10. புரட்சியானது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் செய்யப்பட வேண்டுமா அல்லது தொடர்ந்து – நிகழ வேண்டுமா?
எனவே புறப்பொருளான ஒரு சொர்க்கமோ பொற்காலமோ வெறும் கற்பனையில்தான் இருக்கிறது; ஆனால் அகஅனுபவமாகிய சொர்க்கமோ பொற் காலமோ ஏற்கனவே உள்ளது. கஸ்தூரிமான் வீணாக இங்குமங்கும் ஓடி, இறுதியில் கஸ்தூரியின் வாசனைக் குக் காரணத்தைத் தன்னிடம்தான் கண்டுகொண்டாக வேண்டும்.
புறப்பொருளாக அமைந்துள்ள சமுதாயம் எப் போதும் நன்மையும் தீமையும் கலந்ததாகவே இருக்கும். புறப்பொருளாகின்ற வாழ்வு, எப்போதும் அதன் நிழலான மரணம் தொடர்ந்து வருவதாகவே இருக்கும். வாழ்வின் நீளத்திற்கேற்ப நிழலும் நீண்டிருக்கும்.
ஆனால் புற வாழ்க்கையில் மேடு இருந்தால் பள்ளம் உண்டு, ஒவ்வொரு நன்மையுடனும் அதன் நிழல்போல் தீமையும் தொடர்கிறது. ஒவ்வொரு முன்னேற்றமும், அதற்குச் சமமான ஒரு வீழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நன்மை என்பது வளர்ந்துகொண்டே போவது, தீமை என்பது அப்படியே நிற்பது என்று கொள்வது அடிக்கடி நாம் செய்கின்ற மற்றொரு தவறு. அதனால், தீமை நாளுக்குநாள் குறைந்து நன்மை ஒன்றே எஞ்சுகின்ற காலம் வரும் என்று கூறப்படுகிறது. இது தவறு. இங்கே பொய்யான ஒரு கருத்து சரியானதாகக் கருதப்படுகிறது.
இயற்கை முழுவதிலும் இரண்டு சக்திகள் செயல்படுவதுபோல் தோன்றுகிறது. இவற்றுள் ஒன்று எப்போதும் பிரித்துக்கொண்டே இருக்கிறது; மற்றது எப்போதும் சேர்த்துக்கொண்டே இருக்கிறது. ஒன்று மனிதர்களைப் பிரிக்க முயல்கிறது, மற்றது மக்களை யெல்லாம் ஒன்றாக்கி வேற்றுமைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்த முயல்கிறது. அட சமுதாய வாழ்வு தொடங்கிய காலத்திலிருந்தே இந்த இரண்டு சக்திகளும் பிரிப்பதும் சேர்ப்பதுமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் செயல்பாடு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது, வெவ்வேறு பெயரைப் பெறுகிறது.
உபநிடதங்கள், மற்றும் புத்தர்கள், ஏசுநாதர்கள் போன்ற மதப் பிரச்சாரகர்களின் காலம் முதல் இன்றுவரையிலும் நோக்கங்களிலும், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சிக் குரல்களிலும், தங்கள் உரிமைகளை இழந்து வாழ்கின்ற மக்களிலும் ஒருமை, சமத்துவம் என்ற இந்த ஒன்றின் வற்புறுத்தல்தான் கேட்டுக்கொண்டிருக்கிறது.
பன்மையில் ஒருமை, ஒருமையில் பன்மை இதுவே இந்தப் பிரபஞ்சத் திருவிளையாடல். வேறு பாடுகள், ஒருமை இவற்றின் ஒரு திருவிளையாடலே இந்தப் பிரபஞ்சம். எல்லையற்றதில் எல்லையுள்ளதன் திருவிளையாடலே இந்தப் பிரபஞ்சம்.
ஆனால் தனிச் சலுகை என்பதை நாம் ஒழித்துவிட முடியும். உண்மையில் உலகின் முன்னுள்ள பணி இதுவே. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள, ஒவ்வோர் இனத்திலும் உள்ள சமுதாய வாழ்க்கையில் இந்த போராட்டம் இருந்தே வருகிறது. ஒரு பிரிவினர் இயல் பாகவே மற்றொரு பிரிவினரைவிட அறிவுமிக்கவராக இருக்கிறார்கள் என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அதிக அறிவு இருப்பதற்காக அவர்கள், அது இல்லாதவர்களின் சாதாரண சுகங்களைக்கூடப் பிடுங்க முயல்வது சரிதானா என்பதுதான் பிரச்சினை. இந்தச் சலுகையை ஒழிப்பதற்காகத்தான் போராட்டம் நடைபெறுகிறது.