உன் வாழ்க்கை உன் கையில்!-22

22. எது ஒழுக்கம்?

பல்வேறு வகையான நீதி நெறிக் கோட்பாடுகளுள் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டு நிற்கின்ற ஒரு கருத்து உள்ளது. அது மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதுதான். மனிதர் களிடம் அன்பாயிருப்பது, எல்லா பிராணி களிடமும் அன்பாயிருப்பது- இதுதான் மனிதகுலத்தை முக்கியமாக வழிநடத்தும் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதெல்லாமே, ‘நான்தான் பிரபஞ்சம்; இந்தப் பிரபஞ்சம் இரண்டற்றது; ஒன்றே தான்’ என்ற நிலையான உண்மையின் பல்வேறு வெளிப்பாடுகள். அப்படி இல்லாவிட்டால் இந்தச் செயல்களுக்கெல் லாம் காரணம் என்ன? நான் எதற்காக என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்? ஏன் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்? என்னைக் கட்டாயப்படுத்துவது எது? அதுதான் இரக் கம்; எங்கும் ஒரே பொருள் உள்ளது என்ற உணர்ச்சி.

கல்லான இதயங்கள்கூடச் சில வேளைகளில் மற்றவர்களுக்காகக் கனிவ துண்டு. நீ பிடித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தனித்துவம் வெறும் மனமயக்கம், அதை இப்படிக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருப்பது பாராட்டத் தக்கதல்ல என்று சொன்னால் மனிதன் பயப்படு கிறான். ஆனால் அவனே, முழுத் தன்னல மறுப்புதான் எல்லா நன்னெறிக்கும் அடிப்படை என்றும் கூறுகிறான்.

இந்த முழுத் தன்னல மறுப்பு என்பது என்ன? ஆன்மாபோல் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கின்ற தோன்றும் மனிதனை விடுவதே அது. எல்லா சுய நலத்தையும் விடுவதே அது. ‘நான்’, ‘எனது’ என்ற அகங்கார மமகாரங்கள் பழைய மூட நம்பிக்கையிலிருந்து பிறந்தவை. இந்தப் போலி ஆன்மா மறையும் அளவிற்கு உண்மை ஆன்மா வெளிப்பட்டுத் தோன்று கிறது. இதுவே உண்மையான தன்னல மறுப்பு. இதுவே எல்லா அறநெறி உப தேசங்களின் மையமும் அடிப்படையும் சாரமும் ஆகும். தெரிந்தோ தெரியாமலோ உலகம் முழுவதும் இந்தக் குறிக்கோளை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது; நடைமுறையிலும் ஓரளவு இதை அனுசரிக் கிறது. பெரும்பாலானோர் தாங்கள் உணராம லேயே இதைச் செய்து கொண்டிருக் கிறார்கள். அவர்கள் உணர்வு பூர்வமாகச் செய்யட்டும். ‘நான்’, ‘எனது’ என்பவை உண்மையான ஆன்மாவல்ல, ஆன்மாவின் தடைகளே என்று அவர்கள் உணர்ந்து அவற்றை விடட்டும். இந்தத் தோன்றும் மனிதன் அகத்தேயுள்ள எல்லையற்ற உண் மையின் ஒரு மின்னல் தோற்றம் மட்டுமே; எல்லாமாக இருக்கும் எல்லையற்ற நெருப்பின் ஒரு பொறியே. அவனது உண்மையான இயல்பு எல்லையற்றது.

பிறருக்கு நன்மை செய்வது புண்ணி யம், தீமை செய்வது பாவம். வலிமையும் ஆண்மையும் புண்ணியம், பலவீனமும் கோழைத்தனமும் பாவம். சுதந்திரம் புண்ணியம், சார்ந்திருப்பது பாவம். பிறரை நேசிப்பது புண்ணியம், வெறுப்பது பாவம். கடவுளையும் தன் ஆன்மாவையும் நம்புவது புண்ணியம், சந்தேகிப்பது பாவம். ஒருமையை அறிவது புண்ணியம், வேறுபாடு காண்பது பாவம். புண்ணியம் பெறும் வழியையே சாஸ்திரங்கள் காட்டு கின்றன.

எல்லா மொழிகளிலும், எல்லா மதங்களிலும், எல்லா தீர்க்கதரிசிகளாலும் போதிக்கப்பட்ட எல்லா நீதி நெறிகளின் சாரம் இதுதான். ‘சுயநலமற்று இருங்கள்’, ‘நான் அல்ல நீ – இதுதான் எல்லா ஒழுக்க நெறிகளுக்கும் பின்னணி. இதன் பொருள் என்ன? தனித்துவம் என்பதே இல்லை , நீ என்னில் ஒரு பகுதி, நான் உன்னில் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்வது; நான் உன்னைத் துன்புறுத்தினால், என்னையே
துன்புறுத்துகிறேன், உனக்கு உதவினால் எனக்கே உதவுகிறேன் என்பதை ஏற்றுக் கொள்வது; நீ உயிர் வாழ்கின்ற பொழுது எனக்கு இறப்பு இருக்க இயலாது என்பதை ஏற்றுக்கொள்வது. இந்தப் பிரஞ்சத்தில் ஒரு கருடன் இருக்கும் வரையில் நான் எப்படிச் சாக முடியும்? ஏனெனில் என் உயிர் அந்தப் புழுவின் உயிரிலும் உள்ளது. அதேவேளை யில் இது ஒரு பாடமும் கற்பிக்கிறது, உதவி செய்யாமல் நம் சகோதரர்களுள் ஒருவரையும் நாம் புறக்கணிக்க இயலாது, ஏனெனில் அவர்களின் நலத்தில்தான் நம் நலம் இருக்கிறது.

மனிதனுக்கு ஒழுக்கமும் தூய்மையும் ஏன் தேவை? ஏனெனில் அது அவனது சங்கல்பத்தைத் திடம்பெறச் செய்கிறது. உண்மையான இயல்பை உணர்த்துவதன் மூலம் சங்கல்பத்திற்கு வலிமை தரும் ஒவ்வொன்றும் ஒழுக்கம். இதற்கு மாறானதை விளைவிக்கும் ஒவ்வொன்றும் ஒழுக்கமின்மை.