ஸ்ரீராமகிருஷ்ணர்… எனது குருநாதர்

ஸ்ரீராமகிருஷ்ணர் – எனது குருநாதர்

சுவாமி விவேகானந்தர்

“தர்மம் குன்றி, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் மனித குலத்திற்கு உதவுவதற்காக நான் கீழே வருகிறேன்’ என்று பகவத்கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். வளர்ச்சியின் காரண மாகவும், புதிய சூழ்நிலைகளின் காரணமாகவும் எப்போது இந்த உலகில் ஒரு புதிய சீரமைப்பு தேவைப்படுகிறதோ, அப் போது ஒரு சக்தி அலை தோன்றுகிறது. பௌதீகம், ஆன்மீகம் ஆகிய இரண்டு தளங்களிலும் மனிதன் இயங்கிக் கொண்டிருப்ப தால், இந்தச் சீரமைப்பு அலைகள் இரண்டு தளங்களிலும் தோன்றுகின்றன. ஒரு பக்கம், அதாவது பௌதீக தளத்தைச் சரிக்கட்டும் வேலையில் ஐரோப்பாதான் தற்காலத்தில் முக்கிய அடிப்படையாக இருந்துள்ளது.மறு பக்கம் ஆன்மீக தளத்தைச் சரிக்கட்டும் வேலையில், உலக வரலாறு முழுவதிலும் ஆசியா தான் அடிப்படையாக இருந்துள்ளது. இன்று ஆன்மீகத் துறையில் இன்னும் ஒரு சீரமைப்பு தேவைப்படுகிறது. இன்று ஜடப்பொருட்களைப் பற்றிய கருத்துக்கள் புகழும் சக்தியும் பெற்று உச்சத்தில் உள்ளன; ஜடப்பொருட்களையே நாளுக்குநாள் அதிகமாக நம்பிக் கிடப்ப தால், மனிதன் தன் தெய்வீக இயல்பை மறக்கக்கூடிய நிலையில் இருக்கிறான்; அதனால் பணம் பண்ணும் எந்திரமாக மாறக் கூடிய நிலையில் இருக்கிறான். எனவே ஆன்மீகத் துறையில் ஒரு சீர்திருத்தம் தேவைப்படுகிறது. குரல் ஒலித்துவிட்டது. சூழ்ந்துவரும் உலோகாயத மேகங்களை விரட்டுவதற்கான சக்தி வந்து கொண்டிருக்கிறது. சக்தியை இயக்கியாகி விட்டது. மனிதனுக்கு அவனுடைய தெய்வீக இயல்பை அது நினை வுறுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. மீண்டும் இந்தச் சக்தி தோன்றப்போவது ஆசியாவில்தான்.

வேலையைப் பகிர்ந்து செய்வது (Divisionof Labour) என்ற திட்டத்தின் அடிப்படையில் உலகம் உள்ளது. எல்லா உடைமை களும் ஒரு மனிதனிடமே இருக்க வேண்டும் என்பது நடக்காத காரியம். இருந்தாலும் நாம் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறோம்! குழந்தை, தான் வைத்துக் கொண்டிருக்கும் பொம்மைதான் உலகிலேயே எல்லோரும் விரும்பும் பொருள் என்று தன் அறியாமையால் நினைக்கிறது. அவ்வாறே பௌதீக ஆற்றல் அதிகம் கொண்டுள்ள ஒரு நாடு, ஆசைப்பட வேண்டியது அந்த ஆற்றல் ஒன்றுதான், முன்னேற்றம் என்றால் அது ஒன்றுதான், நாகரீகம் என்பதும் அதுதான் என்று நினைக்கிறது. மற்ற நாடுகள் அந்தச் சக்திக்கு ஆசைப்படாமல் இருந்தால், அதைத் தங்களிடம் வைத்துக் கொள்ளாமல் இருந்தால் அவை வாழவே தகுதியற்றவை, அவை இருப்பதால் பயனில்லை என்று அந்த நாடு கருதுகிறது.

இன்னொரு பக்கம், வெறும் உலோகாயத நாகரீகம் முற்றிலுமாகப் பயனற்றது என்று வேறொரு நாடு நினைக்கலாம். முன்பொரு முறை கீழ்த்திசை நாடுகளிலிருந்துதான் ஒரு குரல் எழுந்து, ‘மனிதனிடம் உலகத்தின் உடைமைகள் அனைத்தும் இருந்தும், அவனிடம் ஆன்மீகம் இல்லையென்றால் என்ன பயன்?’ என்று உலகத்திற்குச் சொல்லியது. இதுதான் கீழ்த்திசை நாடுகளின் லட்சியம், மற்றது மேற்றிசை நாடுகளின் லட்சியம்.

இந்த இரண்டின் லட்சியங்களும் சிறப்பு மிக்கவை, பெருமை வாய்ந்தவை. இப்பொழுது செய்யவேண்டிய சீரமைப்பு, இந்த இரண்டு லட்சியங்களின் சமரசம் ஆகும். மேலைநாட்டினருக்கு புலன்-உலகம் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை கீழை நாட்டினருக்கு ஆன்மீக உலகம். தான் வேண்டுவது, எதிர்பார்ப்பது எல்லாவற்றையும் கீழை நாட்டான் ஆன்மீக உலகில் காண்கிறான்; வாழ்க்கையை அவனுக்கு உண்மையாக்குகின்ற அனைத்தையும் அவன் அந்த உலகில் பார்க்கிறான். அவன் கனவுலகில் வாழ்வதாக மேலை நாட்டான் நினைக்கிறான். கீழை நாட்டானோ, மேலை நாட்டான்தான் கனவுலகில் வாழ்வதாக, அழியக்கூடிய பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பதாக நினைக்கிறான்; வயதுவந்த ஆண்களும் பெண்களும்கூடத் தாங்கள் இன்றோ நாளையோ விட்டுச் செல்ல வேண்டிய கையளவு ஜடப்பொருட்களை அவ்வளவு பிரமாதப் படுத்து கிறார்களே என்று சிரிக்கிறான்.

கனவு காண்பவர்கள் என்று இருவரும் ஒருவரையொருவர் கூறுகிறார்கள். ஆனால் மனித குலம் முன்னேறுவதற்கு, மேலை நாட்டின் லட்சியம் எவ்வளவு அவசியமோ, அந்த அளவு கீழைநாட்டின் லட்சியமும் அவசியம், என்னைக் கேட்டால் இன்னும் அதிக அவசியம் என்றுகூடச் சொல்வேன். எந்திரங்கள் ஒருபோதும் மனிதனுக்கு இன்பம் தந்ததில்லை , இனியும் தரப் போவதில்லை. இதை நம்பும்படி நம்மிடம் சொல்பவன் எந்திரத்தில்தான் இன்பம் இருக்கிறது என்கிறான், ஆனால் இன்பம் என்னவோ மனத்தில்தான் இருக்கிறது. தன் மனத்தின் தலைவனாக யார் விளங்குகிறானோ, அவன்தான் இன்ப மாக இருக்க முடியும், மற்றவர்களால் முடியாது.

பார்க்கப்போனால் எந்திரங்களின் சக்திதான் என்ன? ஒரு கம்பியின் வழியாக மின்சாரத்தைச் செலுத்துபவனை மிகப் பெரியவன், அதிபுத்திசாலி என்றெல்லாம் ஏன் கொண்டாட வேண்டும்? இயற்கை ஒவ்வொரு நொடியும் கோடி மடங்கு அதிகமாக அதைச் செய்யவில்லையா? எனவே ஏன் கீழே வீழ்ந்து இயற்கையை வணங்கக் கூடாது? உலகம் முழுவதன் மீதும் உங்களுக்கு ஆதிக்கம் இருந்தாலும், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வோர் அணுவையும் நீங்கள் கட்டுப்படுத்தி வைத்திருந் தாலும் அதனால் என்ன நன்மை? இன்புறுவதற்கான சக்தி உங்களிடம் இல்லாவிட்டால், அதாவது நீங்கள் உங்களை வென்றிருக்காவிட்டால் இந்த ஆதிக்கம் உங்களுக்கு இன்பத்தைத் தராது.

இயற்கையை வெல்லத்தான் மனிதன் பிறந்திருக்கிறான், உண்மை . இயற்கை என்பதை ஜடவுலகம் அல்லது புறப் பிரபஞ்சம் என்று மேலை நாட்டார் கொள்கின்றனர். மலைகள், கடல்கள், நதிகள் என்று அளவற்ற சக்திகளையும், எல்லையற்ற மாறுபாடுகளையும் கொண்ட இயற்கை கம்பீரமானதுதான். ஆனால் அதைவிடக் கம்பீரமானது ஒன்று இருக்கிறது. அது தான் மனிதனின் அக இயற்கை. இது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவற்றைவிட உயர்ந்தது; ஏன், நம் பூமியைவிட உயர்ந்தது; பௌதீகப் பிரபஞ்சத்தைவிட உயர்ந்தது; நம் சிறிய வாழ்க்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அது இன்னொரு துறை, அதனை நாம் ஆராய வேண்டும். மற்ற துறையில் மேலைநாட்டவர் சிறந்து விளங்குவதுபோல் இந்தத் துறையில் கீழைநாட்டவர் சிறந்து விளங்குகிறார்கள். ஆகவே ஆன்மீகத் துறையைச் சீரமைக்க வேண்டுமானால், அது கீழை நாடு களிலிருந்துதான் வர வேண்டும் என்பது பொருத்தமே. அவ்வாறே கீழைநாட்டான் எந்திரங்கள் தயாரிப்பதைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால், அவன் மேலைநாட்டவரின் காலடியில் உட்கார்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் பொருத்தமே. மேலை நாட்டான் ஆன்மீகம், கடவுள், ஆன்மா, பிரபஞ்ச ரகசியமும் உட்பொருளும்-இவை பற்றியெல்லாம் அறிந்துகொள்ள விரும்பினால், அவன் கீழைநாட்டினரின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டும்.

இந்தியாவில் ஆன்மீக அலையைத் தோற்றுவித்த ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். வாழ்க்கையைச் சொல்வதற்கு முன்னர், இந்தியாவின் ரகசியம் என்ன, இந்தியாவின் பொருள் என்ன என்பதைச் சொல்ல விரும்புகிறேன். உலகப் பொருட்களின் ஒளியால் மதிமயங்கிக் கிடப்பவர்கள், உண்பது குடிப்பது போகங்களை அனுபவிப்பது இவற்றிற்காகத்தான் வாழ்கிறோம் என்று எண்ணுபவர்கள், மண்ணும் பொன்னும்தான் உடைமைகள் என்று நினைப்ப வர்கள், இன்பம் என்றாலே புலன்களால் நுகரும் இன்பம்தான் என்று கருதுபவர்கள், பணம்தான் கடவுள் என்று நினைப்ப வர்கள், சுலபமாகவும் வசதியாகவும் வாழ்ந்துவிட்டு இறப்பது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணுபவர்கள், உயர்ந்த விஷயங்களைப்பற்றி நினைக்காத மனம் கொண்ட வர்கள், தங்கள் வாழ்க்கையைச் சூழ்ந்திருக்கின்ற புலனின்பப் பொருட்களைத்தவிர மேலானது ஒன்று இருக்கிறது என்று நினைத்துப் பார்க்காதவர்கள்-இவர்கள் இந்தியாவிற்குப் போனால் என்ன காண்பார்கள்? எங்கு பார்த்தாலும் வறுமை, அழுக்கு, மூடநம்பிக்கை, இருட்டு, பயங்கரம் இவற்றைத்தான். ஏன்? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை நாகரீகம் என்றால் உடை, கல்வி, சமூக மரியாதை- இவைதான். மேலை நாடுகள் தங்கள் பொருளாதார நிலையை உயர்த்துவதற்குத் தங்களால் இயன்ற அளவு முயன்றுள்ளன. இந்தியா வேறு வழியில் சென்றது.

யாரையும் வெல்வதற்காகத் தங்கள் நாட்டின் எல்லை களைத் தாண்டிச் செல்லாதவர்கள், பிறர் பொருளுக்கு ஆசைப் படாதவர்கள் உலக வரலாற்றிலேயே இந்தியர்கள் மட்டும்தான். அவர்களிடம் இருந்த ஒரே தவறு என்னவென்றால் அவர் களுடைய நிலங்கள் வளம் மிக்கவையாக இருந்தன, அவர்கள் மிகவும் உழைத்துப் பாடுபட்டுப் பணம் சம்பாதித்தனர்; அது பிற நாட்டினர் அங்கு புகுந்து அவர்களை அழிக்கும்படி ஆசை காட்டியது போலாகிவிட்டது. மற்றவர்கள் தங்கள் நாட்டை அழித்தாலும், தங்களைக் காட்டுமிராண்டிகள் என்று அழைத்தாலும், அதை மனநிறைவாக அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்; பதிலாக உலகிற்கு கடவுளைப் பற்றிய தங்கள் காட்சி களை அனுப்பவே விரும்புகின்றனர்; மனித இயல்பின் ரகசியங் களை உலகிற்கு வெளிப்படுத்த விரும்புகின்றனர்; உண்மை மனிதனை மறைத்துக் கொண்டிருக்கும் திரையைக் கிழிக்க விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் கனவை அறிந்த வர்கள்; இந்த உலோகாயதத்திற்குப் பின்னால் மனிதனின் உண்மையான தெய்வீக இயல்பு இருக்கிறது என்பது அவர் களுக்குத் தெரியும். இந்தத் தெய்வீக இயல்பை எந்தப் பாவமும் மாசுபடுத்த முடியாது; எந்தக் குற்றமும் கெடுக்க முடியாது; எந்த ஆசையும் களங்கப்படுத்த முடியாது; தீ எரிக்க முடியாது; நீர் நனைக்க முடியாது; வெப்பம் உலர்த்த முடியாது; மரணம் கொல்ல முடியாது. மேலைநாட்டினருக்குப் புலன்களால் அறியப்படுகின்ற புறப் பொருட்கள் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, அவர்களுக்கு மனிதனின் உண்மையான இயல்பு.

ஆஹா என்று கத்திக்கொண்டு பீரங்கியின் வாயில் நீங்கள் எவ்வளவு தைரியமாகக் குதிக்கிறீர்களோ, நாட்டுப்பற்றின் பெயரால் நாட்டிற்காக உங்கள் உயிரைக் கொடுக்க நீங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்களோ, அவ்வாறே கடவுளின் பெயரால் அவர்கள் தைரியமாக இருக்கிறார்கள். அங்குதான் மனிதன், இந்த உலகம் வெறும் கருத்துக்களால் ஆனது, எல்லாம் கனவு என்று சொல்லிவிட்டு, தான் சொல்வதும் நம்புவதும் உண்மை என்று நிரூபிக்கத் தன் உடைகளையும் உடைமைகளையும் தூக்கி எறிகிறான். அங்குதான் மனிதன், வாழ்க்கை என்றென்றும் உள்ளது என்று தெரிந்ததும் ஒரு நதிக்கரையில் அமர்ந்து நீங்கள் ஒரு சிறு துரும்பைத் தூக்கி எறிவதுபோல் தன் உடம்பைத் துறக்கிறான். சாவை ஏதோ தங்கள் சகோதரனைப் போல் எதிர்நோக்கத் தயாராக இருக்கிறார்களே, அதில்தான் இருக்கிறது அவர்களின் வீரம். ஏனெனில் தங்களுக்கு நிச்சயமாக சாவே கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். பல நூறு ஆண்டுகளாக அடக்குமுறைக்கும், அன்னியரின் படையெடுப்பு களுக்கும், கொடுமைக்கும் உட்படுத்தப்பட்ட அவர்கள் இன்னும் வெல்லப்படாமல், வலிமையுடன் இருப்பதற்கு இது தான் காரணம். இந்தியா இன்றும் வாழ்கிறது. மிகக் கொடுமையான சீரழிவு ஏற்பட்ட காலத்திலும் அங்கே பெரிய மகான்கள் தோன்றாமல் இருந்ததில்லை. மேலைநாடுகள் அரசியலிலும் அறிவியலிலும் பெரிய மேதைகளைத் தோற்றுவிப்பதுபோல், ஆசியா ஆன்மீகத் துறையில் மேதைகளைத் தோற்றுவிக்கிறது.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலைநாட்டு ஆதிக்கம், வெள்ளம்போல் இந்தியாவுக்குள் நுழைந்தது; மேலைப் படை வீரர்கள் கையில் கத்தியுடன் வந்தனர்; முனிவர்களின் குழந்தை களைப் பார்த்து காட்டுமிராண்டிகள் என்றும், கனவு காணும் கூட்டம் என்றும், அவர்களுடைய மதம் வெறும் புராணக்கதை என்றும் கூறினர்; கடவுள், ஆன்மா என்பவற்றையெல்லாம் கண்டறிய அவர்கள் வருந்திக் கொண்டிருந்தார்களே, அவை யெல்லாம் பொருளற்ற வெறும் சொற்கள் என்றனர்; ஆயிரக் கணக்கான வருடங்களாக அவர்கள் உழைத்ததெல்லாம் வீண், ஆயிரக்கணக்கான வருடங்களாக அவர்கள் மேற்கொண்ட கடுமையான துறவு எல்லாமே வீண் என்றனர். அதைக் கேட்டனர் நமது பல்கலைக் கழக இளைஞர்கள். இதுவரை இருந்துவந்த தேசிய வாழ்வு வீண்தானா, மீண்டும் மேலை நாட்டுப் பாணியில் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்க வேண்டுமா, தங்கள் பழைய நூல்களைக் கிழித்தெறிய வேண்டுமா, தங்கள் தத்துவங்களைக் கொளுத்த வேண்டுமா, தங்கள் குருமார்களைத் துரத்த வேண்டுமா, தங்கள் கோயில் களை இடித்துத் தள்ள வேண்டுமா என்றெல்லாம் அவர்கள் குழம்பத் தொடங்கினார்கள். வாளாலும் துப்பாக்கியாலும் தங்கள் மதத்தை நிரூபித்த மேலைநாட்டு வெற்றி வீரர்கள் இவர்களின் பழைய நெறிகள் எல்லாம் மூடநம்பிக்கைகளும் உருவ வழிபாடுகளுமே என்றெல்லாம் கூறினர். மேலை முறை யில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பள்ளிகளில் படித்த குழந்தைகள் இந்தக் கருத்துக்களைத் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து அப்படியே நம்ப ஆரம்பித்தார்கள். எனவே அவர்களின் மனத்தில் சந்தேகங்கள் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் மூடநம்பிக்கையைத் தூக்கி எறிந்துவிட்டு உண்மையைத் தேடு வதற்குப் பதிலாக, மேலைநாடு என்ன சொல்கிறது என்பது உண்மையின் உரைகல்லாகிவிட்டது. குருமார்கள் போக வேண்டும், வேதங்களை எரிக்க வேண்டும் – ஏனெனில் மேலை நாடு அப்படிச் சொல்கிறது! இதன் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பினால், சீர்திருத்தங்கள் என்று கூறப்படுகின்றனவே அந்த அலைகள் இந்தியாவில் தோன்றின.

நீங்கள் உண்மையான சீர்திருத்தவாதியாக இருக்க விரும்பினால், மூன்று அம்சங்கள் இன்றியமையாதவை. முதலில் உணர்ச்சிகொள்வது. உங்கள் சகோதரர்களுக்காக உண்மை யிலேயே நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா? உலகில் இத்தனை துன்பங்களும், அறியாமையும், இவ்வளவு மூடநம்பிக்கையும் இருக்கின்றனவே என்று நீங்கள் உண்மையிலேயே உணர்கிறீர் களா? மனிதர்கள் எல்லாம் உங்கள் சகோதரர்கள் என்று உண்மையிலேயே உணர்கிறீர்களா? இந்த எண்ணம் உங்கள் ஆளுமை முழுவதும் பாய்ந்து பரவி இருக்கிறதா? இது உங்கள் ரத்தத்துடன் ஓடுகிறதா? உங்கள் நரம்புகளில் இது துடிப்பை உண்டாக்குகிறதா? இது உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பிலும், நுண்ணிய பகுதிகளிலும் ஓடுகிறதா? இரக்க உணர்ச்சி உங்களிடம் நிறைந்திருக்கிறதா? இவையெல்லாம் இருந்தால் அதுதான் முதல்படி.

அடுத்ததாக பரிகாரம் என்ன என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். பழைய கருத்துக்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளாக இருக்கலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கைகளின் குவியலுக் குள்ளே உண்மை என்னும் தங்கக் கட்டிகள் உள்ளன. மாசுகளை நீக்கிவிட்டு தங்கத்தை மட்டும் எடுப்பதற்கு ஏதாவது வழி கண்டுபிடித்துள்ளீர்களா? அப்படிக் கண்டுபிடித்திருந்தால் அதுதான் இரண்டாவது படி.

இன்னொன்றும் அவசியம். உங்கள் நோக்கம் என்ன? பேராசையோ, பணத்தாசையோ, புகழார்வமோ, அதிகார வெறியோ உங்களைத் தூண்டவில்லை என்பது நிச்சயம்தானே? உலகம் முழுவதுமே உங்களை நசுக்க விரும்பினாலும், நீங்கள் உங்கள் லட்சியத்தைப் பற்றிக்கொண்டு தொடர்ந்து வேலை செய்ய முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா? உங்களுக்கு வேண்டியது என்ன என்று தெரிந்து, அந்தக் கடமையை நீங்கள் செய்யும்போது உயிரே போவதாக இருந்தாலும் அதையே செய்வீர்களா? இந்த உறுதி உங்களுக்கு இருக்கிறதா? ‘எங்கள் உயிர் உள்ளதுவரை நாங்கள் விடாமல் உழைப்போம். எங்கள் இதயத்தின் கடைசித் துடிப்புவரை பாடுபடுவோம்’ என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இவையெல்லாம் இருக்குமானால் நீங்கள் ஓர் உண்மையான சீர்திருத்தவாதி, ஒரு ஆச்சாரியர், ஒரு மகான்; மனித குலத்திற்கே ஒரு வரப்பிரசாதம்.

ஆனால் மனிதன் பொறுமையற்றவன், முன்யோசனை இல்லாதவன். காத்திருக்கும் பொறுமை அவனுக்கில்லை, சற்று எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தியும் அவனுக்கில்லை. அவன் ஆள விரும்புகிறான், கைமேல் பலனை எதிர்பார்க்கிறான். ஏன்? தானே பலன்களை அனுபவிக்க விரும்புகிறான்; உண்மை யில் அவன் மற்றவர்களைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. கடமைக்காகக் கடமை என்பதல்ல அவன் விரும்புவது. ‘வேலை செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு, அதன் பலன்களில் அல்ல’ என்கிறார் கிருஷ்ணர். ஏன் பலன்களில் பற்றுக்கொள்ள வேண்டும்? நாம் செய்ய வேண்டியது கடமைகள்; பலன்கள் தாமாகவே வருபவை, அவை வரட்டும். ஆனால் மனிதனுக்குப் பொறுமை இல்லை. அவன் ஏதாவது திட்டத்தை எடுத்துக் கொள்கிறான். உலகெங்கும் சீர்திருத்தவாதிகளாக வர விரும்பு பவர்களை இந்தத் தலைப்பில்தான் சேர்க்க வேண்டும்.

நான் முன்னர் கூறியதுபோல், இந்தியாவுக்குள் நுழைந்த உலோகாயத அலை பண்டைய ரிஷிகளின் போதனைகளை அடித்துக்கொண்டு போய்விடுமோ என்ற நிலைமை ஏற்பட்ட போதுதான் அங்கே சீர்திருத்தக் கருத்து தோன்றியது. ஆனால் அந்த நாடு இத்தகைய ஆயிரம் மாறுதல் அலைகளின் தாக்கு தலைத் தாங்கியிருக்கிறது. பழையவற்றுடன் ஒப்பிடும்போது இது மிகச் சாதாரண அலை என்றுதான் சொல்ல வேண்டும். நுற்றுக்கணக்கான ஆண்டுகளாக அலைகளுக்குப்பின் அலை களாக எழுந்து, நாட்டில் எல்லாவற்றையும் உடைத்து நசுக்கி யிருக்கின்றன; வாள்கள் ஒளிவீசி உள்ளன; ‘அல்லாவுக்கு ஜே’ என்ற குரல் இந்திய வானைப் பிளந்துள்ளது; ஆனால் இந்த வெள்ளங்கள் அடங்கிவிட்டன, தேசிய லட்சியங்கள் மாறாமல் அப்படியே இருந்தன.

இந்தியச் சமுதாயத்தை அழிக்க முடியாது. அதன் தர்மம் பின்னணியில் உள்ளவரையிலும், மக்கள் தங்கள் ஆன்மீகத்தைக் கைவிடாத வரையிலும் அது அழிவில்லாமல் நிற்கும். அவர்கள் பிச்சைக்காரர்களாக இருக்கலாம், ஏழையாக வறுமையில் வாடு பவர்களாக இருக்கலாம், காலமெல்லாம் அழுக்கும் அசுத்தமும் அவர்களைச் சூழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் கடவுளை உதறித் தள்ளாதிருக்கட்டும், தாங்கள் ரிஷிகளின் குழந்தைகள் என்பதை மறக்காமலிருக்கட்டும்.

மேலைநாட்டில், சாதாரண மனிதன்கூட, தான் ஐரோப்பா வில் மத்திய நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு கொள்ளைக்காரத் தலைவனுடைய சந்ததியில் வந்தவன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறான். அதுபோல், இந்தியா வில் சிம்மாசனத்தில் வீற்றுள்ள சக்கரவர்த்திகூட காட்டிலே மரவுரி தரித்து, காய்கனிகளைத் தின்றுகொண்டு, தியானத்தில் ஆழ்ந்திருந்த ஓர் ஏழை முனிவரின் பரம்பரையில் தோன்றியவன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறான். இத்தகைய மரபு வழியையே நாங்கள் விரும்புகிறோம். புனிதத்திற்கு இவ்வளவு சிறப்பு அளிக்கப்படும் வரையில் இந்தியா சாக முடியாது.

Ninteenth Century என்னும் பத்திரிகையில் பேராசிரியர் மாக்ஸ்முல்லர் எழுதிய ‘உண்மையான மகாத்மா’ (A Real Mahatman) என்ற கட்டுரையை உங்களில் பலர் படித்திருப் பீர்கள். ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை சுவையானது. ஏனெனில் அவர் உபதேசித்த கருத்துக்களுக்கு அவரே உயிருள்ள உதாரணமாக விளங்கினார். இந்தியச் சூழ்நிலை யிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வசிக்கும் மேலை நாட்டினராகிய உங்களுக்கு அவரது வரலாறு சற்று இன்ப கரமாகத் தோன்றலாம். வேகமான வாழ்க்கைச் சூழ்நிலையில் உள்ள மேலைநாட்டின் முறைகளும் வழிகளும் இந்தியச் சூழ் நிலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. ஒருவேளை அதன் காரணமாகவே அது இன்னும் அதிக சுவாரஸ்யமானதாக இருக்கலாம். ஏனெனில் நீங்கள் ஏற்கனவே கேட்ட செய்தி களுக்கு அது ஒரு புதிய ஒளியைக் கொடுக்கும்.

பலவிதச் சீர்திருத்தங்கள் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில்தான், வங்காளத்தில் தொலைவிலுள்ள ஒரு சிறு கிராமத்தில் ஏழை பிராமணப் பெற்றோர்களுக்கு, 1836 பிப்ரவரி 18-ஆம் நாள் ஒரு குழந்தை பிறந்தது. தந்தையும் தாயும் மிகவும் வைதீகமானவர்கள். ஓர் உண்மையான வைதீக பிராமணனின் வாழ்க்கை இடையறாத தியாகம் நிறைந்தது. அவன் சில காரியங்களைத்தான் செய்ய வேண்டும், அதைத் தவிர லௌகீகக் காரியங்களில் ஈடுபடக் கூடாது. அதேவேளை யில் எல்லோரிடமிருந்தும் தானங்கள் வாங்கக் கூடாது. அந்த வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள். பிராமணர்களைப் பற்றியும், அவர்களுடைய புரோகிதத் தொழிலைப் பற்றியும் நீங்கள் ஏராளம் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த அற்புத மனிதர்களின் கூட்டம் எப்படித் தங்கள் மக்களை ஆள்கிறது என்பதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்ததில்லை.

நாட்டில் உள்ள வகுப்பினரில் அவர்கள் தான் மிகவும் ஏழைகள். அவர்களுடைய சக்தியின் ரகசியம் தியாகம். அவர்கள் ஒருபோதும் பணத்திற்கு ஆசைப்படுவதில்லை. உலகிலேயே மிகவும் ஏழைப் புரோகிதர்கள் அவர்கள், எனவே மிகுந்த சக்தி வாய்ந்தவர்களாக இருந்தார்கள். இந்த வறுமை நிலையிலும் கூட, எந்தப் பிச்சைக்காரனையும் வெறும் கையுடன் அனுப்ப மாட்டாள் ஒரு பிராமணனின் மனைவி. ஒரு தாயின் மிக முக்கியமான கடமையாக அது இந்தியாவில் கருதப்படுகிறது. அவள் தாய், எனவே அனைவருக்கும் கடைசியாகச் சாப்பிடுவது அவளது கடமை. தான் சாப்பிடுவதற்கு முன்பு மற்றவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டார்களா என்று அவள் பார்க்க வேண்டும். அதனால்தான் இந்தியாவில் தாய் தெய்வமாக மதிக்கப்படுகிறாள்.

நம் வரலாற்றுத் தலைவரின் தாய் அப்படி ஓர் இந்துத் தாயாக இருந்தாள். ஜாதி உயரஉயரக் கட்டுப்பாடுகளும் அதிக மாகின்றன. கடைசி ஜாதி மக்கள் தங்கள் விருப்பப்படி எதையும் சாப்பிடலாம், எதையும் குடிக்கலாம். ஆனால் மனிதனின் சமூகநிலை உயரஉயர, கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன. பரம்பரை புரோகித ஜாதியாகிய மிக உயர்ந்த ஜாதி, அதாவது பிராமண ஜாதியினரின் வாழ்க்கை நான் சொன்னதுபோல் மிகக் குறுகிய வட்டத்திற்குள்தான் இயங்க வேண்டும். மேலை நாட்டுப் பழக்கவழக்கங்களோடு ஒப்பிடும்போது, இவர்களின் வாழ்க்கை ஒரு நிரந்தரத் தவ வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

உலகிலேயே இந்துக்கள் ஒரு தனிப்பட்ட சமுதாயம் என்று சொல்லலாம். ஆங்கிலேயர்களைப் போலவே அவர்களுக்கும் ஒரு செயலை தொடர்ந்து விடாமல் செய்யும் பழக்கம் உண்டு; சற்று அதிகமாக உண்டு என்றே சொல்லலாம். அவர்கள் ஏதாவது ஒரு கருத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால், அதில் பரம்பரைபரம்பரையாகக் கடைசிவரையில் ஈடுபட்டு அதற்கு ஏதாவது ஓர் உருக்கொடுக்கும் வரையில் பாடுபடுவார்கள். அவர்களிடம் ஒரு கருத்தைக் கூறிவிட்டால் போதும், அதை திரும்பப் பெறுவது கடினம்; அதேவேளையில் ஒரு புதிய கருத்தை அவர்கள் ஏற்கும்படிச் செய்வதும் சுலபம் அல்ல.

ஆகவே வைதீக இந்துக்கள் மிகவும் தனிப்பட்டவர்கள். தங்கள் எண்ணங்கள், தங்கள் உணர்ச்சிகள் என்ற தளத்திலேயே வாழ்பவர்கள். இவர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டு மென்று ஒரு சிறிய அம்சம்கூட விடாமல் எங்கள் பழைய நூல் களில் குறிக்கப்பட்டுள்ளன. அந்தச் சிறிய அம்சங்களையும் பிடிவாதமான உறுதியுடன் செயல்படுத்துகிறார்கள். ஜாதி என்றல்ல, அதில் தங்கள் உட்பிரிவைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு பிரிவினர் சமைப்பதைக்கூட உண்ண மாட்டார்கள்; அதைவிடப் பட்டினி கிடப்பார்கள். தங்கள் கொள்கைகளில் மிகவும் உறுதியுள்ளவர்கள், ஈடுபாடு கொண்டவர்கள். வைதீக இந்துக்கள் தங்கள் நம்பிக்கையிலும் மத வாழ்க்கையிலும் அவ்வளவு தீவிரமாக இருப்பதன் காரணம், அது சரி என்று அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதிதான். அவர்கள் அவ்வளவு விடாப்பிடியாகப் போற்றி வருபவை சரியல்ல என்று நமக்குத் தோன்றலாம், ஆனால் அவர்களுக்கு அது சரி.

எந்த நிலையிலும் மனிதன் மற்றவர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்று எங்கள் நூல்களில் எழுதப்பட்டுள்ளது. ஒருவனுக்கு உதவி செய்வதற்காக, ஒருவனின் உயிரைக் காப்ப தற்காக மற்றொருவன் பட்டினி கிடந்து செத்தாலும் அது சரியானது; சரியானது மட்டுமல்ல, மனிதன் என்றால் அவன் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லப் படுகிறது. பிராமணர்கள் இதை மிகத் தீவிரமாகக் கடைப் பிடிக்க வேண்டும். இந்திய இலக்கியம் அறிந்தவர்களுக்கு, இந்தத் தீவிரக் கருணையைப் பற்றி மகாபாரதத்தில் வரும் ஓர் அழகான கதை நினைவுக்கு வரலாம். தங்களிடம் இருந்த கடைசி உணவைக்கூட ஒரு பிச்சைக்காரனுக்குக் கொடுத்து விட்டு, எப்படி ஒரு குடும்பமே மரணத்தைத் தழுவியது என்பதை விளக்குகிறது அந்தக் கதை. இது மிகைப்படக் கூறப்பட்டதல்ல. இத்தகைய செயல்கள் இன்றும் நடக்கின்றன.

எனது குருநாதருடைய தாய்தந்தையரின் குணமும் பேரளவுக்கு இப்படித்தான் இருந்தது. அவர்கள் மிகவும் ஏழைகள். இருந்தும், ஓர் ஏழைக்கு உதவி செய்வதற்காக அந்தத் தாய் எத்தனையோ நாட்கள் பட்டினி கிடந்ததுண்டு. அவர் களுக்குத்தான் இந்தக் குழந்தை பிறந்தது. பிள்ளைப் பருவத்தி லிருந்தே அவரது செயல்கள் தனித்தன்மை வாய்ந்தனவாக இருந்தன. பிறவியிலிருந்தே அவரிடம் முற்பிறவி நினைவு இருந்தது, தாம் எதற்காக உலகத்திற்கு வந்துள்ளோம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அந்த நோக்கத்தை நிறைவேற்று வதற்காக அவர் தமது எல்லா சக்திகளையும் செலவழித்தார்.

இளமையிலேயே அவர் தமது தந்தையை இழந்தார். அவரைப் பள்ளிக்கு அனுப்பினர். பிராமணச் சிறுவன் பள்ளி சென்றாக வேண்டும். அவன் கல்வி கற்பதைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாதென்பது அவனுடைய ஜாதிக் கட்டுப்பாடு. இந்தியாவின் பழைய கல்வி முறை, தற்கால முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாட்டின் பல பாகங்களில் அது இன்னும் நிலவுகிறது. குறிப்பாக சன்னியாசிகளைப் பொறுத்த வரை அது அப்படியே உள்ளது. மாணவர்கள் கட்டணம் கொடுக்க வேண்டாம். அறிவு மிகவும் புனிதமானது, எனவே அதை யாரும் விற்கக் கூடாது என்று கருதப்பட்டது. ஒரு விலையும் கேட்காமல் அறிவு இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும். கட்டணம் வாங்காமல் மாணவர்களை ஏற்றுக் கொண்டதுடன், அவர்களுக்கு உணவும் உடையும் ஆசிரியர் களே கொடுத்தார்கள். திருமணம், திவசம் போன்ற வேளை களில் பணக்காரக் குடும்பங்கள் அவர்களுக்கு நன்கொடை கொடுப்பார்கள். சில தானங்கள் அவர்களுக்குத்தான் முதலில் கொடுக்கப்பட வேண்டும் என்பது நியதி. இதை வைத்து அவர்கள் மாணவர்களை ஆதரித்தார்கள். எங்கேயாவது திரு மணம் நடந்தால், அதுவும் குறிப்பாகப் பணக்காரர் குடும்பத்தில் நடந்தால், ஆசிரியர்கள் அங்கு அழைக்கப்படுவார்கள்; அவர் களும் அங்குச் சென்று பல விஷயங்களைப்பற்றிப் பேசுவார்கள்.

ஆசிரியர்களின் இத்தகைய கூட்டம் ஒன்றிற்கு இந்தச் சிறுவன் சென்றான். அங்கு அவர்கள் அவனது அறிவிற்கு எட்டாதவையான தர்க்கம், வான இயல் போன்றவற்றை விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பையன் சற்று விசித்திரமானவன் என்று நான் முன்பே சொன்னேன் அல்லவா, ஆகவே அவர்களின் விவாதங்களிலிருந்து இவன் கற்றுக் கொண்ட படிப்பினை என்னவென்றால், ‘இவர்களின் அவ்வளவு அறிவின் முடிவும் இதுதான். எதற்காக இவர்கள் இப்படி விவாதங்களில் ஈடுபட்டு சண்டை போடுகிறார்கள்? எல்லாம் பணத்திற்காக. யார் அதிக அறிவை வெளிப்படுத்து கிறாரோ, அவருக்குச் சிறந்த ஆடை பரிசாகக் கிடைக்கும். இவர்கள் பாடுபடுவதெல்லாம் அதற்காகத்தான். நான் இனி பள்ளிக்கூடம் போக மாட்டேன்’ என்பதுதான். அவன் போகவுமில்லை. அவனது பள்ளிப் படிப்பு அத்துடன் முடிந்தது. ஆனால் இந்தச் சிறுவனுக்கு ஒரு தமையன் இருந்தார்; அவர் பெரிய பண்டிதர். படிப்பதற்காக அவர் இந்தச் சிறுவனையும் தம்முடன் கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றார்.

சிறிது காலத்திலேயே, லௌகீகப் படிப்பின் குறிக்கோள் உலகியல் முன்னேற்றத்திற்கே தவிர, வேறு எதற்கும் அல்ல என்ற முடிவுக்கு வந்த அவன் படிப்பை நிறுத்திவிட்டு, ஆன்ம ஞானத்தைத் தேடுவதில் முற்றிலுமாக ஈடுபட்டான். தந்தை இறந்துவிட்டார். குடும்பமோ மிக வறுமை நிலையில் இருந்தது. ஆகவே இந்த இளைஞன் தன் பிழைப்பைத் தானே தேட வேண்டிய நிலையில் இருந்தான். அதனால் கல்கத்தாவிற்குப் பக்கத்தில் உள்ள ஓர் இடத்திற்குச் சென்று, அங்கு ஒரு கோயிலில் அர்ச்சகராக அமர்ந்தான்.

கோயில் அர்ச்சகர் தொழில் ஒரு பிராமணனுக்கு மிகவும் இழிவானதாகக் கருதப்படுகிறது. எங்கள் கோயில்கள் உங்கள் சர்ச் போன்றவை அல்ல, அவை பொது வழிபாட்டிற்கான இடங்கள் அல்ல. சொல்லப்போனால் பொது வழிபாடு என்பதே இந்தியாவில் இல்லை. கோயில்கள் பெரும்பாலும் புண்ணியம் பெறுவதற்காகப் பணக்காரர்களால் கட்டப் படுகின்றன.

ஒருவனுக்கு நிறைய சொத்து இருந்தால் அவன் ஒரு கோயில் கட்ட நினைக்கிறான், அதில் பகவானின் அவதாரங் களுள் யாராவது ஒருவரின் சின்னத்தையோ விக்கிரகத்தையோ பிரதிஷ்டை செய்கிறான். கிட்டத்தட்ட ரோமன் கத்தோலிக்க சர்ச்களைப் போலவே அங்கே வழிபாடு நடைபெறுகிறது. புனித நூல்களிலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்படுகின்றன. விக்கிரத்திற்கு முன்பு தீபாராதனை காட்டப்படுகிறது. ஒரு மாமனிதரை நாம் எப்படியெல்லாம் கௌரவப்படுத்துவோமோ அப்படி விக்கிரகம் போற்றப்படுகிறது. கோயில்களில் நடப்பது இவையே.

கோயிலுக்குப் போவதாலேயே ஒருவன் கோயிலுக்குப் போகாதவனைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதில்லை. பார்க்கப்போனால், போகாதவன் தான் சிறந்த மதவாதி. ஏனெ னில் இந்தியாவில் மதம் என்பது தனிநபர் சம்பந்தமான ஒன்று. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறு கோயிலோ, ஒரு பூஜையறையோ இருக்கும். காலையிலும் மாலையிலும் அவன் அங்குச் சென்று ஒரு மூலையில் உட்கார்ந்து தன் வழிபாட்டைச் செய்வான். வழிபாடும் மானசீகமானது. அவன் என்ன செய்கிறான் என்பது கேட்காது; அடுத்தவனுக்குத் தெரியாது. அவன் அங்கு உட்கார்ந் திருப்பான், சிலவேளைகளில் விரல்களை விசித்திரமாக அசைப்பான், அல்லது மூக்கைப் பிடித்துக்கொண்டு விசித்திரமாக மூச்சுவிடுவான். அதைத் தவிர அவன் என்ன செய்கிறான் என்று அவனது சகோதரனுக்கே தெரியாது. ஏன், அவனது மனைவிக்கேகூடத் தெரியாமலிருக்கலாம்.

இவ்வாறு வழிபாடெல்லாம் வீட்டில் தனிப்பட்ட முறை யில் நடக்கிறது. வீட்டில் கோயிலோ பூஜையறையோ அமைக்க இயலாதவர்கள் நதிக்கரையிலோ, குளக்கரையிலோ, அல்லது கடலுக்கு அருகே வசித்தால் கடற்கரைக்கோ செல்கிறார்கள். சிலவேளைகளில் கோயிலுக்குச் சென்று அங்குள்ள திருவுருவை வணங்குவதன்மூலம் இறைவனை வழிபடுகிறார்கள். அத்துடன் அவர்களுடைய கோயில்கடமை முடிந்துவிடுகிறது.

ஆகவேதான் தொன்றுதொட்டே எங்கள் நாட்டில் அர்ச்சகர் தொழில் இழிவானது என்றே கருதப்பட்டு வந்திருக் கிறது. மனுவும் தமது நீதிநூலில் அப்படியே கூறுகிறார். அது மிகவும் இழிந்த தொழில், அதற்காக அந்த பிராமணர் களைக் கடிந்துகொள்ளவும் செய்யலாம் என்று சில நூல்கள் கூறுகின்றன. இதில் இன்னொரு கருத்தும் இருக்கிறதுகல்விக்கே பணம் வாங்கக் கூடாது என்று இருக்கும்போது அதைவிடப் பரிசுத்தமான கோயில்வேலைக்குப் பணம் வாங்கலாமா என்பதுதான் அது; அது புனிதமானவற்றை வியாபாரமாக்குவது. ஆகவே வறுமையின் காரணமாக, வேறு வழியின்றி, கிடைத்த ஒரே வேலையான அர்ச்சகர் வேலையை ஏற்றுக்கொண்டபோது அந்த இளைஞரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.

வங்காளத்தில் எத்தனையோ கவிஞர்களின் பாடல்கள் மக்களை அடைந்துவிட்டன; அவை கல்கத்தாவின் தெருக் களிலும் ஒவ்வொரு கிராமத்திலும் பாடப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை மதசம்பந்தமானவை. அவற்றின் மையக் கருத்து இந்திய மதங்களுக்கே உரித்தானது என்று சொல்லத்தக்கதான அனுபூதி என்பதாகும். இந்தக் கருத்தைச் சொல்லாத மத நூல் ஒன்றுகூட இந்தியாவில் இல்லையென்று சொல்லலாம். மனிதன் இறையனுபூதி பெற வேண்டும், அவரை உணர வேண்டும், அவரைப் பார்க்க வேண்டும், அவருடன் பேச வேண்டும். அதுதான் மதம்.

இறைக்காட்சி பெற்ற மகான்களின் கதைகள் இந்தியாவில் ஏராளம் உண்டு. இத்தகைய கோட்பாடுகள் மதத்தின் அடிப் படையாக விளங்குகின்றன. பண்டைய நூல்களும் சாஸ்திரங் களும் ஆன்மீக உண்மைகளுடன் நேரடித் தொடர்பு உடையவர் களாலேயே எழுதப்பட்டன. இந்த நூல்கள் அறிவாளிகளுக்காக எழுதப்படவில்லை, தர்க்கரீதியிலும் இவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. தாங்கள் கண்டதை அவர்கள் அப்படியே எழுதினார்கள். அவர்களின் அளவுக்குத் தங்களை உயர்த்திக் கொண்டவர்களால்தான் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். இந்த வாழ்க்கையிலேயே இறையனுபூதி பெற முடியும், அதை எல்லோரும் அடைய முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதை எப்படி அடைவது என்பதை நாம் உணர்வதில்தான் மதம் ஆரம்பிக்கிறது. எல்லா மதங்களின் மையக்கருத்தும் இது தான். ஒருவன் சிறந்த பேச்சாளனாக இருக்கலாம், அவனது பேச்சு மிகவும் தர்க்கரீதியாக இருக்கலாம், அவன் மிக உயர்ந்த கோட்பாடுகளைப்பற்றிப் பேசலாம்; ஆனால் அவன் பேசு வதைக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன் னொருவனோ ஏழையாக, தாய்மொழியைக்கூடச் சரியாகப் பேசத் தெரியாதவனாக இருப்பான். இருந்தும் நாட்டில் பாதிபேர் அவனது வாழ்நாளிலேயே அவனைக் கடவுளாகக் கும்பிடுவதைப் பார்க்கலாம். அனுபூதி நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொண்ட ஒருவனுக்கு மதம் என்பது ஊகமோ கற்பனையோ இல்லை; ஆன்மாவின் அழியாத்தன்மை, கடவுள், மதம் போன்ற முக்கியமான விஷயங்களில் அவனுக்கு நல்ல தெளிவு இருக்கும் – இந்தியாவில் இந்த விஷயம் எப்படியோ மக்களின் காதை எட்டிவிடுகிறது, உடனே அவனைப் பார்க்க எல்லா பக்கங்களிலிருந்தும் வருகிறார்கள்; மெல்லமெல்ல அவனை வழிபட ஆரம்பிக்கிறார்கள்.

ஆனந்தமயியான தேவியின் விக்கிரகம் ஒன்று கோயிலில் இருந்தது. இந்த இளைஞன் காலையிலும் மாலையிலும் அங்கே பூஜை செய்ய வேண்டும். மெள்ளமெள்ள சில கேள்விகள் அவனது மனத்தை ஆக்கிரமிக்கலாயின: இந்த விக்கிரகத்திற்குப் பின்னால் ஏதேனும் உள்ளதா? ஆனந்தமயியான தேவி இருப்பது உண்மைதானா? அவள் இருக்கிறாள், அவள்தான் உலகத்தை நடத்துகிறாள் என்பது உண்மையா? அல்லது எல்லாம் கனவா? மதம் என்பதில் ஏதாவது உண்மை உண்டா ?

இத்தகைய சந்தேகம் இந்தியக் குழந்தைக்கு வருவது உண்டு, நாம் செய்வது உண்மைதானா என்ற சந்தேகம் எழுவது எங்கள் நாட்டிற்கே உரிய ஒன்று. கடவுளைப்பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் எவ்வளவோ தத்துவ விளக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தத்துவ விளக்கங்களால் எங்களுக்குத் திருப்தி ஏற்படாது. நூல்களும் கொள்கைகளும் எங்களைத் திருப்தி செய்ய முடியாது, எங்களைத் திருப்தி செய்யக்கூடிய ஒன்றே ஒன்று அனுபூதி. கடவுள் என்று ஒருவர் இருப்பது உண்மையா? உண்மையானால் நான் அவரைப் பார்க்க முடியுமா? உண்மையை நான் உணர முடியுமா? இதெல்லாம் நடைமுறைக்கு ஏற்புடையவை அல்ல என்று மேலை நாட்டினர் நினைக்கலாம், ஆனால் எங்களுக்கோ அது நடைமுறைக்கு மிகவும் ஒத்தது. இந்தக் கருத்திற்காக மக்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்வார்கள்.

தொன்றுதொட்டே இந்தக் கருத்தை உணர்வதற்காகத் தங்கள் சுகங்களையும் போகங்களையும் விட்டு எத்தனையோ பேர் குகைகளில் வசித்துள்ளார்கள். எத்தனையோபேர் வீடுகளைத் துறந்து புண்ணிய நதிக்கரைக்கு வந்து, இதனை உணர்வதற்காக அழுது புலம்பியிருக்கிறார்கள். உணர்வதுஉணர்வது என்ற சொல்லின் சாதாரணப் பொருளில் அல்ல, அறிவுபூர்வமாக அறிவது அல்ல, தர்க்கரீதியாக உணர்வது அல்ல, இருட்டில் வழி தேடித் திரிவது அல்ல; உணர்வது, அனுபூதி பெறுவது, நமது புலன்களுக்கு அதாவது நமக்கு உலகம் எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ அதைவிட உண்மையாக உணர்வது. இதுதான் கருத்து. இதைப்பற்றி சற்றுமுன்தான் உங்களிடம் சொன்னேன். அது விஷயமாக எந்தச் செயல்திட்டத்தையும் இப்போது நான் சொல்லப் போவதில்லை, ஆனால் இந்தக் கருத்துத்தான் அவர்கள் மனத்தில் ஆழப் பதிந்துள்ளது. இதற்காக ஆயிரக்கணக்கானோர் மரணத்தைத் தழுவியிருப்பார்கள், ஆயிரக்கணக்கானோர் தழுவத் தயாராக இருப்பார்கள். இந்தக் கருத்திற்காக இந்த நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தன்னலம் மறுத்து, தியாகம் செய்துள்ளது. இந்த ஒரு கருத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்கள் வீடுகளைத் துறக்கிறார்கள், அந்த வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்கின்ற கஷ்டங்களைப் பொறுக்க முடியாமல் பலர் சாகவும் செய் கிறார்கள். மேலைநாட்டினருக்கு இவையெல்லாம் மனக் கோட்டைகளாகத் தோன்றலாம். அவர்கள் ஏன் அப்படி நினைக் கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் மேலைநாட்டில் தங்கியிருந்த போதிலும் இதைவிட நடை முறைக்கு ஒத்த கருத்து வேறு ஒன்றும் கிடையாது என்றுதான் நினைக்கிறேன்.

மற்றவற்றைப்பற்றி நான் நினைக்கும் ஒவ்வொரு கணமும், அது உலக விஞ்ஞான அதிசயங்களாக இருந்தாலும் சரி, எனக்கு வீணாகத்தான் படுகிறது. அந்தக் கருத்திலிருந்து என்னை விலகச் செய்கின்ற எதுவும் வீணே. உங்களுக்கு தேவ தூதனுக்குள்ள அறிவு இருந்தாலும் சரி, ஒரு மிருகத்திற்குள்ள அறிவீனம் இருந்தாலும் சரி வாழ்க்கை என்னவோ கணநேரத் திற்குத்தான். நீங்கள் கந்தையுடுத்திய ஏழையாக இருந் தாலும் சரி, உலகிலேயே பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி வாழ்க்கை என்னவோ கணநேரத்திற்குத்தான். நீங்கள் மேலைநாட்டிலுள்ள பெரிய நகரங்களின் வீதிகளில் திரியும் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, கோடிக்கணக் கானவர்களை ஆள்கின்ற மன்னனாக இருந்தாலும் சரி வாழ்க்கை என்னவோ கணநேரத்திற்குத்தான். நீங்கள் உடல் நலம் மிக்கவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வாழ்க்கை என்னவோ கணநேரத்திற்குத்தான். உங்களுக்குக் கவிதைப் பண்பு இருந்தாலும் சரி, கொடிய உள்ளம் இருந் தாலும் சரி வாழ்க்கை என்னவோ கணநேரத்திற்குத்தான்.

வாழ்க்கைக்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு என்று இந்து கூறுகிறான். அந்தத் தீர்வுதான் கடவுள், அதுதான் மதம். இது உண்மையானால் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது; வாழ்க்கை சகித்துக் கொள்ளத் தக்கதாக ஆகிறது; வாழ்க்கை இன்பமயமாகிறது. இல்லாவிடில் வாழ்க்கை ஒரு பயனற்ற சுமை. இதுதான் எங்கள் கருத்து. ஆனால் எத்தனை தர்க்கம் செய்தாலும் இதை நிரூபிக்க முடியாது. இது சாத்தியம் என்று சொல்லலாம், அவ்வளவுதான். எந்த அறிவுத் துறையை எடுத்துக் கொண்டாலும், மிகச் சிறந்த தர்க்கம்கூட, ஓர் உண்மையை, சாத்தியமாக இருக்கலாம் என்று சொல்ல இயலுமே தவிர, அதற்குமேல் ஒன்றும் சொல்ல முடியாது. பௌதீக இயலிலுள்ள மிக உயர்ந்த விளக்கங்களெல்லாம் அனுமானங்களே தவிர, உண்மையை இன்னும் கண்டவையல்ல. உண்மைகளை நாம் உள்ளத்தால் உணர வேண்டும். மதத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் அதை உணர வேண்டும். கடவுள் இருக் கிறார் என்பதை உறுதியாக அறிய வேண்டுமானால், அவரை உள்ளத்தால் உணர வேண்டும். மத உண்மைகளை, அவை உண்மைகள் என்று அறிய வேண்டுமானால் அவற்றை உணர வேண்டும். அப்பொழுதுதான் அவை உண்மை என்று தெரிய வரும், வேறு வழியில்லை. எவ்வளவு தர்க்கம் செய்தாலும் பலன் இல்லை. நாம் உணர்ந்தால்தான் அவை நமக்கு உண்மை யாக இருக்கும்; நம் நம்பிக்கையும் மலைபோன்று அசையாததாக இருக்கும். இதுதான் என் கருத்து, இந்தியாவின் கருத்து.

Max Mueller

அந்த இளைஞனை இந்தக் கருத்து ஆட்கொண்டது. அவனது வாழ்க்கை முழுவதுமே அந்த ஒரு கருத்தைச் சுற்றிய தாக ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் அவன் அழுது கொண்டே, ‘அம்மா, நீ இருப்பது உண்மைதானா? அல்லது எல்லாம் கற்பனையா? ஆனந்தமயியான தேவி கவிஞர்களின் கற்பனையா, அறிவிழந்தவர்களின் கட்டுக்கதையா, அல்லது உண்மையாக இருப்பவளா?’ என்று உருகுவான். நாம் நினைப்பது போன்ற கல்வி அந்தச் சிறுவனுக்குக் கிடையாது, அவன் புத்தகங்களைப் படித்ததில்லை. அதன் காரணமாகவே, அந்த அளவுக்கு அவனது மனம் இயற்கையாக, ஆரோக்கிய மாக, மற்றவர்களின் சிந்தனைகள் கலக்காமல் சுத்தமாக இருந்தது. அவன் பல்கலைக் கழகத்திற்குச் செல்லவில்லை , எனவே தனக்குத்தானே சுயமாகச் சிந்தித்தான். நாம் வாழ் நாளில் பாதியைப் பல்கலைக் கழகத்தில் கழிப்பதால் நம்முள் பிறரது எண்ணங்களே நிறைந்து கிடக்கின்றன. நான் சற்றுமுன் குறிப்பிட்ட கட்டுரையில் பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இவரை ஒரு தூய, சுய எண்ணங்கள் கொண்ட மனிதர் என்று குறிப்பிடுகிறார்.

அந்தச் சுய ஆக்கத்தின் (Originality) ரகசியம், அவர் பல்கலைக் கழகத்தில் வளராததுதான். கடவுளைக் காண முடியுமா என்ற எண்ணம் அவர் மனத்தில் மேலோங்கி இருந்தது. அது நாளுக்குநாள் வலுப்பெற்றது, கடைசியில் அவரால் அதைத் தவிர வேறு எதையும் நினைக்க முடியவில்லை . அவரால் பூஜையைச் சரியாகச் செய்ய முடியவில்லை , கவனிக்க வேண்டிய எத்தனையோ சிறு அம்சங்களைக் கவனிக்க முடிய வில்லை. சிலவேளைகளில் நிவேதனத்தை விக்கிரகத்திற்கு முன் வைக்க மறந்துவிடுவார். சிலவேளைகளில் தீபாராதனை செய்ய மறந்துவிடுவார், சிலவேளைகளிலோ மணிக்கணக்காக தீபாராதனை செய்துகொண்டே இருப்பார்.

‘அம்மா, நீ இருப்பது உண்மைதானா? ஏன் நீ பேச மாட் டேன் என்கிறாய்? நீ செத்துவிட்டாயா?’ என்ற ஒரே எண்ணம் தான் அவரது மனத்தில் குடிகொண்டிருந்தது. நம் வாழ்க்கை யிலும் இத்தகைய வேளைகள் வருவது இங்குள்ள நம்மில் சிலருக்கு நினைவுக்கு வரலாம். செத்துப்போன, உப்புச்சப்பற்ற தர்க்கவாதங்களினால் அலுப்புற்று, புத்தகங்களைப் படித்துக் களைத்தபின்- கடைசியில் இந்தப் புத்தகங்களிலிருந்து நாம் ஒன்றும் தெரிந்துகொள்வதும் இல்லை; அது ஒருவகையில் அறிவுக்கு அபின் சாப்பிடுவது மாதிரி, அவ்வப்பொழுது சாப்பிட வேண்டும், இல்லாவிடில் நம்மால் முடியாது-நம் இதய அந்தரங்கத்திலிருந்து ஒரு கூக்குரல் எழுகிறது; ‘எனக்கு ஒளி தர இந்தப் பிரபஞ்சத்தில் யாரும் இல்லையா? நீ இருக் கிறாயானால் ஒளி காட்டு. ஏன் பேச மாட்டேன் என்கிறாய்? நீ ஏன் மறைந்திருக்கிறாய்? இத்தனைத் தூதர்களை அனுப்பு கிறாயே, நீயே நேரில் வரக் கூடாதா? சண்டையும் சச்சரவும் மலிந்த இந்த உலகில் நான் யாரைப் பின்பற்றுவது, யாரை நம்புவது? ஆண், பெண் அனைவருக்கும் நீ பாரபட்சமற்ற கடவுளானால், உன் குழந்தை தயாராக இருக்கிறானா என்பதை அறிந்துகொள்ள நீயே ஏன் வர மாட்டேன் என்கிறாய்?’

மிகவும் மனம் சோர்ந்திருக்கும் வேளைகளில் நம் எல்லோருக்கும் இத்தகைய எண்ணங்கள் வரவே செய்கின்றன; ஆனால் கவர்ந்திழுக்கின்ற பொருட்கள் நம்மைச் சுற்றி எவ்வளவோ இருக்கின்றன, எனவே நாம் அடுத்த கணமே அந்த எண்ணங்களை மறந்துவிடுகிறோம். ஒரு கணத்திற்கு தேவலோகத்தின் கதவுகள் திறந்தது போலுள்ளது, நாம் பேரொளியில் ஆழ்ந்துவிடப்போவது போலுள்ளது; ஆனால் அடுத்தகணமே நம்முள் உள்ள மிருக மனிதன் இந்தத் தெய்வீகக் காட்சிகளை அகற்றிவிடுகிறான். நாம் மீண்டும் மிருக மனித னாகிறோம்; உண்பது குடிப்பது சாவது, சாவது குடிப்பது உண்பது என்று திரும்பத்திரும்பக் கீழே போகிறோம். ஆனால் உண்மையைக் காண விரும்புகின்ற அசாதாரணமான சிலர் உள்ளனர். அவர்கள் எளிதில் பாதையைவிட்டு விலகுவதில்லை. ஒருமுறை இந்தக் கருத்தினால் கவரப்பட்ட அவர்களை, எந்தக் கவர்ச்சியும் பாதைவிலகச் செய்ய முடியாது. உயிரே போவதாக இருந்தாலும் உண்மையை அடைய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். எப்படியோ வாழ்க்கை முடியத்தான் வேண்டும், எனவே அது ஒரு நல்ல காரியத்தை அடைவதில் முடியட்டும் என்கிறார்கள் அவர்கள். வாழ்வா சாவா, நல்லதா தீயதா என்னும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, மனிதனின் கீழான இயல்பை வெற்றிகொள்வது ஆகிய இவற்றை விட நல்ல காரியம் வேறு என்ன இருக்க முடியும்?

இறுதியில் அவருக்குக் கோயில் பணியில் ஈடுபட முடி யாமல் போயிற்று. ஆதலால் அதனை விட்டுவிட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய காட்டில் வசிக்கலானார். இந்த நாட்களைப் பற்றிப் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அந்த நாட்களில் அவருக்கு சூரியன் உதிப்பதோ மறைவதோ, தாம் வாழ்ந்த முறையோ எதுவுமே தெரியாது. தம்மை முற்றிலும் மறந்தார், உண்பதையும் மறந்தார். அந்த வேளைகளில் அவருடைய உறவினர் ஒருவர் அவரை மிகவும் அன்பாகக் கவனித்துக் கொண்டார். உறவினர் அவருக்கு உணவை ஊட்டுவார். அதை அவர் எந்திரம்போல் விழுங்குவார்.

அப்படியே பல நாட்கள் கழிந்தன. மாலை நேரமானதும் கோயில் மணிகள் ஒலிக்கும், பக்தர்கள் பாடுவது கேட்கும். அவரது மனமோ வேதனையில் விம்மும்: ‘அம்மா, இன்னொரு நாளும் வீணாகப் போய்விட்டதே, நீ வரவில்லையே! குறுகிய இந்த வாழ்வின் ஒரு நாள் கழிந்துவிட்டது; நான் இன்னும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லையே!’ என்று அழுவார். மனவேதனையால் முகத்தைத் தரையில் தேய்த்துக்கொண்டு, ‘ஓ ஜகதம்பிகையே, நீ என் கண்முன் வா! உன் திருக்காட்சியைத் தவிர எனக்கு வேறெதுவும் வேண்டாம்’ என்று அழுவார்

உண்மையிலேயே தன் லட்சியத்திற்கு உண்மையாக நடந்து கொள்ள அவர் விரும்பினார். தேவிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யாமல் அவள் வர மாட்டாள் என்று கேள்விப் பட்டிருந்தார். தேவி எல்லோரிடமும் வரத்தான் ஆசைப் பட்டாள், ஆனால் மக்கள்தான் அவளை ஏற்பதற்குப் பதிலாக சிறியசிறிய விக்கிரகங்களை வழிபடுவதில் ஈடுபட்டிருந்தார்கள்; தங்கள் ஆனந்தத்தைக் கோரினார்களே தவிர அவளை விரும்ப வில்லை ; வேறு எதையும் விரும்பாமல் தங்கள் இதய ஆழங் களிலிருந்து அவளை எப்போது விரும்புவார்களோ, அந்தக் கணமே அவள் வருவாள் என்றும் கேள்விப்பட்டிருந்தார்.

இந்தக் கருத்தை மனத்தில் விடாபிடியாகக் கொண்டிருந் தார் அவர். பௌதீகத் தளத்தில்கூட சரியாக வாழ வேண்டு மென்று தீர்மானித்தார். தமக்கிருந்த சிறு சொத்தையும் உதறி எறிந்தார். பணத்தைத் தொடக் கூடாது என்று உறுதி கொண்டார். ‘பணத்தைத் தொட மாட்டேன்’ என்ற கருத்து அவரது வாழ்வில் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது. உங்களுக்கு இது ஏதோ மாயம்போல் தோன்றலாம். பின்னாளிலும் அவர் தூங்கும்போது, ஒரு காசைக் கொண்டு அவர் உடம்பைத் தொட்டால் அவரது கை உடனே வளைந்துபோகும்; முடக்கு வாதம்போல் உடம்பு விறைத்துவிடும்.

காமம்தான் இன்னொரு எதிரி என்னும் எண்ணம் அவரது மனத்தில் தோன்றிற்று. மனிதன் ஓர் ஆன்மா. ஆன்மாவுக்குப் பால்வேறுபாடு கிடையாது. ஆன்மா ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல. தாம் தேவியைக் காண்பதற்குக் காமம், பண ஆசை இவை இரண்டும்தான் தடை என்று அவர் நினைத்தார். இந்தப் பிரபஞ்சமே தேவியின் வெளிப்பாடு, ஒவ்வொரு பெண்ணின் உடம்பிலும் அவள் இருக்கிறாள். ‘ஒவ்வொரு பெண்ணும் பராசக்தியின் பிரதிநிதி, ஆகவே காமக் கருத்துடன் நான் எப்படிப் பெண்ணைப் பார்க்க முடியும்?’ இதுதான் கருத்து. ஒவ்வொரு பெண்ணும் அவருடைய அன்னை. ஒவ்வொரு பெண்ணிலும் அன்னையைப் பார்க்கும் நிலைக்குத் தம்மைக் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தார். வாழ்க்கை முழுவதும் அப்படித்தான் வாழ்ந்தார்.

ஒவ்வொரு மனித உள்ளத்தையும் பற்றுகின்ற பயங்கர தாகம் இதுதான். பின்னாளில் அவரே என்னிடம் சொன்னார்: ‘மகனே, ஓர் அறையில் தங்கம் நிறைந்த பை இருக்கிறது. பக்கத்து அறையில் ஒரு திருடன் இருக்கிறான். அவனால் தூங்க முடியுமா? பக்கத்து அறையில் நுழைந்து, அந்தத் தங்கத்தை எப்படித் திருடுவது என்பதையே அவனது மனம் நினைத்துக் கொண்டிருக்கும். அதைப்போல் இந்த வெளித் தோற்றங்களுக்கு அப்பால் ஓர் உண்மை இருக்கிறது, ஒரு கடவுள் இருக்கிறார், அவருக்கு அழிவே கிடையாது, அவர் பேரானந்த மயமானவர், அவருடன் ஒப்பிடும்போது புலனின் பங்கள் வெறும் விளையாட்டுப் பொருட்கள் என்று நிச்சயமாக நம்புகின்ற ஒருவன் அந்தக் கடவுளை அடைவதற்காகப் போராடாமல் இருப்பானா? ஒரு நொடியாவது அவன் தன் முயற்சிகளை நிறுத்துவானா? மாட்டான். அந்த ஏக்கத்தால் அவன் பைத்தியமே ஆகிவிடுவான்’.

இந்தத் தெய்வீகப் பித்து அவரை ஆட்கொண்டது. அப்போது அவருக்கு குரு இல்லை, எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. அவருக்கு மூளை குழம்பிவிட்டது என்று எல் லோரும் நினைத்தார்கள். இது சாதாரணமாக உலகில் நடப்பது தான். ஒருவன் உலகின் பகட்டுகளை உதறித் தள்ளினால் அவனைப் பைத்தியம் என்று அழைப்பார்கள். ஆனால் அத்தகை யோர்தான் உலகின் சாரமாக இருக்கிறார்கள். இத்தகைய பைத்தியங்களிலிருந்துதான் உலகத்தை ஆட்டிவைத்த சக்திகள் எழுந்தன; இத்தகைய பைத்தியங்களிலிருந்துதான் உலகத்தை ஆட்டிவைக்கும் சக்திகள் எதிர்காலத்திலும் எழப்போகின்றன. ஆகவே உண்மையை அடைய அவரது உள்ளம் போராடியது; வாரங்கள், மாதங்கள் சென்றன. அவர் அற்புதக் காட்சிகளைக் காண ஆரம்பித்தார்; அவருடைய இயல்பின் ரகசியங்கள் மெள்ளமெள்ள வெளிப்படத் தொடங்கின. ஒவ்வொரு திரை யாக விலக ஆரம்பித்தது. தேவியே அவருக்கு குருவானாள், அவர் தேடிய உண்மைகளைச் சொல்லிக் கொடுத்தாள்.

இந்த வேளையில் மிக நன்கு கற்ற, மிக அழகிய ஒரு பெண் அவர் இருந்த இடத்திற்கு வந்தார். பின்னாளில் இந்த மகான் அவரைப் பற்றிச் சொல்லும்போது, ‘அவர் கற்றவர் அல்ல, ஆனால் கல்வியின் வடிவானவர். மனித உருவத்தில் உள்ள அறிவு அவர்’ என்று சொல்வார். இந்திய சமுதாயத்தின் தனித் தன்மையை நீங்கள் இங்கு பார்க்கலாம். ஒரு சராசரி இந்துப் பெண் மூழ்கியுள்ள அறியாமையிலிருந்து, சுதந்திரம் இல்லாத வர்கள் என்று உங்கள் மேலைநாடுகள் கூறுகின்ற இந்துப் பெண்களிலிருந்து ஆன்மீகத்தில் உயர்ந்த ஒரு பெண்மணி தோன்றுவது ஆச்சரியம்தானே! அவர் ஒரு சன்னியாசினி, பெண்களும் உலகைத் துறந்தனர், சொத்தை உதறித் தள்ளினர், திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தனர், இறை வழி பாட்டில் தங்கள் காலத்தைக் கழித்தனர். அவர் வந்தார், காட்டில் இருந்த இளைஞரைப்பற்றிக் கேள்விப்பட்டார். அவரைப் போய்ப் பார்த்தார். அந்த இளைஞருக்குக் கிடைத்த முதல் உதவி இவரிடமிருந்துதான். அவருடைய கஷ்டம் என்னவென்று இவர் புரிந்துகொண்டு, ‘மகனே, இம்மாதிரி பைத்தியம் பிடிப்பவர்கள் பாக்கியவான்கள். இந்தப் பிரபஞ்சமே பைத்தியம் பிடித்து அலைகிறது சிலர் பொருளுக்காக, சிலர் இன்பத்திற்காக, இன்னும் பலர் நூற்றுக்கணக்கான விஷயங் களுக்காக, பொன்னிற்காக, கணவனுக்காக, மனைவிக்காக, சில அற்பப் பொருட்களுக்காக, பிறர்மீது அதிகாரம் செலுத்து வதற்காக, பணக்காரன் ஆவதற்காக என்றெல்லாம் கடவுளைத் தவிர முட்டாள்தனமான ஒவ்வொன்றிற்கும் பைத்தியமாக இருக்கிறார்கள். அவர்களுடைய பைத்தியம்தான் அவர் களுக்குப் புரிகிறது. யாராவது பொன்னிற்காகப் பைத்தியம் பிடித்து அலைந்தால் இவர்கள் அவனை ஆமோதிக்கிறார்கள், அவன் செய்வது சரி என்று சொல்கிறார்கள். ஏனெனில் உலகில் தாங்கள் மட்டுமே தெளிந்த புத்தி உடையவர்கள் என்றுதான் பைத்தியங்கள் நினைக்கின்றன. தன் அன்பருக்காக, தன் இறைவனுக்காக ஒருவன் பைத்தியமாக இருந்தால் அவர்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? அவனுக்குப் பைத்தியம் என்று நினைக்கிறார்கள்; “அவனோடு ஒன்றும் வைத்துக் கொள்ளாதே” என்கிறார்கள். அதனால்தான் அவர்கள் உன்னைப் பைத்தியம் என்று அழைக்கிறார்கள். ஆனால் உன் னுடையது சரியான பைத்தியம். கடவுளுக்காகப் பைத்தியமாக இருப்பவன் பாக்கியவான். இத்தகையோர் மிகவும் குறைவு’ என்று சொன்னார்.

இந்த சன்னியாசினி அவருடன் பல வருடங்கள் இருந்தார். இந்தியாவின் பல்வேறு நெறிகளைப் பற்றி அவருக்குச் சொல்லிக் கொடுத்தார். யோக முறைகளைப் பயிற்றுவித்தார், அந்த ஆன்மீகப் பெருந்தியை சமரசப்படுத்தி சரியான பாதையில் ஓடச் செய்தார்.

பிறகு அந்தத் தோட்டத்திற்கு ஒரு சன்னியாசி வந்தார். பிச்சை எடுத்துக்கொண்டே திரிந்து கொண்டிருந்த இவர் நன்கு படித்தவர், தத்துவ ஞானி, லட்சியவாதி, ஒரு தனிப்போக்கு உடையவர். இந்த உலகம் உண்மை என்பதை அவர் நம்ப வில்லை . அதை நிரூபிப்பதற்காக, அவர் ஒரு கூரையின் கீழும் தங்க மாட்டார்; வெயிலானாலும் மழையானாலும் திறந்த வெளியில்தான் இருப்பார். வேதங்களின் தத்துவங்களை அவர் அந்த இளைஞருக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். சீக்கிரம் அந்த சன்னியாசியே ஆச்சரியப்படும் வகையில் சீடன் சில விஷயங்களில் குருவையும் மிஞ்சிவிட்டார். அவர் பல மாதங்கள் அங்கிருந்து, இளைஞருக்கு சன்னியாசம் கொடுத்தார், பிறகு சென்றார்.

இளைஞர் கோயிலில் அர்ச்சகராக இருந்தபோது செய்த அசாதாரணமான பூஜையைக் கண்டவர்கள் அவரைப் பைத்தியம் என்று முடிவுகட்டினர். உறவினர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு சிறுமியை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள், இதனால் அவரது மனம் தெளியும் என்று நினைத்தார்கள். ஆனால் அவர் திரும்பி வந்தபோதோ இன்னும் அதிகப் பித்தில் மூழ்கினார். எங்கள் நாட்டில் சிறு வயதிலேயே திருமணம் நடந்துவிடுகிறது. இதில் பையன்களின் விருப்பம் ஒன்றும் இல்லை, பெற்றோர்கள்தான் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் இத்தகைய திருமணங்கள் நிச்சயதார்த்தம் மாதிரிதான். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் அவரவர் பெற்றோர் வீட்டிலேயே வசிக்கின்றனர். மனைவி வயதுக்கு வந்த பிறகுதான் உண்மையான திருமணம் நடக்கிறது. கணவன் சென்று மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவான்.

ஆனால் இந்தக் கணவரோ தனக்கு ஒரு மனைவி இருக் கிறாள் என்பதையே அடியோடு மறந்துவிட்டார். தொலைவில் தன் பெற்றோருடன் வசித்த அந்தப் பெண், தன் கணவர் மத விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றும், சிலர் அவரைப் பைத்தியம் என்று நினைக்கிறார்கள் என்றும் கேள்விப் பட்டாள். தானே உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டு மென்று அவள் விரும்பினாள். ஆகவே நடந்தே சென்று, கணவன் இருந்த இடத்தை அடைந்தாள். கணவரின் முன் அவள் போய் நின்றதும், தமது வாழ்க்கையில் அவளுக்கிருந்த பங்கை ஏற்றுக்கொண்டு அவளுக்கு உரிய இடமளித்தார் அந்த இளைஞர். இந்தியாவில் ஆணோ பெண்ணோ ஆன்மீகப் பாதையில் செல்ல முற்பட்டால், அவர்களுக்கு எல்லா பந்த பாசங்களும் இல்லையென்று ஆகிவிடுகின்றன. ஆனால் இந்த இளைஞரோ தம் மனைவியின் காலில் வீழ்ந்து, ‘தாமே ஒவ் வொரு பெண்ணிலும் குடிகொண்டிருப்பதாக அன்னை பராசக்தி எனக்குக் காட்டியிருக்கிறாள். ஆகவே எல்லா பெண் களையும் நான் அன்னையாகவே கருதக் கற்றுக் கொண்டு விட்டேன். உன்னைப் பற்றியும் அந்த ஒரு கருத்துதான் எனக்கு இருக்க முடியும். ஆனால் நான் உன்னைத் திருமணம் செய் துள்ளேன். நீ என்னை உலக பந்தத்தில் இழுக்க விரும்பினால் உன் சொற்படி கேட்கிறேன்’ என்றார்.

அந்தப் பெண் ஒரு புனிதவதி, மாட்சிமை பொருந்தியவள், கணவனின் நோக்கங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளத் தெரிந்தவள். எனவே அவரிடம், அவரை உலக பந்தத்திற்கு இழுக்கும் நோக்கம் தனக்கு இல்லையென்றும், அவரது அருகிலிருந்து அவருக்குச் சேவை செய்வதோடு, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் சொன்னாள் அவள்; அவரது மிக நெருங்கிய சிஷ்யை ஆனாள். அவரைத் தெய்வமாக வழிபடத் தொடங்கினாள். மனைவியின் சம்மதம் கிடைத்த பின், இளைஞரின் வாழ்க்கைப் பாதையில் கடைசித் தடையும் நீங்கியது. அவர் அதில் சுதந்திரமாகச் செல்ல ஆரம்பித்தார்.

இந்த மனிதரின் உள்ளத்தை அடுத்ததாகப் பிடித்து வாட்டிய ஆசை, எல்லா மதங்களின் உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகும். அதுவரை அவருக்குத் தனது மதத்தைத் தவிர வேறு மதங்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. மற்ற மதங்களைப் புரிந்துகொள்ள விரும்பினார் அவர். ஆகவே மற்ற மத குருமார்களைத் தேடினார். இந்தியாவில் நாங்கள் குருமார்கள் என்று குறிப்பிடுவது வெறும் புத்தகப் புழுக்களை அல்ல; அனுபூதி பெற்றவர்களையே, உண்மையைப் பிறர் சொல்லாமல் தாங்களே நேரில் உணர்ந்தவர்களையே என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.

ஒரு முகமதிய மகானைக் கண்டுபிடித்து, அவரிடம் தம்மை ஒப்படைத்தார். அந்த மதப் பயிற்சிகளைப் பின்பற்றினார். அந்தப் பயிற்சிகளும் நம்பிக்கையுடன் செய்யப்படும்போது அவர் ஏற்கனவே அடைந்த லட்சியத்தையே அடையச் செய் வதைக் கண்டு வியந்தார். ஏசுவின் உண்மையான மதத்தையும் பின்பற்றி அவர் இதே முடிவுக்கு வந்தார். இன்னும் அவரால் முடிந்த மதப் பிரிவுகளைப் பின்பற்றினார். ஆனால் எந்த நெறி யாக இருந்தாலும் அதன் பயிற்சிகளை முழுமனத்துடன் செய் தார். குரு சொன்னதை அப்படியே பின்பற்றினார், கடைசியில் எல்லாவற்றின்மூலமும் ஒரே முடிவுக்கு வந்தார். எல்லா மதங் களின் லட்சியமும் ஒன்றே, எல்லாம் ஒரே விஷயத்தைத்தான் போதிக்கின்றன; ஆனால் வழிகள் வேறு, மொழிகள் வேறு, அவ்வளவுதான் என்பதைத் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாகக் கண்டறிந்தார். மையக்கருத்தைக் கவனித்தால் எல்லா மதங்களும், எல்லா நெறிகளும் ஒரே லட்சியத்தைத் தான் கொண்டுள்ளன. தங்கள் சுயநலத்திற்காகவே அவை சண்டையிடுகின்றன, என் பெயர், உன் பெயர்’ என்று அடித்துக் கொள்கின்றன; அவை உண்மையைப்பற்றிக் கவலைப்பட வில்லை.

இருவர் ஒரே உண்மையைப் போதித்தார்கள். அவர்களில் ஒருவர், ‘அவர் சொல்வது உண்மையல்ல, ஏனெனில் என் முத்திரையை அதில் நான் பதிக்கவில்லை. ஆகவே அவர் சொல்வதைக் கேட்காதீர்கள்’ என்று சொன்னார். அடுத்தவரோ, ‘நான் போதிப்பதைத்தான் அவரும் போதிக்கிறார். இருந்தாலும் அவர் சொல்வதைக் கேட்காதீர்கள். அவர் என் பெயரில் அதைப் போதிக்காததால் அது உண்மையல்ல’ என்றார்.

எனது குருநாதர் கண்டது இதுதான். பிறகு அவர் பணிவைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஏனெனில் எல்லா மதங்களும் ‘நான் அல்ல, நீ’ என்றே போதிப்பதைக் கண்டார், ‘நான் அல்ல’ என்று சொல்பவனின் இதயத்தில் ஆண்டவன் திகழ்கிறார். நான் என்பது குறைவாக இருக்கும் அளவிற்குக் கடவுள் அவனுள் நிறைகிறார்.

உலக மதங்கள் எல்லாவற்றிலும் அவர் இந்த உண்மை இருக்கக் கண்டார், அதன்படி நடக்க முடிவு செய்தார். நான் முன்பே சொன்னதுபோல், எதையாவது செய்ய வேண்டு மென்று விரும்பினால் அவர் வெறும் கோட்பாடுகளைப் படித்துக் கொண்டிருக்க மாட்டார், உடனேயே செயல்முறை யில் இறங்கிவிடுவார். தானதர்மம், சமத்துவம், மக்களின் உரிமை என்றெல்லாம் பலர் வெகு அழகாகப் பேசுவதைக் கேட்பீர்கள், ஆனால் அனைத்தும் வெறும் கொள்கையளவில்தான். கொள்கையைச் செயல்முறைப் படுத்துகின்ற ஒருவரைச் சந்தித்தது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தான் சரி என்று நினைத்த எதையும் உடனே செயலுக்குக் கொண்டு வருவதற்கான அற்புத சக்தி அவரிடம் இருந்தது.

அவர் இருந்த இடத்திற்குப் பக்கத்தில் தாழ்ந்த குலத்தினன் ஒருவனது குடும்பம் இருந்தது. இந்தியா முழுவதிலுமுள்ள அந்த ஜாதியினரின் எண்ணிக்கை பல லட்சங்கள் இருக்கும். தன் வீட்டிலிருந்து வெளியே வருகின்ற ஒரு பிராமணன் அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவனது முகத்தைப் பார்த்துவிட்டால், அன்று முழுவதும் அவன் பட்டினி கிடக்க வேண்டும், சில பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவன் பரிசுத்தமாக முடியும் என்று எங்கள் சில சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த அளவிற்குத் தாழ்ந்தவன் அவன். சில இந்து நகரங்களில் அவன் உள்ளே நுழைந்தால் தான் இழிகுலத்தவன் என்பதைக் காட்டிக்கொள்ள, தன் தலையில் ஒரு காக்கை இறகை வைத்துக்கொள்ள வேண்டும்; ‘உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். தெரு வழியாக இழிகுலத்தவன் நான் சென்று கொண்டிருக்கிறேன்’ என்று கத்த வேண்டும். உடனேயே மக்கள் ஏதோ மாயமாக நாலாபக்கங்களிலும் ஓடுவார்கள். தவறிப்போய் அவனைத் தொட்டுவிட்டால், இவர்கள் குளித்தாக வேண்டும், ஆடைகளை மாற்ற வேண்டும், இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டும். அவர்கள் செய்வது சரி, தன்னைத் தொட்டால் அவர்கள் அசுத்தமாகி விடுவார்கள் என்றே ஆயிரக் கணக்கான வருடங்களாக அவனும் நம்பி வந்திருக்கிறான்.

எனது குருநாதரோ, அத்தகைய ஒருவனின் வீட்டிற்குச் சென்று அவனது வீட்டைச் சுத்தம் செய்யத் தம்மை அனுமதிக்கும்படிக் கேட்பார். தெருக்களைச் சுத்தம் செய்வதும், வீடுகளைச் சுத்தம் செய்வதும் அவனது வேலை. வாசல் கதவு வழியாக அவன் உள்ளே நுழையக் கூடாது. கொல்லைப்புறக் கதவின் வழியாகத்தான் உள்ளே நுழைவான். அவன் சென்றதும் அவன் கால்பட்ட இடங்களிலெல்லாம் கங்கை நீர் தெளிக்கப் பட்டுச் சுத்தமாக்கப்படும்.

பிறப்பால் பிராமணன் பரிசுத்தமானவன், தாழ்ந்த குலத் தினன் அசுத்தமானவன் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் இந்தப் பிராமணர் அத்தகைய ஒருவனின் வீட்டைச் சுத்தம் செய்ய அனுமதி கேட்டார். அவன் அவரை அனுமதிக்க மறுத் தான், அப்படி அனுமதிப்பது பாவம், அதனால் அவன் அழிந்து விடுவான் என்பது அவனது நம்பிக்கை. ஆகவே நள்ளிரவில் எல்லோரும் தூங்கும் வேளையில் ஸ்ரீராமகிருஷ்ணர் அவனது வீட்டிற்குச் செல்வார். அவருக்கு நீண்ட தலைமயிர் இருந்தது. அதனால் அந்த இடத்தைத் துடைத்து, ‘ஓ என் தாயே, என்னை இந்த இழிகுலத்தவனின் வேலைக்காரன் ஆக்கு. நான் அவனைவிடக் கீழானவன் என்று எண்ணுமாறு செய்’ என்று சொல்வார். ‘என்னை வழிபடுபவர்களை வழிபடுபவர்கள்தான் என்னைச் சிறப்பாக வழிபடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் என் குழந்தைகள். அவர்களுக்குத் தொண்டு செய்வது உன் தனிப்பெருமை’ என்று இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவர் இன்னும் எத்தனையோ விதமான சாதனைகள் செய்தார். அவற்றையெல்லாம் சொல்வதற்கு நேரம் போதாது. ஆகவே அவரது வாழ்க்கையின் சுருக்கத்தை மட்டும் கூறுகிறேன்.

பல வருடங்கள் அவர் இப்படித் தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டார். அவர் செய்த சாதனைகளில் ஒன்று பால்வேறு பாட்டு உணர்வை அகற்றுவது. ஆன்மாவுக்குப் பால்வேறுபாடு கிடையாது, அது ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல. பால்வேறு பாடு உடலில்தான் இருக்கிறது. ஆன்மாவை அடைய விரும்பு பவன் பால்வேறுபாடுகளைப் பார்க்கக் கூடாது. ஆண் உடம்பில் பிறந்த இவர், எல்லாவற்றையும் பெண்ணாகப் பார்க்க விரும்பினார். தான் ஒரு பெண் என்று நினைக்க ஆரம்பித்தார். பெண்களைப்போல் உடை உடுத்தார், பெண்களைப்போல் பேசினார், ஆண்கள் செய்யும் வேலைகளை விட்டார், ஒரு நல்ல குடும்பத்தில் பெண்களுடனேயே வசிக்க ஆரம்பித்தார். பல வருடப் பயிற்சியின் காரணமாக அவரது மனம் மாறியது, பால்வேறுபாட்டை அவர் மறந்தார். வாழ்க்கையைப்பற்றிய அவரது கண்ணோட்டம் முற்றிலும் மாறியது.

மேலைநாட்டில் பெண்களை வழிபடுவது பற்றிக் கேள்விப்படுகிறோம், ஆனால் அது பொதுவாக அவளது இளமைக்காகவும் அழகுக்காகவும்தான். ஆனால் இந்த மனிதருக்கோ பெண்ணை வழிபடுவது என்பது எல்லா பெண் களின் முகங்களையும் ஆனந்தமயமான தேவியின் முகமாகக் காண்பதுதான், வேறு எதுவும் அல்ல. சமுதாயம் மதிக்காத பெண்களின் காலில் வீழ்ந்து, கண்ணீருடன், ‘அம்மா, ஓர் உருவத்தில் நீ விலைமகளாக இருக்கிறாய். இன்னொரு வடிவத் தில் நீயே பிரபஞ்சமாக இருக்கிறாய். உன்னை வணங்குகிறேன் அம்மா, உன்னை வணங்குகிறேன்’ என்று அவர் சொல்வதை நானே பார்த்திருக்கிறேன்.

காமம் முற்றிலும் நீங்கிய அந்த வாழ்க்கை எத்தனை சிறப்பு வாய்ந்தது என்பதை நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு பெண்ணின் முகத்தையும் அவர் அன்போடும் மரியாதையுடனும் பார்க்க முடிந்தது. ஏனெனில் பெண்ணின் முகம் உருமாறி, அந்த உலகநாயகியான, தெய்வீக அன்னையான, ஆனந்த மயியான, மனித குலத்தைக் காப்பவளான தேவியின் திருமுகமே அவருக்குத் தெரிந்தது. இதுதான் நமக்குத் தேவை. பெண்ணின் தெய்வீகத்தை நாம் ஏமாற்ற முடியுமா? இதுவரை முடிய வில்லை , இனியும் முடியாது. அது எப்போதும் உறுதியாக இருக்கிறது. தவறாமல் அது போலியைக் கண்டுபிடித்து விடுகிறது, அயோக்கியத்தனத்தைக் கண்டுபிடித்து விடுகிறது; உண்மையின் இதத்தை, ஆன்மீகத்தின் ஒளியை, தூய்மையின் புனிதத்தை உணர்ந்துகொள்கிறது. உண்மையான ஆன்மீகத்தை அடைய வேண்டுமானால் இந்தத் தூய்மை நிச்சயமாகத் தேவை.

இந்தக் கடுமையான, அப்பழுக்கற்ற தூய்மை அவரது வாழ்க்கையில் ஏற்பட்டது. நாம் வாழ்க்கையில் அனுபவிக்கும் போராட்டங்களை எல்லாம் அவர் அனுபவித்து முடித்தார். வாழ்க்கையில் முக்கால் பங்கைச் செலவிட்டு, அவர் பாடுபட்டுத் தேடிய ஆன்மீக செல்வங்கள் மனிதகுலத்திற்குக் கொடுக்கத் தயாராக இருந்தன. அவரது பணி தொடங்கியது.

அவரது போதனையும் பிரச்சாரமும் ஒரு தனிவிதமாக இருந்தன. எங்கள் நாட்டில் குரு மிகவும் கௌரவமாகக் கருதப் படுகிறார். அவர் கடவுளாகவே போற்றப்படுகிறார். பெற்றோ ருக்குக்கூட நாங்கள் அவ்வளவு மரியாதை அளிப்பதில்லை. பெற்றோர் நமக்கு உடம்பைத்தான் கொடுத்தார்கள், குருவோ முக்திக்கு வழிகாட்டுகிறார். நாங்கள் குருவின் குழந்தைகள், நாங்கள் அவரது ஆன்மீகப் பரம்பரையில் பிறந்துள்ளோம். மிகச் சிறந்த குரு இருந்தால் அவருக்கு மரியாதை செய்ய எல்லா இந்துக்களும் சூழ்ந்துகொள்வார்கள்.

ஆனால் இந்த குருவிற்கோ தாம் ஒரு பெரிய குரு என்றோ , எல்லோரும் தமக்கு மரியாதை செய்ய வேண்டுமென்றோ எந்த எண்ணமும் கிடையாது. எல்லாம் தேவிதான் செய்கிறாள் என்பது அவரது எண்ணம். ‘என் வாயிலிருந்து ஏதாவது நல்லது வந்தால், தேவிதான் பேசுகிறாள். அதோடு எனக்கு என்ன சம்பந்தம்?’ என்றே அவர் எப்போதும் சொல்வார், தமது பணியைப் பற்றி அவருக்கிருந்த ஒரே கருத்து இதுதான். இறுதிவரை அவர் இந்தக் கருத்தை விடவில்லை. அவர் யாரை யும் தேடவில்லை. ‘முதலில் நல்ல குணத்தை உருவாக்கிக் கொள், முதலில் ஆன்மீகத்தைத் தேடிக் கொள். பலன்கள் தாமாகவே வரும்’ என்பது அவரது கொள்கை. ‘தாமரை மலர்ந்தால், தேனைத் தேடிக்கொண்டு தேனீக்கள் தாமே வரும். உன் நல்ல குணம் என்னும் தாமரை மலரட்டும், பலன்கள் தாமாகவே வரும்’ என்பது அவர் வழக்கமாகச் சொல்கின்ற ஓர் உதாரணம். இது கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல படிப்பினை.

இந்தப் பாடத்தை எனது குருநாதர் எனக்குத் திரும்பத் திரும்பப் பலமுறை சொல்லிக் கொடுத்திருக்கிறார், ஆனால் நான் அதை அடிக்கடி மறந்துவிடுகிறேன். எண்ணத்திற்கு எத்தனை சக்தி உண்டு என்பது ஒருசிலருக்கே தெரியும். ஒருவன் குகை ஒன்றில் தன்னை அடைத்துக்கொண்டு, உண்மையிலேயே உன்னதமான ஒரே ஓர் எண்ணத்தை எண்ணிவிட்டு இறக்கிறான்; அந்த எண்ணம் குகைச் சுவர்களை ஊடுருவி வெளியே வரும், வான்வெளி வழியாக அதிர்ந்து வந்து மனித இனம் முழுவதை யும் சென்று அடையும். எண்ணத்திற்கு இவ்வளவு சக்தி உண்டு. ஆகவே உங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்குக் கொடுக்க அவசரப்படாதீர்கள். கொடுக்க வேண்டுமானால் முதலில் ஏதாவது சேமியுங்கள். கொடுப்பதற்கு உள்ளவனால்தான் போதிக்க முடியும். போதனை என்பது வெறும் பேச்சல்ல, கொள்கைகளைச் சொல்லிக் கொடுப்பதல்ல, அது ஒரு பரி மாற்றம் (Communication). நான் உங்களுக்கு ஒரு பூவைக் கொடுப்பதுபோல் உண்மையாகவே ஆன்மீகத்தைத் தர முடியும். இது எழுத்துக்கு எழுத்து உண்மை . இந்தக் கருத்து இந்தியாவில் மிகப் பழமையானது; மேலைநாட்டில் தீர்க்க தரிசிகளின் பரம்பரை (Apostolic succession) என்ற கொள்கை உள்ளது. நான் சொன்ன கருத்தின் நிரூபணத்தை இந்தக் கொள்கையில் நாம் காணலாம்.

ஆகவே முதலில் நற்பண்பைச் சம்பாதித்துக் கொள் ளுங்கள். அதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த கடமை. உண்மையை முதலில் உங்களுக்கு நீங்கள் தெரிந்துகொள் ளுங்கள். பிறகு அதைப் பலருக்குச் சொல்லிக் கொடுக்கலாம். அவர்கள் வந்து சேர்வார்கள். எனது குருநாதரின் மனப்பாங்கு இப்படித்தான் இருந்தது. அவர் யாரையும் குறை கூறவில்லை . அவருடன் நான் பல ஆண்டுகள் வாழ்ந்தேன், ஆனால் அவர் எந்த நெறியையும் கண்டித்ததை ஒருமுறைகூட நான் கேட்ட தில்லை. எல்லா பிரிவுகளின்மீதும் அவருக்கு ஒரேவகையான மதிப்பு இருந்தது. அவற்றுள் இருந்த இயைபை அவர் கண்டார். ஒருவன் ஞானியாகவோ, பக்தனாகவோ, யோகியாகவோ, கர்மவீரனாகவோ இருக்கலாம். ஒவ்வொரு மதமும் இவற்றுள் ஒன்றின் வடிவமாக உள்ளன. ஒரே மனிதனில் இந்த நான்கு போக்குகளையும் ஒருங்கிணைக்க முடியும். எதிர்கால மனிதன் அப்படித்தான் இருக்கப்போகிறான். அவர் யாரையும் கண்டிக்க வில்லை, எல்லோரிடமும் நல்லதைத்தான் கண்டார்.

இந்த அற்புத மனிதரைக் காணவும் கேட்கவும் மக்கள் ஆயிரக் கணக்கில் வந்தார்கள். அவர் கொச்சை மொழியில்தான் பேசினார்; ஆனால் ஒவ்வொரு சொல்லும் ஆணித்தரமாக இருந்தது, பேரொளி நிறையப் பெற்றதாக இருந்தது. என்ன பேசுகிறோம் என்பது முக்கியமில்லை, எந்த மொழியில் பேசு கிறோம் என்பதுபற்றிய கேள்வியே கிடையாது; பேசுபவரின் ஆளுமையே முக்கியம். ஆளுமையே ஒருவர் பேசுகின்ற ஒவ்வொன்றிலும் உறைந்து அதற்கு மதிப்பை அளிக்கிறது. இதை நாம் சிலவேளைகளில் உணர்கிறோம். மிகவும் அழகான சொற்பொழிவுகளைக் கேட்கிறோம், நல்ல தர்க்கரீதியில் அமைந்த உரைகளைக் கேட்கிறோம், ஆனால் வீடு திரும்பியதும் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம். சிலவேளைகளில் மிக எளிய மொழியில் பேசப்பட்ட ஓரிரு வார்த்தைகளைக் கேட் கிறோம், அவை நம் வாழ்க்கையில் புகுகின்றன, நம்மில் ஒன்றாகி விடுகின்றன, நிரந்தர பலன்களை உண்டாக்குகின்றன. பேசுபவர் தாம் பேசுகின்ற சொற்களில் தமது ஆளுமையைக் கலக்க முடியுமானால், அவற்றிற்குப் பலன் உண்டு. ஆனால் அவர் மகோன்னதமான ஆளுமை படைத்தவராக இருக்க வேண்டும். போதனை என்பது கொடுப்பதும் எடுப்பதும் ஆகும். குரு கொடுக்கிறார், சீடர் பெறுகிறார். ஆனால் குரு கொடுப்பதற்கு ஏதாவது வைத்திருக்க வேண்டும், கேட்பவரும் உள்ளத்தைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.

வசிப்பதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் இந்தியாவின் தலை நகரான கல்கத்தாவிற்கு அருகில் வந்தார். நாட்டின் முக்கியமான பல்கலைக் கழகங்கள் அங்குதான் இருந்தன. நூற்றுக்கணக்கில் சந்தேகவாதிகளும், உலோகாயதர்களும் ஆண்டுதோறும் அங்கிருந்துதான் வெளிவந்து கொண்டிருந்தனர். சந்தேகவாதி களாக, ஆஜ்ஞேயவாதிகளாக இருந்தாலும் அவர்களுள் பலர் இவர் பேசுவதைக் கேட்க வருவது வழக்கம்.

நானும் இவரைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காணச் சென்றேன். பார்ப்பதற்கு அவர் மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தார், பெரிதாக எந்தச் சிறப்பும் அவரிடம் தென்பட வில்லை. பேச்சும் மிக எளிய மொழியில்தான் இருந்தது. இவர் பெரிய ஆச்சாரியராக இருக்க முடியுமா?’ என்றுகூட நான் நினைத்தேன். அவரிடம் சென்று, நான் பலரையும் கேட்டு வந்த கேள்வியைக் கேட்டேன்: ‘ஐயா, நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?’ ‘ஆம்’ என்று அவர் பதில் சொன்னார். அதை உங்களால் நிரூபிக்க முடியுமா?’ ‘முடியும்.’ ‘எப்படி?’ ‘எப்படி என்றால் உன்னைப் பார்ப்பது போலவே அவரை நான் பார்க்கிறேன்- இன்னும் தெளிவாகக் காண்கிறேன் அவ்வளவுதான்.’

அவர் கூறிய பதில் என் மனத்தில் பதிந்தது. கடவுளைப் பார்க்கிறேன், மத உண்மையை நாம் உணர முடியும், உலகை நாம் நம் புலன்களால் அறிவதைவிட இன்னும் தெளிவாக அவற்றை அறியலாம் என்று துணிந்து சொல்லக்கூடிய ஒருவரை என் வாழ்க்கையில் முதன்முறையாகக் கண்டேன். தினமும் அவரைப் பார்க்கச் செல்ல ஆரம்பித்தேன். ஆன்மீக உணர்வைப் பிறருக்குக் கொடுக்க முடியும் என்பதை அறிந்தேன். ஒரு ஸ்பரிசம், ஒரு பார்வை போதும், வாழ்க்கை அப்படியே மாறி விடும். புத்தர், கிறிஸ்து, முகமது என்னும் பல பழைய மகான் களைப்பற்றி நான் படித்திருக்கிறேன். அவர்கள் ‘நீ நிறைநிலை அடைவாய்’ என்று சொல்வார்கள், அது அப்படியே நடக்கும். அது முழு உண்மை என்று நான் இப்போது கண்டேன். இந்த மனிதரைப் பார்த்த பிறகு எனது அவநம்பிக்கைகள் எல்லாம் மறைந்தன. இதைச் செய்ய முடியும். ‘உலகின் மற்ற எல்லா பொருட்களையும்விட ஆன்மீக உணர்வைக் கண்கூடாக, ஒருவருக்குக் கொடுக்க முடியும், பெற முடியும்’ என்று சொல் வார் எனது குருநாதர். முதலில் ஆன்மீகத்தைப் பெறுங்கள். கொடுக்க ஏதாவது வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உலகின் முன் நின்று அதைக் கொடுங்கள்.

மதம் என்பது பேச்சல்ல, கொள்கைகள் அல்ல, தத்துவ விளக்கம் அல்ல, பிரிவினைவாதம் அல்ல. பிரிவுகளிலும் குழுக்களிலும் மதம் வாழ முடியாது. அது ஆன்மாவுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு. அதை எப்படி ஒரு சங்கமாக அமைக்க முடியும்? அமைத்தால் அது வியாபாரம் என்ற நிலைக்கு இறங்கிவிடும். மதத்தில் வியாபாரமும், வியாபாரக் கோட்பாடுகளும் நுழைந்தால் ஆன்மீகம் அழிந்துவிடும். கோயில்களைக் கட்டுவதோ, சர்ச்களை அமைப்பதோ, பொதுப் பிரார்த்தனைகளில் கலந்துகொள்வதோ மதமாகாது. அதை நூல்களிலோ, சொற்களிலோ, சொற்பொழிவுகளிலோ, நிறுவனங்களிலோ காண முடியாது. மதம் என்றால் அனுபூதி. நாமே உண்மையை உணராமல் நமக்கு எதுவும் திருப்தி தராது. என்னதான் வாதங்கள் செய்தாலும், என்னதான் கேட்டாலும் ஒரே ஒரு விஷயம்தான் நமக்குத் திருப்தி தரமுடியும், அதுதான் அனுபூதி. முயன்றால் நம் எல்லோருக்கும் இது கைகூடக் கூடியதே.

மதத்தை உணர்வதற்கான முயற்சியின் முதல்படி துறவு. முடிந்த அளவு நாம் துறக்க வேண்டும். இருளும் ஒளியும், சிற்றின்பமும் பேரின்பமும் ஒருபோதும் சேர்ந்திருக்க இயலாது. ‘கடவுளுக்கும் பணத்திற்கும் ஒரேவேளையில் தொண்டு செய்ய முடியாது.’ முடிந்தால் முயன்று பாருங்கள். அவ்வாறு முயன்ற லட்சக்கணக்கானோரை நான் எல்லா நாடுகளிலும் பார்த் துள்ளேன். ஆனால் கடைசியில் பலன் ஒன்றும் இல்லை. உண்மையான வார்த்தை என்று ஏதாவது உண்டானால் அது ‘இறைவனுக்காக எல்லாவற்றையும் துறந்துவிடுங்கள்’ என்பது தான். இது மிகவும் கடினமானதும், நீண்ட காலப் பணியுமாகும். அதை நீங்கள் இப்பொழுதே இங்கேயே ஆரம்பியுங்கள். சிறிதுசிறிதாக அதை நோக்கி முன்னேற வேண்டும்.

நான் எனது குருநாதரிடமிருந்து கற்றுக்கொண்ட இரண்டாவது கருத்து, என்னவென்றால் உலக மதங்கள் ஒன்றுக் கொன்று முரண்பாடோ, பகையோ கொண்டது அல்ல என்ப தாகும். இந்தக் கருத்து மிக முக்கியமான அதிசயமான உண்மை யாகும். ஒரு அழிவற்ற மதத்தின் பல நிலைகள் அவை. இந்த ஒரே அழிவற்ற மதம்தான், பல வாழ்க்கை நிலைகளுக்கேற்ப, பல்வேறு மனங்களுக்கேற்ப, பல்வேறு இனங்களுக்கேற்ப கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உங்கள் மதம், என் மதம், எங்கள் தேசீய மதம், உங்கள் தேசீய மதம் என்றெல்லாம் எதுவும் இருந்ததில்லை . ஒருபோதும் பல மதங்கள் இருந்த தில்லை. ஒரே ஒரு மதம்தான் என்றும் உள்ளது. எல்லையற்ற ஒரே ஒரு மதம்தான் காலமெல்லாம் இருந்து வந்துள்ளது; இனியும் காலமெல்லாம் இருக்கும். இந்த ஒரே மதம்தான் பல்வேறு நாடுகளில், பல்வேறு உருவங்களில் வெளிப்படுகிறது. எனவே எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும், முடிந்தவரை எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மதங்கள் வெளிப்படுவது பூகோள நிலையையும் இனத்தை யும் மட்டும் பொறுத்ததல்ல, அது தனிநபர்களின் ஆற்றல்களுக்கு ஏற்பவும் வெளிப்படுகிறது. ஒரு மனிதனிடம் அது தீவிரமான செயலாக வெளிப்படுகிறது. இன்னொருவனிடம் அது தீவிர பக்தியாக, மற்றொருவனிடம் யோகமாக, இன்னொருவனிடம் தத்துவமாக என்று பலவகைகளில் வெளிப்படுகிறது. ‘உங்கள் வழிகள் சரியானதல்ல’ என்று நாம் மற்றவர்களைப் பார்த்துச் சொல்வது தவறு. பக்தியுள்ளம் கொண்ட ஒருவன், மக்களுக்கு நல்லது செய்யும் ஒருவனை, அவன் சரியான பாதையில் செல்ல வில்லை என்று சொல்வான், ஏனெனில் அது இவனது வழி அல்ல. ‘ஓ இந்தப் பாமர ஜனங்கள் அன்புக் கடவுள் என் கிறார்கள், அவரை நேசிப்பது என்கிறார்கள். இவர்களுக்கு இதெல்லாம் என்ன தெரியும்?’ என்று தத்துவஞானி நினைத்தால் அது தவறு. ஏனெனில் அவர்கள் வழியும் சரியாக இருக்கலாம், இவரது வழியும் சரியாக இருக்கலாம்.

உண்மை ஒரேவேளையில் ஒன்றாகவும் பலவாகவும் இருக் கும், பல கோணங்களிலிருந்து பார்க்கும்போது அது பலவித மாகத் தெரிகிறது என்ற முக்கிய ரகசியத்தைக் கற்பதுதான் நாம் செய்ய வேண்டியது. அப்பொழுது நாம் யாரிடமும் பகைமை கொள்ளாமல் எல்லோரிடமும் அனுதாபத்துடன் இருப்போம். மத உண்மை ஒன்றாக இருந்தாலும், மக்கள் பல்வேறு இயல்பு களுடன் இருக்கும் வரை அதை அவர்களுக்கேற்பப் பல்வேறு வகையில்தான் வழங்க முடியும் என்பதை அறிந்துகொள்ளும் போது நம்முள் ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மை வந்தே தீரும்.

இயற்கை என்பது வேறுபாடுகளுக்கிடையே ஒருமை. அதில் எல்லையற்ற வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகளிலும் அவற்றின் ஊடேயும் ஓர் எல்லையற்ற, மாறாத, ஓர் ஒருமை உள்ளது. அதே போல்தான் மனிதனின் விஷயம், அண்டத்தின் மிகச் சிறிய மாதிரியே பிண்டம். இந்த வேறுபாடுகள் அனைத்தின் ஊடேயும் ஒரு நிரந்தர இயைபு இழையோடுகிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மற்ற எல்லாவற்றையும்விட, இந்தக் கருத்துதான் இன்றைய அவசரத் தேவை என்று நான் காண்கிறேன்.

மதப்பிரிவுகள் மலிந்த ஒரு நாட்டிலிருந்து நான் வருகிறேன் —மதத்தைப்பற்றி ஏதோ அறிந்துள்ள ஒவ்வொருவரும் அதிர்ஷ்டவசமாகவோ, துரதிர்ஷ்டவசமாகவோ அங்கே தங்கள் ஆட்களை அனுப்ப விரும்புகிறார்கள்-அதன் காரணமாகச் சிறு வயதிலிருந்தே நான் உலகின் பல்வேறு மதப் பிரிவுகளைப் பற்றி அறிந்துள்ளேன். மார்மன்கள்கூடப் (Mormans) பிரச்சாரம் செய்வதற்காக இந்தியாவிற்கு வந்தார்கள். எல்லோரும் வரட்டும், மதப் பிரச்சாரத்திற்கான பூமி அல்லவா அது! மற்ற நாடுகளை விட அங்குதான் மதம் சீக்கிரம் வேரூன்றுகிறது. நீங்கள் இந்தியாவில் வந்து அரசியலைப்பற்றிப் பேசினால் அவர் களுக்குப் புரியாது. ஆனால் மதத்தைப்பற்றிப் பேசுங்கள், அது எத்தனை வினோதமானதாக இருந்தாலும் சரி, அதைப் பின்பற்ற நூற்றுக் கணக்கில், ஆயிரக்கணக்கில் ஆட்கள் உங்களுக்குக் கிடைத்து விடுவார்கள், நீங்களும் உங்கள் வாழ்நாளிலேயே ஒரு கண்கண்ட தெய்வமாக ஆனாலும் ஆகிவிடுவீர்கள். நான் மகிழ்ச்சி அடைகிறேன், இந்தியாவிற்கு இதுதான் தேவை.

இந்து மதத்தில் பல பிரிவுகள் உள்ளன, ஏராளம் உள்ளன. அவற்றுள் சில ஒன்றுக்கொன்று பெரிதும் முரண்பட்டிருக் கின்றன. இருந்தும் அவை எல்லாம் மதத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகள் என்று அவர்கள் சொல்வார்கள். ‘பல நதிகள், பல மலைகளில் தோன்றி, வளைந்தோ நேராகவோ பாய்ந்து கடைசியில் கடலில் ஒன்றுகலக்கிறது. அதுபோல், பல நோக்குகள் கொண்ட பல்வேறு பிரிவுகளும் கடைசியில் உன்னைத்தான் அடைகின்றன. இது வெறும் கொள்கை அல்ல, இதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் சொல்வது போல், ‘ஓ, இதில் சில நல்ல விஷயங்கள் உள்ளன, இவற்றை நாங்கள் இன மதங்கள் என்று அழைக்கிறோம். இவற்றிலும் சில நல்ல அம்சங்கள் உள்ளன’ என்று ஆதரவு காட்டுவதுடன் நின்றுவிடக் கூடாது. சிலரது பரந்த நோக்கோ இன்னும் வினோதமாக இருக்கும்; ‘மற்ற மதங்கள் எல்லாம் வரலாற்றுக் காலத்திற்கு முன்பு உருவான துண்டுதுணுக்குகள், எங்கள் மதம்தான் பரிபூரணமானது’ என்பார்கள் அவர்கள். மிகவும் பழமையானதால் தன் மதம் உயர்ந்தது என்று ஒருவன் கூறு கிறான். தன் மதம் மிகவும் சமீபத்தில் தோன்றியது, அதனால் அது உயர்ந்தது என்று இன்னொருவன் கூறுகிறான்.

மனிதனைக் காக்கும் சக்தி எல்லா மதங்களிலும் சமமாகவே உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு இடையே வேறுபாடு உள்ளது என்றெல்லாம் கோயில்களிலும் சரி, சர்ச் களிலும் சரி, நீங்கள் கேள்விப்படுவது வெறும் மூடநம்பிக்கை களின் தொகுதி. எல்லோருக்கும் ஒரே கடவுள்தான் இருக்கிறார். ஆன்மாவைக் காப்பதோ, அது முக்தியடையும்படிச் செய்வதோ, நீங்களோ நானோ அல்லது ஒரு தனிக்கூட்டமோ அல்ல. சர்வ வல்லமை பொருந்திய அதே கடவுள்தான் எல்லோருக்கும் பொறுப்பாக இருக்கிறார்.

தாங்கள் கடவுளை நம்புவதாகச் சொல்லிக்கொண்டு, அதே வேளையில் கடவுள் எல்லா உண்மையையும் ஒரு பிரிவினரிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அவர்கள்தான் மனித சமுதாயத் தின் காவலர்கள் என்றும் எப்படி நம்புகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை . அதை நீங்கள் மதம் என்று எப்படிக் கூற முடியும்? மதம் என்பது அனுபூதி. வெறும் பேச்சோ , நம்ப முயற்சிப்பதோ, இருட்டில் தேடுவதோ, முன்னோர்களின் வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைபோல் ஒப்பித்துவிட்டு அது தான் மதம் என்று நினைப்பதோ, மத உண்மைகளை அரசியலாக்குவதோ மதம் அல்லவே அல்ல. எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் மற்ற எதனுடனும் ஒத்துப்போகாத தாக நாம் கருதுகின்ற முகமதியர்களில்கூட-மதத்தை உணர முயன்றவர்கள் அனைவரின் வாயிலிருந்தும் தீப்பொறிபோல் வெளிவந்த சொற்கள் இவைதான்: ‘எம்பெருமானே, அனை வருக்கும் தலைவன் நீயே, எல்லார் இதயத்திலும் உறைபவன் நீயே, எல்லோருக்கும் வழிகாட்டி நீயே, எல்லோருக்கும் ஆசிரியர் நீயே, உன் குழந்தைகளின் நாட்டை எங்களைவிட நீதான் மிகவும் கவனமாகக் காக்கிறாய்!’

யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயற்சிக்காதீர்கள், முடிந்தால் அதைவிடச் சிறந்த ஒன்றை அவனுக்குக் கொடுங்கள். முடிந்தால் ஒருவன் எங்கு நிற்கிறானோ, அங்கிருந்து அவனை முன்னுக்குத் தள்ளுங்கள். அதைச் செய்யுங்கள், அவனிடம் இருப்பதையும் கெடுக்காதீர்கள். ஒரு நொடியில் தம்மை ஆயிரம் பேராக மாற்றிக்கொள்ள யாரால் முடியுமோ, அவர்தான் உண்மையான ஆசிரியர். யாரால் மாணவனின் நிலைக்கு உடனே இறங்கிவர முடியுமோ, தன் மனத்தை மாணவனின் மனத்திற்கு மாற்ற முடியுமோ, யாரால் மாணவனின் கண்களால் பார்க்கவும் அவனது காதுகளால் கேட்கவும் அவனது மனத்தின்மூலம் புரிந்து கொள்ளவும் முடியுமோ அவர்தான் உண்மையான ஆசிரியர். இத்தகைய ஆசிரியரால்தான் கற்றுக் கொடுக்க முடியும், மற்ற யாராலும் முடியாது. எதிர்மறையான, உடைக்க வும் அழிக்கவும் தன்மையுள்ள இன்றைய ஆசிரியர்களால் ஒரு நன்மையும் செய்ய முடியாது.

இந்த உடலிலேயே மனிதன் பரிபூரணனாக ஆக முடியும் என்பதை எனது குருநாதரின் திருமுன்னர் உணர்ந்தேன். அந்த உதடுகள் ஒருபோதும் யாரையும் சபிக்கவில்லை , யாரிடமும் குற்றம் காணவில்லை. அந்தக் கண்கள் தீயதைப் பார்க்கும் சக்தியை இழந்துவிட்டன. அவரது மனம் தீயதை நினைக்கும் சக்தியை இழந்துவிட்டது. எங்கும் அவர் நல்லதையே கண்டார். அந்த அற்புதத் தூய்மை, தீவிரத் துறவு இதுதான் ஆன்மீகத்தின் ஒரே ரகசியம். ‘செல்வத்தால் அல்ல, சந்தான விருத்தியால் அல்ல, துறவினால் மட்டுமே மரணமிலாப் பெருநிலையை அடைய முடியும்’ என்று வேதங்கள் கூறுகின்றன. ‘உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு என் பின்னால் வா’ என்றார் ஏசு. எல்லா மகான்களும், தீர்க்கதரிசிகளும் இதையேதான் கூறினர், தங்கள் வாழ்க்கை யிலும் நடத்திக் காட்டினர். இந்தத் துறவின்றி எப்படி ஆன்மீகம் வரும்? எங்கிருந்தாலும் சரி, எல்லா மதக் கருத்துக்களின் பின்னணி துறவே. இந்தத் துறவுக் கருத்து குறையக்குறைய மதத்தில் புலனின்பங்கள் அதிகமாக நுழையும்; அந்த அளவுக்கு ஆன்மீகம் சீர்குலையும்.

அவர் துறவே உருவானவர். எங்கள் நாட்டில் சன்னியாசி யாக விரும்புபவன் செல்வம், பதவி எல்லாவற்றையும் துறக்க வேண்டும். இதை எனது குருநாதர் அப்படியே செய்தார். தங்களிடமிருந்து அவர் ஏதாவது அன்பளிப்பு வாங்கிக் கொண்டால் தாங்கள் எவ்வளவோ பாக்கியவான்கள் என்று நினைத்தவர்கள் உண்டு, அவருக்கு ஆயிரம் ஆயிரமாகப் பணம் கொடுக்கத் தயாராக இருந்தவர்கள் உண்டு. இவரோ அவர்களிடமிருந்து மட்டும்தான் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார். காமத்தையும், பணத்தாசையையும் முற்றிலும் வென்றவர்களுக்கு அவர் ஓர் ஒளிமிக்க எடுத்துக்காட்டு. இந்த இரண்டு ஆசைகளுக்கும் மிகவும் அப்பாற்பட்டவராக இருந்தார் அவர். இந்த நூற்றாண்டில் இத்தகையோர்தான் தேவை. தாங்கள் ‘தேவைகள்’ என்று கருதுகின்ற சில பொருட்கள் இல்லாமல் ஒரு மாதம்கூட வாழ முடியாது என்றே மனிதர்கள் நினைக்கிறார்கள் இந்தத் தேவைகளையும் அளவுக்குமீறி அதிகரித்துக்கொண்டே போகிறார்கள். அப்படிப் பட்ட இந்தக் காலத்திற்கு இத்தகைய துறவு மிகவும் தேவை. உலகத்துத் தங்கம் அனைத்தையும், புகழ் அனைத்தையும் துரும்பாக நினைக்கின்ற மனிதன் வாழ்கிறான் என்பதைச் சந்தேகவாதிகளுக்கு நிரூபிப்பதற்காகவாவது இத்தகைய மனிதன் இந்தக் காலத்தில் தோன்ற வேண்டியது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவருடைய வாழ்க்கையின் இன்னொரு கருத்து மற்றவர் களிடம் அவருக்கிருந்த ஆழ்ந்த அன்பு. என் குருநாதரின் வாழ்க்கையின் முற்பகுதி ஆன்மீகத்தைச் சம்பாதிப்பதில் செல வழிந்தது, மீதி காலம் அதைக் கொடுப்பதில் கழிந்தது. ஒரு குருவையோ சன்னியாசியையோ பார்க்கப் போகும்போது உங்களுக்கு உள்ள வழக்கங்கள் எங்கள் நாட்டினருக்குக் கிடையாது. ஒரு கேள்வியைக் கேட்க, அவரிடமிருந்து ஒரு வார்த்தையைக் கேட்க சிலர் நூற்றுக்கணக்கான மைல் நடந்தே வருவார்கள்; ‘நான் முக்தி பெற ஒரு வார்த்தை சொல்லுங்கள்’ என்று கேட்பார்கள், அதற்காகவே வருவார்கள். அவர் பொது வாக எங்கு இருப்பாரோ அங்குக் கூட்டம்கூட்டமாக வரு வார்கள். அவரை அவர்கள் ஒரு மரத்தடியில் பார்க்கலாம். உடனே அவரைக் கேள்வி கேட்பார்கள். ஒரு கூட்டம் கலை வதற்குள் இன்னொரு கூட்டம் சேர்ந்துவிடும். ஆகவே ஒருவர் மிகவும் மதிக்கப்படுபவராக இருந்தால் சிலவேளைகளில் அவருக்கு இரவுபகலாக ஓய்வே இருக்காது. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும், மணிக்கணக்காக மக்கள் வந்து கூடுவார்கள், இவரும் அவர்களுக்குப் போதனை செய்து கொண்டேயிருப்பார்.

ஆகவே மக்கள் திரள் திரளாக அவரைக் கேட்க வந்தனர். அவரும் இருபத்து நான்கு மணியில் இருபது மணிநேரம் பேசிக்கொண்டே இருப்பார்; ஒரு நாள் அல்ல, பல மாதக் கணக்காக இவ்வாறு நடந்தது. கடைசியில், இந்த ஓயாத உழைப்பின் காரணமாக அவரது உடல்நலம் சீர்குலைந்தது. மனிதர்களிடம் கொண்ட ஆழ்ந்த அன்பின் காரணமாக, ஆயிரம் ஆயிரமாகத் தம்மை நாடியவர்களுள் அற்பமான ஒரு வனுக்குக்கூட அவர் உதவி செய்ய மறுத்தது கிடையாது. அதன் விளைவாக நாளடைவில் அவரது தொண்டையில் நோய் வந்தது. அப்போதும் அவர் அன்பர்களிடம் பேசுவதை நிறுத்த முடியவில்லை. தம்மைக் காண்பதற்காக மக்கள் ஆவ லுடன் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட உடனேயே அவர்களை உள்ளே விடும்படி வற்புறுத்தி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்து அனுப்புவார். இதைத் தடுத்தபோது, ‘நான் அதுபற்றிக் கவலைப்படவில்லை . ஒரு மனிதனுக்கு உதவி செய்வதற்காக இருபதினாயிரம் உடல் களையும் இழக்கத் தயங்க மாட்டேன், ஒருவனுக்கு உதவி செய்வதுகூடப் பெரிய விஷயமே’ என்பார் அவர். அவருக்குச் சிறிதும் ஓய்வே இல்லாமல் போயிற்று.

ஒருமுறை ஒருவர் வந்து அவரைப் பார்த்து, ‘சுவாமி, நீங்கள் பெரிய யோகி, ஏன் உங்கள் மனத்தை உடம்பின்மீது ஒருசிறிது செலுத்தி நோயைக் குணப்படுத்தக் கூடாது?’ என்று கேட்டார். முதலில் அவர் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் அதே கேள்வியைக் கேட்டபோது அவர் அமைதியுடன், ‘நண்பா, உன்னை ஒரு பக்தன் என்று நினைத்தேன். ஆனால் நீயும் உலகியல் மனிதர்களைப் போலவே பேசுகிறாய். இந்த மனம் ஏற்கனவே இறைவனிடம் அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது. அதைத் திரும்ப எடுத்து ஆன்மாவின் வெறும் கூடாகிய உடலின்மீது செலுத்த வேண்டும் என்றா சொல்கிறாய்?’ என்று கேட்டார்.

இவ்விதம் அவர் போதனை செய்து வந்தார். விரைவில் அவர் உடலை விட்டுவிடுவார் என்னும் செய்தி அப்போது எங்கும் பரவியது. உடனே மக்கள் முன்னைவிடத் திரள்திரளாக வரத் தொடங்கினார்கள். இந்தியாவில் இத்தகைய மகான் களிடம் மக்கள் எவ்வாறு வருவார்கள், அவர்களைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே எவ்வாறு அவர்களைக் கடவுளாக்கி விடுவார்கள் என்பதையெல்லாம் நீங்கள் கற்பனையில்கூடக் காண முடியாது. அவர்களது ஆடை யின் விளிம்பைத் தொட்டுப் பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக் கானோர் காத்துக் கொண்டிருப்பார்கள். இவ்விதம் பிறரிட முள்ள தெய்வீகத்தைப் போற்றுவதாலேயே ஆன்மீகம் உரு வாகிறது. எதை மனிதன் விரும்பிப் போற்றுகிறானோ அதை அவன் அடைவது நிச்சயம். நாடுகளைப் பொறுத்தவரையிலும் இது உண்மைதான். இந்தியாவிற்குச் சென்று அரசியல் சொற் பொழிவு செய்யுங்கள், அது எவ்வளவு சிறப்பானதாக இருந் தாலும் அதைக் கேட்க மிகச் சிலரே வருவார்கள்; ஆனால் மதத்தைப் போதனை செய்யுங்கள்; வெறும் வார்த்தைகளோடு நிற்காமல் அதனை வாழ்ந்து காட்டுங்கள். உங்களைத் தரிசிப்ப தற்கும் உங்கள் பாதங்களைத் தொடுவதற்கும் நூற்றுக் கணக்கானோர் கூடிவிடுவார்கள்.

அந்தப் புனிதர் ஒருவேளை சீக்கிரம் தங்களை விட்டுப் போய்விடுவார் என்று மக்கள் கேள்விப்பட்டபோது முன்னை விட அதிகமாக வந்து சூழத் தொடங்கினார்கள். என் குரு நாதரும் உடம்பைப்பற்றிய கவலை சிறிதும் இல்லாமல், அனை வருக்கும் போதனை செய்தார். இதை எங்களால் தடுக்க முடிய வில்லை. பலர் வெகுதொலைவிலிருந்து வந்திருந்ததால் அவர் களுடைய கேள்விகளுக்குப் பதில் கூறாமல் அவர் ஓய்வுகொள்ள மாட்டார். ‘என்னால் பேச முடியும்போது நான் அவர்களுக்குப் போதித்தே தீர வேண்டும்’ என்பார் அவர், அப்படியே செய்ய வும் செய்தார். ஒருநாள், அன்று தமது உடலை நீத்துவிடப் போவதாகக் கூறி, மிக உயர்ந்த வேத மந்திரத்தை உச்சரித்த வண்ணம் சமாதியில் ஆழ்ந்து, உடலை உகுத்துவிட்டார்.

அவருடைய சிந்தனைகளையும், செய்தியையும் அறிந்தவர் களுள் ஒருசிலரே அதை உலகிற்குப் போதிக்கும் சக்தி வாய்ந்த வர்களாக இருந்தனர். அவருடைய சீடர்களுள் உலகைத் துறந்த சில இளைஞர்கள் அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடரச் சித்தமாயிருந்தனர். அவர்களை நசுக்குவதற்கான முயற்சிகள் பல செய்யப்பட்டன. ஆனால் குருநாதரின் பெருவாழ்வு தந்த ஊக்கம் அவர்களிடம் இருந்ததால், அவர்கள் உறுதியுடன் நின்றார்கள். அவரது புனித வாழ்க்கையோடு பல ஆண்டுகள் தொடர்பு இருந்ததால் உறுதியுடன் நின்றார்கள் அந்த இளைஞர்கள். அவர்களுள் சிலர் பெரிய பணக்காரக் குடும்பத் திலிருந்து வந்தவர்கள். தாங்கள் பிறந்த அந்த நகர வீதிகளிலேயே பிச்சையெடுத்து சன்னியாசிகளாக வாழ்ந்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் சிறிதும் தளராமல் உறுதியாக நின்றனர், நாளடைவில் இந்தியா முழுவதும் அவரது உபதேச மொழிகளைப் பரவச் செய்தனர்.

வங்காளத்தின் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, கல்வி சிறிதும் இல்லாமல், தமது சங்கல்பம் ஒன்றினாலேயே உண்மையை உணர்ந்து, அதைப் பிறருக்குக் கொடுத்த அவர், அதைக் காப்பாற்றச் சில இளைஞர்களை விட்டுச் சென்றிருந்தார்.

இன்று இந்தியாவில் லட்சக்கணக்கானோர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை அறிந்துள்ளனர். அது மட்டும் அல்ல, அவரது சக்தி இந்தியாவிற்கு வெளியிலும் பரவியுள்ளது. இந்த உலகில் நான் பேசியுள்ள பேச்சுக்களில் ஏதேனும் ஒரு வார்த்தை உண்மையாகவோ, ஒரு வார்த்தை ஆன்மீகத்தைப் பற்றியதாகவோ இருந்திருந்தால் அதற்காக நான் என் குரு நாதருக்குக் கடமைப்பட்டுள்ளேன். தவறுகள் மட்டும்தான் என்னுடையவை.

இன்றைய உலகிற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தி இது தான்: ‘கோட்பாடுகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கொள்கைகள், பிரிவுகள், கோயில்கள், சர்ச்கள் முதலியவற்றைப் பற்றிக் கவனிக்க வேண்டாம். ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக் கின்ற சாரமான ஆன்மீகத்துடன் ஒப்பிடும்போது அவை ஒன்று மில்லை . இந்த ஆன்மீகம் ஒருவனிடம் அதிகரிக்கின்ற அளவுக்கு நன்மை செய்யும் சக்தியும் அவனிடம் பெருகும். முதலில் இதைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள், இதைச் சேமியுங்கள், யாரையும் குறை கூறாதீர்கள். ஏனெனில் எல்லா கொள்கை களிலும் சம்பிரதாயங்களிலும் சிறிதளவு நல்லது இருக்கவே செய்கிறது. மதம் என்பது வெறும் சொற்கள் அல்ல, பெயரும் சம்பிரதாயங்களும் அல்ல; அது ஆன்மீக அனுபூதி என்பதை உங்கள் வாழ்க்கையில் நிதரிசனமாகக் காட்டுங்கள். உணர்ந்த வர்களே அதை அறிய முடியும்; ஆன்மீகத்தை அடைந்தவர் களே அதைப் பிறருக்கு அளிக்க முடியும், அவர்களே மனித இனத்தின் மகா ஆச்சாரியர்களாக விளங்குவார்கள். அவர் களே ஒளியின் சக்தி.’

இத்தகையோர் மிகுதியாக உருவாக்கப்படுகின்ற அளவுக்கு அந்த நாடு மேன்மையுறும். இவ்வித மனிதர்கள் இல்லாத நாடு அழிவது உறுதி; அதை எதுவும் காப்பாற்ற முடியாது. ஆகவே என் குருநாதர் மனித இனத்திற்குத் தந்த செய்தி, ‘ஆன்மீக வாழ்க்கை வாழ், உண்மையை அனுபூதியில் நீயே உணர்’ என்பதுதான். மற்றவர்களுக்காக நீங்கள் தியாகம் செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். என் சகோதரனை நேசிக் கிறேன் என்று பேசுவதை விடுத்து, அதைச் செயலில் காட்டும் படி அவர் கேட்கிறார்.
துறவுக்கும் அனுபூதிக்கும் காலம் வந்துவிட்டது; பிறகு உலகின் மதங்களிடையே சமரசத்தைக் காண்பீர்கள், சண்டைக்கே அவசியமில்லை என்று தெரிந்துகொள்வீர்கள், மனித சமுதாயத்திற்கு உதவி செய்ய அப்போதுதான் நீங்கள் தயாராக இருப்பீர்கள்.

எல்லா மதங்களுக்கும் உள்ள அடிப்படை ஒருமையை எடுத்துக் கூறி அதைத் தெளிவாக்குவதுதான் என் குருநாதரின் பணியாக இருந்தது. மற்ற ஆச்சாரியர்கள் தங்கள் பெயரைத் தாங்கும் தனிப்பட்ட நெறிகளைப் போதித்தார்கள். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்த மகா ஆச்சாரியரோ தமக்குச் சொந்தமானது என்று எதையும் பேசவில்லை. உண்மையில் உலக மதங்கள் எல்லாம் ஒரே அழிவற்ற மதத்தின் அங்கங்கள் என்பதைத் தம் அனுபவ வாயிலாக அறிந்திருந்ததால் எந்த மதத்தையும் தொந்தரவு செய்யாமல் அப்படியே விட்டு விட்டார் அவர்!

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  III. ஸ்ரீராமகிருஷ்ணர் – 1. எனது குருநாதர்