About

அறிமுகம்

நாம் பிறந்த இந்தப் புண்ணிய பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். சமயத் துறையில் தலைவர்களாக விளங்கிய இவர்கள், மக்களுக்கு அருள்வழியைக் காட்டியிருக்கிறார்கள்.

அது போலவே சமுதாயத் துறையில் கணக்கற்ற பெரியோர்களை நம் பாரத பூமி காலமெல்லாம் தோற்றுவித்திருக்கிறது. சமுதாயத் தலைவர்களாக விளங்கிய இவர்கள், எத்தனை எத்தனையோ துறைகளில் நம் பாரத சமுதாயத்தின் நலனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அரும்பணி ஆற்றியுள்ளனர்.

சமயத் தலைவர்களாக இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். சமுதாயத் தலைவர்களாகவும் இந்தியாவில் எவ்வளவோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள்.

சமயத் தலைவராகவும் அதே சமயத்தில் சமுதாயத் தலைவராகவும் வாழ்ந்து, மக்களுக்கு வழி காட்டியவர்களும் இந்தப் பாரதப் புண்ணிய பூமியில் உண்டு. இந்த வரிசையில் சமீப காலத்தில் தோன்றிய மாமனிதர் சுவாமி விவேகானந்தர்.

இன்று நம் பாரதம் ஒரு சுதந்திர பூமி. இந்தச் சுதந்திர பூமியை உருவாக்குவதற்குப் போற்றுதலுக்குரிய நம் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் எல்லையற்ற துன்பங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டனர். அவர்களை நாம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவைக் தட்டியெழுப்பி, வீறுகொண்டெழச் செய்தவர்  சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரின் வீரமுழக்கம்தான், அவரது அறைகூவல்தான் இந்திய மக்களைச் சிலிர்த்தெழுந்து சுதந்திரப் போராட்டத்தில் அன்று ஈடுபட வைத்தது.

எனவேதான் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றிச் சொல்லும்போது, விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்தியா விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும் என்று குறிப்பிட்டார்.

விவேகானந்தரின்  சக துறவியாகிய சுவாமி அகண்டானந்தர் அவரது தேசபக்தியை வர்ணிக்கும்போது:-

“ ….சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேசபக்தி (patriostism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்மா போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமி விவேகானந்தருக்கு  இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது. நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

நமது நாட்டிற்கு ஒரு புதிய இந்தியாவின் காட்சியை அளித்த முன்னோடிகளில் முதல்வராகத் திகழ்கிறார் சுவாமி விவேகானந்தர். சுதந்திரமான, புத்துணர்ச்சி ஊட்டப்பட்ட, புதுமைப் பொலிவு பெற்ற, புராதனப் பெருமை மீட்கப்பட்ட ஓர் இந்தியாவின் காட்சியை அவர் நமக்குத் தந்துள்ளார். அவர் தமது காட்சியை உணர்ச்சிப் பெருக்குடன் இவ்வாறு விவரிக்கிறார்:

‘இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் சிறப்புடன் அத்தகைய இந்தியா உருவகிக் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை… அவ்வளவுதான், எழுந்துருங்கள், விழித்திருங்கள். அழியாத தன் அரியாசனத்தில் புத்திளமையோடும் முன்பு எப்போதும் இல்லாத பெருமையோடும் அவள் வீற்றிருப்பதைக் காணுங்கள்.’

எதிர்கால இந்தியா முன்பு எப்போதும் இருந்ததை விடவும் மிகுந்த சிறப்போடும் பெருமையோடும் விளங்கப் போகிறது என்று சுவாமி விவேகானந்தர் தீர்க்க தரிசனமாகக் தெரிவித்திருக்கிறார்.

 அவர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் நமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும். ஒளிமிகுந்த பாரதம் படைக்க வேண்டும். மீண்டும் பாரதம் உலகின் குருவாய் அமைந்திட வேண்டும்.  இதற்கு  அவரது செய்திகளும் கருத்துக்களும் அனைவருக்கும் எளிதாக சென்றடைய வேண்டும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடத்தில் கட்டாயம் சென்றாக வேண்டும். எல்லோரும் விவேகானந்தரைக் கற்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறது  ‘விவேகானந்தரைக் கற்போம்’  என்கிற அமைப்பு.

விவேகானந்தரைக் கற்போம் !

ஒளிமிகுந்த பாரதம் படைப்போம் !