9. புரட்சிவாதியின் குணநலன்கள் யாவை?
நானும் தேசப்பற்றில் நம்பிக்கை உள்ளவன், தேசப்பற்றைப்பற்றி எனக்கென்று சொந்தக் கருத்தும் உண்டு. எந்த மகத்தான சாதனைகளுக்கும் மூன்று விஷயங்கள் அவசியமானவை. முதலில் இதயபூர்வமான உணர்ச்சி. அறிவிலும் ஆராய்ச்சியிலும் என்ன இருக்கிறது? அது சில அடிகள் செல்லும், பிறகு நின்று விடும். ஆனால் இதயத்தின் மூலம்தான் உத்வேகம் பிறக்கிறது. திறக்க முடியாத கதவுகளை எல்லாம் அன்பு திறக்கிறது. பிரபஞ்சத்தின் எல்லா ரகசியங்களுக்கும் வாசல் அன்புதான்.
எனவே உணர்ச்சி கொள்ளுங்கள், என் எதிர்கால சீர்திருத்தவாதிகளே, வருங்கால தேச பக்தர்களே, நீங்கள் உணர்ச்சி கொள்கிறீர்களா? தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பரம்பரையில் வந்த கோடானுகோடி பேர் மிருகங்களுக்கு அடுத்த நிலையில் வாழும் கொடுமையை உணர்கிறீர்களா? பட்டினியால் இன்று லட்சக்கணக்கானோர் வாடுவதையும், காலங்கால மாக லட்சக்கணக்கானோர் பட்டினியால் துடிப்பதை யும் உணர்கிறீர்களா? இந்த நாட்டின்மீது ஒரு கரிய மேகம்போல் அறியாமை கவிந்துள்ளதை உணர் கிறீர்களா? இந்த உணர்ச்சி உங்களை அமைதியிழந்து தவிக்கச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்களைத் தூக்கம் கெட்டு வாடச் செய்கிறதா? இந்த உணர்ச்சி உங்கள் ரத்தத்தில் கலந்து, உங்கள் நாடிநரம்புகள் தோறும் ஓடி, உங்கள் இதயத்துடிப்புடன் கலந்து துடிக்கிறதா? இது உங்களை ஏறக்குறைய பைத்தியமாகவே ஆக்கிவிட்டதா? அழிவுத்துன்பம் என்ற ஒரே கருத்து உங்களைப் பற்றிப்பிடித்துள்ளதா? உங்கள் பெயர், உங்கள் புகழ், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், உங்கள் சொத்து, ஏன், உங்கள் உடம்பு போன்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டீர்களா? இதை நீங்கள் செய்துவிட்டீர்களா? இதுதான் தேசப்பற்று உடையவன் ஆவதற்கு முதற்படி. வெறும் முதற்படி இது.
சர்வமத மகாசபையில் கலந்துகொள்வதற்காகவென்று நான் அமெரிக்கா போகவில்லை, உங்களுள் பலரும் இதை அறிவீர்கள். என்னுள், என் உயிரில் நிலவிய இந்த உணர்ச்சி என்ற பூதம் என்னை ஆட்டிப் படைத்ததாலேயே நான் செல்ல நேர்ந்தது. என் நாட்டு மக்களுக்காக உழைப்பதற்கான வழிதேடி பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியாமுழுவதும் அலைந்தும், வழியேதும் கிடைக்காததால்தான் அமெரிக்கா சென்றேன். அப்பொழுது என்னை அறிந்த பெரும்பாலோருக்கு இது தெரியும். இந்த சர்வசமயப் பேரவையைப்பற்றி இங்கு யாருக்கு அக்கறை? என் தசையாகவும் ரத்தமாகவும் இருக்கின்ற மக்கள் இங்கே ஒவ்வொரு நாளும் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக யார் கவலைப்பட்டார்கள்? இதுதான் என் முதல் படி. நீங்கள் உணரலாம். ஆனால் வெட்டிப்பேச்சில் உங்கள் ஆற்றல்களை வீணாக்குவதற்குப் பதிலாக, ஏதாவது வழி கண்டுபிடித்தீர்களா? அவர்களை நிந்திப்பதற்குப் பதிலாக உதவி செய்வதற்கு, அவர்களின் துன்பங்களைத் தணிக்கின்ற சில இதமான வார்த்தைகளைக் கூறுவதற்கு, அவர்கள் நடைப் பிணங்களாகிக் கிடக்கும் கேவல நிலையிலிருந்து மீட்க ஏதாவது செயல்முறை வழி கண்டீர்களா?
அதோடும் தேசப்பற்று முடிந்து விடுவதில்லை. மலைகளையொத்த எதிர்ப்புகளை வெல்வதற்கான மனவுறுதி உங்களிடம் இருக்கிறதா? கையில் வாளுடன் இந்த உலகம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும், நீங்கள் சரி என்று நினைப்பதைச் செய்து முடிக்கின்ற தைரியம் உங்களிடம் இருக்கிறதா? உங்கள் மனைவியும் பிள்ளைகளும் எதிர்த்தாலும், உங்கள் பணம் எல்லாம் கரைந்து போனாலும், உங்கள் பெயர் அழிந்து செல்வம் எல்லாம் மறைந்தாலும் அதையே உறுதியாகப் பற்றிநிற்பீர்களா? அதையே உறுதியாகத் தொடர்ந்து, உங்கள் லட்சியத்தை நோக்கிச் செல்வீர்களா? பர்த்ருஹரி மன்னர் கூறியதுபோல், ‘மகான்கள் பழிக்கட்டும் அல்லது புகழட்டும், அதிர்ஷ்ட தேவியான மகாலட்சுமி வரட்டும் அல்லது அவள் விரும்புகின்ற இடத்திற்குச் செல்லட்டும், மரணம் இன்று வரட்டும் அல்லது நூறு ஆண்டுகள் கழித்து வரட்டும்- எது நேர்ந்தாலும் சத்தியத்தின் பாதையிலிருந்து அங்குலம்கூட விலகாதவனே உண்மை மனிதன்’. இத்தகைய உறுதி உங்களிடம் இருக்கிறதா? உங்களிடம் இந்த மூன்று விஷயங்களும் இருக்குமானால் நீங்கள் ஒவ்வொருவரும் பிறர் பிரமிக்கத்தக்க செயல்களைச் செய்வீர்கள்.