12. கிருஷ்ணர்

கிருஷ்ணர்

கலிபோர்னியா, 1 ஏப்ரல் 1900

எந்தச் சூழ்நிலைகளின் காரணமாக இந்தியாவில் புத்த மதம் தோன்றியதோ, கிட்டத்தட்ட அதே சூழ்நிலைகள் கிருஷ்ணர் தோன்றியபோதும் இருந்தது. அது மட்டுமல்ல, அன்றைய நிகழ்ச்சிகள் நம் காலத்திலும் நடப்பதைக் காண் கிறோம்.

ஒரு குறிப்பிட்ட லட்சியம் இருக்கிறது. அதேவேளையில் அந்த லட்சியத்தைப் பின்பற்ற முடியாத மிகப் பெரும்பான்மை யோரும் அதை அறிவினால்கூட கிரகித்துக்கொள்ள முடியாத வர்களும் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்….. பலசாலிகள் லட்சியத்தின்படி நடக்கிறார்கள். பல நேரங்களில் அவர்களுக்குப் பலவீனர்கள்மீது எந்தப் பரிவும் இருப்பதில்லை. பலசாலிகளுக்குப் பலவீனர்கள் பிச்சைக்காரர்களாகவே படு கிறார்கள். பலசாலிகள் முன்னேறுகிறார்கள்….. பலவீனர்களுக்கு அனுதாபத்துடன் உதவுவதே நாம் கொள்கின்ற மிக உயர்ந்த நிலையாக இருக்கும். ஆனால் பலவேளைகளில் பலவீனர் களிடம் அனுதாபம் கொள்வதைத் தத்துவவாதி தடுக்கிறார். நமது எல்லையற்ற வாழ்க்கை இங்குள்ள சில வருட வாழ்க்கையைக் கொண்டுதான் தீர்மானிக்கப்படப் போகிறது என்கிற கொள்கைப்படி பார்த்தால்….. நாம் நம்பிக்கை இழக் கிறோம்…… பலவீனர்களைத் திரும்பிப் பார்க்கக்கூட நமக்கு நேரமில்லை .

ஆனால் நிலைமை இப்படியில்லை என்றால் நாம் படிக்க வேண்டிய எத்தனையோ பள்ளிகளில் இந்த உலகமும் ஒன்று என்பது உண்மையானால், நம்முடைய எல்லையற்ற வாழ்க்கை எல்லையற்ற நியதியால் உருவாக்கப்பட்டு, செம்மைப்படுத்தப் பட்டு வழிநடத்தப்படுகிறது என்பது உண்மையானால், ஒவ் வொருவருக்கும் எல்லையற்ற வாய்ப்புகள் உள்ளன என்பது உண்மையானால் நாம் அவசரப்படத் தேவையில்லை. அனு தாபப்படுவதற்கும், திரும்பிப் பார்ப்பதற்கும், பலவீனர்களுக்குக் கைகொடுத்துத் தூக்கிவிடுவதற்கும் நமக்கு நேரம் இருக்கிறது.

புத்த மதத்தில் இரண்டு சம்ஸ்கிருதச் சொற்களைக் காண் கிறோம். ஒன்றை மதம் (Religion) என்றும், இன்னொன்றை மதப் பிரிவு (Sect) என்றும் மொழிபெயர்க்கலாம். ஆனால் விந்தை என்னவென்றால் கிருஷ்ணரின் சீடர்களும் சந்ததி யினரும் தங்கள் மதத்திற்கு ஒரு பெயரும் வைக்கவில்லை . வெளிநாட்டினர் அதை இந்து மதம் என்றும், பிராமண மதம் என்றும் அழைத்தனர்.

ஒரு மதம் இருக்கிறது, அதற்குப் பல பிரிவுகள் இருக் கின்றன. அதற்கு ஒரு பெயரைக் கொடுத்து, அதைத் தனிமைப் படுத்தி, மற்றவற்றிலிருந்து பிரிக்கும்போது அது ஒரு பிரிவாகி விடுகிறது; அதன்பிறகு அது மதம் அல்ல. ஒரு பிரிவு, தான் உண்மை என்று நினைக்கின்ற ஒன்றைக் கூறி அதுதான் உண்மை, வேறு எங்குமே உண்மையில்லை என்று கூறுகிறது. உலகில் ஒரு மதம்தான் இருந்து வந்திருக்கிறது, இன்னும் இருக்கிறது என்றே மதம் நம்புகிறது. ஒருபோதும் இரண்டு மதங்கள் இருந்ததில்லை. ஒரே மதம்தான் பல இடங்களில் பலவிதமாக வெளிப்பட்டுள்ளது. லட்சியத்தையும் மனித சமுதாயத்தின் செயல்படு எல்லையையும் சரியாகப் புரிந்துகொள்வதுதான் நமது வேலை.

கிருஷ்ணர் செய்த பெரும் செயல் இதுதான்: நமது பார்வையைத் தெளிவாக்கி, மனித சமுதாயம் முன்னேறுவதைப் பரந்த நோக்குடன் பார்க்கும்படிச் செய்தார். எல்லோரிடமும் உண்மையைக் காணும் அளவுக்கு விரிந்திருந்த முதல் இதயம் அவருடையதே. எல்லோரிடமும் இனிமையான வார்த்தை களைப் பேசிய முதல் உதடுகளும் அவருடையதே.

புத்தர் பிறப்பதற்குச் சுமார் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணர் தோன்றினார்…… அவர் இருந்ததாகவே பலர் நம்புவதில்லை. சூரிய வழிபாட்டிலிருந்தே (கிருஷ்ண வழிபாடு) தோன்றியது என்று சிலர் நினைக்கிறார்கள். கிருஷ்ணர்கள் பலர் இருந்திருப்பதாகத் தெரிகிறது. ஒருவர் உபநிடதங்களில் வருகிறார், இன்னொருவர் அரசராக இருந் தார், இன்னும் ஒருவர் தளபதியாக இருந்தார். அனைவரையும் ஒரே கிருஷ்ணராகச் செய்திருக்கிறார்கள். அது பெரிய விஷயம் அல்ல. உண்மை என்னவென்றால் ஆன்மீகத்தில் தனிப்பெருமை யுடன் ஒருவர் தோன்றுகிறார். உடனே அவர் பெயரில் பல கட்டுக்கதைகள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் எல்லா நூல் களையும் கதைகளையும் அவருடைய குணச் சிறப்புக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் வரும் எல்லா கதைகளும், ஏசுவின் ஒப்புக்கொள்ளப்பட்ட வாழ்க்கைக்கும் குணச்சிறப்புக்கும் ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். புத்தரைப் பற்றிய எல்லா இந்தியக் கதைகளிலும் அவரது வாழ்க்கையின் மைய அம்சம் நிலையாக இருக்கிறது அதுதான் பிறருக்காக அவரது தியாகம்……

கிருஷ்ணரின் செய்தியில்….. இரண்டு கருத்துக்கள் மேலோங்கி நிற்பதைக் காண்கிறோம். முதலாவது, பல்வேறு கருத்துக்களின் சமரசம்; இரண்டாவது, பற்றின்மை . அரியாசனத்தில் அமர்ந்து, படைகளை நடத்திக்கொண்டு, நாடுகளுக்காகப் பெரிய திட்டங்களைத் தீட்டிக் கொண்டுகூட ஒருவன் மிக உயர்ந்த லட்சியமான நிறைநிலையை அடையலாம். உண்மையில் கிருஷ்ணரின் பெரிய உபதேசம் போர்க்களத்தில் தான் செய்யப்பட்டது.

பழைய புரோகிதர்களின் பொருளற்ற ஆடம்பரச் சடங்கு களின் பயனற்ற தன்மையை கிருஷ்ணர் கண்டார், எனினும் அவற்றில் சில நன்மை இருப்பது அவருக்குத் தெரிந்தது.

நீங்கள் வலிமை படைத்தவராக இருந்தால் நல்லது. ஆனால் உங்களைப்போல் வலிமை இல்லாதவர்களைச் சபிக்காதீர்கள்….. ஒவ்வொருவரும் மக்களைப் பார்த்து, ‘நீங்கள் பயனற்றவர்கள்’ என்று சொல்கிறார்கள். ‘உனக்கு உதவி செய்ய முடியாத நான் தான் பயனற்றவன்’ என்று யார் சொல்கிறார்கள்? மக்கள் தங்கள் சக்திக்கும் பொருளுக்கும் அறிவுக்கும் தக்கவாறு சரி யாகத்தான் செயல்படுகிறார்கள். என் நிலைக்கு அவர்களை உயர்த்த முடியாத நான்தான் உதவாக்கரை.

ஆகவே சடங்குகள், பல தேவதை வழிபாடு, புராணங்கள் எதுவும் தவறில்லை என்கிறார் கிருஷ்ணர்… ஏன்? ஏனெனில் எல்லாம் ஒரே லட்சியத்திற்குத்தான் இட்டுச் செல்கின்றன. சடங்குகள், சாஸ்திரங்கள், உருவங்கள் எல்லாம் சங்கிலியின் கண்ணிகள். அதைப் பிடித்துக்கொள், அதுதான் முக்கியம். நீ உண்மையாக இருந்து, ஒரு கண்ணியைப் பற்றிக் கொண்டிருந் தாயானால் அதை விட்டுவிடாதே, மீதி தானே உன்னிடம் வரும். (ஆனால் மக்கள்) அதைப் பிடிப்பதில்லை . எதைப் பிடிப்பது என்பதைப்பற்றிச் சண்டை போட்டுக்கொண்டு காலத்தை வீணாக்குகிறார்கள், ஆனால் எதையும் பிடிப்ப தில்லை….. உண்மை வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் அதை அடைய விரும்புவதில்லை. வெறுமனே அதைப்பற்றி ஆராய்வதில் இன்பம் காண விரும்புகிறோம் நாம். நமக்கு நிறைய சக்தி இருக்கிறது. அதை இப்படிச் செலவழிக்கிறோம். அதனால்தான் பொது மையத்திலிருந்து நீட்டிக் கொண்டிருக் கின்ற சங்கிலிகளில் ஏதாவது ஒன்றைப் பற்றுங்கள் என்று கிருஷ்ணர் கூறுகிறார். எந்த அடி எடுத்து வைப்பதும் இன்னொன்றைவிட உயர்ந்ததல்ல….. அது உண்மையாக இருக்கும்வரை எந்த மதக் கருத்தையும் குறை கூறாதீர்கள். ஏதாவது ஒரு கண்ணியைப் பற்றுங்கள். அது உங்களை மையத் திற்கு இட்டுச் செல்லும். மற்றவற்றை உங்கள் இதயமே உங் களுக்குச் சொல்லிக் கொடுக்கும். உள்ளே உள்ள ஆசிரியர் எல்லா கொள்கைகளையும் எல்லா தத்துவங்களையும் சொல்லிக் கொடுப்பார்……

ஏசுவைப்போல் கிருஷ்ணரும் தம்மைக் கடவுள் என்று கூறுகிறார். தம்மில் அவர் கடவுளைப் பார்க்கிறார். ‘என் பாதையிலிருந்து யாரும் ஒருநாள் கூட விலக முடியாது. எல்லோரும் என்னிடம் வந்தாக வேண்டும். யார் எந்த உருவில் என்னை வழிபட விரும்பினாலும் அந்த உருவில் அவனுக்கு நான் சிரத்தையைக் கொடுக்கிறேன். அதன்மூலம் அவனை நான் சந்திக்கிறேன்….’ (4. 11) என்று அவர் கூறுகிறார், அவருடைய இதயம் எல்லா பாமரர்களுக்காகவும் உருகுகிறது.

கிருஷ்ணர் எதையும் சாராதவராகத் தனித்து நிற்கிறார். அவரது இந்தத் துணிச்சல் நம்மை அச்சுறுத்துகிறது. சில நல்ல வார்த்தைகள், சில சூழ்நிலைகள் என்று நாம் ஒவ்வொன்றையும் சார்ந்திருக்கிறோம். … ஆன்மா எதையும் சாராமல், வாழ்க்கை யைக்கூடச் சாராமல் இருக்க விரும்புவதுதான் தத்துவத்தின் உச்சநிலை, ஆண்மையின் உச்சநிலை. வழிபாடு அதே லட்சியத் திற்குத்தான் இட்டுச் செல்கிறது. கிருஷ்ணர் வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார். கடவுளை வழிபடுங்கள்.

உலகில் எத்தனையோ வகையான வழிபாடுகளைப் பார்க் கிறோம். நோயாளி கடவுளை அதிகம் வழிபடுகிறான்….. செல்வத்தை இழந்தவன் இருக்கிறான், அவனும் கடவுளை மிகவும் பிரார்த்திக்கிறான், ஆனால் அது பணம் பெறுவதற் காக. கடவுளுக்காகவே கடவுளை நேசிப்பதுதான் மிக உயர்ந்த வழிபாடு. ‘கடவுள் என்று ஒருவர் இருந்தால் உலகில் இவ்வளவு துயரம் இருப்பானேன்?’ (என்று கேட்கலாம். அதற்கு பக்தன், ‘….உலகில் துயரம் உள்ளது, உண்மைதான். அதற்காக நான் கடவுளை நேசிப்பதை நிறுத்துவதில்லை. என் கவலையை அவர் போக்க வேண்டும் என்பதற்காக நான் அவரை வழிபட வில்லை. அவர் அன்பின் உருவானவர். அதனால்தான் அவர்மீது அன்பு செலுத்துகிறேன்’ என்று பதிலளிக்கிறான். மற்ற வகை வழிபாடுகள் தாழ்ந்தவை. ஆனால் கிருஷ்ணர் எதையும் நிந்திப்ப தில்லை. சும்மா இருப்பதைவிட எதையாவது செய்வது நல்லது. கடவுளை வழிபட ஆரம்பிப்பவன் படிப்படியாக வளர்ந்து கடைசியில் அவரை அன்பிற்காகவே அன்பு செய்ய ஆரம்பிக் கிறான்…… .

இந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே பரிசுத்தத்தை எப்படி அடைவது? நாம் எல்லோரும் காட்டுக் குகைகளுக்குப் போவோமா? அதனால் என்ன நன்மை வந்துவிடும்? மனம் கட்டுப்பாட்டிற்குள் இல்லாவிட்டால் குகையில் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை, அதே மனம் எல்லா தொந்தரவு களையும் அங்கேயும் கொண்டுவரும். குகையில் இருபது பேய் களைப் பார்ப்பீர்கள், ஏனெனில் எல்லா பேய்களும் மனத்தில் தான் உள்ளன. மனம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் குகையை எங்கு வேண்டுமானாலும் நாம் கொண்டுவரலாம்; நாம் இருக்கும் இடத்திலேயே அந்தச் சூழ்நிலையைப் பெற்றுக் கொள்ளலாம்.

உலகம் நமக்கு எப்படித் தோன்றுகிறது என்பது நமது மனப்பான்மையைப் பொறுத்தது. நமது எண்ணங்களே பொருட்களை அழகானவை ஆக்குகின்றன; அவற்றை விகார மானவை ஆக்குவதும் நம் எண்ணங்களே. உலகம் முழுவதும் நம் மனத்தில்தான் இருக்கிறது. எதையும் சரியான முறையில் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். முதலில் இந்த உலகை நம்புங்கள்-உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை நம்புங்கள். உலகில் உள்ள ஒவ்வொன்றும் நல்லது, புனிதமானது, அழகானது. தீமையான எதையாவது பார்த்தால், நாம் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அறியுங்கள். சுமையை உங்கள் மீது ஏற்றுக்கொள் ளுங்கள்….. உலகம் குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லத் தோன்றும்போது, நாம் நம்மைப் பரிசீலனை செய்ய வேண்டும், உள்ளதை உள்ளபடி பார்க்கும் ஆற்றலை நாம் இழந்துவிட்டோம் என்று அப்போது காண்போம்.

இரவும் பகலும் உழையுங்கள். ‘கவனி, நான் பிரபஞ்சத்தின் தலைவன். எனக்கு ஒரு கடமையும் கிடையாது. ஒவ்வொரு கடமையும் தளையே. ஆனால் நான் வேலைக்காகவே வேலை செய்கிறேன். நான் ஒரு கணம் வேலை செய்வதை நிறுத்தினால் (குழப்பம்தான் ஏற்படும்)’ என்கிறார் கிருஷ்ணர் (3. 22, 23). ஆகவே கடமையுணர்வு எதுவும் இல்லாமல் உழையுங்கள். உலகம் ஒரு விளையாட்டு. நீங்கள் அவரது விளையாட்டுத் தோழர்கள். போங்கள், வருத்தமின்றி, துயரமின்றிப் பாடு படுங்கள். அவரது திருவிளையாடலைச் சேரிகளில் காணுங்கள், அலங்கார மண்டபங்களில் காணுங்கள். மக்களை முன்னேற்றப் பாடுபடுங்கள், அவர்கள் இழிவானவர்கள் கெட்டவர்கள் என்பதற்காக அல்ல. கிருஷ்ணர் அப்படிச் சொல்லவில்லை.

நல்ல பணி மிகக் குறைவாகத்தான் செய்யப்படுகிறது. ஏன் தெரியுமா? சீமாட்டி ஒருத்தி சேரிக்குப் போகிறாள்…. சில காசுகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு, ‘ஏழை மக்களே, இதை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருங்கள்’ என்கிறாள். தெரு வழியாகப் போகும்போது ஓர் ஏழையைப் பார்க்கிறாள், உடனே அவனிடம் ஐந்து காசுகளை வீசி எறிகிறாள். என்ன தெய்வ நிந்தனை பாருங்கள்! உங்கள் புதிய ஏற்பாட்டில் ஏசுநாதர் தம் உபதேசங்களைக் கொடுத்துள்ளது நாம் செய்த பாக்கியமே. ‘மிகவும் சாதாரணமான எனது இந்தச் சகோதரர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று கூறுகிறார் ஏசுநாதர்.

நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியும் என்று நினைப்பது தெய்வ நிந்தனை. உதவி செய்வது என்னும் இந்தக் கருத்தை மனத்திலிருந்து களைந்து எறிந்துவிட்டு வழிபடச் செல்லுங்கள். அவர்கள் கடவுளின் குழந்தைகள், உங்கள் எஜமானரின் குழந்தைகள். (குழந்தைகள் தந்தையின் மறு உருவங்களே.] நீங்கள் அவரது பணியாள்…. வாழும் கடவுளுக்குத் தொண்டு செய்யுங்கள்! குருடன், நொண்டி, ஏழை, பலவீனன், முரடன் என்று இவர்கள் மூலமாகவெல்லாம் கடவுள் உங்களிடம் வருகிறார். அவரை வழிபட என்னவொரு மகோன்னதமான வாய்ப்பு!

‘உதவுகிறேன்’ என்று நீங்கள் நினைக்கத் தொடங்கியதுமே எல்லாம் கெட்டுவிடுகிறது, நீங்கள் உங்களை இழிவுபடுத்திக் கொள்கிறீர்கள். இதைத் தெரிந்துகொண்டு வேலை செய்யுங்கள். ‘பின்னர் என்ன நடக்கும்?’ என்று கேட்கிறீர்கள். இனி மனம் உடைவதோ, துன்பமோ கிடையாது. … செயல் என்பது இனி அடிமைத் தொழிலாகத் தோன்றாது. அது ஒரு இன்பமாகவும் விளையாட்டாகவும் ஆகிவிடும்…… வேலை செய்யுங்கள், பற்றற்று இருங்கள். அதுதான் முழு ரகசியம். பற்று வைத்தீர் களானால் துன்பப்படுவீர்கள்…..

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுடனும் நாம் ஒன்றிவிடுகிறோம். ஒருவன் என்னை ஏசுகிறான். எனக்குக் கோபம் வருவதை நான் உணர்கிறேன், சில நொடிகள்தான், நானும் கோபமும் ஒன்றாகிவிடுகிறோம், வேதனையும் உடனே உண்டாகிறது. கடவுளுடன் உங்களை இணைத்துக் கொள் ளுங்கள், வேறு எதனுடனும் வேண்டாம். ஏனெனில் மற்றவை எல்லாம் பொய்யானவை. பொய்யுடன் இணைத்துக் கொள்வது வேதனையையே தரும். உண்மையானது ஒன்றே ஒன்றுதான், ஒரே ஒரு வாழ்க்கையில்தான் [செய்பவனும்) கிடையாது, செய்யப்படும் பொருளும் கிடையாது……

பற்றற்ற அன்பு உங்களுக்கு வேதனை தராது. எது வேண்டு மானாலும் செய்யுங்கள், திருமணம் செய்து கொள்ளுங்கள், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்….. எது வேண்டு மானாலும் செய்யுங்கள், எதுவும் உங்களைத் துன்புறுத் தாது. ‘என்னுடையது’ என்ற எண்ணத்துடன் எதையும் செய் யாதீர்கள். கடமைக்காகக் கடமை, வேலைக்காக வேலை. அது உங்களை என்ன செய்யும்? நீங்கள் தனித்து நில்லுங்கள்.

அத்தகைய பற்றின்மை ஏற்படும்போதுதான் பிரபஞ்சத்தின் பிரமிப்பூட்டும் மர்மம் உங்களுக்குப் புலனாகும். அதில்தான் எவ்வளவு தீவிரமான செயல்கள், எத்தனை துடிப்புகள்! அதே வேளையில் என்னவோர் ஆழ்ந்த அமைதி, என்னவொரு சாந்தம்! ஒவ்வொரு கணமும் அது செயல்புரிகிறது, ஒவ்வொரு கணமும் இளைப்பாறுகிறது. இதுதான் பிரபஞ்சத்தின் மர்மம். குணமற்றதும் குணமுள்ளதும், எல்லையற்றதும் எல்லை யுள்ளதும் ஒரே இடத்தில் திகழக் காண்கிறோம். பிறகு ரகசியத்தைப் புரிந்துகொள்வோம். ‘தீவிரமான செயலின் நடுவே மிக ஆழ்ந்த ஓய்வையும், மிக ஆழ்ந்த ஓய்வின் இடையே தீவிர மான செயலையும் காண்பவனே யோகி.’ (4. 18). அவன்தான் உண்மையான செயல்வீரன், மற்றவர்கள் அல்ல. நாம் சிறிது வேலை செய்கிறோம், உடனே அயர்ந்து விடுகிறோம். ஏன்? நாம் அந்த வேலையில் பற்று வைக்கிறோம். நாம் பற்று வைக்காவிட்டால், நமக்கும் வேலையுடன் கூடவே அளவற்ற ஓய்வு கிடைக்கிறது…..

இத்தகைய பற்றின்மையை அடைவது எவ்வளவு கடின மானது! அதனால் கிருஷ்ணர் அதை அடைவதற்கான சாதாரண வழிகளையும் முறைகளையும் காண்பிக்கிறார். மிகவும் எளிய வழி, வேலையைச் செய்துவிட்டுப் பலனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. நமது ஆசையே நம்மைப் பிணைக்கிறது. நமது வேலையின் பலனை ஏற்றுக்கொள்வதானால், அவை நல்ல தானாலும் சரி, கெட்டதானாலும் சரி அவற்றைச் சகித்தேயாக வேண்டும். ஆனால் நமக்காக வேலை செய்யாமல், இறைவனின் மகிமைக்காக நாம் வேலை செய்வோமானால் பலன்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும். ‘செயல்புரியவே உனக்கு அதிகாரம். ஒருபோதும் பலனில் இல்லை .’ (2. 47). போர்வீரன் ஒரு பலனுக்காகவும் வேலை செய்வதில்லை. அவன் தன் கடமையைச் செய்கிறான். தோல்வி ஏற்பட்டால் அது தளபதியைச் சார்கிறது, போர்வீரனையல்ல. அன்பிற்காக நாம் நம் கடமையைச் செய்கிறோம்- தளபதியின் மீதுள்ள அன்பிற் காக, கடவுளின் மீதுள்ள அன்பிற்காக….. .

நீங்கள் வலிமை உடையவர்களாக இருந்தால், வேதாந்தத் தத்துவத்தைப் பின்பற்றுங்கள், சுதந்திரராக இருங்கள். அது உங்களால் இயலாது என்றால் கடவுளை வழிபடுங்கள்; இல்லா விடில் ஏதாவது ஓர் உருவத்தை வணங்குங்கள். அதற்கான வலிமையும் உங்களிடம் இல்லாவிட்டால் லாபத்தைக் கருதாமல் ஏதாவது நற்பணிகளைச் செய்யுங்கள். உங்களிடம் உள்ள எல்லா வற்றையும் இறைப் பணியில் அர்ப்பணியுங்கள். தொடர்ந்து போராடுங்கள். ‘பச்சிலையோ, நீரோ, மலரோ எனது பீடத்தில் யார் எதைச் சமர்ப்பித்தாலும் சரி, அதை நான் ஒரேவித மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.’ (9. 26). உங்களால் எதை யுமே செய்ய முடியவில்லை, ஒரு நல்ல காரியம்கூடச் செய்ய முடியவில்லை என்றால் (இறைவனிடம் தஞ்சம் புகுங்கள். ‘கடவுள் உயிர்களின் இதயங்களில் உறைந்து, தமது சக்கரத்தில் அவர்கள் சுழலும்படிச் செய்கிறார். நீங்கள் முழுமையாகவும் இதய ஆர்வத்தோடும் அவரிடம் சரண் புகுங்கள்.’ (18. 61-62)……

அன்பைப்பற்றி (கீதையில்] கிருஷ்ணர் போதித்த சில பொதுவான கருத்துக்கள் இவை. புத்தர், ஏசு போன்றவர்கள் அன்பைப்பற்றிச் சொன்ன உபதேசங்கள் வேறுபல மேலான நூல்களில் உள்ளன…..

கிருஷ்ணரின் வாழ்க்கையைப் பற்றிச் சில வார்த்தைகள். ஏசுவின் வாழ்க்கைக்கும் கிருஷ்ணரின் வாழ்க்கைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. யாரைப் பார்த்து யார் வரையப் பட்டார்கள் என்பதுபற்றி விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு வரலாறுகளிலும் கொடுங்கோல் மன்னன் வருகிறான். இருவரும் தொழுவத்தில் பிறந்தனர். இரண்டு இடங்களிலும் பெற்றோர்கள் கட்டுண்டு இருந்தார்கள். இருவரும் தேவதூதர் களால் காப்பாற்றப்பட்டனர். இரண்டு இடங்களிலும், அந்த வருடம் பிறந்த ஆண் குழந்தைகள் கொல்லப்பட்டன. சிறுவயது வாழ்க்கை ஒரே மாதிரி இருக்கிறது….. கடைசியில் இருவரும் கொல்லப்பட்டனர். கிருஷ்ணர் ஒரு விபத்தில் இறந்தார்; தன்னைக் கொன்றவனை அவர் மேல்உலகிற்கு அழைத்துச் சென்றார். ஏசுவும் கொல்லப்பட்டார், அவரும் திருடனை வாழ்த்தி மேல்உலகிற்கு அழைத்துச் சென்றார்.

புதிய ஏற்பாடு, கீதை இவற்றின் உபதேசங்களிலும் பல ஒற்றுமைகள் உள்ளன. மனித எண்ணம் ஒரே வழியில்தான் செல்லும். … கிருஷ்ணரின் வார்த்தைகளிலேயே இதற்குப் பதில் சொல்கிறேன்: ‘எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து, அதர்மம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் கீழே வருகிறேன், திரும்பத்திரும்ப வருகிறேன். ஆகவே ஒரு மகான் மனிதச் சமுதாயத்தை உயர்த்தப் பாடுபடுவதை நீங்கள் எப்பொழுது பார்த்தாலும், நான் வந்துள்ளேன் என்று அறிந்து வழி படுங்க ள்.’ …. (கீதை 4.7, 10. 41)

அவர் ஏசுவாக வரட்டும், புத்தராக வரட்டும், அதற்காக ஏன் இத்தனைக் கருத்துப் பிளவு! போதனைகளை நாம் பின்பற்ற வேண்டும். கடவுள்தான் ஏசு, கிருஷ்ணர், புத்தர், மற்றும் எல்லா [ஆச்சாரியர்களாகவும் வந்தார் என்று இந்து பக்தன் சொல்வான். இந்துத் தத்துவ ஞானியோ, “இவர்கள் எல்லோரும் மகான்கள். அவர்கள் ஏற்கனவே முக்தர்கள்; ஆனால் உலகம் முழுவதும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போது அவர்கள் தங்கள் முக்தி நிலையை ஏற்க மறுக்கிறார்கள். அவர்கள் திரும்பத்திரும்ப மனித உருவில் வருகிறார்கள், மனித குலத்திற்கு உதவுகிறார்கள். தாங்கள் யார், எதற்காக வந்தோம் என்பது சிறு வயதிலிருந்தே அவர்களுக்குத் தெரியும்….. நம்மைப்போல் கட்டுண்ட நிலை யிலிருந்து அவர்கள் வரவில்லை ….. தங்கள் சுய சங்கல்பத்தின் காரணமாக வருகிறார்கள், விரும்பாமலே ஆன்மீக ஆற்றலின் சுரங்கமாக விளங்குகிறார்கள். அதை நாம் தடுக்க முடியாது. மனிதச் சமுதாயத்தின் பெரும்பகுதி ஆன்மீகம் என்னும் சுழலில் இழுக்கப்பட்டு விடுகிறது; அந்த அலை பரவிக்கொண்டே இருக்கிறது. ஏனெனில் அதைத் தூண்டிவிடுபவர் இந்த மகான் களில் ஒருவர். மனித குலம் முழுவதும் முக்தி அடையும் வரை இது நடக்கிறது. பிறகு இந்தப் பூமியின் வாழ்வும் முடிந்து விடுகிறது.

நாம் யாருடைய வாழ்க்கைகளைப் படித்தோமோ அந்த மகான்கள் வாழ்க! அவர்கள் உலகின் நடமாடும் தெய்வங்கள், நாம் வழிபட வேண்டியவர்கள் அவர்களே. கடவுள் என்னிடம் மனித உருவில் வந்தால்தான் நான் அவரை இனம்கண்டுகொள்ள முடியும். அவர் எங்கும் இருக்கிறார். ஆனால் நாம் அவரைக் காண்கிறோமா? அவர் மனிதனாகத் தன்னை ஓர் எல்லைக்கு உட்படுத்திக் கொண்டால்தான் நாம் அவரைக் காண முடியும்….. மனிதர்களும்…. மிருகங்களும் கடவுளின் வெளிப்பாடுகள் என்றால் மனித குலத்தின் இந்தப் போதகர்கள் தலைவர்கள், குருமார்கள். யாருடைய காலடிப் பீடங்களை தேவதூதர்களும் வழிபடுகிறார்களோ, அவர்கள் வாழ்க! மனித குலத்தின் தலைவர்களே வாழ்க! மகா ஆச்சாரியர் களே நீங்கள் வாழ்க! தலைவர்களாகிய நீங்கள் என்றென்றும் வாழ்க! வாழ்க!

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 12. கிருஷ்ணர்