கீதை 2
கீதைக்குச் சிறிது முன்னுரை தேவை. குருக்ஷேத்திரப் போர்க் களத்தில் காட்சி நிகழ்கிறது. ஒரு வம்சத்தின் இரண்டு கிளைகள் அரசுரிமைக்காக ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் போர் புரிந்தன. பாண்டவர்களின் பக்கம் உரிமை இருந்தது. கௌரவர்களின் பக்கம் வலிமை இருந்தது. பாண்டவர்கள் ஐவர், அவர்கள் காட்டில் வாழ்ந்து வந்தனர். கிருஷ்ணர் பாண்ட வர்களின் நண்பர். ஊசி குத்தும் இடங்கூட அவர்களுக்குக் கொடுக்க மறுத்தார்கள் கௌரவர்கள்.
போர்க்களத்தில் காட்சி தொடங்குகிறது. இருதரப்பினரும் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் காண்கின்றனர் – ஒரு சகோதரன் ஒரு பக்கம், மற்றவன் மறுபக்கம்; பாட்டன் ஒரு பக்கம், பேரன் மறுபக்கம். நண்பர்களையும் உறவினர்களை யும் எதிர்த்தரப்பில் காண்கிறான் அர்ஜுனன். அவர்களைக் கொல்ல நேரும் என்பதை எண்ணியபோது அவனது இதயம் இளகிவிடுகிறது. அவன் போர்புரிய மறுக்கிறான். இப்படித் தொடங்குகிறது கீதை.
உலகில் வாழும் நம் அனைவருக்குமே வாழ்க்கை ஓர் இடைவிடாத போர். நமது பலவீனத்தையும் கோழைத்தனத் தையும் பொறுமை என்றும் தியாகம் என்றும் விளக்கம் கொடுப் பதற்கான சந்தர்ப்பங்கள் எத்தனையோ வருகின்றன. பிச்சைக் காரனின் துறவில் சிறப்பு எதுவும் இல்லை. எதிர்க்கும் வலிமை யுள்ள ஒருவன் பொறுத்தால் அது சிறப்பு. உடையவன் துறந்தால் அது சிறப்பு. நமது வாழ்க்கையில் எத்தனை தடவை சோம் பலாலும் கோழைத்தனத்தாலும் நாம் போரிலிருந்து விலகிக் கொண்டு, நாம் தைரியசாலிகள் என்று நம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்! இது நமக்குத் தெரியாதா!
கருத்தாழம் மிக்க இந்தச் சுலோகத்துடன் கீதை தொடங்கு கிறது: ‘அரச குமாரா, எழுந்திரு! இந்த மனத் தளர்ச்சியை, இந்தப் பலவீனத்தை ஒழி. எழுந்து நின்று போர்புரி’ (2. 3). அர்ஜுனன் கிருஷ்ணரிடம் இதைப்பற்றி வாதிக்க முயல்கிறான். எதிர்ப்பைவிட எதிர்க்காமலிருப்பதே சிறந்தது என்றெல்லாம் பல நீதிகளைக் கூறுகிறான். தனது வாதங்களை நியாயப்படுத்த முயல்கிறான். ஆனால் கிருஷ்ணரை அவன் ஏமாற்ற முடியுமா? அவர் பரமாத்மா, இறைவன். அர்ஜுனனுடைய வாதத்தின் உள்நோக்கத்தை உடனே கண்டுகொள்கிறார். அர்ஜுனனின் விஷயத்தில் இது கோழைத்தனம். அவன் தனது உறவினர் களைக் காண்கிறான்; அவர்களைக் கொல்ல மனம் வரவில்லை.
அர்ஜுனனின் இதயத்தில் அவனது உணர்ச்சிக்கும் கடமைக்கும் போர் நிகழ்கிறது. மிருகங்கள் மற்றும் பறவைகளின் நிலையை அணுகும் அளவிற்கு நாம் உணர்ச்சி என்னும் நரகத் தில் துன்புறுகிறோம். அதை அன்பு என்று கூறிக் கொள்கிறோம். அது சுய மனவசியம். விலங்குகளைப்போல் நாம் உணர்ச்சி களுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறோம். ஒரு பசு தனது கன்றிற் காக உயிரை விடலாம். ஒவ்வொரு மிருகமும் அப்படியே செய்யலாம். அதனால் என்ன? விலங்குகளைப் போன்ற, பறவை களைப் போன்ற குருட்டுத்தனமான உணர்ச்சிப் பெருக்கு நம்மைப் பூரணத்துவத்திற்குக் கூட்டிச் செல்லாது. எல்லையற்ற பேருணர்வே மனிதனின் குறிக்கோள். அங்கே உணர்ச்சி வேகத் திற்கு இடமில்லை; பொருளற்ற பேச்சிற்கும் புலன் வசப்பட்ட எந்தச் செயலுக்கும் இடம் இல்லை. அங்கே உள்ளது அறி வொளி மட்டுமே. அங்கே மனிதன் ஆன்மாவாக விளங்குகிறான்.
இப்போது அர்ஜுனன் உணர்ச்சிப்பெருக்கின் பிடியில் உள்ளான். அவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லை. முற்றிலும் தன்னை அடக்கியவனாக, அறிவொளியுடன், எல்லை யற்ற சிந்தனைத் திறத்துடன் இயங்க வேண்டியவன் அவன். ஆனால் ஒரு விலங்கைப்போல், ஒரு குழந்தையைப்போல், தனது விவேகத்தை உணர்ச்சிக்கு அடிமைப்படுத்திவிட்டு, தன்னை ஒரு முட்டாளாக்கிக் கொண்டு, தனது கோழைத் தனத்தை ‘அன்பு’ முதலிய சொற்களால் மறைக்க முயல்கிறான்; அறிவற்றவனைப் போல் பேசுகிறான்; பல காரணம் காட்டி வாதிக்கிறான்; அதேவேளையில் முட்டாள்தனமாகவும் பேசு கிறான். கிருஷ்ணர் அதை உணர்கிறார்.
கிருஷ்ணர் கூறுகிறார்: ‘இருப்பவனையோ இறந்த வனையோ எண்ணி ஞானி வருந்துவதில்லை .’ (2. 11); ‘நீ சாக முடியாது; நானும் சாக முடியாது. நாம் இல்லாமலிருந்த காலம் ஒன்று இருந்ததில்லை; இனி இருக்கப்போவதும் இல்லை. இந்த வாழ்க்கையில் ஒருவன் குழந்தைப் பருவத்தில் தொடங்கி, இளமை, முதுமை முதலியவற்றைக் கடந்து செல்கிறான். அதுபோல் மரணவேளையில் இன்னோர் உடலில் புகுகிறான். அதற்காக அறிவாளி ஏன் வருந்த வேண்டும்?’ (2. 12, 13) உன்னை அடிமையாக்கும் உணர்ச்சிவேகத்திற்கு மூலகாரணம் எங்கே உள்ளது? புலன்களில்தான். ‘சூடு, குளிர், இன்பம், துன்பம் போன்றவை இருப்பது புலன்களின் தொடர் பால்தான். இவை வருவதும் போவதுமாக இருக்கின்றன.’ (2. 14) மனிதன் இப்போது துன்புறுகிறான், அடுத்த கணம் இன்புறுகிறான். இந்த நிலையில் அவன் ஆன்மாவின் இயல்பை அனுபவிக்க முடிவதில்லை .
‘உள்ளது ஒருபோதும் இல்லாமல் போகாது; இல்லாதது ஒருபோதும் உள்ளதாகாது. … எனவே எது இந்த உலகமெல்லாம் பரவி நிற்கிறதோ, அது தொடக்கமும் முடிவும் இல்லாதது என்பதை அறிந்துகொள். அது மாறுபடாதது. மாறுபாடில்லாத ஒன்றை மாற்றக்கூடியது இந்த உலகில் எதுவும் இல்லை. இந்த உடலிற்கு ஆரம்பமும் முடிவும் இருந்தாலும் உடலில் உறை பவன் எல்லையற்றவன், முடிவில்லாதவன்’. (2. 16-18)
இதையறிந்து எழுந்து நின்று போர் செய். ஓரடிகூடப் பின்வாங்கக் கூடாது. அதுதான் கருத்து. எது வந்தாலும் சரி, போராடு. நட்சத்திரங்கள் பெயர்ந்து விழட்டும், உலகம் முழு வதும் நம்மை எதிர்த்து நிற்கட்டும்! மரணம் என்பது உடையை மாற்றிக் கொள்வதுதான். அதனால் என்ன? அதை உணர்ந்து போராடு. கோழைகளாவதால் ஒரு பயனையும் அடைய முடியாது. ஓரடி பின்வாங்குவதால் நீங்கள் எந்தத் தீமையையும் கடந்துவிட முடியாது. உலகிலுள்ள எல்லா தெய்வங்களிடமும் கதறினீர்கள். துன்பம் தீர்ந்ததா? இந்தியர்கள் ஆறு கோடித் தெய்வங்களை நோக்கிக் கதறுகின்றனர். என்றாலும் நாய்களைப் போல்தான் சாகின்றனர். இந்தத் தெய்வங்கள் எங்கே இருக் கின்றனர்? நீங்கள் வெற்றி பெற்றால் அதன்பின் தெய்வங்கள் உங்களுக்கு உதவி செய்ய வருகின்றனர். அதனால் என்ன பயன்? இன்பமாக உயிர்விடுங்கள்.
மூட நம்பிக்கைகளுக்கு முழந்தாளிடுவதும், உங்கள் மனத்திற்கே உங்களை விற்றுவிடுவதுமாகிய இது, என் உயிருக்கு உயிராகிய உங்களுக்குத் தகாது. நீங்கள் எல்லையற்றவர்கள், மரணமற்றவர்கள், பிறப்பற்றவர்கள். நீங்கள் எல்லையற்ற ஆன்மா. அடிமையாயிருப்பது உங்களுக்குப் பொருந்தாது. எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! எழுந்து நின்று போர் புரியுங்கள். மரணம் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ ஒருவருமில்லை. நீங்களே உலகனைத்துமாக இருக்கும் போது யார் உங்களுக்கு உதவ முடியும்?
‘எந்தப் பிராணியும் பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் நமது மனிதப் புலன்களால் அறியப்படுவதில்லை . இடையில் மட்டுமே வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?’ (2. 28)
‘சிலர் அதை (ஆன்மாவை) வியப்புடன் பார்க்கின்றனர். சிலர் வியந்து பேசுகின்றனர். பிறர் வியந்து கேட்கின்றனர். சிலர் அதைப்பற்றிக் கேட்டும் புரிந்துகொள்வதில்லை .’ (2. 29)
இவர்களையெல்லாம் கொல்வது பாவம் என்று நீ சொல் வாயானால் உன்னுடைய குலதர்ம நிலையிலிருந்து யோசித்துப் பார். ‘இன்ப துன்பங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாகக் கொண்டு எழுந்து நின்று போர் செய்’. (2. 38)
கீதையின் தனிச்சிறப்பு மிக்க இன்னொரு கருத்து பற்றின்மை. நாம் செய்யும் செயல்களில் பற்றுக்கொள்வதால் அவற்றின் பயன்களை நாம் ஏற்க வேண்டியிருக்கிறது. ‘கடமைக் காகச் செய்யப்படும் கடமை மட்டுமே கர்மபந்தத்தைப் போக்கும்.’ (2. 39) அதில் அளவு மீறிவிடுவோம் என்ற அபாயம் இல்லை. ‘சிறிது செய்தாலும் இந்த யோகம் பிறப்பு, இறப்பு என்னும் பயங்கரச் சுழலிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.’ (2 . 40)
‘அர்ஜுனா, ஒருமைப்பட்ட மனமே வெற்றி பெறும். இரண்டாயிரம் பொருட்களில் சிதறிப்போன மனம் தனது ஆற்றலை இழந்துவிடுகிறது. வேதங்களுக்கு மேல் எதுவுமில்லை என்று சிலர் இதமாகப் பேசலாம். அவர்கள் சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறார்கள். வேதங்களின் சக்தியால் உலகிலுள்ள இன்பப் பொருட்களை அடைய விரும்புகிறார்கள். அதற்காக வேள்விகளைச் செய்கிறார்கள்.’ (2. 41-43) அப்படிப்பட்டவர்கள், இந்தச் சுகபோக எண்ணங்களைக் கைவிடாத வரையில் ஆன்மீக வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள். (2. 44)
இது இன்னொரு முக்கியமான பாடம். உலகியல் ஆசை களை விடாதவரை ஆன்மீகம் கிடையாது. புலன்களில் என்ன இருக்கிறது? அவை வெறும் மன மயக்கம். இறந்த பின்னும் சொர்க்கத்தில்கூட அவற்றை ஒரு ஜோடிக் கண்களை, மூக்கை — விடாமல் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். சிலர் அங்கே தங்களுக்கு இங்குள்ளதைவிட அதிகப் புலன்கள் இருக்கும் என்று எண்ணுகின்றனர். அரியாசனத்தில் வீற்றிருப்பவனாக இறைவனை, இறைவனுடைய பௌதீக உடலை என்றென்றும் கண்டுகொண்டிருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அத்தகைய மனிதர்களின் ஆசைகளெல்லாம் உடலைப் பற்றியவை; உணவு, நீர், இன்பம் பற்றியவை. இந்த உலகியல் வாழ்வின் ஒரு தொடர்ச்சியே அது. வாழ்விற்கு அப்பால் எதையும் நினைத்துப் பார்க்க மனிதனால் முடிவதில்லை. இந்த வாழ்க்கையெல்லாம் உடலுக்குத்தான். ‘முக்திக்குக் காரணமான மன ஒருமைப் பாட்டை இத்தகைய மனிதன் ஒருபோதும் அடைய மாட்டான்.’ (2. 44)
‘வேதங்கள் சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணங்களையுடைய பொருட்களைப் பற்றியே பேசுகின்றன.’ (2. 45) வேதங்கள் இயற்கையிலுள்ள பொருட் களைப்பற்றிக் கூறுகின்றன. உலகில் காணாத எதையும் மக்களால் எண்ணிப் பார்க்க முடியாது. சொர்க்கத்தைப் பற்றிப் பேசினால், சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ஓர் அரசனையும் அவன் முன் சாம்பிராணிப் புகையிடும் மக்களையும் அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். இவை எல்லாம் இயற்கை, இயற்கையைக் கடந்த எதுவுமில்லை, எனவே வேதங்கள் இயற்கையைத் தவிர வேறெதையும் கூறவில்லை . ‘எதற்கும் கவலைப்படாமல் நன்மைதீமைகளைப் பொருட்படுத்தாமல், இயற்கையைக் கடந்து, வாழ்க்கையின் இருமைகளைக் கடந்து, உனது சொந்த உணர்வையும் கடந்து செல்.’ (2. 45)
நாம் நமது உடல்களுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு விட்டோம்; உடலை உடையவர்களாக இல்லாமல் உடலாகவே ஆகிவிட்டோம். என்னைக் கிள்ளினால் நான் கதறுகிறேன். இது அறிவீனம். ஏனெனில் நான் ஆன்மா. இந்தத் துன்பச் சங்கிலி, கற்பனை, பிராணிகள், தேவர்கள், அசுரர்கள், உலகம் எல்லாமே நாம் நம்மை உடலுடன் ஒன்றுபடுத்திக் கொண்டதன் விளைவு. நான் ஆன்மா. நீங்கள் கிள்ளினால் நான் ஏன் குதிக்க வேண்டும்? இந்த அடிமைத்தனத்தைப் பாருங்கள். உங்களுக்கு வெட்கமில்லையா? நாம் மத உணர்வு கொண்டவர்களாம்! நாம் தத்துவவாதிகளாம்! நாம் ஞானிகளாம்! ஆண்டவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்! நாம் என்னவாயிருக்கிறோம்? நடமாடும் நரகங்கள், ஆம், அப்படித்தான் இருக்கிறோம். பைத்தியக்காரர்கள், ஆம் அப்படித்தான் இருக்கிறோம்! உடல் கருத்தை நம்மால் விட முடியவில்லை. நாம் இந்த மண்ணோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். நமது எண்ணங்கள் வெறும் சுடுகாடுகளே. நாம் உடலை விடும்போது அந்த எண்ணங்களின் அம்சங்கள் ஆயிரக்கணக்காக வந்து நம்மைக் கட்டுகின்றன.
பற்றில்லாமல் யார் வேலை செய்ய முடியும்? இதுதான் முக்கியமான கேள்வி. அவன்தான் தன் வேலை வெற்றி பெற் றாலும் தோல்வியடைந்தாலும் சமநிலையில் இருப்பான். வாழ் நாள் முழுவதும் அவன் செய்த வேலை ஒரு நொடியில் எரிந்து சாம்பலாகப் போனாலும் அவனது இதயம் ஒருமுறைகூடக் கலங்கித் துடிப்பதில்லை . ‘அவன்தான் பயன் கருதாமல், செயலுக்காகவே செயல் புரியும் ஞானி. அந்த வழியில் அவன் பிறப்பு இறப்புத் துன்பத்தைக் கடந்து செல்கிறான், முக்தி பெறுகிறான்’. (2.51) இந்தப் பற்றெல்லாம் மாயை என்பதை அப்போது அவன் காண்கிறான். ஆன்மா ஒருபோதும் பற்றுக் கொள்ள இயலாது. அத்தகையவன் சாஸ்திரங்களையும் தத்துவங்களையும் கடந்த நிலைக்குச் செல்கிறான். (2. 52). மனம் மயக்கமுற்று, நூல்களாலும் சாஸ்திரங்களாலும் ஆன சுழலில் கவரப்படுமானால் இந்தச் சாஸ்திரங்களால் என்ன பயன்? ஒன்று இப்படிச் சொல்கிறது, மற்றொன்று அப்படிச் சொல் கிறது. எந்த நூல் சொல்வதை ஏற்பது? தனித்து நில்லுங்கள். உங்கள் ஆன்மாவின் மகிமையைக் காணுங்கள். நீங்களே உழைக்க வேண்டும் என்பதை அறியுங்கள்; அப்போதே நிலைத்த புத்தி உடையவர்கள் ஆவீர்கள். (2. 53)
அர்ஜுனன் கேட்கிறான்: ‘புத்தி நிலைபெற்றவன் யார்?’ (2.54)
கிருஷ்ணர் பதில் கூறுகிறார்: ‘எல்லா ஆசைகளையும் துறந்தவன், எந்தத் தேவையும் இல்லாதவன், இந்த வாழ்க்கையையோ முக்தியையோ தெய்வங்களையோ தொழிலையோ வேண்டாதவன், பூரணத் திருப்தி அடைந்தவன் – அவனது ஆசைகள் அற்றுவிட்டன.’ (2 . 55) அவன் ஆன்மாவின் மகிமையைக் கண்டுவிட்டான். உலகமும் தெய்வங் களும் சொர்க்கமும் தன் ஆன்மாவிலேயே இருப்பதை உணர்ந்து கொண்டான். அப்போது தெய்வங்கள் தெய்வங்களில்லை; சாவு சாவில்லை; வாழ்வு வாழ்வில்லை; எல்லாம் மாறிவிட்டன. ‘யாருடைய புத்தி நிலைபெற்றதாகவும், மனம் துயரத்தில் கலங்காததாகவும் எந்த இன்பத்தையும் நாடாததாகவும் பற்றுகள் அனைத்தும் நீங்கியதாகவும் பயமும் கோபமும் இல்லாததாகவும் இருக்குமோ, அவனே மெய்யுணர்வு பெற்ற ஞானி எனப்படுகிறான்.’ (2.56)
‘ஆமை தன் கால்களை உள்ளே இழுத்துக்கொண்டபின், நீங்கள் எவ்வளவு அடித்தாலும் ஒரு கால்கூட வெளியே வராதது போல், ஞானியால் தன் புலன்களையெல்லாம் உள்ளே இழுத்துக் கொள்ள முடியும்.’ (2. 58) எந்த விருப்பமும் அவனை அசைக்காது. பிரபஞ்சமே இடிந்து விழட்டும்; அவனது மனத்தில் அது ஒரு சிறு அலையைக்கூட எழுப்பாது.
இனி ஒரு முக்கியமான பிரச்சினை எழுகிறது. சிலவேளை களில் மக்கள் பல நாட்கள் தொடர்ந்து பட்டினியிருக்கிறார்கள், மிகக் கொடிய மனிதனும் இருபது நாள் பட்டினி கிடந்தால், சாந்தமாகி விடுகிறான். பட்டினி கிடப்பதும் உடலை வருத்து வதும் மக்களால் உலகெங்கும் செய்யப்படுகின்றன.
கிருஷ்ணரின் கருத்தோ, இவையெல்லாம் பொருளற்ற செயல்கள் என்பதே. உடலை வருத்தும் மனிதனிடமிருந்து அந்த நேரத்திற்குப் புலன் சற்றுப் பின்வாங்கும்; ஆனால் இருபது மடங்கு சக்தியுடன் திரும்பி வரும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இயல்பாக இருங்கள், உடலை வருத்த வேண்டாம். செயல் புரிந்துகொண்டே போங்கள். பற்று ஏற்படாதபடி மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். பற்றின்மை யின் ரகசியத்தை அறிந்து பின்பற்றாத மனிதனது சங்கல்பம் ஒருபோதும் திடமாக நிலைபெறாது.
நான் வெளியே சென்று கண்களைத் திறக்கிறேன். அங்கே ஏதோ ஒன்று இருந்தால், நான் அதைப் பார்த்தாக வேண்டும், பார்க்காமலிருக்க முடியாது. மனம் புலன்களைப் பின்பற்றி ஓடுகிறது. ஆகையால் புலன்கள் இயற்கையைப் பொருட்படுத் தாமலிருக்க வேண்டும்.
‘புலன்களில் கட்டுப்பட்டவனுக்கு இருளாயிருக்கின்ற நேரத்தில், புலன்களை அடக்கியவன் விழித்திருக்கிறான். அது அவனுக்குப் பகல்ஒளியாயிருக்கிறது. எதில் உலகம் விழித்திருக் கிறதோ, அதில் ஞானி உறங்குகிறான்.’ (2 . 69) உலகம் எதில் விழித்துக் கொண்டிருக்கிறது? புலன்களில். உண்ணவும் பருகவும் குழந்தைகளைப் பெறவும் மக்கள் விரும்புகிறார்கள். கடைசியில் நாயைப்போல் சாகிறார்கள். அவர்கள் எப்போதும் புலன்களுக் காக விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை மதமும் அதற்காகவே உள்ளது. தங்களுக்கு உதவ பெண்கள், ஏராளமான செல்வம், குழந்தைகள் இவற்றைத் தர ஒரு கடவுளைப் படைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தெய்வீகத் தன்மையைப் பெற ஒரு கடவுள் தேவையில்லை ! ‘எதில் உலகம் முழுதும் விழித்துக் கொண்டிருக்கிறதோ, அதில் ஞானி உறங்கு கிறான். அறிவிலிகள் எதில் உறங்குகிறார்களோ, அதில் ஞானி விழிப்புடன் இருக்கிறான்’ (2. 69); மனிதன் தன்னை ஒரு விலங் காக, ஒரு பறவையாக, ஓர் உடலாகக் காணாமல் எல்லையற்ற, மரணமற்ற, அழிவற்ற ஆன்மாவாகக் காணும் ஒளியுலகில் ஞானி விழித்திருக்கிறான். எதில் அறிவிலிகள் உறக்கத்தில் ஆழ்ந்து, உணர்ந்துகொள்ள நேரமும் புத்தியும் சக்தியும் இல்லாதவர்களாக இருக்கிறார்களோ, அதில் ஞானி விழித்திருக் கிறான். அது அவனுக்குப் பகல் வெளிச்சம்போல் உள்ளது.
‘உலகத்திலுள்ள ஆறுகளெல்லாம் இடையறாது சென்று கடலில் சேர்ந்தபோதிலும், பெருமையும் கம்பீரமும் வாய்ந்த கடலின் இயற்கை நிலைகுலையாமல், மாறுபடாமல் இருப்பது போல், எல்லா புலன்களும் இயற்கையிலிருந்து உணர்ச்சி களைக் கொண்டுவந்த போதிலும் ஞானியின் கடல்போன்ற இதயம் அலையையோ அச்சத்தையோ உணர்வதில்லை.’ (2 .70) கோடிக்கணக்கான ஆறுகளில் துன்பங்கள் வரட்டும், நூற்றுக் கணக்கான ஆறுகளில் இன்பங்கள் வரட்டும்; நான் துன்பத் திற்கும் அடிமையல்ல, இன்பத்திற்கும் அடிமையல்ல!
மேற்கோள்கள்: எழுந்திரு! விழித்திரு! பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 15. கீதை 2 |