பக்தியோகம் 1

I. வகுப்புச் சொற்பொழிவுகள்
அ. ஆரம்பநிலைப் பாடங்கள்
1. சாதனைகள் 

    பக்தியோகத்திற்கான மிகச் சிறந்த விளக்கம் பிரகலாதன் கூறிய இதுவாகத்தான் இருக்கும்: ‘நிலையற்ற இந்த உலகப் பொருட்கள் மீது விவேகம் அற்றவர்கள் கொண்டுள்ள அள வற்ற பற்றினை, உன்மீது நீங்காமல் நான் வைக்கத் திருவருள் புரிவாயாக!’

உயர்ந்த எதுவும் இருப்பதை அறியாத மக்கள் புலனின்பப் பொருட்கள்மீதும், செல்வம், உடை, மனைவி, மக்கள், நண்பர்கள், உடைமைகள் இவற்றின்மீதும் தீவிரமான பற்று வைத்திருப்பதை நாம் காண்கிறோம். இவற்றிடம்தான் அவர் களுக்கு எவ்வளவு பற்று! எனவேதான் மேற்கூறிய விளக்கத் தில் அந்த பக்தர், ‘அந்த அளவற்ற பற்றினை, தீவிரப் பிடிப்பை உன்னிடம் கொள்வேன்’ என்கிறார். இந்தப் பற்று இறைவனிடம் செலுத்தப்படும்போது பக்தி ஆகிறது.

பக்தி எதையும் அழிப்பதில்லை. நமக்கு அளிக்கப்பட்டுள்ள திறமைகள் எதுவும் வீணாக அமைந்தவை அல்ல; இவற்றின் வழியே முக்தி பெறுவதுதான் இயற்கையான நெறி என்று பக்தி கற்றுத் தருகிறது.

பக்தி நமது உணர்ச்சிகள் எதையும் அழிப்பதில்லை ; அது இயற்கைக்கு எதிராகச் செல்வதில்லை; ஆனால் அந்த அதே உணர்ச்சிகளை, மனப்போக்குகளை மாற்றி, அவற்றிற்கு உயர்ந் ததும் வலிமை மிக்கதுமான ஒரு பாதையைக் காட்டுகிறது. புலனின்பப் பொருட்களில் நாம் எவ்வளவு இயல்பாகப் பற்று வைக்கிறோம்! அவ்வாறு ஆசை கொள்ளாமல் இருக்க நம் மால் முடியாது; அந்த அளவிற்கு அவை நமக்கு உண்மையாக உள்ளன. பொதுவாக, உயர்ந்த விஷயங்களை எல்லாம் உண்மையானவை என்று நாம் கருதுவதில்லை. புலன்களுக்கு

    அப்பாற்பட்ட, புலனுலகைக் கடந்த உண்மையை ஒருவன் உணர்ந்துவிட்டானானால் அதன்பிறகும் அவனிடம் தீவிரப் பற்று இருக்கலாம். அதன் போக்கை மாற்றி, புலன்கடந்த பொருளாகிய இறைவன்மீது செலுத்த வேண்டும் – இதுதான் கருத்து. முதலில் புலனின்பப் பொருட்களில் வைக்கப்பட்ட பற்று, இறைவன்மீது வைக்கப்படும்போது அது பக்தி என்று அழைக்கப்படுகிறது.

    ஸ்ரீராமானுஜரின் கருத்துப்படி ஆழ்ந்த பக்தியைப் பெறுவதற்கான சாதனைகள் இவை– 

முதலில் விவேகம் — பகுத்தறிவு. குறிப்பாக மேலைநாட் டினருக்கு இது வினோதமாகத் தோன்றலாம். ஸ்ரீராமானுஜரின் கருத்துப்படி விவேகம் என்றால் ‘உணவைப் பகுத்தறிவது.’ உடலுக்கும் மனத்திற்கும் தேவையான சக்திகள் அனைத்தும் உணவில் அடங்கியுள்ளன. நான் உட்கொண்ட உணவு, என் உடலில் பல இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கிரகிக்கப் பட்டு, என் உடலிற்குப் புதிய வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. என் உடலும் மனமும் நான் உட்கொள்ளும் உணவிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல. எப்படி இந்தத் தூல உலகில் நாம் காணும் சக்தியும் ஜடப்பொருளும் நமது மனமாகவும் உடலாகவும் ஆகியுள்ளனவோ, அதுபோல் உடலுக்கும், மனத் திற்கும், உணவுக்கும் இடையே உள்ள அடிப்படை வேற்றுமை யெல்லாம் வெறும் தோற்றத்தில் மட்டும்தான்.

ஆகவே உணவின் தூல மூலக்கூறுகளிலிருந்து நமது எண்ணக் கருவியையும், இந்த மூலக்கூறுகளில் தங்கியுள்ள நுண் ஆற்றல்களிலிருந்து எண்ணங்களையும் நாம் உற்பத்தி செய்கிறோம். அதனால் நம் எண்ணங்களும், எண்ணக் கருவியும் நாம் உண்ணும் உணவிற்கு ஏற்பவே உருவாகின்றன என்பது தெளிவு.

குறிப்பிட்ட சிலவகை உணவுகள் மனத்தில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதை நாம் அன்றாடம் காண்கிறோம். சிலவகை உணவுகள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன; நாளடைவில் மனத்தையும் பெருமளவிற்குப் பாதிக்கின்றன. இதை அறிந்துகொள்வது மிகவும் இன்றியமை யாதது. நமது துன்பங்களில் கணிசமான அளவு, நாம் உண்ணும் உணவின் காரணமாகவே வருகின்றன.

செரிப்பதற்குக் கடினமான உணவை வயிறு புடைக்க உண்டபிறகு மனத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமான செயல் என்பது நீங்கள் அறிந்ததுதான்; மனம் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும். உணர்ச்சிகளைத் தூண்டுகிற சிலவகை உணவுகள் உள்ளன. இவற்றை உண்டால் உங்கள் மனத்தை அடக்கவே இயலாமல் போய்விடும். அளவுக்கதிகமாக ஒயினையோ வேறு ஏதாவது போதைப் பொருட்களையோ அருந்தியவன் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போவதைக் காண்கிறான். அவனது கட்டுக்கு அடங்காமல் மனம் ஓடுகிறது.

ஸ்ரீராமானுஜரின் கூற்றுப்படி உணவிலிருந்து மூன்று விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும். முதலில் ஜாதி தோஷம் அதாவது உணவுப் பொருளின் இயற்கைத் தன்மை அல்லது அதன் வகை. அதை நாம் கவனிக்க வேண்டும். உணர்ச்சியைத் தூண்டக்கூடிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு இறைச்சியைச் சொல்லலாம். இயற்கையாகவே அது அசுத்தமானது. எனவே அதை உண்ணக் கூடாது. இன்னோர் உயிரைக் கொன்றுதான் இறைச்சியைப் பெறுகிறோம். உண்கின்ற அந்த ஒரு கணத்திற்கு நமக்கு இன்பம் கிடைக்கிறது. நமது இந்தக் கணநேர இன்பத்திற்காக, ஒரு பிராணி தன் உயிரையே விடவேண்டியுள்ளது. அது மட்டு மல்ல, இதன் காரணமாக மற்றவர்களையும் நாம் தீயவழியில் செலுத்த நேர்கிறது. இறைச்சி உண்ணும் ஒவ்வொருவனும், அந்த மிருகங்களைத் தானே கொல்ல வேண்டும் என்றிருந் தால் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் அப்படிச் செய் யாமல், இதற்கென்றே ஒரு கூட்டத்தினரைச் சமுதாயம் உரு வாக்குகிறது. பின்னர் அந்தச் செயலுக்காக அவர்களை வெறுக்கவும் செய்கிறது. இந்த நாட்டின் சட்டம் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் இங்கிலாந்தில் கசாப்புக் கடைக்காரன் யாரும் நீதிமன்றத்தில் ஜூரியாக (Jury) ஒருக் காலும் அமர முடியாது. காரணம் இயல்பாகவே அவன் கொடிய உள்ளம் படைத்தவனாகக் கருதப்படுவதுதான்.

அவனை இப்படிக் கொடியவனாக மாற்றியது யார்? சமுதாயம்தான். நாம் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என்று மாமிசம் உண்ணாமல் இருந்திருந்தால் அவர்கள் கசாப்புக் காரர்களாக ஆகி இருக்க மாட்டார்கள். கடின உழைப்பாளிகள் இறைச்சி உண்ணலாம்; பக்தர்களாக விரும்புபவர்களுக்கு அது உணவு அல்ல. நீங்கள் பக்தர்களாக விரும்பினால் இறைச்சியை மட்டுமின்றி, உணர்ச்சியைத் தூண்டக்கூடிய வெங் காயம், பூண்டு போன்ற உணவுகளையும், துர்நாற்றமடிக்கின்ற உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். நாள்பட்ட உணவு, அழுகிப்போன உணவுப் பண்டங்கள், காய்ந்துபோன, சாறுவற்றிய பழங்கள், ஊசிப்போன உணவுப் பொருட்கள் முதலானவற்றை விலக்க வேண்டும்.

    உணவின் அடுத்த தோஷம் ஆச்ரய தோஷம். இது மேலை நாட்டினருக்கு மேலும் அதிகச் சிக்கல் கொண்டதாகத் தோன்றும். உணவு யாரிடமிருந்து பெறப்படுகிறது என்பது பற்றிய விஷயம் இது. இந்துக்களுக்கே உரிய ஒரு கொள்கை இது. ஒவ்வொரு மனிதனையும் ஒருவித ஒளி (Aura) சூழ்ந்து நிற்கிறது. அவன் எதைத் தொட்டாலும், அவனது இயல்பின் ஒரு கூறு, அதாவது அவனுடைய குணம் அந்தப் பொருளில் பதிகிறது என்பது இதன் கருத்து. ஒவ்வொரு மனிதனிடமிருந் தும், அவனது குணம் ஒரு பௌதீக சக்திபோல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவன் எதைத் தொட்டாலும் அது அவனது குணத்தால் பாதிக்கப்படுகிறது. ஆகவே சமைக்கும்போது உணவை யார் தொடுகிறார்கள் என்பதில் நாம் சற்று கவன மாக இருக்க வேண்டும். தீயவனோ ஒழுக்கமற்றவனோ அதைத் தொடக் கூடாது. பக்தனாக விரும்புபவன் தீயவர்களுடன் அமர்ந்து உண்ணக் கூடாது. ஏனெனில் அந்த உணவுமூலம் அவர்களுடைய தீய பண்புகள் இவனுக்கும் வந்து சேரும்.

    அடுத்து வருவது நிமித்த தோஷம். இதைப் புரிந்து கொள்வது மிக எளிது. உணவில் அழுக்கு, தூசி போன்றவை இருக்கக் கூடாது. கடையிலிருந்து வாங்கி வந்த உணவுப் பொருளைக் கழுவாமல் அப்படியே மேஜைமீது வைக்கக் கூடாது. காரணம், ஊரில் உள்ள தூசுதும்புகள் அவ்வளவும் அதில் படிந்திருக்கும். அவற்றில் எச்சில் படாமலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். உதடுகளைத் தொடுவதும் பின்னர் அந்தக் கையாலேயே பிற பொருட்களைத் தொடுவதும் நான் பார்த்ததிலேயே மிகவும் அருவருக்கத்தக்க பழக்கம். சுத்தம் செய்வதற்கு ஏராளமான நீரை இறைவன் தந்திருக்கும்போது, எச்சில்படுத்தியவற்றை அப்படியே ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? சளிச்சவ்வு (Musculour membrane) உடலின் மிக மென்மையான பகுதியாகும். உமிழ்நீர் போன்றவற்றின் மூலம் ஒருவரது குணம் மற்றவருக்கு மிக எளிதாகப் பரவுகிறது. எனவே எச்சில் படுத்துவது குற்றம் மட்டுமல்ல; ஆபத்தும்கூட. பிறர் உண்டு எஞ்சியதையும் நாம் உண்ணக் கூடாது. உதாரண மாக, ஒருவன் கடித்துத் தின்ற ஆப்பிள் பழத்தின் மீதியை இன்னொருவன் தின்னக் கொடுப்பது. இந்தத் தோஷங்கள் தவிர்க்கப்படும்போது உணவு தூயதாகிறது. ‘தூய உணவு தூய மனத்தையும், தூய மனம் இடையீடற்ற இறைநினைவையும் தோற்றுவிக்கின்றன. 

    மற்றோர் உரையாசிரியர் ஸ்ரீசங்கரர் இதுபற்றி விளக்கி யுள்ளதைப் பார்ப்போம். அவர் வேறொரு கண்ணோட்டத் தில் இதைப் பார்க்கிறார். உணவைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொல்லான ஆஹாரம் என்பது, ‘சேகரித்தல்’ என்னும் பொரு ளைத் தருகின்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியது. ஆகவே ஆஹாரம் என்ற சொல், சேகரிக்கப்பட்ட ஒரு பொருளைக் குறிக்கிறது. இதற்கு அவர் தரும் விளக்கம் என்ன? உணவு தூய தானால் மனமும் தூயதாகிறது. நாம் புலன்களுக்கு அடிமை யாகாமல் இருக்க வேண்டுமானால், சில விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும் என்பதுதான் இதன் கருத்து.

    பற்று என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம். இறைவனைத் தவிர வேறு எதிலும் மிகுந்த பற்று வைக்கக் கூடாது. எல்லாவற்றையும் பார், எல்லாவற்றையும் செய், எல்லாவற்றை யும் அறிந்துகொள், ஆனால் பற்று வைக்காதே. அளவற்ற பற்று வந்தால் மனிதன் நிதானத்தை இழக்கிறான்; எஜமானனாக இல்லாமல் அடிமை ஆகிறான். ஒரு பெண் ஆணிடம் மிகத் தீவிரமாகப் பற்று வைக்கும்போது, அவனுக்கு அடிமையாகி றாள். அல்லது அவன் அவளுக்கு அடிமையாகிறான். அடிமை யாக இருப்பதில் எந்தப் பலனும் இல்லை . ஒரு மனிதனுக்கு அடிமையாவதைவிட மேலான எவ்வளவோ விஷயங்கள் உலகில் உள்ளன. எல்லோரிடமும் அன்பு காட்டு, எல்லோருக் கும் நன்மை செய். ஆனால் அடிமையாகாதே. 

     முதலாவதாக, பற்று நம்மை மனித நிலையிலிருந்து தாழ்த்துகிறது. இரண்டாவது, தன்னலம் மிகுந்தவர்களாக ஆக்குகிறது. இந்த வீழ்ச்சியின் காரணமாக, நாம் நேசிப்பவர் களுக்கு நன்மை செய்வதற்காக மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய வும் தலைப்படுகிறோம். இந்த உலகில் இழைக்கப்பட்ட பெரும் பான்மையான கொடுமைகளும் உண்மையில் சிலர் ஒருசிலரிடம் கொண்ட பற்றுக் காரணமாகச் செய்யப்பட்டவையே. இத் தகைய பற்று எல்லா வகையிலும் தவிர்க்கப்பட வேண்டும். நற்செயல்களில் பற்று வைக்கலாம். அனைவரையும் நேசிக்க வேண்டும்.  

    இனி பொறாமை என்பதைப்பற்றிப் பார்ப்போம். புலனின்பப் பொருட்களுக்காக நாம் பொறாமை கொள்ளக் கூடாது. எல்லா தீமைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது பொறாமை. இதை வெற்றிகொள்வதும் எளிதல்ல.    அடுத்தது மனமயக்கம் (Delusion). நாம் எப்போதும் ஒன்றை மற்றொன்றாக எண்ணியே செயல்படுகிறோம். அதன் விளைவாக நமக்கு நாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறோம். தீயதை நல்லதாக எண்ணுகிறோம். நரம்பு களுக்குக் கணநேரம் கிளர்ச்சி ஊட்டக்கூடியதை மிக நல்ல தாகக் கருதி, அதில் ஆழ்ந்து மூழ்குகிறோம். விளைவாக நாம் பெறுவது அடி. ஆனால் தவறை உணரும்போது காலம் கடந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் இப்படி ஏதாவதொரு தவறைச் செய்கிறோம். சிலவேளைகளில் வாழ்நாள் முழுவதும் இவ்வாறே தொடர்கிறோம். பொருட்களிடம் அளவுகடந்த பற்று வைக் காமல் பொறாமையோ மனமயக்கமோ இல்லாமல் புலன்கள் செயல்படுமானால், அத்தகைய செயல்தான் ‘தூய உணவு’ என்று சங்கரர் பொருள் கொள்கிறார். உணவு தூயதாக இருக்கு மானால் மனம் பற்றின்றி, பொறாமையின்றி, மனமயக்கமின்றிப் பொருட்களுடன் தொடர்புகொள்ள முடியும். அப்போது மனமும் தூய்மை அடைகிறது. இதன் காரணமாக இடைவிடாத இறைநினைவு மனத்தில் எழுகிறது.    

சங்கரரின் விளக்கம் மிகச் சிறந்ததாகத் தோன்றுவது இயல்பே. ஆனால் அத்துடன் ராமானுஜரின் விளக்கத்தையும் ஏற்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். உணவில் கவனம் செலுத்தும்போது மற்றவை தாமாகவே அமைகின்றன. மனம் எஜமானன் என்பது உண்மைதான். ஆனால் புலன்களுக்கு அடிமைப்படாதவர்கள் மிகச் சிலரே. நாம் அனைவரும் ஜடப் பொருளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இந்தக் கட்டுண்ட நிலை நீடிக்கும்வரை நாம் தூலப் பொருட்களின் உதவியை நாடத்தான் வேண்டும். போதிய வலிமை பெற்றபின் நமக்குப் பிடித்த எதையும் உண்ணலாம்.

ஆகவே உண்பதையும் பருகுவதையும் பொறுத்த மட்டில் நாம் ஸ்ரீராமானுஜரைப் பின்பற்ற வேண்டும். அதே வேளையில் மனத்திற்கு அளிக்கப்படும் உணவைப் பற்றியும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். நம் உடலுக்கான உணவைப்பற்றி எச்சரிக்கையுடன் இருப்பது மிக எளிது. அதே நேரத்தில் மனத்தின் செயல்பாடும் கூடவே நடக்க வேண்டும். அப்போது நமது ஆன்மீக வலிமை மெல்லமெல்ல வலுப் பெறும். அதன் விளைவாக நமக்கு உடல்மீதுள்ள பற்றுக் குறையும். பிறகு எந்த உணவும் நம்மைப் பாதிக்காத ஒரு காலம் வரும்.    

மிக உயர்ந்த லட்சியத்தைத் தாவிப் பிடிக்கவே ஒவ் வொருவரும் விரும்புகின்றனர். இது ஒரு பேராபத்தாகும். ஆனால் தாவிக் குதிப்பது, லட்சியத்தை அடையும் வழியல் லவே! தாவிக் குதித்தால் கீழே விழுந்து கால்களை உடைத்துக் கொள்வதுதான் மிஞ்சும். நாம் கட்டுண்டு கிடக்கிறோம், சங்கிலி களை மெதுவாகத்தான் உடைக்க வேண்டும். இதுதான் விவேகம், ‘உணவைப் பகுத்தறிவது’.    

அடுத்தது விமோகம், அதாவது சுதந்திரம். கடவுளை நேசிக்க விரும்புபவன் தீவிர ஆசைகளைவிட வேண்டும். கடவுளைத் தவிர வேறு எதற்கும் ஆசைப்படாதே. உயர் உலகை அடைவதற்கு உதவி செய்யும்வரை இந்த உலகம் நல்லதுதான். உயர் பொருட்களை அடைய உதவும்வரை புலன் நுகர்ச்சிப் பொருட்களும் நல்லவையே. இந்த உலகம் ஓர் இலக்கிற்கு இட்டுச் செல்கின்ற பாதையே தவிர, அதுவே இலக்கு அல்ல என்பதை நாம் எப்போதும் மறந்துவிடுகிறோம். இதுவே நம் முடிவிடமானால், நாம் உடலுடன் இந்த உலகிலேயே அமரர்களாக விளங்க வேண்டும், நாம் சாகக் கூடாது. ஆனால் ஒவ்வொரு கணமும் நம்மைச் சுற்றி மக்கள் இறப்பதைக் காண் கிறோம். இருந்தும் முட்டாள்தனமாக நாம் மட்டும் சாக மாட்டோம் என்று நினைக்கிறோம். உறுதியான இந்த முடிவு காரணமாக இந்த வாழ்க்கைதான் லட்சியம் என்று நினைக்கத் தொடங்குகிறோம்.     

நம்மில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேரின் விஷயம் இப்படித்தான். இந்த எண்ணத்தை உடனே விட்டு விட வேண்டும். நம்மைப் பரிபூரணமாக்க உதவுகின்ற ஒரு கருவியாக இருக்கும் வரையில் இந்த உலகம் நல்லதே; அப்படி இல்லாமல் போகின்ற அந்தக் கணமே அது தீயது, முழுக்க முழுக்கத் தீயது. நாம் முன்னேற உதவும்வரை மனைவி, மக்கள், கணவன், பணம், செல்வம், கல்வி எல்லாம் நல்லனவே. முன் னேற்றம் தடைப்பட்டால் அவை அனைத்தும் தீயவை. நாம் கடவுளை நோக்கி முன்னேற மனைவி உதவி செய்தால் அவள் நல்ல மனைவி. கணவன் விஷயமும், குழந்தை விஷயமும் அவ்வாறேதான். பணமும் பிறருக்கு நன்மை செய்ய உதவினால் அதற்கு ஏதோ மதிப்பு உள்ளது. இல்லாவிடில் அது வெறும் தீமைக் குவியல் மட்டுமே. அதை எவ்வளவு சீக்கிரம் உதறித் தள்ளுகிறோமோ, அவ்வளவுக்கு நல்லது.    

அடுத்து வருவது அப்யாசம், அதாவது பயிற்சி. மனம் எப்பொழுதும் ஆண்டவனையே நாட வேண்டும். வேறு எதுவும் மனத்திற்குள் புக உரிமையில்லை. வெகுகடினமான காரியம் என்றாலும் மனம் எப்போதும் இறைவனையே நினைக்க வேண்டும். இடைவிடாத பயிற்சியினால் இதைச் செய்ய முடியும். நமது இன்றைய நிலை பழைய பயிற்சியினால் ஏற் பட்டது. இப்போதைய பயிற்சி எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கும். ஆகவே வேறு விதமான பயிற்சியைக் கைக்கொள்ளுங்கள். வாழ்க்கையை ஒரு பாதை வழியாகக் கொண்டு சென்றது நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆகவே வேறு வழியாகத் திருப்பி, இயன்ற அளவு விரைவாக இதிலிருந்து வெளியேறுங்கள். புலன்களை நினைத்து நினைத்து, இந்தக் கணநேர வாழ்வு நிலைக்கு வந்துள்ளோம்- ஒரு கணம் அழுவது, மறுகணம் மகிழ்வது, ஒவ்வொருவருடையவும் ஒவ்வொன்றினுடையவும் தயவை எதிர்பார்த்து வாழ்வது, ஒவ்வொரு சொல்லுக்கும் அடிமையாவது, ஒருநேர உணவுக்குக்கூட அடிமையாவது. இது அவமானத்திற்குரிய விஷயம். இதில் நம்மை நாம் ஆன்மாக்கள் என்று வேறு சொல்லிக் கொள்கிறோம். இது வெறும் பேச்சே தவிர, இதற்கு எந்தப் பொருளும் இல்லை. நாம் உலகின் அடிமைகள். புலன்களை நாடிச் செல்வதால்தான் நம்மை நாம் இந்தக் கீழ்நிலைக்கு ஆளாக்கிக் கொண்டுள்ளோம்.        

ஆகவே வேறு வழியில் செல்லுங்கள். கடவுளை நினை யுங்கள். உடல் இன்பத்தையோ மன இன்பத்தையோ எதையும் நினைக்காமல் மனம் இறைவனை மட்டுமே நினைக்கட்டும். வேறு எதையாவது நினைக்க முயன்றால், அவற்றை விட்டுவிட்டு இறைவனை மட்டும் நினைக்கும் வண்ணம் அதற்கு நல்ல அடி கொடுங்கள். ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத் திற்கு ஊற்றப்படுகின்ற எண்ணெய் இடைவிடாது ஒரே தாரை யாக வழிவதுபோல், தூரத்திலிருந்து வருகின்ற மணி ஓசை காதில் தொடர்ந்து ஒலிப்பதுபோல் மனமும் இடையீடற்று தொடர்ந்து இறைவனை நினைக்க வேண்டும்.    

மனத்திற்குப் பயிற்சி அளிப்பது மட்டும் போதாது; புலன் களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பயனற்ற விஷயங்களைக் கேட்பதை விட்டு, இறைவனைப்பற்றிய விஷயங்களைக் கேட்க வேண்டும். முட்டாள்தனமான வார்த்தைகளைப் பேசுவதை விட்டு, இறைவனைப்பற்றிப் பேச வேண்டும். உபயோகமற்ற புத்தகங்களைப் படிப்பதை விட்டு, இறைவனைப்பற்றிக் கூறும் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும்.        

இறைவனைத் தொடர்ந்து ஞாபகம் வைத்துக்கொள்ளும் பயிற்சிக்கு மிகச் சிறந்த வகையில் உதவியாக இருப்பது இசை என்று சொல்லலாம். சிறந்த பக்தி ஆச்சாரியரான நாரதரிடம் பகவான் சொன்னார்: ‘நான் விண்ணுலகில் வசிக்கவில்லை; யோகிகளின் இதயத்திலும் இல்லை. என் பக்தர்கள் எங்கே என் புகழ் பாடுகிறார்களோ அங்குதான் இருக்கிறேன்.” மனித உள்ளத்தின்மீது இசைக்கு அவ்வளவு ஆதிக்கம் இருக்கிறது! ஒரு நொடியில் அது மனத்தை ஒருமுகப்படுத்திவிடுகிறது. தங்கள் மனத்தை ஒரு நொடிகூட அலைபாயாமல் வைக்க முடியாத மந்த புத்தியுள்ள, அறிவற்ற, இழிந்த, மிருக இயல்பு உடைய மனிதர்கள்கூட இனிய இசையைக் கேட்டால் உடனே மயங்கிவிடுகிறார்கள். சிங்கம், நாய், பூனை, பாம்பு போன்ற மிருகங்கள்கூட இசையைக் கேட்டு மயங்குகின்றன.        

அடுத்தது கிரியை, செயல்; அதாவது மற்றவர்களுக்கு நன்மை செய்தல். சுயநலம் படைத்தவனுக்குக் கடவுள் ஞாபகம் வராது. நாம் நம்மை மறந்து பிறருக்கு நன்மை செய்யும் அள விற்கு நமது இதயம் பரிசுத்தமாகும்; எம்பெருமான் அங்கு எழுந்தருள்வார்.         

நம் சாஸ்திரங்கள் ஐந்து யஜ்ஞங்களை அதாவது ஐந்து வழிபாடுகளைப்பற்றிக் கூறுகின்றன.         

முதலாவது படிப்பு (ரிஷி யஜ்ஞம்). புனிதமான விஷயங் களைத் தினமும் படிக்க வேண்டும். இரண்டாவது வழிபாடு (தேவ யஜ்ஞம்). கடவுளையோ தேவதைகளையோ, மகான் களையோ வழிபடுவது. மூன்றாவது நம் மூதாதையர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை (பித்ரு யஜ்ஞம்). நான்காவது மனிதர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை (ந்ரு யஜ்ஞம்). ஏழைகளுக்கோ தேவைப்படுபவர்களுக்கோ வீடு கட்டித்தராமல் தான் மட்டும் ஒரு வீட்டில் வசிக்க மனிதனுக்கு உரிமையில்லை.  இல்லறத்தானின் வீடு எல்லோருக்கும், அதாவது ஏழை களுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் திறந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் உண்மையான இல்லறத்தானாக இருக்க முடியும். உலகில் தானும் தன் மனைவியும் இருவர் மட்டுமே வாழ்கிறோம் என்ற எண்ணத்துடன் தங்கள் மகிழ்ச்சிக்காக மட்டுமே வீட்டைக் கட்டிக் கொள்பவன் ஒருநாளும் பக்தனாக மாட்டான். அது மிகப்பெரிய தன்னலச் செயல். தனக்கு மட்டு மாகச் சமையல் செய்ய யாருக்கும் உரிமையில்லை. மற்றவர் களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே ஒருவன் உண்ண வேண்டும். மாம்பழம் போன்ற பருவகாலப் பழங்கள் முதன் முதலாகக் கடைகளுக்கு விற்பனைக்கு வந்ததும், சாதாரணமாக மக்கள் முதலில் கொஞ்சம் வாங்கி ஏழைகளுக்குக் கொடுத்து விட்டுப் பிறகே தங்களுக்காக வாங்குவது இந்தியாவில் பழக்கம். இந்த நாட்டிலும் பின்பற்றுவதற்கான ஒரு நல்ல பழக்கம் அது. இந்தப் பழக்கம் ஒருவனைப் பிறருக்காக வாழச் செய்கிறது. அத்துடன், அவனது மனைவிமக்களையும் அதே பழக்கத்திற்குக் கொண்டு வருகிறது. மரங்களில் முதலில் பழுக்கும் பழங் களை ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பது பழங்கால ஹீப்ருக் களின் வழக்கம். எதிலும் முதல் பகுதி ஏழைகளுக்குக் கொடுக்கப் பட வேண்டும்; எஞ்சியதைப் பெறத்தான் நமக்கு உரிமையுண்டு. ஏழைகள் இறைவனின் பிரதிநிதிகள், துன்பப்படுகின்ற ஒவ்வொருவனும் இறைவனின் பிரதிநிதி. பிறருக்குக் கொடுக்கா மல் தானே உண்டு மகிழ்பவன் பாவம் செய்தவனாகிறான்.        

ஐந்தாவது, மிருகங்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை (பூத யஜ்ஞம்). மனிதனுக்காகவே எல்லா மிருகங்களும் படைக் கப்பட்டுள்ளன, அவற்றை அவன் கொல்லலாம், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறு வது காட்டுமிராண்டித்தனமானது. அது சாத்தானின் வேதமே தவிர, ஆண்டவனின் கருத்து அல்ல. அவற்றின் உடலின் ஒரு பாகத்தில் நரம்புகள் அசைகிறதா, இல்லையா என்று அறிவதற் காக வெட்டிப் பார்ப்பது எத்தனை கொடூரமானது! சற்று எண்ணிப் பாருங்கள்! எங்களை ஆளும் அன்னிய அரசு இவற்றை எவ்வளவுதான் ஆதரித்தாலும் இந்துக்கள் இவற் றிற்குச் சம்மதிக்கவில்லை என்பதில் நான் மிகவும் மகிழ்கிறேன். நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதி மிருகங்களுக்கும் சொந்த மானது. அவற்றிற்குத் தினந்தோறும் உணவு தர வேண்டும். நொண்டி அல்லது குருடாக உள்ள குதிரை, பசு, நாய், பூனை போன்ற மிருகங்களுக்கு இந்த நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் மருத்துவமனைகள் இருக்க வேண்டும். அவற்றிற்கு உணவளித் துக் காப்பாற்ற வேண்டும்.      

இதற்கு அடுத்தபடியாக கல்யாணம் அதாவது தூய்மை. இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. இ முதலாவதாக ஸத்யம்-உண்மை . உண்மையானவனிடம் தான் உண்மையின் உருவான இறைவன் வருகிறார். எண்ணம், சொல், செயல் இவை அனைத்திலும் உண்மையாக இருக்க வேண்டும்.        அடுத்தது ஆர்ஜவம் அதாவது நேர்மை. இந்தச் சொல் லுக்கு, இதயத்தில் எளிமையாக இருப்பது என்று பொருள். அதாவது உள்ளத்தில் சூதுவாதின்றி இருப்பது; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல் இருப்பது. சிறிது கடுமையாக இருக்க நேரிட்டாலும் தவறில்லை, நேர்மை வழியில் செல் லுங்கள்; கோணலான வழியில் போக வேண்டாம்.         

அடுத்து வருவது தயை-இரக்கம், கருணை; பின்னர் அஹிம்சை- எண்ணம், சொல், செயல் இவற்றால் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது.         

அடுத்து வருவது தானம் அதாவது கொடை. கொடையை விடச் சிறந்த பண்பு வேறில்லை. யார் கைநீட்டி வாங்கு கிறானோ, தனக்கென்றே பெற்றுக் கொள்கிறானோ அவன் மனிதருள் கடைப்பட்டவன். யாருடைய கை வெளியில் நீண்டு பிறருக்குக் கொடுக்கிறதோ, அவன் எல்லோரிலும் உயர்ந்தவன். கொடுப்பதற்கென்றுதான் கை படைக்கப்பட்டது. நீ பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, உன் உணவைக் கடைசிக் கவளம் வரை பிறருக்குக் கொடு. பிறருக்குக் கொடுப்பதால் நீ பட்டினி கிடந்து இறந்தால் உனக்கு உடனே முக்தி கிடைக்கும். அந்தக் கணமே நீ பரிபூரணன் ஆவாய், கடவுள் ஆவாய்.         

குழந்தைகுட்டிகள் புடைசூழ உள்ளவர்கள் ஏற்கனவே கட்டுண்டவர்கள். அவர்களால் யாருக்கும் ஒன்றும் கொடுக்க முடியாது. குழந்தைகள் மூலம் கிடைக்கும் இன்பத்தை அனு பவிக்க விரும்புகிறார்கள் அவர்கள். அதற்கான விலையை அவர்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும். உலகில் குழந்தை களுக்கா பஞ்சம்? ‘எனக்கென்று ஒரு குழந்தை வேண்டும்’ என்று சொல்வது முழுக்கமுழுக்கத் தன்னலம்.”        

அடுத்தது அனவஸாதம்-சோர்வற்று இருத்தல், அதாவது உற்சாகமாக இருத்தல். சோர்ந்துபோய் இருப்பது வேறு எதுவாகவும் இருக்கலாம்; அது ஒருபோதும் ஆன்மீகம் ஆகாது.        

பிரார்த்தனைமூலம் இறைவனை நெருங்குவதைவிட, உற்சாகத்தாலும் புன்முறுவலாலும் இன்னும் அதிகமாக நெருங்கிச் செல்ல முடியும். சோர்ந்திருக்கும் சோம்பல் மனத் தால் எப்படி அன்பு காட்ட இயலும்? அவர்கள் அன்பைப்பற்றிப் பேசினால் அது பொய்யே தவிர வேறில்லை. அவர்கள் மற்றவர் களைப் புண்படுத்தவே விரும்புகிறார்கள். கொள்கைவெறியர் களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் முகங்களை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சோகமாக வைத்துக் கொள் கிறார்கள். சொல்லிலும் செயலிலும் மற்றவர்களுடன் சண்டை யிடுவதுதான் அவர்களின் மதம். அவர்கள் எப்படி இருந்தார்கள் என்று வரலாற்றில் பாருங்கள். இப்பொழுது அவர்களை அவ்வாறே அவர்கள் விருப்பப்படி நடக்க அனுமதித்தால் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! அதன் மூலமாகத் தங்களுக்கு அதிகாரம் கிடைக்குமென்றால் அவர்கள் நாளையே உலகம் முழுவதையும் ரத்த வெள்ளத்தில் ஆழ்த்து வார்கள். ஏனெனில் அத்தகைய இருளடைந்த நிலையே அவர் களுடைய கடவுள். அத்தகைய பயங்கர இருளை வணங்கு வதாலும், தங்கள் முகங்களைச் சோகமாக வைத்துக்கொள் வதாலும் அவர்களுடைய நெஞ்சங்களில் அன்பின் சுவடே இல்லாமல் போய்விடுகிறது. யார்மீதும் அவர்கள் இரக்கம் காட்டுவதில்லை. ஆகவே எப்போதும் சோகமாக இருப்பவன் ஒருநாளும் இறைவனை அணுக மாட்டான். ‘என் சோகம் சொல்லி மாளாது’ என்று சொல்வது ஆன்மீகம் ஆகாது, அது வெறும் காட்டுமிராண்டித்தனம். ஒவ்வொருவனுக்கும் சுமக்க அவனது சொந்தச் சுமை உள்ளது. நீங்கள் சோகமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள். உங்கள் துக்கத்தை வெற்றிகொள்ள முயலுங்கள்.         

பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது. ஒரு போதும் பலவீனர்களாக இருக்காதீர்கள். வலிமை படைத்த வர்களாக இருக்க வேண்டும். உங்களுள் அளவற்ற பலம் இருக்கிறது. இல்லாவிடில் எப்படி எதனையும் வெற்றிகொள்ள முடியும்? எப்படிக் கடவுளை நெருங்க முடியும்?

அதேசமயம் அளவுக்கு மீறிய களிப்பையும் (உத்தர்ஷம்) தவிர்க்க வேண்டும். மிதமிஞ்சிய அந்த நிலையில் இருக்கும் மனத்தில் அமைதி தோன்ற முடியாது; அது சஞ்சல நிலையிலேயே இருக்கும். மிதமிஞ்சிய களிப்பை எப்போதும் தொடர்ந்துவருவது துன்பம். கண்ணீர்த் துளிகளும் சிரிப் பொலியும் மாறிமாறி வருபவை. மக்கள் பெரும்பாலும் மனத்தின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு ஓடு கின்றனர். மனம் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் விளங்கட்டும். அதேவேளையில் அமைதியாக இருக்கட்டும். மிதமிஞ்சிய நிலை யில் களிக்கும்படி ஒருபோதும் மனத்தை விட்டுவிடாதீர்கள். ஏனெனில் ஒவ்வொரு மிதமிஞ்சிய நிலைக்கும் ஓர் எதிர்நிலை உண்டு .ராமானுஜரின் கருத்துப்படி இவைதான் பக்திநெறிக் கான சாதனைகள்.