உன் வாழ்க்கை உன் கையில்!-17

17. பலவீனம் மரணத்திற்குச் சமானம்

இந்த உலகில் ஆகட்டும், வேறு எந்த உலகிலும் ஆகட்டும், அதில் பலவீனர்களுக்கு இடமில்லை . பலவீனம் அடிமைத்தனத்திற்கே இட்டுச் செல்கிறது. உடல் மற்றும் மன சம்பந்தமான எல்லா வகை துயரங்களும் பலவீனத்தாலேயே விளைகின்றன. பலவீனமே மரணம். நம்மைச் சுற்றி லட்சக்கணக்கான நுண்ணு யிர்கள் உள்ளன. ஆனால் உடல் அவற்றை உள்ளே அனுமதிக்க ஆயத்தமாக, பலவீன மாக இல்லாமல் அவை நமக்குத் துன்பம் தர முடியாது. துன்பந்தரும் நுண்ணுயிர்கள் நம்மைச் சுற்றிக் கோடிக்கணக்காக மிதந்து கொண்டிருந்தாலும் என்ன? பொருட் படுத்த வேண்டாம். மனம் பலவீனம் அடைந்தாலன்றி, அவை நம்மை அணுகத் துணியாது; நம்மைப் பற்றிக்கொள்ளும் திறன் அவற்றிற்கு இருக்காது. இதுவே பேருண்மை. பலமே வாழ்வு, பலவீனமே மரணம். பலமே இன்பம். பலமே என்றென்றும் மரணமிலாப் பெருவாழ்வு. பலவீனமே ஓயாத சோர்வும் துயரமும். பலவீனமே மரணம்.

வேட்டையில் துரத்தப்படுகின்ற முயல்களைப்போல் நாமும் பயங்கர மானவற்றைக் கண்டு எப்படி ஓட்டம் பிடிக்கிறோம்! அந்த முயல்களைப் போலவே தலைகளை மறைந்துக் கொண்டு, நாம் பாதுகாப்பாக இருப்ப தாகவும் நினைக்கிறோம். பயங்கரமான அனைத்திலிருந்தும் உலகம் ஓடுவதைப் பாருங்கள். ஒருமுறை நான் காசியில் இருந்தபோது, ஒரு பக்கம் பெரிய குளமும் மறு பக்கம் உயர்ந்த சுவருமாக இருந்த ஒரு பாதை வழியாகப் போக வேண்டியிருந் தது. அங்கே குரங்குகள் ஏராளம். காசியி லுள்ள குரங்குகள் பெரியவை, சில வேளைகளில் பொல்லாதவை. தங்கள் பாதை வழியாக என்னைப் போகவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டன போலும்! கிரீச்சென்று கூச்சலிட்டபடியே என் காலின்மீது பாய்ந்தன. கூட்டமாக அவை என்னை நெருங்குவதைக் கண்ட நான் ஓடத் தொடங்கினேன். நான் ஓடஓட விடாமல் துரத்தி, தொடர்ந்து கடிக்க ஆரம்பித்தன. தப்ப முடியாதோ என்று தோன்றிற்று. அப்போது அங்கு வந்த ஒருவர் என்னைக் கூப்பிட்டு, ‘மிருகங் களை எதிர்த்து நில்லுங்கள்’ என்று கூறி னார். நான் திரும்பித் துணிவுடன் அவற்றை எதிர்த்து நின்றேன். அவ்வளவு தான், அந்தக் குரங்குங்கள் திரும்பி ஓடின.

நம் வாழ்வுக்கே இது ஒரு படிப் பினை. பயங்கரத்தை எதிர்கொள்ளுங்கள், தைரியமாக எதிர்த்து நில்லுங்கள். நாம் பயந்து ஓடவில்லையென்றால், அந்தக் குரங்குக் கூட்டம் போலவே, துன்பங்களும் ஓடிவிடும். சுதந்திரம் என்பது எப்போதாவது நமக்குக் கிடைக் கும் என்றால், அது இயற்கையை வெல் வதன்மூலமே தவிர, விலகி ஓடுவதால் அல்ல. கோழைகள் ஒருபோதும் வெற்றி கண்டதில்லை . பயம், துன்பம், அறியாமை இவை அகல வேண்டும் என்று நாம் விரும்பினால், அவற்றை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும்.

வலிமை, வலிமைதான் நமக்கு வாழ்க்கையில் மிகவும் தேவை. பாவம், துன்பம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவற்றின் ஒரே காரணம் பலவீனம்தான். பலவீனத்தால் அறியாமை ஏற்படுகிறது. அறியாமையால் துன்பம் விளைகிறது. அந்த வழிபாடு நமக்கு வலிமை தரும் அப்போது துன்பங்களைக் கண்டு சிரிப் போம், தீமையின் கொடுமைகளைக் கண்டு புன்முறுவல் பூப்போம், பயங்கரப் புலி யின் இயல்பின் பின்னாலும் ஆன்மா இருப் பதைக் காண்போம். இதுதான் பலன்.

என் வாலிப நண்பர்களே, வலிமை பெறுங்கள். இதுவே நான் உங்களுக்குக்
கூறும் அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப் பதைவிட கால்பந்தாடுவதன்மூலம் சொர்க் கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும். இவை தைரியமான வார்த்தைகள். இருப் பினும் இவற்றை நான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன். பிரச்சினை எங்கு என்பது எனக்குத் தெரியும். எனக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. உங்கள் கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் வலிமை சேர்ந்தால் கீதையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் ரத்தத்தில் வேகம் இருந்தால் ஸ்ரீகிருஷ்ண ரின் மகத்தான ஆற்றலையும் மேதாவி லாசத்தையும் நீங்கள் இன்னும் சிறப்பாக அறிய முடியும். உங்கள் சொந்தக் கால் களில் நிமிர்ந்து நின்று, உங்களை மனிதன் என்று உணரும்போதுதான் நீங்கள் உப நிடதங்களையும் ஆன்மாவின் மகத்துவத் தையும் நன்றாக அறிந்து கொள்ள முடியும்.

உலகின் தீமைகளையும் பாவங்களை யும்பற்றிப் பேசாதீர்கள். உங்கள் கண் களுக்கு இன்னும் தீமை தெரிகிறதே என்பதற்காக அழுங்கள். இன்னும் எங்கும் பாவத்தையே பார்க்கின்ற நிலையில் இருக் கிறீர்களே என்பதை நினைத்து அழுங்கள்.

உலகத்திற்கு உதவி செய்ய விரும்பி னால், உலகத்தின் மீது பழிபோடாதீர்கள். உலகை இன்னும் பலவீனப்படுத்தாதீர்கள். பாவம், துன்பம் என்று நீங்கள் இங்கே காணும் எல்லாமே பலவீனத்தின் விளைவு களே அல்லாமல் வேறு என்ன? இத்த கைய உபதேசத்தால் உலகம் மேன்மேலும் பலவீனம்தான் அடைகிறது. தாங்கள் பாவிகள், பலவீனர்கள் என்றுதான் மனிதர்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்பிக்கப்படுகிறார்கள். மிகவும் பலவீன மானவர்கள் முதல் எல்லோருமே மரண மிலாப் பெருநிலையின் பெருமைமிகு வாரிசுகள் என்றே அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். குழந்தைப் பருவத்தி லிருந்தே மனிதர்களின் மனத்தில் நல்ல ஆக்கபூர்வமான, உறுதியான, உதவுகின்ற எண்ணங்களே தோன்றட்டும். இப்படிப் பட்ட உறுதியான எண்ணங்களுக்கே உங்கள் மனத்தில் இடம் கொடுங்கள். உங்கள் சக்தியைப் பறித்து உங்களைப் பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இடமே கொடுக்காதீர்கள். ‘நானே பரம்பொருள், நானே பரம்பொருள்’ என்று உங்கள் மனத்திற்கு எப்போதும் சொல்லுங்கள். இரவுபகலாக உங்கள் மனத்தில் அந்த எண்ணம் ஒரு பாடலாக ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். மரணத்தின் தறுவாயில்கூட, ‘நானே பரம்பொருள் என்று முழங்குங்கள். அதுதான் உண்மை ; உலகின் எல்லையற்ற சக்தி உங்களுக்கே சொந்தமானது. உங்கள் மனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். உண்மையை அறியுங்கள், உண்மையையே கடைப் பிடியுங்கள். குறிக்கோள், தூரத்தில் இருக் கலாம். ஆனால், விழித்திருங்கள், எழுந் திருங்கள், லட்சியத்தை அடையும் வரை, நிற்காதீர்கள்.

பலவீனர்கள், அனைத்தையும் இழந்து தங்களைப் பலவீனமாக உணரும்போது, பணம் சம்பாதிப்பதற்காக எல்லாவிதமான மர்மங்களையும் கையாள்கிறார்கள்; ஜோதிடத்தையும் பிறவற்றையும் நாடுகிறார்கள்.

‘கோழையும் முட்டாளுமே விதி என்பான்’ என்கிறது சம்ஸ்கிருதப் பழ மொழி ஒன்று. ஆற்றல் மிக்கவனோ, ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்று கூறு வான். முதுமையை நெருங்குபவர்களே விதியைப்பற்றிப் பேசிக் கொண்டிருப் பார்கள். இளைஞர்கள் பொதுவாக ஜோதிடத்தை நாடுவதில்லை. ஒருவேளை நாம் கிரகங்களின் ஆற்றலுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கலாம், அதற்காக அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது, ‘நட்சத்திரங்களைக் கணக்கிட்டும், இவை போன்று வேறு தந்திரங்களைக் கையாண்டும் வயிறு வளர்ப்பவர்களைத் தவிர்க்க வேண்டும்’ என்கிறார் புத்தர். இதுவரை பிறந்த இந்துக் களுள் உயர்ந்தவர் புத்தர், உண்மையை உணர்ந்தே அவர் அவ்வாறு கூறியுள்ளார். நட்சத்திரங்கள் வரட்டும், அதனால் என்ன தீமை ஏற்படும்? ஒரு நட்சத்திரம் என் வாழ்க்கையைக் குலைத்துவிடும் என்றால் அந்த வாழ்க்கை சல்லிக்காசுக்கும் உத வாதது. ஜோதிடமும் பிற மர்மமானவை யும் பொதுவாக பலவீன மனத்தின் அறிகுறி. இத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தில் தலைதூக்கும்போது உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்; நல்ல உணவும் நல்ல ஓய்வும் கொள்ள வேண்டும்.

எனது போதனைகளுள் நான் முதலாவதாக வற்புறுத்துவது இதுவே: ஆன்ம பலவீனத்தையோ, மன பலவீனத் தையோ, உடல் பலவீனத்தையோ தரு கின்ற எதையும் உங்கள் கால் விரல் களாலும் தீண்டாதீர்கள்.

மனிதனில் உள்ள இயற்கை ஆற்றலின் வெளிப்பாடே மதம். அளவிலா ஆற்றல் விசை ஒன்று இந்தச் சிறு உடலுள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சுருள் விரிந்து கொண்டே இருக்கிறது. அது விரிய விரிய ஒன்றன்பின் ஒன்றாகப் பல உடல்களும் போதவில்லை , எனவே அந்த விசை இந்த உடல்களை எறிந்து விட்டு, உயர்ந்த உடல்களை எடுக்கிறது. இதுவே மனிதனின் வரலாறு, மதத்தின் வரலாறு, நாகரீகத்தின் வரலாறு, அல்லது முன் னேற்றத்தின் வரலாறு. கட்டுண்டு கிடக் கும் அரக்கனான புரோமீதியஸ் கட்டுக் களை அறுத்துக்கொண்டு வருகிறான். அது எப்போதும் ஆற்றலின் வெளிப்பாடு. ஜோதிடம் போன்ற விஷயங்களில் ஏதோ கடுகளவு உண்மை இருந்தாலும் அவற்றைப் புறக்கணித்தேயாக வேண்டும்.

புரோமீதியஸ்
கிரேக்கப் புராணத்தில் வருகின்ற ஒரு பாத்திரம். அவன் களிமண்ணால் மனிதனைச் செய்து, உயிர் கொடுப்பதற்காகச் சொர்க்கத்தி லிருந்து தீயைத் திருடிக் கொண்டுவந்தான். ஜீயஸ் என்னும் கடவுளர் தலைவன் அவனை ஒரு பாறாங்கல்லில் கட்டிவைத்து, அவனைக் கொத்தித் தின்னுமாறு ஒரு கழுகை ஏவினான். ஆனால் கழுகு கொத்திய பகுதி இரவில் மீண்டும் வளர்ந்துவிடும். ஹெர்குலிஸ் என்பவன் வந்து கழுகைக் கொன்று விடுவிக்கும்வரை புரோமீதியஸ் துன்பப்பட்டான்.

உன் வாழ்க்கை உன் கையில்!-16

16. அன்பே அளிக்கிறது

அன்பு, நேர்மை, பொறுமை-இவை மூன்றும் இருந்தால் போதும், வேறு எதுவும் தேவையில்லை . வளர்ச்சி, அதாவது விரிந்து பெருகுதல், அதாவது அன்புஇதைத் தவிர வாழ்க்கை என்பது வேறு என்ன? எனவே எல்லா அன்பும் வாழ்வு. அன்பே வாழ்வின் ஒரே நியதி. எல்லா சுயநலமும் மரணமே-இந்த உலகமோ, அல்லது மறு உலகமோ இது உண்மை . நன்மை செய்வது வாழ்வு, பிறருக்கு நன்மை செய்யாமல் இருப்பது சாவு. நமது பார்வைக்குத் தென்படுகின்ற மனித மிருகங்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இறந்தவர்கள், வெறும் பிணங்கள். ஏனெனில் என் இளைஞர்களே, அன்புடை யவனைத் தவிர பிறர் வாழ்பவர்கள் அல்ல. என் குழந்தைகளே, உணர்ச்சி கொள் ளுங்கள், உணர்ச்சி கொள்ளுங்கள். ஏழை களுக்காக, பாமரர்களுக்காக, ஒதுக்கப் பட்டவர்களுக்காக உணர்ச்சி , கொள் ளுங்கள். உணர்ச்சியில் ஆழ்ந்து செல்லுங்கள். இதயமே நின்று, மூளை குழம்பி, உங்களுக்குப் பைத்தியமே பிடித்து விடுமெனத் தோன்றும் வரையி லும் உணர்ச்சியில் மூழ்குங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் அந்த ராத்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும். பாடுபடுங்கள், பாடு படுங்கள் – கடந்த பத்து ஆண்டுகளாக இதுவே எனது குறிக்கோளாக இருந்து வந்தது. பாடுபடுங்கள்–இதையே இன் னும் சொல்கிறேன். என்னைச் சுற்றிலும் இருளாக இருந்தபோதும் ‘பாடுபடுங்கள்’ என்றேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும் ‘பாடுபடுங்கள்’ என்று அதையே சொல்கிறேன். என் குழந்தை களே, பயம் வேண்டாம். நட்சத்திரங்கள் மின்னுகின்ற அந்தப் பரந்த வானம் இடிந்து வீழ்ந்து உங்களை நசுக்கிவிடுமோ என்று பயத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டு நிற்காதீர்கள். கொஞ்சம் பொறுங்கள், இன் னும் சில மணித் துளிகள்தான், அந்த வானம் உங்கள் காலடியில் கிடக்கும். பொறுங்கள்; பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை , புகழால் பயனில்லை, கல்வியால் பயனில்லை, அன்பு ஒன்றே பயன்தருவது; துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து முன்னேறக் கூடியது ஒழுக்கம் ஒன்றுதான்.

மற்ற மனிதர்களுக்காகச் சிறிதும் இரக்கம் காட்டாத இவர்களை மனிதர் என்று நினைக்கலாமா?

கடமை அவ்வளவு இனிமையான ஒன்றல்ல; அன்பு என்னும் எண்ணெய் இடாமல் அதன் சக்கரங்கள் எளிதாகச் சுழலாது; மாறாக, தொடர்ந்து உராய்ந்த வண்ணமே இருக்கும். அன்பு இல்லா விடில் பெற்றோர் குழந்தைகளுக்கும், குழந்தைகள் பெற்றோருக்கும், கணவன் மனைவிக்கும், மனைவி கணவானுக்கும் தங்கள் கடமையை எவ்வாறு செய்ய இயலும்? நமது வாழ்வில் தினமும் சிறு சிறு பூசல்களாகிய உராய்வுகளைச் சந்திக்க வில்லையா? அன்பின் வழியாக மட்டுமே கடமை இனிமையானதாக இருக்க முடி யும். இனி, சுதந்திர நிலையில் மட்டுமே அன்பு பிரகாசிக்க முடியும். புலன்களுக் கும் மனித வாழ்வில் தினமும் சந்தித்தே தீர வேண்டியதான கோபங்களுக்கும் பொறாமைகளுக்கும் இன்னும் எத்தனையோ அற்பத்தனங்களுக்கும் அடிமையாவதுதான் சுதந்திரமா? நாம் வாழ்வில் சந்திக்கின்ற இத்தகைய சிறு நெருடல்களுக்கு நடுவில் பொறுமை யுடன் அவற்றைச் சகித்துக் கொள்வதே சுதந்திரத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடாக இருக்க முடியும். எரிச்சல் மற்றும் பொறாமைக்கு எளிதில் வசப்படுகின்ற இயல்புடையவர் களாகிய பெண்கள் எளிதில் கணவனைக் குறைகூறி விடு கிறார்கள். அதுதான் தங்கள் சுதந்திரம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தாங்கள் அடிமைகளாக இருப்பதையே அதன்மூலம் நிரூபிப்பதை அவர்கள் அறிய வில்லை . மனைவியிடம் குற்றம் காண் கின்ற கணவர்களின் விஷயமும் இதுதான்.

அன்பு பலனளிக்காமல் போவதில்லை. என் மகனே, இன்றோ நாளையோ யுகாந் தரத்திலோ உண்மை வெல்வது நிச்சயம். அன்பு நிச்சயம் வெல்லும். உனது மனித சகோதரர்களை நேசிக்கிறாயா? கடவுளை எங்கேபோய் தேடுகிறாய் நீ? ஏழைகள், துன்புறுபவர்கள், பலவீனர்கள் அனை வரும் தெய்வங்கள் அல்லவா? அவர்களை ஏன் முதலில் வழிபடக் கூடாது? ஏன் கங்கைக் கரையில் கிணறு தோண்டப் போகிறாய்? அன்பின் எல்லாம் வல்ல ஆற்றலில் நம்பிக்கை கொள். மின்னி மறைகின்ற இந்தப் பெயர்புகழை யார் பொருட்படுத்துகின்றனர்! செய்தித்தாள்கள் என்ன கூறுகிறது என்று நான் ஒருபோதும் கவனித்ததில்லை. உன்னிடம் அன்பு இருக் கிறதா? இருந்தால் நீ எல்லாம் வல்லவன். நீ முற்றிலும் சுயநலம் அற்றவனா? அப்படி யானால் உன்னை எதனாலும் தடுக்க முடி யாது. ஒழுக்கத்தின் வலிமையே எங்கும் வெல்லக் கூடியது. கடலின் நடுவிலும் கூட, இறைவனே தன் குழந்தைகளைப் பாதுகாக்கிறார்.

சமுதாயத்தின் வாழ்வில்தான் தனி மனித வாழ்வு அடங்கியுள்ளது. சமுதாயத் தின் இன்பத்தில்தான் தனி மனித இன்பம் அடங்கியுள்ளது. சமுதாயம் இல்லாவிட் டால் தனிமனிதன் இருப்பது முடியாதது; இது அழியாத உண்மை , இந்த அடித் தளத்தில்தான் உலகமே இயங்குகிறது. எல்லை அற்றதான சமுதாயத்துடன் ஒன்றி, அதன் இன்பத்தில் இன்பம் காண்பதும், அதன் துன்பத்தில் துன்புறுவதுமாக மெள்ளமெள்ள முன்னேறுவதுதான் தனி மனிதனின் ஒரே கடமை. கடமை மட்டும்
அல்ல; இந்த நியதியை மீறினால் மரணம், பின்பற்றினால் மரணமிலாப் பெருவாழ்வு உண்டாகிறது.

உலகமாகிய இந்த நரகத்தில், ஒருவன் ஒருநாளாவது மற்றவனது இதயத்திற்குச் சிறிது இன்பமும் அமைதியும் அளிக்க முடியுமானால் அதுவே உண்மை . வாழ் நாள் முழுவதும் கஷ்டப்பட்ட பிறகு நான் இந்த உண்மையை அறிந்தேன்; ஏனைய அனைத்தும் வெறும் மண்ணாங்கட்டி. ….

உன் வாழ்க்கை உன் கையில்!-15

வெற்றி சுயநலமற்றவனுக்கே

சுயநல நோக்கத்துடன் வெளியே செல்கின்ற ஆற்றல்கள் யாவும் சிதறி வீணாகின்றன. அந்த ஆற்றல் உங்களிடம் திரும்பி வருவதற்கான வழியில்லை . ஆனால் அவற்றின் ஆற்றல் கட்டுப்படுத் தப்படுமானால், அது ஆற்றல் வளர வழிவகுக்கும். இந்தச் சுயக்கட்டுப்பாடு மகத்தான சங்கல்பத்தை உருவாக்குவதற்கு ஏதுவாகும்; ஏசுவையும் புத்தரையும் உருவாக்குகின்ற குணநலனைத் தரும்.

முட்டாள்கள் இந்த ரகசியத்தை அறிவதில்லை , ஆனால் மனிதகுலத்தை ஆள மட்டும் அவர்கள் விரும்புகிறார்கள். வேலைகளைச் செய்து விட்டுக் காத்திருப் பானேயானால் முட்டாள்கூட உலகம் முழுவதையும் ஒருநாள் ஆளலாம். ஆள வேண்டும் என்னும் முட்டாள்தனமான எண்ணத்தை விட்டு விட்டுச் சில ஆண்டு கள் காத்திருக்கட்டும்; அந்த எண்ணம் அவனிடமிருந்து முற்றிலுமாக விலகி விடுமானால், அவன் ஒரு மகத்தான ஆற்ற லாக மாறிவிடுவான். சில மிருகங்களால் சில அடி தூரத்திற்கு அப்பால் எதையும் பார்க்க முடியாது. அதுபோல் நம்மில் பெரும்பாலானோருக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதைப் பார்க்க முடிவதில்லை . ஒரு சிறிய வட்டம், அதுவே நமது உலகம். அதைக் கடந்து பார்க்கின்ற பொறுமை இல்லாமல் ஒழுக்கமற்றவர்களாகவும் தீயவர்களாக வும் மாறிவிடுகிறோம். இதுதான் நமது பலவீனம், வலிமையற்ற நிலை.

நம் நன்மையை மட்டுமே நினைக் கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும். ‘நானே முதலில் உண் பேன். மற்றவர்களைவிட எனக்கு அதிக மான பணம் வேண்டும், எல்லாம் எனக்கே வேண்டும்’, ‘மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடைய வேண்டும், எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும்’ என்றெல்லாம் நினைப் பவன் சுயநலவாதி. சுயநலமற்றவனோ , ‘நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் அதற்கும் தயாராக இருக் கிறேன்’ என்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மையே மதத்திற்கான உரைகல். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மீக வாதி, அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந் தாலும் படிக்காதவனாக இருந்தாலும், அவன் அறிந்தாலும் அறியவில்லை என் றாலும் அவனே மற்ற அனைவரையும்விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். சுயநலம் கொண்டவன் எல்லா கோயில் களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந் தாலும், சிறுத்தையைப் போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர் கள் ஒவ்வொருவருக்கும் பின்னணியில் எங்கேயோ அளவற்ற ஒருமையுணர்வும் அளவற்ற நேர்மையும் இருந்தே தீரும். ஒருவனது சிறந்த வெற்றிக்கு இவையே காரணம். அவன் ஒருவேளை தன்னலத்தை முற்றிலும் துறந்தவனாக இல்லாமல் போகலாம், ஆனால் அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறான். அவன் முற்றிலும் சுயநலமற்றவனாக இருந்திருந் தால், அவனது வெற்றி புத்தரது வெற்றி யையும் ஏசுநாதரின் வெற்றியையும் போல் மிகச் சிறந்ததாக விளங்கியிருக்கும். எங்கே யும் சுயநலமின்மையின் அளவைப் பொறுத்தே வெற்றியின் அளவும் உள்ளது.

தொடர்ந்து விரிந்து கொண்டிருப்பது தான் வாழ்க்கை , குறுகுவது சாவு. சொந்தச் சுகங்களையே கவனித்துக்கொண்டு, சோம் பேறியாகக் காலம் கழிக்கின்ற சுய நல மனிதனுக்கு நரகத்தில்கூட இடம் கிடையாது.

உன் வாழ்க்கை உன் கையில்!-14

14. உலகிற்கு உதவி புரிதல்

மற்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்பதன் பொருள், பிறருக்கு நாம் உதவ வேண்டும், உலகிற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே. நாம் எதற்காக உலகிற்கு நன்மை செய்ய வேண்டும்? மேலோட்டமாகப் பார்த்தால் உலகத்திற்கு உதவுவதற்காக, ஆனால் உண்மையில் நமக்கே உதவுவதற்காக. நாம் எப்போதும் உலகத்திற்கு உதவ முயன்று கொண்டே இருக்க வேண்டும். அது ஒன்றே நமது மிகவுயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும். நாம் சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால், உலகிற்கு நம் உதவி சிறிதுகூடத் தேவையில்லை என்பதைக் காணலாம். நீங்களோ நானோ வந்து உதவி செய்வோம் என்பதற்காக இந்த உலகம் படைக்கப்படவில்லை . ‘அழகிய இந்த உலகம் மிகவும் நல்லது. ஏனெனில் நாம் பிறருக்கு உதவி செய்வதற்கான நேரத்தை யும் வாய்ப்பையும் இது தருகிறது’ என்று ஒரு சொற்பொழிவில் படித்தேன். கேட்கும்போது உணர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் உலகத்திற்கு நம் உதவி தேவைப்படுகிறது என்று சொல்வது தெய்வ நிந்தனை ஆகாதா? உலகில் துயரம் மிகுந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. நாம் சென்று பிறருக்கு உதவி செய்வதே செய்யத்தக்கவற்றுள் சிறந்தது. எனினும் பிறருக்கு உதவுவது என்பது நமக்கே நாம் உதவிக் கொள்வதுதான் என்பதை இறுதியில் உணர்வோம்.

என்றாலும் நாம் நல்லதையே செய்ய வேண்டும். பிறருக்கு உதவுவது என்பது ஒரு பேறு என்ற எண்ணம் நமக்கு எப்போ தும் இருக்குமானால், நன்மை செய்வதற் கான ஆசை மிகவும் ஆற்றல் வாய்ந்த தூண்டு சக்தியாகிவிடும். ஐந்து காசுகளைக்கையில் எடுத்துக்கொண்டு, உயரமான மேடையில் நின்று கொண்டு, ‘பிச்சைக்காரா, இதோ’ என்று கூறாதீர்கள். அவன் இருந்ததால் தானே அவனுக்குத் தானம் செய்து, அதன் மூலம் உங்களுக்கு நீங்களே உதவ முடிந் தது என்று அவனிடம் நன்றியுடன் இருங்கள். பெற்றுக் கொள்பவனல்ல, கொடுப்பவனே பேறு பெற்றவன். உங்கள் தானத்திறத்தையும் இரக்கத்தையும் இந்த உலகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் நீங்கள் தூய்மையும் நிறைநிலையும் அடை வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி உடையவர்களாக இருங்கள்.

“நான்” என்று நீ உணர்கின்ற இந்த உடம்பைப் பிறர் சேவைக்காக ஈடுபடுத் தும்போது ”நான்” என்னும் நினைப்பை மறக்கிறோம். இறுதியில் உடம்பை நாமாகக் கருதாத நிலை வந்து விடும். நீ எவ்வளவு ஒருமைப்பாட்டுடன் பிறரது நன்மையை நாடுகிறாயோ, அவ்வளவிற்கு உன்னை நீ மறப்பாய். இவ்வாறு வேலை யால் படிப்படியாக உன் மனம் தூய்மை அடையும். அப்போது உன் ஆன்மாவே எல்லா உயிர்களிலும் எல்லா பொருட் களிலும் இருப்பதை உணர்வாய். இவ் வாறு பிறருக்கு நன்மை செய்வது உங்கள் ஆன்மாவை நீங்கள் உணர்வதற்கான ஒரு வழியாக அமைகிறது. எனவே செயல் புரிவதும் ஆன்மீகச் சாதனைகளுள் ஒன்று என்பதைத் தெரிந்து கொள். செயலின் லட்சியமும் ஆன்மாவின் வெளிப்பாடு தான்.

நீங்கள் ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து, அதற்குப் பிரதியாக எதையுமே, நன்றியைக்கூட, எதிர்பார்க் காமல் இருந்தீர்களானால் அவன் நன்றி மறந்தாலும் உங்களுக்குத் துன்பம் வராது. ஏனெனில் நீங்கள் எதையும் எதிர்பார்க்க வில்லை , பிரதிபலனாக எதையும் பெறும் உரிமை உங்களுக்கு உண்டென்று ஒரு போதும் நீங்கள் எண்ணவில்லை. அவன் எதைப் பெறுவதற்குத் தகுதி இருந்ததோ அதையே கொடுத்தீர்கள். அவனது வினைப் பயன் அதை அவனுக்குப் பெற்றுத் தந்தது, உங்கள் வினைப்பயன், உங்களை, அவ னிடம் அதைச் சேர்ப்பவர்கள் ஆக்கியது. அப்படியிருக்க, எதையோ கொடுத்து விட்டதாக நீங்கள் ஏன் பெருமை கொள்ள வேண்டும். பணம், மற்ற பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்லும் சுமைதூக்கி மட்டுமே நீங்கள். உலகம் தன் வினைப்பயன் மூலமே அவற்றைப் பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக் கிறது. இதில் நீங்கள் எப்படிப் பெருமை கொள்ள முடியும்? நீங்கள் உலகிற்குக் கொடுப்பதில் பெரிதாகச் சொல்லிக் கொள்ள எதுவுமில்லை.

எதையும் வேண்டாதீர்கள். பிரதியாக எதையும் விரும்பாதீர்கள். நீங்கள் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடுங்கள்; அது உங்களுக்கே திரும்பி வரும். ஆனால் அதைப்பற்றி இப்போது நினைக்க வேண்டாம். அது ஆயிரம் மடங்காகத் திரும்பிவரும். கவனத்தை அதன்மீது செலுத்தக் கூடாது. கொடுக்கும் திறன் உடையவர்களாக இருங்கள், கொடுங்கள், அத்துடன் அது முடியட்டும். முழு வாழ்க்கையுமே கொடுத்தல் மயம், நீங்கள் கொடுக்கும்படி இயற்கை வற்புறுத் தும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் முழுமனத்துடன் கொடுங்கள். இன்றோ நாளையோ நீங்கள் அனைத்தை யும் விடத்தான் வேண்டும். சேமிப்பதற் காக நீங்கள் வாழ்க்கையில் புகுந்தீர்கள், கைகளை இறுக மூடிக்கொண்டே எடுக்க விரும்புகிறீர்கள். ஆனால் இயற்கை உங்கள் தொண்டையைக் கையால் அழுத்தி, உங்கள் கைகளை விரியச் செய் கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டா லும் நீங்கள் கொடுத்தேயாக வேண்டும். ‘நான் கொடுக்க மாட்டேன்’ என்று நீங்கள் சொல்லும் அந்தக் கணமே அடி விழுகிறது; நீங்கள் காயம் அடைகிறீர்கள். காலப்போக்கில் எல்லாவற்றையும் விட்டு விடும்படி, கட்டாயப்படுத்தப் பெறாத மனிதன் யாரும் இல்லை. இந்த விதியை எதிர்த்துப் போராடும் அளவிற்கு ஒருவன் துயருறுகிறான். நாம் கொடுக்கத் துணி யாததால்தான், இயற்கையின் இந்த மேலான தேவைக்கு இணங்காததால்தான் துயரப்படுகிறோம். காடு அழிகிறது, ஆனால் அதற்குப் பதிலாக சூடு கிடைக் கிறது. கதிரவன் கடலிலிருந்து நீரை முகந்து கொள்வது, அதனை மழையாகத் திரும்ப அளிப்பதற்கே. கொள்வதற்கும் கொடுப் பதற்கும் ஆனதோர் எந்திரம் மட்டுமே நீங்கள். கொள்வது கொடுப்பதற்கே.

எனவே பிரதிபலனாக எதையும் வேண்டாதீர்கள். ஆனால் கொடுக்கும் அளவு பெருகப்பெருக வருவதும் அதிக மாகும். இந்த அறையிலிருந்து காற்றை வெளியேற்றும் அளவு விரைவாகுந் தோறும் வெளியே உள்ள காற்றால் நிரப்பப்படும். ஒரு துவாரமும் விடாமல் எல்லா கதவுகளையும் மூடினால் உள்ளே இருப்பது அப்படியே இருக்கும். ஆனால் வெளியேயுள்ளது ஒருபோதும் உள்ளே வராது. உள்ளேயிருப்பது தேங்கி நின்று, கெட்டுப்போய், நஞ்சு நிறைந்ததாகி விடும். ஆறு ஓயாமல் கடலிற்குள் பாய்ந்து கொண்டே இருக்கிறது, ஓயாமல் மீண்டும் நிரம்பிக்கொண்டும் உள்ளது. கடலில் புகுவதைத் தடை செய்யாதீர்கள். அப்படிச் செய்கின்ற அந்தக் கணமே மரணம் உங்களைப் பற்றிக்கொள்கிறது.

கல்வி, அறிவு, செல்வம், ஆள்பலம், வலிமை, தைரியம் என்று இயற்கை நமக் குக் கொடுக்கின்ற எல்லாமே பிறருக்குக் கொடுப்பதற்காகத்தான். நாம் இதை அடிக் கடி மறக்கிறோம். நமக்குக் கொடுக்கப் படும் பொருட்களின்மீது, ‘எனக்கு மட்டும் சொந்தம்’ என்ற முத்திரையை இடும் போது நம்முடைய அழிவுக்கு விதையை நாமே விதைக்கிறோம்.

உன் வாழ்க்கை உன் கையில்!-13

13. முதலாளியைப் போல் வேலை செய்தல்

எஜமானனைப்போல் வேலை செய்ய வேண்டும், அடிமையைப் போல் அல்ல என்பதே இந்த உபதேசத்தின் சுருக்கம். இடைவிடாமல் வேலை செய். ஆனால் அடிமையைப்போல் வேலை செய்யாதே. மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை நீ பார்த்ததில்லையா? முற்றிலும் ஓய்ந்திருக்க யாராலும் முடிவதில்லை நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் அடிமைகளைப்போல் வேலை செய்கிறார் கள். பலன் துன்பம்தான். இவையெல்லாம் சுயநலம் சார்ந்த வேலை. சுதந்திரத்தின் மூலமாகச் செயல்புரி, அன்பின் வழியாக வேலை செய்!

‘அன்பு’ என்ற வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். சுதந்திரம் இல்லாதவரையில் அன்பு தோன்றுவதில்லை. அடிமையிடம் உண்மையான அன்பு இருக்க முடியாது. நீங்கள் ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, சங்கிலியில் கட்டி, உங்களுக்காக வேலை செய்யச் சொல்லுங்கள்; அவன் மாடு போல் வேலை செய்வான். ஆனால் அவனிடம் அன்பு இருக்காது. நாமும் உலகப் பொருட்களுக்காக அடிமைபோல் வேலை செய்தோமானால், நம்மிடம் அன்பு இருக்க முடியாது; நாம் செய்யும் வேலையும் உண்மையான வேலையா காது. உறவினர்களுக்காகவும் நண்பர் களுக்காகவும் செய்யப்படுகின்ற வேலை களும் சரி, நமக்காகவே செய்யப்படுகின்ற வேலையும் சரி, இது உண்மையே. சுய நலத்துடன் செய்யும் வேலை அடிமை வேலை. இதோ ஒரு சோதனை: அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வரும். அமைதியையும் ஆசிகளையும் விளைவாகக் கொண்டு வராத அன்புச் செயல்கள் எதுவுமே இல்லை.

சுதந்திர உணர்வுடனும் அன்புடனும் உழைக்கின்ற ஒருவன் பலனைப்பற்றிக் கவலைப்படவே மாட்டான். அடிமையோ சவுக்கடி வேண்டுகிறான்; சேவகன் கூலி கேட்கிறான். வாழ்க்கை முழுவதிலும் இப்படித்தான் நிகழ்கிறது.

பொது வாழ்வை எடுத்துக்கொள் ளுங்கள். சொற்பொழிவாற்றும் ஒருவன் கைதட்டலை வேண்டுகிறான்; சிறிது கூச்சலையும் குழப்பத்தையும் விரும்புகி றான். அவனை ஒரு மூலையில் உட்கார வைத்தால் அது அவனைக் கொல்வதற்கு ஒப்பாகிவிடும். அவனுக்கு இவை தேவை யாக உள்ளன. இது அடிமைத்தனம். இத்தகைய நிலையில் வேலைக்கு ஏதோ ஒரு பலனை விரும்புவது அவர்களின் இயல்பாகிவிடுகிறது.

அடுத்ததாக, தொழில் செய்து உயிர் வாழ்பவன். இவனுக்குச் சம்பளம் வேண் டும்; ‘நான் உழைப்பைக் கொடுக்கிறேன், நீ சம்பளத்தைக் கொடு’ என்னும் பேரம் இது.

‘வேலைக்காகவே நான் வேலை செய்கிறேன்’ என்று சொல்வது சுலபம்.


நாம் வேலை செய்ய வேண்டும். பொய்யான ஆசைகளால் அலைக்கழிக்கப் படுகின்ற சாதாரண மனித குலத்திற்கு செயல் என்பது பற்றி என்ன தெரியும்? உணர்ச்சிகளாலும் புலன்களாலும் ஆட்டி வைக்கப்படுகின்ற மனிதனுக்குச் செயல் என்பது பற்றி என்ன தெரியும்? சொந்த ஆசைகளால் தூண்டப்படாதவன்தான், சுயநலம் துளியும் இல்லாதவன்தான் செயல்புரிய முடியும். தனக்கென்று சுய நோக்கம் எதுவும் இல்லாதவன்தான் வேலை செய்ய முடியும். லாபம் கருதாதவன்தான் வேலை செய்ய முடியும்.

உன் வாழ்க்கை உன் கையில்!-12

12. எப்படி வேலை செய்வது?

செயலுக்காகச் செயல்புரிய வேண் டும். உலகிற்கு உண்மையாகவே வளமை சேர்க்கின்ற சிலர் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் செயலுக் காகவே செயல் புரிகிறார்கள். பெயர், புகழ், ஏன், சொர்க்கத்தைப்பற்றிக்கூட அவர்கள் கவலைப்படுவதில்லை . நன் முயற்சி என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

மற்றும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் இன்னும் உயர்ந்த லட்சியங்களைக் கைக் கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்கிறார் கள், மனித சமுதாயத்திற்கு உதவுகிறார் கள். ஏனெனில் இவர்கள் நன்மை செய்வதி லும் அன்பு காட்டுவதிலும் நம்பிக்கை கொண்டவர்கள். பொதுவாக, பெயர்புகழுக் காகச் செய்யப்படும் செயல்கள் உடனடி யாகப் பலனளிப்பதில்லை . அந்தப் பெயரும் புகழும் பெரும்பாலும் நாம் வாழ்க்கையையே கடந்து விட்ட, நமது வயது முதிர்ந்த காலத்தில்தான் வருகிறது.

சுயநல நோக்கம் எதுவும் இல்லாமல் ஒருவன் வேலை செய்தால் அவனுக்குக் கிடைக்கும் பலன் எதுவுமே இல்லையா? இருக்கிறது. உண்மையில் மிகவுயர்ந்த பலனை அடைபவன் அவன்தான். சுயநல மின்றி வேலை செய்வதுதான் மிகுந்த பலனைத் தருவது, ஆனால் அவ்வாறு வேலை செய்வதற்கான பொறுமை மக்களிடம் இல்லை . பலன் கருதாமல் செயல்புரிவது உடல்நலத்திற்கும் மிகுந்த நன்மை செய்கிறது. அன்பு, உண்மை , சுயநலமின்மை இவையெல்லாம் ஒழுக் கம் பற்றிய வெறும் பேச்சுக்கள் அல்ல; அவை நம்மிடம் மிக உன்னதமான லட்சி யத்தை உருவாக்குகின்றன. ஏனெனில் அவற்றிலிருந்துதான் அளவற்ற ஆற்றல் வெளிப்படுகிறது.

வேதாந்தத்தின் லட்சியமான உண்மையான செயல்நிலை என்பது, என்ன நடந்தாலும் சமநிலை குலையாத, கலங்காத, நிரந்தரமான அமைதியுடன் இணைந்தே இருக்கும். இது வே செயல் புரிவதற்கு ஏற்ற மிகச் சிறந்த கருத்து என்பதை நமது அன்றாட வாழ்க்கை அனுபவத்தின்மூலம் நாம் உணரலாம்.

செயல்புரிவதற்குப் பொதுவாக நாம் கொள்கின்றாஆ கூட இல்லாமல் எப்படிச் செயல்புரிய முடியும் என்று என்னிடம் பலரும் அவ்வப்போது கேட்டதுண்டு. சிறு வயதில் நானும் அப்படியேதான் நினைத்திருந்தேன். ஆனால் வயதாக ஆக, அனுபவம் வளர வளர அது உண்மை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். ஆசை குறைகின்ற அளவிற்கு நாம் நன்றாகச் செயல்புரி வோம். அமைதி நம்மிடம் மிகுந்தோறும் நமக்கு நன்மை பெருகுகிறது; நம்மால் அதிகம் செயல்புரிய முடிகிறது. உணர்ச்சி களைக் கட்டவிழ்த்து விடுமளவிற்கு நாம் ஆற்றலை இழக்கிறோம், நமது நரம்புகள் தளர்வுறுகின்றன, மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகிறது, மிகக் குறைந்த அளவே வேலை செய்ய முடிகிறது. வேலை செய்யச் செலவிட்டிருக்க வேண்டிய ஆற்றலை, ஒன்றுக்கும் பயன்படாத வெறும் உணர்ச்சிப் பெருக்கில் வீணாக்கு கிறோம். மனம் ஒருமுகப்பட்டு, அமைதி யாக இருக்கும் போதுதான் அதன் ஆற்றல் முழுவதும் நற்செயல் புரியப் பயன்படு கிறது. இந்த உலகம் தந்த செயல்வீரர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அவர்கள் அற்புத மான அமைதி மிக்கவர்கள் என்பது தெரிய வரும். எதனாலும் அவர்களது சமநிலை யைக் கலைக்க முடிவதில்லை. அதனால் தான் கோபப்படும் ஒரு மனிதனால் அதிக அளவு வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது; எதற்கும் கோபப்படாத மனிதன் சிறப்பான பணிகளைச் செய்ய முடிகிறது. கோபத்திற்கோ வெறுப் பிற்கோ ஏதாவது ஆசைகளுக்கோ இடம் கொடுப்பவனால் செயல்புரிய முடியாது. அவன் தன்னைத்தானே சிதைத்துக் கொள் கிறானே தவிர உண்மையாக எதையும் செய்து முடிப்பதில்லை. அமைதியான, மன்னிக்கக்கூடிய, சமநோக்குடைய, நிலைகுலையாத மனம் உடையவனே மிக அதிக அளவு செயல்புரிய முடிகிறது.

‘எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதால் என்ன பயன்? ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் ஏதா வது ஒரு வழியில் வேலைகள் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்!’ என்று கேட்கலாம். ஆனால் ஆற்றல்களை வீணடிப்பது என்று ஒன்று இருக்கிறது. சாதுரியமாகவும், ஒரு விஞ்ஞானம்போல் நுணுக்கமாகவும் செயல்புரிவதே கர்ம யோகம் என்று பகவத்கீதை கூறுகிறது. எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்வதன்மூலம் ஒருவன் பெரிய பலன் களை அடைவான்.

அனைத்து செயல்களும் நம் மனத்துள் ஏற்கனவே இருக்கின்ற ஆற்றலை வெளியே கொண்டு வருவதற்கான, ஆன்மாவை விழிப்புணர்த்துவதற்கான முயற்சிகள் மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆற்றல் மனிதனுள் இருக்கிறது. அது போலவே அறிவும் அவனுள்ளேயே இருக்கிறது. அவற்றை வெளியே கொண்டு வருவதற்காக, இந்த மாமனிதர்களை விழிப்புணர்த்துவதற் காகத் தரப்படும் அடி போன்ற தே பல் வேறு செயல்கள்.

செயலற்றிருப்பதை எல்லா வகையி லும் தவிர்க்க வேண்டும். செயல்நிலை என்றாலே எதிர்த்தல் என்பதுதான் எப் போதும் பொருள். மனம் மற்றும் உடல் சம்பந்தமான எல்லா தீமைகளையும் எதிர்த்துப் போரிடு. எதிர்ப்பதில் வெற்றி பெற்ற பின்னரே அமைதி வரும். ‘யாரை யும் வெறுக்காதே, தீமையை எதிர்க்காதே’ என்றெல்லாம் சொல்வது மிகவும் எளிது. ஆனால் பொதுவாக அதைப் பின்பற்றி னால் எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததே. சமுதாயத்தின் கண்கள் நம்மீது இருக்கும் போது நாம் பெரிய அஹிம்சா வாதி போல் நடிக்கலாம். ஆனால் அந்த நேரம் முழுவதும் நமது இதயம் அரித்துக் கொண்டிருக்கும். அஹிம்சையின் விளை வாக வருகின்ற அமைதியை ஒருசிறிதுகூட நாம் அனுபவிக்கவில்லை . இதைவிட எதிர்ப்பது நல்லதென நமக்குத் தோன்று கிறது. நீ பணம் சேர்க்க ஆசைப்படுகிறாய். அதேவேளையில் பணத்தைக் குறிக் கோளாக உடையவனை உலகம் முழு வதும் கொடியவன் என்று நினைக்கிறது என்பதை அறிந்தால் பணத்தைச் சேர்ப் பதற்கான போராட்டத்திலும் ஒருவேளை இறங்கத் துணிய மாட்டாய். ஆனால் உன் மனமோ பணம் பணம் என்றே இரவும் பகலும் அலைந்து கொண்டிருக்கும். இது கபடத்தனம்! இதனால் எந்தப் பலனும் இல்லை . உலகத்தில் குதித்துப் போராடு, பட வேண்டிய வேதனைகளையெல்லாம் படு! இன்பங்களையெல்லாம் அனுபவி! அதன்பிறகே துறவு வரும்.

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பவனால் எந்தக் காரியமும் செய்ய முடியாது. உண்மை யானது, நல்லது என்று நீ எதனைப் புரிந்து கொண்டாயோ அதனை உடனே நிறைவேற்று. எதிர்காலத்தில் இது வருமா, இது வராமல் போகுமா என்று கணக்குப் பார்ப்பதில் என்ன பயன்? வாழ்க்கை மிகவும் குறுகியது. எதிர்காலத்தில் என்ன நடக்கும், என்ன பலன் விளையும் என்றெல்லாம் கணக்கிட்டுக் கொண்டிருந் தால் எதையாவது சாதிக்க முடியுமா? கடவுள் ஒருவர்தான் பலன்களைத் தருபவர். அதை அவரிடம் விட்டு விட்டு எல்லா வேலைகளையும் செய். பலன் களைக் கணக்கிடுவதில் நீ என்ன பெறப் போகிறாய்? அந்த வழியைப் பின் பற்றாதே. எப்போதும் வேலை செய்து கொண்டே இரு.

பலன் கருதி வேலை செய்பவன்தான் தனக்கென்று வாய்த்த கடமையைப்பற்றிக் குறைபட்டுக் கொள்வான். ஆனால் பலனில் பற்றில்லாதவர்களுக்கு எல்லா வேலைகளுமே ஒரேபோல் நல்லவை தாம்; சுயநலத்தையும் புலனின்ப நாட்டத் தையும் அழித்து ஆன்ம சுதந்திரம் பெறு வதற்குத் தகுந்த கருவிகள்தாம்.

நாம் எல்லோருமே நம்மைப்பற்றி மிகப் பெரிதாக எண்ணிக் கொள்கிறோம். நமது விருப்பத்தைவிட, தகுதிக்கு ஏற்பவே நமக்குக் கடமைகள் வந்து சேர்கின்றன. போட்டி பொறாமையை எழுப்புகிறது, இரக்கத்தை அழித்து விடுகிறது. முணுமுணுப்பவர்களுக்கு எல்லா கடமைகளுமே வெறுப்பானவைதான், எதுவுமே அவர்களுக்குத் திருப்தி தராது. அவர்களின் வாழ்க்கையே தோல்விதான். நமக்கென வாய்க்கின்ற கடமைகளை எப்போதும் தயாரான முழுமனத்துடன் செய்து கொண்டே போவோம். அப்போது நிச்சயம் ஒளியைக் காண்போம்.

எனவே எல்லாவற்றிலும் இறை வனை இணைத்துச் செயல்புரியுங்கள் என்று வேதாந்தம் சொல்கிறது. வாழ்க் கையைத் தெய்வீகமாக்கி, தெய்வமாக ஆக்கி, இடைவிடாமல் வேலை செய்யுங்கள். நாம் செய்ய வேண்டியதும், கேட்டுப் பெற வேண்டியதும் இவ்வளவு தான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண் டும். எங்கும் இறைவன் இருக்கிறார். அவரைத் தேடி நாம் எங்கே போவது? ஒவ்வொரு செயலிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வோர் உணர்ச்சியிலும் அவர் ஏற்கனவே உள்ளார். இதை உணர்ந்து செயல்புரிய வேண்டும். அது ஒன்றுதான் வழி. வேறு வழியே இல்லை. அப்போதுதான் நமது கர்மபலன்கள் நம்மைக் கட்டுப்படுத்தாது.

போலி ஆசைகள்தான் நமது எல்லா தீமைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம் என்பதைப் பார்த்தோம். அந்த ஆசை களையே இறைவனின்மூலம் தெய்வீக மாக்குங்கள், தூய்மைப்படுத்துங்கள். அதன்பின் அவை துன்பத்தையோ தீமையையோ கொண்டு வராது. இந்த ரகசியத்தை அறியாதவர்களுக்கு, அதை அறிந்து கொள்ளும் வரை, உலக வாழ்க் கையே நரகமாகத்தான் இருக்கும். தங்களுக்கு உள்ளும், தங்களைச் சுற்றியும், எல்லா இடங்களிலும் எல்லையற்ற ஆனந்தச் சுரங்கம் இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. அவர்கள் இன்னும் அதைக் கண்டு பிடிக்கவில்லை . நரக வாழ்க்கை என்பது என்ன? அறியாமை தான் நரகம் என்கிறது வேதாந்தம்.

மனத்திற்குப் பிடித்த வேலையை பரம முட்டாள்கூட செய்து விடலாம். ஆனால் எந்த வேலையையும் தனக்குப் பிடித்ததாக மாற்றி அமைத்துக் கொள் பவனே புத்திசாலி. எந்த வேலையும் அற்ப மானதல்ல. இந்த உலகில் ஒவ்வொன்றும் ஓர் ஆலவிதை போன்றது; அது கடுகு போல் தோன்றினாலும், தன்னுள் பிரம் மாண்டமான ஆலமரத்தை அடக்கிக் கொண்டிருக்கிறது. இதை உணர்ந்து எல்லா வேலையையும் உண்மையில் பெருமை உடையதாகச் செய்வதில் வெற்றி பெறுபவனே உண்மையில் புத்திசாலி.

எந்தவகைக் கடமையையும் அலட்சியமாக நினைக்கக் கூடாது. கீழான வேலை செய்கின்ற ஒருவன், அதன் காரணமாக மட்டுமே உயர்ந்த வேலை செய்கின்ற ஒருவனை விடத் தாழ்ந்தவன் ஆகிவிட மாட்டான். ஒருவன் செய்கின்ற செயலின் தன்மையை வைத்து அவனை மதிப்பிடக் கூடாது; அந்தச் செயல்களை அவன் எப்படிச் செய்கிறான் என்பதைக் கொண்டே அதைத் தீர்மானிக்க வேண் டும். செய்கின்ற முறையும் திறமையுமே ஒருவனைக் கணக்கிடும் அளவு கோலாகும். தொழிலைப் பொறுத்தவரை, நாள்தோறும் பயனற்றவற்றைப் பேசு கின்ற பேராசிரியரைவிட, உறுதியும் அழகும் வாய்ந்த ஒரு செருப்பை மிகக் குறைந்த நேரத்தில் உருவாக்குகின்ற தொழிலாளி எவ்வளவோ உயர்ந்தவன்.

கடமை ஒவ்வொன்றும் புனித மானது. அதை பக்தியுடன் செய்வது மிக உயர்ந்த தெய்வ வழிபாடு. மாயையில் சிக்கி, அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடக்கின்ற பத்த ஆன்மாக்கள், அதாவது கட்டுப்பட்ட உயிர்கள் ஞான ஒளியும் விடுதலையும் பெற இத்தகைய செயல்கள் கட்டாயமாகப் பேருதவி புரியும்.

நம் கைக்கு எட்டிய, நம்மால் இயன்ற கடமைகளை நன்றாகச் செய்வதால் நம்மை நாம் அதிக வலிமையுடையவர்களாக ஆக்கு கிறோம். இந்த வலிமையை இவ்வாறே வளர்த்தால், பெருமை மிக்க இந்த வாழ்க் கையிலும் சமூகத்திலும் எல்லோராலும் விரும்பத்தக்க நிலையை, பெறுதற்கரிய நிலையைப் படிப்படியாக அடையலாம்.

உன் வாழ்க்கை உன் கையில்!-11

11. முழுப் பொறுப்பும் நமதே

நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மைச் செய்து கொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது. இப் போதைய நமது நிலைக்கு முன்வினைப் பயன்களே காரணம் என்றால், எதிர் காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது இப்போதைய நமது செயல் களுக்கு ஏற்பவே அமையும் என்பதும் உறுதி. எனவே செயல்புரிவது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது தகுதிக்கு ஏற்றதையே நாம் பெறுகிறோம். நமக்கு வர வேண்டிய துன்பங்கள் மட்டுமே வருகின்றன. ஆணவத்தை விட்டு இதைத் தெரிந்து கொள்வோம். நமக்கென்றில்லாத எந்த அடியும் ஒருபோதும் நம்மைச் சேராது. நமக்கு நாமே செய்துகொள்கின்ற துன்பத் தைத் தவிர வேறு எந்தத் துன்பமும் நம்மை அணுகாது. இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உங்களையே ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு வந்த துன்பங்கள் எல்லாமே நீங்கள் அதற்காக உங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டதால்தான் வந்தது என்பதை அறிந்து கொள்வீர்கள். ஒரு பாதியை நீங்கள் செய்தீர்கள், புற உலகம் மறுபாதியைச் செய்தது இவ்வாறே துயரம் வந்தது.

இந்த ஆராய்ச்சியிலிருந்து ஒரு நம்பிக்கைக் கிரணமும் வருகிறது. ‘என்னால் புறவுலகை அடக்க முடியாது. ஆனால் என்னுள், எனக்கு அருகில் இருக் கின்ற எனது சொந்த உலகம் என் கட்டுப் பாட்டிற்கு உட்பட்டது. தோல்விக்கு இரண்டும் தேவையானால், என் துயரத் திற்கு இரண்டும் காரணமானால் என் பக்கத்திலிருந்து நான் ஒத்துழைக்க மாட்டேன். அப்போது துயரம் எப்படி வரும்? உண்மையிலேயே என்னை நான் அடக்கினால், துயரம் ஒருபோதும் வராது’ என்பதே அந்த நம்பிக்கை.

எல்லா பொறுப்பையும் நாமே சுமக்க நேர்வதால் நாம் சிறந்த முறையில், நம்முடைய எல்லா சக்தியையும் திரட்டி இயங்குகிறோம். நம்மை இவ்வளவு சிறப்பாகச் செயல்பட வைக்க வேறெந்தக் கருத்தாலும் முடியாது. உங்கள் எல்லோ ருக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். ஒரு சிறு குழந்தையை உங்கள் கையில் கொடுத் தால், நீங்கள் எப்படி நடந்து கொள் வீர்கள்? அந்தக் கண நேரத்திற்கு உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அந்த நேரத்திற்கு, சுயநலமற்றவர்களாக ஆகியே தீர வேண்டும். பொறுப்பு திணிக்கப் பட்டால் உங்கள் தீய எண்ணங்கள் எல்லாம் மறைந்துவிடும், உங்களுடைய குணம் முழுவதுமே மாறிவிடும். பொறுப்பு முழுவதும் நம் தலையில் விழும்போது நமது சிறந்த தன்மைக ளெல்லாம் வெளிப்படத் தொடங்கி விடும். இருட்டில் தடுமாறிக்கொண்டு நாம் தேடிச் செல்வதற்கு ஒருவர் இல்லாத போது, நாம் குற்றம் சாட்டுவதற்கு ஒரு சாத்தான் இல்லாத போது, நம்முடைய சுமைகளைச் சுமப்பதற்கு ஒரு சகுணக் கடவுள் இல்லாதபோது எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பாளியாக இருக்கும் அந்த நிலையில்தான், நாம் மிக உயர்ந்த, மிகச் சிறந்த நிலைக்கு உயரத் தொடங்குவோம். என்னுடைய விதிக்கு நானே காரண மாகிறேன். எனக்கு நன்மையை நானே தான் தேடிக் கொள்ள வேண்டும். எனக்குத் தீமை விளைவித்துக் கொள்பவனும் நானேதான்.

இந்த வாழ்க்கை ஒரு கடினமான உண்மை . அது வலிமை பெற்றதாக இருந் தாலும், அதன்மூலம் வழியைக் கண்டு பிடித்துத் தைரியமாகச் செல்லுங்கள். எதையும் பொருட்படுத்தாதீர்கள். ஆன்மா வலிமை வாய்ந்தது. சாதாரண தெய்வங் களின்மீது அது பொறுப்பைச் சுமத்துவ தில்லை. நம்முடைய அதிர்ஷ்டங்களுக்கு நாமே காரணம். நாமே நம்முடைய துன்பங்களுக்கும் காரணம். நமது நன்மை தீமைகளை நாமே உண்டாக்கிக் கொள் கிறோம். நாமே நம் கைகளால் கண்களை மறைத்துக்கொண்டு, ‘இருட்டாக இருக் கிறதே’ என்று கதறுகிறோம். கைகளை விலக்கிவிட்டு ஒளியைப் பாருங்கள். நீங்கள் ஏற்கனவே முழுமை பெற்றவர்கள், ஒளி பெற்றவர்கள்.

பிரச்சினைக்கு இது ஒன்றுதான் தீர்வு. அந்தோ , பிறர்மீது பழி போடுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக அவர்கள் துன்பப்படுபவர்களாக, நம்பிக்கை இழந்த வர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய தவறுகளின் மூலமாகவே இந்தக் கஷ்டத்திற்கு உள்ளாகியிருக் கிறார்கள். ஆனால் பிறர்மீது பழி போடு கிறார்கள். இது அவர்களின் நிலைமையை மாற்றுவதில்லை, அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவுவதில்லை . பிறர்மீது பழிபோட முயல்வது அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது. ஆகவே உங்கள் தவறுகளுக்குப் பிறரைப் பழி சொல்லா தீர்கள். சொந்தக் காலிலேயே நில்லுங்கள், பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

‘நான் அனுபவிக்கும் இந்தத் துன்பத் திற்கு நானே காரணம். ஆகவே நானேதான் இதற்குப் பரிகாரமும் தேடிக் கொள்ள வேண்டும்’ என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நான் படைத்ததை நானே அழிக்க முடியும். மற்றவர்கள் படைத்ததை என்னால் அழிக்க முடியாது. ஆகவே எழுந் திருங்கள், உறுதியுடனும் தைரியத் துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோளிலேயே சுமந்து கொள்ளுங்கள். உங்கள் விதிக்கு நீங்களே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்புகின்ற வலிமையும் உதவியும் உங்களுள்ளேயே இருக்கின்றன. உங்கள் எதிர்காலத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். போனது போகட்டும். எல்லையற்ற எதிர் காலம் உங்கள் முன்னே இருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வோர் எண்ணமும் ஒவ்வொரு செய லும் அதற்கு ஏற்ற பலனை உண்டாக்கும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். தீய செயல்களும் தீய எண்ணங்களும் புலிகளைப்போல் நம்மீது பாயத் தயாராக இருக்கின்றன. அதோடு கூடவே நல் எண்ணங்களும் நற்செயல் களும் பல்லாயிரக்கணக்கான தேவதூதர் களைப் போல் நம்மைக் காப்பாற்ற எப்போதும் தயாராக இருக்கின்றன.

உன் வாழ்க்கை உன் கையில்!-10

10. நம்மை முதலில் மாற்றிக் கொள்வோம்

புறவுலகை ஆள்வது அகவுலகம்தான் என்பதை முன்பு கண்டோம். உள்ளம் மாறி னால் உலகமும் மாறிவிடும். உங்கள் உள்ளம் தூய்மையானால் உலகமும் தூய தாகியே தீரவேண்டும். இந்த உண்மையை உலகுக்குக் கூற வேண்டிய அவசியம் முன்பு என்றும் இல்லாத அளவுக்கு இப் போது ஏற்பட்டிருக்கிறது. நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் விவகாரங்களில் இப்பொழுது அதிக அக்கறை கொள்ளத் தொடங்கிவிட்டோம்; ஆனால் நம்மைப் பற்றிய விஷயங்களில் நமது கவனம் குறைந்துகொண்டே வருகிறது.

நாம் மாறினால் உலகம் மாறும். நாம் தூயவர்களானால் உலகமும் தூய்மை யாகும். மற்றவர்களிடம் நான் ஏன் தீமை யைக் காண்கிறேன் என்பதுதான் கேள்வி. நான் தீயவனாக இல்லாமல் பிறரிடம் தீமை காண முடியாது. நான் பலவீனனாக இல்லாமல் துன்பப்பட முடியாது. நான் குழந்தையாக இருக்கும்பொழுது எனக்குத் துன்பம் தந்தவை இப்போது துன்பம் தருவதில்லை . நான் மாறிவிட்டேன், புறப் பொருட்களும் மாறிவிட்டன. வேதாந்தம் இதைத்தான் சொல்கிறது.

இவ்வாறு தனக்குத்தானே கட்டுப் பாடு உள்ளவன்மீது வெளியிலுள்ள எதுவும் ஆதிக்கம் செலுத்த முடியாது. அவனிடமிருந்து அடிமைத்தனம் விடை பெற்றுவிடுகிறது. அவனது மனம் சுதந்திர மாகிவிட்டது. அத்தகையவன் மட்டுமே இந்த உலகில் நன்றாக வாழ்வதற்குத் தகுதி உடையவன்.

மனிதர்கள் பொதுவாக உலகத்தைப் பற்றி இரண்டு கருத்துக்களைக் கொண் டிருப்பதைக் காண்கிறோம். சிலர் துன்ப நோக்குக் கொண்டவர்கள்; ‘இந்த உலகம் எவ்வளவு கொடூரமானது! எத்தனை கொடி யது!’ என்று அவர்கள் கூறுகிறார்கள். மற்றும் சிலர் இன்பநோக்குக் கொண்ட வர்கள்; அவர்கள், ‘உலகம் எவ்வளவு அழகானது! எத்தனை அற்புதமானது!’ என்கிறார்கள். மனத்தைக் கட்டுப்படுத் தாதவர்களுக்கு இந்த உலகம் முழுக்க முழுக்கத் தீமை நிறைந்ததாக அல்லது நன்மை, தீமை இரண்டும் சேர்ந்ததாகவா வதுதான் காட்சியளிக்கும். நாம் நம் மனத் திற்கு எஜமானர் ஆகும் போது இதே உலகம் இன்பமயமாகி விடுகிறது. அதன் பின் நன்மை தீமை என்ற நிலையில் எதுவும் நம்மைப் பாதிக்காது; எல்லாமே அவற்றிற்குரிய சரியான இடத்தில், எப்போதுமே இயைபாக இருப்பதை நாம் உணர்வோம்.

அன்பு, அறம், புனிதம் இவை நம் மிடம் வளருந்தோறும் அவற்றை வெளியி லும் அதிகமாகக் காண்போம். பிறரைக் கண்டிப்பதெல்லாம் நம்மை நாமே கண்டித்துக் கொள்வதுதான். உன்னை முதலில் சரிப்படுத்திக்கொள் (அது உன் னால் இயலும்), உலகம் உனக்காகத் தன்னை இணக்கமாக்கிக் கொள்ளும். ஒரு துளி நீர், பிரபஞ்சத்தையே தாங்க வல்லது என்ற கோட்பாடு (Hydrostatic Paradox) போன்றது இது. நாம் அகத்தில் எதுவாக இல்லையோ அதைப் புறத்திலும் காண முடியாது. பெரிய எந்திரத்திற்கும், அதன் சிறிய எந்திர அமைப்பிற்கும் உள்ள தொடர்பைப் போன்றதே பிரபஞ்சத்திற் கும் நமக்கும் உள்ள தொடர்பு. சிறிய எந்திரத்தில் நேர்கின்ற கோளாறு, பெரிய எந்திரத்தில்தான் கோளாறு ஏற்பட்டு விட்டதாக நம்மைக் கற்பனை செய்யத் தூண்டுகிறது.

உலகில் உண்மையினுடைய முன் னேற்றத்தின் ஒவ்வோர் அடியும் அன்பின் ஆற்றலாலேயே ஏற்பட்டுள்ளது. குறை கூறுவது ஒருபோதும் நன்மை பயக்காது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிஞர்கள் இதனைச் சோதித்தும்விட்டனர். கண்டனத் தால் எதையும் சாதிக்க முடியாது.

உன் வாழ்க்கை உன் கையில்!-9

9. எதிர்மறை எண்ணங்களைக் கட்டுப்படுத்துதல்

இந்த நான்குவிதக் கருத்துக்கள் நம்மிடம் இருக்க வேண்டும். எல்லோரிட மும் நட்புக்கொள்ள வேண்டும். துன்பப் படுபவர்களிடம் இரக்கம் காட்ட வேண் டும். பிறர் மகிழ்ச்சி அடைந்தால் நாமும் மகிழ வேண்டும். தீயவர்களிடம் அலட்சிய மாக இருக்க வேண்டும். நம் முன் வரும் எல்லா விஷயங்களிலும் இந்த நான்கு வித மனப்பான்மைகளைக் கொள்ள வேண் டும். நல்ல பொருளாக இருந்தால் நட்பும், துன்பத்தில் இரக்கமும், நல்ல விஷயத்தில் மகிழ்ச்சியும், தீய விஷயங்களில் அலட்சிய மும் கொள்ள வேண்டும். நம் முன் வருகின்ற விஷயங்களில் இத்தகைய மனப் பான்மைகளைக் கொள்வது மனத்திற்கு அமைதியைத் தரும். தினசரி வாழ்க்கை யில் நமக்கு வருகின்ற சிக்கல்களுள் பலவும் மனத்தை இந்த வழியில் நிறுத்த முடி பாத்தால் ஏற்படுவதாரண மாக ஒருவன் நமக்குத் தீமை செய்தால் உடனே நாமும் அவனுக்குத் தீமை செய்ய எண்ணுகிறோம். தீய எதிர்ச்செயல்கள் ஒவ்வொன்றும் நாம் சித்தத்தை அடக்கிப் பழகவில்லை என்பதையே காட்டுகிறது. சித்தம் வெளிவந்து அலைகளாகி, புறப் பொருளை நோக்கிச் செல்லுந்தோறும் நாம் நமது வலிமையை இழக்கிறோம். வெறுப்பாகவோ தீய எண்ணமாகவோ வரும் ஒவ்வோர் எதிரியக்கமும் மனத்தின் ஆற்றலைக் குறைக்கிறது. வெறுப்பு மற்றும் தீமையாக வெளிப்படுகின்ற ஒவ் வோர் எதிர்ச்செயலும் மனத்திற்கு இழப் பாகிறது. ஒவ்வொரு தீய எண்ணமும் வெறுப்புச் செயலும், எதிர்ச்செயல் எண்ணமும், தடுக்கப்படும்போது மனத் திற்கு அனுகூலமாகிறது. நம்மை நாமே அடக்குவதால் நமக்கு இழப்பு ஒன்றும் இல்லை. மாறாக நாம் எதிர்பார்த்ததற்கு மேல் எல்லையற்ற மடங்கு நன்மை யையே அடைகிறோம். ஒவ்வொரு முறை நாம் வெறுப்பையும் கோப உணர்ச்சி யையும் அடக்கும்போது அந்த அளவிற்கு நல்ல ஆற்றலைச் சேமிக்கிறோம். அந்த ஆற்றல் உயர்ந்த சக்திகளாக மாற்றப்படுகின்றன.

உன் வாழ்க்கை உன் கையில்!-8

8. எண்ணங்களின் தாக்கம்

நம்மிடமிருந்து புறப்படுகின்ற ஒவ் வொரு செயலும் நம்மிடமே எதிர்ச்செய லாகத் திரும்பி வருவது போல், நம் செயல்கள் பிறரிடமும், பிறரது செயல்கள் நம்மிடமும் செயல்படுகின்றன. தீமை செய்கின்ற ஒருவன் மேலும் மேலும் தீயவனாகிறான். அவனே நல்லது செய்யத் தொடங்கும் போது, மேலும் மேலும் வலிமையடைந்து, எப்போதும் நல்லது செய்யக் கற்றுக் கொள்கிறான். இந்த உண்மையை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஒரு செயல் ஏற்படுத்தும் தாக்கத்தின் இத்தகைய தீவிரத்தை, நமது செயல்கள் பரஸ்பரம் ஒவ்வொருவர்மீதும் விளைவுகளையும்
எதிர்விளைவுகளையும் உண்டாக்குகின்றன என்ற உண்மையின் மூலம் அல்லாமல், வேறு எதன்மூல மாகவும் விளக்க முடியாது.

பௌதீக விஞ்ஞானத்திலிருந்து இதற்கு ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள் வோம். நான் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது, என் மனம் குறிப்பிட்ட ஓர் அதிர்வுநிலையில் இருக்கிறது. இந்த அதிர்வு நிலையில் இருக்கின்ற மற்றெல்லா மனங் களும் என் மனத்தால் பாதிக்கப்படலாம். ஓர் அறையில் பல்வேறு இசைக்கருவிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவை அனைத்தின் தந்திக்கம்பிகளும் ஒரேபோல் சுருதி சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது ஒரு கருவியின் தந்தியை மீட்டி னால், மற்ற கருவிகளும் அதே சுரத்தைத் தரும் விதத்தில் அதிரத் தொடங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது போலவே ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலையிலுள்ள எல்லா மனங்களும், அதே நிலையிலுள்ள எண்ணத்தால் சம அளவில் பாதிக்கப் படுகின்றன. ஆனால் தூரம் மற்றும் வேறு பல காரணங்களைப் பொறுத்து இந்தப் பாதிப்பின் தாக்கம் மனத்திற்கு மனம் மாறுபடுகிறது. என்றாலும் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையிலேயே அந்த மனம் எப்போதும் இருக்கிறது. உதாரணமாக, நான் ஒரு தீமை செய்கிறேன். அப்போது என் மனம் குறிப்பிட்ட ஓர் அதிர்வுநிலை யில் இருக்கிறது. அப்போது பிரபஞ்சத்தில் அதே அதிர்வுநிலையில் இருக்கும் எல்லா மனங்களும் அந்த அதிர்வால் பாதிக்கப்பட லாம். அதுபோலவே நான் நல்ல காரியம் செய்யும்போது, என் மனம் வேறோர் அதிர்வு நிலையில் இருக்கும்; அப்போது அதே அதிர்வுநிலையில் இருக்கும் எல்லா மனங்களும் அதனால் பாதிக்கப்படலாம். இப்படி ஒரு மனத்தின்மீது மற்றொரு மனத்திற்குள்ள ஆற்றல், ஓரளவிற்கு அந்த அதிர்வு கூடியும் குறைந்தும் இருப்பதற்கு ஏற்பவே இருக்கும்.

இந்த உதாரணத்தைத் தொடர்வோம். ஒளியின் அலைகள் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையுமுன் லட்சோபலட்சம் ஆண்டுகள் பயணம் செய்யலாம். அது போலவே எண்ண அலைகளும் தங்களுக்கு ஏற்றவிதத்தில் அதிர்கின்ற ஒரு பொருளைச் சென்றடைய நூற்றுக்கணக் கான ஆண்டுகள் பயணம் செய்ய நேர லாம். எனவே இந்த வானவெளி அத்தகைய நல்ல மற்றும் தீய அலைகளால் நிரம்பி இருப்பதற்கான எல்லா வாய்ப்பு களும் உள்ளன. ஒவ்வொரு மூளையி லிருந்தும் வெளிக் கிளம்புகின்ற ஒவ்வோர் எண்ணமும் அதை ஏற்றுக்கொள்வதற்குப் பொருத்தமான பொருளை அடையும்வரை யில் அதிர்ந்து கொண்டேயிருக்கின்றன என்று சொல்லலாம். அவற்றை ஏற்றுக் கொள்வதற்குத் தகுதியாக இருக்கின்ற மனம் உடனடியாக ஏற்றுக்கொள்கிறது. ஒருவன் தீய செயல்களைச் செய்யும்போது அவன் தன் மனத்தை ஒரு குறிப்பிட்ட அதிர்வு நிலைக்குக் கொண்டு வருகிறான். அப்போது, அதே அதிர்வுநிலையில் வான வெளியில் மிதந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகின்ற எண்ண அலைகள் எல்லாம் அவனது மனத்தில் நுழைய முயல்கின்றன. இதனால்தான் பொதுவாக, தீமை செய்பவன் மேலும் மேலும் தீமை செய்து கொண்டே இருக்கிறான்; அவனது செயல் தீவிரமாகிறது. நன்மை செய் பவனின் விஷயமும் இதுதான். அவன் வானவெளியில் உள்ள நல்ல அலைகளுக் காகத் தன்னைத்திறந்து வைக்கிறான். அவனது நற்செயல்களும் உறுதி பெறுகின்றன.

எனவே நாம் தீமை செய்யும்போது இரண்டு வகையான அபாயங்களை விளை விக்கிறோம். முதலில் நம்மைச் சுற்றியுள்ள தீய ஆதிக்கங்கள் நம்மீது. செயல்பட நாமே இடம் கொடுக்கிறோம். இரண்டாவதாக மற்றவர்களைப் பாதிக்கின்ற-அது ஒரு வேளை நூற்றுக்கணக்கான ஆண்டு களுக்குப் பிறகு பாதிக்கலாம்-தீமையைச் செய்யும் போது நாம் நம்முடன் சேர்த்துப் பிறரையும் துன்புறுத்துகிறோம். மனிதனி லுள்ள மற்ற எல்லா சக்திகளையும் போலவே நன்மை தீமை ஆகிய சக்திகளும் புறத்திலிருந்தே வலிமையைப் பெறு கின்றன.

இந்த லட்சியத்தால் உங்களை நிறை யுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் இதையே சிந்தியுங்கள். இந்தச் சிந்தனை யின் ஆற்றலால் உங்கள் செயல்கள் அனைத்தும் பெருக்கப்படும், மாறுபாடு அடையும், தெய்வீகமாகும். ஜடப் பொருள் வலிமையானது என்றால் சிந்தனை எல்லாம் வல்லது. இந்தச் சிந்தனை உங்கள் வாழ்க்கையில் முத்திரை பதிக்கட்டும். எல்லாம் வல்ல உங்கள் ஆற்றல், உங்கள் சிறப்பு, உங்கள் மகிமை இவைபற்றிய சிந்தனையால் உங்களை நிறையுங்கள், உங்கள் தலையில் மூட நம்பிக்கை எதுவும் புகாதிருக்கக் கடவுள் அருள் புரியட்டும்! பிறப்பிலிருந்தே இத்தகைய மூடநம்பிக்கைகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருக்குமாறும் நமது வளர்ச்சியைக் கெடுக்கின்ற பல வீனம், தீமை போன்ற கருத்துக்கள் நம்மைச் சூழ்வதையும் கடவுள் தடுப் பாராக! மிக உயர்ந்த, மிகச் சிறந்த உண்மை களை அறியவல்ல எளிய பாதைகளை மனிதன் அடையக் கடவுள் கருணை செய் வாராக! மனிதன் இவற்றைக் கடந்தேயாக வேண்டியிருக்கிறது. உங்கள் பின்னால் வருபவர்களுக்குப் பாதையை மேலும் கடினமாக்காதீர்கள்.