இந்து மதமும் ஸ்ரீராமகிருஷ்ணரும்

 இந்து மதமும் ஸ்ரீராமகிருஷ்ணரும் 

சுவாமி விவேகானந்தர்

சாஸ்திரம் என்ற சொல் முதலும் முடிவும் இல்லாத வேதங் களைக் குறிக்கிறது. அறநெறிகளை வேதங்கள் மட்டுமே போதிக்க முடியும். –

புராணங்கள் போன்ற பிற நூல்கள் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றன. வேதங்களை முரணின்றிப் பின் தொடரும் வரைதான் இந்த நூல்களை ஆதார நூல்களாக ஏற்றுக்கொள்ள முடியும்.

உண்மை இருவகைப்படும்: (1) மனிதனின் ஐம்புலன்களால் உணரத்தக்கதும், அந்த அடிப்படையில் அனுமானித்து அறியக் கூடியதும். (2) புலனறிவுக்கு அப்பாற்பட்ட நுண் யோக சக்தி யால் அறிவது.

முதல் வகையால் பெறும் அறிவு விஞ்ஞானம்; இரண்டாவது வகையால் கிடைக்கும் அறிவு வேதம். புலனறிவு கடந்த, முதல்முடிவற்ற வேதங்கள் என்ற பெயரால் அழைக்கப் படுகின்ற தொகுதி என்றும் இருப்பது ஆகும். இறைவன்கூட இந்த உண்மைகளின் உதவியாலேயே பிரபஞ்சத்தைப் படைக் கிறார், காக்கிறார், ஒடுக்குகிறார்.

புலனறிவு கடந்த இத்தகைய சக்தி யாரிடம் வெளிப்பட் டுள்ளதோ அவர்களே ரிஷிகள். இந்தச் சக்தியின்மூலம் அவர்கள் கண்ட புலனுணர்வு கடந்த உண்மைகளே வேதங்கள். இத்தகைய ரிஷித்துவம், அதாவது புலனறிவு கடந்த வேத உண்மைகளை நேருக்குநேர் காணும் ஆற்றலே உண்மையான மதம். இந்த நிலை வாய்க்கப் பெறாதவரையில் ஒருவனுக்கு மதம் என்பது வெறும் பொருளற்ற சொல், மதவாழ்வில் அவன் ஓர் அடிகூட எடுத்து வைக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வேதங்கள் எந்தக் காலத்திலும் எந்த நாட்டினருக்கும் எல்லோருக்கும் பொருந்துவதாகும். அதாவது அவை குறிப் பிட்ட இடத்திற்கோ, குறிப்பிட்ட காலத்திற்கோ, தனிமனித னுக்கோ மட்டும் உரியவை அல்ல.

பிரபஞ்சம்தழுவிய மதத்தை விவரிப்பது வேதங்கள் மட்டுமே.

புலனறிவுக்கு அப்பாற்பட்ட உண்மையைப்பற்றிய காட்சிகள் நமது புராணங்களிலும் இதிகாசங்களிலும் பிற நாட்டு சாஸ்திரங்களிலும் ஓரளவு காணப்படுகின்றன. ஆனால் ஆரியர்களின் நான்கு வேதங்கள்தான் காலத்தால் முந்தியவை, மிகவும் முழுமையானவை, திரித்துக் கூறாமல் தருபவை. எனவே உலக மத நூல்கள் அனைத்திலும் உயர்ந்த இடம் பெறத் தகுதி வாய்ந்தவை; உலகினர் அனைவரும் வணங்கத்தக்கவை; உலகின் அனைத்து மத நூல்களுக்கும் அறிவுபூர்வமான விளக்கம் தர வல்லவை.

ஆரியர் கண்ட இந்த வேதங்களில் முற்றிலும் உலகியல் விஷயங்கள், வரலாறு அல்லது பரம்பரையின் வெறும் தொகுப்புகள், கடமைகளுக்கான பலன்களை மட்டுமே கூறு கின்ற பகுதிகள்-இவை அல்லாத பகுதிகளே உண்மை வேதங்கள் என்பதை மனத்தில்கொள்ள வேண்டும்.

வேதங்கள் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன(ஞானகாண்டம், கர்மகாண்டம். கர்மகாண்டம் கூறுகின்ற கிரியைகளும் பலன்களும் மாயைக்கு உட்பட்ட பிரபஞ்சக் தின் வரையறைக்கு உட்பட்டவை. எனவே அவை காலம், இடம், மனிதன் போன்ற நியதிகளுக்கு ஏற்ப மாறின, மாறுகின்றன, மாறும். கர்மகாண்ட அடிப்படையில் வகுக்கப் பட்டிருப்பதால் சமூக நீதிகளும் பழக்கவழக்கங்களும் மாறி வருகின்றன, இனியும் மாறும். அதுபோலவே, உண்மை யான சாஸ்திரங்களுக்கும், சான்றோர்களின் செயல்களுக் கும் முரண்படாத சிறு சமூகப் பழக்கவழக்கங்களும் நியதி களும் ஏற்கப்படத் தக்கவை. ஆனால் சாஸ்திரங்களுக் கும் சான்றோர்களுக்கும் முரணான பழக்கவழக்கங் களைக் குருட்டுத்தனமாகப் பற்றிக்கொண்டு பின்பற்றியது ஆரிய இனத்தின் வீழ்ச்சிக்குரிய முக்கியக் காரணங்களுள் ஒன்றாகும்.

ஞானகாண்டம் அல்லது வேதாந்தம் ஒன்றே எல்லா காலத் திற்குமாக உள்ளது. யோகம், ஞானம், பக்தி, தன்னலமற்ற தொண்டு ஆகியவற்றின்மூலம் மாயையைக் கடந்து முக்கி வழியில் மக்களை அழைத்துச் செல்லவல்லது அதுவே. இதன் மதிப்பும் அத்தாட்சியும் காலம், இடம், மக்கள் ஆகிய வரையறைகளுக்கு உட்படாதது. எனவே மனித குலத்திற்குக் தேவையான, பிரபஞ்சம்தழுவிய, நிலையான மதத்தைக் தரவல்லது இது ஒன்றே.

கர்மகாண்ட வழிகளைப் பின்பற்றி மனு முதலான ரிஷிகள் வகுத்த சம்ஹிதைகள் முக்கியமாக காலம், இடம், மற்றும் மனிதர்களுக்கு ஏற்பச் சமூகநல விதிகளை வகுத்துக் காட்டின. புராணங்களும் பிறவும் அவதார புருஷர்களின் வரலாறு முதலானவற்றைப்பற்றி விவரிக்கும்போது, வேதாந்தத் தில் புதைந்து கிடந்த உண்மைகளை விளக்கின. அவற்றுள் ஒவ்வொன்றும் இறைவனின் எல்லையற்ற குணங்களில் ஒன்றையோ சிலவற்றையோ வலியுறுத்தின; மக்களுக்குப் போதித்தன.

கால வெள்ளத்தில் ஆரியரின் பரம்பரையினர் உண்மை லட்சியத்திலிருந்தும் அறநெறிகளிலிருந்தும் வீழ்ந்தார்கள்; துறவு மனத்தை இழந்தார்கள்; கண்மூடித்தனமான பழக்கங் களில் தோய்ந்து அறிவிழந்தார்கள்; வீழ்ச்சியுற்றார்கள்; ஆன்மீக லட்சியத்தின் ஒவ்வோர் அம்சத்தை வலியுறுத்தும் போதும் ஒன்றுக்கொன்று முரணானவைபோல் தோன்றும் இந்தப் புராணங்கள் போதிக்கின்ற வேதாந்த உண்மைகளை உய்த்துணரும் ஆற்றலற்றுப் போனார்கள்.

இதனால் என்ன விளைந்தது? மதத்தின் நாடாகிய இந்தியா குழப்பக்குட்டை ஆயிற்று. நிலையான வேதமத மாகிய சனாதன தர்மம் சிதறியது. ஆன்மீக லட்சியத்தின் பல்வேறு அம்சங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த சனாதன மதம் பிளவுபட்டுப் பல்வேறு பிரிவுகளாகக் காட்சி யளித்தது. இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்று பகை, பொறாமை, சகிப்பின்மை, குறுகிய பிரிவினைவாதம் ஆகிய நெருப்பிற்கு இரையாக அழிவதற்கு ஒன்றையொன்று முந்தின; உந்தின. பாரதத் திருநாட்டை அவை நரகமாக்கி விட்டதுபோல் தோன்றியது.

இந்த நிலையில் இந்தியா இருந்தபோதுதான் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தார். ஆரியர்களின் உண்மை மதம் எது என்பதை வாழ்ந்து காட்டினார். காலங்காலமாக இருந்து வருகின்ற இந்துமதம் பல்வேறு கிளைகளுடனும் விழுது களுடனும் படர்ந்து நாடு முழுவதும் விரிந்திருந்தாலும் அதன் உண்மையான ஒருமை எங்கே உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார். எண்ணற்ற மதப் பிரிவுகளாலும், வெளிப் பார்வைக்கு முரண்பட்டவைபோல் தோன்றிய பல்வேறு பழக்கவழக்கங்களாலும் பிரிந்து நின்று, பூசலிட்டு, நம் நாட்டு மக்களுக்குத் தவறான பாதையைக் காட்டி, குழப்பத்திற்கு உள்ளாக்கி, பிற நாட்டினரின் ஏச்சுக்கும் நகைப்புக்கும் மதம் இடமளித்து வந்தபோது, இதுவரை காலத்தின் கருவறைக்குள் மறைந்துவிட்டிருந்த உண்மை மதம் எங்குள்ளது என்பதை எடுத்துக்காட்ட அவர் சனாதன தர்மத்தின் உருவாக அவதரித்தார்.

படைத்தல், காத்தல், ஒடுக்குதல் என்னும் முத்தொழில் புரிகின்ற இறைவனுக்குக் கருவியாக விளங்குகின்ற வேத உண்மைகள் என்றென்றும் உள்ளவை என்பதையும், முற்றும் துறந்த ரிஷிகளின் உள்ளத்தில் அவை தாமே தோன்றும் என்பதையும் உலகிற்கு மெய்ப்பித்துக் காட்டி, மதத்தைப் புனரமைப்பதற்கும் மத உண்மைகளை மீண்டும் வலியுறுத்து வதற்கும் அதைப் பரப்பவும் வேத வடிவினரான பகவான் தமது புதிய அவதாரத்தில் லௌகீகக் கல்வியைப் புறக்கணித்தார்.

வேதங்கள் அல்லது உண்மையான மதத்தைப் பாதுகாக்க வும், அந்த உண்மையைப் பின்பற்றுகின்ற சான்றோர்களைக் காப்பாற்றவும் பகவான் மனித உருவில் மீண்டும்மீண்டும் தோன்றுவார். இந்தக் கோட்பாடு நமது புராணங்கள் மற்றும் அதுபோன்ற நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீழ்கின்ற அருவிநீரில் வேகம் தோன்றும், விழுந்தபின் எழும் அலையில் உயரம் தோன்றும். அவ்வாறே ஆரிய இனம் ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்பு எழும்போதும் இறையருளால் குறைகள் நீங்கி ஆற்றல் மிக்கதாகிறது; மாண்புடன் விளங்கு கிறது. இது வரலாறு காட்டுகின்ற ஒன்று.

வீழ்ச்சிக்குப் பிறகு எழுகின்ற ஒவ்வொரு முறையும் நமது சமுதாயம் மேன்மையுற்று விளங்குகிறது. அவ்வாறே கடவுளும் தமது அவதாரங்களுள் ஒன்றைவிட அடுத்ததில் தம்மை மேலும்மேலும் வெளிப்படுத்துகிறார்.

மீண்டும்மீண்டும் நமது நாடு வீழ்ந்ததுண்டு. மீண்டும் மீண்டும் இறைவன் அவதரித்து நாட்டைப் புனரமைத்ததும் உண்டு.

ஆனால் இப்போதுபோல் இந்தப் புனித நாட்டை எந்தக் காலத்திலும் காரிருள் சூழ்ந்ததில்லை. இன்றைய வீழ்ச்சியைப் பார்க்கும்போது முன்னர் ஏற்பட்ட வீழ்ச்சிகள் எல்லாம் மிகச் சாதாரணமானவையே. நல்ல வேளையாக இந்த இருள் அனேக மாக நீங்கிவிட்டது.

ஆகவே இந்த வீழ்ச்சியின் பின்னர் தோன்றும் எழுச்சியைக் கடந்தகால எழுச்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவை சூரியன் முன் தோன்றும் நட்சத்திரங்கள் போலவே காட்சி யளிக்கும். இந்த எழுச்சியின் விளைவாக நிகழும் பேராற்றல் மிக்க செயல்களை, கடந்தகால எழுச்சிகளுக்குப் பிறகு விளைந்த செயல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த காலத்தின் எழுச்சிகள் சிறுபிள்ளை விளையாட்டாகவே தோன்றும்.

அழிவற்ற சனாதன தர்மத்தின் லட்சியங்கள் எல்லாம் இன்றைய வீழ்ச்சியால் சிதறிக் கிடந்தன. காரணம், அவற்றை உணரும் ஆற்றலும் தகுதியும் உள்ளவர்கள் இல்லாததுதான். அந்த சனாதன லட்சியங்களுள் சிலவற்றை இழந்துவிட்டோம். மற்றும் சில, சிறு பிரிவினரிடையே ஓரளவு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இப்போது தோன்றிவரும் புதிய ஆன்மீக எழுச்சியின் வேகம் ஆற்றல் மிக்கது. எனவே சிதறுண்டு கிடக்கும் லட்சியத்தை ஒருங்கிணைத்து, மீண்டும் புத்துயிரூட்டி, மனிதர்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பார்கள்; இழந்த வற்றை மீண்டும் பெறுவார்கள். இத்தகைய மகோன்னதமான எதிர்காலத்தை அளிப்பதற்காகவே கருணைக் கடலாகிய எப்பெருமான் இக்காலத்தில் அவதரித்துள்ளார். இது, சிதறிய லட்சியங்களை ஒருங்கிணைக்கும் அவதாரம், தெய்வீகம் முழு நிறைவு பெற்ற அவதாரம், ஆன்மீகத் துறையின் ஒவ் வோர் அம்சத்திற்கும் உயிரூட்டுகின்ற அவதாரம், முந்தைய அவதாரங்கள் எல்லாவற்றையும்விடப் பூரணப் பொலிவுடன் விளங்கும் அவதாரம்.

எனவே மகோன்னதமான இந்தப் புதிய யுகத்தின் உதய காலத்திலேயே மதப் பிரிவுகளிடையே ஒற்றுமை பிரகடனம் செய்யப்படுகிறது. மேன்மையான இந்தக் கருத்து சனாதன மதத்திலும், அதன் புனித நூல்களிலும் ஏற்கனவே உள்ளது, ஆனால் மறைந்துள்ளது. இப்போது மீண்டும் கண்டுபிடிக்கப் பட்டு மனித குலத்தினருக்கு சங்கநாதமென முழங்கப்படுகிறது.

இந்தப் புதிய நன்கொடை பொதுவாக உலகம் முழுவதும், சிறப்பாக இந்தியாவிற்கும் நலன்தர வல்லது. இதனை உணர்த்தியவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். கடந்த காலங்களில் மதத்தில் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்த மகான்களின் ஒரு நிறைவாகத் தோன்றிய அவதார புருஷர் இவர். ஓ மனிதா இதை நம்பு, உள்ளத்தில் இதை ஊன்றச் செய்.

மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒருமுறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே மனிதா, இறந்துபோன பழங் கதையை வணங்காதே. வா, இன்று வாழ்கின்ற நிகழ்காலத்தை வணங்கு. சென்றதை நினைத்துப் புலம்பாதே, இன்றுள்ளதைக் கண்டு அதில் முயற்சியுடன் ஈடுபடு. அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உன் சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள, புதிய, செப்பனிடப்பட்ட, நன்கு வகுக்கப் பட்ட ராஜ பாதையில் செல். வா, உன்னை அழைக்கிறோம். அறிவுள்ளவன் அறிந்துகொள்ளட்டும்.

எடுத்த எடுப்பிலேயே உலகின் நான்கு திசைகளிலும் எதிரொலி முழங்கச் செய்த அந்த மாபெரும் சக்தியை நினை. அந்தப் பரிபூரண சக்தியின் வெளிப்பாட்டை உன் உள்ளத்தில் அமர்த்து. அடிமைகளுக்கே உரிய குணங்களான பொறாமை, வெறுப்பு, பலவீனம், சந்தேகம் இவற்றை ஒழி; தூக்கி எறி. புதிய வரப்பிரசாதமாகிய இந்த யுகத்தை மாற்றியமைக்கும் சக்கரத்தைச் சுழற்றுவோம் வா. வந்து இதில் பங்குகொள்.

‘எம்பெருமானின் குழந்தைகள் நாம், தொண்டர்கள் நாம், அவரது அவதாரப் பணிக்கு உதவுபவர்கள் நாம்’ என்ற நம்பிக்கை உன் உள்ளத்தில் ஆழப் பதியட்டும். அத்தகைய ஆழ்ந்த நம்பிக்கையுடன் வேலை செய்யப் புறப்படு.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  III. ஸ்ரீராமகிருஷ்ணர் –   3. இந்து மதமும் ஸ்ரீராமகிருஷ்ணரும்