5. கொள்கைவெறி
13 டிசம்பர் 1895
வெறியர்களில் பலவகையினர் உள்ளனர். சிலர் குடி வெறி யர்கள், சிலர் சிகரெட் வெறியர்கள். மனிதன் சிகரெட் பிடிப் பதை விட்டுவிட்டால் உலகின் பொற்காலமே வந்துவிடும் என்று நினைப்பவர்களும் உள்ளனர்- இந்த வெறியர்கள் பொதுவாகப் பெண்களே.
ஒருமுறை இந்த வகுப்பிற்கு ஓர் இளம்பெண் வந்திருந் தாள். சிகாகோவில் வீடு கட்டி, அங்கே தொழிலாளர்களுக்கு இசையும் உடற்பயிற்சியும் கற்பிக்கும் பல பெண்களுள் அவளும் ஒருத்தி. ஒருநாள் அவள் உலகத்தில் நிலவும் தீமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே வரும்போது, அவற்றிற்குப் பரிகாரம் தனக்குத் தெரியும் என்று சொன்னாள், ‘உனக்கு எப்படித் தெரியும்?’ என்று நான் கேட்டேன். ‘ஹல் ஹவுஸ் உங்களுக்குத் தெரியுமா?’ என்று அவள் என்னைக் கேட்டாள். உடல் காரண மாக ஏற்படும் எல்லா தீமைகளையும் அகற்றும் இடம் இந்த ஹல் ஹவுஸ் என்பது அவள் கருத்து. இந்த எண்ணம் அவளது மனத்தில் வேரூன்றி வளர்ந்திருந்தது. அவளுக்காக நான் வருந்துகிறேன். இந்தியாவில் ஒருவகை வெறியர்கள் உள்ளனர். கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொண்டால் போதும், எல்லா தீமைகளும் நீங்கிவிடும் என்பது இவர்களின் கருத்து. இதுதான் வெறி.
செயல் புரிவதற்கு இந்த வெறி ஒரு முக்கியமான தேவை என்றே சிறுவனாக இருந்தபோது நான் எண்ணியிருந்தேன். இப்போது வயது ஏறஏற, அது சரியல்ல என்பதை உணர்கிறேன்.
பிறருடைய பெட்டியையோ பையையோ திருடுவது ஒரு திருடிக்குத் தவறாகத் தோன்றாது. அவள் ஒருவேளை சிகரெட் பிடிக்காதவளாக இருக்கலாம், சிகரெட் வெறி அவளைப் பிடித்துக் கொள்கிறது; சிகரெட் பிடிப்பவனை அவள் கடுமையாக வெறுக்கிறாள். பிறரை ஏமாற்றுவதே தொழிலாகக் கொண்ட ஒருவன் இருக்கிறான். சிறிதும் நம்ப முடியாதவன் அவன். எந்தப் பெண்ணுக்கும் அவனிடம் பாதுகாப்பில்லை. இந்தக் கயவன் ஒருவேளை குடிக்காதவனாக இருக்கலாம். எனவே சாராயம் குடிப்பவன் நல்லவனே அல்ல என்று அவன் நினைக்கிறான். தான் செய்கின்ற ஏமாற்றுதல் முதலிய எதுவும் அவனுக்குத் தீமைகளாகத் தோன்றுவதில்லை. இந்த மனப்பான்மை மனிதனுக்கு இயல்பான சுயநலத்தினால் தான் ஏற்படுகிறது. இது ஒருதலைப்பட்சமானது.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பிர பஞ்சத்தை ஆள்வதற்கு இறைவன் ஒருவன் இருக்கிறார். அந்த ஆட்சி உரிமையை அவர் நமக்குத் தானம் செய்துவிடவில்லை. அவரே இந்தப் பிரபஞ்சத்தைக் காத்து வருபவர். இந்தச் சாராய வெறியர்கள், சிகரெட் வெறியர்கள், பலவகைத் திருமண வெறி யர்கள் என்று எல்லா வெறியர்களையும் மீறி இந்தப் பிரபஞ்சம் நடந்துகொண்டே இருக்கும். இந்த வெறியர்கள் எல்லாருமே இறந்துவிட்டாலும் இந்தப் பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.
உங்கள் சரித்திரம் உங்களுக்கு நினைவில்லையா? உங்கள் முன்னோர் ‘மே ஃப்ளவர்’ (May Flower) என்ற கப்பலில் இங்கே வந்ததும், தங்களைப் ‘ப்யூரிட்டன்’ (Puritans) என்று அவர்கள் சொல்லிக்கொண்டதும் உங்களுக்கு நினைவில்லையா? அவர்கள் தங்கள் சமூகத்தைப் பொறுத்தவரை குற்றமற்ற வர்கள்; நல்லவர்கள். ஆனால் பிற மதத்தினரைத் துன்புறுத் தத் தொடங்கியபோது அவர்களது நற்குணம் மாறிவிட்டது. மனித வரலாறு முழுவதிலுமே இதே நிகழ்ச்சிதான். இவ்வாறு துன்புறுத்தலுக்கு அஞ்சி ஓடுபவர்களும், வாய்ப்பு கிடைத்த வுடன் தாங்களும் அவ்வாறே துன்புறுத்தத் தொடங்குகிறார்கள்.
வெறியர்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்குக் கல்லீரல் நோயோ, ஜீரணக் கோளாறோ, வேறுவகை நோயோ இருக்க வேண்டும். காலப்போக்கில் இந்த வெறியும் ஒரு நோயே என்று மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். இந்த வெறியைப் பெரும் அளவில் கண்டுவிட்டேன். இதனிடமிருந்து இறைவன் என்னைக் காக்கட்டும்!
எந்த வகையான வெறியானாலும் சரி, வெறியின் அடிப் படையில் தோன்றுகின்ற சீர்திருத்தங்களை விலக்குவதே அறி வுடைமை. இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை . உலகம் மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறது. இப்படியே போகட் டும். அவசரம் ஏன்? நன்றாகத் தூங்குங்கள். நரம்புகளை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்! தகுந்த உணவை உண் ணுங்கள், உலகிடம் அனுதாபத்துடன் நடந்துகொள்ளுங்கள்.
வெறியர்கள் வெறுப்பையே வளர்க்கிறார்கள். சிறிது குடிக்கும் வெறியர்கள் மொடாக் குடியர்களாகிவிட்ட ஏழை களிடம் அன்பு காட்டுவார்கள் என்று கருதுகிறீர்களா? வெறி யனின் வெறிக்குக் காரணம் அவன் ஏதோ ஒரு பயனை எதிர் பார்ப்பதுதான். அதில் வெற்றி பெற்றதும் கிடைத்ததைச் சுருட்டப் பார்க்கிறான். வெறியர்களின் கூட்டத்திலிருந்து விலகிய பின்னரே உண்மை அன்பும் பரிவும் காட்டுவது எப்படி என்பதை அறிவீர்கள். உங்களிடம் அன்பும் பரிவும் வளர்கின்ற அளவிற்கு பரிதாபத்திற்குரிய இந்தக் குடிகாரர்களை வெறுக் கும் எண்ணம் குறையும்; அவர்களிடம் இரக்கம் காட்டத் தோன்றும். குடிகாரனிடம் இரக்கம் காட்டவும், அவனும் உங்களைப்போன்ற ஒரு மனிதனே என்று எண்ணவும் அப் பொழுதுதான் உங்களால் முடியும். அவனைக் கீழே இழுத்த சூழ்நிலைகளை அறிய நீங்கள் முயல்வீர்கள். ‘நாம் ஒருவேளை அவனது சூழ்நிலையில் இருந்திருந்தால் தற்கொலையே செய்து கொண்டிருப்போம்’ என்றுகூட உங்களுக்குத் தோன்றலாம்.
பெரிய குடிகாரன் ஒருவனுடைய மனைவி என் நினை விற்கு வருகிறாள். கணவனைப்பற்றி அவள் என்னிடம் குறை கூறினாள். அதற்கு நான் அவளிடம், ‘அம்மா, உன்னைப்போல் இரண்டு கோடி மனைவிகள் இருந்தால் போதும், உலகில் கணவர்கள் அனைவருமே குடிகாரர்கள் ஆகிவிடுவார்கள்’ என்றேன். குடிகாரர்களில் பெரும்பாலோர் மனைவிகளால் அந்த நிலைக்கு விரட்டப் பட்டவர்களே என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் வேலை உள்ளதை உள்ளவாறு கூறுவதே தவிர யாரையும் புகழ்வதல்ல. ‘சகித்துக்கொள்’, ‘பொறுமையாக இரு’ போன்ற கருத்துக்களையெல்லாம் மனத்திலிருந்து என்றென்றைக்குமாகத் துடைத்துவிட்ட, சுதந்திரம் பற்றிய தவறான எண்ணங்களால் ஆண்கள் தங்கள் காலடியில் கிடக்க வேண்டுமென்று எண்ணுகின்ற, தாங்கள் விரும்பாத ஒன்றை ஆண்கள் கூறிவிட்டால் அவர்கள்மீது எரிந்து விழுகின்ற, கட்டுக்கடங்காத இந்தப் பெண்கள் உலகின் சாபக்கேடாக ஆகி வருகிறார்கள். உலகத்திலுள்ள ஆண்களுள் பாதிப்பேர் இவர்களின் செயலால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளாதது விந்தையே. இந்த முறையில் உலகம் நடக்கக் கூடாது. இந்தப் பெண்கள் நினைப்பதுபோல் வாழ்க்கை அவ்வளவு எளியது அல்ல; அது பொருள் நிறைந்த ஒரு பெரிய விஷயம்.
மனிதனுக்கு நம்பிக்கை மட்டும் போதாது; அது அறிவில் வேரூன்றியிருக்கவும் வேண்டும். காணும் எல்லாவற்றையும் ஒருவன் நம்ப வேண்டும் என்று சொல்வது அவனைப் பைத் தியமாக்கிவிடும். ஒருமுறை எனக்கு ஒரு புத்தகம் வந்தது. அதில் உள்ள எல்லாவற்றையும் நம்ப வேண்டும் என்று கூறியது அந்தப் புத்தகம்! ‘ஆன்மா என்ற ஒன்று இல்லை; ஆனால் சொர்க்கத்தில் தேவர்களும் தேவதைகளும் இருக்கிறார்கள்; மக்கள் ஒவ்வொருவர் தலையிலிருந்தும் நூல் போன்ற ஓர் ஒளிக் கிரணம் சொர்க்கத்திற்குச் செல்கிறது’ என்றெல்லாம் அந்தப் புத்தகத்தில் காணப்பட்டது. அதன் ஆசிரியைக்கு இந்த விஷயங்கள் எல்லாம் எப்படித் தெரிந்ததோ என்னவோ? தெய்வீகப் பேருணர்வால் அவளது மனத்திற்கு இவையெல் லாம் விளங்கினவாம்! நானும் அவற்றை நம்ப வேண்டும் என்பது அவளது விருப்பம். நான் அதை நம்ப மறுத்தேன். உடனே அவள், ‘நீ கெட்டவன். உனக்கு நல்ல கதியே இல்லை ‘ என்று சொன்னாள். இதுதான் வெறி.
