் லாபத்திலும் ஆசை யில்லாமலும் செயல்புரிய வேண்டும்.’ (3. 25)

‘நீங்கள் ஞானம் பெற்றவர்களாக இருந்தாலும், சாதாரண மக்கள் குழந்தைபோல் கொண்டுள்ள நம்பிக்கையைக் குலைக் காதீர்கள். அதற்கு மாறாக, அவர்களுடைய நிலைக்கு இறங்கிச் சென்று படிப்படியாக அவர்களை மேலே கொண்டு வாருங்கள்.’ (3 . 26, 29) இது ஒரு சக்தி வாய்ந்த கருத்து. இது இந்தியாவில் லட்சியமாக ஆகிவிட்டது. அதனால்தான் அங்கே உயர்ந்த வேதாந்தியும் கோயிலுக்குச் சென்று திருவுருவங்களை வழிபடு வதைக் காண்கிறீர்கள். அது பாசாங்கு அல்ல.

‘மற்ற தேவதைகளை வழிபடுபவர்களும் உண்மையில் என்னையே வழிபடுகிறார்கள்.’ (9. 23) என்று கிருஷ்ணர் கூறு வதைப் பின்னால் படிக்கிறோம். இறைவனின் அவதாரத்தையே மனிதன் வழிபடுகிறான். தவறான பெயரால் அழைத்தால் கடவுள் கோபம் கொள்வாரா என்ன? கொள்வாரானால் அவர் கடவுள் அல்லவே அல்ல! மனிதன் கல்லைத் தொழுதாலும் அவன் தன் இதயத்தில் கொள்வது கடவுள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? எப்படி வழிபட்டால் என்ன ?

மதம் என்பது கோட்பாடுகளே என்ற கருத்தை அகற்றி விட்டால், உண்மையை இன்னும் தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும். ஆதாம் ஆப்பிளை உண்டதால்தான் உலகமே பிறந்தது என்பது மதக் கருத்துக்களுள் ஒன்று – தப்பவும் வழி யில்லை. ஏசுவை நம்புங்கள்-என்றோ வாழ்ந்த அந்த மனிதரின் மரணத்தில் நம்பிக்கை வையுங்கள். ஆனால் இந்தியாவில் முற்றிலும் மாறுபாடான கருத்து உள்ளது. அங்கே மதம் என்பது அனுபூதியே தவிர, வேறு அல்ல. போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு ஒருவன் எப்படிப் போகிறான்? நாலு குதிரைகள் பூட்டிய வண்டியிலா, மின்சார வண்டியிலா, தரையில் உருண்டு கொண்டா என்பது முக்கியமல்ல. லட்சியம் ஒன்றுதான். பயங்கரக் கடவுளின் கோபத்திலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது என்பதுதான் கிறிஸ்தவர்களின் பிரச்சினை. நமது உண்மை நிலையை எப்படி அடைவது, இழந்த ஆன்ம நிலையை எப்படி மீண்டும் பெறுவது என்பது இந்தியர்களின் பிரச்சினை.

நீங்கள் ஆன்மா என்பதை உணர்ந்து கொண்டீர்களா? ஆம் என்பது உங்கள் பதிலானால் அதன் கருத்து என்ன? உடல் என்னும் தசைப்பிண்டமா அல்லது எல்லையற்ற, ஆனந்த வடிவமான, தன்னொளி கொண்ட அழிவற்ற ஆன்மாவா? நீங்கள் மிகப் பெரிய தத்துவவாதியாக இருக்கலாம். ஆனால் உடலே நீங்கள் என்ற கருத்தைக் கொண்டுள்ளதுவரை, உங்கள் காலில் நெளியும் சிறு புழுவைவிட நீங்கள் எந்த வகையிலும் உயர்ந்தவர்களாக மாட்டீர்கள்! உங்களுக்கு மன்னிப்பே கிடை யாது! தத்துவங்களையெல்லாம் தெரிந்துகொண்டும், உங்களை உடல் என்று எண்ணுவது எவ்வளவு இழிவு! உடல்-தெய்வங்கள், அதுவே நீங்கள்! இதுவா மதம்?

மதம் என்பது ஆன்மாவை ஆன்மாவாக உணர்வது. நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நேர்மாறாக, ஆன்மாவை ஜடப்பொருளாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்; அழிவற்ற கடவுளிலிருந்து மரணத்தையும் ஜடப்பொருளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்; அழிகின்ற, அறிவற்ற ஜடப்பொருளிலிருந்து ஆன்மாவை உருவாக்கிக் கொண்டிருக் கிறோம்.

நீங்கள் தலைகீழாக நிற்பதாலோ, ஒற்றைக்காலால் நிற்ப தாலோ, அல்லது மூன்று தலைகளுடன் கூடிய ஐயாயிரம் தெய்வங்களை வழிபடுவதாலோ பிரம்மத்தை அறிய முடியு மானால் அப்படியே செய்யுங்கள். உங்களால் முடிந்த எந்த வழியிலாவது அதைச் செய்யுங்கள். அதைப்பற்றி எதுவும் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. உங்கள் வழி சிறந்ததாக, உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் மற்றொருவனுடைய வழி எவ்வளவோ கொடியதென்று நீங்கள் எண்ணினாலும், அது கெட்டதென்று சொல்ல உங்களுக்கு உரிமையில்லை என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

மதம் என்பது வளர்ச்சிபற்றியது என்பதை உணர வேண்டும்; அது வெறும் பொருளற்ற பிதற்றல்கள் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஒரு மனிதன் கடவுளைக் கண்டான். பற்றியெரிந்த புதரில் கடவுளைக் கண்டார் மோசஸ். மோசஸ் கடவுளைக் கண்டபோது என்ன செய்தாரோ, அது உங்களைக் காப்பாற்றுமா? ஒருவன் கடவுளைக் கண்டது, உங்களையும் உற்சாகப்படுத்தி அவ்வாறு செய்யும்படித் தூண்ட லாம், அதற்கும் மேலாகச் சிறிதளவும் அது உங்களுக்கு உதவி செய்யாது. முன்னோர்களின் உதாரணங்களுடைய முழுப் பயனும் அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றுமில்லை. செல்லும் வழியிலுள்ள கைகாட்டிக் கம்பங்களே அவை. ஒருவன் உண்டால் இன்னொருவனின் பசி தீராது. ஒருவன் கடவுளைக் காண்பது மற்றொரு மனிதனைக் காப்பாற்றாது. உங்களுக்கு நீங்களே கடவுளைக் காண வேண்டும். இப்போது சண்டை யெல்லாம் கடவுளுக்கு ஓர் உடலில் மூன்று தலைகளா அல்லது ஆறு உடல்களில் ஐந்து தலைகளா என்பது பற்றியே! ஆனால் நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா என்றால் இல்லை; காண முடியும் என்று நம்புவதும் இல்லை. நாம் எவ்வளவு மதிகெட்ட முட்டாள்கள்! நிச்சயமாக நாம் பைத்தியக்காரர்களே.

கடவுள் என்று ஒருவர் உண்டானால், அவர் உங்கள் கடவுளாகவும் என் கடவுளாகவும் இருக்க வேண்டும் என்பது இந்தியாவில் தொன்றுதொட்டு வரும் கருத்து. சூரியன் யாருக்குச் சொந்தம்? அம்புலி மாமா எல்லோருக்கும் மாமா என்கிறீர்கள். கடவுள் ஒருவர் உண்டென்றால், நீங்கள் அவரைப் பார்க்க முடிய வேண்டும். இல்லாவிட்டால் அவர் எப்படி யாவது போகட்டும்! 0

ஒவ்வொருவனும் தன் வழிதான் சிறந்ததென்று கருது கிறான். மிகவும் நல்லது! ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள். அது உங்களுக்கு நல்லதாக இருக்கலாம், அவ்வளவுதான். ஒரு வனுக்குச் சிறிதும் செரிக்காத உணவு மற்றொருவனுக்கு நன்றாகச் செரிக்கக் கூடியதாக இருக்கலாம். உங்களுக்கு நல்ல தாக இருப்பதால் உங்கள் வழியே எல்லோருக்கும் வழி என்ற முடிவுக்குத் தாவிவிடாதீர்கள். ஒருவனுக்குப் பொருத்தமான சட்டை ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லோருக்குமே பொருந்தும் என்று எண்ணாதீர்கள். படிப்பு அற்ற, பண்பாடு இல்லாத, சிந்தனைத் திறன் இல்லாத ஆண்களும் பெண்களும் அத்தகைய சிறிய சட்டைக்குள் புகுத்தப்பட்டிருக்கின்றனர். நீங்களே சிந்தித்துப் பாருங்கள். நாத்திகர்கள் ஆகுங்கள், உலகாய தர்கள் ஆகுங்கள், அதுகூடச் சிறந்ததாக இருக்கும். சிந்தனை செய்ய வேண்டும்! இந்த மனிதனின் வழி தவறு என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அது உங்களுக்குத் தவறாக இருக்கலாம். அதாவது, நீங்கள் அதைப் பின்பற்றினால் தாழ்வுறலாம். அதனால் அவனும் தாழ்ந்த நிலையை அடைவான் என்பது பொருளல்ல. எனவே உங்களுக்கு ஞானம் இருந்து, மற்றொருவன் பலவீனனாக இருப்பதைப் பார்த்தால், அவனை வெறுக்காதீர்கள் என்று கிருஷ்ணர் கூறுகிறார். உங்களால் முடியுமானால் அவனுடைய நிலைக்குச் சென்று அவனுக்கு உதவி செய்யுங்கள். அவனாக வளர வேண்டும். அவனது தலைக்குள் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கிலோ அறிவைத் திணிக்கலாம். ஆனால் அது என்ன நன்மை செய்யும்? அவன் முன்பிருந்ததைவிடக் கீழ்நிலைக்கே போவான்.

கர்மத் தளை எல்லாம் எங்கிருந்து வந்தது? நாம் ஆன்மாவைக் கர்மத்தால் கட்டியதிலிருந்தே. எங்கள் இந்தியக் கருத்து இரண்டைக் காட்டுகிறது: ஒரு பக்கம் இயற்கை, மறு பக்கம் ஆன்மா. இயற்கை என்பது இந்தப் புறவுலகம் மட்டுமல்ல; நம் உடல்களும் மனமும் புத்தியும், ஏன், நான்-உணர்வும் சேர்ந்ததே. இவற்றிற்கெல்லாம் அப்பால் உள்ளது எல்லையற்ற ஒளிமயமான ஆன்மா. இந்தக் கருத்தின்படி ஆன்மா இயற்கை யிலிருந்து முற்றிலும் வேறானது. இதுவரை அப்படித்தான் இருந்துள்ளது, இனியும் அப்படித்தான் இருக்கும். ஆன்மாவை மனத்துடன் ஒன்றுபடுத்திக் காண்கின்ற காலம் ஒருபோதும் இருந்ததில்லை.

நீங்கள் உண்ணும் உணவே மனத்தை உண்டாக்குகிறது என்பது வெளிப்படை உண்மை. அது ஜடப்பொருள். ஆன் மாவோ உணவுடன் தொடர்பின்றி உள்ளது. நீங்கள் உண் டாலும் உண்ணாவிட்டாலும் ஒன்றுமில்லை, நீங்கள் சிந்தித் தாலும் சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை. அது எல்லையற்ற பேரொளி. அதன் ஒளி எப்போதும் ஒரே போன்றது. ஒளியின் முன் நீங்கள் நீலக் கண்ணாடியையோ பச்சைக் கண்ணாடி யையோ வைத்தால், அதனால் ஒளிக்கு என்ன? அதன் நிறம் மாறாது. மனம்தான் மாறிமாறி வெவ்வேறு நிறங்களைத் தரு கிறது. ஆன்மா உடலை விடுகின்ற அந்தக் கணமே எல்லாம் சின்னாபின்னப்படுகிறது.

இயற்கையிலுள்ள உண்மை என்பது ஆன்மாவே. அந்த உண்மைப்பொருள், அந்த ஆன்ம ஒளி நமது உடல்களின் மூல மாகவும் மனங்களின் மூலமாகவும் இயங்குவது, பேசுவது ஆகிய எல்லா தொழில்களையும் செய்கிறது. அந்த ஆன்மாவின் ஆற்றலை, உணர்வை, அடிப்படையாகக் கொண்டுதான் இயற்கை பலவகைகளில் செயல்புரிகிறது. ஆன்மாதான் நமது எண்ணங்கள் அனைத்திற்கும், உடலின் செயலிற்கும், மற்ற எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. அது ஒவ்வொன் றிற்கும் தனது ஒளியைத் தந்தாலும், நன்மை தீமைகளாலோ இன்ப துன்பங்களாலோ தட்ப வெப்பங்களாலோ இயற்கையின் பிற தீமைகளாலோ பாதிக்கப்படுவதில்லை.

‘ஆகையால், அர்ஜுனா, இந்தச் செயல்களெல்லாம் இயற்கையில் நிகழ்கின்றன. அது தன் நியதிகளை நமது உடல்களிலும் உள்ளங்களிலும் செயல்படுத்துகிறது. நாம் அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு, “நான் இதைச் செய்கிறேன்” என்கிறோம். இவ்வாறு நாம் மனமயக்கத்திற்கு உள்ளாகிறோம்.’ (3. 27)

நாம் ஏதோ ஒரு வற்புறுத்தலுக்கு உட்பட்டே எப்போதும் செயல்புரிகிறோம். பசி வற்புறுத்தும்போது உண்கிறோம். துன்புறுதல் அதைவிடக் கொடியது, அது வெறும் அடிமைத் தனம். உண்மையான ‘நான்’ எப்போதும் சுதந்திரமானது. ஒன்றைச் செய்யுமாறு அதை எது கட்டாயப்படுத்த முடியும்? இயற்கையில் இருப்பவனே துன்புறுகிறான். உடலுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும்போதுதான் துன்புறுகிறோம்; நான் இன்ன பெயருடையவன் என்றெல்லாம் பொருளற்றவற்றைப் பிதற்றுகிறோம். உண்மையை உணர்ந்தவன் தன்னைத் தனியாக வைத்துக் கொள்வான். அவனது உடல் எதைச் செய்தாலும், மனம் எதைச் செய்தாலும் அவன் கவலைப்படுவதில்லை.

ஆனால் சமுதாயத்தின் பெரும் பகுதி மாயைக்கு உட்பட் டிருக்கிறது என்பதை மறக்கக் கூடாது. அவர்கள் ஏதாவது நன்மை செய்தால், அதைத் தாங்களே செய்ததாகக் கருது கிறார்கள். உயர்ந்த தத்துவத்தை அவர்களால் இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களது நம்பிக்கையைக் குலைக் காதீர்கள். அவர்கள் தீமையை விலக்கி நன்மையைச் செய் கிறார்கள். அதுவே பெரியது. அப்படியே செய்யட்டும். அவர்கள் நன்மைக்காகச் செயல்புரிபவர்கள். இவ்வாறு நன்மை செய்வதை விடச் சிறந்த பெருமை ஒன்று உள்ளது என்பதைப் படிப்படியாக அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் சாட்சியாக மட்டுமே இருப்பார்கள், செயல்கள் தாமே நிகழும். நாளடைவில் அவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள். எல்லா தீமைகளையும் விலக்கிய பிறகு, எல்லா நன்மைகளையும் செய்த பிறகு, தாங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை அவர்கள் கண்டு கொள்ளத் தொடங்குவார்கள். அவர்கள் செயல் புரிபவர்கள் அல்ல, தனித்து நிற்பவர்கள்; சாட்சிகள்; நின்று பார்த்துக் கொண்டிருப்பவர்கள். இயற்கையே உலகனைத்தையும் உண்டாக்குகிறது. அவர்கள் அதிலிருந்து திரும்பிவிட்டவர்கள். ‘அன்பா, முதலில் உண்மையாகிய ஒன்றே இருந்தது, வேறு எது வும் இல்லை. அது சிந்தித்தது. மற்ற அனைத்தும் உண்டாயின.’

‘பாதை தெரிந்தவர்களும் தங்கள் இயற்கையால் தூண்டப் பட்டுச் செயல் புரிகிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருடைய இயல்பின்படியே செயல் புரிகிறார்கள். அவர்கள் அதை மீற முடியாது’. (3. 33) அணு, விதியை மீற இயலாது. மனோமய அணுவோ, பௌதீகமய அணுவோ எதுவானாலும், அது விதிக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். வெளியிலிருந்து அடக்கும் முயற்சியால் என்ன பயன்?’ (3. 33)

வாழ்க்கையில் ஒரு பொருளுக்கு மதிப்பு எதனால் ஏற்படு கிறது? சொத்தாலோ சுகத்தாலோ அல்ல. அனைத்தையும் அலசிப் பாருங்கள். நமக்குப் படிப்பினை தர வருகின்ற அனு பவத்தைத் தவிர வேறு எதிலும் மதிப்பு இல்லை என்பதைக் காண்பீர்கள். பல நேரங்களில் நமக்கு ஏற்படும் துன்பங்களே இன்பங்களைவிடச் சிறந்த அனுபவத்தை அளிக்கின்றன. இயற்கையின் இனிய அணைப்பைவிட அடிகளே நமக்குப் பல வேளைகளிலும் சிறந்த பாடத்தைக் கற்பிக்கின்றன. பஞ்சத் திற்குக்கூட அதன் இடமும் மதிப்பும் உண்டு.

கிருஷ்ணரின் கருத்துப்படி நாம் இப்போதுதான் பிறந்த புதியவர்கள் அல்ல. நமது மனங்களும் புதியவை அல்ல. ஒவ் வொரு குழந்தையும் பிறக்கும்போது, மனித இனத்தின் கடந்த காலம் முழுவதையும் மட்டுமின்றி, தாவர வாழ்க்கையின் கடந்த காலத்தையும் கொண்டு வருகிறான் என்பது இக்காலத்தில் நமக்குத் தெரிகிறது. பழைய அத்தியாயங்கள், நிகழ்கால அத்தியாயங்கள், இவற்றுடன் எதிர்கால அத்தியாயங்களின் தொகுதியும் அவன்முன் இருக்கின்றன. ஒவ்வொருவனும் செல்ல வேண்டிய வழி, படம் வரைந்து, அடையாளமிட்டு, திட்ட மிட்டு அவன் முன்னே வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு இருளிலும் எந்த நிகழ்ச்சியோ சூழ்நிலையோ, காரணமின்றி நிகழ முடியாது. நமது அறியாமையே இதன் காரணம். முடிவற்ற காரியகாரணச் சங்கிலி ஒவ்வொரு வளையமாக இயற்கை வரையிலும் தொடர்ந்து செல்கிறது. உலகம் முழுவதும் அத்தகைய சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. அந்தக் காரண காரியச் சங்கிலி பிரபஞ்சம் தழுவியது. அதன் ஒரு வளையத்தை, ஒரு பகுதியை நீங்கள் பெறுகிறீர்கள்; ஒரு பகுதியை நான் பெறு கிறேன். அந்தப் பகுதிதான் நமது இயல்பு.

அடுத்து கிருஷ்ணர், ‘பிறரது நெறியைப் பின்பற்றுவதை விட உங்கள் நெறியைப் பின்பற்றி உயிர்விட்டாலும் அதுசிறப்பு (3 . 35) என்கிறார். இது என் நெறி. நான் இங்கே கீழே இருக்கிறேன். நீங்கள் அங்கே மேலே இருக்கிறீர்கள். அங்கே வந்து உங்களுடன் இருக்க எண்ணி, நான் எனது பாதையை விட்டுவிட எப்போதும் தூண்டப்படுகிறேன். ஆனால் அப்படிச் சென்றால் நான் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் போக நேரும். இதை நாம் மறக்கக் கூடாது. எதுவும் தானாக வளர வேண்டும். விரையாமல் வளர்ந்தால் நீங்கள் அனைத்தையும் அடையலாம். இல்லாவிடில் ஆன்மீக வாழ்விற்குப் பெரிய இன்னல் விளையும். மத போதனையின் அடிப்படை ரகசியம் இது.

‘மக்களை ரட்சித்தல்’, ‘எல்லோரும் ஒரே கொள்கையை நம்புதல்’ என்றெல்லாம் நீங்கள் கூறுவதன் பொருள் என்ன? அது நடக்க முடியாத காரியம். எல்லோருக்கும் சொல்லத்தக்க பொதுவான கருத்துக்கள் உள்ளன. உண்மையான குருவே உங்கள் இயல்பை அறிவார். உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். உங்கள் சொந்த இயல்பு இன்னதென்று நீங்கள் நினைப்பது ஒருவேளை முற்றிலும் தவறாக இருக்கலாம். அது நீங்கள் அறியும் வகையில் வளர்ச்சி அடையாமல் இருக்கலாம். குருவே அதை அறியக்கூடியவர். அவர் உங்கள் முகத்தை ஒரு முறை உற்றுப் பார்ப்பதிலேயே அதைக் கண்டுகொள்வார்; உங்கள் பாதையை உங்களுக்குக் காட்டுவார். நாம் தட்டுத்தடு மாறி இங்குமங்கும் அலைந்து எதையெதையோ செய்து கொண்டு, முன்னேறாமல் இருக்கிறோம்; உரிய காலம் வரும் போது வாழ்க்கை நதியில் மிதந்து செல்லத் தொடங்குகிறோம். ஆற்றில் இறங்கியதும் மிதக்க ஆரம்பித்தால், அதுதான் நல்ல அடையாளம். பிறகு போராட்டமே இல்லை. இதையே கண்டு பிடிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு வேறு நெறியைத் தேடு வதைவிட, இதிலேயே உயிரை விடலாம்.

இதற்கு மாறாக நாம் ஒரு புதிய மதத்தைத் தொடங்கி, புதிய கொள்கைகளை நிறுவி, எல்லோரும் ஒரே இயல்புடைய வர்கள் என்ற நம்பிக்கையில் மனித குலத்தின் லட்சியத்திற்கே நம்பிக்கைத் துரோகம் செய்கிறோம். ஒரேமாதிரியான உள்ளமோ உடலோ கொண்ட இருவர் இந்த உலகில் இல்லை. ஒரே மதமுடைய இருவரும் இருக்க முடியாது.

நீங்கள் ஆன்மீக வாழ்க்கையை விரும்பினால், நிறுவப் பெற்ற, நிலைபெற்றுவிட்ட எந்த மதத்தையும் பின்பற்றாதீர்கள். அந்த மதங்கள், ஒவ்வொருவரின் தனி வளர்ச்சியைத் தடைப் படுத்துவதால், நன்மை செய்வதைவிட நூறு மடங்கு தீமை செய்கின்றன. எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால் உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள். என் அறிவுரையைக் கேட்பதானால் நீங்கள் பொறிக்குள் தலையை நுழைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் கழுத்தில் சுருக்குக் கயிற்றை வீசினால் அந்தக் கணமே விலகிப் போய்விடுங்கள். பல பூக் களிலிருந்து தேனைச் சேகரிக்கும் தேனீ, ஒரு பூவிலும் கட்டுப் படாமல் விருப்பப்படிச் செல்வதுபோல், நீங்களும் கட்டுக்கு அகப்படாமல் இருங்கள். நிலைபெற்ற எந்த மதத்திலும் சேராதீர்கள். ஆன்மீக வாழ்க்கை என்பது உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் இடையில் உள்ளது. மூன்றாம் மனிதன் அதில் குறுக்கிடக் கூடாது. நிலைபெற்ற மதங்கள் செய்தவற்றை எல் லாம் எண்ணிப் பாருங்கள். மதங்களின் பெயரால் செய்யப் பட்டுள்ள கொடுமைகளைவிட எந்த நெப்போலியன் அதிகக் கொடுமைகளைச் செய்திருக்கிறான்? நீங்களும் நானும் எதையும் நிறுவத் தொடங்கினால், உடனே ஒவ்வொரு மனிதனையும் வெறுக்கத் தொடங்குகிறோம். ஒன்றை அன்பு செய்வது என்றால் பிறவற்றை வெறுப்பது என்பதே கருத்தானால், அன்பு செய்யா திருப்பதே நல்லது. அது அன்பல்ல, அது நரகம்! உங்களைச் சேர்ந்தவர்களை நேசிப்பது என்பது பிறரைப் பகைப்பதானால், அது சுயநலம், மிருகத்தனம் இரண்டின் சாரம். முடிவில் அது உங்களை மிருகங்களாகவே ஆக்கிவிடும். இன்னொருவரின் இயல்பிற்குப் பொருந்திய மதம் எவ்வளவு உயர்ந்ததாக உங்களுக்குத் தோன்றினாலும், அதைப் பின்பற்றாமல் உங்கள் இயல்பிற்கேற்ற மதத்தைப் பின்பற்றுவதிலேயே நீங்கள் உயிர் துறப்பது நல்லது. (3. 35)

‘அர்ஜுனா, எச்சரிக்கையாயிரு. காமமும் கோபமும் கொடிய பகைவர்கள். அவற்றை அடக்க வேண்டும். ஞானிகளின் அறிவையும் அவை மறைத்துவிடுகின்றன. காமத்தீயைத் தணிக்க முடியாது. புலன்களும் மனமும் அதன் இருப்பிடம். ஆன்மா எதையும் விரும்புவதில்லை .’ (3. 37, 40)

‘ இந்த யோகத்தை நான் பண்டைக் காலத்தில் விவஸ் வானுக்குக் கற்பித்தேன். விவஸ்வான் மனுவுக்கு அளித்தார். இவ்வாறு அந்த உயர்ந்த ஞானம் ஒருவர்பின் ஒருவராக வந் துள்ளது. நாளடைவில் அது அழிந்து போயிற்று. ஆகையால் அதை மீண்டும் நான் இன்று உனக்குக் கூறுகிறேன்.’ (4. 1 – 3)

பின்பு அர்ஜுனன், ‘நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? நேற்றுப் பிறந்தவன் நீ, விவஸ்வான் உனக்கு நெடுங்காலத்திற்கு முன் பிறந்தவர். நீ அவருக்கு உபதேசித்ததாக எப்படிக் கூறுகிறாய்?’ (4. 4) என்று கேட்கிறான்.

அதற்குக் கிருஷ்ணர் கூறுகிறார்: ‘அர்ஜுனா, நீயும் நானும் பிறப்பு இறப்புச் சக்கரத்தில் பலமுறை சுழன்று வந்திருக்கிறோம். உனக்கு அவை எல்லாம் நினைவில்லை. நான் ஆதியில்லாதவன்; பிறப்பில்லாதவன்; படைப்பு அனைத்திற்கும் தலைவன். எனது இயற்கையை வசப்படுத்திக் கொண்டு நான் உருவெடுக்கிறேன். அறம் தாழ்ந்து, மறம் தலையெடுக்கும் போதெல்லாம் மனித குலத்திற்கு உதவ நான் வருகிறேன். நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், ஆன்மீகத்தை நிலைநாட்டு வதற்கும் நான் அவ்வப்போது வருகிறேன். எவரெவர் எந்தெந்த வழியில் என்னை அடைய விரும்பினாலும், அவரவரை நான் அந்தந்த வழியில் அடைகிறேன். ஆனால், அர்ஜுனா, என் வழியைவிட்டு யாரும் விலகிச் செல்ல முடியாதென்பதை அறிந்துகொள்.’ (4. 5-8, 11) யாரும் எப்போதும் விலகிச் சென்ற தில்லை . எப்படிச் செல்ல முடியும்? எவரும் அவர் வழியிலிருந்து தவற முடியாது.

எல்லா சமுதாயங்களுமே தவறான பொதுமையை அடிப் படையாகக் கொண்டுள்ளன. பொதுமைப்படுத்தல் பரிபூரண மானதாக இருந்தால்தான் அதிலிருந்து நியதியை உண்டாக்க முடியும். ‘ஒவ்வொரு நியதிக்கும் விலக்கு உண்டு’ என்ற பழ மொழியின் பொருள் என்ன? அது நியதியானால் அதை மீற இயலாது; யாரும் மீற முடியாது. ஆப்பிள் புவியீர்ப்புச் சக்தியின் நியதியை மீறுகிறதா? ஒரு நியதி மீறப்படுகின்ற அந்தக் கணம் பிரபஞ்சமே இல்லாமல் போய்விடும். நீங்கள் நியதியை மீறும் காலம் வரும். அப்போது உங்கள் புத்தி, மனம், உடல் எல்லாம் கரைந்து போய்விடும்.

ஒரு மனிதன் திருடுகிறான். ஏன் நீங்கள் அவனைத் தண்டிக் கிறீர்கள். அவனுக்கும் இடம் கொடுத்து, அவனுடைய சக்தியை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அவனைப் பார்த்து ‘நீ பாவி’ என்கிறீர்கள். அவன் சட்டத்தை மீறியவன் என்று பலர் கூறுவார்கள். இந்த மனித மந்தை ஒரே மாதிரியான கட்டுப் பாட்டிற்கு அடங்கி நடக்கும்படிக் கட்டாயப் படுத்தப்படுகிறது. அதனால்தான் எல்லா துன்பங்களும் பாவமும் பலவீனமும் வருகின்றன. நீங்கள் எண்ணுவதுபோல் அவ்வளவு கொடியது அல்ல உலகம். முட்டாள்களாகிய நாமே அதைக் கொடியதாகச் செய்துள்ளோம். நாமே பேய்பிசாசுகளைப் படைக்கிறோம். பிறகு அவற்றை ஓட்ட நம்மால் முடிவதில்லை. கையால் கண்ணை மூடிக்கொண்டு, ‘யாராவது ஒளி தாருங்கள்!’ என்று கதறுகிறோம். கண்களிலிருந்து கைகளை எடுங்கள். செய்ய வேண்டுவது அவ்வளவுதான். நம்மைக் காப்பாற்றுவதற்காகத் தெய்வங்களை எல்லாம் கூப்பிடுகிறோம். ஒருவனும் தன்மீது பழி சொல்வதில்லை. அதுதான் இரக்கத்திற்கு உரியது. சமுதாயத்தில் ஏன் இவ்வளவு தீமை இருக்கிறது? என்ன காரணம்? சுகபோக நாட்டமும் சாத்தானும் பெண்ணும் என் கிறீர்கள். ஏன் இவற்றை உருவாக்குகிறீர்கள்? அவற்றை உருவாக்குமாறு யாரும் உங்களிடம் சொல்லவில்லையே! ‘அர்ஜுனா, என் வழியிலிருந்து யாரும் விலக முடியாது. (4. 11)’ நாம் முட்டாள்கள், நமது வழிகளும் அறிவற்றவையாகவே இருக்கின்றன. நாம் இந்த மாயை வழியேதான் செல்ல வேண் டியிருக்கிறது. கடவுள் சொர்க்கத்தைப் படைத்தார்; மனிதன் தனக்குத்தானே நரகத்தைப் படைத்துக்கொண்டான்.

‘ஒரு கர்மமும் என்னைத் தொடாது. எனக்குக் கர்மபலனில் விருப்பில்லை. என்னை இவ்வாறு அறிபவர்கள் ரகசியத்தை அறிந்தவர்கள், அவர்கள் கர்மத்தில் கட்டுப்பட மாட்டார்கள். பண்டைய ரிஷிகள் இந்த ரகசியத்தை அறிந்து ஆபத்தின்றிச் செயல்புரிந்தார்கள். நீயும் அதேபோல் செயல்புரி’. (4. 14, 15) ம ‘தீவிரச் செயலின் இடையில் ஆழ்ந்த அமைதியையும், ஆழ்ந்த அமைதியில் தீவிரச் செயலையும் யார் காண்கிறானோ அவனே அறிஞன்.’ (4. 18) இதுதான் கேள்வி: ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு பொறியும் செயலாற்றுகின்றபோதும், எது வும் குலைக்க முடியாத அமைதியில் நீ திளைத்திருக்கிறாயா? கடைவீதியில் வண்டிக்காகக் காத்துக் கொண்டிருக்கையில், உன்னைச் சுற்றிலும் எல்லாம் பரபரப்பாயிருக்கும்போது, நீ அமைதியாக சாந்தமாக தியானத்தில் மூழ்கியிருக்கிறாயா? ஒரு குகையில் உன்னைச் சுற்றி எல்லாம் அசைவற்றிருக்கும்போது நீ தீவிரமாகச் செயல்படுகிறாயா? அப்படியிருந்தால் நீ ஒரு யோகி; இல்லாவிடில் இல்லை.

‘யாருடைய ஒவ்வொரு முயற்சியும் பலனில் விருப்ப மில்லாமல், சுயநலத்தில் நாட்டமில்லாமல், பற்றற்றதாக இருக் கிறதோ, அவனை அறிஞன் என்று பெரியோர் கூறுகின்றனர்.’ (4. 19) நாம் சுயநல நாட்டம் உடையவர்களாக இருக்கும்வரை உண்மையறிவு நமக்கு ஒருபோதும் வராது. ஒவ்வொன்றிற்கும் நாம் நம்முடைய சாயத்தையே பூசுகிறோம். உள்ளது உள்ளபடியே பொருட்கள் நம்மிடம் வருகின்றன. அவை தம்மை மறைத்துக் கொள்கின்றன என்பதில்லை; நாம்தான் அவற்றை மறைக்கிறோம். நம்மிடம் தூரிகை இருக்கிறது. ஒரு பொருள் வந்ததும் அது நமக்குப் பிடிக்காவிட்டால் அதற்குச் சிறிது சாயம் பூசிவிட்டுப் பிறகு பார்க்கிறோம். நாம் எதையும் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நாம் ஒவ்வொன்றின்மீதும் நமது வண்ணத்தைப் பூசுகிறோம். எல்லா காரியங்களிலும் தூண்டு தலாக இருப்பது சுயநலம். ஒவ்வொன்றும் நம்மால் மறைக்கப் படுகிறது. பட்டுப்புழு தன் உடலிலிருந்தே நூலை நூற்று, அத னால் ஒரு கூண்டைச் செய்து, அதிலேயே தன்னை அடைத்துக் கொள்வதுபோல் நாமும் இருக்கிறோம். தன் செயலாலேயே அது தன்னைச் சிறைப்படுத்திக் கொள்கிறது. அதையே நாமும் செய்கிறோம். ‘நான்’ என்று நாம் சொன்னால், அந்தக் கணமே நூல் ஒரு சுற்றுச் சுற்றுகிறது; ‘நான், எனது’ என்றால் இன் னொரு சுற்றுச் சுற்றுகிறது. இப்படியே சுற்றிக்கொண்டு போகிறது.

செயலின்றி ஒரு கணம்கூட நம்மால் இருக்க முடியாது. செயல் புரியுங்கள்! உங்கள் அண்டை வீட்டுக்காரர் உங்களிடம் வந்து, ‘சற்று எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று கேட்டால், எப்படிச் செய்வீர்களோ, அந்த அளவிலேயே உங்களுக்கும் உதவி செய்துகொள்ளுங்கள். அதற்குமேல் அல்ல, இன்னொரு வனின் உடலைவிட உங்கள் உடல் உயர்ந்த மதிப்பு உடையது அல்ல. அவனது உடலுக்குச் செய்வதைவிட அதிகமாக உங்கள் உடலுக்கு எதுவும் செய்யாதீர்கள். இதுதான் மதம்.

‘யாருடைய முயற்சிகள் எந்தவிதமான ஆசையும் சுய நலமும் அற்றதோ, அவன் கர்மத்தளையை ஞானத் தீயால் எரித்துவிட்டவன். அவனே அறிஞன்’. (4. 19) புத்தகங்களைப் படிப்பதால் அது கிடைக்காது. கழுதையின்மீது ஒரு நூல் நிலையத்தையே சுமத்திவிடலாம். அதனால் அது கல்வியறிவு பெற்றுவிடாது. பல நூல்களைப் படிப்பதால் என்ன பயன்? ‘செயலில் பற்றை முற்றிலுமாக விட்டு, எப்போதும் திருப்தியான மனத்துடன், லாபத்தில் ஆசை கொள்ளாமல் செயல் புரியும் ஞானி கர்மத்தைக் கடந்தவன்.’ (4. 20)

தாயின் வயிற்றிலிருந்து நான் நிர்வாணமாக வந்தேன், நிர்வாணமாகவே போகிறேன்; உதவியற்றவனாக வந்தேன், உதவியற்றவனாகப் போகிறேன்; இப்போதும் உதவியற்ற வனாகவே இருக்கிறேன். சேருமிடம் தெரிய வில்லை. அதைப்பற்றி நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. எவ்வளவு பைத்தியக்கார எண்ணங்களெல்லாம் தோன்றுகின்றன. ஆவி உலக நடுவர் (Medium) ஒருவரிடம் போய் ஏதாவது ஆவி நமக்கு உதவி புரியுமா என்று பார்க்கிறோம். இந்தப் பலவீனத்தைப் பாருங்கள்! ஆவிகள், பேய்கள், தேவதைகள்! புரோகிதர்களே, மந்திரவாதிகளே யாரானாலும் சரி, வந்துவிடுங்கள்! நாம் பலவீனமாயிருக்கின்ற அந்தக் கணம்தான் அவர்கள் நம்மைப் பிடித்துக் கொள்வதற்கான தருணம்! பிறகு அவர்கள் எல்லா தெய்வங்களையும் கொண்டுவந்து விடுவார்கள்.

எங்கள் நாட்டில் ஒரு மனிதன் படித்து வலிமை மிகும் போது அவன் தத்துவவாதியாகி, ‘இந்தப் பிரார்த்தனையும் தீர்த்தங்களில் முழுகுவதும் மதியீனம்’ என்பான். அவனது தந்தை இறக்கிறார், தாய் இறக்கிறாள். ஓர் இந்துவுக்கு இவற்றை விட அதிர்ச்சி தருவது வேறெதுவும் இல்லை. அப்போது அவனே ஒவ்வோர் அழுக்குக் குட்டையிலும் குளிப்பதையும், கோயிலுக்குள் சென்று புழுதியில் புரள்வதையும் காண்பீர்கள். யாராவது உதவுங்கள்! ஆனால் உதவி வருவதில்லை . யாரிட மிருந்தும் உதவியில்லை. அதுதான் உண்மை . மனிதர்களைவிடத் தெய்வங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனாலும் உதவி மட்டும் கிடைப்பதில்லை. நாம் நாய்களைப்போல் சாகிறோம் – எந்த உதவியும் இல்லை . எங்கு பார்த்தாலும் மிருகத்தனம், பஞ்சம், நோய், துன்பம், தீமை! எல்லோரும் உதவிக்காக ஓலமிடு கின்றனர். ஆனால் உதவி வருவதில்லை . என்றாலும் நிராசை கொள்ளாமல் உதவிக்காகக் கதறுகிறோம். என்ன சீரழிவு! என்ன பயங்கரம்! உங்கள் உள்ளத்தை உற்றுப் பாருங்கள்! பாதித் துன்பங்களுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல; நமது பெற்றோர்களே பொறுப்பாளிகள். இந்தப் பலவீனத்துடன் பிறந்தோம். மேலும்மேலும் இது நமது தலையில் புகுத்தப் பட்டது. மெள்ள மெள்ளத்தான் இதைக் கடந்தாக வேண்டும்.

உதவி இல்லையே என்று ஏங்குவது மிகப் பெரிய தவறு. யாரிடமும் உதவியை நாடாதீர்கள். நாமே நமக்கு உதவி. நமக்கு நாமே உதவ முடியாவிட்டால், வேறு யாரும் உதவ முடியாது. ‘உனக்கு ஒரே நண்பன் நீயே; ஒரே பகைவனும் நீயே; எனக்கு என்னைத் தவிர வேறு பகைவனும் இல்லை; நண்பனும் இல்லை !'(6 . 5). இதுதான் முடிவான சிறந்த பாடம். அந்தோ ! இதைக் கற்றுக்கொள்ளத்தான் எவ்வளவு காலம் ஆகிறது! இதோ கைக்குக் கிட்டிவிட்டதுபோல் தோன்றுகிறது; அடுத்த நொடியில் பழைய அலை மோதுகிறது; முதுகெலும்பு உடை கிறது. நாம் பலமிழந்து மறுபடியும் மூடநம்பிக்கைக்கும் உதவிக்கும் கை நீட்டுகிறோம். அந்தப் பெரும் துன்பக் குவி யலைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லாம் உதவியைத் தேடிய தவறான எண்ணத்தின் விளைவு!

புரோகிதர் வழக்கமான தம் மந்திரங்களை ஓதிவிட்டுத் தட்சிணையை எதிர்பார்க்கிறார். அறுபதாயிரம்பேர் வானத்தை நோக்கிப் பிரார்த்தனை செய்துவிட்டுப் புரோகிதருக்குத் தட்சிணை தருகிறார்கள். மாதங்கள் ஒவ்வொன்றாக எத்தனையோ கடக்கின்றன; அவர்கள் இன்னும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பணம் கொடுக்கிறார்கள், பிரார்த்திக்கிறார்கள். சற்று எண்ணிப் பாருங்கள்! பைத்தியக் காரத்தனம் அல்லாமல் வேறு என்ன இது? இதற்கு யார் காரணம்? நீங்கள் மதப் பிரச்சாரம் செய்யலாம். அது வளர்ச்சி யற்ற மனங்களைக் கிளறிவிடப் பயன்படுமே தவிர, வேறு எதற்கும் உதவாது. நீங்கள் அதற்காகத் துயரத்தை அனுபவிக்க வேண்டி வரும். உள்ளத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள் ளுங்கள், நீங்கள் யார்? பிறரது தலையில் பலவீனத்தைப் புகுத்தி யதற்காக நீங்கள் வட்டிக்கு வட்டி சேர்த்து அனுபவிக்க நேரும். கர்ம நியதி அதன் பலனைக் கொண்டு வந்தே தீரும்.

ஒரே ஒரு பாவம்தான் உண்டு. அதுவே பலவீனம். நான் சிறுவனாயிருந்தபோது மில்டன் (Milton) எழுதிய ‘இழந்த சொர்க்கம்’ (Paradise Lost) என்ற கவிதையைப் படித்தேன். அதில் எனக்கு மதிப்பு ஏற்பட்ட ஒரே நல்லவன் சாத்தானே. பலவீனமின்றி, எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாவதற்கும் ஆயத்தமாயிருப்பவன் மட்டுமே மகான்.

எழுந்து தைரியமாகப் போராடுங்கள். பைத்தியக்காரத் தனத்திற்கு மேல் பைத்தியக்காரத்தனமாகச் சேர்த்துக் கொண்டே போகாதீர்கள். எந்தத் தீமை வரக் காத்துக் கொண்டி ருக்கிறதோ, அதனுடன் உங்கள் பலவீனத்தையும் சேர்க் காதீர்கள். உலகிற்கு நான் சொல்ல வேண்டுவதெல்லாம் அவ்வளவுதான். வீரர்களாக இருங்கள்! ஆவிகளைப் பற்றியும் பேய்களைப் பற்றியும் பேசுகிறீர்கள். நாமே உயிருடன் உலவும் பேய்கள். வலிமையும் வளர்ச்சியுமே வாழ்விற்கு அடையாளம், பலவீனம் சாவுக்கு அடையாளம். பலவீனமான எல்லாவற்றி லிருந்தும் விலகிவிடுங்கள். அது சாவு. வலிமையானது என்றால் அதைப் பெற நரகத்திற்குச் செல்ல நேர்ந்தாலும், சென்று அதைப் பற்றிக்கொள்ளுங்கள். வீரர்களுக்கு மட்டுமே முக்தி உண்டு. ‘அழகிற்சிறந்ததை அடைய வீரர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.’ தைரியத்தின் உச்சியை அடையாத யாருக்கும் முக்தி பெறத் தகுதி இல்லை . நரகம் யாருக்கு? சித்திரவதை யாருக்கு? பாவம் யாருக்கு? பலவீனம் யாருக்கு? சாவு யாருக்கு? நோய் யாருக்கு?

நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள். அப்படியானால் உண் மையான கடவுளை நம்புங்கள். ‘நீயே ஆண், நீயே பெண், நீயே இளமைச் செருக்கில் நடக்கும் இளைஞன், நீயே தடியூன்றித் தள்ளாடும் கிழவன்’. பலவீனம்நீயே, பயம் நீயே, சொர்க்கம் நீயே, நரகம் நீயே, கடிக்கும் பாம்பு நீயே. அச்சமாக நீ வா! சாவாக நீ வா! துன்பமாக நீ வா!….

பலவீனம், தளைகள் எல்லாமே கற்பனை. அவற்றைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னால், அவை மறைந்து ஒழிய வேண்டும். பலவீனமடையாதீர்கள்! வேறு வழியில்லை. வீரர் களாக எழுந்து நில்லுங்கள்! அச்சம் வேண்டாம்! மூட நம்பிக்கை வேண்டாம்! உண்மையை உள்ளபடியே எதிர்கொள்ளுங்கள். நமது துன்பங்களுள் மிகக் கொடிய துன்பமான மரணம் வந் தாலும் வரட்டும்! நாம் உயிரை விடவும் துணிந்துள்ளோம். எனக்குத் தெரிந்த மதமெல்லாம் அவ்வளவுதான். நான் இன்னும் அதை அடையவில்லை. ஆனால் அதற்காகப் போராடிக் கொண் டிருக்கிறேன். நான் அடையாமல் போகலாம்; ஆனால் நீங்கள் அடையலாம், முன்னேறுங்கள்!

‘எங்கே ஒருவன் மற்றொன்றைக் காண்கிறானோ, மற் றொன்றைக் கேட்கிறானோ, எதுவரை இரண்டு உண்டோ , அதுவரை எல்லா துன்பங்களுக்கும் பிறப்பிடமான அச்சம் இருந்தே தீரும்; எங்கே ஒருவன் மற்றொன்றைக் காண வில்லையோ, எங்கே ஒன்று மட்டுமே உள்ளதோ, அங்கே துய ரத்தை அனுபவிக்க யாருமில்லை. துன்புற யாருமில்லை.’ இரண்டற்ற ஒன்றுதான் உள்ளது. ஆகையால் அஞ்சாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள், எழுந்திருங்கள், லட்சியத்தை அடை யும்வரை நிற்காதீர்கள்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 16. கீதை 3

15. கீதை 2

கீதை 2

கீதைக்குச் சிறிது முன்னுரை தேவை. குருக்ஷேத்திரப் போர்க் களத்தில் காட்சி நிகழ்கிறது. ஒரு வம்சத்தின் இரண்டு கிளைகள் அரசுரிமைக்காக ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் போர் புரிந்தன. பாண்டவர்களின் பக்கம் உரிமை இருந்தது. கௌரவர்களின் பக்கம் வலிமை இருந்தது. பாண்டவர்கள் ஐவர், அவர்கள் காட்டில் வாழ்ந்து வந்தனர். கிருஷ்ணர் பாண்ட வர்களின் நண்பர். ஊசி குத்தும் இடங்கூட அவர்களுக்குக் கொடுக்க மறுத்தார்கள் கௌரவர்கள்.

போர்க்களத்தில் காட்சி தொடங்குகிறது. இருதரப்பினரும் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் காண்கின்றனர் – ஒரு சகோதரன் ஒரு பக்கம், மற்றவன் மறுபக்கம்; பாட்டன் ஒரு பக்கம், பேரன் மறுபக்கம். நண்பர்களையும் உறவினர்களை யும் எதிர்த்தரப்பில் காண்கிறான் அர்ஜுனன். அவர்களைக் கொல்ல நேரும் என்பதை எண்ணியபோது அவனது இதயம் இளகிவிடுகிறது. அவன் போர்புரிய மறுக்கிறான். இப்படித் தொடங்குகிறது கீதை.

உலகில் வாழும் நம் அனைவருக்குமே வாழ்க்கை ஓர் இடைவிடாத போர். நமது பலவீனத்தையும் கோழைத்தனத் தையும் பொறுமை என்றும் தியாகம் என்றும் விளக்கம் கொடுப் பதற்கான சந்தர்ப்பங்கள் எத்தனையோ வருகின்றன. பிச்சைக் காரனின் துறவில் சிறப்பு எதுவும் இல்லை. எதிர்க்கும் வலிமை யுள்ள ஒருவன் பொறுத்தால் அது சிறப்பு. உடையவன் துறந்தால் அது சிறப்பு. நமது வாழ்க்கையில் எத்தனை தடவை சோம் பலாலும் கோழைத்தனத்தாலும் நாம் போரிலிருந்து விலகிக் கொண்டு, நாம் தைரியசாலிகள் என்று நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்! இது நமக்குத் தெரியாதா!

கருத்தாழம் மிக்க இந்தச் சுலோகத்துடன் கீதை தொடங்கு கிறது: ‘அரச குமாரா, எழுந்திரு! இந்த மனத் தளர்ச்சியை, இந்தப் பலவீனத்தை ஒழி. எழுந்து நின்று போர்புரி’ (2. 3). அர்ஜுனன் கிருஷ்ணரிடம் இதைப்பற்றி வாதிக்க முயல்கிறான். எதிர்ப்பைவிட எதிர்க்காமலிருப்பதே சிறந்தது என்றெல்லாம் பல நீதிகளைக் கூறுகிறான். தனது வாதங்களை நியாயப்படுத்த முயல்கிறான். ஆனால் கிருஷ்ணரை அவன் ஏமாற்ற முடியுமா? அவர் பரமாத்மா, இறைவன். அர்ஜுனனுடைய வாதத்தின் உள்நோக்கத்தை உடனே கண்டுகொள்கிறார். அர்ஜுனனின் விஷயத்தில் இது கோழைத்தனம். அவன் தனது உறவினர் களைக் காண்கிறான்; அவர்களைக் கொல்ல மனம் வரவில்லை.

அர்ஜுனனின் இதயத்தில் அவனது உணர்ச்சிக்கும் கடமைக்கும் போர் நிகழ்கிறது. மிருகங்கள் மற்றும் பறவைகளின் நிலையை அணுகும் அளவிற்கு நாம் உணர்ச்சி என்னும் நரகத் தில் துன்புறுகிறோம். அதை அன்பு என்று கூறிக் கொள்கிறோம். அது சுய மனவசியம். விலங்குகளைப்போல் நாம் உணர்ச்சி களுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறோம். ஒரு பசு தனது கன்றிற் காக உயிரை விடலாம். ஒவ்வொரு மிருகமும் அப்படியே செய்யலாம். அதனால் என்ன? விலங்குகளைப் போன்ற, பறவை களைப் போன்ற குருட்டுத்தனமான உணர்ச்சிப் பெருக்கு நம்மைப் பூரணத்துவத்திற்குக் கூட்டிச் செல்லாது. எல்லையற்ற பேருணர்வே மனிதனின் குறிக்கோள். அங்கே உணர்ச்சி வேகத் திற்கு இடமில்லை; பொருளற்ற பேச்சிற்கும் புலன் வசப்பட்ட எந்தச் செயலுக்கும் இடம் இல்லை. அங்கே உள்ளது அறி வொளி மட்டுமே. அங்கே மனிதன் ஆன்மாவாக விளங்குகிறான்.

இப்போது அர்ஜுனன் உணர்ச்சிப்பெருக்கின் பிடியில் உள்ளான். அவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லை. முற்றிலும் தன்னை அடக்கியவனாக, அறிவொளியுடன், எல்லை யற்ற சிந்தனைத் திறத்துடன் இயங்க வேண்டியவன் அவன். ஆனால் ஒரு விலங்கைப்போல், ஒரு குழந்தையைப்போல், தனது விவேகத்தை உணர்ச்சிக்கு அடிமைப்படுத்திவிட்டு, தன்னை ஒரு முட்டாளாக்கிக் கொண்டு, தனது கோழைத் தனத்தை ‘அன்பு’ முதலிய சொற்களால் மறைக்க முயல்கிறான்; அறிவற்றவனைப் போல் பேசுகிறான்; பல காரணம் காட்டி வாதிக்கிறான்; அதேவேளையில் முட்டாள்தனமாகவும் பேசு கிறான். கிருஷ்ணர் அதை உணர்கிறார்.

கிருஷ்ணர் கூறுகிறார்: ‘இருப்பவனையோ இறந்த வனையோ எண்ணி ஞானி வருந்துவதில்லை .’ (2. 11); ‘நீ சாக முடியாது; நானும் சாக முடியாது. நாம் இல்லாமலிருந்த காலம் ஒன்று இருந்ததில்லை; இனி இருக்கப்போவதும் இல்லை. இந்த வாழ்க்கையில் ஒருவன் குழந்தைப் பருவத்தில் தொடங்கி, இளமை, முதுமை முதலியவற்றைக் கடந்து செல்கிறான். அதுபோல் மரணவேளையில் இன்னோர் உடலில் புகுகிறான். அதற்காக அறிவாளி ஏன் வருந்த வேண்டும்?’ (2. 12, 13) உன்னை அடிமையாக்கும் உணர்ச்சிவேகத்திற்கு மூலகாரணம் எங்கே உள்ளது? புலன்களில்தான். ‘சூடு, குளிர், இன்பம், துன்பம் போன்றவை இருப்பது புலன்களின் தொடர் பால்தான். இவை வருவதும் போவதுமாக இருக்கின்றன.’ (2. 14) மனிதன் இப்போது துன்புறுகிறான், அடுத்த கணம் இன்புறுகிறான். இந்த நிலையில் அவன் ஆன்மாவின் இயல்பை அனுபவிக்க முடிவதில்லை .

‘உள்ளது ஒருபோதும் இல்லாமல் போகாது; இல்லாதது ஒருபோதும் உள்ளதாகாது. … எனவே எது இந்த உலகமெல்லாம் பரவி நிற்கிறதோ, அது தொடக்கமும் முடிவும் இல்லாதது என்பதை அறிந்துகொள். அது மாறுபடாதது. மாறுபாடில்லாத ஒன்றை மாற்றக்கூடியது இந்த உலகில் எதுவும் இல்லை. இந்த உடலிற்கு ஆரம்பமும் முடிவும் இருந்தாலும் உடலில் உறை பவன் எல்லையற்றவன், முடிவில்லாதவன்’. (2. 16-18)

இதையறிந்து எழுந்து நின்று போர் செய். ஓரடிகூடப் பின்வாங்கக் கூடாது. அதுதான் கருத்து. எது வந்தாலும் சரி, போராடு. நட்சத்திரங்கள் பெயர்ந்து விழட்டும், உலகம் முழு வதும் நம்மை எதிர்த்து நிற்கட்டும்! மரணம் என்பது உடையை மாற்றிக் கொள்வதுதான். அதனால் என்ன? அதை உணர்ந்து போராடு. கோழைகளாவதால் ஒரு பயனையும் அடைய முடியாது. ஓரடி பின்வாங்குவதால் நீங்கள் எந்தத் தீமையையும் கடந்துவிட முடியாது. உலகிலுள்ள எல்லா தெய்வங்களிடமும் கதறினீர்கள். துன்பம் தீர்ந்ததா? இந்தியர்கள் ஆறு கோடித் தெய்வங்களை நோக்கிக் கதறுகின்றனர். என்றாலும் நாய்களைப் போல்தான் சாகின்றனர். இந்தத் தெய்வங்கள் எங்கே இருக் கின்றனர்? நீங்கள் வெற்றி பெற்றால் அதன்பின் தெய்வங்கள் உங்களுக்கு உதவி செய்ய வருகின்றனர். அதனால் என்ன பயன்? இன்பமாக உயிர்விடுங்கள்.

மூட நம்பிக்கைகளுக்கு முழந்தாளிடுவதும், உங்கள் மனத்திற்கே உங்களை விற்றுவிடுவதுமாகிய இது, என் உயிருக்கு உயிராகிய உங்களுக்குத் தகாது. நீங்கள் எல்லையற்றவர்கள், மரணமற்றவர்கள், பிறப்பற்றவர்கள். நீங்கள் எல்லையற்ற ஆன்மா. அடிமையாயிருப்பது உங்களுக்குப் பொருந்தாது. எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! எழுந்து நின்று போர் புரியுங்கள். மரணம் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ ஒருவருமில்லை. நீங்களே உலகனைத்துமாக இருக்கும் போது யார் உங்களுக்கு உதவ முடியும்?

‘எந்தப் பிராணியும் பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் நமது மனிதப் புலன்களால் அறியப்படுவதில்லை . இடையில் மட்டுமே வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?’ (2. 28)

‘சிலர் அதை (ஆன்மாவை) வியப்புடன் பார்க்கின்றனர். சிலர் வியந்து பேசுகின்றனர். பிறர் வியந்து கேட்கின்றனர். சிலர் அதைப்பற்றிக் கேட்டும் புரிந்துகொள்வதில்லை .’ (2. 29)

இவர்களையெல்லாம் கொல்வது பாவம் என்று நீ சொல் வாயானால் உன்னுடைய குலதர்ம நிலையிலிருந்து யோசித்துப் பார். ‘இன்ப துன்பங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாகக் கொண்டு எழுந்து நின்று போர் செய்’. (2. 38)

கீதையின் தனிச்சிறப்பு மிக்க இன்னொரு கருத்து பற்றின்மை. நாம் செய்யும் செயல்களில் பற்றுக்கொள்வதால் அவற்றின் பயன்களை நாம் ஏற்க வேண்டியிருக்கிறது. ‘கடமைக் காகச் செய்யப்படும் கடமை மட்டுமே கர்மபந்தத்தைப் போக்கும்.’ (2. 39) அதில் அளவு மீறிவிடுவோம் என்ற அபாயம் இல்லை. ‘சிறிது செய்தாலும் இந்த யோகம் பிறப்பு, இறப்பு என்னும் பயங்கரச் சுழலிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.’ (2 . 40)

‘அர்ஜுனா, ஒருமைப்பட்ட மனமே வெற்றி பெறும். இரண்டாயிரம் பொருட்களில் சிதறிப்போன மனம் தனது ஆற்றலை இழந்துவிடுகிறது. வேதங்களுக்கு மேல் எதுவுமில்லை என்று சிலர் இதமாகப் பேசலாம். அவர்கள் சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறார்கள். வேதங்களின் சக்தியால் உலகிலுள்ள இன்பப் பொருட்களை அடைய விரும்புகிறார்கள். அதற்காக வேள்விகளைச் செய்கிறார்கள்.’ (2. 41-43) அப்படிப்பட்டவர்கள், இந்தச் சுகபோக எண்ணங்களைக் கைவிடாத வரையில் ஆன்மீக வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள். (2. 44)

இது இன்னொரு முக்கியமான பாடம். உலகியல் ஆசை களை விடாதவரை ஆன்மீகம் கிடையாது. புலன்களில் என்ன இருக்கிறது? அவை வெறும் மன மயக்கம். இறந்த பின்னும் சொர்க்கத்தில்கூட அவற்றை ஒரு ஜோடிக் கண்களை, மூக்கை — விடாமல் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். சிலர் அங்கே தங்களுக்கு இங்குள்ளதைவிட அதிகப் புலன்கள் இருக்கும் என்று எண்ணுகின்றனர். அரியாசனத்தில் வீற்றிருப்பவனாக இறைவனை, இறைவனுடைய பௌதீக உடலை என்றென்றும் கண்டுகொண்டிருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய மனிதர்களின் ஆசைகளெல்லாம் உடலைப் பற்றியவை; உணவு, நீர், இன்பம் பற்றியவை. இந்த உலகியல் வாழ்வின் ஒரு தொடர்ச்சியே அது. வாழ்விற்கு அப்பால் எதையும் நினைத்துப் பார்க்க மனிதனால் முடிவதில்லை. இந்த வாழ்க்கையெல்லாம் உடலுக்குத்தான். ‘முக்திக்குக் காரணமான மன ஒருமைப் பாட்டை இத்தகைய மனிதன் ஒருபோதும் அடைய மாட்டான்.’ (2. 44)

‘வேதங்கள் சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணங்களையுடைய பொருட்களைப் பற்றியே பேசுகின்றன.’ (2. 45) வேதங்கள் இயற்கையிலுள்ள பொருட் களைப்பற்றிக் கூறுகின்றன. உலகில் காணாத எதையும் மக்களால் எண்ணிப் பார்க்க முடியாது. சொர்க்கத்தைப் பற்றிப் பேசினால், சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஓர் அரசனையும் அவன் முன் சாம்பிராணிப் புகையிடும் மக்களையும் அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். இவை எல்லாம் இயற்கை, இயற்கையைக் கடந்த எதுவுமில்லை, எனவே வேதங்கள் இயற்கையைத் தவிர வேறெதையும் கூறவில்லை . ‘எதற்கும் கவலைப்படாமல் நன்மைதீமைகளைப் பொருட்படுத்தாமல், இயற்கையைக் கடந்து, வாழ்க்கையின் இருமைகளைக் கடந்து, உனது சொந்த உணர்வையும் கடந்து செல்.’ (2. 45)

நாம் நமது உடல்களுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு விட்டோம்; உடலை உடையவர்களாக இல்லாமல் உடலாகவே ஆகிவிட்டோம். என்னைக் கிள்ளினால் நான் கதறுகிறேன். இது அறிவீனம். ஏனெனில் நான் ஆன்மா. இந்தத் துன்பச் சங்கிலி, கற்பனை, பிராணிகள், தேவர்கள், அசுரர்கள், உலகம் எல்லாமே நாம் நம்மை உடலுடன் ஒன்றுபடுத்திக் கொண்டதன் விளைவு. நான் ஆன்மா. நீங்கள் கிள்ளினால் நான் ஏன் குதிக்க வேண்டும்? இந்த அடிமைத்தனத்தைப் பாருங்கள். உங்களுக்கு வெட்கமில்லையா? நாம் மத உணர்வு கொண்டவர்களாம்! நாம் தத்துவவாதிகளாம்! நாம் ஞானிகளாம்! ஆண்டவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்! நாம் என்னவாயிருக்கிறோம்? நடமாடும் நரகங்கள், ஆம், அப்படித்தான் இருக்கிறோம். பைத்தியக்காரர்கள், ஆம் அப்படித்தான் இருக்கிறோம்! உடல் கருத்தை நம்மால் விட முடியவில்லை. நாம் இந்த மண்ணோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். நமது எண்ணங்கள் வெறும் சுடுகாடுகளே. நாம் உடலை விடும்போது அந்த எண்ணங்களின் அம்சங்கள் ஆயிரக்கணக்காக வந்து நம்மைக் கட்டுகின்றன.

பற்றில்லாமல் யார் வேலை செய்ய முடியும்? இதுதான் முக்கியமான கேள்வி. அவன்தான் தன் வேலை வெற்றி பெற் றாலும் தோல்வியடைந்தாலும் சமநிலையில் இருப்பான். வாழ் நாள் முழுவதும் அவன் செய்த வேலை ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகப் போனாலும் அவனது இதயம் ஒருமுறைகூடக் கலங்கித் துடிப்பதில்லை . ‘அவன்தான் பயன் கருதாமல், செயலுக்காகவே செயல் புரியும் ஞானி. அந்த வழியில் அவன் பிறப்பு இறப்புத் துன்பத்தைக் கடந்து செல்கிறான், முக்தி பெறுகிறான்’. (2.51) இந்தப் பற்றெல்லாம் மாயை என்பதை அப்போது அவன் காண்கிறான். ஆன்மா ஒருபோதும் பற்றுக் கொள்ள இயலாது. அத்தகையவன் சாஸ்திரங்களையும் தத்துவங்களையும் கடந்த நிலைக்குச் செல்கிறான். (2. 52). மனம் மயக்கமுற்று, நூல்களாலும் சாஸ்திரங்களாலும் ஆன சுழலில் கவரப்படுமானால் இந்தச் சாஸ்திரங்களால் என்ன பயன்? ஒன்று இப்படிச் சொல்கிறது, மற்றொன்று அப்படிச் சொல் கிறது. எந்த நூல் சொல்வதை ஏற்பது? தனித்து நில்லுங்கள். உங்கள் ஆன்மாவின் மகிமையைக் காணுங்கள். நீங்களே உழைக்க வேண்டும் என்பதை அறியுங்கள்; அப்போதே நிலைத்த புத்தி உடையவர்கள் ஆவீர்கள். (2. 53)

அர்ஜுனன் கேட்கிறான்: ‘புத்தி நிலைபெற்றவன் யார்?’ (2.54)

கிருஷ்ணர் பதில் கூறுகிறார்: ‘எல்லா ஆசைகளையும் துறந்தவன், எந்தத் தேவையும் இல்லாதவன், இந்த வாழ்க்கையையோ முக்தியையோ தெய்வங்களையோ தொழிலையோ வேண்டாதவன், பூரணத் திருப்தி அடைந்தவன் – அவனது ஆசைகள் அற்றுவிட்டன.’ (2 . 55) அவன் ஆன்மாவின் மகிமையைக் கண்டுவிட்டான். உலகமும் தெய்வங் களும் சொர்க்கமும் தன் ஆன்மாவிலேயே இருப்பதை உணர்ந்து கொண்டான். அப்போது தெய்வங்கள் தெய்வங்களில்லை; சாவு சாவில்லை; வாழ்வு வாழ்வில்லை; எல்லாம் மாறிவிட்டன. ‘யாருடைய புத்தி நிலைபெற்றதாகவும், மனம் துயரத்தில் கலங்காததாகவும் எந்த இன்பத்தையும் நாடாததாகவும் பற்றுகள் அனைத்தும் நீங்கியதாகவும் பயமும் கோபமும் இல்லாததாகவும் இருக்குமோ, அவனே மெய்யுணர்வு பெற்ற ஞானி எனப்படுகிறான்.’ (2.56)

‘ஆமை தன் கால்களை உள்ளே இழுத்துக்கொண்டபின், நீங்கள் எவ்வளவு அடித்தாலும் ஒரு கால்கூட வெளியே வராதது போல், ஞானியால் தன் புலன்களையெல்லாம் உள்ளே இழுத்துக் கொள்ள முடியும்.’ (2. 58) எந்த விருப்பமும் அவனை அசைக்காது. பிரபஞ்சமே இடிந்து விழட்டும்; அவனது மனத்தில் அது ஒரு சிறு அலையைக்கூட எழுப்பாது.

இனி ஒரு முக்கியமான பிரச்சினை எழுகிறது. சிலவேளை களில் மக்கள் பல நாட்கள் தொடர்ந்து பட்டினியிருக்கிறார்கள், மிகக் கொடிய மனிதனும் இருபது நாள் பட்டினி கிடந்தால், சாந்தமாகி விடுகிறான். பட்டினி கிடப்பதும் உடலை வருத்து வதும் மக்களால் உலகெங்கும் செய்யப்படுகின்றன.

கிருஷ்ணரின் கருத்தோ, இவையெல்லாம் பொருளற்ற செயல்கள் என்பதே. உடலை வருத்தும் மனிதனிடமிருந்து அந்த நேரத்திற்குப் புலன் சற்றுப் பின்வாங்கும்; ஆனால் இருபது மடங்கு சக்தியுடன் திரும்பி வரும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இயல்பாக இருங்கள், உடலை வருத்த வேண்டாம். செயல் புரிந்துகொண்டே போங்கள். பற்று ஏற்படாதபடி மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். பற்றின்மை யின் ரகசியத்தை அறிந்து பின்பற்றாத மனிதனது சங்கல்பம் ஒருபோதும் திடமாக நிலைபெறாது.

நான் வெளியே சென்று கண்களைத் திறக்கிறேன். அங்கே ஏதோ ஒன்று இருந்தால், நான் அதைப் பார்த்தாக வேண்டும், பார்க்காமலிருக்க முடியாது. மனம் புலன்களைப் பின்பற்றி ஓடுகிறது. ஆகையால் புலன்கள் இயற்கையைப் பொருட்படுத் தாமலிருக்க வேண்டும்.

‘புலன்களில் கட்டுப்பட்டவனுக்கு இருளாயிருக்கின்ற நேரத்தில், புலன்களை அடக்கியவன் விழித்திருக்கிறான். அது அவனுக்குப் பகல்ஒளியாயிருக்கிறது. எதில் உலகம் விழித்திருக் கிறதோ, அதில் ஞானி உறங்குகிறான்.’ (2 . 69) உலகம் எதில் விழித்துக் கொண்டிருக்கிறது? புலன்களில். உண்ணவும் பருகவும் குழந்தைகளைப் பெறவும் மக்கள் விரும்புகிறார்கள். கடைசியில் நாயைப்போல் சாகிறார்கள். அவர்கள் எப்போதும் புலன்களுக் காக விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மதமும் அதற்காகவே உள்ளது. தங்களுக்கு உதவ பெண்கள், ஏராளமான செல்வம், குழந்தைகள் இவற்றைத் தர ஒரு கடவுளைப் படைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தெய்வீகத் தன்மையைப் பெற ஒரு கடவுள் தேவையில்லை ! ‘எதில் உலகம் முழுதும் விழித்துக் கொண்டிருக்கிறதோ, அதில் ஞானி உறங்கு கிறான். அறிவிலிகள் எதில் உறங்குகிறார்களோ, அதில் ஞானி விழிப்புடன் இருக்கிறான்’ (2. 69); மனிதன் தன்னை ஒரு விலங் காக, ஒரு பறவையாக, ஓர் உடலாகக் காணாமல் எல்லையற்ற, மரணமற்ற, அழிவற்ற ஆன்மாவாகக் காணும் ஒளியுலகில் ஞானி விழித்திருக்கிறான். எதில் அறிவிலிகள் உறக்கத்தில் ஆழ்ந்து, உணர்ந்துகொள்ள நேரமும் புத்தியும் சக்தியும் இல்லாதவர்களாக இருக்கிறார்களோ, அதில் ஞானி விழித்திருக் கிறான். அது அவனுக்குப் பகல் வெளிச்சம்போல் உள்ளது.

‘உலகத்திலுள்ள ஆறுகளெல்லாம் இடையறாது சென்று கடலில் சேர்ந்தபோதிலும், பெருமையும் கம்பீரமும் வாய்ந்த கடலின் இயற்கை நிலைகுலையாமல், மாறுபடாமல் இருப்பது போல், எல்லா புலன்களும் இயற்கையிலிருந்து உணர்ச்சி களைக் கொண்டுவந்த போதிலும் ஞானியின் கடல்போன்ற இதயம் அலையையோ அச்சத்தையோ உணர்வதில்லை.’ (2 .70) கோடிக்கணக்கான ஆறுகளில் துன்பங்கள் வரட்டும், நூற்றுக் கணக்கான ஆறுகளில் இன்பங்கள் வரட்டும்; நான் துன்பத் திற்கும் அடிமையல்ல, இன்பத்திற்கும் அடிமையல்ல!

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 15. கீதை 2

14. கீதை 1

கீதை 1

கீதையைப் புரிந்துகொள்ள அதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்திருப்பது அவசியம். உபநிடதங்களுக்கு ஒரு விளக்கவுரை யாக கீதை விளங்குகிறது. இந்தியாவின் பைபிள்தான் உப நிடதங்கள். புதிய ஏற்பாடு எப்படியோ, அப்படியே இந்துக் களுக்கு உபநிடதங்கள். நூற்றுக்கும் அதிகமான உபநிடதங்கள் உள்ளன. அவற்றுள் சில மிகச் சிறியவை; சில பெரியவை. ஒவ்வொன்றும் தனி நூல். அவை எந்த குருவின் வாழ்வையும் சொல்லவில்லை; தத்துவங்களை மட்டுமே கூறுகின்றன. பொது வாக அரச சபையில், பண்டிதர்களுக்கிடையே நடைபெற்ற விவாதங்களின் சுருக்கெழுத்துக் குறிப்புகள் போலவே அவை உள்ளன.

உபநிடதம் என்ற சொல், அமர்ந்திருத்தல், அதாவது ஒரு குருவின் அருகில் அமர்ந்திருத்தல் என்று பொருள்படுகிறது. உங்களுள், உபநிடதங்கள் சிலவற்றைப் படித்திருப்பவர்களுக்கு, அவை எவ்வாறு சுருக்கெழுத்துக் குறிப்புகளின் தொகுப்புபோல் உள்ளது என்பது புரியும். நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் அவை நினைவிலிருந்து குறித்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். பிரச்சினை என்னவென்றால் அவற்றின் பின்னணியைப் பற்றிச் சொற்பமே நமக்குத் தெரிய வந்துள்ளது. அவற்றின் நல்ல பக்கம் மட்டுமே அங்குக் குறிக்கப்பட்டுள்ளன.

சம்ஸ்கிருதம் கி.மு. 5000-இல் தோன்றியது. அதிலிருந்து குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை உபநிடதங்கள். அவை உண்மையில் எவ்வளவு தொன்மை வாய்ந்தவை என்பது யாருக்கும் தெரியாது. உபநிடதங்களின் கருத்துக்களை எடுத்தாள்கிறது கீதை; சில இடங்களில் சொற் களையும் அப்படியே எடுத்துக் கொள்கிறது. உபநிடதங்கள் விளக்கும் முழுப் பொருளையும் அப்படியே சுருக்கமாக, அடக்க மாக, ஒழுங்காகக் கொண்டுவரும் நோக்கத்துடனே அது தொகுக்கப்பட்டிருக்கிறது.

இந்துக்களின் சாஸ்திரங்கள் வேதங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அந்த நூல் தொகுதிகள் எண்ணற்றவை. அவற்றின் மூலங்களை மட்டும் இங்கே கொண்டு வந்தால்கூட, இந்த அறைக்குள் அவை அடங்காது. அவற்றுள் பல தொலைந்து விட்டன. அவை பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு புரோகிதரின் பொறுப்பில் விடப்பட்டது. அவற்றை மனப்பாடம் செய்வதன்மூலம் அவை அழியாமல் அவர்கள் காத்தனர். அத்தகைய மனிதர்கள் இன்றும் உள்ளனர். ஓசையளவில்கூடச் சிறு பிசகின்றி புத்தகம்புத்தகமாக அவர்கள் ஒப்பிப்பார்கள்.

வேதங்களின் பெரும் பகுதி தொலைந்து போய்விட்டது. எஞ்சியுள்ள சிறு பகுதி மட்டுமே தனியாக ஒரு நூல் நிலையமாக அமையக்கூடியது. இவற்றின் மிகப் பழைய பகுதியில் ரிக்வேதத் துதிகள் அடங்கியுள்ளன. தற்கால ஆராய்ச்சியாளர்கள் வேதப் பகுதிகளுள் எது முந்தியது, எது பிந்தியது என ஒழுங்குபடுத்த முயல்கின்றனர். பைபிளைப் பற்றிய பழைய கருத்தும் இன்றைய அறிஞர்களின் கருத்தும் வேறுபடுவது போலவே, வேதங்களைப் பற்றிய புராதனக் கருத்து, நவீனக் கருத்திலிருந்து முற்றிலும் வேறானது. |

வேதங்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று உபநிடதங்கள் அல்லது ஞான காண்டம், மற்றது கர்ம காண்டம். கர்ம காண்டத்தைச் சிறிது விளக்குவோம். சடங்கு களும் பல தேவதைகளைப் பற்றிய பலவகையான துதிப்பாடல் களும் அதில் உள்ளன. சடங்குகள் பல கிரியைகள் அடங்கியவை. அவற்றுள் சில மிக விரிவானவை. அவற்றைச் செய்யப் பல புரோகிதர்கள் தேவை. சடங்குகளின் விரிவால், புரோகிதத் தொழிலே தனியொரு சாஸ்திரமாயிற்று. படிப்படியாக இந்தத் துதிகளிலும் சடங்குகளிலும் பொதுமக்களுக்கு மதிப்பு வளர்ந்தது. தேவதைகள்கூட மறைந்து, அவர்களது இடத்தை இந்தச் சடங்குகள் பிடித்துக்கொண்டன. இது இந்தியாவில் ஏற்பட்ட ஒரு வினோத வளர்ச்சியாகும்.

வைதீக இந்துக்களில் மீமாம்சகர் என்ற பிரிவினர் தேவதை களை நம்புவதில்லை, மற்றவர்கள் நம்புகின்றனர். வேதங் களிலுள்ள தேவதைகளைப் பற்றிய கருத்து என்னவென்று ஒரு வைதீக இந்துவை இன்று கேட்டால், ஒரு திருப்திகரமான பதிலை அவனால் தர முடியாது. புரோகிதர்கள் இந்தத் துதி களைப் பாடி, அக்கினியில் ஆஹுதி அளிப்பார்கள். அவற்றின் பொருள் என்ன என்று வைதீக இந்துவைக் கேட்டால், துதி களிலுள்ள சொற்களுக்கே பல பயன்களை அளிக்கும் சக்தியுண்டு என்று கூறுவான், அவ்வளவுதான். இதுவரை இருந்த, இயற்கைக்கு உட்பட்ட மற்றும் இயற்கையை மீறிய அனைத்துச் சக்திகளும் அங்கு உள்ளன. வேதங்கள் ஓர் அபூர்வ சக்தி உள்ள வெறும் வார்த்தைகள் மட்டுமே. அவற்றைச் சரி யான முறையில் உச்சரித்தால் விளைவுகளை உருவாக்க வல்லவை. ஓர் உச்சரிப்புத் தவறினாலும் பயன் உண்டாகாது. ஒவ்வொன்றும் சரியாக, முறையாக இருக்க வேண்டும், மற்ற மதங்களில் பிரார்த்தனை என்று அழைக்கப்படுவது இங்கு மறைந்து, வேதங்களே தெய்வங்களாகி விட்டன. வேதங்களில் சொற்களுக்கு எவ்வளவு உயர்வான இடம் அளிக்கப்பட்டது என்பதை இதிலிருந்து நீங்கள் உணரலாம்.

அனாதியான இந்தச் சொற்களிலிருந்தே உலகம் முழுவதும் படைக்கப்பட்டுள்ளது. சொல்லின்றி எண்ணம் இருக்க முடியாது. உலகில் என்னென்ன உள்ளனவோ, அவை எல்லாம் எண்ணத்தின் வெளிப்பாடே எண்ணமோ சொற்களின் மூலம் தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும். தோன்றா நிலையிலிருந்த எண்ணம் எந்தச் சொற்களின் மூலம் வெளிப் பட்டதோ, அந்தச் சொற்களின் தொகுதியே வேதங்கள். இதி லிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், புறவுலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் வேதங்களைச் சார்ந்தே இருக்கிறது. ஏனெனில் ஒரு பொருளைப் பற்றிய எண்ணம் அதைக் குறிக்கும் சொல் இல்லாமல் இருக்க இயலாது. ‘குதிரை’ என்ற சொல் இல்லாவிட்டால் குதிரையைப்பற்றி யாரும் நினைக்க முடியாது. ஆகையால் எண்ணத்திற்கும் சொல்லிற்கும் புறப் பொருளுக்கும் நெருங்கிய உறவு இருக்க வேண்டும். இந்தச் சொற்கள் என்பவை உண்மையில் என்ன? வேதங்களே. அவற்றின் மொழி சம்ஸ் கிருதம் என்றுகூடச் சொல்வதற்கில்லை. அது வேத மொழி, தெய்வ மொழி. அதன் சிதைவே சம்ஸ்கிருதம். அவ்வாறே மற்ற மொழிகளும். வேத மொழியைவிடப் பழைய மொழியில்லை. ‘வேதங்களை எழுதியது யார்?’ என்று நீங்கள் கேட்கலாம். அவை எழுதப்படவில்லை. சொற்களே வேதங்கள். ஒரு சொல்லை நான் பிழையின்றி உச்சரித்தால் அதுவே வேதம். விரும்பிய பலனை அது உடனே அளிக்கும். –

வேதத் தொகுதி என்றென்றும் உள்ளது. உலகம் எல்லாம் அந்தச் சொல்தொகுதியின் வெளிப்பாடே. வெளிப்பட்டுக் காணப்படுகின்ற சக்தி, ஒரு கல்பம் முடியும்போது சூட்சும நிலையை அடைந்து, சொல் வடிவையும், பின்பு எண்ண வடிவையும் அடைகிறது. அடுத்த கல்பத்தில் மீண்டும் எண்ணங்கள் சொல்லாகி, அதிலிருந்து உலகம் பிறக்கிறது. வேதங்களில் அடங்காதது என்ற ஒன்று இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் மன மயக்கம். அப்படி எதுவும் இருக்க முடியாது. at வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை என்பதைப் பல நூல்கள் வலியுறுத்திப் பேசுகின்றன. இந்த நூல்களின் ஆசிரியர்களிடம், வேதங்கள் முதன்முதலில் யாராவது ஒரு மனிதர் மூலமாகத்தான் வெளிப்பட்டிருக்கும் என்று கூறினால், அவர்கள் சிரிப்பார்கள். முதன்முதலில் வேதத்தை வெளியிட்ட யாரைப் பற்றியும் கேள்விப்பட்டதே இல்லை. புத்தரின் உபதேசங்களை எடுத்துக்கொள்ளுங்கள். முற்பிறவிகள் பல வற்றுள் பல தடவை அவர் அதே உபதேசங்களைக் கூறியுள்ளார் என்ற நம்பிக்கை உள்ளது.

‘எங்கள் மதம் சரித்திரபூர்வமானது. எனவே எங்கள் மதமே உண்மை . உங்கள் மதம் தவறு’ என்று கிறிஸ்தவன் கூறினால், அதற்கு மீமாம்சகன், ‘உனது மதம் சரித்திர பூர்வமானது என்றால், ஒரு மனிதர் அதை ஆயிரத்துத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உண்டாக்கினார் என்பதை நீயே ஒப்புக் கொள்கிறாய். ஆனால் எது உண்மையானதோ, அது எல்லை யற்றதாகவும் என்றும் உள்ளதாகவும் இருக்க வேண்டும். அது தான் உண்மையின் ஒரே உரைகல். அது எப்போதும் அழியாமல் என்றும் ஒரேபோலவே இருக்கும். உனது மதம் இன்ன மனித ரால் படைக்கப்பட்டது என்பதை நீயே ஒப்புக்கொள்கிறாய். வேதங்கள் அப்படி ஒரு தீர்க்கதரிசியாலோ வேறு எந்த வழி யிலுமோ உண்டாக்கப் படவில்லை. எல்லையற்ற வார்த்தை களிலிருந்து இயல்பாகவே பிரபஞ்சம் முழுவதும் தோன்றி மறைகிறது’ என்பான்.

தத்துவரீதியாக இது முற்றிலும் சரியே….. ஒலிதான் படைப் பின் ஆரம்பமாக இருக்க வேண்டும். உயிர்களின் படைப்பிற்கு மூல உயிரணுக்கள் இருப்பதுபோல், ஒலிகளுக்கும் மூல ஒலி ஒன்று இருக்க வேண்டும். சொற்களின்றி எண்ணம் இல்லை….. உணர்ச்சிகள், அனுபவங்கள், எண்ணங்கள் இவை எங்கிருக் குமோ அங்கே சொற்களும் இருந்தேயாக வேண்டும். ஆனால் நான்கு புத்தகங்களே வேதம், வேறெதுவும் இல்லை என்று சொல்வதுதான் பிரச்சினை. பௌத்தர்கள், ‘எங்களுடைய வையே வேதங்கள்; அவை பிற்காலத்தில் எங்களுக்கு வெளிப் படுத்தப்பட்டன’ என்று கூறலாம். அவ்வாறு இருக்க முடியாது. இயற்கை அவ்வாறு நடைபெறவில்லை. இயற்கை தன் நியதி களை ஒருபோதும் பகுதிபகுதியாக வெளிப்படுத்துவதில்லை. இன்று ஓர் அங்குலம், நாளை மற்றோர் அங்குலம் என்று புவியீர்ப்புவிசை வெளிப்படவில்லை. ஒவ்வொரு நியதியும் பூரணமானது. நியதியில் பரிணாமம் என்பது இல்லை ; அது ஒரேயடியாகக் கொடுக்கப்பட்டுவிடுகிறது. ‘புதிய மதம், சிறந்த அருளுணர்வு’ என்பனவெல்லாம் வெறும் முட்டாள்தனம். அதற்கு எந்தப் பொருளும் இல்லை . நூறாயிரம் நியதிகள் இருக்கலாம். அவற்றுள் சிலவற்றை இன்று அறிகிறோம், பின்னர் ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கிறோம், அவ்வளவுதான்.

பழங்காலப் புரோகிதர்கள் வேதங்களின் பலத்தால் தேவர் களை அரியாசனத்திலிருந்து இறக்கிவிட்டு, அந்த இடங்களில் தாங்களே அமர்ந்தனர். ‘சொற்களின் ஆற்றல் என்ன என்பது உங்களுக்குத் தெரியாது; அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்களே உலகின் நடமாடும் தெய்வங்கள். எங்களுக்குப் பணம் கொடுங்கள். நாங்கள் வேதச் சொற்களைப் பயன்படுத்தி உங்களுக்கு வேண்டியவை கிடைக்கச் செய்வோம். இந்தச் சொற்களை நீங்கள் உச்சரிக்க முடியுமா? முடியாது. ஏனெனில், சிறு தவறு நிகழ்ந்தாலும், அது எதிரான பலனை உண்டாக்கிவிடும். நீங்கள் செல்வந்தராக, அழகானவராக, நீண்ட ஆயுள் உள்ளவராக, நல்ல கணவரை அடைந்தவராக வேண்டுமா?’ என்றனர் அவர்கள். புரோகிதர் களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுச் சும்மாயிருக்க வேண்டியதுதான்.

இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. வேதங்களுடைய முதற்பகுதியின் லட்சியம், பிற்பகுதியாகிய உபநிடதங்களின் லட்சியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. முதற்பகுதியின் நோக்கம், வேதாந்தம் ஒன்றைத் தவிர உலகிலுள்ள மற்ற மதங்கள் அனைத்தின் நோக்கத்தைப் போலவே உள்ளது; அதாவது இந்த உலகிலும் மறுவுலகிலும் இன்பம் அனுபவிப்பது, கணவன், மனைவி, மக்கள் இவையே. பணத்தைக் கொடுங்கள், புரோகிதர் உங்களுக்கு ஒரு அனுமதிச் சீட்டு தருவார். நீங்கள் சொர்க்கத்தில் இன்ப வாழ்வு வாழலாம், உங்கள் சுற்றத்தாரை யெல்லாம் அங்கே காணலாம். இந்த இன்ப ராட்டினம் முடிவில்லாமல் சுழன்றுகொண்டே இருக்கும். கண்ணீர் இல்லை, அழுகை இல்லை, எல்லாம் சிரிப்புத்தான். எவ்வளவு உண்டாலும் வயிற்றுவலி வராது. எத்தனையோ கேளிக்கைகள் இருந்தாலும், தலைவலியே வராது. அதுவே மனிதனின் உன்னத மான குறிக்கோள் என்று புரோகிதர்கள் கருதினார்கள்.

இதில், உங்கள் நவீனக் கொள்கைகளுக்கு ஒத்துவருகின்ற இன்னொரு கருத்தும் உண்டு. மனிதன் இயற்கையின் அடிமை, என்றும் அடிமையாகவே இருக்க வேண்டும். அதைக் கர்ம நியதி என்கிறோம். கர்ம நியதி என்பது சட்டம். அது எங்கும் பொருந்தும். எல்லாம் கர்மத்தில் கட்டுண்டவை. ‘தப்பித்துக் கொள்ள வழி இல்லையா?’ ‘இல்லை. அடிமைகளாகவே இருங்கள், ஆயுள் முழுவதும் நல்ல அடிமைகளாக இருங்கள். நாங்கள் சொற்களின்மூலம் உங்களுக்கு நன்மை வருமாறும் தீமை வராதிருக்குமாறும் செய்வோம். நீங்கள் எங்களுக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுங்கள்’ என்பதுதான் (மீமாம் சகர்களின்) கொள்கை. இந்தக் குறிக்கோளே எல்லா காலங் களிலும் பொது மக்களுடைய ஆதரவைப் பெற்று வந்திருக்கிறது.

மக்களுள் பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை. சிந்திக்கத் தொடங்கினாலும், மூட நம்பிக்கைகளின் தொகுதி அவர்களைப் படுத்தும் பாடு பயங்கரமானது. அவர்கள் சற்றுப் பலமிழந்தால் வருகிறது அடி; முதுகெலும்பு சுக்கல்சுக்கலாக உடைந்து போகிறது. ஆசை காட்டியும் அச்சுறுத்தியுமே அவர்களை நகர்த்த முடியும், அவர்களாக நகரவே மாட்டார்கள். அவர்களை மிரட்ட வேண்டும்; பயமுறுத்த வேண்டும்; திகிலடையச் செய்ய வேண்டும். அப்போது அவர்கள் என்றென்றும் உங்கள் அடிமை களாக இருப்பார்கள். அவர்கள் வேறொன்றும் செய்ய வேண்டு வதில்லை–பணம் கொடுக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும். மற்ற அனைத்தையும் புரோகிதர்கள் கவனித்துக் கொள் வார்கள்…… மதம் எவ்வளவு எளிதாகிவிடுகிறது. பாருங்கள்! நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. வீட்டிற்குப் போய் சும்மா இருங்கள். யாரோ ஒருவர் உங்களுக்காக எல்லாவற்றை யும் செய்வார். ஐயோ பாவம்! அற்பப் பிராணிகள்!

இன்னொரு வழியும் உள்ளது. உபநிடதங்களின் முடிவுகள் எல்லாம் இதற்கு நேர் எதிரானவை. முதலில், உலகைப் படைப் பவரும் ஆள்பவருமான இறைவனை உபநிடதங்கள் நம்பு கின்றன. பின்னர் கருணை வடிவமான கடவுள்கருத்து வரு கிறது. இது முதற்கருத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. இப் போதும் நாம் புரோகிதர்களின் கருத்தைக் கேள்விப்படு கிறோம் என்றாலும், லட்சியம் மிகவும் சூட்சுமத் தன்மையை அடைந்துள்ளது. பல தெய்வங்களுக்குப் பதிலாக ஒரே கடவுள் கருத்து எழுகிறது.

இரண்டாவதாக, நீங்கள் எல்லோரும் கர்மநியதியில் கட்டுப்பட்டவர்கள் என்பதை உபநிடதங்கள் ஒப்புக்கொள் கின்றன. ஆனால் அதிலிருந்து தப்பும் வழியையும் அவைகாட்டு கின்றன. மனிதனின் குறிக்கோள், விதியைக் கடந்து செல்வது. போகம் ஒருபோதும் குறிக்கோளாக இருக்க முடியாது. ஏனென் றால் போகம் என்பது இயற்கைக்கு உட்பட்ட ஒன்று.

மூன்றாவதாக, யாகங்கள் கேலிக்கூத்து என்று கூறி, உப நிடதங்கள் அவற்றைக் கண்டிக்கின்றன. யாகம், உங்களுக்கு வேண்டுவதையெல்லாம் தரலாம்; ஆனாலும் அது விரும்பத் தக்கதல்ல. ஏனெனில் அதிகம் கிடைக்கக்கிடைக்க, மேலும் அதிகமாக விரும்புவீர்கள். மகிழ்வதும் துயருறுவதுமாக இந்த முடிவற்ற வட்டத்தில் உழன்று கொண்டிருக்கிறீர்கள். நிரந்தர இன்பம் என்ற ஒன்று எங்குமே கிடைக்காது. அது குழந்தையின் வெறும் கனவு மட்டுமே. ஒரே சக்திதான் இன்பமாகவும் துன்பமாகவும் மாறிமாறி வருகிறது.

மன இயல் பற்றிய எனது கருத்தை இன்று நான் சிறிது மாற்றியுள்ளேன். மிகவும் வினோதமான உண்மை ஒன்றை நான் கண்டேன். என் மனத்தில் ஓர் எண்ணம் எழுகிறது; அதை நான் விரும்பவில்லை, வேறு ஒன்றை எண்ணுகிறேன். நான் வேண்டாத எண்ணம் உடனே மறைந்து போய்விடுகிறது. அது என்னவாயிற்று? பதினைந்து நிமிடங்களில் மீண்டும் வெளிவருகிறதே! வந்து என்னை நிலைகுலையச் செய்கிறதே! அது எத்தனை ஆற்றல் பொருந்தியதாக, எத்தனை வேகத்துடன், எவ்வளவு பயங்கரமாக எழுகிறது! என்னைப் பைத்தியமாக்கி விடுகிறதே! அது அடங்கும்போதுதான், அந்த உணர்ச்சி, முன்பு வெறுமனே அடக்கி மட்டுமே வைக்கப்பட்டிருந்தது தெரிகிறது. எழுந்தது எது? நான் செயல் புரிந்து, அனுபவித்துத் தீர்க்க வேண்டிய எனது தீய நினைவுப்பதிவே அது. ‘இயற்கை தன் வழியிலேயே செல்லும். அடக்குதல் என்ன செய்யும்?’-கீதையில் (3.33) இது ஒரு துணிவான கருத்து. அடக்குவதான அந்தப் போராட்டம், முடிவில் ஒரு வீண் முயற்சி என்று தோன்றலாம். உங்களிடம் ஒரே நேரத்தில் நூறாயிரம் ஆசைகள் போட்டி போட்டுக்கொண்டு பொங்கி எழலாம்; நீங்கள் அவற்றை அடக்கலாம். ஆனால் மீண்டும் அவை அனைத்தும் அங்கே வந்து நிற்கும்.

எனினும் நம்பிக்கை இழக்க வேண்டாம். நீங்கள் போதிய ஆற்றல் உடையவர்களானால் உங்கள் உணர்வை இருபது பகுதிகளாக ஒரே காலத்தில் பிரித்துக் கொள்ளலாம். மன இயல் பற்றிய என் கருத்து மாறுகிறது. மனம் வளர்கிறது. அதையே யோகிகள் கூறுகிறார்கள். ஓர் உணர்ச்சி மேலோங்குகிறது; பின்பு அது இன்னொன்றை எழுப்புகிறது. அப்போது, முதல் உணர்ச்சி மறைந்து போகிறது. நீங்கள் கோபம் கொள்கிறீர்கள். பின்பு மகிழ்ச்சியடைகிறீர்கள். அடுத்த கணமே கோபம் மறைந்து விடுகிறது. அந்தக் கோபத்திலிருந்துதான் நீங்கள் அடுத்த நிலையை உருவாக்குகிறீர்கள். இந்த நிலைகளுள் ஒன்றை மற்றொன்றாக மாற்றிக் கொள்ளலாம். நிரந்தர இன்பம் அல்லது நிரந்தரத் துன்பம் என்பதெல்லாம் குழந்தைக் கனவுகள். மனிதனின் குறிக்கோள் சுகமும் அல்ல, துக்கமும் அல்ல. இவை எதிலிருந்து எழுகின்றனவோ அதை நாம் அடக்கியாள வேண்டும். அவற்றின் வேர் எங்கே உள்ளதோ அங்கேயே அவற்றை நாம் அடக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்இதுதான் உபநிடதங்களின் கூற்று.

இன்னொரு வேறுபாடு: உபநிடதங்கள் எல்லா சடங்கு களையும், முக்கியமாக மிருக பலியுடன் இணைந்தவற்றை மறுக்கின்றன; அவை முட்டாள்தனம் என்கின்றன. இன்ன விலங்கைக் கொன்றால் இன்ன பலன் கிடைக்கும் என்று பழைய தத்துவவாதிகளுள் ஒரு பிரிவினர் கூறுகின்றனர். ‘பிராணியைக் கொன்ற பாவம் இருக்கிறதே, அதற்காக நீங்கள் துன்பம் அனுபவிக்கத்தானே வேண்டும்’ என்று நீங்கள் கூற லாம். ‘இது வெற்றுப் பேச்சு. எது சரி, எது தவறு என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்கள் மனம் அவ்வாறு கூறு கிறதா? உங்கள் மனம் கூறுவதைப்பற்றி யாருக்குக் கவலை? என்ன மதிகெட்ட பேச்சுப் பேசுகிறீர்கள்? உங்கள் மனம் சாஸ்திரத்திற்கு எதிராகச் செயல்படுகிறது. உங்கள் மனம் ஒன்று சொல்லி, வேதங்கள் வேறொன்றைச் சொன்னால், உங்கள் மனத்தை ஒதுக்கிவிட்டு, வேதங்களை நம்புங்கள். ஒரு மனிதனைக் கொல்வது சரி என்று அவை கூறினால் அதுதான் சரி’ என்பார்கள் அவர்கள். ‘என் மனசாட்சி வேறுவிதமாகக் கூறுகிறது’ என்று நீங்கள் கூறினால், அது சரியல்ல.

ஒரு புத்தகம் என்றென்றும் உண்மையான சொற்கள் அடங்கியது, புனிதமானது என்று நீங்கள் நம்பத் தொடங்கு கின்ற அந்தக் கணமே கேள்வி கேட்பதை நிறுத்திவிட வேண்டும். நீங்கள் உங்கள் பைபிளில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அதே வேளையில் ‘ஆகா! எவ்வளவு அதிசயமான வார்த்தைகள்! எவ்வளவு உண்மையானவை! நன்மை பயப்பவை!’ என்றும் சொல்கிறீர்கள். பைபிள் கடவுளின் வார்த்தை என்று நம்பினால், பிறகு அதைச் சீர்தூக்கித் தீர்ப்புக் கூற உங்களுக்கு அதிகாரம் இல்லை. எப்போது நீங்கள் சீர்தூக்கிப் பார்க்கிறீர்களோ, அப் போது நீங்கள் பைபிளைவிட உயர்ந்தவர்களாகி விட்டீர்கள். அப்போது பைபிளால் உங்களுக்கு என்ன பயன்? புரோகிதர் களோ, ‘உங்கள் பைபிளாகட்டும் அல்லது வேறு எதுவும் ஆகட்டும், எதனுடனும் நாங்கள் வேதங்களை ஒப்பிட முடி யாது. ஒப்பிடுவதில் பயனில்லை. ஏனென்றால் எது பிரமாணம் என்பதுதான் கேள்வி. அதுதான் முடிவு. ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று நீங்கள் எண்ணினால், வேதங்களின்படி அதைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்கிறார்கள்.
உபநிடதங்கள் இதை நம்பினாலும் இதைவிட உயர்ந்த குறிக்கோளும் அவற்றிற்கு உள்ளது. ‘வேதங்களைப் புறக் கணிப்பது அவற்றின் நோக்கம் அல்ல என்பது ஒரு பக்கம் இருக்க, மிருகங்களைக் கொன்று வேள்வி செய்வதையும், மக்களின் பணத்தைப் புரோகிதர்கள் கொள்ளையடிப்பதையும் அவை விரும்பவில்லை. மன இயலின்படி எல்லாம் ஒன்றுதான். வேறுபாடெல்லாம் ஆன்மாவின் இயல்பைப் பற்றிய தத்துவ விளக்கங்களில்தான். ஆன்மாவிற்கு உடலும் மனமும் உண்டா? கட்டளை நரம்புகள், உணர்ச்சி நரம்புகள் என்று வெறும் நரம்புத் தொகுதிதானா மனம்? மனஇயலை முழுமையான விஞ்ஞானம் என்று எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். அதில் எந்த மாறுபாடும் இருக்க முடியாது. சச்சரவெல்லாம் ஆன்மாவின் இயல்பு, கடவுள் போன்ற தத்துவங்களின் விஷயத்திலேயே.

புரோகிதர்களுக்கும் உபநிடதங்களுக்கும் இன்னொரு பெரிய வேறுபாடு உள்ளது. உபநிடதங்கள் துறக்கச் சொல் கின்றன. எல்லாவற்றிற்கும் உரைகல் அதுவே. அனைத்தையும் துறந்துவிடு. மனத்தின் படைப்புச் சக்திதான், நமக்கு இந்தத் தளைகளை எல்லாம் கொண்டு வருகிறது. அமைதியாக இருக்கும்போது மனம் அதன் உண்மை இயல்பில் திகழ்கிறது. மனத்தை அமைதிப் படுத்தினால் அந்தக் கணமே நீங்கள் உண்மையை அறிவீர்கள். மனத்தை எது சுற்றிச் சுழலச் செய் கிறது? கற்பனையும் படைப்புச் சக்தியுமே. படைப்பதை நிறுத்துங்கள். உண்மையை உணர்வீர்கள். படைப்புச் சக்தி அனைத்தும் தடைப்பட வேண்டும். அந்தக் கணமே உண்மை உங்களுக்கு விளங்கும்.

மாறாக, புரோகிதர்கள் படைப்பைத்தான் ஆதரிக்கிறார் கள். படைப்புச் செயல்பாடு இல்லாத ஒரு பிராணி இனத்தை எண்ணிப் பாருங்கள். அதை எண்ணிப் பார்க்க முடியாது. ஒரு நிலையான சமுதாயத்தை உருவாக்க, மக்களுக்கு ஒரு திட்டம் வேண்டியிருந்தது. கட்டுப்பாடாகத் தேர்ந்தெடுக்கும் ஒரு திட்டத்தை அதற்காக ஏற்றுக்கொண்டார்கள். உதாரணமாக, குருடர்களும் முடவர்களும் மணம் செய்துகொள்ளக் கூடாது என்ற விதியைக் கூறலாம். இதனால் உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அங்கவீனர்கள் குறைவு; வலிப்பு நோயாளி களும் பைத்தியக்காரர்களும் மிகக் குறைவு. இது தேர்ந்தெடுக்கும் கட்டுப்பாட்டினால் ஏற்படுகிறது. ‘அத்தகையோர் துறவி களாகப் போகட்டும்’ என்று புரோகிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் உபநிடதங்களோ, ‘அது வேண்டவே வேண்டாம். உலகின் சிறந்த புத்தம்புதிய பூக்களே வழிபாட்டுப் பீடத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். உரம் படைத்த நெஞ்சும், வலிமை மிக்க உடலும் உள்ள, ஆற்றல் மிகப் பெற்ற இளைஞர்களே உண்மைக்காகப் பாடுபட வேண்டும்’ என்று கூறுகின்றன. இத்தகைய கருத்துவேற்றுமைகளால் அவர்கள் ஏற்கனவே தனி ஜாதியாகி விட்டார்கள் என்பதை முன்பே கூறினேன்.

இரண்டாவது, அரச ஜாதி. உபநிடதங்களிலுள்ள தத்துவங் களெல்லாம் அரசர்களுடைய மூளைகளில் எழுந்தவை; புரோகிதர்களிடமிருந்து பிறந்தவை அல்ல. ஒவ்வொரு மதப் போராட்டத்திலும் ஊடே ஒரு பொருளாதாரப்போராட்டமும் உண்டு. மனிதன் எனப்படும் பிராணிக்கு மத உணர்வு சிறிது இருந்தாலும், அவனுக்குப் பொருளாதாரமே வழிகாட்டி. தனி மனிதன் வேறு ஏதாவது ஒன்றால் இயக்கப்படலாம்; ஆனால் மனித சமுதாயம் என்று மொத்தமாக எடுத்துக்கொண்டால், பொருளாதார நோக்கம் இல்லாமல் அது அசைந்ததில்லை. உங்கள் மதம் எல்லா அம்சங்களிலும் பூரணத்துவம் பெறாததாக இருக்கலாம்; ஆனால் அதற்குப் பொருளாதார அடிப்படை இருந்து, ஆர்வத்துடன் பிரச்சாரம் செய்பவர்களும் இருந்தால், ஒரு நாடு முழுவதையும் வசப்படுத்திவிடலாம்.

பொருளாதார மதிப்பு இருக்கின்ற மதமே வெற்றி பெறும். ஆயிரக்கணக்கான ஒரேவித மதப் பிரிவுகள் ஆதிக்கத்திற்குப் பாடுபடலாம். ஆனால் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப் பவைகளே ஆதிக்கத்தைப் பெறுகின்றன. மனிதனுக்கு வயிறு தான் வழிகாட்டி. அவன் நடக்கும்போது நீங்கள் கவனித் ததில்லையா? வயிறுதான் முன்னே போகிறது, தலை பின்னேதான் வருகிறது. தலை முன்னே போகப் பல யுகங்கள் ஆகும். அறுபது வயதாகும்போது மனிதன் உலகிலிருந்து வெளியேறுமாறு அழைக்கப்படுகிறான். வாழ்க்கையே ஒரு மாயை. உள்ளதை உள்ளபடி நீங்கள் காணத் தொடங்கும் அந்த வேளையில் நீங்கள் கவர்ந்து செல்லப்படுகிறீர்கள். வயிறு முன்னே சென்றதுவரை எல்லாம் ஒழுங்காகச் சென்றது. ஆனால் பிள்ளைக் கனவுகள் எல்லாம் கலைந்து, நீங்கள் உள்ளதை உள்ளபடி காணத் தொடங்கும்போது தலை முன்னே போகிறது. தலை முன்னே செல்ல ஆரம்பிக்கும் அதேவேளை யில் நீங்கள் வெளியே போய்விடுகிறீர்கள்.

உபநிடத மதத்தை மக்களிடையே பரப்புவது மிகவும் கடினமான செயல். அதில் பொருளாதார அம்சம் மிகக் குறைவு; ஆனால் பிறர் நலம் கருதும் அம்சம் அதிகமாக உள்ளது. உபநிடத உண்மைகள் செல்வாக்கு மிகுந்த அரசர்களால் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும், அவற்றிற்கும் அரசுரிமைக்கும் நெடுந் தூரம். ஆகையால் போராட்டம் கடுமையாயிற்று. அதன் உச்சகட்டம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்டது. அதாவது புத்த மதம் தோன்றியது. புத்த மதத்தின் வித்து இதுதான்-அரசர்களுக்கும் புரோகிதர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவு. இந்தச் சச்சரவால் தர்மம் சீர்குலைந்தது. ஒரு பிரிவினர் மதத்தையே தியாகம் செய்ய விழைந்தனர். மறுபிரிவினர் வேள்வி களையும் வேதத்தில் கூறப்பட்டுள்ள தெய்வங்களையும் இறுகப் பிடித்துக்கொண்டனர். புத்த மதம் பொதுமக்களின் தளைகளைக் களைந்தது. எல்லா ஜாதிகளும் பிரிவுகளும் ஒரு நிமிடத்தில் சமமாயின. உன்னதமான மதக் கருத்துக்கள் இந்தியாவில் உள்ளன. ஆனால் அவை இனிதான் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் அவற்றால் பயனில்லை.

ஒவ்வொரு நாட்டிலும் மாறுதல்களை எதிர்ப்பவர்கள் புரோகிதர்களே. அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, அவர் களுடைய பிழைப்பு; மற்றொன்று, அவர்கள் மக்கள் போகும் வழியில்தான் போக வேண்டும். எல்லா புரோகிதர்களும் வலிமை வாய்ந்தவர்கள் அல்ல. ‘இரண்டாயிரம் தெய்வங்களைக் கற்பியுங்கள்’ என்று மக்கள் சொன்னால், அவர்கள் அப்படியே செய்வார்கள். பணம் கொடுக்கின்ற சமுதாயத்திற்கு அவர்கள் ஊழியர்கள். கடவுள் அவர்களுக்குப் பணம் கொடுப்பதில்லை. ஆகையால் நீங்கள் புரோகிதர்களைக் குறைகூறுமுன் உங் களையே குறை கூறிக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி எத்தகையதோ, அத்தகைய அரசாங்கமும் மதமும் புரோகித முமே உங்களுக்குக் கிடைக்கும். அதற்கு மேலானது கிடைக்காது.
இவ்வாறு இந்தியாவில் தொடங்கிய பெரும் போராட்டம், கீதையில் அதன் உச்சகட்டங்களுள் ஒன்றை அடைகிறது. இந்தியா முழுவதும் இந்த இரு பிரிவினருக்கிடையே பிளவு பட்டுப் போகும் என்ற பயம் தோன்றியபோது கிருஷ்ணர் தோன்றினார். கீதையில் அவர் சடங்குகளுக்கும் புரோகிதர் களுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு சமரசத்தை உண் டாக்க முயல்கிறார். நீங்கள் ஏசுவை வழிபடுவது போலவே கிருஷ்ணரும் அன்புடன் வழிபடப்படுகிறார். காலத்தில்தான் வேற்றுமை. நீங்கள் ஏசுவின் பிறந்த நாளைக் கொண்டாடுவது போல் இந்துக்கள் கிருஷ்ணரின் பிறந்த தினத்தைக் கொண் டாடுகிறார்கள். அவர் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவரது வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்தது. அவற்றுள் சில, ஏசுவின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுடன் மிகவும் ஒத்திருக்கின்றன. குழந்தை பிறந்தது சிறையில்; தந்தை குழந்தையை எடுத்துச் சென்று இடையர் குலத்தில் விடுகிறார்; அந்த ஆண்டு பிறந்த குழந்தைகளெல்லாம் கொல்லப்படு கின்றன; அவரும் முடிவில் கொல்லப்படுகிறார். அவரது விதி அதுவாக இருந்தது.

கிருஷ்ணர் திருமணம் செய்து கொண்டவர். அவரைப்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. அவற்றில் எனக்கு அவ் வளவு அக்கறையில்லை. இந்துக்கள் கதை சொல்வதில் வல்ல வர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே! கிறிஸ்தவப் பாதிரிகள் பைபிளிலிருந்து ஒரு கதை சொன்னால், இந்துக்கள் இருபது கதைகள் சொல்வார்கள். திமிங்கலம் ஜோனாவை விழுங்கிற்று என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஒரு மனிதன் யானை யையே விழுங்கினான் என்று இந்துக்கள் சொல்வார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே நான் கிருஷ்ணரின் வரலாற்றைக் கேட்டிருக்கிறேன். எந்த நிரூபணமும் இன்றியே, நான் அவர் வாழ்ந்ததை ஒப்புக்கொள்கிறேன். அவர் விட்டுச் சென்றுள்ள கீதை ஓர் அற்புத நூல்

ஒரு மனிதனைப் பற்றிய கட்டுக்கதைகளை ஆராய்ந்தால் அவனது குணநலன்களை அறிந்துகொள்ளலாம் என்று நான் ஏற்கனவே கூறினேன். கட்டுக்கதைகள் அணிகலன் போன்றவை. அவையெல்லாம் மெருகிட்டுச் சீர்படுத்தப்பட்டு, குணங் களுடன் ஒத்துவரும்படிச் செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காண லாம். எடுத்துக்காட்டாக, புத்தரைப் பாருங்கள். அவரது வாழ்வின் மையக் கருத்து தியாகம். அவரைப்பற்றி ஆயிரக் கணக்கான கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் முக்கிய மாக அவரது தியாகத்தைப்பற்றிக் கூறுவனவாகவே உள்ளன. லிங்கனைப்பற்றி ஆயிரக்கணக்கான கதைகள் உண்டு. ஒவ் வொன்றும் அவரது குணங்களுள் ஒன்றைப் பற்றியே கூறும். எல்லா கதைகளையும் படித்து அவற்றுள் ஊடுருவி நிற்கும் பொதுக் கருத்தைக் கண்டுபிடித்தால் அதுவே அந்த மனிதரின் முக்கியக் குணமாக இருக்கும். பற்றின்மை என்பதே கிருஷ் ணரின் மையக் கருத்து. அவருக்கு எதுவும் தேவை இருந்த தில்லை. அவர் எதையும் வேண்டுவதில்லை. அவர் செயலுக் காகவே செயல்புரிந்தார். ‘செயலுக்காகவே செயல்புரி. வழி பாட்டிற்காகவே வழிபடு. நன்மை செய்வது நல்லது, எனவே நன்மை செய்; வேறு ஒன்றும் கேட்காதே’ அதுவே அவரது குணமாக இருந்திருக்க வேண்டும். இல்லாவிடில் இந்தக் கதைகள் அனைத்தும் பற்றின்மை என்ற ஒரு கருத்தையே சுற்றி அமை யாது. கீதை மட்டுமே அவரது உபதேசம் என்பதில்லை.

எனக்குத் தெரிந்த மனிதர்களுள் எல்லா வகையிலும் பூரணத்துவம் எய்திவர் அவர். மூளையும் இதயமும் கைகளும் வியக்கத்தக்க முறையில் ஒருங்கிணைந்து அவரிடம் செயல் பட்டன. அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அவர் சிறந்த மனிதராக, போர்வீரராக, அமைச்சராக, அல்லது வேறு எவ்வாறாகவேனும் உயிர்த்துடிப்பு ததும்பும் செயல்பாடு நிறைந்தவராகக் காணப்படுகிறார். ஒரு மாமனிதராக, ஓர் அறிஞராக, ஒரு கவிஞராக அவர் உயர்ந்து நிற்கிறார். பலவகைப் பட்ட இந்த அற்புதச் செயல்திறனும், அறிவுத்திறன் மற்றும் உணர்ச்சித்திறனின் சங்கல்பமும் கீதை மற்றும் பல நூல்களிலும் காணப்படுகிறது. ஒப்புயர்வற்ற அதிசயமான இதயம், அழகு மிக்கச் சொல்வண்ணம், அதை வேறெதுவும் நெருங்க முடியாது. அவரது மகத்தான செயல்திறனின் சுவடு இன்னும் அழியாமல் இருக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டன. கோடிக் கணக்கான மக்களின்மீது இன்றும் அவரது தாக்கம் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அவரது ஆதிக்கம் உலகம் முழுவதிலும் எவ்வளவு பரவியிருக்கிறது என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பரிபூரணமாகத் தெளிந்த அவரது புத்திக்கு எனது வணக்கங்கள். அந்த மூளையில் ஒட்டடை மண்டிக் கிடக்கவில்லை; மூட நம்பிக்கையில்லை. ஒவ்வொன்றின் பயனும் அவருக்குத் தெரியும். ஒவ்வொன்றிற்கும் உரிய இடத்தை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது அவர் வருகிறார். வாய்ச்சொல் வீரர்கள் எங்கும் போகிறார்கள்; வேதங்களின் உட்பொருள் முதலியவற்றைப்பற்றி விவாதிக் கிறார்கள்; ஆனால் உண்மையை மட்டும் அறிவதில்லை. ஏமாற்றுக்காரர்களைவிட அவர்கள் எந்தவகையிலும் சிறந்த வர்கள் அல்ல. வேதங்களில் மூட நம்பிக்கைக்கும் அறியாமைக்கும்கூட இடமுண்டு. ரகசியம் என்னவென்றால், ஒவ்வொன்றிற்கும் தகுதியான ஓர் இடம் வேண்டும் என்பதே.

அந்த இதயம்! புத்தருக்கு நெடுங்காலத்திற்கு முன்பே மதத்தின் கதவை ஒவ்வொரு ஜாதிக்கும் திறந்து வைத்த முதல் மனிதர் அவர்! அந்த அற்புத மனம்! அந்த வியத்தகு உழைப்பு நிறைந்த வாழ்க்கை! புத்தரின் செயல்முறை ஒரு நிலையில் அமைந்தவை; அதாவது குரு நிலையில் அமைந்தவை. மனைவி யையும் குழந்தையையும் வைத்துக்கொண்டே அவரால் குரு வாக முடியவில்லை. கிருஷ்ணரோ போர்க்களத்தின் நடுவில் உபதேசம் செய்தார். ‘இடையீடற்ற செயல்பாட்டின் நடுவில் உன்னதமான அமைதியையும், உன்னதமான அமைதியில் இடை யீடற்ற செயல்பாட்டையும் காண்பவனே யோகி, சிறந்த அறிவாளி’. (4. 18) தம்மைச் சுற்றி அம்புகள் பாய்ந்து செல்வது கூட அவருக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவர் வாழ்வையும் சாவையும் பற்றிய பிரச்சினைகளைச் சாந்தமாகவும் அமைதியாகவும் அலசிக்கொண்டே போகிறார். ஒவ்வொரு தீர்க்கதரிசியின் உபதேசத்திற்கும் அந்தத் தீர்க்கதரிசியே சிறந்த விளக்கம். புதிய ஏற்பாட்டின் கோட்பாடு என்ன என்பதை அறிய நீங்கள் யாரோ ஒருவரிடம் போகிறீர்கள். ஆனால் செய்ய வேண்டுவது என்ன? திரும்பத்திரும்ப பைபிளை வாசித்து, அதன் கருத்தை ஏசுவின் வாழ்க்கை ஒளியில் அறிந்து கொள்ள முயல்வதே. மாமனிதர்களும் சிந்திக்கிறார்கள்; நீங்களும் நானும்கூடச் சிந்திக்கிறோம். ஆனால் ஒரு வேற்றுமை உள்ளது. நாம் சிந்திப்பதை நமது உடல் பின்பற்றுவதில்லை; நம் செயல்கள் எண்ணங்களுடன் இயைந்து போவதில்லை; நமது சொற்கள் வேதங்களின் சொற்களைப்போல் ஆற்றல் பெறவில்லை. அவர்கள் எது எண்ணினாலும் உடனே நிறை வேறும். ‘இதை நான் செய்வேன்’ என்று அவர்கள் கூறினால், உடல் அப்படியே செய்கிறது. அது பரிபூரணமான கீழ்ப்படிதல்! அதுதான் முடிவு. நாமே கடவுள் என்று நீங்கள் ஒரு நொடியில் நினைத்துவிடலாம். ஆனால் அப்படியே கடவுளாகி விடுவ தில்லை. சிக்கல் அங்குதான். அவர்கள் நினைத்தபடி ஆகி றார்கள். நாம் படிப்படியாகத்தான் ஆவோம்.

இதுவரை கூறியது கிருஷ்ணரையும் அவர் காலத்தையும் பற்றியது. அடுத்த உரையில் அவரது நூலைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்வோம்.

மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 14. கீதை 1