சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 10

10. புரட்சியானது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் செய்யப்பட வேண்டுமா அல்லது தொடர்ந்து – நிகழ வேண்டுமா?

எனவே புறப்பொருளான ஒரு சொர்க்கமோ பொற்காலமோ வெறும் கற்பனையில்தான் இருக்கிறது; ஆனால் அகஅனுபவமாகிய சொர்க்கமோ பொற் காலமோ ஏற்கனவே உள்ளது. கஸ்தூரிமான் வீணாக இங்குமங்கும் ஓடி, இறுதியில் கஸ்தூரியின் வாசனைக் குக் காரணத்தைத் தன்னிடம்தான் கண்டுகொண்டாக வேண்டும்.

புறப்பொருளாக அமைந்துள்ள சமுதாயம் எப் போதும் நன்மையும் தீமையும் கலந்ததாகவே இருக்கும். புறப்பொருளாகின்ற வாழ்வு, எப்போதும் அதன் நிழலான மரணம் தொடர்ந்து வருவதாகவே இருக்கும். வாழ்வின் நீளத்திற்கேற்ப நிழலும் நீண்டிருக்கும்.

ஆனால் புற வாழ்க்கையில் மேடு இருந்தால் பள்ளம் உண்டு, ஒவ்வொரு நன்மையுடனும் அதன் நிழல்போல் தீமையும் தொடர்கிறது. ஒவ்வொரு முன்னேற்றமும், அதற்குச் சமமான ஒரு வீழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்மை என்பது வளர்ந்துகொண்டே போவது, தீமை என்பது அப்படியே நிற்பது என்று கொள்வது அடிக்கடி நாம் செய்கின்ற மற்றொரு தவறு. அதனால், தீமை நாளுக்குநாள் குறைந்து நன்மை ஒன்றே எஞ்சுகின்ற காலம் வரும் என்று கூறப்படுகிறது. இது தவறு. இங்கே பொய்யான ஒரு கருத்து சரியானதாகக் கருதப்படுகிறது.

இயற்கை முழுவதிலும் இரண்டு சக்திகள் செயல்படுவதுபோல் தோன்றுகிறது. இவற்றுள் ஒன்று எப்போதும் பிரித்துக்கொண்டே இருக்கிறது; மற்றது எப்போதும் சேர்த்துக்கொண்டே இருக்கிறது. ஒன்று மனிதர்களைப் பிரிக்க முயல்கிறது, மற்றது மக்களை யெல்லாம் ஒன்றாக்கி வேற்றுமைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்த முயல்கிறது. அட சமுதாய வாழ்வு தொடங்கிய காலத்திலிருந்தே இந்த இரண்டு சக்திகளும் பிரிப்பதும் சேர்ப்பதுமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் செயல்பாடு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது, வெவ்வேறு பெயரைப் பெறுகிறது.

உபநிடதங்கள், மற்றும் புத்தர்கள், ஏசுநாதர்கள் போன்ற மதப் பிரச்சாரகர்களின் காலம் முதல் இன்றுவரையிலும் நோக்கங்களிலும், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சிக் குரல்களிலும், தங்கள் உரிமைகளை இழந்து வாழ்கின்ற மக்களிலும் ஒருமை, சமத்துவம் என்ற இந்த ஒன்றின் வற்புறுத்தல்தான் கேட்டுக்கொண்டிருக்கிறது.

பன்மையில் ஒருமை, ஒருமையில் பன்மை இதுவே இந்தப் பிரபஞ்சத் திருவிளையாடல். வேறு பாடுகள், ஒருமை இவற்றின் ஒரு திருவிளையாடலே இந்தப் பிரபஞ்சம். எல்லையற்றதில் எல்லையுள்ளதன் திருவிளையாடலே இந்தப் பிரபஞ்சம்.

ஆனால் தனிச் சலுகை என்பதை நாம் ஒழித்துவிட முடியும். உண்மையில் உலகின் முன்னுள்ள பணி இதுவே. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள, ஒவ்வோர் இனத்திலும் உள்ள சமுதாய வாழ்க்கையில் இந்த போராட்டம் இருந்தே வருகிறது. ஒரு பிரிவினர் இயல் பாகவே மற்றொரு பிரிவினரைவிட அறிவுமிக்கவராக இருக்கிறார்கள் என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதிக அறிவு இருப்பதற்காக அவர்கள், அது இல்லாதவர்களின் சாதாரண சுகங்களைக்கூடப் பிடுங்க முயல்வது சரிதானா என்பதுதான் பிரச்சினை. இந்தச் சலுகையை ஒழிப்பதற்காகத்தான் போராட்டம் நடைபெறுகிறது.

சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 9

9. புரட்சிவாதியின் குணநலன்கள் யாவை?

நானும் தேசப்பற்றில் நம்பிக்கை உள்ளவன், தேசப்பற்றைப்பற்றி எனக்கென்று சொந்தக் கருத்தும் உண்டு. எந்த மகத்தான சாதனைகளுக்கும் மூன்று விஷயங்கள் அவசியமானவை. முதலில் இதயபூர்வமான உணர்ச்சி. அறிவிலும் ஆராய்ச்சியிலும் என்ன இருக்கிறது? அது சில அடிகள் செல்லும், பிறகு நின்று விடும். ஆனால் இதயத்தின் மூலம்தான் உத்வேகம் பிறக்கிறது. திறக்க முடியாத கதவுகளை எல்லாம் அன்பு திறக்கிறது. பிரபஞ்சத்தின் எல்லா ரகசியங்களுக்கும் வாசல் அன்புதான்.

எனவே உணர்ச்சி கொள்ளுங்கள், என் எதிர்கால சீர்திருத்தவாதிகளே, வருங்கால தேச பக்தர்களே, நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா? தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பரம்பரையில் வந்த கோடானுகோடி பேர் மிருகங்களுக்கு அடுத்த நிலையில் வாழும் கொடுமையை உணர்கிறீர்களா? பட்டினியால் இன்று லட்சக்கணக்கானோர் வாடுவதையும், காலங்கால மாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் துடிப்பதை யும் உணர்கிறீர்களா? இந்த நாட்டின்மீது ஒரு கரிய மேகம்போல் அறியாமை கவிந்துள்ளதை உணர் கிறீர்களா? இந்த உணர்ச்சி உங்களை அமைதியிழந்து தவிக்கச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்களைத் தூக்கம் கெட்டு வாடச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்கள் ரத்தத்தில் கலந்து, உங்கள் நாடிநரம்புகள் தோறும் ஓடி, உங்கள் இதயத்துடிப்புடன் கலந்து துடிக்கிறதா? இது உங்களை ஏறக்குறைய பைத்தியமாகவே ஆக்கிவிட்டதா? அழிவுத்துன்பம் என்ற ஒரே கருத்து உங்களைப் பற்றிப்பிடித்துள்ளதா? உங்கள் பெயர், உங்கள் புகழ், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் சொத்து, ஏன், உங்கள் உடம்பு போன்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டீர்களா? இதை நீங்கள் செய்துவிட்டீர்களா? இதுதான் தேசப்பற்று உடையவன் ஆவதற்கு முதற்படி. வெறும் முதற்படி இது.

சர்வமத மகாசபையில் கலந்துகொள்வதற்காகவென்று நான் அமெரிக்கா போகவில்லை, உங்களுள் பலரும் இதை அறிவீர்கள். என்னுள், என் உயிரில் நிலவிய இந்த உணர்ச்சி என்ற பூதம் என்னை ஆட்டிப் படைத்ததாலேயே நான் செல்ல நேர்ந்தது. என் நாட்டு மக்களுக்காக உழைப்பதற்கான வழிதேடி பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியாமுழுவதும் அலைந்தும், வழியேதும் கிடைக்காததால்தான் அமெரிக்கா சென்றேன். அப்பொழுது என்னை அறிந்த பெரும்பாலோருக்கு இது தெரியும். இந்த சர்வசமயப் பேரவையைப்பற்றி இங்கு யாருக்கு அக்கறை? என் தசையாகவும் ரத்தமாகவும் இருக்கின்ற மக்கள் இங்கே ஒவ்வொரு நாளும் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக யார் கவலைப்பட்டார்கள்? இதுதான் என் முதல் படி. நீங்கள் உணரலாம். ஆனால் வெட்டிப்பேச்சில் உங்கள் ஆற்றல்களை வீணாக்குவதற்குப் பதிலாக, ஏதாவது வழி கண்டுபிடித்தீர்களா? அவர்களை நிந்திப்பதற்குப் பதிலாக உதவி செய்வதற்கு, அவர்களின் துன்பங்களைத் தணிக்கின்ற சில இதமான வார்த்தைகளைக் கூறுவதற்கு, அவர்கள் நடைப் பிணங்களாகிக் கிடக்கும் கேவல நிலையிலிருந்து மீட்க ஏதாவது செயல்முறை வழி கண்டீர்களா?

அதோடும் தேசப்பற்று முடிந்து விடுவதில்லை. மலைகளையொத்த எதிர்ப்புகளை வெல்வதற்கான மனவுறுதி உங்களிடம் இருக்கிறதா? கையில் வாளுடன் இந்த உலகம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும், நீங்கள் சரி என்று நினைப்பதைச் செய்து முடிக்கின்ற தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் மனைவியும் பிள்ளைகளும் எதிர்த்தாலும், உங்கள் பணம் எல்லாம் கரைந்து போனாலும், உங்கள் பெயர் அழிந்து செல்வம் எல்லாம் மறைந்தாலும் அதையே உறுதியாகப் பற்றிநிற்பீர்களா? அதையே உறுதியாகத் தொடர்ந்து, உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்வீர்களா? பர்த்ருஹரி மன்னர் கூறியதுபோல், ‘மகான்கள் பழிக்கட்டும் அல்லது புகழட்டும், அதிர்ஷ்ட தேவியான மகாலட்சுமி வரட்டும் அல்லது அவள் விரும்புகின்ற இடத்திற்குச் செல்லட்டும், மரணம் இன்று வரட்டும் அல்லது நூறு ஆண்டுகள் கழித்து வரட்டும்- எது நேர்ந்தாலும் சத்தியத்தின் பாதையிலிருந்து அங்குலம்கூட விலகாதவனே உண்மை மனிதன்’. இத்தகைய உறுதி உங்களிடம் இருக்கிறதா? உங்களிடம் இந்த மூன்று விஷயங்களும் இருக்குமானால் நீங்கள் ஒவ்வொருவரும் பிறர் பிரமிக்கத்தக்க செயல்களைச் செய்வீர்கள்.

சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 8

8. ‘எல்லோருக்கும் சம உரிமை’ எவ்வாறு நிலைநிறுத்தப்பட வேண்டும்?

பணக்காரர்கள் ஏழைகளுடன் தங்களது செல்வத்தை பகிர்ந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். தங்களது செல்வத்தில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாதா?

ஒருவனது சொத்தை மற்றவன் பிடுங்கிக்கொண்டான், சொத்திற்கு உரியவன் அதைத் திரும்பப் பெற முயலும்போது, மற்றவன் மூக்கால் அழுதுகொண்டு, மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று புலம்புவதுபோல் உள்ளது.

சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 7

7. மாற்றத்திற்கு மக்கள் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும்?

மக்களுக்கு அவர்களுடைய தாய்மொழியில் போதியுங்கள். கருத்துக்களைக் கொடுங்கள், அதனால் அவர்கள் விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஆனால் அதைவிட மேலான ஒன்று அவர்களுக்குத் தேவை, பண்பாட்டை அளியுங்கள். அவர்களுக்கு அதைக் கொடுக்காத வரையில் அந்த உயர்த்தப்பட்ட நிலையில் அவர்களால் நிலையாக இருக்க முடியாது.

குறிப்பாக இந்த நவீன காலத்தில் ஜாதிகளுக் கிடையே இவ்வளவு சச்சரவுகள் இருப்பது குறித்து நான் வருந்துகிறேன். இது நிறுத்தப்பட்டே தீர வேண் டும். இந்தச் சண்டை இரு தரப்பினருக்கும், குறிப்பாக உயர்ந்த ஜாதியினரான பிராமணர்களுக்குப் பயனற்றது. ஏனென்றால் இன்று தனிச் சலுகைகளும் தனி உரிமை களும் பறிபோய்விட்டன. தங்கள் கல்லறையைத் தாங் களே தோண்டிக் கொள்வதுதான் ஒவ்வோர் உயர்ந்த பிரிவினருடையவும் கடமை. எவ்வளவு சீக்கிரம் அதைச் செய்கிறார்களோ அந்த அளவிற்கு நல்லது. காலம் நீடிக்கநீடிக்க அவை கெட்டுக் குட்டிச்சுவராகி மிகமோசமான முடிவைப் பெற நேரும்.

எனவே பிராமணர்களின் முதல் கடமை இந்தியாவிலுள்ள மற்ற சமுதாயத்தினரின் நன்மைக்காகப் பாடுபடுவதுதான். அவன் அதைச் செய்வானானால், அதைச் செய்யும் காலம்வரையில், அவன் பிராமணன். அதைச் செய்யாமல் பணம் சம்பாதிக்கத் திரிபவன் பிராமணன் அல்ல.

பிராமணர் அல்லாத நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் சில விஷயங்கள் உண்டு. கொஞ்சம் பொறு மையாக இருங்கள், அவசரப்படாதீர்கள். பிராமணர் களோடு சண்டையிடுவதற்காக ஒவ்வொரு வாய்ப்பை யும் பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் தவறு களாலேயே நீங்கள் துன்பப்படுகிறீர்கள் என்பதை நான் முன்னரே எடுத்துக்காட்டி விட்டேன். ஆன்மீகத்தையும் சம்ஸ்கிருதம் கற்பதையும் அலட்சியம் செய்யும்படி உங்களிடம் யார் சொன்னார்கள்? இவ்வளவு காலமாக என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? எதற்கு இந்த பொறுப்பற்ற தன்மை? இன்று மற்றவர்கள் உங்களை விட அதிக அறிவும் ஆற்றலும் திறமையும் உள்ளவர் களாக இருப்பதைப் பார்த்து ஏன் எகிறிக் குதிக் கிறீர்கள்? பத்திரிகைகளில் வாதங்களையும் சண்டை களையும் வளர்ப்பதில் உங்கள் ஆற்றலை வீணாக்கு வதற்குப் பதிலாக, உங்கள் வீடுகளிலேயே சண்டையும் சச்சரவும் செய்துகொண்டு இருப்பதற்குப் பதிலாக, இந்தப் பாவச் செயல்களுக்குப் பதிலாக, பிராமணர்கள் பெற்றிருக்கும் பண்பாட்டைப் பெற உங்கள் எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள்.

ஒரே மனத்தவராக இருப்பது சமுதாயத்தின் ரகசியம். ‘திராவிடன்’, ‘ஆரியன்’ முதலான அற்ப விஷயங்கள் பற்றியும், பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்றெல்லாமும் நீங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்குந்தோறும் எதிர்கால இந்தியாவை உருவாக்குவதற்கான ஆற்றலையும் சக்தியையும் சேமிப் பதிலிருந்து மேலும்மேலும் விலகிப் போகிறீர்கள். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் எதிர்கால இந்தியா முற்றிலும் அதையே சார்ந்திருக்கிறது. சங்கல்ப ஆற்றலைச் சேமித்தல், அவற்றை ஒருங்கிணைத்தல், அவை அனைத்தையும் ஒரே மையத்தில் திரட்டுதல்இதுதான் ரகசியம்.

ஒவ்வொரு சீனனும் தான் விரும்புகின்ற வழியில் சிந்திக்கிறான். ஆனால் எண்ணிக்கையில் குறைந்த ஜப்பானியரோ அனைவரும் ஒரே வழியில் சிந்திக் கின்றனர். விளைவு உங்களுக்கே தெரியும். உலக வரலாறு முழுவதும் இவ்வாறே நடந்துள்ளது. கட்டுக் கோப்பான சிறிய நாடுகளே கட்டுப்பாடற்ற, பெரிய நாடுகளை எப்போதும் ஆள்கின்றன. இது இயல்பானதுதான். ஏனெனில் சிறிய கட்டுக்கோப்பான நாடுகளுக்குத் தங்கள் கருத்துக்களை ஒரே மையத்தில் குவிப்பது எளிதாக உள்ளது. அதன்மூலம் அவை வளர்ந்து விடுகின்றன. ஒரு நாடு எந்த அளவுக்குப் பெரி தாக இருக்கிறதோ அந்த அளவுக்குக் கட்டுப்பாடற்றதாக இருக்கிறது. கட்டுப்பாடற்றவர்கள்போல் பிறந்த அந்த மக்களால் ஒன்றாகச் சேரவும் முடிவதில்லை . இந்தக் கருத்துவேற்றுமைகள் எல்லாம் விலகியே தீர வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்கு இரு பக்கங்கள் உள்ளனஒன்று எல்லாவற்றையும் ஆன்மீக மயமாக்குவது; இன்னொன்று நாட்டின் பல்வேறு அம்சங்களையும் கிரகிப்பது. ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கையிலும் பல இனங்களை ஒன்று சேர்ப்பதுதான் பொதுவான வேலையாக இருந்திருக்கிறது.

பொதுவான விஷயம் ஒன்று இல்லாமல் மனிதர் களை ஒருபோதும் ஒன்றுசேர்க்க முடியாது. அவர்களின் நோக்கம் ஒன்றாக இல்லாவிட்டால், கூட்டங்கள் போடுவது, சங்கங்கள் அமைப்பது, சொற்பொழிவுகள் நிகழ்த்துவது இவற்றால் மக்களை ஒன்றுசேர்த்துவிட முடியாது. குருகோவிந்தசிங்தம்காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அவர்கள் இந்துக்களானாலும் சரி, முஸ்லீம்களானாலும் சரி -அநீதியும் அடக்குமுறையும் நிறைந்த ஓர் ஆட்சியின் கீழ் இருக்கும் உண்மையை உணரும்படிச் செய்தார். அனைவருக்கும் பொதுவான எந்த விஷயத்தையும் அவர் உருவாக்கவில்லை ; பிரச்சினையைச் சாதாரண மக்களுக்குச் சுட்டிக்காட்ட மட்டுமே செய்தார். எனவே இந்துக்களும் முஸ்லீம்களும் அவர் காட்டிய வழியைப் பின்பற்றினர்.

மக்களுக்குக் கல்வி கற்பித்து அவர்களின் பிரச்சினைகளை அவர்களே தீர்க்கும்படிச் செய்வோம். இது நிறைவேறாதவரை லட்சியச் சீர்திருத்தங்கள் எல்லாம் கொள்கையளவிலேயே நிற்கும்.

குடியானவ சிறுவர்சிறுமியர் சிலருக்கு ஒருசிறிது எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடு; சில கருத்துக் களையும் அவர்களின் மூளையில் புகுத்து. அதன்பிறகு குடியானவர்கள் பணம் வசூலித்துத் தங்கள் தங்கள் கிராமத்தில் இவை ஒவ்வொன்றையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். ‘உத்தரேதாத்மனாத்மானம் – தன் முயற்சி யாலேயே தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்’ என்பது எல்லா விஷயங்களிலும் உண்மை . தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ள நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோம். இந்தக் குடியானவர்கள் உனக்குத் தினமும் உணவளிக்கிறார்கள் என்பதே ஓர் உண்மையான வேலை நடைபெற்றுள்ளதைக் காட்டுகிறது. அவர்கள் தங்கள் உண்மை நிலையை அறிந்து, உதவியையும் முன்னேற்றத்தையும் நாடுகின்றபோது, உனது பணி தனது விளைவை ஏற்படுத்தி விட்டதையும், அது சரியான வழியில் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்.

பாமர மக்களுக்கு உரிய உரிமைகளை அளிப்பதே முதல் பிரச்சினை. அவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விட்டார்கள்; தங்களைப் பிறவியிலேயே அடிமைகள் என்று கருதுகிறார்கள். உரிய உரிமைகளை அவர்களுக்கு அளியுங்கள், அவர்கள் தங்கள் சொந்த உரிமைகளைச் சார்ந்து நிற்கட்டும்.

‘அந்த இயக்கம் எதில் நிறைவுறும்?’

‘நிச்சயமாக இந்தியாவின் ஒற்றுமையை உருவாக்குவதிலும், ஜனநாயகக் கருத்துக்கள் என்று கூறுகிறோமே, அவற்றைப் பெறுவதிலும்தான். அறிவு என்பது பண்பட்ட ஒருசிலரின் ஏகபோகமாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. உயர்ந்த இனத்திலிருந்து தாழ்ந்த இனம் வரையிலும் அது பரவ வேண்டும். கல்வி வளர்ந்து வருகிறது, கட்டாயக் கல்வியும் தொடர்ந்து வரும். நமது மக்களின் அளவற்ற செயல்திறனைப் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் உள்ளுறையும் ஆற்றல்கள் மகோன்னதமானவை. அவை தட்டி எழுப்பப்படும்.’

மன்னர்கள் மறைந்துவிட்டனர், இன்று அதிகாரம் மக்களிடம் உள்ளது. ஆதலால் மக்கள் கல்வி பெறும் வரை தங்கள் தேவைகளை உணரும்வரை, தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையைப் பெறும்வரை நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

‘பொதுமக்களின் முன்னேற்றத்திற்கு உங்கள் திட்டம் என்ன?’ |

‘அவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும், முன்னோர்கள் வகுத்தளித்துள்ள திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அதாவது, எல்லா லட்சியங்களையும் பொது மக்களிடையே மெல்லமெல்லப்பரப்பி, மெதுவாக அவர் களை உயர்த்த வேண்டும். அவர்களைச் சமநிலைக்குக் கொண்டு வாருங்கள். சாதாரண அறிவையும் மதத்தின் வாயிலாகக் கொடுங்கள்.’

சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 6

6. சமூதாய மாற்றம் கட்டாயத்தினாலா அல்லது அமைதியாகவா செய்யப்பட வேண்டும்?

பணக்காரன் ஏழையைக் கொடுமைப்படுத்தும் போது ஏழைக்கு வேண்டிய மருந்து வலிமை.

கீழ்நிலை மக்கள் விழித்துவிட்டார்கள். இந்த நிலைமைக்கு எதிராக ஒரே அணியாகத் திரண்டு, நியாயப்படித் தங்களுக்குத் தரப்பட வேண்டிய பங்கைப் பெறுவதற்கு உறுதி பூண்டுவிட்டார்கள். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழி லாளர்கள் விழிப்புற்று, அதற்குப் பாதையும் வகுத்து விட்டார்கள். இந்தியாவிலும் அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. இப்போது நம் நாட்டில் நடக்கும் பல வேலை நிறுத்தங்கள் அதையே காட்டு கின்றன. இனி உயர்ந்த ஜாதி மக்கள் தலைகீழாக நின்றாலும் தாழ்ந்த ஜாதியினரை அடக்கி நசுக்க முடியாது. அவர்கள் தங்களுக்குரிய நியாயமான உரிமை களைப் பெற உதவி செய்வதுதான் உயர்ஜாதியினருக்கு இனி நல்லது. .

‘எனவே பாமர மக்களிடையே கல்வியைப் பரப்பும் வேலையைத் துவக்கு என்று உன்னிடம் நான் சொல்கிறேன். “நீங்கள் எங்கள் உடன்பிறந்தவர்கள். எங்கள் உடம்பின் ஒரு பகுதி. நாங்கள் உங்களிடம் அன்பு செலுத்துகிறோம். உங்களை ஒருபோதும் வெறுக்க மாட்டோம்” என்று அவர்களுக்குப் புரிய வையுங்கள். அவர்களுக்கு உங்களுடைய இந்தப் பரிவும் அன்பும் கிடைத்தால் ஆயிரம் மடங்கு உத்வே கத்துடன் அவர்கள் வேலை செய்வார்கள். நவீன விஞ்ஞானத்தின் துணையுடன் அவர்களது அறிவைத் தூண்டிவிடுங்கள். வரலாறு, புவியியல், விஞ்ஞானம், இலக்கியம் முதலியவற்றுடன் மதத்தின் உண்மை களையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். கல்வியை அளிப்பதன் பலனாக, ஆசிரியர்களாகிய உங்கள் வறுமையும் தீரும். இப்படி ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதன்மூலம் இருசாராரிடமும் நட்பும் பெருகும்.’

அது நடக்காவிட்டால் உங்களுக்கு முன்னேற்றம் இல்லை. இதுவரை நெடுங்காலமாக நீங்கள் செய்து வருகின்ற போராட்டங்களாலும் சச்சரவுகளாலும் அழிந்துவிடுவீர்கள். பாமர மக்கள் விழித்தெழுந்து, உங்கள் சுரண்டலையும் அடக்கு முறையையும் புரிந்துகொண்டால், ஒரு மூச்சில் உங்களைப் பறக்கடித்து விடுவார்கள். அவர்கள்தாம் உங்களிடையே நாகரீகத்தைப் புகுத்தினார்கள். எதிர்காலத்தில் அதை உடைத்தெறியப் போவதும் அவர்கள்தான். மகோன்னதமான ரோமப் பேரரசும் நாகரீகமும் கௌல் ஜாதியினரால் எப்படித் தூள்தூளாகியது என்பதை எண்ணிப் பார். அதனால் தாழ்ந்த மக்களுக்கு கல்வி யையும் பண்பாட்டையும் அளித்து அவர்களை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய். அவர்கள் விழித்து எழுந்தால் நிச்சயம் ஒருநாள் விழித்து எழத்தான் போகிறார்கள் அப்போது நீங்கள் அவர்களுக்குச் செய்த உதவியை மறக்காமல் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.’

சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 5

5. எப்போது புரட்சி ஏற்படுகிறது?

போதிய அளவிற்கு விமர்சனம் செய்தாகிவிட்டது, குற்றம் கண்டுபிடித்தலும் போதிய அளவிற்குச் செய் தாகிவிட்டது. இப்போது புதுப்பிக்கவும் புனரமைப் பதற்குமான காலம் வந்திருக்கிறது ; சிதறிக் கிடக்கின்ற நம் சக்திகளையெல்லாம் திரட்டி, ஒரு மையத்தில் குவித்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஏறக்குறைய தடைபட்டுப் போய்விட்ட இந்த நாட்டின் முன்னேற்றப் பயணத்தை அதன்மூலம் வழி நடத்துவற்கான காலம் வந்திருக்கிறது.

குடியானவ சிறுவர்சிறுமியர் சிலருக்கு ஒருசிறிது எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடு; சில கருத்துக் களையும் அவர்களின் மூளையில் புகுத்து. அதன்பிறகு குடியானவர்கள் பணம் வசூலித்துத் தங்கள் தங்கள் கிராமத்தில் இவை ஒவ்வொன்றையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். ‘உத்தரேதாத்மனாத்மானம்- தன் முயற்சியாலேயே தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்’ என்பது எல்லா விஷயங்களிலும் உண்மை. தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ள நாம் அவர் களுக்கு உதவி செய்கிறோம். இந்தக் குடியானவர்கள் உனக்குத் தினமும் உணவளிக்கிறார்கள் என்பதே ஓர் உண்மையான வேலை நடைபெற்றுள்ளதைக் காட்டுகிறது. அவர்கள் தங்கள் உண்மை நிலையை அறிந்து, உதவியையும் முன்னேற்றத்தையும் நாடுகின்ற போது, உனது பணி தனது விளைவை ஏற்படுத்தி விட்டதையும், அதுசரியானவழியில் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்.

குடியானவர்களும் தொழிலாளிகளும் உயிரற்ற வர்கள்போல் இருக்கிறார்கள். பணம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவி செய்து, சொந்த வலிமையை இவர்கள் திரும்பப் பெறுமாறு மட்டும் செய்துவிட்டு, தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும்படி அவர்களை விட்டுவிட வேண்டும்.

வாழ்வில் எனது முழு ஆசையும் இதுதான்: மிக மேலானகருத்துக்களை ஒவ்வொருவருடைய இருப்பிடத் திற்கும் கொண்டு சேர்ப்பதற்கான ஓர் அமைப்பை இயக்கிவிட வேண்டும்; பின்னர் ஆண்களும் பெண் களும் அவரவர் விதியை அவரவரே நிர்ணயிக்கட்டும். வாழ்வின் மிகமிக முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி நம் முன்னோர்களும், அதைப் போலவே மற்ற நாட்டினரும் என்னென்ன சிந்தித்துள்ளனர் என்பதை அவர்கள் அறியட்டும். முக்கியமாக, இப்போது பிறர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் காணட்டும், பிறகு ஒரு முடிவுக்கு வரட்டும். நாம் செய்ய வேண்டுவதெல்லாம் ரசாயனப் பொருட்களை ஒன்றுசேர்த்து வைப்பதுதான்; இயற்கை, தனது நியதிகளுக்கு ஏற்ப அவற்றைப் படிகமாக்கிவிடும்.

கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக்குக் கொடுக்கின்ற எல்லாமே பிறருக்குக் கொடுப்பதற்காகத்தான். நாம் இதை அடிக்கடி மறக்கிறோம். நமக்குக் கொடுக்கப்படும் பொருட்களின்மீது, ‘எனக்கு மட்டும் சொந்தம்’ என்ற முத்திரையை இடும்போது நம்முடைய அழிவுக்கு விதையை நாமே விதைக்கிறோம்.

காப்பாற்ற வேண்டிய அரசன் மக்களைத் துன் புறுத்துகிறான், அவர்களின் உயிரை உறிஞ்சுகிறான். சமுதாயம் பலவீனமாக இருந்தால் அரசனின் எல்லா கொடுமைகளையும் அது சகித்துக்கொள்கிறது. அதன் காரணமாக அரசனும் மக்களும் படிப்படியாக வலிமை கெட்டு பரிதாபமான நிலையை அடைகிறார்கள்; பிறகு தங்களைவிட வலுவான இன்னொரு நாட்டிற்குப் பலியாகிறார்கள். எங்கு சமுதாயம் வலிமையாக இருக்கிறதோ, அங்கு உடனே எதிர்விளைவு உண்டாகிறது. அதன் விளைவாக வெண்கொற்றக் குடை, செங்கோல், சாமரம் எல்லாம் தூக்கி எறியப் படுகின்றன; அரியாசனமும் மற்ற அரச ஆடம்பரங்களும் கண்காட்சிச் சாலையில் வைக்கப்படும் பொருட்களாகி விடுகின்றன.

பொதுமக்கள் எல்லா சக்திகளின் ஆதாரமாக இருந்தும், தங்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் அவர்களின் உரிமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் இப்படி இருக்கும்வரை இந்த நிலைதான் நீடிக்கும்.

ஒரு பொது ஆபத்தோ, எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒன்றை வெறுப்பதோ, விரும்புவதோதான் மக்களை ஒன்றாகப் பிணைக்கிறது.

சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 4

4. எது முதல் படியாக இருக்க வேண்டும்?

இந்தியாவில் நாம் எப்போதும் அரசர்களாலேயே ஆளப்பட்டு வருகிறோம். அவர்களே நமது சட்டங்கள் அனைத்தையும் இயற்றினார்கள். இப்போது அரசர்கள் இல்லை, அவர்களுக்குப் பின்னர் அதைச் செய்வதற்கு யாரும் இல்லை. அரசாங்கத்திற்கு அந்தத் துணிவு இல்லை. ஏனெனில் பொதுமக்களின் கருத்து வளர்ச்சிக்கு ஏற்பவே அது தன் பாதைகளை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன் பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளத்தக்க ஆரோக்கியமான, ஆற்றல் மிக்கதான பொதுமக்கள் கருத்தை உருவாக்க நீண்ட, மிக நீண்ட காலமாகும். அதுவரையில் நாம் காத்திருக்கத்தான் வேண்டும். எனவே சமூகச் சீர்திருத்தம் என்ற பிரச்சினையை அணுகிப் பார்த்தோமானால் அது, சீர்திருத்தம் தேவைப்படுபவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்வியில் தான் முடியும். அவர்களை முதலில் உருவாக்குங்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? சிறுபான்மையினரின் அடக்குமுறையே உலகம் கண்டவற்றுள் மிகவும் கொடியது. ஏதோ சிலவற்றைத் தீமை என்று நினைக்கின்ற ஒரு சிலரால் நாட்டை முன்னேற்ற முடியாது. அந்த நாடு ஏன் முன்னேறக் கூடாது? முதலில் நாட்டு மக்களுக்குக் கல்வியை அளியுங்கள். பிறகு உங்கள் சட்டசபையை உருவாக்குங்கள். அதன்பிறகே உங்கள் சட்டம் தயாராக வேண்டும். முதலில் அதிகாரத்தை உருவாக்குங்கள். அதிலிருந்து சட்டத்திற்கான ஆதரவு தானாகவே கிடைக்கும். மன்னர்கள் போய்விட்டார்கள். மக்கள் சக்தி என்ற அந்தப் புதிய ஆற்றல் எங்கே? புதிய அதிகாரம் எங்கே? அதைக் கொண்டு வாருங்கள். ஆகையால் சமுதாயச் சீர்திருத்தத்திற்குக்கூட முதலில் செய்ய வேண்டிய கடமை மக்களுக்குக் கல்வி அளிப்பதுதான். அந்தக் காலம் வரும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.

சரியான முறையின்றி தாறுமாறான வழிகளில் மக்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தங்களுக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதைக் குடிமக்கள் இன்றும் உணரவில்லை. அதை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதற்கான முயற்சியும் செய்யவில்லை, அப்படிச் செய்ய வேண்டுமென்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. சிறுசிறு சக்திகளை ஒன்றுசேர்த்து, ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்கும் திறமையும் அவர்களிடம் இல்லை .

சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 3

3. புரட்சியை யார் ஆரம்பித்து வழி நடத்துவது?

மக்கள் மக்களால் உயர்வதுதான் புதிய முறை.

இளைய தலைமுறையினரிடமே, நவீன தலை முறையினரிடமே எனது நம்பிக்கை இருக்கிறது. அதி லிருந்தே எனது தொண்டர்கள் தோன்றுவார்கள். சிங்கக் குட்டிகளைப்போல் அவர்கள் இந்த முழுப்பிரச்சினைக் கும் தீர்வு காண்பார்கள். எனது கருத்தை வகுத்துவிட் டேன், அதற்காக எனது வாழ்வையே அர்ப்பணித்து விட்டேன். இதில் நான் வெற்றி காணாவிட்டால், என்னைவிடத் திறமைசாலி ஒருவர் தோன்றிச் செயல் படுத்துவார். போராடியதே எனக்குப் போதுமானது.

பாமர மக்களுக்கு உரிய உரிமைகளை அளிப்பதே முதல் பிரச்சினை. உலகம் கண்ட மதங்களுள் மிகவும் சிறந்தது உங்கள் மதம். ஆனால் பாமர மக்களுக்கு நீங்கள் அளிப்பதோ சாரமற்ற முட்டாள்தனத்தை.

மற்ற நாடுகளின் பாமர மக்களைப் பார்க்கும் போது நமது மக்கள் தெய்வங்களே. அவர்கள் தன்னம் பிக்கையை இழந்துவிட்டார்கள்; தங்களைப் பிறவியி லேயே அடிமைகள் என்று கருதுகிறார்கள். உரிய உரிமைகளை அவர்களுக்கு அளியுங்கள், அவர்கள் தங்கள் சொந்த உரிமைகளைச் சார்ந்து நிற்கட்டும்.

இளைஞர்களால்தான் இதைச் செய்ய முடியும். இளமைத் துடிப்பு நிறைந்த, ஆற்றல் மிக்க, வலிமை வாய்ந்த, உரமேறிய உடல் கொண்ட, அறிவு நிறைந்த’ – இவர்களுக்கே இந்தப் பணி.

இளைஞர்களே, பணக்காரர்களையும் பெரியவர் களையும் எதிர்பார்த்து நிற்காதீர்கள். உலகில் மாபெரும் காரியங்களை எல்லாம் சாதித்தது ஏழைகள்தாம்.

ஏழைகளே! முன்வாருங்கள். நீங்கள் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் எல்லாவற்றையும் சாதிக்க வேண்டும். நீங்கள் ஏழைகளாக இருக்கலாம், ஆனாலும் உங்களைப் பலர் பின்பற்றுவார்கள். உறுதி யாக இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையுடன் இருங்கள். உங்கள் விதியில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

இந்தியாவின் கதிமோட்சத்திற்காக உழைக்க வேண்டியவர்கள் வங்கத்து இளைஞர்களே. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்றோ நாளையோ இது நிகழ்ந்துவிடும் என்று எண்ணாதீர்கள். எனது சொந்த உடலையும் ஆன்மாவையும் நம்புவதுபோல் இதை நான் நம்புகிறேன். எனவே வங்க இளைஞர்களே! என் இதயம் உங்களிடம் செல்கிறது.

ஏழைகளாகிய உங்களைப் பொறுத்தே அது உள்ளது. உங்களிடம் பணமில்லை , அதனால் நீங்கள் உழைப்பீர்கள். உங்களிடம் ஒன்றுமில்லை, எனவே நீங்கள் நேர்மையுடன் இருப்பீர்கள். நேர்மை இருப்பதால் எல்லாவற்றையும் துறக்கச் சித்தமாயிருப்பீர்கள். அதைத் தான் நான் இப்போது உங்களிடம் சொல்கிறேன். மீண்டும் சொல்கிறேன், இதுவே உங்கள் வாழ்வின் பணி, என் வாழ்வின் பணி.

சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 2

2. புரட்சி யாருக்காக?

நாடு குடிசைகளில் வாழ்கிறது என்பதை நினை வில் வையுங்கள்…. ஒரு நாட்டின் விதியை நிர்ணயிப் பது பாமர மக்களின் நிலை. உங்களால் அவர்களை உயர்த்த முடியுமா? தங்களிடம் இயல்பாக உள்ள ஆன்மீகப் பண்பை இழக்காமல், தாங்கள் இழந்த தனித்துவத்தை அவர்களுக்கு நீங்கள் மீண்டும் பெற்றுத் தர முடியுமா?

யாருடைய உடலுழைப்பின் காரணமாக பிராமண னுக்குச் செல்வாக்கும், க்ஷத்திரியனுக்கு வீரமும், வைசியனுக்குச் செல்வமும் உண்டாயிற்றோ அவர்கள் எங்கே? சமுதாயத்தின் முக்கிய பகுதியாக இருந்தும், எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் ‘ஜகன்ய ப்ரபவோ ஹி ஸ:- அவன் இழிகுலத்தில் பிறந்தவன்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்களே அவர்களின் கதை என்ன? கல்வியும் அறிவும் பெற விரும்பிய ‘மிகப் பெரிய குற்றத்திற்காக’, ‘நாக்கை வெட்டுதல், உடலைக் கூறுபோடுதல்’ போன்ற ‘மிக எளிய’ தண்டனைகள் கொடுக்கப்பட்டதே, அந்த இந்தியாவின் ‘நடைப் பிணங்களும்’ மற்ற நாடுகளின் ‘பாரம் சுமக்கும் மாடுகளு மான சூத்திரர்கள், அவர்களின் நிலை என்ன?

சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி 1

1. எத்தகைய சமுதாய மாற்றம் தேவை?

கடந்த நூற்றாண்டில் ஆர்ப்பரித்த சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் ஆரவாரம் மட்டுமே. இந்த ஒவ்வொரு சீர்திருத்தமும் முதல் இரண்டு ஜாதிகளை மட்டுமே தொடுகிறது, மற்றவைகளைத் தொடுவதில்லை. விதவைத் திருமணப் பிரச்சினை இந்தியப் பெண்களுள் எழுபது சதவீதத்தினரைத் தொடுவதே இல்லை . இத்தகைய பிரச்சினைகள் எல்லாம் பாமர மக்களின் பணத்தால் கல்வியறிவு பெற்ற, உயர்ஜாதிப் பெண் களுக்காகவே பேசப்படுகிறது. இதைக் கவனத்தில் வையுங்கள். ஒவ்வொரு முயற்சியும் அவர்களின் சொந்த நன்மைக்காகவே செய்யப்படுகிறது. இது சீர்திருத்தம் ஆகாது. பிரச்சினையின் அடிமட்டத்திற்கு, அதன் வேருக்கே நீங்கள் செல்ல வேண்டும். இதையே நான் முற்றிலுமான, நுனி வரையிலான சீர்திருத்தம் (Radical reform) என்று சொல்கிறேன்.