25. பவஹாரி பாபா

பவஹாரி பாபா

மதத்தின் மற்றெல்லா அம்சங்களையும் தற்காலிகமாகத் தள்ளி வைத்து, துன்புறுகின்ற உலகிற்கு உதவுகின்ற பெரும் பணிக்கு முதலிடம் கொடுத்தவர் புத்தர். தனிமனிதத்துவம் என்ற சுயநலப் பற்று வெறும் சூன்யமே என்ற உண்மையை உணர, அவர் பல ஆண்டுகளை ஆன்ம ஆராய்ச்சியில் கழிக்க வேண்டியிருந்தது. தன்னலம் இல்லாமலும் தளர்வு இல்லாமலும் பணி செய்வதில் அவரைவிட வேறு ஒருவரை நம் வளம் மிகுந்த கற்பனையிலும் காண முடியாது. அதேவேளையில் பொருட்களின் உட் பொருளை அறிவதற்காகவும் அவரைவிட அதிகமாகப் பாடு பட்டவர் யார்? பணி எவ்வளவு பெரிதோ, அதைச் செய்து முடிக்க வேண்டுமானால் அதன் உண்மையை உணர்ந்ததால் பெற்றுள்ள ஆற்றலும் அவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பது எல்லா காலத்திற்கும் பொருந்துகின்ற உண்மை. முன்பே நன்றாகச் சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டத்திற்கான செயல் முறை விளக்கங்களை வகுப்பதற்கு ஆழ்ந்த சிந்தனை தேவை யில்லை. மனத்தை ஒருமுகப்படுத்தி, ஆழ்ந்து சிந்தித்தவையே பெரிய தூண்டுதல்கள் ஆகின்றன. சிறிய முயற்சிகளை விளக்குவதற்கு ஒரு கோட்பாடே போதும். சிறு அலைகளை உண்டாக்கும் உந்து சக்தி பேரலைகளை எழுப்பும் சக்தி யிலிருந்து கண்டிப்பாக வேறுபட்டதே; என்றாலும் அந்தப் பெரிய அலைகளைத் தோற்றுவித்த ஆற்றலின் ஒரு சிறு அம்சமே சிறு அலையையும் தோற்றுவித்தது.

உண்மைகள், வெளிப்படையான உண்மைகள் கடுமையாக, அச்சம் தருபவையாக இருக்கலாம். உண்மை , கலப்பற்ற உண்மை நெஞ்சின் ஒவ்வொரு நாளத்தையும் வெடித்துவிடச் செய்யத் தக்கதாக இருக்கலாம்; தன்னலமற்ற உண்மையான நோக்கம் கைகூடுவதற்கு உடலுறுப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாக இழக்க நேரலாம்; தாழ்ந்த செயல்நிலையில் இருக்கின்ற மனம் பெரிய செயல் அலைகளை உண்டாக்குமுன் இந்த உண்மையை, சுயநலமற்ற நோக்கத்தைப் பெற வேண்டும், அடைய வேண்டும், காண வேண்டும். நுட்பம் என்பது காலம் என்னும் பாதையில் உருண்டு உருண்டு ஓடிக்கொண்டிருக்கும்போது, அதைச் சுற்றிலும் தூலம் என்பது படிந்துபடிந்து வெளிப்படுகிறது; சாத்தியக்கூறாக இருந்தது செயல்முறையாகிறது; காரணம் காரியமாகிறது; எண்ணம் தூலச் செயலாகிறது.

காரணத்தை ஆயிரம் சூழ்நிலைகள் தடுத்து நின்றாலும் உடனேயோ தாமதித்தோ அது காரியமாக வெளிப்படவே செய்யும். தோன்றா நிலையிலுள்ள எண்ணம் இப்போது எவ்வளவுதான் வலிமை இழந்திருந்தாலும் தூல உலகில் செய் லாக உருப்பெறுகின்ற ஒரு சிறந்த நாள் அதற்கு உண்டு. நமக்குப் புலனின்பத்தை வழங்கிவருகின்ற ஒவ்வொன்றையும் அளந்தறிய நாம் கொள்கின்ற அளவுகோல் சரியானதல்ல. தாழ்ந்த நிலையில் இருக்கும் அளவிற்கு மிருகத்தின் புலனின்பம் அதிகமாக இருக்கிறது; அதிகமான புலனின்பத்தில் அது வாழ் கிறது. மிருக நிலையில் இருக்கின்ற மனிதனைப் புலனின்ப வாழ்க்கையிலிருந்து எடுத்து, அவனுக்கு, புற வசதிகளைப் பெருக்கத் துணை செய்யாமல் உயர்ந்த எண்ணங்களை ஊட்டி யும், அந்த உயர்ந்த நிலைகளின்மீது அவன் ஆவல் கொள்ளு மாறு செய்தும் அவனை உயர்த்துகின்ற ஆற்றலே நாகரீகம், உண்மையான நாகரீகம்.

மனிதன் இதனைத் தன் இயல்புணர்ச்சியால் அறிந்திருக் கிறான். அது இப்படித்தான் இருக்கும் என்று எல்லா சூழ்நிலை களிலும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்திருக்காமல் போகலாம், சிந்தனையாலான வாழ்வைப்பற்றி அவன் வேறுபட்ட பல கருத்துக்களுடன் இருக்கலாம், ஆனாலும் அந்த ஆற்றல் அவனிடம் இருக்கவே செய்கிறது. எவ்வளவு எதிர்ப்புச் சூழ் நிலைகள் இருந்தாலும் முதலிடம் பெற அது முயன்று கொண்டே இருக்கும்; மருத்துவனையோ, மந்திரவாதியையோ, புரோகிதனையோ, விஞ்ஞானப் பேராசிரியனையோ பயபக்தி யுடன் வணங்குமாறு செய்துகொண்டே இருக்கும். ஒருவன் எவ்வளவு தூரம் புலன்களிலிருந்து விடுபட்டு உயர்நிலையில் வாழும் ஆற்றல் பெற்றிருக்கிறானோ, எண்ணங்களாகிய தூய ஆக்சிஜனை அவனது நுரையீரல் எவ்வளவு உட்கொள்ள முடியுமோ, அந்த உயர்ந்த சிந்தனை நிலையில் எவ்வளவு காலம் இருக்க முடியுமோ, அந்த அளவைக் கொண்டுதான் அவனது ஆன்மீக முன்னேற்றத்தை அளவிட முடியும்.

பண்புடைய மக்கள், வாழ்க்கையின் தேவைகளைத் தவிர வாழ்க்கையின் சுகங்களுக்காகத் தங்கள் நேரத்தைச் செலவிட அருவருப்புக் கொள்கிறார்கள்; அவசியமான காரியங்களைச் செய்வதிலும் கூட அவற்றைத் தொடங்கும்போது இருந்த ஆர்வமும் போகப்போகப் படிப்படியாகக் குறைந்துகொண்டே போகிறது. இது அனைவரும் அறிந்த உண்மை .

உல்லாசப் பொருட்களும் மக்களின் கருத்திற்கும் குறிக் கோளுக்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவர் களிடையே சிந்தனை வாழ்க்கை ஏறக்குறைய எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் இந்தப் பாகுபாடுகள் அமைந் திருக்கின்றன-இது கலை.

‘இந்தப் பிரபஞ்சத்திற்கு வருகின்ற நெருப்பு ஒவ்வோர் உருவத்திலும் தோன்றினாலும் மேலும் பலவாக விளங்கிக் கொண்டிருக்கிறது.’ ஆம், அது மேலும் எண்ணற்ற பலவாக விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நமது சுகத்திற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வதற்காக எல்லையற்ற கருத்தின் ஒரு பகுதியை-அது ஒரு மிகச்சிறிய பகுதிதான்ஜடப்பொருள் தளத்திற்கு இறங்கும்படிச் செய்யலாம். ஆனால் அந்த எல்லையற்ற கருத்தின் பிற பகுதிகளை விரும்பியவாறு பயன்படுத்த முடியாது. மிகமிக நுண்ணிய பொருள் நம் காட்சிக்குப் புலப்படாமல், நழுவி மறைந்துகொண்டே இருக் கிறது; அதைக் கீழே கொண்டு வருவதற்கான நமது முயற்சி களைக் கண்டு அது சிரிக்கிறது. நாம் அதை நாடிச் செல்ல வேண்டுமே தவிர அது நம்மை நாடி வரும் என்பது அறவே இல்லை. உயர்ந்த தளத்திலுள்ள அழகை நுகரவும், அதன் ஒளியில் குளித்தெழவும், பிரபஞ்சத்திற்குக் காரண-உயிரான ஒரு பொருளுடன் தன் உயிரும் ஒன்றி நிற்கவும் வேண்டும் என்றால் அந்த உயர்ந்த தளத்திற்கு மனிதன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

விந்தை உலகங்களின் கதவுகளைத் திறந்து காட்டுவது அறிவு. அந்த அறிவே மிருகத்தைத் தேவனாக்குகிறது. ‘எந்தப் பொருளை அறிந்தால் பிற எல்லாவற்றையும் அறிய முடியுமோ’, அதை நாம் அறியும்படிச் செய்வதும் அந்த அறிவுதான். (எதன் துடிப்பால் எல்லா விஞ்ஞானங்களும் உயிர் பெறுகின்றனவோ அந்த மத விஞ்ஞானமான, அறிவின் உயிர்நாடியான அறிவே) நிச்சயமாக மிக உயர்ந்த அறிவு, எந்தக் குறையுமற்ற நிறைவான முழு வாழ்க்கையை மனிதன் வாழச் செய்ய அது ஒன்றினாலேயே முடியும். மதத்தை ‘மிக உயர்ந்த விஞ்ஞானம்’ என்று போற்றிய நாடு நற்பேறு பெறுவதாக!

ஒரு கொள்கை செயல்வடிவம் பெறும்போது, அந்த கொள்கை முழுவதும் அதில் பிரதிபலித்து நிற்கும்படிச் செய்வது கடினம்தான் என்றாலும் லட்சியம் ஒருபோதும் அழிந்து விடுவதில்லை. லட்சியத்தை நாம் அறிவோடு தெளி வோடு நாடிக்கொண்டிருந்தாலும் சரி, அதைநோக்கி ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தாலும் சரி அதை ஒருபோதும் மறக்காமல் இருப்பது நமது கடமை. கண்களுக்கு எதிரே கைகளை வைத்துக்கொண்டு உண்மையின் ஒளியை மறைக்க எவ்வளவு முயன்றாலும், அது எப்போதும் நம் கண்முன் காட்சி அளித்த வண்ணமே இருக்கிறது.

அனுபவ வாழ்க்கை, லட்சியத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாம் தத்துவம் பேசினாலும், தினசரி வாழ்க்கை யின் கடினமான கடமைகளைச் செய்து கொண்டிருந்தாலும் நமது வாழ்க்கை முழுவதையும் ஊடுருவி நிற்பது லட்சியமே. லட்சியத்தின் ஒளிக்கதிர்கள் வெளிப்பட்டு, ஒவ்வொரு சிறு துளைமூலமும் காற்றுத் துவாரம் மூலமும் நேராகவோ, வளைந்தோ, அலைபோலவோ பாய்ந்து கொண்டிருக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ, நாம் ஒவ்வொரு செயலையும் அந்த ஒளியில்தான் செய்தாக வேண்டும். ஒவ்வொரு பொருளும் அதனால்தான் அழகாகவோ விகாரமாகவோ மாறுகிறது. நாம் எவ்வாறு இருக்கிறோமோ, இனி எவ்வாறு ஆகப் போகிறோமோ அதை அந்த லட்சியம்தான் நிர்ணயிக்கிறது. லட்சியத்தின் ஆற்றல் நம்மை ஒரு போர்வைபோல் மூடிக் கொண்டிருக்கிறது. நம் இன்பங்களிலும் துன்பங்களிலும், நாம் செய்யும் உயர்ந்த செயல்களிலும் தாழ்ந்த செயல்களிலும், நமது புண்ணியச் செயல்களிலும் பாவச் செயல்களிலும் நாம் அதன் ஆற்றலை அனுபவித்து வருகிறோம்.

லட்சியத்தை அடைவதற்கான செயல்முறையைவிட லட்சியத்திற்கு இத்தகைய ஆற்றல் இருந்தாலும், அந்த லட்சியத்தை அமைத்துத் தருவதில் செயல்முறையின் ஆற்றலும் அதற்குக் குறைந்ததல்ல. லட்சியத்தின் உண்மையைச் செயல் முறையால்தான் அறிகிறோம். லட்சியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே, செயல்முறை என்பது எங்கேயோ எப்படியோ இருக் கிறது என்பதை நிலைநாட்டுகிறது. லட்சியம் பெரியதாக இருக்கலாம், ஆனாலும் அது செயல்முறைத் துணுக்குகளின் தொகுப்புதான். தொகுக்கப்பட்ட, பொதுமைப்படுத்தப்பட்ட, செயல்முறைத் துணுக்குகளின் வடிவமே லட்சியம். லட்சியத்தின் ஆற்றல் செயல்முறையில் இருக்கிறது. செயல்முறையிலும் அதன் வாயிலாகவும்தான் லட்சியம் நம்மீது செயல்படுகிறது. நமது புலன்களால் அறியக்கூடிய வகையில் நாம் புரிந்து கொள்ளத்தக்க விதத்தில் செயல்முறையின் வழியாகவே லட்சியம் கீழே கொண்டுவரப்படுகிறது. லட்சியத்தை அடை வதற்கு வேண்டிய படிகளாகச் செயல்முறை பயன்படுகிறது. லட்சியத்தை அடைவோம் என்ற நம்பிக்கையைச் செயல் முறையே நமக்கு ஊட்டுகிறது; செயல்படுவதற்கு வேண்டிய உறுதியைத் தருகிறது.

லட்சியத்தின் சிறப்பியல்புகளைத் தேன்சொட்டும் சொற் களால் விளக்கிப் பேசுபவர்களைவிட, அந்த லட்சியத்தை நேர்த்தி மிகுந்த பல்வேறு தத்துவங்களாக விரித்துக் காட்டுபவர் களைவிட, சொந்த வாழ்க்கையில் அந்த லட்சியத்தை வெளிப் படுத்துபவனே அதிக ஆற்றல் படைத்தவன். தத்துவ முறைகளை மதத்துடன் இணைத்து, அனுபவ வாழ்க்கைக்கு ஏற்றதாக அவற்றைக் கீழே செயல்முறைக்குக் கொண்டுவந்து, அதனால் பெரியதோ சிறியதோ ஆன வெற்றிபெற முயல்கின்ற ஒரு கூட்டத்தினர் தோன்றாமல் அந்தத் தத்துவ முறைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை; மிஞ்சிப்போனால் அவை அறிவுக்கு விருந்தாகின்ற சில வார்த்தை ஜாலங்களாக இருக்கலாம். நம்பிக்கை ஊட்டுவதற்குரிய எந்த அம்சமும் இல்லாத தத்துவ முறைகளைக்கூட, யாரேனும் சிலர் கடைப் பிடித்து ஓரளவு நடைமுறையில் கொண்டுவந்தவுடன் பெருந்திரளான மக்கள் அவற்றை ஆதரித்திருக்கிறார்கள். அதே வேளையில் தெளிவும் விளக்கமும் மிகுந்த நெறிகள்கூட அவற்றைச் செயல்முறையில் பின்பற்றுபவர்கள் இல்லாததால் வாடி அழிந்துபோக நேர்ந்துள்ளது.

சிந்தனையைப் போலவே செயல்களும் அமையுமாறு வாழ பலரால் முடிவதில்லை ; பேறுபெற்ற சிலரால் அது முடியும். நம்முள் பலரும் ஆழ்ந்து சிந்திக்கும்போது செயல்திறனை இழக்கிறோம்; அவ்வாறே அதிகமாகச் செயல் புரியும்போது, ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிடுகிறோம். இதனால் தான் மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் பெரும்பாலானோர் தங்கள் சிறந்த லட்சியங்களைச் செயல்முறைப் படுத்துவதை எதிர்காலத்திடம் விட வேண்டியிருந்தது. செயல்திறன் மிக்க வர்கள் அந்தச் சிந்தனைகளைச் செயல்படுத்திப் பரப்ப முன் வரும் வரையில், அவை காத்திருக்கவே வேண்டும்.

இதை எழுதிக் கொண்டிருக்கின்ற வேளையில் என் மனக் கண்முன் காட்சி ஒன்று தோன்றுகிறது: அர்ஜுனனுடைய தேரோட்டியான கண்ணன் இரு படைகளுக்கும் நடுவே தேரில் நிற்கிறான், இடது கையால் வேகமிக்கக் குதிரைகளை அடக்கிய வண்ணம் இருக்கிறான், கவசம் அணிந்து ஒரு போர்வீரனாக உள்ளான் அவன், அவனது கழுகுப் பார்வை அந்த மாபெரும் படைகளின் அணிவகுப்பு முழுவதன்மீதும் படிந்து செல்கிறது, இரு தரப்புப் படைகளின் ஒவ்வோர் அம்சத்தையும் மிகவும் இயல்பாக எடையிடுகிறான் அவன். அதேவேளையில், திகைத்து நிற்கின்ற அர்ஜுனனுக்காக செயலின் அற்புத ரகசியத்தை அவன் பேசுகிறான்: ‘செயல்களின் ஊடே ஓய்வு பெறவும் ஓய்வின் ஊடே செயல்புரியவும் யாரால் முடியுமோ, அவனே மனிதருள் ஞானி, அவனே யோகி, அவனே எல்லா செயல் களையும் செய்ய வல்லவன்.’ (கீதை 4. 18)

இதுவே முழுமையான லட்சியம். இதை அடைவது மிகச் சிலரே. எதையும் உள்ளது உள்ளபடி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு அம்சங்கள் சிறப்பாக இருக்கும்; அவற்றை ஒருங்கிணைப்பதிலேயே நாம் திருப்திகொள்ள வேண்டியதுதான்.

ஆழ்ந்த சிந்தனைச் செல்வர்கள், பிறருக்கு உதவி புரிகின்ற பெரும் செயல் வீரர்கள், தன்னை அறிந்த ஆற்றல் மிக்க ஆன்ம ஞானிகள், அமைதியும் அடக்கமும் நிறைந்தவர்கள் என்று பலதரத்தினர் மதத்துறையில் உள்ளார்கள். வியக்கத் தக்க பணிவும் தன்னை அறிந்த அனுபவ நிறைவும் பெற்ற ஒரு மகானைப் பற்றிய கட்டுரை இது:

காசியை அடுத்துள்ள குசி என்னும் இடத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் பிராமண குலத்தில் பிறந்தவர் அந்த மகான். அவரைப் பிற்காலத்தில் பவஹாரி பாபா என்று வழங்கினர். அவர் சிறுவராக இருந்தபோது, தம் தாய்மாமனுடன் தங்கிக் கல்வி பயிலக் காசிபூர் சென்றார்.

இந்துத் தபஸ்விகளைத் தற்காலத்தில் சன்னியாசிகள், யோகிகள், வைராகிகள், பந்திகள் என்று நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். சங்கராச்சாரியரின் அத் வைதத்தைப் பின்பற்றுபவர்கள் சன்னியாசிகள். யோகிகள் அத்வைதத்தையே பின்பற்றினாலும் பல்வேறு யோகப் பயிற்சி களில் சிறந்தவர்கள். துவைதிகளான ராமானுஜர் முதலா னோரின் சீடர்கள் வைராகிகள். பந்திகள் அத்வைதம், துவைதம் இரண்டையும் பின்பற்றுபவர்கள், இவர்கள் முகமதியர் காலத்தில் தோன்றினர். பவஹாரி பாபாவின் மாமா ராமானுஜரின் சம்பிரதாயமான ஸ்ரீசம்பிரதாயத்தைச் சார்ந்தவர். அவர் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி, அதாவது ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருக்கும் விரதம் பூண்டவர். காசிபூருக்கு வடக்கே ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்தில் கங்கைக் கரை யில் அவருக்குச் சிறிது நிலம் இருந்தது. அவர் அங்கு வாழ்ந்து வந்தார்; மருமகன்கள் பலருள் பவஹாரி பாபாவை அழைத்துச் சென்று தம் சொத்திற்கும் பதவிக்கும் வாரிசாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரைத் தத்தெடுத்துக் கொண்டார்.

பவஹாரி பாபாவின் இந்தக் கால வாழ்வைப்பற்றி அதிக மாக எதுவும் தெரியவில்லை . பிற்காலத்தில் அவரைப் பலரும் அறியும் வண்ணம் செய்த சிறப்பியல்புகளின் எந்த அறிகுறியும் அப்போது அவரிடம் தோன்றவில்லை. இலக்கணத்திலும், நியாய சாஸ்திரத்திலும், அவரது நெறியான துவைதத்திலும் சிறந்த மாணவராக இருந்தார் என்று மட்டும் தெரிய வருகிறது. சிலவேளைகளில் சக மாணவர்களைக் கேலி செய்து மகிழ்வதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

பண்டைய இந்திய மாணவர்களைப்போல் கடமைகளை ஒழுங்காகவும் முறையாகவும் செய்வதில் அந்த எதிர்கால மகானின் இளமை நாட்கள் கழிந்தன. பொதுவாக மாணவர்கள் காட்டுவதைவிட அதிக ஆர்வத்துடன் அவர் பாடங்களைப் படித்தார். பிற மொழிகளைக் கற்பதில் வியக்கத்தக்க திறமை பெற்றிருந்தார். வெளிப்படையான, மகிழ்ச்சி நிரம்பிய அவரது மாணவ வாழ்க்கையில் மேலே குறிப்பிட்டவை தவிர, அபூர்வ மான அசாதாரணமான தியாகத்தை விளைவிக்கக் கூடிய மகத்தான மனவுறுதி அவருக்கு ஏற்படும் என்பதை முன் கூட்டியே உணர்த்தவல்ல எதுவுமே இருக்கவில்லை.

வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தை முதன்முதலாக அந்த மாணவன் உணரும்படி ஏதோ ஒன்று நிகழ்ந்தது. அது, அது வரையில் புத்தகத்தில் ஊன்றியிருந்த கண்களை உயர்த்தி, தம் மனத்தின் அடிவானத்தை ஆராய்ந்து பார்க்கவும், வெறும் நூலறிவுடன் திருப்தி அடையாமல் மதத்தில் உள்ள உண்மை யான ஒன்றின்மீது பேரார்வம் கொள்ளவும் செய்தது அவரது மாமா இறந்துபோனார். அந்த இளைஞரின் இளமனத்தில் தோன்றிய அன்பு முழுவதும் எந்த முகத்தின்மீது செலுத்தப் பட்டிருந்ததோ அந்த முகம் மறைந்து போயிற்று. துடிப் பான அவர் பெரும் துயரக் கடலில் ஆழ்ந்தார். எனினும் மறைந்துபோன ஒன்று இருந்த இடத்தில் மாற்றமில்லாமல் நிலைத்து நிற்கின்ற காட்சி ஒன்றை நிலைநாட்ட உறுதி கொண்டார்.

இந்தியாவில் ஒவ்வொன்றிற்கும் எங்களுக்கு ஒரு குரு வேண்டும். சாஸ்திரங்கள் வெறும் குறிப்புகளே என்று இந்துக் களாகிய நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு கலையின், ஒவ்வொரு விஞ்ஞானத்தின், அனைத்திற்கும் மேலாக மதத்தின் உயிரோட்டமான ரகசியங்கள் குரு-சீடர் பரம்பரை வழியாகவே வர வேண்டும். எந்தத் தடையும் இல்லாமல் அக வாழ்வின் மர்மங்களை அறிய விரும்புவோர், இந்தியாவில், நினைத்தற்கரிய காலத்திலிருந்தே யாரும் நாடாத தனி இடங்களுக்குப் போவது உண்டு. ‘பெரிய மகான் ஒருவர் தங்கியிருக்கின்ற இடம்’ என்ற செய்தியால் புனிதம் பெற்று விளங்காத ஒரு காடோ, ஒரு குன்றோ, புண்ணியத் தலமோ இன்றும் அங்கே இருப்பது அரிது.

‘ஓடுகின்ற நீரே தூயது; எங்கும் தங்காத துறவியே தூயவர்’ என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள், தங்கள் வாழ்வில் பெரும் பகுதியைப் பல்வேறு கோயில்களைத் தரிசிப்பதில் செலவிட்டு, தங்களிடம் மாசு சேராதபடி காத்துக் கொள்வார்கள்; அதே வேளையில் இந்தப் பயணங்களின்மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்கள் மதத்தையும் கொண்டு செல்கின்றனர். உலகத்தைத் துறக்கின்ற அனைவரும் இந்தியாவின் நான்கு மூலைகளில் விளங்கும் நான்கு புண்ணியத் தலங்களுக்கு அவசியம் போய்வர வேண்டும் என்று கருதப்படுகிறது.

இவ்வாறெல்லாம் நம் இளம் பிரம்மச்சாரி ஆழமாக சிந்தித்துப் பார்த்திருக்கலாம்; ஆனால் இவற்றில் அவரிடம் முதன்மையாக விளங்கியது ஞானப் பசியே என்பது உறுதி. அவரது பயண விவரங்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை . அவரது நெறியின் சாஸ்திரங்கள் அதிகம் உள்ளதான தென்னிந்திய மொழிகளில் அவர் பெற்றிருந்த அறிவைக் கொண்டும், சைதன்யரின் நெறியைச் சார்ந்த வைணவர்கள் கையாண்டுவந்த பழைய வங்காளமொழியில் அவர் பெற்றிருந்த நிறைந்த அனுபவத்தைக் கொண்டும், அவர் தென்னிந்தியா விலும் வங்காளத்திலும் தங்கியிருந்த காலம் அதிகம் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

அவரது இளம்பருவ நண்பர்கள் அவர் போயிருந்த ஓர் இடத்தைப் பெரிதும் வலியுறுத்துகிறார்கள். அது கத்தியவாரில் உள்ள கிர்னார் மலை. அதன் உச்சியில் செயல்முறை யோகத்தின் ரகசியங்கள் அவருக்கு முதன்முதலாக உபதேசிக்கப்பட்டன என்று அவர்கள் கூறுகிறார்கள். புத்த மதத்தினருக்கு மிகப் புனிதமானது அந்த மலை. அசோக மன்னரின் கட்டளைகளில் முதன்முதலாகப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டவை பொறிக்கப் பட்டிருக்கின்ற பெரும் பாறை அதன் அடிவாரத்தில் உள்ளது. அதன் கீழ்ப்பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டினால் மறைக்கப் பட்ட பெரிய நினைவுத்தூண்கள் உள்ளன. பல நூற்றாண்டு களாக இவற்றை யாரும் கண்டுபிடிக்கவில்லை; கிர்னார் மலைத்தொடரைச் சேர்ந்த சிறு குன்றுகள் என்று நெடுங்கால மாக மக்கள் அவற்றைக் கருதிவந்தார்கள். எந்தப் பழைய மதத்தின் புதிய தோற்றமாகப் புத்த மதம் கருதப்படுகிறதோ, அந்தப் பழைய மதம் இன்னும் அந்த மலையைப் புண்ணியத்தல மாகக் கருதி வருகிறது. அதன் வழி வந்ததே உலகத்தையே வெற்றி கொண்டதான புத்த மதம். விந்தை என்னவென்றால் இந்த புத்த மதம் இன்றைய இந்து மதத்தில் சங்கமிப்பது வரை யில் மகோன்னதமான கட்டிடக்கலை எதிலும் ஈடுபடவில்லை. மாபெரும் அவதூத குருவாகிய தத்தாத்திரேயர் தங்கியிருந்ததால் இந்துக்கள் கிர்னார் மலையைப் புனிதமாகப் போற்றுகிறார்கள். புண்ணியம் நிறைந்தவர்கள், சித்திபெற்ற பெரிய யோகிகளை அதன் உச்சியில் இப்போதும் காணலாம் என்று கருதப்படுகிறது.

நமது இளம் பிரம்மச்சாரியாகிய பவஹாரி பாபாவின் வாழ்க்கையின் அடுத்த திருப்பம் காசிக்கு அருகே கங்கைக் கரையில் ஏற்பட்டது. அங்கே குகை ஒன்றில் வாழ்ந்து யோகம் பயின்ற வந்த ஒரு சன்னியாசியின் சீடர் ஆனார் அவர். காசிபூருக்கு அருகே கங்கைக் கரையில் தோண்டப்பட்ட நீண்ட குகையில் பவஹாரி பாபா வசித்து வந்ததும் மேலே குறிப் பிட்ட யோகியிடம் பெற்ற பயிற்சியால்தான். தட்பவெப்ப நிலையில் அதிகமாக மாறுபடாத, ஓசைகள் வந்து மனத்தை அலைக்கழிக்காத குகைகளிலும் வேறு இடங்களிலும் வசிப்பது நல்லது என்று யோகிகள் வலியுறுத்துகிறார்கள். காசியில் ஒரு சன்னியாசியிடம் அதே காலத்தில் அவர் அத்வைதத்தைக் கற்று வந்தார் என்றும் தெரிகிறது.

யாத்திரையிலும் கல்வியிலும் பயிற்சியிலும் பல ஆண்டு களைக் கழித்த பிறகு, தாம் வளர்க்கப்பட்ட அந்த இடத்திற்கே வந்து சேர்ந்தார் அவர். பண்டைய முனிவர் ஒருவர் தன் சீடனின் முகத்தில் எந்த ஒளியைக் கண்டு, ‘குழந்தாய், பிரம்மத் தின் மகிமை இன்று உன் முகத்தில் சுடர்விடுகிறது’ என்று கூறினாரோ, அதே ஒளியை, பவஹாரி பாபாவின் முகத்திலும், அவரது மாமா சாகாதிருந்தால் கண்டிருப்பார். ஆனால் பாபா வீட்டிற்கு வரும்போது வரவேற்றவர்கள் அவரது இளம் பருவ நண்பர்கள். அவர்களுள் பலர் சாதாரண எண்ணமும் ஓயாத செயல்பாடுகளும் நிறைந்த இந்த உலகில் ஈடுபட்டிருப்பவர்கள் அல்லது ஈடுபடப் போகிறவர்கள்.

பள்ளிப் பருவ நண்பரும், விளையாட்டுத் தோழருமான பாபாவின் குணத்திலும் நடத்தையிலும் புரியாத ஒரு மாற்றத்தை அவர்கள் கண்டார்கள். தாங்களும் அவரைப் போலாக வேண்டும் என்ற எண்ணத்தையோ அல்லது அவரைப்போல் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தையோ அது அவர்களிடம் தூண்டவில்லை. உலகாயத எண்ணமும் தொல்லையும் நிறைந்த இந்த உலகத்தைக் கடந்து மேலே சென்றவரிடம் தோன்றுகின்ற மர்மமே அந்த மாற்றம். அவர்கள் அந்த மாற்றத்திற்கு இயல்பாகவே மரியாதை செய்தார்கள்; அதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

நாளுக்குநாள் அந்த மகானின் சிறப்பியல்புகள் வளர்ந்து வந்தன. பூமிக்குள் ஒரு குகையை ஏற்படுத்தி குரு இருந்தது போலவே, தாமும் பலமணி நேரம் குகையில் வாழத் தொடங் கினார். பிறகு தீவிரமான சாதனைகளில் ஈடுபடலானார். தமது அன்புக் கடவுளாகிய ராமச்சந்திர மூர்த்தியைப் பாடி வழி படுவார். சமையல்கலையில் தேர்ந்தவரான அவர் நல்ல உணவு வகைகளைச் சமைத்து நிவேதனம் செய்த பின்னர் அதை நண்பர்களுக்கும் ஏழைகளுக்கும் பகிர்ந்தளிப்பார். இரவு வரும் வரையில் அவர்களின் வசதிகளைக் கவனிப்பார். இவ்வாறு தமது சிறிய ஆசிரமத்தில் நாள் முழுவதும் உழைப்பார். எல்லோரும் உறங்கியதும் கங்கை நதியை நீந்திக் கடந்து அக்கரையை அடைவார். அங்கு இரவு முழுவதையும் சாதனை களிலும் பிரார்த்தனையிலும் கழிப்பார். பின்னர் பொழுது விடியுமுன் திரும்பிவந்து நண்பர்களை எழுப்புவார். பின்னர் ‘பிறரை வழிபடுவது’ என்று நாங்கள் இந்தியாவில் சொல்கின்ற மக்கள் சேவையில் ஈடுபடுவார்.

இதிலெல்லாம் அவரது உணவு நாள்தோறும் குறைந்து கொண்டே வந்து, முடிவில் ஒருநாள் ஒரு கைப்பிடி வேப்பிலை அல்லது சில மிளகாய்கள் என்ற அளவில் சுருங்கியது என்று தெரிய வருகிறது. நாட்கள் செல்லச்செல்ல நதியின் அக்கரை யிலுள்ள காட்டிற்கு இரவில் போய்வந்ததை விட்டுவிட்டுத் தம் குகையிலேயே அதிகமாகத் தங்கியிருக்கலானார். தியானத்தில் நாட்கணக்கில், மாதக்கணக்கில் ஆழ்ந்திருப்பார் என்றும், பிறகு வெளியே வருவார் என்றும் சொல்கிறார்கள். அவ்வாறு ஆழ்ந்திருந்த நெடுங்காலத்தில் அவர் எதை உண்டு வாழ்ந்தார் என்பது யாருக்கும் தெரியாது. எனவே அவரைப் பவஹாரி பாபா, ‘காற்றை உணவாகக் கொள்கின்ற முனிவர்’ என்று அனைவரும் அழைக்கலாயினர்.

ஆயுள் முழுவதும் அவர் அந்த இடத்தைவிட்டு அகன்றதே இல்லை. ஒருசமயம் அவர் தம் குகைக்குள்ளேயே நீண்டகாலம் தங்கிவிட்டார். அவர் இறந்துபோனார் என்று மக்கள் எண்ணி னார்கள், ஆனால் நெடுநாட்கள் சென்ற பின்னர் அவர் வெளியே வந்து ஏராளம் சாதுக்களுக்கு விருந்தளித்தார்.

தியானத்தில் ஆழ்ந்திருக்காதபோது அவர் தமது குகைக்கு மேலே இருந்த அறையில் இருப்பார். அப்போது தம்மைக் காண வருபவர்களை உபசரிப்பார். அவரது புகழ் பரவ ஆரம்பித்தது. இயல்பான தமது பெருங்குணத்தாலும் ஆன்மீகப் பண்பாலும் எல்லோரது அன்பையும் பெற்றுத் திகழ்ந்தவரும், காசிபூரில் அபினி துறையைச் சேர்ந்த ராய் ககன்சந்திர ராய் பகதூர் என்பவரே எனக்கு அந்த மகானை அறிமுகம் செய்து வைத்தவர்.

இந்தியாவிலுள்ள பலரைப் போலவே பாபாவின் வாழ் விலும் குறிப்பிடத்தக்க, பிறரைத் தூண்டத்தக்க புற நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. பேச்சின்றி, வாழ்க்கையாலேயே போதித்தல் என்ற இந்திய லட்சியத்திற்கு அவரது வாழ்க்கை மற்றுமோர் உதாரணமாகத் திகழ்ந்தது. பக்குவம் பெற்றவர்களிடம் மட்டுமே அவரது வாழ்வு விளைவுகளை ஏற்படுத்தியது. இத்தகையோர் பிறருக்குப் போதிப்பதை அறவே வெறுக்கிறார்கள்; ஏனெனில் உண்மையை உணர உதவி செய்பவை சொற்கள் அல்ல, அகப் பயிற்சி ஒன்றே என்பதை நன்றாக அறிந்தவர்கள் இவர்கள். சமுதாயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்பதல்ல, இந்த வாழ்விலேயே உண்மையைத் தீவிரமாக நாடு வதும் அடைவதும்தான் மதம் என்பதே இவர்களின் கருத்து. குறிப்பிட்ட ஒரு காலம், மற்றொரு காலத்தைவிட ஆற்றல் வாய்ந்தது என்பதை இவர்கள் மறுக்கிறார்கள். எல்லையற்ற காலப் பெருவெளியில் ஒவ்வொரு கணமும் சமமானவை, எனவே மத உண்மைகளை மரணத்திற்குப் பிறகு காணலாம் என்று காத்திருக்காமல், இப்போதே இங்கேயே காண வேண்டும் என்று இவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

உலகத்திற்கு உதவி செய்வதற்காக ஏன் அந்த மகான் குகையை விட்டு வெளிவரவில்லை என்று இந்த எழுத்தாளர் அவரையே கேட்க நேர்ந்தது. அவர் தமது இயல்பான பணிவுட னும் உவகையுடனும் அளித்த விடையைக் கீழே காணலாம்

‘ஒரு தீயவன் குற்றம் ஒன்றில் அகப்பட்டுக் கொண்டான். தண்டனையாக அவனது மூக்கை அறுத்துவிட்டனர். மூக் கில்லாத தன் முகத்தை வெளியே காட்ட வெட்கப்பட்டு தன்னையே வெறுக்கத் தொடங்கிய அவன் காட்டிற்குள் ஓடி விட்டான். யாராவது அருகே வருவதைக் காணும்போதெல்லாம் தரையில் ஒரு புலித் தோலை விரித்து, அதில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைப்போல் பாசாங்கு செய்வான். இந்தச் செயல், மக்கள் அவனை நெருங்காமல் செய்வதற்குப் பதிலாகக் கும்பல்கும்பலாக அவர்களை அவனிடம் ஈர்த்தது. காட்டு வாழ்க்கையால் தன் வாழ்க்கை வசதியாக அமைந்துவிட்டதை அவன் கண்டான். பல ஆண்டுகள் கடந்தன. எப்போதும் மௌனமாக தியானத்தில் இருக்கும் அந்த அபூர்வ மகானின் வாயால் ஏதாவது ஒரு போதனையைப் பெறப் பலர் விரும்பி னார்கள். அவரது நெறியில் தீட்சை பெறுவதற்கு ஓர் இளைஞன் மிகவும் ஆர்வம் கொண்டான். மேலும் அங்கே தங்கியிருந்தால் தனது கீர்த்திக்குப் பங்கம் ஏற்படும் என்றெண்ணிய அந்த மகான் தன் மௌனத்தைக் கலைத்து, அந்த இளைஞனிடம் மறுநாள் வரும்போது ஒரு கூரான கத்தியைக் கொண்டு வரும் படிக் கூறினான். தன் வாழ்வின் லட்சியம் வெகுவிரைவில் நிறைவேறப் போகிறது என்ற மகிழ்ச்சியுடன் இளைஞன் மறு நாள் அதிகாலையிலேயே கத்தியுடன் வந்து சேர்ந்தான். மூக்கிழந்த மகான் அவனைக் காட்டினுள் ஒரு தனித்த இடத் திற்கு அழைத்துச் சென்று, தன் கையில் கத்தியை எடுத்து ஒரே வெட்டாக அவனது மூக்கை வெட்டினான். பிறகு அமைதியாக, “இளைஞனே, இதுவே நான் பெற்ற தீட்சை. அதையே நான் உனக்குத் தந்தேன். வேளை வரும்போது நீயும் மற்றவர்களுக்கு இதனைக் கொடு” என்றான். வெட்கத்தால் குன்றிப்போனான் அந்த இளைஞன். இந்த அற்புத தீட்சை ரகசியத்தை அவனால் யாரிடமும் சொல்ல முடியவில்லை. குருவின் ஆணையைத் தன்னால் இயன்ற அளவு அவன் நிறைவேற்றி வந்தான். மூக்கறுந்த மகான்களின் தனிப் பிரிவு நாடெங்கும் பரவலாயிற்று. அத்தகைய ஒரு பிரிவை நானும் தோற்றுவிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?’

மற்றொரு நாள் அவர் தன்னுள் சற்று ஆழ்ந்திருந்தார். அப்போது கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்: ‘உடம்பால் செய்கின்ற உதவி ஒன்றுதான் உதவி என்று நினைக் கிறாயா? உடம்பின் செயல்பாடு எதுவும் இல்லாமல் ஒரு மனம் வேறு மனங்களுக்கு உதவ முடியாதா என்ன?’

ஆரம்ப சாதகர்கள் செய்ய வேண்டியவையான ஹோமத் தீயில் நெய் சொரிதல், ஸ்ரீரகுநாதரின் திருவுருவை வழிபடுதல் போன்ற கர்மங்களை மகா யோகியாகிய அவர் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டபோது அவர் சொன்னார்: ‘சொந்த நன்மைக்காகவே ஒவ்வொருவரும் கர்மத்தில் ஈடுபடுவதாக ஏன் கருதுகிறாய்? பிறரது நன்மைக்காக ஒருவர் கர்மம் செய்ய முடியாதா?’

ஒரு நாள் அவரது ஆசிரமத்தில் திருடன் ஒருவன் நுழைந்து விட்டான். ஆனால் அவரைக் கண்டதும் பயந்துபோய், தான் திருடிய பொருட்களின் மூட்டையை அப்படியே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தான். அவரோ அந்த மூட்டையை எடுத்துக் கொண்டு, அந்தத் திருடனைத் தொடர்ந்து பல மைல் தூரம் ஓடி அவனைப் பிடித்தார். பிறகு அவனது காலடியில் அந்த மூட்டையை வைத்து, குவித்த கைகளோடும் கண்களில் கண்ணீ ருடனும் அது அவனது சொத்து என்றும், அதை அவன் எடுத்தபோது தலையிட்டதற்குத் தம்மை மன்னிக்க வேண்டும் என்றும், மீண்டும் அவன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

ஒருசமயம் அவரை நல்ல பாம்பு கடித்துவிட்டது. அவர் இறந்துவிட்டார் என்றே அனைவரும் கருதினர். சில மணி நேரம் ஆனபிறகு அவர் உயிர்பிழைத்துவிட்டார். அதைப்பற்றி அவரது நண்பர்கள் கேட்டபோது, ‘என் அன்புக் கடவுளின் தூதனே அந்த நல்லபாம்பு’ என்று மட்டுமே அவர் பதில் சொன்னார். நம்பகமானவர்களிடமிருந்து நாங்கள் கேள்விப் பட்டவை இவை.

அவரது மென்மை, அடக்கம், அன்பு போன்ற இவற்றை அறிந்திருக்கின்ற நாம், மேலே கண்டதைத் தாராளமாக நம்ப லாம். எல்லா நோய்களும் அவரைப் பொறுத்தவரை அன்புக் காதலனின் தூதர்களே. அவற்றால் பெருந்துன்பம் அடைந்த போதும் வேறு பெயரால் அவற்றைக் குறிப்பிட அவரது மனம் பொறுக்கவில்லை. ஆரவாரமற்ற அன்பும் மென்மையும் கொண்ட இந்த மகானின் பெயர் மக்களிடையே பரவ ஆரம்பித்தது. பக்கத்திலுள்ள கிராமங்களின் வழியாகப் பயணம் செய்தவர்கள் அந்த அற்புத மகானிடம் அவர்கள் கொண்டிருந்த மரியாதையை அறிய முடியும். பிற்காலத்தில் அவர் யார் முன் னாலும் வருவதில்லை. குகையை விட்டு வெளியே இருந்தபோது, மூடிய கதவிற்கு உள்ளே இருந்தே மக்களுடன் பேசுவார். ஹோமத் தீயில் நெய் முதலியவற்றைச் சொரிவதால் எழும் புகையோ, வழிபாட்டிற்கான பொருட்களை ஆயத்தம் செய்வ தால் எழும் ஓசையோதான் அவர் குகையை விட்டு மேலே வந்திருப்பதை உணர்த்தும்.

எவ்வளவு சிறியதாயினும் சரி, தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் முழு ஈடுபாட்டுடன் இருப்பது அவரது சிறப்பியல்பு களுள் ஒன்று. அவர் ராமனை வழிபடும்போது எவ்வளவு கருத்துடனும் கவனத்துடனும் இருப்பாரோ, அவ்வளவு கவனமாக ஒரு செப்புக் குடத்தைக் கழுவிச் சுத்தம் செய்வார். ‘லட்சியத்தின்மீது நாம் கொள்கின்ற அதே அளவு அன்பையும் ஈடுபாட்டையும் அதற்கான வழியிலும் செலுத்த வேண்டும்’ என்று செயலின் ரகசியத்தைப்பற்றி அவர் கூறினார். அதற்குச் சிறந்த உதாரணமாகவும் அவரே விளங்கினார். –

வேதனையையோ துன்பத்தையோ பொறுத்துக் கொள்தல் அல்லது தம்மையே இழிவு செய்துகொள்தல் என்பதல்ல அவரது பணிவு. அவரது பணிவு அவரது அனுபூதியிலிருந்து இயல்பாகப் பிறந்தது. ஒருமுறை அவர் அதனை அருமையாக விளக்கினார்: ‘ஓ மன்னா, தனக்கென எதுவும் இல்லாதவர்களின் செல்வம் கடவுளே, ஆம், எதுவும் இல்லாதவர்கள், எல்லா வற்றையும் துறந்தவர்கள், சொந்த உயிரைகூடத் தனக்கென வைத்திருக்காதவர்கள்.’ அவர் நேராக ஒருபோதும் போதித்த தில்லை ; ஒரு குருவின் பதவியை ஏற்று, மற்றவரைவிட உயர்ந்த நிலையில் அவர் இருக்க விரும்பாததே அதற்குக் காரணம். ஆனால் ஊற்றுக்கண்ணை ஒருமுறை தொட்டுவிட்டால் எல்லையற்ற ஞானம் என்ற ஊற்றுநீர் பொங்கிப் பெருகும். என்றாலும் விடைகளை அவர் ஒருபோதும் நேராகக் கூறு வதில்லை .

சற்று பருத்து உயர்ந்தது அவரது தோற்றம். அவருக்கு ஒரு கண்தான் உண்டு. தமது உண்மை வயதைவிட இளைஞராகவே அவர் தோன்றினார். நான் கேட்டவற்றுள் மிகமிக இனிமை யானது அவருடைய குரல். அவரது வாழ்வில் கடைசி பத்து அல்லது அதற்கு அதிகமான வருடங்கள் மனிதர்களின் பார்வை யில் சிறிதும் படாமல் ஒதுங்கி வாழ்ந்தார். சில உருளைக் கிழங்குகளும் வெண்ணெயும் கதவுக்குப் பின்னால் வைக்கப் படும்; சமாதி நிலையில் இல்லாத வேளைகளிலும், மேல் அறையில் வாழும்போதும் இரவு வேளைகளில் அவற்றை எடுத்துக்கொள்வார். குகைக்கு உள்ளே இருந்தபோது அவை கூட அவருக்குத் தேவையில்லை. யோக விஞ்ஞானத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், தூய்மை, பணிவு, அன்பு என்பவற்றின் ஒரு வாழும் உதாரணமாகவும் அமைதியாக அவரது வாழ்க்கை சென்றது.

நான் முன்பு கூறியவண்ணம், அவர் சமாதியை விட்டு வெளியேறுவதை உணர்த்துகின்ற புகை ஒரு நாள் தசையைச் சுடும்போது ஏற்படும் நாற்றத்தோடு வீசியது. சுற்றிலுமுள்ள மக்களால் என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த நாற்றம் தாங்க முடியாததாகி, புகையும் அளவில் பெருகி மேலே ஓங்கி எழுவதைக் கண்ட அவர்கள் கதவை உடைத்துத் திறந்தனர். அங்கே அந்த மகாயோகி ஹோமத் தீக்குக் கடைசி ஆஹுதியாகத் தம்மையே ஆக்கிக் கொண்டுவிட்டதைக் கண்டார்கள். எஞ்சியது ஒரு சாம்பல் குவியல் மட்டுமே.

‘மகான்களின் செயலை மூடர்கள் குறை கூறுகிறார்கள். அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, அவர்களது செயல் களுக்கான காரணங்கள் சாதாரண மக்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்தவை” என்று காளிதாசர் கூறு வதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

அந்த மகான் தம் இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந் தார். மரணத்திற்குப் பிறகுகூட யாருக்கும் தொந்தரவு தர அவர் விரும்பவில்லை. எனவே ஆரியர் என்ற முறையில் செய்ய வேண்டிய இறுதித் தியாகத்தை அவர் தம் உடலுடனும் சொந்த நினைவுடனும் இருந்தபோதே செய்துகொண்டார். அவரை நான் நன்றாக அறிந்திருப்பதால்தான் இவ்வாறு துணிந்து கூறுகிறேன்.
மறைந்த அந்த மகானுக்கு நன்றி செலுத்தும் கடமை இந்த எழுத்தாளருக்கு உள்ளது. இதை எழுதத் தகுதியற்றவனாக இருந்தாலும், நான் நேசித்துத் தொண்டுகள் செய்த மாபெரும் ஆச்சாரியர்களுள் ஒருவரான பவஹாரி பாபாவின் நினைவிற் காக இதை அர்ப்பணிக்கிறேன்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 25. பவஹாரி பாபா

24. கோபாலன்

கோபாலன்

குளிர்காலம்; ஒருநாள் மாலை நேரம். ‘அம்மா, காட்டு வழியில் தனியாகப் பள்ளி செல்ல பயமாக இருக்கிறது. மற்ற பையன் களை பள்ளிக்கு அழைத்து வரவும், வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் வேலைக்காரர்களோ மற்றவர்களோ இருக்கிறார்கள். எனக்கு ஏன் அப்படி யாரும் இல்லை?’ என்று கோபாலன் என்னும் பிராமணச் சிறுவன் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படும் வேளையில் தன் தாயிடம் கேட்டான். காலையிலும் பிற் பகலிலும் வகுப்பு நடைபெற்றது. மாலையில் பள்ளி மூடும் போது இருட்டாகிவிடும். காட்டு வழியாகத் திரும்ப வேண்டும்.

கோபாலனின் தாய் ஒரு விதவை. அவனது தந்தை ஒரு பிராமணன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்தவர். உலகப் பொருட்களுக்கு ஆசைப்படாமல், கற்பதிலும் கற்றுக் கொடுப்பதிலும், இறை வழிபாட்டிலும், மற்றவர்களுக்குப் பூஜை முறைகளைக் கற்றுக் கொடுப்பதிலுமாகக் காலம் கழித் தார். கோபாலன் சிறு குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். அந்த ஏழை விதவை, உலகப் பற்றுகளிலிருந்து விடு பட்டு, இருந்த சிறிய சொத்தையும்கூடப் பெரிதாக எண்ணாமல் இறைவனிடம் முழுமையாக பக்தி செலுத்தி வாழ்ந்தாள். பிரார்த்தனைகள், உண்ணாநோன்பு, கட்டுப்பாடு இவற்றில் ஈடுபட்டாள். கடந்த பல பிறவிகளில் தன் துணைவராக இருந்த வரை, எல்லா பிறவிகளிலும் தனது இன்பதுன்பங்களில் பங்கு கொண்டவரை மறு உலகில் சந்திப்பதற்கான வாய்ப்பை அளிக் கின்ற மரணம் என்னும் மாபெரும் தூதனை எதிர்நோக்கிப் பொறுமையாகக் காத்திருந்தாள் அவள்.

அவள் ஒரு சிறு குடிசையில் வாழ்ந்து வந்தாள். கணவனின் புலமைக்குப் பரிசாகக் கிடைத்த வயலிலிருந்து போதுமான அரிசி வந்தது. குடிசையைச் சுற்றி மூங்கில்களும் தென்னைகளும் மாமரங்களும் லீச்சி மரங்களும் இருந்தன. அவளிடம் பரிவு கொண்ட அந்த ஊர் மக்களின் உதவியால், வேண்டிய காய் கறிகள் ஆண்டு முழுவதும் கிடைத்தன. எஞ்சிய தேவைகளுக் காக அவள் மணிக்கணக்காக ராட்டையில் நூல் நூற்றுவந்தாள்.

காலைக் கதிரவனின் செங்கதிர்கள் தென்னை மரங்களின் உச்சியைத் தொடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்பே, பறவைக் கூட்டங்கள் தங்கள் கூடுகளில் இசையெழுப்புவதற்கு முன்னரே அவள் படுக்கையை விட்டு எழுந்துவிடுவாள். பாயைத் தரையில் விரித்து அதன்மேல் ஒரு கம்பளி இதுதான் அவளது படுக்கை. அதன்மீது அமர்ந்து பண்டைக்காலப் புனித மங்கையரின் புனிதப் பெயர்களை உச்சரிப்பாள், பண்டைய முனிவர்களை வணங்குவாள். மனிதகுலம் அனைத்திற்கும் புகலிடமான நாராயணன், கருணையே வடிவான சிவபெருமான், உலகைக் காப்பவளான தாரா இவர்களின் புனித நாமங்களை உச்சரிப் பாள். அனைத்திற்கும் மேலாக, உலகத்திற்குப் போதனைகள் செய்யவும், உலகைக் காப்பதற்காக மாடு மேய்க்கும் கோபால னாக வந்தவனும், அவளுக்கு மிகவும் பிடித்தவனுமான கண்ணனை மனமுருகிப் பிரார்த்திப்பாள். தன் கணவனையும் கோபாலனையும் அடைவதற்கான நேரம் ஒவ்வொரு நாளாகக் குறைந்து வருவதாக எண்ணி, தினமும் மகிழ்வாள்.

அருகில் ஓடிய நதியில், பொழுது விடியும் முன்பே நீராடு வாள். தண்ணீர் தன் உடம்பை சுத்தப்படுத்துவதுபோல், கண்ணனின் அருள் தன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்வாள். துவைத்த வெள்ளை ஆடைகளை அணிவாள். மலர்களைப் பறித்து, வட்டக் கல்லில் சந்தனம் அரைத்து, நறுமணம் சேர்க்கப்பட்ட துளசி இலை களை எடுத்துக்கொண்டு பூஜைக்கு என்றே குடிசையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சிறு அறைக்குள் நுழைவாள். இந்த அறை யில்தான் அவள் பாலகோபாலனை வைத்திருந்தாள். மரத்தால் ஆன ஒரு சிறிய பீடத்தின்மீது ஓர் அழகிய மெத்தை பரப்பி, ஒரு பட்டு விதானத்தின்கீழ் பாலகிருஷ்ணனின் வெண்கலத் திருவுருவத்தை எழுந்தருளச் செய்திருந்தாள். அந்தத் திருவுருவம் மலர்களால் ஏறக்குறைய மறைக்கப்பட்டிருந்தது.

அவளுடைய தாயுள்ளம் இறைவனை ஒரு குழந்தையாகப் பார்ப்பதில்தான் திருப்தியுற்றது. வேதங்கள் கூறுகின்ற உருவ மற்ற, எல்லையற்ற, குணங்களைக் கடந்த இறைவனைப்பற்றி கற்றறிவு மிக்கவரான அவளது கணவர் பலமுறை அவளுக்குக் கூறியிருக்கிறார். அவர் சொல்வதை அவள் கவனமாகக் கேட் பாள். ஆனால் முடிவில் பயன் என்னவோ ஒன்றுதான்வேதங்களில் கூறப்பட்டிருப்பது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்; ஆனால் ஐயோ, அந்தக் கடவுள்-லட்சியம் மிகவும் பெரியது, மிகவும் தூரத்தில் இருப்பது; அவளோ ஒரு சாதாரண மான பாமரப் பெண். அது மட்டுமல்ல, ‘எந்த உருவில் ஒருவன் என்னைத் தேடுகிறானோ, அந்த உருவில் நான் அவனை அடை கிறேன். ஏனெனில் நான் வகுத்த பாதைகளில்தான் மனித இனம் சென்று கொண்டிருக்கிறது” என்றும் சொல்லப்பட் டிருக்கிறதே! இது அவளுக்குப் போதும். இதற்குமேல் அவள் எதுவும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அதனால் அவ ளுடைய பக்தி, அன்பு, நம்பிக்கை எல்லாம் அந்தப் பால கோபாலன் மீதுதான் இருந்தது. அவள் கண்களால் பார்க்கக் கூடிய அந்த வெண்கலத் திருவுருவின் மீதுதான் அவளது இதயம் பதிந்திருந்தது. ‘ரத்தமும் சதையும் உள்ள ஒருவருக்கு நீ எப்படி அன்புடனும் தூய்மையுடனும் தொண்டு செய்வாயோ, அவ்வாறே எனக்குச் செய். நான் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று பகவான் கூறியிருப்பதையும் அவள் கேட்டிருக்கிறாள். ஆகவே தலைவனுக்கோ, அன்பிற்குரிய குருவுக்கோ, அல்லது தன் கண்ணின் மணியெனக் கருதும் தன் ஒரே மகனுக்கோ எப்படித் தொண்டு செய்வாளோ அதேபோல் அந்த விக்கிரத்திற்குச் சேவை செய்தாள்.

அந்த விக்கிரகத்தை நீராட்டி, உடையுடுத்தி, தூபம் காட்டு வாள். நைவேத்தியத்திற்கு?-ஓ அவள் மிகவும் ஏழை! தன் கணவர் புத்தகங்களிலிருந்து படித்துக் காட்டியதைக் கண்களில் நீர்மல்க நினைத்துக் கொள்வாள்: ‘இலைகளோ, மலர்களோ, பழங்களோ, தண்ணீரோ எதுவானாலும் அன்புடன் அளிப் பதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.” எனவே அவள் அளித்தாள். எதை?-‘உனக்காக உலகத்து மலர்கள் அனைத்தும் பூத்துக் குலுங்குகின்றன, இருந்தாலும் எனது இந்தச் சாதாரண மலர்களை ஏற்றுக்கொள். உலகிற்கே உணவு அளித்துக் காக்கின்ற நீ நான் தருகின்ற இந்த எளிய பழங்களை ஏற்றுக்கொள். நான் சாதாரணமானவள், பாமரப் பெண். என் தெய்வமே, என் கோபாலா, என் குழந்தாய், உன்னை எப்படி அணுகுவது, எப்படி வழிபடுவது என்று எனக்குத் தெரிய வில்லை . என் வழிபாடு பரிசுத்தமானதாக இருக்கட்டும். உன்மீது எனக்குள்ள அன்பு சுயநலம் அற்றதாக இருக்கட்டும். இந்த வழிபாட்டினால் ஏதாவது புண்ணியம் உண்டு என்றால் அது உன்னையே அடையட்டும். எதையும் பிரதிபலனாகக் கேட்காத அன்பு, அன்புக்காகவே உள்ள அன்பு, அதை எனக்கு அருள்’ என்று வேண்டிக் கொள்வாள். ஒருவேளை காலையில் பிச்சைக் காக வீட்டிற்கு வந்த துறவி, சிறிய அந்த முற்றத்தில் நின்று இப்படித்தான் பாடிச் சென்றாரோ?–

மனிதா! உன் அறிவை நான் மதிக்கவில்லை,
உன் அன்பைக் கண்டே அஞ்சுகிறேன்.
என் அரியணையை அசைப்பது உன் அன்பே,
மனிதனைப்போல் கடவுளைக்
கண்ணீர் உகுக்கச் செய்வது அந்த அன்பே.
உருவம் இல்லாதவனான, என்றும் சுதந்திரமான,
அனைவருக்கும் தலைவனான இறைவனையே
மனிதனாகத் தோன்றச் செய்து
உன்னுடன் விளையாடிக் களிக்கவும் வாழவும்
வைத்தது அன்பே.
பிருந்தாவனத்தின் ஆயர்கள் என்ன கற்றார்கள்?
பால்கறக்கும் கோபியருக்கு எந்த விஞ்ஞானம் தெரியும்?
அவர்கள் அன்பு செய்தார்கள், என்னை வாங்கினார்கள்.
தெய்வ கோபாலனாகிய அந்த இறைவனில் அவள் தன் மகன் கோபாலனைக் கண்டாள், உலகச் சூழ்நிலையில் அவளது ஆன்மா ஏதோ எந்திரம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு தெய்வீக உலகிலேயே அவள் வாழ்ந்தது போலிருந்தது. உலகப் பொருட்களிலிருந்து பறந்து சென்றுவிட அவள் தயாராக இருந்தாள்; மகனிடம் வைத்த அன்புதான் நங்கூரம்போல் அதைத் தடுத்து வைத்திருந்தது. உலக இன்பங்கள், அன்பு எல்லாவற்றையும் சொரிவதற்கு அவன் ஒருவனே இருந்தான். அவளது செயல்கள், எண்ணங்கள், இன்பங்கள், ஏன், அவளது வாழ்க்கை என்று எல்லாமே அவனுக்காகவே இருந்தன; அது தான் அவளை இந்த வாழ்க்கையுடன் கட்டி வைத்திருந்தது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்தக் குழந்தை வளர்வதை ஒரு தாய்க்கே உரிய அக்கறையுடன் சில ஆண்டுகள்வரை கவனித்து வந்தாள். அவன் பள்ளி செல்லும் வயது வந்தபோது அதற்கான பொருட்களைச் சேகரிப்பதற் காகப் பல மாதங்கள் அரும்பாடுபட்டாள். அவனுக்குத் தேவை யானவை மிகச் சிலவே. ஒரு மண் விளக்கில் கொஞ்சம் எண்ணெயை விட்டு, அதில் ஒரு திரியை ஏற்றி, அதன் வெளிச்சத்தில் நூல்களைப் படித்துக்கொண்டே நிம்மதியாக வாழ்க்கையைக் கழிக்கின்ற மக்கள் உள்ள நாட்டில், ஒரு கோரைப்பாய்தான் வீட்டின் மேஜை நாற்காலி அனைத்துமாக உள்ள நாட்டில் ஒரு மாணவனின் தேவை மிகக் குறைவு. இருந்தும் அவற்றை வாங்குவதற்கு அந்த ஏழைத் தாய் பல நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

ஒரு புதிய பருத்தி வேட்டி, ஒரு பருத்தித் துண்டு, அவன் எழுதுவதற்கு வேண்டிய ஓலைக் கற்றை, நாணல் எழுது கோல்கள், வைத்து எழுத ஒரு சிறிய தடுப்பு அதை அவன் சுற்றி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு செல்வான்-இவற்றை வாங்குவதற்கு அவள் எத்தனையோ பாடுபட வேண்டியிருந்தது! ஒரு நல்ல நாளில் கோபாலன் முதன்முதலாக எழுத்துக்களை எழுத ஆரம்பித்தபோது அவள் எவ்வளவு மகிழ்ச்சியடைந் திருப்பாள் என்பதை ஒரு தாயின் உள்ளம்தான் அறிய முடியும். ஆனால் இன்று அவள் மனத்தில் ஒருவித இருள் படர்ந்தது. கோபாலன் காட்டுவழியே தனியாகச் செல்ல பயப்படுகிறான். தான் ஒரு விதவையாக, ஏழையாக தனியாக இருப்பதைப்பற்றி, அதற்கு முன்பு அவள் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஒரு கணம் அவளுக்கு எல்லாம் இருளாக இருந்தது. ஆனால் ‘மற்ற எல்லா எண்ணங்களையும் விட்டு, என்னையே நம்பியிருப்பவர் களுக்கு வேண்டியதை நானே சுமந்து செல்கிறேன்’ என்ற பகவானின் மாறாத வாக்குறுதியை நினைத்துக் கொண்டாள். அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். பயப்படத் தேவையில்லை என்றும், காட்டில் தன்னுடைய இன்னொரு மகன் கோபாலன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்றும், காட்டில் போக அவனுக்குப் பயமாக இருந்தால் அந்த கோபாலனைத் துணைக்குக் கூப்பிடும் படியும் சொன்னாள். கோபாலனும் தாயின் சொல்லை அப்படியே நம்பினான்.

அன்று பள்ளியிலிருந்து காட்டு வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தான் கோபாலன். அச்சம் தோன்றியதும் மாடு மேய்க்கின்ற தன் சகோதரனான கோபாலனைக் கூப்பிட்டான்: ‘கோபாலண்ணா , நீ இங்கே இருக்கிறாயா? இங்குதான் இருக்கிறாய் என்றும், நான் உன்னைக் கூப்பிட வேண்டு மென்றும் அம்மா சொன்னாள். தனியாக இருப்பது எனக்குப் பயமாக இருக்கிறது’ என்றான். அப்பொழுது மரங்களுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது: ‘தம்பி, பயப்படாதே. நான் இங்குதான் இருக்கிறேன். பயமின்றி வீட்டுக்குப் போ.’

ஒவ்வொரு நாளும் கோபாலன் கூப்பிடுவான், அந்தக் குரலும் பதில் அளிக்கும்: அதைக் கேட்ட தாய்க்கு ஆச்சரியம் தாளவில்லை. ‘அடுத்தமுறை உன் அண்ணனை நீ பார்க்க விரும்புவதாகச் சொல்’ என்றாள்.

அடுத்த நாள் காட்டு வழியாகச் செல்லும்போது கோபாலன் அண்ணனைக் கூப்பிட்டான். வழக்கம்போல் குரல் கேட்டது. ஆனால் சிறுவன் அவனைப் பார்க்க வேண்டுமென்று சொன்னான். ‘தம்பி, நான் இன்று வேலையாக இருக்கிறேன். வர இயலாது’ என்றது அந்தக் குரல். ஆனால் சிறுவன் பிடிவாதம் பிடிக்கவே, மர நிழலிலிருந்து ஒரு சிறுவன் வெளியே வந்தான். அவன் மாடு மேய்ப்பவர்களைப்போல் உடை உடுத்தியிருந்தான். தலையில் ஒரு சிறு கிரீடம் இருந்தது. அதில் மயில் பீலிகள் செருகப்பட்டிருந்தன. அவன் கையில் மாடு மேய்ப்பவர்கள் வைத்திருக்கும் ஒரு புல்லாங்குழல் இருந்தது.

இருவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை . மரங்களில் ஏறு வதும், பழங்களையும் பூக்களையும் பறிப்பதுமாக அந்த விதவை யின் கோபாலனும், காட்டில் வாழ்ந்த கோபாலனும் மணிக் கணக்காகக் காட்டில் விளையாடினார்கள். பள்ளி செல்லும் நேரமாகியது. விதவையின் கோபாலன் மனமின்றிப் பள்ளி சென்றான், அவனது மனம் பாடங்களில் செல்லவில்லை , எப் போது காட்டிற்குத் திரும்பி அண்ணனுடன் விளையாடுவோம் என்பதிலேயே நாட்டமாக இருந்தான் அவன்.

மாதங்கள் பல சென்றன. காட்டில் நடப்பதைப்பற்றி ஏழைத் தாய் ஒவ்வொரு நாளும் கேட்பாள், அந்தத் தெய்வீகக் கருணையில் இன்புறுவாள். அந்த மகிழ்ச்சியில் தன் வறுமை, விதவைக் கோலம் எல்லாவற்றையும் மறப்பாள். தன் இன்னல் களுக்கு ஓராயிரம் வாழ்த்துக் கூறுவாள்.

ஒருநாள் ஆசிரியர் தம் முன்னோர்களுக்குச் சில சடங்குகள் செய்ய வேண்டியிருந்தது. கிராமத்தின் அந்த ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்து குறிப்பிட்ட சம்பளம் எதுவும் வாங்கு வதில்லை. இத்தகைய நிகழ்ச்சிகளில் மாணவர்கள் அளிக்கும் காணிக்கைகளை நம்பி வாழ்ந்தனர். பொருளாகவோ பண மாகவோ ஒவ்வொரு மாணவனும் கொண்டுவந்து கொடுத்தான். ஆனால் ஆதரவற்ற அந்த விதவையின் மகனான கோபாலனோ? மற்ற மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளைக் குறிப்பிட்டுப் பேசும்போது அவனைப் பார்த்து இகழ்ச்சியாகப் புன்முறுவல் செய்தார்கள்.

துயரம் தாங்காத கோபாலன், ஆசிரியருக்கு ஏதாவது காணிக்கை கொடுக்கும்படி அன்றிரவு தாயைக் கேட்டான். ஆனால் பாவம், அவளிடம் ஒன்றுமில்லை. ஆனால் அதுவரை செய்துகொண்டிருந்த காரியத்தையே அன்றும் செய்வது என்று தீர்மானித்தாள், அதுதான் மாடு மேய்க்கும் கோபாலனை நம்புவது. ஆகவே ஆசிரியருக்கான காணிக்கையைக் கோபாலண்ணனிடம் கேட்கும்படிச் சொன்னாள்.

அடுத்த நாள் கோபாலன் வழக்கம்போல் காட்டில் அண்ணனைச் சந்தித்துச் சிறிது நேரம் விளையாடிய பிறகு, தன் மனத்தில் இருந்த துக்கத்தைத் தெரிவித்து, ஆசிரியருக்குக் கொடுக்க ஏதாவது காணிக்கை தரும்படிக் கேட்டான். ‘தம்பி, கோபாலா, நான் மாடு மேய்ப்பவன். என்னிடம் பணம் இல்லை. ஆகவே ஏழையின் அன்பளிப்பான பாலேடு நிறைந்த இந்தப் பாத்திரத்தைக் கொண்டுபோய் உன் ஆசிரியருக்குக் கொடு’ என்றான்.

கோபாலனுக்குத் தன் ஆசிரியருக்குக் கொடுக்க ஏதோ கிடைத்துவிட்டதே என்னும் மகிழ்ச்சி. அது மட்டுமா? அது தன் கோபாலண்ணன் கொடுத்ததாயிற்றே! கோபாலன் ஆசிரியரின் வீட்டிற்கு விரைந்தான். அங்கு ஆசிரியருக்குக் காணிக்கைகள் கொடுப்பதற்காகக் கூட்டமாக நின்றுகொண் டிருந்த மாணவர்களுக்குப் பின்னால் அவனும் போய் ஆவலாக நின்றான். அவர்கள் பல்வேறு வகையான காணிக்கைகள் கொண்டு வந்திருந்தார்கள். இந்த அனாதைச் சிறுவன் என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று பார்க்கக்கூட அவர்கள் கவலைப்படவில்லை.

அவர்கள் அலட்சியம் செய்தது கோபாலனுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. அவன் கண்களில் கண்ணீர் மல்கியது. அப்பொழுது அதிர்ஷ்டவசமாக ஆசிரியர் அவனைப் பார்த் தார். அவன் கையில் இருந்த சிறு பாத்திரத்தை வாங்கி அதி லிருந்த பாலேட்டை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டினார். அப்போது ஆச்சரியம் நிகழ்ந்தது; அந்தப் பெரிய பாத்திரம் முழுவதும் பாலாடைக் கட்டி நிரம்பி வழிந்தது. அதைவிடப் பெரிய பாத்திரத்தில் கொட்டினார், அந்தப் பெரிய பாத்திரமும் நிரம்பி வழிந்தது. இப்படியே அது அதிகரித்துக்கொண்டே சென்றது.

எல்லோரும் திகைத்து நின்றனர். ஆசிரியர் கோபாலனைத் தழுவிக்கொண்டு, அந்தப் பாலேடு அவனுக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்டார். கோபாலன் தன் அண்ணனைப் பற்றிச் சொன்னான். கூப்பிட்டால் அவன் வருவதையும், தன்னோடு விளையாடுவதையும், முடிவில் அந்தப் பாலேட்டுப் பாத்திரத்தைத் தந்ததையும் பற்றியெல்லாம் கூறினான்.

தன்னைக் காட்டிற்கு அழைத்துச் சென்று அவனுடைய அண்ணனைக் காட்டுமாறு ஆசிரியர் கேட்டுக் கொண்டார். கோபாலனும் மிக்க மகிழ்ச்சியோடு ஆசிரியரை அழைத்துச் சென்றான்.

காட்டில் சென்று அண்ணனை அழைத்தான். ஆனால் அன்று அந்தக் குரல் கேட்கவில்லை. திரும்பத்திரும்ப அழைத் தான், பதில் இல்லை. தான் பொய் சொல்வதாக ஆசிரியர் நினைத்துக் கொள்வார், ஆகவே, அண்ணன் பேசித்தான் ஆக வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டான். அப்போது எங்கோ தொலைதூரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது:–

‘கோபாலா, உன் தாயின் அன்பும் உன் அன்பும் உங்கள் நம்பிக்கையும் என்னை உன் முன்னால் கொண்டுவந்தது. உன் ஆசிரியர் என்னைக் காண இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும் என்று அவருக்குச் சொல்’ என்றது அந்தக் குரல்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 24. கோபாலன்

23. வில்வ மங்களர்

வில்வ மங்களர்

இந்திய நூல்களில் ‘பக்த விஜயம்’ என்பதும் ஒன்று. அதில் வருகின்ற கதை இது. கிராமம் ஒன்றில் ஒரு பிராமண இளைஞன் வசித்து வந்தான். அவன் மற்றொரு கிராமத்திலிருந்த ஒழுக்கம் தவறிய ஒரு பெண்ணிடம் காதல் கொண்டான். இரண்டு கிராமங்களுக்கும் இடையில் பெரிய ஆறு ஒன்று இருந்தது. ஒவ்வொரு நாளும் சிறு படகின் உதவியால் ஆற்றைக் கடந்து அவன் அந்தப் பெண்ணிடம் போவது வழக்கம். ஒருநாள் அவன் தந்தையின் ஈமக்கடன்களைச் செய்ய வேண்டியிருந்தது. அவளிடம் போக வேண்டும் என்று துடித்தாலும் அவனால் போக முடியவில்லை. கிரியைகள் நடைபெற்றே ஆக வேண்டும். இந்து சமுதாயத்தில் இவை மிகவும் முக்கியமானவை. உள்ளம் கலங்கிப் புலம்புவதைத் தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை .

 • கிரியைகள் முடிந்தபோது இரவாகியது. இரவுடன் சேர்ந்தே மேகம் எழுந்தது, இடித்து முழங்கியது, பெருமழை பொழிந்தது, ஆற்றில் வெள்ளம் பேரலைகளுடன் பெருகியது. அப்போது ஆற்றைக் கடப்பது மிகவும் ஆபத்து. இருந்தாலும் விடாமல் அவன் ஆற்றின் கரையை அடைந்தான். அங்கே படகு எதுவும் இல்லை. படகோட்டிகள் ஆற்றைக் கடக்க அஞ்சினார்கள். அவனோ அவளிடம் செல்வதற்குத் துடித்தான். அவள்மீது கொண்ட காதலால் பைத்தியமாகி விட்டான். அந்த வெள்ளத்தில் ஒரு கட்டை மிதந்து வந்தது. அவ்வளவு தான், அதைப் பற்றிக்கொண்டு அதன் உதவியால் நீந்தி மறு கரையை அடைந்தான். அதனைக் கரையில் எறிந்துவிட்டு அவளது வீட்டிற்குச் சென்றான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. கதவைத் தட்டினான். காற்று சீறியது, எனவே அவன் கதவைத் தட்டிய சத்தம் யார் காதிலும் விழவில்லை . எனவே சுவர் ஏறி உள்ளே குதிக்க எண்ணி வீட்டைச் சுற்றிச்சுற்றி வந்தான். அப் போது சுவரிலிருந்து ஒரு கயிறு தொங்குவதைக் கண்டான். ‘நான் ஏறி வருவதற்காகவே என் காதலி இந்தக் கயிற்றைத் தொங்கவிட்டிருக்கிறாள் போலும்’ என்று எண்ணிக் கொண்டு அதைப் பற்றிக்கொண்டு சுவர்மீது ஏறி மறு பக்கத்தை அடைந்தான். ஆனால் கால்தவறி விழுந்துவிட்டான். அதனால் எழுந்த ஓசையில் வீட்டிலுள்ளவர்கள் விழித்துக் கொண்டார்கள்.

அந்தப் பெண்ணும் வெளியே வந்து அங்கே அவன் சோர் வுற்று வீழ்ந்து கிடப்பதைக் கண்டாள். அவனது சோர்வைத் தெளிவித்தாள். அவனது உடம்பில் துர்நாற்றம் வீசுவதைக் கண்ட அவள் கேட்டாள்:

‘உனக்கு என்ன நேர்ந்தது? உன் உடம்பில் ஏன் துர்நாற்றம் அடிக்கிறது? நீ எப்படி வீட்டினுள் வந்தாய்?’ அதற்கு அவன், ‘என் அன்பே, நீ அங்கே கயிற்றைத் தொங்கவிட்டிருந்தாய் அல்லவா, அதன்மூலம் நான் வந்தேன்’ என்றான்.

அவள் புன்னகையுடன் கூறினாள்: ‘அன்பும் இல்லை , காதலும் இல்லை, நாங்கள் பணத்திற்காக உள்ளோம். நான் உனக்காகக் கயிற்றைத் தொங்கவிட்டிருந்ததாக எண்ணினால், நீ ஒரு முட்டாள். அது சரி, எவ்வாறு ஆற்றைக் கடந்தாய்?’ ‘ஒரு மரக்கட்டையை பற்றிக்கொண்டேன்.’ என்று கூறினான். ‘நாம் சென்று பார்க்கலாம்’ என்றாள் அந்தப் பெண்.

கயிறு என்று அவன் கருதியது எது? ஒரு முறை கடித்தாலே மரணத்தை விளைவிக்கக்கூடிய கொடிய விஷப் பாம்பு. அது தன் தலையை உள்ளே வைத்துப் புற்றுக்குள் நுழையும்போது, அவன் கயிறு என்று கருதி அதன் வாலைப் பற்றினான். காதல் பித்து அவனை அவ்வாறு செய்யத் தூண்டியது. பாம்பு தலையை உள்ளேயும் உடலை வெளியேயும் வைத்திருக்கும்போது அழுந்தப் பற்றியதால் அது தன் தலையை வெளியே எடுக்க முடியவில்லை . எனவே அதன் உதவியால் சுவரேறினான். ஆனால் அவன் பற்றியதன் அழுத்தம் அந்தப் பாம்பைக் கொன்றுவிட்டது.

‘கட்டை எங்கே கிடைத்தது?’ என்று கேட்டாள் அவள்.

‘ஆற்றில் மிதந்து வந்தது’ என்று கூறினான் அவன். அந்தக் கட்டை ஓர் அழுகிய பிணம். ஆறு அதனைக் கரையில் அடித்திருந்தது. அதையே அவன் கட்டை என்று தவறாகக் கருதியிருந்தான். அதுதான் அவன் உடலிலிருந்து வீசிய துர் நாற்றத்திற்குக் காரணம். அவள் அவனைப் பார்த்து, ‘எனக்குக் காதலில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை. நாங்கள் அதை நம்பவும் மாட்டோம். இது காதல் அல்ல என்பதற்கு இறைவன் என்னை மன்னிக்கட்டும். எங்களுக்குக் காதல் என்றால் என்ன வென்று தெரியாது. ஆனால் நண்பரே, என்னைப் போன்ற ஒரு பெண்ணிடம் ஏன் உங்கள் இதயத்தைப் பறிகொடுக்க வேண்டும்? ஏன் அதை இறைவனுக்குத் தரக் கூடாது? அவ்வாறு தந்தால் நிறைவு பெறலாமே?’ என்று கூறினாள்.

அவள் சொன்னது அவன் மனத்தில் இடி விழுந்ததுபோல் ஆயிற்று. அப்பாலுள்ள ஒன்றைப்பற்றிய ஒளியொன்று அவனுள் சிறிது தோன்றியது. ‘கடவுள் என்று ஒருவர் இருக் கிறாரா?’ என்று கேட்டான் அவன். ‘ஆம், ஆம் என் நண்பரே, கடவுள் இருக்கிறார்’ என்றாள் அவள்.

அவன் திரும்பினான். ஒரு காட்டை அடைந்தான், அழுதான், பிரார்த்தித்தான்: ‘என் இறைவா, எனக்கு நீ வேண்டும். என் அன்பு வெள்ளம் சிறிய மனிதர்களிடம் தங்க முடியாது. எனது ஆழ்ந்த அன்பு என்னும் ஆறு சென்று விழக் கூடிய அன்புக் கடல் எனக்கு வேண்டும். கடும் வேகத்தில் புரண்டு வருகின்ற எனது அன்பாகிய ஆறு சிறு குட்டைகளில் புக முடியாது. எல்லையற்ற பெருங்கடல்தான் அதற்கு வேண்டும். நீ இருக்கிறாய், என்னிடம் வா.’

சில ஆண்டுகள் அவன் காட்டில் தங்கினான். தான் வெற்றி பெற்று விட்டதாகக் கருதிய அவன் துறவியானான். பிறகு நகரங்களுக்குச் சென்றான்.

ஒருநாள் ஓர் ஆற்றின் கரையில் அமர்ந்திருந்தான். அப் போது அந்த நகரத்து வணிகனின் மனைவியான அழகிய பெண்ணொருத்தி தனது வேலைக்காரர்களுடன் அந்த வழி யாகச் சென்றாள். அவளைக் கண்டதுதான் தாமதம், அவ னுள்ளிருந்த பழைய மனிதன் மறுபடியும் வீறுபெற்றான்; அழகிய முகம் மறுபடியும் அவனை வசீகரித்துவிட்டது. எழுந்து அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அவளது வீடு வரை சென்றான். அப்போது அவளது கணவனும் வந்து சேர்ந்தான், காவியுடையில் இருந்த துறவியை நோக்கி, ‘வாருங்கள் ஐயா, நான் தங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.

‘கொடுத்தற்கரிய ஒன்றை உன்னிடம் கேட்பேன்.’

‘எது வேண்டுமானாலும் கேளுங்கள். நான் இல்லறத்தான், யார் எதைக் கேட்டாலும் கொடுக்கத் தயாராக உள்ளேன்.”

‘நான் உன் மனைவியைக் காண விரும்புகிறேன்’

‘கடவுளே இதென்ன? நான் தூயவன், என் மனைவியும் தூயவள். கடவுள்தான் எல்லோரையும் காப்பவர். உள்ளே வாருங்கள்.’

துறவி உள்ளே வந்தான். கணவன் அவனுக்குத் தன் மனைவியை அறிமுகப்படுத்தினான். ‘நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டாள் அவள். துறவி நாற்புறமும் நோக்கிவிட்டு பிறகு கூறினான்: ‘அம்மா, தாங்கள் தலையில் வைத்திருக்கும் இரண்டு ஊசிகளைத் தருவீர்களா?’

அவள் அவற்றைத் தந்தாள். துறவி அந்த ஊசிகளை வாங்கித் திடீரெனத் தன் கண்களில் செருகியவாறே, ‘தொலையுங்கள் அயோக்கியர்களே, இனி நீங்கள் எதையும் காண முடியாது. நீங்கள் பார்ப்பதானால் பிருந்தாவனச் சோலை இடையனை ஆன்மீகக் கண்களால் காணுங்கள்’ என்று கூறி னான். அவனது கண்கள் இரண்டும் குருடாயின. வாகம் க மீண்டும் அவன் காட்டிற்குத் திரும்பினான். அங்கே மறு படியும் அழுதான், அழுதான், அழுதுகொண்டே இருந்தான். மனிதனின் பக்திப் பெருக்கே உண்மையை உணரப் போராடு கிறது. இறுதியில் அவன் வெற்றி பெற்றான். தன் அன்பாகிய ஆற்றைத் தக்க வழியில் திருப்பினான்; அது அந்த இடையனை அடைந்தது.

அவர், வில்வமங்களர், கண்ணனின் வடிவில் கடவுளைக் கண்டதாக கூறப்படுகிறது. புறக் கண்களை இழந்ததற்காக அவர் ஒருமுறை வருந்தினார்; ஏனெனில் அகக் கண்களால் மட்டும்தானே அவரால் கடவுளைக் காண முடிந்தது! அவர் சில பக்திப் பாடல்களும் எழுதியுள்ளார். எல்லா சம்ஸ்கிருத நூல்களிலும் அதன் ஆசிரியர்கள் முதலில் தங்கள் குருவிற்கு வணக்கம் செய்வது வழக்கம். வில்வமங்களர் அந்தப் பெண்ணையே முதற்குருவாக வணங்கினார்

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 23. வில்வ மங்களர் 

22. பிரகலாதன்

பிரகலாதன்

கலிபோர்னியா, பிப்ரவரி 1900

இரணியகசிபு என்பவன் அசுரர்களின் அரசன். தேவர்கள் பிறந்த அதே பெற்றோருக்குத்தான் அசுரர்களும் பிறந்தனர். ஆனாலும் எப்போதும் அவர்கள் தேவர்களுடன் சண்டை யிட்டுக் கொண்டிருந்தார்கள். மனிதர்கள் அளிக்கின்ற ஆஹுதி களிலும் நிவேதனங்களிலும் அசுரர்களுக்குப் பங்கில்லை; உலகை ஆள்வதிலும், அதை நடத்திச் செல்வதிலும் உரிமை இல்லை. சில நேரங்களில், அவர்கள் வலிமை பெற்று தேவர் களைத் தேவலோகத்திலிருந்து விரட்டிவிட்டு, அவர்களுடைய அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வார்கள். அப்போது தேவர்கள் எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய திருமாலைப் பிரார்த்திப்பார்கள். அவர்களின் துன்பத்தை அவர் போக்கி யருள்வார். அசுரர்கள் துரத்தியடிக்கப்பட்டு, தேவர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்வார்கள்.

அசுரர்களின் அரசனான இரணியகசிபு தன் முறை வந்ததும், தன் பங்காளிகளான தேவர்களை வென்று அரியாசனத்தில் அமர்ந்தான்; மனிதர்களுள் பிராணிகளும் வசிக்கின்ற நடு உலகம், தேவர்களும் தேவர்களைப் போன்றவர் களும் வசிக்கின்ற தேவலோகம், அசுரர்கள் வசிக்கின்ற பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் கைப்பற்றி ஆண்டான். தானே உலகனைத்திற்கும் தெய்வம், தன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வமும் இல்லை, எல்லாம் வல்லவரான திருமாலை யாரும் ஒருபோதும் எங்கேயும் வணங்கக் கூடாது, அனைவரும் தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்றெல்லாம் உத்தர விட்டான்.

இரணியகசிபுவிற்குப் பிரகலாதன் என்றொரு மகன் இருந்தான். இந்தப் பிரகலாதன் சிறு வயதிலிருந்தே இறைவனிடம் பக்தி கொண்டவனாக இருந்தான். உலகத் திலிருந்து தான் விரட்ட விரும்பிய தீமை தன் குடும்பத்திலேயே முளைக்குமோ என்று பயந்தான் இரணியகசிபு. எனவே கண்டிப்பு மிக்கவர்களான சண்டன், அமர்க்கன் என்ற இரண்டு ஆசிரியர்களைத் தன் மகனுக்குக் கல்வி கற்பிக்க நியமித்தான்; திருமால் என்ற பெயர்கூட பிரகலாதனின் காதில் விழக் கூடாது என்று கடுமையான கட்டளையும் இட்டான். அந்த ஆசிரியர்கள் அவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவன் வயதொத்த மற்ற சிறுவர்களுடன் படிக்க ஏற்பாடு செய்தனர்.

பிரகலாதனோ பாடங்கள் படிப்பதை விட்டுவிட்டு, திருமாலை எப்படி வழிபடுவது என்று மற்ற பிள்ளைகளுக்குக் கற்பிக்க ஆரம்பித்தான். இதைக் கண்ட ஆசிரியர்கள் பயந்தார்கள். வல்லமை மிக்கவனான இரணியகசிபுவின் கோபம் தங்கள் மீது பாயுமோ என்று நடுங்கிய அவர்கள், பிரகலாதனைத் தடுக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் மூச்சுவிடாமல் எப்படி இருக்க முடியாதோ, அவ்வாறே பிரகலாதனால் திருமாலை வழிபடாமலும் அவரைப்பற்றிப் பேசாமலும் இருக்க முடியவில்லை. தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆசிரியர்கள் இரணியகசிபுவிடம் சென்று, அவரது மகன், தான் மட்டும் திருமாலை வழிபடுவது போதாதென்று மற்ற சிறுவர்களையும் இறை வழிபாட்டில் ஈடுபடுத்தி அவர்களையும் கெடுக்கிறான் என்று சொன்னார்கள்.

இதைக் கேட்டு மன்னன் கோபம் தாளாமல் கொதித்தான், பிரகலாதனை அழைத்துவரச் செய்தான். நயமாக எடுத்துக்கூறி, திருமாலை வழிபடுவதை விட்டுவிடுமாறு செய்ய முயன்றான். அரசனாகிய தானே வழிபடுவதற்குரிய ஒரே கடவுள் என்று அறிவுறுத்தினான். ஆனால் பயன் இல்லை. பிரபஞ்சத்தின் தலைவரும் எங்கும் நிறைந்த இறைவனுமான திருமால்தான் வழிபடுவதற்குரிய ஒரே பரம்பொருள் என்றும், அந்தத் திருமால் விரும்பும் வரையில்தான் இரண்யகசிபுகூட அரசனாக இருக்க முடியும் என்றும் மீண்டும்மீண்டும் கூறினான் பிரகலாதன். அரசனின் கோபம் எல்லை மீறியது. எனவே பிரகலாதனை உடனே கொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டான். அசுரர்கள் கூர்மையான ஆயுதங்களால் அவனைக் குத்தினார்கள். ஆனால் பிரகலாதனின் மனம் திருமாலிடம் நிலைத்திருந்ததால் அவன் வலியை உணரவில்லை. பக்க

அவனது தந்தையான அரசன் பயந்தான், அசுரர்களுக்கே உரிய கொடிய வெறி அவனைப் பற்றிக்கொண்டது. அந்தச் சிறுவனைக் கொல்வதற்குப் பல கொடுமையான முறைகளைக் கையாண்டான். யானையின் கால்களால் அவனை நசுக்கும்படி உத்தரவிட்டான். சீற்றம் கொண்டயானையால் அவனை நசுக்க முடியவில்லை, எப்படி அதனால் ஒரு இரும்புப் பாளத்தை நசுக்க முடியாததோ அப்படியே பிரகலாதனின் உடம்பையும் நசுக்க முடியவில்லை . அந்த முயற்சி பயனற்றுப் போனது. எனவே அவனைச் செங்குத்தான பாறையின் உச்சியிலிருந்து கீழே தள்ளும்படி உத்தரவிட்டான். அப்படியே செய்தார்கள். ஆனால் பிரகலாதனின் இதயத்தில் திருமால் குடிகொண்டிருந்த தால், எப்படி புல்லின்மீது ஒரு மலர் மென்மையாக விழுமோ அப்படித் தரையில் படிந்தான் அவன். நஞ்சு உண்ணக் கொடுத்தல், தீயிலிடுதல், பட்டினி போடுதல், கிணற்றில் தள்ளு தல், மாந்திரீகம் செய்தல் போன்ற பல வழிகள் ஒன்றன்பின் ஒன்றாக கையாளப்பட்டன. ஆனால் எதனாலும் பலன் இல்லை. யாருடைய இதயத்தில் திருமால் உறைகிறாரோ அவரை எதுவும் ஒன்றும் செய்ய இயலாது.

இறுதியில் பாதாள உலகிலிருந்து கொண்டு வரப்பட்டக் கொடிய பாம்புகளுடன் அவனைப் பிணைத்துக் கடலின் ஆழத்தில் இட்டு, அவன்மீது பெரிய பாறைகளைக் குவிக்குமாறு கட்டளையிட்டான் இரணியகசிபு. இதனால் உடனே இல்லா விட்டாலும் நாளடைவில் அவன் இறந்துவிடுவான் என்று நினைத்தான் அவன். எனவே அவனை அந்தக் கொடுமையான நிலையிலேயே விட்டு வைக்குமாறு உத்தரவிட்டான். ஆனால் பிரகலாதன் இந்த நிலைமையிலும், ‘புவன நாயகனே, எழில்மிகு திருமாலே உமக்கு நமஸ்காரம்!’ என்று தன் அன்பிற்குரிய திருமாலைத் தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டே இருந்தான். இவ்வாறு திருமாலைச் சிந்திப்பதும் தியானிப்பதுமாக இருந்த தால் திருமால் தனது பக்கத்திலேயே இருப்பதாக, இல்லை யில்லை, அவர் தனது ஆன்மாவிலேயே உறைவதாக உணர்ந் தான். இறுதியில், தானே திருமால், தானே அனைத்தும் ஆனவன், தானே எங்கும் நிறைந்தவன் என்பதை உணரத் தொடங்கினான்.

பிரகலாதன் இவ்வாறு உணர்ந்த உடனே பாம்புத் தளைகள் அறுந்தன, மலைகள் பொடியாயின. கடல் மேலே கிளம்பி அவனை மெல்ல அலைகளுக்கு மேலே தூக்கிச் சென்று பத்திர மாகக் கரைசேர்த்தது. பிரகலாதன் எழுந்து நின்றபோது தான் ஓர் அசுர குலத்தவன் என்பதை மறந்தான், மானிட உடல் கிடைக்கப் பெற்றான்; தானே உலகம், உலக சக்திகள் அனைத்தும் தன்னிடமிருந்தே வெளிப்படுகின்றன, இயற்கையில் உள்ள எதுவும் தனக்குத் தீங்கு விளைவிக்க முடியாது, தானே இயற்கையின் நாயகன் என்பதை உணர்ந்தான். இவ்வாறு இடையறாத இன்ப வெள்ளத்தில் காலம் கழிந்தது. பிறகு தனக்கு உடல் இருப்பதையும், தான் பிரகலாதன் என்பதையும் மெள்ளமெள்ள உணரத் தொடங்கினான். உடலுணர்வு வந்ததும், கடவுள் உள்ளும் புறமும் இருப்பதைக் கண்டான். அவனுக்கு எல்லாம் திருமாலாகவே தோன்றியது.

தன் எதிரியான திருமாலிடம் முழுமையான பக்திகொண்ட அந்தச் சிறுவனை ஒழிக்க தான் மேற்கொண்ட எல்லா முயற்சி களும் பயனற்றுவிட்டதைக் கண்டு இரணியகசிபு பயம் கொண் டான்; என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான். மீண்டும் அவனைத் தன்னிடம் அழைத்து, அவன் தன் அறிவுரையை ஏற்குமாறு செய்ய நயமாக முயன்றான். ஆனால் பிரகலாதன் அதே பதிலையே சொன்னான். இது சிறுவனின் குழந்தைத்தனம், வயது அதிகமாகும்போது, தக்கப் பயிற்சியால் அவன் சரியாகி விடுவான் என்று எண்ணி, மீண்டும் சண்டன் மற்றும் அமர்க்கனின் பொறுப்பில் அவனை ஒப்படைத்து, அரசனுக் குரிய கடமைகளை அவனுக்குக் கற்பிக்குமாறு கூறினான். ஆனால் இந்தப் போதனைகள் பிரகலாதனின் உள்ளத்தில் ஏறவில்லை . திருமாலிடம் பக்தி செய்யும் வழிமுறைகளைப் பள்ளித் தோழர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே அவன் தனது காலத்தைக் கழித்தான்.

இதைக் கேள்விப்பட்ட அவனது தந்தையின் கடுஞ்சீற்றம் சொல்லொணாததாகியது. மீண்டும் சிறுவனை அழைத்து, அவனைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினான், இயன்ற அளவு தரக்குறைவாகத் திருமாலை ஏசினான். பிரகலாதனோ, திருமாலே பிரபஞ்சம் அனைத்திற்கும் தலைவர், முதல் முடிவு அற்றவர், எல்லாம் வல்லவர், எங்கும் நிறைந்தவர், எனவே அவர் ஒருவர் மட்டுமே வழிபாட்டிற்கு உரியவர் என்று விடாப் பிடியாக மீண்டும்மீண்டும் கூறினான்.

இரணியகசிபு கோபத்தால் சீறினான். ‘தீயவனே, உன் திருமால் எங்கும் இருப்பவன் என்றால் ஏன் இங்கே, இந்தத் தூணில் இல்லை ?’ என்று கேட்டான். ‘அவர் அங்கும் இருக் கிறார்’ என்று பணிவுடன் சொன்னான் பிரகலாதன். ‘அப்படி யானால் அவன் உன்னைப் காப்பாற்றட்டும். இந்த வாளினால் உன்னைக் கொல்லப் போகிறேன்’ என்று கூறிக்கொண்டே கையில் வாளோடு பிரகலாதனிடம் விரைந்து வந்து, அந்தத் தூணில் பலமாக ஓங்கி வீசினான். உடனே பேரிடியை ஒத்த ஒரு சத்தம் கேட்டது. திருமால் தம்முடைய நரசிம்ம உருவத்தில், அதாவது பாதி மனிதன் பாதி சிங்க உருவத்தில் தூணிலிருந்து வெளிப்பட்டார். அங்கிருந்த அசுரர்கள் அஞ்சி நடுங்கி நாலா திசைகளிலும் ஓடினார்கள். இரணியகசிபு நெடுநேரம் வெறித் தனமாக அவருடன் போரிட்டான். இறுதியில் ஒடுக்கப்பட்டுக் கொலையுண்டான்.

தேவர்கள் விண்ணுலகிலிருந்து வந்து திருமாலைத் துதித்தார்கள். பிரகலாதன் அவரது திருப்பாதங்களில் வீழ்ந்து பணிந்தான்; மிக அழகிய பாடல்களால் அவரைப் போற்றினான். ‘பிரகலாதா, என் அருமைக் குழந்தாய்! உனக்கு என்ன வேண்டுமோ கேள்’ என்றார் எம்பெருமான். பிரகலாதன் உணர்ச்சியால் குரல் தழுதழுக்க, ‘பகவானே, நான் தங்களைத் தரிசித்துவிட்டேன். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? பூலோக, தேவலோக இன்பங்களைக் காட்டி என்னை மயக்காதீர்கள்’ என்று கேட்டான்.

‘ஏதாவது கேள், என் மகனே’ என்றார் நரசிம்மர். ‘அறிவிலிகள் உலகப் பொருட்களில் கொள்கின்ற தீவிரப் பற்றை நான் உங்கள்மீது கொள்ள அருள் புரிய வேண்டும். அந்த அன்பு, அன்பிற்காகவே தவிர வேறு எதற்காகவும் இருக்கக் கூடாது’ என்ற வரத்தைக் கேட்டான் பிரகலாதன்.

அப்பொழுது பகவான், ‘பிரகலாதா, என்னுடைய தீவிர பக்தர்கள் இந்த உலகிலும் சரி, மறு உலகிலும் சரி, எதற்கும் ஆசைப்படுவதில்லை. இருந்தும் இந்த யுகம் முடியும்வரையில் நீ இந்த உலகின் இன்பங்களை அனுபவி. என்னிடம் மனத்தைச் செலுத்தி, புண்ணியச் செயல்கள் செய். பிறகு உரிய காலத்தில் உன் உடல் வீழ்ந்ததும் என்னை அடையலாம்’ என்று கூறி பிரகலாதனை வாழ்த்தி மறைந்தார். பிறகு பிரம்மா முதலான தேவர்கள் பிரகலாதனை அசுரர்களின் அரியாசனத்தில் அமர்த்தி விட்டு, அவரவர் இடத்திற்குத் திரும்பினார்கள்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 22. பிரகலாதன்

21. ஜடபாதர்

ஜடபாதர்

கலிபோர்னியா, பிப்ரவரி 1900

பரதன் என்ற பேரரசர் ஒருவர் இருந்தார். அன்னியர்களால் இந்தியா என்று வழங்கப்படும் நாடு, அதன் மக்களால் பாரத வர்ஷம் என்று வழங்கப்படுகிறது. ஒவ்வோர் இந்துவும் வயதானதும் உலகக் காரியங்களைத் துறந்துவிட வேண்டும்; உலகக் கவலைகள், பொருள், இன்பம், சுகபோகங்கள் எல்லா வற்றையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டுக் காட்டிற்குச் செல்ல வேண்டும்; அங்கு, தன்னிலுள்ள ஒரே உண்மைப் பொருளான ஆன்மாவைப்பற்றிய சிந்தனையில் மூழ்க வேண்டும்; அதன் மூலமாக வாழ்க்கையின் பிணைப்புகளை அறுக்க வேண்டும் என்பது நியதி. அரசனோ, புரோகிதனோ, குடியானவனோ, வேலைக்காரனோ, ஆணோ, பெண்ணோ யாரும் இதற்கு விலக்கல்ல. மகன், சகோதரன், கணவன், தந்தை, மனைவி, மகள், தாய், சகோதரி என்று எந்த நிலையிலும் ஆகட்டும், இல்லறத்தானின் கடமைகள் அனைத்தும் ஆயத்தங்கள் மட்டுமே; அதாவது ஆன்மாவை ஜடப்பொருளுடன் இணைக் கின்ற எல்லா தளைகளும் என்றென்றைக்குமாக அறுந்து போகின்ற அந்த நிலைக்கான ஆயத்தங்கள் மட்டுமே.

பரதனும் வயதானவுடன் அரியணையைத் தம் மகனிடம் ஒப்படைத்துவிட்டுக் காட்டிற்குச் சென்றார். கோடிக்கணக்கான மக்கள்மீது ஆட்சி செலுத்திய, தங்கமும் வெள்ளியும் இழைத்த சலவைக் கற்களாலான மாளிகையில் வசித்த, ரத்தினங்கள் பதித்த குவளைகளில் பருகிய மன்னர், இமாலயக் காடுகளில் ஒரு நதிக்கரையில் புல்லையும் நாணல்களையும் கொண்டு, தம் கைகளாலேயே குடிசை கட்டிக்கொண்டு வாழ்ந்தார். தாமே சேகரித்த கிழங்குகளையும் இலைகளையும் உண்டுகொண்டு, மனிதனின் ஆன்மாவில் எப்போதும் விளங்கிக் கொண்டிருக்கும் இறைவனை இடையீடின்றி தியானம் செய்தார்.

நாட்கள், மாதங்கள், வருடங்கள் சென்றன. ஒருநாள் அந்த ராஜரிஷியான பரதர் தியானம் செய்துகொண்டிருந்த இடத்தின் அருகில் ஒரு மான் தண்ணீர் குடிக்க வந்தது. அதே வேளையில் சிறிது தூரத்தில் ஒரு சிங்கம் கர்ஜித்தது. கர்ஜனையைக் கேட்டுப் பயந்த மான் தாகத்தைத் தீர்க்கு முன்னரே நதியை ஒரே தாவலில் தாண்டிக் குதித்தது. கருவுற்றிருந்த அந்த மான், தாண்டிக் குதித்த அதிர்ச்சியினாலும் பயத்தினாலும் ஒரு குட்டியை ஈன்று விட்டு, அங்கேயே வீழ்ந்து இறந்தது. குட்டி தண்ணீரில் விழுந்தது, நுரை பொங்கப் பாய்கின்ற நதியின் வேகம் அதை அடித்துச் சென்றது. அதைக் கண்ட அரசர் விரைவாக எழுந்து, மான்குட்டியை மீட்டுத் தன் குடிசைக்கு எடுத்துச் சென்று, அதற்குத் இதமான வெப்பம் கொடுப்பதற்காகத் தீமூட்டி அன்புடனும் கருணையுடனும் அதனைக் காப்பாற்றினார்; மெல்லிய புல்லும் பழங்களும் கொடுத்து வளர்த்தார்.

பரதரின் அரவணைப்பில் அந்த மான்குட்டி சீக்கிரமே ஓர் அழகிய மானாக வளர்ந்தது. அதிகாரம், பதவி, குடும்பம் என்று இவற்றுடன் வாழ்நாள் முழுவதும் வைத்திருந்த பற்றினை அறுத்தெறியக்கூடிய மனத் திடம் வாய்க்கப்பெற்ற பரதர், இப்போது, தாம் ஆற்றிலிருந்து காப்பாற்றிய மானின்மீது பற்றுக் கொண்டார். மானின்மீது பாசம் அதிகரிக்க அதிகரிக்க, அவரது கடவுள் சிந்தனை குறைந்தது. மேய்வதற்காகக் காட் டிற்குச் சென்ற மான் மாலையில் குடிசைக்கு வரத் தாமதமானால் அந்த ராஜ ரிஷியின் மனம் வேதனைப்படும். ‘ஒருவேளை என் சின்ன மானை புலி தாக்கிவிட்டதோ, வேறு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிட்டதோ? ஏன் அது இன்னும் வரவில்லை?’ என்று கலங்குவார் அவர்.

வருடங்கள் கழிந்தன. அவரது மரண வேளை நெருங்கியது, அவர் அதற்குத் தயாரானார். ஆனால் அவரது மனம் ஆன்மாவை நினைக்காமல் மானை நினைத்துக் கொண் டிருந்தது. கவலை தோய்ந்த கண்களுடன் தம்மைப் பார்த்துக் கொண்டிருந்த தன் அன்பு மானை நோக்கியபடியே அவரது உயிர் பிரிந்தது. இதன் காரணமாக மறுபிறவியில் அவர் ஒரு மானாகப் பிறந்தார். ஆனால் செய்த கர்மம் ஒருபோதும் வெறுமனே போகாது. அரசராகவும் ரிஷியாகவும் இருந்து அவர் செய்த பல நற்கருமங்கள் பலன் தந்தன. பேச முடியாத மிருகத்தின் உடலில் இருந்தாலும் இந்த மானுக்கு முற்பிறவி நினைவு இருந்தது. அது இயல்புணர்ச்சியால் உந்தப்பட்டு, தன் இனத்தை விட்டு நீங்கி, உபநிடதங்கள் போதிக்கப்பட்டு, யாகங்கள் செய்யப்படுகின்ற ஆசிரமங்களின் பக்கத்திலேயே மேய்ந்தது. வழக்கமாக ஒரு மான் வாழ வேண்டிய காலம்வரை வாழ்ந்து அது இறந்தது.

அடுத்த பிறவியில் அவர் ஒரு பணக்கார பிராமணனின் இளைய மகனாகப் பிறந்தார். இந்தப் பிறவியிலும் முற்பிறவிச் செய்திகள் அவரது நினைவில் இருந்தன. வாழ்க்கையின் நன்மை, தீமைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று அவர் குழந்தைப் பருவத்திலேயே உறுதி கொண்டிருந்தார். குழந்தை வலிமை யுடனும் உடல்நலத்துடனும் வளர்ந்தது, ஆனால் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. உலக விவகாரங்களில் சிக்கிக் கொள்ளக் கூடும் என்ற பயத்தால் ஜடத்தைப்போல், பித்தனைப்போல் வாழ்ந்துவந்தார் அவர். அவரது சிந்தனை எப்போதும் இறை வனிலேயே ஆழ்ந்திருந்தது. வினைப்பயன் தீர்வதற்காகத்தான் அவர் வாழ்ந்தார். காலம் கடந்தது. தந்தை இறந்ததும் பிள்ளைகள் சொத்தைப் பகிர்ந்தார்கள்; இளையவன் ஒன்றுக்கும் உதவாத ஊமை என்று நினைத்து அவரது பங்கை யும் பறித்துக் கொண்டார்கள். வாழ்வதற்கான உணவு மட்டும் கொடுத்தார்கள்.

சகோதரர்களின் மனைவியர் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். கடுமையான வேலைகளை அவரைச் செய்யச் சொன்னார்கள். அவர்கள் கொடுக்கின்ற எல்லா வேலைகளை யும் செய்ய முடியாதிருந்தால் அவரைக் கொடுமைப் படுத்தி னார்கள். ஆனால் அவர் எதற்கும் வெறுப்போ பயமோ கொள்ள வில்லை, ஒரு வார்த்தைகூடப் பேசவும் இல்லை. மிகவும் கொடுமைப்படுத்தினால் வீட்டைவிட்டு வெளியே சென்று, அவர்களுடைய கோபம் தீரும்வரை ஒரு மரத்தடியில் உட்கார்ந் திருப்பார், பின்னர் மெதுவாக வீடு திரும்புவார். ஒருநாள் சகோதரர்களின் மனைவியர் வழக்கத்திற்கு அதிகமாக கடுமை யாக நடந்துகொண்டனர். பரதர் வீட்டை விட்டு வெளியேறி ஒரு மர நிழலில் ஓய்வாக அமர்ந்தார்.

அப்பொழுது அந்த நாட்டு மன்னன் பல்லக்கில் அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தான். பல்லக்குத் தூக்கிகளுள் ஒருவன் எதிர்பாராத விதமாக நோயுற்றுவிட்டான், அவனுக்குப் பதிலாக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தார்கள். மரத்தடியில் உட்கார்ந்திருந்த பரதர் வலிமைமிக்க இளைஞனாக இருப்பதைக் கண்டதும், நோயுற்றிருந்தவனுக்குப் பதிலாக மன்னனின் பல்லக்கைத் தூக்கிவர முடியுமா என்று அவரைக் கேட்டனர். பரதர் பதில் கூறவில்லை . அவர் அவ்வளவு வலிமையுள்ளவராக இருப்பதைக் கண்டு, அவரைப் பிடித்துக் கொண்டுபோய், பல்லக்குத் தண்டை அவர் தோளில் வைத்தார்கள். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் பரதர் பல்லக்கைத் தூக்கிச் சென்றார்.

பல்லக்கு சமமாக சுமக்கப்படாததைச் சிறிது நேரத்திற் கெல்லாம் அரசன் உணர்ந்தான். உடனே பல்லக்கிற்கு வெளியே தலையை நீட்டிப் புதியவனைப் பார்த்து, ‘மடையா, ஓய்வெடுத்துக்கொள்; தோள்கள் வலித்தால் சிறிது நேரம் ஓய்வுகொள்’ என்றான். பரதர் பல்லக்கைக் கீழே வைத்துவிட்டு, வாழ்க்கையிலேயே முதன்முறையாகத் தம் வாயைத் திறந்தார்; ‘மன்னா, மடையன் என்று நீ யாரைச் சொன்னாய். பல்லக்கைக் கீழே வைக்கும்படி யாரிடம் சொல்கிறாய்? யார் களைப்புற் றிருப்பதாகச் சொல்கிறாய்? “நீ” என்று யாரை அழைக்கிறாய்? இந்த சதைப் பிண்டத்தை ”நீ” என்று குறிப்பிடுவதானால், உன் சதை எதனால் உண்டானதோ அதே பொருளால்தான் இந்தச் சதையும் உருவாகியுள்ளது. அது உணர்வு உடையதல்ல. அது களைப்பு அறியாதது; வலி தெரியாதது. “நீ” என்பது மனத்தைக் குறிப்பிடுவதானால் அதுவும் உன் மனத்தைப் போன்றதே. ஏனெனில் அது பிரபஞ்சம்தழுவியது. “நீ” என்பது மனத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றைக் குறிப்பதானால் அது ஆன்மாவாகத்தான் இருக்க வேண்டும். என்னுள் இருக்கின்ற உண்மைப் பொருளாகிய அது உன்னிடமுள்ள ஆன்மாவைப் போன்றதே. பிரபஞ்சத்திலுள்ள ஒரே பொருள் அதுவே.மன்னா, அந்த ஆன்மா எப்போதாவது களைப்படைய முடியுமா? அது எப்போதாவது சோர்வடையுமா? அது எப்போதாவது துன்புறுத்தப்படுமா? அரசே, தெருவில் ஊர்ந்து கொண்டிருந்த சின்னஞ்சிறிய புழுக்களை நசுக்க நான்-இந்த உடல்-விரும்ப வில்லை. அவை நசுங்குவதைத் தடுக்க முயன்றதால்தான் பல்லக்கு சற்று சமமற்று அசைந்தது. ஆனால் ஆன்மா ஒருபோதும் களைப்பு அடையவில்லை, அது எப்போதும் பலவீனமாக இருந்ததில்லை, பல்லக்கின் தண்டை அது சுமந்ததில்லை. ஏனெனில் அது எங்கும் நிறைந்தது, எல்லாம் வல்லது’ என்று ஆன்மாவின் இயல்புபற்றியும், உயர்ந்த ஞானத்தைப் பற்றியும் சிறப்பாகப் பேசினார்.

தன் கல்வி, அறிவு, தத்துவ ஞானம் இவற்றைப் பற்றிச் செருக்குக் கொண்டிருந்த அரசன் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி பரதரின் காலடியில் வீழ்ந்து, ‘என்னை மன்னிக்க வேண்டும், பெருமைக்குரியவரே, பல்லக்கைச் சுமக்கத் தங்களை அழைத்தபோது தாங்கள் ஒரு முனிவர் என்பதை நான் உணரவில்லை ‘ என்றான்.

பரதர் அவனை வாழ்த்திவிட்டுச் சென்றார். பிறகு தம் பழைய வாழ்க்கையை மேற்கொண்டார். இறுதியில் உடலைத் துறந்தபின்பு பிறவித் தளையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டார்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம்  21. ஜடபாதர்

20. மகாபாரதம்

மகாபாரதம்

கலிபோர்னியா, 1 பிப்ரவரி 1900

நான் இன்று மாலையில் உங்களிடம் பேசப் போகின்ற மற் றொரு இதிகாசம் மகாபாரதம். பரத மன்னனிலிருந்து தோன்றிய வம்சத்தின் கதை இது. துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன் பரதன். மஹா என்றால் பெரிய, பாரதம் என்றால் பரதனின் சந்ததிகள். இந்தியாவிற்குப் பாரதம் என்னும் பெயர் இந்தப் பரதனிடமிருந்துதான் வந்தது. மகாபாரதம் என்றால் பெரிய இந்தியா அல்லது பரதனின் பெரிய சந்ததியரின் கதை.

இந்த இதிகாசம் நடந்த இடம் குரு வம்சத்தினரின் பழம் பெரும் நாடு. கதையோ குரு வம்சத்தினருக்கும் பாஞ்சால வம்சத்தினருக்கும் நடந்த பெரும் போரை அடிப்படையாகக் கொண்டது. சண்டை நடந்த இடம் மிகப் பெரிதல்ல.

இந்த இதிகாசம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. கிரேக்கர்கள்மீது ஹோமரின் கவிதைகள் எவ்வளவு செல் வாக்குப் பெற்றுள்ளதோ அவ்வளவு செல்வாக்கை இது இந்தியர் மீது பெற்றுள்ளது. காலம் செல்லச்செல்ல மேன்மேலும் பல விஷயங்கள் இதில் சேர்க்கப்பட்டன. இப்போது அது கிட்டத்தட்ட லட்சம் சுலோகங்கள் கொண்ட ஒரு பெரிய நூலாகிவிட்டது. கதைகள், கட்டுக்கதைகள், புராணக் கதைகள், தத்துவப் பகுதிகள், சரித்திரத் துணுக்குகள், பல்வேறு விளக்கங்கள் என்று கிடைத்ததெல்லாம் சேர்க்கப்பட்டு, இப்போது அது மிகப் பெரிய இலக்கியமாகிவிட்டது. மகா பாரதத்தின் மையக் கதை இரண்டு பங்காளிக் குடும்பங்களின் போரைப் பற்றியது. ஒரு குடும்பத்தினர் கௌரவர்கள், இன் னொரு குடும்பத்தினர் பாண்டவர்கள்.

ஆரியர்கள் சிறுசிறு கூட்டங்களாக இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். நாளடைவில் இந்தக் கூட்டங்கள் பெருகி, இறுதியில் அவர்கள் இந்தியாவின் எதிர்ப்பற்ற ஆட்சியாளர்கள் ஆயினர். பின்னர் வந்தது இந்தப் பெரும் போர். ஒரு குடும்பத் தின் இரு கிளையினருக்கிடையே யாருக்கு ஆதிக்கம் உரியது என்பதை நிலைநாட்டுவதற்காக எழுந்த போர் அது. உங்களில் கீதையைப் படித்தவர்கள், ஒன்றையொன்று எதிர்த்து இரண்டு படைகள் அணிவகுத்து நிற்கின்ற போர்க்களத்தின் வர்ணனை யுடன் அது ஆரம்பிக்கிறது என்பதை அறிவீர்கள். அதுதான் மகாபாரதப் போர்.

ஒரு சக்கரவர்த்திக்கு இரண்டு மைந்தர்கள் இருந்தார்கள். பெரியவன் திருதராஷ்டிரன், இளையவன் பாண்டு. திருதராஷ் டிரன் பிறவியிலேயே குருடன். இந்தியச் சட்டப்படி குருடனோ, நொண்டியோ, முடவனோ, காச நோயாளியோ, வேறு ஊனப் பிறப்பாளனோ பரம்பரைச் சொத்துக்கு வாரிசாக முடியாது. அவன் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய பொருள் மட்டும் கொடுக்கப்படும். ஆகவே திருதராஷ்டிரன் மூத்த மகனாக இருந்தும் அரசாள முடியவில்லை. பாண்டு சக்கரவர்த்தி ஆனான்.

திருதராஷ்டிரனுக்கு நூறு பிள்ளைகளும், பாண்டுவுக்கு ஐந்து பிள்ளைகளும் பிறந்தனர். பாண்டு இளவயதில் இறந்து விட்டான். எனவே திருதராஷ்டிரன் அரசனானான். பாண்டு வின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளுடன் வளர்த்தான். வயது வந்ததும் அவர்கள் பிராமணப் போர்வீரரான துரோணரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அரசகுமாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு கலைகளையும் விஞ்ஞானங்களையும் அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.
அரசகுமாரர்களின் கல்வி முடிந்ததும் திருதராஷ்டிரன் பாண்டுவின் மைந்தர்களுள் மூத்தவனான யுதிஷ்டிரனை அவனது தந்தையின் அரியாசனத்தில் ஏற்றினான். யுதிஷ்டிரனின் சிறந்த பண்புகளையும், அவனது சகோதரர்களின் வீரத்தையும் அன்பையும் கண்ட கௌரவர்களின் மனத்தில் பொறாமை மூண்டது. அவர்களில் மூத்தவனான துரியோதனனின் தூண்டு தலால் ஒரு திருவிழாவின் நிமித்தமாகப் பாண்டவர்கள் வாரணாவதம் என்னும் இடத்திற்கு அழைக்கப்பட்டார்கள். துரியோதனனின் கட்டளைப்படி அரக்கு, சணல், குங்கிலியம் முதலிய எளிதில் தீப்பற்றுகின்ற பொருட்களால் கட்டப்பட்ட ஒரு மாளிகையில் அவர்கள் தங்கியிருக்க ஏற்பாடாகியது. பின்னர் கௌரவர்கள் ரகசியமாக அந்த மாளிகைக்குத் தீ வைத் தனர். ஆனால் திருதராஷ்டிரனின் மாற்றாந்தாயின் பிள்ளை யும் நல்லவருமான விதுரர் துரியோதனின் வஞ்சக எண்ணத்தை எப்படியோ தெரிந்து கொண்டு, பாண்டவர்களுக்குத் தெரிவித்தார். யாருக்கும் தெரியாமல் அவர்கள் தப்பித்து விட்டார்கள். மாளிகை சாம்பலாகிவிட்டது என்று தெரிந்ததும் தங்கள் பாதையில் இருந்த இடையூறுகள் நீங்கிவிட்டன என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் கௌரவர்கள்; பிறகு அரசைக் கைப்பற்றினார்கள்.

பாண்டவர்கள் தாய் குந்தியுடன் காட்டிற்கு ஓடினார்கள். அங்கு பிராமண மாணவர்களைப்போல் வேடமிட்டுக்கொண்டு பிச்சையெடுத்துச் சாப்பிட்டார்கள். அந்த அடர்ந்த காடுகளில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் பல. ஆனால் தங்கள் மன வலிமையாலும், உடல் பலத்தினாலும், வீரத்தினாலும் எல்லா ஆபத்துக்களையும் வென்றார்கள். அவர்கள் செய்த சாகசங்கள் பல. அப்போதுதான் அண்டை நாட்டு அரசகுமாரியின் திருமண அறிவிப்புபற்றிக் கேள்விப்பட்டனர்.

பண்டைய இந்தியாவின் வினோதமான திருமண முறையைப்பற்றி நேற்றிரவு நான் உங்களுக்குச் சொன்னேன். அதற்குச் சுயம்வரம் என்று பெயர். சுயம்வரத்தில் அரசகுமாரி தன் கணவனைத் தானே தேர்ந்தெடுப்பாள். அரசகுமாரர்களும் பிரபுக்களும் ஒரு சபையில் கூடுவார்கள். அரசகுமாரி தனக்குப் பிடித்தவனைத் தேர்ந்தெடுப்பாள். கொம்பு ஊதுபவர்களும், கட்டியக்காரர்களும் முன்னால் செல்ல, கையில் மாலையுடன் அரசகுமாரி பின்னால் செல்வாள். அரசகுமாரர்கள் அமர்ந் திருக்கும் ஒவ்வொரு அரியாசனத்திற்கும் அருகில் சென்று, கட்டியக்காரர்கள் அந்த அரசகுமாரனின் பெருமைகளையும், போர்க்களத்தில் அவன் செய்த சாகசங்களையும் எடுத்துக் கூறு வார்கள். எந்த அரசகுமாரனை மணப்பது என்று அரசகுமாரி முடிவு செய்கிறாளோ, அவனது கழுத்தில் தன் கையிலுள்ள மாலையைப் போட்டு, அதை எல்லோருக்கும் அறிவிப்பாள். பிறகு திருமணம் நடக்கும்.

பாஞ்சால நாட்டுத் தலைவன் ஒரு பேரரசன். அவனது மகளான திரௌபதியின் அழகும் திறமைகளும் பற்றிய செய்தி தூரதூர தேசங்களிலும் பரவியிருந்தது. அவளுக்குத்தான் இப்போது சுயம்வரம்.

சுயம்வரத்தில் எப்போதும் ஏதாவது போட்டி இருப்ப துண்டு. இங்கே உயரத்தில் மீன் உருவில் ஓர் இலக்கு வைக்கப் பட்டது. மீனுக்குச் சற்று கீழே ஒரு சக்கரம் சுழன்றுகொண்டே யிருந்தது, அதன் நடுவே ஒரு துவாரம் இருந்தது. கீழே ஒரு தொட்டியில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. தண்ணீரில் அந்த மீனின் பிம்பத்தைப் பார்த்துக்கொண்டே சக்கரத்திலுள்ள துவாரத்தின் வழியாக அம்பை எய்து மீனின் கண்ணில் பாயும் படிச் செய்ய வேண்டும். இதில் வெற்றி பெற்றவன் அரச குமாரியைத் திருமணம் செய்யலாம். அரசகுமாரியை அடை வதற்காக, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் அரசர்களும் அரசகுமாரர்களும் வந்திருந்தனர். அவர்கள் ஒருவர்பின் ஒரு வராக முயன்றனர்; இலக்கை வீழ்த்த முடியாமல் தோல்வி யுற்றனர்.

இந்தியாவில் நான்கு ஜாதிகள் உள்ளன. முதல் ஜாதி பரம்பரை புரோகிதர்களாகிய பிராமணர்கள். அடுத்து அரசர் களும் போர்வீரர்களும் அடங்கிய க்ஷத்திரியர்கள். பின்னர் வைசியர்கள், அதாவது வியாபாரிகள், தொழிலதிபர்கள். இறுதி யாக சூத்திரர்கள் அதாவது வேலைக்காரர்கள். திரௌபதி ஒரு க்ஷத்திரியப் பெண்.

எல்லா அரசர்களும் இலக்கை அடிக்க முடியாமல் போகவே, துருபதன் சபையில் எழுந்து நின்று, ‘அரச மரபின ரான க்ஷத்திரியர்கள் தோற்றுவிட்டார்கள். இப்பொழுது போட்டியில் மற்ற ஜாதியினரும் கலந்துகொள்ளலாம். பிராமணன் மட்டுமல்ல, சூத்திரன் வேண்டுமானாலும் பங்கேற்க லாம். யார் இலக்கை வீழ்த்துகிறாரோ அவர் திரௌபதியை மணம் புரியலாம்’ என்றார். ப

பிராமணர்களுக்கு இடையில் பாண்டவர்கள் உட்கார்ந் திருந்தார்கள். அவர்களுள் மூன்றாமவனான அர்ஜுனன் பெரிய வில்வீரன். அவன் எழுந்து முன்வந்தான். பிராமணர்கள் பொது வாக அமைதியானவர்கள், சற்று ஒதுங்கிப் போகின்ற சுபாவம் கொண்டவர்கள். சட்டப்படி அவர்கள் போர்க்கருவிகள் போன்றவற்றைத் தொடக் கூடாது, வாளைச் சுழற்றக் கூடாது, ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது. தியானம், படிப்பு, புலனடக்கம் ஆகியவையே அவர்களது வாழ்க்கை . அவர்கள் எவ்வளவு அடக்கமும் அமைதியும் நிறைந்தவர்கள் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

அர்ஜுனன் எழுந்து நின்றதைக் கண்ட மற்ற பிராமணர்கள் அவன் க்ஷத்திரியர்களின் கோபத்தைத் தங்கள் மீது தூண்டிவிடப் போகிறான், தாங்கள் அழியவே நேரும் என்று நினைத்தார்கள். ஆகவே அவர்கள் அவனைத் தடுக்க முயன்றார்கள். ஆனால் வீரனான அர்ஜுனன் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. அவன் சென்று வில்லைக் கையிலெடுத்தான், எளிதில் நாண் பூட்டினான், வில்லை இழுத்து, சக்கரத்தின் ஊடே அம்பைச் செலுத்தி நேராக மீனின் கண்ணில் அடித்தான். அங்கு மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. திரௌபதி அர்ஜுனனின் அருகில் வந்து அழகிய மலர் மாலையை அவனது கழுத்தில் சூட்டினாள்.

அப்போது அரசகுமாரர்களுக்கு இடையில் பெருத்த கூக் குரல் எழுந்தது. சபையில் இவ்வளவு அரசர்களும் இளவரசர் களும் இருந்தும், க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த அழகிய இளவரசியை ஏழை பிராமணன் ஒருவன் மணப்பதை அவர் களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அர்ஜுன னுடன் போரிட்டு, அவளைத் தட்டிச்செல்ல நினைத்தார்கள். ஆனால் பாண்டவர்கள் அந்த அரசர்களுடன் பயங்கரமாகப் போரிட்டு, அவர்களை வென்று இளவரசியைத் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

ஐவரும் இளவரசியுடன் வீடு திரும்பினர். பிராமணர்கள் பிச்சையெடுத்துதான் உண்ண வேண்டும். பாண்டவர்கள் பிராமணர்களைப்போல் வாழ்ந்ததால் வெளியில் சென்று பிச்சையெடுத்து வருவார்கள். அதை குந்தி அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பாள். அன்று அவர்கள் திரௌபதியுடன் தாய் இருந்த குடிசைக்கு வந்து, ‘அம்மா, இன்று மிக அற்புதமான பிச்சை கொண்டுவந்திருக்கிறோம்’ என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். ‘அதை எல்லோரும் பொதுவாக எடுத்துக் கொள்ளுங்கள், என் குழந்தைகளே’ என்றாள் குந்தி. ஆனால் இளவரசியைக் கண்டதும் திடுக்கிட்டு, ‘ஐயோ, நான் என்ன சொல்லிவிட்டேன், இது ஒரு பெண் அல்லவா’ என்று கவலை யுடன் கூறினாள். ஆனால் என்ன செய்ய முடியும்! தாய் சொன்னது சொன்னதுதான், அதைத் தட்ட முடியாது. தாயின் வாக்கை நிறைவேற்றியாக வேண்டும். அவள் அதுவரை பொய் சொன்னதில்லை, அத்தகையவள் பொய் சொன்னாள் என்றாகிவிடக் கூடாது. ஆகவே திரௌபதி ஐந்து சகோதரர் களுக்கும் பொது மனைவி ஆனாள்.

ஒவ்வொரு சமூகத்திலும் வளர்ச்சி படிப்படியாகத்தான் உருவாகிறது. பழையகால சரித்திர நிலை இந்த இதிகாசத் திலிருந்து தெரிகிறது. ஐந்து சகோதரர்கள் ஒரே பெண்னை மணந்தார்கள் என்று காவிய ஆசிரியர் கூறுகிறார். ஆனால் அதே வேளையில் தாயின் ஆணை, தாயின் கட்டளை என்றெல் லாம் கூறி, ஏதோ காரணம் காட்டுகிறார், பூசிமெழுகப் பார்க் கிறார். ஒரு பெண் பல கணவர்களை மணக்கும் வழக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு நிலையில் இருந்திருக்கிறது. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லா சகோதரர்களும் ஒரே பெண்ணை மணப்பார்கள். அந்தப் பழைய வழக்கம்தான் இது என்றே நான் நினைக்கிறேன்.

இதற்கிடையில் திரௌபதியின் சகோதரன் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளானான்; ‘யார் இவர்கள்! என் சகோதரி மணம் செய்து கொள்ளப்போகும் இவன் யார்? இவர்களிடம் தேர்களோ குதிரைகளோ எதுவும் இல்லையே! ஏன் இவர்கள் நடந்து செல்கிறார்கள்!’ என்று எண்ணினான். எனவே அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்; இரவில் அவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்டு அவர்கள் உண்மையில் க்ஷத்திரியர்களே என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டான். அவர்கள் யார் என்பதை அறிந்த மன்னன் துருபதன் பெரு மகிழ்ச்சியடைந்தான். முதலில் பலத்த எதிர்ப்பு இருந் தாலும், இத்தகைய திருமணம் தவறானதல்ல என்று வியாசர் கூறினார். ஆகவே துருபதன் திருமணத்திற்கு இசைந்தான், திரௌபதி பாண்டுவின் ஐந்து மைந்தர்களுக்கும் மனைவி ஆனாள்.

பாண்டவர்கள் மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந் தார்கள். அவர்களுடைய வலிமை நாளுக்குநாள் பெருகியது. அவர்களை அழிக்க துரியோதனன் பல சதித் திட்டங்களை உருவாக்கிய போதிலும், பாண்டவர்களுடன் சமாதானமாகப் போகுமாறு பெரியவர்கள் திருதராஷ்டிரனுக்கு அறிவுரை கூறினார்கள். ஆகவே அவன் அவர்களைத் திரும்ப அழைத்து அவர்களுக்குப் பாதி அரசு கொடுத்தான். மக்கள் மகிழ்ந்தார்கள். பாண்டவர்களும் இந்திர பிரஸ்தம் என்னும் ஓர் அழகிய நகரைத் தங்களுக்கென்று நிர்மாணித்துக் கொண்டு, தங்கள் அரசை விரிவுபடுத்தினர்; பிறர் தங்களுக்குக் கப்பம் செலுத்தும் படி ஆட்சி செய்தனர்.

எல்லா அரசர்களுக்கும் மேலாகத் தானே சக்கரவர்த்தி என்பதை அறிவிப்பதற்காக, யுதிஷ்டிரன் ராஜசூய யாகத்தைச் செய்ய முற்பட்டான். யுதிஷ்டிரனால் வெல்லப்பட்ட எல்லா அரசர்களும் கப்பத்துடன் வந்து, தாங்கள் அவனுக்கு அடங்கிய வர்கள் என்பதை உறுதி செய்வதுடன் யாக காரியங்களிலும் பங்கெடுத்துக் கொள்வார்கள். அவர்களது நண்பரும் உறவினரு மான கிருஷ்ணர் அவர்களுடைய எண்ணத்தை ஏற்றுக் கொண்டார்.

இந்த யாகத்திற்கு ஒரு தடை இருந்தது. ஜராசந்தன் என்ற அரசன், நூறு அரசர்களைப் பலியிடுவது என்று தீர்மானித்து எண்பத்தாறு பேரைச் சிறையில் அடைத்திருந்தான். ஜராசந் தனைத் தாக்குமாறு கிருஷ்ணர் யோசனை கூறினார். ஆகவே கிருஷ்ணர், பீமன், அர்ஜுனன் மூவரும் ஜராசந்தனைப் போருக்கு அழைத்தார்கள். அவனும் உடன்படவே, பதினான்கு நாட்கள் தொடர்ந்து மல்யுத்தம் செய்து, பீமன் அவனை வென்றான். சிறைப்பட்டிருந்த அரசர்கள் விடுதலையானார்கள்.

பிறகு நான்கு இளைய சகோதரர்களும் நான்கு திசைகளில் திக்விஜயம் செய்து எல்லா நாடுகளையும் யுதிஷ்டிரனின் கீழ் கொண்டுவந்தார்கள். அப்போது தாங்கள் திரட்டிய செல்வத்தையெல்லாம் கொண்டுவந்து யாகச் செலவிற்காக அண்ணனிடம் கொடுத்தார்கள்.

விடுதலை பெற்ற அரசர்களும், வெல்லப்பட்ட அரசர் களும் ராஜசூய யாகத்திற்கு வந்து யுதிஷ்டிரனுக்குத் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். யாகத்தில் பங் கெடுத்துக் கொள்ளும்படி திருதராஷ்டிர மன்னனும் அவ னுடைய மைந்தர்களும் அழைக்கப்பட்டனர். யாகம் நிறை வுற்றது. யுதிஷ்டிரன் இணையற்ற சக்கரவர்த்தியாக முடி சூடினான்.

பின்னால் ஏற்பட்ட போருக்கு இதுதான் வித்து. யுதிஷ்டிரன் மீது சொல்ல முடியாத பொறாமையுடன் துரியோதனன் திரும்பினான். பாண்டவர்களின் பேராட்சி, பெரும் புகழ், செல்வம் எல்லாவற்றையும் காண அவனுக்குப் பொறுக்கவில்லை. அவர்களை வலிமையால் வெற்றிகொள் வது தன் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை அவன் அறிந் திருந்தான், எனவே தந்திரத்தால் வீழ்த்தத் திட்டமிட்டான்.

யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் விருப்பம் கொண்டவன். எனவே வஞ்சகமாகச் சூதாடுவதில் வல்லவனும், துரியோதன னுக்குத் தீய வழியைக் காட்டுபவனுமான சகுனியுடன் சூதாட்டப் போட்டிக்கு அவனை அழைத்தான் துரியோதனன். காலமும் பாண்டவர்களுக்குப் பொல்லாததாக இருந்தது. பண்டைய இந்திய நாட்டில் க்ஷத்திரியன் ஒருவன் போருக்கு அறைகூவி அழைக்கப்பட்டால், என்ன நேர்ந்தாலும் சரி தன் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவன் அந்த அறைகூவலை ஏற்றுப் போர் செய்தேயாக வேண்டும். அதேபோல் சூதாட அழைக்கப்பட்டாலும் அவன் சூதாட ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக்கொள்வதுதான் மானம், மறுப்பது அவமானம்.

எல்லா நற்பண்புகளின் திருவுருவமே யுதிஷ்டிரன் என்று இதிகாசம் கூறுகிறது. ஆனால் அவனும் அந்த அறைகூவலை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சகுனியும் அவனைச் சேர்ந்தவர்களும் பொய்ப் பகடைகள் செய்து வைத்திருந்தார்கள். ஆகவே யுதிஷ்டிரன் தோற்றுக்கொண்டே போனான், இருந்தும் எல்லாவற்றையும் பணயம் வைத்து விடாப்பிடியாக ஆடினான். இறுதியில் தன் அரசு, உடைமைகள் அனைத்தையும் இழந்தான். பணயம் வைக்க வேறு ஒன்றும் இல்லாமல் போகவே தன் சகோதரர்களையும், தன்னையும், இறுதியாக திரௌபதியையும் பணயம் வைத்து அனைத்தையும் இழந்தான். இப்பொழுது பாண்டவர்கள் கௌரவர்களின் தயவில் இருந்தார்கள். கௌரவர்கள் அவர்களைப் பல வழிகளில் அவமானப் படுத்தியதுடன், திரௌபதியையும் மனிதத்தனமே இல்லாமல் அவமானப்படுத்தினர்.

இறுதியில் குருட்டு மன்னன் குறுக்கிட்டதன் காரணமாக அவர்கள் விடுதலை அடைந்து மீண்டும் தங்கள் அரசை ஆளத் தயாரானார்கள். இதில் உள்ள ஆபத்தை உணர்ந்த துரியோதனன் இன்னும் ஒரு தடவை மட்டும் சூதாடுவதற்கு அனுமதி வாங்கினான். சூதில் தோற்றவர்கள் பன்னிரண்டு வருடம் காட்டில் வாழ வேண்டும், ஒரு வருடம் யாரும் அறியாமல் மறைந்து வாழ வேண்டும், அப்போது கண்டு பிடிக்கப்பட்டால் அதே தண்டனைகளை மீண்டும் அனுபவிக்க வேண்டும், அதற்குப் பிறகுதான் அவர்களுக்கு அரசு திருப்பிக் கொடுக்கப்படும் என்றெல்லாம் நியதிகளையும் வைத்தான். இந்த ஆட்டத்திலும் தோற்றான் யுதிஷ்டிரன்.

பாண்டவர்கள் திரௌபதியுடன் காடு சென்றார்கள். காடு களிலும் மலைகளிலும் பன்னிரண்டு வருட காலம் வசித்தார்கள். அப்பொழுது அவர்கள் செய்த நற்செயல்களும் சாகசங்களும் ஏராளம். பல புண்ணியத் தலங்களுக்கும் யாத்திரை சென் றார்கள். இதிகாசத்தின் இந்தப் பகுதி மிகவும் சுவையானது, போதனைகள் நிறைந்தது. எத்தனையோ நிகழ்ச்சிகளும், கதை களும், புராணக் கதைகளும் அந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ளன, பழைய இந்தியத் தத்துவ சாஸ்திரம், மதம் முதலியவற்றைப் பற்றிய அழகிய ஆழ்ந்த கதைகளும் இதில் உள்ளன. பாண்டவர் களைப் பார்க்கப் பல முனிவர்கள் வந்தனர். காட்டு வாழ்க்கை அவர்களுக்குச் சுமையாகத் தோன்றாமல் இருப்பதற்காகப் பண்டைய இந்தியாவைப் பற்றிய பல கதைகளை அவர்கள் கூறினார்கள். இங்கே ஒரு கதையை மட்டும் கூறுகிறேன்.

அசுவபதி என்னும் ஓர் அரசர் இருந்தார். அவருக்கு ஒரு மகள். அழகிலும் பண்பிலும் சிறந்து விளங்கிய அவளுக்கு, இந்துக்களின் மிகப் புனிதமான பிரார்த்தனையான சாவித்திரி என்ற பெயர் வைக்கப்பட்டது. அவளுக்கு வயது வந்ததும் கணவனைத் தேர்ந்தெடுக்கும்படி அவளது தந்தை சொன்னார். பண்டைக்காலத்தில் அரசகுமாரிகள் மிகச் சுதந்திரமாக வாழ்ந் தார்கள், தங்கள் கணவனைத் தாங்களே தேர்ந்தெடுத்தார்கள்.

சாவித்திரி தங்கத் தேரில் அமர்ந்து, தன் தந்தை நியமித் திருந்த மெய்க்காப்பாளரும் அரசவைப் பரிவார முதியோரும் புடைசூழத் தொலைதூர நாடுகளுக்குப் பயணம் செய்தாள். பல இளவரசர்களைக் கண்டும் யாரும் சாவித்திரியின் உள்ளத்தைக் கவரவில்லை.

இறுதியாக, இந்தியாவில் அந்த நாளில் மிருகங்களுக் கென்று ஒதுக்கப்பட்டதும், மிருகங்களைக் கொல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்ததுமான ஒரு காட்டிலிருந்த ஆசிரமத்தை அடைந்தாள். அங்குள்ள மிருகங்கள் மனிதரைக் கண்டு பயப்படுவதில்லை, ஏரியில் உள்ள மீன்கள் மனிதர்களின் கையிலிருந்து உணவுப் பொருளை வந்து உண்டது. ஆயிரக் கணக்கான வருடங்களாக அங்கிருந்த எதையும் யாரும் கொன்ற தில்லை. முனிவர்களும் வயோதிகர்களும் அங்கே சென்று மான்கள், பறவைகள் ஆகியவற்றுடன் வசித்தார்கள். குற்றவாளி கள்கூட அங்கே பாதுகாப்பாக இருந்தார்கள். வாழ்க்கையில் அலுப்புத் தட்டும்போது மனிதன் காட்டிற்குச் சென்று முனிவர் களுடன் வசிப்பான்; எஞ்சிய காலத்தை முனிவர்களோடு ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுவதிலும் தியானத்திலும் கழிப்பான்.

துயுமத்சேனன் என்னும் ஓர் அரசர் இருந்தார். அவர் தம் வயதான காலத்தில் கண்பார்வையை இழந்திருந்தபோது எதிரிகள் அவரைத் தோற்கடித்து, அவருடைய அரசைக் கைப் பற்றிக் கொண்டார்கள். பாவம், அந்த முதிய குருட்டு மன்னர் மனைவியுடனும் மகனுடனும் அந்தக் காட்டிற்கு வந்து தவம் செய்வதில் காலத்தைக் கழித்தார். அவருடைய மகன் பெயர் சத்தியவான்.

பல அரசவைகளையும் பார்த்த பிறகு, சாவித்திரி இறுதி யாக இந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள். ஆசிரமத்தில் இருந்த முனிவரைக் கண்டு வணக்கம் செலுத்தாமல், எவ்வளவு பெரிய மன்னரும் ஆசிரமத்தைக் கடந்து செல்லக் கூடாது. அவ்வளவு மரியாதை இந்த முனிவர்களுக்குக் கொடுக்கப் பட்டது. இந்தியாவின் பெரிய சக்கரவர்த்திகூட, கந்தைகளை உடுத்திக்கொண்டு, காய்கனிகளைத் தின்று வாழ்ந்த ஒரு முனிவரின் வம்சத்தில் தோன்றியவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைவான். நாங்கள் அனை வரும் முனிவர் பரம்பரையில் வந்தவர்கள். ஆகவே ஆசிரமங் களின் பக்கமாகச் செல்லும் அரசர்கள் கூட ஆசிரமத்திற்குள் நுழைந்து முனிவருக்கு வணக்கம் செலுத்துவதை ஒரு பெருமை யாகக் கருதினார்கள். அவர்கள் குதிரைமீது வந்துகொண்டிருந் தால் கீழே இறங்கி நடப்பார்கள்; தேர்களில் வந்தால், அவற்றை நிறுத்திவிட்டு, கவசங்களை அகற்றி வைத்துவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். எந்தப் படை வீரனும் ஒரு பக்தனைப் போல் அமைதியுடனும் அடக்கத்துடனும்தான் உள்ளே நுழைய வேண்டும்.

இந்த ஆசிரமத்திற்கு வந்த சாவித்திரி சத்தியவானைக் கண்டதும் இதயத்தை அவனிடம் பறிகொடுத்தாள். அரண் மனைகளில் கண்ட அரசகுமாரர்களைவிட ஆசிரமத்தில் இருந்த துயுமத்சேனனின் மகனான சத்தியவான் அவளது இதயத்தைக் கவர்ந்தான்.

சாவித்திரி திரும்பி வந்ததும் தந்தை அவளைப் பார்த்து, ‘அருமை மகளே சாவித்திரி, நீ மணம் செய்துகொள்ள விரும்பும் யாரையாவது கண்டாயா சொல்’ என்று கேட்டார். சாவித்திரியும் நாணத்துடன், ‘ஆம், அப்பா’ என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

‘அந்த அரசகுமாரனின் பெயர் என்ன?’

‘அவர் அரசகுமாரன் அல்ல, அரசை இழந்துவிட்ட துயுமத்சேனனின் மகன். அவருக்குத் தந்தைவழிச் சொத்து எதுவும் இல்லை. ஒரு குடிசையில் துறவி போன்று வாழ்க்கை நடத்துகிறார். கிழங்குகளையும் இலைகளையும் சேகரித்து, வயதான பெற்றோர்களைக் காப்பாற்றுகிறார்’ என்று சொன்னாள்.

இதைக் கேட்ட அரசன் அந்த வேளையில் அங்கிருந்த நாரதரிடம் இதுபற்றிக் கலந்து பேசினார். ஆனால் நாரதர் இதனை ஒரு பெரிய அபசகுனம் என்று கூறிவிட்டார். அதை விளக்க வேண்டும் என்று மன்னன் கேட்டதற்கு நாரதர், ‘இன்றிலிருந்து பன்னிரண்டு மாதங்களில் சத்தியவான் இறக்கப் போகிறான்’ என்று கூறினார். இதைக் கேட்டு அரசன் நடுங் கினான். ‘சாவித்திரி, அந்த இளைஞன் இன்னும் பன்னிரண்டு மாதங்களில் இறக்கப்போகிறான். நீ விதவையாகி விடுவாய். அதை நினைத்துப் பார். இந்த இளைஞன் வேண்டாம். அற்ப ஆயுளுள்ள இந்த இளைஞனை நீ மணக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்.’ என்றான். ‘அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள் அப்பா! வேறு யாரையாவது மணம்புரிந்து கொள்ளச் சொல்லி என் கற்புக்கு மாசு தேடாதீர்கள். ஏனெனில் நான் அந்த வீர சத்தியவானைத்தான் காதலிக்கிறேன். அவரை என் மனத்தில் கணவனாக வரித்துவிட்டேன். பெண் ஒரு முறைதான் கணவனைத் தேர்ந்தெடுப்பாள், பிறகு அதிலிருந்து மாறவே மாட்டாள்’ என்று சொன்னாள்.

சாவித்திரியின் மன உறுதியைக் கண்டு அரசன் திருமணத் திற்குச் சம்மதித்தான். சாவித்திரிக்கும் சத்தியவானுக்கும் திருமணம் நடந்தது. அவள் தன் அரண்மனையைவிட்டுக் காட் டிற்குச் சென்று, கணவனுடன் வாழ்ந்தாள்; அவனுடைய பெற் றோர்களுக்குத் தொண்டு செய்தாள்.

சத்தியவான் என்றைக்கு இறப்பான் என்று சாவித்திரிக்குத் தெரிந்தபோதிலும், அதை அவள் அவனிடம் சொல்லவில்லை. தினமும் அவன் காட்டிற்குச் சென்று, பழங்களும் மலர்களும் விறகும் சேகரித்துக்கொண்டு திரும்புவான். சாவித்திரி சமையல் செய்வாள். அந்த முதியவர்களுக்குத் தொண்டு செய்வாள்.

வாழ்க்கை இப்படியே சென்றது. இறுதி நாளுக்கு இன்னும் மூன்று நாட்களே இருந்தன. அந்த மூன்று நாட்களும் உணவும் உறக்கமும் இன்றி விரதம் மேற்கொண்டாள் சாவித்திரி. இறுதி நாள் இரவு. இரவெல்லாம் உறங்காமல், கண்ணீர் வெளியே தெரியாமல் மனத்திற்குள் அழுதுகொண்டே பிரார்த்தனைகள் செய்தாள். அந்த இறுதி நாள் பொழுது விடிந்தது. அன்று ஒரு கணம்கூடக் கணவனைவிட்டுப் பிரியக் கூடாது என்று தீர்மானித்தாள் அவள். விறகு வெட்டச் செல்லும் கணவனுடன் செல்லத் தன்னையும் அனுமதிக்கும்படி அவனுடைய பெற்றோர் களிடம் அனுமதிபெற்று உடன் சென்றாள்.

காட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் சத்தியவான் தனக்கு மயக்கமாக இருப்பதாகக் கூறினான். ‘என் கண்ணே சாவித்திரி, தலைசுற்றுகிறது. என் புலன்கள் தடுமாறுகின்றன. எனக்குத் தூக்கம் வருகிறது. நான் உன் பக்கத்தில் சற்று இளைப்பாறுகிறேன்’ என்று தழுதழுத்த குரலில் சொன்னான். சாவித்திரி பயந்து நடுங்கிக்கொண்டே, ‘என் ஆருயிரே, தலையை என் மடியின்மீது வைத்துக்கொண்டு படுங்கள்’ என்று சொன்னாள். மனைவியின் மடியில் தலைவைத்துப் படுத்த சத்தியவான் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு உயிர் துறந் தான். அந்தத் தனிக்காட்டில் கண்களில் நீர் மல்க, தன் கணவனைக் கட்டிப்பிடித்தபடியே இருந்தாள் அவள்.

அப்போது அவனது உயிரை அழைத்துச் செல்ல எம தூதர்கள் அங்கு வந்தார்கள். ஆனால் சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை அவர்களால் நெருங்க முடியவில்லை. அவளை அக்கினி வட்டம் ஒன்று சூழ்ந்திருந்தது. எனவே எமதூதர்கள் எமனிடம் திரும்பிச் சென்று சத்தியவானின் உயிரைக் கவர முடியவில்லை என்று சொன்னார்கள்.

இறந்தவர்களுக்கு நீதி வழங்குபவனும், மரணக் கடவுளு மான எமனே அங்கு வந்தான். பூமியில் இறந்த முதல் மனிதன் அவன். அவன்தான் மரணக் கடவுளானான். இறந்த பிறகு ஒருவனைத் தண்டிக்க வேண்டுமா, வெகுமதி அளிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பவன் எமன். அவனே அங்கு வந்தான். அவன் தேவன், ஆதலால் அந்த அக்கினி வட்டத்தைத் தாண்டி உள்ளே நுழைய முடிந்தது.

அவன் சாவித்திரியைப் பார்த்து, ‘மகளே, இந்த உடலை விட்டுவிடு. மரணம் மனிதனின் விதி. முதன்முதலில் மரண மடைந்த மனிதன் நான். அன்றிலிருந்து எல்லோரும் சாகத்தான் வேண்டும். மரணமே மனிதனின் விதி’ என்றான். இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள். எமன் உடலிலிருந்து உயிரைப் பிரித்தான். பின்னர் உயிரை அழைத்துக்கொண்டு அவன் தன் வழியே செல்ல ஆரம்பித்தான். சிறிது நேரத்திற் கெல்லாம் சருகுகளின்மீது யாரோ நடந்து வருகின்ற காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சாவித்திரி எமனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாள்.

‘என் மகளே, சாவித்திரி! ஏன் என்னைப் பின்தொடர் கிறாய்? எல்லா மனிதர்களின் கதியும் இதுதான்’ என்றான் எமன்.

சாவித்திரி சொன்னாள்: ‘தந்தையே, நான் தங்களைப் பின்தொடரவில்லை. ஒரு பெண்ணின் விதி இதுதானே! அன்பர் செல்லும் இடத்திற்கு அவள் சென்றுதானே ஆக வேண்டும்! ஒரு அன்புக் கணவனையும், அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கவில்லையே’ என்றாள்.

‘உன் கணவனின் உயிரைத் தவிர வேறு ஏதாவது ஒரு வரம் கேள்.’

‘தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அருள்புரியுங்கள், மரணதேவா!’

‘கடமை தவறா மகளே, உன் விருப்பப்படியே ஆகுக’ என்று கூறிவிட்டு மரண தேவன் சத்தியவானின் உயிரை அழைத்துக் கொண்டு தொடர்ந்து சென்றான். திரும்பவும் காலடிச் சத்தம் கேட்டது, திரும்பிப் பார்த்தான். சாவித்திரி தொடர்ந்து கொண்டிருந்தாள்.
‘என் மகளே சாவித்திரி, இன்னும் ஏன் என்னைப் பின் தொடர்கிறாய்?’

‘தந்தையே, நான் என்ன செய்வேன். நான் திரும்பிப் போக வேண்டுமென்றுதான் பார்க்கிறேன். ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனத்தைத் தொடர்கிறது. என் உயிர் முன்னாலேயே போய்விட்டது. ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது. உயிர் சென்றால் உடம்பும்கூடச் செல்லத் தானே வேண்டும்?’

‘சாவித்திரி, உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன். இன்னும் ஒரு வரம் கேள், ஆனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது.’

‘தந்தையே, தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தரு வதானால் இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் மீண்டும் பெற அருள்புரியுங்கள்.’

‘அன்பு மகளே, நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன். வீடு திரும்பு. ஏனெனில் மனிதர்கள் எமனுடன் செல்ல முடியாது.’

எமன் தொடர்ந்து செல்லலானான். பணிவும் அன்பும் நிறைந்த சாவித்திரி மறைந்த கணவனைப் பின்தொடர்ந்தாள்.

எமன் திரும்பிப் பார்த்து, ‘நற்குணம் வாய்ந்த சாவித்திரி, நம்பிக்கையிழந்து துயரத்தில் வாடியவாறு என்னைத் தொடராதே.’

‘என் ஆருயிர்க் கணவனைத் தாங்கள் எங்கு எடுத்துச் செல்கிறீர்களோ, அங்கு செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை .’

‘உன் கணவன் ஒரு பாவி என்று வைத்துக்கொள். அவன் நரகத்திற்குச் செல்ல நேர்ந்தால் சாவித்திரி அங்கும் செல்வாளா?’

‘வாழ்விலோ சாவிலோ, நரகமோ சொர்க்கமோ அவரைப் பின்தொடர்வதுதான் எனக்கு மகிழ்ச்சி’

‘என் குழந்தாய், உன் வார்த்தைகள் மேலானவை. உன்னைக் கண்டு நான் மகிழ்கிறேன். இன்னொரு வரம் கேள். ஆனால் செத்தவர்கள் உயிர்பிழைக்க மாட்டார்கள், ஞாபகம் வைத்துக் கொள்.’

‘அப்படியானால் என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கட்டும். அவருடைய அரசு சத்தியவானின் மைந்தர் களுக்குச் செல்லட்டும்.’

இதைக் கேட்டு எமதர்மன் புன்முறுவல் பூத்தான். ‘என் மகளே, உன் விருப்பப்படியே ஆகுக. இதோ உன் கணவனின் உயிர். அவன் உயிர் பெற்றுத் திரும்புவான், உன் குழந்தைகள் அரசாள்வார்கள். வீடு திரும்பு. அன்பு மரணத்தை வென்று விட்டது. உன்னைப்போல் எந்தப் பெண்ணும் கணவனைக் காதலிக்கவில்லை. உண்மையான அன்பிற்கு முன்னால் மரண தேவனான நான்கூட ஆற்றல் அற்றவன் என்பதற்கு நீ சான்று’ என்றான்.

இதுதான் சாவித்திரியின் கதை. இந்தியப் பெண்கள் எல்லோரும் சாவித்திரியைப்போல் விளங்க முயற்சிக்க வேண்டும். அவளது அன்பை மரணத்தால்கூட வெற்றிகொள்ள முடியவில்லை . ஆற்றல் மிக்க அன்பினால் அவள் தன் கணவனின் உயிரையே எமனிடமிருந்து மீட்டாள்.

இதுபோன்று நூற்றுக்கணக்கான கதைகள் மகாபாரதத் தில் உள்ளன. மகாபாரதம் உலகின் மிகச் சிறந்த நூல்களில் ஒன்று என்று உங்களுக்குச் சொன்னேன். இது பதினெட்டு பர்வங்களையும், ஏறத்தாழ ஒரு லட்சம் சுலோகங்களையும் கொண்டது.

கதைக்கு வருவோம். நாம் பாண்டவர்களை வனவாசத்தில் விட்டோம். அங்கும் துரியோதனன் அவர்களைச் சும்மா விட்டு வைக்கவில்லை. தொல்லை விளைவிக்கும் திட்டங்கள் பல வகுத்தான். ஆனால் அனைத்தும் பயனற்றுப் போயின.

வன வாழ்க்கையில் நடந்த ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன். ஒருநாள் பாண்டவர்கள் தாகத்தால் தவித்த போது தண்ணீர் கொண்டுவரும்படியுதிஷ்டிரன் சகோதரனான நகுலனிடம் கூறினான். நகுலன் சென்றான். பளிங்குபோல் தெளிந்த தண்ணீர் இருந்த ஓர் ஏரியை அடைந்தான். தண்ணீர் குடிக்கப் போனான். அப்பொழுது ஒரு குரல் கேட்டது: ‘குழந்தாய், நில். முதலில் என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு பிறகு தண்ணீ ரைக் குடி.’ ஆனால் தாகம் அதிகமாக இருந்ததால் நகுலன் அந்த வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் தண்ணீ ரைக் குடித்தான், குடித்ததும் இறந்து வீழ்ந்தான்.

நகுலன் திரும்பாததால் அவனையும் தேடி, தண்ணீரும் கொண்டுவரும்படி யுதிஷ்டிரன் சகாதேவனை அனுப்பினான். சகாதேவனும் அதே ஏரிக்குச் சென்றான். தன் சகோதரனின் மரணத்தைக் கண்டு துயரம் கொண்டான். அவனும் தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்கப் போனான். அப்பொழுதும் அதே குரல், ‘குழந்தாய், முதலில் என் கேள்விக்குப் பதில் சொல். பிறகு தண்ணீ ரைக் குடி’ என்று சொன்னது. அவனும் அந்த வார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டுத் தண்ணீர் குடித் தான், இறந்து வீழ்ந்தான். பிறகு அர்ஜுனனும் பீமனும் ஒருவர் பின் ஒருவராக அனுப்பப்பட்டார்கள். அவர்களும் திரும்ப வில்லை. அவர்களும் அந்தத் தண்ணீரைக் குடித்து இறந்தார்கள்.

இறுதியில் சகோதரர்களைத் தேடிக்கொண்டு யுதிஷ்டிரன் அங்கு வந்து சேர்ந்தான். அவர்கள் இறந்து கிடந்ததைப் பார்த் தான். துயரத்தால் உள்ளம் துடித்துப்போய் அழத் தொடங் கினான். திடீரென்று அதே குரல் கேட்டது; ‘குழந்தாய், அவசரப் பட்டு எதுவும் செய்யாதே. நான் சிறிய மீன்களைத் தின்று நாரை வடிவில் வாழும் ஒரு யட்சன். உன் சகோதரர்களின் மரணத்திற்கு நான்தான் காரணம். என் கேள்விகளுக்குப் பதில் சொல்லாவிட்டால் நீயும் ஐந்தாவது பிணமாகி விடுவாய். குந்தி மைந்தனே, என் கேள்விகளுக்குப் பதில் சொன்ன பிறகு, நீ தண்ணீர் குடிக்கலாம், வேண்டிய தண்ணீரை எடுத்துச் செல்ல லாம்’ என்றது அந்தக் குரல்.

‘என் அறிவுக்கு எட்டியவரை பதில் சொல்கிறேன். கேளுங்கள்’ என்றான் யுதிஷ்டிரன்.

யட்சன் பல கேள்விகள் கேட்டான். யுதிஷ்டிரனும் எல்லா வற்றிற்கும் நிறைவாகப் பதில் அளித்தான். ப அவன் கேட்ட கேள்விகளுள் ஒன்று, ‘உலகிலேயே மிகுந்த வியப்புக்கு உரியது எது?’ என்பதாகும். ‘நம்மைச் சுற்றி இருப்ப வர்கள் ஒவ்வொரு கணமும் மடிந்து விழுவதைப் பார்க்கிறோம். ஆனால் எஞ்சி இருப்பவர்கள், தாங்கள் ஒருபோதும் சாக மாட்டோம் என்று நினைக்கிறார்களே, இதுதான் மிகவும் வினோதமான உண்மை. சாவுக்கு முன்னால் இருந்துகொண்டே தாங்கள் சாக மாட்டோம் என்று நினைக்கிறார்கள்’ என்பது யுதிஷ்டிரன் அளித்த பதில்.

இன்னொரு கேள்வி: ஆன்மீகத்தின் ரகசியத்தை அறியும் வழி என்ன?’ பதில்: ‘விவாதங்களினால் எதையும் தீர்மானிக்க முடியாது. கோட்பாடுகள் பல உள்ளன, சாஸ்திரங்கள் பல உள்ளன, ஒன்றை மற்றொன்று மறுக்கிறது. கருத்து வேற்றுமை இல்லாத இரண்டு முனிவர்களைக் காண முடியாது. ஆன்மீகத் தின் ரகசியம் இருட்டுக் குகைகளில் புதைந்து கிடப்பதுபோல் கிடக்கிறது. ஆகவே மாமனிதர்கள் சென்ற வழியில் செல்வது தான் ஆன்மீகத்தின் ரகசியம்.’

இறுதியில் யட்சன் யுதிஷ்டிரனிடம், ‘நான் மகிழ்ச்சி அடை கிறேன். நாரை வடிவிலுள்ள நான் அறக் கடவுள். நீதிதேவனான நான் உன்னைச் சோதிக்க வந்தேன். உன் சகோதரர்கள் யாரும் உண்மையில் சாகவில்லை. இது எனது மாயம். பணத்தையும் இன்பத்தையும்விட அஹிம்சைதான் சிறந்தது என்று நீ கூறு வதால், பரதகுலப் பெருவீரனே, உன் சகோதரர்கள் பிழைத்து எழுவார்கள்’ என்று கூறினான். உடனே பாண்டவர்கள் உயிர்த்து எழுந்தார்கள். இங்கே யுதிஷ்டிரனின் இயல்பில் ஒரு சிறிதைக் காண்கிறோம். அவன் ஒரு மன்னன் என்பதைவிட ஒரு தத்துவவாதி, ஒரு யோகி என்பதையே அவனது விடைகள் காட்டுகின்றன.

பாண்டவர்களுடைய வனவாசத்தின் பதின்மூன்றாவது வருடம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே அவர்கள், விராட நகரத்திற்குச் சென்று மாறுவேடங்களில் மறைந்து வாழும்படி யட்சன் கூறினான்.

அவ்வாறே பாண்டவர்கள் பல மாறுவேடங்களில் விராட நகருக்குச் சென்று, மன்னனின் அரண்மனையில் பணியாட்களாக வேலையில் அமர்ந்தனர். யுதிஷ்டிரன் சூதாட்ட வல்லுன னான ஒரு பிராமணனாக விராடனின் அரச சபையில் சேர்ந் தான். பீமன் சமையற்காரன் ஆனான். அர்ஜுனன் ஒரு பேடியைப்போல் வேடம் அணிந்து, அரசகுமாரியான உத்தரைக்குப் பாட்டும் நடனமும் கற்றுக் கொடுத்தவாறு அந்தப்புரத்தில் காலம் கழித்தான். நகுலன் அரசனின் குதிரைப் பாகன் ஆனான். சகாதேவன் பசுக்களைக் கவனிக்கும் பணியை மேற்கொண்டான். திரௌபதி அரசியின் பணிப்பெண் ஆனாள். இவ்வாறு ஒரு வருடத்தை ஆபத்தின்றிக் கழித்தார்கள் பாண்டவர்கள். அவர்களைக் கண்டுபிடிக்க துரியோதனன் மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின. ஒரு வருடம் முடிந்த பின்னர்தான் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

அதன்பிறகு யுதிஷ்டிரர் ஒரு தூதரைத் திருதராஷ்டிரனிடம் அனுப்பி, தங்கள் பங்கான பாதி அரசைக் கொடுக்குமாறு கேட்டார். அவர்களை வெறுத்த துரியோதனன் அந்த நியாய மான கோரிக்கையையும் மறுத்துவிட்டான். ஒரு பகுதி, இல்லா விட்டால், ஐந்து கிராமங்கள்கூடப் போதும் என்றும் கேட்டுப் பார்த்தனர் பாண்டவர்கள். ஆனால் முரட்டுப் பிடிவாதம் கொண்ட துரியோதனன் ஊசி நுனி அளவு நிலத்தைக்கூடப் போர் செய்யாமல் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டான். சமாதானமாகப் போகும்படி திருதராஷ்டிரன் மீண்டும்மீண்டும் மன்றாடினான். ஆனால் பலன் இல்லை. வரப்போகும் போரையும் உறவினர்களின் சாவையும் தடுக்க கிருஷ்ணரும் அங்கு சென்று எவ்வளவோ முயன்றார். அரசவை யில் இருந்த எல்லா சான்றோர்களும் முயன்றனர். ஆனால் சமாதான முறையில் அரசைப் பங்கிட்டுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் பயனற்றுப் போயின. ஆகவே இருதரப்பிலும் போரிற்கான ஏற்பாடுகள் நடந்தன. வலிமை மிகுந்த எல்லா நாடுகளும் இதில் பங்கேற்றன.

க்ஷத்திரியர்களின் பழைய இந்திய வழக்கங்கள் போரில் பின்பற்றப்பட்டன. துரியோதனன் ஒரு பக்கம், யுதிஷ்டிரன் இன்னொரு பக்கம் ஆனார்கள். தங்களோடு சேரும்படி அண்டை அரசர்களுக்கு யுதிஷ்டிரன் தூதனுப்பினான். முதலில் கிடைத்த வேண்டுகோளுக்கு இணங்குவது பண்பாடுள்ள அரசர் களின் பழக்கம். ஆகவே யார் தங்களை முதலில் அணுகினார்கள் என்பதற்கு ஏற்ப, அவர்களுள் சிலர் பாண்டவர்களுடனும், சிலர் கௌரவர்களுடனும் சேர்ந்தார்கள். அதனால் அண்ணன் ஒரு பக்கத்திலும் தம்பி இன்னொரு பக்கத்திலும், தந்தை ஒரு பக்கத்திலும் மகன் இன்னொரு பக்கத்திலும்கூட இருக்க நேர்ந்தது.

அந்தக் கால போர் நியமங்கள் மிகவும் அலாதியானவை. போர் முடிந்து, மாலை நேரம் வந்ததும் இரு தரப்பினரும் நண்பர்களைப்போல் பழகுவார்கள்; ஒருவர் முகாமுக்கு இன் னொருவர் செல்வார்கள். பகலில் மீண்டும் ஒருவரோடு ஒருவர் போர் புரிய ஆரம்பிப்பார்கள். முகமதியர் படையெடுப்புவரை இந்த அற்புத வழக்கம் இந்துக்களிடம் இருந்தது. குதிரைவீரன் காலாட்படை வீரனைத் தாக்கக் கூடாது. ஆயுதங்களில் விஷம் தோய்க்கக் கூடாது. சம பலம் இல்லாதவனை வீழ்த்துவதும், நேர்மையற்ற முறையில் வெல்வதும் கூடாது. எதிரியின் துணை யற்ற நிலையை அனுகூலமாக்கிக் கொள்ளக் கூடாது; இப்படிப் பல நியமங்கள் இருந்தன. இந்த நியமங்களை மீறுபவர்கள் அவமதிக்கப்பட்டனர், ஒதுக்கப்பட்டனர்.

க்ஷத்திரியர்கள் இத்தகைய வழியில்தான் பயிற்சி பெற்றார்கள். மத்திய ஆசியாவிலிருந்து அன்னியர் படை யெடுப்பு ஏற்பட்டபோது, அவர்களிடம் இந்துக்கள் இதே முறையில்தான் நடந்துகொண்டனர். அவர்களைப் பலதடவை முறியடித்து, சிலவேளைகளில் வெகுமதிகளுடன் சொந்த நாட் டிற்கு அனுப்பினார்கள், அன்னிய நாட்டைப் பிடிக்கக் கூடாது என்பதுதான் நியமம்; ஒருவனை வெற்றிகொண்ட பிறகு, அவனைத் தகுந்த மரியாதையுடன் அவனது நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் முகமதியர்கள் இந்து மன்னர்களிடம் இப்படி நடந்துகொள்ளவில்லை; வெற்றி கொண்டபின் அவர் களை ஈவிரக்கமின்றி அழித்தனர்.

நம் கதை நிகழ்ந்த அந்தக் காலத்தில் ஆயுதக் கலை என்பது வில்லையும் அம்பையும் மட்டும் பயன்படுத்துவதுடன் நிற்க வில்லை; மந்திரங்களும் மன ஒருமைப்பாட்டு ஆற்றலும் கூடவே பயன்பட்ட ஒரு மாயக் கலையாக அது இருந்தது என்று இதிகாசம் கூறுகிறது. ஒருவனே லட்சக் கணக்கானோரை எதிர்க்க முடியும், சங்கல்ப மாத்திரத்தால் அவர்களை எரித்து விட முடியும். அவன் ஒரு அம்புவிடுவான், அது ஆயிரக்கணக் கான அம்புகளாகப் பாயும், இடியாக மாறும். அவனால் எதையும் எரிக்க முடியும். எல்லாம் தெய்வீக மாயம்.

ராமாயணம், மகாபாரதம் என்ற இந்த இரு காவியங் களிலும் ஒரு விந்தையான உண்மையைக் காண்கிறோம். இந்த மாய அம்புகளுடன் பீரங்கியும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. சீனர்களும் இந்துக்களும் பயன்படுத்திய மிகப் பழைய கருவி பீரங்கி. நகரங்களின் மதில் சுவர்களில் இரும்புக் குழல்கள் கொண்ட நூற்றுக்கணக்கான விசித்திரப் போர்க் கருவிகள் அமைக்கப்பட்டிருந்தன. வெடிமருந்தினாலும் குண்டுகளாலும் நிரப்பப்பெற்ற இவை நூற்றுக் கணக்கானவர் களைக் கொல்லத்தக்கது. சீனர்கள் தங்கள் மாயா ஜாலத் தினால் இரும்புக்குழாயில் பூதத்தை அடைத்துள்ளார்கள், துளையில் சிறிது தீ வைத்ததும் அந்தப் பூதம் பெருத்த சத்தத்துடன் வெளிக்கிளம்பி மக்களைக் கொன்றது என்று பலர் நம்பினர்.

ஆகவே பழங்காலத்தில் மாய அம்புகளைக் கொண்டு போர் செய்தார்கள். ஒருவனே லட்சக் கணக்கானோரை எதிர்க்க முடியும். படை அணிவகுப்புக்களும் உத்திகளும் இருந்தன. பாதம் எனப்பட்ட சாதாரணப் படைவீரர்கள் இருந்தனர். துரகம் எனப்பட்ட குதிரைப்படைகள் இருந்தன. இன்னும் இரண்டு படைகள் இருந்தன, தற்காலத்தில் அவை வழக்கத் திலிருந்து ஏறக்குறைய மறைந்துவிட்டன. இரும்புக் கவசம் பூண்ட ஒன்று, யானைப் படை. நூற்றுக்கணக்கான யானைகள், அவற்றின் முதுகில் படை வீரர்கள் இருந்துகொண்டு எதிரி களைத் தாக்குவார்கள். பிறகு தேர்ப்படை இருந்தது. இந்தத் தேர்களின் படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவை எல்லா நாடுகளிலும் இருந்துள்ளன. அந்தக் காலத்து நால்வகைப் படைகள் இவை.

பாண்டவர்கள் கௌரவர்கள் இரு சாராரும் கிருஷ்ணரின் துணையை விழைந்தனர். ஆனால் அவர் யுத்தத்தில் பங்கு கொண்டு போரிட மறுத்தார். பாண்டவர்களுக்கு நண்பராகவும், ஆலோசகராகவும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாகவும் இருக்க ஒப்புக்கொண்டார். சிறந்த வீரர்கள் அடங்கிய தமது படையை துரியோதனனுக்குக் கொடுத்தார்.

குருக்ஷேத்திரம் என்னும் பரந்த வெளியில் போர் நடந்தது. இதில் பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனனின் சகோதரர்கள், உறவினர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. பதினெட்டு அக்ஷௌஹிணிப் படையில் ஒருசிலரே எஞ்சினர். துரியோதனனின் மரணத்துடன் போர் பாண்டவருக்கு வெற்றி யாக முடிந்தது. ராணியான காந்தாரியும் விதவைப் பெண்களும் அழுது புலம்ப, மாண்ட வீரர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.

போரின் மிகப் பெரிய நிகழ்ச்சி என்னவென்றால் அமரத் துவம் வாய்ந்த அற்புதமான கீதை என்னும் தேவகானம் நமக்குக் கிடைத்ததாகும். இது இந்திய நாட்டின் பொது சாஸ்திரம், போதனைகளில் தலைசிறந்தது. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், போருக்கு முன்பு அர்ஜுனன் கிருஷ்ணருடன் நடத்திய உரை யாடல் இது. இதைப் படிக்காதவர்கள் உடனே படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நாட்டிலேயே அதன் தாக்கம் எவ்வளவோ உள்ளது! எமர்சனின் (Emerson) தூண்டுதலுக்கான மூலகாரணம் எது தெரியுமா? இந்த நூல், இந்த கீதைதான். அவர் கார்லைலைப் (Carlyle) பார்க்கச் சென்றார். கார்லைல் அவருக்கு கீதையைப் பரிசாக அளித்தார். அந்தச் சிறு நூல்தான் எமர்சனின் சமரச இயக்கத்திற்கு (Concord Movement) காரண மாகியது. அமெரிக்காவின் பெரிய இயக்கங்கள் அனைத்தும் ஏதாவது ஒருவகையில் இந்தச் சமரச இயக்கத்திற்குக் கடன் பட்டவை.

கீதையின் நடுநாயகமாகத் திகழ்பவர் கிருஷ்ணர். நாசரேத் தில் தோன்றிய ஏசுநாதரை, கடவுளே மனிதனாக வந்தவர் என்று நீங்கள் வணங்குவதுபோல் இந்துக்கள் கடவுளின் பல அவதாரங்களை வணங்குகின்றனர். தர்மத்தைக் காப்பதற்கும் தீமையை அழிப்பதற்கும், உலகின் தேவைக்கேற்ப அவ்வப்போது தோன்றுகின்ற அவதாரங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பல என்று அவர்கள் கருதுகிறார்கள். ஒவ்வொரு மதப் பிரிவுக்கும் ஒவ்வோர் அவதாரம் உண்டு. கிருஷ்ணர் அத்தகையோருள் ஒருவர். இந்தியாவில் பிற அவதாரங்களைவிட கிருஷ்ணரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். அவதாரங்களில் பூரணமானது கிருஷ்ணாவதாரம் என்று கிருஷ்ண பக்தர்கள் நம்புகிறார்கள். ஏன்? ஏனெனில் ‘புத்தரையும் மற்ற அவதாரங் களையும் பாருங்கள். அவர்கள் துறவிகள், மணமானவர்களிடம் அவர்களுக்கு அனுதாபம் இல்லை. எப்படி அனுதாபம் கொள்ள முடியும்? ஆனால் கிருஷ்ணரைப் பாருங்கள். அவர் சிறந்த மைந்தனாக, சிறந்த அரசனாக, சிறந்த தந்தையாக விளங்கினார். பிறருக்குப் போதித்த அற்புத உண்மைகளை அவர் தமது வாழ்க்கையில் அப்படியே பின்பற்றினார்’ என்கிறார்கள் அவர்கள்.

‘தீவிரச் செயல்பாட்டின் நடுவிலும் மிக இனிய அமைதியைக் காண்கின்ற, பேரமைதியின் இடையிலும் தீவிர மாகச் செயல்படத்தக்க ஒருவனே வாழ்க்கையின் ரகசியத்தை அறிந்தவன்’ என்று கிருஷ்ணர் போதித்தார். இதை எப்படிச் செய்வது என்பதை அவர் காட்டுகிறார்- பற்றற்றிருப்பதே வழி என்கிறார் அவர். எல்லா வேலைகளையும் செய், ஆனால் அவற்றுடன் ஒன்றுபடாதே. நீ தூய்மையான, சுதந்திரமான, என்றுமுள்ள ஆன்மா; நீ சாட்சி. நமக்கு வருகின்ற துயரங்கள் வேலையிலிருந்து வருபவை அல்ல, சிலவற்றின்மீது பற்று வைப்பதால்தான் வருகின்றன. உதாரணமாக பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொருள் கட்டாயமாக வேண்டியதுதான், கடுமையாக உழைத்துப் பொருள் ஈட்டுங்கள், ஆனால் அதன் மீது பற்று வைக்காதீர்கள் என்கிறார் கிருஷ்ணர். குழந்தைகள், மனைவி, கணவன், உறவினர், புகழ் என்று எல்லா விஷயங் களிலும் இப்படித்தான். எதையும் ஒதுக்க வேண்டிய அவசிய மில்லை, ஆனால் பற்று மட்டும் வைக்காதீர்கள். ஒரே ஒரு பற்றுதான் வேண்டும், அது இறைவனிடம் மட்டுமே வைக்க வேண்டும், பிறரிடம் கூடாது. மற்றவர்களை நேசியுங்கள். அவர்களுக்காக உழையுங்கள், அவர்களுக்கு நன்மை செய் யுங்கள்; தேவையானால் நூறு பிறவிகளைக்கூட அவர்களுக் காகத் தியாகம் செய்யுங்கள். ஆனால் ஒருபோதும் பற்று வைக்காதீர்கள்.

இவற்றிற்கெல்லாம் சான்றாக அவரது வாழ்க்கையே திகழ்ந்தது. ஞாபகம் இருக்கட்டும் – கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப் பட்டது. அவரது வாழ்க்கையின் சில பகுதிகள் ஏசுவின் வாழ்க்கையை ஒத்திருக்கின்றன. கிருஷ்ணர் அரச குலத்தில் பிறந்தவர். கம்சன் ஒரு கொடுங்கோல் மன்னன். குறிப்பிட்ட ஒரு குலத்தில் ஒருவன் பிறக்கப் போகிறான், அவனே இந்த நாட்டிற்கு அரசனாகப் போகிறான் என்று ஜோதிடர்கள் சொல்லியிருந்தார்கள். ஆகவே எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிடும்படி கம்சன் கட்டளையிட்டான். கிருஷ்ணரின் தாயும் தந்தையும் சிறையில் தள்ளப்பட்டனர். அங்குதான் கிருஷ்ணர் பிறந்தார். அப்போது சிறையில் பேரொளி தோன் றியது, ‘நானே உலகின் ஒளி, உலகின் நன்மைக்காகவே நான் பிறந்துள்ளேன்’ என்று கூறியது அந்தக் குழந்தை. கிருஷ்ணர் பசுக்களோடு இருப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது, ‘பசுக்களை மேய்ப்பவர்’ (கோபாலன்) என்று அவர் வழங்கப்படுகிறார். கடவுளே கிருஷ்ணராகப் பிறந்துள்ளார் என்று முனிவர்கள் கூறி அவரை வணங்கச் சென்றார்கள். ஆனால் கதையின் மற்ற பகுதிகளில் ஏசுவுக்கும் கிருஷ்ணருக்கும் ஒற்றுமையைக் காண முடியவில்லை. கொடுங்கோலனான கம்சனைக் கிருஷ்ணர் வென்றார். ஆனால் அரியணையைக் கைப்பற்றும் நோக்கமோ, அதில் அமரும் எண்ணமோ அவருக்கு இல்லை. அதைப்பற்றி அவர் கவலைப்படவுமில்லை . அவர் கடமையைச் செய்தார், அதோடு விஷயம் முடிந்தது.

குருக்ஷேத்திர யுத்தம் முடிந்தது. பதினெட்டு நாள் போரில் பத்து நாள் பங்கெடுத்த சிறந்த வீரரும் பிதாமகருமான பீஷ்மர் மரணப் படுக்கையில் படுத்திருந்தார். அப்போது, அரசனின் கடமைகள், நான்கு வருணத்தாரின் கடமைகள், வாழ்க்கையின் நான்கு படிகள், திருமண நியமங்கள், தானம் கொடுத்தல் போன்ற பல விஷயங்களில் பண்டைய முனிவர்களின் போதனை களை அடியொற்றி யுதிஷ்டிரனுக்கு அறிவுரைகள் வழங்கினார். சாங்கியத் தத்துவம், யோகத் தத்துவம் முதலியவற்றை விளக் கினார். மகான்கள், தேவர்கள், அரசர்கள் இவர்களைப்பற்றிய பல கதைகளையும் பாரம்பரியங்களையும் கூறினார். இந்தப் பகுதி மகாபாரதத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியாக அமைகிறது. இந்துச் சட்டங்களும், இந்து ஒழுக்க விதிகளுமான ஒரு விலைமதிக்க முடியாத களஞ்சியமாக இந்தப் பகுதி திகழ்கிறது.

இதற்கிடையில் யுதிஷ்டிரன் முடிசூட்டப்பட்டான். ஆனால் பயங்கரமான ரத்தக் களரியும், பெரியோர்கள் உறவினர்கள் எல்லாம் போரில் மடிந்ததும் அவனது மனத்தைப் பெரிதும் வாட்டியது. பின்னர் வியாசரின் யோசனையின்படி அவன் அசுவமேத யாகம் செய்தான்.

போருக்குப் பிறகு பதினைந்து வருடகாலம் திருதராஷ் டிரன் அமைதியாக வாழ்ந்தான். யுதிஷ்டிரனும் சகோதரர்களும் அவனது சொற்படி நடந்தார்கள், உரிய மரியாதை காட்டி னார்கள். வயது முதிர்ந்த திருதராஷ்டிரன் அதன் பிறகு யுதிஷ்டிரனை அரியாசனத்தில் அமர்த்திவிட்டுத் தனது அன்பு மனைவியுடனும், பாண்டவர்களின் தாயான குந்தியுடனும் காடு சென்று, தன் இறுதி நாட்களைத் தவ வாழ்வில் கழித்தான்.

யுதிஷ்டிரன் அரசைப் பெற்று முப்பத்தாறு வருடங்கள் ஆயின. கிருஷ்ணர் உலகிலிருந்து மறைந்த செய்தி அப்போது வந்தது. முனிவராக, நண்பராக, தீர்க்கதரிசியாக, ஆலோசகராக இருந்த கிருஷ்ணர் மறைந்துவிட்டார். அர்ஜுனன் துவாரகைக்கு விரைந்தான். திரும்பிவந்து கிருஷ்ணரும் யாதவர்களும் மாண்டு விட்ட செய்தியை உறுதிப்படுத்தினான். யுதிஷ்டிரனும் சகோதரர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர், தாங்களும் போக வேண்டிய வேளை வந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். எனவே அர்ஜுனனின் பேரனான பரீட்சித்தை அரியணையில் அமர்த்திவிட்டு, திரும்பிவராத பயணமாக இமயமலைக்குச் சென்றனர்.

இது ஒரு தனிச் சிறப்புடைய சன்னியாசம். மூப்படைந்த மன்னர்கள் சன்னியாசம் ஏற்பது பண்டைய வழக்கம். பண்டைக் கால இந்தியாவில் முதியவர்கள் எல்லாவற்றையும் துறந்துவிடு வார்கள், அவ்வாறே மன்னர்களும் துறவிகளாகிவிடுவர். இனி மேல் உலகில் வாழ வேண்டாம் என்று நினைப்பவர்கள் இமய மலைக்குச் செல்வார்கள், உணவோ நீரோ கொள்ளாமல் சதா இறைவனைச் சிந்தித்தவாறே உடல் சோர்ந்து வீழ்கின்ற வரை யில், சாகும்வரையில் நடப்பார்கள்.

தேவர்களும் முனிவர்களும் யுதிஷ்டிரனிடம் வந்து சொர்க்கத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டனர். சொர்க்கத் திற்குச் செல்ல வேண்டுமானால் இமயமலையின் மிக உயர்ந்த சிகரங்களைத் தாண்ட வேண்டும். இமய மலைக்கு அப்பால் மகாமேரு மலை உள்ளது. அதன் உச்சியில்தான் சொர்க்கம் இருக்கிறது. உடலோடு அங்கு யாரும் போனதில்லை. அங்கே தேவர்கள் வாழ்கின்றனர். அவர்கள்தான் யுதிஷ்டிரனை அழைத்தனர்.

பாண்டவர் ஐவரும் திரெளபதியும் மரவுரி தரித்துப் புறப் பட்டனர். வழியில் ஒரு நாய் அவர்களைப் பின்தொடர்ந்தது. நடந்துநடந்து கால்கள் சோர்ந்துபோயின. வடதிசையில் தன் சிகரங்களை உயர்த்தி நிற்கின்ற இமயத்திற்குச் சென்றபோது கம்பீரமான மகாமேரு மலையைக் கண்டார்கள். மௌனமாகப் பனிமீது நடந்து சென்றார்கள். திடீரென்று திரௌபதி மாண்டு கீழே விழுந்தாள். முன்னால் சென்று கொண்டிருந்த யுதிஷ்டி ரனைப் பார்த்து பீமன், ‘அரசே, அரசி வீழ்ந்தாள்’ என்றான். யுதிஷ்டிரனின் கண்களில் கண்ணீர் மல்கியது, ஆனால் அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ‘நாம் கிருஷ்ணரைச் சந்திக்கச் சென்று கொண்டிருக்கிறோம். திரும்பிப் பார்க்க நேரமில்லை, வாருங்கள்’ என்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் பீமன், ‘நமது சகோதரனான சகாதேவனும் வீழ்ந்துவிட்டான்’ என்றான். யுதிஷ்டிரன் அழுதான், ஆனால் நிற்கவில்லை. ‘தொடர்ந்து வாருங்கள்’ என்று கூறிவிட்டுச் சென்று கொண்டிருந்தான்.

அந்தக் குளிரிலும் பனியிலும் ஒருவர்பின் ஒருவராக நான்கு சகோதரர்களும் மாண்டு வீழ்ந்தனர். ஆனாலும் யுதிஷ்டிரன் மனம் தளராமல் தன்னந்தனியாக மேலே நடந்தான். திரும்பிப் பார்த்தபோது அந்த நாய் தொடர்ந்து வருவது தெரிந்தது. குளிரிலும் பனியிலும், மேட்டிலும் பள்ளத்திலும் அவரும் அந்த நாயும் மலைமீது ஏறிக் கடைசியில் மகாமேருவை அடைந் தார்கள். அப்போது விண்ணின் மங்கல மணிகள் முழங்கின. தேவர்கள் அந்த மாசற்ற மன்னன்மீது பூமாரி பொழிந்தார்கள். தேவரதம் கீழே இறங்கியது, இந்திரன் அவனிடம், ‘மனிதருள் நீ ஒருவன்தான் மானிட உடலுடன் சொர்க்கத்தில் வரக் கொடுத்து வைத்துள்ளாய்’ என்றான். ஆனால் தம் அருமைச் சகோதரர்களும் அருமை மனைவியும் இல்லாமல் சொர்க்கத்தில் நுழைய மறுத்தான் யுதிஷ்டிரன். அவர்கள் எல்லோரும் முன்பே சொர்க்கத்தை அடைந்துவிட்டதை இந்திரன் தெரிவித்தான்.

உடனே யுதிஷ்டிரன் திரும்பி நாயைப் பார்த்து, ‘குழந்தாய்! தேரில் ஏறிக்கொள்’ என்றான். இந்திரன் திகைத்து நின்றான். ‘பேரரசே, இது என்ன! நாயை விட்டுவிடு. நாய் சொர்க்கத்தினுள் வர முடியாது. உனக்குப் பைத்தியமா? மனிதர்களுள் மிகப் புனிதமான நீ மட்டுமே உடலோடு சொர்க்கத்திற்கு வர முடியும்.’

‘அந்த நாய் ஒன்றுதான் பனியிலும் குளிரிலும் என்னை விடாமல் தொடர்ந்து வந்திருக்கிறது. என் சகோதரர்கள் இறந் தார்கள். எனது ராணியும் இறந்தாள். ஆனால் அது ஒன்றுதான் என்னை விடவில்லை. அதை நான் இப்போது எப்படி விட முடியும்?’

‘நாயுடன் வருபவருக்குச் சொர்க்கத்தில் இடம் இல்லை. அதை நீங்கள் விட்டுதான் ஆகவேண்டும். அது ஒன்றும் அதர்ம மாகாது.’

‘இந்த நாய் இல்லாமல் நான் சொர்க்கத்திற்கு வர மாட் டேன். என்னைச் சரண் என்று அடைந்த இதை நான் என் உயிர் போனாலும் விட மாட்டேன். சொர்க்க போகத்திற் காகவோ, அல்லது தேவனாகிய நீங்கள் கட்டாயப்படுத்து கிறீர்கள் என்பதற்காகவோ நான் தர்மத்தைக் கைவிட மாட்டேன்.’

‘அப்படியானால் ஒரு நிபந்தனையுடன் இந்த நாய் சொர்க்கத்திற்கு வரலாம். நீ மானிடரில் உத்தமன். நாயோ மிருகங்களைக் கொன்று தின்றிருக்கிறது; வேட்டையாடுவது, மற்ற பிராணிகளைக் கொல்வது போன்ற பாவ காரியங்களைச் செய்திருக்கிறது. உனக்குப் பதிலாக வேண்டுமானால் நாய் சொர்க்கம் போகலாம்.’

‘ஏற்றுக் கொள்கிறேன், நாய் சொர்க்கம் போகட்டும்.’

உடனே காட்சி மாறியது. நாய் தனது உண்மை உருவை எடுத்து தர்மதேவனாக நின்றது. மரண தேவனான, நீதி தேவனான எமன்தான் நாயாக வந்தவன். அவன் சொன்னான்: ‘மன்னா, உன்னைப்போல் சுயநலம் அற்றவர் யாருமில்லை. ஒரு சிறு நாய்க்காகச் சொர்க்கத்தைவிடத் தயாராக இருந்தாய். அந்த சிறு பிராணிக்கு உன் புண்ணியங்களையெல்லாம் கொடுத்துவிட்டு, நரகம் செல்லவும் துணிந்தாய். மகிமைமிக்க வனே, மன்னர் மன்னா, நீ வாழ்க! உனக்கு எல்லா பிராணி களிடமும் இரக்கம் உள்ளது. பாரதா, அதற்கு இது ஒரு சிறந்த சான்று. அழியாத இன்ப உலகங்கள் அனைத்தும் உனக்கே சொந்தம். அவற்றை நீ வென்றுவிட்டாய். உனது லட்சியம் மிக உயர்ந்தது, தெய்வீகமானது’ என்றான்.

பிறகு யுதிஷ்டிரன் இந்திரனுடனும் தர்மதேவனுடனும் மற்ற தேவர்களுடனும் விண்ணுலகத் தேரில் சொர்க்கத்திற்குச் சென்றான். அதன்பிறகும் அவன் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறான். பின்பு ஆகாய கங்கையில் குளித்து தேவ உடலைப் பெறுகிறான், அழியாப் பேறு பெற்றுவிட்ட தன் சகோதரர்களைச் சந்திக்கிறான். இவ்வாறு இறுதியில் எல்லாம் இன்பமயம்!

மகாபாரதத்தின் கதை இப்படி முடிகிறது. தர்மத்திற்கு வெற்றியும், அதர்மத்திற்குத் தோல்வியும் ஏற்படும் என்பதை இந்தக் கதை நிரூபிக்கிறது.

வல்லமை மிக்க பெருவீரர்களின் கண்ணியமும் கம்பீரமும் வாய்ந்த பண்புநலன்களை அந்த மாமேதை வியாசர் தம் நுண்ணறிவுத் திறத்தால் முடிவில்லாத அணிவரிசைத் தொடர் போல் ஒழுங்காக விளக்கிச் செல்கிறார். அந்த அற்புதப் பாங்கினை நான் கூறுவது என்பது இயலாத ஒன்று.

பக்தியுள்ள ஆனால் மனத் திடம் இல்லாத குருட்டு அரசனான திருதராஷ்டிரனின் மனத்தில் தர்மத்திற்கும் பாசத் திற்குமிடையே நடக்கும் போராட்டம்; பிதாமகரான பீஷ்மரின் மகோன்னதமான குணச் சித்திரம்; யுதிஷ்டிரனின் சிறந்த பண்பும் தர்மமும்; நான்கு சகோதரர்களின் விசுவாசமும் வீரமும்; கிருஷ்ணரின் பரிசுத்தமான பண்பும், ஈடிணையற்ற உலக ஞானமும்; இனி, ஆண்களுக்குச் சளைக்காத பெண்களின் பாத்திரங்கள்-கம்பீரமான காந்தாரி, அன்புத் தாய் குந்தி, அடக்கமே உருவானவளும் துன்பத்தைச் சகிப்பவளுமான திரௌபதி, இன்னும் நூற்றுக்கணக்கான மகாபாரதக் கதா பாத்திரங்களும், ராமாயணக் கதாபாத்திரங்களும் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக இந்துக்களின் சொத்தாக இருந்துவருகின்றன; அவர்களின் சிந்தனைகளுக்கும் நற்பண்பு களுக்கும் தார்மீகக் கருத்துக்களுக்கும் அடிப்படையாக உள்ளன. உண்மையில், ராமாயணமும் மகாபாரதமும் பழங்கால ஆரியர் களின் வாழ்க்கையும் அறிவும் அடங்கிய அறிவுக் களஞ்சியங்கள். இவை விரிக்கின்ற லட்சிய நாகரீகத்தை இன்னும் மனிதகுலம் எட்டிப் பிடிக்கவில்லை .

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 20. மகாபாரதம்

18. ராமாயணம்

ராமாயணம்

கலிபோர்னியா, 31 ஜனவரி 1900

மிகவும் பழமை வாய்ந்த சிறந்த இரண்டு இதிகாசங்கள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன. இன்னும் நூற்றுக்கணக்கான காப்பியங்கள் அந்த மொழியில் இருக்கின்றன. சம்ஸ்கிருதம் இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமொழியாக இல்லை யென்றாலும், அந்த மொழியும் அதன் இலக்கியமும் தொன்று தொட்டு இன்றுவரை விளங்கிவருகின்றன. ராமாயணம், மகா பாரதம் என்கின்ற இரண்டு மிகப் புராதனமான இதிகாசங் களைப் பற்றி இப்போது பேசப் போகிறேன். பழங்கால இந்தியர் களின் பழக்க வழக்கங்கள், சமூக நிலை, நாகரீகம் போன்றவற்றை இவற்றிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம்.

இந்த இரண்டில் மிகப் பழையது ராமாயணம், ‘ராமனின் வாழ்வு’. இதற்கு முன்பே இந்தியாவில் கவிதை இலக்கியம் இருந்திருக்கிறது. இந்துக்களின் புனித நூல்களான வேதங்கள் ஒருவகையான சந்தத்தில்தான் எழுதப்பட்டுள்ளன. இருந்தும் ராமாயணம்தான் கவிதையின் ஆரம்பம் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

இதை எழுதியவர் வால்மீகி முனிவர். பிற்காலத்தில் இவரைப்பற்றிப் பல கற்பனைக் கதைகள் புனையப்பட்டன. அவர் இயற்றாத பாடல்களையும் இயற்றியதாகச் சொல்வது பிற்காலத்தில் பழக்கமாகிவிட்டது. இந்த இடைச்செருகல்களை எல்லாம் மீறி, ராமாயணம் ஓர் அற்புதக் காவியமாக நம் கை களில் வந்து சேர்ந்துள்ளது. அதற்கு ஒப்பான நூல் எதுவும் இல்லை .

தன் குடும்பத்தை எந்த வகையிலும் காப்பாற்ற முடியாத இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பலசாலி, வேகம் மிக்கவன். கடைசியில் அவன் வழிப்பறிக் கொள்ளைக்காரனாக மாற நேர்ந்தது. தெருவில் செல்பவர்களைத் தாக்கி, கொள்ளை யடித்து, அந்தப் பணத்தைக் கொண்டு தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றி வந்தான் அவன். இது தொடர்ந்து நடைபெற்றது. ஒருநாள் நாரத முனிவர் அந்த வழியாகச் சென்றார், இவன் அவரையும் தாக்கினான். உடனே முனிவர், ‘எதற்காக என்னைக் கொள்ளையடிக்க முயல்கிறாய்! மனிதர்களைக் கொள்ளையடிப்பதோ கொல்வதோ கொடிய பாவம். எதற்காக இந்தப் பாவத்தைச் செய்கிறாய்?’ என்று கேட்டார்.

‘ஏன், இந்தப் பணத்தைக் கொண்டு நான் என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என்றான் அவன்.

‘உன் பாவத்திலும் அவர்கள் பங்கு ஏற்பார்கள் என்று நீ நினைக்கிறாயா?’

‘நிச்சயமாக.’

‘நல்லது. என்னை இங்குக் கட்டிப் போட்டுவிட்டு வீட்டிற்குப் போ. உன் பணத்தில் பங்கு ஏற்பதுபோல், உன் பாவத் திலும் அவர்கள் பங்கு ஏற்பார்களா என்று கேள்.’

அவனும் வீடுசென்று தன் தந்தையைப் பார்த்து, ‘அப்பா நான் உங்களை எப்படிக் காப்பாற்றுகிறேன் என்பது உங் களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டான்.

‘எனக்குத் தெரியாது’ என்றார் அவர்.

‘நான் ஒரு கொள்ளைக்காரன். நான் மக்களைக் கொன்று, கொள்ளையடிக்கிறேன்.”

‘என்ன, என் மகனாகப் பிறந்து நீ அப்படியா செய்கிறாய்? நீசா, அப்பால் போய்விடு.’

பிறகு அவன் தன் தாயிடம் சென்று, ‘அம்மா, நான் உன்னை எப்படிக் காப்பாற்றுகிறேன் என்பது உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டான்.

‘தெரியாது.’

‘கொள்ளையடித்தும் கொலை செய்தும்.’

‘என்ன பயங்கரம்’ என்று அலறினாள் தாய். ‘என் பாவத்தில் நீ பங்கேற்றுக் கொள்வாயா?’

‘எதற்காக நான் பங்கேற்க வேண்டும்? நான் ஒருபோதும் கொள்ளையடிக்கவில்லையே!’

பிறகு அவன் தன் மனைவியிடம் சென்று, ‘நான் உங்களை யெல்லாம் எப்படிக் காப்பாற்றுகிறேன் என்பது உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டான்.

‘தெரியாது.’

‘நான் ஒரு கொள்ளைக்காரன். கொள்ளையடித்துதான் பல வருடங்களாக உங்களையெல்லாம் காப்பாற்றி வரு கிறேன். இப்பொழுது நான் தெரிந்துகொள்ள விரும்புவது என்னவென்றால், என் பாவத்தில் நீ பங்கு ஏற்பாயா என்பதுதான்.’

‘ஒருபோதும் முடியாது. நீங்கள் என் கணவர். என்னைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை’ என்றாள் அவள்.

கொள்ளைக்காரனின் கண்கள் திறந்தன. ‘இதுதான் உலகம்; யாருக்காக நான் கொள்ளையடித்தேனோ, அந்த நெருங்கிய உறவினர்கள் கூட என் விதியில் பங்கு ஏற்கப் போவதில்லை ‘ என்பதை எண்ணிப் பார்த்தான். நேராக முனிவரைக் கட்டி வைத்திருந்த இடத்திற்குத் திரும்பி வந்தான். அவரது கட்டுக் களை அவிழ்த்து விட்டான். அவரது கால்களில் வீழ்ந்து, நடந்தது எல்லாவற்றையும் கூறி, ‘சுவாமி, என்னைக் காப்பாற்றுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான். முனிவர் சொன்னார்: ‘உன் தற்போதைய வாழ்க்கை முறையை விட்டுவிடு. குடும்பத்தினர் யாரும் உன்னை உண்மை யில் நேசிக்கவில்லை என்பது தெரிகிறது அல்லவா! எனவே இந்த மனமயக்கங்களை ஒழித்துவிடு. அவர்கள் உன் செல்வத் தில் பங்குகொள்வார்கள்; உன்னிடம் ஒன்றும் இல்லையென்று தெரிந்ததும் அகன்றுவிடுவார்கள். உன் தீமையில் யாரும் பங்கு கொள்ள மாட்டார்கள், உன் நன்மையில் பங்குகொள்ள எல்லோரும் வருவார்கள். ஆகவே, நாம் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் நம்மை விட்டு அகலாத ஒரே ஒருவரான எம்பெருமானை வழிபடு. அவர் ஒருநாளும் நம்மைக் கைவிட மாட்டார். ஏனெனில் அன்பு ஒருபோதும் கீழே வீழ்த்தாது; அது பேரம் பேசாதது, சுயநலம் இல்லாதது’ என்றார். பிறகு வழிபாட்டு முறையை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார் நாரதர்.

இளைஞன் எல்லாவற்றையும் துறந்து காட்டிற்குச் சென் றான், பிரார்த்தனையிலும் தியானத்திலும் தன்னை மறந்து ஆழ்ந்தான். நாளடைவில் கறையான்கள் அவனைச் சுற்றிப் புற்றுக் கட்டிவிட்டன. அதையும் அவன் அறியவில்லை. ஆண்டுகள் பல கடந்தன. கடைசியில், ‘ஓ முனிவனே எழுந்திரு’ என்று ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலால் எழுப்பப்பட்ட அவன், ‘நானா முனிவன், நான் ஒரு கொள்ளைக்காரன்’ என்று திகைப்புடன் கூவினான். ‘அல்ல, இனி நீ கொள்ளைக்காரன் அல்ல. நீ ஒரு தூய முனிவன். உனது பழைய பெயரும் மறைந்து விட்டது. உன்னைச் சுற்றிக் கறையான்கள் புற்று கட்டுவதைக் கூட உணராமல் தியானத்தில் ஆழ்ந்திருந்ததால் நீ இனி வால்மீகி-கறையான் புற்றிலிருந்து தோன்றியவன்-என்று வழங்கப்படுவாய்’ என்றது அந்தக் குரல். இவ்வாறு அந்த இளைஞன் முனிவரானார்.

இனி, அவர் கவிஞரான விதம் இது: ஒருநாள் அவர் புனித கங்கையில் நீராடச் சென்றுகொண்டிருந்தார். தற் செயலாக மேலே அண்ணாந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் இரண்டு புறாக்கள் சுற்றிச்சுற்றி வந்து ஒன்றுடன் ஒன்று கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தன. அந்தக் காட்சி அவரது மனத்தில் மகிழ்ச்சியை நிறைத்தது. அப்போது விர்ரென்று ஓர் அம்பு அவரைக் கடந்துசென்று ஆண் புறாவைக் கொன்றுவிட்டது. ஆண் புறா கீழே விழுந்ததும் துக்கம் தாளாத பெண்புறா அதன் உடலைச் சுற்றிப் பறந்தது. முனிவர் மனம் பதைத்துத் திரும்பிப் பார்த்தார். அங்கே வேடன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். ‘இரக்கமற்ற பாவி, அந்த இளம் பறவைகளின் காதல் முடியும்வரைகூட உன் கொலைக்கரம் காத்திருக்கவில்லையே’ என்று கதறினார். கூடவே ‘என்ன இது, நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன்? இதற்கு முன்பு நான் இந்த விதமாகப் பேசியது கிடையாதே’ என்ற ஓர் எண்ணம் அவருள் எழுந்தது. அப்போது ஒரு குரல், ‘அஞ்சாதே. உன் வாயிலிருந்து வந்துகொண்டிருப்பது கவிதை. உலக நன்மைக்காக, ராமனின் வாழ்க்கைச் சரித்திரத்தைக் கவிதையில் எழுது’ என்றது. இவ்வாறுதான் கவிதை முதன்முதல் தொடங் கியது. முதல் கவிஞரான வால்மீகியின் வாயிலிருந்து வெளிப் பட்ட முதல் சுலோகம் கருணையின் காரணமாக வெளிப் பட்டது. அதற்குப் பிறகுதான் அவர் அழகிய ராமாயணத்தை, ராமபிரானின் வாழ்க்கைக் காவியத்தை இயற்றினார்.

பண்டைய இந்திய நகரங்களுள் ஒன்று அயோத்தி. இன்றும் அது இருக்கிறது. அது இருக்கும் பகுதியான அவுத் தற்போதும் உள்ளது, இந்தியாவின் வரைபடத்தில் நீங்கள் அதைப் பார்த்திருக்கலாம். அதுவே அந்தப் பண்டைய அயோத்தி மாநகரம். அந்த நாட்டை தசரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு மூன்று மனைவியர், ஆனால் பிள்ளைப் பேறில்லை. எனவே மன்னனும் மனைவியரும் நல்ல இந்துக்கள் செய்வதுபோல் தீர்த்தயாத்திரைகள் சென்றனர், உபவாசமிருந்தனர், பிரார்த்தனைகள் செய்தனர். உரிய நற் காலத்தில் நான்கு மைந்தர்கள் பிறந்தனர். அவர்களுள் மூத்தவன் ராமன்.

உடன்பிறந்தோர் நால்வருக்கும் எல்லா துறைகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் சச்சரவுகள் எழாமல் தடுப்பதற்காக ஒரு முறையைப் பண்டைய இந்தியாவில் மன்னர்கள் பின்பற்றி வந்தார்கள். அதாவது மன்னன் தன் காலத்திலேயே மூத்த மகனைத் தன் வாரிசாக, இளவரசனாகப் பட்டம் கட்டிவிடுவான்.

ஜனகர் மற்றொரு மன்னர். அவருக்குச் சீதை என்று ஓர் அழகிய மகள் இருந்தாள். அவள் ஒரு வயலில் கண்டெடுக்கப் பட்டவள்; அவள் பூமியின் மகள்; தாய் தந்தையர் இல்லாமல் தோன்றியவள். ‘ஸீதா’ என்ற பழைய சம்ஸ்கிருதச் சொல்லுக்குக் கலப்பை உழுத சுவடு என்பது பொருள். குழந்தைகள் ஒருவருக்கு மட்டும் பிறப்பதாக, பெற்றோர் இல்லாமல் உண்டாவதாக, வேள்வித்தீயில் தோன்றுவதாக, வயலில் தோன்றுவதாக, மேக மண்டலங்களிலிருந்து கீழே வருவதாக எல்லாம் பண்டைய இந்தியப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய வினோதப் பிறப்புகள் இந்தியப் புராணங்களில் சர்வ சாதாரணமான ஒன்று.

நில மகளான சீதை தூயவளாக, மாசற்றவளாக விளங் கினாள். ஜனகர் அவளை வளர்த்து வந்தார். திருமணப் பருவம் அடைந்ததும் அவளுக்குத் தகுதியான ஒரு கணவனைத் தேட எண்ணினார்.

சுயம்வரம் என்பது பண்டைய இந்திய வழக்கம். இதில் தான் அரசகுமாரிகள் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுப்பார்கள். நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அரசகுமாரர் பலர் அழைக்கப் படுவர். அரசகுமாரி சர்வ அலங்காரத்துடன் கையில் மலர் மாலையொன்றுடன் வருவாள். தோழி ஒருத்தி அவளுடன் சென்று ஒவ்வொரு அரச குமாரர்களின் தனிப்பட்ட சிறப்பு களையும் எடுத்துச் சொல்வாள். ஒவ்வொன்றையும் கேட்ட படியே செல்கின்ற அவள், தான் விரும்புகின்ற ஆண்மகனின் கழுத்தில் மலர் மாலையைச் சூட்டி அவனைக் கணவனாகத் தேர்ந்தெடுப்பாள். பிறகு மிகுந்த சிறப்புடன் ஆடம்பரமாகத் திருமணம் நடக்கும்.

சீதையை மணக்க அரசிளங்குமரர் பலர் விரும்பினர். ஹர தனு என்ற மாபெரும் வில்லை வளைப்பது அவர்களுக்குப் பரீட்சையாக வைக்கப்பட்டது. அங்கே கூடியிருந்த அரச குமாரர்கள் முழுவலிமையுடன் முயன்றும் வெற்றிபெற முடிய வில்லை. இறுதியில் ராமன் அந்தப் பெரிய வில்லைத் தன் கையில் எடுத்து எளிதாக வளைத்தான், அதில் அந்த வில் ஒடிந்தேவிட்டது. தசரதனின் மைந்தனான ராமனைச் சீதை கணவனாக ஏற்றாள்; மகிழ்ச்சி வெள்ளம் பொங்கத் திருமணம் நடந்தது. ராமன் தன் தேவியை அயோத்திக்கு அழைத்துச் சென்றான். தான் அரசியலைத் துறந்து ராமனை இளவரசன் ஆக்குவதற்கு அதுவே தகுந்த காலம் என்று கருதினான் தசரதன். எனவே அதற்குரிய ஆயத்தங்களைச் செய்தான். அந்த நற் செய்தியைக் கேட்டு நாடே பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

தசரதனின் இரண்டாவது மனைவி கைகேயி. அவள் நீண்ட காலத்திற்கு முன்பு ஒருநாள் தசரதனின் மனம் மகிழத்தக்க ஒரு காரியம் செய்தபோது அவளுக்கு இரண்டு வரங்கள் தருவதாக வாக்களித்திருந்தான் அவன்; ‘என்னால் முடியக்கூடிய ஏதாவது இரண்டைக் கேள், அதை நான் உனக்குத் தருவேன்’ என்று கூறியிருந்தான் மன்னன். ஆனால் கைகேயி அப்பொழுது அவற்றைக் கேட்கவில்லை, பின்னர் அதை மறந்தும்விட்டாள். ஆனால் கொடிய மனம் கொண்ட பணிப்பெண் ஒருத்தி இப்போது அதை அவளுக்கு நினைவூட்டி, அவளுடைய பொறாமையைத் தூண்டிவிட்டாள். ராமனுக்குப் பதிலாக அவளுடைய மகனான பரதனுக்குப் பட்டம் சூட்டப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று திரும்பத்திரும்பக் கூறி கைகேயியின் மனத்தைக் கரைத்தாள். கடைசியில் கைகேயியின் மனமும் பொறாமையினால் கொழுந்து விட்டெரியத் தொடங் கியது. இரண்டு வரங்களை அரசனிடம் கேட்குமாறு சொன் னாள் அந்தப் பணிப்பெண்- ஒன்று பரதன் அரியாசனத்தில் அமர வேண்டும்; இன்னொன்று, ராமன் பதினான்கு வருடங்கள் காடு செல்ல வேண்டும்.

முதியவனான மன்னனுக்கு ராமன் உயிருக்கு உயிரானவ னாக இருந்தான். அரசன் என்ற முறையில் இந்தக் கொடிய வரங் களை அளிக்காமல் அவன் பின்வாங்க முடியவில்லை. என்ன செய்வது என்று அறியாமல் தவித்தான். அப்போது ராமன் முன்வந்து, தந்தை பொய் பேசினார் என்ற அவச்சொல் ஏற்படக் கூடாது என்பதற்காக, தானே அரியாசனம் துறந்து, நாடுகடந்து, வனவாசம் போவதாகச் சொன்னான். தன் அருமை மனைவி சீதையையும், தன்னைவிட்டு எக்காரணத்தாலும் பிரியாத அருமைச் சகோதரன் லட்சுமணனையும் அழைத்துக்கொண்டு பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பயங்கர வனங்களில் யார் வசிக்கிறார்கள் என்பது ஆரியர்களுக்குத் தெரியாது. அக்காலத்தில் வனத்தில் வாழ்ந்தவர்கள் ‘வானரர்கள்’ (குரங்குகள்) என்று அழைக்கப் பட்டனர். இப்படி குரங்குகள் என்று அழைக்கப்பட்டவர்களுள் பலசாலிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் இருந்தவர்கள் ‘அரக்கர்கள்’ என்று வழங்கப்பட்டனர்.

அரக்கர்களும் குரங்குகளும் வாழ்கின்ற காட்டிற்குள் ராமனும், லட்சுமணனும், சீதையும் புகுந்தனர். தானும் காட் டிற்கு வருவதாகச் சீதை சொன்னபோது அவளிடம் ராமன், ‘நீ ஓர் இளவரசி ஆயிற்றே! எதிர்பாராத அபாயங்கள் நிறைந்த காடுகளில் இன்னல்களை ஏற்று என்னைத் தொடர்ந்து எப்படி நீ வருவாய்?’ என்று கேட்டான். ‘எங்கே ராமன் செல்வானோ அங்கே சீதையும் செல்வாள். என்னை இளவரசி என்றும், மன்னர் குலத்தில் பிறந்தவள் என்றும் எப்படி நீங்கள் கூறலாம்? நான் உங்கள் முன்பு செல்வேன்’ என்று கூறிச் சீதை நடந்தாள். இளையவனும் அவர்களுடன் சென்றான். அடர்ந்த காட்டில் உள்ளே சென்று கோதாவரி ஆற்றை அடைந்தனர். ஆற்றங் கரையில் சிறிய குடிசைகளை அமைத்து, மான் வேட்டை ஆடுவதிலும் பழங்கள் பறிப்பதிலும் முனைந்தார்கள். இவ்வாறு அவர்கள் வாழ்க்கை கழிந்தது.

ஒருநாள் அரக்கி ஒருத்தி அங்கே வந்தாள். அவள் இலங்கையின் அரக்கர் வேந்தனான ராவணனின் தங்கை. காட்டில் திரிந்துகொண்டிருந்த அவள் அழகிய ராமனைக் கண்டதும் அவன்மீது மையல் கொண்டாள். ராமனோ மனிதர்களுள் தூயவன், மேலும் திருமணம் ஆனவன். ஆதலால் அவன் அவளது ஆசைக்கு இணங்கவில்லை. எனவே அவள் வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் நேராகச் சென்று, பேராற்றல் வாய்ந்த தன் அண்ணனிடம் சென்று ராமனின் மனைவியான சீதையின் அழகைப்பற்றி எடுத்துக் கூறினாள்.

மனிதர்களுள் மிகுந்த ஆற்றல் படைத்தவன் ராமன். அரக்கர்கள், பூதங்கள் என்று யாருக்கும் அவனை வெல்வதற் குரிய வலிமை இல்லை. ஆகவே ராவணன் சூழ்ச்சியை நாடி னான். அதற்காக மந்திரவாதியான ஓர் அரக்கனை அழைத்து ஓர் அழகிய பொன்மானாக மாறும்படிச் செய்தான். ராமன் வாழ்கின்ற இடத்தில் இங்குமங்கும் திரிந்தவாறு, துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது அந்தப் பொன் மான். அதன் அழகால் கவரப்பட்ட சீதை ராமனிடம் அதனைப் பிடித்துத் தருமாறு கேட்டாள்.

சீதையைத் தம்பியின் பொறுப்பில் விட்டுவிட்டு, அந்த மானைப் பிடிக்கக் காட்டினுள் சென்றான் ராமன். லட்சுமணன் குடிசையைச் சுற்றி அக்கினி வட்டம் ஒன்று வரைந்து சீதையைப் பார்த்து, ‘இன்று உங்களுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இந்த மந்திர வட்டத்திற்கு வெளியே போகா தீர்கள். போனால் உங்களுக்கு ஆபத்து நேரிடலாம்’ என்று கூறினான். இதற்கிடையே ராமன் அந்த மாயமான்மீது அம்பெய் தான். உடனே அந்த மான் மனித உரு எடுத்து மாண்டது. அந்த வேளையில் ‘லட்சுமணா, உதவிக்கு வா’ என்று ராமனின் குரல் அந்தக் குடிசையில் கேட்டது. ‘லட்சுமணா, ராமருக்கு உதவ, உடனே போ’ என்று சீதை கூறினாள். ‘இது ராமனின் குரல் அல்ல’ என்று மறுத்தான் லட்சுமணன். சீதை மன்றாடிக் கேட்டுக் கொண்டதால் ராமனைத் தேடிச் சென்றான்.

லட்சுமணன் சென்றதும் அங்கே துறவி வேடத்தில் வந்தான் ராவணன். குடிசை வாசலில் நின்றுகொண்டு பிச்சை யளிக்கும்படி சீதையை வேண்டினான். ‘என் கணவர் வரும் வரை பொறுங்கள். நிறைய பிச்சை தருகிறேன்’ என்றாள் சீதை. ‘அம்மா, நான் காத்திருக்க இயலாது, பசி என்னை வாட்டுகிறது. இருப்பதைக் கொடுங்கள்’ என்றான் அந்தக் கபடன். சீதை குடிசையிலிருந்த சில பழங்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். தான் தூயவன், எனவே அருகில் வர அஞ்ச வேண்டிய தில்லை என்றெல்லாம் பேசி அவளைக் கோடுதாண்டி வரச் செய்தான் ராவணன். வந்த உடனே அவன் அரக்க உருவெடுத்து அவளைத் தன் கரங்களால் பற்றி, தன் மாய ரதத்தை அழைத்து அதில் ஏற்றிக்கொண்டு அவள் ஓலமிட்டுக் கதறக்கதறப் பறந்து ஓடிவிட்டான். அந்தோ, சீதை என்ன செய்வாள்! அவளது உதவிக்கு வர யாரும் அங்கு இல்லை. ராவணன் அவளைத் தூக்கிக்கொண்டு வான்வழியாகச் செல்லும்போது தன் நகைகள் சிலவற்றைக் கழற்றி இடையிடையே தரையில் எறிந்து கொண்டே போனாள் சீதை.

ராவணன் அவளை இலங்கைக்கு எடுத்துச் சென்றான். அவளைத் தன் ராணியாக்க எவ்வளவோ முயன்றான், பல வழி களில் ஆசை காட்டினான். ஆனால் கற்பே வடிவான சீதை அந்த அரக்கனுடன் முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. அவன் அவளைத் தண்டிக்கும் பொருட்டு, அவள் தனக்கு மனைவியாகச் சம்மதிக்கும் வரையில் ஒரு மரத்தின் அடியில் இரவும்பகலும் தங்கியிருக்கும்படிச் செய்தான்.

ராமனும் லட்சுமணனும் குடிசைக்குத் திரும்பினர். சீதையைக் காணாததால் அவர்கள் அடைந்த துயரத்திற்கு எல்லையே இல்லை. அவளுக்கு என்ன நேர்ந்திருக்கக் கூடும் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் அவளைத் தேடி அலைந்தனர். ஆனால் எங்கும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

நீண்டகாலம் தேடித்திரிந்த பிறகு ஒரு ‘குரங்குக்’ கூட்டத்தைக் கண்டார்கள். அந்தக் கூட்டத்தில் ‘தெய்வ வானர மான’ அனுமன் இருந்தான். குரங்குகளுள் மிகச் சிறந்தவனான அனுமன் ராமனுக்கு விசுவாசமிக்க தொண்டனாக மாறி, சீதையை மீட்பதற்கு மிகவும் உதவினான். அதை நாம் பின்னர் காண்போம். பகவானின் உண்மையான தொண்டனுக்கு எடுத்துக்காட்டாக அனுமனை இன்றும் இந்துக்கள் வழிபடு கிறார்கள். அனுமன் ராமனிடம் கொண்டிருந்த பக்தி அவ்வளவு உன்னதமானதாக இருந்தது. ‘குரங்குகள்’ என்றும் ‘அரக்கர்கள்’ என்றும் கூறப்படுபவர்கள் தென்னிந்தியாவின் பழங்குடி மக்களே என்பதை நினைவில்கொள்ள வேண்டும். ராமன் அவர்களோடு நட்புப் பூண்டான்.

அந்த வானரர்கள் சீதையைப் பற்றிய பல தகவல்களை ராமனுக்குக் கூறினர். விண்ணில் ரதம் ஒன்று பறந்து சென்றது, அழகான ஒரு பெண்ணுடன் ஓர் அரக்கன் அதில் இருந் தான், அந்தப் பெண் விம்மிவிம்மி அழுது கொண்டிருந்தாள், மேலே ரதம் விரைந்தபொழுது அவள் தங்கள் கவனத்தைக் கவர்வதற்காகத் தன் நகைகளில் ஒன்றை எறிந்தாள் என்றெல்லாம் அவர்கள் ராமனுக்குக் கூறி அந்த நகையைக் காண்பித்தார்கள். அது ஒரு மாலை. லட்சுமணன் அதைக் கையிலெடுத்துப் பார்த்துவிட்டு, ‘இது யாருடைய நகை தெரியவில்லையே’ என்றான். ராமன் அதைக் கையில் வாங்கியதும், ‘ஆகா, இது சீதையின் மாலைதான்’ என்று கூறினான். லட்சுமணனால் அதனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஏனெனில் சீதையின் கைகளையோ கழுத்தையோ அவன் பார்த்ததில்லை. இந்தியாவில் அண்ண னின் மனைவி அவ்வளவு மரியாதைக்கு உரியவளாகக் கருதப்பட்டாள். அந்த மாலையை லட்சுமணன் அறிந்திருக்க முடியாதல்லவா? இந்தச் சிறு நிகழ்ச்சியில் பண்டைய இந்தியாவின் பழக்கத்தினுடைய ஓர் அம்சத்தைக் காண் கிறோம். அந்த அரக்கன் யார் என்பதையும், அவன் எங்கே வாழ்கிறான் என்பதையும் வானரர்கள் கூறினர். அவனைத் தேட அனைவரும் சென்றனர்.

இதற்கிடையில் வானர வேந்தனான வாலியும் அவனது தம்பி சுக்ரீவனும் அரசுடைமைக்காகத் தம்மிடையே சண்டை யிட்டுக் கொண்டிருந்தனர். வாலி, சுக்ரீவனை வெளியே விரட்டி விட்டான். வாலியிடமிருந்து அரசை மீட்பதில் ராமன் சுக்ரீவனுக்குத் துணைபுரிந்தான். அதற்கு ஈடாக ராமனுக்கு உதவுவதாக சுக்ரீவன் வாக்களித்தான்.

நாடு முழுதும் துருவித் தேடினர்; ஆனால் சீதையைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இறுதியில் இந்தியக் கடற்கரை யிலிருந்து அனுமன் ஒரே தாவலில் இலங்கைத் தீவில் பாய்ந்தான். இலங்கை முழுவதும் தேடினான், அவளைக் காணவில்லை.

அரக்கர் தலைவனை ராவணன் தேவர்களையும் மனிதர் களையும் வென்றவன்; உண்மையில் உலகம் அனைத்தையும் தன்னடிக்கீழ் நிற்கச் செய்தவன்; உலகிலுள்ள அழகிய பெண்கள் அனைவரையும் தன் அந்தப்புரத்தில் வைத்துக் கொண்டவன். ‘அவர்களோடு ஒருத்தியாக அந்த அரண்மனையில் சீதை இருக்க முடியாது. அத்தகைய ஓரிடத்தில் இருப்பதைவிட அவள் உயிர் துறந்திருப்பாள்’ என்று சிந்தித்தான் அனுமன்; ஆகவே வேறு இடங்களில் அவளைத் தேடிச் சென்றான். இறுதியில் கீழ்வானில் காணும் பிறை நிலவுபோல் உடல் வெளுத்து மெலிந்து ஒரு மரத்தடியில் சீதை வீற்றிருந்ததை அவன் கண்டான். ஒரு சிறிய குரங்கின் உருவில் அந்த மரத்தின்மீது ஏறி அமர்ந்தான். ராவணன் அனுப்பிய அரக்கிகள் சீதையை இணங்கச் செய்வதற் காக எப்படியெல்லாம் அவளை அச்சுறுத்த முயல்கிறார்கள், எப்படிச் சீதை ராவணனின் பெயரைக் கேட்கக்கூடச் சகிக்காமல் இருக்கிறாள் என்பதையெல்லாம் கண்டான்.

பிறகு அனுமன் சீதையின் அருகில் வந்து, தான் ராம தூதனாகியதையும், அவளைத் தேடும்படி ராமன் தன்னை அனுப்பியதையும் கூறினான். அடையாளம் கண்டுகொள் வதற்காக ராமன் அளித்த முத்திரை மோதிரத்தையும் சீதைக்குக் காட்டினான். அவள் இருக்குமிடத்தை அறிந்தவுடன், ராமன் படையுடன் வந்து, அரக்கனை வென்று அவளை மீட்பான் என்றும் சொன்னான். ஆனால் சீதை விரும்பினால் அவளைத் தன் தோள்களில் தூக்கிக்கொண்டு, ஒரே பாய்ச்சலில் கடலைக் கடந்து ராமனை அடைவதாகவும் தெரிவித்தான். ஆனால் கற்பின் வடிவான சீதை அதற்குச் சம்மதிக்கவில்லை, கணவனைத் தவிர வேறு யாரையும் அவள் தொட மாட்டாள். ஆகவே அவள் இருந்த இடத்திலேயே இருந்தாள். ஆனால் ராமனுக்கு எடுத்துச் செல்வதற்காகத் தன் கூந்தலில் அணிந்திருந்த ஓர் ஆபரணத்தை அனுமனிடம் கொடுத்தாள். அந்த ஆபரணத் தோடு அனுமன் திரும்பினான்.

அனுமனின் வாயிலாகச் சீதையைப் பற்றிய விவரங்களை அறிந்த ராமன் படை திரட்டிக்கொண்டு இந்தியாவின் தென் கோடிக்குச் சென்றான். அங்கே ராமனுடைய வானர வீரர்கள் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கின்ற ‘சேது பந்தனம்’ என்ற பெரிய பாலம் கட்டினார்கள். இன்றும் கடல் அடங்கி ஆழமில்லாமல் இருக்கும்போது அங்கே உள்ள மணல்திட்டுக்கள் மீது நடந்தே இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றுவிடலாம்.

ராமன் கடவுளின் அவதாரம். இல்லாமல் இவற்றை யெல்லாம் அவன் எப்படிச் செய்திருக்க முடியும்? இந்துக்களைப் பொறுத்தவரை அவன் ஓர் அவதார புருஷன். அவனை ஏழாவது அவதாரம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

வானரர்கள் குன்றுகளைப் பெயர்த்துக் கடலில் போட்டு, அவற்றைக் கற்களாலும் மரங்களாலும் மூடி ஒரு பெரிய பாலத்தைக் கட்டினார்கள். ஒரு சிறிய அணிலும் இந்தப் பணி யில் பங்கெடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அது மணலில் புரளும், பின்னர் ஓடிச் சென்று தன் உடலில் ஒட்டிய மணலை அணையில் உதறி தன்னால் முடிந்த சிறு அளவில் உதவியதாம்! அதன் செயலைக் கண்டு வானரர்கள் நகைத்தனர். அவர்களோ முழு மலைகளையும், பெருங்காடுகளையும், மணற் சுமைகளையும் சுமந்து வந்தனர். ஆனால் அணிலோ மணல்மீது புரண்டு அதைப் பாலத்தின்மீது உதறியதோடு சரி! அதைக் கண்டராமன், ‘இந்தச் சிறிய அணில் பேறு பெற்றது. தன்னால் முடிந்தவரையில் அது வேலை செய்கிறது. எனவே அது உங் களுள் பெரிய வீரனுக்கு நிகரான சிறப்புடையதே’ என்றான்; பிறகு அதன் முதுகை மெல்ல வருடினான். ராமனுடைய கை விரல்கள் வருடிய கோடுகளை இன்றும் அணிலின்மீது காணலாம்.

அணை கட்டி முடிந்ததும் ராமனும் அவனது உடன் பிறந்தவனும் நடத்திச் சென்ற வானரப்படை இலங்கையுள் புகுந்தது. மாதக்கணக்காகப் பெரும் போர் நடந்தது. ரத்த வெள்ளம் பெருகி ஓடியது. இறுதியில் ராவணன் தோல்வியுற்று மடிந்தான். பொன்மயமான அரண்மனைகளுடன் திகழ்ந்த அவனது தலைநகரம் கைப்பற்றப்பட்டது. இந்தியாவின் உட் பகுதியிலுள்ள தொலைதூர கிராமங்களில், நான் இலங்கைக்குச் சென்றிருந்த செய்தியைக் கூறினேன். அந்த எளிய மக்கள் உடனே என்னிடம், ‘அங்கு வீடுகள் எல்லாம் தங்கத்தால் கட்டப்பட்டிருக்குமென்று நமது நூல்கள் கூறுகின்றதே, அப்படியா?’ என்று கேட்கிறார்கள். இத்தகைய தங்கமயமான நகரங்கள் ராமன் கைவசமாயின. போரில் தனக்கு உதவிய தற்காக ராமன் அவற்றை ராவணனின் இளையதம்பியான விபீஷணனுக்குத் தந்து, ராவணன் வீற்றிருந்த அரியணையில் அவனை அமரச் செய்தான்.

பிறகு ராமன் சீதையுடனும் பிறருடனும் இலங்கையை விட்டுப் புறப்பட்டான். அப்போது ராமனைச் சேர்ந்தவர் களிடையே, ‘நிரூபணம், நிரூபணம்’ என்றொரு சலசலப்பு எழுந்தது. ‘ராவணனின் அரண்மனையில் இருந்தவள் சீதை, தான் தூய்மை பிறழாதவள் என்பதை நிரூபிக்கவில்லை. அதை அவள் நிரூபிக்க வேண்டும், நிரூபணம் தேவை’ என்றார்கள் அவர்கள். ‘தூய்மையா? அவள் கற்பின் வடிவம் ஆயிற்றே’ என்று ராமன் ஓங்கிய குரலில் விடை அளித்தான். ‘அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு வேண்டியது நிரூ பணம்’ என்று அவர்கள் பிடிவாதமாகச் சொன்னார்கள். எனவே ஒரு பெருந்தீ வளர்க்கப்பட்டது, அந்தத் தீயில் சீதை புகுந்தாள். சீதை இறந்தே போய்விட்டாள் என்றெண்ணித் துயரே வடி வானான் ராமன்; ஆனால் ஒரு கணத்தில் செந்தீக் கடவுளே தன் தலைமீது அரியணையோடு காட்சி அளித்தார். அந்த அரியாசனத்தின்மீது சீதை வீற்றிருந்தாள். எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிற்று; ஒவ்வொருவரும் மனநிறைவு அடைந்தனர்.

வனவாசத்தின் ஆரம்ப காலத்திலேயே பரதன் ராமனிடம் வந்து முதிய தந்தையான தசரதன் இறந்ததைக் கூறி, அரியா சனத்தை ஏற்கும்படி மன்றாடினான். ராமன் அதை மறுத்து விட்டான். பரதனும் ராமனின் வனவாசத்தின்போது எந்தக் காரணங்கொண்டும் தான் அரியணையில் அமரப் போவதில்லை என்று கூறிவிட்டான்; ராமனுக்குப் பதிலாக அவனுடைய மரப் பாதுகைகளை அரியாசனத்தில் வைத்திருந்தான். இப்போது ராமன் தலைநகருக்குத் திரும்பியதும், பொதுமக்களின் ஒருமன தான சம்மதத்திற்கிணங்க அயோத்தி மன்னன் ஆனான்.

அரசைப் பெற்ற பிறகு, மக்களின் நலத்தைக்கருதி பண்டைய மன்னர்கள் உறுதிமொழி எடுப்பதைப்போல் ராமனும் உறுதி மொழி எடுத்தான். மன்னன் மக்களின் அடிமை. அவர்களுடைய கருத்திற்கு அவன் தலைசாய்க்க வேண்டும். இதைப் பிறகு பார்க்கலாம். ராமன் சீதையுடன் சில ஆண்டுகள் இன்பமாகக் கழித்தான். ஆனால் சீதை அரக்கன் ஒருவனால் களவாடப்பட்டுக் கடல்கடந்து கொண்டு செல்லப்பட்டவள் என்று மக்கள் மீண்டும் முணுமுணுக்கத் தொடங்கினர். முன்பு நிகழ்ந்த பரிசோதனை போதாது, மற்றொரு பரிசோதனை வேண்டும், இல்லாவிட்டால் சீதை நாடு கடத்தப்பட வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

மக்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகச் சீதை நாடு கடத்தப்பட்டுக் காட்டில் தனித்துவிடப்பட்டாள். அந்தக் காட்டில்தான்கவிஞரானவால்மீகி முனிவரின் ஆசிரமம் இருந்தது. ஆதரவில்லாமல் அழுது கொண்டிருந்த சீதையை வால்மீகி கண்டார். அவளது சோகக் கதையைக் கேட்டு, அவளுக்குத் தமது ஆசிரமத்தில் தங்க இடம் தந்தார். அவள் அப்பொழுது தாயாகும் நிலையில் இருந்தாள். விரைவில் இரட்டை ஆண் குழந்தைகளை ஈன்றாள். அவர்கள் யார் என்பதை அந்தக்குழந்தைகளுக்கு முனிவர் சொல்லவேயில்லை. பிரம்மச்சரிய வாழ்க்கையில் அவர்களை வளர்த்தார். பிறகு ராமாயணம் என்னும் காவியத்தை இயற்றி, இசை அமைத்து, நாடகமாக்கினார்.

இந்தியாவில் நாடகம் என்பது புனிதமானதாகக் கருதப் படுகிறது. இசையும் நாடகமும் தன்னளவில் ஆன்மீகமாகவே கருதப்படுகின்றன. காதல் பாடலோ வேறு எந்தப் பாடலோ ஒருவனுடய ஆன்மா அதில் ஒன்றிவிடுமானால் அவன் முக்தி அடைகிறான். அவன் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம், தியானத்தின்மூலம் அடைகின்ற லட்சியத்திற்கு அது ஒருவனைக் கொண்டு செல்வதாகச்சொல்லப்படுகிறது. எனவேதான்வால்மீகி முனிவர் ராமனுடைய சரிதத்தை நாடகமாக்கி, அதை எப்படிப் பாராயணம் செய்வது, எப்படிப் பாடுவது என்பதை அவனுடைய இரு குழந்தைகளுக்குமே கற்றுக் கொடுத்தார்.

பண்டைய மன்னர்களின் வழக்கப்படி ராமனும் ஒரு பெரிய வேள்வி செய்ய வேண்டிய காலம் வந்தது. ஆனால் இந்தியாவில், திருமணமானவர்கள் மனைவியின்றி ஒரு சடங்கும் செய்ய முடியாது. அதனால்தான் மனைவியை சக தர்மிணி, தர்மத்தில் துணை நிற்பவள் என்று அழைத்தனர். ஓர் இந்துக் கணவன் நூற்றுக்கணக்கான சடங்குகள் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் மனைவிக்கும் அதில் பங்கு உண்டு. அவள் தன் பங்கைச் செய்யா விட்டால் சாஸ்திர விதிப்படி ஒரு கணவன் எந்தச் சடங்கையும் செய்ய முடியாது.

ராமனுடைய மனைவிகாட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டாள். எனவே அவனை மீண்டும் மணம் செய்துகொள்ளும்படி மக்கள் கூறினார்கள். ஆனால் இந்த முறை, ராமன் தனது வாழ்க்கையி லேயே முதன்முறையாக மக்களின் வேண்டுகோளுக்கு எதிராக நின்றான்; ‘அது முடியாது, என்வாழ்க்கைசீதைக்குச் சொந்தமானது’ என்று கூறிவிட்டான். எனவே முறைப்படி வேள்வி நிறைவேறு வதற்காகச்சீதையின் பொற்சிலை ஒன்று செய்யப்பட்டது. அந்தப் பெருவிழாவில் ஆன்மீக உணர்ச்சி திகழ்வதற்காக ஒரு நாடகத் திற்கு ஏற்பாடு செய்தார்கள். ராமனின்மைந்தர்கள் என்று யாருக்கும் தெரியாத லவன், குசன் என்னும் தம் இரு சீடர்களோடு வால்மீகி முனிவர் அரண்மனைக்கு வந்தார். நாடக அரங்கு அமைக்கப்பட்டு நிகழ்ச்சிக்குரிய அனைத்தும் ஆயத்தமாக இருந்தன. ராமனும் அவனது சகோதரர்களும் பிரபுக்களும் பொதுமக்களும் பெரும் கூட்டமாகக் கூடியிருந்தனர்.

வால்மீகி கற்றுக்கொடுத்திருந்த ராமசரிதத்தை லவனும் குசனும் இசைத்தனர். அவர்களது உள்ளங்கவரும் இன்னிசைக் குரலும் தோற்றப்பொலிவும், கூடியிருந்த அனைவரின்மனங்களை யும் கொள்ளை கொண்டன. ராமன் பித்துப் பிடித்தவன் போலா னான். சீதையைக் காட்டிற்கு அனுப்புகின்ற பகுதி வந்தபோது செய்வதறியாமல் திகைத்துவிட்டான்ராமன். அப்போது வால்மீகி முனிவர் அவனிடம், ‘ராமா, கவலைப்படாதே. நான் உனக்குச் சீதையைக்காட்டுகிறேன்’ என்றுகூறினார். நாடகமேடைமீது சீதை கொண்டுவரப்பட்டாள். ராமன் எல்லையற்ற மகிழ்ச்சி கொண் டான். ஆனால் திடீரென்று மீண்டும் அதே பழைய முணுமுணுப்பு எழுந்தது; ‘நிரூபணம், நிரூபிக்க வேண்டும்’ என்று மக்கள் கூச்சலிட்டார்கள்.

தன்மீது மாசு படரச் செய்கின்ற மக்களின் கொடும் சொல் மீண்டும்மீண்டும் எழுந்தபோது சீதையால் சகிக்க இயலாமல் போயிற்று. தான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்குமாறு அவள் தெய்வங்களை வேண்டினாள். அவ்வளவுதான், பூமி பிளந்தது, ‘இதோ இதுதான் நிரூபணம்’ என்று கூறியபடியே சீதை பூமிக்குள் மறைந்தாள். இந்த அவலக் காட்சியைக் கண்ட மக்கள் திடுக்கிட்டார்கள். ராமன் பெருந்துயரத்தில் ஆழ்ந்தான்.

சீதை மறைந்த சில நாட்களுக்குப் பிறகு தேவர்களிடமிருந்து ஒரு தூதன்ராமனிடம் வந்து மண்ணில் ஆற்றவேண்டிய காரியங்கள் முடிந்துவிட்டன என்றும், அவர்விண்ணிற்குத் திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தான். இந்தச் செய்தி ராமனுக்குத் தனது உண்மையான ஆன்ம நிலையை உணர்த்தியது. தலைநகரைத் தழுவிப் பாய்ந்து செல்கின்ற சரயு நதியில் மூழ்கி, மறு உலகில் சீதையைச் சேர்ந்தான் ராமன்.

இதுதான் இந்தியாவின் பழைய பெரிய இதிகாசம். ராமனும் சீதையும்தான் இந்திய நாட்டின் லட்சியங்கள். எல்லா குழந்தை களும், முக்கியமாக, எல்லா சிறுமிகளும் சீதையை வழிபடு கின்றனர். தூயவளும், தன்னையே அர்ப்பணம் செய்தவளும், எல்லா துன்பங்களையும் சகித்தவளுமான சீதையைப்போல் வாழ்வதுதான் ஒரு பெண்ணின் மிக உயர்ந்த ஆசை ஆகும். இவர்களைப் பற்றியெல்லாம் படிக்கும்போது மேலைநாட்டு லட்சியம் இந்திய லட்சியத்திலிருந்து எவ்வளவு வேறுபட்டது என்பதை நீங்கள் உடனே உணர முடியும்.

மக்களினத்திற்கு பொறுமை லட்சியத்தின் வடிவமாகத் திகழ்கிறாள் சீதை. ‘செய், செயலால் உன் சக்தியைக்காட்டு’ என்று மேலைநாடு சொல்கிறது. ‘பொறுமையின்மூலம் உன் சக்தியைக் காட்டு’ என்கிறது இந்தியா. ஒரு மனிதன் எவ்வளவு அதிகம் வைத்துக்கொள்ள முடியும் என்னும் பிரச்சினைக்கு மேலைநாடு தீர்வுகண்டுள்ளது. அவன் எவ்வளவு குறைவாகவைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சினைக்கு இந்தியா தீர்வு கண்டுள்ளது. இரண்டும் இரண்டு எல்லைகள் அல்லவா! லட்சிய இந்தியாவின் லட்சியச் சான்று சீதை. அவள் உண்மையிலேயே வாழ்ந்திருந் தாளா, இந்தக்கதையில் வரலாற்று உண்மை உள்ளதா இல்லையா என்பதல்ல கேள்வி. லட்சியம் இங்கே உள்ளது அதுதான் நாம் பார்க்க வேண்டியது.

ஒரு நாடு முழுவதும் ஊடுருவிப் பாய்ந்து, மக்களின் வாழ்க் கையில் புகுந்து, மக்களினத்தின் ரத்தத்துளி ஒவ்வொன்றிலும் நுழைந்து கிளர்ச்சியூட்டும் சீதை லட்சியத்தை, வேறு எந்தப் புராணக்கதையும் சித்தரிக்கவில்லை .

நல்லது என்று கருதக்கூடிய எதற்கும், தூய்மை என்று எண்ணக்கூடிய எதற்கும், புனிதம் என்று போற்றக்கூடிய எதற்கும், உயர் பெண் தகைமை என்று பாராட்டக் கூடிய எதற் கும் சீதையின் பெயர் சான்றாகத் திகழ்கிறது. ஒரு பெண்ணை வாழ்த்தும் புரோகிதர், “சீதையைப்போல் இருப்பாயாக!” என்றே வாழ்த்துவார். ஒரு குழந்தைக்கு ஆசி கூறினால் அவர், ”சீதையைப்போல் விளங்குவாயாக!” என்று சொல்வார். அவர்கள் அனைவரும் சீதையின் குழந்தைகள்; சீதையைப் போல் திகழ்வதற்கு முயல்கிறார்கள்; பொறுமைக்கு எல்லை யாக, துயரின் உருவாக, கற்புக்கரசியாக, மாசிலா இல்லற மங்கையாகச் சீதை காட்சி அளிக்கின்றாள். அவள் எவ்வளவோ துயருற்றாலும் தன் கணவனான ராமனைக் கடிந்து ஒரு சொல்லும் கூறவில்லை . எல்லாம் தன் கடமை என்று ஏற்று, எல்லா வற்றையும் செய்தாள். அவள் காட்டில் வாழ நேர்ந்த அநீதியை எண்ணிப் பாருங்கள்! ஆனால், அவள் உள்ளம் ஒரு கசப்பையும் உணரவில்லை . மீண்டும் கூறுகிறேன், இதுதான் இந்தியர்கள் கண்ட லட்சியம்: ”ஒருவன் உன்னைத் துன்புறுத்தும்போது, நீ பதிலுக்குப்பதில் செய்தால், அது அந்த இடரைத் துடைத்து விடாது; இன்னும் ஒரு கொடிய செயலைத்தான் அது படைத்து விடும்’ என்று புத்தர் கூறுகிறார். சீதை ஓர் உண்மையான இந்திய நாட்டுப் பெண்மணியாக இயல்பாகவே திகழ்ந்தாள்; தனக்குத் தீமை செய்தவர்களுக்கும் அவள் ஒருபோதும் தீமை செய்யவில்லை.

எது உண்மையான லட்சியம்? மேலைநாடு போற்றும் புற ஆற்றலும் வலிமையுமா அல்லது கீழைநாடு கூறுவது போல், துன்பங்களை மனத்துணிவுடன் ஏற்றுக்கொள்வதா?

‘தீமையை வெல்வதால் அதைக் குறைக்கப் பார்க் கிறோம்” என்று மேலைநாட்டினர் கூறுகின்றனர். துயரை ஏற்பதால், நாங்கள் தீமையை அழிக்கின்றோம்; தீமை செய லற்றுப் போய்விடுகிறது; துன்பம், இன்பமாக மாறுகிறது. இரண்டும் சிறந்த லட்சியங்களே என்று இந்தியா கூறு கிறது. இறுதியில் எந்த லட்சியம் நிற்கும்?

எந்த மனப்பாங்கு மக்களுக்கு அதிக நன்மையைத் தரும் என்பதை யார் கண்டார்கள்! எது விலங்கியல்பை வலுவிழக்கச் செய்து, கடைசியில் அதை வெல்லும் என்று யார் கண்டார்கள்! சகிப்புத் தன்மையா? செயலா?

இதற்கிடையில் ஒருவரின் லட்சியத்தை இன்னொருவர் அழிக்க முயல வேண்டாம். தீமையை அழிக்கும் பணியில்தான் நாம் இருவரும் ஈடுபட்டிருக்கிறோம். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்; நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். லட்சியத்தை அழித்துவிட வேண்டாம். “எங்கள் வழியைப் பின்பற்றுங்கள்” என்று நான் மேலைநாட்டினருக்குச் சொல்ல வில்லை, நிச்சயமாகச் சொல்லமாட்டேன். லட்சியம் ஒன்று; ஆனால் வழிகள் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது. ஆகவே இந்தியாவின் லட்சியங்களைப் பற்றிக் கேட்ட நீங்கள், அதே மூச்சில், ”நம் இருவர் லட்சியமும், ஒன்று என்று எங்களுக்குத் தெரியும். உங்கள் லட்சியத்தைப் பின்பற்றி உங்கள் வழியில் செல்லுங்கள். உங்களுக்கு வெற்றி உண்டாகட்டும்!” என்று இந்தியாவுக்குச் சொல்லுங்கள். மாறுபட்ட வழிகளைப்பற்றிச் சண்டையிட்டுக்கொள்ள வேண்டாம். ஏனெனில் மாறுபட்டது போலத் தோன்றினாலும் லட்சியம் ஒன்றுதான் என்று கிழக்கிற்கும், மேற்கிற்கும் எடுத்துக் கூறுவதுதான் என் கடமை யாகும். வாழ்க்கை என்னும் சிக்கலான பாதையில் சென்று கொண்டிருக்கும் நாம் ஒருவரைப் பார்த்து ஒருவர், ‘வெற்றி உண்டாகுக!’ என்று கூறிக் கொள்வோமாக.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 18. ராமாயணம்

17. கீதைக் குறிப்புகள் பட்டியல்

கீதைக் குறிப்புகள் பட்டியல்

1

[இன்று காலை கீதை வகுப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. மிகவுயர்ந்த லட்சியங்கள் அனைவருக்கும் உரியவை அல்ல என்ற கருத்தின் நீண்ட விளக்கத்துடன் வகுப்பு ஆரம்பித்தது.]

குஷ்டரோகியாக இருந்த மகான் ஒருவர் தனது புண்ணிலிருந்து கீழே விழுந்த புழுவை மீண்டும் புண்ணிலே வைத்து, ‘சாப்பிடு சகோதரா, சாப்பிடு’ என்று கூறினார். இதனை அருவருப்பாக, வெறுக்கத்தக்கதாக நினைப்பவனுக்கு அஹிம்சை உரியதல்ல. கோபப்படுகின்ற குழந்தையிடமும் அன்பு காட்டுகின்ற தாயின் அன்பு யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கே அஹிம்சை உரியது. ஒரு கோழை அதைப்பற்றிப் பேசுவதோ, அல்லது சிங்கம் அதைப் பின்பற்றுவதோ கேலிக்குரியது.

நாம் உண்மையானவர்களாக இருப்போம். நாம் எதுவாக இல்லையோ, அதுவாக நம்மைக் காட்டிக்கொள்வதில், அதனைப் பிறர் நம்பச் செய்வதில்தான் நமது வாழ்க்கைச் சக்தியின் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது. நாம் எது ஆக விரும்புகிறோமோ, அதுவாக ஆவதில் அந்த சக்தியைச் செலவிடுவதுதான் முறை.

[பிறகு இந்திய முறைப்படி சுவாமிஜி பாடிய குரு வணக்கத்துடன் சொற்பொழிவு தொடர்ந்தது.]

உலகின் குருவிற்கு வணக்கம்.
யாருடைய திருவடிகளை தேவர்கள் வழிபடுகிறார்களோ,
யார் ஒரே ஆன்மாவாக இருக்கிறாரோ,
யார் உலகியல் நோய்களுக்கு மருத்துவராக இருக்கிறாரோ,
தேவர்களுக்கும் கூட யார் குருவோ
அந்த குருவிற்கு எங்கள் வணக்கம்.
உம்மை வணங்குகிறோம், உம்மை வணங்குகிறோம்.

பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதில் புத்தரும் ஏசுவும் கிருஷ்ணரைவிடத் தாழ்ந்த நிலையிலேயே உள்ளனர். அவர்கள் மிகவுயர்ந்த நீதிநெறியை உலகிற்கே ஒரு பாதையாக வைத்தனர். கிருஷ்ணரோ முழுமையைச் சரியாகப் பார்த்தார்; வேறுபட்ட லட்சியங்கள் பல இருந்தாலும் அவை அந்த முழுமையின் பகுதிகளே என்று கண்டார் அவர்.

2

கீதை வேதங்களின் சாரமாகும். அதுதான் எங்கள் சாஸ்திரம் என்று கூற முடியாது. எங்கள் சாஸ்திரம் உபநிடதங்கள் ஆகும். கீதை உபநிடதங்களின் சாரம்; அது உபநிடதங்களின் பல்வேறு முரணான பகுதிகளைச் சமரசப்படுத்துகிறது.

வேதங்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன — கர்மகாண்டம், ஞானகாண்டம். சடங்குகள், உணவு, வாழ்க்கை போன்றவற்றிற்கான நியதிகள், நற்பணிகள் செய்வது போன்றவை கர்மகாண்டத்தில் உள்ளன. ஞானகாண்டம் காலத் தால் பிற்பட்டது, அதனை உருவாக்கியவர்கள் மன்னர்கள்.

கர்மகாண்டம் முற்றிலுமாக புரோகிதர்களின் கையில் இருந்தது. அது புலன் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. நற்பணிகள் செய்து, அதன்மூலம் சொர்க்கத்திற்கு சென்று அங்கே முடிவற்ற இன்பத்தில் திளைத்திருப்பதுபற்றி அது போதித்தது. கர்மம் அல்லது சடங்குகளின் மூலம் ஒருவன் விரும்பிய எதையும் பெற லாம். எல்லா நிலையிலும் உள்ள நல்ல மற்றும் தீய மனிதர்கள் அனைவருக்கும் அது வழிகாட்டியது. ஆனால் புரோகிதர்களின் உதவி இல்லாமல் சடங்குகள் மூலம் எதையும் பெற முடியாது. எனவே ஒருவன் எதை விரும்பினாலும், தன் விரோதியைக் கொல்ல வேண்டுமானாலும் சரி, அவன் செய்ய வேண்டிய தெல்லாம் புரோகிதர்களுக்குப் பணம் கொடுப்பதுதான். உடனே புரோகிதர் இந்தச் சடங்குகளின்மூலம் அவன் வேண்டியதைச் செய்துவிடுவார். இந்தப் புரோகிதர்களுக்காகவே கர்மகாண்டம் பாதுகாக்கப்பட்டது, அதன்மூலம் சம்பாதித்தே அவர்கள் வாழ்க்கையை நடத்தினர். எனவே அந்தப் பகுதி அழியாமல் பாதுகாக்க அவர்கள் தங்களால் ஆன அனைத்தையும் செய்தனர். இந்தச் சடங்குகளுள் பல மிகவும் சிக்கலானவை; சிலவற்றைச் செய்ய வருடக்கணக்கான காலம் ஆகும்.

ஞானகாண்டம் பின்னால் வந்தது. இது மன்னர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது. இது ராஜ வித்யை என்றே அழைக்கப்பட்டது. போலித்தனமும் மூட நம்பிக்கைகளும் கலந்த கர்மகாண்டத்தினால் மன்னர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே அவர்கள் அதனை அழிப்பதற்கு தங்களால் ஆன அனைத்தையும் செய்தனர். இறைவன், ஆன்மா, பிரபஞ்சம் போன்றவை பற்றிய அறிவு ஞானகாண்டத்தில் உள்ளது. புரோகிதர்களின் சடங்குகள் மற்றும் மாயமந்திரங்களால் மன்னர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அவை எல்லாம் அபத்தம் என்று அவர்கள் கூறினர். தானம் வாங்குவதற்காக புரோகிதர்கள் மன்னர்களிடம் வருவார்கள் அப்போது மன்னர்கள் அவர்களிடம் கடவுள், ஆன்மா பற்றிய கேள்விகள் கேட்பார்கள். தெரியாது என்று சொல்பவர்களைத் திருப்பி அனுப்பினார்கள். அவர்கள் திரும்பிச் சென்று தங்கள் தந்தை யரிடம் அதுபற்றிக் கேட்டார்கள். ஆனால் அவர்களிட மிருந்தும் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே திரும்பிவந்து மன்னர்களுக்கே சீடர்கள் ஆனார்கள். சடங்குகளில் சிறுபகுதியே தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலானவை புறக்கணிக்கப்பட்டுவிட்டன, எளிமையான சில சடங்குகள் மட்டுமே இன்று வழக்கத்தில் உள்ளன.

உபநிடதங்கள் கர்ம நெறியையும் போதிக்கின்றன. நல் லொழுக்கத்திற்கான காரணகாரிய நியதியே கர்மம். இதன் படி, நாம் இடையீடின்றி வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். துன்பத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி நற் செயல்கள் புரிவதே. நற்செயல்களின் மூலம் நல்ல பலன் கிடைக் கிறது, அவற்றின் வாயிலாக நாம் துன்பத்தைத் தவிர்க்கலாம். இப்படி நற்பணிகள் செய்து, வாழ்நாள் நிறைவுற்றபின் இறந்து, சொர்க்கத்திற்குப் போய் அங்கே நிரந்தரமாக இன்பம் அனுபவிக்கலாம். சொர்க்கத்திலும் கர்மத்தைத் தவிர்க்க முடியாது அங்கே நல்ல கர்மம் மட்டுமே இருக்கும், தீய கர்மம் இருக்காது.

எவ்வளவுதான் நல்லவையாக இருந்தாலும், மனைவி குழந்தைகள் கணவன் என்று உறவினரை நேசிப்பது அவர்களை முத்தமிடுவது என்று எவ்வளவுதான் பெரிய இன்பமாக இருந் தாலும் செயல் என்பதே பயனற்றது என்று ஞானகாண்டம் ஒதுக்குகிறது. இதன்படி, நற்செயல்கள், இன்பங்கள் எல்லாமே முட்டாள்தனத்தைத் தவிர வேறில்லை; ஏனெனில் அவை தன் இயல்பிலேயே நிலையற்றவை. ‘இவையெல்லாம் இன்றோ நாளையோ முடிவுக்கு வந்தே தீரவேண்டும், எனவே அவற்றை இப்போதே முடித்துவிடு, அவை வீண்’ என்று உபநிடதங் களின் ஞானகாண்டம் சொல்கிறது. உலகிலுள்ள துன்பங்கள் அனைத்துமே அறியாமையால் உண்டாகின்றன, அதற்குப் பரிகாரம் அறிவுதான்.

ஒருவன் முன்வினைப் பயனாலோ, கர்மத்தாலோ கட்டுப் படுத்தி வைக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்வது சுத்த முட்டாள்தனம். எவ்வளவு கீழானவனாக இருந்தாலும், எவ்வளவு தீயவனாக இருந்தாலும் ஒளியின் ஒரு கிரணம் போதும், அவனது அறியாமைத் திரள் அகன்றுவிடும். எவ்வளவு பெரிய பஞ்சுப்பொதியானாலும் அதை எரிக்க ஒரு சிறு தீப் பொறி போதும். காலங்காலமாக ஓர் அறை இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது, அதை விலக்க ஒரு விளக்குப் போதும். அதுபோல் ஒருவன் எவ்வளவுதான் அறியாமையில் மூழ்கிக் கிடந்தாலும், இனி வருகின்ற காலம் முழுவதும் அனுபவிக்க வேண்டிய வினைப்பயனால் கட்டுண்டிருக்கிறான் என்பது உண்மையல்ல. ‘தெய்வ ஒளியின் ஒரு கிரணம் மனிதனைச் சுதந்திரன் ஆக்கு கிறது, அவனுக்கு அவனது உண்மை இயல்பைக் காட்டுகிறது’.

முரணான கோட்பாடுகளை எல்லாம் கீதை சமரசப்படுத்து கிறது. கிருஷ்ணர் இருந்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அவரைப்பற்றி எவ்வளவோ கதைகள் சொல்லப் படுகின்றன. நான் அவற்றை நம்பவில்லை.

‘அவர் வாழ்ந்தாரா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அவர் வாழ்ந்திருக்கவில்லை என்றால் மிக நல்லது. ஏனெனில் உலகில் ஒரு கடவுள் குறைவாக இருந்திருப்பார்’.

3

கிறிஸ்தவர்களுக்குப் புதிய ஏற்பாடு எப்படியோ அப்படியே இந்துக்களுக்கு கீதை. அது 5000 வருடங்களுக்கு முந்தியது. குருக்ஷேத்திரப் போர் நடந்த நாளை இன்றும் இந்துக்கள் விழா வாகக் கொண்டாடுகிறார்கள்.

வேதங்கள் ஞானகாண்டம், கர்மகாண்டம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்று ஏற்கனவே சொன்னேன். ஞானகாண்டத்தைப் பரப்பிய மன்னர்களுக்கும், புரோகிதர்களுக்கும் இடையே கருத்துவேற்றுமை ஏற்பட்டது. பொதுமக்கள் புரோகிதர்களின் பக்கம் இருந்தார்கள், ஏனெனில் சாதாரண மனம் ஏற்றுக்கொள்ளக் கூடிய எல்லாம் புரோகிதர்களிடம் இருந்தன. மன்னர்களிடம் ஆன்மீகம் மட்டுமே இருந்தது, அங்கே செல்வத்தின் அம்சம் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் ஆற்றல்மிக்கவர்கள், நாட்டை ஆள்பவர்கள். எனவே போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. படிப்படியாக மன்னர்கள் நிலைபெறத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களின் கருத்துக்கள் பாமர மக்களின் நிலை யிலிருந்து மிகவும் உயர்ந்தவையாக இருந்தன. எனவே சடங்குகள் அல்லது கர்மகாண்டம் எப்போதும் மக்களால் விரும்பப்பட்டது.

ஒரு மதத்தைப் பெருவாரியான மக்கள் பின்பற்று கிறார்கள் என்றால் அதற்கு நல்ல பொருளாதார நோக்கு இருக்கிறது என்பது பொருள். இது நாம் நினைவில்கொள்ள வேண்டிய ஒன்று. ஒரு மதத்தின் ஆன்மீக அம்சமோ தத்துவ அம்சமோ அல்ல, அதன் பொருளாதார அம்சமே மக்களுக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது. மகோன்னதமான தத்துவத்தை நீ ஒரு வருடம் வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம், விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்கள்கூட உன் பின்னால் வர மாட்டார்கள். நீ பேசுவது வடிகட்டின முட்டாள் தனமாக இருக்கலாம், ஆனால் அதில் பொருளாதார அம்சம் இருக்குமானால் அதைப் பின்பற்ற மக்கள் கூட்டம்கூட்டமாக வருவார்கள்.

வேதங்கள் யாரால் எழுதப்பட்டன என்று யாருக்கும் தெரியாது; அவ்வளவு புராதனமானவை அவை. வைதீக இந்துக் களின் கருத்துப்படி, வேதங்கள் என்பவை எழுதப்பட்ட வார்த்தைகளே அல்ல; சரியான உச்சரிப்புடனும் ராகத்துடனும் வாய்வழியாகப் பேசப்படுகின்ற வார்த்தைகள் அவை. அவை ஆயிரக்கணக்கான தொகுதிகள். சரியான உச்சரிப்பும் ராகமும் தெரிந்தவன் மட்டுமே வேதங்களை அறிந்தவன், வேறு யாரும் அறிந்தவன் ஆகமாட்டான். அந்தக் காலத்தில் சில மன்னர் குடும்பங்கள் வேதங்களின் சில பகுதிகளைப் பாதுகாத்து வந்தன. அந்தக் குடும்பத் தலைவன் தன்னிடம் உள்ள தொகுதிகளை எழுத்துக்கு எழுத்து உச்சரிப்போ ராகமோ தவறாமல் சொல்ல வல்லவனாக இருப்பான். அவர்கள் அசாதாரணமான அறிவும் அற்புதமான நினைவாற்றலும் பெற்றவர்களாக இருந்தார்கள்.
வேதங்களின் கர்மகாண்ட பகுதியைத் தீவிரமாக நம்பு பவர்கள் கடவுளையோ ஆன்மாவையோ அதுபோன்ற எதை யுமோ நம்புவதில்லை. நாம் காண்கின்ற பிரபஞ்சம் ஆகட்டும், ஆன்மீக உலகம் ஆகட்டும், பிரபஞ்சத்தில் இருப்பது நாம் மட்டுமே, நாம் நாமாக இருக்கிறோம், அவ்வளவுதான். ஆனால் வேதங்களில் கடவுள் பற்றி எவ்வளவோ சொல்லப்பட்டிருக் கிறதே, அவற்றின் பொருள் என்ன என்று கேட்டால், எந்தப் பொருளும் இல்லை என்பார்கள். வார்த்தைகள், குறிப்பிட்ட ஒரு விதத்தில் சொல்லப்படும்போது ஒரு மாய சக்தி பெறுகின் றன, குறிப்பிட்ட பலன்களைக் கொடுக்க வல்லவை ஆகின்றன. இதைத் தவிர அவற்றிற்கு வேறு எந்தப் பொருளும் இல்லை.

ஓர் எண்ணத்தை நீ அழுத்தி வைக்கும்போது அதனை உன் அறிவின் எல்லையிலிருந்து அகற்றி வைக்கிறாய், அவ்வளவு தான். அது ஒரு சுருள்போல், விசைக் கம்பிபோல் சுருண்டிருக் கிறது. ஒரு கணத் தூண்டுதல் போதும், அழுத்தி வைத்திருந்த ஆற்றலையும் சேர்த்துக்கொண்டு அது வெளியே கிளம்புகிறது. சாதாரணமாக ஓர் எண்ணம் நீண்ட காலத்தில் செய்து முடிக் கின்ற ஒரு செயலை இந்த அழுத்தப்பட்ட எண்ணம் சில கணங் களில் செய்து முடித்துவிடுகிறது.

தினையளவு இன்பம் பனையளவு துன்பத்தையும் கொண்டே வருகிறது. இன்பமாக வெளிப்படுகின்ற அதே ஆற்றல்தான் மற்றொரு வேளையில் துன்பமாக வெளிப்படு கிறது. ஒருவிதமான உணர்ச்சிகள் மறைந்ததும் மற்றொரு விதமான உணர்ச்சிகள் எழுகின்றன. ஆனால் முதிர்ச்சி பெற்ற சிலரது விஷயத்தில் ஒன்று, இரண்டு, ஆம், நூறு வேறுபட்ட எண்ணங்கள்கூட ஒரே நேரத்தில் அவர்களிடம் செயல்பட முடியும். ஓர் எண்ணத்தை அழுத்தி வைக்கும்போது அது சுருண்டு அமைதியாகிறது, ஆனால் எந்தக் கணம் வேண்டு மானாலும் அது வெடித்துக் கிளம்பும்.

மனம் தன்னியல்பு படைத்தது. அதன் செயல்பாடு என்றாலே படைப்புதான். எண்ணத்தைத் தொடர்ந்து வார்த்தை வருகிறது, வார்த்தையைத் தொடர்ந்து உருவம் வெளிப்படுகிறது. மானசீக, பௌதீகப் படைப்புகள் நிறுத்தப்பட வேண்டும், அப்போதுதான் மனம் ஆன்மாவைப் பிரதிபலிக்கும்.

முதியவரான எனது குருநாதருக்கு தன் பெயரைக்கூடத் தவறின்றி எழுதத் தெரியாது. அவர் தன் பெயரை எழுதியபோது அதில் மூன்று பிழைகள் இருந்தன.

அத்தகைய ஒரு மனிதரின் காலடியிலேயே நான் வளர்ந்தேன்.

நீங்கள் ஒருமுறை இயற்கையின் நியதியை மீறினால் போதும், அதுவே கடைசிமுறையாக அமையும். அதன்பிறகு இயற்கை உங்களைப் பிணைக்காது.

4

 1. ‘நீ எல்லாம் தெரிந்தவனாக இருக்கலாம், அதற்காக பிறரது எளிய களங்கமற்ற நம்பிக்கையை குலைக்காதே.’
 2. ‘ஆன்மாவை ஜடப்பொருளாக அல்ல, ஆன்மாவை ஆன்மாவாக உணர்வதே மதம்.’
 3. ‘நீங்கள் ஆன்மா. உங்களை ஆன்மாவாக உணருங்கள். அதற்கு எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றுங்கள்.’
 4. ‘வளர்ச்சியே மதம்; அதனை ஒவ்வொருவரும் தனக்குத் தானே உணர வேண்டும்.’

ஏசுநாதர் தங்களைக் காப்பதற்காகவே இறந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். உங்களைப் பொறுத்த வரை இது ஒரு கோட்பாட்டில் நம்பிக்கை, இந்த நம்பிக்கையில் தான் உங்கள் மீட்சி (salvation) உள்ளது. எங்கள் விஷயத்தில் முக்திக்கும் எந்தக் கோட்பாட்டிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. தான் விரும்புகின்ற கோட்பாட்டை ஒவ்வொருவரும் நம்பலாம், அல்லது எந்தக் கோட்பாட்டையும் நம்பாமலும் இருக்கலாம். எங்களுக்கு மதம் என்பது அனுபூதி, கோட்பாடு அல்ல. குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஏசுநாதர் வாழ்ந்தார் என்பது உனக்கு எந்த விதத்தில் நன்மையளிக்கப் போகிறது? எரிகின்ற புதரில் மோசஸ் கடவுளைக் கண்டால் உனக்கு என்ன வந்தது? எரிகின்ற புதரில் மோசஸ் கடவுளைக் கண்டது நீ கண்டது போல் ஆகுமா? ஆகாதல்லவா? ஆகுமானால் மோஸஸ் சாப்பிட்டார் என்பது உனக்குப் போதுமே, நீ சாப்பிடுவதை நிறுத்திவிடலாமே! அது சரியானால் இதுவும் சரிதான். பண்டைய ஆன்மீகச் செல்வர்களின் வாழ்க்கை நமக்கு ஒன்று மட்டுமே செய்ய முடியும்-அவர்கள் அடைந்த நிலைகளை நாமும் அடைவதற்கு நம்மை ஊக்குவிக்க முடியும், ஆன்மீகத்தை நாமே உணர்வதற்குத் தூண்ட முடியும், அவ்வளவுதான். ஏசுவாக இருந்தாலும் சரி மோஸஸாக இருந்தாலும் சரி, அவர்கள் செய்த எதுவும், நம்மை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதைத் தவிர வேறு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை.

5. ‘எனது வழிதான் சிறந்தது என்று ஒவ்வொருவனும் நினைக்கிறான். ஆனால் அது உனக்கு மட்டுமே சிறந்தது.’

ஒவ்வொருவனிடமும் அவனுக்கே உரிய தனி இயல்பு உள்ளது. அவன் அதைத்தான் பின்பற்ற வேண்டும், அதன் வழியாகத்தான் முக்திக்கு வழி தேட வேண்டும். குரு உனது இயல்பிற்கு ஏற்ற வழியை உனக்குக் காட்டத் தக்கவராக இருக்க வேண்டும். உன் முகத்தைப் பார்த்தே அதைக் கண்டுபிடித்துக் கூற வல்லவராக இருக்க வேண்டும். மற்றவனின் வழியைப் பின்பற்ற ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது; ஏனெனில் அது அவனது பாதை, உனது பாதை அல்ல. பாதையைக் கண்டு பிடித்துவிட்டால் அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்துக்கொண்டால் போதும், அலையின் வேகமே உன்னை முக்தியில் சேர்த்துவிடும். எனவே பாதையைக் கண்டுவிட்டால் ஒருபோதும் அதிலிருந்து பிறழாதே. உனது வழி உனக்கு மிகவும் இசைந்தது; ஆனால், அதன் காரணமாக, அது மற்றவனுக்கும் இசைந்ததாக இருக்க வேண்டும் என்பதில்லை.

 1. ‘ஆன்மா ஆன்மாவாகத் திகழ வேண்டும்.’

உண்மையான ஆன்மீகவாதி ஆன்மாவை ஆன்மாவாகக் காண்கிறான்; ஆன்மாவை ஜடப்பொருளாகக் காண்பதில்லை. ஜடப்பொருள் என்பது கீழ் அதிர்வுநிலையிலுள்ள ஆன்மாவே என்றாலும், ஆன்மா ஒருபோதும் அப்படியே ஜடப்பொருள் ஆக முடியாது. இயற்கையை இயக்குவது ஆன்மா; இயற்கை யிலுள்ள உண்மை என்பது ஆன்மாவே, எனவே செயல்பாடு என்பது இயற்கையில் உள்ளதே தவிர ஆன்மாவில் இல்லை. ஆன்மா எப்போதும் மாறாததாக, நிலையானதாக இருக்கிறது. உண்மைநிலையில் ஆன்மாவும் ஜடப்பொருளும் ஒன்றே; ஆனால் ஆன்மா அப்படியே ஜடப்பொருள் ஆவதில்லை, ஜடப்பொருளும் அதே நிலையில் ஆன்மா ஆவதில்லை. ஜடப் பொருள் ஆன்மா ஆவதில்லை, ஏனெனில் கீழ் அதிர்வுநிலையில் உள்ள ஆன்மாவே ஜடப்பொருள், அதாவது ஆன்மாவின் மற்றொரு பரிமாணமே ஜடப்பொருள். நாம் சாப்பிடுகிறோம்; அது மனம் ஆகிறது, மனம் உடலாகிறது. இவ்வாறு மனமும் உடலும், ஆன்மாவும் ஜடப்பொருளும் ஒன்று மற்றொன்றாக மாறக்கூடியதாக இருந்தாலும் அவை வெவ்வேறானவை; அவற்றை ஒன்றாகக் கொள்ளக் கூடாது.

 1. ‘ஆன்மா ஜடப்பொருளாக ஒருபோதும் இருந்ததில்லை.’
 2. ‘இயற்கையிலுள்ள உண்மை என்பது ஆன்மாவே.’

இயற்கையிலுள்ள உண்மை என்பது ஆன்மாவே. இயற்கை யின் எல்லா செயல்பாடுகளிலும் உள்ள உயிர்த்துடிப்பு ஆன்மாவே. இயற்கையை உண்மையாகத் தோன்றச் செய்வதும், அதன் செயல்பாட்டிற்கான ஆற்றலை வழங்குவதும் ஆன்மாவே.

 1. ‘செயல்பாடு இயற்கையில்தான் உள்ளது.’

செயல்பாடு இயற்கையில்தான் உள்ளது. ஆன்மா ஒரு போதும் செயல்படுவதில்லை. ஏன்தான் அது செயல்பட வேண்டும்? அது இருக்கிறது, அது இருப்பதே போதும். அது தனி இருப்பு, அது செயல்பட வேண்டியதில்லை.

 1. ‘ஆரம்பத்தில் அந்த இருப்புதான் இருந்தது. அவர் பார்த்தார், எல்லாம் படைக்கப்பட்டது.’
 2. ‘சொந்த இயல்பின்படியே ஒவ்வொருவனும் செயல்படுகிறான்.’
 3. ‘நீ எந்த நியதிக்கும் கட்டுப்பட்டவன் அல்ல. அது உன் இயல்பில் உள்ளது. மனம் இயற்கையில் உள்ளது, அதுதான் நியதிக்குக் கட்டுப்பட்டது.’

இயற்கை முழுவதுமே நியதியால் கட்டப்படிருக்கிறது, தன் சொந்தச் செயல்பாடு என்ற நியதியால் கட்டப்பட்டிருக் கிறது. இந்த நியதியை அது ஒருபோதும் மீற முடியாது. இயற்கையின் நியதியை உன்னால் அழிக்க முடியுமானால், கணநேரத்திற்குள் இயற்கையே முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு இயற்கை என்பதே இருக்காது. முக்தி பெறுபவன் இயற்கை யின் நியதியை ஒழித்துவிடுகிறான், அவனைப் பொறுத்தவரை இயற்கை மறைந்துவிடுகிறது, அவன்மீது அது தன் ஆதிக்கத்தை இழந்துவிடுகிறது. ஒருவன் ஒருமுறைதான் இயற்கையின் நியதியை மீற முடியும், ஆனால் அது என்றென்றைக்குமாக மீறியதே; அதன்பிறகு அவனுக்கு இயற்கையினால் எந்தத் தொந்தரவும் இல்லை. ‘நீ எந்த நியதிக்கும் கட்டுப்பட்டவன் அல்ல. அது உன் இயல்பில் உள்ளது. மனம் இயற்கையில் உள்ளது, அதுதான் நியதிக்குக் கட்டுப்பட்டது.’

 1. ‘மத உணர்வு உடையவனாக இருக்க வேண்டுமானால் மத சம்பந்தமான விவாதங்களிலிருந்து விலகியிரு.’
 2. ‘அரசாங்கங்கள், இயக்கங்கள் எல்லாம் தீமைகள்.’

‘எல்லா இயக்கங்களும் தாழ்ந்த பொதுமைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன.’

‘மீற முடியாத ஒன்றே நியதி.’

இயக்கம் அல்லது அமைப்பு ஒன்றை உருவாக்கிய உடனேயே அதற்கு வெளியிலுள்ள அனைவரையும் வெறுக்கத் தொடங்கிவிடுகிறீர்கள். நீங்கள் ஓர் அமைப்பில் சேரும்போது உங்களுக்கு நீங்களே தளைகளை இட்டுக்கொள்கிறீர்கள், உங்கள் சுதந்திரத்தை நீங்களே கட்டுப்படுத்துகிறீர்கள். சட்ட திட்டங்கள், நீதிநியதிகள் எல்லாம் உடைய ஒரு அமைப்பை ஏன் உருவாக்க வேண்டும்? அதன்மூலம் ஒரு மனிதனின் சுதந்திர மான செயல்பாட்டை ஏன் தடுக்க வேண்டும்? ஓர் அமைப்பின் அல்லது சங்கத்தின் நியதியை ஒருவன் மீறினால் மற்றவர்கள் அவனை வெறுக்கிறார்கள். பிறர்மீது ஆட்சி செலுத்துவதற்காக சட்டதிட்டங்களை இயற்ற ஒருவனுக்கு என்ன உரிமை இருக் கிறது? அத்தகைய நியதிகள் நியதிகளே அல்ல. அவை நியதியாக இருக்குமானால் அவற்றை யாராலும் மீற முடியாது. நாம் நியதிகள் என்று அழைக்கின்ற இவற்றை மீற முடிவதிலிருந்தே அவை நியதிகள் அல்ல என்பது தெளிவாகிறது.

 1. ‘ஒன்றை நேசிப்பது பிறரை வெறுக்கச் செய்யுமானால் நேசிக்காமலே இருப்பது நல்லது.’
 2. ‘பலவீனம் மரணத்தின் அடையாளம், வாழ்க்கையின் அடையாளம் வலிமை.’

5

உலகியல் மறையாமல் ஒருபோதும் ஆன்மீகத்தை அடைய முடியாது.

கீதையின் முதல் அத்தியாயத்தை உருவகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேதங்கள் இயற்கையில் உள்ளவற்றை மட்டுமே போதிக் கின்றன, இயற்கையை மட்டுமே போதிக்கிறது.

கடமையின் இடத்தில் உணர்ச்சிப்பெருக்கு ஆட்கொள்ளு மாறு விட்டுவிடுகிறோம். பிறகு அன்பு காரணமாகவே செயல் படுவதாக நம்மை நாமே புகழ்ந்துகொள்ளவும் செய்கிறோம்.

துறக்க வேண்டுமானால் உணர்ச்சிப்பெருக்கைக் கடந்து செல்ல வேண்டும். உணர்ச்சிப்பெருக்கு என்பது மிருகங்களுக்கு உரியது, அவை வெறும் உணர்ச்சிகளால் ஆனவை.

தன் பிள்ளைக்காகத் தியாகம் செய்வது அப்படி ஒன்றும் உயர்ந்த நிலை அல்ல. தாய் ஒருத்தி செய்கின்ற அதை மிருகங் களும் செய்கின்றன. அது உண்மையான அன்பின் அடையாளம் அல்ல; அது வெறும் குருட்டுத்தனமான உணர்ச்சிப் பெருக்கு.

பலவீனத்தைப் பலமாகவும், உணர்ச்சிப்பெருக்கை அன்பாகவும், கோழைத்தனத்தை வீரமாகவும் காட்டவே நாம் எப்போதும் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

வெறும் பகட்டு, பலவீனம் போன்றவற்றைப் பொறுத்த வரை உங்கள் மனத்திடம், ‘இது உனக்குப் பொருந்தாது, இது உனக்கு பொருந்தாது’ என்று சொல்லுங்கள்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 17. கீதைக் குறிப்புகள் பட்டியல்

16. கீதை 3

கீதை 3

அர்ஜுனன் கிருஷ்ணரிடம், ‘இப்போதுதான் நீ செயல்புரியும் படிக் கூறினாய். அதேவேளையில், பிரம்மஞானமே வாழ்வின் மிக உயர்ந்த குறிக்கோள் என்றும் கூறுகிறாய். கண்ணா , செயலைவிட ஞானம் சிறந்தது என்பது உன் கருத்தானால், என்னை ஏன் செயலில் ஏவுகிறாய்?’ (3 . 1) என்று கேட்டான்.

கிருஷ்ணர் கூறினார்: ‘மிகப் பழைய காலத்திலிருந்து இந்த இரண்டு நெறிகளும் நமக்கு வந்திருக்கின்றன. சாங்கியர்கள் ஞானக் கொள்கையை உயர்த்திப் பேசுகிறார்கள். யோகிகள் கர்மக் கொள்கையை உயர்த்திப் பேசுகிறார்கள். ஆனால் செயல் களைத் துறந்துவிடுவதால் அமைதி எய்த முடியாது. இந்த வாழ்க்கையில் கணநேரம்கூடயாரும் செயலற்றிருக்க முடியாது. இயற்கையின் குணங்கள் அவனைச் செயல்புரிய வைத்துவிடும். யார் செயல்களை நிறுத்திவிட்டு, அதேவேளையில் அவற்றைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பானோ, அவன் எதையும் அடைய மாட்டான்; அவன் வெறும் பொய்யன் ஆகிறான். யார் தனது மனச் சக்தியால் படிப்படியாகத் தன் புலன்களைச் செயலில் ஈடுபடுத்தி, தன்வசமாக்கிக் கொள்கிறானோ, அவனே சிறந்தவன். எனவே செயல்புரி.’ (3. 2-8)

‘உனக்குக் கடமை என்ற ஒன்று இல்லை, நீ கட்டுப்பட்ட வன் அல்ல என்ற ரகசியத்தைத் தெரிந்துகொண்டாலும், பிறரது நன்மைக்காக நீ செயல் புரிந்தேயாக வேண்டும். ஏனெனில் பெரியோர் எதைச் செய்கிறார்களோ அதையே சாதாரண மக்களும் செய்வார்கள். மன அமைதியும் சுதந்திரமும் எய்திய ஒருவர் வேலை செய்யாவிட்டால், ஞானமோ அமைதியோ இல்லாத மற்றவர்களும் அவரைப் பின்பற்ற முயல்வார்கள். அதனால் குழப்பம் உண்டாகும்.’ (3.20-24).

‘அர்ஜுனா, என்னிடம் இல்லாதது எதுவும் இல்லை. நான் அடைய விரும்புவதும் ஒன்றுமில்லை. என்றாலும் நான் தொடர்ந்து செயல்புரிகிறேன். நான் ஒரு கணம் செயல் புரியா விட்டால் பிரபஞ்சமே அழிந்துபோகும்.’ (3 . 22–24) ‘அறிவிலிகள் பலனிலும் லாபத்திலும் ஆசைகொண்டு செயல் புரிவதுபோல், ஞானி பற்றில்லாமலும், பலனிலும் லாபத்திலும் ஆசை யில்லாமலும் செயல்புரிய வேண்டும்.’ (3. 25)

‘நீங்கள் ஞானம் பெற்றவர்களாக இருந்தாலும், சாதாரண மக்கள் குழந்தைபோல் கொண்டுள்ள நம்பிக்கையைக் குலைக் காதீர்கள். அதற்கு மாறாக, அவர்களுடைய நிலைக்கு இறங்கிச் சென்று படிப்படியாக அவர்களை மேலே கொண்டு வாருங்கள்.’ (3 . 26, 29) இது ஒரு சக்தி வாய்ந்த கருத்து. இது இந்தியாவில் லட்சியமாக ஆகிவிட்டது. அதனால்தான் அங்கே உயர்ந்த வேதாந்தியும் கோயிலுக்குச் சென்று திருவுருவங்களை வழிபடு வதைக் காண்கிறீர்கள். அது பாசாங்கு அல்ல.

‘மற்ற தேவதைகளை வழிபடுபவர்களும் உண்மையில் என்னையே வழிபடுகிறார்கள்.’ (9. 23) என்று கிருஷ்ணர் கூறு வதைப் பின்னால் படிக்கிறோம். இறைவனின் அவதாரத்தையே மனிதன் வழிபடுகிறான். தவறான பெயரால் அழைத்தால் கடவுள் கோபம் கொள்வாரா என்ன? கொள்வாரானால் அவர் கடவுள் அல்லவே அல்ல! மனிதன் கல்லைத் தொழுதாலும் அவன் தன் இதயத்தில் கொள்வது கடவுள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? எப்படி வழிபட்டால் என்ன ?

மதம் என்பது கோட்பாடுகளே என்ற கருத்தை அகற்றி விட்டால், உண்மையை இன்னும் தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும். ஆதாம் ஆப்பிளை உண்டதால்தான் உலகமே பிறந்தது என்பது மதக் கருத்துக்களுள் ஒன்று – தப்பவும் வழி யில்லை. ஏசுவை நம்புங்கள்-என்றோ வாழ்ந்த அந்த மனிதரின் மரணத்தில் நம்பிக்கை வையுங்கள். ஆனால் இந்தியாவில் முற்றிலும் மாறுபாடான கருத்து உள்ளது. அங்கே மதம் என்பது அனுபூதியே தவிர, வேறு அல்ல. போய்ச் சேரவேண்டிய இடத்திற்கு ஒருவன் எப்படிப் போகிறான்? நாலு குதிரைகள் பூட்டிய வண்டியிலா, மின்சார வண்டியிலா, தரையில் உருண்டு கொண்டா என்பது முக்கியமல்ல. லட்சியம் ஒன்றுதான். பயங்கரக் கடவுளின் கோபத்திலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது என்பதுதான் கிறிஸ்தவர்களின் பிரச்சினை. நமது உண்மை நிலையை எப்படி அடைவது, இழந்த ஆன்ம நிலையை எப்படி மீண்டும் பெறுவது என்பது இந்தியர்களின் பிரச்சினை.

நீங்கள் ஆன்மா என்பதை உணர்ந்து கொண்டீர்களா? ஆம் என்பது உங்கள் பதிலானால் அதன் கருத்து என்ன? உடல் என்னும் தசைப்பிண்டமா அல்லது எல்லையற்ற, ஆனந்த வடிவமான, தன்னொளி கொண்ட அழிவற்ற ஆன்மாவா? நீங்கள் மிகப் பெரிய தத்துவவாதியாக இருக்கலாம். ஆனால் உடலே நீங்கள் என்ற கருத்தைக் கொண்டுள்ளதுவரை, உங்கள் காலில் நெளியும் சிறு புழுவைவிட நீங்கள் எந்த வகையிலும் உயர்ந்தவர்களாக மாட்டீர்கள்! உங்களுக்கு மன்னிப்பே கிடை யாது! தத்துவங்களையெல்லாம் தெரிந்துகொண்டும், உங்களை உடல் என்று எண்ணுவது எவ்வளவு இழிவு! உடல்-தெய்வங்கள், அதுவே நீங்கள்! இதுவா மதம்?

மதம் என்பது ஆன்மாவை ஆன்மாவாக உணர்வது. நாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நேர்மாறாக, ஆன்மாவை ஜடப்பொருளாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்; அழிவற்ற கடவுளிலிருந்து மரணத்தையும் ஜடப்பொருளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்; அழிகின்ற, அறிவற்ற ஜடப்பொருளிலிருந்து ஆன்மாவை உருவாக்கிக் கொண்டிருக் கிறோம்.

நீங்கள் தலைகீழாக நிற்பதாலோ, ஒற்றைக்காலால் நிற்ப தாலோ, அல்லது மூன்று தலைகளுடன் கூடிய ஐயாயிரம் தெய்வங்களை வழிபடுவதாலோ பிரம்மத்தை அறிய முடியு மானால் அப்படியே செய்யுங்கள். உங்களால் முடிந்த எந்த வழியிலாவது அதைச் செய்யுங்கள். அதைப்பற்றி எதுவும் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. உங்கள் வழி சிறந்ததாக, உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் மற்றொருவனுடைய வழி எவ்வளவோ கொடியதென்று நீங்கள் எண்ணினாலும், அது கெட்டதென்று சொல்ல உங்களுக்கு உரிமையில்லை என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

மதம் என்பது வளர்ச்சிபற்றியது என்பதை உணர வேண்டும்; அது வெறும் பொருளற்ற பிதற்றல்கள் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஒரு மனிதன் கடவுளைக் கண்டான். பற்றியெரிந்த புதரில் கடவுளைக் கண்டார் மோசஸ். மோசஸ் கடவுளைக் கண்டபோது என்ன செய்தாரோ, அது உங்களைக் காப்பாற்றுமா? ஒருவன் கடவுளைக் கண்டது, உங்களையும் உற்சாகப்படுத்தி அவ்வாறு செய்யும்படித் தூண்ட லாம், அதற்கும் மேலாகச் சிறிதளவும் அது உங்களுக்கு உதவி செய்யாது. முன்னோர்களின் உதாரணங்களுடைய முழுப் பயனும் அவ்வளவுதான். அதற்குமேல் ஒன்றுமில்லை. செல்லும் வழியிலுள்ள கைகாட்டிக் கம்பங்களே அவை. ஒருவன் உண்டால் இன்னொருவனின் பசி தீராது. ஒருவன் கடவுளைக் காண்பது மற்றொரு மனிதனைக் காப்பாற்றாது. உங்களுக்கு நீங்களே கடவுளைக் காண வேண்டும். இப்போது சண்டை யெல்லாம் கடவுளுக்கு ஓர் உடலில் மூன்று தலைகளா அல்லது ஆறு உடல்களில் ஐந்து தலைகளா என்பது பற்றியே! ஆனால் நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா என்றால் இல்லை; காண முடியும் என்று நம்புவதும் இல்லை. நாம் எவ்வளவு மதிகெட்ட முட்டாள்கள்! நிச்சயமாக நாம் பைத்தியக்காரர்களே.

கடவுள் என்று ஒருவர் உண்டானால், அவர் உங்கள் கடவுளாகவும் என் கடவுளாகவும் இருக்க வேண்டும் என்பது இந்தியாவில் தொன்றுதொட்டு வரும் கருத்து. சூரியன் யாருக்குச் சொந்தம்? அம்புலி மாமா எல்லோருக்கும் மாமா என்கிறீர்கள். கடவுள் ஒருவர் உண்டென்றால், நீங்கள் அவரைப் பார்க்க முடிய வேண்டும். இல்லாவிட்டால் அவர் எப்படி யாவது போகட்டும்! 0

ஒவ்வொருவனும் தன் வழிதான் சிறந்ததென்று கருது கிறான். மிகவும் நல்லது! ஆனால் ஒன்றை நினைவில் வையுங்கள். அது உங்களுக்கு நல்லதாக இருக்கலாம், அவ்வளவுதான். ஒரு வனுக்குச் சிறிதும் செரிக்காத உணவு மற்றொருவனுக்கு நன்றாகச் செரிக்கக் கூடியதாக இருக்கலாம். உங்களுக்கு நல்ல தாக இருப்பதால் உங்கள் வழியே எல்லோருக்கும் வழி என்ற முடிவுக்குத் தாவிவிடாதீர்கள். ஒருவனுக்குப் பொருத்தமான சட்டை ஆணுக்கும் பெண்ணுக்கும் எல்லோருக்குமே பொருந்தும் என்று எண்ணாதீர்கள். படிப்பு அற்ற, பண்பாடு இல்லாத, சிந்தனைத் திறன் இல்லாத ஆண்களும் பெண்களும் அத்தகைய சிறிய சட்டைக்குள் புகுத்தப்பட்டிருக்கின்றனர். நீங்களே சிந்தித்துப் பாருங்கள். நாத்திகர்கள் ஆகுங்கள், உலகாய தர்கள் ஆகுங்கள், அதுகூடச் சிறந்ததாக இருக்கும். சிந்தனை செய்ய வேண்டும்! இந்த மனிதனின் வழி தவறு என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அது உங்களுக்குத் தவறாக இருக்கலாம். அதாவது, நீங்கள் அதைப் பின்பற்றினால் தாழ்வுறலாம். அதனால் அவனும் தாழ்ந்த நிலையை அடைவான் என்பது பொருளல்ல. எனவே உங்களுக்கு ஞானம் இருந்து, மற்றொருவன் பலவீனனாக இருப்பதைப் பார்த்தால், அவனை வெறுக்காதீர்கள் என்று கிருஷ்ணர் கூறுகிறார். உங்களால் முடியுமானால் அவனுடைய நிலைக்குச் சென்று அவனுக்கு உதவி செய்யுங்கள். அவனாக வளர வேண்டும். அவனது தலைக்குள் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கிலோ அறிவைத் திணிக்கலாம். ஆனால் அது என்ன நன்மை செய்யும்? அவன் முன்பிருந்ததைவிடக் கீழ்நிலைக்கே போவான்.

கர்மத் தளை எல்லாம் எங்கிருந்து வந்தது? நாம் ஆன்மாவைக் கர்மத்தால் கட்டியதிலிருந்தே. எங்கள் இந்தியக் கருத்து இரண்டைக் காட்டுகிறது: ஒரு பக்கம் இயற்கை, மறு பக்கம் ஆன்மா. இயற்கை என்பது இந்தப் புறவுலகம் மட்டுமல்ல; நம் உடல்களும் மனமும் புத்தியும், ஏன், நான்-உணர்வும் சேர்ந்ததே. இவற்றிற்கெல்லாம் அப்பால் உள்ளது எல்லையற்ற ஒளிமயமான ஆன்மா. இந்தக் கருத்தின்படி ஆன்மா இயற்கை யிலிருந்து முற்றிலும் வேறானது. இதுவரை அப்படித்தான் இருந்துள்ளது, இனியும் அப்படித்தான் இருக்கும். ஆன்மாவை மனத்துடன் ஒன்றுபடுத்திக் காண்கின்ற காலம் ஒருபோதும் இருந்ததில்லை.

நீங்கள் உண்ணும் உணவே மனத்தை உண்டாக்குகிறது என்பது வெளிப்படை உண்மை. அது ஜடப்பொருள். ஆன் மாவோ உணவுடன் தொடர்பின்றி உள்ளது. நீங்கள் உண் டாலும் உண்ணாவிட்டாலும் ஒன்றுமில்லை, நீங்கள் சிந்தித் தாலும் சிந்திக்காவிட்டாலும் பரவாயில்லை. அது எல்லையற்ற பேரொளி. அதன் ஒளி எப்போதும் ஒரே போன்றது. ஒளியின் முன் நீங்கள் நீலக் கண்ணாடியையோ பச்சைக் கண்ணாடி யையோ வைத்தால், அதனால் ஒளிக்கு என்ன? அதன் நிறம் மாறாது. மனம்தான் மாறிமாறி வெவ்வேறு நிறங்களைத் தரு கிறது. ஆன்மா உடலை விடுகின்ற அந்தக் கணமே எல்லாம் சின்னாபின்னப்படுகிறது.

இயற்கையிலுள்ள உண்மை என்பது ஆன்மாவே. அந்த உண்மைப்பொருள், அந்த ஆன்ம ஒளி நமது உடல்களின் மூல மாகவும் மனங்களின் மூலமாகவும் இயங்குவது, பேசுவது ஆகிய எல்லா தொழில்களையும் செய்கிறது. அந்த ஆன்மாவின் ஆற்றலை, உணர்வை, அடிப்படையாகக் கொண்டுதான் இயற்கை பலவகைகளில் செயல்புரிகிறது. ஆன்மாதான் நமது எண்ணங்கள் அனைத்திற்கும், உடலின் செயலிற்கும், மற்ற எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. அது ஒவ்வொன் றிற்கும் தனது ஒளியைத் தந்தாலும், நன்மை தீமைகளாலோ இன்ப துன்பங்களாலோ தட்ப வெப்பங்களாலோ இயற்கையின் பிற தீமைகளாலோ பாதிக்கப்படுவதில்லை.

‘ஆகையால், அர்ஜுனா, இந்தச் செயல்களெல்லாம் இயற்கையில் நிகழ்கின்றன. அது தன் நியதிகளை நமது உடல்களிலும் உள்ளங்களிலும் செயல்படுத்துகிறது. நாம் அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு, “நான் இதைச் செய்கிறேன்” என்கிறோம். இவ்வாறு நாம் மனமயக்கத்திற்கு உள்ளாகிறோம்.’ (3. 27)

நாம் ஏதோ ஒரு வற்புறுத்தலுக்கு உட்பட்டே எப்போதும் செயல்புரிகிறோம். பசி வற்புறுத்தும்போது உண்கிறோம். துன்புறுதல் அதைவிடக் கொடியது, அது வெறும் அடிமைத் தனம். உண்மையான ‘நான்’ எப்போதும் சுதந்திரமானது. ஒன்றைச் செய்யுமாறு அதை எது கட்டாயப்படுத்த முடியும்? இயற்கையில் இருப்பவனே துன்புறுகிறான். உடலுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும்போதுதான் துன்புறுகிறோம்; நான் இன்ன பெயருடையவன் என்றெல்லாம் பொருளற்றவற்றைப் பிதற்றுகிறோம். உண்மையை உணர்ந்தவன் தன்னைத் தனியாக வைத்துக் கொள்வான். அவனது உடல் எதைச் செய்தாலும், மனம் எதைச் செய்தாலும் அவன் கவலைப்படுவதில்லை.

ஆனால் சமுதாயத்தின் பெரும் பகுதி மாயைக்கு உட்பட் டிருக்கிறது என்பதை மறக்கக் கூடாது. அவர்கள் ஏதாவது நன்மை செய்தால், அதைத் தாங்களே செய்ததாகக் கருது கிறார்கள். உயர்ந்த தத்துவத்தை அவர்களால் இன்னும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களது நம்பிக்கையைக் குலைக் காதீர்கள். அவர்கள் தீமையை விலக்கி நன்மையைச் செய் கிறார்கள். அதுவே பெரியது. அப்படியே செய்யட்டும். அவர்கள் நன்மைக்காகச் செயல்புரிபவர்கள். இவ்வாறு நன்மை செய்வதை விடச் சிறந்த பெருமை ஒன்று உள்ளது என்பதைப் படிப்படியாக அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் சாட்சியாக மட்டுமே இருப்பார்கள், செயல்கள் தாமே நிகழும். நாளடைவில் அவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள். எல்லா தீமைகளையும் விலக்கிய பிறகு, எல்லா நன்மைகளையும் செய்த பிறகு, தாங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை அவர்கள் கண்டு கொள்ளத் தொடங்குவார்கள். அவர்கள் செயல் புரிபவர்கள் அல்ல, தனித்து நிற்பவர்கள்; சாட்சிகள்; நின்று பார்த்துக் கொண்டிருப்பவர்கள். இயற்கையே உலகனைத்தையும் உண்டாக்குகிறது. அவர்கள் அதிலிருந்து திரும்பிவிட்டவர்கள். ‘அன்பா, முதலில் உண்மையாகிய ஒன்றே இருந்தது, வேறு எது வும் இல்லை. அது சிந்தித்தது. மற்ற அனைத்தும் உண்டாயின.’

‘பாதை தெரிந்தவர்களும் தங்கள் இயற்கையால் தூண்டப் பட்டுச் செயல் புரிகிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருடைய இயல்பின்படியே செயல் புரிகிறார்கள். அவர்கள் அதை மீற முடியாது’. (3. 33) அணு, விதியை மீற இயலாது. மனோமய அணுவோ, பௌதீகமய அணுவோ எதுவானாலும், அது விதிக்குக் கீழ்ப்படிந்தாக வேண்டும். வெளியிலிருந்து அடக்கும் முயற்சியால் என்ன பயன்?’ (3. 33)

வாழ்க்கையில் ஒரு பொருளுக்கு மதிப்பு எதனால் ஏற்படு கிறது? சொத்தாலோ சுகத்தாலோ அல்ல. அனைத்தையும் அலசிப் பாருங்கள். நமக்குப் படிப்பினை தர வருகின்ற அனு பவத்தைத் தவிர வேறு எதிலும் மதிப்பு இல்லை என்பதைக் காண்பீர்கள். பல நேரங்களில் நமக்கு ஏற்படும் துன்பங்களே இன்பங்களைவிடச் சிறந்த அனுபவத்தை அளிக்கின்றன. இயற்கையின் இனிய அணைப்பைவிட அடிகளே நமக்குப் பல வேளைகளிலும் சிறந்த பாடத்தைக் கற்பிக்கின்றன. பஞ்சத் திற்குக்கூட அதன் இடமும் மதிப்பும் உண்டு.

கிருஷ்ணரின் கருத்துப்படி நாம் இப்போதுதான் பிறந்த புதியவர்கள் அல்ல. நமது மனங்களும் புதியவை அல்ல. ஒவ் வொரு குழந்தையும் பிறக்கும்போது, மனித இனத்தின் கடந்த காலம் முழுவதையும் மட்டுமின்றி, தாவர வாழ்க்கையின் கடந்த காலத்தையும் கொண்டு வருகிறான் என்பது இக்காலத்தில் நமக்குத் தெரிகிறது. பழைய அத்தியாயங்கள், நிகழ்கால அத்தியாயங்கள், இவற்றுடன் எதிர்கால அத்தியாயங்களின் தொகுதியும் அவன்முன் இருக்கின்றன. ஒவ்வொருவனும் செல்ல வேண்டிய வழி, படம் வரைந்து, அடையாளமிட்டு, திட்ட மிட்டு அவன் முன்னே வைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு இருளிலும் எந்த நிகழ்ச்சியோ சூழ்நிலையோ, காரணமின்றி நிகழ முடியாது. நமது அறியாமையே இதன் காரணம். முடிவற்ற காரியகாரணச் சங்கிலி ஒவ்வொரு வளையமாக இயற்கை வரையிலும் தொடர்ந்து செல்கிறது. உலகம் முழுவதும் அத்தகைய சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது. அந்தக் காரண காரியச் சங்கிலி பிரபஞ்சம் தழுவியது. அதன் ஒரு வளையத்தை, ஒரு பகுதியை நீங்கள் பெறுகிறீர்கள்; ஒரு பகுதியை நான் பெறு கிறேன். அந்தப் பகுதிதான் நமது இயல்பு.

அடுத்து கிருஷ்ணர், ‘பிறரது நெறியைப் பின்பற்றுவதை விட உங்கள் நெறியைப் பின்பற்றி உயிர்விட்டாலும் அதுசிறப்பு (3 . 35) என்கிறார். இது என் நெறி. நான் இங்கே கீழே இருக்கிறேன். நீங்கள் அங்கே மேலே இருக்கிறீர்கள். அங்கே வந்து உங்களுடன் இருக்க எண்ணி, நான் எனது பாதையை விட்டுவிட எப்போதும் தூண்டப்படுகிறேன். ஆனால் அப்படிச் சென்றால் நான் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் போக நேரும். இதை நாம் மறக்கக் கூடாது. எதுவும் தானாக வளர வேண்டும். விரையாமல் வளர்ந்தால் நீங்கள் அனைத்தையும் அடையலாம். இல்லாவிடில் ஆன்மீக வாழ்விற்குப் பெரிய இன்னல் விளையும். மத போதனையின் அடிப்படை ரகசியம் இது.

‘மக்களை ரட்சித்தல்’, ‘எல்லோரும் ஒரே கொள்கையை நம்புதல்’ என்றெல்லாம் நீங்கள் கூறுவதன் பொருள் என்ன? அது நடக்க முடியாத காரியம். எல்லோருக்கும் சொல்லத்தக்க பொதுவான கருத்துக்கள் உள்ளன. உண்மையான குருவே உங்கள் இயல்பை அறிவார். உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். உங்கள் சொந்த இயல்பு இன்னதென்று நீங்கள் நினைப்பது ஒருவேளை முற்றிலும் தவறாக இருக்கலாம். அது நீங்கள் அறியும் வகையில் வளர்ச்சி அடையாமல் இருக்கலாம். குருவே அதை அறியக்கூடியவர். அவர் உங்கள் முகத்தை ஒரு முறை உற்றுப் பார்ப்பதிலேயே அதைக் கண்டுகொள்வார்; உங்கள் பாதையை உங்களுக்குக் காட்டுவார். நாம் தட்டுத்தடு மாறி இங்குமங்கும் அலைந்து எதையெதையோ செய்து கொண்டு, முன்னேறாமல் இருக்கிறோம்; உரிய காலம் வரும் போது வாழ்க்கை நதியில் மிதந்து செல்லத் தொடங்குகிறோம். ஆற்றில் இறங்கியதும் மிதக்க ஆரம்பித்தால், அதுதான் நல்ல அடையாளம். பிறகு போராட்டமே இல்லை. இதையே கண்டு பிடிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு வேறு நெறியைத் தேடு வதைவிட, இதிலேயே உயிரை விடலாம்.

இதற்கு மாறாக நாம் ஒரு புதிய மதத்தைத் தொடங்கி, புதிய கொள்கைகளை நிறுவி, எல்லோரும் ஒரே இயல்புடைய வர்கள் என்ற நம்பிக்கையில் மனித குலத்தின் லட்சியத்திற்கே நம்பிக்கைத் துரோகம் செய்கிறோம். ஒரேமாதிரியான உள்ளமோ உடலோ கொண்ட இருவர் இந்த உலகில் இல்லை. ஒரே மதமுடைய இருவரும் இருக்க முடியாது.

நீங்கள் ஆன்மீக வாழ்க்கையை விரும்பினால், நிறுவப் பெற்ற, நிலைபெற்றுவிட்ட எந்த மதத்தையும் பின்பற்றாதீர்கள். அந்த மதங்கள், ஒவ்வொருவரின் தனி வளர்ச்சியைத் தடைப் படுத்துவதால், நன்மை செய்வதைவிட நூறு மடங்கு தீமை செய்கின்றன. எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால் உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள். என் அறிவுரையைக் கேட்பதானால் நீங்கள் பொறிக்குள் தலையை நுழைத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். உங்கள் கழுத்தில் சுருக்குக் கயிற்றை வீசினால் அந்தக் கணமே விலகிப் போய்விடுங்கள். பல பூக் களிலிருந்து தேனைச் சேகரிக்கும் தேனீ, ஒரு பூவிலும் கட்டுப் படாமல் விருப்பப்படிச் செல்வதுபோல், நீங்களும் கட்டுக்கு அகப்படாமல் இருங்கள். நிலைபெற்ற எந்த மதத்திலும் சேராதீர்கள். ஆன்மீக வாழ்க்கை என்பது உங்களுக்கும் உங்கள் இறைவனுக்கும் இடையில் உள்ளது. மூன்றாம் மனிதன் அதில் குறுக்கிடக் கூடாது. நிலைபெற்ற மதங்கள் செய்தவற்றை எல் லாம் எண்ணிப் பாருங்கள். மதங்களின் பெயரால் செய்யப் பட்டுள்ள கொடுமைகளைவிட எந்த நெப்போலியன் அதிகக் கொடுமைகளைச் செய்திருக்கிறான்? நீங்களும் நானும் எதையும் நிறுவத் தொடங்கினால், உடனே ஒவ்வொரு மனிதனையும் வெறுக்கத் தொடங்குகிறோம். ஒன்றை அன்பு செய்வது என்றால் பிறவற்றை வெறுப்பது என்பதே கருத்தானால், அன்பு செய்யா திருப்பதே நல்லது. அது அன்பல்ல, அது நரகம்! உங்களைச் சேர்ந்தவர்களை நேசிப்பது என்பது பிறரைப் பகைப்பதானால், அது சுயநலம், மிருகத்தனம் இரண்டின் சாரம். முடிவில் அது உங்களை மிருகங்களாகவே ஆக்கிவிடும். இன்னொருவரின் இயல்பிற்குப் பொருந்திய மதம் எவ்வளவு உயர்ந்ததாக உங்களுக்குத் தோன்றினாலும், அதைப் பின்பற்றாமல் உங்கள் இயல்பிற்கேற்ற மதத்தைப் பின்பற்றுவதிலேயே நீங்கள் உயிர் துறப்பது நல்லது. (3. 35)

‘அர்ஜுனா, எச்சரிக்கையாயிரு. காமமும் கோபமும் கொடிய பகைவர்கள். அவற்றை அடக்க வேண்டும். ஞானிகளின் அறிவையும் அவை மறைத்துவிடுகின்றன. காமத்தீயைத் தணிக்க முடியாது. புலன்களும் மனமும் அதன் இருப்பிடம். ஆன்மா எதையும் விரும்புவதில்லை .’ (3. 37, 40)

‘ இந்த யோகத்தை நான் பண்டைக் காலத்தில் விவஸ் வானுக்குக் கற்பித்தேன். விவஸ்வான் மனுவுக்கு அளித்தார். இவ்வாறு அந்த உயர்ந்த ஞானம் ஒருவர்பின் ஒருவராக வந் துள்ளது. நாளடைவில் அது அழிந்து போயிற்று. ஆகையால் அதை மீண்டும் நான் இன்று உனக்குக் கூறுகிறேன்.’ (4. 1 – 3)

பின்பு அர்ஜுனன், ‘நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? நேற்றுப் பிறந்தவன் நீ, விவஸ்வான் உனக்கு நெடுங்காலத்திற்கு முன் பிறந்தவர். நீ அவருக்கு உபதேசித்ததாக எப்படிக் கூறுகிறாய்?’ (4. 4) என்று கேட்கிறான்.

அதற்குக் கிருஷ்ணர் கூறுகிறார்: ‘அர்ஜுனா, நீயும் நானும் பிறப்பு இறப்புச் சக்கரத்தில் பலமுறை சுழன்று வந்திருக்கிறோம். உனக்கு அவை எல்லாம் நினைவில்லை. நான் ஆதியில்லாதவன்; பிறப்பில்லாதவன்; படைப்பு அனைத்திற்கும் தலைவன். எனது இயற்கையை வசப்படுத்திக் கொண்டு நான் உருவெடுக்கிறேன். அறம் தாழ்ந்து, மறம் தலையெடுக்கும் போதெல்லாம் மனித குலத்திற்கு உதவ நான் வருகிறேன். நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், ஆன்மீகத்தை நிலைநாட்டு வதற்கும் நான் அவ்வப்போது வருகிறேன். எவரெவர் எந்தெந்த வழியில் என்னை அடைய விரும்பினாலும், அவரவரை நான் அந்தந்த வழியில் அடைகிறேன். ஆனால், அர்ஜுனா, என் வழியைவிட்டு யாரும் விலகிச் செல்ல முடியாதென்பதை அறிந்துகொள்.’ (4. 5-8, 11) யாரும் எப்போதும் விலகிச் சென்ற தில்லை . எப்படிச் செல்ல முடியும்? எவரும் அவர் வழியிலிருந்து தவற முடியாது.

எல்லா சமுதாயங்களுமே தவறான பொதுமையை அடிப் படையாகக் கொண்டுள்ளன. பொதுமைப்படுத்தல் பரிபூரண மானதாக இருந்தால்தான் அதிலிருந்து நியதியை உண்டாக்க முடியும். ‘ஒவ்வொரு நியதிக்கும் விலக்கு உண்டு’ என்ற பழ மொழியின் பொருள் என்ன? அது நியதியானால் அதை மீற இயலாது; யாரும் மீற முடியாது. ஆப்பிள் புவியீர்ப்புச் சக்தியின் நியதியை மீறுகிறதா? ஒரு நியதி மீறப்படுகின்ற அந்தக் கணம் பிரபஞ்சமே இல்லாமல் போய்விடும். நீங்கள் நியதியை மீறும் காலம் வரும். அப்போது உங்கள் புத்தி, மனம், உடல் எல்லாம் கரைந்து போய்விடும்.

ஒரு மனிதன் திருடுகிறான். ஏன் நீங்கள் அவனைத் தண்டிக் கிறீர்கள். அவனுக்கும் இடம் கொடுத்து, அவனுடைய சக்தியை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அவனைப் பார்த்து ‘நீ பாவி’ என்கிறீர்கள். அவன் சட்டத்தை மீறியவன் என்று பலர் கூறுவார்கள். இந்த மனித மந்தை ஒரே மாதிரியான கட்டுப் பாட்டிற்கு அடங்கி நடக்கும்படிக் கட்டாயப் படுத்தப்படுகிறது. அதனால்தான் எல்லா துன்பங்களும் பாவமும் பலவீனமும் வருகின்றன. நீங்கள் எண்ணுவதுபோல் அவ்வளவு கொடியது அல்ல உலகம். முட்டாள்களாகிய நாமே அதைக் கொடியதாகச் செய்துள்ளோம். நாமே பேய்பிசாசுகளைப் படைக்கிறோம். பிறகு அவற்றை ஓட்ட நம்மால் முடிவதில்லை. கையால் கண்ணை மூடிக்கொண்டு, ‘யாராவது ஒளி தாருங்கள்!’ என்று கதறுகிறோம். கண்களிலிருந்து கைகளை எடுங்கள். செய்ய வேண்டுவது அவ்வளவுதான். நம்மைக் காப்பாற்றுவதற்காகத் தெய்வங்களை எல்லாம் கூப்பிடுகிறோம். ஒருவனும் தன்மீது பழி சொல்வதில்லை. அதுதான் இரக்கத்திற்கு உரியது. சமுதாயத்தில் ஏன் இவ்வளவு தீமை இருக்கிறது? என்ன காரணம்? சுகபோக நாட்டமும் சாத்தானும் பெண்ணும் என் கிறீர்கள். ஏன் இவற்றை உருவாக்குகிறீர்கள்? அவற்றை உருவாக்குமாறு யாரும் உங்களிடம் சொல்லவில்லையே! ‘அர்ஜுனா, என் வழியிலிருந்து யாரும் விலக முடியாது. (4. 11)’ நாம் முட்டாள்கள், நமது வழிகளும் அறிவற்றவையாகவே இருக்கின்றன. நாம் இந்த மாயை வழியேதான் செல்ல வேண் டியிருக்கிறது. கடவுள் சொர்க்கத்தைப் படைத்தார்; மனிதன் தனக்குத்தானே நரகத்தைப் படைத்துக்கொண்டான்.

‘ஒரு கர்மமும் என்னைத் தொடாது. எனக்குக் கர்மபலனில் விருப்பில்லை. என்னை இவ்வாறு அறிபவர்கள் ரகசியத்தை அறிந்தவர்கள், அவர்கள் கர்மத்தில் கட்டுப்பட மாட்டார்கள். பண்டைய ரிஷிகள் இந்த ரகசியத்தை அறிந்து ஆபத்தின்றிச் செயல்புரிந்தார்கள். நீயும் அதேபோல் செயல்புரி’. (4. 14, 15) ம ‘தீவிரச் செயலின் இடையில் ஆழ்ந்த அமைதியையும், ஆழ்ந்த அமைதியில் தீவிரச் செயலையும் யார் காண்கிறானோ அவனே அறிஞன்.’ (4. 18) இதுதான் கேள்வி: ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு பொறியும் செயலாற்றுகின்றபோதும், எது வும் குலைக்க முடியாத அமைதியில் நீ திளைத்திருக்கிறாயா? கடைவீதியில் வண்டிக்காகக் காத்துக் கொண்டிருக்கையில், உன்னைச் சுற்றிலும் எல்லாம் பரபரப்பாயிருக்கும்போது, நீ அமைதியாக சாந்தமாக தியானத்தில் மூழ்கியிருக்கிறாயா? ஒரு குகையில் உன்னைச் சுற்றி எல்லாம் அசைவற்றிருக்கும்போது நீ தீவிரமாகச் செயல்படுகிறாயா? அப்படியிருந்தால் நீ ஒரு யோகி; இல்லாவிடில் இல்லை.

‘யாருடைய ஒவ்வொரு முயற்சியும் பலனில் விருப்ப மில்லாமல், சுயநலத்தில் நாட்டமில்லாமல், பற்றற்றதாக இருக் கிறதோ, அவனை அறிஞன் என்று பெரியோர் கூறுகின்றனர்.’ (4. 19) நாம் சுயநல நாட்டம் உடையவர்களாக இருக்கும்வரை உண்மையறிவு நமக்கு ஒருபோதும் வராது. ஒவ்வொன்றிற்கும் நாம் நம்முடைய சாயத்தையே பூசுகிறோம். உள்ளது உள்ளபடியே பொருட்கள் நம்மிடம் வருகின்றன. அவை தம்மை மறைத்துக் கொள்கின்றன என்பதில்லை; நாம்தான் அவற்றை மறைக்கிறோம். நம்மிடம் தூரிகை இருக்கிறது. ஒரு பொருள் வந்ததும் அது நமக்குப் பிடிக்காவிட்டால் அதற்குச் சிறிது சாயம் பூசிவிட்டுப் பிறகு பார்க்கிறோம். நாம் எதையும் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நாம் ஒவ்வொன்றின்மீதும் நமது வண்ணத்தைப் பூசுகிறோம். எல்லா காரியங்களிலும் தூண்டு தலாக இருப்பது சுயநலம். ஒவ்வொன்றும் நம்மால் மறைக்கப் படுகிறது. பட்டுப்புழு தன் உடலிலிருந்தே நூலை நூற்று, அத னால் ஒரு கூண்டைச் செய்து, அதிலேயே தன்னை அடைத்துக் கொள்வதுபோல் நாமும் இருக்கிறோம். தன் செயலாலேயே அது தன்னைச் சிறைப்படுத்திக் கொள்கிறது. அதையே நாமும் செய்கிறோம். ‘நான்’ என்று நாம் சொன்னால், அந்தக் கணமே நூல் ஒரு சுற்றுச் சுற்றுகிறது; ‘நான், எனது’ என்றால் இன் னொரு சுற்றுச் சுற்றுகிறது. இப்படியே சுற்றிக்கொண்டு போகிறது.

செயலின்றி ஒரு கணம்கூட நம்மால் இருக்க முடியாது. செயல் புரியுங்கள்! உங்கள் அண்டை வீட்டுக்காரர் உங்களிடம் வந்து, ‘சற்று எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று கேட்டால், எப்படிச் செய்வீர்களோ, அந்த அளவிலேயே உங்களுக்கும் உதவி செய்துகொள்ளுங்கள். அதற்குமேல் அல்ல, இன்னொரு வனின் உடலைவிட உங்கள் உடல் உயர்ந்த மதிப்பு உடையது அல்ல. அவனது உடலுக்குச் செய்வதைவிட அதிகமாக உங்கள் உடலுக்கு எதுவும் செய்யாதீர்கள். இதுதான் மதம்.

‘யாருடைய முயற்சிகள் எந்தவிதமான ஆசையும் சுய நலமும் அற்றதோ, அவன் கர்மத்தளையை ஞானத் தீயால் எரித்துவிட்டவன். அவனே அறிஞன்’. (4. 19) புத்தகங்களைப் படிப்பதால் அது கிடைக்காது. கழுதையின்மீது ஒரு நூல் நிலையத்தையே சுமத்திவிடலாம். அதனால் அது கல்வியறிவு பெற்றுவிடாது. பல நூல்களைப் படிப்பதால் என்ன பயன்? ‘செயலில் பற்றை முற்றிலுமாக விட்டு, எப்போதும் திருப்தியான மனத்துடன், லாபத்தில் ஆசை கொள்ளாமல் செயல் புரியும் ஞானி கர்மத்தைக் கடந்தவன்.’ (4. 20)

தாயின் வயிற்றிலிருந்து நான் நிர்வாணமாக வந்தேன், நிர்வாணமாகவே போகிறேன்; உதவியற்றவனாக வந்தேன், உதவியற்றவனாகப் போகிறேன்; இப்போதும் உதவியற்ற வனாகவே இருக்கிறேன். சேருமிடம் தெரிய வில்லை. அதைப்பற்றி நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது. எவ்வளவு பைத்தியக்கார எண்ணங்களெல்லாம் தோன்றுகின்றன. ஆவி உலக நடுவர் (Medium) ஒருவரிடம் போய் ஏதாவது ஆவி நமக்கு உதவி புரியுமா என்று பார்க்கிறோம். இந்தப் பலவீனத்தைப் பாருங்கள்! ஆவிகள், பேய்கள், தேவதைகள்! புரோகிதர்களே, மந்திரவாதிகளே யாரானாலும் சரி, வந்துவிடுங்கள்! நாம் பலவீனமாயிருக்கின்ற அந்தக் கணம்தான் அவர்கள் நம்மைப் பிடித்துக் கொள்வதற்கான தருணம்! பிறகு அவர்கள் எல்லா தெய்வங்களையும் கொண்டுவந்து விடுவார்கள்.

எங்கள் நாட்டில் ஒரு மனிதன் படித்து வலிமை மிகும் போது அவன் தத்துவவாதியாகி, ‘இந்தப் பிரார்த்தனையும் தீர்த்தங்களில் முழுகுவதும் மதியீனம்’ என்பான். அவனது தந்தை இறக்கிறார், தாய் இறக்கிறாள். ஓர் இந்துவுக்கு இவற்றை விட அதிர்ச்சி தருவது வேறெதுவும் இல்லை. அப்போது அவனே ஒவ்வோர் அழுக்குக் குட்டையிலும் குளிப்பதையும், கோயிலுக்குள் சென்று புழுதியில் புரள்வதையும் காண்பீர்கள். யாராவது உதவுங்கள்! ஆனால் உதவி வருவதில்லை . யாரிட மிருந்தும் உதவியில்லை. அதுதான் உண்மை . மனிதர்களைவிடத் தெய்வங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனாலும் உதவி மட்டும் கிடைப்பதில்லை. நாம் நாய்களைப்போல் சாகிறோம் – எந்த உதவியும் இல்லை . எங்கு பார்த்தாலும் மிருகத்தனம், பஞ்சம், நோய், துன்பம், தீமை! எல்லோரும் உதவிக்காக ஓலமிடு கின்றனர். ஆனால் உதவி வருவதில்லை . என்றாலும் நிராசை கொள்ளாமல் உதவிக்காகக் கதறுகிறோம். என்ன சீரழிவு! என்ன பயங்கரம்! உங்கள் உள்ளத்தை உற்றுப் பாருங்கள்! பாதித் துன்பங்களுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல; நமது பெற்றோர்களே பொறுப்பாளிகள். இந்தப் பலவீனத்துடன் பிறந்தோம். மேலும்மேலும் இது நமது தலையில் புகுத்தப் பட்டது. மெள்ள மெள்ளத்தான் இதைக் கடந்தாக வேண்டும்.

உதவி இல்லையே என்று ஏங்குவது மிகப் பெரிய தவறு. யாரிடமும் உதவியை நாடாதீர்கள். நாமே நமக்கு உதவி. நமக்கு நாமே உதவ முடியாவிட்டால், வேறு யாரும் உதவ முடியாது. ‘உனக்கு ஒரே நண்பன் நீயே; ஒரே பகைவனும் நீயே; எனக்கு என்னைத் தவிர வேறு பகைவனும் இல்லை; நண்பனும் இல்லை !'(6 . 5). இதுதான் முடிவான சிறந்த பாடம். அந்தோ ! இதைக் கற்றுக்கொள்ளத்தான் எவ்வளவு காலம் ஆகிறது! இதோ கைக்குக் கிட்டிவிட்டதுபோல் தோன்றுகிறது; அடுத்த நொடியில் பழைய அலை மோதுகிறது; முதுகெலும்பு உடை கிறது. நாம் பலமிழந்து மறுபடியும் மூடநம்பிக்கைக்கும் உதவிக்கும் கை நீட்டுகிறோம். அந்தப் பெரும் துன்பக் குவி யலைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். எல்லாம் உதவியைத் தேடிய தவறான எண்ணத்தின் விளைவு!

புரோகிதர் வழக்கமான தம் மந்திரங்களை ஓதிவிட்டுத் தட்சிணையை எதிர்பார்க்கிறார். அறுபதாயிரம்பேர் வானத்தை நோக்கிப் பிரார்த்தனை செய்துவிட்டுப் புரோகிதருக்குத் தட்சிணை தருகிறார்கள். மாதங்கள் ஒவ்வொன்றாக எத்தனையோ கடக்கின்றன; அவர்கள் இன்னும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், பணம் கொடுக்கிறார்கள், பிரார்த்திக்கிறார்கள். சற்று எண்ணிப் பாருங்கள்! பைத்தியக் காரத்தனம் அல்லாமல் வேறு என்ன இது? இதற்கு யார் காரணம்? நீங்கள் மதப் பிரச்சாரம் செய்யலாம். அது வளர்ச்சி யற்ற மனங்களைக் கிளறிவிடப் பயன்படுமே தவிர, வேறு எதற்கும் உதவாது. நீங்கள் அதற்காகத் துயரத்தை அனுபவிக்க வேண்டி வரும். உள்ளத்தைத் தொட்டுப் பார்த்துக் கொள் ளுங்கள், நீங்கள் யார்? பிறரது தலையில் பலவீனத்தைப் புகுத்தி யதற்காக நீங்கள் வட்டிக்கு வட்டி சேர்த்து அனுபவிக்க நேரும். கர்ம நியதி அதன் பலனைக் கொண்டு வந்தே தீரும்.

ஒரே ஒரு பாவம்தான் உண்டு. அதுவே பலவீனம். நான் சிறுவனாயிருந்தபோது மில்டன் (Milton) எழுதிய ‘இழந்த சொர்க்கம்’ (Paradise Lost) என்ற கவிதையைப் படித்தேன். அதில் எனக்கு மதிப்பு ஏற்பட்ட ஒரே நல்லவன் சாத்தானே. பலவீனமின்றி, எல்லாவற்றையும் எதிர்கொண்டு சாவதற்கும் ஆயத்தமாயிருப்பவன் மட்டுமே மகான்.

எழுந்து தைரியமாகப் போராடுங்கள். பைத்தியக்காரத் தனத்திற்கு மேல் பைத்தியக்காரத்தனமாகச் சேர்த்துக் கொண்டே போகாதீர்கள். எந்தத் தீமை வரக் காத்துக் கொண்டி ருக்கிறதோ, அதனுடன் உங்கள் பலவீனத்தையும் சேர்க் காதீர்கள். உலகிற்கு நான் சொல்ல வேண்டுவதெல்லாம் அவ்வளவுதான். வீரர்களாக இருங்கள்! ஆவிகளைப் பற்றியும் பேய்களைப் பற்றியும் பேசுகிறீர்கள். நாமே உயிருடன் உலவும் பேய்கள். வலிமையும் வளர்ச்சியுமே வாழ்விற்கு அடையாளம், பலவீனம் சாவுக்கு அடையாளம். பலவீனமான எல்லாவற்றி லிருந்தும் விலகிவிடுங்கள். அது சாவு. வலிமையானது என்றால் அதைப் பெற நரகத்திற்குச் செல்ல நேர்ந்தாலும், சென்று அதைப் பற்றிக்கொள்ளுங்கள். வீரர்களுக்கு மட்டுமே முக்தி உண்டு. ‘அழகிற்சிறந்ததை அடைய வீரர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.’ தைரியத்தின் உச்சியை அடையாத யாருக்கும் முக்தி பெறத் தகுதி இல்லை . நரகம் யாருக்கு? சித்திரவதை யாருக்கு? பாவம் யாருக்கு? பலவீனம் யாருக்கு? சாவு யாருக்கு? நோய் யாருக்கு?

நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள். அப்படியானால் உண் மையான கடவுளை நம்புங்கள். ‘நீயே ஆண், நீயே பெண், நீயே இளமைச் செருக்கில் நடக்கும் இளைஞன், நீயே தடியூன்றித் தள்ளாடும் கிழவன்’. பலவீனம்நீயே, பயம் நீயே, சொர்க்கம் நீயே, நரகம் நீயே, கடிக்கும் பாம்பு நீயே. அச்சமாக நீ வா! சாவாக நீ வா! துன்பமாக நீ வா!….

பலவீனம், தளைகள் எல்லாமே கற்பனை. அவற்றைப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னால், அவை மறைந்து ஒழிய வேண்டும். பலவீனமடையாதீர்கள்! வேறு வழியில்லை. வீரர் களாக எழுந்து நில்லுங்கள்! அச்சம் வேண்டாம்! மூட நம்பிக்கை வேண்டாம்! உண்மையை உள்ளபடியே எதிர்கொள்ளுங்கள். நமது துன்பங்களுள் மிகக் கொடிய துன்பமான மரணம் வந் தாலும் வரட்டும்! நாம் உயிரை விடவும் துணிந்துள்ளோம். எனக்குத் தெரிந்த மதமெல்லாம் அவ்வளவுதான். நான் இன்னும் அதை அடையவில்லை. ஆனால் அதற்காகப் போராடிக் கொண் டிருக்கிறேன். நான் அடையாமல் போகலாம்; ஆனால் நீங்கள் அடையலாம், முன்னேறுங்கள்!

‘எங்கே ஒருவன் மற்றொன்றைக் காண்கிறானோ, மற் றொன்றைக் கேட்கிறானோ, எதுவரை இரண்டு உண்டோ , அதுவரை எல்லா துன்பங்களுக்கும் பிறப்பிடமான அச்சம் இருந்தே தீரும்; எங்கே ஒருவன் மற்றொன்றைக் காண வில்லையோ, எங்கே ஒன்று மட்டுமே உள்ளதோ, அங்கே துய ரத்தை அனுபவிக்க யாருமில்லை. துன்புற யாருமில்லை.’ இரண்டற்ற ஒன்றுதான் உள்ளது. ஆகையால் அஞ்சாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள், எழுந்திருங்கள், லட்சியத்தை அடை யும்வரை நிற்காதீர்கள்.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 16. கீதை 3

15. கீதை 2

கீதை 2

கீதைக்குச் சிறிது முன்னுரை தேவை. குருக்ஷேத்திரப் போர்க் களத்தில் காட்சி நிகழ்கிறது. ஒரு வம்சத்தின் இரண்டு கிளைகள் அரசுரிமைக்காக ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் போர் புரிந்தன. பாண்டவர்களின் பக்கம் உரிமை இருந்தது. கௌரவர்களின் பக்கம் வலிமை இருந்தது. பாண்டவர்கள் ஐவர், அவர்கள் காட்டில் வாழ்ந்து வந்தனர். கிருஷ்ணர் பாண்ட வர்களின் நண்பர். ஊசி குத்தும் இடங்கூட அவர்களுக்குக் கொடுக்க மறுத்தார்கள் கௌரவர்கள்.

போர்க்களத்தில் காட்சி தொடங்குகிறது. இருதரப்பினரும் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் காண்கின்றனர் – ஒரு சகோதரன் ஒரு பக்கம், மற்றவன் மறுபக்கம்; பாட்டன் ஒரு பக்கம், பேரன் மறுபக்கம். நண்பர்களையும் உறவினர்களை யும் எதிர்த்தரப்பில் காண்கிறான் அர்ஜுனன். அவர்களைக் கொல்ல நேரும் என்பதை எண்ணியபோது அவனது இதயம் இளகிவிடுகிறது. அவன் போர்புரிய மறுக்கிறான். இப்படித் தொடங்குகிறது கீதை.

உலகில் வாழும் நம் அனைவருக்குமே வாழ்க்கை ஓர் இடைவிடாத போர். நமது பலவீனத்தையும் கோழைத்தனத் தையும் பொறுமை என்றும் தியாகம் என்றும் விளக்கம் கொடுப் பதற்கான சந்தர்ப்பங்கள் எத்தனையோ வருகின்றன. பிச்சைக் காரனின் துறவில் சிறப்பு எதுவும் இல்லை. எதிர்க்கும் வலிமை யுள்ள ஒருவன் பொறுத்தால் அது சிறப்பு. உடையவன் துறந்தால் அது சிறப்பு. நமது வாழ்க்கையில் எத்தனை தடவை சோம் பலாலும் கோழைத்தனத்தாலும் நாம் போரிலிருந்து விலகிக் கொண்டு, நாம் தைரியசாலிகள் என்று நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்! இது நமக்குத் தெரியாதா!

கருத்தாழம் மிக்க இந்தச் சுலோகத்துடன் கீதை தொடங்கு கிறது: ‘அரச குமாரா, எழுந்திரு! இந்த மனத் தளர்ச்சியை, இந்தப் பலவீனத்தை ஒழி. எழுந்து நின்று போர்புரி’ (2. 3). அர்ஜுனன் கிருஷ்ணரிடம் இதைப்பற்றி வாதிக்க முயல்கிறான். எதிர்ப்பைவிட எதிர்க்காமலிருப்பதே சிறந்தது என்றெல்லாம் பல நீதிகளைக் கூறுகிறான். தனது வாதங்களை நியாயப்படுத்த முயல்கிறான். ஆனால் கிருஷ்ணரை அவன் ஏமாற்ற முடியுமா? அவர் பரமாத்மா, இறைவன். அர்ஜுனனுடைய வாதத்தின் உள்நோக்கத்தை உடனே கண்டுகொள்கிறார். அர்ஜுனனின் விஷயத்தில் இது கோழைத்தனம். அவன் தனது உறவினர் களைக் காண்கிறான்; அவர்களைக் கொல்ல மனம் வரவில்லை.

அர்ஜுனனின் இதயத்தில் அவனது உணர்ச்சிக்கும் கடமைக்கும் போர் நிகழ்கிறது. மிருகங்கள் மற்றும் பறவைகளின் நிலையை அணுகும் அளவிற்கு நாம் உணர்ச்சி என்னும் நரகத் தில் துன்புறுகிறோம். அதை அன்பு என்று கூறிக் கொள்கிறோம். அது சுய மனவசியம். விலங்குகளைப்போல் நாம் உணர்ச்சி களுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறோம். ஒரு பசு தனது கன்றிற் காக உயிரை விடலாம். ஒவ்வொரு மிருகமும் அப்படியே செய்யலாம். அதனால் என்ன? விலங்குகளைப் போன்ற, பறவை களைப் போன்ற குருட்டுத்தனமான உணர்ச்சிப் பெருக்கு நம்மைப் பூரணத்துவத்திற்குக் கூட்டிச் செல்லாது. எல்லையற்ற பேருணர்வே மனிதனின் குறிக்கோள். அங்கே உணர்ச்சி வேகத் திற்கு இடமில்லை; பொருளற்ற பேச்சிற்கும் புலன் வசப்பட்ட எந்தச் செயலுக்கும் இடம் இல்லை. அங்கே உள்ளது அறி வொளி மட்டுமே. அங்கே மனிதன் ஆன்மாவாக விளங்குகிறான்.

இப்போது அர்ஜுனன் உணர்ச்சிப்பெருக்கின் பிடியில் உள்ளான். அவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லை. முற்றிலும் தன்னை அடக்கியவனாக, அறிவொளியுடன், எல்லை யற்ற சிந்தனைத் திறத்துடன் இயங்க வேண்டியவன் அவன். ஆனால் ஒரு விலங்கைப்போல், ஒரு குழந்தையைப்போல், தனது விவேகத்தை உணர்ச்சிக்கு அடிமைப்படுத்திவிட்டு, தன்னை ஒரு முட்டாளாக்கிக் கொண்டு, தனது கோழைத் தனத்தை ‘அன்பு’ முதலிய சொற்களால் மறைக்க முயல்கிறான்; அறிவற்றவனைப் போல் பேசுகிறான்; பல காரணம் காட்டி வாதிக்கிறான்; அதேவேளையில் முட்டாள்தனமாகவும் பேசு கிறான். கிருஷ்ணர் அதை உணர்கிறார்.

கிருஷ்ணர் கூறுகிறார்: ‘இருப்பவனையோ இறந்த வனையோ எண்ணி ஞானி வருந்துவதில்லை .’ (2. 11); ‘நீ சாக முடியாது; நானும் சாக முடியாது. நாம் இல்லாமலிருந்த காலம் ஒன்று இருந்ததில்லை; இனி இருக்கப்போவதும் இல்லை. இந்த வாழ்க்கையில் ஒருவன் குழந்தைப் பருவத்தில் தொடங்கி, இளமை, முதுமை முதலியவற்றைக் கடந்து செல்கிறான். அதுபோல் மரணவேளையில் இன்னோர் உடலில் புகுகிறான். அதற்காக அறிவாளி ஏன் வருந்த வேண்டும்?’ (2. 12, 13) உன்னை அடிமையாக்கும் உணர்ச்சிவேகத்திற்கு மூலகாரணம் எங்கே உள்ளது? புலன்களில்தான். ‘சூடு, குளிர், இன்பம், துன்பம் போன்றவை இருப்பது புலன்களின் தொடர் பால்தான். இவை வருவதும் போவதுமாக இருக்கின்றன.’ (2. 14) மனிதன் இப்போது துன்புறுகிறான், அடுத்த கணம் இன்புறுகிறான். இந்த நிலையில் அவன் ஆன்மாவின் இயல்பை அனுபவிக்க முடிவதில்லை .

‘உள்ளது ஒருபோதும் இல்லாமல் போகாது; இல்லாதது ஒருபோதும் உள்ளதாகாது. … எனவே எது இந்த உலகமெல்லாம் பரவி நிற்கிறதோ, அது தொடக்கமும் முடிவும் இல்லாதது என்பதை அறிந்துகொள். அது மாறுபடாதது. மாறுபாடில்லாத ஒன்றை மாற்றக்கூடியது இந்த உலகில் எதுவும் இல்லை. இந்த உடலிற்கு ஆரம்பமும் முடிவும் இருந்தாலும் உடலில் உறை பவன் எல்லையற்றவன், முடிவில்லாதவன்’. (2. 16-18)

இதையறிந்து எழுந்து நின்று போர் செய். ஓரடிகூடப் பின்வாங்கக் கூடாது. அதுதான் கருத்து. எது வந்தாலும் சரி, போராடு. நட்சத்திரங்கள் பெயர்ந்து விழட்டும், உலகம் முழு வதும் நம்மை எதிர்த்து நிற்கட்டும்! மரணம் என்பது உடையை மாற்றிக் கொள்வதுதான். அதனால் என்ன? அதை உணர்ந்து போராடு. கோழைகளாவதால் ஒரு பயனையும் அடைய முடியாது. ஓரடி பின்வாங்குவதால் நீங்கள் எந்தத் தீமையையும் கடந்துவிட முடியாது. உலகிலுள்ள எல்லா தெய்வங்களிடமும் கதறினீர்கள். துன்பம் தீர்ந்ததா? இந்தியர்கள் ஆறு கோடித் தெய்வங்களை நோக்கிக் கதறுகின்றனர். என்றாலும் நாய்களைப் போல்தான் சாகின்றனர். இந்தத் தெய்வங்கள் எங்கே இருக் கின்றனர்? நீங்கள் வெற்றி பெற்றால் அதன்பின் தெய்வங்கள் உங்களுக்கு உதவி செய்ய வருகின்றனர். அதனால் என்ன பயன்? இன்பமாக உயிர்விடுங்கள்.

மூட நம்பிக்கைகளுக்கு முழந்தாளிடுவதும், உங்கள் மனத்திற்கே உங்களை விற்றுவிடுவதுமாகிய இது, என் உயிருக்கு உயிராகிய உங்களுக்குத் தகாது. நீங்கள் எல்லையற்றவர்கள், மரணமற்றவர்கள், பிறப்பற்றவர்கள். நீங்கள் எல்லையற்ற ஆன்மா. அடிமையாயிருப்பது உங்களுக்குப் பொருந்தாது. எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! எழுந்து நின்று போர் புரியுங்கள். மரணம் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ ஒருவருமில்லை. நீங்களே உலகனைத்துமாக இருக்கும் போது யார் உங்களுக்கு உதவ முடியும்?

‘எந்தப் பிராணியும் பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் நமது மனிதப் புலன்களால் அறியப்படுவதில்லை . இடையில் மட்டுமே வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?’ (2. 28)

‘சிலர் அதை (ஆன்மாவை) வியப்புடன் பார்க்கின்றனர். சிலர் வியந்து பேசுகின்றனர். பிறர் வியந்து கேட்கின்றனர். சிலர் அதைப்பற்றிக் கேட்டும் புரிந்துகொள்வதில்லை .’ (2. 29)

இவர்களையெல்லாம் கொல்வது பாவம் என்று நீ சொல் வாயானால் உன்னுடைய குலதர்ம நிலையிலிருந்து யோசித்துப் பார். ‘இன்ப துன்பங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாகக் கொண்டு எழுந்து நின்று போர் செய்’. (2. 38)

கீதையின் தனிச்சிறப்பு மிக்க இன்னொரு கருத்து பற்றின்மை. நாம் செய்யும் செயல்களில் பற்றுக்கொள்வதால் அவற்றின் பயன்களை நாம் ஏற்க வேண்டியிருக்கிறது. ‘கடமைக் காகச் செய்யப்படும் கடமை மட்டுமே கர்மபந்தத்தைப் போக்கும்.’ (2. 39) அதில் அளவு மீறிவிடுவோம் என்ற அபாயம் இல்லை. ‘சிறிது செய்தாலும் இந்த யோகம் பிறப்பு, இறப்பு என்னும் பயங்கரச் சுழலிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.’ (2 . 40)

‘அர்ஜுனா, ஒருமைப்பட்ட மனமே வெற்றி பெறும். இரண்டாயிரம் பொருட்களில் சிதறிப்போன மனம் தனது ஆற்றலை இழந்துவிடுகிறது. வேதங்களுக்கு மேல் எதுவுமில்லை என்று சிலர் இதமாகப் பேசலாம். அவர்கள் சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறார்கள். வேதங்களின் சக்தியால் உலகிலுள்ள இன்பப் பொருட்களை அடைய விரும்புகிறார்கள். அதற்காக வேள்விகளைச் செய்கிறார்கள்.’ (2. 41-43) அப்படிப்பட்டவர்கள், இந்தச் சுகபோக எண்ணங்களைக் கைவிடாத வரையில் ஆன்மீக வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள். (2. 44)

இது இன்னொரு முக்கியமான பாடம். உலகியல் ஆசை களை விடாதவரை ஆன்மீகம் கிடையாது. புலன்களில் என்ன இருக்கிறது? அவை வெறும் மன மயக்கம். இறந்த பின்னும் சொர்க்கத்தில்கூட அவற்றை ஒரு ஜோடிக் கண்களை, மூக்கை — விடாமல் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். சிலர் அங்கே தங்களுக்கு இங்குள்ளதைவிட அதிகப் புலன்கள் இருக்கும் என்று எண்ணுகின்றனர். அரியாசனத்தில் வீற்றிருப்பவனாக இறைவனை, இறைவனுடைய பௌதீக உடலை என்றென்றும் கண்டுகொண்டிருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய மனிதர்களின் ஆசைகளெல்லாம் உடலைப் பற்றியவை; உணவு, நீர், இன்பம் பற்றியவை. இந்த உலகியல் வாழ்வின் ஒரு தொடர்ச்சியே அது. வாழ்விற்கு அப்பால் எதையும் நினைத்துப் பார்க்க மனிதனால் முடிவதில்லை. இந்த வாழ்க்கையெல்லாம் உடலுக்குத்தான். ‘முக்திக்குக் காரணமான மன ஒருமைப் பாட்டை இத்தகைய மனிதன் ஒருபோதும் அடைய மாட்டான்.’ (2. 44)

‘வேதங்கள் சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணங்களையுடைய பொருட்களைப் பற்றியே பேசுகின்றன.’ (2. 45) வேதங்கள் இயற்கையிலுள்ள பொருட் களைப்பற்றிக் கூறுகின்றன. உலகில் காணாத எதையும் மக்களால் எண்ணிப் பார்க்க முடியாது. சொர்க்கத்தைப் பற்றிப் பேசினால், சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஓர் அரசனையும் அவன் முன் சாம்பிராணிப் புகையிடும் மக்களையும் அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். இவை எல்லாம் இயற்கை, இயற்கையைக் கடந்த எதுவுமில்லை, எனவே வேதங்கள் இயற்கையைத் தவிர வேறெதையும் கூறவில்லை . ‘எதற்கும் கவலைப்படாமல் நன்மைதீமைகளைப் பொருட்படுத்தாமல், இயற்கையைக் கடந்து, வாழ்க்கையின் இருமைகளைக் கடந்து, உனது சொந்த உணர்வையும் கடந்து செல்.’ (2. 45)

நாம் நமது உடல்களுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு விட்டோம்; உடலை உடையவர்களாக இல்லாமல் உடலாகவே ஆகிவிட்டோம். என்னைக் கிள்ளினால் நான் கதறுகிறேன். இது அறிவீனம். ஏனெனில் நான் ஆன்மா. இந்தத் துன்பச் சங்கிலி, கற்பனை, பிராணிகள், தேவர்கள், அசுரர்கள், உலகம் எல்லாமே நாம் நம்மை உடலுடன் ஒன்றுபடுத்திக் கொண்டதன் விளைவு. நான் ஆன்மா. நீங்கள் கிள்ளினால் நான் ஏன் குதிக்க வேண்டும்? இந்த அடிமைத்தனத்தைப் பாருங்கள். உங்களுக்கு வெட்கமில்லையா? நாம் மத உணர்வு கொண்டவர்களாம்! நாம் தத்துவவாதிகளாம்! நாம் ஞானிகளாம்! ஆண்டவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்! நாம் என்னவாயிருக்கிறோம்? நடமாடும் நரகங்கள், ஆம், அப்படித்தான் இருக்கிறோம். பைத்தியக்காரர்கள், ஆம் அப்படித்தான் இருக்கிறோம்! உடல் கருத்தை நம்மால் விட முடியவில்லை. நாம் இந்த மண்ணோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். நமது எண்ணங்கள் வெறும் சுடுகாடுகளே. நாம் உடலை விடும்போது அந்த எண்ணங்களின் அம்சங்கள் ஆயிரக்கணக்காக வந்து நம்மைக் கட்டுகின்றன.

பற்றில்லாமல் யார் வேலை செய்ய முடியும்? இதுதான் முக்கியமான கேள்வி. அவன்தான் தன் வேலை வெற்றி பெற் றாலும் தோல்வியடைந்தாலும் சமநிலையில் இருப்பான். வாழ் நாள் முழுவதும் அவன் செய்த வேலை ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகப் போனாலும் அவனது இதயம் ஒருமுறைகூடக் கலங்கித் துடிப்பதில்லை . ‘அவன்தான் பயன் கருதாமல், செயலுக்காகவே செயல் புரியும் ஞானி. அந்த வழியில் அவன் பிறப்பு இறப்புத் துன்பத்தைக் கடந்து செல்கிறான், முக்தி பெறுகிறான்’. (2.51) இந்தப் பற்றெல்லாம் மாயை என்பதை அப்போது அவன் காண்கிறான். ஆன்மா ஒருபோதும் பற்றுக் கொள்ள இயலாது. அத்தகையவன் சாஸ்திரங்களையும் தத்துவங்களையும் கடந்த நிலைக்குச் செல்கிறான். (2. 52). மனம் மயக்கமுற்று, நூல்களாலும் சாஸ்திரங்களாலும் ஆன சுழலில் கவரப்படுமானால் இந்தச் சாஸ்திரங்களால் என்ன பயன்? ஒன்று இப்படிச் சொல்கிறது, மற்றொன்று அப்படிச் சொல் கிறது. எந்த நூல் சொல்வதை ஏற்பது? தனித்து நில்லுங்கள். உங்கள் ஆன்மாவின் மகிமையைக் காணுங்கள். நீங்களே உழைக்க வேண்டும் என்பதை அறியுங்கள்; அப்போதே நிலைத்த புத்தி உடையவர்கள் ஆவீர்கள். (2. 53)

அர்ஜுனன் கேட்கிறான்: ‘புத்தி நிலைபெற்றவன் யார்?’ (2.54)

கிருஷ்ணர் பதில் கூறுகிறார்: ‘எல்லா ஆசைகளையும் துறந்தவன், எந்தத் தேவையும் இல்லாதவன், இந்த வாழ்க்கையையோ முக்தியையோ தெய்வங்களையோ தொழிலையோ வேண்டாதவன், பூரணத் திருப்தி அடைந்தவன் – அவனது ஆசைகள் அற்றுவிட்டன.’ (2 . 55) அவன் ஆன்மாவின் மகிமையைக் கண்டுவிட்டான். உலகமும் தெய்வங் களும் சொர்க்கமும் தன் ஆன்மாவிலேயே இருப்பதை உணர்ந்து கொண்டான். அப்போது தெய்வங்கள் தெய்வங்களில்லை; சாவு சாவில்லை; வாழ்வு வாழ்வில்லை; எல்லாம் மாறிவிட்டன. ‘யாருடைய புத்தி நிலைபெற்றதாகவும், மனம் துயரத்தில் கலங்காததாகவும் எந்த இன்பத்தையும் நாடாததாகவும் பற்றுகள் அனைத்தும் நீங்கியதாகவும் பயமும் கோபமும் இல்லாததாகவும் இருக்குமோ, அவனே மெய்யுணர்வு பெற்ற ஞானி எனப்படுகிறான்.’ (2.56)

‘ஆமை தன் கால்களை உள்ளே இழுத்துக்கொண்டபின், நீங்கள் எவ்வளவு அடித்தாலும் ஒரு கால்கூட வெளியே வராதது போல், ஞானியால் தன் புலன்களையெல்லாம் உள்ளே இழுத்துக் கொள்ள முடியும்.’ (2. 58) எந்த விருப்பமும் அவனை அசைக்காது. பிரபஞ்சமே இடிந்து விழட்டும்; அவனது மனத்தில் அது ஒரு சிறு அலையைக்கூட எழுப்பாது.

இனி ஒரு முக்கியமான பிரச்சினை எழுகிறது. சிலவேளை களில் மக்கள் பல நாட்கள் தொடர்ந்து பட்டினியிருக்கிறார்கள், மிகக் கொடிய மனிதனும் இருபது நாள் பட்டினி கிடந்தால், சாந்தமாகி விடுகிறான். பட்டினி கிடப்பதும் உடலை வருத்து வதும் மக்களால் உலகெங்கும் செய்யப்படுகின்றன.

கிருஷ்ணரின் கருத்தோ, இவையெல்லாம் பொருளற்ற செயல்கள் என்பதே. உடலை வருத்தும் மனிதனிடமிருந்து அந்த நேரத்திற்குப் புலன் சற்றுப் பின்வாங்கும்; ஆனால் இருபது மடங்கு சக்தியுடன் திரும்பி வரும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இயல்பாக இருங்கள், உடலை வருத்த வேண்டாம். செயல் புரிந்துகொண்டே போங்கள். பற்று ஏற்படாதபடி மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். பற்றின்மை யின் ரகசியத்தை அறிந்து பின்பற்றாத மனிதனது சங்கல்பம் ஒருபோதும் திடமாக நிலைபெறாது.

நான் வெளியே சென்று கண்களைத் திறக்கிறேன். அங்கே ஏதோ ஒன்று இருந்தால், நான் அதைப் பார்த்தாக வேண்டும், பார்க்காமலிருக்க முடியாது. மனம் புலன்களைப் பின்பற்றி ஓடுகிறது. ஆகையால் புலன்கள் இயற்கையைப் பொருட்படுத் தாமலிருக்க வேண்டும்.

‘புலன்களில் கட்டுப்பட்டவனுக்கு இருளாயிருக்கின்ற நேரத்தில், புலன்களை அடக்கியவன் விழித்திருக்கிறான். அது அவனுக்குப் பகல்ஒளியாயிருக்கிறது. எதில் உலகம் விழித்திருக் கிறதோ, அதில் ஞானி உறங்குகிறான்.’ (2 . 69) உலகம் எதில் விழித்துக் கொண்டிருக்கிறது? புலன்களில். உண்ணவும் பருகவும் குழந்தைகளைப் பெறவும் மக்கள் விரும்புகிறார்கள். கடைசியில் நாயைப்போல் சாகிறார்கள். அவர்கள் எப்போதும் புலன்களுக் காக விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மதமும் அதற்காகவே உள்ளது. தங்களுக்கு உதவ பெண்கள், ஏராளமான செல்வம், குழந்தைகள் இவற்றைத் தர ஒரு கடவுளைப் படைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தெய்வீகத் தன்மையைப் பெற ஒரு கடவுள் தேவையில்லை ! ‘எதில் உலகம் முழுதும் விழித்துக் கொண்டிருக்கிறதோ, அதில் ஞானி உறங்கு கிறான். அறிவிலிகள் எதில் உறங்குகிறார்களோ, அதில் ஞானி விழிப்புடன் இருக்கிறான்’ (2. 69); மனிதன் தன்னை ஒரு விலங் காக, ஒரு பறவையாக, ஓர் உடலாகக் காணாமல் எல்லையற்ற, மரணமற்ற, அழிவற்ற ஆன்மாவாகக் காணும் ஒளியுலகில் ஞானி விழித்திருக்கிறான். எதில் அறிவிலிகள் உறக்கத்தில் ஆழ்ந்து, உணர்ந்துகொள்ள நேரமும் புத்தியும் சக்தியும் இல்லாதவர்களாக இருக்கிறார்களோ, அதில் ஞானி விழித்திருக் கிறான். அது அவனுக்குப் பகல் வெளிச்சம்போல் உள்ளது.

‘உலகத்திலுள்ள ஆறுகளெல்லாம் இடையறாது சென்று கடலில் சேர்ந்தபோதிலும், பெருமையும் கம்பீரமும் வாய்ந்த கடலின் இயற்கை நிலைகுலையாமல், மாறுபடாமல் இருப்பது போல், எல்லா புலன்களும் இயற்கையிலிருந்து உணர்ச்சி களைக் கொண்டுவந்த போதிலும் ஞானியின் கடல்போன்ற இதயம் அலையையோ அச்சத்தையோ உணர்வதில்லை.’ (2 .70) கோடிக்கணக்கான ஆறுகளில் துன்பங்கள் வரட்டும், நூற்றுக் கணக்கான ஆறுகளில் இன்பங்கள் வரட்டும்; நான் துன்பத் திற்கும் அடிமையல்ல, இன்பத்திற்கும் அடிமையல்ல!

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 7  I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 15. கீதை 2