நான்கு யோகங்கள்

சுவாமிஜி முதன்முறை அமெரிக்கா சென்றிருந்தபோது, மேலை நாட்டுச் சீடர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாக எழுதியது.

முக்தியே நமது முக்கிய லட்சியம். நம்மை நாம் தனிப் பரம் பொருள் என்று உணரும்வரை நாம் அதனைப் பெற முடியாது. இந்த அனுபூதியை அடையப் பல நெறிகள் உள்ளன. இந்த நெறிகள் பொதுவாக ‘யோகம்’ (யோகம்=சேர்த்தல்: நம்மை நமது உண்மை நிலையில் சேர்த்தல்) என்று அழைக்கப்படுகின் றன. இவை பலவாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக நான்கு நெறிகளாக இவற்றை வகுக்கலாம். இவை ஒவ்வொன்றும் நம்மை அந்தத் தனிப் பரம்பொருளின் அனுபூதி நிலைக்கு மறைமுகமாக அழைத்துச் செல்லும் வழிகள் மட்டுமே, எனவே மனிதர்களின் பல்வேறு இயல்புகளுக்கு ஏற்றவாறு அமைந் துள்ளன.

இங்கு ஒன்றை நினைவில்கொள்வது அவசியம்; சாதாரண மனிதன், தனது முயற்சியால் உண்மை மனிதனாகிய பரம் பொருள் ஆகிறான் என்பதல்ல. ஏனெனில் பரம்பொருளில் ஆகுதல் என்பது இல்லை . அது எப்போதும் சுதந்திரமாக, பரி பூரணமாக உள்ளது. ஆனால் அதன் இயல்பைத் தற்காலிகமாக மறைத்துள்ள அஞ்ஞானம் நீக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு நெறியைக் குறிக்கிறது. யோக நெறிகள் ஒவ்வொன்றின் முழு நோக்கமும் இந்த அஞ் ஞானத்தை நீக்கி, ஆன்மா தனது சொந்த இயல்பை மீண்டும் பெறச் செய்வதே. இதற்குப் பயிற்சியும் வைராக்கியமும் முக்கியத் துணைகள். வைராக்கியம் என்பது வாழ்க்கையில் பற்றற்ற தன்மை. வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பற்றே, இன்ப நுகர்ச்சியில் நாம் கொள்ளும் விருப்பமே பந்தத் தொடரின் காரணம். பயிற்சி என்பது ஏதாவது ஒரு யோகத்தை இடைவிடாமல் பழகுவதே.

கர்மயோகம்: செயலின்மூலம் மனத்தைத் தூய்மை யாக்குதலே கர்ம யோகம். நல்லதானாலும் கெட்டதானாலும் செய்த செயல் அதற்கேற்ப நல்ல அல்லது தீய பயனைத் தந்தே தீரும். செயல் என்ற காரணம் இருக்கும்வரை அதன் விளைவை எந்த ஆற்றலும் தடுக்க முடியாது. எனவே நற் செயல்களால் விளையும் நற்பலனிலும், தீய செயல்களால் விளையும் தீய பலனிலும் கட்டுண்டு, முக்தி பெறுவோம் என்ற நம்பிக்கையே இல்லாமல் – மனிதன் முடிவற்ற பந்தத்தில் உழல்கிறான்.

ஆனால் செயல் என்பது உடலுக்கும் மனத்திற்கும் மட் டுமே; ஒருபோதும் ஆன்மாவிற்கு இல்லை. ஆனால் செயலால், ஆன்மாவை மறைக்கும் ஒரு திரையை உண்டாக்க முடியும். தீய செயலால் வரும் திரையே அஞ்ஞானம். நற்செயல் ஒழுக்கச் சக்திகளை வலிமைப்படுத்தி, பற்றற்ற தன்மையை உண்டாக்கு கிறது; தீய செயல்களை நோக்கிச் செல்லும் தன்மையை அழிக் கிறது; அதன்மூலம் மனத்தைத் தூய்மையாக்குகிறது.

ஒரு செயலை இன்ப நுகர்ச்சிக்காகச் செய்தால் அது அந்த இன்பத்தை மட்டும் தருகிறது; மனத்தை அது தூய்மைப் படுத்துவதில்லை. எனவே செயலின் பயனை அனுபவிக்கும் ஆசையின்றிச் செயல் புரிய வேண்டும். இவ்வுலகிலோ மறு உலகிலோ இன்பம் நுகரும் எல்லா ஆசைகளையும் எல்லா பயங்களையும் கர்மயோகி என்றென்றைக்குமாக விட்டுவிட வேண்டும். பயன் கருதாமல் செய்யப்படும் இந்தச் செயல்கள், எல்லா தளைகளுக்கும் வேரான தன்னலத்தை அழித்துவிடும்.

கர்மயோகியின் அடிப்படைக் கொள்கை ‘நானல்ல, நீ’ என்பதே. அவன் எவ்வளவுதான் தியாகம் செய்தாலும் அது அவனுக்குப் போதாமலே இருக்கிறது. ஆனால் இந்தத் தியாகங் களைச் சொர்க்கத்திற்குச் செல்லும் விருப்பமோ, பெயர்புகழ் நாட்டமோ, இவ்வுலகில் வேறெந்த நன்மையைத் தேடும் எண்ணமோ இல்லாமல் அவன் செய்கிறான்.

இந்தத் தன்னலமற்ற செயலின் விளக்கமும் நியாயமும் ஞானயோகத்தில்தான் கிடைக்கும். என்றாலும் மனிதனின் இயல்பான தெய்வீகத் தன்மை அவனை இந்தத் தியாகங்களைச் செய்ய வைக்கிறது. அவன் எந்தக் கொள்கையையும் கருத்தை யும் உடையவனாக இருந்தாலும் சரி, வேறெந்த நோக்கத்தையும் கொள்ளாமல் பிறரது நன்மைக்காக மட்டுமே தியாகங்களை நேசிக்கச் செய்கிறது.

பலருக்கு, பணத்தால் உண்டாகும் பந்தம் மிகப் பெரிய தாகும்; பொருளாசையை ஒட்டித் தொற்றிக் கொண்டுள்ள அனைத்தையும் உடைத்தெறிவதற்குக் கர்மயோகம் அவர்களுக்கு முற்றிலும் இன்றியமையாது. 

பக்தியோகம்: பக்தி அல்லது வழிபாடு அல்லது ஏதேனும் ஒரு வழியில் அன்பு செய்வது மனிதனுக்கு மிக எளிய, மிக இனிய, மிகவும் இயல்பான நெறியாகும். இந்தப் பிரபஞ்சத் தின் இயல்பான நிலை கவர்ந்திழுத்தல். அதற்குப் பிறகு நிச்சய மாக நிகழ்வது, பிரிதல். மனித இதயத்தில் இயல்பாகவே உள்ள ஒருங்கிணைவதற்கான தூண்டுசக்தியே அன்பு. அது தன்னளவில் துயரத்திற்குக் காரணமான ஒன்றாயினும் தகுந்த விதத்தில் தகுந்த பொருளில் செலுத்தப்பட்டால் முக்தியைத் தர வல்லது.

பக்தியின் நோக்கம் இறைவன். அன்பு செய்பவரும் அன்பை ஏற்பவரும் இன்றி, அன்பு இருக்க முடியாது. நமது அன்பை ஏற்பவர் முதலில் அந்த அன்பிற்குப் பதிலாக நம் மீது அன்பைச் செலுத்துபவராயிருக்க வேண்டும். ஆதலால் அந்த அன்புக் கடவுள் ஒருவகையில் மனிதத் தன்மை உடையவராக இருக்க வேண்டும்; அன்புத் தெய்வமாக இருக்க வேண்டும். அத்தகைய ஒரு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இங்கே கேள்வி இல்லை. நெஞ்சில் அன்பு உடையவர்களுக்குப் பரம்பொருள் அன்புத் தெய்வமாக, உருவக் கடவுளாக வருகிறார் என்பது உண்மை.

இறைவனை நீதிபதியாகவோ, தண்டிப்பவராகவோ, பயத்துடன் பணியப்பட வேண்டிய ஒருவராகவோ வழிபடும் முறைகள் தாழ்ந்தவை. அவை வரவர விரிந்து உயர்ந்த முறை களாகலாம். எனினும் அவை அன்பு என்னும் பெயருக்குத் தகுதி வாய்ந்தவை அல்ல.

இனி நாம் அன்பைப்பற்றிப் பார்ப்போம். அன்பை ஒரு முக்கோணமாக உருவகப்படுத்தலாம். இந்த முக்கோணத்தில் கீழுள்ள முதற்கோணம் பயமின்மை. பயம் இருக்கும்வரை அது அன்பு ஆகாது. அன்பு எல்லா பயங்களையும் ஓட்டிவிடும். குழந்தையைக் காப்பாற்றுவதற்காக ஒரு தாய் புலியையும் எதிர்த்து நிற்பாள். இரண்டாவது கோணம்: அன்பு ஒருபோதும் எதையும் எதிர்பாராதது, கெஞ்சாதது. மூன்றாவதாகிய உச்சிக்கோணம்: அன்பிற்காகவே அன்பு செய்வது. இங்கே அன்பை ஏற்பவரைப் பற்றிய எண்ணம்கூட மறைந்துவிடுகிறது. அன்பிற்காக அன்பு செய்ய அன்பே வழி. இது மிக உயர்ந்த தனித் தத்துவமாகும். பரம்பொருளும் இதுவும் ஒன்றே.

ராஜயோகம்: இந்த யோகம் மற்ற யோகங்கள் ஒவ்வொன்றுடனும் பொருந்துவதாகும். நம்பிக்கையுடனோ அதின்றியோ எவ்வகையிலாவது சாதனை செய்பவர்களுக் கெல்லாம் இது பொருந்தும். ஆன்மீகத் தேடலுக்கு உதவுகின்ற உண்மையான கருவி இதுவே. ஒவ்வொரு விஞ்ஞானத் திற்கென்றும் தனியான ஓர் ஆராய்ச்சி முறை இருப்பதுபோல் மதம் என்னும் விஞ்ஞானத்திற்கான ஆராய்ச்சி முறை இந்த ராஜயோகம். சிறந்த இந்த விஞ்ஞானமும் பயில்பவரின் பல்வேறு இயல்புகளுக்கு ஏற்பப் பற்பல செயல்முறைகளை உடையது. இதன் முக்கியப் பகுதிகள் பிராணாயாமம், மன ஒருமைப்பாடு, தியானம் என்பவை. கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு ‘ஓம்’ அல்லது வேறு மந்திரங்களை குருவிடமிருந்து பெறுவது பெருந்துணையாக இருக்கும். ‘ஓம்’ என்பது அனைத்தினும் உயர்ந்தது; அதன் பொருள் பரம்பொருள் என்பதே. இந்த மந்திரங்களை ஜபிப்பதும் கூடவே அவற்றின் பொருளையும் தியானிப்பதே இங்கு முக்கியப் பயிற்சியாகும். 

ஞானயோகம்: இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதலாவது, உண்மையைப் பற்றிக் கேட்பது (சிரவணம்). ஆன்மா ஒன்றே மெய்ப்பொருள், மற்றவை யாவும் மாயை (வியாவகாரிகம்) என்பதைக் கேட்டறிதல். இரண் டாவது, கேட்ட இந்த உண்மையை எல்லா கோணங்களிலிருந்தும் பகுத்து ஆராய்தல் (மனனம்). மூன்றாவது, ஆராய்ச்சிகளை முற்றிலும் நிறுத்திவிட்டு உண்மையை அனுபூதியில் அறிவது.

இந்த அனுபூதிக்கு நான்கு விஷயங்கள் வேண்டும். 1. இறைவனே உண்மை. மற்றவை யாவும் உண்மையற்றவை என்ற உறுதி. 2. சிற்றின்ப நுகர்ச்சியிலுள்ள ஆசையை முற்றிலும் விடுதல். 3. புலன்களையும் மனத்தையும் அடக்குதல். 4. முக்தி பெறத் தீவிர ஆசை என்பவை.

எப்போதும் இந்த உண்மையைத் தியானிப்பது, ஆன்மா விற்கு அதன் உண்மை இயல்பை நினைவூட்டுவது ஆகிய இரண்டுமே இந்த யோகத்தின் வழிகளாகும். இது அனைத் திலும் உயர்ந்த நெறி; அதேவேளையில் அனைத்தினும் கடின மானதுமாகும். பலருக்கு இது அறிவுக்கு எட்டலாம். ஆனால் அனுபூதியில் உணர்பவர் மிகச் சிலரே