உன் வாழ்க்கை உன் கையில்!-8

8. எண்ணங்களின் தாக்கம்

நம்மிடமிருந்து புறப்படுகின்ற ஒவ் வொரு செயலும் நம்மிடமே எதிர்ச்செய லாகத் திரும்பி வருவது போல், நம் செயல்கள் பிறரிடமும், பிறரது செயல்கள் நம்மிடமும் செயல்படுகின்றன. தீமை செய்கின்ற ஒருவன் மேலும் மேலும் தீயவனாகிறான். அவனே நல்லது செய்யத் தொடங்கும் போது, மேலும் மேலும் வலிமையடைந்து, எப்போதும் நல்லது செய்யக் கற்றுக் கொள்கிறான். இந்த உண்மையை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒரு செயல் ஏற்படுத்தும் தாக்கத்தின் இத்தகைய தீவிரத்தை, நமது செயல்கள் பரஸ்பரம் ஒவ்வொருவர்மீதும் விளைவுகளையும்
எதிர்விளைவுகளையும் உண்டாக்குகின்றன என்ற உண்மையின் மூலம் அல்லாமல், வேறு எதன்மூல மாகவும் விளக்க முடியாது.

பௌதீக விஞ்ஞானத்திலிருந்து இதற்கு ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள் வோம். நான் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது, என் மனம் குறிப்பிட்ட ஓர் அதிர்வுநிலையில் இருக்கிறது. இந்த அதிர்வு நிலையில் இருக்கின்ற மற்றெல்லா மனங் களும் என் மனத்தால் பாதிக்கப்படலாம். ஓர் அறையில் பல்வேறு இசைக்கருவிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவை அனைத்தின் தந்திக்கம்பிகளும் ஒரேபோல் சுருதி சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது ஒரு கருவியின் தந்தியை மீட்டி னால், மற்ற கருவிகளும் அதே சுரத்தைத் தரும் விதத்தில் அதிரத் தொடங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது போலவே ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலையிலுள்ள எல்லா மனங்களும், அதே நிலையிலுள்ள எண்ணத்தால் சம அளவில் பாதிக்கப் படுகின்றன. ஆனால் தூரம் மற்றும் வேறு பல காரணங்களைப் பொறுத்து இந்தப் பாதிப்பின் தாக்கம் மனத்திற்கு மனம் மாறுபடுகிறது. என்றாலும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையிலேயே அந்த மனம் எப்போதும் இருக்கிறது. உதாரணமாக, நான் ஒரு தீமை செய்கிறேன். அப்போது என் மனம் குறிப்பிட்ட ஓர் அதிர்வுநிலை யில் இருக்கிறது. அப்போது பிரபஞ்சத்தில் அதே அதிர்வுநிலையில் இருக்கும் எல்லா மனங்களும் அந்த அதிர்வால் பாதிக்கப்பட லாம். அதுபோலவே நான் நல்ல காரியம் செய்யும்போது, என் மனம் வேறோர் அதிர்வு நிலையில் இருக்கும்; அப்போது அதே அதிர்வுநிலையில் இருக்கும் எல்லா மனங்களும் அதனால் பாதிக்கப்படலாம். இப்படி ஒரு மனத்தின்மீது மற்றொரு மனத்திற்குள்ள ஆற்றல், ஓரளவிற்கு அந்த அதிர்வு கூடியும் குறைந்தும் இருப்பதற்கு ஏற்பவே இருக்கும்.

இந்த உதாரணத்தைத் தொடர்வோம். ஒளியின் அலைகள் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையுமுன் லட்சோபலட்சம் ஆண்டுகள் பயணம் செய்யலாம். அது போலவே எண்ண அலைகளும் தங்களுக்கு ஏற்றவிதத்தில் அதிர்கின்ற ஒரு பொருளைச் சென்றடைய நூற்றுக்கணக் கான ஆண்டுகள் பயணம் செய்ய நேர லாம். எனவே இந்த வானவெளி அத்தகைய நல்ல மற்றும் தீய அலைகளால் நிரம்பி இருப்பதற்கான எல்லா வாய்ப்பு களும் உள்ளன. ஒவ்வொரு மூளையி லிருந்தும் வெளிக் கிளம்புகின்ற ஒவ்வோர் எண்ணமும் அதை ஏற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான பொருளை அடையும்வரை யில் அதிர்ந்து கொண்டேயிருக்கின்றன என்று சொல்லலாம். அவற்றை ஏற்றுக் கொள்வதற்குத் தகுதியாக இருக்கின்ற மனம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறது. ஒருவன் தீய செயல்களைச் செய்யும்போது அவன் தன் மனத்தை ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலைக்குக் கொண்டு வருகிறான். அப்போது, அதே அதிர்வுநிலையில் வான வெளியில் மிதந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற எண்ண அலைகள் எல்லாம் அவனது மனத்தில் நுழைய முயல்கின்றன. இதனால்தான் பொதுவாக, தீமை செய்பவன் மேலும் மேலும் தீமை செய்து கொண்டே இருக்கிறான்; அவனது செயல் தீவிரமாகிறது. நன்மை செய் பவனின் விஷயமும் இதுதான். அவன் வானவெளியில் உள்ள நல்ல அலைகளுக் காகத் தன்னைத்திறந்து வைக்கிறான். அவனது நற்செயல்களும் உறுதி பெறுகின்றன.

எனவே நாம் தீமை செய்யும்போது இரண்டு வகையான அபாயங்களை விளை விக்கிறோம். முதலில் நம்மைச் சுற்றியுள்ள தீய ஆதிக்கங்கள் நம்மீது. செயல்பட நாமே இடம் கொடுக்கிறோம். இரண்டாவதாக மற்றவர்களைப் பாதிக்கின்ற-அது ஒரு வேளை நூற்றுக்கணக்கான ஆண்டு களுக்குப் பிறகு பாதிக்கலாம்-தீமையைச் செய்யும் போது நாம் நம்முடன் சேர்த்துப் பிறரையும் துன்புறுத்துகிறோம். மனிதனி லுள்ள மற்ற எல்லா சக்திகளையும் போலவே நன்மை தீமை ஆகிய சக்திகளும் புறத்திலிருந்தே வலிமையைப் பெறு கின்றன.

இந்த லட்சியத்தால் உங்களை நிறை யுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் இதையே சிந்தியுங்கள். இந்தச் சிந்தனை யின் ஆற்றலால் உங்கள் செயல்கள் அனைத்தும் பெருக்கப்படும், மாறுபாடு அடையும், தெய்வீகமாகும். ஜடப் பொருள் வலிமையானது என்றால் சிந்தனை எல்லாம் வல்லது. இந்தச் சிந்தனை உங்கள் வாழ்க்கையில் முத்திரை பதிக்கட்டும். எல்லாம் வல்ல உங்கள் ஆற்றல், உங்கள் சிறப்பு, உங்கள் மகிமை இவைபற்றிய சிந்தனையால் உங்களை நிறையுங்கள், உங்கள் தலையில் மூட நம்பிக்கை எதுவும் புகாதிருக்கக் கடவுள் அருள் புரியட்டும்! பிறப்பிலிருந்தே இத்தகைய மூடநம்பிக்கைகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருக்குமாறும் நமது வளர்ச்சியைக் கெடுக்கின்ற பல வீனம், தீமை போன்ற கருத்துக்கள் நம்மைச் சூழ்வதையும் கடவுள் தடுப் பாராக! மிக உயர்ந்த, மிகச் சிறந்த உண்மை களை அறியவல்ல எளிய பாதைகளை மனிதன் அடையக் கடவுள் கருணை செய் வாராக! மனிதன் இவற்றைக் கடந்தேயாக வேண்டியிருக்கிறது. உங்கள் பின்னால் வருபவர்களுக்குப் பாதையை மேலும் கடினமாக்காதீர்கள்.