ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 15

15. எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டுமா?

நம்மிடையே பல ஜாதிகள் இருந்தாலும், ஒரு ஜாதியின் உட்பிரிவுக்குள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டிய தற்காலத் திருமண முறை இருந்தாலும் (இது எங்கும் பரவியிருக்கும் முறையல்ல) நாம் உண்மையில் ஒரு கலப்பு ஜாதியினரே.

பிறப்பிலேயே சிறப்பு வாய்ந்தவர்கள் என்று எந்த ஜாதியினர் பெருமையடித்துக் கொண்டாலும் அது வெறும் கற்பனை. மொழி வேறுபாடுகளின் காரணமாக, கர்வம் தென்னிந்தியாவைப்போல் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது.

புத்தரிலிருந்து ராம்மோகன்ராய் வரையிலும் ஒவ் வொருவரும், ஜாதியை ஒரு மத அமைப்பு என்று கொள்கின்ற தவறுக்கு உள்ளாயினர்; அந்தக் தவறின் காரணமாக மதம் ஜாதி இரண்டையுமே தகர்க்க முற்பட்டனர், தோல்வியைத் தழுவினர். ஆனால் புரோகி தர்கள் என்னதான் உளறினாலும் ஜாதி என்பது இறுகிப்போன ஒரு சமுதாய அமைப்பே. அது தனது பணியைச் செய்து முடித்த பிறகு இப்போது இந்தியாவின் சுற்றுச் சூழலெங்கும் தனது துர்நாற்றத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு, அவர்கள் இழந்த சமுதாய தனித்துவத்தை மீண்டும் அளிப்பதன்மூலம் மட்டுமே அந்தத் துர்நாற்றத்தை அகற்ற முடியும். இங்கு பிறந்த ஒவ்வொருவனும் தான் மனிதன் என்பதை அறிந்துள்ளான். இந்தியாவில் பிறக்கின்ற ஒவ்வொருவனும் தான் சமுதாயத்தின் அடிமை என்பதையே அறிகிறான். வளர்ச்சிக்கு ஒரே அறிகுறி சுதந்திரம். சுதந்திரத்தை விலக்குங்கள், விளைவு சீரழிவாகவே இருக்கும். தற்காலத்தில் போட்டிகள் புகுந்ததும் ஜாதி எவ்வளவு விரைவாக மறைந்தொழிகிறது, பாருங்கள். அதை ஒழிக்க எந்த மதமும் தேவையில்லை. வியாபாரியான, செருப்புத் தைக்கின்ற, மது தயாரிக்கின்ற பிராமணர்களை வட இந்தியாவில் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. ஏன்? போட்டிதான். இப்போதைய அரசாங்கத்தின்கீழ், தான் வாழ்வதற்காக யாரும் எதையும் செய்யலாம். விளைவு? தலைதெறிக்கும் போட்டாபோட்டி. இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் தாழ்ந்த படியில் சோம்பிக் கிடப்பதற்குப் பதிலாகத் தாங்கள் பிறந்ததற்கான உன்னத நிலையைத் தேடுகின்றனர்; தேடிக் காணவும் செய்கின்றனர்.

இயற்கையில் சமமில்லாத நிலை இருக்கலாம், ஆனாலும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும்தான் வாய்ப்புகள் அமையும் என்றால், பலசாலிகளைவிடப் பலவீனர்களுக்கே அதிகமான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அதாவது, கல்வி கற்பித்தல் என்பது சண்டாளனுக்கு எவ்வளவு அவசியமோ, அவ்வளவு பிராமணனுக்குத் தேவையில்லை . பிராமணனின் மகனுக்கு ஓர் ஆசிரியர் தேவையானால் சண்டாளனின் மகனுக்குப் பத்து ஆசிரியர்கள் தேவை. அதாவது இயற்கை யாருக்குப் பிறவியிலேயே கூர்மையான அறிவைத் தந்து உதவவில்லையோ அவனுக்கு அதிக உதவியளிக்க வேண்டும். ஒரு பொருள் மிகுதியாக உள்ள இடத்திற்கு அந்தப் பொருளையே கொண்டுசெல்வது பைத்தியக்காரத்தனம் அல்லவா? ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், பாமரர்கள் இவர்கள் உங்கள் தெய்வங்களாக இருக்கட்டும்.

ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 14

14. ஜாதி முறை நமக்கு முன்பு உதவியதா? இப்போது அது தேவையா?

‘ஜாதி என்பது என்ன என்பதைக் கோடியில் ஒருவர்கூடப் புரிந்துகொள்ளவில்லை. ஜாதி இல்லாத நாடே இந்த உலகில் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, ஜாதியிலிருந்துதான் ஜாதியில்லாத ஒரு நிலையை அடைகிறோம். அந்தத் தத்துவ அடிப் படைமீதுதான் ஜாதியே அமைந்துள்ளது. மனித இனத் தின் லட்சியம் பிராமணன். எனவே எல்லோரையும் பிராமணன் ஆக்குவதே, இந்தியாவைப் பொறுத்தவரை செயல்திட்டம். இந்திய வரலாற்றைப் படித்தால், கீழ் ஜாதியினரை உயர்த்துவதற்கான முயற்சிகள் எப்போதும் நடைபெற்று வந்துள்ளதைக் காண்பீர்கள். அப்படிப் பல பிரிவினர் உயர்த்தப் பட்டிருக்கிறார்கள். எல்லோரும் பிராமணர் ஆகின்ற வரையில் இது நடந்து கொண்டிருக்கும். இதுதான் என் திட்டம். யாரையும் கீழே கொண்டுவராமல் இதைச் செய்ய வேண்டும். இந்தப் பணியைப் பெரும்பாலும் செய்ய வேண்டியது பிராமணர்களே. தனிச்சலுகை பெற்றுத் திளைத்த எதுவும் தனக்கே குழித்தோண்டிக் கொள்ள வேண்டியது கடமை. இது எவ்வளவு விரைவில் நடக்குமோ, அந்த அளவிற்கு எல்லோருக்கும் நன்மை. காலம் தாழ்த்தக் கூடாது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைவிட நமது ஜாதிமுறை சிறந்தது, அது முற்றிலும் நல்லது என்று நான் சொல்லவில்லை. ஜாதி இல்லாதிருந்தால் உங்கள் நிலை எப்படி இருந்திருக்கும்? ஜாதிப்பிரிவு இல்லை என்றால் உங்கள் படிப்பும் மற்றவையும் எப்படி இருந்திருக்க முடியும்? ஜாதி இல்லாதிருந்தால், ஐரோப்பியர்கள் நம்மிடமிருந்து படிக்க எதுவுமே இருந் திருக்காது, முகமதியர்கள் எல்லாவற்றையும் அழித் திருப்பார்கள்.

‘இந்திய சமுதாயம் இயங்காமல் நிற்கிறதா? அது எப்போதும் செயல்பட்டுக் கொண்டேதான் இருக் கிறது. அன்னியர் படையெடுப்பு போன்ற காலங்களில் அது மெதுவாக இயங்குகிறது, பிற காலங்களில் விரைவாக இயங்கும். இதைத்தான் என் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன். அவர்களை நான் குறை கூறவில்லை. நான் அவர்களது பண்டைக் காலத்தை ஆழ்ந்து நோக்குகிறேன். அந்தச் சூழ்நிலையில் எந்த நாடும் இதைவிட மேலான செயலைச் செய்திருக்க முடியாது. அவர்கள் நன்றாகவே செயலாற்றியுள்ளனர், அவர்களிடம் நான் கூறுகிறேன். இன்னும் சிறப்பாகச் செயலாற்றும்படி மட்டுமே கேட்டுக் கொள்கிறேன்.’

ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 13

13. வேதாந்தம் ஜாதி முறையை ஏற்றுக்கொள்கிறதா?

ஜாதிமுறை வேதாந்தத்திற்கு முரணானது. ஜாதி என்பது ஒரு சமுதாயப் பழக்கம். எங்கள் சிறந்த போதகர்கள் அனைவரும் அதை ஒழிக்க எவ்வளவோ முயன்றிருக்கின்றனர். புத்த மதத்திலிருந்து தொடங்கி, அதற்குப் பிறகு தோன்றிய ஒவ்வொரு மதப் பிரிவும் ஜாதியை எதிர்த்துப் போராடியுள்ளன; ஆனால் இந்த முயற்சிகள் ஒவ்வொரு தடவையும் விபரீதமாக அதை உறுதிப்படுத்தவே செய்தன. ஜாதி என்பது இந்திய அரசியல் அமைப்புக்களின் வெறும் பக்க வளர்ச்சி; அது ஒரு பரம்பரைத் தொழிற்சங்கம், அவ்வளவுதான். ஐரோப்பாவுடன் ஏற்பட்ட வியாபாரப் போட்டி, மத போதனைகளைவிட அதிக அளவில் ஜாதி அமைப்பு களைத் தகர்த்து முறித்துவிட்டது.

ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 12

12. ஜாதிகளைப் பற்றி என்ன கூறுவது?

நமது ஜாதிப் பாகுபாட்டை மேலைநாட்டினர் எவ்வளவோ குறைகூறுகின்றனர்; ஆனால் இதைவிட மட்டமானது அவர்களுடைய ஜாதிப்பாகுபாடு-அது பணத்தை ஆதாரமாகக் கொண்டது. அமெரிக்கர்களே கூறிக்கொள்வதுபோல், ‘எல்லாம் வல்லதான’ டாலர் இங்கே எதையும் சாதிக்க வல்லதாக உள்ளது.

ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளிலுமே ஜாதிகள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் அவற்றின் திட்டமும் நோக்கமும், நம் நாட்டைப்போல் வேறெங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஜாதி என்பது தவிர்க்க முடியாதது என்றால், பணத்தால் உருவாகின்ற ஜாதியை விட, தூய்மை, பண்பாடு, தன்னலமின்மை இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஜாதியையே நான் விரும்புகிறேன்.

ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 11

11. ஆதாய நோக்கத்துடன் செயல்புரிவது மொத்த வளர்ச்சிக்கு எவ்வாறு ஊறு விளைவிக்கிறது?

சுதந்திரம் இல்லாமல் எவ்வித வளர்ச்சியும் சாத்தியமில்லை. நமது முன்னோர்கள் மதச்சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள், அற்புதமானதொரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதன் பலனாக நமது சமூகம் – ஒரு வார்த்தையில் சொல்வதானால்அதிபயங்கரமாக, காட்டுமிராண்டித்தனமானதாக இருக்கிறது. மேலை நாட்டிலோ சமூகத்திற்கு எப்போதும் சுதந்திரம் இருந்துவந்தது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள். அதற்கு மாறாக அவர்களது மதத்தையும் பாருங்கள். வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம்.

நமது முன்னோர் ஆன்மீக விஷயங்களுக்கு எல்லா சுதந்திரமும் அளித்தனர், அதன் பயனாக மதம் வளர்ச்சி கண்டது. ஆனால் உடம்பை எல்லாவிதமான பந்தத்திற்கும் உள்ளாக்கி வைத்தார்கள், அதனால் சமூகம் வளராமல் போயிற்று. மேலைநாட்டில் இதற்கு நேர்மாறான நிலைமை இங்கு சமூகத்திற்குச் சகல சுதந்திரமும் உண்டு, மதத்திற்குச் சுதந்திரம் எதுவும் இல்லை. இன்று மேலைநாட்டில் மதத்திற்கும், அதேபோல் கீழை நாட்டில் சமூக அமைப்பிற்கும் உள்ள தளைகள் தளர்ந்து வீழ்ந்து வருகின்றன.

ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 10

10. முன்பு வைசியர்களின் ஆதாய நோக்கச் செயல்களைப் பார்த்தோம். ஆங்கிலேய ஆட்சியின்போது இந்தியா எப்படி இருந்தது?

பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரே ஒரு நல்ல காரியம் நடந்தது; ஆனால் அது அவர்கள் அறியாமல் நடந்த ஒன்று: அது, அவர்கள் இந்தியாவை மீண்டும் ஒரு முறை உலக அரங்கில் கொண்டுவந்தது; வெளியுலகத் தொடர்பை இந்தியாவின்மீது திணித்தது. இந்திய மக்களின் நலனை நோக்கிற்கொண்டு அது செய்யப் பட்டிருந்தால் ஜப்பானுக்கு இத்தகைய அனுகூல சந்தர்ப்பங்கள் வாய்த்தன-அதன் விளைவுகள் இன்னும் அற்புதமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் ரத்தத்தை உறிஞ்சுவதே முக்கிய நோக்கமாக இருக்கும்போது எந்த நன்மையும் செய்ய முடியாது.

நவீனமாக்கப்பட்ட, அரைப்படிப்பு பெற்ற, தேசியத் தன்மை இல்லாத சில நூறுபேரே நவீன ஆங்கில இந்தியா காட்டுகின்ற சித்திரம் எல்லாம். இதைத்தவிர வேறு எதுவுமே இல்லை.

நாட்டை வெற்றிகொள்ள ஆங்கிலேயர் போட்டி யிட்டபோது பல நூற்றாண்டுகளாக தலைவிரித்தாடிய – அராஜகம், 1857-லும் 1858-லும் ஆங்கிலேயர் செய்த படுகொலைகள், பிரிட்டிஷ் ஆட்சியின் தவிர்க்க முடியாத விளைவாகியுள்ள அவற்றைவிட பயங்கரமான பஞ்சங்கள் (சுதேசி அரசில் ஒருபோதும் பஞ்சம் வந்ததில்லை), இந்தப் பஞ்சங்கள் கொள்ளைகொண்டு போகின்ற கோடிக்கணக்கான மக்கள்- இவையெல்லாம் இருந்தும் மக்கள்தொகை சிறப்பாக அதிகரித்து வந்துள்ளது. ஆனாலும் நாடு முற்றிலும் சுதந்திரமாக இருந்தபோது, அதாவது முகமதிய ஆட்சிக்கு முன்பிருந்த அளவு மக்கள்தொகை இன்னும் ஏற்படவில்லை. இந்தியர்களின் உழைப்பும் விளைச்சலும் அவர்களிட மிருந்து பறிக்கப்படாமல் இருந்தால் இப்போது இந்தியாவில் உள்ளவர்களைப்போல் ஐந்து மடங்கு மக்களைச் சுகவசதியோடு பராமரிக்க முடியும்.

இதுதான் அங்குள்ள நிலைமை. இனிமேல் கல்வி யும் பரவுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது; பத்திரி கைச் சுதந்திரம் ஏற்கனவே பறிக்கப்பட்டு விட்டது. நீண்டகாலத்திற்கு முன்பே நாங்கள் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டுவிட்டோம். மக்களுக்குத் தரப்பட்டிருந்த சிறு சுய ஆட்சியையும் சில ஆண்டுகளாக வேகமாகப் பறித்து வருகின்றனர். அடுத்து என்ன நிகழுமோ என்று கவனித்தவண்ணம் உள்ளோம் நாங்கள்! குற்றமற்ற முறையில் விமர்சித்து சில வார்த்தைகள் எழுதியதற்காக மக்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது, விசாரணை எதுவுமில்லாமல் சிறையிலிடப் படுகின்றனர்; தன் தலை எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது.

சில ஆண்டுகளாக ஒரு பயங்கரமான ஆட்சி இந்தியாவில் இருந்து வருகிறது. ஆங்கிலப் படையினர் எங்கள் ஆண்களைக் கொன்றும், பெண்களை பலவந்தப்படுத்தியும் வருகின்றனர். இவ்வாறு செய்வதற்காக அவர்களுக்கு எங்கள் பணத்தில் வழிச்செலவும், உபகாரச் சம்பளமும் கொடுத்து வீட்டிற்கு அனுப்புகின்றனர், அவ்வளவுதான். நாங்கள் ஒரு பயங்கரமான இருள்நிலையில் உள்ளோம். ஆண்டவன் எங்கு உள்ளான்? மேரி, எப்போதும் இன்பநோக்கைக் கைக்கொள்ள உனக்கு முடியும். ஆனால் என்னால் முடியுமா? சொல், இந்தக் கடிதத்தை நீ வெறுமனே வெளியிடுவதாக வைத்துக்கொள்வோம். சமீபத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டத்தால் இந்தியாவிலுள்ள ஆங்கிலேய அரசு இங்கிருந்து என்னை இந்தியாவிற்கு இழுத்துச் சென்று விசாரணை இன்றியே கொன்றுவிட முடியும். இதில் உங்கள் கிறிஸ்தவ அரசுகள் எல்லாம் மகிழ்ச்சியே அடையும் என்பதும் எனக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் கிறிஸ்தவரல்லாத பாவிகள் அல்லவா? நானும் உறக்கத்தில் ஆழ்ந்து, இன்பநோக்குவாதி ஆகிவிடட்டுமா? மிகப்பெரிய இன்பநோக்குவாதி நீரோ மன்னன்! இந்த பயங்கர விஷயங்களைப்பற்றி எழுதுவது பயனுடையது என்று பத்திரிகைக்காரர்கள் நினைப்பதில்லை. ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் செய்தி அதிகாரி வேண்டுமானால் நேர் எதிரான செய்தியை அதிகாரிகளின் ஆணைக்கேற்ப இட்டுக்கட்டித் தந்துவிடுகிறார்! வேற்று மதப் பாவிகளைப் படுகொலை செய்வது கிறிஸ்தவர்களுக்கு நியாயமான பொழுதுபோக்கு! உங்கள் பாதிரிகள் கடவுளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் போகிறார்கள், ஆனால் ஆங்கிலேயரிடம் பயந்துபோய் உண்மை பேசும் தைரியம் இல்லாமல் கிடக்கிறார்கள். அப்படி அவர்கள் பேசினால் மறுநாள் ஆங்கிலேயர்கள் அவர்களை உதைத்து வெளியே தள்ளிவிடுவார்கள்.

கல்வியை வளர்ப்பதற்காக முன்பிருந்த அரசுகளால் அளிக்கப்பட்டிருந்த சொத்து, நிலங்கள் அனைத்தும் விழுங்கப்பட்டு விட்டன. இப்போதுள்ள அரசு, கல்விக்காக ரஷ்யா செலவழிப்பதைவிட குறைவாகவே பணம் செலவழிக்கிறது. அந்தக் கல்வியையும்தான் என்னவென்று சொல்லட்டும்!

சுயசிந்தனையை சிறிது காட்டினாலும் அது நெரிக்கப்பட்டு விடுகிறது.

மதப் பிரிவுகளைப் பொறுத்தவரையில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் எல்லாம் ஒன்றிற்கும் உதவாத வெறும் கலவைகள் மட்டுமே. ‘எப்படியாவது எங்களை உயிர்வாழ அனுமதியுங்கள்’ என்று ஆங்கிலேய எஜமானர்களிடம் மன்றாடுகின்ற குரல்கள் மட்டுமே அவை. நாங்கள் புதிய பாரதம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம்- அது உண்மையான உன்னதமான பாரதம். என்ன நிகழப் போகிறது என்பதைக் காண்பதற்காக காத்திருக்கிறோம். நாடு விரும்பும்போது மட்டுமே நாங்கள் புதிய கருத்துக்களை நம்புகிறோம், எங்களுக்கு உண்மையானவையாக அமைபவற்றிலேயே நம்பிக்கை கொள்கிறோம். பிரம்மசமாஜத்தைப் பொறுத்தவரை, ‘நல்லது என்று எஜமானர்கள் சொல்வதே’ அவர்களுக்கு உண்மையின் உரைகல். இந்திய ஆராய்ச்சியும் அனுபவமும் எதை நல்லதென்று கருதுகின்றனவோ அதுவே எங்கள் உரைகல். போராட்டம் தொடங்கிவிட்டது. போராட்டம் பிரம்ம சமாஜத்தினருக்கும் எங்களுக்கும் அல்ல; ஏனெனில் அவர்கள் ஏற்கனவே மறைந்துவிட்டனர். அவர்களைவிட கடினமான ஆழம் மிகுந்த, அதிபயங்கரமான ஒரு பிரிவுடனேயே எங்கள் போராட்டம் நிகழ்கிறது.

ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 9

9. இந்தியாவின் சமுதாய மாற்றத்தில் மதத்தின் பங்கு

இந்தப் போராட்டம் இந்தியாவில் மீண்டும் மீண்டும் நடந்துள்ளது. ஆனால் அவையனைத்தும் மதத்தின் பெயரால் நடந்தன. ஏனெனில் மதம்தான் இந்தியாவின் வாழ்க்கை , மதம்தான் அதன் மொழி, மதம்தான் அனைத்து இயக்கங்களுக்கும் சின்னம். சார்வாகர், சமணர், பௌத்தர், சங்கரர், ராமானுஜர், கபீர், நானக், சைதன்யர் போன்றவர்களிலும், பிரம்ம சமாஜம் ஆரிய சமாஜம் போன்ற பிரிவுகளிலும் நுரையோடும் இரைச்சலோடும் எழுந்து முன்வருவது மத அலை; பின்னாலோ சமுதாயக் குறைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

ஒரே இனத்தின் பல பிரிவினர் ஒரே விதமான தெய்வங்களைத்தான் வணங்குகின்றனர். உதாரணமாக பாபிலோனியர்களின் ‘பால்’, ஹீப்ருக்களின் ‘மொலாக்’.

எல்லா ‘பால்’களையும் ‘பால்-மெரோடக்’ என்ற பெயரில் ஒன்றுசேர்ப்பதற்காக பாபிலோனியா வில் மேற்கொண்ட முயற்சிகள், எல்லா மொலாக்கு களையும் ‘மொலாக் யாவே’ அல்லது ‘யாஹு’ என்ற பெயரில் ஒன்றுசேர்க்க இஸ்ரேலில் மேற்கொண்ட முயற்சிகள்.

பாரசீகர்களால் அழிக்கப்பட்ட பாபிலோனி யர்கள்; ஹீப்ருக்கள் பாபிலோனிய புராணங்களைத் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி, ஒரே கடவுளைக் கொண்ட ஒரு மதத்தைப் (Monotheism) படைத்தார்கள்.

சர்வாதிகார மன்னர் ஆட்சியைப் போன்றது ஒரே தெய்வக் கொள்கை. இது கட்டளைகளை உடனே நிறைவேற்றுகிறது; எல்லா அதிகாரங்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும். ஆனால் அதற்குமேல் அதற்கு வளர்ச்சி கிடையாது. கொடுமையும் கொலையும் அதன் இழிவான அம்சங்கள். இத்தகைய கொள்கையின் ஆதிக்கத்தின்கீழ் வருகின்ற எல்லா நாடுகளும் சில ஆண்டுகள் மின்னித் திளைத்துவிட்டு விரைவிலேயே அழிந்துவிடுகின்றன.

இந்தியாவிலும் இதே பிரச்சினை எழுந்தது. அதற்குத் தீர்வு காணப்பட்டது-ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்தி. வெற்றிகண்ட எல்லாவற்றிற்கும் இதுதான் ஆதார சுருதி, வளைவு அமைப்பின் அடிக்கல் இதுவே. இதன் விளைவே வேதாந்தியின் அற்புதச் சகிப்புத் தன்மை .

இந்தியாவில் எப்போதாவது சீர்திருத்தவாதி களுக்குக் குறைவு இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? நானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்? தாது யார்? ஒளி மிகுந்த நட்சத்திரக் கூட்டங்களின் வரிசைகள்போல், ஒருவர் பின்னால் ஒருவராக வந்த இந்த முதல்தர ஆச்சாரியர்கள் எல்லாம் யார்? தாழ்ந்த குலத்தினரை எண்ணி ராமானுஜர் உருகவில்லையா? மிகவும் தாழ்ந்த குலத்தினரைக்கூடத் தமது நெறியில் அனுமதிப்பதற்கு அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபடவில்லையா? முகமதியர்களையும் தமது நெறியில் சேர்த்துக்கொள்ள அவர் முயலவில்லையா?

மாபெரும் சகாப்தத்தையே உருவாக்கியவர்களான சங்கராச்சாரியரும் பிறரும்தான் ஜாதிகளையும் உருவாக்கியவர்கள். அவர்கள் கட்டிவிட்ட வினோதக் கதைகளை எல்லாம் உங்களுக்குச் சொல்ல முடியாது, சொன்னாலும் உங்களுள் சிலருக்குக் கோபம் வரலாம். எனது பயணங்களின்மூலமும் அனுபவங்களின் வாயி லாகவும் அவைகளைக் கண்டுபிடித்து, ஆச்சரியமான முடிவுக்கு வந்திருக்கிறேன். சில வேளைகளில் அவர்கள் பலுசிஸ்தானத்தின் நாடோடிக் கும்பல் களைப் பிடித்து, க்ஷத்திரியர்கள் ஆக்குவார்கள்.

ஓர் ஆன்மீக எழுச்சிக்குப் பிறகு, கிட்டத்தட்ட நாடு முழுவதிலும் ஓர் அரசியல் ஒருமைப்பாடு ஏற்படுவதை இந்திய வரலாறு முழுவதிலும் காண்கிறோம். பிறகு இந்த ஒருமைப்பாடு அதைத் தோற்றுவித்த ஆன்மீக எழுச்சியைப் பலப்படுத்தவும் செய்தது.

ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 8

8. ஆட்சியைப் பிடிப்பதற்காக இரண்டு வகுப்புகள் முயற்சி செய்யும்போது என்ன நிகழ்கிறது?

புராதன இந்தியா பல நூற்றாண்டுகளாக பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர்களுக்கும் இடையே, ஒரு போர்க்களமாக விளங்கி வந்தது. முன்னணியில் இருந்த இந்த இரண்டு வகுப்பினரும் தங்கள் ஆசைப் பட்ட திட்டங்களுக்காக இந்தியாவைப் போர்க்கள மாக்கினர். ஒரு பக்கம், மக்கள் மீது அரசர்கள் சட்ட விரோதமான கொடுங்கோன்மை ஆட்சி நடத்துவதற்கு புரோகிதர்கள் முட்டுக்கட்டையாக நின்றார்கள், க்ஷத்திரியர்களோ பொதுமக்கள்தான் தங்கள் சட்டபூர் வமான இரையென்று கருதினார்கள். மற்றொருபக்கம், மக்களை அடக்கி ஆள்வதற்காக புரோகிதர்கள் நாளுக்குநாள் சடங்குமுறைகளை அதிகரித்துக் கொண்டே வந்தனர். அவர்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடிய ஒரே சக்தி, க்ஷத்திரியர்களின் சக்திதான்.

இந்தப் போராட்டம் நமது வரலாற்றின் ஆரம்ப காலத்திலேயே தொடங்கிவிட்டது. வேதங்கள் முழு வதிலும் இதைத் தெளிவாகக் காணலாம். க்ஷத்திரியர் களின் தலைவராகவும், ஞானத்தைப் பரப்பியவர்களின் தலைவராகவும் ஸ்ரீகிருஷ்ணர் வந்து ஒரு சமரசப் பாதை யைக் காட்டியபோதுதான் தற்காலிகமாக ஓய்வு ஏற் பட்டது. இதன் விளைவுதான் கீதை- தத்துவம், தாராள மனப்பான்மை, தர்மம் ஆகியவற்றின் சாரமான போத னைகள். ஆயினும் பழைய சண்டையின் காரணங்கள் இருந்துகொண்டேயிருந்தன. காரணங்கள் இருக்கும் போது விளைவு ஏற்படாமல் இருக்க முடியுமா?

ஏழைகள் மற்றும் பாமரர்கள்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று இந்த இரண்டு வகுப்பினருக்கும் அளவுக்கு மீறிய ஆசை இருந்தது. ஆகையால் மீண்டும் போராட்டம் கடுமையாயிற்று. அந்தக் காலத்தைப்பற்றி நமக்குக்கிடைக்கின்ற இலக்கியங்கள் சொற்பமே. அந்தக் காலத்திலிருந்த பெரும் போராட்டத்தில் ஒருசிறிதையே அவை எடுத்துக் காட்டுகின்றன. கடைசியில் இந்தப் போராட்டம் க்ஷத்திரியர்களுக்கு வெற்றியாக முடிந்தது; ஞானத்திற்கு, தாராள மனப்பான்மைக்கு வெற்றியாக முடிந்தது; சடங்குகள் ஒழிந்தன, இவற்றுள் பெரும்பாலானவை பின்னால் தலைதூக்கவேயில்லை. இந்தப் பெரிய எழுச்சியைத்தான் பௌத்தச் சீர்திருத்தம் என்று அழைக்கிறோம். இந்தச் சீர்திருத்தம், மதத்தைப் பொறுத்தவரையில் சடங்குகளிலிருந்து விடுதலையளிக்கின்ற சின்னமாக விளங்கியது; அரசியலைப் பொறுத்தவரையில் புரோகிதர்களை க்ஷத்திரியர்கள் வெற்றி கண்டதன் அடையாளமாக இருந்தது.

பண்டைய இந்தியாவில் தோன்றிய இரு மாபெரும் மனிதர்களான கிருஷ்ணரும் புத்தரும் க்ஷத்திரியர்களே என்பது குறிப்பிடத்தக்க உண்மை . இதைவிடச் சிறப்பு என்னவென்றால் இந்த இரண்டு தெய்வ மனிதர்களும் ஜாதி மற்றும் பால் வேறுபாடின்றி அனைவருக்கும் ஞானத்தின் வாசலைத் திறந்துவிட்டார்கள் என்பதுதான்.

புத்த மதம் அற்புதமான ஒழுக்க பலத்தைப் போதித்தாலும், ஏற்கனவே இருந்த நம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்ப்பதாக இருந்தது; அதனுடைய சக்தியின் பெரும்பகுதி, ‘இது கூடாது, அது கூடாது’ என்று தடுப்பதிலேயே செலவிடப்பட்டது; எனவேதான் பிறந்த பூமியிலேயே அது மடிய நேர்ந்தது. அதில் எஞ்சிய பகுதி மூடப் பழக்கவழக்கங்களும் சடங்குகளும் நிறைந்ததாக இருந்தது. எந்த மூடப் பழக்கவழக்கங்களையும் சடங்குகளையும் அது ஒழிக்க நினைத்ததோ அதைப் போன்று நூறு மடங்கு அதில் பெருகியது. வேதங்களில் கூறப்பட்ட மிருக பலியை ஒழித்துக்கட்டுவதில் அது ஓரளவு வெற்றிபெற்றது என்றாலும், நாட்டை கோயில்கள், விக்கிரகங்கள், மதச் சின்னங்கள், மகான்களின் எலும்புகள் ஆகியவற்றால் நிறைத்தது.

இவற்றிற்கெல்லாம் மேலாக, ஆரியர்கள், மங்கோலியர்கள், பழங்குடி மக்கள் ஆகியோரை இணைத்துத் தாறுமாறான கலப்பை உண்டாக்கியதில் சில கோரமான வாமாச்சாரங்களுக்கு அது தன்னையறி யாமலே இடமளித்துவிட்டது. அந்த மாபெரும் ஆச்சாரியரின் போதனைகளின் நகைப்பிற்கிடமான போலியை, ஸ்ரீசங்கரரும் அவரைப் பின்பற்றிய சன்னியாசிகளும் வெளியே துரத்த நேர்ந்ததன் முக்கியக் காரணம் இதுவே.

இவ்வாறாக, இதுவரை தோன்றியவர்களுள் மாபெரும் மனிதரான பகவான் புத்தராலேயே தொடங்கிவைக்கப்பட்ட ஒரு ஜீவநதி நச்சு நதியாகியது. எனவே சங்கரரும், அவரைத் தொடர்ந்து ராமானுஜரும் மத்வரும் பிறக்கும்வரை பல நூறுஆண்டுகள் இந்தியா காத்துக்கிடக்க நேரிட்டது.

இந்த வேளையில் இந்திய வரலாற்றில் முற்றிலும் புதிய ஓர் அத்தியாயம் தொடங்கிற்று. புராதன க்ஷத்திரியர்களும் பிராமணர்களும் மறைந்தார்கள்.

புத்தமத இயக்கத்தில் க்ஷத்திரியர்கள்தான் உண்மை யான தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் கூட்டங் கூட்டமாகப் புத்த மதத்தில் சேர்ந்தார்கள். சீர்திருத்தத் திலும் மதமாற்றத்திலும் அவர்களுக்கிருந்த ஆர்வத்தில், சம்ஸ்கிருதத்தைப் புறக்கணித்துவிட்டு மக்களுக்குப் புரிகின்ற வட்டார மொழிகளை உருவாக்கினார்கள். இதனால் க்ஷத்திரியர்களில் பெரும்பாலோருக்கு சம்ஸ் கிருதக் கல்வியோ, வேத அறிவோ இல்லாமல் போய் விட்டது. இவ்வாறு தென்னிந்தியாவிலிருந்து வந்த இந்தச் சீர்திருத்த அலை புரோகிதத்துவத்திற்கும்புரோகிதர்களுக்கும் மட்டுமே ஓரளவு பலன் அளித்தது. இந்தியாவின்மற்ற கோடிக்கணக்கானமக்களைப்பொறுத் தவரையில், அவர்கள் அதற்கு முன்பு அறிந்திராத அதிக மான கை விலங்குகளை அது மாட்டியதுதான் மிச்சம்.

க்ஷத்திரியர்கள் எப்போதுமே இந்தியாவின் முது கெலும்பாகவும், விஞ்ஞானம் சுதந்திரம் ஆகியவற்றின் ஆதரவாளர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்; இந்தியாவில் மூட நம்பிக்கைகளை அகற்ற மீண்டும் மீண்டும் குரல் எழுப்பியிருக்கிறார்கள்; இந்தியாவின் வரலாறு முழுவதிலும், ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் புரோகிதர்களின் கொடுங்கோன்மை ஏற்பட்டபோது, அதை வெற்றிகரமாகத் தடுக்கின்ற அரணாக விளங்கி வந்திருக்கிறார்கள்.

க்ஷத்திரியர்களில் ஒரு பெரும் பகுதியினர் அறியாமை யில் மூழ்கியிருந்தனர், மற்றொரு பகுதியினர் மத்திய ஆசியாவிலிருந்து வந்த அநாகரீக மக்களுடன் கலந்து, புரோகிதர்களின் ஆட்சியை நிலைநிறுத்தத் தங்கள் வாள்பலத்தை அளித்தபோது பாரதத் தாயின் கோப்பையில் விஷம் நிரம்பியது, பாரத பூமியும் கீழே சாய்ந்தது. இந்த மயக்கத்திலிருந்து க்ஷத்திரியர்கள் தெளிந்து எழுந்து, தம்மைத்தாமே விடுவித்துக்கொண்டு, மற்றவர்களின்காலைப் பிணைத்திருந்த சங்கிலிகளையும் அறுத்தெறியும்வரை.

ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 7

7. ஆட்சியாளர்கள் பலவீனம் அடைந்தவுடன் சமுதாயத்தில் மாற்றம் உடனடியாக நிகழுமா?

பொதுமக்கள் எல்லா சக்திகளின் ஆதாரமாக இருந்தும், தங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் அவர்களின் உரிமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் இப்படி இருக்கும்வரை இந்த நிலைதான் நீடிக்கும்.

குடிமக்களின் ஆற்றல் முழுவதையும் தன்னிடம் குவித்து வைத்திருப்பவனான அரசன், தன்னிடம் குவிக்கப்பட்டுள்ள இந்தச் சக்தி ‘ஸஹஸ்ர குணமுத் ஸ்ரஷ்டம்’-ஆயிரம் மடங்காகத் திருப்பித் தருவதற்காக மட்டுமே என்பதை விரைவில் மறக்கிறான். வேன மன்னனைப்போல் தானே எல்லா கடவுளும், மற்ற வர்கள் கேவலமான மனிதர்கள் மட்டுமே என்று நினைக்கிறான். நல்லதானாலும் கெட்டதானாலும் அவனது விருப்பத்திற்கு எதிராக நடப்பது பெரும் பாவம். ஆகவே காப்பாற்ற வேண்டிய அரசன் மக்களைத் துன்புறுத்துகிறான், அவர்களின் உயிரை உறிஞ்சுகிறான். சமுதாயம் பலவீனமாக இருந்தால் அரசனின் எல்லா கொடுமைகளையும் அது சகித்துக் கொள்கிறது. அதன் காரணமாக அரசனும் மக்களும் படிப்படியாக வலிமை கெட்டு பரிதாபமான நிலையை அடைகிறார்கள்; – பிறகு தங்களைவிட வலுவான இன்னொரு நாட்டிற்குப் பலியாகிறார்கள். எங்கு சமுதாயம் வலிமையாக இருக்கிறதோ, அங்கு உடனே எதிர்விளைவு உண்டாகிறது. அதன் விளைவாக வெண் கொற்றக்குடை, செங்கோல், சாமரம் எல்லாம் தூக்கி எறியப்படுகின்றன; அரியாசனமும் மற்ற அரச ஆடம் பரங்களும் கண்காட்சிச் சாலையில் வைக்கப்படும் பொருட்களாகி விடுகின்றன.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் எல்லா சமுதாயமும் வாலிபப் பருவத்தை அடைகிறது என்றும், அப்போது பொதுமக்களுக்கும் ஆள்பவர்களுக்கும் இடையே பலத்த போராட்டம் நிகழ்கிறது என்பதையும் வரலாறு காட்டுகிறது. இந்தப் போராட்டத்தில் விளைகின்ற வெற்றி தோல்விகளைப் பொறுத்தே சமுதாயத்தின் வளமும் நாகரீகமும் அமைகிறது.

ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் 6

6. ஆட்சியாளர்கள் எப்படி பலவீனமடைந்தார்கள்?

சமுதாயத் தலைமை, அறிவு வலிமை உள்ளவர் களிடமோ, தோள் வலிமை உள்ளவர்களிடமோ, பண வலிமை உள்ளவர்களிடமோ யாரிடம் இருந்தாலும் சரி, அதன் அடித்தளம் குடிமக்களே. சமுதாயத் தலைவர்கள் எவ்வளவு தூரம் இந்த சக்தி மையத்திலிருந்து விலகி நிற்கிறார்களோ, அவ்வளவுதூரம் வலிமை குறைந்து விளங்குவார்கள். ஆனால் மாயையின் விசித்திர விளை யாட்டைப் பாருங்கள்- தெரியாமலோ, நேராகவோ, ஏமாற்றியோ, பலத்தினாலோ, தந்திரமாகவோ பணத்தாலோ இந்தச் சக்தி யாரிடமிருந்து எடுக்கப் படுகிறதோ, அவர்களிடமிருந்து தலைமை வகுப்பினர் விரைவில் அகன்றுவிடுகின்றனர். நாளடைவில் புரோகிதர்கள் சக்தியின் இருப்பிடமாகிய குடிமக்களிடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்டனர். அதனால்தான் தற்காலிகமாக குடிமக்களின் பக்கபலம் பெற்றிருந்த அரச சக்தியிடம் அவர்கள் தோற்க நேர்ந்தது. பிறகு இந்த அரச சக்தியும் தனக்குப் பரிபூரண சுதந்திரம் இருப்பதாக நினைத்துக்கொண்டு, தனக்கும் குடிமக்களுக்கும் இடையே கடப்பதற்குக் கடினமானதொரு பெரிய பிளவை உண்டாக்கியது. விளைவு? குடிமக்களின் பக்கபலத்தைச் சற்று அதிகமாகவே பெற்ற வைசியர்களால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள், அல்லது ப் அவர்களின் கைப்பொம்மை ஆனார்கள். வைசியர்கள் இப்போது தாங்கள் விரும்பியதை அடைந்துவிட்டார்கள். அவர்களும் குடிமக்களின் உதவி இனி தேவையில்லை என்று கருதி, அவர்களிடமிருந்து விலக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனவே வைசிய சக்தியுடைய அழிவின் விதையும் விதைக்கப்பட்டுவிட்டது.