கல்வி

கல்வி

  • கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா? இல்லை. அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா? அதுவும் இல்லை. எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன் தரும் வகையில் அமைகிறதோ, அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.
  • கல்வி என்பது உன்னுடைய மூளைக்குள் பல விஷயங் ளைப் போட்டுத் திணித்து வைப்பதல்ல. அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் ஜீரணமாகாமல் உனக்குத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.
  • எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.
  • அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. வளர்ச்சியடைவதுதான் வாழ்க்கை , அதாவது விரிவடைதல். அதுதான் அன்பாகும். எனவே அன்புதான் வாழ்க்கை ஆகும். அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் ஒரே நியதியாகும். எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான்.
  • குருகுல முறையில் ஆசிரியனோடு நேரடியாகத் தொடர்பு கொண்டு பயிற்சி பெறுவதுதான் சிறந்த கல்விமுறை என்பது எனது கருத்து. ஆசிரியரின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாக அமையாமல் எந்தவிதக் கல்வியையும் பெற முடியாது.

— சுவாமி விவேகானந்தர்

8. அனைவருக்கும் கல்வி

8. அனைவருக்கும் கல்வி

தேசியப் பெரும் பாவம்

நமது நாட்டின் ஏழைகளின் நிலைமையை நினைத்தால் என் மனம் வருத்தமடைகிறது. அவர்கள் ஒவ்வொரு தினமும் கீழ்ச்சென்ற வண்ணமிருக்கின்றார்கள். கொடூரமான ஒரு சமுதாயம் அவர்கள் மீது அடிமேல் அடியைச் சொரிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வடிகளை அவர்கள் உணர்கிறார்கள். ஆனால் அவ்வடிகள் எங்கிருந்து வருபவை என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. தாங்களும் மனிதர்களே என்பதையும் அவர்கள் மறந்து விட்டார்கள். இவற்றை நினைத்தால் என் மனதில் உணர்ச்சி பொங்குகிறது. இவற்றைப் பற்றிப் பேசவும் எனக்கு நா எழவில்லை. கோடிக்கணக்கான மக்கள் இங்ஙனம் வறுமையிலும் அறியாமையிலும் ஆழ்ந்திருக்கும்போது, அவர்கள் உழைப்பால் வாழ்ந்துங்கூட, அவர்களை கவனியாதிருக்கும் ஒவ்வொருவனையும் நான் துரோகியெனக் கூறுவேன். பாமர மக்களை ஒதுக்கி வைத்ததே நமது தேசியப் பெரும்பாவமென்று நான் கருதுகிறேன். நமது வீழ்ச்சிக்கு அது முக்கியமான காரணமாகும். இந்திய மக்கள் அனைவரும் கல்வி பெற்றவர்களாய்ப் பசிப்பிணியற்றவர்களாகும் வரை, அரசியல் துறையில் நாம் எவ்வளவு ஈடுபட்டாலும் அது பயனற்றதாகும்.

வேண்டியது பொதுமக்கள் கல்வியே

ஒரு நாட்டின் முன்னேற்றம், அதன் மக்கள் பெற்றிருக்கும் கல்வி, அறிவு வளச்சியைப் பொறுத்தது. தேசத்திலிருக்கும் கல்வி, அறிவு அனைத்தும் ஒரு சிறுபான்மையோர் வசம் அகப்பட்டதுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம். நாம் மறுபடியும் புத்துயிர் பெற்றெழ வேண்டுமானால், கல்வியை அனைவரிடத்திலும் பரப்புவதன் மூலந்தான் அது சாத்தியமாகும். பொதுமக்கள் அவர்களின் உயர்ந்த தன்மையை இப்பொழுது மறந்துவிட்டனர். அவர்களுக்குக் கல்வி கொடுத்து, அந்த உயர்ந்த தன்மையை உணரச் செய்வதே நாம் இப்பொழுது செய்ய வேண்டிய சேவை. உலகத்தின் பல பாகங்களிலும் நடைபெறும் பேரியக்கங்களைப் பற்றி அவர்கள் அறியச் செய்யவேண்டும். இவ்விதம் அறிவைக் கொடுத்தால், தங்கள் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்ளும் ஆற்றலை அவர்கள் தாங்களாகவே பெறுவார்கள். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தேசமும் அவர்களது வாழ்க்கையின் அமைப்பை அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும். நாம் அவர்களுக்குக் கொடுக்கவேண்டியது உயர்ந்த கருத்துக்கள் மட்டும் தான். அவர்களது தேவையும் அதுவே. அதற்கு மேல் அவர்களது முன்னேற்றம் தானே வரும். இயற்கை ரசாயனப் பொருள்களை ஒன்றுசேர்த்து வைத்தால், இயற்கை விதிப்படி அவை தாமாகவே மாறும். அங்ஙனமே மக்கள் முன்னேற்றத்திற்குரிய சாதனங்கள் அனைத்தையும் ஏற்படுத்தினால், அவர்கள் முன்னேற்றமும் இயற்கை விதிப்படி தானே நிகழும்.

அனைவருக்கும் ஆன்மீக ஞானம்

ஆன்மீக வாழ்க்கைக்கு அவசியமான ஞானத்தைப் புகட்டும் சிந்தனைத்துளிகள் பல நம் சமய நூல்களில் நிறைந்திருக்கின்றன. இப்பொழுது அவை சாதாரண மக்கள் கைகளுக்கு எட்டாத இடங்களில் சிலர் கைகளில் மட்டும் சிக்கி இருக்கின்றன. இத்தெய்வீக சிந்தனைகள் முதலில் எல்லோருக்கும் பயன்படுமாறு செய்யப்பட வேண்டும். சாதாரண மக்களால் அறிய முடியாதவண்ணம் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சமஸ்கிருத மொழியில் இவை புதைந்திருக்கின்றன. இவ்வரிய கருத்துக்கள் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தெரியினும், தெரியாதிருப்பினும், இவை இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு மகன் அல்லது மகளுடைய சொந்த உடைமையாக வேண்டும். இவை சமஸ்கிருத மொழியிலிருப்பதால் இவற்றைப் பரப்புவதில் சிரமங்கள் இருக்கிறது. நான் என் ஆயுள் முழுவதும் இந்த மொழியைப் பயின்று கொண்டிருக்கிறேன். எனினும், எனக்கே ஒவ்வொரு புத்தகமும் புதிதாகத் தோன்றுகிறதென்றால், சாதாரண மக்கள் இதைப் பயிலுவது எவ்வளவு சிரமமாயிருக்கும்! எனவே, வேதங்களும் உபநிடதங்களும் பொது மக்களுடைய சொந்த மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

தாய்மொழியில் புகட்டுக

அவரவர்களுடைய தாய்மொழியில் இவற்றைப் புகட்டுங்கள்! அவர்களுக்கு இவ்வரிய கருத்துக்களைக் கொடுங்கள்! இதன்மூலம் அவர்கள் விஷயங்களையறிந்து கொள்வார்கள். ஆனால் விஷய ஞானம் மாத்திரம் போதாது. அறிவு, அன்பு, பரஸ்பர நம்பிக்கை முதலிய உயர்ந்த குணங்களையும் அவர்களுக்கு அளியுங்கள்! இவ்வருங்குணங்களின்றி மக்களுடைய அறிவும் உயர்வும் உண்மையானவையாக இருக்கமுடியாது.

சமஸ்கிருதப் பயிற்சி

இதனோடு சமஸ்கிருத மொழியையும் அவர்கள் பயில வேண்டும். சமஸ்கிருத ஸ்லோகங்களின் உச்சரிப்பிலேயே ஒரு கண்ணியமும் சக்தியும் இருக்கின்றன. புத்த பகவான்கூட இவ்விஷயத்தில் ஒரு தவறு செய்தார். சாதாரண மக்கள் சமஸ்கிருதம் பயிலும்படி அவர் செய்யவில்லை. அவர், உயர்ந்த கருத்துக்களை அக்காலத்து மொழியாகிய பாலி மொழியில் பரப்பினார். அது மகத்தான காரியம். அதன் மூலம் பெரும் பயன் உண்டாயிற்று. அக்காலத்து மக்களின் சொந்த மொழியில் அவர் உபதேசம் செய்த காரணத்தால் அவர் அருள் மொழிகள் நாடெங்கும் பரவின. ஆனால் அதனோடு மக்கள் சமஸ்கிருதமும் பயின்றிருக்க வேண்டும். சமஸ்கிருதம், அதைப் பயின்றவர்களுக்கு ஒரு தனி மரியாதையை அளிக்கிறது. சமஸ்கிருதத்தை பொதுமக்கள் பயிலாதவரை, ஒரு சிலர் மாத்திரம் அதைப்பயின்று தங்களை உயர்ந்த ஜாதி என்று காட்டிக்கொள்ள இடமிருக்கிறது.

தேசம் குடிசைகளில்

நமது தேசம் குடிசைகளில் வாழ்கிறதென்பதை நீங்கள் நினைவூட்டிக் கொள்வீர்களாக! ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று, மக்கள் முயற்சியின்றி சோம்பி இருப்பது இனிமேல் கொஞ்சமும் தகாது என்று அவர்களுக்கு எடுத்துரைப்பது உங்கள் கடமையாகும். நமது இப்போதைய நிலைமையை அவர்களை உணர வையுங்கள். சகோதரர்களே! இன்னும் எவ்வளவு காலம் உறங்குவது! எழுங்கள்! விழியுங்கள்!’ என்று பரிவுடன் சொல்லி அவர்களைத் தட்டி எழுப்புங்கள்; அவர்கள் நிலையை எங்ஙனம் உயர்த்திக்கொள்ள முடியுமென எடுத்துரையுங்கள்; நம் புனித நூல்களில் இருக்கும் உயர்ந்த உண்மைகளை எளிமையுடன் சொல்லி, அவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்யுங்கள்; பிராமணர்களைப்போல் அவர்களுக்கும் ஆன்மீக வாழ்வு நடத்த உரிமை உண்டு என்பதை அவர்கள் மனதில் ஆழ்ந்து பதிய வையுங்கள்; மிகத் தாழ்ந்தவர்களெனக் கருதப்படுகிறவர்களுக்கும் சர்வ சக்தி வாய்ந்த உயர்ந்த மந்திரங்களை உபதேசம் செய்யுங்கள். அதனோடு வாழ்க்கையின் அவசியங்களைப் பற்றியும், வியாபாரம், விவசாயம் முதலிய தொழில் முறைகளைப் பற்றியும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

தினசரி வாழ்க்கையில் ஆன்மீக உணர்ச்சி

நுற்றுக்கணக்கான வருடங்களாக அரசர்கள், அன்னியர்கள் முதலியவர்களுடைய கொடுமையினாலும், ஜாதிக் கொடுமையினாலும் நம் மக்களின் வலிமை மிகவும் குன்றிவிட்டது. மீண்டும் அவர்கள் புத்துயிரும் சக்தியும் பெறுதற்குரிய உபாயம், உபநிடதங்கள் கூறும் உயர்ந்த உண்மைகளை அறிந்து, ‘தான் என்றும் அழியாத சர்வ வல்லமையுள்ள ஆன்மா’ என்று ஒவ்வொருவரும் நம்புவதேயாகும். ‘கத்தி என்னை வெட்டாது, நெருப்பு எரிக்காது, காற்று உலர்த்தாது; நான் சர்வ வல்லமையுள்ளவன், சர்வக்ஞன்’ என்ற இந்த எண்ணங்களில் அவர்கள் உறுதிகொள்ள வேண்டும். இவ்வுயர்ந்த கருத்துக்கள் இப்பொழுது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குகைகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் வெளிக்கொண்டு வந்து, பொதுமக்கள் மனதில் குடிகொண்டு, தினசரி வாழ்க்கையில் பின்பற்றப் பெறுதல் வேண்டும். இவ்வெண்ணங்கள் நீதிமன்றங்களிலும், கோயில்களிலும், ஏழை மக்கள் வசிக்கும் குடிசைகளிலும், மீன் பிடிக்கும் செம்படவர் இடங்களிலும், பள்ளிக் கூடங்களிலும், எல்லா இல்லங்களிலும் நுழைந்து வேலை செய்ய வேண்டும். இந்தச் சீரிய சிந்தனைகள் ஆண் பெண் குழந்தை முதலிய அனைவரையும் முன்னேறும்படி அறைகூவி அழைக்கின்றன. செம்படவர் முதலியோர் எவ்விதம் இக்கருத்துக்களை மேற்கொண்டொழுக முடியுமென நீங்கள் கேட்கலாம். இதற்கு வழி முன்னமேயே காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு செம்படவன் தான் உடல் அல்ல, ஆன்மாவென்று நினைப்பதன் மூலம் தன் தொழிலில் அவன் இன்னும் அதிகத் திறமையுடையவனாவான். அவ்விதமே, பள்ளிப் பிள்ளைகள் தாங்கள் ஆன்மாவென்று நினைப்பதன் மூலம், இன்னும் அதிக ஆற்றலைப் பெறுவார்கள்.

பள்ளிகள் ஏழைகளிடம் செல்லவேண்டும்

இந்தியாவிலுள்ள எல்லாக் கெடுதல்களுக்கும் அடிப்படையாயிருப்பது நம் மக்களின் வறுமையேயாகும். ஒரு கிராமத்தில் ஓர் இலவசப் பள்ளிக்கூடம் வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது இலவசமாக இருந்தாலும் யாதொரு நன்மையும் செய்யாமல் போகலாம். ஏனெனில், வறுமையின் காரணமாக, படிப்பதைவிடக் கொஞ்சம் உழைத்துத் தாய் தந்தையருக்கு உதவப் பிள்ளைகள் விரும்புவார்கள். ‘மலை முகம்மதுவிடம் செல்லாவிட்டால், முகம்மதுதான் மலையிடம் செல்ல வேண்டும்’ என்ற பழமொழி ஒன்றுண்டு. அதைப் போல அந்த ஏழைப் பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போகாவிட்டால், பள்ளிகள்தான் அவர்களிடம் செல்ல வேண்டும். சேவையை இலட்சியமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான சாதுக்கள் நம் நாட்டில் கிராமம் கிராமமாய்ச் சென்று சமய போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். உலக விஷயங்களைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க அவர்கள் ஏற்பாடு செய்ய முடியுமானால், அவர்கள் கிராமந்தோறும் வீடு வீடாகச் சென்று சமய போதனையுடன் உலகீயக் கல்வியும் கொடுத்துக் கொண்டு செல்வார்கள். இப்படி ஒரு புகைப்படக்கருவி, ஓர் உலகப்படம் முதலியவற்றுடன் மாலை நேரங்களில் கிராமங்களுக்குச் செல்வார்களானால், வான நூல், பூகோளம் முதலியவற்றைக் கிராம மக்களுக்கு எளிதாகச் சொல்லித் தரமுடியும். பல தேசங்களைப் பற்றிக் கதைகள் சொல்லலாம். அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் படிக்கக் கூடிய விஷயங்களைக் காட்டிலும் அதிகமாகக் கேள்வி மூலம் அவர்கள் மனதிலே கல்வியில் ஆர்வத்தை ஊட்டுங்கள். வரலாறு, புவியியல், அறிவியல், இலக்கியம் ஆகியவற்றில் கல்வியளியுங்கள். இவற்றுடன் சேர்ந்து சமய நீதிகளையும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வயிற்றுப்பாட்டிற்காக பொருள் தேடும் முயற்சியிலேயே நம் ஏழை மக்களின் காலம் முழுதும் கழிந்து விட்டது. கல்வியறிவில் மனதைச் செலுத்த அவர்களுக்கு இதுவரை அவகாசம் கிடைக்கவில்லை. அவர்கள் அறிவற்ற இயந்திரங்கள் போல வேலை செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இப்பொழுது காலம் மாறிவிட்டது. மேல் வகுப்பினர் பாமர மக்களை இனிமேல் அடக்கி ஆளமுடியாது. தங்கள் நலத்தில் அக்கறை உள்ளவர்களாய் இருந்தால், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குரிய உரிமைகளை உயர்ந்த ஜாதியினர் உடனே அளிக்க வேண்டும். ஆதலால் மேல் வகுப்பினராகிய உங்களுக்குச் சொல்லுகிறேன்: பாமர மக்களிடம் கல்வி பரப்பும் சேவையை நீங்கள் மேற்கொள்ளுங்கள்! நீங்கள் எங்கள் சகோதரர்கள், எங்கள் உடம்பில் ஒரு பகுதியாயிருப்பவர்கள்’ என்று சொல்லி அவ்வொற்றுமையுணர்ச்சியை அவர்கள் மனதில் பதியும்படி செய்யுங்கள். இவ்விதம் அவர்களை அன்புடன் நடத்தினால், அவர்கள் இதன் மூலம் பேரூக்கம் எய்திப் பன்மடங்கு சக்தியுடன் முன்னேற்றமடைவார்கள்.

செயற்கரிய செய்ய வேண்டுவன: வளர்ச்சி

எதேனும்பெரிய காரியமொன்றை நிறைவேற்ற வேண்டுமானால் அதற்கு மூன்று விஷயங்கள் மிகவும் அவசியமானவை. முதன் முதல், இதயபூர்வமான உணர்ச்சி வேண்டும். பலத்தினாலும், புத்திசாலித்தனத்தினாலும் ஆவதென்ன? அவை சிறிது தூரம் சென்று, அங்கே நின்று விடுகின்றன. அருள் சுரப்பது, ஆர்வமுண்டாவது இதயத்தின் மூலந்தான்; முடித்தற்கரிய காரியங்களை முடிக்கவல்லது அன்புதான். பிரபஞ்சத்திலுள்ள இரகசியங்களையெல்லாம் அறிவதற்கு வாயிலாயிருப்பதும் இவ்வன்புதான். தேசப் பற்றுடையர்வகளாக இருக்க விரும்பும் நண்பர்களே! இத்தகைய உணர்ச்சியை நீங்கள் முதலில் பெறுங்கள். உங்களிடம் உண்மையில் இவ்வுணர்ச்சியிருக்கின்றதா? தேவர்கள் ரிஷிகளுடைய சந்ததியரான கோடானுகோடி மக்கள் இன்று மிருகங்களுக்குச் சமமாக, அவற்றின் சகோதரர் போன்ற நிலைக்கு வந்துவிட்டனரே என்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்கின்றதா? இலட்சக் கணக்கான மக்கள் இன்றைய தினம் உணவின்றிப் பட்டினியாகக் கிடக்கின்றார்களே! இலட்சக் கணக்காக ஜனங்கள் பல நூற்றாண்டுகளாய் இப்பட்டினியில் மடிந்து வருகின்றார்களே என்ற உணர்ச்சி உங்களுக்கு இருக்கிறதா? அஞ்ஞானமானது இருண்ட மேகம் போலச் சூழ்ந்து நாட்டைக் கவிழ்ந்துகொண்டுவிட்டதே என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்களை அமைதியற்றவர்களாக்கி விட்டதா? உங்களை நித்திரையற்றவர்களாகச் செய்கின்றதா? அது உங்கள் இரத்தத்துக்குள் பிரவேசித்து இரத்தக் குழாய்களின் வழியே சுற்றி, உங்கள் இதயத்துடன் சேர்ந்து ஓயாமல் துடித்துக் கொண்டிருக்கிறதா? அது உங்களை அநேகமாய்ப் பித்தர்களாக்கிவிட்டதா? நாட்டின் துக்கம், சீர்கேடு என்ற ஒரே கவலை உங்களைப் பிடித்துக் கொண்டுவிட்டதா? அதனால் உங்கள் பெயர், புகழ், பெண்டு, பிள்ளைகள், சொத்து, சுகங்கள் எல்லாவற்றையும் மறந்தீர்களா? உங்கள் தேசத்தையும்கூட மறந்துவிட்டீர்களா? இந்த நிலைக்கு வந்துவிட்டீர்களானால் அதுவே நாட்டுப் பற்றுடையவர் ஆவதற்கு முதற்படியாகும்.

வழி காணல்

இவ்வுணர்ச்சி உங்களிடம் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும், வெறும் வசை மொழிகளிலும், உபயோகமற்ற பேச்சுக்களிலுமே உங்கள் சக்தியையெல்லாம் செலவிடாமல், ஏதாவது காரியம் ஆற்றுவதற்குக் கொண்டுவரும் வழியொன்றைக் கண்டுபிடித்தீர்களா? வீணான பேச்சுக்களை விட்டுவிட்டு, மக்கள் படுந்துன்பங்களைச் சிறிதேனும் குறைக்க உபயோகமான வேலை ஏதேனும் செய்யவும், நடைப்பிணங்களாகிக் கிடக்கும் அவர்களை அக்கேவலமான நிலையிலிருந்து விடுவிக்கவும் ஏதாவதொரு வழியைக்கண்டு பிடித்தீர்களா?

திட சங்கற்பம்

இவற்றைச் செய்தால் மட்டும் போதாது. உங்கள் காரியத்தில் இடையூறுகள் மலைபோலத் திரண்டுவரினும் அவற்றைத் தயங்காது எதிர்த்து நின்று போக்கும் மனோதிடம் உங்களிடம் இருக்கிறதா? முழு உலகமும் சேர்ந்து கையிற்கத்தி கொண்டு எதிர்த்து நின்றாலும், நீங்கள் சரியென்று நினைக்கும் காரியத்தைச் சற்றும் பின்வாங்காது செய்யவல்ல தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் பெண்டு பிள்ளைகளே உங்களுக்கு விரோதமாக நிற்பினும், உங்கள் பணமெல்லாம் இழக்க நேரிடினும், அதனால் உங்கள் பெயரே கெட்டுப்போனாலும், மற்றெல்லாச் செல்வங்களும் போய்விடுவதாக இருந்தாலும் கூட, அப்பொழுதும் எடுத்த காரியத்தை விடாமல் உறுதியாகச் செய்வீர்களா? சகலமும் துறக்க நேரிடினும் அக்காலத்திலும், நீங்கள் கருதிய உங்கள் இலட்சியம் கைகூடும்வரை, இடைவிடாமல் உறுதியாக மேல்நோக்கிச் செல்வீர்களா? பர்த்ருஹரியார் சொல்வதுபோல் ஞானிகளானோர் நிந்திப்பதானாலும் நிந்திக்கட்டும் அல்லது புகழ்வதானாலும் புகழட்டும்; சகலபாக்கியங்களையும் கொடுக்கும் இலட்சுமி வந்தாலும் வரட்டும்; அல்லது துரதிருஷ்டமான இடத்துக்குப் போனாலும் போகட்டும்; மரணமானது இன்றே வந்தாலும் சரி; அல்லது நூறு வருடங்கள் கழித்து வந்தாலும் சரி; எவனொருவன் உண்மையினின்று நூலிழையேனும் பிறழாதிருப்பானோ அவனே உறுதியுடையோனாவான்’- இவ்வுறுதி உங்களிடம் இருக்கின்றதா? இந்த மூன்று விஷயங்களும் – உண்மையுணர்ச்சி, தக்க வழியொன்று காணல், கண்ட அவ்வழியில் உறுதியுடன் உழைத்தல் – உங்களிடம் இருக்குமானால், நீங்கள் ஒவ்வொருவரும் அற்புதங்களைச் செய்வீர்கள்.

தெய்வ வழிபாடு தொண்டே

கருணைப் பரஞ்சுடர் நமக்கு வழி காட்டட்டும் என்று நாம் பிரார்த்திப்போமாக! அப்போது, நம்மைச் சுற்றியிருக்கும் அந்தகாரத்தினூடே ஓர் அருள் ஒளி தென்படும். நமக்கு வழிகாட்ட ஒரு திருக்கரம் வெளித்தோன்றும். வறுமையினாலும், வைதீகத்தின் கொடுமையினாலும், கொடுங்கோன்மையாலும் நசுக்கப்பட்ட நம் நாட்டிலிருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்காக நாம் ஒவ்வொருவரும், இரவும் பகலும் பிரார்த்தனை செய்வோமாக! செல்வந்தர்களை விட நான் இவர்களுக்கே சமய உபதேசம் செய்ய விரும்புகிறேன். நான் தத்துவ ஆசிரியர் அல்லேன். ஞானியுமல்லன்; ஆனால், நான் ஓர் ஏழை; ஏழை மக்களை நேசிக்கிறேன். தரித்திரத்திலும் அறியாமையிலும் ஆழ்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக யார் இரங்குகிறார்கள்? யாரொருவர் ஏழை மக்களின் பொருட்டு நெஞ்சு புண்ணாக வருந்துகிறாரோ அவரை ஒரு மகாத்மாவென மதிப்பேன்! ஆனால் அவர்களுக்காக யார்தான் வருந்துகிறார்கள்! அவர்கள் ஞானத்தையோ கல்வியையோ பெற முடியாது. அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருவார் யார்? வீடுவிடாகச் சென்று அவர்களுக்குக் கல்வி புகட்ட முற்படுவோர் யார்? இவ்வேழை மக்களையே உங்கள் தெய்வமாகக் கொள்ளுங்கள்; அவர்களைப் பற்றியே சிந்தனை செய்யுங்கள்; அவர்களுக்காகவே உழையுங்கள்; அவர்களுக்காகவே எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள்! இறைவன் உங்களுக்கு வழி காட்டுவானாக!

7. பெண்கல்வி

7. பெண்கல்வி

முற்கால இந்தியாவில்

ஆண், பெண் அனைவரிடத்திலும் ஒரே ஆன்மா நின்றியக்குகிறது என்று நம் சமய நூல்கள் போதிக்கின்றன. அப்படியிருந்தும் ஆண் பெண்களை நடத்துவதில் நமது நாட்டில் ஏன் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறதென்பது புலப்படவில்லை. பலவிதமான கொடிய விதிகளைச் செய்தும், கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியும் பெண்களை வெறும் பிள்ளைபெறும் இயந்திரங்களாகச் செய்துவிட்டனர். பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் வேதங்களைப் பயிலக்கூடாதென்று சட்டம் செய்த காலத்தில், பெண்களுடைய உரிமைகளும் பறிக்கப்பட்டன. வேதங்கள் எழுதப்பட்ட காலத்திலும், உபநிடதங்கள் உண்டாக்கப்பட்ட காலத்திலும், மைத்ரேயி, கார்க்கி முதலிய பெண்மணிகள் கற்றுணர்ந்த ஞானிகளாகவும், முனிவர்களாகவும் விளங்கியிருப்பதைக் காண்பீர்கள். சமய நூல்களைக் கற்றுணர்ந்த ஆயிரம் பேர்கள் இருந்த சபையில், கார்க்கி அஞ்சா நெஞ்சுடன் யாக்ஞவல்க்யரை பிரம்மனைப் பற்றி விவாதம் செய்யும்படி அழைக்கவில்லையா?

உண்மையான தேவி வழிபாடு

மாதர்க்குரிய மதிப்பை அளிப்பதன் மூலமே எல்லா தேசத்தாரும் சிறப்பெய்தியிருக்கிறார்கள். எந்த நாடு பெண்களைச் சரியாக மதிக்கவில்லையோ, அந்த நாடு எப்பொழுதும் சிறப்பெய்துவதில்லை; இனிமேலும் சிறப்படையாது. உண்மையான சக்தி உபாசகன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? பெண்களைப் பராசக்தியின் திருவடிவங்களெனக் கொண்டு அவர்களை வழிபடுகிறவனே உண்மையான சக்தி உபாசகனாவான், அமெரிக்க நாட்டு மக்கள் தங்கள் பெண்களை இவ்விதம் நினைத்துப் போற்றுகிறார்கள். எனவே, அவர்கள் செல்வத்திலும் கல்வியிலும் சிறந்து, சக்தியுடனும் சுதந்திரத்துடனும் வாழ்கிறார்கள். அன்னையின் திருவடிவங்களான பெண்களை நாம் சரியாக நடத்தாததே நாம் முன்னேறாமல் போனதற்கு முக்கியமான காரணமாகும். பெண்கள் கண்ணியத்துடன் எங்கு நடத்தப் படுகிறார்களோ, அங்கே தேவர்கள் திருப்தியடைகிறார்கள். எங்கு அவர்கள் அவ்விதம் நடத்தப்படுவதில்லையோ, அங்கு எம்முயற்சியும் பலிக்காது’ என்று மனுதர்ம சாஸ்திரம் கூறுகின்றது. பெண்களைத் துயரத்தில் வைத்திருக்கும் குடும்பமோ தேசமோ என்றும் மேன்மை அடையாது.

கல்வியே அருமருந்து

பெண்கள் தொடர்புடைய பல முக்கியமான பிரச்சினைகளிருக்கின்றன. ஆனால், கல்வி யென்னும் அருமருந்தால் ஆற்ற முடியாதது அவற்றில் எதுவும் இல்லை. மனு என்ன சொல்லியிருக்கிறார்? ஆண்களுக்கு எவ்வளவு சிரத்தையுடன் கல்வி புகட்டப் படுகிறதோ அவ்வளவு சிரத்தையுடன் பெண்களுக்கும் கல்வி புகட்டப்பட வேண்டும். பிள்ளைகள் முப்பதாண்டு பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தியபிறகே, அவர்களுக்குப் பெற்றோர் மணம் முடிக்கவேண்டும். அவ்விதமே பெண்களுக்கும் செய்ய வேண்டும். அதுவரை அவர்களுக்குக் கல்வியளிக்கப்படவேண்டும்’. ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? கொஞ்சமும் தன்னம்பிக்கையில்லாமல், பிறரை நம்பியே வாழ்க்கையை நடத்தும் முறையில் அவர்களை நாம் பழக்கியிருக்கிறோம். இது காரணமாக, ஒரு சிறு ஆபத்து நேர்ந்த போதிலும், அழுவதைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவர்களாக அவர்கள் இருக்கின்றனர். பெண்கள், தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும்படியான நிலைமைக்கு நாம் அவர்களைக் கொண்டுவர வேண்டும். நம் இந்தியச் சகோதரிகள் மற்றெந்த நாட்டுப் பெண்களைக் காட்டிலும், ஆற்றல் குறைந்தவர்கள் அல்லர்.

பெண்களுக்குரிய கல்வி, சமய உணர்ச்சியைப் பிரதானமாகக் கொண்டு பரப்பப்பட வேண்டும். மற்ற பயிற்சிகள். அனைத்தும் சமயப் பயிற்சிக்கு அடங்கியவையாக இருக்கவேண்டும். ஆன்மீக உணர்ச்சி, ஒழுக்கம், பிரம்மச்சரியம் என்ற இவற்றைக் கவனிக்க வேண்டும். கற்பென்பது இந்து மாதரின் பரம்பரைச் செல்வமாகும். ஆதலால் அவர்கள் அதை நன்றாக அறிவார்கள். முதலில் இந்த இலட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்துங்கள்! இதன் மூலம் அவர்கள் சிறந்த மன வலிமையைப்பெறுவார்கள். அவர்கள் இல்லறம் புகினும், பிரம்மச்சாரிணியாக வாழ விரும்பினும்எந்நிலையிலிருப்பினும் தங்கள் ஒழுக்கத்தை விட்டு தவறுவதைவிட உயிரை விடத்தக்க அஞ்சாத் தன்மையையும் திடசித்தத்தையும் அவர்களுக்கு இந்த இலட்சியம் அளிக்கும்.

சீதையே இலட்சியம்

இந்தியப் பெண்கள் சீதையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வளர வேண்டும். சீதை ஒப்பற்றவள். அவளே இந்தியப் பெண்களின் இலட்சியமாவாள். இந்தியாவில் தோன்றி இருக்கும் உயர்ந்த பெண்மணிகள் அனைவரும் அவள் அடிச்சுவடுகளைப் பின்பற்றியவர்களே. அவள் தோன்றி இப்பொழுது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேலாகி விட்டது. எனினும் அவளை வழிபடாத இந்திய மகனோ மகளோ கிடையாது. இந்த சீதாப்பிராட்டி, கற்பின் அவதாரமாகிய அவள், பொறுமைக் கடலாயிருந்து சகல துக்கங்களையும் பொறுத்த அவள், எக்காலத்தும் நமக்கு உதாரணமாயிருப்பாள். அவச்சொல்லொன்றும் இன்றி அளவற்ற துன்பத்தை பொறுத்த அவள் – அந்தக் கற்புக்கரசி எப்பொழுதும் நம் தேசிய இலட்சியமாக இருப்பாள். அவளுடைய உணர்ச்சியும் இலட்சியமும் நம் இரத்தத்துடன் இரத்தமாய் கலந்து இருக்கின்றன. தற்காலத்தில் நம் பெண்கள் சீதை காட்டிய வழியினின்றும் பிறழ முயன்றால், அம்முயற்சி வீணாவது நிச்சயம்.

சிலர் துறவிகளாதல் அவசியம்

நமது நாட்டின் தற்காலத் தேவைகளை அனுசரித்துப் பெண் மக்களில் சிலரும் துறவு இலட்சியங்களை மேற்கொள்ளல் அவசியமெனத் தோன்றுகிறது. அனாதி காலமாகத் தங்கள் இரத்தத்தில் தோன்றியிருக்கும் பதி விரதா தருமத்தின் பலத்தினால், அவர்கள் வலிமை பெற்றுத் தங்கள் வாழ்நாள் முழுவதும் கன்னிகைகளாகவே இருந்து தொண்டாற்ற அவர்களில் சிலராவது விரதங்கொள்ள வேண்டும். தன் புத்திரிகள் சிலராவது இத்தகைய பரிசுத்தமான துறவு மார்க்கத்தை மேற்கொள்ள வேண்டுமெனப் பாரதத்தாய் விரும்புகிறாள். இவர்களில் ஒருவர் ஞானசித்தி பெற்றாலும், அவ்வொருவர் மூலம் ஆயிரக்கணக்கான பெண்கள் மனதில் ஞானச்சுடர் விளக்கு ஏற்றப்பட்டு, அதனால் தேசத்திற்குப் பெரும் பயன் உண்டாகும்.

ஒழுக்கமும், கல்வியும் வாய்ந்த கன்னிகைகள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும். கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் பெண்களைப் பயிற்றுவிப்பதற்கெனப் பாடசாலைகள் ஏற்படுத்தவேண்டும். இத்தகைய பக்தியும் கல்வியும் வாய்ந்த சிலரால்தான் பெண்கல்வியைப் பரப்புவது சாத்தியமாகும். நாட்டின் சரித்திரம், புராண இதிகாசங்கள், குடும்ப நிர்வாக முறைகள், பலவிதமான கலைகள், குடும்பத்தின்பால் நமக்குள்ள கடமைகள் ஒழுக்கத்துக்கேற்ற கொள்கைகள் – இவை அவர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். தெய்வ ஆராதனை, ஜபம், தியானம் முதலியன அவர்கள் கல்விமுறையில் முக்கியமான அம்சங்களாக இருக்க வேண்டும். இவற்றுடன், வீர உணர்ச்சியையும் அவர்களிடம் வளர்ப்பது அவசியம். பிறர்வந்து துன்புறுத்தினால் அவர்களை எதிர்த்துப் போராடத்தக்க திண்மையை அவர்கள் பெறவேண்டும்.

தற்காத்தல்

ஜான்சிராணி தன் சேனைக்குத் தலைமை தாங்கி வீரத்துடன் போர்புரியவில்லையா? சங்கமித்ரா, லீலா, அகல்யா பாய், மீராபாய் போன்ற வீரத்தாய்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றித் தற்காலத்திலும் வீரமும் சக்தியும் வாய்ந்த பெண்மணிகள் இந்நாட்டில் தோன்ற வேண்டும். அவர்கள் வீரத்திற்கு அடிப்படையாகத் தூய்மையும் தெய்வ பக்தியும் அவர்கள் பால் திகழ வேண்டும். குழந்தைகளை நன்றாகப் பேணக்கூடிய சக்தியும் அவர்களுக்கு இன்றியமையாதது. இத்தகைய தாய்மார்கள் வயிற்றில் பிறக்கும் மக்கள் எதற்கும் அஞ்சாத வீரர்களாகவும், மற்ற விதங்களில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள் எனச் சொல்லவும் வேண்டுமா?

பெண்கள் உயர்வு பெறவேண்டும். அவர்கள் மூலம் தான் நம் வருங்கால மக்கள் உயர்ந்த கருத்துக்களைப் பெற்று நற்காரியங்களைச் செய்ய முடியும். நமது நாடு சிறப்பெய்துவதற்கான வழி இதுவே. இவர்கள் மூலமாகவே நம் நாட்டில் கல்வி, ஞானம், பக்தி, நாகரிகம் போன்றவை சிறப்புற்று வளர்கிறது.

6. மதக்கல்வி

6. மதக்கல்வி

எல்லாக் கல்வி முறைகளிலும் மதக் கல்வி மிக முக்கியமான அம்சமாய் இருக்கவேண்டும். மதக் கல்வி என்பதில் என்னுடைய மதத்தைப் பற்றிய கல்வியையோ அல்லது எந்தத் தனிப்பட்ட ஒருவருடைய மதத்தைப் பற்றிய கல்வியையோ அல்லது ஒரு கூட்டத்தினருடைய மதத்தைப் பற்றிய கல்வியையோ நான் குறிப்பிடவில்லை. மனித வாழ்க்கைக்கு என்றும் அடிப்படையாக இருந்து வரும் நிலையான ஆன்ம இயற்கை நியதிகளை மக்கள் அறியுமாறு எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதே என் கருத்து. முதலில் ஆன்ம நெறியில் சிறந்து விளங்கியிருக்கும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய மகா புருஷர்களின் வாழ்க்கைகள் மிக பக்தியுடன் கொண்டாடப்படும்படி செய்ய வேண்டும். என்றும் அழியாத நிலையான ஆன்ம உண்மைகளைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்த அவதார புருஷர்களான இராமர், கிருஷ்ணர், மகாவீரர் (அனுமார்), ராமகிருஷ்ணபரமஹம்சர் முதலியோர் மக்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றும் லட்சியங்களாக விளங்கும்படி செய்ய வேண்டும்.

ஆண்மையூட்டும் வழிபாடு

பிருந்தாவனக் கிருஷ்ணனை தற்சமயம் கொஞ்சம் தள்ளிவைப்போம். ஒரு மகா யுத்தத்தின் மத்தியில் அஞ்சாது நின்று சிங்கம் போல் முழங்கி கீதையை உபதேசித்து, அர்ஜுனனுடைய சோர்வை நீக்கி, ஆண்மையூட்டிய அந்தக் கிருஷ்ணனுடைய வழிபாட்டையே நாம் இப்போது பரப்ப வேண்டும். அதனோடு சக்தி உபாசனையும் நாள்தோறும் செய்தல் வேண்டும். வீரத்தையும் ஆண்மையையும் உண்டாக்கக்கூடிய லட்சியங்களே நமக்கு இப்பொழுது வேண்டுவன. ஒப்பற்ற ஆண்மையுடனும், அளவற்ற வேகத்துடனும் தியாகத்தைக் கவசமாக ஏற்று, ஞானத்தைக் கத்தியாகக் கொண்டு, உண்மைக்காக உழைத்து, அவசியமானால், அம்முயற்சியில் தங்கள் உயிரையும் தியாகம் செய்யக்கூடிய வீரம் செறிந்த ஆண்மக்களே நமக்கு இப்பொழுது தேவை; போர் முனையில் எதற்கும் அஞ்சாது போர் புரியத்தக்க உணர்ச்சிதான் நமக்கு இப்பொழுது அவசியம்.

சேவையே லட்சியம்

அந்த ராம பக்தரான மகா வீரரையே (அனுமார்) உங்கள் இலட்சியமாக்கிக் கொள்ளுங்கள். ராமர் ஆணையால் அவர் கடலையும் கடந்தார். அவர் உடலை உகுக்கவும் சாவை ஏற்றுக்கொள்ளவும்கூட ஒரு சிறிதும் அஞ்சவில்லை. அவர் சிறந்த அறிவாளி. புலன்களனைத்தும் அவர் வயப்பட்டிருந்தன. அவர் வாழ்க்கை முழுதும் ராம சேவைக்காக கழிக்கப்பட்டது. சேவைக்கு இலட்சியமாக உள்ள இவரை முன் உதாரணமாக வைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள். சேவை என்ற இலட்சியத்தை மேற்கொண்டால் மற்ற அருங்குணங்களனைத்தும் தாமே நம் வாழ்க்கையில் பொருந்தும். குருவின் உபதேசங்களை முற்றிலும் ஏற்று அவற்றின்படி ஒழுகுதலும் பிரம்மச்சரியத்தை வழுவாது கடைப்பிடித்தலுமே எவ்விஷயத்திலும் வெற்றி பெறுவதற்கான இரகசியமாகும். அனுமார், சேவைக்கு இலட்சியமாக இருப்பதுபோல், ஆண்மைக்கும் வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். உலகம் அவர் வீரத்தைக் கண்டு பிரமிக்கிறது. ராம சேவையில் தம்மை முற்றிலும் தியாகம் செய்வதில் அவருக்குச் சிறிதுகூட தயக்கம் இல்லை. வேறு எவ்விஷயத்திலும் அவருக்கு அக்கரையில்லை. இராமனுடைய உத்தரவைச் சிரமேற்கொண்டு அதன்படி நடப்பதே அவர் வாழ்க்கையில் கொண்டிருந்த ஒரே விரதம். அத்தகைய பூரண பக்தியே இப்பொழுது நமக்குத் தேவை.

வீரமுரசு கொட்டுங்கள்

கிருஷ்ணன் கோபிகளுடன் விளையாடிய தெய்வீக லிலையை ஆராதிப்பது தற்காலத்தில் நமக்கு நல்லதன்று. வெறும் புல்லங்குழலை வாசித்து நாட்டை விழிப்படையச் செய்ய முடியாது. மிருதங்கத்தையும் ஜால்ராவையும் அடித்துக்கொண்டு பாடுவதும் ஆடுவதும் நம்மைத் தாழ்த்திவிட்டன. பரமனை நினைத்துப் பாடுவதும் ஆடுவதும் மிக உயர்ந்த சாதனைகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவற்றுக்கு இன்றியமையாத பரிசுத்தமின்றி நாம் இச்சாதனைகளிலீடுபட்டது நம்மைத்தாழ்த்தித் தமோகுணத்தில் தள்ளியிருக்கிறது. நம் நாட்டில் பேரிகைகள் செய்வதில்லையா? யுத்த பேரிகைகள் இந்தியாவில் கிடைப்பதில்லையா? இவற்றின் ஆழ்ந்த முழக்கங்களை நம் இளைஞர்கள் கேட்கும்படி செய்யுங்கள். மிருதுவான சப்தங்களையும் சங்கீதங்களையும் இளமையிலிருந்து கேட்டு நம் மக்கள் ஆண்மையை இழந்துவிட்டனர். மறுபடியும் வெற்றி முரசைக் கொட்டுங்கள்! பேரிகைகளை அடியுங்கள்! அவை உண்டாக்கும் ஆழ்ந்த முழக்கங்களுடன் மகாவீர், மகாவீர்’ என்ற சப்தம் முழங்க, உலகம் முழுதும் `ஹரஹர மஹாதேவ்’ என்ற நாதம் கேட்கட்டும். பெண்மையை உண்டாக்கக்கூடிய மிருதுவான ஸ்வரங்களைக் கொஞ்சக் காலத்துக்கு நிறுத்தி வைப்போமாக. வீரத்தை உண்டாக்கக்கூடிய பேரிகை முழக்கத்தையே நாம் இப்பொழுது கேட்டுப் பழகவேண்டும். இடி முழக்கம் போன்ற வேதத் தொனிகளை மறுபடியும் கிளப்புவோம். அவற்றின் மூலம் நாட்டில் புத்துயிர் ஊட்ட வேண்டும். எல்லா விஷயங்களிலும் எளிமையும் வீரமும் செறிந்த தன்மையை மறுபடியும் பிறப்பிக்க வேண்டும் இத்தகைய தன்மையை ஒருவன் பெற்றால் ஆயிரக்கணக்கான பேர் அவனைப் பின்பற்றுவார்கள். நம் இலட்சியத்திலிருந்து ஓர் அங்குலமும் பின்வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் தைரியத்தைக் கைவிடாதீர்கள்! உண்ணும்போதும், உறங்கும்போதும், உடுத்தும்போதும் அல்லது பாடும்போதும், விளையாடும்போதும் அல்லது இன்பத்திலும், துன்பத்திலும் – எப்பொழுதும் உயர்ந்த ஆண்மையைக் கடைபிடியுங்கள்! எச்சமயத்தும் எந்த விதமான பலவீனமும் உங்கள் மனதில் புக விடாதீர்கள்! அனுமானை நினைத்துக் கொள்ளுங்கள்; பராசக்தியை மனதில் வையுங்கள்; உங்களுடைய பலவீனங்கள், கோழைத்தன்மை யாவும் மறையக் காண்பீர்கள்!

புதுமதம் தன்னம்பிக்கை

கடவுளிடம் நம்பிக்கையில்லாதவனை நாத்திகன் என்று பழைய மதங்கள் கூறின. ஆனால் தன்னிடத்தில் நம்பிக்கையில்லாதவனையே நாத்திகனென்று புது மதம் கூறுகின்றது. இந்தத் தன்னம்பிக்கை சுயநலத்தைக்கோரும் தனது’ என்ற எண்ணம் அன்று. இந்நம்பிக்கை எல்லோரிடமும் வைக்க வேண்டிய விசுவாசத்தைக் குறிக்கும். ஏனெனில் நாமே அனைத்து மாயிருக்கிறோம். எனவே, சுய அன்பு என்பது, மனிதர் மிருகங்கள் முதலிய அனைவர் பேரிலும் அன்பு கொள்வதாகப் பொருள்படும். நாமே அனைத்துமாயிருக்கிறோம் என்ற இத்தகைய நம்பிக்கையே நமக்கு என்றும் எக்காலத்தும் பேருதவியாக இருக்கத்தக்கது. மக்களில் பெரும்பாலோர் தன்னம்பிக்கை உடையவர்களாயிருந்தால், உலகில் இப்பொழுது காணப்படும் துன்பங்களில் பெரும்பகுதி மறைந்திருக்கும். உலகிற் சிறந்த மக்களின் சரித்திரங்களை ஆராய்ந்து பார்த்தால், அவர்களிடம் இருந்த தன்னம்பிக்கையே அவர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களைச் சிறப்பெய்தச் செய்திருக்கிறதென்பது புலப்படும். தாங்கள் சிறந்த காரியங்களைச் செய்யத் தோன்றியவர்கள் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்து அவர்கள் உண்மையிலேயே சிறந்த காரியங்களைச் சாதித்திருக்கின்றனர்.

அளவற்ற பலம்

அளவற்ற பலமே சமயமெனப்படும். பலத்துடன் வாழ்வதே நற்செயல். பலவீனமே பாவம். எல்லாப் பாவங்களையும், எல்லாக் கெட்ட செய்கைகளையும் ‘பலவீனம்’ என்ற ஒரே வார்த்தையில் குறிப்பிட்டு விடலாம். பலவீனமே எல்லாக் கெட்ட செய்கைகளுக்கும் அடிப்படையாகவிருக்கிறது. பலவீனத்தினாலேயே ஒருவன் சுயநலமுள்ளவனாகிறான். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வருந்தும்படி செய்வதும் பலவீனமே. எல்லோரும் தாங்கள் யார் என்று உணரட்டும்; ஸோஹம்’-‘நானே அவன்’ என்ற எண்ணத்தை அல்லும் பகலும் அனவரதமும் நினைக்கட்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே ‘நானே சர்வ சக்தி வாய்ந்த அந்தப் பரம புருஷனாவேன்’ என்ற நினைவுடன் எல்லோரும் வளரட்டும். இவ்வெண்ணத்தை முதலில் அவர்கள் கேட்கட்டும். அதற்குமேல் அதன் உண்மையைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கட்டும். அச்சிந்தனையிலிருந்து உலகம் இதுவரை கண்டிராத மகத்தான காரியங்கள் உண்டாவதைக் காண்பீர்கள்.

சத்தியம்

சத்தியத்தை தைரியமாக மேற்கொள்ளுங்கள். சத்தியம் நிரந்தரமானது. சத்தியமே எல்லா ஆன்மாக்களுக்கும் அடிப்படை; சத்தியத்தை அறிய உரைகல் ஒன்று உள்ளது. எந்த ஒன்று தேசத்துக்குப் பலவீனத்தைத் தருகிறதோ, எந்த ஒன்று நமது அறிவையும் உணர்ச்சியையும் பலவீனமாக்குகிறதோ, அந்த ஒன்றை நஞ்சென ஒதுக்கித் தள்ளுங்கள்! அது உயிரற்றது; அது உண்மையாகாது. எது பலத்தைக் கொடுக்கிறதோ அதுதான் உண்மை; உண்மை பரிசுத்தமானது. உண்மையே எல்லா அறிவையும் அளிப்பது. ஆகையால் உண்மையென்பது பலத்தைத் தரவேண்டும்; அறிவில் பிரகாசத்தை உண்டாக்க வேண்டும். வீர்யத்தைப் பெருக்க வேண்டும். உங்கள் அரிய பழைய உபநிடதங்களை மறுபடியும் போற்றிப் படியுங்கள். ஞானமும் ஒளியும் சக்தியும் கொடுக்கக் கூடிய பல தத்துவங்கள் அவற்றில் நிறைந்திருக்கின்றன. இவ்வுயர்ந்த தத்துவங்களைக் கடைப்பிடியுங்கள்! உலகிலுள்ள உயர்ந்த உண்மைகள் உணர்வதற்கு மிகவும் எளியவை. நாம் இப்பொழுது உயிருடன் இருக்கிறோம் என்பதைப் பற்றி யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? அது போலவே அவை தாமே விளக்கமாயிருப்பவை. உபநிடதங்களின் உயர்ந்த உண்மைகள் உங்கள் முன் நிற்கின்றன. அவற்றை மேற்கொள்ளுங்கள்; அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள்! அப்பொழுதுதான் இந்தியாவின் இலட்சியம் கைகூடும்.

உடல் வலிமை

நமது உடலின் பலக்குறைவே நம் கஷ்டங்களில் சுமார் மூன்றில் ஒரு பங்குக்குக் காரணமாயிருக்கிறது. நாம் சோம்பேறிகளாகிவிட்டோம். நம்மால் எக்காரியத்தையும் சேர்ந்து செய்ய இயலுவதில்லை. கிளியைப்போல் பல விஷயங்களைப்பற்றிப் பேசுகிறோம்! ஆனால் அவற்றைச் செய்வதில்லை. காரியத்தில் ஈடுபடாமல், வெறும் பேச்சுப் பேசுவதே நமக்கு வழக்கமாகிவிட்டது. இதற்குக் காரணமென்ன? உடல் பலவீனம்தான். இத்தகைய உடலிலிருக்கும் வலிமையற்ற மூளையால் எதையும் சாதிக்க முடிவதில்லை. நம் இளைஞர்கள் முதலில் உடல் வலிமை பெற வேண்டும். சமய உணர்ச்சி தானே பின்னால் ஏற்படும். வாலிப நண்பர்களே! நீங்கள் வலிமையுள்ளவராகுங்கள். இதுவே நான் உங்களுக்குக் கூறும் புத்திமதி. கீதையைவிட, உறுதியளிக்கும் விளையாட்டுக்களின் மூலம் நீங்கள் சுவர்க்கத்திற்கருகில் செல்வீர்கள். உங்கள் தசைநார்களும் புயங்களும் அதிக வலிமை பெறும்போது கீதையை இன்னும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். உங்கள் நரம்புக் குழாய்களில் இன்னும் சிறிது வலிவுள்ள இரத்தம் ஓடும்போது கிருஷ்ண பரமாத்மாவின் மகத்தான ஞானத்தையும், மகத்தான வலிமையையும் இன்னும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். உங்கள் முதுகு வளையாமல், உங்கள் கால் தளர்வுறாமல் நீங்கள் நிமிர்ந்து நிற்கும்போதே, உங்கள் மனதில் ஆண்மையும் வீரமும் தோன்றும்போதே, உபநிடதங்களின் நுட்பத்தையும் ஆன்மாவின் மகிமையையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள்.

அஞ்சாமை

உறுதி, வலிமை, சக்தி இவ்வெண்ணங்களையே உபநிடதங்களின் ஒவ்வோர் ஏடும் உலகுக்கு எடுத்து இயம்புகிறது என்பதை நான் உணர்வேன். இந்த ஒரே நூலில் தான் (அபீ அபீ’) ‘அஞ்சாமை அஞ்சாமை’ என்ற பதங்கள் உலகிலுள்ள எல்லா நூல்களைக் காட்டிலும் அதிகமாக உபயோகிக்கப் பெற்றிருக்கின்றன. வேறு எந்த மதத்தின் நூலிலும் மனிதனுக்கோ, தெய்வத்துக்கோ இப்பதம் கொடுக்கப்படவில்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நடைபெற்ற காட்சியொன்று என் மனக்கண்முன் இப்பொழுது தோன்றுகிறது. அலெக்ஸாண்டர் சக்ரவர்த்தி உலகை வென்று நமது சிந்து நதிக்கரையில் நின்றுகொண்டிருக்கிறான். அங்கே காடுகளில் வசித்துக் கொண்டிருந்த நம் துறவிகளிலொருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அந்த வயதான சாது உடையேதுமின்றி ஒரு கல்லின்மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சக்ரவர்த்தி அம்முதியவரிடமிருந்த ஒப்பற்ற ஞானத்தைக் கண்டு ஆச்சரியமுற்றுத் தன் நாடாகிய கிரீஸ் தேசத்திற்கு வரும்படி அவரை அழைக்கிறான். அங்கு வந்தால் பொருளும் பதவியும் கொடுப்பதாக ஆசை காட்டுகிறான். ஆனால், அப்பெரியார் அந்த ஆசை வார்த்தைகளைக் கேட்டுப் புன்முறுவல் செய்கிறார்; மன்னனுடைய வார்த்தைகளை மறுக்கிறார். சக்ரவர்த்திக்குக் கோபம் வந்துவிடுகிறது. ‘நீர் வராவிடில் இதோ உம்மைக் கொல்லுவேன்! என்று பயமுறுத்துகிறான். கிழவர் கொல்லென்று சிரித்துச் சொல்லுகிறார்: இப்பொழுது நீ சொன்னமாதிரி பொய்யினை யாரும் எப்பொழுதும் சொன்னதேயில்லை. யார் என்னைக் கொல்ல முடியும்? நான் அழிவற்ற ஆன்மா . எனக்கு ஏது பிறப்பும் இறப்பும்?’ என்கிறார். அதுவன்றோ வலிமை! அதுவன்றோ ஆண்மை!

உபநிடதங்கள் சக்திச் சுரங்கங்கள்

நம்மை பலவீனப்படுத்த ஆயிரம் விஷயங்களிருக்கின்றன. வெகு நாட்களாக வெறுங் கதைகள் பேசிக் கொண்டிருந்துவிட்டோம். ஆதலால் நண்பர்களே! உங்களுடன் பிறந்தவன், உங்களுடனேயே வளர்ந்து, உங்களுடனேயே இறப்பவன் என்ற உரிமையுடன் சொல்லுகிறேன், கேளுங்கள்; நமக்கு வேண்டியது வலிமை, வலிமை, வலிமையே என்று முக்காலும் கூறுகிறேன். உபநிடதங்கள் அவ்வலிமையின் பெருஞ்சுரங்கங்களாக இருக்கின்றன. உலகம் முழுவதுக்கும் அளவற்ற சக்தியூட்டுவதற்குப் போதிய வலிமை அவற்றிலிருக்கிறது. அவற்றின் மூலம் உலகமனைத்துக்கும் புத்துயிரும் புது ஊக்கமும் தரலாம். எல்லாத் தேசங்களிலும் சமூகங்களிலும் மதங்களிலும் உள்ள பலவீனர்கள், துன்புற்றவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய அனைவரையும், வலிமை கொண்டெழுந்து நின்று விடுதலை பெறும்படி உபநிடதங்கள் பேரிகை கொட்டிக் கூவியழைக்கின்றன. சரீர விடுதலை, மன விடுதலை, ஆன்ம விடுதலை எனும் இவையே உபநிடதங்கள் உபதேசிக்கும் மந்திரங்களாகும்.

அனுபூதியே ஆன்மீக வாழ்வின் அடிப்படை

ஆனால், சமய நூல்களைப் பயிலுவது மட்டும் நம்மை ஆன்மீக உணர்ச்சி உடையவர்களாகச் செய்யாது. உலகிலுள்ள சமய நூல்கள் அனைத்தையும் நாம் பயின்றிருக்கலாம். எனினும், நமக்குக் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ ஒன்றும் தெரியாமலிருக்கலாம். நம் ஆயுள் முழுதும் நாம் பேசலாம் அல்லது வாதம் செய்யலாம். ஆனால் உண்மையை நாமே அனுபவித்து உணரும்வரை நாம் ஒன்றும் அறியாதவர்களாகத்தான் இருப்போம். ஒருவனுக்குச்சில மருத்துவப்புத்தகங்கள் மாத்திரம் கொடுத்து அவனை மருத்துவன் ஆக்கிவிட முடியுமா? ஒரு தேசத்தைப் பார்க்க விரும்பும் எனக்கு அதன் படத்தைப் புத்தகத்தில் காண்பித்துத் திருப்தி செய்ய முடியுமா? இன்னும் பூரணமான ஞானத்தை அடைய வேண்டுமென்ற ஆர்வத்தைத்தான் இப்படம் உண்டாக்கும். அதற்கு மேல் இது பயன்படாது. கோயில்களும், புத்தகங்களும், நியமங்களும் ஆன்மீக வாழ்க்கையின் முதற்படிகளேயாகும். ஆன்மீக ஞானம் விதிகளிலும் வாதங்களிலும் இல்லை. அது வாழ்க்கையைப் பொறுத்தது. அனுபூதியே ஆன்மீக வாழ்க்கையின் அடிப்படையாகும்.

இதய உணர்ச்சியை வளருங்கள்

உலகிலுள்ள அனைவரையும் விட நாம் அறிவிலே உயர்ந்தவர்களாக இருக்கலாம். எனினும் தெய்வ பக்திக்கும் நமக்கும் வெகு தூரமிருக்கலாம். ஆராய்ந்து பார்த்தால், புத்திக்கூர்மை உள்ளவர் பலர் தெய்வீக உணர்ச்சியே அற்றிருக்கின்றனர். மேலைநாட்டுக் கல்வி முறையில் ஒரு பெருங்குறையிருக்கிறது. அக்கல்வி பக்தியுணர்ச்சியின்றி வெறும் புத்திக்கு மாத்திரம் பயிற்சியளிக்கிறது. இதயம் இல்லாமல் வெறும் புத்திக்கூர்மை மாத்திரம் இருந்தால் அது ஒருவனை அதிகச் சுயநலமுடையவனாகத்தான் செய்யும். இதயம் ஒன்றுசொல்லி, புத்திவேறு ஒன்று உரைப்பின் இதயத்தையே பின்பற்ற வேண்டும். இதயபூர்வமான உணர்ச்சி ஒருவனை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும். புத்தியால் எப்பொழுதும் அவ்வளவு உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல முடியாது. இதயம் புத்திக்கு மேல் சென்று தெய்வ சன்னிதானத்தை அடைய முடியும். ஆதலால், எப்பொழுதும் இதய உணர்ச்சியை நன்றாக வளருங்கள். மனிதன் இதயத்தின் மூலம் ஆண்டவனிடம் பேசுகிறான்.

மதவெறி ஒருநோய்

மனிதனிடம் மகள் மகன்கள், வீடு வாசல், தேசம், மதம் போன்ற பலவித பாசங்களுண்டு. அவை அனைத்திலும் மிகத்தீவிரமானது, சமயத்தின் காரணமாக உண்டாயிருப்பதுதான். உலக சரித்திரத்திலேயே உன்னதமானதும் உயர்ந்த மன அமைதியை அளிக்கக்கூடியதுமான வார்த்தைகள் மத உணர்ச்சியில் முதிர்ந்த பெரியோர்களால்தான் பேசப்பட்டிருக்கின்றன. ஆனால், மிகக் கொடுமையான வார்த்தைகளுக்கும் மத உணர்ச்சி நிறைந்தவர்களே பிறப்பிடமாக இருந்திருக்கின்றனர். ஒவ்வொரு மதமும் சில விதிகளை உண்டாக்கி, அவைகளே உண்மையானவை என்று வற்புறுத்துகின்றன. சிலர் கத்தியின் முனையில் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்றனர். இங்ஙனம் செய்பவர்கள் சுபாவத்தில் கெட்ட மனிதர்களும் அல்லர். மதவெறி என்ற ஒருவித நோய் அவர்களை இவ்விதம் செய்யும்படி தூண்டுகிறது. மதத்தின் பெயரால் பல போர்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மதவெறி நிறைந்திருக்கும் மக்களின் மத்தியிலும், பல சமயங்களில் அவ்வப்போது சில ஞானிகள் தோன்றி, சண்டை சச்சரவுகளை நிறுத்துங்கள்! மதங்கள் யாவும் ஒரே ஈசனை நாடுபவை’ என்று ஒற்றுமை உணர்ச்சியை உபதேசித்திருக்கின்றனர்.

சமயசமரசத்தின் தீர்கதரிசி

தற்பொழுது இத்தகைய மகான் ஒருவர் தோன்றுவதற்கு உரிய காலம் ஏற்பட்டிருக்கிறது. அவர் சகல சமயங்களையும் ஒரே இறைவன் (ஒரே சக்தி) நின்று இயக்குகிறான் என்பதை அறிந்தார். மதங்கள் யாவும் பாதைகள் மட்டுமே என்பதைக் கண்டார். ஒவ்வொரு மனிதனிலும் ஒவ்வொரு உயிரினத்திலும் அவர் கடவுளைக் கண்டார். பலவீனர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் என்ற இவர்கள்பால் அவர் இதயம் மிக இரங்கிக் கரைந்தது. இதனோடு அவருடைய அபார மூளை, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக முழுதுமிருக்கும் மதங்களிலுள்ள அடிப்படையான ஒற்றுமையை அறிந்து, உலகமுழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமயக்கோட்பாட்டை உண்டாக்கியது. அத்தகைய மனிதர் ஒருவர் பிறந்தார். அவர் திருப்பாதங்களில் பல வருஷங்கள் அமர்ந்து அவர் உபதேசங்களைப் பெறக்கூடிய பாக்கியத்தை நான் பெற்றேன். என் குருநாதரிடமிருந்து உயர்ந்த ஓர் உண்மையை நான் அறிந்தேன். உலகில் தோன்றியிருக்கும் மதங்கள் யாவும் ஒன்றுக்கொன்று விரோதமானவையல்ல என்ற மகத்தான உண்மையை அவரிடம் உணர்ந்தேன். நிலையான ஒரே சநாதன மதத்தின் பல அம்சங்களே அவை என்பதை அறிந்தேன். ஸ்ரீராமகிருஷ்ண தேவர் எவருக்கும் விரோதமாக ஒரு கடுமையான வார்த்தைகூடப் பேசியதில்லை. அவருடைய பேரன்பும், பாரபட்சமற்ற நிலையும் எல்லாச் சமயத்தோரும் அவரைத் தங்கள் சமயத்தவர் என்று நினைக்கும்படி செய்தது. அவர் எல்லோரையும் நேசித்தார். எல்லா மதங்களையும் உண்மையென அவர் நம்பினார். மதவெறியை அகற்றுவதிலேயே அவருடைய ஆயுள் முழுவதும் கழிந்தது.

எல்லா மதங்களையும் ஏற்க

நாம் வேற்றுமையை அகற்றி ஒற்றுமையைக் கடைப்பிடிப்போமாக! எந்த மதத்தின் உண்மையையும் புறக்கணிக்காது ஏற்றுக் கொள்வதே நம் எண்ணமாக இருக்கவேண்டும். அவற்றைச் சகித்துக்கொள்வோம் என்பதன்று. ஏனெனில் அச்சகிப்பு, பிறமதங்கள் தாழ்ந்தவை என்ற எண்ணத்தால் ஏற்படுகிறது. நீங்கள் அவ்விதம் நினைத்தால் அது கடவுள் பால் செய்யும் குற்றமன்றோ ? நான் உலகில் தோன்றிய மதங்களனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். அவை ஒவ்வொன்றும் எப்படி எப்படி ஆண்டவனை வணங்குகின்றனவோ, அவ்விதமே நானும் வணங்குகின்றேன். முகமதியர்களுடன் சேர்ந்து அவர்கள் மசூதிகளுக்குச் செல்வேன். கிறிஸ்துவர்களுடன் சேர்ந்து அவர்களுடைய ஆலயங்களுக்குச் சென்று சிலுவையின்முன் முழங்காலில் மண்டியிட்டுத் தொழுவேன். புத்தர்கள் கோயிலுக்குச் சென்று புத்த பகவானைப் போற்றிப்பக்தி செய்வேன். காடுகளிலும் குகைகளிலும் இருந்து அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தபூர்த்தியாகி’ அந்தர்யாமியாய், யாவர் மனதிலும் திகழும் அப்பேரொளியைத் தம் மனதில் காண சாதனை செய்யும் இந்துக்களிடம் சேர்ந்து, தியானம் செய்வேன்.

முடிவற்ற அருள் விளக்கம்

இது மாத்திரமல்லாமல் இனி வரப்போகும் எல்லா மதங்களையும் ஏற்க என் இதயத்தைத் திறந்து வைத்திருப்பேன். ஆண்டவனுடைய அருட்புத்தகம் இதற்குள் முடிந்தாவிட்டது? அல்லது இன்னும் எதிர்காலத்தில் புதிய பேருண்மைகளை மானிடர் உய்யப் பலப்படுத்திக் கொண்டிருக்குமா? ஆன்மீக உண்மைகளை வெளிப்படுத்தும் இம்மதங்கள் யாவும் ஆண்டவனுடைய அதி ஆச்சரியமான புத்தகங்களாகும். கிறிஸ்து மத சுவிசேஷங்கள், இந்துக்களின் வேதங்கள், முகம்மதியர்களின் குரான், இன்னும் இதர மதத்தாரின் நூல்கள் என்ற இவை யாவும் அப்புத்தகத்தின் பல பக்கங்களாக இருக்கின்றன. இன்னும் அப்புத்தகத்தில் பல பக்கங்கள் வெளிவரக் காத்துக்கொண்டிருக்கின்றன. இதுவரை வந்தவை அனைத்தையும் ஏற்போமாக! இப்பொழுது தோன்றியிருக்கும் அருட்சுடரை அனுபவித்து இனி வரவிருக்கும் ஞானவொளியை ஏற்க நமது இதயத்தைத் திறந்து வைத்திருப்போமாக! இதுவரை தோன்றியிருக்கும் எல்லா மகான்களுக்கும் இப்பொழுது தோன்றியிருக்கும் பெரியோர்களுக்கும் நமது வணக்கம். இனிமேல் தோன்றவிருக்கும் எல்லா மகான்களுக்கும் நமது வணக்கத்தைச் செலுத்துவோமாக!

5. கல்வியும் ஒழுக்கமும்

5. கல்வியும் ஒழுக்கமும்

நினைவின் சக்தி

ஒரு மனிதனுடைய ஒழுக்கம் அல்லது தன்மை எனப்படுவது, அவனுடைய பூ மனப்போக்குகள் அனைத்தும் சேர்ந்து உண்டாவது. அதனை அவனுடைய மனோவிருத்திகளின் தொகுதி எனச்சொல்லலாம். அவன் இன்பமும் துன்பமும் அனுபவிக்கும் நேரத்தில், அவை அவனுடைய மனதில் பலவிதமான உணர்ச்சிகளை உண்டாக்கிச் செல்கின்றன. இவ்வுணர்ச்சித் தொகுதியின் பயனே அவனுடைய குணம் அல்லது தன்மையாகிறது. நம் எண்ணங்களே நம் தன்மையை உண்டாக்கியிருக்கின்றன. இரும்பின்மேல் சம்மட்டி அடிக்கும் ஒவ்வோர் அடியும் அதன் உருவத்தைத் தீர்மானம் செய்வதுபோல் நம் ஒவ்வோர் எண்ணமும் நம் தன்மையைத் தீர்மானம் செய்கிறது. வார்த்தைகள் அவ்வளவு முக்கியமானவையல்ல. எண்ணங்களே மிக முக்கியமானவை. அவற்றிற்கு ஆழ்ந்த சக்தியுண்டு. நெடுங்காலத்துக்குப் பின் நேரக்கூடியதை அவைதான் தீர்மானம் செய்கின்றன. ஆதலால், நாம் நினைக்கும் நினைவுகளைப் பற்றி அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இன்ப துன்பங்களின் பலன்

நமது மனதின் தன்மையை உண்டாக்குவதில் இன்பத்துக்கும்துன்பத்துக்கும் சம பங்கிருக்கிறது. சில ட சந்தர்ப்பங்களில் இன்பத்தைக் காட்டிலும் துன்பமே அதிக நன்மையைச் செய்திருப்பதாகப் புலப்படும். பூவுலகிலேயே தோன்றியுள்ள சான்றோர்களுடைய சரித்திரங்களை ஆராய்ந்து பார்ப்போமாயின், பெரும்பாலும் இவர்களுடைய ஆன்மசக்தியை வெளியே பிரகாசிக்கச் செய்தவை, இன்பத்தைக் காட்டிலும் துன்பமேயெனவும், செல்வத்தைக் காட்டிலும் வறுமையேயெனவும், புகழைக் காட்டிலும் இகழ்வேயெனவும் நாம் அறிந்துகொள்வோம். செல்வத்திலேயே பிறந்து வளர்ந்து, சுகத்தையே அனுபவித்துக் கொண்டிருந்து, துக்கத்தை ஒரு சிறிதும் அறியாமலிருந்தவர்களில் யார்தான் உயர்ந்த வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள்! மனம் துக்க கடலில் ஆழ்ந்து, சுற்றிலும் கஷ்டங்கள் என்ற புயல்காற்று அடித்துக் கொண்டிருக்க, உள்ளத்திலிருந்த நம்பிக்கையும் தைரியமும் அகன்று, வாழ்க்கையே சூன்யமாகத் தோன்றுகின்ற சந்தர்ப்பங்களில் தான் ஆன்ம ஒளி பிரகாசிக்கிறது..

கர்மத்தின் பயன்

மனமாகிய குளத்தில் கர்மமாகிய கல் விழ, அதனால் எழுந்த சிற்றலைகள் முற்றிலும் அழிந்து போகாமல், தாம் திரும்பி வருவதற்கு அறிகுறியாகிய அடையாளங்களை விட்டுச் செல்கின்றன. நாம் செய்கின்ற ஒவ்வொரு செய்கையும், சரீரத்தின் ஒவ்வோர் அசைவும், நினைக்கின்ற ஒவ்வொரு நினைவும் மனதில் அவற்றுக்கேற்ற பண்புகளைப் பதியச் செய்கின்றன. இவை புறத்தே தோன்றுவதற்குத் தக்க வழியில்லாமலிருப்பினும் மனதில் அடங்கியிருந்து செயல்படும் இயல்பின; ஒவ்வொரு மனிதனுடைய ஒழுக்கமும் தன்மையும் அவனவன் செய்து கொண்ட நடை, உடை பாவனைகளின் பயனாக ஏற்பட்டவை. நல்ல பண்புகள் நிறைந்திருப்பவன் நல்லவனாவான். தீய பண்புகள் கூடியிருப்பவன் தீயவனாவான். ஒருவன் தீய வார்த்தைகளைப் பேசி, தீய எண்ணங்களை எண்ணி, தீய செயல்களையே செய்தால் அவனுடைய உள்ளம் தீய பண்புகளால் நிறைந்திருக்கும். இவ்விதம் உண்டாகிய தீய பண்புகள் அவனை அறியாமலே, அவனது தொழிலையும் தம் வயப்படுத்தும் ஆற்றலுடையன. இந்தக் கெட்ட எண்ணங்கள் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தீய பண்புகளின் தொகுதியினாலேயே அவன் உந்தப்பட்டு, செலுத்தும் வழிச் செல்கிற இயந்திரம்போல, அவன் தீய வழிகளில் செலுத்தப்படுகிறான்.

ஒழுக்கத்தின் உயர்வு

இங்ஙனமே ஒருவன் நல்லெண்ணங்களை எண்ணி நற்கர்மமே புரிவானாயின், அவன் மனதில் நல்ல சுபாவமும் நல்ல பண்புகளும் – உண்டாகும். இவற்றின் பயனாக அவன் தன்னையும் அறியாமல் நற்கர்மங்களில் ஈடுபடுவான். அவன் நெடுங்காலமாக நற்கர்மமே செய்து நல்லெண்ணங்களையே மனதில் கொண்டிருப்பானேயானால், அவன் எப்பொழுதும், எந்நிலையிலும் நல்ல செயல்களையே செய்வான். அவன் தீமைசெய்ய முயன்றாலும் அவன் உள்ளத்தில் அமைந்திருக்கும் நல்ல பண்புகள் அவனைத் தீய வழியில் செல்லவிடாது. அவன் எப்பொழுதும் நல்லுணர்ச்சியுடனேயே இருப்பான். இந்த நிலையிலுள்ள மனிதனை நல்ல சுபாவத்தில் நிலைபெற்றவன் என்று சொல்லலாம். ஒருவனுடைய உண்மைத் தன்மையை ஆராய வேண்டின் அவனது பெரிய செயல்களைப் பார்க்க வேண்டாம்; அவன் தன் சாதாரண காரியங்களை எங்ஙனம் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும். அவைதாம் ஒருவனுடைய உண்மைத் தன்மையை வெளிக்காட்டும். சில சந்தர்ப்பங்களில் கயவரும் புகழ் பெறுவதுண்டு. எனவே, நிலைமையிலும் பெருந்தன்மையுடன் நடப்பவனே உண்மையிற் பெரியோனாவான்.

மனிதன் பழக்கத்தின் கட்டுக்கு ஆளானவன்

மனதிலே இத்தகைய உணர்ச்சிகள் பல ஒன்று கூடும் போது அவை ஒரு பழக்கமாகின்றன. பழக்கம் இரண்டாம் சுபாவம்’ என்று சாதாரணமாய்ச் சொல்லப்படுவதுண்டு. முதல் சுபாவமும் அதுதான். மனிதனுடைய முழு சுபாவமும் அதுவேயாம். நாம் தற்பொழுது இருக்கும் நிலை எவ்விதமிருப்பினும் இது பழக்கத்தின் பயனாக ஏற்பட்டது. இவ்வுண்மை நமக்கு ஆறுதல் அளிக்கிறது. ஏனெனில் நம் நிலை பழக்கத்தின் பயனாகவிருப்பின், நம் நிலையை நாம் எப்பொழுதும் திருத்தியமைத்துக் கொள்ள முடியும் என்று ஏற்படுகிறதல்லவா? தீய பழக்கங்களை மாற்ற ஒரே மருந்துண்டு. அவற்றுக்கு எதிரான நல்ல பழக்கங்கள் தாம் அவ்வருமருந்தாகும். தீய பழக்கங்களை நல்ல பழக்கங்களால் மாற்ற இயலும். இடைவிடாது நற்காரியங்களைச் செய்; பரிசுத்தமான எண்ணங்களை நினை; கெட்ட எண்ணங்களை அகற்ற அதுதான் ஒரே வழியாகும். எந்த மனிதனையும் திருத்த முடியாதவன் எனச் சொல்லாதே! ஏனெனில் அவன் பழக்கத்தினால் கட்டுப்பட்டவனேயாகிறான். புதிய நல்ல பழக்கங்களால் அவற்றைத் தடுக்க இயலும். மீண்டும் மீண்டும் செய்த நற்பழக்கங்களே உயர்ந்த ஒழுக்கமாகும். பழக்கங்களால் மாத்திரமே மனிதனுடைய ஒழுக்கத்தடையைச் சீர்ப்படுத்த முடியும்.

நம்மை ஆக்குவது நாமே

நம் துன்பம் அனைத்திற்கும் காரணம் நம் உள்ளத்திலேயே இருக்கிறது. அதற்காகத் தேவர்களையோ கடவுளையோ குறை சொல்லவேண்டாம். அல்லது அதை மாற்ற முடியாதெனச் சலிப்பும், சோர்வும் கொள்ள வேண்டாம். வேறு ஒருவர் வந்து நமக்கு உதவி செய்யாதவரையில் நாம் இந்நிலையிலிருந்து தப்ப முடியாதென நினைக்கவும் வேண்டாம்.

நாம் பட்டுப்பூச்சியைப்போல் இருக்கிறோம். பட்டுப்பூச்சி தன் உடலிலிருந்து உண்டாகும் பசையால் கூட்டைக் கட்டித் தன்னை அதற்குள் சிறை செய்துகொள்வது போல், நாம் செய்த காரியத்தின் பயனாகவும் பழக்கத்தின் பயனாகவுமே நம்மை நாம் பந்தப்படுத்திக்கொள்கிறோம். அதற்குப்பிறகு நம் அறியாமையின் காரணமாக, நாம் கட்டப்பட்டு இருப்பதாக நினைத்து அழுகிறோம்; உதவிக்காகக் கூக்குரலிடுகிறோம். ஆனால், எப்பொழுதும் வெளியிலிருந்து நமக்கு உதவி வருவதே இல்லை. நம்முள் இருந்துதான் நமக்கு உதவி வருகிறது. உலகிலுள்ள எல்லா தெய்வங்களிடமும் சென்று முறையிட்டுப் பாருங்கள்! நான் பல வருஷங்கள் இவ்விதம் புலம்பியிருக்கிறேன். கடைசியில் எனக்கு உதவி கிடைத்தது. ஆனால், இவ்வுதவி என் உள்ளத்தினின்றுதான் வந்தது. நான் தவறாக வேய்ந்துகொண்ட என் கட்டுக்களை நானேதான் அறுத்து, அவற்றினின்றும் என்னை விடுவித்துக் கொள்ளவேண்டியிருந்தது. என்னுடைய வாழ்க்கையில் பல தவறுகளை நான் செய்திருக்கிறேன். அத்தவறுகளைச் செய்யாமல் நான் எனது இன்றைய நிலைமையை அடைந்திருக்க முடியாது. நீங்கள் வீட்டுக்குச் சென்று வேண்டுமென்றே தவறுகளைச் செய்யவேண்டுமென்று நான் சொல்லுவதாக நீங்கள் அர்த்தம் செய்துகொள்ளக் கூடாது. அவ்விதமாக என்னைத் தப்பர்த்தம் செய்துகொள்ள வேண்டாம். சென்றதைக் குறித்து வருந்தி மனச்சோர்வடைய வேண்டாமென்பதே நான் அறிவுறுத்துவது.

தவறுகளுக்குக் காரணம் பலவீனம்

நாம் பல தவறுகள் செய்கின்றோம்; அவற்றுக்குக் காரணம் நமது பலவீனம். பலவீனத்துக்குக் காரணம் – நம் அறியாமையேயாகும். நம்மை யார் அறியாதவர்களாகச் செய்கிறார்கள்? நாமே நம் கண்களை நம் கைகளாலேயே மூடிக் கொண்டு இருட்டாயிருக்கிற தென்று முறையிடுகின்றோம். மூடியிருக்கும் கையை எடுத்துவிடுங்கள்; உடனே வெளிச்சம் தோன்றும். மனித ஆன்மாவின் சுயம்பிரகாச சக்தியாகிய ஒளி நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தற்கால நூல்களைப் படித்த அறிவாளிகள் என்ன சொல்லுகிறார்கள் என்று நீங்கள் கேட்டதில்லையா? உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் காரணம் என்ன? விருப்பமே பரிணாமத்தின் அடிப்படையான காரணம் [Evolution] என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு விலங்கு ஒரு காரியத்தைச் செய்ய விரும்புகிறது. ஆனால், அதன் சுற்றுச் சார்புகள் அதற்கு ஏற்றவையாயிருப்பதில்லை. எனவே, அதன் சுற்றுச் சார்புக்கேற்ற ஓர் உடம்பை அது உண்டாக்கிக் கொள்கிறது. யார் அவ்வுடம்பை உண்டாக்குகிறார்கள்? அப்பிராணியே தான்; அதன் மனவலிமை அதை உண்டாக்குகிறது. உங்கள் மனவலிமையைப் பயன்படுத்துங்கள்; அது உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுபோகும். மனம் சர்வ சக்தி வாய்ந்ததாக இருந்தால், நாம் ஏன் சர்வ சக்தி வாய்ந்தவர்களாயில்லை?’ என்று நீங்கள் கேட்கலாம்.

சீரிய ஒழுக்கமே தேவை

இக்கேள்வி கேட்கும்போது, நீங்கள் உங்கள் சிறு அகங்காரத்தை மட்டிலுமே நினைக்கிறீர்கள். ஒரு பரமாணுவிலிருந்து ஓர் உயர்ந்த மனிதனாக நீங்கள் வளர்ந்ததைத் திரும்பிப் பாருங்கள். இதையெல்லாம் செய்தது யார்? உங்கள் மனவலிமைதான். இவ்வளவு உயர்வாக வளரச்செய்த உங்கள் மனவலிமை உங்களை இன்னும் உயரக் கொண்டுபோகும்; உங்களுக்கு வேண்டியதெல்லாம் வாழ்க்கையில் உயர்ந்த ஒழுக்கமும், மனவலிமையும் தான்.

நீங்கள் உங்கள் வீட்டுக்குச் சென்று தலைக்கு முக்காடிட்டு நீங்கள் செய்த தவறுகளுக்காக ஆயுட்காலம் முழுவதும் அழுதாலும், அது உங்களுக்கு உதவாது. அது உங்களை இன்னும் அதிகமாகப் பலவீனப்படுத்தும். இதுவரையிலும் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக துயரங்கள் நிறைந்திருந்தால் நீங்கள் வந்து அழுதவுடனே அத்துயரங்கள் நீங்குமா? தீக்குச்சியை உரைத்த அளவிலே வெளிச்சம் தோன்றுகிறது. அதைப்போலவே, நான் கெட்ட செய்கைகள் செய்திருக்கிறேன், தவறுகள் செய்திருக்கிறேன்’ என்று வாழ்க்கை முழுவதும் அழுது புலம்பினாலும் யாது பயன்? நாம் செய்த குற்றங்களை நமக்குச் சொல்ல எந்தச் சாமியோ பூதமோ தேவையில்லை. வெளிச்சத்தைக் கொண்டு வந்தால், இருள் உடனே மறையும். உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைபிடித்து உங்களுக்குள் மறைந்திருக்கும் உள்ளொளியான சச்சிதானந்தப் பரம்பொருளை வெளிப்படுத்துங்கள்; மற்றவர்களும் அதை வெளிப்படுத்தும்படி உதவுங்கள். அதுவே நமக்கு இப்போது தேவையானது.

4. ஆசிரியரும் மாணவர்களும்

4. ஆசிரியரும் மாணவர்களும்

குருகுல முறையில் கல்வி கற்பதே உயர்ந்த முறையென்பது எனது எண்ணம். கல்வி கற்பிப்பதில் ஆசிரியரின் சொந்த வாழ்க்கை மிக முக்கியமானது. சுடர் விட்டெரியும் ஜோதி போன்ற தூய ஒழுக்கமுடைய ஆசிரியருடன் ஒருவன் தன் குழந்தைப் பிராயத்திலிருந்து வசித்தல் வேண்டும். அவ்வாசிரியர் உயரிய கல்விப் பயிற்சிக்கு உயிருள்ள, உயர்ந்ததோர் உதாரணமாக விளங்க வேண்டும். நம் தேசத்தில் கல்வி கற்பிக்கும் வேலை எப்போதும் தியாகிகள் வசமே இருந்து வந்திருக்கிறது. இப்பணி மறுபடியும் தியாக புருஷர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்.

பழங்காலக் கல்விமுறை

நம் நாட்டில் பழங்காலத்திலிருந்த கல்விமுறை தற்கால முறையிருந்து மிகவும் மாறுபட்டதாக இருந்தது. மாணவர்கள் யாதொரு – சம்பளமும் கொடுக்கவேண்டியிருக்கவில்லை. கல்வியறிவு மிகவும் புனிதமானது; எனவே, அதை எவரும் விலைக்குத் தரலாகாதென்று கருதப்பட்டது. கல்வி யாதொரு விலையுமின்றி இலவசமாக அளிக்கப்பட வேண்டுமென அக்காலத்தில் எண்ணினார்கள். ஆசிரியர்கள் யாதொரு கட்டணமுமின்றி மாணவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். அதுமாத்திரமல்லாமல், பலர் அவர்களுக்கு உணவும் உடையும் அளித்தனர். இவ்வாசிரியர்களின் இத்தகைய சேவைக்காக பணம் படைத்த பலர் மானியங்கள் அளித்தனர். இவற்றின் உதவியைக் கொண்டு அவர்கள் தங்கள் மாணவர்களைக் காப்பாற்றினார்கள். பழங்காலத்தில் மாணாக்கனாக விரும்பியவன், குருவுக்காக விறகு பொறுக்கிக் கொடுத்தல் போன்ற சேவைகளைச் செய்து குருவை நாடுவான்.

குருவும் அவனுடைய தகுதியை அறிந்து அவனுக்கு வேதங்களை உபதேசிப்பார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றிலும் அவன் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற விரதத்தின் அறிகுறியாக, முஞ்சை என்ற ஒரு விதப் புல்லின் மூன்று புரியாலான முப்புரிநூலை அவன் மார்பில் அவர் இடுவார்.

மாணவர் இலக்கணம்

ஆசிரியர்களும் மாணவர்களும் சில குணாதிசயங்களை உடையவர்களாயிருத்தல் அவசியம். அறிவு வளர்ச்சியில் உண்மையான விருப்பமும், விடா முயற்சியும், தூய்மையுமே மாணவர்களுக்குரிய இலக்கணங்களில் முக்கியமானவை. மனோவாக்குக் காயங்களில் பூரணத் தூய்மை இன்றியமையாததாகும். கருதிய பொருள் கைகூடும் என்ற ஆன்றோர் மொழியொன்று உண்டு. அதற்கேற்ப நமக்கும் கல்வி பெறுவதில் நிறைந்த ஆர்வம் இருக்க வேண்டும். நாம் முழு மனதுடன் விரும்பினாலொழிய ஒரு பொருளும் நமக்குக் கிடைக்காது. அதற்காக இடைவிடாத முயற்சி வேண்டும். நம் மனதிலிருக்கும் தாழ்ந்த குணங்களையொழிக்க ஓயாது போராட வேண்டும். தாழ்ந்த தன்மையை அகற்றி, உயர்ந்த தன்மை வெற்றி பெறும்வரை இந்த போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வித ஊக்கத்துடன் முயற்சி செய்யும் மாணவர்கள் நிச்சயமாக வெற்றிபெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆசிரியரின் இலக்கணம்

ஆசிரியரோ தான் கற்பிப்பவற்றின் மெய்ப் பொருளை உணர்ந்தவராயிருத்தல் வேண்டும். எல்லோரும் தம் மதத்திலுள்ள வேத நூல்களைப் படிக்கிறார்கள். ஆனால், இவர்கள் பெரும்பாலும் அந்த நினைவையும் நூல்களிலுள்ள இலக்கண இலக்கிய நயங்களைப் பாராட்டுகிறார்கள். சொற்சுவை கற்பித்துக் கொண்டு அதனை விரிவுபடுத்துவதிலேயே திருப்தி பெறுகிறவர்கட்குப் பொருட்சுவை எவ்வாறு விளங்கும்? வேதத்தின் மெய்ப்பொருளை அறிவதுதான் உண்மை ஆசிரியரின் இலக்கணம் ஆகும்.

ஆசிரியரின் இரண்டாவது குணம், அவர் மாசற்றவராக இருத்தல் வேண்டும் என்பது. ஆசிரியருடைய ஒழுக்கத்தையும் நடத்தையையும் பற்றி நாம் ஏன் பார்க்கவேண்டும்? அவர் சொல்வது சரியென்று நாம் பார்த்தால் போதாதா?’ என்று கேட்பவர் பலருண்டு. இது சரியன்று. சத்தியத்தை தான் உணரவும் அதை மற்றவர்கட்கு போதிக்கவும், இதயபூர்வமான பரிசுத்தம் அவசியம். அவர் முற்றிலும் பரிசுத்தமாயிருந்தாலொழிய, அவர் வார்த்தைக்கு மதிப்பும் பலனும் இருக்காது. ஆசிரியராயிருப்பவர் மாணவனது அறிவை விரிவடையச் செய்வது மட்டுமல்லாமல், தன்னுடைய சக்தியில் கொஞ்சம் மாணவனுக்குக் கொடுத்து உதவுகிறவராய் இருக்க வேண்டும். தன் உயர்ந்த தன்மையில் ஓர் அம்சத்தை மாணவனுக்கு ஆசிரியர் அளிக்கிறார். ஆதலால் ஆசிரியர் பூரண தூய்மையுடையவராயிருத்தல் அவசியம்.

மூன்றாவதாக, ஆசிரியர் எவ்விதமான பயனையும் எதிர்பாராமல் கற்பிக்க வேண்டும். பணத்துக்காகவோ பெயருக்காகவோ அல்லது புகழுக்காகவோ அவர் கற்பிக்காமல், மாணவன் பேரிலும், மானிட வர்க்கத்தின் பேரிலும் உள்ள அன்பின் காரணமாகவே அவர் தன் பணியை ஆற்ற வேண்டும். அன்பின் மூலம்தான் ஆன்மீக உணர்ச்சியை ஒருவருக்கொருவர் அளிக்க முடியும். பொருள், புகழ்- இவற்றில் ஆசையிருக்குமாயின், இவ்வன்பு உண்டாகாது.

ஆசிரியரிடத்தில் நம்பிக்கை

பெற்றோரிடத்துப் பிள்ளைகள் எவ்விதம் நடக்க வேண்டுமோ அவ்விதமே ஆசிரியர்களிடத்திலும் நடக்க வேண்டும். ஆசிரியர்களிடத்தில் நம்பிக்கையும், பணிவும், பக்தியும் இல்லாவிடில் நம் மனதில் அறிவு வளர்ச்சி உண்டாகாது. இம்முறையைப் பின்பற்றாததேசங்களில் ஆசிரியர் சாதாரண ஆசிரியராகவேயிருக்கிறார். ஆசிரியர் தன் சம்பளத்திலேயே கருத்தை வைத்திருக்கிறார். மாணவனும் ஏதோ வெறும் விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் வருகிறான். பாடம் முடிந்ததும் இருவரும் அவரவர் வழியே செல்கின்றனர். ஆனால், தனி மனிதனிடம் அதிக நம்பிக்கை வைப்பது பலவீனத்தையும், மூட நம்பிக்கையையும் சில சமயங்களில் உண்டாக்கலாம் என்பதை நாம் மறக்கலாகாது. ஆசிரியரைக் கடவுள் போல வழிபடுங்கள்; ஆனால், அவரைக் குருட்டுத்தனமாய் நம்பாதீர்கள்! அவரைப் பூரண அன்புடன் நேசியுங்கள்; ஆனால் உங்கள் மனதின் தனித்தன்மையைப் பலி கொடுக்காதீர்கள்!

மாணவரிடம் அனுதாபம்

ஆசிரியர்கள், மாணவர்களின் இயல்பையறிந்து கற்பிப்பதில் தங்கள் சக்தி முழுவதையும் செலுத்த வேண்டும். உண்மையான அன்பும் அனுதாபமுமின்றி சரியாகக் கற்பிக்க முடியாது. எவரிடமும் இருக்கும் நம்பிக்கையைக் குலைக்க முயலாதீர்கள்; உங்களால் முடியுமானால் உயர்ந்த எண்ணங்களைக் கொடுக்க முயலுங்கள்! ஆனால், அவனுடைய பற்றுக் கோடுகளைக் கெடுக்க வேண்டாம். தன்னிடம் பயில வரும் மாணவர் ஆயிரம்பேர் இருப்பினும், ஒரு நிமிடத்தில் அவர்களின் தன்மையை அறிந்து அவர்கள் போலத் தன்னையும் ஆக்கிக் கொள்கிறவர்தான் உண்மை ஆசிரியராவார். மாணவனுடைய மனதின் நிலைமைக்குத் தன்மனதையும் இழுத்துக்கொண்டு வந்து தன் மனம் முழுவதையும் அவன் மனதின்பாற் செலுத்தி, அவன் பார்க்கிறமாதிரி விஷயங்களைப் பார்த்து, அவன் சிரமங்களை அறிந்து, அவற்றைப் போக்கி, அவன் மனதில் அறிவு வளர்ச்சியை உண்டாக்குபவரே உண்மை ஆசிரியராவார். உண்மையில் அத்தகைய ஆசிரியர்களால்தான் கல்வி கற்பிக்க முடியும்.

3. கல்வி கற்கும் முறை

3. கல்வி கற்கும் முறை

மன ஒருமைப்பாடு

அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் மனதை ஒருமுகப்படுத்தல் என்பது. கல்வியின் இலட்சியமே மனதை ஒருமுகப்படுத்துவதுதான். சாதாரண மனிதனிலிருந்து சகல சித்திகளையும் பெற்ற யோகிவரை, எல்லோரும் தங்கள் அறிவு வளர்ச்சிக்கு அம்முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும். இரசாயனக் கூடத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி தன் மனோசக்தி முழுவதையும் ஒருமுகப்படுத்தி இரசாயனப் பொருட்களின் மேல் செலுத்துகிறான். அப்பொழுது அவருக்கு அதன் உண்மைத்தன்மை புலனாகி அதைப்பற்றிய அறிவு உண்டாகிறது. வானவியல் விஞ்ஞானி தன் மனோசக்தியை ஒருமுகப்படுத்தித் தொலைநோக்குக் கண்ணாடியின் மூலம் தான் ஆராய விரும்பும் கோள்களின் மீது செலுத்துகிறான். அப்பொழுது நட்சத்திரங்களும், சூரிய மண்டலங்களும் முன்வந்து அவருக்குத் தங்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகின்றன. கல்லூரிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களும், கல்வி பயிலும் மாணவர்களும், இன்னும் அறிவு வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் அனைவரும் இவ்விதம் தங்கள் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலமே தங்கள் அறிவை அபிவிருத்தி செய்து கொள்கின்றனர்.

மனதின் சக்தி

மனதை ஒருமுகப்படுத்துகிற அளவுக்கு அறிவு வளர்ச்சியும் அதிகமாகும். செருப்புத் தைப்பவனுக்குங்கூடத் தன் வேலையில் மனதை ஒருமுகப்படுத்தினால் நன்றாகச் செருப்புத் தைக்க முடியும். சமையல்காரன் தன் மனதை ஒருமுகப்படுத்தினால் நன்றாகச் சமையல் செய்வான். பணம் சம்பாதிப்பதிலாகட்டும், கடவுளைத் தொழுவதிலாகட்டும் – எதைச்செய்வதிலாகட்டும் மன ஒருமைப்பாடு அதிகமாயிருக்கும் வரை அது நன்றாக நடைபெறும். இயற்கையால் மூடப்பட்டிருக்கும் அறிவுச் சுடரைப் பெறுவதற்கு இது ஒன்றே சிறந்த வழியாகும்.

மனிதருக்குள் வித்தியாசத்தின் காரணம்

சாதாரண மனிதன் தன் மனோசக்தியை நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் வீண் செய்துவிடுகிறான். இதனால்தான் அவன் அடிக்கடி தவறுகள் செய்கிறான். பண்புடைய மனதைப் பெற்றவன் ஒரு தவறும் செய்யமாட்டான். மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் மனதை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. மிருகங்களைப் பழக்குகிறவர்கள் அவற்றுக்குச் சொல்லிக்கொடுப்பதை அவை அடிக்கடி மறந்து விடுவதை அறிவீர்கள். எந்த விஷயத்தின் மீதும் அவை அதிகநேரம் மனதை ஒருமுகப்படுத்த முடியாததே அதற்குக் காரணம். இதில்தான் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் அவனிடத்திலுள்ள மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியைப் பொறுத்துதான் இருக்கிறது.

அதன் பலன்

எத்துறையிலும் வெற்றி பெறுவது இதைப் பொறுத்து தான் இருக்கிறது. ‘ சங்கீதம், ஓவியம், சிற்பம், முதலிய எல்லாக் கலைகளிலும் சிறப்பாக தேர்ச்சிபெறச் செய்வது மன ஒருமைப்பாடுதான். மனதை ஒருமுகப்படுத்தி நமக்குள்ளேயே செலுத்தினால், நம்முள்ளிருக்கும் நம் புலன்கள் அனைத்தும் நம் வசப்பட்டு நாம் எண்ணியவாறு செயல்படும். கிரேக்கர்கள் தாங்கள் ஒருமுகப்படுத்திய மனதை வெளி உலகின்மேல் செலுத்தினார்கள். அதன் காரணமாகச் சிற்பம், இலக்கியம் முதலிய கலைகளில் பூரணத்துவத்தை அடைந்தார்கள். இந்தியர்கள் தாங்கள் ஒருமுகப்படுத்திய மனதை நம் வெளிப்புலன்களுக்கு எட்டாத ஆன்மீகத் துறையில் செலுத்தியதின் பயனாக யோகாசனத்தை அபிவிருத்தி செய்தார்கள். உலகத்தின் இரகசியங்களை மூடிவைத்திருக்கும் கதவுகளைத் திறக்கக்கூடிய வலிமை மாத்திரம் நாம் பெறவேண்டும். இவ்வலிமையை நமக்கு அளிக்கக்கூடியது மன ஒருமைப்பாடுதான்.

அறிவுக் களஞ்சியத்தின் ஒரே திறவுகோல்

மன ஒருமைப்பாட்டின் சக்தியே அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோல். நாம் இருக்கும் இப்போதைய நிலையில் நம்மனம் ஒருமுகப்படாது. பல நூறு விஷயங்களில் செல்வதால் நம் மன சக்தி வீணாகிறது. நம் மனதை ஒருமுகப்படுத்த முயல ஆரம்பித்த உடனே நாம் விரும்பாத பல எண்ணங்களும் உணர்ச்சிகளும் தோன்றி மனதை ஒருமுகப்படுத்த விடாமல் செய்கின்றன. இவற்றை அடக்கி மனதை நம் வசப்படுத்துவது எங்ஙனம் என்பதே இராஜயோகம் நமக்கு கற்பிக்கும் விஷயம். தொடர்ச்சியாக தியானம் செய்வது மன ஒருமைப்பாட்டைத் தரக்கூடிய சிறந்த சாதனமாகும்.

கல்வியின் இலட்சியம் விஷயங்களைப் பற்றிய அறிவைச் சேமிப்பதன்று. மன ஒருமைப்பாடே கல்வியின் அடிப்படையான இலட்சியம் என்பது எனது முடிவு. நான் மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் விஷயங்களைப் பற்றிப் படிக்கவே மாட்டேன், மன ஒருமைப்பாட்டுடன் மனதை எந்த இடத்திற்கும் எக்கணத்திலும் செலுத்தும் சக்தியை விரிவடையச் செய்வேன். அதற்குமேல் அவ்வுயர்ந்த சக்தியாகிய ஆயுதத்தைக் கொண்டு என்னால் விரும்பிய விஷயங்களை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

பன்னிரண்டு வருடங்கள் பிரம்மச்சரியத்தைத் தவறாது கடைபிடித்து வருபவன் அளவற்ற சக்தியைப் பெறுகிறான். பிரம்மச்சரியம் சரியாகக் கடைபிடிக்கப்பட்டால் உயர்ந்த அறிவையும் ஆன்மீக சக்தியையும் அது நமக்களிக்கிறது. நம் விருப்பங்களை அடக்கியாளுவது நமக்குப் பெரும் பயனை அளிக்கிறது.

பிரம்மச்சரியத்தின் அவசியம்

காம உணர்ச்சியை அடக்கி அதை மகத்தான ஆன்மீக சக்தியாக மாற்றிக் கொள்ளுங்கள். ஆன்மீக சக்தி அதிகரிக்காத வரையில் ஒருவனால் மாபெரும் காரியங்களைச் சாதிக்க இயலாது. நிறைந்த ஆன்மீக சக்தி இருப்பவர்கள்தாம் கடினமான காரியங்களைச் செய்து முடிக்க இயலும். பிரம்மச்சரியத்தைச் சரிவர கடைபிடிக்காத காரணத்தினால் தான் நம் நாடு இவ்வளவு சீர் குலைந்திருக்கிறது. பிரம்மச்சரியத்தைச் சரிவர கடைபிடிப்பதின் மூலம் எதையும் விரைவில் கற்கமுடியும். ஒரு தரம் கேட்டதும் தெளிவாக தெரிந்து கொள்ளும் சக்தியையும் சிறந்த ஞாபக சக்தியையும் அத்தகையவன் பெறுகிறான். பரிசுத்தமான மனம் அளவில்லாப் பலமும், மனத்திட்பமும், சக்தியும் பெறுகிறது. பூரண பரிசுத்தமின்றி ஆன்மீக பலம் கிடையாது. பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தவர்கள் சமுதாயத்தில் மகத்தான செல்வாக்கைப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். ஆன்மீகத் துறையில் சிறந்து விளங்கியிருந்தவர்கள் அனைவரும் பரிசுத்தமான வாழ்க்கையை ஏற்றவர்களாகவே இருந்திருக்கின்றனர். இப்பரிசுத்த வாழ்க்கை அவர்களுக்கு அரியசக்தியை அளிக்கிறது.

ஒவ்வொரு மாணவனுக்கும், பிரம்மச்சரியத்தை அனுசரித்துப் பரிசுத்தமான வாழ்க்கையைப் பின்பற்றத் தக்க பயிற்சியை அளிக்க வேண்டும். அதற்குப்பிறகுதான் தன்னம்பிக்கையும், சிரத்தையும் உண்டாகும். பிரம்மச்சரியம் என்பது மனம், வாக்கு, காயம் என்ற மூன்றிலும், எல்லா இடங்களிலும், சந்தர்ப்பங்களிலும் பரிசுத்தமாயிருப்பது. புறத்தூய்மை மாத்திரம் போதாது. பரிசுத்தமில்லா எண்ணங்கள், பரிசுத்தமில்லாச் செய்கைகளைப் போலவே தீமை விளைவிக்கக் கூடியவை. பிரம்மச்சாரியாக இருக்க விரும்புகிறவர், தான் எண்ணும் எண்ணங்களிலும், பேசும் வார்த்தைகளிலும், செய்யும் செயல்களிலும் தூய்மையுடைவராக இருத்தல் வேண்டும்.

சிரத்தையே அடிப்படை

நம் மக்கள் மனதில் மறுபடியும் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். எதையும் தம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை நம் மக்களுக்குள் தோற்றுவித்தாலன்றி, நம் சமூகத்துள் இப்பொழுது தோன்றியிருக்கும் பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. நமக்கு வேண்டியவை சிரத்தையும் தன்னம்பிக்கையுமே. மனிதனுக்கும் மனிதனுக்கும் வித்தியாசத்தை உண்டு பண்ணுவது, அவரவருக்கிருக்கும் தன்னம்பிக்கையிலும், சிரத்தையிலுமுள்ள வித்தியாசமே தவிர வேறு எதுவுமன்று. ஒருவனைப் பலமுள்ளவனாக்குவது அவனிடமிருக்கும் தன்னம்பிக்கையே. மற்றொருவனைப் பலவீனன் ஆக்குவது அவனிடம் அத்தன்னம்பிக்கை இல்லாமையே. தன்னைப் பலமற்றவனாக நினைப்பவன் பலமற்றவனாகவே ஆகிறான் என்று எங்கள் குருதேவர் உரைப்பதுண்டு. அது முற்றிலும் உண்மை . அளவற்ற தன்னம்பிக்கை உங்கள் மனதில் புக வேண்டும். மேலை நாட்டு மக்களிடம் காணப்படும் சக்தி அவர்களுக்குத் தங்கள் உடல் பலத்திலுள்ள நம்பிக்கையினின்றும் உண்டானது. நீங்கள் ஆன்மாவில் நம்பிக்கை வைத்தால், இன்னும் பன்மடங்கு சக்திபெற முடியுமன்றோ ?

எல்லாம் நமக்குள்ளே

இந்த ஒரு விஷயத்தை நன்கு தெரிந்து கொள்ளும்படி மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தான் பலமற்றவன் சக்தியற்றவன் என்று சதா நினைப்பவனிடமிருந்து ஒரு நன்மையும் விளைவதில்லை. ஒருவன் அல்லும் பகலும், தான் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பவன், தாழ்ந்தவன், சக்தியற்றவன், ஒன்றுமில்லாதவன் என்றே நினைப்பானேயானால் அவன் சக்தியற்றவனாகவே ஆகிறான். ‘நான் சகல சக்தியும் பெற்றவன்: எதையும் செய்யக்கூடியவன்’ என்று நினைப்பானேயானால் அப்படியே ஆகிறான். நீங்கள் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய பெரிய உண்மை இது. நாம் அனைவரும் சர்வ சக்தியும் வாய்ந்த மகா சக்தியின் குழந்தைகள். நாம் எல்லையில்லாத தெய்வீகச் ஜோதியினின்றும் தோன்றிய பொறிகள். நாம் எப்படி சக்தியற்றவர்களாக முடியும்? ‘நாம் சகல சக்தியும் பொருந்தியவர்கள்: எக்காரியத்தையும் செய்து முடிக்கச் சித்தமாய் இருப்பவர்கள்; நம்மால் எக்காரியத்தையும் செய்து முடிக்க முடியும்’ என்ற தன்னம்பிக்கை நம் முன்னோர்கள் மனதில் இருந்தது. அவர்கள் பெற்றிருந்த தன்னம்பிக்கையே அக்காலத்தில் உலகிற்குச் சிறந்த நாகரிகத்தை உண்டாக்கக்கூடிய சக்தியை அவர்களுக்களித்தது. எந்த தினத்தில் மக்கள் தன்னம்பிக்கையை இழந்தார்களோ அன்றிலிருந்தே நாம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்திருப்பதைக் காணலாம்.

சிரத்தையையும், தன்னம்பிக்கையையும் மக்களுக்குப் போதிப்பதே என் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன். நான் மறுபடியும் கூறுகிறேன். கேளுங்கள், இத்தன்னம்பிக்கை மக்களுக்குள் இயங்கும் மகத்தான சக்திகளில் ஒன்று.

தன்னம்பிக்கையை நீங்கள் அனைவரும் பெறுங்கள்! சமுத்திரத்திலிருந்து ஒரு சிறிய குமிழியும் தோன்றலாம்; மலை போன்ற பெரிய அலையும் தோன்றலாம். ஆனால், இவ்விரண்டிற்கும் பின்னால் எல்லையற்ற அளக்கவொண்ணாத ஒரே பெரிய சமுத்திரம்தான் இருக்கிறது என்பதை உணருங்கள்! அத்தகைய எல்லையற்ற மகத்தான சக்தி எனக்கும் உங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. அந்தப் பரந்த எல்லையற்ற சக்தி வாய்ந்த தெய்வீகச் சமுத்திரம் அனைவர் பின்னும் இருக்கிறது. ஆதலால், சகோதரர்களே, உயிர் கொடுக்கக்கூடிய இந்த உயர்ந்த சீரிய கொள்கையை உங்கள் குழந்தைகளுக்குப் பிறவியிலிருந்தே ஊட்டி வளர்ப்பீர்களாக!

2. கல்வியின் தத்துவம்

2. கல்வியின் தத்துவம்

மனிதன் உள்ளத்தில் புதைந்திருப்பது

மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வியெனப்படும். மனிதனிடத்து அறிவு இயல்பாக அமைந்திருப்பது; அது புறத்தேயிருந்து வருவதொன்றன்று; அது அகத்தே அமைந்திருப்பது. ஒரு மனிதன் ‘அறிகிறான்’ என்று சொல்லுகிறோம். அதை மனோதத்துவ நூலிற்கேற்ற மொழியில் சொல்லின் ‘அதைக்கண்டு கொள்கிறான் அல்லது அறியாமைத் திரையை விலக்குகிறான்’ என்று சொல்லுதல் வேண்டும். ஆராய்ந்து பார்க்குமிடத்து எல்லையற்ற அறிவுக் களஞ்சியமாகிய ஆன்மாவை மூடியிருக்கும் அறியாமைத் திரையை நீக்குதலே கற்றல்’ என்பதன் பொருளாகும். தத்துவ அறிஞராகிய நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார் என்கிறோம். [Law of Gravitation] அது அவர் வருவாரென்று எங்காவது மூலையில் காத்துக்கொண்டிருந்ததா? இல்லை. அது அவர் உள்ளத்திலேயேயிருந்தது. உற்ற காலம் வந்ததும் அவர் அதைக்கண்டு வெளிப்படுத்தினார். உலகு இதுகாறும் பெற்ற அறிவு முழுவதும் மனதிலிருந்து வெளிவந்ததே. உலகிலுள்ள அறிவு அனைத்தும் பொதிந்த எல்லையற்ற நூற்களஞ்சியம் நமது உள்ளத்து ஆராய்ச்சிக்கு வெறும் தூண்டுகோல் மட்டுமே. நமது உள்ளத்தை நாம் அறிவதற்கு அவசியமான குறிப்பையும், சந்தர்ப்பத்தையும் கொடுக்கும் கருவியே அது. பழம் விழுந்த குறிப்பினைக் கண்ட நியூட்டன், அதன் காரணத்தை ஆராயத் தமது உள்ளத்தை உற்று நோக்கினார். முன்பு கண்டுபிடித்த முடிவுகளோடு ஒரு புது முடிவு புலப்பட்டது. அங்ஙனம் அவர் கண்ட முடிவினை நாம் புவியீர்ப்பு விசை எனக் கொள்கிறோம். அவ்விதி, பழத்திலோ அல்லது பூமியின் நடுவிலோ இருக்கவில்லை.

கற்றல் என்றால் என்ன ?

ஆகவே ஞானம் அனைத்தும் நம் உள்ளத்திலே தானிருக்கிறது. இவை சாதாரணமாக மறைந்து கிடக்கின்றன. இவற்றை மூடியிருக்கும் திரையை அகற்றுதலே கல்வி கற்றலாகும்; இவ்வாறு திரையைப் படிப்படியாக அகற்றுவது அறிவின் வளர்ச்சியே ஆகிறது. எவனொருவனுடைய உள்ளத்தினின்றும் இத்திரை பெரிதும் அகன்றுவிட்டதோ அவன் பேரறிஞன் ஆகிறான். இங்ஙனம் அகலப் பெறாதவன் பேதையாயிருக்கிறான். முற்றும் அகலப் பெற்றவன் முழுதும் உணர்ந்த ஞானியாகிறான். கல்லினுள்ளே நெருப்பு இருப்பது போல உள்ளத்தினுள் அறிவு அமைந்திருக்கிறது. கல்லை ஒன்றோடொன்று உரசும் போது தீ வெளியாகிறது. புறத்தே தோன்றும் குறிப்பின் மூலம் அறிவு வெளியாகிறது. சகல அறிவும் ஆற்றலும் நம் உள்ளத்திலேயே இருக்கின்றன. எல்லாவிதமான சக்திகள், இயற்கையின் ரகசியங்கள், ஆற்றல்கள் எனப் பலவாறாக நாம் கூறும் அனைத்தும் மனத்துள்ளேயிருக்கின்றன. மனித ஆன்மாவே சகல ஞானத்திற்கும் பிறப்பிடமாயிருக்கிறது. எண்ணற்ற காலமாக நமது மனதில் புதைந்திருக்கும் ஞானத்தை வெளிப்படுத்துவதே கல்வியாகும்.

உண்மையில் எவரும் மற்றவரிடம் கற்பதில்லை . ஒவ்வொருவரும் தமக்குத் தாமேதான் கற்றுக்கொள்ள வேண்டும். புறத்தேயுள்ள ஆசான் தூண்டுகிறார். அதனால், அகத்தே உள்ள ஆசான் விழித்தெழுந்து அறிந்துகொள்ள நமக்கு உதவி செய்கிறார்.

குழந்தை தானாகவே கற்கிறது

நம்முடைய அனுபவத்தினாலும், எண்ணங்களினாலுமே எல்லாம் தெளிவாகின்றன. பல ஏக்கர் கொண்ட நிலத்தைக் கவர்ந்து, பரந்து வானளாவி வளர்ந்திருக்கும் ஆலமரம், அதன் சிறு விதையில் அடங்கியிருந்தது. அந்த விதை கடுகில் கால் பங்கிருக்கலாம். இம்மரத்தில் காணும் சக்தியனைத்தும் அந்த நுண்ணிய வித்தில் அடங்கியிருந்தது. அதேபோல் இப்போது காணப்படும் அபார மூளைகளும் ஆதியில் அணு அளவேயான விதையில் புதைந்திருந்தன. இது விந்தையாகத் தோன்றும்; ஆனால் உண்மை ! நாம் ஒவ்வொருவரும் அணுவுக் கணுவான ஜீவ அணுவிலிருந்தே தோன்றியிருக்கிறோம். நம் சக்திகளனைத்தும் அணுவுக்குள் அடங்கியிருந்தன. நம் சக்திகளனைத்தும் உணவிலிருந்து வந்தனவெனச் சிலர் நினைக்கலாம். ஆனால், அப்படிச் சொல்ல முடியாது. ஏனெனில், மலையளவு உணவைக் குவித்தாலும் இச்சக்தியை உண்டாக்க முடியுமா? மனித ஆன்மாவில் அளவற்ற சக்தி அடங்கியிருக்கிறது. மனிதன் அதை உணர்ந்திருக்கலாம் அல்லது உணராமலிருக்கலாம்; எனினும் எல்லையற்ற ஆற்றல் ஆன்மாவினுள் அடங்கி நிற்கிறது என்பது உண்மை . இதைச் சரியாக உணர்ந்த மாத்திரத்தில் மனிதன் இச்சக்தியை வெளிப்படுத்த முடியும்.

இந்தத் தெய்வ ஒளி அனைவரின் மனதிலும் மறைந்திருக்கிறது. அது ஓர் இரும்புப் பாத்திரத்தினுள் வைத்த விளக்கைப் போன்றது. இரும்பின் மூலம் விளக்கின் ஒளி பிரகாசிக்க முடியாது. ஆனால், தூய்மையினாலும் சுயநலமின்மையாலும் பாத்திரத்தின் தன்மையைக் கண்ணாடியாக மாற்றி, அவ்வொளியை பிரகாசிக்கச் செய்ய முடியும். ஸ்ரீராமகிருஷ்ண தேவரைப் போன்ற பெரியோர்கள், இவ்விதம் இரும்புப் பாத்திரம் கண்ணாடிப் பாத்திரமாக மாறுவது போல், தூய நிலையை அடைந்தவர்கள். அவர்கள் மூலம் அவர்களுக்குள்ளிருக்கும் தெய்வீக ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.

குழந்தை வளர உதவி செய்க

ஒரு செடியை அதன் இயற்கையை மீறி வளரச்செய்ய முடியாது. அதைப்போன்றதே குழந்தைக்குக் கல்வி புகட்டுதலும். செடி தன் இயற்கைப்படி தானே வளரும்; அங்ஙனமே குழந்தையும் தன் இயற்கையை ஒட்டியே சுயமாகக் கற்றுக்கொள்கிறது. ஆனால், நாம் ஒன்று செய்ய முடியும். குழந்தை சுபாவப்படி வளருவதற்கு உதவி செய்யமுடியும். அதன் வளர்ச்சியை நாம் துரிதப்படுத்த முடியாது. ஆனால், அதன் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பவற்றை நாம் நீக்கலாம். அதற்கு மேல் அது பெறும் அனுபவத்திலிருந்துதான் அறிவு வளர்ச்சி உண்டாகும். ஒரு செடியின் வளர்ச்சிக்கு உதவியாயிருக்கும் பொருட்டு, பூமியைக் கிளறிவிடலாம். சுற்றிலும் வேலியிட்டு மற்ற பிராணிகள் அதை அழிக்காமல் காப்பாற்றலாம்; அது வளருவதற்கான எரு, தண்ணீர், காற்று முதலியவற்றை அதற்குக் கொடுக்கலாம். இவ்வளவோடு நம் வேலை நின்று விடுகிறது. அதற்கு வேண்டியதை அது தானே உட்கொண்டு ஜீரணிக்க வேண்டும்; அது போலத்தான் ஆசிரியர் செய்யும் உதவியும். ஆசிரியர்கள் தாங்கள் கற்பிப்பதாக எண்ணுவதனாலேயே எல்லாவற்றையும் கெடுத்துவிடுகின்றனர். சகல ஞானமும் மனிதனுக்குள்ளேயே புதைந்திருக்கிறது. அதைத் தூண்டி எழுப்புதலே தேவை. அதுவே ஆசிரியரின் கடமை. சிறுவர்கள் தங்கள் சொந்த அறிவை உபயோகப்படுத்தவும், தங்கள் கை, கால், கண், செவி ஆகியவற்றைச் சரியாகப் பயன்படுத்தவும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு நாம் அவர்களுக்கு உதவிசெய்தால் அதுவே போதுமானது.

கட்டாய முறை தவறு

கழுதையை நன்கு அடித்தால் அது குதிரையாகுமென்று யாரோ சொல்லக்கேட்டு அவ்விதமே ஒருவன் செய்தான் என்று ஒரு கதையுண்டு. இத்தகைய முறையிலேயே நம் பிள்ளைகளுக்கு இப்போது கல்வியளிக்கப்படுகிறது. இம்முறை ஒழிய வேண்டும். பிள்ளைகளின் விஷயத்தில் பெற்றோர் அதிகமாகப் தலையிட்டு சிறு விஷயங்களிலும் தங்கள் விருப்பம் போல் செய்யும்படி வற்புறுத்துவதனாலேயே பிள்ளைகள் தங்களின் சுய சிந்தனையை இழந்து சரியான வளர்ச்சியடையாமற் போய்விடுகின்றனர். ஒவ்வொருவரிடமும் பல உணர்ச்சிகள் இருக்கின்றன. அவை சரியாக திருப்தி செய்யப் பெறவேண்டும். பலாத்கார முறையில் சீர்திருத்தம் செய்ய முயல்வதில் சீர்திருத்தத்தின் நோக்கம் குன்றுகிறதே ஒழிய நிறைவேறுவதில்லை. ஒருவனுக்குச் சுதந்திரம் அளித்தால் அவன்பலம் பெற்றுச் சிங்கம் போல் மாற வழியுண்டு. ஆனால், அவனை கட்டாயப்படுத்தி அடக்கி வைத்தால் அவன் தன் குறைகளை மறைத்து நரிபோலாவான்.

உடன்பாட்டு முறை

நாம் உடன்பாட்டு முறையில் உயர்ந்த எண்ணங்களையும், இலட்சியங்களையும் கொடுக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் மக்களைப் பலவீனப்படுத்துகின்றன. பெற்றோர் சிலர் தங்கள் பிள்ளைகளை எப்பொழுதும் எழுதும்படியும் படிக்கும்படியும் வற்புறுத்திக்கொண்டும், “நீங்கள் உதவாக்கரைகள், மடச்சாம்பிராணிகள்” என்று சதா திட்டிக்கொண்டும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அப்பிள்ளைகள் பல சமயங்களில் இப்படியே உதவாக்கட்டைகளாகவும், மடையர்களாகவும் ஆனதை நீங்கள் கண்டதில்லையா? அன்புடன் புத்திமதி சொல்லி, அவர்களை உற்சாகப்படுத்தினால் அவர்கள் கண்டிப்பாகச் சரியான வளர்ச்சியைப் பெறுவார்கள். உடன்பாட்டு முறையில் அவர்களுக்கு உயர்ந்த கருத்துக்களைக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் சுயமாகத் தாங்களே தங்கள் காரியங்களை நிர்வாகம் செய்யக்கூடிய சக்தியைப் பெறுவார்கள். மொழியிலாகட்டும் அல்லது இலக்கியத்திலாகட்டும் கல்வியிலாகட்டும் அல்லது இதர கலைகளிலாகட்டும், நினைவிலாகட்டும் அல்லது செயலிலாகட்டும் மக்கள் செய்யும் குற்றங்களைச் சுட்டிக்காட்டி, குறைகூறுவதில் மட்டும் பயனில்லை. ஆனால் அவர்கள் குற்றங்களின்றி எவ்விதம் இன்னும் நன்றாகத் தங்கள் பணிகளைச் செய்யமுடியும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். மாணவர்களின் தன்மையை அனுசரித்துக் கற்பித்தலே கல்வி பயிற்றுவதற்கு ஏற்ற முறை. நம்முடைய முந்தைய வாழ்க்கைகள் நமது மனத்தின் போக்கைத் தீர்மானம் செய்கின்றன. எனவே, நமக்குக் கொடுக்கப்படும் கல்விப் பயிற்சி நமது மனப்போக்குக்கு ஏற்றதாயிருக்க வேண்டும். ஒவ்வொருவனையும் அவன் இருக்கின்ற நிலையிருந்து முன்னேறும்படி உதவிசெய்யவேண்டும். மிகவும் கீழானவர்கள் என்று நாம் நினைத்தவர்களைக்கூட ஸ்ரீராமகிருஷ்ண தேவர் ஊக்கமளித்து அவர்களின் வாழ்க்கையின் போக்கையே புதிதாக மாற்றியமைத்த அற்புதத்தை நாம் அறிவோம். எவருடைய தனிப்பட்ட சுபாவத்தையும் அவர் அழிக்கவில்லை. மிகத் தாழ்ந்தவர்களுக்கும் உற்சாகமளிக்கக்கூடிய வார்த்தைகளைச் சொல்லி அவர்களை முன்னேற்றமடையச் செய்தார்.

சுதந்திரமே வளர்ச்சிக்கு அவசியம்

சுதந்திரமே மனித வளர்ச்சிக்கு முதல் அவசியம். “இந்தக் குழந்தைக்கு அல்லது அந்தக் குழந்தைக்கு நான் விமோசனம் அளிப்பேன்” என்று யாராவது சொல்லத் துணிவார்களேயானால், அது தவறு, முற்றிலும் தவறு என்று நான் சொல்வேன். தயவுசெய்து ஒதுங்கி நில்லுங்கள்; அவரவர் பிரச்சினைகளை அவரவர்களே தீர்த்துக் கொள்வார்கள். கடவுளுக்கு மீறின சக்தி இருக்கிறதென்று நினைக்க உங்களுக்கு அவ்வளவு அகம்பாவமா? ஒவ்வோர் ஆன்மாவும் கடவுளின் வடிவம் என்பதை நீங்கள் உணரமாட்டீர்களா? எல்லோரையும் கடவுளாகப் பாருங்கள். சேவை செய்யத்தான் உங்களுக்கு உரிமை உண்டு. உங்களுக்கு அந்தப் பாக்கியம் இருந்தால் கடவுளின் குழந்தைகளுக்குச் சேவை செய்யுங்கள். ஆண்டவனின் குழந்தைகளுக்கு உதவி செய்ய முடியுமானால், நீங்கள் அவன் அருள் பெற்றவர்களாவீர்கள். மற்றவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைக்காமலிருக்க, நீங்கள் இதைப்பெற்றது ஆண்டவன் அருள் உங்களுக்கு இருக்கிறதென்பதற்கு அறிகுறி என்று உணருங்கள்! இச் சேவையை இறைவனின் ஆராதனையாகப் பாவித்துச் செய்வீர்களாக!

1. ஆண்மை தரும் கல்வி

1. ஆண்மை தரும் கல்வி

கல்வியின்முதன்மை

ஐரோப்பாவில் பல நகரங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். அங்கு ஏழை மக்கள் கூட எவ்வளவு நாகரிகத்துடனும் சௌகரியத்துடனும் வாழ்கிறார்கள் என்பதை கவனித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் நம் நாட்டு ஏழை மக்களின் நினைவு என் மனதில் வர, கண்ணீ ர் சிந்தி அழுதிருக்கிறேன். இந்த வித்தியாசத்திற்குக் காரணம் என்ன? ‘கல்வி’ என்பதுதான் எனக்குக் கிடைத்த பதில். கல்வி, தன்னம்பிக்கை – இவற்றின் மூலமே, நம்முள் மறைந்திருக்கும் தெய்வீகச் சக்தியை நாம் வெளிப்படுத்த முடியும்.

அயர்லாந்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேற வரும் மனிதர்களை நான் நியூயார்க் நகரத்தில் கவனித்திருக்கிறேன். அவர்கள் வரும்போது மனம் தளர்ந்து, வாழ்க்கையில் அடிபட்டுச் சலித்துப்போன தோற்றத்துடன், மனதில் உற்சாகமின்றி வருவார்கள். கையில் ஒரு தடி, அதன் ஓரத்தில் சில கந்தைத் துணிகள் – இவைகளே அவர்களிடமிருந்த சொத்துக்கள். அஞ்சிய நடையும் வெருண்ட பார்வையும் அவர்களிடம் தென்படும். ஆனால், ஆறு மாதங்களில் இந்தக் கோலம் முற்றிலும் வேறுபடுகிறது; நிமிர்ந்து நடக்கிறார்கள்; உடைகள் மாறியிருக்கின்றன; அவர்கள் கண்களிலும் நடையிலும் முன்னிருந்த பயமும் மருட்சியும் இல்லை. இதற்குக் காரணம் என்ன? அயர்லாந்தில் இவர்களைக் கேவலமாக நினைத்தும், கேவலமாக நடத்தியும் வந்தார்கள். இயற்கையே அவர்களில் ஒவ்வொருவனையும் பார்த்து, அப்பா உனக்கு நல்வாழ்வு கிடையாது. நீ அடிமையாகப் பிறந்து அடிமையாகவே உன் வாழ்க்கையைக் கழித்து அடிமையாகவே சாக வேண்டியதுதான்’ என்று உரைத்த மாதிரியிருந்தது. பிறவியிலிருந்தே இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டதால், அவற்றை அவன் நம்பி, தான் மிகவும் தாழ்ந்தவன் என்ற உணர்ச்சியால் மயங்கிக் கிடந்தான். ஆனால் அமெரிக்காவில் அவன் அடியெடுத்து வைத்ததும், வேறு ஒலிகள் அவன் காதில் விழுந்தன: ‘அப்பா, எங்களைப் போல் நீயும் ஒரு மனிதன்; உலகில் உயர்ந்த காரியங்கள் அனைத்தையும் சாதித்தவர்கள் மனிதர்கள். அவர்கள் உன்னையும் என்னையும் போன்றவர்களே. ஆண்மை மாத்திரம் இருந்தால், நம்மைப் போன்ற மனிதர்கள் எதையும் செய்து முடிக்க முடியும். எனவே, தைரியமாக இரு!’ இவ்வார்த்தைகளைக் கேட்டு அவன் நிமிர்ந்து பார்த்தான். அவ்வார்த்தைகள் உண்மை என்பதை உணர்ந்தான். இயற்கையே அவன் முன் நின்று, எழுந்திரு, விழித்திரு, கருதிய கருமம் கைகூடும்வரை உழைத்திடு’ என்று கூறுவது போலிருந்தது.

எதிர்மறைக் கல்வி கொடியது

அயர்லாந்தைப் போலவே, நம் நாட்டுச் சிறுவர்களும், எதிர்மறைக் கல்வி [மக்கள் மனதில் தன்னம்பிக்கையையும் சிரத்தையையும் ஊட்டாத கல்வி எதிர்மறைக் கல்வி எனப்படும்.] பெறுகிறார்கள். இந்தக் கல்விமுறையில் சில நல்ல அம்சங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை மறைக்கும் அளவிற்கு இதன் கெடுதல்கள் அதிகமாக இருக்கின்றன. முதலாவதாக, அந்தக் கல்விமுறை நம் மக்களுக்கு மனிதத் தன்மையை அளிக்கக்கூடிய கல்வியாக இல்லை; அது முற்றிலும் எதிர்மறைத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. எதிர்மறை உணர்ச்சியை ஊட்டும் கல்வி அல்லது பயிற்சி, சாவினும் கொடியது.

நாம் எவ்விதமான சக்தியும் வலிமையும் அற்றவர்கள் என்று அக்கல்வி நமக்குப் போதிக்கிறது. உலகில் உயர்ந்த பெரியோர்கள் இந் நாட்டில் தோன்றியிருக்கிறார்கள் என்பதைச் சாதாரணமாக நமக்கு உணர்த்துவதேயில்லை. [நம் மனதில் தன்னம்பிக்கையையும் சிரத்தையும் வளர்க்கக்கூடிய முறை உடன்பாட்டு முறை எனப்படும்.] உடன்பாட்டு முறையில் நமக்கு எதுவும் கற்பிக்கப்படுவது கிடையாது. நம் கைகளையும் கால்களையும் சரியாகப் பயன்படுத்தக்கூட நாம் கற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக, சென்ற ஐம்பது ஆண்டுகளில் இக்கல்வியின் மூலம் அறிவு வளர்ச்சியில் தேர்ந்த ஒருவர்கூட நம்மிடையே தோன்றவில்லை. தற்காலத்தில் நம் நாட்டில் தோன்றிய அறிவாளிகள் அனைவரும் வெளிநாடுகளில் கல்வி பயின்றவர்களாகவோ, நம் நாட்டில் இன்னும் சிற்சில இடங்களில் திகழும் பழைய கல்விக்கூடங்களில் மறுபடியும் பயின்று தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டவர்களாகவோ இருக்கிறார்கள்.

கல்வி வெறும் விஷயங்களைத் திணிப்பதன்று

கல்வியென்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணிப்பதன்று. அப்படித் திணிக்கப்படும் விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் – அவனோடு ஒன்றாமல் தொந்தரவு செய்துகொண்டேயிருக்கும். அதனால் என்ன பயன்? கற்கும் விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிப் பயன்படவேண்டும். அவை உயிரூட்டுவனவாய், ஊக்கம் அளிப்பனவாய், மனிதத்தன்மையைத் தருவனவாய், ஒழுக்கத்தை உருவாக்குவனவாய் இருத்தல் வேண்டும். நீங்கள் ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களை நன்றாகப் புரிந்துகொண்டு அவற்றை உங்கள் வாழ்க்கையிலும் நடத்தையிலும் பிரதிபலிக்கச் செய்வீர்களானால், ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்தவனை விடப் பெரிய கல்விமான்களாவீர்கள். கற்க வெறும் விஷயங்களைச் சேகரிப்பதுதான் கல்வியென்றால் புத்தகசாலைகளன்றோ பெரிய மகான்களாகியிருக்கும்! அகராதிகளன்றோ ரிஷிகளாகிவிடும்!

அன்னிய நாட்டவரின் எண்ணங்கள் சிலவற்றை மனப்பாடம் செய்வதை நீங்கள் கல்வியெனக் கொண்டிருக்கிறீர்கள். பல விஷயங்கள் மூளையில் திணிக்கப்பட்டு ஒரு பல்கலைக்கழகப் பட்டம் பெற்றுவிட்டால், கல்விமான்கள் என்று உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உண்மையில் கல்வியாகுமா? உங்கள் கல்வியின் நோக்கமென்ன? ஒரு குமாஸ்தா ஆவது அல்லது வக்கீல் ஆவது, அல்லது மீறினால் ஒரு மாஜிஸ்ரேட் ஆவது — இவைதானா உங்கள் லட்சியம்? இவை உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் என்ன நன்மையைச் செய்யும்? கண் விழித்துப் பாருங்கள்! அளவற்ற உணவுக்கும் வளத்திற்கும் பெயர் பெற்ற இப்பாரத நாட்டில் இப்பொழுது உணவின்றித் தவிப்போர் எவ்வளவு பேர் என்பதைக் கவனித்துப் பாருங்கள்? உங்கள் கல்வி இக்குறையைத் தீர்க்க உதவுமா? சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தைரியமாக நடத்துவதற்கு உதவக் கூடிய பயிற்சியை அளிக்காத ஒரு கல்வியும் கல்வியாகுமா? மக்கள் மனதில் புதைந்துள்ள மன வலிமையையும், தரும சிந்தனையையும், ஆண்மையையும் வெளிப்படுத்தாத ஒரு கல்வி முறையைக் கல்வியென்று எவ்வாறு சொல்லமுடியும்?

நமக்கு வேண்டுவது

ஒழுக்கம் அளிப்பது, மனவலிமையைத் தருவது, பரந்த அறிவைத் தருவது, ஒருவனை சுயவலிமை கொண்டு தன்னம்பிக்கையுடன் இருக்கச் செய்வது ஆகியவற்றையளிக்கும் கல்வியே நமக்கு வேண்டும். அன்னியர் ஆதிக்கமின்றி நம் அறிவுக் களஞ்சியங்கள் எல்லாவற்றையும் நாமே ஆராய்ச்சி செய்தல் அவசியம். அதனோடு ஆங்கில மொழியையும் மேலைநாட்டு விஞ்ஞான நூல்களையும் நமக்கு வேண்டும். மேலும் தொழிற்கல்வியும், தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய சகல அறிவும் நமக்குத் தேவை. இவற்றின் மூலம், படித்தவர்கள் வேலை தேடி அலைவதற்குப் பதிலாக, தங்களுக்கு வேண்டிய அளவு சம்பாதித்துக் கொள்ளவும், கஷ்ட காலத்திற்கெனச் சிறிது சேமித்து வைக்கவும் ஆற்றல் பெறுவார்கள்.

ஆண்மை தரும் கல்வி

ஆண்மையளிப்பதே கல்வியின் இலட்சியமாயிருக்க வேண்டும். எல்லாப் பயிற்சிகளின் நோக்கமும் அதுவே. மனிதனுடைய மனோசக்தியைத் தன் வயப்படுத்தி, தக்க துறையில் பயன்படுத்துவதே கல்வியெனப்படும். இரும்பு போன்ற தசைகளும், எஃகு போன்ற நரம்புகளும், எதனாலும் தடுக்கமுடியாத அளவற்ற சக்தியும் வாய்ந்தவர்களே நம் நாட்டிற்கு இப்போது தேவை. அந்த சக்தியானது, எதற்கும் அஞ்சாததாய், அண்ட சராசரங்களின் அந்தரங்க இரகசியங்களையும் ஊடுருவி அறியவல்லதாய், அறிந்தபின் அவற்றின் நோக்கத்தை எவ்வகையிலேனும் பூர்த்தி செய்யும் ஆற்றல் உள்ளதாய், அவசியமானால் ஆழ்கடலின் அடியிலும் செல்லவல்லதாய், மரணம் ஏற்படினும் அஞ்சாததாய் இருத்தல் வேண்டும். அத்தகைய ஆண்மை தரக்கூடிய மதமே நமக்கு அவசியம்; ஆண்மை தரக்கூடிய கொள்கைகளே நமக்கு வேண்டும்; ஆண்மை தரக்கூடிய கல்வியே நமக்குத் தேவை.