எனது வாழ்வும் பணியும்

எனது வாழ்வும் பணியும்

ஷேக்ஸ்பியர் கிளப், கலிபோர்னியா, 27 ஜனவரி 1900

அன்பார்ந்த சகோதரிகளே, சகோதரர்களே!

இன்று காலையில் நான் பேசுவதாக இருந்த தலைப்பு வேதாந்தத் தத்துவம் என்பதாகும். அது சிறந்ததுதான். ஆனால் சற்று வறண்டது, மிக விரிவானது.

இதற்கிடையில் உங்கள் சங்கத் தலைவரும், வேறு சில அன்பர்களும் தாய்மார்களும் எனது பணியைப் பற்றியும், அதற்காக நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது பற்றியும் பேசுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். உங் களுள் சிலருக்கு இது ஆர்வமூட்டுவதாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி அல்ல. உண்மையில் உங்களுக்கு இதை எப் படி விளக்கிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. காரணம், என்னுடைய வாழ்க்கையிலேயே இதுபற்றி, இப் பொழுதுதான் முதன்முறையாக நான் பேசப் போகிறேன்.

என்னால் முடிந்த எளிய அளவில் நான் என்ன செய்ய முயன்று வருகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள, உங் களை இப்போது கற்பனைத் தேரிலேற்றி இந்திய நாட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறேன். விரிவான முறையில் இதை விளக்கவோ, இதனுடைய எல்லா அம்சங்களையும் எடுத்துக் கூறவோ இப்போது நேரமில்லை. மேலும், ஓர் அன்னிய இனத் தில் காணப்படும் சிக்கல்கள் அனைத்தையும் இந்தக் குறுகிய நேரத்தில் நீங்கள் புரிந்துகொள்வது என்பதும் இயலாத ஒன்றாகும். ஆயினும் இந்தியாவைப் பற்றிய ஓர் எளிய சித் திரத்தை உங்கள் முன் வைக்க முயல்வேன் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

இடிந்து பாழாகிக் கிடக்கின்ற ஒரு பிரம்மாண்டமான கட்டிடம்போல் உள்ளது அது. முதல் பார்வையில் எந்த நம்பிக்கையும் தெரியவில்லை. அழிந்து சிதைந்துபோன நாடு அது. ஆனால் சற்று பொறுமையாக ஆராய்ந்து பார்த்தால், அதற்குப் பின்னால் ஏதோ ஒன்று இருப்பது புலனாகும். உண்மை என்னவென்றால், ஒரு மனிதன் எந்தவொரு உயரிய கொள்கை அல்லது லட்சியத்தின் புற வெளிப்பாடாக விளங்கு கிறானோ, அந்த லட்சியம் சிதைவுறாதவரை, அழிந்து போகாத வரை அவன் அழிவதில்லை; மீண்டும் தழைப்பான் என்பதற்கு நம்பிக்கையும் இருக்கிறது. உன் சட்டை இருபது தடவை திருடு போய்விட்டது என்பதால் நீ அழிந்துவிடுவாயா என்ன? புதிதாக ஒரு சட்டை வாங்கிக் கொள்ளலாம், அவ்வளவுதான். சட்டை என்பது பெரிய விஷயமல்ல. பணக்காரன் ஒருவன் கொள்ளையடிக்கப்பட்டான் என்றால் அவனது வலிமை போயிற்றா அல்லது உயிர் போயிற்றா? அதற்குப் பிறகும் அவன் உயிர் வாழ்கிறான்.

இந்தக் கருத்தின் அடிப்படையில் இந்தியாவைப் பார்த் தால் நாம் காண்பது என்ன? அது ஓர் அரசியல் ஆதிக்கம் பெற்ற நாடாக இல்லை ; அது ஓர் அடிமை நாடு. இந்தியர் களுக்குத் தங்கள் சொந்த நாட்டிலேயே பேசவோ, தங்கள் கருத்தை எடுத்துக் கூறவோ உரிமை இல்லை. அவர்கள் ஒரு முப்பது கோடி அடிமைகளே தவிர வேறு எந்தச் சிறப்பும் இல்லாதவர்கள். ஓர் இந்தியக் குடிமகனின் சராசரி மாத வரு மானம் ஒன்றரை ரூபாய். பட்டினிதான் பெரும்பான்மையான மக்களின் சர்வசாதாரண நிலைமை. எனவே வரவில் சிறிது குறைந்தாலும் லட்சக்கணக்கில் மக்கள் சாகின்றனர். ஒரு சிறிய பஞ்சம் என்றால் மரணம்தான் விளைவு. இந்தியாவின் அந்தப் பக்கத்தைப் பார்க்கும்போது, நான் அழிவைத்தான் காண்கிறேன்; நம்பிக்கைக்குத் துளியும் இடமில்லாத நலிவைத் தான் காண்கிறேன்.

ஆனால் நம்மால் ஒன்றை உணர முடிகிறது; இந்திய இனம் ஒருபோதும் செல்வத்திற்காக வாழ்ந்ததில்லை. ஒருவேளை பிற எந்த நாடும் குவித்திராத அளவிற்கு ஏராள மான செல்வத்தை ஈட்டியபோதிலும், அது செல்வத்தைப் பெரிதென்று கருதியதில்லை. காலங்காலமாக வீரமும் தீரமும் கொண்ட ஆற்றல் மிகுந்த நாடாக இருந்துவந்த போதிலும் வீரமே பெரிதென்று போற்றியதில்லை. வெற்றி வெறி பிடித்துப் பிற நாடுகளுக்குச் சென்றதில்லை. தன் நாட்டிலேயே, தான் வகுத்த தனது எல்லைகளுக்குள் இருப்பதிலேயே அது மன நிறைவு கண்டது. யாருடனும் அது போர் செய்ததில்லை. இந்திய நாட்டிற்கு ஏகாதிபத்திய மோகம் என்றுமே இருந்த தில்லை. செல்வமும் செல்வாக்கும் அதன் குறிக்கோள்கள் அல்ல.

பிறகு எதுதான் அதனுடைய குறிக்கோள்? இங்கு நாம் ஆராயப்போவது அவர்கள் நினைத்தது சரியா தவறா என்பதையல்ல. மற்ற நாடுகளுக்கிடையே அந்த நாடும் ஒன்றை நம்பிற்று; ஆழமாக, தீர்மானமாக நம்பிற்று. இந்த வாழ்க்கை நிலையற்றது, இறைவன் ஒருவனே உண்மைப் பொருள், ஆகவே வாழ்விலும் தாழ்விலும் அவனையே இறுகப் பற்ற வேண்டும் என்று உறுதியாக நம்பிற்று. நலிந்த காலங்களில் எல்லாம் மதமே அங்கு முதலிடம் பெற்றது. ஓர் இந்து, நீரைப் பருகுவது மதவுணர்வுடன், தூங்குவது மதவுணர்வுடன், நடப்பது மதவுணர்வுடன், திருமணம் செய்வது மதவுணர் வுடன், திருடுவதும் மதவுணர்வுடன்தான்.

இத்தகைய ஒரு நாட்டை நீங்கள் எப்போதாவது பார்த்த துண்டா ! நீங்கள் அங்கே ஒரு திருடர் கூட்டத்தைத் திரட்ட விரும்பினால், முதலில் அவர்களின் தலைவன் ஒருவிதமான மதக் கருத்து ஏதோ ஒன்றை அவர்களுக்குப் போதிக்க வேண் டும். பிறகு போலியான தத்துவக் கொள்கைகளை உருவாக்கி, அதுவே இறைவனை அடைவதற்குத் தெளிவான, விரைவான வழி என்று கூற வேண்டும். அப்பொழுதுதான் அவனைப் பின் பற்றுவார்கள். இல்லையெனில் அவனுடன் சேர மாட்டார்கள், போய்விடுவார்கள். இதிலிருந்து அந்த இனத்தின் உயிர்நாடி எதுவென்று தெரிகிறது அல்லவா? அந்த இனத்தின் குறிக்கோள் மதம்தான். இதுவரை அதை யாரும் தாக்காததால் அந்த இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ரோமாபுரியைப் பாருங்கள்! ஏகாதிபத்தியமும் நாடு பிடித்தலும் அதன் குறிக்கோளாக இருந்தது. அந்தக் குறிக் கோள் தாக்குண்டதும் சாம்ராஜ்யமே சிதறிச் சின்னாபின்னப் பட்டு மறைந்தொழிந்தது. கிரேக்க நாடு நிலைநாட்ட வந்த குறிக்கோள் அறிவு. அந்த அறிவு தாக்கப்பட்ட அளவில் அந்த நாடும் அழிந்தது. இதுபோன்றே பிற்காலத்தில் ஸ்பெயின் முதலான புதிய நாடுகளும் அழிந்தன. ஒவ்வொரு நாடும் உலகிற்காக ஒரு நோக்கத்தை முன்வைத்தே செயல்பட்டது. அந்த நோக்கம் பாதிக்கப் பெறாத வரையில் அந்த நாடு, எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அவற்றைத் தாக்குப்பிடித்து வாழ்ந்தது; நோக்கம் அழிந்தபோது நாடும் வீழ்ச்சியுற்றது.

இந்திய நாட்டின் இத்தகைய ஆதார சக்தி இன்றுவரை பாதிக்கப் படாமல் இருக்கிறது. அவர்களும் அதை விடாமல் பற்றிக்கொண்டுள்ளனர். பல்வேறு மூடக் கொள்கைகளின் நடுவிலேயும் அந்த ஆதார சக்தி வலிவுடன் விளங்குகிறது. பயங்கரமான மூடநம்பிக்கைகள் அவர்களிடம் காணப்படுகின்றன, அவற்றுள் சில குலைநடுங்கச் செய்பவை. அதனால் என்ன? தேசிய உயிர்த்துடிப்பு, அதன் நோக்கம், பணி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியா ஒருபோதும் பிறநாடுகளை வெல்கின்ற ஆற்றல் மிக்க நாடாக இருக்காது ஒருபோதும் இருக்காது. அது ஒரு போதும் வல்லரசாக இருக்காது. அது அவர்களின் வேலை யும் அல்ல. பல நாடுகளின் மாபெரும் இயைபு என்னும் இனிய இசையில் இந்தியாவின் சுரம் அது அல்ல. அப்படியானால் அவளது சுரம், அவளது பங்கு எது? இறைவன், இறைவன் மட்டுமே. உடும்புப் பிடியாக இந்தியா இறைவனைப் பற்றிக் கொண்டிருக்கிறது. எனவே நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கிறது.

நம்முடைய இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு நாம் ஒரு முடி விற்கு வருகிறோம். இந்த வறுமைக் கொடுமைகள், துன்பங்கள் ஆகிய அனைத்தும் எந்த விளைவையும் உண்டாக்காது. அந்த நாட்டு மனிதன் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே நம்பிக்கைக்கு இடமிருக்கிறது.

நல்லது, நாடு முழுவதிலும் அங்கே மதப் பணிகள் நடந்து வருகின்றன. புதுப்புது மதப் பிரிவுகள் தோன்றாத ஆண்டே அங்கு இல்லை எனலாம். நீரோட்டத்தின் வேகம் வலுப் பெற வலுப்பெற, சுழல்களும் அலைகளும் அதிகரிக்கின்றன. பிரிவுகள் அழிவின் அடையாளம் அல்ல. அவை வளர்ச்சி யின் அடையாளம். ஆகவே பிரிவுகள் பெருகட்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்த பிரிவு என்ற நிலை முதிரும்வரை இந்தப் பிரிவுகள் தழைக்கட்டும். இது பற்றி நாம் அடித்துக் கொள்ள வேண்டியதில்லை. என் இனி, உங்கள் நாட்டை எடுத்துக் கொள்வோம். நான் உங்களைக் குறை கூறுவதாக எண்ண வேண்டாம். இங்கு சமு தாயச் சட்டங்கள், அரசியல் அமைப்பு எல்லாமே வாழ்க்கைப் பயணத்தில் மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்த உலகில் வாழும்வரை அவன் மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம். உங்கள் தெருக்கள் எவ்வளவு துப்புரவாக இருக்கின்றன! உங்கள் நகரங்கள் எவ்வளவு அழகாகக் காட்சியளிக்கின்றன! பணம் சம்பாதிப்பதற்குத்தான் எத்தனை வழிகள்! வாழ்க்கையைச் சுவைத்து மகிழத்தான் எத்தனையெத்தனை வழிகள்! ஆனால் இங்கேயுள்ள ஒருவன், இதோ பாரப்பா! நான் இந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வேன். வேலை செய்வதில் எனக்கு விருப்பமில்லை’ என்று கூற முடியுமா? கூறினால் என்ன நடக்கும்? ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும். பார்த்தீர்களா! அவனுக்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை, துளியளவுகூட இல்லை. சமூகம் எப்படிச் சொல்கிறதோ அப்படிச் சென்றால்தான் அவனால் வாழ முடியும். இந்த வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதற் கான ஓட்டத்தில் அவன் சேர வேண்டும். இல்லாவிடில் சாக வேண்டும்.

இப்போது இந்தியாவிற்குத் திரும்புவோம். அங்கே ஒருவன், ‘நான் ஒரு மலையுச்சியை அடைந்து மூக்கு நுனியில் பார்வையைச் செலுத்தி எஞ்சியுள்ள என் வாழ்நாட்களைக் கழிக்கப் போகிறேன்’ என்று சொன்னால், ‘நல்லதப்பா போய் வா, இறையருள் உனக்கு விரைவிலேயே கிடைக்கட்டும்’ என்று ஒவ்வொருவரும் வாழ்த்துவார்கள். அவன் வாய் திறந்து கேட்கத் தேவையில்லை – யாராவது ஆடை கொடுப்பார்கள், அவனுக்கு எந்தத் துன்பமும் ஏற்படாது. ஆனால் ஒருவன், ‘இதோ பாருங்கள். நான் இந்த வாழ்க்கையின் சுகபோகங் பளைச் சிறிது நுகரப் போகிறேன்’ என்று சொன்னால் அவ் வளவுதான். எல்லா வாசல்களும் அவனுக்கு அடைத்துவிடும்.

இரண்டு நாடுகளின் கருத்துக்களும் நியாயம் அற்றவை என்று நான் கூறுகிறேன். இங்கே ஒருவன் விரும்பினால், என் அமர்ந்து மூக்கின் நுனியைப் பார்க்கக் கூடாது? பெரும் பான்மையினர் செய்வதையே ஏன் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்? இதற்கான காரணம் எனக்கு விளங்கவில்லை.

இந்தியாவிலும், ஒருவன் செல்வத்தை ஈட்டி ஏன் இன்ப மாக வாழக் கூடாது என்பதும் தெரியவில்லை. கோடிக் கணக்கானோர் தங்களுக்கு முரணானவற்றை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர். இந்தக் கொடுமையைச் செய்தவர்கள் அறிஞர்கள், இந்த அநீதியை இழைத்த வர்கள் சான்றோர்கள், ஆன்மீகப் பெருமக்கள். அறிவாற்றல் மிக்கவர்களும் மேதைகளும் சுமத்திய அநீதி இது என்பது தெரிய வரும். அறிஞர்கள் இழைக்கும் கொடுமை, பாமரர் செய்யும் அநீதியைவிடப் பயங்கரமானது என்பதை மறந்து விடாதீர்கள். ஆன்றோர்களும் சான்றோர்களும் தங்கள் கருத்துக்களை மக்கள்மீது திணிக்கும்போது ஆயிரமாயிரம் வழிகளில் கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் அமைத்து, பாமர மக்களால் அவற்றை உடைத்தெறிய முடி யாதபடிச் செய்து விடுகிறார்கள்.

இந்த நிலை இனியும் நீடிக்கக் கூடாது என்று நான் கூறுகிறேன். ஒரே ஒரு மகானை உருவாக்குவதற்காக லட்சக் கணக்கான பாமர மக்களைப் பலியிடுவதில் எந்தப் பயனு மில்லை. ஆன்மீகப் பெருமகனும் உருவாக வேண்டும், பிறரும் இன்புற்று வாழ வேண்டும். அத்தகையதொரு சமுதாயத்தை உருவாக்க முடியுமானால் அது வரவேற்கத் தக்கது. கோடி மக்கள் அரைபடுவார்களானால் அது நியாயமற்றது. அதை விட உலகம் உய்வதற்காக ஒரு மகான் துன்பங்களை ஏற்பதே மேலானது.

நம் ஒவ்வொரு நாட்டிலும் அவரவர் வழியில் சென்றுதான் நாம் செயலாற்ற வேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் அவனது மொழியில்தான் நாம் பேச வேண்டும். இங்கிலாந் திலோ அமெரிக்காவிலோ மதத்தைப் போதிக்க வேண்டு மானால் அரசியல் அமைப்பு முறைப்படித்தான் பணியாற்ற வேண்டும்-சங்கங்கள், மன்றங்கள், வாக்கு எடுத்தல், ஓட்டுப் போடுதல், தலைவர் எல்லாம் வேண்டும். மேலை நாட்டு மக்களின் மொழி அது, முறை அது. ப நேர்மாறாக, இந்தியாவில் அரசியலைக்கூட மதம் என்னும் மொழியின் வாயிலாகத்தான் பேச வேண்டும். ‘வீட்டைத் தினமும் தூய்மை செய்பவன் இன்ன இன்ன புண்ணியத்தைப் பெறுவான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கும், அல்லது அவன் கடவுளை அடைவான்’ என்ற முறையில்தான் அவர் களிடம் சொல்ல வேண்டும். இப்படிப் பேசாவிட்டால் நீங்கள் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள். எல்லாம் அவர்கள் வழியில் பேசுவதில்தான் இருக்கிறது. செயல் என்னவோ ஒன்றுதான். ஒவ்வோர் இனத்தாரிடமும் அவர்களின் மொழி யில் பேசினால்தான் நாம் பேசுவது அவர்களது உள்ளத்தில் சென்று பதியும். இதுதான் நியாயமானது. இது குறித்துக் கலவரப்படத் தேவையில்லை.

நான் சேர்ந்துள்ள சங்கத்தினர் துறவிகள் எனப்படு வார்கள். இந்தச் சொல்லிற்குத் ‘துறந்தவன்’ என்பது பொருள். இது மிகமிகப் பழமையான நெறி. ஏசு பிறப்பதற்கு ஐநூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த புத்தர் பெருமான் கூட இந்தத் துறவு நெறியைச் சேர்ந்தவர்தான். துறவுநெறியைப் போற்றி வளர்த்தவர்களுள் புத்தரும் ஒருவர், அவ்வளவே. அத்தகைய பழமை வாய்ந்தது இந்தத் துறவற நெறி. உலகிலேயே மிகவும் பழைய நூல்களான வேதங்களில் இது பற்றிய குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. ஒவ்வோர் ஆணும் பெண்ணும் வயது முதிர்ந்த காலத்தில் சமுதாயத்தை விட்டு முற்றிலும் விலகி, இறைவனையும் சொந்த முக்தியையும் பற்றியே நினைக்க வேண்டும் என்ற நியதி பண்டைய இந்தியாவில் இருந்தது. மாபெரும் நிகழ்ச்சியாகிய மரணத்திற்காக நம்மை ஆயத்தம் செய்துகொள்வதற்காகவே இந்த ஏற்பாடு. எனவே அந்தக் காலத்தில் முதியவர்கள் துறவிகளாவது வழக்கம். பிற் காலத்தில் இளையவர்களும் உலகைத் துறக்க ஆரம்பித்தனர். இளையவர்கள் செயல்துடிப்பு மிக்கவர்கள். மரத்தடியில் அமர்ந்தபடி எப்போதும் மரணத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க அவர்களால் இயலாது. எனவே அவர்கள் போதனை செய்யவும் மதப் பிரிவுகளை ஆரம்பிக்கவும் தொடங்கினர். புத்தரும் இளந்துறவியாக இருந்ததால்தான் அவரால் பெரிய சீர்திருத்தத்தைச் செய்ய முடிந்தது. வயது முதிர்ந்தவராக இருந்திருப்பாரானால் மூக்கு நுனியைப் பார்த்தவாறு அமர்ந்து அமைதியாக உயிர் துறந்திருப்பார்.

துறவுநெறி உங்கள் சர்ச் போன்றது அல்ல. அதில் சேரும் துறவியர் பாதிரிகள் அல்ல. மதபோதனை செய்கின்ற உங்கள் பாதிரிகளுக்கும் எங்கள் துறவிகளுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. இந்தியாவில் மத போதனை அல்லது புரோகிதம் எனப்படுவது சமுதாய வாழ்வில் உள்ள பல தொழில்களைப் போன்று பரம்பரையாக வருகின்ற ஒரு தொழில். தச்சன் மகன் தச்சனாக இருப்பதுபோல், கொல்லன் மகன் கொல்லனாக இருப்பதுபோல் புரோகிதனின் மகனும் புரோகிதனாக இருப் பான். அவன் திருமணம் செய்து கொண்டேயாக வேண்டும். மனைவி இல்லாத ஒருவனை முழுமையடைந்தவனாக இந்து சமுதாயம் கருதுவதில்லை. திருமணம் செய்துகொள்ளாதவன் மதச் சடங்குகளைச் செய்யும் உரிமையை இழக்கிறான்.

துறவிகளுக்குச் சொத்து கிடையாது. திருமணமும் கிடையாது. இதற்குமேல் வேறு எந்தக் கட்டுப்பாடான அமைப்பும் அவர்களுக்கு இல்லை. இந்தியாவிற்கே உரிய தனிச் சிறப்பான குரு சீடன் என்ற உறவைத் தவிர, வேறு எந்தப் பிணைப்பும் அறவிகளுக்கு இல்லை . நான் பணம் தருகிறேன், அவர் கல்வி கற்பிக்கிறார், அத்துடன் முடிந்தது என்ற முறையில் வெறுமனே சொல்லிக் கொடுப்பவர் அல்ல குரு. இந்தியாவில் இந்த உறவு முறை உண்மையில் ஒரு தத்தெடுக்கும் முறையாகவே உள்ளது. என் குரு, எனக்கு என் தந்தையைவிட மேலானவர். உண்மை யில் நான் அவரது மகன், ஒவ்வொரு நிலையிலும் நான் அவரது மகனே. என் தந்தையைவிட அவரே எனது முதல் மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரியவர். தந்தை இந்த உடலைத் தந்தவர் மட்டுமே. குருவோ முக்திக்கு வழிகாட்டுபவர். எனவே என் சொந்தத் தந்தையைவிட அவரே மேலானவர் என்று சொல்லப்படுகிறது. அவரிடம் கொள்ளும் இந்த அன்பும் மதிப்பும் என் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. இந்த ஓர் உறவு அமைப்புத்தான் துறவிகளிடம் காணப்படுகிறது. என் சீடர்களை நானும் மக்களாகவே ஏற்கிறேன். சிலவேளைகளில் குரு வயதில் சிறியவராகவும், சீடன் பெரியவனாகவும் இருப்ப துண்டு. அதனால் பரவாயில்லை. அப்போதும் குருவுக்கு அவன் மகன்தான். அவன் என்னை , ‘தந்தையே!’ என்றுதான் அழைக் கிறான். நானும் ‘மகனே!’ என்றும், ‘மகளே!’ என்றும்தான் அழைக்க வேண்டும்.

ஒரு வயதானவர் எனக்கு குருவாக அமைந்தார். அவர் மிகவும் விசித்திரமானவர். கற்றறிவை அவர் நாடவில்லை . நூல்களையும் அரிதாகவே படித்தார். ஆனால் உண்மையை நேரடியாகக் காண வேண்டும் என்று மகத்தானதொரு எண்ணம் அவர் சிறுவனாக இருந்தபோதே அவரைப் பிடித்து ஆட்டிற்று. முதலில் அவர் தமது சொந்த மத உண்மைகளை ஆராய்ந்தார். பிறகு பிற மத உண்மைகளை அறிந்தால் என்ன என்ற எண்ணம் அவரிடம் எழுந்தது. எனவே பல்வேறு நெறி களையும் ஒன்றன்பின் ஒன்றாகப் பின்பற்றத் தொடங்கினார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்தந்த மதச் சான்றோர்கள் என்ன கூறினார்களோ அதை அப்படியே கடைப்பிடித்தார். அந்தந்த மத பக்தர்களுடன் வாழ்ந்து, அந்தந்த மதங்கள் காட்டுகின்ற லட்சியத்தை அடைந்தார். அதன்பின்னர் அடுத்த பிரிவு சாதனையில் ஈடுபடுவார்.

இப்படிப் பல்வேறு நெறிகளையும் பின்பற்றிய பின்னர் அவையனைத்தும் நல்லவையே என்ற முடிவிற்கு வந்தார். எந்த மதத்தையும் அவர் பழிக்கவில்லை-அவை எல்லாம் ஒரே குறிக்கோளை அடையச் செய்யும் பல்வேறு பாதைகள். ‘இவ்வளவு பாதைகள் இருப்பது எவ்வளவு சிறப்புடையது! ஒரே ஒரு பாதை மட்டும் இருக்குமானால், அது ஒருவேளை ஒருவனுக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்கலாம். எத்தனை வழிகள் இருக்கின்றனவோ, உண்மையை அறிந்துகொள் வதற்கு அத்தனை வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. அதை ஒரு மொழியில் கற்க முடியாவிட்டால் இன்னொரு மொழியில் கற்பேன். இது இல்லை என்றால் மற்றொன்று, இப்படியே’ என்பார் அவர். இப்படி எல்லா மதங்களுக்குமே அவரது வாழ்த்து கிடைத்தது.

நான் போதிக்கின்ற கருத்துக்கள் அனைத்தும் அவரது கருத்துக்களை எதிரொலிப்பதற்கான முயற்சியே. அவற்றுள் ஒன்றுகூட எனக்குச் சொந்தமானதல்ல. தவறுகளுக்கும், பக்கு வப்படாத கருத்துகளுக்கும் மட்டுமே நான் சொந்தக்காரன். என் வாயிலிருந்து வரும் உண்மையானதும் நல்லதுமான சொற்கள் ஒவ்வொன்றும் அவரது குரலை எதிரொலிப்பதற் கான முயற்சி மட்டுமே. பேராசிரியர் மாக்ஸ்முல்லர் எழுதி யுள்ள அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பாருங்கள், அப்போது தெரியும்.

இந்தக் கருத்துக்களை நான் மற்ற இளைஞர்களுடன் அவரது திருவடிகளின் கீழ் அமர்ந்து அறிந்துகொண்டேன். அப்போது நான் சிறு பையன். எனக்குப் பதினாறு வயதாகிய போது நான் அவரிடம் சென்றேன். என்னைவிடச் சிறியவர் களும் என்னைவிடச் சற்று பெரியவர்களுமாக ஏறக்குறைய பன்னிரண்டுபேர் நாங்கள், சற்று அதிகமாகவும் இருக்கலாம். இந்த லட்சியத்தைப் பரப்ப வேண்டும் என்று நாங்கள் தீர் மானித்துக் கொண்டோம். பரப்புவது மட்டும் அல்லாமல் அதனை வாழ்ந்து காட்டவும் முடிவு செய்தோம். அதாவது, இந்துக்களின் ஆன்மீகத்தையும், பௌத்தர்களின் கருணையை யும், கிறிஸ்தவர்களின் செயல்திறனையும், முகமதியர்களின் சகோதர மனப்பான்மையையும் நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று எண்ணினோம். ‘இங்கேயே, இப்பொழுதே உலகம் முழுமைக்கும் பொதுவானதொரு மதத்தை உருவாக்கு வோம். கால தாமதம் சிறிதும் வேண்டாம்’ என்று உறுதி கொண்டோம்.

எங்கள் குரு கைகளால் பணத்தைத் தொட மாட்டார். இறைவனுக்கு நிவேதனமாக்கப்பட்ட உணவு சிறிது உண்பார்; சில முழங்களைக் கொண்ட பருத்தி ஆடை, அவ்வளவே. வேறெதுவும் இல்லை. எந்த வெகுமதிப் பொருளையும் அவர் ஏற்குமாறு செய்ய யாராலும் முடியாது. வியக்கத்தக்க இந்தப் பண்புகளோடுகூடிய அவர் கண்டிப்புமிக்கவராக இருந்தார். அதனால்தான் அவரால் சுதந்திரராக இருக்க முடிந்தது. இந்தியாவில் ஒரு துறவி, இன்று அரசனுடைய உயிர்நண்பனாக இருந்து, அவனுடன் அமர்ந்து விருந்து உண்பார்; நாளை, பிச்சைக்காரனுடன் மரத்தடியில் படுத்து உறங்குவார். ஒவ் வொருவருடனும் அவர் கலந்து பழக வேண்டும். எங்கும் தங்காமல் திரிந்துகொண்டே இருக்க வேண்டும். ‘உருண் டோடும் கல்லில் பாசி படியாது’ என்றுதானே பழமொழியும் சொல்கிறது. கடந்த பதினான்கு ஆண்டுகளாக நான் எந்த இடத்திலும் மூன்று மாதங்களுக்குமேல் தங்கியதில்லை. தொடர்ந்து சுற்றிக் கொண்டிருந்தேன். நாங்கள் எல்லோரும் அப்படித்தான் இருந்துவருகிறோம்.

இந்த ஒருசில இளைஞர்கள் இந்தக் கருத்துக்களையும் அவற்றின் செயல்முறை விளைவுகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டனர். உலகப் பொது மதம், ஏழைகளுக்கு இரங்கும் பெருங்கருணை இவை எல்லாம் கொள்கையளவில் இனிமை வாய்ந்தவைதான், ஆனால் செயல்படுத்திக் காட்ட வேண்டுமே!

பின்னர் வந்தது துன்ப நாட்கள். எங்கள் குருதேவர் உயிர் நீத்தார். எங்களால் இயன்றவரையில் அவருக்குச் சேவை செய் தோம். எங்களுக்கு நண்பர்கள் இல்லை. பைத்தியக்கார எண்ணங்களுடன் கூடிய இளைஞர்களாகிய எங்களுக்கு யார் செவி சாய்ப்பார்கள்? யாருமில்லை. இந்தியாவில் இளைஞர் களுக்கு எந்த மதிப்பும் இல்லை. சிந்தித்துப் பாருங்கள். பத்துப் பன்னிரண்டு இளைஞர்கள் மக்களுக்குப் பெரியபெரிய கருத்துக்களை விளக்கி, அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் உறுதி பூண்டிருப்பதாகக் கூறுகின்றனர். எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தனர்; பின்னர் தொந்தரவு கொடுத்தனர். அதன்பிறகு கொடுமைகளையே செய்யத் துணிந்து விட்டனர். அத்துடன் நின்றதா? இல்லை. எங்கள் பெற்றோர்கள் எங்கள் கன்னத்தில் அறையவும் விழைந்தனர். துன்பங்கள் பெருகப்பெருக எங்கள் உறுதி தீவிரமடைந்தது.

பிறகு ஒரு பயங்கரமான சோதனைக் காலம் வந்தது. எனக்குத் தனிப்பட்ட முறையிலும் மற்ற இளைஞர்களுக்குமாகத் துன்ப காலம் உருவாகியது. எனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்தான் எவ்வளவு கடுமையானது! ஒரு பக்கத்தில் என் தாயும் சகோதரர் களும். அப்பொழுது என் தந்தை காலமாகியிருந்ததால் நாங்கள் வறுமைத் துன்பத்தில் உழன்றுகொண்டிருந்தோம். மிகவும் ஏழைகளாக, உண்ண உணவின்றி ஏறக்குறைய முழு நேரமும் பட்டினி கிடந்தோம். என் ஒருவனைத்தான் குடும்பம் நம்பியிருந்தது. நான் ஒருவன்தான் அவர்களுக்கு ஏதாவது உதவ முடியும். இரண்டு உலகங்களுக்கு நடுவில் நான் நிற்க வேண்டியதாயிற்று. தாயும் சகோதரர்களும் பட்டினி கிடந்து இறப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதா? அல்லது இந்திய நாட்டின் நன்மைக்காகவும் உலக நாடுகளின் நன்மைக் காகவும் அமைந்தவை என்று நான் நம்பிய, இந்த மகானின் கருத்துக்களை மக்களுக்கு உபதேசம் செய்து அவற்றைச் செயல்படுத்துவதா? இப்படி ஒரு போராட்டம் என் மனத்தில் நாட்கணக்கில், மாதக் கணக்கில் நடந்து கொண்டிருந்தது. சிலவேளைகளில் ஐந்தாறு நாட்கள் பகலும் இரவும் இடைவிடாமல் பிரார்த்தனை செய்வேன். ஓ! அந்த நாட்களில் நான் அடைந்த மனவேதனை! நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். இளைஞனாகிய என் மனம் இயல்பாகவே என்னைக் குடும்பத்தாரிடம் இழுத்து அலைக்கழித்தது. என் அன்புக்கு உரியவர்கள் படும் துன்பங்களை என்னால் தாங்க முடியவில்லை. என் நிலைமைக்கு இரங்கி எனக்கு அனுதாபம் காட்டுபவர்கள் யாருமில்லை! ஒரு சிறுவனுடைய கற்பனைகளுக்கு யார்தான் இரங்குவார்கள்? அதுவும் அந்தக் கற்பனைகள் மற்றவர்களுக்குத் தாங்கமுடியாத துன்பங்களை இழைக்கும் போது, யார்தான் எனக்கு மனமிரங்குவார்கள்? யாரும் இல்லை ஒரே ஒருவரைத் தவிர.

அந்த ஒருவருடைய இரக்கவுணர்ச்சி ஆசிகளையும் நம்பிக்கையையும் ஊட்டியது. அவர் ஒரு பெண். பெருந்துறவி யாகிய எங்கள் குருதேவருடைய மனைவி அவர். இளைஞனாக இருந்தபோதே அவர் இவரை மணந்துகொண்டார். அப்போது இவர் ஒரு சிறு குழந்தை. இளைஞனாக வளர்ந்து, குருதேவரிடம் ஆன்மீகப் பேருணர்வு தீவிரமாகிய காலத்தில் இவர் கணவரைக் காணவந்தார். திருமணமாகி நீண்ட காலம் ஆகியிருந்தும், வளர்ந்தபின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. அவர் தன் மனைவியிடம், ‘இதோ பார், நான் உன் கணவன். இந்த உடலின்மீது உனக்கு முழு உரிமை உண்டு. உன்னை நான் மணந்து கொண்டவன்தான் என்றாலும், என்னால் உடல்உறவுகொண்டு வாழ முடியாது. அதை உன் முடிவிற்கே விடுகிறேன்’ என்றார். இதனைக் கேட்ட அந்தப் பெண்மணி அழுது, ‘இறைவன் தங்களுக்கு அருள்வானாக! அனைத்து ஆசிகளையும் வழங்குவானாக! உங்களைக் கீழ்மைப் படுத்துகின்றவளா நான்? இல்லவே இல்லை. முடியுமானால் உங்களுக்கு உதவவே விரும்புகிறேன். தாங்கள் மேற்கொண்ட செயலைத் தொடர்ந்து செய்யுங்கள்’ என்று மறுமொழி கூறினார்.

அத்தகையவர் அந்தப் பெண்மணி. கணவர் தம் பாதை யிலேயே சென்று மாபெரும் துறவியாகத் திகழ்ந்தார். மனைவி எட்ட இருந்தபடியே தம்மால் முடிந்த அளவிற்கு உதவினார். குருதேவர் ஓர் ஆன்மீக குருவாகத் திகழ்ந்தபோது, அவரிடம் வந்த இந்தப் பெண் அவருடைய சிஷ்யை ஆனார். உண்மையில் இவரே அவருடைய முதல் சிஷ்யை . கணவரது உடல்நலத் தைப் பேணுவதில் இவர் தமது வாழ்நாட்களைக் கழித்தார். அந்த மகானோ, தாம் வாழ்கிறோமா இல்லையா என்பதுகூட அறியாதவராக இருந்தார். சிலசமயம், பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு, கனன்று எரிகின்ற தணலின்மீது அமர்ந்துவிடுவார். நெருப்பு என்பதையே அறிய மாட்டார். எரிந்து கொண்டிருக்கும் தணல்! அத்தனை நேரமும் உடல்நினைப்பே அற்றவராக இருப்பார்!

இது எங்கள் குருதேவரின் மனைவியான இந்தப் பெண்மணி மட்டுமே இளைஞர்களாகிய எங்களுக்கு, எங்கள் கருத்துக் களுக்கு ஆதரவு காட்டியவர்; அனுதாபப்பட்டவர். ஆனால் அவரோ ஆதரவற்றவராக இருந்தார். எங்களைவிட ஏழை யாக இருந்தார். அதனால் என்ன? நாங்கள் பணியில் குதித்து விட்டோம். இந்த உயரிய கருத்துக்கள் இந்திய நாட்டை விவேகம் பொருந்திய பாதையில் அழைத்துச் செல்லும், எவ் வளவோ நாடுகளுக்கும் இனங்களுக்கும் பொன்னான காலத் தைத் தோற்றுவிக்கும் என்றும் நான் நிச்சயமாக நம்பினேன். நான் வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ் வளவு நிச்சயமாக நம்பினேன்.

இந்த நம்பிக்கையுடன் மற்றோர் உறுதியும் ஏற்பட்டது. இத்தகைய உயர்ந்த கருத்துக்களை உலகிலிருந்து மறைய விடுவதைவிட, ஒருசிலர் துன்பப்படுவதால் எந்த நஷ்டமும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். தாயும் இரண்டு சகோதரர்களும் இறந்து போனால்தான் என்ன? அது ஒரு தியாகம், நடந்தேறட்டும்! எந்தவொரு மகத்தான பணியும் தியாகம் இல்லாமல் நடந்ததில்லை. இதயத்தை அப்படியே பறித்தெடுத்து ரத்தம் சொட்டச்சொட்டப் பலிபீடத்தில் வைக்க வேண்டும். அதன்பிறகே உலகில் மகத்தான காரியங்கள் ஆற்றப்பட்டுள்ளன. இதைத் தவிர வேறு ஏதேனும் வழி இருக் கிறதா? உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன். உங்களில் செயற்கரிய செயல்களைச் செய்து முடித்த தீரர்களைக் கேட்கிறேன். அத்தகைய வழியை இதுவரை யாரும் கண்ட இல்லை. ஓ! எவ்வளவு துன்பங்கள்! எவ்வளவு வேதனைகள்! சித்திரவதைகள்! ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ் வொரு வெற்றிச் செயலுக்குப் பின்னால் எவ்வளவு துன் பங்கள்? உங்களுக்கெல்லாம் இது நன்றாகத் தெரியும்.

இப்படியே இளைஞர்களாகிய நாங்கள் பணியைத் தொடர்ந்தோம். எங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களிடமிருந்து நாங்கள் பெற்றதெல்லாம் உதையும் சாபங்களும்தான். உணவுக் காக நாங்கள் வீடுவீடாக ஏறிப் பிச்சை எடுக்க வேண்டியிருந்தது. எல்லாம் எங்களுக்கு மறுக்கப்பட்டது. எப்போதாவது ஓரிரு சப்பாத்திகள் கிடைத்தன. தங்குவதற்கு, இடிந்துபோன பழைய வீடு ஒன்று எப்படியோ கிடைத்தது. படமெடுத்துச் சீறும் பாம்புகள் அங்கே ஏராளம். அதைவிட மலிவாக வேறு வீடு கிடைக்காது என்ற காரணத்தால் நாங்கள் அங்கே குடிபுகுந்தோம்.

இப்படிச் சில வருடங்கள் உருண்டோடின. இதற்கிடை யில் இந்திய நாடு முழுவதும் நாங்கள் யாத்திரை மேற்கொண்ட துடன் எங்கள் கருத்திற்கும் மெதுவாக உருவம் கொடுக்க முயன்றோம். எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் பத்து ஆண்டுகள் கடந்தன. பத்து நீண்ட ஆண்டுகள்! மனம் ஆயிரம் தடவைகள் சோர்வுற்றது. ஆனால் ஏதோ ஒன்று எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிவந்தது. அதுதான் நாங்கள் பரஸ்பரம் வைத்திருந்த நம்பிக்கை, நாங்கள் ஒருவர் மற்றவரிடம் வைத் திருந்த மகத்தான அன்பு. ஆண்களும் பெண்களுமாக நூறு பேர் எனக்குத் துணையாக அமைந்தனர். நாளையே நான் அடியோடு அரக்கனாக மாறினாலும்கூட ‘நாங்கள் உனக்கு உறுதுணையாகத்தான் இருக்கிறோம். ஒருபோதும் கைவிட மாட்டோம்’ என்று கூறக்கூடிய மாறாத அன்பு கொண்டவர்கள் அவர்கள். அது எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்! இன்பத் திலும் துன்பத்திலும், பஞ்சத்திலும் பட்டினியிலும், வாழ்விலும் சாவிலும், நரகத்திலும் சொர்க்கத்திலும் என்னைக் கைவிடாமல் இருப்பவன்தானே உயிர் நண்பன்! இத்தனை சிறந்த நட்பு சாதாரணமானதா என்ன! அப்படி அன்பு வைக்கமுடியுமானால் அது முக்தியையே தந்துவிடுமே! நட்பின் வாயிலாக ஒருவன் முக்தியைப் பெற்றுவிடலாம். இந்த அளவிற்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்குமானால், ஏன், அதுவே மன ஒருமைப்பாட்டின் சாரமாகிறது. இத்தகைய நம்பிக்கை, இத்தகைய வலிமை, இத்தகைய அன்பு உன்னிடம் இருக்குமானால் உலகில் நீ எந்தக் கடவுளையும் வணங்கத் தேவையில்லை. அத்தகைய உயர்ந்த அன்பும் நட்பும் எங்களுடைய துன்பக் காலங்களில் எல்லாம் எங்களுக்குத் துணையாக இருந்தது; அழியாமல் இருந்துவந்தது. அதுதான் எங்களை இமயம் முதல் குமரிவரையிலும், சிந்து விலிருந்து பிரம்மபுத்ரா வரையிலும் போகச் செய்தது.

பிறகு இந்த இளைஞர்களின் கூட்டம் நாடெங்கிலும் பயணப்படத் துவங்கியது. மெதுவாக மக்களின் கவனம் எங்கள் மீது விழத் தொடங்கியது. தொண்ணூறு சதவீதம் எதிர்ப்புதான். வெகுசிலரே உதவ முன்வந்தனர். எங்களிடமும் ஒரு குறை இருந்தது நாங்கள் இளைஞர்கள், வறுமையில் உழல்பவர்கள், இளைஞர்களுக்கே உரிய முரட்டுத்தனம் கொண்டவர்கள். வாழ்க்கையில் தனக்கு வேண்டியவற்றைத் தானே செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உடையவன் சிறிது முரடனாகத் தான் இருப்பான். மென்மையாக இனிமையாக பணிவாக எல்லாம் இருக்க அவனுக்கு நேரம் இல்லை . ‘அம்மா , ஐயா !’ என்பது போன்ற நாகரீகப் பேச்சிற்கெல்லாம் அவனிடம் இடமிருக்காது. நீங்கள் அத்தகையோரை வாழ்க்கையில் சந்தித் திருப்பீர்கள். அவன் பட்டை தீட்டப்படாத வைரம், போது மான பளபளப்பு இல்லாதவன், கரடுமுரடான பெட்டியில் வைக்கப்பட்டுள்ள வைரம்.

இப்படி நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். ‘எதற்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது’- இதுதான் எங்கள் தாரக மந்திர மாக இருந்தது. ‘இதுவே லட்சியம். இதை எப்படியாவது நிறைவேற்றியே ஆக வேண்டும். ஓர் அரசனைச் சந்தித்தால், மரணமே ஏற்படுவதாயினும் நமது கருத்தை அவரிடம் கூற வேண்டும்; உழவனைச் சந்தித்தாலும் இதுவேதான்.’ எனவே எங்களுக்கு எதிர்ப்பு எழுந்ததில் வியப்பேதுமில்லை.

ஆனால் இதுதான் வாழ்க்கை அனுபவம். உண்மை யிலேயே பிறருக்கு நன்மை செய்ய விரும்பினால் உலகமே நமக்கு எதிராக நிற்கிறது. ஆனாலும் அதனால் நம்மைத் துன்புறுத்த முடியாது. நாம் உண்மையிலே தன்னலமற்றவர்களாகவும், உண்மையான ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தால் நம்முள் உறையும் இறைவனின் பேராற்றலுக்கு முன் அது தவிடு பொடியாகி விடும்.

அந்த இளைஞர்கள் அப்படித்தான் இருந்தனர். தூய்மையும் அன்றலர்ந்த புதுமையும் நிறைந்த குழந்தைகளாக இயற்கைத்தாயின் மடியிலிருந்து வந்தவர்கள் அவர்கள். ‘முகரப் படாத பூக்களையும், கைகளால் தீண்டப்படாதப் பழங்களையுமே நான் இறைவனது திருப்பாதங்களில் சமர்ப்பிக்க விரும்புகிறேன்’ என்பார் எங்கள் குருதேவர். அந்தப் பெரு மகனின் திருவாய்மொழிகளே எங்களைப் பாதுகாத்து வந்தன. கல்கத்தா நகரத்தின் தெருக்களில் கண்டெடுத்த இந்த இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கையை அவர் கண்டிருக்க வேண்டும். ‘இதோ இந்தச் சிறுவன், அதோ அந்தப் பையன்இவர்கள் எல்லோரும் பிற்காலத்தில் எப்படி விளங்கப் போகிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்’ என்று அவர் கூறியபோது அதைக் கேட்டுச் சிரித்தவர்கள் பலர். ஆனால் அவரது நம்பிக்கை அசைக்க முடியாதது. எனக்கு ஆதிபராசக்தி காட்டியுள்ளாள். நான் ஒருவேளை பலவீனனாக இருக்கலாம். ஆனால் இதைச் சொல்வது அவள். அவளே கூறிய பிறகு அது எப்படி நடக்காமல் இருக்க முடியும்! அவள் தவறு செய்ய முடியாது?’ என்பார் அவர்.

இப்படியே பத்து ஆண்டுகள் நம்பிக்கைக் கீற்று எதுவும் இல்லாமல் கழிந்தன. என் உடல்நலமும் நலிந்து வந்தது. சில நாட்களில் இரவு ஒன்பது மணிக்குத்தான் எங்களுக்கு ஒருமுறை உணவு கிடைக்கும். வேறு சில நாட்களில் காலை எட்டு மணிக்கு, அடுத்த உணவு இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகாக இருக்கலாம். கிடைத்ததுகூட மிகவும் மோசமான, நாள்பட்ட உணவு. உடல் கெடாமல் என்ன செய்யும்? நல்ல வற்றை யாராவது பிச்சைக்காரனுக்குக் கொடுப்பானா? அது மட்டுமல்லாமல், இந்தியாவில் யாரிடமும் பணம் குவிந்து இடக்கவில்லை. ஒருவேளையின் உணவிற்காகப் பெரும்பாலும் நடந்தும், பனிமலைமீது ஏறியும், ஏறுவதற்குக் கடினமான மலைமீது பத்து மைல்கள் நடந்தும் இப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள். இந்தியாவில் சப்பாத்தி சாப்பிடுகிறார்கள். சிலவேளைகளில் இருபது முப்பது நாட்களுக்கு அதைச் சேமித்து வைத்திருப்பார்கள். அது கல்லைவிடக் கடின மாக இருக்கும். அதில் ஒரு துண்டைப் பிச்சையாகத் தருவார்கள். ஒருவேளையின் உணவிற்காக வீடுவீடாகப் படியேறி இருக் கிறேன். கிடைக்கின்ற சப்பாத்தியும் கடிக்க முடியாதபடி கெட்டிப்பட்டிருக்கும். வாயிலிருந்து ரத்தம் கசியும். உண்மை யிலேயே உங்கள் பற்கள் உடையும் அளவிற்கு அவை இருக்கும். எனவே அதை ஒரு பாத்திரத்தில் இட்டு, ஆற்று நீரைக் கொண்டு வந்து அதில் ஊற்றி ஊற வைப்பேன். இப்படி எத்தனையோ மாதங்கள் காலத்தைக் கடத்தியிருக்கிறேன். என் உடல்நலம் அதனால் பாதிக்கப்படத்தான் செய்தது.

பிறகு, ‘இந்திய நாட்டில் முயன்று பார்த்தாகிவிட்டது. இனி இன்னொரு நாட்டில் முயல வேண்டும்’ என்று நினைக்கலானேன். அப்போதுதான் சர்வமத மகாசபை கூடுவதாக இருந்தது; இந்தியாவிலிருந்தும் ஒருவரை இங்கே அனுப்ப வேண்டியிருந்தது. நானோ ஒரு நாடோடியாகத் திரிந்து கொண்டிருந்தேன். ‘நீ அனுப்புவதானால் நான் போகிறேன். தொலைப்பதற்கு என்னிடம் அதிகம் இல்லை. அப்படித் தொலைந்து போனாலும் நான் கவலைப்படுவதாக இல்லை’ என்று சொல்லிக் கொண்டேன். பணம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு முயன்று என்னு டைய பயணச் செலவிற்குப் போதுமான அளவிற்குப் பணம் திரட்டினார்கள். நான் வந்து சேர்ந்தேன். ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டேன். எனவேதான் யாரையும் தெரியாமல் இங்கே தெருக்களில் அலைந்து கொண்டிருந்தேன்.

ஒருவழியாக சர்வமத மகாசபை தொடங்கியபோது, எனக்கு ஆரம்பம் முதலே உதவிவந்த அன்பார்ந்த நண்பர் களைச் சந்தித்தேன். நானும் சிறிது வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்தேன். இரண்டு பத்திரிகைகளைத் தொடங் கினேன். பிறகு இங்கிலாந்திற்குச் சென்று அங்கும் பணிபுரிந் தேன். அதேவேளையில் இந்தியாவிற்கான வேலையையும் அமெரிக்காவில் செய்து வந்தேன்.

இந்தியாவிற்கான எனது பணித் திட்டம் மெதுவாக வளர்ந்து உருப்பெற்றுள்ளது. அது இதுதான்: துறவிகளாகிய எங்கள் வாழ்க்கை முறையையும், வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்பதையும் நான் உங்களுக்குக் கூறினேன். இதன் பயனாகக் காசுபணம் செலவழிக்காமலேயே மக்களுக்கு மதம் வீடு தேடி வந்தது. அவர்கள் அதற்காகச் செலவழித்ததெல்லாம் ஒரு சப்பாத்தித்துண்டுதான். இந்தியாவில் மிகமிகத் தாழ்ந்தவர்கள் கூட உயர்ந்த மத அறிவு பெற்றிருப்பதற்குக் காரணம் இந்தத் துறவிகள்தான். ஒரு பாமரனிடம் ‘ஆங்கிலேயன் யார்?’ என்று கேளுங்கள். அவன் விழிப்பான். ஒருவேளை, ‘நூல்களில் கூறப் பட்டுள்ள அந்த அரக்கர்களுடைய குழந்தைகளாக இருப்பார் களோ அவர்கள்?’ என்று கேட்டாலும் கேட்பான். ‘உங்களை ஆள்வது யார்?’, ‘உங்கள் அரசு எது?’ என்று கேட்டால் அவர் களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர்களுக்குத் தத்துவம் தெரியும்.

இவ்வுலகில் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கான படிப்பறிவு இல்லாத குறையால்தான் அவர்கள் துன்பப்படு கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான அவர்கள் மறுவுலக வாழ்க்கையை அடைவதில் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். அது போதுமே என்றால், போதாது என்று நான் உறுதியாகக் கூறுவேன். உண்பதற்கு இன்னும் நல்ல உணவும், உடுக்க இன்னும் நல்ல உடையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். பிரச்சினை என்னவென்றால் இந்த நல்ல உணவையும், சீரான ஆடையையும் ஏழ்மையில் மூழ்கிக் கிடக்கும் அவர்கள் பெறுவது எப்படி என்பதுதான்.

அவர்கள் நல்லபடியாக வாழ்வதற்கு இடமிருக்கிறது. பின்னும் அதிக நம்பிக்கை இருக்கிறது என்பதை நான் முதலில் உங்களுக்குக் கூற விரும்புகிறேன். காரணம், உலகிலேயே மிகவும் மென்மையானவர்கள் அவர்கள், ஆனால் கோழைகள் அல்ல. சண்டை என்றால் அசுரர்களைப்போல் போரிடுவார்கள். மிகச் சிறந்த போர்வீரர்களை இந்தியாவின் கிராமப் புறங்களிலிருந்துதான் ஆங்கிலேயர்கள் பெற்றார்கள். அவர்களுக்கு மரணம் பெரிய விஷயம் அல்ல. இருபது தடவை பிறந்து இறந்துவிட்டேன். இன்னும் எத்தனையோ பிறவிகள் இறந்து பிறப்பேன். ஆகவே இது என்ன பெரிய விஷயம்?’ என்ற போக்கு அவர்களுடையது. அவர்கள் என்றும் எதற்கும் பின்வாங்கியதில்லை. அவ்வளவு எளிதாக அவர்கள் உணர்ச்சி வசப்படுவதில்லை . சலிக்காத போர்வீரர்கள் அவர்கள்.

அவர்களுக்கு இயல்பானது உழவுத் தொழில். அவர்களுடைய மதத்தில் தலையிடாமல் அவர்களை நீங்கள் கொள்ளையடித்தாலும், கொன்று குவித்தாலும், வரி வசூலித்தாலும் எது செய்தாலும் அமைதியாக, மென்மையாக அனைத்தையும் தாங்கிக் கொள்வார்கள். அவர்களும் பிறருடைய மதங்களில் ஒருபோதும் தலையிட மாட்டார்கள். ‘எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் தெய்வங்களை நாங்கள் வழிபடும் உரிமையை மட்டும் விட்டு விடுங்கள்’- இதுதான் அவர்களின் மனப்போக்கு. ஆங்கிலே யர்கள் அவர்களது மதத்தில் தலையிட்டால் பிரச்சினை உரு வாகிவிடும். 1857-இல் நடந்த சிப்பாய்க் கலகத்திற்கு அதுதான் காரணம். மத அடக்கு முறையை அவர்களால் தாங்க இயலாது. முகமதியப் பேரரசுகள் தூளாகிப் பறந்து போனதற்குக் காரணமே அவர்கள் இந்திய மக்களின் மதத்தில் தலை யிட்டதுதான்.

இதைத் தவிர அவர்கள் அமைதியானவர்கள்; சாந்தமும் மென்மையும் ஒருங்கே கொண்டவர்கள். அனைத்திற்கும் மேலாக எந்தத் தீய பழக்கத்திற்கும் இரையாகாதவர்கள். மிகவும் போதையூட்டுகின்ற எந்த மதுப்பழக்கமும் அவர்களிடம் கிடையாது. இதுவொன்றே பிற நாட்டு மக்களிடமிருந்து அவர்களை உயர்த்திக்காட்ட வல்லது. இங்கு வாழ்கின்ற சேரி மக்களைப் போன்றவர்கள்தான் இந்திய நாட்டில் வாழ்கின்ற ஏழைகள் என்று எண்ணிவிடக் கூடாது. சேரியில் வாழ்பவர்கள் ஏழைகள்தான். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஏழை களாக இருப்பவர்கள் என்றால் பாவம் செய்தவர்கள், நாகரீக மற்றவர்கள், தீயவர்கள் என்பது ஒருபோதும் பொருளல்ல. பிற நாடுகளில் ஏழையாக இருப்பது தாழ்ந்தவர்களும் சோம் பேறிகளும்தான். முட்டாளாகவோ கயவனாகவோ இருந்து, நகர வாழ்க்கையின் சுகபோகங்களை விரும்புகின்றவனே இங்கு ஏழையாக இருக்கிறான். இவர்கள் கிராமப்புறங்களுக்குச் செல்ல விரும்புவதில்லை. இங்கே சுகங்களை அனுபவிக்கவே நாங்கள் விரும்புகிறோம். எனவே நீங்கள் எங்களுக்கு உணவு அளியுங்கள்’ என்று கூறுகிறார்கள். ஆனால் இந்திய நாட்டின் நிலைமை வேறு. அங்கு ஏழைகள் காலையிலிருந்து மாலை வரை முதுகொடிய உழைக்கிறார்கள். ஆனால் உண்பதோ வேறு சிலர், உழைப்பாளிகளின் குழந்தைகளுக்கு உண்ண உணவில்லை. லட்சக்கணக்கான டன் கோதுமை இந்திய நாட்டில் உற்பத்தியாகிறது. ஆனால் ஒரு கோதுமைமணிகூட உழைப்பவனின் வயிற்றுக்குப் போவதில்லை. மிகவும் மோச மான புல்லரிசியைத்தான் அவன் உண்கிறான். அந்தத் தானியத்தை பறவைகளுக்குக்கூட நீங்கள் போடுவதற்கு விரும்ப மாட்டீர்கள்.

நல்லவர்களும் தூயவர்களுமான அந்த மக்கள் எந்தக் காரணமும் இல்லாமல் இத்தகைய கொடிய துன்பத்தை எதற்காக அனுபவிக்க வேண்டும்? துன்பத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றியும், அவல நிலையில் வாழும் பெண்களைப் பற்றியும் வாய்கிழியப் பேசுகிறார்களே தவிர அவர்களுக்கு உதவ யாரும் முன்வருவதில்லை . அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ‘உங்களை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்வதில்தான் உங்கள் நன்மை உள்ளது. அதற்குத்தான் நாங்கள் உதவ முடியும். நீங்கள் இந்துக்களாக இருக்கும்வரை உங்களுக்கு உதவுவதில் எந்தப் பயனுமில்லை ‘ என்பதுதான். இவர்களுக்கு இனங்களின் வரலாறு தெரியாது. இந்தியர்கள் தங்கள் மதத்தையும் சமுதாய அமைப்புகளையும் மாற்றுவார்களானால் இந்திய நாடே இருக்காது. ஏனெனில் அந்த இனத்தின் உயிர்நாடியே மதம்தான். அப்படி மாற்று வார்களானால் அந்த நாடு மறைவது நிச்சயம். நீங்கள் உதவி செய்யவும் உண்மையாக யாரும் இருக்க மாட்டார்கள்.

இங்கே மற்றொரு பெரிய உண்மையை நாம் அறிந்து கொள்கிறோம். நீங்கள் உண்மையில் யாருக்கும் உதவ முடியாது என்பதுதான் அது. நாம் ஒருவருக்கொருவர் என்னதான் செய்து கொள்ள முடியும்? நீங்கள் உங்கள் வழியில் முன்னேறுகிறீர்கள். நான் என் வழியில் முன்னேறுகிறேன். காலப்போக்கில் எல்லா வழிகளும் ஒரே இடத்தையே அடைகின்றன என்பதை அறிந்து, உங்களை நான் சற்று உந்தி முன்னால் தள்ள முடியும். அது ஒழுங்கான வளர்ச்சி. எந்த நாட்டு நாகரீகமும் இன்னும் நிறை நிலை அடையவில்லை. அந்த நாகரீகத்தைச் சற்று நீங்கள் தூண்டினால், அது தனது குறிக்கோளை அடையும். அதை மாற்ற முயலாதீர்கள். ஒரு நாட்டிலிருந்து சமூக அமைப்பு களையும் பழக்க வழக்கங்களையும் எடுத்துவிட்டால் என்ன மிஞ்சும்? மிஞ்சுகின்ற அவையே அந்த நாட்டை ஒன்றாகப் பிணைத்து நிற்பவை.

இந்த வேளையில் வருகிறான் கல்வி மிகக் கற்ற அயல் நாட்டவன்: ‘இதோ பாருங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்த பழக்கவழக்கங்களை விட்டுவிடுங்கள். எனது இந்தத் தகர டப்பாவை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்’ என்கிறான் அவன். இது முழு மூடத்தனம். –

நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். ஆனால் இன்னும் ஒரு படி முன்னே செல்ல வேண்டும். அதாவது உதவும்போது தன்னலமற்றவராக இருக்க வேண்டும். ‘நான் சொல்வதை அப்படியே நீ செய்தால் உனக்கு உதவி செய் வேன். இல்லையெனில் முடியாது.’ இது உதவியாகுமா?

இந்துக்கள் உங்களுக்கு ஆன்மீக உதவி செய்ய விரும் பினால் அதில் வரையறைகள் எதுவும் இருக்காது. அது முழுமை யான தன்னலமின்மை. நான் கொடுக்கிறேன், அத்துடன் அது முடிவடைகிறது. அது என்னிடமிருந்து போய்விட்டது. எனது மனம், எனது சக்திகள் என்று நான் கொடுக்க வேண்டிய ஒவ்வொன்றையும் கொடுத்துவிட்டேன். கொடுக்க வேண்டும், கொடுத்தேன், அவ்வளவுதான். உலகில் பாதியைக் கொள்ளை யடித்துள்ள மக்களை நான் பலமுறை கண்டுள்ளேன்; அவர்கள் ‘அஞ்ஞானிகளை மதம் மாற்ற’ இருபதினாயிரம் டாலர் கொடுத் தார்கள். எதற்காக? அஞ்ஞானியின் நலத்திற்காகவா, தங்கள் சொந்த நன்மைக்காகவா? சற்றே சிந்தியுங்கள்.

தீவினைப் பயன் வேலை செய்துவருகிறது. மனிதர் களாகிய நாம் சொந்தக் கண்களையே மறைத்துக்கொள்ள முயல்கிறோம். ஆனால் மெய்யான பரம்பொருள் இதயத்தில் இருக்கிறார். அவர் ஒருபோதும் மறப்பதில்லை . அவரை ஒரு போதும் ஏமாற்ற முடியாது. அவருடைய கண்களை ஒரு போதும் மறைக்க முடியாது. உண்மையாக தானம் செய் தோமானால் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அது பயனைத் தந்தே தீரும். தடைகள் வந்தாலும் அது விழித்தெழுந்து மீண்டும் இடிபோல் வெடிக்கத் தொடங்கும். தன்னலத்தை நோக்கமாகக் கொண்ட, தன்னை முன்வைத்துச் செய்யப் படுகின்ற எந்தச் செயலும், எல்லா பத்திரிகைகளும் அவற்றை எவ்வளவுதான் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்தாலும், மக்கள் கூட்டம் அனைத்தும் எழுந்து நின்று கைதட்டி ஊக்கம் ஊட்டினாலும், அதன் குறிக்கோளை அடைவது இல்லை .

நான் பெருமையடித்துக் கொள்ளவில்லை. ஆனால் கவ னியுங்கள், ஓர் இளைஞர் கூட்டத்தின் கதையைச் சொன்னேன். இன்று அவர்களது பணியை அறிந்து, அவர்களை வாழ்த்தாத ஊரோ, ஆணோ, பெண்ணோ இந்தியாவில் இல்லை. நாட்டில் பஞ்சம் நேரும்போது இந்த இளைஞர்கள் பணி செய்து தங்களால் இயன்றவரை மக்களைத் துயரத்திலிருந்து விடுவிக்க முயல்கிறார்கள். இவர்கள் பணி செய்யாத பஞ்சம் இல்லை. இந்தப் பணி, மக்கள் நெஞ்சில் பதிகிறது. அதனை அவர்கள் அறிகின்றனர். ஆதலால் உங்களால் இயன்றபோதெல்லாம் உதவி செய்யுங்கள். ஆனால் உங்கள் நோக்கத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். அது சுயநலமாக இருந்தால் உதவி செய்பவர்களுக்கும் பயனில்லை; உதவியை ஏற்பவர்களுக்கும் பயனில்லை. சுயநலமில்லையானால் அது ஏற்பவரிடம் ஆசிகளை நிறைக்கும், கொடுப்பவரிடம் பன்மடங்கு ஆசிகளைப் பொழியும். நீங்கள் வாழ்வதைப்போல் இதுவும் உண்மையே. இறைவனின் கண்களை ஒருபோதும் மறைக்க முடியாது. கர்ம நியதியை ஒருநாளும் ஏமாற்ற முடியாது.

சரி, இந்தியாவின் பாமர மக்களை அடைவதே எனது திட்டங்கள் எல்லாம். நீங்கள் இந்தியா முழுவதிலும் ஏழைகளுக்காகப் பள்ளி தொடங்குவதாக வைத்துக்கொள்வோம். அப்போதும் நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்க முடியாது. எவ்வாறு முடியும்? நான்கு வயதுப் பையன் உங்கள் பள்ளிக்கு வருவதை விட வயல் வேலைகளுக்குச் செல்வான், மற்ற வேலைகள் செய்யச் செல்வான். அவனால் உங்கள் பள்ளிக்கு வர முடியாது. அது முடியாத ஒன்று. தற்காப்பு என்பதே முதலாவது இயல் புணர்ச்சி. ஆனால் மலை முகம்மதுவிடம் செல்லாவிட்டால் முகமது மலைக்குச் செல்லலாமே! ஏன் கல்வி வீடுவீடாகப் போக முடியாது என்று நான் கேட்கிறேன். விவசாயியின் மகன் கல்விக்கு வர முடியாவிட்டால், அவன் இருக்குமிடத்தில்வேலை செய்யும் வயலிலோ, தொழிற்சாலையிலோ-ஏன் அவ னைச் சந்திக்கக் கூடாது? நிழல்போல் அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். ஆன்மீகத் துறையில் மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான துறவிகள் உள்ளார்களே, அவர்கள் ஏன் அதே வேலையை அறிவுத் துறையில் செய்யக் கூடாது? அவர்கள் பொதுமக்களுக்குச் சிறிது வரலாறும் வேறு பல விஷயங்களையும் கற்பிக்கக் கூடாதா? கல்வி பெறுவதற்குச் செவிகளே மிகச் சிறந்த கருவிகள். தாயிடமிருந்து நமது செவிகள் மூலம் கேட்டவையே நம் வாழ்க்கையில் மிகச் பிறந்த கோட்பாடுகளாக அமைகின்றன. புத்தகங்கள் வெகுகாலத் இற்குப் பிறகு வந்தவை. புத்தகக் கல்வியில் ஒன்றுமே இல்லை. நம்மை உருவாக்குகின்ற சிறந்த கருத்துக்களைச் செவிகள் வழியாகவே நாம் பெறுகிறோம். பிறகு சிறுவர்களுக்கு ஆர்வம் வளரும்போது, அவர்கள் உங்கள் புத்தகங்களிடம் வரலாம். முதலில் அது உருண்டு உருண்டே முன் செல்லட்டும். இதுவே என் கருத்து.

துறவு அமைப்புகளில் நான் பெரிய நம்பிக்கை கொண்டவன் அல்ல என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவற்றில் நன்மைகள் உள்ளன; பெரும் குறைகளும் உள்ளன. துறவிகளுக்கும் இல்லறத்தார்களுக்கும் இடையில் சமநிலை ஏற்பட வேண்டும். துறவறம் இந்தியாவில் எல்லா சக்தியை யும் உறிஞ்சிவிட்டது. நாங்கள் மிகச் சிறந்த சக்திக்கு அறிகுறி யாகிறோம். துறவி அரசனைவிட உயர்ந்தவன். காவி உடுத்த துறவியின் முன்னர் உட்காரத் துணிகின்ற மன்னன் இந்தியாவில் இல்லை. அவன் தனது ஆசனத்தை விட்டு எழுந்து நிற்கிறான். ஆனால் அது நல்லதல்ல. நல்லவர்களானாலும், மக்களுக்கு அரணாக இருந்து வருபவர்களேயானாலும் அவர்கள் கையில் இவ்வளவு அதிகாரம் இருப்பது சரியல்ல. அவர்கள் புரோகிதர் களுக்கும் அறிவுக்கும் இடையிலிருப்பவர்கள்; அறிவுக்கும் சீர் திருத்தத்திற்கும் மையங்கள். யூதர்களின் தீர்க்கதரிசிகள் எப் படியோ, அப்படியே அவர்கள். தீர்க்கதரிசிகள் எப்போதும் புரோகிதர்களுக்கு எதிராகப் பேசுவார்கள்; மூட நம்பிக்கை களைப் பிடுங்கி எறிய முயற்சிப்பார்கள். இந்தியாவிலும் அப்படித்தான்.

அது எப்படியானாலும், அவ்வளவு அதிகாரம் அங்கிருப்பது நல்லதல்ல. அதைவிட நல்ல முறைகளை ஏற்படுத்த வேண்டும். எதிர்ப்பு குறைவாக உள்ள வழியில்தான் நீங்கள் வேலை செய்ய முடியும். அங்கே நாட்டின் உயிர்நிலையே துறவில்தான். நீங்கள் ஓர் இல்லறத்தானாக இந்தியாவிற்குச் சென்று மதத்தைப் போதியுங்கள். இந்துக்கள் அதைப் புறக் கணித்துவிட்டு, அப்பால் போய்விடுவார்கள். நீங்கள் துறவியாக இருந்தால் அவர்கள், ‘அவர் நல்லவர்; அவர் உலகத்தைத் துறந்தவர், நேர்மையானவர், சொல்வதைச் செய்ய முயற்சிப் பவர்’ என்பார்கள். நான் சொல்ல விரும்புவது என்னவென் றால் அங்கே துறவு என்பது ஒரு மாபெரும் சக்தியைக் குறிக் கிறது. நாம் செய்யக்கூடியது, அதனை மாற்றுவது மட்டுமே; அதற்கு வேறொரு வடிவம் கொடுப்பதே. இந்தியாவில் திரியும் துறவிகளிடம் உள்ள இவ்வளவு பெரும் சக்தி மாற்றப்பட வேண்டும். அது பொதுமக்களை உயர்த்தும்.

பாருங்கள், நாம் திட்டத்தைக் காகிதத்தில் அழகாக எழுதி வைத்துவிட்டோம். அதேவேளையில் நான் அதை லட்சிய உலகிலிருந்து வெளியே கொண்டுவந்துவிட்டேன். இதுவரை திட்டம் உறுதியற்றதாகவும் லட்சியமயமாகவும் இருந்தது.காலம் செல்லச்செல்ல அது இறுகிச் சரியாக அமைந்தது; உண்மையாகவே அதனைச் செயல்படுத்தும்போது அதன் குறைகளையும் பிறவற்றையும் காணத் தொடங்குகிறேன்.

நமது வாழ்க்கை நிலையில் அதைச் செயல்படுத்தும் போது நான் என்ன கண்டுபிடித்தேன்? முதலில், கல்வி கற்பிக்கும் முறையில், இந்தத் துறவிகளைப் பயிற்சி அளிக்க மையங்கள் வேண்டும். உதாரணமாக எனது மனிதர்களில் ஒருவரை அனுப்புகிறேன்; அவர் ஒரு காமிராவுடன் வருகிறார். இந்த விஷயங்களில் அவர்களுக்கே போதிக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் ஒவ் வொரு மனிதனும் சற்றும் கல்வியறிவு அற்றவனாக இருப்பதையும், கல்வி கற்பிக்க ஏராளமான நிலையங்கள் வேண்டும் என்பதையும் நீங்கள் காண்பீர்கள். இது எதைத் தெரிவிக்கிறது? பணம் வேண்டும் என்பதைத்தான். லட்சிய உலகிலிருந்து கீழிறங்கி அன்றாட வாழ்க்கைநிலைக்கு நீங்கள் வருகிறீர்கள்.

நான் உங்கள் நாட்டில் நான்கு ஆண்டுகளும், இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளும் கடினமாக வேலை செய்துள்ளேன். சில நண்பர்கள் உதவினார்கள் என்பதற்காக நான் மிகவும் நன்றி பாராட்டுகிறேன். அவர்களுள் ஒருவர் இன்று உங்களிடையில் இருக்கிறார். சில அமெரிக்க நண்பர்களும் ஆங்கில நண்பர்களும் என்னுடன் இந்தியாவுக்கு வந்தனர். மிக எளிய முறையில் பணி ஆரம்பமாகியுள்ளது. சில ஆங்கிலேயர்கள் வந்து மடத்தில் சேர்ந்தனர். ஒருவர் இந்தியாவிற்கு வந்து கடுமையாக உழைத்தார். அங்கேயே உயிர் துறந்தார். ஓய்வு பெற்ற ஓர் ஆங்கிலேயரும், ஓர் ஆங்கிலப் பெண்மணியும் உள்ளனர். அவர்களுக்குச் சொந்தமாகச் சிறிது சொத்தும் உள்ளது. இமயமலையில் ஒரு மடத்தைத் தொடங்கி அவர்கள் , குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்து வருகின்றனர். நான் தொடங்கியுள்ள பத்திரிகைகளில் ஒன்றான ‘பிரபுத்த பாரதா” என்பதன் பிரதியை மேஜைமீது காண்கிறீர்கள். அதை நடத்தும் படி அவர்களிடம் கூறியிருக்கிறேன். பொதுமக்களுக்கு அவர்கள் போதித்து வருகின்றனர்; பணி செய்து வருகின்றனர். கல்கத்தா வில் இன்னொரு மடம் உள்ளது. எல்லா இயக்கங்களும் தலைநகரிலிருந்துதான் தொடங்க வேண்டும். தலைநகரம் என்பது என்ன? நாட்டின் இதயம். எல்லா ரத்தமும் இதயத்திற்கு வந்துதான், அங்கிருந்து பல இடங்களுக்கும் பிரித்தளிக்கப் படுகிறது. எனவே எல்லா செல்வமும், எல்லா கருத்துக்களும், எல்லா கல்வியும், எல்லா ஆன்மீகமும் தலைநகரை நோக்கியே ஒன்றுகூடிப் பின்னர் அதிலிருந்து நாலாதிசைகளிலும் பரவும்.

நான் மிக எளிய முறையில் தொடங்கியுள்ளதை உங்களிடம் சொன்னதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அதே பணியைப் பெண்களுக்காகவும் தொடங்க எனக்கு விருப்பம். ஒவ்வொருவரும் தனக்குத்தானே உதவி செய்து கொள்கிறார்கள் என்பதே எனது கொள்கை. நான் தொலை விலிருந்து உதவுவேன். இந்தியப் பெண்களும் ஆங்கிலப் பெண் களும் உள்ளனர். அமெரிக்கப் பெண்களும் பணியை ஏற்றுக் கொள்ள வருவார்கள் என்பது எனது நம்பிக்கை. அவர்கள் பணியைத் தொடங்கியதும் நான் விலகிவிடுவேன். எந்த ஆணும் ஒரு பெண்ணுக்குக் கட்டளையிடக் கூடாது. அதுபோலவே எந்தப் பெண்ணும் ஓர் ஆணுக்கு ஆணையிடக் கூடாது. ஒவ் வொருவரும் சுதந்திரமானவர்கள். தளைகள் ஏதேனும் இருந் தால் அது அன்பால் விளையும் ஒன்றாக இருக்க வேண்டும். பெண்கள் தங்கள் விதியைத் தாங்களே சரிசெய்து கொள் வார்கள்; ஆண்கள் அவர்களுக்குச் செய்வதைவிட நன்றாகவே செய்வார்கள். பெண்களின் அவலநிலை அனைத்திற்கும் காரணம், ஆண்கள் அவர்களது விதியை உருவாக்க முயன்றதே. ஆரம்பப் பிழையுடன் தொடங்க எனக்கு விருப்பமில்லை. அந்த ஒரு சிறு பிழை பெருகிக் கொண்டேபோகும். பணியில் நீங்கள் வெற்றி பெற்றால், காலப்போக்கில் அந்தத் தவறும் மிகப் பெரும் அளவினதாக வடிவெடுத்திருக்கும். அப்போது அதனைத் திருத்துவது கடினம். எனவே பெண்களுக்கான பணியை நிறைவேற்ற ஆண்களை உபயோகிக்கின்ற இந்தத் தவறைச் செய்தால் பெண்கள் அதிலிருந்து ஒருபோதும் விலக முடியாது. அது ஒரு வழக்கமாக அமைந்துவிடும். ஆனால் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது குருதேவரின் மனைவியைப்பற்றி உங்களுக்குச் சொன்னேன். நாங்கள் அனைவரும் அவர்மீது பெருமதிப்பு வைத்துள்ளோம். அவர் எங்களுக்கு ஒருபோதும் ஆணையிடுவதில்லை. எனவே அது மற்றும் ஆபத்தற்றது. அந்தப் பகுதி இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

மேற்கோள்கள்:  எழுந்திரு! விழித்திரு! பகுதி 1 – I. எனது வாழ்வும் பணியும்