2.எப்படிச் செயல் புரிவது?
13 டிசம்பர் 1895
தூல மற்றும் சூட்சுமப் பொருட்களிலிருந்து ஆன்மாவைப் பிரிப்பதே லட்சியம். இது நிறைவேறிவிட்டால், தான் என்றும் தனியாகவே இருந்ததையும் தன்னை மகிழ்விக்க வேறு யாரும் தேவையில்லை என்பதையும் ஆன்மா உணர்ந்துகொள்ளும். நமக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கு வேறு யாரையாவது எதிர் பார்க்கும்வரை நாம் அடிமைகளே. தான் சுதந்திரமானது என் பதையும், தன்னைப் பூரணமாக்க வேறு எதுவும் தேவையில்லை என்பதையும், இயற்கையின் உதவி தனக்கு அவசியமில்லை என்பதையும் என்று புருஷன் அறிகிறதோ, அன்றே முக்தி அல்லது கைவல்யம் பெற்றுவிடுகிறது.
மனிதர்கள் பணத்தைத் தேடி அதன் பின்னால் ஓடுகிறார் கள், அதற்காகச் சக மனிதர்களை வஞ்சிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. இவர்கள் மட்டும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளட்டும். சில ஆண்டுகளில், அவர்கள் விரும்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் அளவிற்கு அவர்களது ஒழுக்கம் பெரிதும் முன்னேறிவிடும். அந்த நிலையில் அவர்கள் தங்கள் சங்கல்பத்தால் உலகையே அடக்கியாள இயலும். ஆனால் அதைச் செய்யாமல் நாம் முட்டாள்களாக இருக் கிறோம்.
ஒருவன் தன் தவறுகளை உலகறியப் பேசுவதால் என்ன பயன்? அதனால் அந்தத் தவறுகளைப் போக்கிவிட முடியாது. வினைப்பயனை அனுபவித்தே தீர வேண்டும். ஒவ்வொருவரும் முயன்று, இன்னும் நன்றாகச் செய்ய முயல வேண்டும். வலிமையும் ஆற்றலும் மிக்கவர்களிடம்தான் உலகம் இரக்கம் காட்டுகிறது.
மக்கள் சமூகத்துக்கும் இயற்கைக்கும் ஓர் அர்ப்பணமாக சுதந்திர சங்கல்பத்துடன் செய்யப்பட்ட சேவைகள் மட்டுமே செய்பவனை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாதவை.
எந்தவகைக் கடமையையும் அலட்சியமாக நினைக்கக் கூடாது. கீழான வேலை செய்கின்ற ஒருவன், அதன் காரணமாக மட்டுமே உயர்ந்த வேலை செய்கின்ற ஒருவனை விடத் தாழ்ந்தவன் ஆகிவிட மாட்டான். ஒருவன் செய்கின்ற செயலின் தன்மையை வைத்து அவனை மதிப்பிடக் கூடாது; அந்தச் செயல்களை அவன் எப்படிச் செய்கிறான் என்பதைக் கொண்டே அதைத் தீர்மானிக்க வேண்டும். செய்கின்ற முறை யும் திறமையுமே ஒருவனைக் கணக்கிடும் அளவுகோலாகும். தொழிலைப் பொறுத்தவரை, நாள்தோறும் பயனற்றவற்றைப் பேசுகின்ற பேராசிரியரைவிட, உறுதியும் அழகும் வாய்ந்த ஒரு செருப்பை மிகக் குறைந்த நேரத்தில் உருவாக்குகின்ற தொழி லாளி எவ்வளவோ உயர்ந்தவன்.
கடமை ஒவ்வொன்றும் புனிதமானது. அதை பக்தியுடன் செய்வது மிக உயர்ந்த தெய்வ வழிபாடு. மாயையில் சிக்கி, அஞ்ஞானத்தில் மூழ்கிக் கிடக்கின்ற பத்த ஆன்மாக்கள், அதாவது கட்டுப்பட்ட உயிர்கள் ஞான ஒளியும் விடுதலையும் பெற இத்தகைய செயல்கள் கட்டாயமாகப் பேருதவி புரியும்.
நம் கைக்கு எட்டிய, நம்மால் இயன்ற கடமைகளை நன் றாகச் செய்வதால் நம்மை நாம் அதிக வலிமையுடையவர்களாக ஆக்குகிறோம். இந்த வலிமையை இவ்வாறே வளர்த்தால், பெருமை மிக்க இந்த வாழ்க்கையிலும் சமூகத்திலும் எல்லோ ராலும் விரும்பத்தக்க நிலையை, பெறுதற்கரிய நிலையைப் படிப்படியாக அடையலாம். ப
இயற்கையின் நீதி எப்போதும் உறுதியானதாகவும் விட்டுக் கொடுக்காததாகவுமே இருக்கிறது.
மிகவும் செயல்முறைப் போக்குக்கொண்ட யாரும் வாழ்க்கை நல்லது என்றோ, கெட்டது என்றோ கூற மாட்டான்.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள் ஒவ்வொரு வருக்கும் பின்னணியில் எங்கேயோ அளவற்ற ஒருமையுணர்வும் அளவற்ற நேர்மையும் இருந்தே தீரும். ஒருவனது சிறந்த வெற்றிக்கு இவையே காரணம். அவன் ஒருவேளை தன்னலத்தை முற்றிலும் துறந்தவனாக இல்லாமல் போகலாம், ஆனால் அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறான். அவன் முற்றிலும் சுயநலமற்றவனாக இருந்திருந்தால், அவனது வெற்றி புத்தரது வெற்றியையும் ஏசுநாதரின் வெற்றியையும்போல் மிகச் சிறந்த தாக விளங்கியிருக்கும். எங்கேயும் சுயநலமின்மையின் அளவைப் பொறுத்தே வெற்றியின் அளவும் உள்ளது.
மனித குலத்தின் மாபெரும் தலைவர்கள், உயர்நிலையில் செயல் புரிபவர்கள்; மேடைச் சொற்பொழிவாளர்கள் அல்ல.
தூய்மை, தூய்மையின்மை என்பவற்றிற்குத் தீமை செய் யாமை, தீமை செய்வது என்று பொருள்கொள்கின்ற பட்சத்தில், நாம் எவ்வளவுதான் முயன்றாலும் முற்றிலும் தூய்மையான ஒரு செயலையோ, முற்றிலும் தூய்மையற்ற ஒரு செயலையோ காண முடியாது. பிறருக்குத் தீங்கு செய்யாமல் நாம் வாழவோ மூச்சுவிடவோ முடியாது. நாம் உண்ணும் ஒவ்வொரு பிடிச் சோறும் வேறோர் வாயிலிருந்து கவரப் பெற்றதே. நாம் வாழ் வதற்கு வேறு சிலர் அழிய வேண்டியிருக்கிறது அப்படி அழி பவை மனிதனாகவோ, மிருகமாகவோ, தாவர இனமாகவோ இருக்கலாம்; எங்கோ ஏதோ ஒன்று அழிந்தேயாக வேண்டும். எனவே செயலின்மூலம் நிறைநிலை அடைவது என்பது ஒரு நாளும் இயலாத ஒன்று என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். காலத்தின் முடிவுவரையில் நாம் உழைக்கலாம்; ஆனால் சிக்கலான இந்தப் பொறியிலிருந்து வெளியே வர முடி யாது. நாம் வேலை செய்துகொண்டே இருக்கலாம். ஆனால் அதற்கு முடிவு மட்டும் காண இயலாது.சுதந்திர உணர்வுடனும் அன்புடனும் உழைக்கின்ற ஒருவன் பலனைப்பற்றிக் கவலைப்படவே மாட்டான். அடிமையோ சவுக்கடி வேண்டுகிறான்; சேவகன் கூலி கேட்கிறான். வாழ்க்கை முழுவதிலும் இப்படித்தான் நிகழ்கிறது.
பொதுவாழ்வை எடுத்துக்கொள்ளுங்கள். சொற்பொழி வாற்றும் ஒருவன் கைதட்டலை வேண்டுகிறான்; சிறிது கூச்சலையும் குழப்பத்தையும் விரும்புகிறான். அவனை ஒரு மூலையில் உட்கார வைத்தால் அது அவனைக் கொல்வதற்கு ஒப்பாகிவிடும். அவனுக்கு இவை தேவையாக உள்ளன. இது அடிமைத்தனம். இத்தகைய நிலையில் வேலைக்கு ஏதோ ஒரு பலனை விரும்புவது அவர்களின் இயல்பாகிவிடுகிறது.
அடுத்ததாக, தொழில் செய்து உயிர்வாழ்பவன். இவனுக்குச் சம்பளம் வேண்டும்; ‘நான் உழைப்பைக் கொடுக்கிறேன், நீ சம்பளத்தைக் கொடு’ என்னும் பேரம் இது.
‘வேலைக்காகவே நான் வேலை செய்கிறேன்’ என்று சொல்வது சுலபம். செயல்முறையில் இதைப்போல் கடின மானது வேறொன்றும் இல்லை. வேலைக்காகவே வேலை செய்யும் ஒருவன் இருப்பானானால் அவனது முகத்தைக் காண இருபது மைல் தூரம் முழங்காலில் ஊர்ந்து செல்லவும் நான் தயாராக இருக்கிறேன். அப்படிச் சொல்பவனிடமும் ஏதோ ஒரு நோக்கம் ஒளிந்திருக்கவே செய்யும். அது பண ஆசையாக இருக்கலாம், பதவி ஆசையாக இருக்கலாம், அல்லது வேறு வகை லாபமாக இருக்கலாம். ஆனால் எங்கோ , எப்படியோ இந்தச் செயலுக்குத் தூண்டுசக்தி ஒன்று இருந்தே தீரும். ‘நீ எனக்கு நண்பன், நான் உனக்காக உன்னுடன் உழைக்க விரும்பு கிறேன்’-இதுவரை சரிதான்; ஒவ்வொரு நொடியும் எனது நேர்மையை வற்புறுத்தலாம், ஆனால் ஒன்று: ‘நீ எல்லா அம்சங் களிலும் என்னுடன் ஒத்துப்போக வேண்டும். இல்லையேல், நான் உன் நலத்தில் அக்கறை கொள்ள மாட்டேன்; உனக்காக உழைக்கவும் மாட்டேன்.’ இப்படி, பலனுக்காகச் செய்யும் வேலை துன்பத்தைத்தான் கொண்டுவரும். நமது மனத்தை வென்ற நிலையில் செய்யும் செயல் மட்டுமே பற்றற்ற நிலையை யும் பேரானந்தத்தையும் தரும்.
‘பிரபஞ்சம் முழுவதையும் மதிப்பிடுவதற்கான அளவு கோல் நான் அல்ல’ என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதற்பாடமாகும். ஒவ்வொருவரையும் அவரவரின் எண்ணங் களுக்கு ஏற்ப மதிப்பிட வேண்டும். ஒவ்வொரு மனித இனத் தையும் அதனதன் அளவுகளுக்கும் லட்சியங்களுக்கும் ஏற்றபடி தான் மதிப்பிட வேண்டும். ஒரு நாட்டின் பழக்க வழக்கங்களை, அதன் சூழ்நிலையையும் லட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டே மதிப்பிட வேண்டும். அமெரிக்கர்கள் வாழும் சூழ் நிலைக்கு ஏற்றபடி அவர்களின் பழக்க வழக்கங்கள் அமைந் திருக்கிறது. இந்தியர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களது பழக்க வழக்கங்கள் அமைந்துள்ளன.
நாம் ஒவ்வொருவரும் எந்த நிலைக்குத் தகுதி உள்ளவர் களோ அந்த நிலையில்தான் இருப்பதைக் காண்கிறோம். ஒவ் வொரு பந்தும் அதற்குப் பொருத்தமான குழியிலேயே போய்த் தங்குகிறது. ஒருவனுக்கு இன்னொருவனைவிடச் சிறந்த தகுதி இருக்குமானால் அதை உலகம் கண்டுபிடித்துவிடும். பிரபஞ்சத் தில் நடந்துவருகின்ற ஒழுங்குமுறை காரணமாக இந்த அதிகத் தகுதி வெளிப்பட்டே தீரும். எனவே முணுமுணுப்பதால் பலன் ஒன்றும் இல்லை . கயவனான ஒருவன் பணக்காரனாக இருக்க லாம். ஆனால் அவனைப் பணக்காரன் ஆக்கிய சில தகுதிகள் அவனிடம் இருக்கவே வேண்டும். அந்தத் தகுதிகள் வேறுயாரிட மாவது இருந்தால் அவனும் பணக்காரன் ஆகவே செய்வான். சண்டையிடுவதாலோ குறை கூறுவதாலோ ஏதாவது பயன் உண்டா ? இவற்றால் நம் நிலைமை சீர்படப் போவதில்லை. விதியின் காரணமாகத் தனக்குக் கிடைத்துள்ள சிறிய ஒன்றிற்காக முணுமுணுப்பவன் எதற்குமே முணுமுணுக்கத் தான் செய்வான். எப்போதும் எதற்கெடுத்தாலும் குறை கூறிக் கொண்டு அவனது வாழ்க்கை துன்பமயமாகவே இருக்கும். அவன் தொடும் ஒவ்வொன்றும் தோல்வியிலேயே முடியும். யார் தன் பங்கிற்கு வந்த கடமையைத் தயங்காமல் முனைந்து செய்கிறானோ, அவனுக்கு நிச்சயம் ஞான ஒளி உண்டாகும். சிறந்த கடமைகள் தாமாகவே அவனைத் தேடி வரும்.