3. பலன்கருதாப் பணி
20-3-1898 அன்று ராமகிருஷ்ண மிஷனின்
நாற்பத்திரண்டாவது கூட்டத்தில் பேசியது
கீதை முதன்முதலாக உபதேசிக்கப்பட்ட காலத்தில் இரு பிரிவினருக்கு இடையில் பெரிய கருத்துவேற்றுமை நிலவியது. வேத விதிப்படி யாகம், உயிர்ப் பலி, இன்னும் இவை போன்ற கர்மங்கள்தான் மதம் என்பது ஒரு பிரிவினரின் கூற்று. எண் ணற்ற குதிரைகளையும் மற்ற விலங்குகளையும் கொல்வதை மதம் என்பதே தவறு என்பது மற்றவர்களின் வாதம். இரண் டாவது பிரிவைச் சேர்ந்தவர்களுள் பெரும்பாலோர் துறவிகளும் ஞான நெறியைப் பின்பற்றுபவர்களும் ஆவர். எல்லா செயல் களையும் விட்டுவிட்டு, ஆன்மஞானம் பெறுவதே மோட்சத் திற்கு வழி என்பது இவர்களது கருத்து.
பலன்கருதாப் பணி என்ற சீரிய தத்துவத்தை வழங்கி கீதாச்சாரியர் இந்த இரு முரண்பட்ட வாதங்களுக்கும் முடிவு கட்டிவிட்டார்.
பகவத்கீதை மகாபாரதக் காலத்தைச் சேர்ந்தது அல்ல, பின்னர் இணைக்கப்பட்டது என்று பலர் கருதுகின்றனர். இது சரியல்ல. கீதையின் விசேஷ உபதேசங்களை மகாபாரதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாம் காணலாம். கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதியல்ல என்று விலக்க வேண்டுமானால், கீதோபதேசத் தையே அடிப்படையாகக் கொண்ட மகாபாரதத்தின் பல பகுதிகளை நீக்க நேரிடும்.
பலன்கருதாப் பணி என்பதன் பொருள் என்ன? இன்பமோ துன்பமோ தங்கள் மனத்தைத் தொடாத வண்ணம் வேலை செய்வதுதான் பலன் கருதாமல் பணி செய்வது என்று இன்று பலரும் கருதுகின்றனர். இதுவே உண்மைப் பொருளானால், மிருகங்கள் பலன்கருதாப் பணி செய்வதாகக் கூறலாம். சில பிராணிகள் தங்கள் குட்டிகளையே விழுங்கிவிடுகின்றன; இப்படிச் செய்யும்போது அவை சிறிதும் வேதனைப்படுவதே இல்லை. கொள்ளையர் பிறர் பொருளைக் கொள்ளையடிக் கிறார்கள். கொள்ளையிடும்போது நேரும் இன்ப துன்பங்களை அவர்கள் லட்சியம் செய்வதில்லை என்றால் அவர்களும் பலன் கருதாப் பணி செய்கிறார்கள் என்று சொல்லலாமா? இதன் பொருள் இதுவானால், சற்றும் இரக்கமே இல்லாத கல்நெஞ்சம் படைத்த கயவர்களும், கொடிய குற்றவாளிகளும் பலன்கரு தாமல் செயல் புரிபவர்கள் என்று கூறலாம். இன்ப துன்பம் சுவருக்கில்லை, கல்லுக்கில்லை. இவை பலன்கருதாப் பணி செய்பவை என்று கூறலாமா? முடியாது. இந்தப் பொருளில் கொள்ளப்பட்டால் இந்தக் கருத்து தீயோர் கையில் சிக்கிய ஒரு கொடிய ஆயுதமாகிவிடும். பலன் கருதாமல் செயல் புரிவ தாகச் சொல்லியபடியே இவர்கள் தீய செயல்கள் செய்து கொண்டே இருப்பார்கள்; இதுவே இந்தக் கருத்தின் பொரு ளானால், கீதை பயங்கரமான ஒரு தத்துவத்தைப் போதித் துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். எனவே இதன் பொருள் அது அல்ல என்பது நிச்சயம். மேலும் கீதோபதேசத் துடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் வேறுவகையில் வாழ்ந்திருப் – பதைக் காண்போம். பீஷ்மரையும் துரோணரையும் அர்ஜுனன் போரில் கொன்றான். எனினும் அவன் சுயநலத்தையும் ஆசை களையும் கோடிமுறை தியாகம் செய்திருக்கிறான்.
கீதை கர்மயோகத்தை உபதேசிக்கிறது. யோகத்துடன் அதாவது ஒன்றுபட்ட உள்ளத்துடன் நாம் செயல்புரிய வேண்டும். மனம் குவிந்து செய்கின்ற இத்தகைய பணியில் கீழான நான்-உணர்வு தோன்றாது. யோகத்துடன் அதாவது மன ஒருமையுடன் வேலை செய்யும்போது, ‘நான் இதைச் செய்கிறேன்; அதைச் செய்கிறேன்’ என்ற உணர்வே இருக்காது. மேலை நாட்டினருக்கு இது புரிவதில்லை. நான்-உணர்வே இல்லை என்றால், நான்-உணர்வே போய்விட்டால், ஒருவன் எப்படி வேலை செய்ய முடியும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் தன்னை முற்றிலுமாக மறந்து, மன ஒருமையுடன் வேலை செய்யும்போதுதான் அளவற்ற மடங்கு சிறப்பாக ஒரு வன் வேலை செய்கிறான். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை யில் இதனை உணர்ந்திருக்கலாம். உண்ட உணவைச் செரிப்பது போன்ற சில வேலைகளை நாம் அறியாமலே ஆழ்மனத்தால் செய்கிறாம். பல வேலைகளை நாம் அறிந்து செய்கிறோம். வேறு சில வேலைகளை நான்-உணர்வற்ற சமாதி போன்ற மனம் ஒடுங்கிய நிலையில் செய்கிறோம். ஓவியன் ஒருவன் நான்-உணர்வு அற்ற நிலையில் ஓவியத்தில் ஆழ்ந்து, அதைத் தீட்டினால், அவனால் அற்புத ஓவியங்களைப் படைக்க முடியும். நல்ல சமையற்காரன் சமையல் செய்யும்போது வேலையிலேயே குறியாக இருக்கிறான். சமையலுக்குரிய சாமான்களைத் தவிர மற்றவற்றை எல்லாம் அந்த நேரத்தில் மறந்தேவிடுகிறான். தங் களுக்குப் பழக்கமான ஒரே செயலை மட்டுமே இவர்களால் இப்படிச் செய்ய முடியும். எல்லா செயல்களையுமே இது போன்ற நிலையில் செய்ய வேண்டும் என்பதே கீதையின் உப தேசம். யோகத்தினால் இறைவனுடன் ஒன்றுபட்ட ஒருவன் எல்லா செயல்களையும் ஒன்றுபட்ட உள்ளத்துடன், அதாவது, யோகத்தில் ஒன்றிச் செய்கிறான்; சுய லாபம் எதையும் அவன் எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய செயலால் உலகத்திற்கு நன்மையே விளையும்; தீமை எதுவும் விளையாது. இவர்கள் தங்களுக்கென்று எதையுமே செய்துகொள்வதில்லை.
ஒவ்வொரு செயலின் பலனிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. தீமையே சிறிதும் கலவாத நற்செயல் எதுவும் இல்லை. தீயைச் சுற்றிப் புகையிருப்பதுபோல் செயலைச் சுற்றித் தீமையும் இருந்தே தீரும். எனவே மிக அதிக நன்மையும் மிகக் குறைந்த தீமையும் விளைகின்ற செயல்களில் நாம் ஈடுபட வேண்டும். அர்ஜுனன் பீஷ்மரையும் துரோணரையும் கொன் றான். இதைச் செய்யாவிட்டால் அவன் துரியோதனனை வென் றிருக்க முடியாது, நல்ல சக்தி தாழ்ந்து தீய சக்தி ஓங்கியிருக்கும். இதனால் நாடு முழுவதற்குமே பேராபத்து ஏற்பட்டிருக்கும்; கொடுங்கோலர்களிடம் ஆட்சி சிக்கியிருக்கும்; மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாக நேர்ந்திருக்கும். அதுபோலவே, கொடுங்கோலர்களாகிய கம்சன், ஜராசந்தன் முதலியவர்களைக் கிருஷ்ணர் கொன்றார். ஆனால் அவற்றுள் ஒன்றுகூட அவருக் காகச் செய்யப்படவில்லை; ஒவ்வொரு செயலும் பிறர் நன்மைக்காகவே செய்யப்பட்டது. விளக்கு வெளிச்சத்தில் கீதை படிக்கிறோம். அதேவேளையில் பல விட்டில்பூச்சிகளும் விளக் கில் விழுந்து மடிகின்றன. எனவே எந்த நற்செயலுடனும் சிறிது தீமை கலந்தே இருப்பதைக் காண்கிறோம்.
இவ்வாறு கீழான நான்-உணர்வின்றி வேலை செய்பவர் களைப் பாவம் பற்றுவதில்லை. ஏனெனில் அவர்கள் உலக நன்மைக்காக உழைக்கிறார்கள். பலன்கருதாத பணியால், பற்றற்ற பணியால் பேரானந்தமும் முக்தியும் கிடைக்கிறது. கர்மயோகத்தின் இந்த ரகசியத்தையே கண்ணபிரான் கீதைமூலம் போதிக்கிறார்.