Blog

பக்தியோகம் 8

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
ஆ. உயர்நிலைப் பாடங்கள் 
1. ஆரம்பநிலை தியாகம்

    இதுவரை பக்தியின் ஆரம்ப நிலையைப் பார்த்தோம். இனி பராபக்தி அல்லது முதிர்ந்த பக்திபற்றிக் காண்போம். முதலில் இந்தப் பராபக்தியைப் பழகுவதற்கான சில ஆரம்ப சாதனைகளைச் சற்று ஆராய்வோம். இந்தச் சாதனைகள் எல்லாம் மனத்தைத் தூய்மைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவை. ஜபம், பூஜை, உருவங்கள், சின்னங்கள் போன்ற அனைத்தும் மனத் தூய்மைக்காகவே. இவையனைத்திலும் மிக உயர்ந்த வழி தியாகம். அதன் துணையின்றிப் பராபக்தியின் எல்லைக்குள் நுழையவே முடியாது. இது பலரையும் பயப்படுத்தி விடுகிறது. ஆயினும் தியாகம் இல்லாமல் ஆன்மீக வளர்ச்சியே கிடையாது. நமது யோகங்கள் எல்லாவற்றிலும் தியாகம் இன்றியமையாதது. இதுவே ஆன்மீக வாழ்க்கைக்கு முதற்படி; மதப் பண்பாட்டின் மைய அச்சு; அதன் இதயம். தியாகம்இதுதான் மதம்.  

எப்போது மனிதன் உலகப் பொருட்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, ஆழமான விஷயங்களில் ஈடுபட முயற்சிக் கிறானோ, முற்படுகிறானோ; உணர்வுப் பொருளான தான், எப்படியோ ஜடப்பொருளாக, உருவம் பெற்றவனாக ஆகிவிட் டோம், இதனால் ஏறக்குறைய ஜடப்பொருளாகவே ஆகிவிடு வோம் என்பதை அறிந்து, ஜடப்பொருட்களிலிருந்து எப்போது முகத்தைத் திருப்பிக் கொள்கிறானோ அப்போது தொடங்கு கிறது தியாகம்; அப்போது தொடங்குகிறது உண்மையான ஆன்மீக முன்னேற்றம். 

தன் செயல்களின் பலனைத் துறப்பதன் மூலம் கர்மயோகி தியாகம் செய்கிறான். தன் உழைப்பிற்கான பலனில் அவனுக்குப் பற்று இல்லை . இந்த உலகிலும் சரி, மற்ற உலகிலும் சரி, தன் செயல்களுக்கான பரிசை அவன் எதிர்பார்ப்பதில்லை. 

இயற்கை முழுவதன் நோக்கமே ஆன்மா அனுபவம் பெறு வதற்காகத்தான் என்பதையும் இந்த எல்லா அனுபவங்களின் மொத்த விளைவுமே, தான் இயற்கையிலிருந்து எப்போதும் பிரிந்து தனித்திருப்பது என்பதை ஆன்மா உணரத்தான் என் பதையும் அறிந்திருக்கிறான் ராஜயோகி. தான் நிலையான, என்றுமுள்ள உணர்வுப் பொருள், ஜடப்பொருள் அல்ல; ஜடப் பொருளோடான தனது சேர்க்கை தற்காலிகமானது என்பதை மனிதன் புரிந்துகொள்ள வேண்டும், உணர வேண்டும். இயற்கை யிலிருந்து பெறும் சொந்த அனுபவத்திலிருந்தே தியாகம் என்னும் படிப்பினையைப் பெறுகிறான் ராஜயோகி.

    அனைத்துள்ளும் மிகக் கடுமையான தியாகத்தை மேற் கொள்கிறான் ஞானயோகி. ஏனெனில் திடப்பொருள்போல் கண்முன் காணும் இந்த உலகம் வெறும் தோற்றமே என்று அவன் ஆரம்பத்திலேயே உணர வேண்டியுள்ளது. இயற்கை யிலுள்ள எந்தவகையான சக்திவெளிப்பாடும் ஆன்மாவைச் சேர்ந்தது, இயற்கையைச் சேர்ந்தது அல்ல என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எல்லா அறிவும் எல்லா அனுபவங்களும் ஆன்மாவில்தானே தவிர, இயற்கையில் அல்ல என்பதை அவன் ஆரம்பத்திலிருந்தே அறிய வேண்டியுள்ளது. தான் இயற்கையுடன் பிணைக்கப்பட்டுள்ள எல்லா தளை களிலிருந்தும், தனது பகுத்தறிவின் ஆற்றலால், அவன் தன்னை உடனடியாக விடுவித்துக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இயற்கையும், அதைச் சேர்ந்த எல்லா பொருட்களும் தன்னை விட்டு விலகுமாறு அவன் செய்கிறான். அவற்றை மறையச் செய்து, தான் மட்டும் தனித்து நிற்க முயல்கிறான்! 

எல்லா தியாகங்களிலும் மிகவும் இயல்பானது என்று நாம் சொல்லத்தக்கது பக்தியோகியின் தியாகம். காரணம், இங்கே மூர்க்கத்தனம் இல்லை. எதையும் விட வேண்டிய தில்லை. எதையும் நம்மிலிருந்து கிழித்தெறிய வேண்டியதில்லை. எதிலிருந்தும் பலாத்காரமாக நம்மை விடுவித்துக்கொள்ளத் தேவையில்லை. பக்தனின் தியாகம் எளிதானது, மென்மையாகச் செயல்படுவது, நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்போல் அவ்வளவு இயல்பானது. – 

இத்தகைய தியாகத்தின் வெளிப்பாட்டை, சற்று கேலிக் கூத்தான நிலையிலேனும் நாம் நம்மைச் சுற்றிலும் தினமும் காணத்தான் செய்கிறோம். ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக் கிறான். சிறிதுகாலம் சென்றதும் வேறொருத்தியைக் காதலிக் கிறான்; முதற்காதலியை விட்டுவிடுகிறான். அவள் அவனது உள்ளத்திலிருந்து மெதுவாக அகன்று விடுகிறாள். அவனது மனம் மீண்டும் அவளை நாடுவதில்லை. இதுபோன்றே ஒருத்தி ஒருவனைக் காதலிக்கிறாள். பிறகு அவள் வேறு ஒருவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். முதல் காதலன் அவள் மனத் திலிருந்து மெல்லமெல்ல மறைந்துவிடுகிறான். ஒருவன் தான் வசிக்கும் நகரத்தை நேசிக்கிறான். பிறகு நாட்டை நேசிக்கத் தொடங்குகிறான். அப்போது, நகரத்தின்மீது அவன் கொண்ட ஆழ்ந்த பற்று மெல்ல இயல்பாக மறைகிறது. பிறகு உலகையே விரும்பத் தொடங்கியதும், சொந்த நாட்டின்மீது கொண்டிருந்த வெறித்தனமான பற்று, தானாக, பலாத்காரமாக இல்லாமல், மனத்தை வருத்தாமல் மறைந்து போகிறது. 

பண்பாடற்ற மனிதன் கீழான புலனின்பங்களில் தீவிரப் பற்றுக் கொள்கிறான். பண்பட்டவனாக உயரும்போது அறி விற்கு இன்பம் தருபவற்றில் பற்று வைக்கிறான்; அவனது புலனின்ப நாட்டம் நாளுக்குநாள் குறைகிறது. உணவில் நாயும் நரியும் இன்பம் காண்பதுபோல் ஒரு மனிதனால் காண முடி யாது. ஆனால் கல்வி கேள்விகளிலும் கலைச் சாதனைகளிலும் மனிதன் காணும் இன்பத்தை நாய் நரிகள் காண்பதில்லை.

இன்பம், முதலில் கீழ்நிலைப் புலன்களால் உண்டாகிறது. ஒரு மிருகம் உயர்நிலைப் பிறவிகளை அடையும்போது, கீழான நிலையிலுள்ள இன்ப நாட்டங்களில் தீவிரம் குறையத் தொடங்குகிறது. சமுதாயத்தை எடுத்துக்கொண்டால், மனிதன் எவ்வளவு தூரம் மிருக நிலைக்கு அருகில் இருக்கிறானோ, அந்த அளவிற்கு அவனிடம் புலனின்பங்கள் மிகுந்திருக்கின்றன. அவனது நிலை உயரஉயர, பண்பாடு வளரவளர, கல்வி கேள்வி களிலும் கலைகளிலும் அவன் இன்பம் காண்பது அதிகரிக்கிறது. அறிவுத் தளத்தைவிட, சிந்தனை நிலையைவிட மேலான நிலைக்குச் செல்லும்போது, ஆன்மீகத் தளத்தை, தெய்வப் பேருணர்வு நிலையை அவன் அடைகிறான். அங்கு அவன் அடையும் பேரின்பத்திற்கு முன்னால் புலனின்பங்களும் அறி வின்பங்களும் சாரமற்றவையாகி விடுகின்றன. சந்திரன் ஒளி வீசும்போது விண்மீன்கள் ஒளிமங்கிப் போகின்றன. சூரியன் உதித்தாலோ சந்திரன் ஒளிகுன்றிப் போகிறான். பக்திக்குரிய தியாகத்தை அடைய நாம் எதையும் அழிக்க வேண்டியதில்லை. பெருகிவரும் ஒளி வெள்ளத்தில் மங்கலான ஒளிகள் தாமா கவே ஒளியிழந்து, பின்னர் அடியோடு மறைந்துவிடுவதைப் போல், இறையன்பின் முன்னால் புலனின்பமும் அறிவின்பமும் மழுங்கிக் கடைசியில் இருளில் தள்ளப்படுகின்றன.

    அந்த இறையன்பு முதிர்ந்து பராபக்தி ஆகிறது. இங்கே உருவங்கள் மறைகின்றன; சடங்குகள் பறந்தோடுகின்றன; சாஸ்திரங்கள் பயனற்றுப் போகின்றன. இத்தகைய ஆழ்ந்த, உயரிய பக்தி உடையவனிடமிருந்து விக்கிரகங்கள், கோயில்கள், சர்ச்சுகள், மதங்கள், உட்பிரிவுகள், நாடு, இனம் என்ற எல்லா சின்னஞ்சிறு எல்லைகளும், தளைகளும் தாமாகவே உதிர்ந்து விடுகின்றன. எதுவும் அவனைப் பந்தப்படுத்துவதில்லை. அவனது சுதந்திரத்தைத் தடை செய்வதில்லை; அவனைக் கட்டுப்படுத்துவதில்லை. கடலில் செல்லும் கப்பல் காந்த மலை யின் அருகே வந்தால் என்ன ஆகும்? இரும்பாணிகளும் பூட்டுக் களும் இழுக்கப்பட்டுக் கழன்று போய், மரச்சட்டங்கள் விடு பட்டு விலகிக் கடல்நீரில் சுதந்திரமாக மிதந்து செல்லும். அது போல் இறையருள், ஆன்மாவைப் பிணைத்து நிற்கும் கட்டுக் களைத் தளர்த்தி அவனை விடுவிக்கிறது. 

பக்திக்குத் துணையாக இருக்கும் இந்தத் தியாகத்தில் கடுமை இல்லை, வறட்சியில்லை, போராட்டம் இல்லை, தடை கள் இல்லை, அடக்குமுறைகள் இல்லை. பக்தன் தன் உணர்ச்சி களுள் ஒன்றைக்கூட அடக்க வேண்டியதில்லை. மாறாக, அவன் அவற்றை வலிமை உடையதாக்கி, தீவிரப்படுத்தி, இறைவனை நோக்கித் திருப்பிவிட மட்டுமே பாடுபடுகிறான்.

பக்தியோகம் 7

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
அ. ஆரம்பநிலைப் பாடங்கள்
7. நிஷ்டை

கடந்த வகுப்பில் பிரதீகங்களைப்பற்றிப் பார்த்தோம். ஆரம்பநிலை பக்தியில் இன்னும் ஒரு விஷயத்தை மட்டும் பார்த்துவிட்டு, பராபக்தியைத் தெரிந்துகொள்வோம். நாம் பார்க்கப்போவது நிஷ்டை, அதாவது ஒருமுகப்பட்ட ஈடு பாடு. வழிபாடு பற்றிய எல்லா கருத்துக்களும் சரியானவை, நல்லவை என்பது நமக்குத் தெரியும். இறைவனை, இறைவனை மட்டுமே வழிபடுவதுதான் பக்தி, வேறு யாரையும் வழிபடு வது பக்தியாகாது என்பதை ஏற்கனவே கண்டோம். இறை வனைப் பல்வேறு வடிவங்களில், பல்வேறு கருத்துக்களில் வழிபடலாம். இவை எல்லாமே சரியானவை, நல்லவை. 

பிரச்சினை இங்குதான் எழுகிறது. எல்லாமே சரி என் பதற்காக எல்லாவற்றையும் வழிபடத் தொடங்கினால் நாம் எதையும் சாதிக்க முடியாது; நமது ஆற்றல்கள் சிதறி வீணா வதுதான் மிச்சமாகும். தங்களைப் பரந்த மனப்பான்மை உடையவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாவற் றிலும் மூக்கை நுழைக்கிறார்கள். ஆனால் எதையும் முழுமை யாகத் தெரிந்துகொள்வதில்லை; நுனிப்புல் மேய்வதோடு சரி. தாங்கள் எதையும் சாதிக்காததை அவர்கள் இறுதியில் தான் உணர்கிறார்கள். பல விஷயங்களைக் கேட்பதும், செயல் முறையில் எதையும் சாதிக்காமல் இருப்பதும் இந்த நாட்டில் ஒருவகையான நோயாகவே வளர்ந்து வருகிறது. 

பக்தர்களுக்கு இதோ ஓர் உபதேசம்: ‘எல்லா மலர் களிலிருந்தும் தேனை அருந்துங்கள். மரியாதையுடன் எல் லோரிடமும் பழகுங்கள். எல்லோருக்கும் ஆம், ஆம் என்று தலையாட்டுங்கள். ஆனால் உங்கள் இடத்திலிருந்து வில காதீர்கள்.’ இப்படிச் சொந்த இடத்திலிருந்து, அதாவது சொந்தக் கருத்திலிருந்து விலகாமல் இருப்பதே நிஷ்டை என்று அழைக்கப்படுகிறது. 

பிறருடைய லட்சியங்களை வெறுக்கவோ விமர்சிக்கவோ வேண்டிய தேவையில்லை. அவையெல்லாமே சரியானவை. ஆனால் அதேவேளையில் நமது லட்சியத்தில் உறுதியான பிடிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.

 பெரிய ராம பக்தனான அனுமனைப்பற்றி ஒரு கதை உண்டு. கிறிஸ்தவர்கள் ஏசுவை இறைமகனாகக் கருதி வழிபடு வதுபோல் இந்துக்கள் இறைவனின் பல அவதாரங்களை வழிபடுகிறார்கள். கடவுள் ஏற்கனவே ஒன்பதுமுறை பூமியில் அவதரித்துவிட்டார், இன்னும் ஒருமுறை வரப்போகிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அவ்வாறே இறைவன் ராமனாக வந்தபோது அனுமன் அவரது மிகப் பெரிய பக்தராக இருந்தார். அனுமன் பெரிய யோகி, மிக நீண்ட காலம் வாழ்ந் தவர். தமது காலத்திலேயே இறைவன் மீண்டும் ஒருமுறை கிருஷ்ணனாக வந்ததைப் பார்க்கும் பேறு பெற்றவர். அவர் பெரிய யோகியாக இருந்ததால் இவ்வாறு இரண்டு அவதார புருஷர்களின் காலத்திலும் வாழ முடிந்தது.

அனுமன் கிருஷ்ணனுக்குச் சேவை செய்ய அவரிடம் சென்றார். அங்கே அவரிடம், ‘கிருஷ்ணா , நான் உன்னை உனது ராம வடிவிலேயே காண விரும்புகிறேன்’ என்றார். அதற்குக் கிருஷ்ணர், ‘ஏன், இந்த வடி.விற்கு என்ன குறை? நானே கிருஷ்ணன், நானே ராமன். எல்லா உருவங்களும் எனதே’ என்றார். உடனே அனுமன் சொன்னார்: ‘கிருஷ்ணா , அது எனக்குத் தெரியும். ஜானகி ராமனும், லட்சுமி நாதனும் ஒருவரே. இருவரும் பரமாத்மாவின் அவதாரங்களே. ஆனால் எனக்கு எல்லாம் ஜானகிராமனே.’- இதுதான் நிஷ்டை .

 நாம் வழிபடுகின்ற பல்வேறு தேவதேவியரும் உண்மையே என்றாலும் மற்றவர்களை விட்டுவிட்டு ஒரே ஒருவரைப் பற்றிக் கொள்வதுதான் நிஷ்டை. பிறரை வெறுக்கவோ விமர்சிக்கவோ கூடாது. மாறாக, எல்லோரையும் மரியாதையுடன் பார்க்க வேண்டும். யானையின் வாயிலிருந்து இரண்டு தந்தங்கள் வெளி வருகின்றன. இவை வெறும் காட்சிக்காக மட்டுமே, இவற்றால் அது சாப்பிட முடிவதில்லை. அதன் வாய்க்குள்ளே இருக்கின்ற பற்கள்தான் அது உணவை மென்று தின்ன உதவுகிறது. எனவே எல்லா பிரிவுகளுடனும் சேர்ந்துகொள்ளுங்கள். எல்லாவற்றுக் கும் ஆம், ஆம் என்று தலையாட்டுங்கள். ஆனால் உங்கள் வழி பாட்டுமுறையில் உறுதியாக இருங்கள். இதை

உங்கள் இஷ்டதெய்வத்தையே வழிபடுங்கள். இல்லா விடில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது, வளர்ச்சி எதுவுமே இருக்காது. செடி வளரும்போது அதை மிருகங்களிலிருந்து காப்பாற்ற வேலியிட வேண்டியது அவசியம். அதுவே வளர்ந்து பெரிய மரமாகிவிட்டால் எந்த வேலியும் தேவையில்லை. தன்னைத்தானே அது காத்துக்கொள்ள முடியும். ஆன்மீக விதை முளைவிட்டு வளரும்போது கொஞ்சம் கிறிஸ்தவம், கொஞ்சம் பௌத்தம், கொஞ்சம் இது, கொஞ்சம் அது என்று எல்லா மதக் கருத்துக்களிலும் மனத்தை அலைபாயவிட்டு ஆற்றலைச் சிதறடிப்பது எந்தப் பயனையும் தராது. அது ஆன்மாவின் அழிவிற்கே வழிவகுக்கும். இதற்கும் பலன் இருக்கவே செய்கிறது. அதனை நாம் பின்னால் பார்ப்போம். குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டும் முயற்சி வேண்டாம்.

ஆரம்பத்தில் நாம் பிரிவினைவாதிகளாகத்தான் (Sectarians) இருக்க முடியும். ஆனால் இதையும் ஒரு லட்சியநிலையில் எடுத்துக்கொள்வோம். யாரையும் நாம் தவிர்க்க வேண்டாம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரிவு இருக்க வேண்டும். அந்தப் பிரிவுதான் நமது இஷ்டம். நமது பிரிவை, நமது இஷ்டத்தைக் கடைப்பிடிப்பதற்காக மற்றவனின் கழுத்தை அறுக்க வேண் டியதில்லை . நமது பிரிவு நமக்குப் புனிதமானது. அதை நமது சொந்தச் சகோதரர்களிடம்கூடச் சொல்லக் கூடாது. ஏனெனில் அது நான் தேர்ந்தெடுத்தது, எனவே புனிதமானது. அதேபோல் என் சகோதரனுடைய இஷ்டமும் புனிதமானதே. 

எனவே உன் இஷ்டத்தையே உறுதியாகப் பற்றிக்கொள். பிரார்த்தனை செய்யும்போது உன் இஷ்டதெய்வத்தை மட்டுமே கருத்தில் கொள். கடவுள் பல நிலைகளில், பல வடி வங்களில் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த நேரத்திற்கு உனது இஷ்டதெய்வம் மட்டுமே உன் நினை வில் இருக்கட்டும்.

இப்படி நீண்டகாலம் பயின்று, உனது ஆன்மீகச் செடி போதிய அளவு வளரும்போது உனது ஆன்மா வலிமை பெற்றதாகிறது. அப்போது உன் இஷ்டதெய்வத்தை நீ எங்கும் காண முடியும். அப்போது இயல்பாகவே தளைகள் எல்லாம் இற்று வீழ்கின்றன. பழம் பழுக்கும்போது, அதன் எடை காரணமாகவே அது கீழே விழுகிறது அல்லவா! இத்தகைய எண்ணம் நம்முள் வளரப் பாடுபடுவோம்.

சில சொற்பொழிவுகளைக் கேட்பதும், ஜீரணிக்க முடியாத சில கருத்துக்களை மூளையில் திணித்து, அங்கே ஒரு வாட்டர்லூ போரையே (Waterloo Battle) நிகழச் செய்வதிலும் எந்தப் பலனும் இல்லை . ஒரு லட்சியத்தில் ஈடுபாடு-இது இருப்பவன் ஆன்மீகத்தில் வளர்வான், ஒளியைக் காண்பான். ‘நான் இந்தச் சாதனையைச் செய்கிறேன்’, ‘நான் அந்தச் சாதனையைச் செய்கிறேன்’ என்றெல்லாம் பலரும் சொல் வதைக் கேட்கலாம். அவர்கள் அப்படி என்னதான் செய் கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். ‘அங்கே ஒரு சொற் பொழிவு கேட்டோம்’, ‘இங்கே ஒரு விரிவுரை கேட்டோம்’ என்பார்கள். அதைக் கேட்டுவிட்டு மூன்று மணிநேரம், அதுவும் ஓரிரு நாட்கள் ஏதோ செய்திருப்பார்கள். இவ்வளவும் செய்ததே அவர்களுக்குப் பெரிய சாதனை ஆகிவிட்டது! இது நிறை நிலைக்கான வழி அல்ல, ஆன்மீகத்திற்கான பாதையும் அல்ல. இது முட்டாள்களின் வழி.ஓர் இஷ்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் முழு மனமும் அதில் ஈடுபடட்டும். ஒரு பலனைக் காணும்வரை, ஆன்மா வளரும்வரை இதனைத் தினமும் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் எடுத்துக்கொண்ட இஷ்டம் உங்களுக்கு உரிய தாக இருக்குமானால் அதுவே வளர்ந்து உங்களுக்கு மிக உயர்ந்த அனுபவத்தை அளிக்கும். இறுதியில் உங்கள் இஷ்ட தெய்வமே பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருப்பதாக, எல்லா வற்றிலும் ஊடுருவி இருப்பதாகக் காண்பீர்கள்.
அதேவேளையில், பிறரது இஷ்டதெய்வங்களையும் நாம் மதிக்க வேண்டும், போற்ற வேண்டும். இல்லாவிடில் வழிபாடு என்பது கொள்கைவெறி என்ற நிலைக்குத் தாழ்ந்துவிடும். பழைய கதை ஒன்று உண்டு – சிவ பக்தன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சிவ பெருமானிடம் பக்தி இருந்த அளவிற்கு மற்ற தெய்வங்களிடமும் பிற பக்தர்களிடமும் வெறுப்பும் இருந்தது. ‘நாராயணா’ என்று யாராவது சொல்வதைக்கூட அவனால் சகிக்க முடியாது. இந்தியாவில் வைணவர்களும் ஏராளம் உள்ள னர். எனவே நாராயண நாமத்தைக் கேட்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அதைத் தவிர்ப்பதற்காக இரண்டு காதுகளிலும் துளையிட்டு இரண்டு மணிகளைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டான். யாராவது நாராயணா என்று சொன்னால் உடனே தலையை அசைப்பான். அதன் காரணமாக அவனது காதுகளில் தொங்குகின்ற மணிகள் ஆடி ஒலியை எழுப்பும். அவன் அந்த நாமத்தைக் கேட்க வேண்டியிருக்காது.
அவனது வெறியைக் கண்ட சிவபெருமான் ஒருநாள் அவனது கனவில் தோன்றி, ‘முட்டாளே, நானே விஷ்ணு, நானே சிவன். இருவரும் வெவ்வேறு அல்ல. வேறுபாடு எல்லாம் பெயரில் மட்டுமே. இரண்டு கடவுள்கள் ஒருபோதும் கிடையாது’ என்றார். ஆனால் அந்த பக்தன் அதைப் பொருட் படுத்தாமல், ‘அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்த விஷ்ணுவிற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று கூறிவிட்டான்.
    அவனிடம் சிவபெருமானின் சிலை ஒன்று இருந்தது. அதை அவன் ஒரு சிறிய பீடத்தில் வைத்து வழிபட்டு வந்தான். ஒருநாள் அவன் சாம்பிராணி முதலானவை வாங்கி வந்து, தூபமிட்டு அவரை வழிபட்டான். சாம்பிராணிப் புகை எங்கும் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் சிலை இரண்டாகப் பிளந்து, ஒன்று சிவனாகவும் மற்றொன்று விஷ்ணுவாகவும் மாறியது. அவ்வளவுதான், அந்த பக்தன் துள்ளிக் குதித் தெழுந்து ஒரே ஓட்டமாக ஓடி, விஷ்ணுவின் மூக்கைப் பொத் திக் கொண்டான். சாம்பிராணி நறுமணத்தைக்கூட விஷ்ணு முகர்ந்துவிடக் கூடாது என்ற அளவுக்கு அவனது வெறி இருந்தது. சிவபெருமானால் அவனது வெறியைத் தாங்க முடியவில்லை . எனவே கோபத்துடன் அவனை அசுரனாகப் பிறக்கும்படிச் சாபமிட்டார். கொள்கைவெறிகளுக்கு எல்லாம் தந்தையான அவனே கண்டாகர்ணன்.
 இந்தியாவில் கண்டாகர்ணனை வழிபடுகிறார்கள். அந்த வழிபாடே வினோதமாக இருக்கும். ஒரு களிமண் உருவைச் செய்து, அதனைத் துர்நாற்றம் மிக்க பூக்களால் வழிபடுவார்கள். கொடிய நோய்களைப் பரப்புகின்ற, துர்நாற்றம் மிக்க சில பூக்கள் இந்தியக் காடுகளில் உள்ளன. பின்னர் பெரிய கொம்பு களால் அந்தக் களிமண் சிலையை அடிஅடி என்று அடிப்பார்கள். தங்கள் தெய்வத்தைத் தவிர பிற தெய்வங்களை வெறுக்கின்ற அனைவருக்கும் தந்தையாக இருக்கிறான் கண்டா கர்ணன். நிஷ்டை-பக்தியிலுள்ள ஒரே குறைபாடு இதுதான்வெறிபிடித்த அசுரனாதல். உலகம் முழுவதும் அவர்கள் நிறைந்துள்ளனர்.
யாரையும் வெறுப்பது எளிது. ஒருவனை நேசிக்க வேண்டு மானால் மற்றவர்களை வெறுத்தேயாக வேண்டும் என்ற அளவிற்கு மனித குலம் பலவீனம் அடைந்திருக்கிறது. ஓர் இடத்திலிருந்து ஆற்றலை எடுத்து மற்ற இடத்தில் வைப்பது போல் உள்ளது அவர்களது செய்கை. ஒருவன் ஒருத்தியை நேசிக்கிறான். சில காலத்திற்குப் பிறகு இன்னொருத்தியை விரும்புகிறான். இரண்டாவது பெண்ணை நேசிக்க வேண்டுமானால் அவன் முதல்பெண்ணை வெறுக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் விஷயமும் அப்படியே. இந்தக் குணம் நமது இயல்பின் ஒவ்வொரு பகுதியிலும் நிறைந்துள்ளது. மதத்தைப் பொறுத்தவரையிலும்கூட இது உண்மையே.
சாதாரணமான, பலவீனமான மனிதனால் ஒருவரை வெறுக்காமல் மற்றவரை நேசிக்க முடியாது. இந்த இயல்பு தான் மதத்தில் கொள்கைவெறியாக மாறுகிறது. அவர் களைப் பொறுத்தவரை தங்கள் லட்சியத்தை நேசிப்பது என் றாலே மற்ற எல்லா கருத்துக்களையும் வெறுப்பதுதான். இதைத் தவிர்க்க வேண்டும்.
அதேவேளையில் இன்னொரு அபாயமும் தவிர்க்கப்பட வேண்டும். நாம் நமது ஆற்றல்களைச் சிதறடித்து வீணாக்கக் கூடாது. 
 நமது வாழ்க்கையில் ஆன்மீகம் என்றால் ஒன்றுமே இல்லை. இரண்டு மூன்று சொற்பொழிவுகளைக் கேட்டால் போதும், ஆன்மீகம் என்பது அவ்வளவுதான். 
இரண்டு அபாயங்கள் உள்ளன. மிகவும் தாராள மனப் பான்மை உடையவர்களிடம் தீவிரம் இருப்பதில்லை, அவர்கள் பரந்துபரந்து செல்கிறார்கள். இப்போதெல்லாம் ஆன்மீகம் என்பது மிகவும் விரிந்து பரந்ததாகிவிட்டது. அதில் ஆழமோ தீவிரமோ இல்லை. நாள் முழுவதும் கடுமையாக உழைத்த பிறகு மனத்தைச் சற்று லேசாக்கிக் கொள்வதற்காகச் சிறிது தானதர்மங்கள் செய்கிறார்களே, அதுதான் ஆன்மீகம், அதுதான் மதம் என்றாகிவிட்டது. ஐந்து நிமிட ஆர்ப்பாட்டத் தில் மதமே அடங்கிவிட்டது. பரந்த கொள்கைகளினால் வரும் அபாயம் இதுதான்.
இனி, சில பிரிவினரிடம் தீவிரமும் ஆழமும் உள்ளது. ஆனால் அது மிகவும் குறுகியதாக உள்ளது. அவர்கள் தீவிர மாக இருக்கிறார்கள். ஆனால் அங்கே பரந்த மனப்பான்மை இல்லை. இதன் காரணமாக அவர்கள் மற்ற ஒவ்வொருவரை யும் வெறுக்கத் தலைப்படுகிறார்கள்.
இந்த இரண்டு அபாயங்களையும் தவிர்த்து, மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர்களைப்போல் பரந்தும், அதே வேளையில், மிகத் தீவிரமான கொள்கைவெறியனைப் போல் ஆழமாகவும் இருக்க முடியுமானால் நாம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
அதனை எப்படிச் செய்வது? இந்த நிஷ்டைக் கருத் தின்மூலம்தான். நம் முன் உள்ள லட்சியங்கள் எல்லாமே உண்மையானவை, எல்லாமே ஒரே இறைவனின் பல்வேறு பகுதிகள். ஆனால் இறைவனை இந்த எல்லா வழிகள்மூலமும் வழிபடும் திறமை நம்மிடம் இல்லை . எனவே ஏதாவது ஒரு லட்சியத்தைப் பிடித்துக்கொண்டு அதையே நமது வாழ்க்கை லட்சியமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இதை உங்களால் வெற்றிகரமாகச் செய்ய முடிந்தால் மற்ற அனைத்தும் தானாக நடைபெறும்.
சடங்குகள் சேர்ந்த, கிரியைகளுடன் கூடிய, ஆரம்ப நிலையிலுள்ள பக்தியின் முதற்பகுதி இங்கே நிறைவுறுகிறது. பக்தியின் முதற்பாடமே சீடனை, அதாவது சாதகனைப் பற்றியதுதான்.
சீடன் யார்? அவனுக்குரிய தகுதிகள் எவை? ‘எங்கேபேசுப வர் அற்புதமானவராக இருக்கிறாரோ, அதுபோலவே கேட்ப வரும் அற்புதமானவராக இருக்கிறாரோ; எங்கே ஆசிரியர் அற்புதமானவராக இருக்கிறாரோ, அதுபோலவே மாண வனும் அற்புதமானவராக இருக்கிறானோ அங்கேதான் உண்மையான ஆன்மீகம் உருவாக முடியும்.’ தங்களுக்கான எல்லாவற்றையும் குரு செய்ய வேண்டும் என்றுதான் பொதுவாக மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தங்களிடம் அதற்குரிய தகுதி இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை.
முதலில் சாதகனிடம் ‘தேவை’ என்பது இருக்க வேண்டும். அதாவது அவனுக்கு ஆன்மீகம் உண்மையாகத் தேவைப் பட வேண்டும். நமக்கு ஆன்மீகத்தைத் தவிர வேறு எல்லாம் தேவையாக இருக்கிறது. தேவை என்று நாம் எதைக் கூறு கிறோம்? உணவு நமக்குத் தேவை என்கிறோமே, அதுபோன்ற தேவையைத்தான். ஆடம்பரங்கள் ‘தேவை’ யில்லாதவை. நாம் உயிர்வாழ இன்றியமையாதவைதான் ‘தேவை’கள்.
ஆன்மீகம் என்பது மிகச் சிலருக்கே தேவையானது, பலருக்கு அது ஓர் ஆடம்பரம் மட்டுமே. இந்த உலகில் உள்ள எத்தனையோ நூற்றுக்கணக்கான பொருட்கள் இல்லாமல் நாம் உயிர்வாழ முடியும். ஒரு கடைக்குப் போகிறோம். புதிய அழகான ஒன்றைப் பார்க்கிறோம். உடனே அதை வாங்க எண்ணுகிறோம். 99.9 சதவீதம் பேரும் ஆன்மீகத்திற்கு வருவது இப்படித்தான். வாழ்க்கையில் இருக்கின்ற எத்தனையோ ஆடம் பரங்களுள் ஆன்மீகமும் ஒன்று, அவ்வளவுதான். இதில் தவறும் இல்லை. அவர்கள் விரும்பியதுபோல் செய்யட்டும். ஆனால் இதன்மூலம் இறைவனை முட்டாள் ஆக்கலாம் என்று நினைத்தால் அது தவறு. அவரை யாரும் ஏமாற்ற முடியாது; ஏமாற்ற நினைப்பவர்கள் தான் ஏமாந்து போவார்கள்; மனித நிலையிலிருந்து தாழ்ந்து மிருக நிலைக்குச் சென்று விடுவார்கள்.
எனவே உண்மையான தேவையை உணர்கின்ற, அதா வது உணவு, உடை, வேலை, காற்று போன்றவை எப்படித் தேவையோ அப்படியே ஆன்மீகமும் தேவையாக இருப்பவர்கள் மட்டுமே ஆன்மீகவாதிகளாக முடியும். எது இல்லாமல் நாம் வாழ முடியாதோ அது ‘தேவை’. எது கணநேர ஆசையை வெறுமனே பூர்த்தி செய்கிறதோ அது ‘ஆடம்பரம்’.
சீடனின் அடுத்த தகுதி தூய்மை. அவன் விடாமுயற்சி உடையவனாக இருக்க வேண்டும்; பாடுபட வேண்டும். குரு வின் உபதேசத்தைக் கேட்பது என்பது ஒரு பகுதிதான், அதன் மறுபகுதி கேட்டதைச் செயல்படுத்துவது.
பக்தியின் அடுத்த பகுதி குரு. குரு தகுதி உடையவராக இருக்க வேண்டும். முக்கியக் கருத்து என்னவென்றால் அவரிடம் ஆன்மீகத்தின் விதை இருக்க வேண்டும் என்பதுதான். குரு என்பவர் வெறும் சொற்பொழிவாளர் அல்ல; அவர் தமது குருவிடமிருந்து, அந்த குரு தமது குருவிடமிருந்து என்று பரம்பரைபரம்பரையாக இடையீடற்றுப் பெற்று வருகின்ற ஆன்மீக ஆற்றலைப் பிறருக்குக் கொடுக்க வல்லவரே குரு. ஆன்மீக ஆற்றலைப் பாய்ச்ச வல்லவராக அவர் இருக்க வேண்டும்.
இவ்வாறு குருவும் சீடனும் இருவருமே தயாராக இருக்கும் போது பக்தியோகத்தின் முதற்படி ஆரம்பமாகிறது. பக்தி யோகத்தின் முதற்பகுதி நம்மைத் தயார்படுத்துவதற்கு உரியது. இங்கு நாம் உருவங்கள் முதலிய புற உதவிகளைக் கைக் கொள்ள வேண்டியுள்ளது. 
அடுத்த சொற்பொழிவு நாமங்கள் பற்றியதாக இருந்தது. எல்லா மதங்களின் எல்லா சாஸ்திரங்களும் எவ்வாறு நாம மகிமையை எடுத்துக் கூறுகின்றன, எவ்வாறு அந்த நாமம் நமக்கு நன்மை செய்கிறது என்பதைப் பார்த்தோம். பக்தி யோகி நாமத்தை இறைவனாகவே பார்க்க வேண்டும்; இறை வனிலிருந்து வேறுபட்டதாகப் பார்க்கக் கூடாது. இறைவனும் அவனது திருநாமமும் ஒன்றே.
அடுத்து, பக்தியோகிக்குப் பணிவும் மரியாதையும் இன்றி யமையாதவை என்பது கூறப்பட்டது. பக்தியோகி தன்னை இறந்த ஒருவனாகவே கருத வேண்டும். இறந்தவன் அவ மதிப்பைப் பொருட்படுத்துவதில்லை, அதை எதிர்த்து எதுவும் செய்வதில்லை. அவ்வாறே பக்தியோகியும் பிறரைப் பொறுத்த வரை இறந்தவனாகவே இருக்க வேண்டும். நல்லவர்களை, புனிதமானவர்களை எப்போதும் பக்தியோகி போற்றிப் பணிய வேண்டும். ஏனெனில் இறைவனது மகிமை எப்போதும் அவரது குழந்தைகளின் வாயிலாக ஒளிர்கிறது. 
 அடுத்து பிரதீகங்களைப்பற்றிக் கண்டோம். இறைவனை வழிபடுவது மட்டுமே பக்தி, வேறு எதனை வழிபடுவதும் பக்தியாகாது என்பது அங்கே கூறப்பட்டது. எந்த ஒன்றையும் நாம் கடவுளாகக் கருத முடியுமானால் அதனைத் தாராள மாக வழிபடலாம். கடவுளாகக் கருத முடியாத ஒன்றை வழிபடுவது பக்தியாகாது. அதைக் கடவுள் என்று நினைத்தால் அது சரி.
யோகி ஒருவர் இருந்தார். அவர் காட்டில் நதிக்கரை யில் ஓர் ஏகாந்தமான இடத்தில் தவமியற்றி வந்தார். அங்கே ஏழை ஒருவன் தினமும் பசுக்களை மேய்க்க வருவது வழக்கம். அந்த யோகியின் தவ வாழ்க்கையையும் சாதனைகளையும் அவன் தினமும் காண்பான். அவர் என்ன செய்கிறார் என்பதை அறியும் ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. அவரிடம் அது பற்றிக் கேட்டதற்கு அவர் தாம் கடவுளை அடையும் முயற்சி யில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார். உடனே அந்த ஏழை, ‘சுவாமி, கடவுளை அடையும் வழியை எனக்கும் போதிப் பீர்களா?’ என்று கேட்டான். அந்த யோகி மிகவும் படித்தவர். எனவே அந்த ஏழையிடம், ‘நீ எப்படி இறைவனை அறிய முடியும்? நீ ஒரு பாமரன், மாடு மேய்ப்பவன். உனக்கும் கடவு ளுக்கும் வெகுதூரம். மாடுகளை மேய்த்துவா. அதன்பின் வீடு செல். கடவுள் அது இது என்றெல்லாம் மூளையைக் குழப்பிக் கொள்ளாதே’ என்று கூறிவிட்டார். 
அந்த ஏழை மனவருத்தத்துடன் வீடு திரும்பினான். அவனிடம் உண்மையான ‘தேவை’ இருந்தது. எனவே அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவன் மீண்டும் அந்த யோகியிடம் சென்று, ‘சுவாமி, கடவுளைப்பற்றிச் சிறிய அள விலாவது எனக்கு ஏதேனும் சொல்லித் தாருங்கள்’ என்று கேட்டான். அதற்கு அந்த யோகி கோபத்துடன், ‘முட்டாளே, நீ இறைவனை என்ன புரிந்துகொள்ள முடியும்? அமைதியாக வீடு போய்ச் சேர்’ என்று கூறிவிட்டார். பாவம்! அந்த மாடு மேய்ப்பவனால் எதையும் உண்ணவும் முடியவில்லை, உறங்கவும் முடியவில்லை. கடவுளைப்பற்றி ஏதாவது அறிந்தேயாக வேண்டும் என்று அவன் துடித்தான்.
எனவே மீண்டும் அந்த யோகியிடம் வந்தான். அவனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த யோகியும், ‘சரி, நான் உனக்கு இறைவனைப்பற்றிப் போதிக்கிறேன்’ என்றார். 
அந்த மாடு மேய்ப்பவன், ‘சுவாமி, கடவுள் என்பவர் யார்? அவரது உருவம் எது? அவர் எப்படி இருப்பார்?’ என்று கேட்டான். 
அதற்கு யோகி, ‘நீ மேய்த்து வருகிறாயே மாடுகள், அந்த மாடுகளில் மிகப் பெரிய மாடுதான் இறைவன். அவர் உன் மந்தையிலுள்ள பெரிய மாடாகிவிட்டார்’ என்று கூறினார். 
அந்தப் பாமரன் அதை அப்படியே நம்பினான். நேராகத் தனது மந்தைக்குப் போய், அந்தப் பெரிய மாட்டிடம் சென்றான். அதையே கடவுளாகக் கொண்டு வழிபடத் தொடங்கினான். மிகச் சிறந்த புல்லை அதற்குக் கொடுத்தான், அதன் அருகில் தூங்கினான், அதன் அருகிலேயே எப்போதும் இருந்தான், அது எங்கு சென்றாலும் கூடவே சென்றான். இவ்வாறு நாட் களும் மாதங்களும் வருடங்களும் ஓடின. அவனது ஆன்மா முழுவதும் அந்த மாட்டின்மீதே பதிந்திருந்தது. 
ஒருநாள் அந்த மாட்டிலிருந்து வருவதுபோல் ஒரு குரல் எழுந்து, ‘என் மகனே, என் மகனே’ என்று அவனை அழைத்தது. ‘ஆ, மாடு பேசுகிறது, மாடு பேசுகிறது’ என்று ஆனந்தத்தால் கூத்தாடினான் அந்த ஏழை. ஆனால் மறுகணமே, ‘மாடு என் றாவது பேசுமா?’ என்ற சந்தேகம் எழுந்தது. உடனே மிகுந்த மனவருத்தத்துடன் ஓரிடத்திற்குச் சென்று அமர்ந்து தனது நிலைமையைப்பற்றிச் சிந்திக்கலானான். அப்போது மீண்டும் அதே குரல் கேட்டது: ‘என் மகனே, என் மகனே!’ அவன் உடனே எழுந்து மாட்டின் அருகே ஓடினான். அங்கு சென்ற போது, மாடு பேசாது என்ற எண்ணம் மீண்டும் வந்தது. உடனே திரும்பினான். இப்படிப் பல முறை நடந்தது. இறுதி யாக அவன் உண்மையைக் கண்டான்: அந்தக் குரல் வேறு எங்கிருந்தும் வரவில்லை, அது தன்னுள்ளிருந்தே வந்தது என்பது அவனுக்குத் தெரியவந்தது. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார் என்பதை அவன் அறிந்தான். அதன்பிறகு அவன், குருவுக்கெல்லாம் குருவாகிய அந்த மகாகுருவின் உபதேசமான, ‘நான் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறேன்’ என்பதன் உண்மையை உணர்ந்தான். இவ்வாறு அந்த ஏழை எல்லா ரகசியத்தையும் அறிந்தான். 
 பிறகு அவன் அந்த யோகியைக் காணச் சென்றான். அந்த யோகி மிகவும் படித்தவர், நாட்டிலேயே பெரிய அறி வாளி, பல காலமாக படிப்பு, தியானம், தவம் என்று சாதனை களில் ஈடுபட்டிருப்பவர். இந்த ஏழையோ பாமரன், வாழ்நாளில் ஒரு புத்தகத்தைக்கூடப் படிக்காதவன், எழுத்துக்கள்கூடத் தெரியாதவன். ஆனால் அதே அவன் இன்று வருகிறான். அவனது முழு உருவமும் மாறிவிட்டது, முகம் பொலிவாக உள்ளது, விண்ணின் ஒளி அவனது முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. அவனைக் கண்ட யோகி எழுந்தார். அவனை வரவேற்று, ‘இது என்ன மாற்றம்? எப்படி உண்டாயிற்று?’ என்று கேட்டார். 
‘சுவாமி, இது நீங்கள் தந்ததுதான்.”அது எப்படி? நான் உன்னிடம் வேடிக்கையாக அல்லவா அப்படிச் சொன்னேன்!’  
‘ஆனால் நான் அதனை உண்மையாக எடுத்துக் கொண் டேன். எனக்கு வேண்டியதை எல்லாம் அந்த மாட்டிடமிருந்தே நான் பெற்றுக் கொண்டேன். இறைவன் எங்கும் நிறைந்த வரே அல்லவா?’ 
இங்கே மாடு ஒரு பிரதீகமாகச் செயல்பட்டது. அந்த ஏழை தனது மாட்டை ஒரு பிரதீகமாக, கடவுளாக வழிபட் டான். அதன்மூலமே அனைத்தையும் பெற்றான். அந்த ஆழ்ந்த ஈடுபாடு, அந்தப் பேராவல் அதுதான் எல்லாவற்றை யும் வெளியே கொண்டுவருகிறது. எல்லாம் நம்மிடம் உள்ளது. புற உலகம், புற வழிபாடு என்று எல்லாமே அதனை அதாவது உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வருவதற்குத் துணை செய்பவை மட்டுமே. அவை உறுதி பெறும்போது அகத்தே உள்ள இறைவன் விழித்தெழுகிறான்.
புறத்தில் உள்ள குரு என்பவர் ஒரு துணை மட்டுமே. அவரிடம் நமது நம்பிக்கை திடப்படும்போது அகத்தே உள்ள குரு, அதாவது, குருவிற்கெல்லாம் குரு பேசுகிறார். அந்த மனிதனின் இதயத்தில் அழிவற்ற ஞானம் சுடர்விடுகிறது.அவன் அதன்பிறகு எந்த நூலையும் நாட வேண்டாம், மனித னிடமோ தேவர்களிடமோ தேவதைகளிடமோ உபதேசத்திற் காக ஓட வேண்டாம். இறைவனே அவனுக்கு குருவாகிறார். தனக்கு வேண்டிய அனைத்தையும் அவன் தன்னுள் இருந்தே பெறுகிறான். அவன் எந்தக் கோயிலுக்கும் போக வேண்டாம், எந்த சர்ச்சிற்கும் போக வேண்டாம்; அவனது உடம்பே உலகின் மாபெரும் கோயில் ஆகிவிட்டது. அந்தக் கோயிலில் இறைவன் உறைகிறான். 
 எல்லா நாடுகளிலும் எண்ணற்ற மகான்கள் பிறந்துள் ளனர். அவர்களின் அற்புத வாழ்விற்குத் தூண்டுசக்தியாக இருந்தது அன்பின் ஆற்றலே. நாம ஜபம், பிரதீக வழிபாடு, நிஷ்டை , இஷ்டம் என்று பக்தியின் புற வடிவங்கள் எல்லாமே அந்த அழிவற்ற ஆற்றல் விழித்தெழும் வரையிலுள்ள வெறும் ஆயத்தங்கள் மட்டுமே. நியதிகளையும் கட்டுப் பாடுகளையும் கடந்து செல்லும்போதுதான் ஒருவனிடம் ஆன்மீகம் உதிக்கிறது. அப்போது எல்லா நியதிகளும் விலகு கின்றன, எல்லா உருவங்களும் மறைகின்றன, கோயில்களும் சர்ச்சுகளும் மறைந்து ஒழிகின்றன. குறிப்பிட்ட ஒரு நெறி யைச் சார்ந்தவனாகப் பிறப்பது நல்லது, ஆனால் அதிலேயே இறப்பது மிகவும் மோசமானது. ஒரு பிரிவில் பிறந்து, அந்தப் பிரிவினைவாத எண்ணங்களுடனேயே மாண்டு போவது மிகவும் பயங்கரமான தலைவிதி. இறைவனின் குழந்தையை எந்தப் பிரிவு பிணைக்க முடியும்? எந்த நியதிகள் கட்டுப்படுத்த முடியும்? எந்தப் பாதையில் அவன் செல்வான்? யாரை அவன் வழிபடுவான்? அவன் இறைவனை நேரடியாக வழிபடுகிறான். அவனுக்கு இறைவனே உபதேசிக்கிறார். கோயிலுக்கெல்லாம் கோயிலான மனித ஆன்மாவில் அவன் வாழ்கிறான். 
பராபக்தி என்ற இந்த மேலான லட்சியத்தை நோக்கியே நாம் செல்கிறோம். இதற்கு நம்மை இட்டுச் செல்கின்ற அனைத் தும் வெறும் ஆயத்தம் மட்டுமே. ஆனால் அவையும் தேவை யானவை. சாஸ்திரங்கள், மதப்பிரிவுகள், உருவங்கள்-இந்த அனைத்துக் கட்டுக்களிலிருந்தும் எல்லையற்ற ஆன்மா வெளியேற இவை துணை செய்கின்றன. இவையனைத்தும் இறுதியில் விலகிவிடுகின்றன, எஞ்சுவது மனிதனின் ஆன்மா மட்டுமே. – 
 காலங்காலமாக மூடநம்பிக்கைகள் நம்மைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ‘எனது தந்தையின் மதம்’, ‘எனது தேசிய மதம்’, ‘எனது சாஸ்திரம்’, ‘எனது இது’, ‘எனது அது’ இவை யெல்லாம் நம்மைத் தொடர்ந்து வருகின்ற மூடநம்பிக்கைகள். இவை மறைந்துவிடும். ஒரு முள் குத்திவிட்டால் அதனை எடுக்க இன்னொரு முள்ளைப் பயன்படுத்துகிறோம். பிறகு இரண்டையும் எறிந்துவிடுகிறோம். 
 இவ்வாறு நம்மிடம் மூட நம்பிக்கைகள் உள்ளன. பல நாடுகளில் சிறு குழந்தைகளின் பிஞ்சுமனங்களில்கூடப் பிரி வினைவாதம் போன்ற பயங்கரக் கருத்துக்கள் விதைக்கப் படுகின்றன. பெற்றோர் குழந்தைகளுக்கு நன்மை செய்வதாக நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் செய்வது என்னவோ தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ளத்தான். என்ன சுய நலம்! தனக்குத் தானே பயந்தோ அல்லது சமுதாயத்திற்குப் பயந்தோ மனிதன் செய்யத் தயங்காத எதுவும் இல்லை. திருமதி இன்னார் திருப்தியுறுவார், சந்தோஷப்படுவார் என் பதற்காக அவன் சொந்தக் குழந்தைகளைக் கொல்வான்; தாய் மார்கள் தங்கள் குடும்பத்தைப் பட்டினியில் வாட விடு வார்கள்; சகோதரர்கள் சகோதரர்களை வெறுப்பார்கள்.
பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவில் பிறக் கிறார்கள். அதிலிருந்து வெளிவருவதே இல்லை. இந்த மதங்கள் அவர்கள் ஆன்மீகத்தில் வளர உதவி செய்ததா? இந்த மதங்கள் மற்றும் உருவங்களின்மூலம் நாம் அன்பின் ஓர் உயர்தளத்தை எட்டினோம், உருவங்கள் மறைகின்ற பிரிவினைவாதங்கள் ஒழிகின்ற ஒரு நிலையை அடைந்தோம் என்றால், மனித குலத் தின் மிகப் பெரும் பகுதி இன்னும் ஏதாவது உருவங்களையும் மதங்களையும் கட்டிக்கொண்டு உழல்வது ஏன்? அவர்கள் வெறும் நாத்திகர்கள். அவர்களுக்கு எந்த மதமும் தேவை யில்லை .
சொந்த நாட்டில் போக்கிரியாக உள்ள ஒருவன் இங்கே வருவதாக வைத்துக் கொள்வோம். அவனுக்கு இங்கே எந்த நண்பர்களும் இல்லை, யாரையும் அவனுக்குத் தெரியவும் செய்யாது. அவன் முதன்முதலாகச் செய்வது என்னவாக இருக்கும்? அது, ஒரு சர்ச்சில் சேர்வதுதான். அவனிடம் ஆன்மீகம் என்பது என்றைக்காவது இருக்க முடியுமா? தங்கள் ஆடை அலங்காரங்களைக் காட்டிக் கொள்வதற்காக சர்ச்சிற் குச் செல்லும் இந்தப் பெண்களிடம் ஆன்மீகம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? இவர்கள் என்றாவது உருவங்கள் போன்ற சாதாரண நிலையைவிட்டு வளர்வார்கள் என்று கருதுகிறீர்களா? ஒருபோதும் இல்லை . மாறாக, பின்னால், மேலும் பின்னால் செல்கிறார்கள்; இறக்கும்போது மிருகங் களாக இறக்கிறார்கள். பெண்களின் அழகிய முகங்களைப் பார்ப்பதற்காக சர்ச்சிற்குப் போகின்ற இந்த ஆண்கள் கூட்டம் என்றைக்காவது ஆன்மீகம் என்பதைப் பெற முடியுமா? சமுதாய மதங்களைச் சார்ந்தவர்கள், சமுதாயம் மதிக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சிற்குச் செல்பவர்கள், ‘என் தந்தை போனார், அதற்காக நானும் போகிறேன்’ என்று அங்கே செல்பவர்கள்இவர்களுக்கெல்லாம் ஆன்மீகம் வரும் என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்குப் பரந்த கொள்கைகள் தெரியாது என்பதல்ல; ஆனால் சமுதாயத்தில் தங்கள் அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே காலம் முழுவதும் அவர்கள் இப்படியேதான் இருப்பார்கள்.
உனக்கு எது தேவையோ அது கிடைக்கும். எல்லா ஆசை களையும் இறைவன் நிறைவேற்றுகிறார். சமுதாய அந்தஸ்து வேண்டுமானால் அது கிடைக்கும். சர்ச் வேண்டுமானால் அது கிடைக்கும், ஆனால் இறைவன் கிடைக்க மாட்டார். வாழ்க்கை முழுவதும் முட்டாளாகவே இருக்க வேண்டும், கோயில்களுடனும் முட்டாள்தனமான இயக்கங்களுடனும் தான் காலம் கழிக்க வேண்டும் என்று விரும்பினால் அது நடக்கும். உன் வாழ்நாள் முழுவதும் நீ அப்படியே இருக்கலாம். ‘இறந்தோரின் ஆவிகளை நாடுவோர் அந்த உலகங்களுக் குப் போகிறார்கள், பேய் பிசாசுகள் அவர்களுக்குக் கிடைக் கின்றன. இறைவனை நேசிப்பவர்கள் அவரிடம் செல்கிறார் கள்.’ இறைவனை நேசிப்பவர்கள் மட்டுமே அவரிடம் வரு வார்கள். மற்றவர்கள் தங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு போவார்கள்.
கோயில்களிலும் சர்ச்சுகளிலும் செய்கின்ற சில உடற் பயிற்சிகள் இருக்கின்றனவே-குறித்த நேரத்தில் முழந் தாளிடுவது, எழுவது போன்றவை இவையெல்லாம் வெறும் எந்திரமயமானவை. இதையெல்லாம் செய்யும்போது மனம் வேறு எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறது. இவற்றிற்கும் உண்மையான ஆன்மீகத்திற்கும் எந்தச் சம்பந்த மும் இல்லை .
சுமார் நானூறு வருடங்களுக்கு முன் இந்தியாவில் குரு நானக் என்ற மகான் ஒருவர் இருந்தார். போர்புரியும் இனமான சீக்கியர்களைப்பற்றி உங்களுள் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். குருநானக் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர். ஒருநாள் அவர் மசூதி ஒன்றிற்குச் சென்றார். கிறிஸ்தவ நாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதுவும் சொல்ல பிறர் பயப்படுவதுபோல் முஸ்லீம்கள் தங்கள் நாடுகளிலேயே பயப்படுகிறார்கள். தங்களுக்கு, தங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவராத யாரையும் விமர்சிக்கவோ கொல்லவோ தங்களுக்கு உரிமை இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
குருநானக் மசூதியினுள் சென்றார். அங்கே முகமதியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். வரிசையாக நிற் பார்கள், முழந்தாளிடுவார்கள், எழுவார்கள், குறித்த வேளை யில் சில வார்த்தைகளைச் சொல்வார்கள். ஒருவர் இதை யெல்லாம் நடத்துவார். அவர் முல்லா என்று அழைக்கப்படு கிறார். ‘கருணையும் இரக்கமும் மிக்க, ஆசிரியர்களுக்கு எல் லாம் ஆசிரியரான அல்லாவின் பெயரால்’ என்று முல்லா சொல்லிக் கொண்டிருக்கும்போது உள்ளே நுழைந்த குரு நானக், முல்லாவின் வார்த்தைகளைக் கேட்டதும் புன்முறு வல் பூக்க ஆரம்பித்தார். முல்லாவிற்கு வந்ததே கோபம்! ‘இந்த வேஷதாரியைப் பாருங்கள்’ என்று கத்தினார். பின்னர் குரு நானக்கிடம், ‘நீ ஏன் சிரிக்கிறாய்?’ என்று கேட்டார். 
 ‘நண்பா, நீ செய்வது தொழுகை அல்ல. அதனால் தான் சிரிக்கிறேன்.’ -‘என்ன, தொழுகை அல்லவா?’
‘ஆம். தொழுகை அல்ல. உன் உள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை .’
 இதைக் கேட்டதுதான் தாமதம், முல்லாவின் கோபம் கட்டுக்கு அடங்காததாயிற்று. உடனே அவர் எழுந்து, நேராக ஒரு நீதிபதியிடம் சென்று, ‘இந்தத் துஷ்டன் தொழுகை வேளையில் எங்கள் மசூதிக்குள் வரத் துணிந்தது மட்டும் அல்ல, பிரார்த்திக்கின்ற எங்களைப் பார்த்துச் சிரிக்கவும் செய்கிறான். இவனுக்குரிய ஒரே தண்டனை உடனடி மரணம். இவனைக் கொல்லுங்கள்’ என்று முறையிட்டார்.
குருநானக் நீதிபதியின் முன் கொண்டுவரப் பட்டார். நீதிபதி அவரிடம் அவர் சிரித்ததற்கான காரணத்தைக் கேட்டார். 
‘அவர் செய்தது பிரார்த்தனை அல்ல. அதனால்தான் சிரித்தேன்.’ 
‘அப்படியானால் அவர் என்ன செய்தார்?’
 ‘அவரை என் முன்னால் கொண்டு வாருங்கள். அவர் என்ன செய்தார் என்பதை அப்போது சொல்கிறேன்.’  முல்லா கொண்டுவரப் பட்டார். நீதிபதி குருநானக்கிடம், ‘இதோ முல்லாவைக் கொண்டு வந்துள்ளோம். நீங்கள் ஏன் சிரித்தீர்கள் என்பதை விளக்க வேண்டும்’ என்று கூறினார். உடனே குருநானக், ‘முல்லாவிடம் ஒரு குரானைக் கொடுங்கள். அல்லா, அல்லா என்று அவர் கூறியபோது வீட்டில் விட்டு வந்த கோழிகளை நினைத்தாரா இல்லையா என்பதைக் கேளுங்கள். குரான்மீது அவரைச் சத்தியம் செய்யச் சொல்லுங்கள்’ என்றார். முல்லா திகைத்துவிட்டார். அவர் மற்றவர் களைவிடச் சற்று நேர்மையானவர். எனவே தாம் கோழி களை நினைத்தது உண்மைதான் என்று ஒத்துக் கொண்டார். குருநானக் விடப்பட்டார். 
ஆனால் நீதிபதி முல்லாவை விடவில்லை . அவர் முல் லாவிடம், ‘எல்லாம் சரி. ஆனால் முல்லா, இனி நீங்கள் மசூதிக்குப் போகாதீர்கள். அங்கே போய் தெய்வநிந்தனை செய்வதைவிட, ஏமாற்றுவதைவிட போகாமல் இருப்பது மேல். பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற ஒரு மனநிலை இல்லாத போது அங்கே போகாதீர்கள். வேஷதாரியாக இருக்காதீர்கள். கருணை மயமான, ஆனந்தமயமான இறைவனது திருநாமத்தைச் சொல்லும்போது கோழியை நினைக்காதீர்கள்’ என்றார்.
முகமதியர்கள் தங்கள் தொழுகையில் சிறிதும் காலம் தவறாதவர்கள். அதற்குரிய நேரம் வந்துவிட்டால், அவர்கள் எங்கிருந்தாலும் சரி, உடனே நிலத்தில் வீழ்வதும் எழுவது மாகத் தொழுகையைத் தொடங்கிவிடுவார்கள். இவ்வாறு தான் ஒரு முகமதியன் தன் தோட்டத்தில் இருந்தபோது தொழுகைக்குரிய வேளை வந்தது. அவன் உடனே அங்கேயே முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். பின்னர் தரையில் வீழ்ந்து வணங்கினான். அதேவேளையில் அந்தத் தோட்டத்திற்கு வெளியே ஒரு பெண் தன் காதலனைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தாள். தோட்டத்தின் மறுபக்கம் அவனைக் கண்டதும் விரைவாக அவனை நோக்கிச் சென் றாள். அவசரத்தில், வழியில் கிடந்த முகமதியனை மிதித்து விட்டாள். இங்கே நீங்கள் பிரெஸ்பிடேரியனைச் சொல்கி றீர்களே, அதுபோன்ற கொள்கைவெறி பிடித்த முகமதியன் அவன். எனவே அவனுக்கு வந்த கோபத்தை நீங்கள் ஊகித் துக் கொள்ளலாம். அவன் அந்த பெண்ணைக் கொல்லவே போய்விட்டான். அவள் சற்று புத்திசாலி. எனவே அவனிடம், ‘நீ ஒரு முட்டாள், ஓர் ஏமாற்றுப் பேர்வழி. நீ என்னைக் கொல்லப் போகிறாயா?’ என்று கேட்டாள். ‘என்ன, நான் ஒரு ஏமாற்றுக்காரனா, அது எப்படி?’ என்று திகைப்புடன் கேட்டான் அந்த முகமதியன். அதற்கு அந்தப் பெண் கூறினாள்: ‘நான் பார்க்கப் போனது சாதாரண மானிடக் காதலனை. ஆனாலும் வழியில் படுத்திருந்த உன்னைப் பார்க்க முடியாத அளவிற்கு நான் காதல் வசப்பட்டிருந்தேன். நீ தேடுவதோ தெய்வீகக் காதலனை. நீ அவரது அன்பில் மூழ்கியிருந்தால் நான் உன்னை மிதித்ததை எப்படி உணர்ந்திருக்க முடியும்? அதனால்தான் உன்னை ஏமாற்றுக்காரன் என்றேன்.’

பக்தியோகம் 6

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
அ. ஆரம்பநிலைப் பாடங்கள்
6. இஷ்டம் 

    நான் ஏற்கனவே குறிப்பிட்ட இஷ்டக் கோட்பாட்டை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதைச் சரியாகப் புரிந்துகொள்வதன்மூலம் உலகின் பல்வேறு மதங்களையும் அறிந்துகொள்ள முடியும். விரும்பு, தேர்ந்தெடு என்று பொருள் படுகின்ற ‘இஷ்’ என்ற மூலச்சொல்லிலிருந்து தோன்றியது இஷ்டம் என்ற சொல். துன்பத்திலிருந்து நீங்கி விடுதலை பெறு வதுதான் எல்லா மதங்களின், எல்லா பிரிவுகளின், மனிதகுலத் தின் லட்சியம். எங்கெல்லாம் மதங்கள் உள்ளனவோ அங் கெல்லாம் இந்த லட்சியம் ஏதாவது ஒரு விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் மதத்தின் கீழ்நிலை களில் அது அவ்வளவு தெளிவாகப் புலனாவதில்லை. ஆனால் தெரிந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, நாம் ஒவ்வொரு வரும் அந்த ஒரே லட்சியத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். 

நாம் துன்பத்திலிருந்து விடுபட விரும்புகிறோம்; தினந் தினம் படுகின்ற அவதிகளிலிருந்து விடுபட விரும்புகிறோம்; உடல், உள்ளம், ஆன்மா-இந்த மூன்றாலும் விடுதலை பெற முயல்கிறோம். உலகமே இந்த அடிப்படையில்தான் செயல்பட்டு வருகிறது. லட்சியம் ஒன்றுதான், ஆனால் அதை அடையும் வழிகள் பல. இந்த வழிகள், நமது இயல்பின் தனிப் பண்புகளைப் பொறுத்து அமைகின்றன. ஒருவர் உணர்ச்சிவசப் படுபவராக இருப்பார், இன்னொருவர் நுண்ணறிவு படைத்தவராக இருப் பார், அடுத்தவர் செயல்திறம் பெற்றவராக இருப்பார். இவ்வாறு பலவகை மக்கள் உள்ளனர்.

மேலும், ஒரே வகை இயல்பிலேயே பல பாகுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக நமது இப்போதைய தலைப்பாகிய பக்தி நெறியில் முக்கியப் பகுதியான அன்பு என்பதை எடுத்துக் கொள்வோம். ஒருவன் இயல்பாகவே தன் குழந்தையிடம் மிகுதி யான அன்பைச் சொரிகிறான். மற்றொருவன் தன் மனைவிமீது ஆழ்ந்த அன்பு கொண்டிருக்கிறான். வேறொருவன் தாயிடமும், இன்னொருவன் தந்தையிடமும் மிகுந்த அன்பைச் செலுத்து கிறான். ஒருவன் நண்பனிடம் பாசம் வைக்கிறான். ஒருவனுக்கு நாட்டுப்பற்று மிகுதியாயிருக்கிறது. ஒருசிலர் மனித குலத்தை மிக ஆழமாக நேசிக்கின்றனர். மனித குலத்தை உண்மையிலேயே நேசிப்பவர்கள் மிகமிகச் சிலரே. ஆனால் அதுதான் தங்கள் வாழ்க்கையின் தூண்டுசக்தி, வாழ்க்கையின் இலக்கு என்பது போல்தான் ஒவ்வொருவரும் பேசுகின்றனர். ஒருசில மகான் களே இதனை அனுபவித்துள்ளனர். இத்தகைய உலகம்தழுவிய அன்பை மகான்கள் சிலரே உணர்கின்றனர். இத்தகைய அரு ளாளர்கள் இல்லாத காலம் என்று ஒன்று உலகில் ஒருபோதும் வராது என்று உறுதியாக நம்புவோம்!

ஒரே துறையில்கூட முடிவைக் காணப் பல வழிகள் இருப் பதை நாம் காண்கிறோம். கிறிஸ்தவர்கள் ஏசுவை நம்புகின்றனர்; ஆனால் அவர்கள் அவரைப்பற்றி எத்தனையெத்தனை வேறு பட்ட விளக்கங்களும் கருத்துக்களும் கொண்டிருக்கின்றனர் என்று எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் கோணங்களில் நின்றுகொண்டு வெவ்வேறு நிலைகளில் அவரைப் பார்க்கின்றனர். வணிகர்களை விரட்டியவராகவே ஏசுவைக் காண விரும்புகின்றனர் பிரெஸ்பிட்டேரியன் (Presbytarian) பிரிவினர்; அவர்களுக்கு அவர் ஒரு போராளி. குவேக்கர் (Quaker) பிரிவைச் சேர்ந்த ஒருவனைக் கேட்டால் அவன் ஒருவேளை, ‘அவர் தம்முடைய பகைவர்களை மன்னித் தார்’ என்பான்.குவேக்கர்கள் அவரை அவ்வாறு பார்க்கின்றனர். இப்படியே பல கருத்துக்கள். கத்தோலிக்கன் ஒருவனிடம் ஏசுவின் வாழ்க்கையில் அவனுக்கு மிகவும் பிடித்தது எது என்று கேட்டால் ஒருவேளை அவன், ‘அவர் பீட்டருக்குத் திறவுகோல் தந்த நிகழ்ச்சிதான்’ என்று கூறுவான். எனவே ஒவ்வொரு பிரிவும், தங்கள் வழியிலேயே அவரைக் காண முடியும். 

ஒரே விஷயத்திற்குப் பல பிரிவுகளும் உட்பிரிவுகளும் இருக்கும் என்பது தெரியவருகிறது. அறிவற்றவர்கள் இந்தச் சிறு பிரிவுகளுள் ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டு, அதிலேயே கட்டுண்டுவிடுகிறார்கள். பிறர், தங்கள் அறிவுக்கு ஏற்றவாறு பிரபஞ்சத்திற்கு விளக்கம் தர வேறு யாருக்கும் உரிமையில்லையென்று மறுப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், மற்றவர்கள் கூறுவது முற்றிலும் தவறென்றும், தாம் கூறுவது தான் சரியென்றும் துணிந்து சொல்கிறார்கள். எதிர்த்தால் சண்டைக்கு வருகிறார்கள்; தாங்கள் நம்புவதை நம்பாதவர் களைக் கொல்வோம் என்று முகமதியர்களைப்போல் கூறு கிறார்கள். பல நாடுகளில், பல மதவெறியர்கள் முன்பும் இப்படிச் செய்துள்ளார்கள்; இப்பொழுதும் செய்து கொண்டிருக் கிறார்கள். இவர்கள், தாங்கள் நேர்மையானவர்கள் என்று கருதிக்கொண்டு மற்றவர்களைப் புறக்கணிக்கிறார்கள். 

பக்தியோகத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிலை என்ன? மற்றவர்கள் செல்லும் வழிகள் தவறானவை என்று மதவெறியர்களைப் போல் நாம் சொல்லக் கூடாது. மாறாக, சொந்த நெறிகளைப் பின்பற்றுவோர் அனைவரும் சரியான பாதையிலேயே செல்கின்றனர் என்று கூற வேண்டும். எந்தப் பாதை உங்கள் இயல்பிற்கு முற்றிலும் உகந்ததாக உள்ளதோ அந்தப் பாதையே சரி. நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியின் விளைவாகத் தனிப்பட்ட இயல்போடு உலகில் பிறந்திருக் கிறோம். அதை முற்பிறவி அனுபவமென்று சொன்னாலும் சரி; அல்லது பரம்பரை வழியாக வந்தது என்று சொன்னாலும் சரி, நாம் அனைவரும் கடந்த காலத்தின் விளைவுகளே. இது சர்வ நிச்சயம். அந்த வினைகள் எந்த வழியாக வந்தாலும் சரி, அவற்றின் விளைவே நாம். எனவே கடந்த காலத்தைக் காரண மாகக் கொண்ட காரியம் அல்லது விளைவே நாம் ஒவ்வொரு வரும் என்பது தெளிவு. அதற்கு ஏற்ப நம் ஒவ்வொருவருக் கும் ஒரு தனியியல்பு, ஒரு தனிப்போக்கு உள்ளது. ஆதலால் அவரவர்க்கு உரிய பாதையை அவரவரே கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். 

 நமக்கு இயற்கையாக அமைகின்ற இந்த வழி, இந்த முறை அல்லது இந்தப் பாதையே ‘சொந்தப் பாதை’. இதுதான் இஷ்டம் பற்றிய கோட்பாடு. எது நமது வழியோ அதை நமது இஷ்டம் என்று கூறுகிறோம். எடுத்துக்காட்டாக, கடவுள் பிரபஞ்சத்தை ஆள்கின்ற எல்லாம்வல்ல ஆட்சியாளர் என்று ஒருவன் கருதுகிறான். அவனுடைய இயல்பு ஒருவேளை அத் தகையதாக இருக்கலாம். அவன் சற்று அதிகாரப்போக்குக் கொண்டவனாக, அனைவர்மீதும் ஆணைசெலுத்தும் குணம் உடையவனாக இருப்பான். எனவே கடவுளையும் அவ்வாறு கருதுகிறான். மற்றொருவன் கண்டிப்புமிக்க ஆசிரியனாக இருப் பான். அவன் இறைவனை, நடு நிலையில் நின்று நியாயமும் தண்டனையும் வழங்கும் நீதிபதியாகக் காண்பான். இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவர் இயல்பிற்கு ஏற்றவாறு இறைவனைக் காண்கின்றனர். நமது இயல்பிற்கு ஏற்றவாறு நாம் எப்படிக் கடவுளைப் பார்க்கிறோமோ அதுவே நமது இஷ்டம். இப்படி அந்த நிலையில், அந்த நிலையில் மட்டுமே நாம் கடவுளைக் காணக்கூடிய நிலைக்கு நம்மை நாமே கொண்டு வந்துவிட் டோம். வேறு எந்த நிலையிலும் நாம் அவரைக் காண முடி யாமல் போய்விட்டது.

 ஒருவரது அறிவுரையைக் கேட்கிறீர்கள். அதுதான் மிகச் சிறந்தது என்றும், அதுவே உங்களுக்குச் சரியானது என்றும் எண்ணுகிறீர்கள். அடுத்த நாள் உங்கள் நண்பர் ஒருவரிடம் அந்த அறிவுரையைச் சென்று கேட்குமாறு கூறுகிறீர்கள். அவர் அதனைக் கேட்டுவிட்டு, தாம் அதுவரை கேட்டவற்றுள் சிறிதும் பயனற்றது அது என்று வெளியே வருகிறார். அவர்மீது தவறில்லை. அவருடன் வாதிப்பதிலும் பயனில்லை. அறிவுரை சரிதான். ஆனால் அது அவரது உள்ளத்திற்கு ஏற்றதாக இல்லை.இதனை இன்னும் சற்று விவரித்தால், உண்மை உண்மை தான்; ஆனால் அது தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. மேலாகப் பார்ப்பதற்கு இது ஒரு முரண்பாடாகத் தெரியலாம். ஆனால் ஒன்றை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அறுதி உண்மை (Absolute Truth) ஒன்றே ஒன்றுதான்; ஆனால் எல்லா சார்பு உண்மைகளும் (Relative Truth) வேறுபடத்தான் செய்யும். உதாரணமாக இந்தப் பிரபஞ்சக் காட்சியை எடுத்துக் கொள் ளுங்கள். இந்தப் பிரபஞ்சம் ஒரு முழுமையான, பரிபூரணப் பொருள். இது மாற்ற முடியாதது; மாறாதது; எங்கும் ஒரே சீராகத் திகழ்வது. ஆனால் நீங்களும், நானும், மற்ற ஒவ் வொருவரும் அவரவர் பிரபஞ்சத்தையே பார்க்கிறோம்; கேட்கிறோம். 
சூரியனை எடுத்துக்கொள்ளுங்கள். சூரியன் ஒன்றுதான். ஆனால் நீங்களும் நானும் மற்ற நூற்றுக்கணக்கானோரும் பல்வேறு இடங்களிலிருந்து அதைப் பார்க்கும்போது வேறு பட்ட சூரியனையே பார்க்கிறோம். நாம் நிற்கின்ற இடத்தின் சிறு மாறுதல் சூரியனது காட்சியையே மாற்றிவிடும். வாயு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல் காட்சியை மாற்றும். எனவே சார்பு அறிவுகளில் உண்மை பலவாகத்தான் தோன்றும். ஆனால் அறுதி உண்மை ஒன்றே ஒன்றுதான்.
எனவே மதத்தைப் பற்றிய உங்கள் கருத்திற்கு ஏற்றவாறு ஒருவன் கூறவில்லை என்ற காரணத்திற்காக ஒருவரோடொ ருவர் சண்டையிட்டுக் கொள்ள வேண்டியதில்லை. முரணாக இருப்பதுபோல் தோன்றினாலும், இருவர் கூறுவதும் உண்மை யாக இருக்கலாம். இதை நீங்கள் மறக்கக் கூடாது. 
 சூரியனின் ஒரே மையத்தை நோக்கி, கோடிக்கணக்கான ஆரங்கள் செல்கின்றன. மையத்திலிருந்து அவை எவ்வளவு விலகி இருக்குமோ அவ்வளவுக்கு இரண்டு ஆரங்களுக்கு இடையிலுள்ள தூரமும் அதிகமாக இருக்கும். மையத்தில் ஒன்றுசேரும்போது எல்லா வேறுபாடுகளும் மறைந்து விடு கின்றன. அப்படிப்பட்ட மையம் ஒன்று உள்ளது. அதுவே மனிதனின் அறுதி லட்சியம். இறைவனே அந்த மையம். நாமெல்லாம் ஆரங்கள். இந்த ஆரங்களுக்கு இடையேயுள்ள தூரங்களே நம் ஒவ்வொருவருக்கும் இயல்பாய் அமைந் துள்ள வரம்புகள். இந்த வரம்புகள் மூலமாக மட்டுமே நாம் இறைக்காட்சி பெற முடியும். இப்போது நாம் கட்டுப்பட்டுள்ள இந்தத் தளத்திலிருந்து பார்க்கும்போது நாம் ஒவ்வொருவரும் அறுதி உண்மையின் வெவ்வேறு கோணங்களைத்தான் பார்க்க முடியும். ஆனால் எல்லா கோணங்களும் உண்மை யானவை. அதற்காக நாம் அடித்துக்கொள்ள வேண்டிய தில்லை. வேறுபாடுகள் விலக ஒரே வழி, மையத்தை அடை வதுதான். போராடியோ, வாதம் செய்தோ நாம் நம் வேறு பாடுகளைக் களைந்து விடலாம் என்றால் அது நடக்காது. எந்த முடிவுக்கும் வராமல் ஆண்டாண்டு காலம் நாம் வாதிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். வரலாறு இதனை நிரூபிக் கிறது. முன்னேறிச் சென்று மையத்தை அடைவது ஒன்றே தீர்வு. இதை எவ்வளவு விரைவாகச் செய்கிறோமோ, அவ்வளவு விரைவில் வேறுபாடுகள் மறையும்.
எனவே, மனிதன் தனக்குரிய மதத்தைத் தானே தேர்ந் தெடுத்துக் கொள்ள அனுமதிப்பதுதான் இஷ்டக் கோட்பாடு. தான் வழிபடுவதையே வழிபட வேண்டுமென்று பிறரை வற்புறுத்தக் கூடாது. படைகளினாலோ, வலிமையாலோ, வாதத் திறமையாலோ மக்களை ஒன்றாகத் திரட்டி ஒரே இடத்தில் மந்தைபோல் அடைத்து, ஒரே கடவுளை வழிபடச் செய்வதற் காக எடுக்கப்பட்ட எந்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை; வெற்றி பெறவும் செய்யாது. அவ்வாறு செய்ய முடியாது என் பது மனித இயல்பிலேயே உள்ளது. அது மட்டுமல்ல; அவ்வாறு செய்வது அவர்களின் வளர்ச்சியையும் தடுத்துவிடக்கூடும். ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றப் போராடாத ஆணையோ பெண்ணையோ நாம் பார்க்க முடியாது. இவர்களுள் எத்தனை பேர் திருப்தி அடைகின்றனர்? திருப்தி அடைந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக உள்ளது! எதையாவது அடைபவர்களின் எண்ணிக்கைதான் எவ்வளவு குறைவு! அது ஏன்? ஏனெனில் பெரும்பாலோர் அடைய முடியாத காரியங் களை எடுத்துக்கொண்டு அல்லாடுவதுதான். அவர்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம், பிறர் அவர்களை அடக்கி அவ்வாறு செய்யுமாறு செய்ததுதான்.
எடுத்துக்காட்டாக, ஒரு தந்தை தன் பிள்ளைக்குக் குழந்தைப் பருவத்திலேயே ஒரு சிறிய நூலைக் கையில் கொடுத்து கடவுள் இப்படி இருப்பார், இது இப்படி, அது அப்படி என்று கற்பிக்கிறார். இப்படி அந்தக் கருத்தை என் மனத்தில் புகுத்த அவருக்கு என்ன உரிமை உள்ளது? நான் எந்த முறையில் வளர வேண்டும் என்பதுபற்றி அவருக்கு என்ன தெரியும்? என்னுடைய மன அமைப்பின் வளர்ச்சிபற்றி அவருக்கு எதுவும் தெரியாது. இருந்தும் தன் கருத்துக்களை என் மனத்தில் திணிக்க விரும்புகிறார். விளைவு? என் வளர்ச்சி குன்றுகிறது. ஒரு செடிக்குப் பொருந்தாத மண்ணில் அதை வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது.  ஒரு குழந்தை தனக்குத்தானே கற்பித்துக் கொள்கிறது. அதன் வழியிலேயே அது முன்னேற நீங்கள் உதவி செய்யலாம். ஆனால் நேரடியாக எதுவும் செய்வதற்கில்லை. தடைகளை நீங்கள் நீக்கலாம், ஆனால் அறிவுவளர்ச்சி அதன் இயல்பிற்கு ஏற்பவே உண்டா கிறது. இறுகிய நிலத்தைச் சற்று நெகிழ்த்துங்கள், செடியின் முளை எளிதாக வெளிவரும். பிற எதனாலும் அதற்குத் தீங்கு ஏற்படாமலிருக்க அதைச் சுற்றி வேலி போடுங்கள். பனிபோன்ற வற்றிலிருந்து அதனைக் காக்க வழிசெய்யுங்கள். அத்துடன் உங்கள் வேலை முடிந்துவிட்டது. அதற்குமேல் நீங்கள் எது வும் செய்ய முடியாது. மற்றவை அதன் சொந்த இயல்பிலிருந்தே வெளிப்பட வேண்டும்.
ஒரு குழந்தையின் கல்வியும் இந்த முறையில்தான் நடைபெற வேண்டும். குழந்தை, தானே கற்றுக் கொள்கிறது. நான் சொல்வதைக் கேட்க நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் வீட்டிற்குச் சென்ற பிறகு, உங்கள் மனத்தில் ஏற்கனவே இருப் பதுடன் இங்கே கேட்டதை ஒப்பிட்டுப் பாருங்கள். அதையே தான் நீங்களும் எண்ணியிருந்தது தெரியவரும். நீங்கள் நினைத்ததை நான் வெளியிட்டேன், அவ்வளவுதான். நான் உங்களுக்கு எதுவும் கற்றுக்கொடுக்க முடியாது. உங்களுக்கு நீங்களே கற்பிக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணத்தை வெளியிடுவதற்கு நான் ஒருவேளை உதவக்கூடும். 
மதத்திலும் அப்படியே. இன்னும் சொல்லப்போனால் மதத்தைப் பொறுத்தவரை எனக்கு நானே குருவாக இருக்க வேண்டும். எல்லாவிதமான பொருளற்ற கருத்துக்களை என் மூளையில் புகுத்த என் தந்தைக்கு என்ன உரிமை இருக்கிறது? இவற்றை என் மனத்தில் புகுத்த ஆசிரியருக்கு என்ன உரிமை? இல்லை, சமுதாயத்திற்குத்தான் என்ன உரிமை? ஒருவேளை அவை நன்மை தரக் கூடியனவாகவே இருக்கலாம். ஆனால் அவை என் வழி இல்லாமல் போகலாமே! தவறான போதனை மூலம், களங்கமற்ற கோடிக்கணக்கான குழந்தைகளின் அக வளர்ச்சியையே கொன்றுவிட்ட பயங்கரக் கொடுமையை எண்ணிப் பாருங்கள். வியப்பூட்டும் வகையில் ஆன்மீக உண்மைகளாகப் பரிணமிக்கக்கூடிய எத்தனையோ அழகிய விஷயங்கள் இந்தக் குடும்ப மதம், சமுதாய மதம், தேசிய மதம் போன்ற கொடிய கொள்கைகளால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிட்டன! உங்கள் குழந்தைக் கால மதம், அல்லது தேசிய மதம்பற்றி உங்கள் மூளையில் இப்போது எவ்வளவு திரளான மூடநம்பிக்கை திணிக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்! அது எவ்வளவு கொடுமை செய்துள்ளது அல்லது செய்யக்கூடும் என்பதையும் சிந்தியுங்கள்! தன்னால் எவ்வளவு தீமை செய்ய முடியும் என்பதை மனிதன் அறிய வில்லை . அவன் அறியாமல் இருப்பதும் நல்லதுதான். அறிந் தால் அவன் தற்கொலைதான் செய்துகொள்வான். ஒவ் வோர் எண்ணத்திற்கும் செயலுக்கும் பின்னணியில் எத்தகைய பேராற்றல் புதைந்துள்ளது என்பதை அவன் அறியவில்லை. ‘தேவதூதர்கள் காலெடுத்து வைக்க அஞ்சுமிடத்தில், அறி விலிகள் விரைந்து செல்ல முந்துவார்கள்’ என்ற பழமொழி முற்றிலும் உண்மை. இதை ஆரம்பத்திலிருந்தே நாம் நினை வில் கொள்ள வேண்டும். எப்படி? இஷ்டம் என்பதில் நம்பிக்கை வைப்பதன்மூலம்.
பல லட்சியங்கள் இருக்கின்றன. உங்கள் லட்சியம் எது வாக இருக்க வேண்டும் என்று சொல்லவோ, எந்த லட்சியத் தையாவது உங்கள்மீது திணிக்கவோ எனக்கு உரிமை இல்லை. எல்லா லட்சியங்களையும் உங்கள் முன் வைத்து, உங்கள் இயல்பிற்கு ஏற்ப எது உங்களுக்குப் பிடித்தது, எது உங்களுக்கு உகந்தது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளும்படி விட்டுவிடுவதே என் கடமை. உங்களுக்கு மிகவும் ஏற்புடைய ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் விடாமுயற்சியுடன் ஈடு படுங்கள். அதுதான் உங்களது இஷ்டம்; உங்களது சிறப்பான லட்சியம்.
எனவே எல்லோருக்குமான ஒரு மதம் ஒருபோதும் இருக்க முடியாது என்பது தெரிகிறது. மதம் என்பது அவரவர் சொந்த விஷயம். எனக்கென்று ஒரு சொந்தக் கருத்து இருக் கிறது. அதை நான் புனிதமாகவும் ரகசியமாகவும் போற்ற வேண்டும். ஏனென்றால் அது உங்களுடைய கருத்தாக இருக்க வேண்டியதில்லை என்பது எனக்குத் தெரியும். இரண்டாவ தாக, என் கருத்தை ஒவ்வொருவரிடமும் சொல்லி நான் ஏன் குழப்பத்தை உண்டாக்க வேண்டும்? மற்றவர்கள் என் னோடு சண்டையிடக்கூடும். நான் அவர்களிடம் சொல்லா விட்டால் சண்டையிட மாட்டார்கள். சொன்னால் எதிர்க்கத் தான் செய்வார்கள். எனவே அவற்றைப்பற்றிப் பேசுவதால் என்ன நன்மை? இஷ்டத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அது உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள விஷயம்.
யார் மதத்தின் கொள்கைகளை வெளிப்படையாக மக்களிடம் பரப்பலாம்; எல்லோரையும் பின்பற்றச் செய்யலாம். ஆனால் மதத்தின் உயர்ந்த பகுதியை அதாவது, ஆன்மீகத்தை அவ் வாறு செய்ய இயலாது. ஆன்மீகம் என்று சொன்ன ஐந்து நிமிடத்திற்குள் ஆன்மீக உணர்ச்சி பெற்று எழ என்னால் முடி யாது. வெறும் வேடிக்கையாலும் கேலிக்கூத்துகளாலும் என்ன பயன்? அது மதத்தைக் கேலி செய்வதாகும்; தெய்வ நிந்தனையுங்கூட. அதன் பலன்களையே இன்று நாம் சர்ச்சு களில் காண்கிறோம். இத்தகைய மதப்பயிற்சிகளை மக்கள் எப்படித் தாங்கிக் கொள்வார்கள்? இது படை வீரர்களின் படைத்தளப் பயிற்சியைப் போலுள்ளது. ‘துப்பாக்கியைத் தோளின்மீது வையுங்கள். முழங்காலிடுங்கள்; புத்தகத்தைக் கையில் எடுங்கள்’ என்று எல்லாம் ஒரேவகையாக ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டன. ஐந்து நிமிடம் பக்தி, ஐந்து நிமிடம் ஞானம், ஐந்து நிமிடம் பிரார்த்தனை என்று எல்லாம் முன் கூட்டியே கணக்கிடப்பட்டுவிட்டன. இவை பயனற்றவை. ஆரம்பத்திலேயே தவிர்க்கப்பட வேண்டியவை. இத்தகைய கேலிக்கூத்துகள் மதத்தையே விரட்டியடித்து விட்டன. இது இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு நீடித்தால், மதம் என்ற  ஒன்றே இல்லாமல் போய்விடும். உள்ளம் திருப்தி கொள்ளும் அளவிற்கு தத்துவங்களை, கொள்கைகளை, கோட்பாடுகளை சர்ச்சுகள் போதிக்கட்டும். ஆனால் மதத்தின் செயல்முறைப் பகுதியான வழிபாட்டில் ஈடுபடும்போது, ஏசுநாதர் கூறியது போல், ‘உன் அறைக்குள் சென்று, உள்கதவைப் பூட்டி, அகத் திலிருக்கிற உன் பிதாவை நோக்கிப் பிரார்த்தனை செய்.’
இஷ்டம் என்ற கோட்பாடு இதுதான். பல்வேறுதரப் பட்ட மக்களுக்குச் செயல்முறை மதத்தைத் தரவும் அதன் மூலம் மதச் சண்டைகளைத் தவிர்க்கவும், ஆன்மீக வாழ்வில் உண்மையான முன்னேற்றத்தைக் காணவும் துணை செய்ய வேண்டும் என்றால், அதற்குரிய ஒரே வழி இதுதான். என் சொற்களுக்குத் தவறான பொருள்கொண்டு ரகசியக் குழுக் களை அமைக்க முயலாதீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன். சாத்தான் என்று ஒருவன் இருந்தால் அவனை நான் இந்த ரகசியக் குழுவில்தான் எதிர்பார்ப்பேன். ரகசியக் குழுவின் தனிப் படைப்பு அவன். அதன் திட்டங்கள் வெறும் பேய்த் தனமானவை.இஷ்டம் புனிதமானது, ஆனால் ரகசியமானது அல்ல. உங்கள் இஷ்டத்தைப்பற்றிப் பிறரிடம் நீங்கள் ஏன் பேசக் கூடாது, தெரியுமா? அது உங்களுடைய புனிதமான உடைமை என்பதால்தான். அது மற்றவர்களுக்கு உதவக்கூடும். ஆனால் அது பிறரைப் புண்படுத்தாது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒருவன் உருவக் கடவுளை வழிபட இயலாத இயல்புடையவனாக இருப்பான்; தன் ஆன்மாவையே உரு வமற்ற கடவுளாக வழிபடுவான். நான் அவனை உங்கள் முன் நிறுத்துகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அவன் உருவக் கடவுள் இல்லை என்றும், உங்களிடமும் என்னிடமும் உள்ள ஆன்மாவே கடவுள் என்றும் கூறினால், நீங்கள் திடுக்கிடுவீர்கள். அவனது கருத்து புனிதமானது, ஆனால் ரகசியமானது அல்ல.
எந்த ஒரு சிறந்த மதமும் ஆகட்டும், எந்தப் பெரிய ஆச் சாரியரும் ஆகட்டும், இறை உண்மைகளைப் போதிப்பதற்கு அவர்கள் ரகசியக் குழுக்களை ஏற்படுத்தியதாகத் தெரிய வில்லை. இந்தியாவில் இத்தகைய ரகசியக் குழுக்கள் இல்லை. இது மேலை நாட்டுக் கருத்து. அதை இந்தியாவின்மீது திணிக்க அவர்கள் விரும்புகின்றனர். இவற்றைப்பற்றி எங் களுக்கு எதுவும் தெரியாது. இந்தியாவில் ரகசியக் குழுக்கள் இருக்க வேண்டிய அவசியம்தான் என்ன? சர்ச்சுக்கு  மாறுபட்ட கொள்கைகளைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேச ஐரோப்பாவில் யாருக்கும் அனுமதி கிடையாது. எனவே தாங்கள் விரும்பிய வகையில் வழிபட அவர்கள் ஒளிந்து மலை களுக்குச் சென்று ரகசியக் குழுக்கள் ஏற்படுத்த வேண்டிய நிலைமை உண்டாயிற்று. மதத்தைப்பற்றி வேறுபட்ட கருத்துக் களைக் கொண்டிருந்ததற்காக இந்தியாவில் யாரும் எப்போதும் துன்புறுத்தப்படவில்லை. ரகசிய குழுக்களைப் போன்ற கோரமானவற்றை ஒருவன் நினைத்துக்கூடப் பார்க்க முடி யாது. இவற்றால் எவ்வளவு தீமை ஏற்படுகிறது, எவ்வளவு எளிதில் இவை காமக் கழகங்களாகவோ, ஆவிக் கழகங் களாகவோ மாறி விடுகின்றன, எப்படி இதில் ஆண்களும் பெண்களும் சிக்கிக் கொள்கிறார்கள், எண்ணத்திலும் செய்கை யிலும் அவர்களுடைய எதிர்கால வளர்ச்சி எவ்வளவு பாதிக் கப்படுகிறது என்பதையெல்லாம் நான் இந்த உலகில் நிறைய பார்த்திருக்கிறேன். 
நான் இப்படிப் பேசுவது உங்களில் சிலருக்கு மனக் கசப்பை உண்டாக்கலாம். ஆனால் நான் உண்மையைச் சொல்லி யாக வேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் ஆண்களும் பெண்களுமாக ஓர் ஆறுபேர் மட்டுமே என்னைப் பின்பற்றக் கூடும். ஆனால் அவர்கள் தூயவர்களாக, நேர்மையானவர் களாக இருக்க வேண்டும். எனக்குக் கூட்டம் தேவையில்லை. கூட்டங்களால் என்ன சாதித்துவிட முடியும்? உலக வரலாற் றைப் படைத்தவர்கள் மிகச் சிலரே. அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்கள் வெறும் சந்தைக் கூட்டமே.
இத்தகைய ரகசியக் குழுக்களும் போலிக் கூட்டங்களும் மக்களைத் தூய்மையற்றவர்களாக, பலவீனர்களாக, குறுகிய மனப்பான்மை உடையவர்களாக ஆக்கிவிடுகின்றன. பலவீனர் களுக்கு மனத்திடம் இல்லை. அவர்களால் எந்தச் செயலையும் செய்ய முடியாது. எனவே இந்தக் குழுக்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளாதீர்கள். இவை எல்லாம் அடக்கி வைக்கப்பட்ட காமத்தின் வெளிப்பாடு; மர்ம விஷயங்களைப் பற்றிய தவறான அன்பு. இவை உங்கள் உள்ளத்தில் முதல் முறை தலைதூக்கும்போதே, அதன்மீது ஓங்கி அடித்து ஒழித்துவிடுங்கள். களங்கத்தின் சாயல் இருந்தாலும்கூட மதவாதியாக இருக்க முடியாது. அழுகிச் சொட்டும் புண்களை ரோஜா மலர்களைக் கொண்டு மூட முயலாதீர்கள். ஆண்ட வனை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீர்களா? யாராலும் அது ஒருபோதும் முடியாது. நேர்மையான ஓர் ஆணையோ பெண்ணையோ எனக்குக் கொடுங்கள். ஆனால் இந்தப் பறக்கும் தேவதூதர்கள், ஆவிகள், பேய்கள் இவற்றிலிருந்து ஆண்டவன் என்னைக் காப்பாற்றட்டும். எந்நாளும் எல்லாரிடமும் ஒரே தன்மையராக, எல்லார்க்கும் உரியவர்களாக, இனியவர்களாக விளங்குங்கள். 
‘இயல்புணர்ச்சி’ (Instinct) என்று ஒன்று நம்மிடம் உள்ளது. அது மிருகங்களுக்கும் நமக்கும் பொதுவாக அமைந் தது. உடலின் ஓர் எந்திர கதி அது. அதைவிட ஓர் உயர்ந்த வழிகாட்டி நமக்கு உண்டு . அது நமது ‘பகுத்தறிவு’ (Reason). அது பல உண்மைகளைத் தொகுத்து ஒரு பொது விதியை நிறுவுகிறது. அதற்கும் மேல் ஓர் அறிவுச்சக்தி இயங்குகிறது; அதுதான் ‘உள்ளுணர்வு’ தெய்வப் பேருணர்வு (Inspiration). அது பகுத்து அறிவதில்லை. இமைப்பொழுதில், ஒரு மின்னல் வீச்சில், எல்லாவற்றையும் அது அறிந்துவிடுகிறது. அறிவின் மிகவுயர்ந்த நிலை அது. ஆனால் அதை இயல்புணர்ச்சி யிலிருந்து பிரித்து அறிவது எப்படி? அது மிகவும் கடினம் தான். இப்போதெல்லாம் ஒவ்வொரு முட்டாளும் உங் களிடம் வந்து தனக்கு தெய்வப்பேருணர்வு ஏற்பட்டுவிட்ட தாகச் சொல்கிறான். ‘எனக்குத் தெய்வப் பேருணர்வு வந்து விட்டது. எனவே எனக்கு ஒரு மேடை அமையுங்கள். என்னைச் சூழ்ந்து நில்லுங்கள், என்னை வழிபடுங்கள்’ என்கிறான் அவன். தெய்வப் பேருணர்வையும் ஏமாற்று வேலையையும் எப்படிப் பிரித்து அறிவது? முதலில், தெய்வப் பேருணர்வு ஒருபோதும் பகுத்தறிவுக்கு முரண்பட்டதாக இருக்காது. முதுமைப் பருவம், குழந்தைப் பருவத்திற்கு முரண்பட்டதல்ல. குழந்தைதான் முதியவனாகப் பரிணமிக்கிறான். தெய்வப் பேருணர்வு என்று நாம் கூறுவது பகுத்தறிவின் பரிணாமமே. பகுத்தறிவின் வாயி லாகவே அதனை அடைய முடியும். தெய்வப் பேருணர்வு பகுத் தறிவுக்கு முரணாக இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால் அதனை வீசி எறிந்துவிட வேண்டும். உங்கள் உடலின் இயல் புணர்ச்சி வசப்பட்ட இயக்கங்கள் பகுத்தறிவுக்கு எதிராக இருப்பதில்லை. சாலையைக் கடந்து செல்லும்போது வாகனங் களின் விபத்திலிருந்து தப்பிக்க எவ்வளவு இயல்பாக உங்கள் உடல் இயங்குகிறது! அவ்வாறு உங்கள் உடம்பைக் காத்துக் கொள்வது அசட்டுத்தனம் என்று உங்கள் மனம் சொல்கிறதா? இல்லை. உண்மையான தெய்வப் பேருணர்வு ஒருபோதும் பகுத்தறிவுக்கு முரணாக இருக்காது. முரணாக இருக்குமானால் அது தெய்வப் பேருணர்வு அல்ல, அது வெறும் புளுகு மூட்டை.
இரண்டாவதாக, தெய்வப் பேருணர்வு என்பது எல்லோ ருடைய நன்மைக்காகவும் இருக்கும், பெயருக்காகவோ புகழுக் காகவோ சொந்த லாபத்திற்காகவோ இருக்காது. அது என் றென்றும் உலகின் நன்மைக்காகவே இருக்கும்; முற்றிலும் தன்னலமற்றதாக இருக்கும். இந்தச் சோதனைகள் பூர்த்தி யானால் அதைத் தெய்வப் பேருணர்வு என்று கொள்ளலாம். இன்று உலகம் உள்ள நிலையில் இந்தத் தெய்வப் பேருணர்வு பெற்றவர்கள் கோடியில் ஒருவர்கூட இல்லை என்பதை நீங்கள் மனத்தில் கொள்ள வேண்டும். இப்போது அத்தகை யோரது எண்ணிக்கை மிகக் குறைவு. எதிர்காலத்தில் அவர்கள் அதிகமாவார்கள் என்று நம்புகிறேன். ஏன், உங்களுள் ஒவ் வொருவருமே அத்தகையோராக மலர்வீர்கள் என்று எதிர் பார்க்கிறேன்.
இப்போது ஆன்மீகத்தை நாம் ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறோம். தெய்வப் பேருணர்வு வரும்போதுதான் நம்மிடம் ஆன்மீகம் ஆரம்பமாகும். செயின்ட் பால் கூறுவது போல் ‘இப்போது மங்கலான கண்ணாடியின்மூலம் பார்க் கிறோம், ஆனால் அப்போது நேருக்குநேர் பார்ப்போம்’. இன்றைய உலகில் அத்தகைய நிலையை அடைந்தவர்கள் மிகக் குறைவானவர்களே. அதேவேளையில் ‘நாங்கள் தெய்வப் பேருணர்வு பெற்றவர்கள்’ என்று போலியாகச் சொல்லித் திரிபவர்கள் இவ்வாறு அதிகமாக இருந்ததும் வேறெந்தக் காலத்திலும் இல்லை. பெண்களுக்கு உள்ளுணர்வு சாத்தியக் கூறுகள் அதிகம் என்றும், ஆண்கள் பகுத்தறிவைக் கொண்டு மெதுவாகவே முன்னேறுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வெறும் பேச்சை நம்பாதீர்கள். தெய்வப் பேருணர்வு பெற்ற பெண்கள் எத்தனை பேர் உண்டோ , அத்தனை ஆண் களும் உள்ளனர். ஒருவேளை, பெண்கள்தான் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்குப் பெரிதும் இலக்காகிறார்கள். ஏமாற்றுக் காரர்கள், செப்படி வித்தைக்காரர்கள் இவர்களின் கைப்பாவை யாக இருப்பதைவிட நம்பிக்கையற்றவராக இருந்து இறந்து போவது மேல். பயன்படுத்துவதற்காகத்தான் பகுத்தறிவு உங்களிடம் உள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்தியதாக உலகிற்கு நிரூபியுங்கள். அப்படிச் செய்தால், அதன்மூலம் உயர்ந்தவற்றை நீங்கள் அடைய முடியும்.
 கடவுள் அன்பு வடிவானவர் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ‘கங்கைக் கரை யோரம் வாழ்ந்து கொண்டு, நீருக்காகக் கிணறு வெட்டுபவன் முட்டாள்.’ வைரச் சுரங்கத்திற்கு அருகில் வாழ்ந்து கண்ணாடி மணியைப் பொறுக்குபவன் ஒரு மடையன். அந்த வைரச் சுரங்கம்தான் கடவுள். ஆவிகள், பறக்கும் தேவதைகள் போன்ற பிதற்றல்களை நம்பிக் கடவுளை மறப்பவர்கள் முட்டாள்கள் அல்லாமல் வேறு யார்? இது மனித இனத்தை இழிநிலைக் குத் தள்ளுகிறது. நரம்புகளை பலவீனப்படுத்துகிறது; எப் போதும் பேய்களை எண்ணி நடுங்கும் நிலையில் நமது மூளையை வைக்கிறது; புதுமை காணும் ஆவலைத் தூண்டு கிறது. இந்தக் கட்டுக் கதைகள் நம்மை இயற்கைக்கு மாறான, நரம்புகள் முறுக்கேறிய நிலைக்கு அழைத்துச் செல்கின்றன. படிப்படியாக மனித இனத்தையே சீர்குலையச் செய்கின்றன. இந்தப் பொருளற்றவற்றைப் பின்பற்றுவதற்காகக் கடவுளை யும், பரிசுத்தத்தையும், புனிதத்தையும், ஆன்மீகத்தையும் விட்டு விடுவதா? பிறரது மனங்களை அறியும் வேலையைப்பற்றி என்ன சொல்வேன்! ஐந்து நிமிடம் நான் பிறரது எண்ணங்களை அறிந்தால் போதும், எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்!  நிமிர்ந்து நில்லுங்கள். ஆற்றலுடன் விளங்குங்கள். அன்பு வடிவான ஆண்டவனை நாடுங்கள். இதுதான் மிகப் பெரிய வலிமை. தூய்மையைவிட உயர்ந்த சக்தி ஏதேனும் உண்டா? அன்பும் தூய்மையும் உலகின்மீதே ஆணை செலுத்து கின்றன. அந்த அன்புக் கடவுளைப் பலவீனர்களால் அடைய இயலாது. எனவே உடல், உள்ளம், ஒழுக்கம், ஆன்மீகம் என்று எதிலும் பலவீனமாக இருக்காதீர்கள். இறைவன் மட்டுமே உண்மை. மற்றவை எல்லாம் உண்மை அல்லாதவை. இறைவனுக் காக எல்லாவற்றையும் துறக்க வேண்டும். ‘இறைவனை நேசிப் பதும், அவருக்குத் தொண்டு செய்வதும் தவிர, மற்ற அனைத்தும் வீண், வெறுமை, வெறுமையில் வெறுமை! இறைவனுக்குச் சேவை செய்; அவருக்கு மட்டுமே சேவை செய்’!

பக்தியோகம் 5

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
அ. ஆரம்பநிலைப் பாடங்கள்
5. பல்வேறு சின்னங்கள்

‘பிரதீகம்’, ‘பிரதிமா’ என்று இரண்டு சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. பிரதீகம் என்றால் நோக்கி வருவது, நெருங்கி வருவது. எல்லா மதங்களிலுமே வழிபாட்டில் பல படிகளைப் பார்க் கிறீர்கள். இந்த நாட்டிலும் சிலர் மகான்களின் திருவுருவங் களை வழிபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட உருவங்களையும் சின்னங்களையும் வழிபடுகிறார்கள். வேறு சிலர் மனிதர்களை விட உயர்ந்த ஆவிகளை வழிபடுகிறார்கள். ஆவிவழிபாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருகிறது. அத்தகையோர் இங்கே சுமார் எண்பது லட்சம் பேர் இருப்பதாக நான் படித்தேன். இன்னும் சற்று உயர்ந்த நிலையில் உள்ள தேவதைகளையும் தெய்வங்களையும் வழிபடுபவர்களும் உண்டு.
பக்தியோகம் இந்தப் பல படித்தரங்களிலுள்ள வழிபாடுகள் எதையும் கண்டிக்கவில்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் பிரதீகம் என்ற பிரிவில் அடக்கிவிடுகிறது. இவையெல்லாம் பிரதீக வழிபாடு. இவர்கள் இறைவனை வழிபடவில்லை . ஆனால் இறைநிலைக்கு அருகில் உள்ளதான பிரதீகத்தை வழி படுகிறார்கள். இவற்றின் வழியாக இறைவனை அடைய முயல்கிறார்கள்.
இந்தப் பிரதீக வழிபாடு நமக்கு முக்தி தந்து, நம்மைச் சுதந்திரர்கள் ஆக்காது. எந்தப் பொருட்களுக்காக அவற்றை வழிபடுகிறோமோ, அவற்றை மட்டுமே அது தர முடியும். எடுத்துக்காட்டாக, இறந்துபோன தன் முன்னோர்களையோ, நண்பர்களையோ ஒருவன் வழிபட்டால் ஒருவேளை சில சக்தி களோ, சில செய்திகளோ அவர்களிடமிருந்து கிடைக்கக் கூடும். வழிபடப்படுகின்ற அவர்களிடமிருந்து கிடைக்கும் அன் பளிப்பே வித்யை, அதாவது விசேஷ ஞானம். ஆனால் நமது மிக உயர்ந்த லட்சியமான முக்தி என்பது ஆண்டவனை வழி படுவதன்மூலம் மட்டுமே கிடைக்க முடியும்.
வேதங்களை விளக்கும்போது சில கீழைநாட்டு அறிஞர்கள் சகுணக் கடவுளைக்கூட ஒரு பிரதீகமாகக் கருதுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. சகுணக் கடவுளைப் பிரதீகம் என்று கருத இடமுண்டு; ஆனால் பிரதீகம் என்பது சகுணக் கடவுளும் அல்ல, நிர்க்குணக் கடவுளும் அல்ல. அதை இறைவனாக வழி பட முடியாது. எனவே தெய்வங்கள், முன்னோர்கள், மகான்கள், ஆவிகள் என்று பல்வேறு பிரதீகங்களை வழிபடுவதால் முக்தி பெறலாம் என்று நினைத்தால் அது பெரும் தவறாகும். மிஞ்சிப் போனால் அவர்களுடைய உதவியால் சில சக்திகளைப் பெற லாம். ஆனால் இறைவனால்தான் முக்தி தர முடியும். முக்தி தர இயலாதவை என்பதற்காக அவற்றை நாம் கண்டிக்க வேண்டிய தில்லை. அந்த வழிபாடும் சில பலன்களைக் கொடுக்கவே செய்கிறது. இவற்றைவிட உயர்ந்த எதையும் அறிந்துகொள்ள இயலாத மனிதன் இந்தப் பிரதீக வழிபாட்டின்மூலம் சிறிது சக்தியைப் பெறலாம்; சிறிது மகிழ்ச்சியை எய்தலாம். ஆனால் நீண்டநாள் அனுபவித்த பிறகு, முக்தி பெறும் தகுதி அவனுக்கு வரும்போது, அவன் தானாகவே இந்தப் பிரதீகங்களை விட்டு விடுவான்.
இந்தப் பல்வேறு பிரதீகங்களுள் மிகவும் பரவலாக உள்ளது நண்பர்களின் ஆவிகளை வழிபடுவதே. நட்பு, மக்களின் இயல்பிலேயே வேரூன்றி உள்ளது. எனவே நண்பர்கள் இறந் தாலும் நாம் அவர்களை மீண்டும் காண விரும்புகிறோம். அவர்களுடைய தூல உருவங்களோடு நாம் ஒட்டிக்கொள் கிறோம். அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களின் உடல் தொடர்ந்து மாறிக்கொண்டிருந்தது என்பதை அறவே மறந்துவிடுகிறோம். அவர்கள் இறந்தபின் அவர்கள் ஒரே நிலையிலேயே இருப்பார்கள், அவர்களை அப்படியே பார்ப் போம் என்று நினைக்கிறோம். அது மட்டும் அல்ல, கயவனான ஒரு நண்பனோ மகனோ எனக்கு இருந்திருப்பான். அவன் இறந்துவிட்டானானால் அவனைப்போல் இந்த உலகத்திலே ஒரு மகானைப் பார்க்க முடியாதென்று எண்ணத் தலைப்படு கிறோம். என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு தெய்வமாகவே ஆகிவிடுகிறான். குழந்தை இறந்தால், இந்தியாவில் சிலர் அதை எரிக்காமல் புதைக்கிறார்கள். புதைத்த இடத்தில் ஒரு கோயிலை எழுப்புகிறார்கள். அந்தச் சிறிய குழந்தை அங்கே கடவுளாகிவிடுகிறது. மதத்தின் இத்தகைய ஓர் அம்சம் எல்லா நாடுகளிலும் மிகப் பரவலாக இருக்கிறது. இதுதான் எல்லா மதங்களுடையவும் ஆரம்பம் என்று கருதும் தத்துவ ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் நிச்சயமாக அவர்களால் இதை நிரூபிக்க முடியாது. பிரதீக வழிபாடு நமக்கு முக்தி தராது என்பதே நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டியது.
இரண்டாவதாக, இது பேராபத்தை விளைவிக்கக் கூடியது. ‘நெருங்கிவருகின்ற நிலையில் இருப்பவையான இந்தப் பிரதீகங்கள் நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றன என்ற வரைக்கும் சரி. ஆனால் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர் வாழ்நாள் முழுவதும் இந்தப் பிரதீகங்களையே பற்றிக்கொண்டு அந்த இடத்திலேயே நின்று விடுகிறார்கள். அதற்கான வாய்ப்புதான் அதிகம். ஒரு குறிப் பிட்ட மதக் கொள்கையில் பிறப்பது நல்லது, ஆனால் எந்த வளர்ச்சியும் இன்றி அதிலேயே இறப்பது மிகவும் மோசமானது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவில் பிறந்து, அதன்படி பயிற்சிகள் பெறுவது நல்லது; அது நம்மிடமுள்ள உயர் பண்புகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் அதிலேயே வாழ்ந்து, அதிலேயே மடிந்தும் விடுகிறோம்; வெளியேறுவதோ வளர் வதோ இல்லை. இதுதான் பிரதீக வழிபாட்டால் விளையும் ஆபத்தாகும்.
இவையெல்லாம் ஒருவன் கடந்துசெல்ல வேண்டிய படிகள் என்று மனிதன் கூறுகிறான். ஆனால் வயது முதிர்ந்த பிறகும் அவன் இவற்றையே பற்றிக்கொண்டு நிற்பதைக் காண் கிறோம். இளைஞன் கோயிலுக்குச் செல்லவில்லையென்றால் அவனைக் கண்டிக்க வேண்டும். ஆனால் முதியவன் இன்னும் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தால் அவனும் கண்டிக் கப்பட வேண்டியவனே. அந்தக் குழந்தை-விளையாட்டில் இனி அவனுக்கு இடமில்லை. கோயில் அவனை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்த முதிய வயதில், உருவ வழிபாடு, பிரதீக வழிபாடு போன்ற தொடக்கநிலை வழி பாடுகளால் அவனுக்கு ஆவது ஒன்றுமில்லை .
இனி, ‘சாஸ்திர வழிபாடு’. இது உறுதியான, மிகவும் உறுதியானதோர் பிரதீக வழிபாடாகும். எந்த நாட்டை எடுத் துக் கொண்டாலும் சரி, சாஸ்திரங்கள் கடவுளின் இடத்தையே பிடித்துள்ளன. கடவுள் மனிதராக அவதாரம் செய்கிறார் என்று நம்புகின்ற சில பிரிவினர் என் நாட்டில் உள்ளனர். அந்த அவ தார புருஷர்கூட வேதங்களின்படி ஒழுக வேண்டும். அவரது உபதேசங்கள் வேதங்களின் கருத்தை ஒத்திருக்கவில்லை என்றால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்துக்கள் புத்தரை வழிபடுகின்றனர். ஆனால் அவர்களிடம், ‘நீங்கள் புத்தரை வழிபடுகிறீர்கள். அவரது அறிவுரைகளை ஏன் பின்பற்றக் கூடாது?’ என்று கேட்டால், ‘அவருடைய அறிவுரைகள் வேதங்களை மறுக்கின்றன’ என்று விடை அளிப்பார்கள். இதுதான் ‘சாஸ்திர வழிபாடு’. சாஸ்திரங்களில் காணப்படும் எத்தனையோ பொய்களை ஏற்பார்கள். இந்தியாவில், எனது தனிப்பட்ட கருத்தென்று புதிதாக ஏதாவது ஒன்றைச் சொல்ல நான் விரும்பினால், அதை ஒருவரும் கேட்க மாட்டார்கள். ஆனால் வேதத்திலிருந்து ஏதாவது ஒரு பகுதியை எடுத்து, அதைப் பலவாறு திரித்து, அதில் உள்ள நல்ல விஷயங்களை அழித்து, அதற்குப் பொருத்தமே இல்லாத அர்த்தத்தைக் கற்பித்து, என் கருத்துக்களை வேதங்கள் சொல்லும் கருத்துக்கள் என்று கூறினால், எல்லாரும் முட்டாள் கள்போல் கூட்டமாக என்னைப் பின்தொடர்வார்கள்.
கேட்போரைப் பயமுறுத்தும் வகையில் சிலர் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கின்றனர். அதைக் கேட்டு எளிய கிறிஸ் தவன் பயப்படுகிறான். ஆனால் ‘ஏசு கிறிஸ்து இதைத்தான் கூறியுள்ளார்’ என்று அவர்கள் சொன்னால்போதும், அவர் களை அப்படியே அந்த முட்டாள்கள் பின்பற்றுவார்கள், வேதங்களிலோ பைபிளிலோ இல்லாத புதிய எதையும் மக்கள் விரும்புவதில்லை. எல்லாமே நரம்புக் கிளர்ச்சிதான், சுண் டியிழுப்பதுதான். புதிய எதையாவது கண்டாலோ கேட்டாலோ திகைத்துப்போய் நிற்கிறீர்கள்- இது உடல் சம்பந்தப்பட்டது. எண்ணங்கள் விஷயத்திலோ இத்தகைய அதிர்ச்சிகள் இன் னும் அதிகம். மனம் வழக்கமாகச் சென்று கொண்டிருக்கும் பழைய தடத்திலேயே செல்கின்றது. அது ஒரு புதிய கருத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். எனவே புதுக் கருத்தை அந்தப் பழைய தடத்தின் அருகில் வைக்க வேண்டியிருக்கிறது. அப்போது நாம் மெல்ல அதை ஏற்கிறோம். இது ஒரு நல்ல தந்திரம் எனினும் தீய ஒழுக்கமாகும். 
 மிதவாதப் பிரசாரகர்கள் என்று நீங்கள் அழைக்கின்ற சீர்திருத்தவாதிகள் இன்று சமூகத்தில் நிலவவிடுகின்ற ஏராள மான முரண்பட்ட கருத்துக்களை எண்ணிப் பாருங்கள். கிறிஸ்தவ விஞ்ஞானிகளின் கண்களுக்கு ஏசு நாதர் ஒரு மருத்துவராகக் காட்சி அளிக்கிறார். ஆவி வழிபாட்டினர் அவரை ஒரு மனோசக்தி நிபுணராகக் காண்கிறார்கள்.  தியாசஃபிஸ்ட்க ள் அவரை மகாத்மாவாகக் கருதுகிறார்கள். இவை யாவும் ஒரே புத்தகத்திலிருந்து வெளிவந்த முடிவுகள்.
‘என் அன்பிற்குரியவனே, ஆரம்பத்தில் ஸத் (இருப்பு) மட்டுமே இருந்தது. ஆரம்பத்தில் வேறொன்றும் இருக்க வில்லை ” என்று வேதம் கூறுகிறது. இதில் உள்ள ஸத் என் பதற்குப் பல்வேறு பொருட்கள் சொல்லப்படுகின்றன. அணு வாதிகள் (Atomists) இந்தச் சொல்லுக்கு ‘அணுக்கள்’ என்று பொருள் கூறுகிறார்கள். அவற்றிலிருந்துதான் உலகம் உண் டாக்கப்பட்டது என்கிறார்கள். இயற்கைவாதிகள் (Naturalists) அதன் பொருள் ‘இயற்கை’ என்றும், இயற்கையிலிருந்தே எல்லாம் பிறந்தன என்றும் கூறுகிறார்கள். சூன்யவாதிகள் (Nihilists) இதற்குப் பொருள் ‘சூன்யம்’ அல்லது ‘பூஜ்யம்’ என்றும், சூன்யத்திலிருந்துதான் எல்லாம் வெளிப்பட்டன என்றும் சொல்கிறார்கள். ஆஸ்திகர்கள் அதற்குக் ‘கடவுள்’ என்று பொருள் கூறுகிறார்கள். அத்வைதிகள் இதன் பொருள் ‘பரிபூரணமான இருப்பு’ என்று கூறுகிறார்கள். ஆனால் எல் லோரும் வேதத்தின் அதே வரிகளைத்தான் தங்களுக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள். 
இதுதான் ‘சாஸ்திர வழிபாட்டிலுள்ள’ குறைபாடு. ஆனால் இதில் ஒரு பெரிய நன்மையும் உள்ளது. இது நமக்கு வலிமையைத் தருகிறது. சாஸ்திரங்கள் உள்ள மதப்பிரிவுகளைத் தவிர மற்றவை எல்லாம் மறைந்துவிட்டன. அவற்றை எதுவும் அழிக்க முடியாதது போலுள்ளது.
    பார்சிகளைப்பற்றி உங்களுள் சிலர் கேள்விப்பட்டிருப் பீர்கள். அவர்களே பழைய பாரசீகர்கள். ஒரு காலத்தில் அவர்கள் பத்துக் கோடி பேர் இருந்தனர். அவர்கள் அரேபியர் களிடம் தோல்வியுற்றார்கள். இப்போது அந்த நாட்டில் உள்ள நவீன பாரசீகர்கள் முகமதியர்களாக மாறிவிட்டார்கள். தங்களைக் கொடுமைப்படுத்தியவர்களிடமிருந்து ஒருசிலர் தப்பிப் பிழைத்தார்கள். தங்களுடன் அவர்கள் தங்கள் சாஸ் திரத்தையும் காத்தார்கள். அந்தச் சாஸ்திரம் அவர்களை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. 
அதேபோல் யூதர்களை நினைத்துப் பாருங்கள். தங்கள் சாஸ்திரம் மட்டும் இல்லாவிட்டால் அவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருப்பார்கள். அந்தச் சாஸ்திரமான ‘தால்மூத்’ அவர்களின் சிறப்பையும் ஆற்றலையும் பாதுகாத்து வருகிறது; எவ்வளவோ அச்சுறுத்தும் இன்னல்கள் வந்த போதிலும், அது அவர்களை ஒன்றாக வைத்துள்ளது.
எளிய முறையில் அணுகத் தக்கவண்ணம், எல்லாவற்றை யும் ஒரு சாஸ்திரம் சுலபமாகத் தெளிவாக்குகிறது. மற்ற பிரதீகங்களைவிட அது சுலபமானது, கையாள்வதற்கு எளியது. இதுதான் சாஸ்திரங்களின் பெரிய அனுகூலம். அதனை ஒரு பீடத்தின்மீது வையுங்கள். எல்லோரும் பார்ப்பார்கள். சிறந்த தாகையால் எல்லோரும் படிக்கவும் செய்வார்கள்.
என்னைப் பட்சபாதம் உடையவன் என்று நீங்கள் எண் ணினாலும் நான் ஒன்று சொல்லியே ஆக வேண்டும். என் கருத்துப்படி சாஸ்திரங்கள் நன்மையைவிடத் தீமையையே அதிகம் செய்திருக்கின்றன. தீய கோட்பாடுகளுக்கு அவை காரணமாக இருந்துள்ளன. பல்வேறு மதங்களும் பிரிவுகளும் சாஸ்திரங்களிலிருந்தே தோன்றின. கொடுமைகளுக்கும் மத வெறிக்கும் அவையே காரணமாக உள்ளன. இன்று எல்லா இடங்களிலும் பொய்யர்களை அவையே படைக்கின்றன. ஒவ் வொரு நாட்டிலும் உள்ள பொய்யர்களின் எண்ணிக்கையை யும் பார்த்தால் திகைப்பாக இருக்கிறது.
அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது பிரதிமைஉருவம். உலகம் முழுவதிலுமே உருவங்கள் ஏதாவதொரு விதத்தில் உபயோகப்படுத்தப்படவே செய்கின்றன. சிலர் மனித உருவையே பிரதிமையாகக் கொள்கிறார்கள். அதுதான் மிகவும் உயர்ந்த பிரதிமை. நான் ஒரு பிரதிமையை வழிபட விரும்பினால், ஒரு கட்டிடத்தையோ மிருகத்தையோ வேறு உருவத்தையோ வழிபடுவதைவிட, மனித உருவையே கொள்வேன். ஒரு பிரி வினர் ஒரு குறிப்பிட்ட விதமான உருவம்தான் சரியான பிரதிமை என்று கருதுகின்றனர். மற்ற பிரிவினர், அது சரியல்ல என்று நினைக்கின்றனர். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை கடவுள் புறா வடிவத்தில் வந்தால் அது சரி, ஆனால் இந்துக்கள் கூறுவதுபோல் அவர் பசு வடிவில் வந்தார் என்றால், அது பெரிய தவறு, அது மூடநம்பிக்கை. பிரதிமையை ஒரு பெட்டி வடிவில் செய்து, அதன்மீது இரண்டு தேவதூதர்களை அமரச் செய்து உள்ளே ஒரு புத்தகத்தையும் வைத்தால் அது யூதர் களுக்கு மிகவும் சரி. ஆனால் அதுவே ஓர் ஆண் அல்லது பெண்ணின் வடிவமாக இருந்தால், அது ஒரு கோரம். காபாவையும் அதிலுள்ள கறுப்புக் கல்லையும் மனத்தில் நினைத்து மேற்கு நோக்கித் தொழுவதுதான் சரியென முகமதி யர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் சர்ச்சைப்போல் ஒரு வடி வத்தை மனத்தில் நினைத்தால் அது உருவ வழிபாடு, கீழானது என்று நினைக்கிறார்கள். இதுதான் உருவ வழிபாட்டில் உள்ள குறைபாடு. இவை எல்லாம் இன்றியமையாத படிகள். ஆனால் சாஸ்திரங்கள் விஷயத்தில் அவற்றைக் கண்மூடித்தனமாக நம் பாமல் இருக்கின்ற அளவிற்கு நல்லது.
நமக்கு நாமே என்ன உணர்ந்துள்ளோம் என்பதுதான் கேள்வி. ஏசுநாதரோ, புத்தரோ, மோசஸோ என்ன செய்தார்கள் என்பது நமக்குப் பயனற்றது. நமக்கு நாமே அதைச் செய்யும் வரை அவர்கள் செய்த எதுவும் நமக்கு எந்தப் பயனும் தரப் போவதில்லை. ஓர் அறையில் சென்று கதவை மூடிக்கொண்டு, மோசஸ் என்ன சாப்பிட்டார் என்பதை நினைத்துக் கொண் டிருந்தால் அது உங்கள் பசியைப் போக்காது. அதுபோலவே அவர் என்ன நினைத்தார் என்பதும் உங்களைக் காப்பாற்றாது. இந்த விஷயங்களில் என் கருத்துக்கள் முற்றிலும் சுதந்திர மானவை. புராதன ஆச்சார்யர்களுடன் எனது கருத்து ஒத்துப் போகும்போது நான் செய்வது சரியென்று சிலவேளைகளில் எனக்குத் தோன்றுகிறது. சிலவேளைகளில் அவர்கள் என்னோடு ஒத்துப்போகும்போது, அவர்கள் செய்வது சரியென்று தோன்று கிறது. நமது சிந்தனை சுதந்திரமாக இருக்க வேண்டும் என் பதே எனது கருத்து.
இந்தப் புனித ஆச்சார்யர்களிடமிருந்து முற்றிலும் சுதந்திர மாக இருங்கள். அவர்களுக்கு எல்லா மரியாதையையும் அளியுங்கள். ஆனால் ஆன்மீகத்தைப் பொறுத்தவரை அதனை ஒரு தனிப்பட்ட தேடலாக எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்கள் ஒளியைக் கண்டதுபோல் நானும் என் ஒளியைக் காண வேண்டும். அவர்கள் ஒளியைக் கண்டது எக்காரணம் கொண்டும் நமக்குத் திருப்தி அளிக்காது. நீங்கள் பைபிளைப் பின்பற்றுவது என்பது அல்ல, நீங்களே பைபிளாக ஆக வேண் டும். அது ஒரு பாதை விளக்கு, ஒரு வழிகாட்டி. ஒரு மைல்கல் என்ற நிலையில் அதற்குரிய மரியாதையைச் செலுத்த வேண் டும், அவ்வளவுதான். ஒரு சாஸ்திரம் என்பதற்குரிய மதிப்பு அவ்வளவே.
ஆனால் இந்தப் பிரதிமைகளும் மற்றவையும் கண்டிப் பாகத் தேவைப்படுகின்றன. மனத்தை ஒருமைப்படுத்த வேண்டுமானாலும் சரி, ஓர் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டுமானாலும் சரி, மனத்தில் உருவங்களை அமைக்க வேண்டியிருக்கிறது. உருவங்களை அமைக்காமல் உங்களால் எண்ணத்தை வெளிப்படுத்த முடியாது. பிரதிமைகள் தேவைப் படாத இரண்டு வகையான மக்கள் உள்ளார்கள்: ஆன்மீகத் தைப்பற்றிக் கவலைப்படாத மனித மிருகங்கள் ஒருவகை, இந்த நிலைகளை எல்லாம் கடந்த மகான்கள் இன்னொரு வகை. இந்த இரு எல்லைகளுக்குள் உள்ள எல்லோருக்கும் உள் ளேயோ, வெளியேயோ ஏதாவது ஒருவகை லட்சியம், ஒரு பிரதிமை தேவைப்படவே செய்கிறது; அது இறந்துபோன ஒரு மனிதனாக இருக்கலாம், அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கலாம். இதுதான் மனித வழிபாடு. இது உடலைத்தான் மையமாகக் கொண்டுள்ளது. ஆனாலும் இது இயல்பான ஒன்று.  
சூட்சுமமான விஷயங்களையும் தூலமாக்க முயல்வது மனித இயல்பு. அப்படித் தூலமாக்கிக் காணாமல் நம்மால் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? நாம் எல்லோரும் தூல வடிவம் பெற்ற ஆன்மாக்கள். அதனால்தான் நாம் பூமியில் வந்திருக்கிறோம். தூலமாக்கும் தன்மைதான் நம்மை இங்கே கொண்டு வந்துள்ளது. அதாவது பிரதிமையை ஏற்கும் பண்பு தான் நம்மை உலகில் கொண்டு வந்துள்ளது; பிரதிமை வழி பாட்டின் உதவியுடனேயே நாம் உலகைக் கடந்து செல்வோம். ‘முள்ளை முள்ளால் எடுப்பது’ என்பார்களே, அது போன்றது இது. புலனுணர்வுப் பொருட்களை நாடிச் செல்வது, நம்மை மானிடன் ஆக்கியுள்ளது. இந்த நிலையில் மனித-உருவ வழி பாட்டை எவ்வளவுதான் எதிர்த்துப் பேசினாலும் அதை வழி படவே வேண்டியுள்ளது. ‘நீ உருவ வழிபாட்டில் ஈடுபடக் கூடாது’ என்று சொல்வது எளிது. ஆனால் இதைச் சொல்பவன் தான் அதில் மிகவும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளவன். ஏதோவோர் ஆணிடமோ பெண்ணிடமோ அவன் மிகுந்த பற்று வைத்துள் ளான். அவர்கள் இறந்தாலும் அவனது பற்று விடுவதில்லை . அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல விரும்புகிறான். அதுதான் உருவ வழிபாடு, அதுதான் விதை, உருவ வழிபாட்டிற்கு மூல காரணம். காரணம் இருப்பதால் அது ஏதாவது ஒருவகையில் வெளிப்படவே செய்யும்.
ஒரு சாதாரண ஆணிடமோ பெண்ணிடமோ பற்று வைப் பதைவிட ஏசு, புத்தர் இவர்களின் உருவத்தில் பற்று வைப்பது நல்லதுதானே. உருவத்தின் முன் முழங்கால் இடுவது மோச மானது என்று மேலைநாட்டில் கூறுகிறார்கள். அவர்களே ஒரு பெண்ணின் முன்னால் முழங்காலிட்டு, ‘நீதான் என் உயிர்; நீதான் என் வாழ்வின் ஒளி; நீதான் என் கண்மணி; நீதான் என் உயிர்’ என்று சொல்கிறார்கள். இது உருவ வழிபாட்டைவிட இழிவானது. ‘எனது உயிர், எனது வாழ்க்கை ‘-இந்த உணர்ச்சிப் பெருக்கெல்லாம் ஐந்து நாளில் மறைந்துவிடும். இது ஐம் புலன்களின் மீதுள்ள வெறும் பற்று; மலர்களைக் கொண்டு மறைக்கப்பட்ட தன்னலப் பற்று. கவிஞர்கள் அதற்கு அழகான பெயர் வழங்குகிறார்கள்; அதன்மீது பன்னீர் தெளிக்கிறார்கள். ஆனால் இது தன்னலப் பற்றே தவிர வேறல்ல. புத்தர், மகாவீரர் இவர்களுடைய திருவுருவங்களுக்கு முன்னால் முழங்காலிட்டு, ‘நீ என் உயிர்’ என்று கூறுவது இதைவிடச் சிறந்தது அல்லவா? இப்படி நூறுமுறை செய்வதைத்தான் நான் விரும்புவேன்.
இன்னொரு வகையான பிரதீக வழிபாடு இருக்கிறது. இது மேலைநாடுகளில் ஏற்கப்படுவதில்லை. ஆனால் எங்கள் சாஸ்திரங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது: மனத்தையே கடவுளாக வழிபடுவதுதான் அது. இறைவனாக வழிபடப்படு கின்ற ஒவ்வொன்றும் ஒரு படி. அவை ஒவ்வொன்றின் மூலமும் நாம் அவரை நெருங்குகிறோம். அருந்ததி ஒரு சிறிய நட்சத்திரம். அதனைக் காட்ட வேண்டுமானால், முதலில் அதன் அருகி லுள்ள பெரிய நட்சத்திரம் ஒன்றைக் காட்டி, கவனத்தை ஈர்க்க வேண்டும். பிறகு இன்னும் சற்று சிறிய ஒன்றைக் காட்ட வேண்டும். இவ்வாறு படிப்படியாகச் சென்று கடைசியில் அருந்ததி நட்சத்திரத்தை அணுகுவோம். இப்படியே பலவிதப் பிரதீகங்களும் பிரதிமைகளும் நம்மை இறைவனை நோக்கி அழைத்துச் செல்கின்றன. 
 புத்தரையும் ஏசுவையும் வழிபடுவது பிரதீக வழிபாடுதான். அது இறைவழிபாட்டிற்கு அருகிலுள்ள நிலை. ஒரு புத்தரையோ ஒரு ஏசுவையோ வழிபடுவது மனிதனைக் காப்பாற்றாது. அவர் களைத் தாண்டி, ஏசுவாகவும் புத்தராகவும் அவதரித்த கடவுளை அவன் அடைய வேண்டும். ஏனெனில் கடவுள் மட்டுமே நமக்கு முக்தி தர முடியும். ஏசுநாதரும் புத்தரும் கடவுளாகவே கருதப்பட வேண்டும், அவர்கள் பிரதீகங்கள் அல்ல, கடவுளே என்று தத்துவ ஞானிகள் சிலர் கூறுகின்றனர். இந்தப் பிரதீகங் களை, அதாவது ஆண்டவனை அடையும் பல படிகளை ஏற்றுக்கொள்வதில், வழிபடுவதில் எவ்விதத் தீங்கும் இல்லை. ஆனால் இந்தப் பிரதீகங்களை வழிபடும்போது இறைவனை வழிபடுவதாக நினைத்தால் அது தவறு. ஏசுவை வழிபடுவதால் உய்ய முடியும் என்று ஒருவன் நினைத்தால், அது முற்றி லும் தவறு. ஒருவன் ஓர் உருவத்தையோ, ஆவிகளையோ, அல்லது இறந்துபோன முன்னோர்களையோ வழிபட்டால் அவன் காப்பாற்றப்படுவான் என்று எண்ணினால், அதுவும் பிழையே. ஆனால் கடவுள் இதில் உள்ளார் என்ற கருத்துடன் எதையும் வழிபடலாம். உருவத்தை மறந்து அதில் கடவுளைக் காணுங்கள்.
கடவுள்மீது எந்த உருவத்தையும் புகுத்தக் கூடாது; ஆனால் நமக்குப் பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும் உருவமாக அவரை எல்லைப்படுத்தாதீர்கள், நீங்கள் வழிபடுகின்ற அனைத்து உருவங்களையும் அவரால் நிறையுங்கள். அப்போது ஒரு பூனையில்கூட இறைவனை வழிபட முடியும். பூனையை மறந்து விட்டு, அதில் கடவுளைப் பிரதிஷ்டை செய்யுங்கள். நீங்கள் செய்வது சரியாகும். ஏனெனில் அவரிடமிருந்துதான் எல்லாம் வருகின்றன. அவர் எல்லாவற்றிலும் உள்ளார். ஓர் ஓவியத்தைக் கடவுளாக வழிபடலாம், ஆனால் கடவுளை ஓவியமாக வழி படக் கூடாது. கடவுள் ஓவியத்தில் உள்ளார் என்பது சரி, ஆனால் ஓவியமே கடவுள் என்பது தவறு. கடவுள் சிலையில் இருக்கிறார் என்பது மிகவும் சரி. அதில் ஆபத்தில்லை . இதுதான் உண்மையான வழிபாடு. ஆனால் சிலை கடவுள் வெறும் பிரதீகம்தான்.
பக்தியில், அடுத்து நாம் பார்க்கப்போவது நாம சக்தி அதாவது திருப்பெயரின் ஆற்றல். பிரபஞ்சமே நாமரூபத்தால் தான் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் காண்பதெல்லாம் நாமம், ரூபம்-இவற்றின் சேர்க்கையாக இருக்கலாம்; அல்லது வெறும் நாமமாக மட்டும் இருந்து ரூபம் நமது மனத்தின் கற்பனையாக இருக்கலாம். எனவே நாமரூபமாக இல்லாத எதுவுமே உலகில் இல்லை. ஆண்டவனுக்கு உருவமோ வடிவமோ இல்லை என்று எல்லோரும் நம்புகிறோம். ஆனால் அவரைப்பற்றிச் ‘சிந்திக்கத்’ தொடங்கிய உடனே அவருக்கு நாமம், ரூபம் இரண்டையும் அளித்து விடுகிறோம். ப சித்தம் ஓர் அமைதியான குளம் போன்றது. எண்ணங்கள் சித்தத்தின்மீது எழும் அலைகளைப் போன்றவை. இந்த அலைகள் எழும் இயல்பான முறையே நாமரூபம். நாமமோ ரூபமோ இல்லாமல் ஓர் அலையும் எழ முடியாது. என்றும் ஒரே சீராயுள்ள (Uniform) நிலை சிந்தனைக்கு அப்பாற்பட்டது. அது எண்ணமாக, ஜடமாக ஆகும்போது நாமமும் ரூபமும் பெற்றாக வேண்டும். அவற்றை நாம் பிரிக்க இயலாது.  
இது கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை வாக்கிலிருந்து (Word) படைத்தார் என்று பல சாஸ்திரங்கள் கூறுகின்றன. சம்ஸ் கிருதத்தில் ‘சப்த பிரம்மம்’ என்பதுதான் கிறிஸ்தவர்கள் கூறு கின்ற ‘வாக்கு’. இது பண்டைய இந்தியக் கொள்கை. இது இந்தியப் பிரச்சாரகர்களால் அலெக்சாண்டிரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு நிலைபெற்றுவிட்டது. அவ் வாறு வாக்கு, அவதாரம் போன்ற கருத்துக்கள் அங்கே நிலைத்து விட்டன. 
 வாக்கிலிருந்தே இறைவன் எல்லாவற்றையும் படைத்தார் என்னும் கருத்திற்கு மிகுந்த ஆழமான பொருளுண்டு. இறைவன் உருவம் அற்றவர், எனவே இதுதான் படைப்பையோ உருவத் தையோ விளக்குவதற்கான மிகச் சிறந்த முறையாகும். படைப்பு என்பதற்கான சம்ஸ்கிருதச் சொல் சிருஷ்டி அதாவது வெளிப் படுத்துதல். ‘சூன்யத்திலிருந்து இறைவன் எல்லாவற்றையும் படைத்தார்’ என்று சொல்லும்போது, பெரிதாக என்ன புரிந்து விடுகிறது? பிரபஞ்சம் இறைவனிலிருந்து வெளிப்படுத்தப் படுகிறது, அவரே பிரபஞ்சமாக மாறுகிறார், மீண்டும் அனைத் தும் அவரிடமே போய்ச் சேர்கின்றன. மீண்டும் அவை படைக்கப்படுகின்றன. அவரிடமே திரும்பிச் சேர்கின்றன. காலங்காலமாக இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். 
மனத்தில் ஏதாவது தோன்ற வேண்டுமானால் நாம ரூபம் இல்லாமல் அது முடியாது என்று கண்டோம். உங்கள் மனம் மிகவும் அமைதியாக, எண்ணங்களே அற்றதாக இருப்ப தாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஓர் எண்ணம் எழத் தொடங்கினால் அது நாமத்தையும் ரூபத்தையும் எடுத்துக் கொள்ளத்தானே செய்யும்? ஒவ்வோர் எண்ணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நாமமும் ரூபமும் உள்ளது. அதேபோன்று படைப்பு, வெளிப்பாடு என்பதே எப்போதும் நாமத்தோடும் ரூபத்தோடும் என்றென்றைக்குமாக இணைந்துள்ளன. இவ் வாறு மனிதனால் கொள்ள முடிந்த ஒவ்வொரு கருத்தும் ஒரு குறிப்பிட்ட சொல்லை அதன் மற்றொரு பாகமாகக் கொண்ட தாக இருப்பதைக் காண்கிறோம். உங்கள் எண்ணங்களிலிருந்து உங்கள் உடல் எப்படித் தோன்றியதோ, உங்கள் கருத்து தூல வடிவம் பெற்று, வெளிப்படுத்தப்பட்டு எவ்வாறு உடலாகி யுள்ளதோ அவ்வாறே இந்தப் பிரபஞ்சமும் ஒரு மனத்தின் வெளிப்பாடு என்று கொள்வது இயல்பானது. மேலும் பிர பஞ்சம் முழுவதும் ஒரே அமைப்பைக் கொண்டிருக்குமானால் ஓர் அணு எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டால், பிரபஞ்சம் முழுவதும் எப்படி அமைக்கப்பட் டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நம்மில் உடல் என்பது தூலப் பகுதி, சிந்தனை என்பது சூட்சுமப் பகுதி. இரண்டும் ஒருபோதும் பிரியாதவை. உடல் இல்லாமல் போகும் போது சிந்தனையும் மறைந்துவிடும். ஒவ்வொரு நாளும் நீங்கள் இதை உணர்கிறீர்கள். மூளையின் அமைதி குலையும்போது சிந்தனையும் கலங்குகிறது. ஏனென்றால் இரண்டும் ஒன்றேஒன்று தூலம், மற்றது சூட்சுமம். ஜடம், மனம் என்று இரண்டு இல்லை . 
உயர்ந்து ஓங்கி நிற்கின்ற வாயுத்தூண் ஒன்றை எடுத்துக் கொள்வோம். அதில் அடர்த்தி செறிந்த பாகமும் அடர்த்தி குறைந்த பாகமும் இருக்கிறது; உயரச் செல்லச்செல்ல அடர்த்தி குறைகிறது. அதுபோல்தான் நமது உடலும் தூலத் திலிருந்து நுட்பத்திற்குச் செல்கின்ற அடுக்குகளாக உள்ளது. நமது உடலை நகங்களுக்கு ஒப்பிடலாம். நகத்தை வெட்ட வெட்ட அது வளர்கிறது. அவ்வண்ணமே நம் நுண்ணிய எண்ணங்களிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நுட்பமாக இருக்கும் அளவிற்கு ஒரு பொருள் நிலைத்து நிற்கிறது; தூலமாக இருக்கும் அளவிற்கு அது நிலையற்றதாக இருக்கிறது. ஆகவே ‘எண்ணம்’ என்று வெளிப்படும் ஒரு சக்தியின் தூலப் பகுதி ரூபம்; சூட்சுமப் பகுதி நாமம். ஆனால் எண்ணம், ரூபம், நாமம்-இந்த மூன்றும் ஒன்றே; ஒன்றே மூன்றும். ஒரே பொருளின் நுட்பமான, அடர்த்தி குறைந்த மற்றும் அடர்த்தி மிக்க மூன்று நிலைகளே அவை. எங்கே ஒன்று இருக்கிறதோ மற்றவையும் அங்கே இருக்கும். எங்கே நாமம் உள்ளதோ, அங்கே ரூபமும் எண்ண மும் இருக்கவே செய்யும்.
எனவே உடலின் அமைப்புப்படியே பிரபஞ்சமும் அமைக்கப்பட்டிருக்குமானால் அது ரூபம், நாமம், எண்ணம் ஆகிய மூன்றையும் பெற்றிருக்க வேண்டும். ‘எண்ணம்’ பிரபஞ்சத்தின் மிக நுட்பமான பாகம்; உண்மையான தூண்டுசக்தி-அதுதான் கடவுள் என்று வழங்கப்படுகிறது. உடலின் பின்னால் இருக்கும் ‘எண்ணம்’தான் ஆன்மா. பிரபஞ்சத்தின் பின்னால் உள்ள ‘எண்ணம்’ இறைவன். அதைத் தொடர்ந்து நாமம், இறுதியாக நாம் கண்டு உணரக்கூடிய ரூபம். 
உங்களுள் ஒருவரை எடுத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு மனிதர், பேரண்டத்தில் ஒரு சிற்றண்டம். உங்கள் உடலுக்கு குறிப்பிட்ட ஓர் உருவம் உள்ளது; திரு இன்னார், திருமதி இன்னார் என்ற நாமமும் உள்ளது. அதற்குப் பின்னால் ஓர் ‘எண்ணம்’ உள்ளது. அதுபோலவே எல்லையற்றுப் பெருகிய வகையில் இந்தப் பிரபஞ்சமும் அமைந்துள்ளது. அதற்குப் பின்னால் ஒரு நாமம் உள்ளது. அதுதான் ‘வாக்கு’. அதிலிருந்து புற உலகங்கள் எல்லாம் தோன்றியுள்ளன. அதற்குப் பின்னால் பிரபஞ்ச எண்ணமாகிய கடவுள் இருக்கிறார். அவரையே மஹத் என்று சாங்கியர்கள் கூறுகிறார்கள். அதுதான் பிரபஞ்ச உணர்வு. அந்தப் பெயர் என்ன? ஏதாவதொரு பெயர் இருக்க வேண்டும். பிரபஞ்சம் ஒரே இயல்பானது. எந்தப் பொருளினால் இந்தப் பிரபஞ்சம் ஆக்கப்பட்டதோ, அந்தப் பொருளினா லேயே ஒவ்வோர் அணுவும் ஆக்கப்பட்டிருக்கிறதென்று சந்தேகத்திற்கு இடமின்றி தற்கால விஞ்ஞானம் காட்டியுள்ளது. ஒரு களிமண் கட்டியைப்பற்றித் தெரிந்தால், பிரபஞ்சமே தெரிந்ததாகும். இந்த அட்டவணை, அதன் எல்லா பரிமாணங் களுடனும் தெளிவாக உங்களுக்குத் தெரியுமானால், பிரபஞ் சமே உங்களுக்குத் தெரியும். பிரபஞ்சத்தின் மிகச் சிறப்பான பிரதிநிதியாக மனிதன் இருக்கிறான். அவன் சிற்றண்டம். அவன் தன்னளவில் ஒரு சிறிய பிரபஞ்சம். அவனில் ரூபமும், அதற்குப் பின்னால் நாமமும், அதற்குப் பின்னால் சிந்திக்கும் பொரு ளான எண்ணமும் உள்ளது.
இதே திட்டப்படிதான் பிரபஞ்சமும் அமைய வேண்டும். நாமம் என்று சொல்கிறோமே, அது எது என்பதுதான் கேள்வி. இந்துக்களின் கருத்துப்படி அது ஓம். பண்டைய எகிப்தியர் களும் அதை நம்பினார்கள். ‘எதைத் தேடி ஒருவன் பிரம்மச்சரிய நெறியைக் கடைப்பிடிக்கிறானோ அதைச் சுருக்கமாகக் கூறுகிறேன். அது தான் ஓம்.’ ‘ஓம். அதுதான் பிரம்மம்; அது  புராதனமானது. இந்த ஓம் என்பதன் ரகசியத்தை அறிபவன் விரும்புகின்ற எல்லாவற்றையும் பெறுகிறான்.’
 பிரபஞ்சம் முழுவதற்கும் கடவுளுக்கும் நாமமாக ஓம் இருக்கிறது. புற உலகத்திற்கும் கடவுளுக்கும் இடையில் இது உள்ளது, இரண்டையும் குறிக்கிறது. ஆனால் நாம் பிர பஞ்சத்தைத் தொடு உணர்ச்சி, சுவை, நிறம் என்று ஐம்புலன் களுக்கு ஏற்றவாறு தனித்தனியாகவோ வேறு எத்தனையோ வழிகளிலோ எடுத்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு வழியிலும், இந்தப் பிரபஞ்சத்தைப் பல கோணங்களிலிருந்து நோக்கிப் பல கோடி பிரபஞ்சங்களை எழுப்பிவிடலாம். இந்தப் பிர பஞ்சங்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் பூரணமானவை. ஒவ் வொன்றிற்கும் ஒரு நாமமும் ஒரு ரூபமும் ஓர் எண்ணமும் உண்டு. இந்த எண்ணங்களே ‘பிரதீகங்கள்’, ஒவ்வொன்றிற் கும் ஒரு பெயருண்டு. புனிதமான பல நாமங்கள் பக்தியோகத் தில் வழங்கப்படுகின்றன. இந்தத் திருநாமங்களுக்கு ஏறக்குறைய எல்லையற்ற சக்தியுண்டு. இந்தத் திருநாமங்களை ஜபிப்ப தால் நாம் விரும்புகின்ற எதை வேண்டுமானாலும் பெறலாம்; பூரணத்தையும் அடையலாம்.
ஆனால் இரண்டு விஷயங்கள் இன்றியமையாதவை. ‘குருவும் வியக்கத்தக்கவராக இருக்க வேண்டும் சீடனும் அப்படியே இருக்க வேண்டும்’ என்று கடோபநிடதம் (1. 2.7) கூறுகிறது. தகுந்த பரம்பரை வழியாக வந்த நாமத்தைப் பெற்ற ஒருவரிடமிருந்து நாம் அதைப் பெற வேண்டும். மிகப் பண்டைக் காலத்திலிருந்தே குரு-சீடன் என்ற முறையில் இந்த ஆன்மீகப் பெருவெள்ளம் பேராற்றலுடன் பாய்ந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய நாமம் யாரிடமிருந்து வருகிறதோ அவரே குரு. யார் இதைப் பெறுகிறாரோ அவர் சீடர். அந்தத் திருநாமத்தை உரிய முறையில் பெற்று ஜபித்து வந்தால் பக்தியோகத்தில் மிகுந்த முன்னேற்றம் அடையலாம். அந்தத் திருநாமத்தை ஜபிப்பதால் பக்தியின் மிக உயர்ந்த நிலையைக்கூட அடைய முடியும். ‘உனக்குப் பல திருநாமங்கள் உண்டு. அந்தத் திருநாமங்களை நீயே அறிந்திருக்கிறாய். எல்லா திருநாமங்களும் உனதே. ஒவ்வொன்றிலும் உனது அளவற்ற சக்தி நிறைந்திருக்கிறது. இதனை ஜபிப்பதற்கு இடத்தையோ நேரத்தையோ பொருட்படுத்த வேண்டுவதில்லை. ஏனெனில் எல்லா நேரமும் எல்லா இடமும் புனிதமானவையே. எம்பெரு மானே, நீ அடைவதற்கு எளியவன். அருளே வடிவானவன். எனினும் உன்னிடம் சிறிதேனும் அன்பு வைக்கும் பாக்கியம் பெறாத துரதிர்ஷ்ட சாலியாக இருக்கிறேன் நான்.’

பக்தியோகம் 4

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
அ. ஆரம்பநிலைப் பாடங்கள
4. சின்னங்களின் தேவை

பக்தி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று வைதீக பக்தி; அதாவது விதிமுறைக்கு உட்பட்டது, புறச்சடங்கு களுடன் கூடியது. மற்றொன்று முக்கிய பக்தி; அதாவது மிகச் சிறந்தது. பக்தி என்ற சொல், மிகவும் கீழ்நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலை வரையிலுமுள்ள எல்லா வழிபாட்டு நிலை களையும் தழுவி நிற்கிறது. உலகத்தில் எந்த நாட்டைச் சேர்ந்த தானாலும் சரி, எந்த மதத்தைச் சேர்ந்ததானாலும் சரி, எல்லா வழிபாடுகளும் அன்பினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பான்மையும் வெறும் சடங்குகள் மட்டுமே. இனி, சடங்குகள் அல்லாதவையும் பல உள்ளன; இவற்றை அன்பு நெறி என்று சொல்ல முடியாது. இவை கீழ்நிலையிலேயே உள்ளன. எனினும் இவை தேவையானவை. ஆன்மாவை முன் னேறச் செய்ய பக்தியின் இந்தப் புறப் பகுதி மிகவும் இன்றியமை யாதது. மிக உயர்ந்த நிலையை ஒரே தாவலில் அடைய முடியும் என்று எண்ணுபவன் பெரிய தவறு செய்கிறான். தான் ஒரே நாளில் முதிர்ந்து கிழவனாகப் போவதாக ஒரு குழந்தை நினைத் தால், அது தவறு.

ஆன்மீகம் என்பது நூல்களிலோ அறிவுத் திறனிலோ, வாதங்களிலோ இல்லை என்பதை மறக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாதங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும், நம்பிக்கைகளும், சாஸ்திரங்களும், சடங்குகளும் எல்லாம் ஆன்மீக வாழ்வில் உதவி செய்கின்றன, அவ்வளவுதான். ஆனால் ஆன்மீகம் என்பது அனுபூதி. கடவுள் ஒருவர் இருப்பதாக நாம் எல்லோரும் சொல்கிறோம். நீங்கள் அவரை நேரில் கண்டிருக் கிறீர்களா? இதுதான் கேள்வி. ‘கடவுள் விண்ணில் இருக்கிறார்’ என்று ஒருவன் சொல்கிறான். அவனிடம், ‘நீ அவரைக் கண்டி ருக்கிறாயா?’ என்று கேளுங்கள். அவன் ‘கண்டிருக்கிறேன்’ என்று சொன்னால் அவனைக் கேலி செய்து அவனை ஒரு பைத்தியம் என்று கூறுகிறீர்கள். பெரும்பாலோரைப் பொறுத்த வரை மதம் என்பது ஒருவகையான அறிவுக் கோட்பாடு, ஒரு கொள்கை, அவ்வளவுதான். இத்தகைய மதத்தை நான் ஒரு போதும் பிரச்சாரம் செய்ததில்லை. அதை மதம் என்று நான் கூறவும் மாட்டேன். மதம் என்பது நமது அறிவுக்கு ஏற்ற சில விஷயங்களை ஏற்றுக்கொள்வதிலோ ஏற்காத விஷயங்களை விட்டுவிடுவதிலோ இல்லை. இத்தகைய மதத்தைப் பின்பற்று வதைவிட நாத்திகனாக இருப்பதே நல்லது.

ஆன்மா ஒன்று உண்டு என்று சொல்கிறீர்கள். அந்த ஆன்மாவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நமக்கெல்லாம் ஆன்மா இருந்தும் நாம் ஏன் அதைப் பார்த்ததில்லை? இந்தக் கேள்விக்கு விடை அளித்தாக வேண்டும்; ஆன்மாவைக் காண வழி கண்டாக வேண்டும். இல்லாவிட்டால் மதம் அது இது என்றெல்லாம் பேசுவது பயனற்றது. ஒரு மதம் உண்மையென் றால், அது ஆன்மாவையும் ஆண்டவனையும் உண்மையையும் நம் உள்ளத்தில் காட்ட வேண்டும். இந்தக் கொள்கை, அந்தக் கொள்கை என்று நானும் நீங்களும் ஊழிக்காலம்வரையில் வாதாடிக்கொண்டே இருக்கலாம். ஒரு முடிவிற்கும் வரவே மாட்டோம். காலங்காலமாக மக்கள் வாதிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன பயன்? அறிவு அங்கே போகவே முடி யாது. அறிவின் எல்லைக்கு அப்பால் நாம் போக வேண்டும். மதத்திற்கான நிரூபணம் நேரடி அனுபவம். இதோ இந்தச் சுவர் இருப்பதற்கான நிரூபணம் அதை நாம் நேரடியாகக் காண்பது தான். சுவர் இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றி காலங் காலமாக வாதம் புரிந்தாலும், ஒரு முடிவிற்கும் வர முடியாது; நீங்கள் நேரடியாகப் பார்த்தால் போதும், எல்லா வாதங்களும் அடங்கிவிடும். உலகிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து, இந்தச் சுவர் இல்லையென்று உங்களிடம் சொன்னாலும் அதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனெனில் உலகிலுள்ள கொள்கைகள் கோட்பாடுகள் அனைத்தையும்விட மேலான சாட்சி உங்கள் கண்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஆன்மீக வாழ்வில் ஈடுபட விரும்பினால் முதலில் புத்தகங் களையெல்லாம் தூக்கி எறிந்துவிட வேண்டும். புத்தகங்களைக் குறைவாகப் படிக்கின்ற அளவிற்கு உங்களுக்கு நல்லது. ஒரு நேரத்தில் ஒன்றைச் செய்யுங்கள். மூளையைக் குழப்பிக் கொள் வதே தற்கால மேலை நாட்டினரின் போக்காக உள்ளது. ஜீரணிக்க முடியாத எத்தனையோ கருத்துக்கள் அவர்களின் மூளையில் முட்டிமோதிக் கொண்டு, தெளிவான ஒரு நிலைக்கு வருகின்ற வாய்ப்பைப் பெறாமல் குழம்பிக் கிடக்கின்றன. பல நேரங்களில் அது ஒரு நோயாகவே ஆகிவிடுகிறது. இது ஒருபோதும் மதம் ஆகாது.

இன்னும் சிலருக்கு நரம்புகளில் ஒரு கிளர்ச்சி வேண் டியிருக்கிறது. அவர்களுக்குப் பேய்க் கதைகளைச் சொல் லுங்கள்; வடதுருவத்திலிருந்து அல்லது எங்கோ தொலை தூரத்திலிருந்து சிறகடித்துப் பறந்து வருபவர்களைப் பற்றியோ அல்லது வேறு வினோத உருவங்களில் வருபவர்களைப் பற்றியோ சொல்லுங்கள்; அந்த உருவங்கள் மறைந்திருந்து உங்களைக் கவனிக்கின்றனர் என்றெல்லாம் கூறி அவர்களை உடல் புல்லரிக்கச் செய்யுங்கள், அவர்கள் திருப்தியுடன் வீடு திரும்புவார்கள். ஆனால் இருபத்துநான்கு மணி நேரத்தில் அவர்களுக்குப் புதிய கிளர்ச்சி வேண்டும், அதற்குத் தயாராகி விடுவார்கள். இதைத்தான் சிலர் மதம் என்று கூறுகின்றனர். இது பைத்தியக்கார மருத்துவமனைக்குப் போவதற்கான வழி யாக இருக்கலாமே தவிர ஒருபோதும் மதம் ஆகாது. இந்தப் பாதை வழியாக ஒரு நூறாண்டு காலம் நீங்கள் போவீர் களானால் இந்த நாட்டையே ஒரு பைத்தியக்கார விடுதியாக ஆக்கிவிடுவீர்கள்.

பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது. இத் தகைய விறுவிறுப்பூட்டும் விஷயங்கள் எல்லாம் மனிதனைப் பலவீனன் ஆக்குகின்றன. கால் விரலால்கூட அவற்றைத் தீண்டாதீர்கள். அவை மக்களைப் பலவீனப்படுத்துகின்றன, மூளையைக் குழப்புகின்றன, மனத்தை வலிமையிழக்கச் செய் கின்றன, வாழ்க்கையை இழிநிலைக்குக் கொண்டு செல்கின்றன. தவிர்க்க முடியாத ஒரு பெரும் குழப்பம்தான் அவற்றின் விளை வாக இருக்கும். மதம் என்பது சொற்பொழிவிலோ, நூல் களிலோ, கொள்கைகளிலோ இல்லை, அனுபூதியில்தான் உள்ளது என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். வெறும் அறிவைப் பெறுவது அல்ல மதம், அனுபூதியே மதம். திருடக் கூடாது இது எல்லோருக்கும் தெரியும். அதனால் என்ன? திருடாதவனே அதன் உண்மையை உணர்வான். ‘பிறருக்குத் துன்பம் தரக் கூடாது’-அதனால் என்ன வந்துவிடும்? துன்பம் செய்யாதவனே இதன் உண்மையை அறிவான், அந்த அஸ்தி வாரத்தின்மீது அவர்களே தங்கள் பண்புநலனை நிறுவியிருக் கிறார்கள்.

ஆகவே நாம் ஆன்மீக அனுபூதி பெற வேண்டும். நீண்ட காலம் பயில வேண்டிய சாதனை வாழ்க்கை முறை அது. மிக உயர்ந்ததும் அற்புதமானதுமான ஒன்றைப்பற்றிக் கேள்விப் பட்டால் உடனே அதை அடைந்துவிட நினைக்கிறான் மனிதன். அதை அடைய எவ்வளவு பாடுபட வேண்டும் என்பதை அவன் ஒரு கணம்கூட நினைத்துப் பார்ப்பதில்லை. ஒரே தாவலில் அந்த இடத்தை அடைந்துவிட வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகின்றனர். அது மிக உயர்ந்ததா, அது நமக்கு வேண்டும். அதை அடைய நமக்குச் சக்தி இருக்கிறதா என்பதைச் சிறிதும் சிந்திப்பதில்லை. விளைவு? நாம் ஆக்க பூர்வமாக எதுவுமே செய்வதில்லை. யாரையும் இடுக்கியால் பிடித்து அப்படியே ஆன்மீகத்தினுள் நுழைத்துவிட முடி யாது; படிப்படியாக, மெள்ளமெள்ளத்தான் போக வேண்டும். எனவே மதத்தின் முதற்படி. வைதீ பக்தி அதாவது தாழ்ந்த நிலை வழிபாடு.

இந்தத் தாழ்ந்தநிலை வழிபாடுகள் எவை? அவை எவை என்பதைக் கூறுவதற்கு முன் ஒரு கேள்வி. கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் எங்கும் நிறைந்துள்ளார் என்று நீங்கள் எல்லோரும் சொல்கிறீர்களே, எங்கும் நிறைந்திருக்கிறார் என் பதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? சற்று கண்களை மூடிக் கொண்டு சிந்தியுங்கள். அது என்ன என்பதை எனக்குக் கூறுங்கள். உங்கள் சிந்தனையில் விரிவதுதான் என்ன? ஏற் கனவே நீங்கள் கண்டுள்ள பரந்த கடல் அல்லது விரிந்த நீல வானம், அல்லது அகன்ற புல்வெளி அல்லது இவைபோன்ற வேறு ஏதோ ஒன்று, அப்படித்தானே? இதுதான் ‘எங்கும் நிறைந்தவர்’ என்பதற்கு நீங்கள் சொல்லும் பொருளானால் அது பயனற்றது. நீங்கள் அதன் பொருளை உணரவே இல்லை. இறைவனின் மற்ற குணங்கள் பற்றியும் அப்படியே. அவர் எல் லாம் வல்லவர், எல்லாம் அறிந்தவர் என்று கூறும்போது பொதுவாக நாம் என்ன புரிந்துகொள்கிறோம்? எதுவும் இல்லை. மதம் என்பது அனுபூதி. இறைவனைப்பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் அனுபூதியில் அறியும்போதுதான் நீங்கள் இறைவனை வழிபடுபவர்கள் என்று கூறுவேன். அதை அடை யாதவரை, நீங்கள் அந்தச் சொற்களிலுள்ள எழுத்துக்களை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்தவர்கள், அவ்வளவுதான்.

இந்த அனுபூதி நிலையை அடைய, நாம் கண்ணுக்குப் புலனாகின்றவை வாயிலாகச் செல்ல வேண்டும். குழந்தைகள் எண்ணிக்கையைக் கற்கும்போது முதலில் புறப் பொருட்களின் மூலம்தான் ஆரம்பிக்கிறது, பிறகு மனத்தாலேயே செய்யக் கற்றுக் கொள்கிறது. ஒரு குழந்தையிடம் ஐந்து x இரண்டு = பத்து என்று கூறினால் அதற்கு எதுவும் புரியாது. ஆனால் பத்துப் பொருட்களைக் கொடுத்து, அது எப்படி என்பதைக் காட்டி விளக்கினால் புரிந்துகொள்ளும். இது நிதானமான, நீண்ட பாதை. இங்கே நாம் எல்லோரும் குழந்தைகளே. நாம் வயது முதிர்ந்தவர்களாக இருக்கலாம், உலகிலுள்ள எல்லா நூல்களையும் படித்திருக்கலாம்; ஆனால் ஆன்மீகத்துறையில் நாம் எல்லோரும் குழந்தைகளே. அனுபூதியின் இந்த ஆற்றல் தான் மதத்தைப் படைக்கிறது. கொள்கைகள், தத்துவங்கள், அறக்கோட்பாடுகள் எல்லாவற்றையும் எவ்வளவுதான் உங்கள் மூளைக்குள் திணித்திருந்தாலும் அவற்றால் பெரி தாகப் பலன் ஒன்றும் இல்லை . நீங்கள் யார், அனுபூதியில் என்ன உணர்ந்திருக்கிறீர்கள்?–இவைதான் பயனுள்ளவை, சாரமானவை. ஆனால் நாம் கொள்கைகளையும் கோட்பாடு களையும் அறிந்திருக்கிறோம், அனுபூதியில் எதையும் உணர வில்லை .

தூலமானவற்றில், அதாவது உருவங்கள், சொற்கள், பிரார்த்தனைகள், சடங்குகள் ஆகியவற்றில் தொடங்க வேண்டும். இவையும் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஒரே வழி எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு உருவங்களால் உதவி கிடைக்கும், சிலருக்குக் கிடைக் காது. ஒருசிலருக்குப் புற உருவம் தேவைப்படுகிறது, சிலருக்கு அது மனத்தளவில் போதுமானதாக இருக்கிறது. மனத்தில் வழிபடுபவன், ‘நான் மேலானவன். ஏனெனில் அகத்தில் வழி படுவதுதான் சரியான முறை. அது புறத்தில் இருந்தால் உருவ வழிபாடு ஆகிவிடும். இதை நான் எதிர்ப்பேன்’ என்கிறான். உருவம் சர்ச் வடிவிலோ கோயில் வடிவிலோ இருந்தால் அது புனிதமானது. அதுவே மனித உருவமாக இருந்தால் கோர மானது என்று நினைக்கிறான் அவன்.

இவ்வாறு, மனம் புற வழிபாட்டுப் பயிற்சி பெற பல்வேறு வழிகள் உள்ளன. இந்தப் புறப் பயிற்சிகளுக்குப் பிறகு படிப் படியாக மனம் தத்துவ விளக்கத்திற்கும் உண்மை அனுபூதிக் கும் வருகிறது. ஆனால் எல்லோருக்கும் ஒரே வழி பொருந் தாது. உங்களுக்கு உரியது ஒன்று, இன்னொருவனுக்கு மற் றொன்று இப்படியாக அமைகிறது. எல்லாமே ஒரே முடிவிற்கு அழைத்துச் சென்றாலும் எல்லோருக்கும் ஒரே உருவம் பயன் தராது. இது நாம் செய்யும் இன்னொரு தவறு. எனது லட்சியம் உங்களுக்குத் தகுந்ததாக இல்லை. அப்படியிருக்க அதை நான் ஏன் உங்கள்மீது திணிக்க வேண்டும்? எனது கோயில் அமைப்போ, தோத்திரங்கள் படிக்கும் முறையோ உங்களுக்குப் பொருந்தாதனவாக இருக்கும்போது நான் ஏன் அதை உங்கள் தலையில் கட்ட வேண்டும்? சற்றே உங்களைச் சுற்றிப் பாருங்கள்! தனது வழிபாடுதான் சரியானது, மற்றவர்களுடையது மிருகத் தனமானது, இந்த உலகில் தான் ஒருவனே இறைவனால் ‘தேர்ந்தெடுக்கப்பட்டவன்’ என்றுதான் ஒவ்வொரு முட்டாளும் கூறுகிறான். ஆனால் எல்லா வழிகளுமே நல்லவை, நமக்கு உதவுபவை.

மனித இயல்பில் பல வகை இருப்பதுபோல் மதத்திலும் பல்வேறு வழிகள் இருப்பது அவசியம். அதிகமான பாதைகள் இருக்கும் அளவிற்கு உலகத்திற்கு நல்லது. மதத்தில் இருபது வழிமுறைகள் இருந்தால் மிகவும் நல்லது, நானூறு இருந் தால் இன்னும் நல்லது. தேர்ந்தெடுப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் அல்லவா? எனவே மதங்களும் மதக் கருத்துக்களும் அதிகரிப்பதில், ஏராளமாக இருப்பதில் நாம் மகிழ்ச்சியே அடைய வேண்டும். இதனால் ஒவ்வொருவரும் மதத்தைப் பின் பற்ற முடியும்; மனித குலம் அதிக நன்மை பெறும். ஆகவே மதங்கள் பெருகிக்கொண்டேபோய், ஒவ்வொருவருக்கும் மற்ற வர்களிலிருந்து மாறுபட்ட சொந்தத் தனி மதம் இருக்கும் அள விற்கு ஆக வேண்டும். அதற்கு இறைவன் திருவருள் புரிய வேண்டும். பக்தியோகத்தின் கருத்து இதுதான்.

எனது மதம் உங்களுக்கு ஏற்றதாக முடியாது; உங்கள் மதம் என்னுடையது ஆக முடியாது-இதுதான் பக்தியோகத் தின் அறுதிக் கருத்து. நோக்கமும் முடிவும் ஒன்றாக இருந் தாலும் ஒவ்வொருவரும் அவரவர் மனப்போக்கிற்கு ஏற்பத் தனித்தனிப் பாதையில்தான் செல்ல வேண்டும். இந்தப் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாம் உண்மை யானவை. ஏனெனில் எல்லாம் ஒரே இலக்கை நோக்கிச் செல் பவை. ஒன்றுதான் உண்மை, மற்றவை உண்மை அல்ல என்று இருக்க முடியாது. தங்களுக்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுப் பதைத்தான், பக்தி நூல்கள் இஷ்டம் என்று கூறுகிறது.

அடுத்தது சொற்கள். சொல்லின் ஆற்றல் பற்றிய விஷயம் எல்லோரும் அறிந்ததே. அவை எவ்வளவு அற்புதமானவை! வேதங்கள், பைபிள், குரான்-இந்தச் சாஸ்திரங்கள் எல்லாம் இத்தகைய சக்தி வாய்ந்த சொற்களால் நிறையப் பெற்றவை. சில சொற்கள் மனித குலத்தின்மீது அற்புதமான ஆதிக்கம் செலுத்துகின்றன.

இனி, பல்வேறு சின்னங்கள் உள்ளன. அவை மனித மனத்தின்மீது பேராதிக்கம் செலுத்துகின்றன. மதச் சின்னங்கள் ஏனோதானோவென்று தற்செயலாக உருவாக்கப்பட்டவை அல்ல. அவை எண்ணங்களின் இயற்கையான வெளிப்பாடு களாக இருப்பதை நாம் காண்கிறோம். சின்னங்களை ஆதார மாகக் கொண்டுதான் நாம் சிந்திக்கிறோம். எல்லா சொற்களும் தங்கள் பின்னாலுள்ள எண்ணத்தின் சின்னங்களே. பல்வேறு மக்கள் பல்வேறு சின்னங்களை உபயோகிக்கின்றனர். அவற் றின் காரணம் அவர்களுக்குத் தெரிவதில்லை . அந்தக் காரணம் பின்னணியிலேயே உள்ளது. சின்னங்கள் எண்ணங்களோடு தொடர்புடையவை. எண்ணம் சின்னத்தைப் புறத்தே கொண்டு வருவதுபோல், சின்னங்கள் உள்ளே எண்ணங்களைத் தூண்டுகின்றன. எனவே பக்தியின் இந்தப் பகுதி சின்னங்கள், சொற்கள், பிரார்த்தனை ஆகியவைகளை விளக்குகிறது.

ஒவ்வொரு மதத்திலும் பிரார்த்தனைகள் உள்ளன. ஆனால் பணத்திற்காகவோ, உடல்நலத்திற்காகவோ பிரார்த் தனை செய்வது பக்தி அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது கர்மம் அல்லது புண்ணியச் செயல், அவ் வளவுதான். ஏதாவது பொருளுக்காகவோ, சொர்க்கத்திற்குச் செல்வது போன்றவற்றிற்காகவோ இறைவனை வேண்டு வது கர்மம் மட்டுமே. ஆண்டவனிடம் அன்பு செலுத்துபவன், பக்தனாக ஆக விரும்புபவன் இத்தகைய பிரார்த்தனைகளை விட்டுவிட வேண்டும். ஒளியுலகிற்குச் செல்ல விரும்புபவன் முதலில் இந்தக் கொடுக்கல்-வாங்கல் எண்ணத்தை, வியாபார மதத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு, அந்த வாசலிற்குள் புக வேண்டும்.

நீ பிரார்த்திப்பது உனக்குக் கிடைக்காது என்பதல்ல; எல்லாம் உனக்குக் கிடைக்கும். ஆனால் அது பிச்சைக்காரனின் மதம். மிகவும் கீழானது, இழிவானது. ‘கங்கைக் கரையில் வசித்துக்கொண்டு, தண்ணீருக்காகக் கிணறு வெட்டுபவன் முட்டாளே அல்லவா!’ வைரச் சுரங்கத்திற்குள் போய்க் கண் ணாடி மணிகளைப் பொறுக்குபவன் மூடன்தானே! என்ன பைத்தியக்காரத்தனம்! வைரச் சுரங்கமான ஆண்டவனிடம், கண்ணாடித் துண்டுகளான உணவையும் உடல்நலத்தையும் ஆடையையுமா கேட்பது? உடல் சிறிது காலத்தில் மறைந்து விடும். இந்த உடலின் நலத்திற்காகத் திரும்பத்திரும்பப் பிரார்த்திப்பதால் என்ன பயன்? உடல்நலத்திலும் பணத்திலும் என்ன இருக்கிறது? எவ்வளவுதான் செல்வம் படைத்தவனாக இருந்தாலும், சொத்தில் சிறிதளவைத்தான் அவன் தனக்குப் பயன்படுத்திக் கொள்ள இயலும். இந்த உலகத்தின் எல்லா பொருட்களையும் நாம் ஒருபோதும் அடைய முடியாது. அப்படி அவை கிடைக்காவிட்டால்தான் என்ன? அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? இந்த உடல் அழிந்துவிடும். இதையெல்லாம் யார் பொருட்படுத்துவது? நல்லவை வந்தால் வரட்டும், வரவேற்போம். போனால் போகட்டும், அப்படிப் போவதைப் பற்றியும் நாம் கவலைப்பட மாட்டோம். அவை வரும்போது அவற்றை வாழ்த்துவோம். போகும்போதும் அவற்றை வாழ்த்துவோம்.

நாம் இறைவனை உணரப் போகிறோம், மன்னாதி மன்னனை அணுக முயல்கிறோம். அங்கு நாம் பிச்சைக்கார உடையில் செல்ல இயலாது. அந்த உடையில் சென்றால் மன்னாதி மன்னராக வீற்றிருக்கும் அவர் முன் செல்ல நமக்கு அனுமதி கிடைக்குமா? கட்டாயமாகக் கிடைக்காது. நம்மை வெளியே துரத்திவிடுவார்கள். நம் கடவுள் சக்கரவர்த்திகளுக் கெல்லாம் சக்கரவர்த்தி. அவரிடம் பிச்சைக்கார வேடத்தில் செல்ல முடியாது. பிச்சைக்காரர்களுக்கு அங்கு அனுமதி கிடையாது. வியாபார நோக்கம் கொண்டவர்களுக்கும் அங்கே அனுமதி இல்லை. வாங்குவதும் விற்பதும் அங்கே கிடையவே கிடையாது. வாங்குபவர்களையும் விற்பவர்களை யும் ஏசுநாதர் கோயிலிலிருந்து துரத்தினார் என்று பைபிளில் நீங்கள் படிக்கிறீர்கள். அப்படியிருந்தும் சிலர், ‘ஆண்டவனே! இதோ என் சிறு பிரார்த்தனை. பிரதியாக எனக்கு ஒரு புதிய ஆடையைத் தருவாய். எம்பெருமானே, என் தலைவலியைக் குணப்படுத்துவாய். நான் நாளைக்கு இரண்டு மணி நேரம் அதிகமாக வழிபடுகிறேன்’ என்றெல்லாம் பிரார்த்திக்கின்றனர். உங்கள் மனத்தை ஒரு படி மேலே உயர்த்துங்கள். கடவுளிடம் இத்தகைய அற்ப விஷயங்களைக் கேட்கின்ற நிலையிலிருந்து உங்களை மேலே வைத்துக் கொள்ளுங்கள். இத்தகைய பிரார்த் தனைகளில் முழு சக்தியையும் ஒருவன் செலவழிப்பானானால் அவனுக்கும் மிருகத்திற்கும் என்ன வேறுபாடு?

பக்தனாக விரும்புபவன் சொர்க்கத்தை அடைவது போன்ற ஆசைகளையும் மற்ற எல்லா ஆசைகளையும் ஆரம் பத்திலேயே விட்டுவிட வேண்டும். சொர்க்கம் என்பது இங் குள்ள இடங்கள் போல்தான்; இன்னும் சற்று நன்றாக இருக்க லாம், அவ்வளவுதான். இங்கு நமக்குச் சில துன்பங்களும் சில இன்பங்களும் உள்ளன. அங்கே ஒருவேளை, துன்பம் குறைந்தும் இன்பம் கூடியும் இருக்கலாம். ஆனால் இங்கே இருப்பதைவிட அங்கே அதிக ஞான ஒளி கிடையாது. அங்கே நாம் நமது நற் செயல்களின் பலனை அனுபவிக்க மட்டுமே முடியும். கிறிஸ் தவக் கருத்துப்படி சொர்க்கம் என்பது இன்பம் மண்டிக் கிடக் கின்ற ஓர் இடம். அது கடவுளின் இடத்தை நிரப்ப முடியுமா என்ன ?

இத்தகைய ஆசைகள் அனைத்தையும் எப்படி விலக்கு வது என்பதுதான் கேள்வி. இந்த ஆசைகளே நம்மைத் துன்பத் தில் ஆழ்த்துகின்றன. நாம் ஆசைத்தளைகளுக்குக் கட்டுண்ட அடிமைகள்; ஆசைகளால் ஆட்டி வைக்கப்படுகின்ற பொம்மைகள்; ஆசைகளின் கைகளிலுள்ள வெறும் விளை யாட்டுப் பொருட்கள். நம் உடலை ஏதாவது வீழ்த்திவிடுமோ என்று அதைத் தொடர்ந்து பாதுகாக்கிறோம்; அதன் காரண மாக எப்போதும் பயந்துகொண்டே வாழ்கிறோம். பயத்தின் காரணமாக மான் தினமும் ஏறக்குறைய அறுபது எழுபது மைல் ஓடுவதாக நான் படித்திருக்கிறேன். பல மைல்கள் ஓடும், பின்னர் எங்கேயாவது நின்று எதையாவது தின்னும். அந்த மானைவிட இழிந்த நிலையில் நாம் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். மானுக்குச் சிறிதாவது ஓய்வு உண்டு. நமக்கு அதுகூடக் கிடையாது. மேய்வதற்குப் போதிய புல் கிடைத்தால், அது திருப்தி அடைந்துவிடுகிறது. ஆனால் நாமோ நாளுக்கு நாள் தேவைகளைப் பெருக்கிக்கொண்டே போகிறோம். தேவைகளை அதிகரித்துக் கொண்டே போவது நமக்கு ஒரு மோசமான பழக்கமாகவே ஆகிவிட்டது. நாம் இயற்கைக்கு மாறாக வாழ்கிறோம்; நிலைகுலைந்துவிட்டோம். எனவே இயற்கையான எதுவுமே நமக்குத் திருப்தி அளிப்பதில்லை. இயற்கைக்கு முரணான கிளர்ச்சி, இயற்கையோடு இயையாத உணவு, நீர், சூழ்நிலை, வாழ்வு என்று இயற்கையோடு இயை பின்றியே எப்போதும் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். காற்றை நாமே முதலில் நஞ்சாக்கி பிறகு அதைச் சுவாசிக்கிறோம். பயத்தை எடுத்துக்கொண்டால், நம் வாழ்க்கை பயங்களின் தொகுப்பைத் தவிர வேறு என்ன? மானுக்குப் புலி, ஓநாய் போன்ற விலங்குகளிடமிருந்து ஏற்படும் பயம் ஒன்றுதான் உள்ளது. ஆனால் மனிதனோ பிரபஞ்சம் முழுவதையும் கண்டு பயப்படுகிறான்.

இதிலிருந்து எப்படி நம்மை விடுவித்துக்கொள்வது என்பதுதான் கேள்வி. பயன்நோக்குவாதிகள், ‘கடவுள், மறு வுலகம் என்பது பற்றியெல்லாம் பேசாதீர்கள். அவற்றைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. நாம் உலகில் இன்பமாக வாழ் வோம்’ என்று கூறுகின்றனர். அப்படி வாழ முடியுமானால் முதலில் அதைச் செய்பவன் நானாகத்தான் இருப்பேன். ஆனால் உலகம் அதற்கு நம்மை அனுமதிக்காது. நீங்கள் இயற்கையின் அடிமைகளாக இருக்கும்வரை உங்களால் எப்படி இன்பமாக வாழ முடியும்? எவ்வளவுக்கெவ்வளவு போராடு கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சிக்கிக் கொள்கிறீர்கள். இத் தனை ஆண்டுகளுக்கு எத்தனை என்று எனக்குத் தெரியாது – என்றெல்லாம் திட்டங்கள் வகுக்கிறீர்கள். ஆனால் இறுதியில் ஒவ்வொரு திட்டமும் தோல்வியடைந்து கொண்டே போகிறது.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பழைய உலகத்தில், மக்களின் தேவைகள் மிகச் சிலவாக இருந்தன. கூட்டல் விகிதத் தில் (Arithmetical Progression) அவர்களது அறிவு வளர்ந்த போது தேவைகள் பெருக்கல் விகிதத்தில் (Geometrical Progression) வளர்ந்தன. நாம் முக்தி பெற்றால், ஏன் குறைந்தபட்சம் சொர்க்கத்தை அடைந்தால்கூட நமது ஆசைகள் நிறைவேறி விடுமென நினைக்கிறோம். எனவே சொர்க்கத்திற்குப் போக விரும்புகிறோம். ஆ, என்ன ஒரு தணியாத வேட்கை! எப்போதும் ஏதாவது ஒன்று வேண்டும், வேண்டும்! ஏழையாக இருந்தால் பணம் வேண்டும். பணம் வந்துவிட்டால் சமுதாய அந்தஸ்து வேண்டும். அதுவும் வந்துவிட்டால் வேறு ஏதோ ஒன்று வேண்டும். அதற்குப் பிறகு இன்னும் ஏதாவது தேவைப்படு கிறது. இதற்கு முடிவு என்பதே கிடையாது.

இந்த வேட்கையை எப்படித் தணிப்பது? சொர்க்கத்திற்குச் சென்றால், அது நமக்குள்ள ஆசையை இன்னும் அதிகமாக்கவே செய்கிறது. ஏழை பணக்காரனானால், அது அவனது ஆசை களைத் தணிப்பதில்லை; மாறாக, தீயில் வெண்ணெய் இட்டால் அதன் பிரகாசமான சுடர் மேலும் கொழுந்து விட்டெரிவது போல் அவனது ஆசைகள் ஓங்கி வளர்கின்றன. சொர்க்கத் திற்குச் செல்வது என்பது பெரிய பணக்காரனாவது போன்றது தான். அங்கே ஆசைகள் மேலும்மேலும் அதிகரிக்கின்றன. சொர்க்கத்தில் வாழும் தேவர்கள் மனிதர்களைப் போலவே ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையே உலகின் பல்வேறு மத நூல்களிலும் படிக்கிறோம். அவர்கள் அங்கே எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்பதில்லை. சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பது இன்ப நுகர்ச்சிக் காகவே அல்லவா? இதை விட்டுவிட வேண்டும். சொர்க்கத் திற்குப் போக நினைப்பது மிகச் சிறிய ஆசை, மிகவும் இழிவான ஆசை. ‘நான் கோடீசுவரனாகி மக்கள்மீது ஆணை செலுத்து வேன்’ என்று நினைப்பதைப் போன்றதே இது. இத்தகைய சொர்க்கங்கள் பல உள்ளன. ஆனால் அவற்றின்மூலம் ஆன் மீகம், அன்பு இவற்றின் வாசலின் உள்ளே புகும் உரிமை உங்களுக்குக் கிடைக்காது.

பக்தியோகம் 3

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
அ. ஆரம்பநிலைப் பாடங்கள்
3. குரு

        ஒவ்வோர் ஆன்மாவும் பூரணத்துவத்தை எய்த வேண்டும் என்பது நியதி. ஒவ்வோர் உயிரும் கடைசியில் அந்த நிலையை அடைந்தே தீரும். முன்பு இருந்த நிலை அல்லது நினைத்த எண்ணங்களின் விளைவே நாம் இப்போது உள்ள நிலை. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது, இப்போது நாம் செய்யும் காரியங்களையும், எண்ணும் எண்ணங்களை யும் பொறுத்தது. அதனால் நாம் வெளியிலிருந்து உதவி பெற முடியாது என்பதில்லை. ஆன்மாவின் சாத்தியக்கூறுகள் எப் போதும் புற உதவியினால் விரைவு பெறுகின்றன. எனவே புற உதவி பெரும்பாலோருக்கு ஏறக்குறைய கட்டாயமான தேவை யாக இருக்கிறது. விரைவுபடுத்தும் தூண்டுதல்கள் வெளி யிலிருந்து வருகின்றன. அவை நம்மிடம் மறைந்துள்ள ஆற்றல் களில் செயல்படுகின்றன. அதனால் வளர்ச்சி தொடங்குகிறது; ஆன்மீக வாழ்வு பிறக்கிறது. கடைசியில் மனிதன் புனிதம் அடைகிறான், பூரணத்துவம் எய்துகிறான்.

வெளியிலிருந்து வருகின்ற இந்த விரைவுபடுத்தும் தூண்டு தல் நூல்களிலிருந்து கிடைக்க முடியாது. ஓர் ஆன்மாவிற்கு மற்றோர் ஆன்மாவிலிருந்துதான் தூண்டுதல் கிடைக்கும்; மற்ற எதிலிருந்தும் அல்ல. வாழ்நாள் முழுவதும் நாம் நூல்களைப் படிக்கலாம், பேரறிஞர்களாகத் திகழலாம். ஆனால் நம்மிடம் ஆன்மீகம் என்பதே முளைவிடவில்லை என்பதைக் கடைசி யில் காண்போம். ஒருவனுக்குக் கூர்மையான அறிவு வளர்ச்சி இருந்தால் அதே அளவு ஆன்மீக வளர்ச்சியும் இருக்கும் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. மாறாக, அறிவு வளரும்போது ஆன்ம வளர்ச்சி தடைப்படுவதையே நாம் காண்கிறோம்.

அறிவை வளர்த்துக் கொள்வதற்கு நாம் நூல்களிலிருந்து உதவி பெறலாம். ஆனால் ஆன்மீக வளர்ச்சிக்கு, நூல்களி லிருந்து அனேகமாக ஒன்றுமே பெற முடியாது. நூல்களைப் படிக்கும்போது, சிலவேளைகளில், நம் ஆன்மீக வளர்ச்சிக்கு ஏதோ உதவி கிடைப்பது போன்றதொரு மனமயக்கம் ஏற்படுகிறது. ஆராய்ந்து பார்த்தால் நம் அறிவுக்கு உதவி கிடைத்ததே தவிர ஆன்மாவிற்கு அல்ல என்பது தெரியவரும். அதனால்தான் கிட்டத்தட்ட நாம் எல்லோருமே ஆன்மீக விஷயங்களைப்பற்றி வெகு அழகாகப் பேச முடிகிறது; நடைமுறை என்று வரும்போது, அதற்கு வேண்டிய தகுதி மிகவும் குறைந்தவர்களாக இருக்கிறோம். நமக்குத் தேவைப்படும் தூண்டுதலை நூல்கள் தர முடியாது என்பதுதான் இதற்குக் காரணம். ஆன்ம வளர்ச்சிக்கான அந்தத் தூண்டுதல் இன்னோர் ஆன்மாவிலிருந்துதான் வர வேண்டும். எந்த ஆன்மாவிலிருந்து இந்தத் தூண்டுதல் வருகிறதோ அவரே குரு, ஆசிரியர். எந்த ஆன்மா தூண்டப்படுகிறதோ, அவரே சீடன் அல்லது மாணவன்.

இவ்வாறு தூண்டுவதற்கு, முதலாவதாக, யார் தூண்டு கிறாரோ அவரிடம் அதற்கான சக்தி இருக்க வேண்டும். ஆற்ற லைத் தம்மிடமிருந்து மற்றொருவருக்குப் பாய்ச்சும் சக்தியை அவர் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, பெறுபவரும் அதைப் பெறுவதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும். விதை உயிருள்ளதாக இருக்க வேண்டும், நிலமும் நன்கு உழப் பட்டுத் தயாராக இருக்க வேண்டும். இந்த இரண்டு நியதி களும் நிறைவேறும்போது, அற்புதமான ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது.

‘ஆன்மீகத்தைப்பற்றிப் பேசுபவர் அற்புதமானவராக இருக்க வேண்டும். கேட்பவரும் அப்படியே இருக்க வேண்டும்.’ இருவரும் சிறப்பான, அசாதாரணமானவர்களாக இருக்கும் போது மட்டுமே மிகச் சிறந்த ஆன்மீக வளர்ச்சி ஏற்படுகிறது. இல்லாவிட்டால் ஏற்படாது. இவர்களே உண்மையான குரு மார்கள், இவர்களே உண்மையான சீடர்கள். இவர்களோடு ஒப்பிடும்போது மற்றவர்கள் ஆன்மீகத்தோடு விளையாடு கிறார்கள்; தங்கள் அறிவாற்றலுக்கும் பயிற்சி கொடுக்கிறார்கள்; தங்கள் ஆர்வத்தைச் சிறிது தீர்த்துக் கொள்கிறார்கள்; ஆனால் உண்மையில், இன்னும் வெளி விளிம்பில் நின்றுகொண்டிருக் கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குச் சிறிது பலன் உண்டு; எல்லாம் நாளடைவில் வந்து சேரும். பல வயல் தயாரானதும், விதை வந்து சேர்ந்தேயாக வேண்டும் என்பது இயற்கையின் அறியொணா நியதியாகும். அதுபோல் ஒருவனுக்கு ஆன்மீகம் தேவை என்று வரும்போது, அதற்கான ஆன்மீக ஆற்றலை அளிப்பவர் வந்தே தீரவேண்டும். ‘தேடிக் கொண்டிருக்கும் பாவி, தேடிக் கொண்டிருக்கும் ரட்சகரைச் சந்திக்கிறான்.’ ஆன்மீகத்தைத் தேடும் ஆன்மாவில் ஈர்ப்பு சக்தி முதிர்ந்து, நிறைந்திருக்கும்போது, அந்த ஈர்ப்பின் வசப்பட்டு, அருள்புரியும் சக்தி வந்தேயாக வேண்டும். 

        ஆனால் வழியில் பேராபத்துக்கள் பல உள்ளன. சாதகன் தன் மனத்தில் தோன்றும் தற்காலிக உணர்ச்சிப்பெருக்கை உண்மையான ஆன்மீக தாகம் என்று தவறாக நினைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நம் வாழ்க்கையில் இப்படி நிகழ்வதைப் பல வேளைகளில் காண்கிறோம். நாம் நேசிக்கும் ஒருவர் இறந்து விடுகிறார்; அந்தக் கணம் ஓர் அடியை உணர்கிறோம், உலகமே நம் காலடியிலிருந்து நழுவுகிறது. உடனே ஏதோ உயர்ந்த ஒன்றை நாட நினைக்கிறோம், ஆன்மீக வாழ்வில் ஈடுபட விரும்புகிறோம். ஆனால் இந்த அலை சில நாட்களுக்குத்தான், பின்னர் மறைந்துவிடும்; நாம் முன்பு எங்கு இருந்தோமோ, அங்கேயே இருக்கக் காண்போம். இத்தகைய உணர்ச்சிவேகங் களை உண்மையான ஆன்மீக தாகம் என்று தவறாக எத் தனையோ முறை எண்ணிவிடுகிறோம். இத்தகைய தற்காலிக உணர்ச்சிவேகங்களை இப்படித் தவறாக எண்ணும்வரை உண்மையான, தொடர்ந்து நிற்பதான ஆன்மீக தாகம் ஏற் படாது. அதைத் தணிக்கின்ற குருவையும் நாம் காண முடியாது.

நாம் எவ்வளவோ விரும்பியும், நமக்கு உண்மை இன்னும் கிடைக்கவில்லை என்று நாம் அங்கலாய்த்துக் கொள்ளும் போது, நமது முதல் கடமை, நம்முடைய உள்ளத்தையே ஆராய்ந்து பார்த்து, உண்மையிலேயே நாம் உண்மையை விரும்புகிறோமா என்று கண்டுபிடிப்பதுதான். பெரும்பாலோர் விஷயத்தில், நாம் இன்னும் தகுதி பெறவில்லை , நாம் அதை விரும்பவில்லை, நமக்கு உண்மையான ஆன்மீக தாகம் இன்னும் ஏற்படவில்லை என்பதையே காண்போம்.

குரு விஷயத்தில் வேறு பிரச்சினைகளும் உள்ளன. எத் தனையோ பேர் தாங்கள் அறியாமையில் உழன்று கொண் டிருந்தும், செருக்கின் காரணமாக, தங்களுக்கு எல்லாம் தெரி யும் என்று நினைக்கிறார்கள். அத்துடன் நிற்பதில்லை. மற்றவர் களுக்கும் வழிகாட்ட விரும்புகிறார்கள். இறுதியில் குருடன் குருடனுக்கு வழிகாட்டுவதுபோல் இருவரும் குழியில் விழு கிறார்கள். இத்தகையோர் உலகில் ஏராளம், ஏராளம் குருவாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு பிச்சைக்காரனும் கோடி ரூபாய் நன்கொடை கொடுக்க விரும்பு கிறான். இவர்கள் எவ்வளவு ஏளனத்திற்கு உரியவர்களோ, அவ்வளவு ஏளனத்திற்கு உரியவர்களே இந்தக் குருமார்களும்.

அப்படியானால் உண்மையான குருவை எப்படி அறிவது? முதலாவதாக, சூரியனைக் காண விளக்கொளி தேவையில்லை. சூரியனைப் பார்க்க நாம் மெழுகுவர்த்தி ஏற்று வதில்லை. சூரியன் உதயமாகும்போது அதை இயல்பாக நாம் உணர்ந்து கொள்கிறோம். அதுபோல் குரு என்பவர் வரும் போது, அவர் உண்மையானவர் என்பதை மனம் தானாக உணர்ந்து கொள்கிறது. உண்மை தன் சொந்த ஆதாரங்களின் மீதே நிற்கிறது. உண்மைக்கு வேறு சான்றுகள் தேவையில்லை. அது சுய ஒளி கொண்டது. அது நமது இயல்பின் அடியாழம் வரை ஊடுருவிச் செல்கிறது. பிரபஞ்சம் முழுவதும் எழுந்து நின்று, ‘இது உண்மை ‘ என்பதைப் பறை சாற்றுகிறது. 

 மிகப் பெரிய குருமார்கள் இவர்களே. சற்று தாழ்ந்த நிலையில் இருப்பவர்களிடமிருந்தும் நாம் உதவி பெறலாம். ஆனால் அவர்களின் நிலையைத் தீர்மானிப்பதற்கு வேண்டிய உள்ளுணர்வு நமக்குப் போதுமான அளவு இல்லாததால் அதனை முடிவு செய்யச் சில சோதனைகள் தேவைப்படுகின்றன. சீடனுக்கும் சரி, குருவிற்கும் சரி, சில தகுதிகள் இருக்க வேண்டும்.

சீடனிடம் இருக்க வேண்டிய தகுதிகள்: பரிசுத்தம், அறிவொளி பெறுவதற்கு உண்மையான தாகம், விடாமுயற்சி. 

 தூய்மையற்ற ஒருவன் ஆன்மீகவாதியாக இருக்க முடி யாது. இது ஒரு முக்கியமான நியதி. எல்லா விஷயங்களிலும் தூய்மையாக இருப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. 

 அடுத்த தகுதி, அறிவொளி பெறுவதற்கு உண்மையான தாகம். ஆனால் அது யாருக்குத் தேவை? இதுதான் கேள்வி. நாம் வேண்டுவதை அடைகிறோம் என்பது மிகமிகப் பழமை யான ஒரு நியதி. யாருக்குத் தேவையோ அவனுக்குக் கிடைக்கும். ஆன்மீகத்தை நாடுவது என்பது மிகக் கடினமான காரியம். பொதுவாக நாம் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமானது அல்ல ஆன்மீகம். ஆன்மீகம் என்பது சொற்பொழிவுகளைக் கேட்பதிலோ, நூல்களைப் படிப்பதிலோ இல்லை என்பதை நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம். ஆன்மீகம் என்பது தொடர்ந்த போராட்டம். வெற்றி கிடைக்கும்வரை, நமது சொந்த இயல்பை நாம் பற்றும்வரை தொடர்ந்து போராடுவது. அது ஒரு நாள், இரண்டு நாள் போராட்டமோ, பல வருடம் அல்லது பல பிறவிப் போராட்டமோ அல்ல. அது நூற்றுக் கணக்கான பிறவிகள் கூட நீடிக்கலாம். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அது உடனேயும் கிடைக்கலாம்; நூற்றுக் கணக்கான பிறவிகளுக்குப் பிறகு கிடைக்காமலும் இருக்கலாம். இதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும். இத்தகைய மன உறுதியுடன் தொடங்கும் சீடன் வெற்றி காண்கிறான்.

குரு விஷயத்தில், அவர் சாஸ்திரங்களின் உட்கருத்தை அறிந்திருக்கிறாரா என்பதை முதலில் பார்க்க வேண்டும். பைபிள், வேதம், குரான் என்று உலகம் முழுவதும் எல் லோரும் படிக்கின்றனர். ஆனால் இவை வெறும் வார்த்தைகள் மட்டுமே; இலக்கணத் தொடர்கள், சொற்றொடர் இலக் கணங்கள், சொல் இலக்கணங்கள், தத்துவங்கள் மட்டுமே. அதாவது, மதத்தின் உலர்ந்த எலும்புகள் மட்டுமே. ஒரு நூல் எவ்வளவு காலத்திற்கு முன் எழுதப்பட்டது என்பதை ஒரு குரு கண்டுபிடிக்கலாம். ஆனால் வார்த்தைகள் என்பவை கருத்துக்களின் வெளித்தோற்றங்கள் மட்டுமே. வார்த்தைகளில் அதிகம் ஈடுபட்டு வார்த்தைகளின் வேகத்தில் மனத்தை ஓடவிடு பவர்கள், அவற்றின் பொருளை, உட்கருத்தை இழந்துவிடு கிறார்கள். ஆகவே குரு, சாஸ்திரங்களின் உட்கருத்தை அறிந் திருக்க வேண்டும். 

‘வார்த்தைகளால் பின்னப்பட்ட வலை ஒரு பெரிய காடு போன்றது. அதில் மனித உள்ளம் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தவிக்கிறது. சொற்களைப் பலவிதமாகச் சேர்ப்பது, அழகிய மொழியைப் பலவிதங்களில் பேசுவது, சாஸ்திரங்களின் நடையைப் பலவிதங்களில் விளக்குவதுஇவையெல்லாம் பண்டிதர்களின் மனமகிழ்ச்சிக்காக மட்டுமே. இவை நம்மைப் பூரணத்துவத்திற்கு அழைத்துச் செல்லாது.’ தங்களை அறிஞர்கள் எனக் கருதி உலகம் புகழட்டும் என்ப தற்காக, அவர்கள் தங்கள் புலமையை இப்படியெல்லாம் வெளிக் காட்டுகிறார்கள். உண்மையான உலக குருமார்களுள் ஒருவர் கூட இப்படி சாஸ்திரங்களை விளக்கவும் முற்பட்டதில்லை; சிதைத்துத் திரித்துப் பொருள் கூறவும் இல்லை; ‘இந்தச் சொல் லிற்கு இதுதான் பொருள். தத்துவ முறைப்படி இந்தச் சொல்லுக்கும் அந்தச் சொல்லுக்கும் இதுதான் தொடர்பு என்றெல்லாம் சொல்லவும் இல்லை.உலகம் தந்துள்ள மாபெரும் குருமார்களைப் பாருங்கள். அவர்களுள் ஒருவர்கூட இப்படிச் செய்ததில்லை. ஆனாலும் அவர்கள் போதித்தார்கள். போதிப்பதற்கு எதுவும் இல்லாத மற்றவர்கள், ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு, ‘அது எப்படித் தோன்றியது? அதை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் யார்? அவர்கள் என்ன உண்டார்கள்? எப்படித் தூங்கினார்கள்?’ என்பவை குறித்து, மூன்று பகுதிகள் கொண்ட ஒரு நூல் எழுதுவார்கள். 
எனது குருதேவர் ஒரு கதை சொல்வார்: சிலர் ஒரு மாந் தோப்பிற்குச் சென்றனர். அவர்களுள் பெரும்பாலோர் இலை களை எண்ணுவதிலும், அவற்றின் நிறத்தைக் கவனிப்பதிலும், கிளைகளின் அளவைக் கண்டுபிடிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டனர், குறிப்புகளும் எழுதிக் கொண்டனர். பிறகு அற்புத மானதொரு கலந்துரையாடலிலும் ஆழ்ந்தனர். ஆனால் புத்தியுள்ள ஒருவர் மட்டும் தனியே அமர்ந்து, மாழ்பழத்தைத் தின்றுகொண்டிருந்தார். இவர்களுள் யார் கெட்டிக்காரர்? 
இலைகளையும் கிளைகளையும் எண்ணுவது, குறிப்புகள் எழுதுவது ஆகியவற்றை மற்றவர்களுக்கு விட்டுவிடுங்கள். இத் தகைய காரியங்களுக்கு மதிப்பு இருக்கவே செய்கிறது, ஆனால் ஆன்மீகத் துறையில் அதற்கு இடம் இல்லை. இத்தகைய காரியங்களால் மனிதன் ஆன்மீகத்தில் ஈடுபட முடியாது. இலை எண்ணுகின்ற இவர்களின் மத்தியில் ஓர் உறுதியான ஆன்மீக வாதியை நீங்கள் காணவே முடியாது.
ஆன்மீகம்தான் மனிதனின் மிக உயர்ந்த லட்சியம்; மிக உயர்ந்த பெருமை. மிக எளிதானதும் அதுவே. அதற்கு இலை எண்ணுதல்’ தேவை இல்லை. நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்பினால், ‘ஏசு எங்கே பிறந்தார்? ஜெருசலேமிலா, பெத்லகேமிலா? அவர் தமது மலைப் பிரசங்கத்தை எந்தத் தேதியில் ஆற்றினார்?’ என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண் டிய அவசியமில்லை . மலைப் பிரசங்கத்தை நீங்கள் உணர வேண்டும், அதுதான் தேவை. அது என்று ஆற்றப்பட்டது என்பதைப்பற்றி இரண்டாயிரம் வார்த்தைகள் படிக்கத் தேவை யில்லை. இவை எல்லாம் பண்டிதர்களின் மனமகிழ்ச்சிக்காக! அது அவர்களிடம் இருந்துவிட்டுப் போகட்டும். நாம் அதற்கு ஒரு வாழ்த்துக் கூறிவிட்டு மாழ்பழங்களைச் சுவைப்போம்! 
குருவிடம் இருக்க வேண்டிய இரண்டாம் தகுதி, அவர் பாவமற்றவராக இருக்க வேண்டும் என்பதாகும். இங்கிலாந்தில் என் நண்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம், ‘நாம் ஆசிரியரின் நடத்தையைக் கவனிக்க வேண்டுமா? அல்லது அவர் சொல்வதை மட்டும் ஆராய்ந்து அதை எடுத்துக்கொள்ள வேண்டுமா?’ என்று கேட்டார். அப்படிக் கூடாது. எனக்கு ஒருவர் இயற் பியலையோ வேதியியலையோ அல்லது வேறு அறிவியலையோ கற்பிக்க விரும்பினால், அவருடைய ஒழுக்கம் எப்படி வேண்டு மானாலும் இருக்கலாம். அவரால் இயற்பியலையோ, வேறு அறிவியலையோ கற்பிக்க முடியும். ஏனெனில் அறிவியலுக்குத் தேவையான அறிவு, மூளையைப் பற்றியது; மூளையின் நுட் பத்தைப் பற்றியது. சிறிதுகூட ஆன்ம வளர்ச்சி இல்லாமலும்கூட மிகச் சக்தி வாய்ந்த அறிவாற்றல் ஒருவனிடம் இருக்க முடியும்.
ஆனால் ஆன்மீக விஷயத்தில், தூய்மையற்ற ஒருவரிடம் ஆன்ம ஒளி இருப்பது ஆரம்பத்திலிருந்து முடிவுவரை முடி யாத காரியம். அவர் எதைக் கற்பிக்க முடியும்? அவருக்கே ஒன்றும் தெரியாது. பரிசுத்தம்தான் ஆன்மீக உண்மை . இதயத் தூய்மை உடையவர்கள் பேறு பெற்றவர்கள்.’ அவர்கள் இறைவனைத் தரிசிப்பார்கள். ஆன்மீகம் என்பதன் சாரம் முழு வதும் அந்த ஒரு வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை நீங்கள் அறிந்து கொண்டால், முன்பு சொல்லப்பட்ட எல்லாவற்றையும் அறிந்தவர் ஆவீர்கள்; இனி சொல்லப்போவது அத்தனையும் அறிந்தவர் ஆவீர்கள். நீங்கள் வேறு எங்கும் தேட வேண்டாம். அந்த ஒரு வாக்கியத்தில் உங்களுக்குத் தேவையான அத்தனை யும் இருக்கிறது. மற்ற எல்லா சாஸ்திரங்களும் மறைந்து போனா லும் அந்த ஒரு வாக்கியமே உலகத்தைக் காப்பாற்றிவிட முடியும். 
உள்ளம் தூய்மை பெறாமல் இறைக்காட்சியோ, எல்லாம் கடந்த உண்மையின் காட்சியோ கிடைக்காது. அதனால்தான் குருவிடம் தூய்மை கட்டாயமாக இருக்க வேண்டும். முதலில் அவர் எத்தகையவர் என்று பார்க்க வேண்டும். பிறகுதான் அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். சாதாரண ஆசிரியர்களின் விஷயத்தில் அப்படியல்ல. அங்கு, அவர்கள் எத்தகையவர்கள் என்பதைவிட அவர்கள் என்ன சொல் கிறார்கள் என்பதற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
ஆன்மீகத்தைப் போதிப்பவரான குரு விஷயத்தில், அவர் எப்படிப்பட்டவர், தூயவரா என்பதைத்தான் முதலில் கவனிக்க வேண்டும். அவர் தூயவராக இருந்தால் மட்டுமே அவரது வார்த்தைகளுக்கு மதிப்பு ஏற்படும். ஆன்மீக ஆற்றலை வழங்கு பவர் அவர். அவரிடம் ஆன்மீக சக்தி இல்லாவிட்டால் அவர் எதை வழங்குவார்? உதாரணமாக, இங்கே இருக்கின்ற வெப்ப அடுப்பில் வெப்பம் இருந்தால்தான் அது வெப்ப அலைகளை வெளியிட முடியும்; இல்லாவிட்டால் முடியாது. அதேபோல் குருவின் சிந்தனை அதிர்வுகள்தான் சீடனின் மனத்திற்குப் பாய்ச்சப் படுகின்றன. அவை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இடம் மாறுகின்றனவே தவிர, நமது அறிவுச் சக்திகளைத் தூண்டுவதுடன் மட்டும் நின்றுவிடுபவை அல்ல. உண்மையானதும், உணரக்கூடியதுமான ஏதோ ஒன்று குருவிடமிருந்து சீடனை அடைய வேண்டும். ஆகவே முக்கியமான நிபந்தனை, குரு உண்மையானவராக, தூயவராக இருக்க வேண்டும் என்பதுதான்.
மூன்றாவது தகுதி அவரது நோக்கம். ஏதாவது ஓர் உள் நோக்கத்தோடு, அதாவது பெயருக்கும் புகழுக்குமாக அவர் போதிக்கிறாரா அல்லது அன்பிற்காக, உங்கள்மீது கொண் டுள்ள உண்மையான அன்பிற்காக அவர் போதிக்கிறாரா என்று கவனிக்க வேண்டும். குருவிடமிருந்து சீடனுக்கு ஆன்மீக சக்திகள் அனுப்பப்படும்போது அவற்றை அன்பின் மூலமாகத் தான் அனுப்ப இயலும். வேறு எதன்மூலமாகவும் அனுப்ப முடியாது. ஏதோ லாபம், புகழ் என்று எந்த உள்நோக்கத்திற் காகச் செய்தாலும், அனுப்பப்படும் சாதனத்தை அது உடனே அழித்துவிடும். ஆகவே எல்லாம் அன்பின் மூலமாகத்தான் செய்யப்பட வேண்டும்.
கடவுளை அறிந்தவர் மட்டுமே குருவாக இருக்க முடியும். குருவிடம் இந்தத் தகுதிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத் தில்லை; இல்லாவிட்டால் அவரிடம் கற்பது ஆபத்தானது. நல்லதை அவரால் கொடுக்க முடியாவிட்டால், சிலவேளை களில் அவரிடமிருந்து கெட்டது கிடைக்கும் ஆபத்துகூட இருக்கிறது. இந்த விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரை வேண்டுமானாலும் குருவாக ஏற்றுக்கொள்ள இயலாது என்பது இதிலிருந்து தெரிகிறது.
‘ஓடைகள் போதனை செய்கின்றன, கற்கள் போதனை செய்கின்றன” என்றெல்லாம் சொல்வது கவிதைநயத்துடன் விளங்கலாம். ஆனால் தன்னிடம் இம்மியளவாவது உண்மை இல்லாதவன் போதனை செய்ய முடியாது. ஓடைகள் யாருக்குப் போதிக்கின்றன? யாருடைய வாழ்க்கைத் தாமரை உண்மை யான குருவிடமிருந்து பெற்ற ஒளியால் மலர்ந்து விட்டதோ, அவருக்குத்தான் அவை போதனை செய்ய முடியும். இதயம் மலர்ந்துவிட்டால் ஓடைகளிலிருந்தும் போதனை பெறலாம்; கற்களிலிருந்தும் போதனை பெறலாம். அவற்றிலிருந்து ஆன் மீக போதனையும் பெறலாம். ஆனால் மலராத இதயம் அங்கே ஓடைகளையும், உருள்கின்ற கற்களையும்தான் பார்க்கும். 
     பார்வையற்றவன் பொருட்காட்சி சாலைக்குப் போகலாம். அவனுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை . முதலில் அவனது கண்கள் திறக்கப்பட வேண்டும். அதற்குப் பிறகுதான் அவன் அங்குள்ளவற்றைப்பற்றித் தெரிந்துகொள்ள முடியும். ஆன்மீகத்தைப் பொறுத்தவரை கண்ணைத் திறப்பவர் குருவே. குரு விஷயத்தில் நம்முடைய உறவு, மூதாதையர்-சந்ததி என்கிற உறவுதான். குரு ஆன்மீக மூதாதையர், சீடன் ஆன்மீக சந்ததி, விடுதலை, சுதந்திரம் என்றெல்லாம் பேசுவது சரி; ஆனால் அடக்கம், பணிவு, மரியாதை, நம்பிக்கை இவை இல்லாமல் ஆன்மீகம் இல்லை. குருவுக்கும் சீடனுக்கும் இடையே இந்த உறவு இருக்கின்ற இடத்தில்தான் ஆன்மீகச் செம்மல்கள் மலர் கிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய உண்மை . இந்தப் பண்புகளைத் தூக்கியெறிந்து விட்டவர்களுக்கு ஆன்மீகம் என்பது வெறும் பொழுதுபோக்கே.
குருவுக்கும் சீடனுக்கும் இடையே இத்தகைய உறவு இல் லாத நாடுகளிலும் சமுதாயங்களிலும், ஆன்மீகம் என்பது கிட்டத்தட்டப் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாகவே இருக் கிறது. இத்தகைய உணர்ச்சி இல்லாவிட்டால் ஆன்மீகம் வராது. முதலாவதாக, சக்தியைப் பாய்ச்சுவதற்கான குரு யாரும் இல்லை. இரண்டாவதாக, எல்லோரும் சுதந்திரமாக இருப்ப தால் யாருக்குப் பாய்ச்சுவது? யாரிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள முடியும்? அப்படியே அவர்கள் கற்றுக்கொள்ள முன் வந்தாலும் அறிவை விலைக்கு வாங்கவே வருகிறார்கள். ‘ஒரு டாலர் பெறுமானமுள்ள ஆன்மீகம் கொடுங்கள்’ என்று கேட் கிறார்கள். ‘இதற்கு ஒரு டாலர் செலவிடக் கூடாதா?’ என்று நினைக்கிறார்கள். இவ்வாறு ஆன்மீகத்தை அடைய முடியாது.
ஒரு குருவினால் பாய்ச்சப்பட்டுச் சீடனுள் புகும் அறி வொளியை விட உயர்ந்ததும், புனிதமானதுமான வேறு ஒன்று இருக்க முடியாது. ஒருவன் பூரண யோகியாகும்போது அது தானாகவே வந்து சேரும். அதை நூல்களிலிருந்து பெற முடியாது. உலகின் நான்கு மூலைகளுக்கும் சென்று உங்கள் தலையை முட்டிக்கொள்ளுங்கள். இமய மலைக்கோ, ஆல்ப்ஸ் மலைக்கோ, காகசஸ் மலைக்கோ, கோபி பாலைவனத்திற்கோ, சஹாரா பாலைவனத்திற்கோ, அல்லது கடலின் அடியாழத் திற்கோ சென்று தேடுங்கள். ஒரு குருவைக் கண்டுபிடிக்கும் வரையில் உங்களுக்கு அது கிடைக்காது. குருவைக் கண்டுபிடி யுங்கள், மகனின் நிலையிலிருந்து அவருக்குச் சேவை செய்யுங் கள்; அவருடைய ஆதிக்கம் உள்ளே செல்ல உங்கள் இதயத்தைத் திறவுங்கள்; அவரிடம் கடவுள் வெளிப்படுவதைக் காணுங்கள்.
குருவைக் கடவுளின் மிக உயர்ந்த வெளிப்பாடாகக் கொள்ள வேண்டும். நமது முழுக்கவனமும் அவர்மீது குவியும் போது, அவர் ஒரு மனிதன் என்ற நிலையிலிருந்து மறைந்து விடுகிறார்; அவரது உருவம் மறையும். அந்த இடத்தில் இறைவனே எஞ்சுவார். இத்தகைய மரியாதையோடும், அன் போடும் உண்மையை அணுகுபவர்களிடம் உண்மையே வடி வான இறைவன் அற்புதமான வார்த்தைகளைப் பேசுவார்; ‘உன் கால்களிலிருந்து மிதியடிகளைக் கழற்றிவிடு, ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கும் இடம் புனிதமானது. அவரது திரு நாமம் ஓதப்படுகின்ற இடம் புனிதமானது. அப்படி இருக்க அந்தத் திருநாமத்தை ஜபித்து வாழ்பவர் எவ்வளவு உயர்ந்தவர்! ஆன்மீக உண்மைகளை அள்ளி வழங்குகின்ற அத்தகையோரை எவ்வளவு பயபக்தியுடன் நாம் அணுக வேண்டும்! இந்த உணர் வோடுதான் நாம் போதனை பெற வேண்டும். இத்தகைய குரு மார்கள் உலகில் மிகக் குறைவே. ஆனால் ஒருபோதும் இவர்கள் அடியோடு இல்லாமல் இருந்ததில்லை. இந்த மனித தெய்வங்கள் உலகில் இல்லாமல் போகின்ற அந்தக் கணமே உலகம் உலகமாக இல்லாமல் போய்விடும்; அது நரகமாக மாறிவிடும், மறைந்து விடும். மனித வாழ்வின் மிக அழகிய மலர்கள் இந்தக் குருமார் களே. உலகம் நடப்பது இவர்களால்தான். இவர்களது ஆற்ற லால்தான் சமுதாயத்தின் இணைப்புகள் சிதறாமல் பிணைந்து செயல்பட்டு வருகின்றன.
 இவர்களைத் தவிர இன்னொரு வகை குருமார்கள் உள்ளனர். அவர்கள் உலகின் ஏசுநாதர் போன்றவர்கள். அவர்கள் எல்லா குருமார்களுக்கும் குருவானவர்கள், ஆண்டவனே மனிதராக வந்தவர்கள், மிகவும் உயர்ந்தவர்கள். ஒரு ஸ்பரிசத் தாலேயே, ஒரு சங்கல்பத்தாலேயே அவர்களால் ஆன்மீகத்தை வழங்க முடியும். தாழ்ந்தவர்களும் மிகவும் இழிந்தவர்களும்கூட அதன் விளைவால் ஒரு நொடிப் பொழுதில் மகான்களாகி விடுகிறார்கள். அவர்கள் இப்படி எல்லாம் செய்தது பற்றி நீங்கள் படித்ததில்லையா? சற்று முன்பு நான் விளக்கியது இத்தகைய குருமார்களைப்பற்றி அல்ல. இவர்கள் எல்லா குருமார்களுக்கும் குருவாக இருப்பவர்கள், இறைவனின் மிக மேலான வெளிப் பாடாக உள்ளவர்கள். இவர்களின்மூலமாக அல்லாமல் நாம் இறைவனைக் காண முடியாது. இவர்களை நாம் வழிபடாமல் இருக்க முடியாது. இவர்கள் மட்டுமே நமது வழிபாட்டிற்கு உரியவர்கள்.
இத்தகைய இறைமக்களிடம் அல்லாமல் யாருமே ஆண்ட வனை நேரில் கண்டதில்லை. நம்மால் இறைவனைக் ‘காண’ இயலாது. காண முயலும்போது, அவரது உண்மையான உரு வத்தைப் பயங்கரமாகத் திரித்து கேலிக்கூத்தாக்கி விடுகிறோம். இந்தியக் கதை ஒன்று உண்டு: பாமரன் ஒருவனிடம் சிவபெரு மானின் திருவுருவத்தைச் செய்யும்படிக் கேட்டுக் கொண் டார்கள். அவனும் பல நாள் பாடுபட்டு முயன்றான். இறுதியில் அவன் முடித்தபோது அது ஒரு குரங்கின் உருவமாக இருந்தது. கடவுளை உருவப்படுத்த நாம் முயலும்போது அவரைத் திரித்து விடுகிறோம். நாம் மனிதராக இருக்கும்வரை அவரை மனிதரை விட உயர்ந்த ஒருவராக நம்மால் எண்ணிப் பார்க்க முடியாது. நம்முடைய மனித இயல்பை நாம் கடந்து செல்லும் ஒரு காலம் வரும். அப்போது அவர் எப்படி இருக்கிறாரோ அப்படி அவரை உணர இயலும். ஆனால் நாம் மனிதர்களாக இருக்கும் வரை அவரை மனித வடிவில்தான் வழிபட வேண்டும். நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், என்னவிதமாக வேண்டு மானாலும் முயற்சி செய்யலாம். ஆனால் மனிதனாக அல்லாமல் வேறுவிதமாக அவரைப் பார்க்க முடியாது.
நாம் அறிவாற்றல் மிக்க சொற்பொழிவுகளை ஆற்ற லாம், பெரிய பகுத்தறிவுவாதிகளாகி, கடவுளைப்பற்றிய கதை களெல்லாம் பிதற்றல் என்று நிரூபிக்கலாம். ஆனால் நடை முறைப் பொது அறிவில் நின்று பார்ப்போம். இந்த அதி அற்புத அறிவாற்றலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? பூஜ்யம், வெறுமை, பயனற்ற நுரை மட்டுமே.
இறை வழிபாட்டை எதிர்த்து, யாராவது அறிவைப் பிழிந்து மாபெரும் சொற்பொழிவு ஆற்றுவதை அடுத்த முறை நீங்கள் கேட்க நேர்ந்தால் அவனை விடாதீர்கள்; ‘கடவுளைப் பற்றி உன் கருத்து என்ன?’ என்று கேளுங்கள். எல்லாம் வல்ல வர், எங்கும் உள்ளவர், எங்கும் நிறைந்த அன்பு’ என்றெல்லாம் அவன் பேசுகிறானே, அந்தச் சொற்களின் எழுத்துக் கூட்டலைத் தவிர, அவற்றின் பொருளைப்பற்றி அவனுக்கு என்ன தெரியும் என்று கேளுங்கள். அவனுக்கு ஒன்றும் தெரியாது; அவனால் ஒரு கருத்திற்கும் உருவம் கொடுக்க முடியாது. ஒரு புத்த கத்தையும் படித்தறியாத, தெருவில் செல்பவனைவிட அவன் எந்த விதத்திலும் மேலானவன் அல்ல. தெருவில் போகிறவன் அமைதியாகவாவது இருக்கிறான், உலகைக் குழப்பாமலாவது இருக்கிறான். இவனோ வாதப் பிரதிவாதங்கள் செய்து மற்ற வர்களின் மனத்தைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறான். இவனும் கடவுளைக் கண்டதில்லை . ஆகவே இவனும் அவனும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். 
மதம் என்பது இறையனுபூதி பெறுவதே. வெற்றுப் பேச்சிற்கும் அனுபூதிக்கும் உள்ள மிகத் தெளிவான வித் தியாசத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் ஆன்மாவில் உணர்வதுதான் அனுபூதி.
இனி, ‘எங்கும் நிறைந்தவர்’ என்பதற்கு என்ன பொருள்? ஆன்மாவைப் பற்றிய கருத்தே மனிதனுக்கு இல்லை. தன் முன்னால் உள்ள பொருட்களோடு இணைத்தே அதை அவன் நினைக்க வேண்டியிருக்கிறது. நீல வானத்தையோ, பரந்த வயல் களையோ, கடலையோ, அல்லது பெரிதாக உள்ள வேறு எதையோதான் அவன் நினைக்க வேண்டும். வேறு எப்படி அவனால் இறைவனை நினைக்க முடியும்? எனவே நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எங்கும் நிறைந்தவர் என்று சொல்கிறீர்கள், கடலைப்பற்றி நினைக்கிறீர்கள். கடவுள் கடலா என்ன? வாதங் களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம். நமக்கு நடைமுறைப் பொது அறிவுதான் வேண்டும். ஆனால் அதைப்போன்று அவ்வளவு அரிதாக உள்ளதும் வேறு எதுவும் கிடையாது. உலகமே வெற்றுப் பேச்சால்தான் நிறைந்துள்ளது.
சா நாம் இப்போது மனித உடலமைப்பில் கட்டுண்டிருக் கிறோம். எனவே நம்மால் கடவுளை மனிதனாகத்தான் பார்க்க முடியும். எருமைகள் இறைவனை வழிபட முடியுமானால் அவை அவரை ஒரு பெரிய எருமையாக நினைக்கும். ஒரு மீன் கடவுளை வழிபட விரும்பினால், அது அவரை ஒரு பெரிய மீனாக எண்ணிக்கொள்ளும். மனிதன் ஆண்டவனை மனித ராகவே நினைக்க வேண்டும். இவை வெறும் கற்பனையல்ல. நீங்கள், நான், எருமை, மீன் எல்லாம் பல்வேறு பாத்திரங்கள். இவை அனைத்தும் கடலுக்குச் செல்கின்றன. தங்கள் அளவுக் கேற்றவாறு தங்களுள் நீரை நிறைத்துக் கொள்கின்றன. மனித னில் மனிதனுக்கேற்றபடி, எருமையில் எருமைக்கேற்றபடி, மீனில் மீனுக்கேற்றபடி- ஒவ்வொரு பாத்திரத்திலும் தண்ணீர் தான் உள்ளது. அதேபோல்தான் எல்லோரிலும் உள்ள கடவுள் விஷயமும். மனிதன் அவரைப் பார்க்கும்போது மனிதனாகப் பார்க்கிறான். மிருகங்கள் அவரை மிருகமாகப் பார்க்கின்றன. எல்லோரும் தங்கள் எண்ணப்படியே பார்க்கின்றனர். அவரை இந்த ஒரு வழியில்தான் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் அவரை மனிதராகவே வழிபட வேண்டும். ஏனெனில் வேறு வழி இல்லை.
இரண்டு வகையான மனிதர்கள் கடவுளை மனிதராக வழிபடுவதில்லை. ஆன்மீக வாசனையே அற்ற மனித மிருகங்கள் ஒரு வகையினர்; மானிட வாழ்விற்கு அப்பால் சென்று, மனத் தையும் உடலுணர்வையும் துறந்து, இயற்கையின் வரம்பைக் கடந்த பரமஹம்சர்கள் இரண்டாவது வகையினர். இயற்கை முழுவதுமே அவர்களது ஆன்மா ஆகிவிட்டது. அவர்களுக்கு மனமோ உடலுணர்வோ இல்லை. அவர்கள் ஒரு ஏசுவையோ புத்தரையோபோல், கடவுளைக் கடவுளாக வழிபட முடியும்! அவர்கள் அவரை மனிதராக வழிபடவில்லை . இதற்கு எதிர் கோடியில் இருப்பவன் மனித மிருகம்.
ஒன்றுக்கொன்று எதிர்கோடியில் இருப்பவை ஒரேபோல் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். அறியாமையின் கோடியில் இருப்பவனும் அறிவின் கோடியில் இருப்பவனும் இவ்வாறுதான்- இருவருமே யாரையும் வழிபடுவதில்லை. வெறும் முட்டாள், கடவுளை வழிபடுவதில்லை. ஏனெனில் அதன் அவசியத்தை உணரும் அளவுக்கு அவன் வளர்ச்சி அடையவில்லை. மிக உயர்ந்த ஞானத்தைப் பெற்றவன் கடவுளை வழிபடுவதில்லை . அவன் அனுபூதி பெற்றுக் கடவு ளோடு ஒன்றாகிவிட்டான். கடவுளே கடவுளை ஒருபோதும் வழிபடமாட்டார். இந்த இரு துருவ நிலைகளுக்கு இடையில் உள்ள யாராவது, தான் கடவுளை மனிதனாக வணங்கப் போவ தில்லை என்று சொன்னால், அவன் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். அவன் ஒரு விடலை. அவன் கூறும் மதம் நுனிப் புல் மேய்பவர்களுக்கு உரியது. அது வெறும் அறிவுப் பிதற்றல்.
        எனவே இறைவனை மனிதனாக வழிபடுவது மிகவும் இன்றியமையாதது. எந்த இனங்களுக்குத் தாங்கள் வழிபடு வதற்கு அத்தகைய ‘இறை மனிதர்’ இருக்கிறாரோ, அவர்கள் பேறு பெற்றவர்கள். கிறிஸ்தவர்களுக்கு ஏசு என்னும் இறை மனிதர் இருக்கிறார். ஆகவே அவர்கள் அவரை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும், ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. கடவுளைக் காண அதுதான் இயல்பான வழி-மனிதனில் கடவுளைக் காண்பது. கடவுளைப்பற்றிய நம் எல்லா கருத்துக் களும் அங்கே ஒருமுனைப்பட முடியும். ஆனால் கிறிஸ்தவர் களுடைய ஒரு பெரிய முட்டுக்கட்டை என்னவென்றால், ஏசுவைத் தவிர பிற இறைமனிதர்களை மதிக்காமல் இருப் பதே. ஏசு ஓர் அவதார புருஷர். அவரைப் போன்றவரே புத்தர். இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பார்கள். இறை வனை எங்குமே எல்லைப்படுத்தாதீர்கள். இறைவனுக்குச் செலுத்த வேண்டிய எல்லா மரியாதையையும் கிறிஸ்தவர்கள் ஏசுவிற்குச் செலுத்த வேண்டும். அவர்களால் முடியக்கூடிய ஒரே வழிபாடு அதுவே. இறைவனை வழிபட இயலாது. பிர பஞ்சம் முழுவதிலும் அவர் நிறைந்துள்ளார். அவர் மனிதனாக அவதரிக்கிறார்; அந்த அவதார புருஷரிடமே நாம் பிரார்த்திக்க முடியும். கிறிஸ்தவர்கள் ‘ஏசுவின் பெயரால்’ பிரார்த்திப்பது நல்லது. கடவுளிடம் பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டு, ஏசுவிடம் மட்டுமே பிரார்த்திப்பது இன்னும் நல்லது.
மனிதனது குறைபாடுகள் இறைவனுக்குத் தெரியும். எனவே ‘அறம் தேய்ந்து மறம் எப்போது மேலிடுகிறதோ அப் போது மனித குலத்திற்கு உதவ நான் வருகிறேன்’ என்று கிருஷ்ணர் கூறுகிறார். ‘எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த நான், இந்தப் பிரபஞ்சத்திற்குக் கடவுளான நான் மனித உடல் தரித்து வந்திருக்கிறேன் என்பதை உணராத முட்டாள்கள், அது எப்படி முடியும் என்று என்னை ஏளனம் செய்கிறார்கள். அவர்களது மனத்தை அஞ்ஞானக் கருமேகம் மறைத்திருக்கிறது. எனவே அவரில் அவர்களால் உலக நாயகனான இறைவனைக் காண முடியாது. 
இறைவனின் இத்தகைய மாபெரும் அவதாரங்களை வழிபட்டாக வேண்டும். வழிபட்டாக வேண்டும் என்றல்ல, அவர்களை மட்டுமே வழிபட இயலும். அவர்கள் பிறந்த நாளும், உலகை விட்டுச் சென்ற நாளும் மிகவும் பயபக்தியோடு நினைக்க வேண்டிய நாட்கள். ஏசு எப்படிக் கடவுளை வழிபட வேண்டுமென்று விரும்பினாரோ, அப்படியே நான் அவரை வழிபடுவேன். அவர் பிறந்த அந்தப் புனித நாளில், விருந்து உண்பதைவிடப் பட்டினி கிடந்து பிரார்த்தனை செய்வதையே நான் விரும்புவேன். அவர்களைப்பற்றி அடிக்கடி நினைக்கும் போது அந்த மகா புருஷர்கள் நம் இதயத்தில் வெளிப்படு கிறார்கள்; அவர்களைப் போலவே நம்மையும் ஆக்குகிறார்கள். நமது இயல்பு முற்றிலுமாக மாறி நாமும் அவர்களைப்போல் ஆகிவிடுகிறோம்.
ஆனால் புத்தரையும் ஏசுவையும் காற்றில் மிதந்து திரியும் ஆவிகளோடு சேர்த்துவிடாதீர்கள். அது தெய்வ நிந்தனை. தங்கள் ரகசியக் கூட்டத்திற்கு (Seance) ஏசுவின் ஆவி நடனமாட வருகிறது என்று பிதற்றித் திரிகின்ற கூட்டத்தினரை நான் இந்த நாட்டில் கண்டேன். அவதார புருஷர்கள் அவ்வாறு வருவதில்லை. அவர்கள் ஒருவனைத் தொட்டால் போதும், அவனில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏசு தொடும் போது, அவனது மனம் முழுவதும் மாறுகிறது. அவனும் அவ ரைப் போலவே மாறிவிடுவான். அவனது வாழ்க்கை ஆன்மீக மயமாகிவிடும். ஆன்மீகசக்தி, அவனது மயிர்க்கால்தோறும் வெளிவரும்.
ஏசு நோய்களைக் குணப்படுத்தியதிலும், அற்புதங் களைச் செய்வதிலும் வெளிப்பட்ட சக்தி எத்தகையது? அவை சாதாரணமான இழிந்த சக்திகள். அவற்றை அவரால் வெளிப் படுத்தாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவர் இழிந்த மக்களோடு வாழ வேண்டியிருந்தது. இந்த அற்புதங்களை அவர் எங்கே நிகழ்த்தினார்? யூதர்களிடையே. யூதர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அது எங்கே நிகழவில்லை? ஐரோப்பாவில். தம்மை ஏற்காத யூதர்களிடையேதான் அவர் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்; ஏற்றுக்கொண்ட ஐரோப்பாவிற்கு மலைப் பிரசங்கத்தை அளித்தார். சிந்தனைசக்தி படைத்த மனிதன் உண்மையை ஏற்றுக் கொண்டான்; பயனற்றதை உதறித் தள்ளினான்.
ஏசுவின் பேராற்றல், அவர் அற்புதங்கள் நிகழ்த்தியதிலோ நோயாளிகளைக் குணப்படுத்தியதிலோ இல்லை. இவற்றை எந்த மடையனும் செய்யலாம். எந்த முட்டாளும் பிறரைக் குணப்படுத்த முடியும். பிசாசுகள் மற்றவர்களைக் குணப் படுத்த முடியும். பேய்பிடித்த கொடூரமான மனிதர்கள் பிரமிப் பூட்டுகின்ற அற்புதங்கள் நிகழ்த்துவதை நான் பார்த்திருக் கிறேன். அவர்கள் பூமியிலிருந்து பழங்களைக் கொண்டு வரு வார்கள். முட்டாள்களும் பேய்பிடித்தவர்களும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும்பற்றிக் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். கொடிய வியாதிகளைக்கூட மடை யர்கள் தங்கள் ஒரு பார்வையினால், தங்கள் மனோ சக்தியால் குணப்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். இவையும் உண்மை யில் சக்திகள்தான். ஆனால் இவை பேய்களின் சக்திகள். முதலில் கூறியது, ஏசுவின் ஆன்மீக சக்தி. அது எல்லோரையும் அணைத் துச் செல்கின்ற பேரன்பின் சக்தி. அது எல்லாம் வல்ல சக்தி. அது எப்போதும் வாழும்; வாழ்ந்திருக்கிறது. அவர் அருளிய உண்மையும் என்றும் நிலைக்கும். அவர் ஒரே பார்வையில் குணப்படுத்தியவை மறந்து போகலாம். ஆனால் அவர் கூறிய, ‘இதயத் தூய்மை உடையவர்கள் பேறு பெற்றவர்கள்’ என்ற போதனை இன்றும் வாழ்கிறது. அது அழிவற்ற பேராற்றலின் இருப்பிடம். மனிதன் வாழும்வரை அது ஆற்றலை வழங்கிக் கொண்டேயிருக்கும். இறைவனின் திருநாமத்தை மனிதன் மறக்காததுவரை அது தொடர்ந்து விளங்கிக் கொண்டிருக்கும். ஏசுவிற்கு இருந்த சக்திகளும், அவர் பிறருக்குப் போதித்த ஆற்றல்மிக்க சொற்களும் இவையே. அவரது ஆற்றல் தூய்மை யின் ஆற்றல், நிலையான ஆற்றல். எனவே அவரை வழிபடும் போது, அவரிடம் பிரார்த்தனை செய்யும்போது, நாம் எதைத் தேடுகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அற்புதங்கள் செய்வதற்கான மூடச்க்தியை நாம் தேடக் கூடாது. மனிதனுக்கு முக்தி அளிக்கின்ற, இயற்கைமீது ஆணை செலுத் தும் ஆற்றலை வழங்குகின்ற, அவனது அடிமைச் சின்னத்தை அகற்றி இறைக் காட்சியை நல்குகின்ற அந்த அற்புத ஆன்ம சக்தியையே நாம் நாட வேண்டும்.

பக்தியோகம் 2

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
அ. ஆரம்பநிலைப் பாடங்கள்
2. முதற்படிகள்

    இறைவனிடம் கொள்ளும் ஆழ்ந்த அன்புதான் பக்தி என்று பக்தி ஆச்சாரியர்கள் பக்தியை. விளக்குகின்றனர். எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். இதை நாம் அறிந்துகொள்ளாத வரையில், இந்த விஷயத்தைப்பற்றி எதுவுமே புரிந்துகொள்ள முடியாது. ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட இரண்டு லட்சியங்கள் வாழ்க்கையில் உள்ளன. எந்த நாட்டைச் சேர்ந்த வர்களாயினும், எந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆனாலும் எல்லோரும் அறிந்த ஓர் உண்மை , மனிதன் உடல் மட்டுமல்ல, ஆன்மாவும்கூட என்பதாகும். ஆனால் மானிட வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் உள்ளன.

மேலை நாட்டினர் பொதுவாக மனிதனின் உடல் விஷயங் களில் அதிக அக்கறை காட்டினர். இந்தியாவின் பக்தி ஆச் சாரியர்கள் அவனது ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுக் கிறார்கள். இந்த வேறுபாடு கீழ்த்திசைக்கும் மேல்திசைக்கும் இயல்பாக அமைந்துள்ளதுபோல் தோன்றுகிறது. அன்றாடப் பேச்சு வார்த்தைகளிலும் இதையே நாம் காண்கிறோம். இங் கிலாந்தில் மரணத்தைக் குறிப்பிடும்போது, அவன் உயிரைத் துறக்கிறான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலோ, அவன் உடலைத் துறக்கிறான் என்று குறிப்பிடுகின்றனர். மனிதன் என் பவன் உடல், அதில் ஆன்மா உள்ளது என்பது முதல் கருத்து. மனிதன் ஆன்மா, அந்த ஆன்மாவிற்கு உடல் உண்டு என்பது இரண்டாவது கருத்து.

இதிலிருந்து சிக்கலான பிரச்சினைகள் பல எழுகின்றன. மனிதன் ஓர் உடல், அதில் உயிர் உள்ளது என்ற கொள்கையினர் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மனிதன் ஏன் வாழ்கிறான் என்று அவர்களைக் கேட்டால், உடைமைகள், சொத்து, உறவு முதலியவற்றால் இன்பம் பெறுவதற்கே என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.

இதைவிட மேலானது ஒன்று உள்ளது என்பதைச் சொன் னாலும் மனிதன் புரிந்துகொள்ள மாட்டான். அதனை அவ னால் கனவுகூடக் காண முடியாது. இந்த இன்ப நுகர்ச்சியின் தொடர்ச்சியே எதிர்கால வாழ்க்கை என்பதுதான் அவனது கருத்து. அந்த இன்பங்களை அனுபவித்தவாறு எப்போதும் இங்கேயே தொடர்ந்து இருக்க முடியவில்லை, உலகை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்று அவன் மிகவும் வருந்துகிறான். எனவே எப்படியாவது இதே இன்பம் தொடர்ந்து கிடைக்கக் கூடிய ஓரிடத்திற்கு தான் போகக்கூடுமென்று கருதுகிறான். அங்கு இதே இன்பங்கள், இதே புலன் நுகர்ச்சிகள் இன்னும் அதிகமாக உயர்ந்த அளவில் தனக்குக் கிடைக்கும் என்று நம்பு கிறான். இந்த இலக்கை அடையக் கடவுள்தான் வழி. எனவே அவரை வழிபட விரும்புகிறான். அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் புலனின்பம்தான். இந்த இன்பங்களை நீண்டகாலக் குத்தகைக்குத் தருபவர் இறைவன் என்று நம்புவதால் அவரை வழிபடுகிறான். 

    ஆனால் வாழ்க்கையின் லட்சியம் இறைவன். அவருக்கு அப்பாற்பட்டது வேறு ஒன்றுமில்லை. இப்பொழுது அனுப விக்கும் புலனின்பங்கள், எதிர்காலத்தில் மேலான ஒன்றைப் பெறுவோம் என்ற நோக்குடன் தற்காலிகமாக அனுபவித்துக் கொண்டிருப்பவையே-இதுவே இந்தியர்களின் கருத்து. அது மட்டுமல்ல; இந்தப் புலனின்பங்களே எல்லாம் என்று எண்ணி னால், அது மிகவும் பயங்கரமானது, அழிவிற்கே வழிவகுப்பது ஆகும். புலனின்ப நாட்டம் குறையும் அளவிற்கு மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது என்பதை நாம் அன்றாட வாழ்க்கை யில் காண்கிறோம். ஒரு நாய் உண்ணும்போது கவனியுங்கள், அது உணவில் மகிழ்ச்சியடைவதுபோல் எந்த மனிதனும் அடை வதில்லை. இன்பத்தோடும் இடையிடையே உறுமிக்கொண்டும் தின்னும் பன்றியைப் பாருங்கள். அவ்வளவு திருப்தியோடு உண்கிற எந்த மனிதனும் இவ்வுலகில் பிறக்கவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள மிருகங்களுடைய கேட்கும் ஆற்றலையும், காணும் ஆற்றலையும் நினைத்துப் பாருங்கள். அவற்றின் புலன் ஆற்றல்கள் மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளன. அவற்றின் புல னின்பம் வரம்பு கடந்தது. இன்பத்தினாலும் மகிழ்ச்சியினாலும் அவை பித்தேறியவை ஆகிவிடுகின்றன. மனிதன் தாழ்ந்த நிலையில் இருக்கும் அளவிற்கு புலனின்பத்தில் இன்பம் காண் கிறான். மேலே உயரஉயர, பகுத்தறிவும் அன்பும் அவனது வாழ்க்கையின் குறிக்கோளாகின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப அவனது புலனின்ப நாட்டம் குறைகிறது.    இதை ஓர் உதாரணம் கூறி விளக்குகிறேன். ஒருவனுக்குக் குறிப்பிட்ட அளவு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதை அவன் உடல், உள்ளம், ஆன்மா இவற்றிற்காகச் செலவு செய்யலாம். இவற்றுள் ஏதாவது ஒன் றிற்கு எவ்வளவு சக்தியைச் செலவிடுவானோ, அந்த அளவிற்குக் குறைவாக மற்றவற்றிற்குச் செலவிட வேண்டிவரும். அப்படித் தானே! அறிவற்ற காட்டுமிராண்டி மக்களுக்கு நாகரீக மக்களை விடப் புலனின்ப நாட்டத்திற்கான ஆற்றல்கள் மிக நுட்ப மானவை. ஒரு சமுதாயம் நாகரீகம் அடைய அடைய, அதன் மக்களுடைய நரம்பு அமைப்புகள் நுட்பமாகின்றன. அதே வேளையில் அவர்கள் உடல்ரீதியாகப் பலவீனம் அடை கிறார்கள் என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம். ஒரு காட்டுமிராண்டி இனத்திற்கு நாகரீகம் அளித்துப் பாருங்கள், அப்போது இந்த உண்மையைக் காண்பீர்கள். இன்னொரு காட்டுமிராண்டி இனம் தோன்றி, நாகரீகம் பெற்ற இந்த இனத்தை வெற்றி கொண்டுவிடும். காட்டுமிராண்டிகளே ஏறக் குறைய எப்போதும் வெற்றி பெறுகிறார்கள்.
எனவே எந்நேரமும் புலனின்பத்தையே நாடினால் நாம் மிருகநிலைக்கு இழிந்துவிடுவோம். புலனின்பங்களை இன்னும் அதிகமாக, இன்னும் தீவிரமாக அனுபவிக்கத்தக்க ஓரிடத்திற்குப் போக வேண்டுமென்று ஒருவன் கேட்கும்போது, தான் உண்மை யில் என்ன கேட்கிறோம் என்பது புரியாமல் அவன் கேட் கிறான். மிருகநிலைக்குச் சென்றால்தான் அதைப் பெற முடியும் என்பதை அவன் உணர்வதில்லை. தான் அசுத்தமான பொருளை உண்பதாக ஒருபோதும் பன்றி நினைப்பதில்லை. பன்றிக்கு அதுதான் சொர்க்கம். மிகப் பெரிய தேவதை வந்தால்கூடப் பன்றி ஏறெடுத்தும் பார்க்காது. அதன் வாழ்க்கையே உண்பதில் தான் உள்ளது.
புலனின்பம் நிறைந்த ஒரு சொர்க்கத்தை விரும்பும் மனிதனின் நிலைமையும் இத்தகையதே. அவர்கள் பன்றிகள் போல் சிற்றின்பச் சேற்றில் புரண்டுகொண்டு அதற்கு அப்பால் எதையும் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேண்டுவதெல்லாம் புலனின்பம்தான். அதை இழந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்தையே இழந்தது போல்தான். பக்தன் என்ற வார்த்தை உண்மையில் எதைச் சுட்டி நிற்கிறதோ, அத்தகைய மேலான பக்தர்கள் ஆக இவர்களால் ஒருபோதும் முடியாது. இவர்களால் ஆண்டவனிடம் ஒருபோதும் உண்மை யான அன்பு வைக்க முடியாது. ஆனால் சிறிது காலம் இந்தக் கீழான லட்சியத்தைப் பின்பற்றி வரும்போது நாளடைவில் மாற்றம் ஏற்படவே செய்யும். தனக்குத் தெரியாத உயர்ந்த ஒன்று உள்ளது என்பதை ஒவ்வொருவனும் உணரவே செய் வான். வாழ்க்கையின்மீதும், புலனின்பப் பொருட்களின்மீதும் அவனுக்குள்ள பற்று படிப்படியாக மறையும். 
            நான் சிறுவனாக இருந்தபோது பள்ளியில் ஒருநாள் மிட்டாயோ அல்லது வேறு எதற்காகவோ என் பள்ளித் தோழன் ஒருவனோடு சண்டையிட நேர்ந்தது. அவன் நல்ல பலசாலி. என் கையிலிருந்ததைப் பிடுங்கிக் கொண்டான். அப் போது எனக்கிருந்த உணர்ச்சி இன்னும் நினைவில் இருக்கிறது. ‘உலகிலேயே மிகக் கொடியவன் இவன்தான்’ என்று நினைத் தேன் நான். நானும் போதிய அளவு பலசாலியானதும் அவனைத் தண்டிக்க வேண்டும் என்று முடிவுசெய்து கொண்டேன். அவன் செய்த குற்றத்திற்கு ஈடாக என்ன தண்டனை கொடுப்பது என்று என்னால் முடிவுசெய்ய முடியாத அளவிற்கு அவனது குற்றம் அன்று எனக்குப் பெரிதாகப் பட்டது. பிறகு நாங்கள் இருவருமே வளர்ந்து பெரியவர்கள் ஆனோம். இப்போது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம்.
        ஆகவே உண்பது, உறங்குவது, இன்னும் இவைபோன்ற புலனின்பங்கள்தான் எல்லாம் என்று கருதுகின்ற வெறும் குழந்தைகளே உலகம் முழுவதும் உள்ளனர். அந்தப் புலனின் பங்களில் சிறு துளியை இழக்க நேர்ந்தால்கூட, அது அவர் களுக்குப் பொறுக்க முடியாததாக இருக்கிறது. அவர்கள் தின் பண்டங்கள் பற்றியே கனவு கண்டு கொண்டிருப்பார்கள். எதிர் கால வாழ்க்கை என்றால் அவர்களைப் பொறுத்தவரை அது தின்பண்டங்கள் ஏராளம் கிடைக்கின்ற ஓர் இடம், அவ்வளவு தான். வேட்டையாடுவதற்குப் போதிய வாய்ப்புள்ள இடத்தில் தான் தனது எதிர்கால வாழ்வு தொடர வேண்டும் என்று நம்புகின்ற செவ்விந்தியனை நினைத்துப் பாருங்கள். தங்கள் சொர்க்கம் எப்படி இருக்க வேண்டும் என்று நம் ஒவ்வொரு வருக்கும் ஒரு கருத்து உண்டு. ஆனால் நாளடைவில் நாம் வளர்ச்சியடைந்து, உயர்ந்த விஷயங்களைக் காணும்போது, இவை எல்லாவற்றிற்கும் அப்பால் உள்ளவற்றின் கணநேரக் காட்சிகளைக் காண்கிறோம்.
        ஆனால் மறுவுலக வாழ்வு அது இது என்று எதையும் நம்ப மாட்டோம் என்று தற்காலத்தில் செய்கிறார்களே, அது போல் எதிர்கால வாழ்க்கையைப்பற்றிய நம் கருத்துக்களை உதறித் தள்ள வேண்டாம். அது அழிவு. இவ்வாறு எல்லா வற்றையும் அழிக்கும் ஆஜ்ஞேயவாதி தவறான வழியில் செல் கிறான். பக்தன் இன்னும் உயர்ந்தவற்றைக் காண்கிறான். ஆஜ்ஞேயவாதிக்குச் சொர்க்கம் என்று ஒன்றில்லை. அதனால் அவன் அங்கே போக விரும்புவதில்லை. ஆனால் பகவானின் பிள்ளையான பக்தனுக்கோ அது குழந்தை-விளையாட்டு என் பது புரிந்துவிட்டதால் அவன் சொர்க்கத்திற்கு செல்ல விரும்பு வதில்லை. அவனுக்கு வேண்டுவதெல்லாம் இறைவன் ஒருவனே.        இறைவனைவிட உயர்ந்த லட்சியம் வேறு என்ன இருக்க முடியும்? அவனே மனிதனின் மிக உயர்ந்த லட்சியம். அவனைப் பாருங்கள்; அவனிலேயே இன்பம் காணுங்கள். இதைவிட உயர்ந்த ஒன்றை நாம் ஒருபோதும் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாது. ஏனெனில் அவன் பரிபூரணமானவன். அன்பைவிடச் சிறந்த இன்பத்தை நாம் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் இந்த அன்பு’ என்பதற்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அது உலகில் காணப்படும் சாதாரண தன்னலப் பற்று அல்ல. தன்னலப் பற்றை அன்பு என்று கூறுவது அபத்தம். நம் மனைவிமக்கள்மீது நாம் காட்டும் அன்பு மிருகநிலையில் உள்ளது. முற்றிலும் தன்னலம் கருதாத அன்பே அன்பு. அத்தகைய அன்பு கடவுளின் அன்பே. அதை அடைவது மிகவும் கடினம்.
        குழந்தை, தாய், தந்தை என்று பலரை நேசிக்கிறோம். அதாவது அன்பின் இத்தகைய பலவகையான நிலைகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அன்பு காட்ட நாம் படிப்படியாகப் பயின்று கொண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் இதிலிருந்து நாம் எந்தப் படிப்பினையையும் பெறுவதில்லை. ஏதாவது ஒருவரிடமோ அல்லது ஒரு நிலை யிலோ கட்டுண்டுவிடுகிறோம். சிலர் இந்த வலையிலிருந்து விடுபடுகிறார்கள். மனிதன் எப்போதும் மனைவி, செல்வம், புகழ் இவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான். சில வேளைகளில் அவன் தலையில் பலத்த அடி விழுகிறது. அப் போது இந்த உலகம் உண்மையில் என்ன என்பதை உணர்கிறான். இறைவனைத் தவிர வேறு எதையும் யாராலும்         உண்மையில் நேசிக்க இயலாது; மானிட அன்பு எவ்விதச் சாரமும் அற்றது, வெறுமையானது என்பதை மனிதன் உணர்கிறான். மனிதனால் நேசிக்க இயலாது, எல்லாம் பேச்சுடன் சரி. மனைவி தன் கணவனை நேசிப்பதாகக் கூறி அவனை அணைத்து முத்தமிடு கிறாள். ஆனால் அவன் இறந்தால் முதலில் அவள் நினைப்பது அவனது வங்கிக்கணக்கு எவ்வளவு, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது பற்றித்தான். கணவன் மனைவியை நேசிக் கிறான். ஆனால் அவள் உடல்நலம் குறைந்து அழகு குன் றினாலோ, விகாரமடைந்தாலோ, ஒரு தவறு செய்தாலோ அவ்வளவுதான், அவளை ஒதுக்கத் தொடங்கிவிடுவான். உலகில் நாம் காணும் அன்பு அனைத்தும் வெறும் வெளிவேஷமே, வெறுமையே.
        எல்லைக்கு உட்பட்ட ஒன்று அன்பு செய்ய முடியாது. எல்லைக்கு உட்பட்ட ஒன்றின்மீது அன்பு காட்டவும் முடியாது. மனிதனால் விரும்பப்படும் பொருட்கள் கணந்தோறும் அழிந்து கொண்டிருக்கின்றன; அவன் வளரவளர அவனது மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது. அப்படியிருக்கும்போது நிலை யான அன்பை இந்த உலகில் எதிர்பார்க்க முடியுமா? இறைவன் மீதுள்ள அன்பைத் தவிர வேறு எந்த அன்பும் நிலையாக இருக்க முடியாது. எனவே பலவகைப்பட்ட இந்த அன்புகள் எதற்காக? இவை யாவும் வெறும் படிகள் மட்டுமே. நமக்குப் பின்னால் ஒரு சக்தி இருந்துகொண்டு, அன்பு என்ற ஒன்றை நோக்கி நம்மை உந்தித் தள்ளிக்கொண்டு செல்கிறது. உண்மைப் பொருளை எங்கே தேடுவது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நமது இந்த அன்பு அதைத் தேடிச் செல்வதற்காக நம்மை முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது. நாம் திரும்பத் திரும்ப நமது தவறை உணர்கிறோம். ஏதோ ஒன்றைப் பற்று கிறோம், அது நமது பிடியிலிருந்து நழுவிவிடுகிறது. உடனே இன்னொன்றைப் பற்றுகிறோம். இவ்வாறு முன்னேறிச் செல் கிறோம். இறுதியில் வருகிறது ஒளி. நம்மை நேசிக்கும் ஒரே ஒருவரான ஆண்டவனிடம் நாம் வருகிறோம். அவனது அன்பு ஒருபோதும் மாறாதது. எப்போதும் நம்மை அரவணைக்கத் தயாராக இருப்பது.
        நான் உங்களைத் துன்புறுத்தினால் எவ்வளவு காலம் என்னை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்கள்? யாரிடம் கோபம், வெறுப்பு, பொறாமை எதுவும் இல்லையோ, யார் எப்போதும் சமநிலையில் இருப்பாரோ, யாருக்குப் பிறப்பு இறப்பு இல் லையோ அவரால் மட்டுமே அது முடியும். அப்படிப்பட்டவர்ஆண்டவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? ஆனால் இறைவனை அடையும் வழி மிக நீண்டது; மிகக் கடினமானது. ஏதோ ஒருசிலரே அவனை அடைகிறார்கள். 
        நாம் தட்டுத்தடுமாறும் வெறும் குழந்தைகள். இந்த அன்புநெறியை கோடிக்கணக்கானோர் வியாபாரச் சரக்காகக் கருதுகிறார்கள். எல்லோரும் இதைப்பற்றிப் பேசுகின்றனர், ஆனால் ஒருசிலரே அடைகின்றனர்.  ஒரு நூற்றாண்டில் ஏதோ ஒருசிலரே அந்த இறையன்பைப் பெறுகின்றனர். அவர்கள் வாயிலாக நாடு முழுவதும் ஆசிபெற்றுப் புனிதம் அடைகிறது. எப்படிச் சூரியன் உதித்ததும் இருள் அகல்கிறதோ, அதுபோல் அவதார புருஷர் ஒருவர் தோன்றும்போது, நாடே பேறு பெற்றுப் புனிதம் அடைகிறது. உலகம் முழுவதிலும் ஒரு நூற் றாண்டில் ஏதோ ஒருசிலரே இப்படிப் பிறக்கின்றனர். ஆனால் அந்த அன்பைப் பெற நாம் எல்லோரும் முயல்வோம். யார் கண்டார்கள்! ஒருவேளை இந்தப் பூரணமான அன்பை அடுத்தது பெறப்போவது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். எனவே நாம் முயல்வோம்.
        மனைவி கணவனை நேசிக்கிறாள் என்று சொல்கிறோம். தன் உயிர் முழுவதுமே அவனிடம்தான் ஆழ்ந்து கிடக்கிறது என்று அவள் நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளது அன்பின் பாதியோ, அதிகமோ குழந்தையிடம் செல்கிறது. கணவனிடம் முன்பு இருந்ததுபோல் தனக்கு அன்பு இல்லாததை அவளே உணர்வாள். அதேபோல்தான் தந்தையும். முன்பை விட ஆழ்ந்த அன்பைச் செலுத்த ஓரிடம் கிடைத்தால் பழைய அன்பு மெதுவாக மறையத் தொடங்குகிறது. நீங்கள் சிறுவர் களாக இருந்தபோது தாய்தந்தையர் அல்லது பள்ளித் தோழர்கள் சிலரை இவர்கள்தான் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமானவர்கள் என்று நினைத்தீர்கள். அதற்குப் பிறகு கணவனோ மனைவியோ ஆகும் நிலை வருகிறது. உடனே பழைய உணர்ச்சிகள் பறக்கின்றன, புதிய அன்பு உணர்ச்சிகள் தீவிரம் அடைகின்றன. ஒரு விண்மீன் தோன்றுகிறது, பிறகு இன்னும் பெரிய ஒன்று தோன்றுகிறது, அதன்பிறகு அதை விடப் பெரியது ஒன்று தோன்றுகிறது. இறுதியில் சூரியன் தோன்றியதும் சிறு ஒளிகள் அனைத்தும் மறைகின்றன. அந்தச் சூரியனே கடவுள். விண்மீன்களே சிறிய அன்புகள். அந்த இறையொளி மனிதன்மீது படும்போது, ஒருவன், எமர்சன் கூறுவதுபோல் ‘இறைப்பித்தன்’ (God-intoxicated man) ஆகிறான், இறுதியில் கடவுளாக மாறுகிறான். அந்த அன்புக் கடலில் எல்லாம் கரைந்துவிடுகின்றன. சாதாரண அன்பு என்பது வெறும் மிருகக் கவர்ச்சிதான்; இல்லையேல் அதில் ஏன் ஆண்-பெண் வேறுபாடு இருக்க வேண்டும்? ஒருவன் ஓர் உருவத்தின் திருமுன்னர் மண்டியிட்டுத் தொழுதால், அது கொடுமையான உருவ வழிபாடாம்! மனைவி அல்லது கணவன் முன்னால் முழங்காலிட்டால் அது சிறந்தது, போற்றத்தக்கது, அதில் எவ்விதத் தவறும் இல்லையாம்! – 
        இந்தச் சிறுசிறு ஆசைகளை நாம் கடந்தாக வேண்டும். முதலில் நம்மை நாம் தயாராக்கிக் கொள்ள வேண்டும். நாம் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறோமோ, அதைப் பொறுத்தே அன்பைப்பற்றிய நமது கருத்தும் அமையும். இந்த உலக வாழ்க்கையையே நமது நோக்கமாகவும் முடிவாகவும் கொண் டால், அது மிருகத்தனமானது, தரம் தாழ்ந்தது. அந்த எண் ணத்துடன் வாழ்க்கையைத் தொடங்குபவன் தன்னைத்தானே சீரழித்துக் கொள்கிறான். அதிலிருந்து அவனால் உயரே செல்ல முடியாது. எல்லாவற்றிற்கும் பின்னால் நிற்கும் ஒளியை அவ னால் காண முடியாது. அவன் எப்போதும் புலன்களுக்கு அடிமையாகவே கிடப்பான், ஓரிரு கவள உணவிற்கு வேண்டிய பணத்திற்காக போராடிக் கொண்டிருப்பான். இத்தகைய வாழ்வு வாழ்வதைவிடச் சாவதே மேல். நீங்கள் உலகின் அடிமைகள்! புலன்களின் அடிமைகள்! உங்களை விழிப்புணர்த்துங்கள். இத்தகைய புலன்வாழ்வைவிட உயர்ந்த ஒன்று உள்ளது. 
    இந்த மனிதன், இந்த எல்லையற்ற ஆன்மா வெறும் கண், மூக்கு, காது என்று புலன்களுக்கு அடிமையாகக் கிடக்கத் தான் பிறந்தான் என்று நினைக்கிறீர்களா? எல்லையற்ற, எங்கும் நிறைந்த ஓர் ஆன்மா அனைத்திற்கும் பின்னால் உள்ளது. அது எதை வேண்டுமானாலும் செய்ய வல்லது; எல்லா பந்தங் களையும் அகற்ற வல்லது. அந்த ஆன்மாதான் நாம். அந்த ஆன்ம சக்தியை நாம் அன்பினால்தான் அடைகிறோம். இது தான் லட்சியம். இது நன்றாக நினைவில் இருக்கட்டும். நாளையே இதை நாம் அடைந்துவிட முடியாது; அடைந்து விட்டோம் என்று கற்பனை வேண்டுமானால் செய்து கொள்ள லாம். ஆனால் அது வெறும் கற்பனைதான், உண்மை வெகு தொலைவில் உள்ளது.
மனிதன் எந்த நிலையில் இருக்கிறானோ, அதனை ஏற்றுக் கொண்டு, முடியுமானால் அங்கிருந்து அவன் முன்னேற உதவ வேண்டும். அவன் உலோகாயதத்தில் ஊன்றி நிற்கிறான். நீங் களும் நானும் எல்லோரும் உலோகாயதவாதிகளே. இறைவன், ஆன்மா என்றெல்லாம் நாம் பேசுவது நல்லதுதான். ஆனால் அவை சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் மட் டுமே. கிளிப்பிள்ளைகள்போல் அவற்றைக் கேட்டுப் பேசுகிறோம். எனவே இப்போது நாம் உலோகாயதவாதிகளே என் பதை ஒப்புக்கொண்டு, தேவைப்படுமானால் ஜடப்பொருளின் துணையை ஏற்றுக்கொண்டு படிப்படியாகச் செல்வோம்; உண்மையான ஆன்மீகவாதிகளாகத் திகழும்வரை, நாம் ஆன்மா என்பதை உணரும்வரை, அந்த ஆன்மாவைப் புரிந்துகொள்ளும் வரை, எல்லையற்றது என்று கூறும் உலகம் என்பது உண்மையில் அதன் பின்னால் நிற்கும் அந்த ஆன்மாவின் தூலமான புறத் தோற்றம் மட்டுமே என்பதை உணரும்வரை முயன்றுகொண்டே செல்வோம். 
அதைத் தவிர வேறு சிலவும் தேவைப்படுகின்றன. ஏசு நாதரின் மலைப்பிரசங்கத்தில், பின்வருவதை நாம் படிக் கிறோம்: ‘கேளுங்கள் தரப்படும்; தேடுங்கள் கிடைக்கும்; தட் டுங்கள் திறக்கப்படும்’. ஆனால் யார் தேடுகிறார்கள்? யார் விரும்புகிறார்கள்? அதுதான் பிரச்சினை. கடவுளை அறிந் துள்ளதாக நாம் எல்லோரும் சொல்கிறோம். கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க ஒருவன் ஒரு பெரிய நூல் எழுதுகிறான்; இருக்கிறார் என்பதை நிரூபிக்க இன்னொருவன் இன்னொரு நூல் எழுதுகிறான். தன் வாழ்க்கை முழுவதும் இறைவன் இருப்பதை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டுவது தன் கடமை என்று நினைக்கிறான் ஒருவன். இன்னொருவனோ அவர் இல்லை என்று நிரூபிப்பது தன் கடமையென எண்ணு கிறான். எனவே கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து திரிகிறான் அவன். கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ நிரூபிக்க நூல்களை எழுதித் தள்ளுவதால் என்ன பயன்? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப்பற்றிப் பெரும் பாலோர் கவலைப்படுவதே இல்லையே! 
இங்குள்ள மக்களுள் பெரும்பாலோர் காலையில் எழுந் ததும் சிற்றுண்டி அருந்தச் செல்கின்றனர். அதை உண்ணவோ, உடை அணிந்துகொள்ளவோ கடவுள் வந்து உதவி செய் வதில்லை. பின்னர் வேலைக்குச் சென்று நாள்முழுவதும் உழைத் துப் பணம் சம்பாதிக்கிறான். அதை ஒரு வங்கியில் கட்டிவிட்டு வீடு திரும்புகிறான். இரவில் சாப்பிடுகிறான். பிறகு உறங்கச்செல்கிறான். கடவுளைப்பற்றியே சிந்திக்காமல் ஒரு எந்திரம் போல் செயல்படுகிறான். அப்படி ஒருவர் தேவை என்றும் அவன் உணர்வதில்லை . பின்பு ஒருநாள் மரணம், ‘வா’ என்று அழைக்கின்றது. அப்போது, ‘சிறிது காத்திரு. எனக்கு இன்னும் சிறிது காலம் தேவை; என் மகன் இன்னும் சற்று பெரிய வனாகட்டும்’ என்கிறான். ஆனால் மரணமோ, ‘உடனே வா’ என்று கூவுகிறது. இப்படியே எல்லாம் போய்க் கொண்டிருக் கின்றன. பாவம், மனிதனும் இப்படியே வாழ்கிறான். அவனுக்கு நாம் என்ன சொல்ல முடியும்? இறைவனே அனைத்திலும் மிக மேலானவன் என்று அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்க வில்லை. ஒருவேளை அவன் முற்பிறவியில் ஒரு பன்றியாக இருந்து இப்போது சற்று உயர்ந்து மனிதனாகப் பிறந்திருக்கக் கூடும். 
ஆனால் இத்தகையோர் மட்டுமே உலகில் இருக்கிறார்கள் என்றில்லை. சிறிது விழிப்புணர்வு பெற்ற சிலரும் இருக்கவே செய்கிறார்கள். துன்பம் வருகிறது, நாம் மிகவும் நேசிக்கின்ற ஒருவர் இறக்கிறார்; எதைப் பெறுவதற்காக நம் ஆற்றல் அனைத்தையும் செலவிட்டோமோ, எதற்காக உலகனைத்தை யும் வஞ்சித்தோமோ உலகனைத்தையும் என்றல்ல, சொந்த சகோதரனைக்கூட வஞ்சிக்கத் துணிந்தோமோ, எத்தனையோ கொடிய இன்னல்களையும் அவருக்கு இழைக்கத் துணிந்தோமா அது திடீரென்று மறைந்துவிடுகிறது; நம்மீது பேரிடி விழுந்தது போலாகிறது. அப்போது நம் இதய ஆழத்திலிருந்து ஒரு குரல் எழுகிறது; ‘இதற்குப் பின் என்ன?’ என்று அது கேட்கிறது. எந்த மகனுக்காகத் தானும் பட்டினி கிடந்து, பிறரையும் ஏமாற்றி வந்தானோ, அந்த மகன் ஒருவேளை இறந்துவிடுகிறான். அந்தப் பேரிடியால் அவன் விழிப்புணர்வு பெறுகிறான். எந்த மனைவியை அடைய அவன் வெறிபிடித்த காளையைப்போல் எல்லோரிடமும் முட்டிமோதிப் போனானோ, யாருக்காகப் புது ஆடைகளும், நகைகளும் வாங்கப் பணம் சேர்த்து வைத் தானோ, அவள் ஒருநாள் திடீரென்று இறந்து போகிறாள். பிறகு என்ன? சிலவேளைகளில் மரணம் வருகிறது, அது எவ்வித அதிர்ச்சியையும் தராமலே போகிறது. ஆனால் மிகவும் அரி தாகவே அவ்வாறு நிகழ்கிறது. 
 நம் பொருள் கைவிட்டு நழுவும்போது, நம்முள் பெரும் பாலோர், இனி என்ன?’ என்று பதறி ஓலமிடுகிறோம். நாம் புலன்களை எப்படிப் பற்றிக்கொள்கிறோம்! இதனால்தான் துன்பப்படுகிறோம். ஆற்றில் மூழ்கும் ஒருவன், பிடித்துக் கொள்ள வேறு ஒன்றும் கிடைக்காதபோது ஒரு துரும்பைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறான். சாதாரணமாக மனிதனும் இவ்வாறே தனக்கு எதிரில் முதலில் எது கிடைக்கிறதோ அதைப் பற்றிக்கொள்கிறான். அது காப் பாற்றாதபோது யாராவது தனக்கு உதவி புரிய வேண்டுமெனக் கெஞ்சுகிறான். எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்த பிறகு தான் உயர் விஷயங்களைப்பற்றி நினைக்கிறான்.
இந்த பக்திதான் ஆன்மீகம். ஆனால் இது பெரும்பான்மை யோருக்கு உரியது அல்ல. அது முடியாத காரியம். முழங் காலிடுவதும் எழுவதும் அமர்வதும் பெரும்பாலோருக்குத் தக்கனவாக இருக்கலாம். ஆனால் ஆன்மீகம் என்பது ஒரு சில ருக்கே. ஒவ்வொரு நாட்டிலும் ஏதோ ஒருசிலரே ஆன்மீக வாதிகளாக இருக்க முடியும்; பிறரால் முடியாது. அவர்கள் விழிப்புணர்வு பெறாதவர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம். அதை அவர்கள் விரும்புவதும் இல்லை . முதலில் தேவையானது இறைநாட்டம். ஆனால் பொதுவாக நாம் கடவுளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நாடுகிறோம். ஏனெ னில் நமது சாதாரணத் தேவைகளைப் புற உலகம்தான் நமக்குத் தந்துகொண்டிருக்கிறது. நமது தேவைகள் புற உலகைத் தாண்டிச் செல்லும்போதுதான் உள்ளேயிருந்து, அதாவது இறைவனிடமிருந்து நாம் உதவியை எதிர்பார்க்கிறோம். நமது தேவைகள் இந்தப் பிரபஞ்சத்தின் குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்வரையில் கடவுளின் தேவை நமக்கு இருப்பதில்லை. இந்த உலகில் உள்ளவற்றை அனுபவித்துச் சலிப்படைந்த பிறகுதான், இதனைக் கடந்த ஒன்றின் உதவியை எதிர்பார்க் கிறோம். தேவை இருந்தால்தான் உதவி கிடைக்கும். இந்த உலக மாகிய குழந்தை-விளையாட்டை எவ்வளவு விரைவில் முடி யுமோ அவ்வளவு விரைவாக முடித்துவிடு. அதன் பிறகுதான் இதற்கு அப்பால் இருக்கின்ற ஒன்றின் தேவை உனக்கு ஏற்படும். அதுதான் ஆன்மீகத்தின் முதற்படி. 
வெறும் நாகரீகமான ஒருவகை மதம் தோன்றியுள்ளது. என் நண்பரின் விருந்தினர் அறையில் மற்ற பொருட்களுடன் ஜப்பானிய ஜாடி ஒன்றும் உள்ளது. அது நாகரீகமாக இருப்ப தால் பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ளதாக இருந்தாலும், நானும் அதுபோல் ஒன்று வாங்கியாக வேண்டும். அவ்வாறே வெறும் நாகரீகத்திற்காக மதத்தைப் பின்பற்றிக் கோயிலுக்குச் செல்கிறேன். பக்தி இத்தகையோருக்கானது அல்ல. உண்மை யான ‘தேவை’ யிலிருந்துதான் பக்தி பிறக்கிறது. எது இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாதோ, அதுதான் ‘தேவை’. மூச்சு தேவை, உணவு தேவை, உடை தேவை. இவை இல்லாமல் உயிர்வாழ முடியாது. ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கும் போதுகூட அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று சிலவேளைகளில் நினைக்கிறான் அது தவறு. கணவன் இறந்துவிட்டால், அவனில்லாமல் தான் வாழ இயலாது என்று மனைவி கருதுகிறாள்; ஆனால் அவள் வாழவே செய்கிறாள். இதுதான் ‘தேவை’ என்பதன் ரகசியம்; அது இல்லாமல் நாம் வாழ முடியாது, அது நமக்குக் கிடைக்க வேண்டும், அல்லது நாம் இறந்துவிடுவோம்.
உரிய காலம் வரும்போது கடவுளைப்பற்றியும் நாம் இப்படி நினைக்கிறோம். அதாவது இந்த உலகிற்கு அப்பாற் பட்ட ஒன்றை, ஜட சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் தேவையை நாம் உணர்கிறோம். அப்போதுதான் நாம் பக்தர்கள் ஆகிறோம். ஒரு நொடிப் பொழுதாயினும் சரி, மேகங்கள் மறைந்து பரம்பொருளைப்பற்றிய காட்சி கிடைக்கும்போது, அற்ப இன்பங்களெல்லாம் கடலின் சிறு துளியாகத் தோன்றும் போது, ‘என்ன இந்த அற்ப வாழ்க்கை!’ என்ற எண்ணம் பிறக்கிறது. அப்போதுதான் ஆன்மா வளர்கிறது; கடவுளின் தேவையை உணர்கிறது; அவனை அடைந்தே தீரவேண்டும் என்று துடிக்கிறது.
எனவே, ‘நமக்கு வேண்டியது என்ன?’ என்பதே முதற்படி. ‘இறைவன் நமக்கு வேண்டுமா?’ இந்தக் கேள்வியைத் தினமும் நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம். பிரபஞ்சத்திலுள்ள எல்லா நூல்களையும் நாம் படிக்கலாம். ஆனால் பேச்சுத் திறமையினாலோ, மதிநுட்பத்தினாலோ, பற்பல கலைகளைக் கற்பதாலோ இந்த அன்பு மலர்வதில்லை. இறைவனின் தேவையை உணர்பவர்களுக்கே இந்த அன்பு கிடைக்கும். இறைவன் அவர்களுக்கே காட்சி அளிக்கிறான்.
அன்பு, அன்பையே பிரதியாகத் தருகிறது. நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள், நான் உங்களை நேசிக்கத் தொடங்கினாலும் நீங்கள் என்னை வெறுக்கலாம். ஆனால் நான் தொடர்ந்து அன்பு செலுத்தினால், ஒரு மாதத்திலோ ஓராண்டிலோ கண்டிப் பாக நீங்கள் என்னிடம் அன்பு காட்டவே செய்வீர்கள். இது மன இயல் கண்ட உண்மை . மறைந்த கணவனை அன்புமிக்க மனைவி நேசிப்பதுபோல், நாம் இறைவனை நேசிக்க வேண்டும். அப்போது நாம் அவனைக் காண்போம். நூல்களும் சரி, பல்வேறு விஞ்ஞானங்களும் சரி நமக்கு எதையும் கற் பிக்காது. நூல்களைப் படித்தால் கிளிப்பிள்ளைகள் ஆவோம்; நூல்களைப் படிப்பதால் யாரும் அறிஞராவதில்லை. அன்பைப் பற்றிய ஒரு வார்த்தையின் பொருளை ஒருவன் அறிந்தால் போதும், அவன் அறிஞனாகிறான். எனவே அன்பைப் பெறும் ஆசையை முதலில் வளர்க்க வேண்டும்.
‘கடவுள் நமக்குத் தேவையா?’ இதனை நாள்தோறும் நம்மை நாம் கேட்டுக்கொள்வோம். மதத்தைப்பற்றிப் பேசும்போது, குறிப்பாக உயர்ந்த நிலையில் இருந்துகொண்டு மற்றவர்களுக்குக் கற்பிக்கும்போது, இந்தக் கேள்வியைக் கேட் போம். பல நேரங்களில் நமக்கு நாமே, ‘கடவுள் எனக்குத் தேவை இல்லை, உணவுதான் தேவை’ என்றுதான் உணர் கிறோம். சிறிது உணவு கிடைக்காவிட்டால் நான் பைத்தியமாகி விடுவேன். ஒரு வைரமாலை கிடைக்கவில்லை என்றால் பெண் களுள் பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் கடவுளை அடைவதற்கு அவர்கள் அதே அளவு ஆசை கொள்வ தில்லை; உலகில் உள்ளதான ஒரே உண்மையை அவர்கள் உணர்வதில்லை. எங்கள் நாட்டில் ஒரு பழமொழி உண்டு – ‘நான் வேடனாக இருந்தால், காண்டாமிருகத்தை வேட்டையாடுவேன். கொள்ளைக்காரனாக இருந்தால் அரசனின் பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பேன். பிச்சைக்காரர்களிடம் களவாடுவதாலும், எறும்புகளை வேட்டையாடுவதாலும் என்ன பயன்?’ எனவே அன்பு செலுத்த விரும்பினால் இறைவனிடம் அன்பு செலுத்துங்கள். இந்த உலகைப்பற்றி நமக்கென்ன கவலை? 
நான் ஒளிவுமறைவின்றிப் பேசுபவன், ஆனால் எல்லோருக் கும் நன்மையை விரும்புபவன். உங்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். நான் உங்களைப் புகழ்ந்து பேச விரும்பவில்லை. அது என் வேலையும் அல்ல. நீங்கள் என் குழந்தை போன்றவர்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகமே முழுப்பொய். உலகின் ஆச்சாரியர்கள் அனைவரும் இதை உணர்ந்துள்ளனர். கடவுளின் வழியாக அல்லாமல் இந்தப் பொய்யான உலகத் திலிருந்து தப்ப வேறு வழி இல்லை. அவரே நமது வாழ்க்கை லட்சியம். மாறாக இந்த உலகத்தை நமது லட்சியமாகக் காட்டுகின்ற கருத்துக்கள் அழிவையே தருபவை. இந்த உலகத்திற்கும், இந்த உடலுக்கும் உரிய பயனுண்டு; அதாவது இறைவனை அடைய ஒரு சாதனம் என்கிற இரண்டாம் பட்சச் சிறப்பு உண்டு. ஆனால் உலகமே லட்சியமாகிவிடக் கூடாது. துரதிர்ஷ்ட வசமாக, அடிக்கடி நாம் உலகை லட்சியமாகக் கொண்டு, கடவுளைச் சாதனமாகக் கொள்கிறோம். மக்கள் கோயிலுக்குச் சென்று இறைவா! எனக்கு இவற்றையெல்லாம் தருவாய்! எம்பெருமானே, என் நோயைத் தீர்ப்பாய்!’ என்றெல் லாம் முறையிடுவதைக் காண்கிறோம். அவர்கள் ஆரோக்கிய மான நல்ல உடலை விரும்புகின்றனர். அதைக் கொடுப்பதற்காக யாரோ ஒருவர் எங்கோ உட்கார்ந்திருக்கிறார் என்று கேள்விப் பட்டு, அவரிடம் சென்று பிரார்த்திக்கின்றனர். மதம் என்பதைப் பற்றி இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பதைவிட நாத்திக னாக இருப்பதே சிறந்தது.
நான் கூறியதுபோல் இந்த பக்திதான் மிக உயர்ந்த லட்சியம். பலகோடி ஆண்டுகளுக்குப் பிறகாவது நாம் இதை அடைவோமா, மாட்டோமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நமது மிக உயர்ந்த லட்சியமாக அதையே கொள்ள வேண்டும்; நமது புலன்களும் அந்த மிக உயர்ந்ததையே நாடும்படிச் செய்ய வேண்டும். அந்த அறுதி நிலையை அடைய முடியவில்லை என்றாலும் அதன் அருகிலாவது செல்ல வேண் டும். உலகின் வாயிலாகவும், புலன்கள் மூலமாகவும் படிப்படி யாக நாம் இறைவனை அடையப் பாடுபட வேண்டும்.